முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாய்களே அஜாக்கிரதை அல்லது அஜாக்கிரதை நாய்கள்


வழிப்பறிகள் பெருகிவிட்ட இந்நாட்களில்
அதிகாலை நடைப்பயிற்சிக்கு
கருப்பனுடன் செல்வதே பாதுகாப்பாயிருக்கிறது
(கருப்பன்= கைத்துப்பாக்கி / குறுவாள்/ சையனட் குப்பி )


ஆயிரம்பேர் புடைசூழ வேட்டைக்குப் போனாலும்
மோப்பம் பிடிக்க ஒருநாய்தானே தேவை?
(இப்போது ஒரு கருப்பன் = ஆயிரம் ஜவான்)

திரும்பிவரும்போது
முற்றத்தில் விழுந்துகிடக்கும்
பால்பாக்கெட்டையோ நாளிதழ்களையோ
பல்பதியாமல் கவ்விக்கொண்டு வரவும் (பல்பதிந்தால் தீட்டு)
இப்போதெல்லாம் பழகிவிட்டிருக்கும் இந்த நாய்
மழையானாலும் வெயிலானாலும்
வரம்புமீறி வாசற்படி தாண்டி
வீட்டுக்குள் நுழைந்ததேயில்லை ஒருபோதும்
(இரண்டு காரணங்கள்- 1.நாயைக் கூப்பிட்டு நடுவீட்டில் வைக்கமுடியாது
2.எல்லை தாண்டிய பயங்கரவாதம் நாய்களிடம் இன்னும் பரவவில்லை)

களத்தில் காயும் தானியங்களை
கோழி குருவிகள் கொத்தாமல் காப்பது

வேற்றார் வந்தால் விரட்டுவது வீட்டாள் வந்தால் குழைவது என்று
அப்புறமும் ஓய்ந்திருக்காத அதற்கென்று
நாங்கள் தனியாக உலைவைத்துப் பொங்கியதில்லை ஒருநாளும்
மிச்சம்மீதியைக் கொடுத்தால் போதாதா அதற்கு?
(நாய்= இரப்பாளி  () எடுப்புச்சோத்து ஆள்காரன்( ) விசுவாசி )

சகநாய்களை சண்டையிட்டுத் துரத்தினாலும்
மாலைப்பொழுதின் விளையாட்டுகளில்
எங்களது பேரக்குழந்தைகள் வீசியெறியும் பந்துகளை
லாவகமாய் கவ்வியெடுத்து வரும்போது
அதுவும் ஒரு குழந்தைபோலாகிவிடுகிறது
( நாய் பிறநாய்களுடன் சேர்ந்து விளையாடுவது தடுக்கப்படுவதுடன்
 ஒரு அல்லக்கையாக தொழிற்படவும் பழக்கப்படுத்தப்படுகிறது)

எப்போது தூங்குமென்று யாருக்கும் தெரியவில்லை
பகலெல்லாம் பாய்ந்தோடி ஓய்வின்றி அலைந்தாலும்
ராத்திரியாகிவிட்டால் ராணுவச்சிப்பாய்போலாகி
காதுவிடைக்க  சுற்றிவரும் அதன் காவல்மீறி
காக்காகூட எட்டிப்பார்க்க முடியாது எங்கள் வீட்டை
(பேயும் பிசாசும் நாயிக்குத்தான் தெரியும்)

இது இப்படியே நெடுநாளாய் இருக்க,
நாய் என்ற ஒன்று இருக்கப்போய்தான்
நாங்கள் மனிதரென்று வேறுபடுத்தி அறியப்படுவதும்
இப்படியொரு குடும்பத்தை காத்துவருவதாய்
அந்த நாய் சொல்லப்போவதில்லை என்ற தைரியத்திலேயே
ஒரு நாயை வளர்த்துக்கொண்டிருப்பதாய் நாங்கள் ஜம்பமடித்திருப்பதும்
அந்த நாய்க்கு இன்னும் தெரியாது.

- ஆதவன் தீட்சண்யா


கருத்துகள்

  1. நாய்களின் அஜாக்கிரதை நாய்களுக்கு எப்போதும் தெரியப் போவதில்லை. .ஏனெனில் அவை எப்போதும் நாய்களாகவே இருக்கின்றன. இருக்க விரும்புகின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா