முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்ரூவராகிய கடவுளும் அபயமளித்த நந்தனும் - ஆதவன் தீட்சண்யா

ப்பனை முடிந்ததும் திரைச்சீலை விலக்கி
மேடையில் பிரவேசிக்கும் ஓர் ஆடல்காரனாய்
தீக்குண்டம் பிளந்து
சுடர்க்கீற்றாய் பிரசன்னமாகுமென்னை  நந்தனென்றறிக.

கள்ளத்தோணிகளும் கபடவாகனங்களும் மலிந்த
கர்ப்பகிரஹத்திற்கு
மூலவரையும் இழுத்துவந்திருக்கிறேன்
முறையான கடவுச்சீட்டோடு

மீண்டும்
ஜோதிக்குள் கலந்துவிடும் சூழ்ச்சிகளிருப்பதாய்
கடவுளின் ஒற்றர்கள் கணித்ததன் நிமித்தம்
முன்கூட்டியே அறிவிக்கப்படாத என் பயணத்திட்டத்தை
மோப்பத்தாலறிந்த செய்தியாளர்கள்
கொலையாளிகளுக்கிடையிலேயே
கொலையுண்டவன் உலவப்போகும் சாகசம் காண
கோயிலின் தூண்கள் பின்னே கண்பதுக்கியிருக்கின்றனர்
காமிராக்களோடு

2.
தில்லையில் எரிமூழ்கிய
திருநாளைப்போவார் மீண்டதில் அரண்டு
எல்லாக்கோயில்களின் அகழிகளிலும்
பசித்த முதலைகள் விடப்படுகின்றன
உயர்த்தப்பட்ட மதில்களில் பதிக்கப்படுகின்றன
உயிரைக்கிழிக்கும் கண்ணாடிச்சில்லுகள்
மாடங்களில் மறைந்திருந்து
எண்திசையும் குறிபார்க்கும் இயந்திரத்துப்பாக்கிகள்
தில்லைவிடங்கன் வெட்டிவந்த விறகெடுத்து
முகவர்ணப்பித்தன் மூட்டிய குண்டத்திலிருந்து
திகுதிகுவென்றெழுகிறது மீண்டுமொரு வேள்வித்தீ

நீதிமன்றத் தடையாணை ஒட்டப்பட்டிருந்த கோயிற்கதவை
எத்தியும் எரித்தும் திறக்க முயன்ற கடவுளை
நான்தான் தடுத்தாட்கொள்ள வேண்டியிருந்தது
கோயில்கள் இன்னும் கொலைக்களமாகவே இருப்பதாய்
அலுத்துக்கொண்ட கடவுள்
தீர்த்த விருந்தொன்றின்போது மட்டுமீறிய போதையில்
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பியோ என்கவுன்டரிலோ
வேண்டாதாரைப் போட்டுத்தள்ளும் கொலைநுட்பங்கள்
கைவரப்பெறாத காலத்தில்
கழுவேற்றமும் ஜோதியேற்றமுமே
கதைமுடிக்கும் உபாயங்களென்று உளறிக்கொட்டியதில்
அம்பலமாயின சிதம்பர ரகசியங்கள்

3.
தற்காப்பிற்கும்
அப்ரூவராகி
இதோ இப்போது ஒரு வளர்ப்புப்பிராணிபோல
என் மகிமைகள் பாடி
என்பின்னேயே அலையும் இக்கடவுளைக் காக்கவும்
ஆயுதங்களாலான உடலெடுத்து அவதரித்துள்ள என்னை
மீண்டும் எரிக்க முடியாத ஆத்திரம்
24 மணிநேரமும் 64 சேனல்களிலும்
அபவாதமாய் இரைகிறது தலைப்புச்செய்திகளில்

நான் வெளிவந்த கணத்தில்
துஷ்ட நட்சத்திரமொன்று
திசையற்ற வெளியில் தெறித்து விழுந்ததாய்
சகுனக்கதைகள் புனையத் தொடங்கினர்

ஜோதியில் கலக்கப்பட்டவன் மீண்டுவர ஏலாதென்று
இப்போது மட்டும் பகுத்தறிவு பேசுவோரை
நிராகரிப்பதாயிருக்கிறது என் வருகை
தம் கைவசமிருக்கும் கதை மூட்டைகளை அவிழ்ப்பார்களேயாயின்
என்வருகையின் சாத்தியம் புலப்படக்கூடும்

4.
தாத்தாவின் தோளேறி திருவிழா காணும் சிறுவனாக
கடவுளின் மீதேறி காண்கிறேன் உலகத்தை
படுத்திருந்த பழைய நந்தி எழுந்துநின்று மறைக்கிறது இப்போது
தனக்கும் மனிதனுக்குமிடையே
எப்போதும் ஒரு நந்தி எதற்கெனும் கேள்வி
திருப்புன்கூரிலிருந்தே கடவுளுக்குமிருப்பதால்
அதன் திமிலில்
நான் கட்டாரி பாய்ச்சிக் கொன்றதை கண்டிக்காததோடு
இரவு விருந்தில் பரிமாறப்பட்ட நந்தியின் மாமிசத்தை
 விரும்பியும் உண்டார் என்னோடு

தாம்பூலம் தரித்தபடியும் பல்குத்திக்கொண்டும்
குஷாலாக பேசிக்கொண்டிருந்த கடவுளைக் கொல்ல
ஆயிரம் நந்திகள் கொம்பாட்டி எழுந்த அவ்விரவில்
யாவற்றையும் கொன்று பாடனம் செய்தோம்
இனிவரும் நாட்களின் உணவுகென்று.

5.
என் உபதேசத்தின் பேரில் சாந்தம் பூண்டிருக்கும் கடவுள்
தரிசனம் தரவிருக்கும் பக்தர்களுக்குப் படையலிட
தானே அறுத்தெடுத்த மூவாயிரம் தில்லைநாக்குகளை
சுரைக்கொடியோடிய கூரையின் கீழிருக்கும்
எங்கள் ஆதனூர் புலைப்பாடியில்
அடுப்புமூட்டி வேகவைத்துக் கொண்டிருக்கிறார்
உப்பும் உறைப்பும் மணக்க

குழம்புச்சட்டியில் கொதி பொறுக்காது
கூக்குரலெழுகிறது தேவபாஷையில்
அபயமும் தராமல் அசரீரியும் பகராமல்
ஊதாங்குழலால் அடுப்பை ஊதிக்கொண்டேயிருக்கிறார் கடவுள்.


கருத்துகள்

 1. முந்தையை வஞ்சக கொலை முறைக்கும், பின் இன்றைய கொலை முறைக்கும் சற்றும் வித்தியாசமில்லை.

  'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என்ற நேற்றைய அபயம், இன்று கட்டாரியைக் கொண்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

  எழுத்து நம் வசம் வந்தபோதுதான் கோபம் எழுத்தில் வந்தது.

  இனிவரும் கவிதைகளும் விதையாகவே பிறக்கட்டும்.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நந்திக் கறி எனக்கும் கொஞ்சம் வைத்திருங்கள்.

  ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று என பாரதி எது நடக்க வேண்டுமென்று விரும்பினானோ அது நடந்துவிட்டதாகக் கற்பித்து எழுதினான்.

  தேவ பாஷையில் வசைபாடும் நாக்குகள் கொதியுலையில் அவிக்கப்படுவதும் நடக்கும். அப்புறம் கடவுள் கறை நீங்கியவனாவான்.
  -அ. குமரேசன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா