சனி, டிசம்பர் 31

இடி இறங்குவதற்கு முன்பிருந்த எங்கள் பூர்வீக வீடு - ஆதவன் தீட்சண்யா

தாத்தன் சொத்தில்
அப்பனுக்கு பாகமாகிப் பிரிந்த இங்கேதான்
ஏழுபேரையும் பெற்றெடுத்தாள்
எங்கள் தாய்

பூலாப்பூவும் ஆவாரங்கொத்தும்
வேப்பங்குழையோடு பண்ணைப்பூ சேர்த்து
நாலுமூலைத் தண்டையிலும் காப்புக்கட்டு சொருகினால்
அடுத்தப் பொங்கல்வரை அசைந்தாடும்
கிரீடத்தில் இறகுபோல

மாடக்குழிக்கு நேர்மேல்
சிம்னியின் கரிமண்டும் சுவற்றில்
பெயரெழுதும் சண்டையில் தினம் கெலிப்பான் தம்பி

விலக்குநாட்களில்
பெண்டுகள் ஒடுங்கவும்
கயிற்றுக்கட்டிலின் மீது இருமியே
தன் கடைசிநாட்களை பாட்டி கழிக்கவும்
பாந்தப்பட்டதாயிருந்தது வெளித்தாவாரம்

கோம்பைச்சுவற்று தூலத்திலிருந்து
எமபாணமாய் இறங்கிய கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி
கால்களை அகட்டிக்கொண்டு கதறிய மூத்த அக்காளுக்கு
பனிக்குடம் உடைந்தும் தலைதிரும்பாமல்
செத்துப்பிறந்தது தலைச்சன்பிள்ளை

கிணறு சுண்டி தரை கொதித்த நாளில்
நடுவீட்டிலிருந்த குதிர்களைப் பெயர்த்து
தெருவில் போட்டுடைத்த பின்பு
அட்டிலிலும்
அடுக்களையிலும்
உருட்டி விளையாடிய எலிகள்
பின்னொருபோதும் திரும்பவில்லை எங்கள் வீட்டுக்குள்

உதிர்ந்த காரைக்குள் உருக்கொண்ட சித்திரமாய்
இப்படியான நினைவுகளாகி எஞ்சியிருக்கும்
எங்கள் பூர்வீக வீடு
இடி இறங்குவதற்கு முன்பும்
அப்படியொன்றும்
பிரமாதமாய் இருந்திருக்கவில்லை
இன்றில்லையாயினும்
இற்று விழுந்து நிர்மூலமாகியிருக்கும் நாளை

அதிகபட்சம்
அடுத்த மழைமோடத்தில்.

வெள்ளி, டிசம்பர் 30

பேறுகால குறிப்புகள் - ஆதவன் தீட்சண்யா

பொண்ணப் பெத்து
வளத்து வாருவம் பண்ணி...
யம்மாடி... கஷ்டப்பட யாரால ஆவும்...

ஆமாமா... ஆமாமா...
எல்லாரும் ஆம்பளப்பிள்ளையாவே பெத்துக்குவம்

பொம்பளைங்களே இல்லாம ஆயிட்டா என்னாகும்

அட நீ வேற
பண்ணைக்கோழி ஸீட்லெஸ் திராட்சையாட்டம்
கண்டுபிடிச்சுக்கலாம் எதையாச்சும்
தேவைன்னா குளோனிங் பண்ணிக்கலாம்

ஆனா பையன் வளந்து பொம்பளத்துணை கேட்டா...

ஆங்... அப்பனும் ஆத்தாளும் ஆளுக்கொரு பக்கமா
அவங்கிட்டப் படுத்து...

ச்சே... என்ன இப்படி அசிங்கமா பேசறீங்க

அப்ப உம்பையனை எம்பையனுக்கு கட்டிவைப்போம்.

வியாழன், டிசம்பர் 29

ஒரு கவிதையும் சில வசனங்களும் - ஆதவன் தீட்சண்யா

பூட்டியிருந்த கதவத்தின் சாவிப்புழையுள்
ஆவியென உட்பரவி
வௌவால் புழுக்கை வீச்சத்தில் மூர்ச்சையானேன்
பிரக்ஞையின் பிரக்ஞை மூத்திரமாய் கரிக்க
உதட்டுச்சுழிப்போடு விசை பெற்றெழுகையில்
உடலைப் பிணைத்த சிலந்திக்கூடு கனத்த வலையாக

1: பாமரனுக்கும் புரியறாப்ல இதுல என்ன இருக்கு....? வெத்து பூடகம்
2: அபாரம்.... அற்புதம்.... ஆஹா... இப்படியாகத்தான்.....
எதையும் உணர்த்தாது தன்னளவில் இயங்கணும் கவிதை
 ரோமாந்திரங்களின் கீழ் சில்லிட்ட இருளில்
கபாலங்களும் கடவெலும்புகளும்
வெறியேறிய நாயின் கண்களென மின்ன
நேற்றின் நேற்றும் நேற்றின் இன்றும்
இன்றின் நாளை
யும்
நாளையின் நேற்று
மாகி காலண்டரும் கடியாரமும்
கழன்று வி
ழு
ந்

இடத்தில் விரிகிறது நியாண்டர்தால் குகை

தைர்யவாள் சுழற்றி இருளணுப் பிளந்து
பாய்கிறேன் சுயதிசைக்கு
சினையுண்ட காலத்தின் மணிவயிற்றுப்பிளவில்
சிறகு விரித்து காற்றில் எவ்விய எம்தேவதை
சூரியச்சந்திர விழிகளில் பீளை படிய
சிகரங்களில் மோதியும் சிறுபொடிச்சரளை சறுக்கியும் சிதறிக்கிடக்கிறது
சிதறிய கணத்தில் சிறகில் படிந்தது யுகங்களின் பாரம்

2: துவக்கத்தில் புழை, புழுக்கை, மூத்திரம்... பிறகு சினை.
இப்போது  பீளை... நம்மை நெருங்கி வருகிறது கவிதை.
ஆனாலும் தேவையோ இல்லையோ
ஐந்தாறு இடத்தில் இந்த வார்த்தைகள் நிரவி வரணும்.
வாசகன் மூக்கில் மூளையில் நாற்றம் ஏறணும். இன்னும் மலம், முலை, விந்து, புட்டம், மைதுனம், பிருஷ்டம் சேர்ந்துவிட்டால் முழுமையாகிவிடும் கவிதை.
1:அந்த முகாம்ல பாராட்டுறாங்கன்னாலே
இந்தக் கவிதையோட லட்சணம் என்னன்னு தெரியுது.
வக்கரித்துப்போன அக்கிரம எழுத்து..
சுமையின் பளுவால் சோர்ந்து வீழ்ந்தாலும்
மனசின் வலுவால் மறுபடி எழும்பிட
நானே வீசுகிறேன் கவரியாகி
வீணைகளின் நரம்பறுத்து வில்களில் நாணேற்றி
கனவுகள் கொண்டு செப்பனிடுகிறேன்
உடைந்த சிறகுகளை
நைந்த எம் மக்களுக்கு
என் கவிதைகள் எரிந்து கனப்பு மூட்டுகிறது

1: மக்கள்னு வந்துட்டதால ஏதோ புரியறாப்ல இருக்கு.
இன்னதுன்னு பிடிக்க முடியல.
2: என்னது... கவிதை கருகுற நாத்தமடிக்குது...?
கவனி... கவனி... மக்கள்னு வருது...
முடக்கும் செதிலுறைகளை முற்றாய் உதிர்த்து
மண் புரட்டியெழும் விதையென
எழுவார் எம்மக்கள் வெற்றியின் பாடலோடு.

2: ஐய்யய்யோ... கவிதையில பிரச்சாரம்... பிரச்சாரம்...
யாரங்கே நம்ம இஸச்சண்டைய அப்புறம் வச்சுக்கலாம்...இப்பக் கத்து, பிரச்சாரம் பண்ணு-கவிதையில் பிரச்சாரம்... பிரச்சாரம்னு...
 1.அவங்க பிரச்சாரம்னிட்டாங்களா...
அப்ப நாம கவிதைன்னு சொல்லிடலாம்.
 (விவாதப்புடுங்கிகளிடமிருந்து
கவிதை தனித்திருக்கிறது
எமது சேரிகளைப்போல)

புதன், டிசம்பர் 28

வியாக்கியானம் - ஆதவன் தீட்சண்யா

கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது

மாந்திரீகக் குறிப்புகளின்
சங்கேத முற்றிப்புள்ளி எனவும்
இன்னுஞ்சிலரோ
புள்ளிகளாய் நிரப்ப வேண்டியதன்
முதற்புள்ளி இதுவென்றும் கூறினர்

ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது
உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூடகத்தின்
பூர்வ வடிவென்றார் வேறார்

புள்ளி
புள்ளியாயிருந்தது.
பலர்
பலவாய் சொல்லிக்கொள்ள.

சனி, டிசம்பர் 24

சிட்டிசன்களும் நெட்டிசன்களும் -ஆதவன் தீட்சண்யா

டவுளின் கண்களென அந்தரத்தில் சுழலும்
செயற்கைக்கோளுக்குக் கீழே
நிற குண மாறுபாடுகளற்ற
இரு சரிநிகர் புள்ளிகள் நாம்

நிலவொளியின் குளுமை கூட்டி
நேற்றிரவு அருந்திய பானத்தின் வாடையையும்
துல்லியமாய் படமெடுக்கும் அதன்கீழ்
எதுவொன்றையும் மறைக்க முடியாதவர்களாயுமாகி
பதற்றமாய் அலுவலகம் கிளம்பும் நம்மைப்
பின்தொடரும் கடவுளுக்கு
தயாரித்தளிக்கிறோம் புதிய கண்களை

யாரோ புதைத்த கண்ணிவெடிகள்
செவ்வாய் கிரகத்துப் பனிப்பொழிவு
மகாசமுத்திரங்களில் மையங்கொண்டெழும் புயற்சின்னங்கள்
ஜீவநதிகளில் உயிர்குடிக்கும் நீர்ச்சுழிகளென
கடவுளின் புதிய கண்களுக்கு எதுவும் தப்பாதபோது
எம்மாத்திரம் நாமென்று
கணினியின் எலிப்பொறி மீதேறி
உள்ளங்கைக்குள் கிராமமாய் சுருங்கிச் சுழலும்
ஹைடெக் உலகின் பிரஜைகளாகிறோம்

என்னம்மாவின் பாதத்து பித்தவெடிபோல
பூமியின்மீது விரிசலோடிக்கிடக்கும்
தேசங்களின் எல்லைக்கோடுகளை அழித்து
கிராபிக்ஸ் நுட்பங்களால்
வலைதளங்களில் உலவவிடுகிறோம்
புதிய வரைபடங்களை

பணிமுடிந்த பின்னிரவில்
கழுத்துப்பட்டையை நெகிழ்த்தி தளர்த்தியபடி
உனக்கும் எனக்கும்
கோக்கும் பீட்ஸாவும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிம்மதியில்
கண்முடி மெல்லச்சாவதை
இமெயில் எஸ்எம்எஸ் வழியாக
யாவருக்கும் அறிவிக்கிறோம்

எல்லாக்குற்றங்களையும் கண்காணிக்கும்
கடவுளின் கண் பார்த்திருக்க
உன்னையும் என்னையும் புதைக்கின்றனர்
அவரவர் சாதி சுடுகாட்டில்.

வியாழன், டிசம்பர் 22

வல்லடி - ஆதவன் தீட்சண்யா

மூர்க்கமழை                                                              
திமிறியாடும் வெள்ளம்
நீர்ப்பண்டமாய் கரைகிறது ஊரே
வீதி நிர்த்தூளியானாலென்ன
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிடக்கூடாது

ஊருக்கு வந்தும் ஊருக்குள் வராத
புறவழிச்சாலை பேருந்துபோல
எங்கும் தங்காமல்
கண்காணா வெளியோடி வெள்ளக்காடு வடிந்தபின்
சேறும் சகதியுமாய் நிலைதளம்பிக் கிடக்கிறது திடநிலம்

தெருவில் இறங்கமுடியாது யாரும்
அதனாலென்ன
வீட்டோரம் ஒதுங்கியிருக்கும் பிணமொன்றை நடைப்பாலமாக்கி
ஏறிக் கடந்து இலக்கை அடைவதில் இருக்கிறது
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிற்குள்
உன்னைப் பொருத்திக்கொள்ளும் சாதுர்யம்.

புதன், டிசம்பர் 21

தன்னழிப்பு - ஆதவன் தீட்சண்யா

சிதைத்த கானகவெளியில்
நீர்நிலைகள் தூர்த்து
நிர்மாணித்த நகரங்களில்
இப்போது
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்

சந்தடியற்று
தனிமையின் அமைதியில் தோய்ந்து
சூரிய சந்திர ஒளி குளித்து
மாசற்ற காற்றில் தலைதுவட்ட
வேறு வனங்களையழித்து
புறநகர்ப் பகுதியொன்றில்
ஒவ்வொருவராய் குடியேறிய பின் கிளம்பியது புகார்:
வெளிச்சமில்லை
காற்றில்லை
நீரில்லை
நெரிக்கும் கூட்டம்
சத்தம்
இரைச்சல்
சண்டைகள்.

திங்கள், டிசம்பர் 19

ஞானபேதம் - ஆதவன் தீட்சண்யா

வெளியே உலவும் பூனை குறித்த அச்சத்தில்
தொட்டிக்குள் நீந்திச் சளைக்கிறது மீன்
இரவும் பகலும் துடுப்பசைத்து
ஆழம் துளைத்து மேகம்தீண்ட
ஒரு கரிய வானவில் போல்
மின்னும் ஒளித்தண்டில் துள்ளி
நீர்வெளியின் சாகசத்துள் பாயாமல்
வேசியின் வண்ணங்கள் பூசி
கூண்டுக்கிண்ணத்திற்குள் சலம்பித் திரிவது
மீனாய் இருக்க முடியாதென தின்னவொப்பாமல்
வேட்டைக்கு வந்த இடத்தில்
வெறுமனே வேடிக்கை பார்த்திருக்கிறது பூனை.

ஞாயிறு, டிசம்பர் 18

கவனமாய் கடக்கவும் - ஆதவன் தீட்சண்யா

துர்சொப்பனங்களின் நெரிப்பில்
படுக்கையில் மூச்சா போய்விடும் குழந்தைகளும்
அதிர்ந்து பேசும் சுபாவமற்ற இருதய பலஹீனர்களும்
இக்கவிதையைப் படிக்க வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

உலகை களியாட்ட மேடையாய் வரித்து
வாழ்வைத் துய்க்கிறவர்களுக்கும்
மலர் மழை மழலைச்சிரிப்பென பாடித்திளைக்கும்
நெப்பமான நுரைமனக் கவிஞர்களுக்கும்
பொருந்தும் இவ்வெச்சரிக்கை

காவல்நிலையத்தைக் கடக்கும் பெண்ணின் பதற்றத்தோடு
மாற்றுப்பாதை வழியே இக்கவிதையைக் கடப்பதன்றி
சாத்வீகத்தால் நிரப்பப்பெற்ற நற்குணவான்
தனது நம்பிக்கைகளை தற்காத்துக்கொள்ள மறுமார்க்கமில்லை
 
மேற்சென்று படிக்க நேரிட்டால்
வளைந்து ஒடுங்கி விறைத்திருக்கும் எழுத்துருக்கள்
விபத்தில் சிதைந்தவர்களைப்போல் அச்சமூட்டக்கூடும்
 
எழுத்திலிருந்து துண்டித்து மேலே தெரியும் மெய்யெழுத்துப்புள்ளி
தலைவேறு முண்டம் வேறாய் தரிக்கப்பட்ட
மேலவளவு முருகேசனை நினைவுபடுத்தி
ஒரு எழுச்சியை வீழ்த்தியதான கொண்டாட்டங்களை
முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம்
 
வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே வழியும் உதிரம்
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான இடைப்பள்ளத்தில் தேங்கி
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும் அபாயமுண்டு
 
ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கிடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்
 
முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும் இடையேயுள்ள வெளி
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட
பெருங்குழிகளாக சாயலிடுமானால்
இக்கவிதையை
சுனாமிக்கானதாய் தப்பர்த்தம் கொள்ள வாய்ப்புண்டு
 
என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளிபோல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
தூக்கத்தில் வளர்ந்து
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்
 
ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப்போலிருக்கும்
அடுத்தடுத்த பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி
நீங்கள் யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது.

சனி, டிசம்பர் 17

சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள் - ஆதவன் தீட்சண்யா

(இதுவொன்னும் பழய விசயம் இல்லீங் சாமீ...)

சாமிக்கண்ணு: பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவவூட்டுக்கு (வண்ணான்குடி காடு- குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்.

வேல்முருகன்: அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழிமறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன்.

ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்... என்னை அவுத்து விடுங்க..ன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யா சாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்துவுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க.

அய்யாசாமி (தற்போது குப்பநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர்): நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடி காட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம்.

மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருதபாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்க கிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேறஇடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன். என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான் சொல்றான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்க லன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனுப் போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது.

பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க. என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சுவச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்... எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி.

எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந் தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருது பாண்டியோட தங்கச்சி.

அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்துகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்.

சின்னப்புள்ள: பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங் கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி... என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்... எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரி யாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத் தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனைக் கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப் பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண் டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்.

அய்யாசாமி: எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லி மாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித்தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால் கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு.

முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான்- இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே...வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு.

ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்க(எங்க சொந்தக்காரங்கதான்)தான் ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க.

அமராவதி (முருகேசனின் அத்தை): நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்... வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல.

அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடிசெத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா...

சாமிக்கண்ணு: எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டுமாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே... அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு.

பழனிவேலு வக்கீலு கூப்பிட்டார்னு அவரோட பள்ளிக்கூடத்துக்குப் போனா அங்க ஒரு 500 பேர் இருக்காங்க. அவர் என்னை பத்திரத்துல கையெழுத்துப் போடுன்னார். எதுக்குன்னு கேட்டேன். எங்களுக்குள்ள சமாதானமா போயிடறம்னு எழுதியிருக்கு. போடுன்னார். எம்புள்ளைய என்ஜினீர் காலேஜ்ல சேக்கறதுக்கும் காலேஜ் செலவுக்கும் என் நிலத்தை விக்கிறதுக்கும் நீதான் கையெழுத்து வாங்கின. இப்ப புள்ளைய பறிகொடுத்துட்டு நிக்கற என்கிட்ட நீ கேக்குறதுல எதாச்சும் நியாயமிருக்கான்னு திட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் விடுதலை சிறுத்தை கட்சிக்காரங்க வந்து திருமா வளவனோட போன்ல பேச வச்சாங்க. அவர் ஸ்டேசனுக்கு பேசிட்டு மறு படியும் எங்களக் கூப்பிட்டு தைரியம் சொன்னார். போலிஸ் நடவடிக்கை எடுப்பாங்கன்னார். நேர்ல பாக்கறதுக் காக மெட்ராஸ் போனோம். அவர் பேப்பர்காரங்களைக் கூப்பிட்டு விசயத்தைச்சொன்னார்.அதுக்கப்புறந்தான் பேப்பருங்கள்ல விசயம் வந்துச்சி.

விசயம் வெளியில தெரியுதுன்னதும் ஆத்திரப்பட்ட போலிஸ், துரைசாமி வகையறாவுல நாலுபேரையும் எங்காளுங்க நாலுபேரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. கொலைகாரங்கள அரெஸ்ட் பண்ணினா கரெக்ட். மகனை பறிகொடுத்த என்னையும் எங்க சொந்தக்காரங்களையும் எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்? இப்படியொரு அக்கிரமம் எங்கயும் உண்டான்னு நான் கேட்டதுக்கு அந்த எஸ்.ஐ. தமிழ்மாறன் என்னை லத்தியால அடிச்சான். கை வீங்கிருச்சு. உயிர்போற வலி. வைத்தியம் பண்ற துக்குக்கூட விடல. எங்களை மிரட்டிப் பணிய வைக்கிற துக்காவ, அவங்க பொண்ணை அவங்க கொன்னுட்ட மாதிரியும் எங்க பையனை நாங்களே கொன்னுட்ட மாதிரியும் ஜோடனையா கேஸ்போட்டு ரிமாண்ட் பண்ணி கடலூர் ஜெயில்ல அடைச்சிட்டாங்க. அப்புறம் ரத்தினம் ஐயா வந்துதான் என்னை வெளிய கொண்டாந்தார். வெளியவந்து எட்டாயிரம் ரூவா செலவழிச்சு என் கைக்கு வைத்தியம் பண்ணினேன்.

வழக்கறிஞர் ரத்தினம்: நக்கீரன்ல செய்திய பாத்துட்டுத்தான் நான் அந்த கிராமத்துக்கு வந்து இந்த குடும்பத்தைச் சந்திச்சேன். கொலைக்குற்றவாளிகளும் உள்ளூர் போலிசும் ஒரே சாதி. கொலைகாரனுங்க நல்ல வசதியோட இருக்கிறதால லஞ்சத்துக்கும் குறையில்ல. அதனால முருகேசன் குடும்பத்தை மிரட்டி வழக்கை ஒன்னு மில்லாம செஞ்சுடலாம்னு நினைச்சாங்க. பாதிக்கப் பட்டவங்களையே குற்றவாளியாக்கி சிறையில அடைச் சது மட்டுமில்ல. முதல் குற்றவாளி துரைசாமி ஊராட்சி மன்றத் தலைவர், தொடர்ந்து முப்பதுநாள் சிறையிலிருந்தா அவர் பதவி இழக்க நேரும்னு அரசு வழக்கறிஞர் சொன்னதை ஏத்துக்கிட்டு கடலூர் மாவட்ட நீதிபதி 23ம் நாள் அவரை ஜாமீனில் விடுதலை செஞ்சிட்டார். ஆனா மகனைப் பறிகொடுத்த சாமிக்கண்ணு 36வது நாள்தான் ஜாமீன்ல விடப்படறார். அந்தளவுக்கு நீதிமன்ற நடவடிக்கையும்கூட இவ்விசயத்தில கொலைகாரங்க ளுக்குத்தான் உதவியாயிருந்துச்சு. இனிமேல உள்ளூர் போலிசை நம்பமுடியாதுன்னு சென்னை உயர்நீதிமன்றம் போய் வழக்காடி வழக்கை 22.04.04 அன்று சி.பி.ஐக்கு மாத்தினோம்.

அய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவளவன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். ‘கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.

சாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப் பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டோம்.

வழக்கறிஞர் ரத்தினம்: தனவேல்னு ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் இந்த புதுக்கூரைப் பேட்டைக்காரர். துரைசாமி குடும்பத்துக்கு நெருங்கின சொந்தமாம். அவர் இப்ப மந்திரி அன்புமணிகூட இருக்கிறதா சொல்றாங்க. (தனவேல் திருநெல்வேலி கலெக்டரா இருந்தப்பதான் மாஞ்சோலை தொழிலாளர்கள் 17 பேரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்) அவர்மூலமா அன்புமணிய தொடர்பு கொண்டு கேஸை ஒன்னுமில்லாம பண்ணிடுவோம்னு இவங்கள மிரட்டறாங்க.

அய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலு பேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்து போய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதானமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டோம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.

ரத்தினம்: சிபிஐ ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்னை பண்ணும்னு பயப்பட வேண்டி யதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ. முருகேசன் வாயில விஷத்தை ஊத்தினது அய்யாசாமிதான்னு குற்றச்சாட்டு. கொலைக்குற்றவாளிகளான சாதி வெறியர்களை காப்பாத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரையே தண்டிக்கிற இந்த முயற்சியை கடுமையா எதிர்த்த பிறகு, நேரடி சாட்சி யாரும் இல்லாததாலதான் அவரை குற்ற வாளியா சேர்த்திருக்கோம். அவர் குற்றத்தை ஒப்புக்கிட்டு அப்ரூவராயிட்டா கேஸ் வலுவா யிடும். அவரை நாங்க விடுவிச்சுடுவோம்னு ஒரு வியாக்யானம் சொல்றாங்க. முருகேசனோட அம்மா சின்னப்புள்ளயும் அத்தை அமராவதியும் கொலையை நேரடியா பாத்த வங்க. அவங்களை சாட்சியா போடலாம். ஆனா சிபிஐ மறுக்குது.

தலித்களை பணிய வைக்கிறதுக்கு பாதிக்கப் பட்ட அவங்க மேலயும் கேஸ் போட்டுவழிக்கு கொண்டு வரணும்கிறதுதான் இதோட நோக்கம். இப்ப குற்றப்பத்திரிகையிலிருந்து அய்யாசாமியை விடுவிக்க சட்டரீதியா போராட வேண்டியிருக்கு. (இந்த சிபிஐ டீம் தான் கயர்லாஞ்சி படுகொலையை விசாரிக்கப் போனது. ஊரறிய அங்கே நடந்த பாலியல் வன்முறைகளை மறைச்சு அப்படியேதும் நடக்கலன்னு அறிக்கை கொடுத்திருக்கு)

வேல்முருகன்: விசயம் இத்தோட முடியல. தொடர்ந்து அவங்க எங்களுக்கு பலவிதமா நெருக்கடி தர்றாங்க. படையாச்சிங்கள தாக்கினதா எங்கண்ணன் பழனிமுரு கன் மேல ஒரு பொய்வழக்கு. போகிப்பண்டிகை அன்னிக்கு ராத்திரி நான் காலேஜ்ல இருந்து பொங்கல் லீவுல வீட்டுக்கு வந்தேன். ராத்திரி ஒன்னரைமணிக்கு வீட்டு கதவை உடைச்சு உள்ளே வந்த அண்ணாத்துரை யும் மத்த போலிஸ்காரங்க அஞ்சு பேரும் எங்கடா உங்கண்ணன்னு கேட்டு என்னை அடிச்சு இழுத்துப் போனாங்க. ஸ்டேசனுக்குப் போயும் அடி. பழனிமுருகனை ஒப்படைச்சிட்டு இவனை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. ரத்தினம் ஐயா தலை யிட்ட பின்னாடிதான் நான் வெளிய வர முடிஞ்சது. பழனி முருகன் கண்டிசன் பெயில்ல ஸ்டேசனுக்கு கையெழுத்துப் போட தினமும் போயிட்டு வர்றார்.

பழனிமுருகன்: கையெழுத்துப் போட உள்ள போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா மிரட்டல். பத்து மணிக்கு முன்னாடியும் வரக்கூடாது பின்னாடியும் வரக்கூடாது... இன்னிக்கு காலையில போனப்ப, என்னடா ஐகோர்ட் வக்கீல் சப்போர்ட் இருக்குன்னு ஆட்டம் போடறீங்களா... ரவுடி லிஸ்ட்ல சேர்த்து என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிருவோம்னு எஸ்.ஐ.பழமலை மிரட்டுறார். இன்னம் ரண்டுநாள் எப்படி அங்க போயிட்டு வர்றதுன்னே தெரியல.

அய்யாசாமி: இவன் எங்கக்கா மகன். ( காதைச் சுற்றி கட்டு போட்டுக் கொண்டிருந்தார்) நேத்து இவனை வழி மறிச்சு தகராறு பண்ணி மமுட்டியால வெட்ட வந்திருக்கான் ஒரு படையாச்சிப் பையன். ஒதுங்கி தப்பிச்சிட்டான். ஆத்திரம் அடங்காம கத்திய வீசியிருக்கான். இவன் தலைய சாய்ச்சதுல கத்தி பட்டு காதறுந்துருச்சி. ஸ்டேசனுக்குப் போனா அவன் வெட்டு வான்னு தெரியுமில்ல, அங்க எதுக்குப் போனேன்னு கேக்குறாங்க. கடைசில இவன் மேலயே கேஸ் போடறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க.

வேல்முருகன்: பஸ்கூட இல்லாத இந்த ஊர்ல பொறந்து வளந்து ஒரு தலித், பி.இ பட்டதாரியா உருவாகறது எவ்வளவு கஷ்டம்? படிப்பு முடிஞ்சதும் பெங்களூர்ல வேலை கிடைச்சது. அப்பவே ஏழாயிரம் சம்பளம். கெமிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிருந்ததால அவர் இன்னிக்கெல்லாம் இருந்திருந்தா எவ்வளவோ பெரிய வேலைக்கெல்லாம் போயிருக்க முடியும். அவ்வளவை யும் ஒருநொடியில காலியாக்கிட்டாங்க. எங்கண்ணன் கொலைக்கு நியாயம் கேட்டு நாங்க உறுதியா இருக்கறத அவங்களால சகிச்சுக்க முடியல. அதனால தொடர்ந்து அவங்க எங்களுக்கு தொல்லை கொடுக்கறாங்க. எல்லாத்தையும் தாங்கிக்கிறதுன்னு முடிவோட இருக்கோம்.

(18.02.2007 அன்று பேரா.அய்.இளங்கோவன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, வழக்கறிஞர்கள் லூஸி, செபாஸ்டியன், ரஜினிகாந்த், மங்கம்மாள், செங்கொடி, மூர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய உண்மை அறியும் குழு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் குப்பநத்தம் கிராமத்திற்கு சென்று கொலையுண்ட முருகேசன் குடும்பத்தாரை சந்தித்து திரட்டிய தகவல்கள் இவை. என்எல்சி தோண்டியிருக்கும் குழாய், விஷம் புகட்டப்பட்ட இடம், எரிக்கப்பட்ட இடம் என கொலையோடு தொடர்புடைய இடங்களை பார்வையிட்டோம். எரிக்கப்பட்ட ஓடையில் அதற்கான சுவடுகளே இல்லை. ஏற்கனவே அங்கு கிடைத்த முருகேசனின் ஒன்றிரண்டு எலும்புகள் வழக்குக்காக பாதுகாக்கப்படுவதாக அறிந்தோம்.

தமது சொந்த ஊரான குப்பநத்தத்தில் உறவினர்களோடு ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் புதுக்கூரைப்பேட்டை தலித் காலனிக்கு குடிபெயர்ந்திருந்த சாமிக்கண்ணு குடும்பம் முருகேசன் கண்ணகி படுகொலைக்குப் பிறகு குப்பநத்தத்திற்கே திரும்பிவிட்டது. முருகேசனின் தம்பி வேல்முருகன் (திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்) வழக்கில் உறுதியாயிருப்பதால் அவரும் சாதி வெறியர்களின் இலக்காகியிருக்கிறார்.

மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஆறு தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் - கொலை மிரட்டலுக்கும் அஞ்சாது- தலித்களுக்கு நீதியும் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத்தந்த வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள், கண்ணகி-முருகேசன் வழக்கிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவருடைய தலையீடும் உதவியும்தான் இன்று முருகேசன் குடும்பத்தை உள்ளூர் சாதிவெறியர்கள், காவல்துறையினர், துரோகிகள் யாவரி டமுமிருந்தும் பாதுகாக்கிறது. இக்கொலைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட தலித்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக தொடக்கம் முதலே பணியாற்றி வரும் மனிதஉரிமைப் போராளி புதுவை சுகுமாரன் இதுகுறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவைத்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒரு தலித் குடும்பத்தை வஞ்சிப்பதற்கு துணைபோகிற வி.சியின் செயல்பாட்டை விமர்சிக்கிறவர்களை தலித் விரோதிகளென சித்தரிக்கும் போக்கு தலைதூக்கியுள்ளது. எனவே விசி அமைப்பினர் யாரையும் எங்கள் குழு சந்திக்கவில்லை. இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும். எனவே அவரை தேடிப் பேச எங்கள் குழு முயற்சிக்கவில்லை. முருகேசன் குடும்பத்தார் மீது உள்ளுர் போலிசார் கொண்டிருக்கும் வன்மம் இன்னும் தணியவில்லை. இதுகுறித்து உண்மையறியும் குழு சார்பில் விருத்தாச்சலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்கடிதம் தரப்பட்டுள்ளது.

ஒருவர் திருமணம் செய்துகொள்வதற்கான எல்லையே சாதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆண்பெண் ரத்தக் கலப்பு ஒரு சாதிக்குள்ளேயே நிகழும்போது உருவாகும் சுத்தரத்தம் மறுபடியும் சாதியத்தையே தழைக்கச் செய்கிறது. எனவே வெறும் உணர்வாக மட்டுமேயல்லாது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறியாகவும் ஒவ்வொரு தனிமனிதனின் மீதும் சாதி சுமத்தப்பட்டுள்ளது. இதை உயிரைக் கொடுத்தோ எடுத்தோ பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மானம் என்று போற்றப்படுகிறது. இதில் எவ்வித ஊசலாட்டத்திற்கும் ஒரு பெண் ஆளாகிவிடக்கூடாது என்பதானாலேயே கற்பு, புனிதம், பத்தினி, பால்யவிவாகம், உடன்கட்டை, கைம்மை ஆகியவற்றை அவளுக்கு ஒழுக்கங்களாக போதித்து வளர்க்கிறது சாதியச் சமூகம். பெண் இந்த ஒழுக்கங்களை வழுவாது பாதுகாக்கிறாளா என்பதை ஒற்றர்களைப் போல வேவுபார்ப்பதும், மீறும் பெண்களை ஒழுங்குபடுத்தி சுயசாதி ஆதிக்கத்திற்குள் பிணைத்துப் போடுவதும்தான் நல்லதொரு குடும்பத்தின் இலக்கணமாக மாற்றப்பட்டுள்ளது.

சாதிக் கொடுமைகள் நிகழும்போது களத்தில் தலையிடாமல், சாதியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை என எல்லாவற்றுக்கும் காரணகாரியங்களோடு வியாக்கியானம் பேசி நிம்மதி கொள்கிறவர்களும், சாதியம் நீடிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டு கொள்ளாமல் அவ்வப்போதான கொடுமைகளை மட்டுமே எதிர்க்கிற உணர்ச்சிப்பிழம்புகளும் சாதியம் நீடிக்கவே ஒத்துழைக்கின்றனர்.

கலாச்சாரம் என்கிற சாதி அனாச்சாரங்களுக்கான தத்துவார்த்தத் தலைமையை பார்ப்பனர்களும் செயலாக்கப் பொறுப்பை இடைநிலைச் சாதியினரும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இவ்விரண்டு பிரிவுகளிலும் உள்ள சாதி மறுப்பாளர்கள் நீங்கலாக மற்றவர்களின் சாதியார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்த ஒருமுகப்பட்ட செயல்பாடுகளே இனியொரு கண்ணகியும் முருகேசனும் எரியுறாமல் காப்பாற்றும்.

எந்த புரட்சிகர வசனங்களும் பேசாமல் இந்த நியதிகளையெல்லாம் மீறிவந்த கண்ணகி தன் குடும்பத்தாராலேயே எரிக்கப்பட்டுவிட்டாள். இதுபற்றி யாதொரு பிரக்ஞையும் இல்லாமல் மதுரையை எரித்த கண்ணகி பற்றியே மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

சாதிகடந்த ரத்தக்கலப்பு நிகழாமல் சாதியம் ஒழியாது என்றனர் அம்பேத்கரும் பெரியாரும். தூய்மைவாதத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எந்தவொரு சாதியையும் தீட்டுப்படுத்துவது என்பதல்ல இதன் பொருள். மனிதன் என்ற பேரடையாளத்தை நோக்கி ஒவ்வொரு தனிமனிதனும் நகர வேண்டிய பண்புரீதியான மாற்றத்தையே அவர்கள் முன்மொழிந்தனர். கண்ணகியும் முருகேசனும் தங்களது உயிரைக் கொடுத்து வழிமொழிந்துள்ளனர்.

காவல்நிலையச் சாவுகள், காவல்நிலைய பாலியல் வன்முறைகள், மனிதவுரிமை மீறல்கள் போன்றவை நிகழும்போது தலையிடுகின்ற பல்வேறு மக்கள் இயக்கங்கள் இப்படுகொலை குறித்து கண்டும் காணாமல் இருப்பதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. பொத்தாம் பொதுவான பிரச்னைகளில் ஆட்சியாளர்களையோ அரசு நிர்வாகத்தையோ அமெரிக்காவையோ கண்டிப்பது எளிதானதே. ஆனால் இப்பகுதியில் செல்வாக்குள்ள படையாச்சிகளின் சாதிவெறியைக் கண்டித்துவிட்டு அங்கே எவ்வாறு அரசியல் நடத்துவது என்கிற அச்சமும்கூட காரணமாயிருக்கலாம். ஆனால், தனித்துவிடப் பட்டுள்ள முருகேசனின் குடும்பம் இன்னும் தாங்கவேண்டிய துயரங்களுக்காக ஒரு போராளியைப் போல காத்துக்கொண்டிருக்கிறது.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது மணிகண்டன் ( 14 ) என்ற சிறுவன் மிகுந்த கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். அவனிடம் பேச்சு கொடுத்தோம். எங்க ஊரும் புதுக்கூரைப்பேட்டைதான். எங்கப்பா டி.அஞ்சாபுலி. அம்மா லட்சுமி. அம்மாவுக்கு இந்த குப்பநத்தம்தான் ஊர். பிரசரண்ட் மவன் மருதுபாண்டி எங்கம்மாவ வச்சிருக்கான். அவன் பொண்டாட்டி வெண்ணிலாவ தொரத்திட்டான். எப்பவும் எங்கூட்லியே இருப்பான். எங்கப்பாவால எதுத்து கேக்க முடியல. 2003 ல செத்துட்டார். நெஞ்சுவலின்னு சொன்னாங்க. (ஆனால் அடக்கத்தின் போது வெஷம் வச்சி கொன்னுட்டு நெஞ்சுவலின்னு நாடகமாடுறீங்களான்னு ஒருவர் சத்தம் போட்டிருக்கார். இரண்டுநாள் கழித்து அவரது வீடு எரிக்கப்பட்டது) அங்கிருந்தா எதாச்சும் பண்ணிடுவான்னு எங்க பாட்டி இங்க குப்பநத்தத்துக்கு என்னை கூட்டியாந்திருச்சு. இங்கிருந்துதான் ஸ்கூல் போறேன். 9வது படிக்கிறேன்.... என்றான். எஸ்.சி பையன்கிட்ட பழகினதுக்காக தங்கச்சிய கொன்னு எரிச்ச அந்த மருதுபாண்டி, எங்கம்மாகிட்ட வர்றானே அதுக்கு அவனை என்ன பண்றதுன்னு கேட்டான். அவன் முகத்தையே பார்க்க முடியவில்லை. அத்தனைக் கடுமை. யாரும் பதில் சொல்லவில்லை. பதில் தெரியவில்லை. 

புதுவிசை: ஏப்ரல் - ஜூன் 2007

வெள்ளி, டிசம்பர் 16

விசாரணை- ஆதவன் தீட்சண்யா

நெடுக்குச் சட்டங்களாலாகி
மலைவாசஸ்தலமொன்றின்
தற்கொலைமுனை வடிவை ஞாபகமூட்டும்
விசாரணைக்கூண்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டேன்
சட்டம் குடித்த விழியின்போதை
கண்ணாடிக்கு வெளிப்பிதுங்கித் தொங்க
பிரிட்டிஷ்கால இருக்கையில் மார்வரை புதைந்து
மூட்டைப்பூச்சி கடி தாளாது
கால்களை அகட்டியகட்டி
தொடையிடுக்கை நிமிண்டும் உயிரோடிருந்த பிணம்
நீதிபதியென்றே அறியப்பட்டது
சம்மட்டி அடியாலும் சைலன்ஸ் ஓலத்தாலும்
பறவைகளற்று உறைந்த அமைதி கிழிந்து
காற்றின் வயிறு முன்தள்ளியது
நீதியை எரித்துப் படிந்த புகையில்
சாம்பல் நிறமான கருங்கோட்டணிந்தவர்கள்
எமதூதராய் வாதப்பிரதிவாதங்களிட்டு
முடிவாய் அறிவித்தனர்
எனக்காக வக்காலத்து பெறுவதில்லையென்று
குரலற்றவன் குர-ல்
எனக்காக நானே வழக்காடுவதென்றான பின்
விசாரணை துவங்கி பிரமாணம் எடுக்கையில்
"சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை...
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை...
அதுசரி, நீங்கள் சொல்வதும் உண்மைதானே'' என்றதும்
கண்ணவித்திருந்த கரும் படுதா விலக்கி
துலாக்கோலை என்பக்கம் சாய்த்து
"சபாஷ் சரியான கேள்வி...'' என்
நீதிதேவதை மேல் வீசப்பட்டன
சட்டப்புத்தகங்களும் கேஸ்கட்டுகளும்
உணர்ச்சிவசப்பட்ட ஒன்றிரண்டு செருப்புகளும்
(செருப்புகள் சிலதில் எங்கள் பரம்பரையின் தையலும் மொழுக்கும் இருந்தன)
நீதிதேவதையைக் கட்சிமாற்றியதாய்
மேலும் இரண்டு கடும் பிரிவுகளின்கீழ்
நீதிபதியே குற்றஞ்சாட்ட
பதில்களை மட்டுமே சொல்லவேண்டிய
கூண்டிலிருந்து
கேள்வியெழுப்பியக் கடுங்குற்றத்திற்காகவும்
ஒளிமரித்த கொட்டடி நோக்கி
இழுத்துச் செல்லப்படுகிறேன்
என் நிழலடி ஒண்டிய நீதிதேவதையோடு



வியாழன், டிசம்பர் 15

இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை - ஆதவன்தீட்சண்யா

தொடர்மழைக்குப் பிறகான இளவெயில் மரக்கிளைகளினூடே மஞ்சளாய் பரவிக் கொண்டிருந்தது. வெயிலின் தயைமிகுந்த சிறுகதிர்கள் சன்னல்வழியே படுக்கையின்மீது ஒளிர்கின்றன. விரைவிலேயே இன்னொரு மழையைக் கிளப்பி கொண்டுவருகிற உக்கிரம் கூடுகிறது வெயிலுக்குள். மறுபடி மழை பிடித்துக் கொள்ளுமானால் மீண்டும் வெயிலின் முகம் பார்ப்பதெப்போ என்று பதறுகிறது மனம். போர்த்திக் கொண்டிருந்த கனத்தக் கம்பளியை உதறியெறிந்துவிட்டு ஓடிப்போய் வெயில் காயவேண்டும் என்று பரபரக்கிறது கால்கள். இன்னொருவர் துணையில்லாமல் எழுந்து உட்காரவும் ஏலாத ஒரு முதியவளுக்கு அது சாத்தியமல்லவே... சுருக்கம் பாய்ந்தத் தன் நடுங்கும் கைகளை மெதுவே ஒரு கொடி போலசைத்து படுக்கை மீதிருந்த வெயிலைத் தடவிக்கொடுக்கிறாள்.

ரஞ்சித்தும் இந்த வெயிலைப் போன்றவன்தான். யாவும் நமுத்து நைந்து ஈரத்தில் சொதசொதத்துக் கிடந்த சமூகத்திற்குள் சூடும் சுரணையும் பாய்ச்சுவதே அவனது திட்டமாயிருந்தது. அதன்பொருட்டே மூடிக்கிடந்த வீடுகளின் சன்னல்களுக்குள்ளும் தன் கிரணங்களை ஊடுருவவிட்டவன்.  முடங்களையும் ஜடங்களையும் கூட தன் கருணை பொங்கும் கதிர்க்கரங்ளால் தொட்டுத்தடவி சொஸ்தமாக்கத் துடித்தவன். இதோ இந்த கிழட்டுக்கரங்களின் ஆதூரமான ஸ்பரிசத்தில் குழைந்து நிற்கும் வெயிலைப் போலவே அவனும் தன்னருகில் இருந்த தருணங்களை நினைத்துக்கொள்கிறாள். ரஞ்சித்... என்று ஒருமுறை தனக்குள்ளேயே சொல்லிப் பார்க்கிறாள்.  பெண்களுடையதைப் போன்ற நீண்டு ஒயிலாகப் புரளும் கூந்தலை விலக்கிக் கொண்டு நான் எங்கும் போகவில்லை, இங்குதானிருக்கிறேன் என்கிறான் ரஞ்சித்.

 இப்படியொரு வசீகரமான சிகையலங்காரம் வாய்க்க ரஞ்சித் எப்போதும் மெனக்கெட்டது கிடையாது1. வாரத்திற்கொரு முறை எண்ணெய் தேய்த்துக்கொள்வதே அபூர்வம்தான். அதுவும்கூட ராஜாராம் போன்றவர்களின் விடுதியறைக்குப் போகும்பாது பூசிக்கொண்டால் உண்டு. இல்லையானால் எண்ணெய் வாங்க ரஞ்சத்திடம் காசு ஏது? சீசா ஏது? டர்பன் கட்டிக் கொள்வதில்லை என்றாகிவிட்டப் பிறகு கிராப் வெட்டிக் கொள்ள வேண்டியதுதானே என்று யாரோ கேட்ட தற்கு, ஐரோப்பியனை காப்பியடிப்பதை விட எனது முன்னோர்களைப்போல மழித்துக் கொள்ளாதிருப்பதுதானே சரியானது என்று பதிலளித்ததை நினைத்துக் கொண்டாள். 
கோபப்படும்போது
 அழகாய்த் தெரியவேண்டும்  என்று
அலங்காரம் பண்ணக் கிளம்புகிறவனால்
 ஒருபோதும் கோபப்படவே முடியாது1
 

இந்தக்கோலத்தில் தான் அவன் கடைசிவரையிலும் இருந்தான். நூறுவகைகளில் அவனது புகைப்படங்கள் வெளியாகியிருந்தபோதும் எடுப்பாகவும் பொருத்தமாகவும் முக விகாசங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிற இந்தத் தோற்றம்தான்  அவளது கண்ணுக்குள் நின்றிருக்கிறது. ஒரு முறை அவனே நேரடியாக ஈடுபட வேண்டிய ஆக்சன்* ஒன்றுக்காக வசீகரமான தன் கூந்தலை கிராப்பாக கத்தரித்துக் கொண்டான். கிராப்பும் அதற்கேற்ற முறுக்குமீசையும் வேட்டைக்கார ஐரோப்பியனைப் போன்ற தொப்பியும் நீண்ட அங்கியும் அணிந்துகொண்ட அந்த மாறுவேடத்தில் சென்று ஆக்ஷனை நிறைவேற்றிவிட்டு அவன் வீடு திரும்பிய அந்த இரவை மறக்கமுடியுமா? 

