வியாழன், பிப்ரவரி 16

சொர்ணக்குப்பத்தின் துர்க்கனவு -ஆதவன் தீட்சண்யா

காத்திருந்த வெயில் எங்கும் தகித்து நிரம்பியது விடியும்போதே, துளிப்பொழுதில் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது சாலை. சித்திரை வைகாசியில் மட்டுமே கடுவெயில் என்றிருந்த நிலைமாறி பொழுதெல்லாமும் இப்படியாகவே விடிந்து தீய்ந்தது வெக்கையில். பொசுங்கும் வாடையை முகர்வதற்குள் டீச்சரம்மாளின் தலைக்கு மேல் கிரீடம் போல் கர்வம் கொண்டிருந்த குடை வெறும் கம்பிக்கூடாகிவிட்டது. குடைக்கம்பி வழியே பாய்ந்த உஷ்ணம் அவளின் உச்சந்தலை முடியையும் கருக்கிவிட்டிருந்தது. மாயாஜால படங்களில் வரும் பிசாசின் சதையழுகிய விரலெலும்புகள் போல் விகாரமாகிவிட்டிருந்த குடைக்கு மிரண்டு வீசியெறிந்துவிட்டு கால்பதைக்க ஓடுகிறாள் ஊர்மந்தைக்கு.

களத்து மேட்டில் கரையான் தின்றது போக எஞ்சியிருந்த தனது கலப்பையும் மேழியும் அவ்வாறே கரிந்துவிட்டன வெயிலில் என்ற பிராதுடன் அங்கு ஏற்கனவே காத்திருந்தான் விவசாயி ஒருவன். சிறுநீர் கழிக்கவும் தன்னுடம்பில் மூன்று நாட்களாய் ஒரு சொட்டு நீரும் உள்போகவில்லை என்றொருவன் முணகியது யார் காதிலும் விழவேயில்லை. காட்டு மூங்கிலைப் போல வீட்டுவாரைகள் தானாய் பற்றியெரிந்து கோம்பைச் சுவரைத் தாண்டி முகடு வரைக்கும் நெருப்பு எழுந்ததாக கூரையடி நிழலுக்குள் பதுங்கியிருந்த மக்கள் தப்பியோடி வந்தனர் புகையில் மிதந்து. புகார்ப் பெட்டிகளைப் போல வந்து குவிந்தனர் ஊர் மக்கள் மந்தையில்.

நிழலை மறைத்து வைத்திருக்கவில்லை என்று கையை விரித்துக்காட்டுவது போன்று தலை விரிக்கோலமாய் இலைகளற்று கிடந்தன மந்தையின் மரங்கள்.

வேரின் பெருமூச்சு வெக்கையைக் கூட்டியது. வெயிலின் காந்தலொளி பாம்பென மினுங்கிக் கொத்தியது. வியர்வைக்கு பதிலாய் ரத்தமே வெளியேறி வருதல் போல் திரேகத்தில் கபகபவென்று சூடு பரவுகிறது. தாகம் விளாறியது தொண்டைக்குள். அருகிருந்தவன் மேனியில் கொப்பளிக்கும் வியர்வையை ஆசை பொங்க நக்குகிறேன். சீழின் நெடி குமட்டலெடுக்கிறது. ஓங்கரித்தபடியே அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து ஓடுகிறேன். இன்னும் விடியவேயில்லை. தண்ணீர் லாரிக்காக வரிசையில் காத்திருக்கிறது ஊர். படி தாண்டி பெண்கள் வெளிப்போவது தமது பகுமானத்திற்கு இழுக்கென்று வித்தாரம் பேசும் ஆண்கள் தூங்கும் பாவனையில் படுத்திருக்க ஒன்னம்மா கோவில் மைதானம் முழுக்க பச்சையும் சிவப்பும் மஞ்சளுமான காலிக் குடங்களுக்கிடையே வண்ணமிழந்திருந்தனர் பெண்கள். மறுபடி போய் தூங்க அச்சமாயிருந்தது.

உள்ளறையின் இருள் கரும்புழுக்களாய் நெண்டிப் பறந்தன. விளக்கைத் தூண்டாமல் மசங்கலின் நெப்பில் தடவி மொடாவின் அடியில் ரகசியம்போல் தங்கியிருந்த தண்ணீரைக் குடிக்கையில் கனவில் வந்த சீழின் நெடி அடித் தொண்டைவரைக்கும் மறுபடி நாறி குமட்டியது. வினோதங்கள் குழைந்த கனவின் ரேகை பூமியின் பரப்பெங்கும் இரக்கமற்று ஓடிக் கொண்டிருப்பதை தினப்பொழுதில் கடக்க வேண்டியிருக்கிறது. என் தவிப்பு யாருக்கும் பொருட்படுத்தத்தக்கதாயில்லை. தண்ணீர் லாரியின் ஹாரன் சத்தம் அமிர்த விருந்துக்கான அழைப்பாய் கேட்கத் தொடங்கிவிட்ட இக்கணத்தில் என்மீதான எவரின் கரிசனமும் அடுத்துவரும் எட்டுநாட்களை அவர்களுக்கு நீரின் வாசனையற்றதாகிவிடும். உயிரைக் காத்துக் கொள்ள ஓடுபவர்களுக்கு உயிர்தானே பிராதானம்? சொர்ணக்குப்பம் ஆதியிலிருந்தே இப்படி அவதி கொண்டதாய் யாரும் நினைக்க வேண்டியதில்லை.

வெள்ளைக்காரனுக்கு ரொம்ப முந்தியிருந்தே ஆகிவந்த நீர்த்துறைகளாக ஊரின் தென்வடல் எல்லையில் சமுத்திரம்போல் ஏரியும் மையத்தில் கண்ணாடிப் பளிங்கில் பெரிய குளமும் எப்போதும் தளும்பிக் கிடந்த ஊர்தான். குளம் வெட்டியபோது அடங்காத ஊற்றெழும்பி ஆறு போல் பொங்கியோடியதாம் ஊரை முழுக்கிக் கொண்டு, எதுகொண்டு கரையணைத்தாலும் உப்பாய் கரைந்ததாம், தெக்கே குறிகேட்டதில் உயிர்ப்பலியில்தான் அடையுமென்றதாம் சாமி. ஆடு, கோழி, பன்றி, கெடாரியென்று எதெதோ கொடுத்தும் ஏலவில்லை. கடைசியில் நிறைசூலியாயிருந்த ஒன்னம்மாளை பலிகொண்ட பிறகுதான் நின்றதாம், ஏழு லட்சணங்களும் சேரப்பொருந்திய அந்த குணவதி தன்னையே தத்தம் செய்துகொள்ள முன்வந்திருக்காவிட்டால் ஊர் என்னவாகியிருக்குமோ?

பரவசத்தோடும் திகிலோடும் ஊரே திரண்டுப் பார்த்திருந்த பௌர்ணமி இரவில் தாய்வீட்டு சீதனத்தை தாம்பாளத்தில் அடுக்கி நடுவில் சுடரும் அகல் விளக்கை ஏந்தியபடி சர்வலங்காரத்தோடு ஒவ்வொரு அடியாய் உள்வைத்து ஒன்பதாம் அடியில் முழுகி மறைந்தாளாம். அப்போதிருந்து ஒன்னம்மாதேவிதான் ஊர்த்தெய்வம். குளத்தங்கரைக் கோயிலில் குடிமேவியிருக்கும் அவளுக்கு அறுவடையான புதுதானியத்தில் திருப்படையல் வைக்கும் நாளில் சேரியிலிருக்கும் அவளது கால்வழிப் பரம்பரையினரை குதிரை மேல் அழைத்து வந்து மரியாதை செய்வது வழக்கம்.

குளக்கரையின் புங்கமரத்து குளிர்ச்சியில் துண்டு விரித்து படுத்தெழும் சுகத்திற்காக அக்கம்பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து போவார்களென பெரியாம்பளைகள் சொல்வதுண்டு. ஆணாள் பொண்ணாளுக்கு தனித் தனியாய் குளித்துறைகள் சவுக்காரம் போட்டு துணி அலச நினைப்பவர்கள் ஓடைக்கோ ஏரிக்கால்வாய்க்கோ போய்விட வேண்டியதுதான். ஈ, காக்கா கூட எச்சம் போடாமல் தள்ளிப் பறக்கும். கரையிலிருந்து ஒன்னம்மாள் காவல் சூடியிருக்கும் போது வில்லங்கம் பண்ண யாருக்கு தைரியம் வரும்? குளத்து நீரின் சேக்கம் ஊரடியில் கொடியோடி எந்நேரமும் குளுமை கசிந்தது வீடுகளுக்குள், புழக்கடை கிணறுகளில் கையாலேயே கோரிக்குடிக்கு மளவுக்கு நீர்மட்டம் மேற்பரப்பில் தளம்பிக் கிடக்கும், பச்சைத்தண்ணியைக் குடித்தே பசிநீக்கம் கொள்ளலாம்.