அவன் வந்துவிடக்கூடிய நேரம்தான், கண்ணயர்ந்துவிடாதே என்று லஜ்ஜாவதி பல்லியைப்போல் இவளை எச்சரித்துக் கொண்டேயிருந்தாள். முன்வாசல் பக்கம் அவளும் பின் வாசல் கதவண்டை இவளுமாக சுவற்றில் காதுபொருத்தி காத்திருந்தனர். அவன் வந்துவிடுவதாய் தூதுவர் மூலம் சொல்லியனுப்பியிருந்த நேரத்தை மீறி கடியாரம் நகர்ந்து கொண்டிருந்தது. சருகின் சிறுதுடிப்பும் சஞ்சலமூட்டியது லஜ்ஜாவதிக்கு. திடீர் திடீரென ஓடிவந்து, சிக்கிக் கொண்டிருப்பானோ என்று பீதியோடு கேட்டுக் கொண்டேயிருந்தாள். நீ பதட்டமடைய ஒரு காரணமுமில்லை பெண்ணே. அமைதியாயிரு. அவன் எத்தனை ஆக்ஷன்களைக் கண்டவன்? என்று இவள் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும்  நேரமாக ஆக இவளுக்கும் பயம் துளிர்த்தது.

மாறுவேடமிட்டுச் சென்று நிறைவேற்றுகிற ஒவ்வொரு ஆக்சனுக்குப் பிறகும் போலிசின் யூகங்களுக்கு பிடிபடாத இடங்களைத் தேர்வு செய்து தலைமறைவாக தங்கிவிடுவது ரஞ்சித்தும் அவனது தோழர்களும் கையாளும் தந்திரம். ஒரேயிடத்தில் அனைவரும் தங்குவது தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொள்வது போலாகும். எனவே தங்குவது ஆளுக்கொரு இடமாக இருக்கும். மொட்டைத்தலை அல்லது கோணல் வகிடெடுத்த கிராப்புடன், குஞ்சம் கட்டிய குடுமியுடன் என்று முடியை வைத்தே அவர்கள் நூதனமான பல அவதாரங்களை எடுத்து ஆக்சனில் ஈடுபட்டார்கள். ஆக்சனின்போது தென்பட்ட உருவத்தில் போலிஸ் தேடிக்கொண்டிருக்க இவர்கள் மீண்டும் தங்களது சுயஉருவில் தாடிமீசை வளர்த்துக்கொண்டு வெளியே சுதந்திரமாக நடமாடத் தொடங்குவார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் சாகசம் போலத் தோன்றலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரை இந்தநேரத்தில் நம்மால் இப்படித் தான் செயல்பட முடியும் என்பதைத் தவிர வேறொன்று மில்லை தோழர்களே. எனவே ஆக்ஷன்களை வெற்றிகரமாய் நிகழ்த்துவதைப்போலவே மறைவிடத்துக்கு திரும்புவதும் அவசியம் என்று தன் சகாக்களுக்கு சொன்ன எச்சரிக்கை இவனுக்கும் பொருந்தும்தானே?
    
முதல்கோழி கூவிவிட்டது. இன்னும் அவனைக் காணலியே என்று விசும்பத் தொடங்கிய லஜ்ஜாவதியை இவள் ஆறுதல் படுத்தினாள். அது தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் உபாயமாகவும் பட்டது இவளுக்கு. விவசாயிகள் வயற்காடு களுக்கு கிளம்பிப் போகத் தொடங்கியிருந்தனர். தெருவில் மாடுகளின் கழுத்துமணி எழுப்பும் ஓசை அமைதியின் ஒரு பகுதியாக  கரைந்து கொண்டிருந்தது. தெருமுக்கில் யாரோ டயர் கொளுத்தி குளிர்காய்ந்து கொண்டிருந்தனர். டயர் கருகும் நாற்றம் காற்றில் பரவி சுவாசத்தை திணறடிப்பதாயிருந்தது. குப்பைக்கூளங்களை அரித்துப்போட்டு காய வேண்டியது தானே... என்று முனகிக்கொண்டாள் இவள்.

தன் கிராமத்தைப் பற்றி பேசும் தருணங்களில் மாலைப் பொழுதுகளில் நெருப்புமூட்டி குளிர்காய்ந்த அனுபவங்களை மிகுந்த மனக்கிளர்ச்சியோடு நினைவுகூர்வான் ரஞ்சித். அதை விவரிக்கிறபோது அனலுக்கு முன்பாக காட்டுகிறதான நினைப்பில் கைகளை முன்னோக்கி நீட்டி விரித்துக் கொள்வான். குளிர்காய்வது தன் கிராமத்துக்கு பனிக்காலம் கொண்டுவந்து சேர்க்கிற சுகமென்பான். பிற்பகலில் லேசான சில்லிப்பாய் தொடங்கி மாலைவேளைகளில் கிராமத்தின் மீது கவிந்து கொள்ளும் பனிக்குள் நிழலைப்போல் நடமாடிய அந்தக்காலம் திரும்ப வராது என்பான். பகற்பொழுதில் பனியிறங்கும் முன்பாக  உலர்ந்த செடிசெத்தைகளை சேகரித்து வைக்க இவனொத்த பொடியன்களுக்குள் பெரும் போட்டாப்போட்டியே நடக்குமாம். பெரியவர்களின் பேச்சில் சுவாரசியம் இழக்கிற சிறுவர்கள் சில கங்குகளை பகிர்ந்தெடுத்துப் போய் தனியே மூட்டி வட்டம் கட்டி உட்கார்ந்து பின்னிரவு வரை கதை பேசிக் கிடப்பார்களாம். ஆனால் பெரியாட்களின் வட்டத்தில் இருப்பதில்தான் ரஞ்சித்துக்கு ஈடுபாடாம். அங்கே குழுமிய விவசாயிகளின் உரையாடல்களில் பொதிந்து கிடந்த துயரமும் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற அவர்களது தவிப்புமே தன்னை ஒரு அரசியல் ஊழியனாய் மாற்றியது என்பான். இன்றுபட்ட துயரமெல்லாம் இந்த நெருப்பிலாவது பொசுங்கிவிடாதா என்ற ஏக்கத்திலேயே அவர்கள்  இப்படி கூடிக்கலைவதாக இவனுக்குத் தோன்றுமாம்2.  
 
இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும். இரவுரோந்தில் பாரா பார்த்த போலிஸ்காரர்கள் ஸ்டேசனுக்குத் திரும்ப இந்த தெரு வழியாகத்தான் போவார்கள். ரஞ்சித் வந்தானென்றால் மாட்டிக் கொள்வானே. பிடிபட்டு விட்டானானால் விசா ரணையின் கடுமை தாளாமல் தன்பெயரையும் சொல்லிவிடு வானோ என்றெல்லாம் அவள் உளைச்சல் மிகக் கொண்டு அரற்றத் தொடங்கியபோது மாடோட்டிக் கொண்டு போன ஒரு விவசாயியின் நிழலுக்குள்ளிருந்து ஒருவன் வெளியேறி பின்வாசலை நெருங்குவதை சன்னல் வழியே கண்ட இவள் அவனது சமிக்ஞைக்காக கதவடியில் காத்திருந்தாள். ஆர்வமிகுதியில் லஜ்ஜாவதிதான் ஓடிப்போய் கதவைத் திறந்தாள்.

மாலைநேரத்தில் நெருப்பு மூட்டி குளிர்காயும் விவசாயியுடன்
 வட்டமாய் அமர்ந்து  அவ்விவசாயி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முயற்சித்திருக்கிறீர்களா?2
                                                                                
வந்தவனைப் பார்த்து இவர்களிருவருக்கும் மூச்சடைத்துவிட்டது. அவனை இவர்கள் முன்பின் பார்த்ததில்லை. ரஞ்சித் இங்கே வரக்கூடும் என்பதை எப்படியோ துப்பறிந்து விட்ட யாரோ ஒரு அதிகாரி வீட்டை சோதனையிட வந்துவிட்டானெனத் தோன்றியது. கதவைத் திறந்துவிட்டாலும் அவன் உள்ளே நுழையமுடியாதபடி வழியை அடைத்துக் கொண்டு மறிப்பாய் நின்று கொண்டனர். அவனோ எதுவும் பேசாமல் வழியை விடுங்கள் என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான். முன்னெப்போதும் கேட்டிராத அக்குரலின் கடுமை நடுக்கத்தை உண்டுபண்ணுவதாய் இருந்தது. உங்களுக்கு யார் வேண்டும்? ஸ்திரிகள் மட்டுமே இருக்கும் ஒரு வீட்டுக்குள் இப்படி அகாலத்தில் நுழைவது அத்துமீறல் இல்லையா என்றாள் இவள். அப்படியானால் எனக்கும் ஒரு சேலையோ கமீஸோ கொடுங்கள் உடுத்திக்கொள்கிறேன், நாமெல்லோரும் ஸ்திரிகளாகிவிடுவோம் என்று அவன் கேலியாக சிரித்தபோதுதான் அவனை இவர்களுக்கு அடையாளம் தெரிந்தது. நின்ற மூச்சு திரும்ப வந்தது.

ஆனால் இம்முறை அவன் பெரும் கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் ஆக்ஷனை முடித்துவிட்டு தப்பி வந்திருக்கிறான். மற்ற தோழர்கள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து அவரவர்க்கு தீர்மானிக்கப்பட்ட தலைமறைவு பகுதிகளை நோக்கி நகர்வதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவன் அவ்விடத்திலிருந்து கிளம்பியிருக்கிறான். நேரமற்ற நேரத் தில் பதுங்கிவருவதை விடவும், ஜனநடமாட்டம் தொடங்கி விடும் அதிகாலைப் பொழுதில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து தப்பிப்பது எளிதாயிருக்கிறதென கூறிக்கொண்டான். விடியவிடிய தூங்காமல் காத்திருந்த இவர்களைத் தூங்குமாறு வேண்டிக்கொண்டான். தூக்கத்தை விடவும் ஆக்ஷன் பற்றி அறிந்து கொள்வதிலேயே இவர்களுக்கு ஆர்வமிருந்தது. அவனும் களைப்பை உதறியவனாய் தனது வழக்கமான உற்சாகமூட்டும் குரலில் எல்லாவற்றையும் விவரிக்கத் தொடங்கினான். ஆனால் பார்த்துப் பழகிய உருவம் அல்லாத வேறொருத்தன் எல்லாவற்றையும் சொல்வது போலிருந்ததால் கண்களை மூடிக்கொண்டு, முன்நெற்றியில் வந்து புரளும் முடிக்கற்றறைகளை வெகு இயல்பாக காதோரம் ஒதுக்கிவிட்டபடி பேசும் ரஞ்சித் உருவத்தை இவள் அந்தக் குரலோடு இணைத்துக்கொண்டாள். சற்றே ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் போலிசும், பிற்காலத்தில் வந்த அவனது இயக்கத்தினரும் அந்த ஜவான் வேடத்தைத்தான் ரஞ்சித்தின் மெய்யான உருவம் என்று சித்தரித்ததை அவளால் ஒப்புக் கொள்ளவே  முடியவில்லை.

ரஞ்சித் இந்தமுறை கொஞ்சம் கூடுதலான காலம் இவர்களோடு தங்கியிருந்தான். லஜ்ஜாவதி மிகுந்த சந்தோஷத்தோடு அவனை கவனித்துக்கொண்டாள். இத்தனைக்கும் அவர்களுக்குள் நீண்டநாள் பழக்கமொன்றுமில்லை. கடந்த செப்டம்பர் மாதக் குளிர் இரவொன்றில் ஒரு கல்லூரியின் இருண்ட தாழ்வாரத்தில் தனது இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து ரஞ்சித் நிகழ்த்தவிருந்த விளக்கவுரையைக் கேட்க லஜ்ஜாவதியின் அண்ணன்தான் இவர்களிருவரையும் அழைத்துப் போயிருந்தான். அரசியலில் பெரிதும் ஆர்வமற்றி ருந்த இவ்விரு பெண்களும் அன்றிரவின் உரையில் தம்மை வேறொரு பிறப்பாய் உணர்ந்தனர். அசையும் ராந்தல் விளக்கொளியில் மங்கலாய் தெரிந்த அந்த முகம் அதன்பின் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாததாய் மாறப்போகிறது என்பதை இவள் அந்த கணமே அறிந்துகொண்டவளைப் போல் தெளிந்த பார்வை கொண்டாள். ஆனால் லஜ்ஜாவதி அந்தகணத்திலேயே ரஞ்சித்துடன் சேர்ந்து அவனது எல்லா இயக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் தீவிரம் கொண்டாள். அவளுக்கு அது சாத்தியம்தான். அவளது அண்ணனும் இளைய சித்தப்பாவும்கூட ரஞ்சித் இயக்கத்தில் சேர்ந்து நாலைந்து ஆக்ஷன்களில் பங்கெடுத்தவர்கள்தான். போலிசோடு நடந்த ஒரு மோதலில் கால்களை இழந்த இந்த சித்தப்பாவை கவனித்துக் கொள்ளும் செவிலியாகத்தான் இவள் லஜ்ஜாவதி வீட்டுக்குள் தங்கியிருக்கிறாள். 

லஜ்ஜாவதியோடு ஒப்பிடும்போது தான் ஒன்றுமேயில்லை என்று இவள் நினைத்தாலும் அதற்காக தாழ்வுணர்ச்சி கொண்டதில்லை. புரட்சிகரமான பல்வேறு சஞ்சிகைகளில் இவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பெண் விடுதலைக் குறித்த கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதில் அக்கவிதைகளே தன்மீது செல்வாக்கு செலுத்தியதாக ரஞ்சித் தன் சுயசரிதையில் பதிவு செய்திருந்தான். ரஞ்சித்மீது தனக் கிருப்பது காதலோ என்று சிலநேரங்களில் தனக்குள்ளேயே கேள்வியெழுப்பி சிந்தனையடுக்கை கலைத்தும் புரட்டியும் பதில்தேடி அப்படியொன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்து சேர்வாள். லஜ்ஜாவதிக்கும்கூட இதே குழப்பங்கள் நேர்வதுண்டு. ஆனால் இதற்காக அவள் ஒருபோதும் தீவிரமாய் பொருட்படுத்தி சிந்தித்ததில்லை.

தலைமறைவாய் இவர்களோடு தங்கியிருந்த இந்தநாட்களில் ரஞ்சித் ஓயாமல் படிப்பதும் குறிப்புகள் எடுப்பதுமாய் இருந்தான். படிப்பதில் கூடுதல் சுவராஸ்யம் உள்ள பகுதி களை இவர்களுக்கும் வாசித்துக்காட்டுவான். ஜனத்தொகையில் சரிபாதியாய் இருக்கும் நீங்கள் பங்கேற்காமல் எதை சாதிக்க முடியும் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பிக் கொண்டேயிருந்தான். எல்லாப் பெண்களுக்காகவும் நாங்கள் பதிலளிக்க முடியுமா ரஞ்சித்? எங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்து முடிக்க சித்தமாயிருக்கிறோம். ஆணையிடு என்றாள் லஜ்ஜாவதி. இதற்கும் ஆணையிடுமாறு ஒரு ஆணிடம் ஏன் கோரவேண்டும்? உனக்கு எது ஏலுமோ அதைச் செய் என்றான். ஆண்பெண் பேதமற்ற தோழர்கள் என்ற அர்த்தத்தில் கேட்கிறேன், ஆணையிடு என்றாள்.

உணர்ச்சிபொங்க பேசிவிட்டாலும் அவன் இட்ட ஆணையை நிறைவேற்ற முடியாதவளாய் நிலைகுலைந்து போய்விட்டாள் லஜ்ஜாவதி. அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனது குறித்த உளைச்சலில் உணர்வுகளின் சமநிலை குலைந்து  சாகும்வரை பெரிதும் அது குறித்தே புலம்பிக்கொண்டிருந்தாள். அந்த புத்தகங்கள்தான் எவ்வளவு மேதைமையானவை? அதில் எத்தனை புரட்சி கரமான கருத்துக்களையெல்லாம் தெரிவித்திருந்தான் என்பது ஞாபகமிருக்குது தானே என்பாள் அடிக்கடி இவளிடம்.

உண்மைதான். ஏப்ரல் 28 ஆக்ஷனுக்குப் பிறகு தப்பித்துப் போகாமல் கைதாகி சிறைக்கொட்டிலில் இருந்தகாலத்தில் அவன் எழுதியிருந்த நான்கு புத்தகளுக்கு இணையான ஒன்றை இவளும் இந்நாள்வரை கண்டதில்லை. அவன் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை விடவும், சிறு பிரசுரங்களை விடவும் தெளிவான அரசியல் பார்வையை இந்த நான்கு புத்தகங்களும் கொண்டிருந்தன. 

திருட்டுக்குற்றங்களுக்கான தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகி வந்த மங்கத் என்ற கைதியின் மூலம்தான் ரஞ்சித் அந்த புத்தகங்களை கொடுத்தனுப்பி யிருந்தான். மங்கத்  தன் இடுப்புப்பகுதிக்குள் மறைத்து கடத்தி கொண்டுவந்திருந்தான் நூலின் கையெழுத்துப் படிகளடங்கிய பையொன்றை. பைக்குள் என்ன இருக்கிறதென்று பார்ப்பதை விடவும் ரஞ்சித்தைப் பற்றி விசாரிப்பதிலேயே அவர்கள் பரபரப்பு கொண்டிருந்தனர். ரஞ்சித்தும் அவனது தோழர்களும் சிறைக்குள்ளேயே 114 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் தற்போது குறிப்பாக அரசியல் கைதிகளும் பொதுவாக கைதிகள் அனைவரும் ஓரளவுக்கு கண்ணியமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கும்போது மங்கத் சற்றே உணர்ச்சி மேலிட்டவனாய்த் தெரிந்தான்.
  
குற்றப் பின்னணியுள்ள தன்னைப் போன்றவர்களிடமும் தோழமையோடு பழகிய ரஞ்சித் பற்றி பேச மங்கத்திடம் நிறைய சேதிகளிருந்தன. ‘கள்ளம் கபடமற்று பிறக்கும் மனிதனை திருடனாகவும் கொலைகாரனாகவும் ஏமாற்றுப் பேர்வழியாகவும் மாற்றுகிற மோசடியை இந்த சமூக அமைப்பே செய்கிறது என்பதால் உங்களை குற்றவாளிகளாக பார்க்க முடியவில்லை. யாரோ யாருக்காகவோ எழுதி வைத்துக் கொண்டிருக்கும் சட்டத்திற்குதான் நீங்கள் குற்றவாளியே தவிர எனக்கல்ல...’ இப்படியாக காலைப் பொழுதுகளில் தண்ணீர்த் தொட்டியருகில் இவர்களோடு பிரியமாய் பேசிக் கொண்டிருப்பானாம் ரஞ்சித். ரஞ்சித் சிறையதிகாரிகளோடு வாதாடி  ஜூலை 12ம் தேதி 404 பக்கங்களைக் கொண்ட குறிப்பேடு ஒன்றை பெற்றிருப்பதாகவும் அதில் தான் படிக்கும் புத்தகங்களின் முக்கியப்பகுதிகளை குறித்து வைப்பதாகவும் சொல்லியனுப்பி இருக்கிறான். உண்மை தான் சகோதரிகளே, அவன் தலைமாட்டில் அம்பாரமாய் குவிந்திருக்கின்றன புத்தகங்கள் என்றான் மங்கத். தூங்கத் தெரியாவன்போல் எப்போதும் விழித்துக்கொண்டேயிருக்கி றான். தனது கைதியாக முடங்கிக் கிடக்கட்டும் என்று சிறை யிலடைத்தவனின் நினைப்பு ஜெயித்துவிடக்கூடாது.  இந்த பகலும் மாலையும் இரவும் காலையும் நம்முடையது. அதை வீணாக்குதல் எதற்கு என்பானாம்.  ஜலந்தரைச் சேர்ந்த அந்த மங்கத் குறித்து அதன்பின் தகவலொன்றுமில்லை.

பைக்குள் வெவ்வேறு தலைப்புகளிலான நான்கு நோட்டுகள் இருந்தன. சிறையதிகாரி களின் கண்மயக்கி எழுதப்பட்டதால் சில இடங்களில் கையெழுத்து  தெளிவற்று இருக்கக்கூடும் என்றும், படிகளை தேவையெனில் திருத்தம் செய்து அச்சுக்கு அனுப்பிவைக்குமாறும் குறிப்பெழுதப்பட்டிருந் தது. அச்சாகி வந்ததும் காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும், எம்.என்.ராய்க்கும் நூல்களை அனுப்பி வைக்குமாறும் அவர்களது கருத்துக்களை கேட்டு தனக்கு தெரிவிக்குமாறும் கேட்டிருந்தான். கடந்த வருடம் செப் 12, 14 தேதிகளில் மத்திய சட்டசபையில் தங்களை விடுவிப்பதற்காக குரலெ ழுப்பிய ஜின்னாவுக்கு நன்றி தெரிவித்து அவன் கைப்பட எழுதியிருந்த கடிதத்தை அவரிடம் எப்படியாவது புத்தகத்தோடு இணைத்து ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்தான்.  

திரும்பத்திரும்ப படிப்பதும் திருத்தங்கள் ஏதும் தேவையா என விவாதிப்பதுமாய் இருந்ததில் ஒருமாதம் கழிந்துவிட்டது. அதற்குள் அச்சுக்கு போய்விட்டதா என்று மூன்றுமுறை தகவல் கேட்டு அனுப்பியிருந்தான் ரஞ்சித். ஆனால் வெளியே நிலைமை சரியாய் இல்லை. மே-5ம் தேதி சிறப்பு நீதிமன்ற விசாரணை தொடங்கிவிட்டதையடுத்து கெடுபிடி அதிகரித்துவிட்டது. ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் ஒத்தாசையாய் இருந்தவர்களைத் தேடி வெறிகொண்டலைந்தது போலிஸ். தலைமறைவுக் காலங்களில் அடைக் கலம் கொடுத்த வீடுகளுக்குள் அகாலங்களில் சோதனையிடப் பட்டது. சந்தேகத்தின் பேரில் இழுத்துச் செல்லப்பட்ட  பலரும்  விசாரணையின்றி சட்டவிரோதமாய் காவலில் அடைத்துவைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.

காந்தியின் ஆதரவாளர்கள் சிலரும்கூட ஆள்காட்டிகளாய் இருந்தனர். டிசம்பரில் வைஸ்ராயின் சிறப்பு ரயிலைத் தகர்க்க நடந்த முயற்சியைக் கண்டிக்கும் காந்தியின் தீர்மானம்- அவரது முழு செல்வாக்கையும் பயன்படுத்தியப் பின்னும்-  1713 பேர் கொண்ட காங்கிரஸ் அவையில் வெறும் 81 வாக்குகளை மட்டுமே அதிகம் பெற முடிந்ததால் கிலியுற்ற மிதவாதிகள், அமிதவாதிகளை காட்டிக் கொடுக்கும் வேலையில் வெட்கமற்று ஈடுபட்டனர். யங் இந்தியாவில் வெளியான  கட்டுரைகள் வழியே புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கும் அரசின் அத்துமீறல்களுக்கு தனது ஒப்புதலை காந்தி சூசகமாக பகிரங்கப்படுத்தியிருந்தார். அப்போதிருந்து போலிசின் அட்டூழியத்தில் நாடு திணறத் தொடங்கியது. ரஞ்சித் சிறைக்குப் போய்விட்ட இந்த பதினெட்டு மாதங்களில் தாங்கள் இன்னும் போலிசின் விசாரணை வளையத்திற்குள் இழுத்து வீசப்படாமல் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது? இந்த நிலையில் ஒரு அச்சகத்தைத் தேடி கண்டுபிடிக்க ஏலுமா? ரஞ்சித் தங்களிடம் ஒப்படைத்தக் கடமையை நிறைவேற்றுவது தான் எப்படி?

நிலைமை முன்னிலும் மோசமாகிவிட்டிருந்தது.  அக்டோபர் 7ம் தேதி தனது விசாரணையை முடித்துக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் ரஞ்சித்துக்கும் அவனது கூட்டாளிகள் இருவருக்கும் மரணதண்டனையை தீர்ப்பாக்கியிருந்தது. லஜ்ஜாவதியும் இவளும் எதிர்ப்பு முழக்கங்களடங்கிய சுவரொட்டிகளை தயாரித்து தமது கமீசுக்குள் மறைத்துக்கொண்டு போய் நகரெங்குமுள்ள சகாகக்களை சந்தித்து ரகசியமாய் விநியோ கித்தனர். நகரின் பிரதான சதுக்கங்களில்  ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மக்கள் கூட்டங்கூட்டமாக திரண்டு வாசித்தனர். கண்டன ஹர்த்தால்கள் பலவிடங்களிலும் தன்னெ ழுச்சியாய் நடந்தன. மாணவர்கள் கலாசாலைகளைப் புறக் கணித்துவிட்டு தெருக்களில் கூடி கொடும்பாவி கொளுத்தினர். வழக்கத்திற்கு மாறாக தி டிரிப்யூன் நாளிதழ் அன்றைக்கு விசேஷமாக மாலை பதிப்பை வெளியிட்டு தீர்ப்பின் விவரங்களை அம்பலப்படுத்தி கண்டித்திருந்தது. தீர்ப்பை எதிர்த்து நாடெங்கும் வெடித்தக் கிளர்ச்சிகள் வட்டமேசை மாநாட்டில் வாதாடி அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை காந்தி ரத்துசெய்ய வேண்டும் என்பதாயிருந்தது. 11லட்சம் வேண்டுதல் பிரேரணைகள் கடிதமாகவும் தந்தியாகவும் காந்திக்கும் அரசுக்கும் வந்த வண்ணமிருந்தன. ஆனால் மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே மூன்றுமுறை வைஸ்ராயை காந்தி சந்தித்திருந்தபோதும் 19ம் தேதிதான் இந்த மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். காந்தியின் காலந்தாழ்ந்த இம்முயற்சிக்கு உள்நோக்கம் இருக்கக்கூடுமென மக்களிடையே அரற்றம் பரவியது. தூக்கிலிடும் முன்பாக வெளியே எஞ்சியிருக்கும் புரட்சியாளர்களை நரவேட்டையாடக் கிளம்பியது அரசாங்கம். இம்முறை தப்பமுடியாதென்று தோன்றியது இவளுக்கு. லஜ்ஜாவதிக்கும் நிலைமை புரிந்திருந்தது.

ஒருவேளை தங்களது ஜாகை சோதனையிடப்படுமானால் தாங்களாகவே துணிச்சலாக முன்வந்து  அறிவித்துக்கொண்டாலென்ன என்று ரஞ்சித்திடம் ஆலோசனை கேட்க பல்தேவ் அண்ணாவை அனுப்பிவைத்திருந்தனர். ரஞ்சித் இதற்கு ஒப்பவில்லை. எல்லோரும் சிறைக்குள் வந்துவிட்டால் யார் இயக்கத்தைக் கட்டுவது? தடயங்களை அழித்துக் கொண்டு அல்லது மறைத்துக்கொண்டு சாதகமான தருணத்திற்காக காத்திருக்கும்படி சொல்லியனுப்பியிருந்தான். நூல்களை அச்சுக்கு கொடுக்க இது பொருத்தமான தருணம் அல்ல என்பதை தான் உணர்ந்தே இருப்பதாயும் எனவே பதட்டப்பட்டு எதிலும் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித் திருந்தான். எனினும், அவன் கொல்லப்படுவதற்கு முன்பாக அவற்றை அச்சு வடிவில் கொண்டுவந்து அவனுக்கு காட்ட வேண்டும் என்று இவர்கள் ரகசியமாக மேற்கொண்ட முயற்சிகள் பலிதமாகவில்லை. அரசுக்கும் காங்கிரசுக்கும் எதிரான முழக்கங்களைக் கொண்ட சுவரொட்டிகளைக் கண்டு பீதியடைந்திருந்த போலிசார் அச்சாபீஸ்கள் மீது கூடுதல் கண்காணிப்பு கொண்டிருந்தனர். குறிப்பாக நவஜவான் பாரத் சபாவுக்கு அனுசரனையாக லாகூரில் இயங்கி வந்த அரோர்பன்ஸ் அச்சகத்தை சுற்றி எப்போதும் ரகசிய போலிஸ் ஏஜெண்ட்டுகளின் நடமாட்டம் அதிகரித்திருந்தது.

அரசுகெதிராக போர்தொடுத்திருக்கும் தங்களை போர்க்கைதி களாகவே கருதி சுட்டுக்கொல்ல வேண்டுமென்ற ரஞ்சித் மற்றும் அவனது தோழர்களின் இறுதிவிருப்பம்3 போலவே அவனது புத்தகங்களை அச்சில் கொண்டு வந்துவிட வேண்டு மென்ற இவர்களது முயற்சியும் நிறைவேறாமலே போனது. மார்ச் 23ம் தேதி அவர்களை தூக்கிலிட்டுவிட்ட பிறகு லஜ்ஜா வதியும் இவளும் அழுவதற்கும் தெம்பற்று தொய்ந்தார்கள். தூக்கிலிடப்பட்டதற்கு மறுநாள் காங்கிரஸ் நாடு தழுவிய பொது ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அப்படி யொரு அழைப்பை விடுக்காதிருந்தாலும் மக்கள் அந்த மகத் தான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தித் தானிருப்பார்கள் என்றாள் இவள். கொலைக்கு துணைபோன குற்றவுணர்விலிருந்து தப்பிக்க இப்படியொரு பரிகாரம் போலும் என்று சாடினாள் லஜ்ஜாவதி. இவளுக்கும் அதே கருத்துதான்.