ஈச்சமும் எலந்தையும் வேம்பும் விளாவும் சூழ செல்லமாய் அசைந்து தளும்பியபடி ஏரி படுத்திருக்கும் நட்டுவைத்த வாள் போல் ஓங்கிய பனைகள் நாற்திசைக்கும் நீர்பாயும் மதகிலிருந்து பட்டம் பார்த்து நடந்தது பண்ணையம். பருவத்திற்கு தக்கின வெள்ளாமை நிறைந்து பச்சையே ஊரின் நிறமாகியிருந்தது. ஏரிப்பாசனம் ஏறிவரும் பரப்பில் நெல்லும் கரும்பும் வாழையும், தண்ணீர் சுண்டும் காலங்களில் வாரத் தண்ணீருக்கு தாங்கும் கம்பு, ஆரியம், கடலை, உளுந்து, மேட்டுத்தாங்கலில் தினை, சாமை, பெருவரகு, சோளம், ஊடுபாவி அவரையும் துவரையும் ஆமணக்கும், எள்ளும் கொள்ளும் எல்லா வீடுகளுக்குமான பட்சணங்கள்.

அங்கும் இங்குமாய் ஒன்றிரண்டு கமலைக் கிணறுகள். விடிவதற்கு முன்பே ஏத்தம் பூட்டிவிடுவார்கள். உருளைகள் கீச்சொலி கிணற்றுவாரியில் லாடம் தேய்வதில் இழைந்து வினோத கச்சேரி கேட்கும். பறியிலிருந்து ஈரத்தோலின் வாசனையோடு தொளைக்குழியில் தண்ணீர் கொட்டும் ஒலி ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வொரு கதியில் எழும்பும் வாள்கயிறும் வடமும் மின்னலாய் நெகுக்கும் விடிந்த பின் பார்த்தால் அரை குண்டுக்கால் தான் பாய்ந்திருக்கும் காட்டு முனியின் சேட்டை இது, வந்த தண்ணியை வாய்க்காலாய் படுத்திருந்து குடித்துவிட்டதென்று காட்டுக்காரர்கள் புகார் கொண்டிருப்பார்கள். அறுப்புக்கு இறங்கும் முன் நல்மூலையில் கோழி வெட்டி படையலிடுவதாய் கும்பிடிகை வைப்பார்கள்.

நஞ்சையோ புஞ்சையோ காடுகரம்புகளில் தோப்புகளைப் போல துரிஞ்சி, எட்டி, மந்தாரை, மரமல்லி என மரங்கள் பல்கியிருக்கும். மரங்களை கழித்தெடுத்த இலைதழை நெல்லுக்கு ஜேடை கட்டிய வயல்களில் அடியுரமாய் அழுகும் வாசனை நிறைந்திருக்கும் காற்றில், கழிக்க கழிக்க மரங்கள் பம்மி பெருத்துவரும் மரத்துக்கு மரம் ஊணாங்கொடியில் ஊஞ்சல்கட்டி தூரியாடும் பிள்ளைகள், மத்தியான கஞ்சிக்கப்புறம் மரத்தடியில் கண்ணாறும் ஊர். வயக்காட்டிலும் களத்துமேட்டிலும் வருசம் பூராவும் வேலையிருந்தது. வேலைக்கும் பொழுதுக்கும் ஏற்ற பாட்டும் கதையும் கேட்டு பயிர் வளரும் செழித்து. குதிர்களில் எப்போதும் ஏதேனுமொரு தவசம் இல்லையெனாமல் நிறைந்திருக்கும். பரக்க நிலமும் நிறக்க விளைச்சலும் கொண்டவர்கள் வீட்டையும் ஊரையும் தாண்டி சந்தைக்கு வண்டியேற்றினார்கள். சந்தைக்குப் போனவர்கள் சனியனோடு வந்தார்கள்.