அவர்களை இறுதியாகப் பார்க்கும் வாய்ப்பும் தங்களுக்கு கிட்டாதது குறித்த வேதனை நெறிக்கட்டியாய் வலிக்கத் தொடங்கியது. தூக்கிலிடப்பட்டது பற்றி சஞ்சிகைகளிலும் ரேடியோவிலும் வெளியாகும் செய்திகள் இவர்களை மேலும் துவளச்செய்தன. தி டிரிபியூன் போன்ற ஒருசிலவற்றைத் தவிர பிற உள்ளூர் பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட வும் தயக்கம் காட்டிய நிலையில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழான டெய்லி ஒர்க்கர் 25ம் தேதியே  தலைப்புச் செய்தியாக வெளியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தது. மதராசில் குடியரசு பத்திரிகை யில் ஈ.வெ.ராமசாமி, வழக்கின் தன்மையை விஸ்தாரமாக விவரித்து அஞ்சலி தெரிவித்ததோடு காப்பாற்ற முன்வராத காங்கிரசை கடுமையாக விமர்சித்துமிருந்தார்.
கடவுளுக்கு முன்பே  உலகமிருந்தது என்பதைப்போலவே
எனக்குப் பின்னும்  இருக்கும்.
 ஆனால் என் காலடியும் மூச்சுக்காற்றும் பட்ட பிறகு அது பழைய மாதிரியே சுழன்றுகொண்டிருக்க முடியாது...3
தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பெரும் போராட்டங்கள் வெடித்துப் பரவிக் கொண்டிருந்தன. சராசரியாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் இருவர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு நாளிதழ் தெரிவித்திருந்தது. கராச்சி காங்கிரசில் காந்திக்கு எதிராக  கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரிகளும் ஆட்சேப கோஷங்களை எழுப்பினர். மகாநாடு நடைபெறும் மைதான வாயிலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் நாட்டின் விடுதலைக்கு ரஞ்சித்தின் பாதையே தேவையென்று  தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்ததில் மகாநாட்டு நடவடிக்கைகள் முற்றாக சமன் குலைந்தது. வரவேற்புக்குழுத் தலைவர் சுவாமி கோவிந்தானந்தாவும் மகாநாட்டுத் தலைவர் சுபாஷ் சந்திரபோசும் செய்த சமாதானங்களும்கூட அங்கு அமைதியை கொண்டுவரவில்லை.

இச்செய்திகளையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து தெரிவிக்கிற பல்தேவ் அண்ணா நேற்றிரவு தெரிவித்த செய்தி இவர்களது மனவுறுதியை முற்றாக குலைக்கக் கூடியதாயிருந்தது: அவர்களை தூக்கிலிட்டு ஓரிரு நிமிடங்களில் கழுத்தை முறித்ததும் குற்றுயிரும் குலையுயிருமாக கீழேயிறக்கி மரக்கட்டை கள் அடுக்கிய லாரி ஒன்றில் மறைத்து லாகூர் கண்டோன் மென்ட்டுக்கு கொண்டு போனார்களாம். போகும் வழியிலேயே ரஞ்சித்துக்கு நினைவு திரும்பியதாம்.  கண்டோன் மென்டில் வெறியோடு காத்திருந்த சாண்டர்ஸ் குடும்பத்தினர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மூவரையும் ஆத்திரம் தீருமட்டும் துப்பாக்கியால் சுட்டு பழி தீர்த்துக்கொண்டனராம். தூக்கிலிடப் பட்ட உடலில் குண்டுக்காயம் எப்படி வந்தது என்று யாரும் பிரச்னை எழுப்பிவிடக் கூடாது என்பதாலேயே ஜுன்ஜுன்வாலா பகுதியில் அடக்கம் செய்யவிருப்பதாய் மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு பியாஸ் சட்லெஜ் சங்குமுகத்தில் ரகசியமாய் எரியூட்டிவிட்டதாம் அரசு. பஞ்சாப் கவர்னரின் நேர்முக உதவியாளராய் இருந்த சாண்டர்சின் மாமனார்தான் இதையெல்லாம் பின்னிருந்து இயக்கியவன் என்றான் பல்தேவ் அண்ணா. அவ்வாறு சுடப்பட்டிருந்தால் அதையும் தீரத்தோடு எதிர்கொண்ட படியேதான் ரஞ்சித்தின் உயிர் பிரிந்திருக்கும் என்றாள் இவள்.

யாரும் யாருக்கும் தேறுதல் சொல்லிக்கொள்ள வழியற்று அவரவர் துயரத்தை அவரவரே  கடந்து வர வேண்டியதாயிற்று. அதற்கான காலம் ஒரு மலைப்பாதையைப்போன்று முடிவற்றதாய் நீண்டு நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. யாதொன்றின்மீதும் பிடிப்பற்று வெறுமைக்குள் துழாவிக் கழிந்த இக்காலகட்டத்தில் வெளி நடமாட்டத்தை சுருக்கிக் கொண்டு வீட்டிலேயே அடைந்துகிடந்தனர். அவன் கடைசியாய் வந்திருந்தபோது விட்டுச் சென்ற குர்தாவை எடுத்து ‘இந்த துணியில் தங்கியிருக்கும் அவனது வாசனை காலத்துக்கும் உடன்வருமா? என்று லஜ்ஜாவதி கேட்டபோது அது பிரிவின் நிமித்தமானதொரு கவிதையின் முடிப்பு வரியைப் போல் தோன்றியது இவளுக்கு. அதற்கப்புறம் அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலும்கூட சுருங்கிப்போனது. எப்போதாவது அரிதாக சில வார்த்தை களை பேசிக்கொண்டனர். அதுவும் ரஞ்சித் அவர்களுடன் இருந்தது பற்றியதாகவே இருந்தது. இதுவன்றி பொது விவகாரங்கள் ஒன்றிலும் நாட்டம் கொண்டாரில்லை.

அவ்வாண்டின் கோடையில் ரஞ்சித்தின் சொந்தகிராமமான பங்காவுக்கு சென்று அவனது குடும்பத்தாரை சந்தித்து திரும்புவதென்ற திட்டத்தை ஒருவரோடொருவர் பேசிக் கொள்ளாமலே கைவிட்டனர். கட்கர்கலானிலிருக்கும் அவன் குடும்பத்தாரின் பூர்வீக வீட்டைக் கண்டுவரும் யோசனையும் கூட இருந்தது.  ஊருக்குப்போகையில் தருவதற்காக அவனது தங்கை பர்காஷ்சுக்கு மிகப்பிரியமாய் வாங்கி வைத்திருந்த ஜடைபில்லைகளும் வண்ணக்குஞ்சமும் அலமாரியில் நிறம் மங்கி வெளிறிக் கொண்டிருந்தன. லஜ்ஜாவதி ரஞ்சித்தின் பெயரை பூத்தையல்களால் நிரப்பிக் கொண்டிருக்க, இவளோ அச்சு கோர்க்க ஏதுவாக அப்புத்தகங்களை  தட்டச்சு செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். காலம் ஒரு உடைந்த சக்கரத்தைப்போல மெதுவே உருண்டது.  

எப்போதாவது வரும் பல்தேவ் அண்ணாவிடம் அச்சகம் பற்றி தொணதொணப்பது இவர்களது வாடிக்கையாயிருந்தது. ரஞ்சித் இல்லாவிட்டாலும் இயக்கம் தொய்வின்றி செயல்படும் என்பதை  ருசுவாக்க நடந்து கொண்டிருந்த பல்வேறு ஆக்சன்கள் பற்றி உற்சாகம் பொங்க அவன் விவரிக்கும்போது இவர்கள் இருவரும் சுரத்தின்றி கேட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களது இந்த மனப் போக்கை ரஞ்சித் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்... நீங்கள்   மீண்டும் வெளியே வரவேண்டும் என்று வேண்டுதல் வைப்பான். இவர்கள் பதிலாக எதையும் சொல்லிக் கொள்வதில்லை.

ரஞ்சித் விட்டுப்போன பணிகளை நிறைவேற்றுவதா அல்லது உறைந்து கிடப்பதா என்ற குழப்பத்தை  காந்திதான் முடிவுக்கு கொண்டுவந்தார். தீண்டத் தகாதவர்களுக்கு தனித்தொகுதி வழங்குவதை எதிர்த்து 20.9.32ல் அவர் சாகும்வரை உண்ணா நோன்பைத் தொடங்கிய செய்தியை ரேடியோவில் கேட்டு எரிச்சலுற்ற இவர்கள் இருவரும் நீண்டநாட்களுக்குப் பிறகு தெருவிறங்கி தபாலாபீசுக்குப் போய், ‘இந்த நாட்டுக்கு இன்னொரு காந்தி கிடைக்கக்கூடும். அல்லது தேவைப்படா மலும் போவதற்கு வாய்ப்புகளுண்டு. எனவே அவரது தந்திரத்தையும் நிர்ப்பந்தத்தையும் தாங்கள் ஆற்றலோடு எதிர்கொள்வீர்கள் என நம்புகிறோம். பின்வாங்கிவிட வேண்டாம். நாடு உங்களோடு’ என்று அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தனர். யார் இந்தப் பெண்களென அம்பேத்கர் குழம்பிவிடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட கடிதத்தில் அவர்மீது ரஞ்சித் கொண்டிருந்த அபிமானம் பற்றி குறிப்பிட்டதோடு, விரைவில் அச்சுக்குப் போகவிருக்கும்  அவனது நூலின் தெரிவு செய்யப்பட்ட சிறுபகுதியையும் இணைத்து அனுப்பியிருந்தார்கள்4. ஆனால் காந்தியின் பிடிவாதத்திற்கு எல்லாமே இரையாகிப் போயின. கஸ்தூரிபாயின் மாங்கல்யம் நீடிக்க  தீண்டத்தகாதாரும் தேசத்தின் ஒப்பற்றத் தலைவருமாகிய அம்பேத்கரும்தான் காந்திக்கு உயிர்ப்பிச்சை வழங்க வேண்டியதாயிற்று.

‘ஏகாதிபத்தியத்திற்கு சற்றும் குறையாமல் ஒவ்வொரு இந்துவும் தனக்குக் கீழிருக்கும் சாதிகளை ஒடுக்குகிறான். இழப்பதற்கு எதுவுமில்லை என்னும் மார்க்சின் பிரகடனத்தை மறுப்பவர்களாக இந்திய உழைப்பாளிகளை இந்துமதம் பிறப்பிலேயே வடிவமைத்துவிடுகிறது. சாதியல்லாத சமூக உறவுமுறை எதுவும் பரிந்துரைக்கப்படாத சமூகமாக இது கெட்டித்தட்டிக் கிடக்கிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு சாதி மதம் இனம் மொழி- இவை எல்லாம் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்வதன் மூலமே அவர்களை அணிதிரட்டுவதற்கான இந்திய வயப்பட்ட மார்க்சீயத்தைக் கண்டடைய முடியும்...4

அடுத்துவந்த நாட்களின் பல்வேறு நிகழ்வுகளில் மனம் அலைக்கழிந்தாலும் இவர்களிருவரும் இயக்கத்தோடு பொருந்திக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறைந்தே காணப்பட்டன. நூல்களை அச்சுக்கு கொண்டு போய் ஆகப் போவதென்ன என்று அடிக்கடி விரக்தியில் புலம்பும் லஜ்ஜாவதி, புத்தகங்கள் வெளியாகிவிட்டால் மறுகணமே ரஞ்சித் இருக்கு மிடத்துக்குப் போய் விடுவேன் என்பாள். இதெல்லாம் சுத்த அபத்தம் என்று இவள் நினைத்துக் கொண்டாலும் மறுப்பேதும் சொல்லாது மௌனமாய் இருந்துவிடுவாள் அம்மாதிரியான பொழுதுகளில். உறைந்துவிட்ட இந்த மௌனத்தை உருகவைக்கும் வெப்பம் யாரிடமிருக்கிறதோ?

போலிசின் கெடுபிடிகளுக்கு அஞ்சி ஏழாண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பூஞ்சை களான தங்களை ரஞ்சித் இந்தவேலைக்காக தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்று கூறிய லஜ்ஜாவதி நம்பிக்கையான ஒருவரிடம் புத்தக வேலையை ஒப்படைத்துவிடலாமா என்று நச்சரிக்கத் தொடங்கியிருந்தாள். ரஞ்சித்தின்  கட்டுரை யொன்று பஞ்சாபியிலோ வேறெந்த இந்திய மொழியிலுமோ வெளியாகியிருக்காத நிலையில் தன் சகாவான ஜீவாவைக் கொண்டு அதை ‘நான் ஏன் நாத்திகனானேன்’ எனத் தமிழில் மொழிபெயர்க்க வைத்து 1934லியே வெளியிட்டிருந்த ஈவெராவிடம் வேண்டுமானால் நம்பிக் கொடுக்கலாம் என்பதே இவளது அபிப்ராயமாயிருந்தது. ஆனால் போலிசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மதராசுக்குப் போவதெப்படி?

மிகுந்த கவனத்தோடு திட்டமிட்டாலும் ஒவ்வொரு முறையும் மதராஸ் பிரயாணம் தடைபட்டுக் கொண்டேயிருந்த நேரத்தில்தான் ஒருநள்ளிரவில் விஜயகுமார் சின்ஹா வந்து சேர்ந்தார். நேரடியாக பங்கெடுக்காவிட்டாலும் பல்வேறு ஆக்ஷன்களில் தொடர்புடைய சின்கா இதுவரையிலும் போலிசின் சந்தேகத்திற்கு ஆளாகாதவராய் இருந்தார். எனவே அச்சிடும்வேலையை அவர் மிகவும் பெருமிதத்தேடு ஏற்றுக் கொண்டார். அவரிடம் புத்தகங்களின் கையெழுத்துப் படிகளை ஒப்படைத்த அன்றிரவு, அச்சிடப்பட்ட புத்தகங் களின் உலராத மையின் வாசனை கிறக்கமூட்டியது இவர்களின் கனவில்.

டில்லியில் அல்லது கான்பூரில் இருக்கும் ஏதேனுமொரு பதுங்குமிடத்தில் தங்கிக்கொண்டு அச்சாக்க வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்றவர் குறித்து அதற்கப்புறம் ஒரு தகவலுமில்லை. போகும் வழியிலேயே போலிசிடம் சிக்கிக் கொண்டாரோ அல்லது வேறெங்கும் தலைமறைவாக பதுங்கியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால் தம்மை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரத்திலிருந்து விடுபட்ட உணர்ச்சி மேலிட்டவளைப் போல அன்று லஜ்ஜாவதி இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியிருந்தாள். இவளும்கூட நீண்டநாட்களுக்குப்  பிறகு ஒரு கவிதையை எழுதியிருந்தாள்5.
இரவாகிவிடுவதாலேயே
சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
உங்களுக்கானதொரு சூரியன்
பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது
அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள்
உங்களைத் தீண்டக்கூடும்
தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள்
விகசிக்கும் அந்த ஒளியெடுத்து
கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம்
நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை
கடக்க வேண்டியவரன்றோ  நாம்... 5

ரஞ்சித்தை சூரியனாய் உருவகித்து தான் எழுதிய அக்கவிதை எழுபதாண்டுகளுக்குப் பின் வெயிலைத் தடவிக் கொடுக்கும் இந்தப்பொழுதில் நினைவுக்கு வந்தது குறித்த சந்தோஷத்தில் மெஹருன்னிசாவை அழைத்தாள். தீனமான தன் குரலில் இப்போது புதுத் தெம்பேறிவிட்டதை உணர்ந்தவளாய் ‘இந்த கவிதையை குறித்துக்கொள். மீதியையும் இன்றைக்கே எழுதிவிடலாம்’ என்றாள்.

2.
ரஞ்சித்தும் தோழர்களும் தூக்கிலிடப்பட்டதற்குப் பின்னான நாட்டின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கும் மெஹருன்னிசா, பைசலாபாத் ( முன்பு- லயல்பூர் ) மகளிர் கல்லூரியின் பட்ட மேற்படிப்பு மாணவி. சுதந்திர தினத்துக்கு முந்திய நாளிரவு கலவரத்தின்போது ஒரு கும்பலால் தூக்கிச் செல்லப்பட்டு ஆறுமாதங்களுக்குப்பின் எல்லையோர நிவாரண முகாம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவள் இவளது தாய். பலாத்காரங்களால் சுவாதீனம் கலங்கியவளாகவும் கர்ப்பமுற்றுமிருந்த அவள் மெஹருன்னிசாவை ஈன்றெடுத்த சிலநாட்களில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். இவளது வாழ்வை மையமாக வைத்து சதத் ஹசன் மாண்டோ ஒரு சிறுகதையை எழுதியுள்ளார். பின்னாளில் அது படமாகவும் வெளியானது.

ரஞ்சித்தின் சமகாலத்தவர்களை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேடிப் பிடித்து அவர்களது ஞாபகங்களை தொகுப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா. லாகூர் ஜெயில் ரோட்டில் டிஏவி கல்லூரி விடுதிக்குப் பின்புறமிருந்த ஒருவீடும்கூட ரஞ்சித்தின் பதுங்கிடங்களில் ஒன்றெனக் கிடைத்த தகவலின்பேரில் மெஹருன்னிசா இவளைத் தேடிக் கண்டுபிடித்திருந்தாள். அந்திமத்திலுள்ள நந்தினியம்மாவின் நினைவிலிருப்பவற்றை மீட்டெடுத்து எழுத வந்தவள் அவளுடனேயே தங்கி பணிவிடை செய்தவாறே ஆய்வையும் தொடர்கிறாள் .

3.
அதன்பின் நடந்தவை மின்னலெனப் பாய்ச்சல் வேகம் கொண்டவை. இரண்டாம் உலக மகாயுத்தம் தொடங்கிவிட்ட நிலையில் இங்கிலாந்துக்கு ஆதரவாக இந்தியாவை இறக்கிவிடும் முயற்சிக்கு எதிராக  புரட்சியாளர்கள் கலகம் செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நிம்மதியற்றுப்போன அரசு தன் நரவேட்டையை முடுக்கிவிட்டது6. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. சித்ரவதைகளுக்கு காரணமெதுவும் தேவையற்றிருந்தது. பின்வந்த நாட்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அரசியலானது தொடர்ந்து கொதிநிலையிலேயே இருந்ததால் தன்வீடும் சோதனையிடப்படலாம் என்ற அச்சத்தில் சின்ஹா, ரஞ்சித்தின் கையெழுத்துப் படிகளை நண்பர் ஒருவரிடம் கொடுத்து பத்திரமாக வைக்குமாறும் நிலைமை சரியானதும் வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். வாங்கிக் கொண்டு போன அந்த தொடை நடுங்கி, தான் மாட்டிக்கொண்டால் என்னாவது என்ற அச்சத்தில் நான்கு புத்தகங்களையும் எரித்துவிட்டதாய் எனக்கு ஞாபகம்....

ஆமாம் அம்மா, சிவவர்மாகூட தன் புத்தகத்தோட முன்னுரையில் இந்த செய்தியை குறிப்பிட்டிருக்கிறார்... என்றாள் மெஹருன்னிசா.

நான்தான் அவனுக்கு புத்தகங்களோட பெயர்களைச் சொன்னேன். பிரிவினைக்கப்புறம் ஓரிரு தடவைகள்தான் சிவவர்மாவை சந்தித்தேன். ரஞ்சித்துக்கும் எங்களுக்கும் ரொம்பவும் நெருக்கமான தோழன். லாகூர் சதிவழக்கில் தண்டனைக்கைதி. நிறைய ஆக்ஷன்களில் பங்கெடுத்தவன். ரஞ்சித் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு முழு தகுதியானவன்தான். கான்பூரிலோ லக்னோவிலோ இருந்து எப்போதாவது கடிதங்கள் எழுதுவான். கொஞ்சகாலமாய் அதுவும் நின்றுவிட்டது என்றாள்.

சிவவர்மா 97ல் இறந்துவிட்ட செய்தியை இவள் இன்னும் அறியவில்லை போலும். சொல்லி துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என்று தன்னைத்தானே எச்சரிக்கை செய்து கொண்டாள் மெஹருன்னிசா. 

மெஹர், அந்த புத்தகத்தில் வேறென்ன குறிப்பிட்டிருந்தான் சிவவர்மா?.
லஜ்ஜாவதி பற்றி ஒரே ஒரு வரி வருகிறது அம்மா. ஆனால் உங்களைப் பற்றி எதுவும் காணலியே?

நானும் லஜ்ஜாவதியும் இதே வீட்டில்தான் இருந்தோம். இது அவளுடைய வீடுதான். பிரிவினைக்குப்பின் எங்களது குடும்பம் இந்தியாவுக்கு பெயர்ந்துவிட்ட போதும் பிடிவாதமாக இங்கேயேதான் இருந்தோம். திட்டமிட்டிருந்ததில் முடிக்கப்படாமலே இருந்த சில வேலைகளுக்காக நாங்கள் இங்கேயே தங்க  வேண்டியதாயிற்று. அவள் சமாதிகூட இந்த வீட்டின் புழக்கடையில்தான் இருக்கிறது. எழுபதோ எழுபத்தொன்னோ சரியா ஞாபகம் வரல. நானும் அவளோடு செத்திருக்க வேண்டியவள்தான். கொஞ்சத்தில் தப்பிவிட்டேன்.

எதுவும் ஆக்சன்ல ஈடுபட்டீங்களோ?

ஆமாம். நிலுவையிலிருந்த ஆக்ஷன். லாகூர் சதிவழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாயிருந்து ரஞ்சித்துக்கும் மற்றவங்களுக்கும் தண்டனை கிடைக்க காரணமாயிருந்த  நவாப் முகம்மது அகமது கானைப் பற்றி நீ படித்திருக்கிறாயா? பிரிவினைக்குப் பிறகு அவன் இங்கே கௌரவ மாஜிஸ்திரேட்டாகிவிட்டிருந்தான். எப்பவும் ஜம்பமாய் மெய்க்காப்பாளர்களோடே வந்து போய்க்கொண்டிருந்தான். நாங்களும் பின்தொடர்ந்து கொண்டுதானிருந்தோம். ஒருநாள் ராத்திரி கஜல் கச்சேரி ஒன்றுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது வகையாக சிக்கினான். அவர்களைத் தூக்கிலிட்ட அதே இடத்தில் அவனைக் கொன்றோம் நாங்களிருவரும்.

இவங்களை லாகூர் ஜெயில்லதானே தூக்கிலிட்டாங்க?. ஆமா. ஆனா அந்த ஜெயில் இப்ப இல்ல. 65வாக்கிலேயே அதை இடிச்சு தரைமட்டமாக்கிடுச்சு அரசாங்கம். சத்மான் சௌக்னு இப்ப சொல்ற இடம்தான் அது. அங்க வச்சுத்தான் கணக்கை நேர் செஞ்சோம். அவனது மெய்க்காப்பாளன் சுட்டதில் ஒரு ரவை அவளது அடிவயிற்றில் பாய்ந்துவிட்டது. காயத்தோடேயே மதிலேறி குதித்து  வீட்டுக்குள் வந்துவிட்டோம். பழகியத் தடம்கிறதாலயும் பலநாளா ஒத்திகைப் பார்த்திருந்ததாலயும் தப்பிச்சு வர்றது எளிதாகத் தான் இருந்துச்சு. ஆனா நிறைய ரத்தம் வெளியேறிட்டதால அவளை பிழைக்க வைக்க முடியல. ஒத்தையாளா குழி வெட்டி அவளைப் புதைச்சேன். நைந்து போயிருந்த ரஞ்சித்தின் குர்தாவைத்தான் அவள்  அன்று அணிந்திருந்தாள்.
சுதேசிகளால் ஆளப்படும்  ஒரு நாடு என்பதற்கும் அப்பால்,    விடுதலையடையும் நாடு   எப்படி இருக்க வேண்டும் என்பதும்
 அவன் கனவாக இருந்தது.
எனவேதான் அவனைக் கொல்வதில்  மானசீக கூட்டாளிகளாய்
 சுதேசிகளும் இருந்தனர்.6 
உங்களுக்கொன்னும் ஆகலியே?

இதோ இந்த தழும்பைத் தொட்டுப்பார். அதுக்குள் ஒரு ரவை தங்கியிருக்கு. எப்பவாச்சும் எறும்பு கடிச்சாப்ல சுருக்குனு வலிக்கும். மத்தபடி எந்த தொந்தரவும் இல்லாததால இருக்கட்டும் சனியன்னு அப்படியே விட்டுட்டேன்.

அந்த ஜெயிலை பார்க்கமுடியாமப் போச்சே அம்மா...
இங்க எஃப்.இ.சௌத்ரின்னு ஒரு போட்டோகிராபர் இருக்கார். என்னை மாதிரி நூறை நெருங்குற வயசுதான்.  ஜெயிலை இடிக்கிறப்ப தத்ரூபமா எல்லாத்தையும் படம் பிடிச்சு வச்சிருக்கார். ரஞ்சித்தையும் தோழர்களையும் எரியூட்டின பன்சிகாட் பகுதியைக் கூட படமெடுத்திருக்கிறார். நான் அனுப்பினேன்னு சொல்லு. பிரியமா தருவார்....

சரியம்மா, ரஞ்சித் தந்தனுப்பின புத்தகம் நாலும் என்னதான் ஆச்சு...?.
அதான் சொன்னேனே, எரிச்சிட்டானுங்க.
அதுகள்ல எழுதியிருந்த எதுவும் இந்த உலகத்துக்கு கிடைக்காமலே அழிஞ்சது பெரிய துயரம்தான் என்றாள் மெஹருன்னிசா.

இவளுக்கு கோபத்தில் வார்த்தைகள் குழறத் தொடங்கியது. உடம்பெல்லாம் நடுங்கியது. என்ன பெரிய துயரத்தை இந்த ரெண்டு நாடுகளும் கண்டுவிட்டன? நேத்து வரைக்கும் இந்த புரட்சியாளர்களை கலகவாதிகள்னு தானே பாடப்புஸ்தகத்துலகூட எழுதி வச்சிருந்தாங்க. அவனோட புஸ்தகங்க அச்சாகி வந்திருந்தா அதையெல்லாம் படிச்சிட்டு அப்படியே நடந்திருப்பாங்களாக்கும்? பிரிவினைக்காலத்துல எத்தனை வன்முறை.... ரஞ்சித் இருந்திருந்தா இதையெல்லாம் சகிச்சிருக்கவேமாட்டான். ஒரே நாடா இருக்கவும் தெரியல. ஒத்துவரலன்னு அமைதியா பிரிச்சிக்கவும் தெரியல. பாகம் பிரிச்சுக்காத வீடு எது? பங்கு வைக்காத நாடு எது? ....த்தூ என்று துப்பினாள்.

அவள் நாக்கு வறண்டு விட்டிருந்தது. குவளையிலிருந்த பழரசத்தை கொஞ்சம்போல் புகட்டினாள் மெஹருன்னிசா. இவளுக்கு சற்றே ஆசுவாசம் கிட்டியது. கண்களை மூடிக்கொண்டு திடீரென அமைதிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள். காத்திருந்தாள் மெஹர். ஆனால் இப்படியெல்லாம் நடக்கும்னு ரஞ்சித் யூகிச்சிருந்தான்7 தெரியுமா மெஹர்... நாடுகள் பிரிவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் இரு சமூகங்களுக்குள்ளும் இணக்கம் காணமுடியாத பகைமை விதைக்கப்படுவது பற்றி அவன் கொண்டிருந்த அச்சம் உண்மையாகிவிட்டது பார்த்தாயா மகளே...

வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர் இங்கிருந்தோரை மதம் மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறவர்களே,  ஆரியர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே... அவர்கள் ஏன் இங்கிருந்தோரை  ஆரியராக மாற்றி தம்மோடு சேர்த்துக் கொள்ளாமல் வர்ணமாக,சாதியாக பிரித்து வைத்தார்கள்?7

நீங்களும் லஜ்ஜாவதியும் எப்படியும் நாலு புத்தகங்களையும் வாசித்திருப்பீங்கதானே அம்மா? அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டினாள். சிறிதுநேரம் கழித்து ஏழு வருஷமா அதை மட்டுந்தானே செஞ்சுக்கிட்டிருந்தோம்...? என்றாள் கண்களைத் திறக்காமலே. புத்தகங்கள் நாலும் பொதுவா எதைப்பத்தியெல்லாம் பேசினதுன்னு உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா அம்மா...?  எப்படி மறக்க முடியும்? சிவவர்மா குறிப்பிட்டிருந்த தலைப்புகளை வைத்து ஆளாளுக்கு யூகத்தில் ஏதேதோ உளறிக் கொட்டுறாங்க. ரஞ்சித் இவங்களுக்கு வெளியில நின்னு யோசிச்சி எழுதியிருக்கான்...

4.
சோசலிசத் தத்துவத்தை ஆங்கிலத்திலும்,  இந்திய புரட்சி இயக்கத்தின் வரலாறை இந்தியிலும், மரணத்தின் நுழைவாயிலில்- உருதிலும், சுயசரிதையை பஞ்சாபிமொழியின் குறுமுகி வரிவடிவத்திலும் ரஞ்சித் எழுதியிருந்தான். நான்கும் அச்சில் சுமார் ஆயிரம் பக்கங்கள் அளவிற்கு வரக் கூடும். அடித்தல் திருத்தலின்றி நேர்த்தியான எழுத்தமைவு. எழுதும் பொருள் குறித்த கருத்தமைவில் நம்பிக்கையும் தெளிவும் ஒருங்கு கூடிவிடுமானால் மட்டுமே வாய்க்கும் நேர்த்தி அது. வார்த்தைகளின் தெரிவும் வீச்சும் படிக்கிறவ னின் மூளையை சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவை.  ரஞ்சித்தின் மொழிநடை அவனே எதிர்நின்று உரையாடுதலுக்கு நிகரானது. அவன் சிறைக்குள் இல்லை, இதோ நம்முன் இருக்கிறான் என்பதாக நினைத்துக்கொண்டபோது இவளுக்கு கண்கள் பனித்து எழுத்துக்கள் கலங்கியோடியதும்  பதறியடித்து துப்பட்டாவால் துடைத்தபோதும் ஈரத்தால் அழிவதிலிருந்து சில எழுத்துக்களை காப்பாற்ற முடியாமல் போனதும் கிழவியின் ஞாபகத்தைப் புரட்டியெடுத்தது.

கிர்த்தி, மகாராத்தி, பான்சி எண் ஆகிய இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளுக்கு முற்றிலும் தொடர்பற்ற வகையில் புதியத்தளங்களையும் களங்களையும் உள்ளடக்கியிருந்தன  புத்தகங்கள். இதில் சுயசரிதையைத் தான் லஜ்ஜாவதிக்கும் இவளுக்கும் சமர்ப்பணம் செய்திருந்தான் ரஞ்சித். ‘மனிதர் களுக்கிடையிலான பிரியங்களே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதன் சாட்சிகளாய் வாழும் தோழிகள் லஜ்ஜாவதிக்கும் நந்தினிக்கும்...’ என்று குறிப்பிட்டிருந்தான். சாமான்யர்களின் சுதந்திர உணர்ச்சியும் எழுச்சியலையும் நேஷனல் கல்லூரி மாணவனாயிருந்த தன்னை எவ்வாறு சுருட்டி இழுத்துக்கொண்டது என்பதில் தொடங்கி தன் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ள நேர்ந்த சிறுநிகழ்வுகளையும் நேர்மையாக பதிவு செய்திருந்தான். மத்திய சட்டசபையில் குண்டு வீசியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு பஞ்சாபி இளைஞன் என்று பத்திரிகைச் செய்திகளில் அடிபடத் தொடங்கிய ரஞ்சித், விசாரணை முடியும் தருவாயில் உலகப் புரட்சி இயக்கங்களின் ஆதர்ஷநாயகனாய் வீறு கொண்டெழுந்தது எவ்வாறு என்பதை வாசிப்பினூடே கண்டனர் இப்பெண்கள். இயக்கத்தின் போக்கில் வளர்ந்தெழுந்த அவனது ஆளுமை, காலங்களைத் தாண்டி கொண்டாடப் படுவதற்கான முன்குறிப்புகளை உள்ளடக்கியிருந்தது சுயசரிதை.

ஆனால் ரகசியம்போல் பொதித்துவைத்திருக்கும் அதை யெல்லாம் தன் நினைவுக்குள்ளிருந்து உருவியெடுத்து எதிரிலிருக்கும் இந்த சின்னப்பெண்ணிடம் தந்துவிடுகிற வலு தன் மனதுக்கில்லை என்பதை கிழவி உணர்ந்திருந்தாள். அதே நேரத்தில் ரஞ்சித்தின் நூற்றாண்டு தொடங்கும் இத்தருணத்தில் அவனை மிகுந்த அர்த்தத்தோடு முன் வைக்கத் துடிக்கும் மெஹர்மீது அவளுக்கு அனுதாபமும் பெருகியது. இளம்பிராயத்து நந்தினி தனக்குள்ளிருந்து எழுந்துவந்து எதிரில் நின்று வேண்டுவதைப் போலிருந்தது அவளுக்கு மெஹரைப் பார்க்க.  உன்னை ஏமாற்ற மனமில்லையடிப் பெண்ணே, உனக்கு ஏதாவது செய்தாக வேண்டும்... என்னை எழுப்பி உட்கார வை.. என்றாள்.

5.
நடுங்கும் கரங்களால் புத்தகங்களை தடவிப் பார்த்த நந்தினியம்மாள் அவற்றை நெஞ்சின்மீது கிடத்தி கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு அழவேண்டும் போலிருந்தது. அவள் மனவோட்டத்தை மாற்றும் பதற்றத்தோடு ஒரு புத்தகத்தின் முன்னுரையை இவளுக்கு வாசித்துக் காட்டத் தொடங்கினாள்- ‘ரஞ்சித்தின் தோழியும் கவிதாயினியுமான நந்தினியம்மாள், அவனது கையெழுத்துப்படிவத்தை தட்டச்சு செய்ததின் ஒரு பிரதியை இத்தனைநாளும் தன் தலையணை உறைக்குள் பாதுகாத்து என்னிடம் தந்திருக்காவிட்டால் இந்நான்குப் புத்தகங்களும் உலகத்திற்கு கிடைத்திருக்காமல் போயிருக்கும்.... ’

இடைமறித்த நந்தினி, இதுவொன்றும் தன் இறுதி லட்சியமல்ல என்றும் அவன் ஆசைப் பட்டதுபோல ஒவ்வொரு தெருமுனையிலும் அடுப்படியிலும் கோதுமை வயல்களின் வரப்புகளிலும் மலையிலும் பள்ளத்தாக்குகளிலும் ஆலைச் சங்கைவிட உரத்தஒலியோடு இந்நூல்களின் ஒவ்வொரு வரியும் வாசிக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொருவர் உணர்விலும் கலக்கிறபோது ஆயிரங்கால் தேரேறி வரும் சூரியனைப்போல ரஞ்சித் மீண்டும் வந்துவிடுவான்தானே என்றாள். ஆம் என உறுதியளிக்கும் திடத்தை தனக்குள் தேடிக்கொண்டிருக்கிறாள் மெஹருன்னிசா.

பெட்டிச்செய்திகள் பற்றிய குறிப்புகள்:

1. காங்கிரசாரை பகடி செய்து ரஞ்சித் எழுதிய, "உடல் பொருள் ஆவி மற்றும் அந்த ஆவியில் அவித்த புட்டு" என்கிற அங்கதக் கட்டுரையிலிருந்து

2. வெடிகுண்டின் வழிபாடு என்ற காந்தியின் கட்டுரைக்கு வோரா எழுதிய பதிலில் எடுத்தாளப்பட்ட ரஞ்சித்தின் வரிகள். லக்னோவின் அமினாபாத்தில்  இருந்த பதுங்கிடமான சாலமன் கட்டிடத்திலிருந்து எழுதி பின்  இயக்கத்தின் சார்பில் அச்சானது.

3. முழுநேரப் புரட்சியாளர்களின் (Professional Revolutionaries) குறுக்கீடுகள்  என்ற  ரஞ்சித்தின் கட்டுரை  இந்த வரிகளோடுதான்  முடிகிறது.  

4. ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’- ரஞ்சித், பக்க இலக்கம் 16 முதல் 22 வரையானதிலிருந்து (கையெழுத்தில் உள்ளவாறு)

5. காலின் கீழ் தொடங்கும் உலகம், கவிதைத்தொகுதி, நந்தினி, நூதனா பதிப்பகம், லாகூர்

6. ஊனில் கலந்தவரை உருக்கிக் கொல்வாயோ, லாகூர் பல்கலைக்கழக மாணவர் வெளியீடு

7. சாதி மற்றும் வகுப்புவெறியர்களை அடையாளம் காண்பதில் உள்ள இடர்ப்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து

ஓவியம்: உமாபதி



புதன், டிசம்பர் 14

வரம் - ஆதவன் தீட்சண்யா

த்தா மகமாயி
உம் புண்ணியத்துல பையனாப் பொறந்துட்டா
கெடா வெட்டி பொங்க வைக்கிறேன்

ஏண்டா கும்புடறதுக்கு பொம்பள சாமி
கொழந்த மட்டும் ஆம்பளயா...
எனக்கு உங்கெடாவும் வேணாம்
ஒரு மயிரும் வேணாம்.








செவ்வாய், டிசம்பர் 13

நெருப்புக்கு அலையும் அரக்குமாளிகை - ஆதவன் தீட்சண்யா

ரணத்தின் கடவுள்
இப்போது தன் தூதுவர்களை
எல்லாவிடங்களுக்கும் அனுப்பியிருக்கிறபடியால்
அவர்களிடமிருந்து நேரடியாகவே வாங்கிட முடியும்
கலப்படமற்ற உன் மரணத்தை

அதுவொன்றும் கள்ளமார்க்கெட் லாகிரி வஸ்துவோ
கையூட்டு கொடுத்துப் பெறும் லைசன்ஸோ அல்ல
ரகஸ்யமாய்
விடலைப்பையனுக்கும் கிடைக்கும் ஆணுறைபோல்
ISO, ISI  முத்திரைகளுடன்
எல்லாப் பெட்டிக்கடைகளிலும்
பரந்து நீளும் தங்கநாற்கர நெடுஞ்சாலையிலும்
கலாசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலும்கூட
ஷாம்பு அல்லது முகப்பூச்சு க்ரீம்போல சாஷேக்களில்
கோக் பெப்சி பாட்டில் வடிவில்
அலுமினிய foil சுற்றி பதப்படுத்திய உணவுப்பொட்டலம்போல்
நீ விரும்பும் எவ்வண்ணத்திலும் வாசத்திலும்
தட்டுப்பாடின்றி கிடைப்பதாயிருக்கிறது மரணம்

கிரெடிட் கார்டு அல்லது 0% வட்டிக்கடனில்
வலியறியாது சாகும் இந்நல்வாய்ப்பை பயன்படுத்தாமல்
தாமதிக்கும் கணங்கள் தற்கொலைக்கு ஒப்பானவை
 ஓடு ஏதேனுமொரு அங்காடிக்கு
வழியில் என்கவுண்ட்டர் நடக்காதவரை
நேர்த்தியாக உறையிடப்பட்டு
ஊதாநிற ரிப்பனில் பூங்கொத்துடனிருக்கும்
உனக்கு பாக்கியமுடையதாகிய  இயல்பானதொரு மரணம்.



























திங்கள், டிசம்பர் 12

காமதேனு- ஆதவன் தீட்சண்யா


கொன்ற மாடுகளின் ஆவிகள் கொம்பாட்டின கனவில்
சாந்தப்படுத்த
தெய்மாக்கினர் அவைகளை
வெட்டித் தின்பதில்லை என்றானாலும்
மறக்க முடியுமா மாட்டுரத்தத்தின் ருசியை
பாலாய் தயிராய் நெய்யாய் உறிஞ்சும்
புதுமோசடி புரியாமல்
மூத்திரத்திற்கும் கோமியத்திற்குமான அர்த்தக்குழப்பத்தில்
செத்து நாறுகிறது புனிதப்பசு.

தாயோ தந்தையோ தலைவனோ தொண்டனோ
உயிர் பிரிந்த கணத்திலேயே
ஊத்தைப் பிணமென்றாகிவிட
பசு மட்டுமே
செத்தப்பின்னும் புனிதமாயிருக்கிறது சிலருக்கு
கண்காணியுங்கள் அவர்களை
இன்னும் மடிமுட்டிக்கொண்டிருக்கிறார்களா
பில்ட்டர் காபிக்காகவென்று.

ஞாயிறு, டிசம்பர் 11

ஆமென்- ஆதவன் தீட்சண்யா

ன்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்.

சனி, டிசம்பர் 10

சடங்கு - ஆதவன் தீட்சண்யா

ட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்

ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது ஜனநாயக அரசு

கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.

வெள்ளி, டிசம்பர் 9

கடவுளின் மரணம் - ஆதவன் தீட்சண்யா

யிரங்காலத்துச் சேறோடு
நான் உள் நுழைந்தபோது
உச்சிப்பொட்டில் ஒரேசாத்தில் வீழ்த்தப்பட்ட மாடாக
தனித்து மரித்து அநாதையாய்க் கிடந்தார் கடவுள்

உலகத்திற்கான கடைசிச்செய்தி எதையுமே கூறாமல்
ஆவென பிளந்திருந்த வாயில்
அண்டசராசரம் ஏதும் தெரியவில்லை.

ஆதியந்தமற்றவரென அறியப்பட்டிருந்ததால்
பிணமாயிருப்பது கடவுளாயிருக்க முடியாதென்று விசாரித்ததில்
எல்லாத்திசைகளிலும் கடவுள்
ஏற்கனவே இறந்துவிட்டிருந்தது தெரிந்தது

இங்கேயும்
புரோகிதச்சூதினால் முதன்முறையாகவும்
புஷ்யமித்திர சுங்கனின் வஞ்சகத்தால் மறுமுறையும்
கொல்லப்பட்ட விபரமே தெரியாமல்
எதற்குமே உதவாத அந்தச் சனியனை
இத்தனைக்காலம் சுமந்ததே போதுமென்று
நியாயத்தின் சூட்சும வலுவால்
நான்தான் இறுதியாய் கொன்றேன் என்பது மட்டும்
இன்னும் என் ஞாபகத்திற்கு வரவேயில்லை.

ஞாயிறு, டிசம்பர் 4

ரட்சிப்பின் சூசகம் - ஆதவன் தீட்சண்யா

ம்மா தரும் நீராகாரம்
ஆளுக்கொரு கலயம் குடித்துவிட்டு
சூரியனும் நானும் அதிகாலை கிளம்பினோமானால்
வழியெல்லாம் பராக்கு பார்த்தபடி
உச்சிக்கு வந்துசேர நடுப்பகல் 12 மணியாகிவிடும்.

களைப்பு நீங்க
மேகத்தில் படுத்து கதைபேசுவோம் கொஞ்சநேரம்
தாகமானால்
வெயிலுக்குள்ளேயே மழை பெய்வித்து குடிக்க
காக்காய்க்கும் குருவிக்கும் கல்யாணம் செய்விப்போம்

நடுவானத்திலிருந்து நாலாதிசைக்கும்
குடைக்கம்பி மாதிரி சூரியன் விரிக்கும் கதிரில்
ஏறி இறங்கி சரித்து விளையாடுவதில் நேரம் போவதே தெரியாது

வெக்கையில் உப்புப் பூத்து
சூரியக் கதிரொளி மங்கும்போது
தங்கத்தில் லாடமும் வைரத்தில் சேணமும் பூட்டிய
ஏழுகுதிரை ரதமேறி நீராடப்போவோம்
மலைக்கப்பாலிருக்கும் கடலுக்கு

உன் சகவாசத்துக்காகத்தான்
இன்றும் பொசுக்காமல் விட்டுவிட்டேன் உலகத்தை என்று
ஒவ்வொரு நாளும் உறங்கப் பிரியும் முன்
சூரியன் சொல்லும்
நாளைக்கும் விளையாடப் போகலாமென்பேன் நான்.

வியாழன், டிசம்பர் 1

சாலை குறித்த பூர்வாங்க விவாதம் - ஆதவன் தீட்சண்யா

மையல்கட்டிலிருந்து சாப்பாட்டுக்கூடத்துக்கு
புத்தகஅலமாரிக்கு பூஜைரூமிலிருந்து
ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் மற்றொன்றுக்கு
இன்னும்
தெருவுக்கு
தெருக்களுக்கிடையில்
ஊருக்கும் மயானத்துக்கும்
மயானத்திலிருந்து சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தனித்தனியாய்
இந்த ஊருக்கும் அந்த பட்டணத்திற்கும்
கண்டங்களை இணைத்தும்கூட
கொடித்தடம் கோணவழி
ஒத்தயடிப்பாதை ஓடைக்கரை தங்கநாற்கர நெடுஞ்சாலையென்று
நீண்டுகிடக்கிற சாலைவசதி...

        ( இடைமறித்து )
        அடீ செருப்பால,
        அது என்னாடா பழையசோறு கெடாமப் பாத்துக்குற பிரிஜ்ஜா
        இல்லே, படுத்துத்தூங்குற மெத்தையா...
        சாலைங்கறது வசதி இல்ல... தேவை....

ஆமாமாம் தேவை.
மக்களின் கருத்தை மதித்து திருத்தம் ஏற்றுக்கொள்ளப்...

       (மீண்டும் இடைமறித்து) மதிக்கவும் திருத்தவும் நீ யாருடா..
        ஒழுங்கா பேசப்பழகு முதல்ல..

மகாஜனம் இப்படி குறுக்கிட்டால்
என் மனப்பாடம் மறந்துவிடும்

       சரி... முழங்கு உன் பிரசங்கத்தை

அனேகப்பாதைகளிருந்தாலும்
குண்டுங்குழியுமற்றதொரு பாதையே நம்தேவை
ஆனால் அதற்கு ஜல்லியும் தாரும் வேண்டுமே

       மக்கு மக்கு... ரெண்டையும் கலந்து அந்தரத்தில போடுவியா ரோடு...?
       நிலம் வேணும்டா நிலம். அதாவது மண்...

ஆமாமாம், அடங்காம துருத்திக்கிட்டு எழும்புறதையெல்லாம்
அங்குலம் அங்குலமா உள்ளழுத்தி சமப்படுத்த
ஒரு ரோலரும் தேவை.

       இத்தனையிருந்தாலும் போதாதப்பா அறிவாளி
       காலில் சாக்கு கட்டிக்கொண்டு
       ராவும்பகலும் தார்ச்சூட்டில் வேக எங்களாட்டம் ஆட்களும் தேவை.

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...