சந்தையில் கண்ட மாயாஜாலங்கள் கண்மேலிருந்தன இன்னும். விற்கப்போன தாமே விற்பனையானதில் அவர்களுக்கு உறுத்தலேதுமில்லை. பளபளக்கும் சாக்லெட்டுகளோடு பலதினுசில் காத்திருந்த பிள்ளை பிடிக்கும் கூட்டத்திடம் தாங்கள் சிக்கிக் கொண்டது குறித்து அவர்களுக்கு அலாதி பெருமை. இந்தா இந்தா என்று கொடுத்ததையெல்லாம் தின்று மயங்கினார். பின் பழிகாரனிடம் பஞ்சாங்கம் கேட்ட கதையாக வரப்பு மீதும் செருப்போடு நடக்கத் துணிந்த அரசாங்க உத்யோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டு தவசம் கொண்டுபோன வண்டிகளில் யூரியா ஏற்றி வந்தார்கள்.

பார்த்தேயிராத வண்ணங்களிலான பாலிதீன் பைகளில் முத்து முத்தாய் உருண்டிருந்த யூரியாவைப் பார்க்க ஊரே திரண்டுவிட்டது. பாலை பரிகாசம் பண்ணும் வெண்ணிறம், மண்ணுல கொட்டப்போற சீனியில் ஒரு பிடியை மனுசன் தின்னாத்தான் என்னவென்று வாரித் தின்றவர்களுக்கு வாயும் வயிறும் வெந்து போயின. யூரியா சூட்டில் பயிரும் வயலும் பொறிந்து விடாதிருக்க கூடுதலாய் தண்ணீர் வேண்டியிருந்தது. ஏரிப்பங்கு போதாதென்று களவு புகுந்தது மடைகளில் அதுவும் போதாமல் அவரவர் நிலங்களில் ஐம்பதறுபது மெட்டுகளில் அகழ்ந்தனர் கிணற்றை. கம்ப்ரசரில் குழியடித்து வெடிமருந்தால் பெயர்த்தார்கள் அடிக்கிணற்றை கிணறுகளுக்குள் சிறைபுகுந்த பூமியின் நீர்த்தாரை அதற்குப்பின் மேலெழுந்து வரவேயில்லை. கமலையில் இறைத்துக் காணாதென்று பம்புசெட்டுகள் ஓடின சாவு வீட்டில் கொளுத்தப்பட்ட விளக்காக கிணற்றுத் திட்டுகளில் எரிந்தன குண்டுபல்புகள்.

யூரியாவின் மதர்ப்பில் மூன்றே மாதங்களில் திமிர்த்து வளர்ந்த பயிரில் வேரிலிருந்தே ராசி பிடித்திருந்தது சரஞ்சரமாய் வாய் பிளந்து நின்றது ஊர் தாம்பு கட்டியடித்ததில் கூளமாய் போய்விட்டது வைக்கோல். மாட்டுக்கு தீனியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை பீடித்துக் கொண்டது அவர்களை சந்தைக்காரனிடம் யோசனை கேட்டார்கள். அட மண்டுகளே உழறதுக்கும் அறுக்கவும் அடிக்கவும் தான் நாங்க மிஷின் விற்கிறோமே அப்புறம் மாடு எதுக்கு? விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் மாடு வளர்த்து சாப்புடறக் கையிலேயே சாணியள்ளிக்கிட்டு வ்வே.... என்று அவன் குமட்டிக்கொண்டு சொன்னது எல்லோருக்கும் பிடித்திருந்தது. மாடு ஒழிந்தால் எரு ஒழியும் எரு ஒழிந்தால் யூரியா விற்கும் என்ற சந்தைக் காரனின் சூது புரியவில்லை. அவர்களுக்கு களத்திற்கும் சந்தைக்கும் கடுகிக் குறைந்தது தூரம். வீடுகளில் காலியாய் கிடந்த குதிர்களுக்குள் ஒளிந்து கள்ளன் போலிஸ் விளையாடின குழந்தைகள்.

எல்லாம் கொஞ்சநாள் தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கள்ளனும் போலிசும் கைகோர்த்துக் கொண்டனர். சொர்ணக்குப்பத்து மக்களோ களவுபோல தமது வாழ்க்கையை கண்டெடுத்துத் தருமாறு யாரிடத்தில் புகாரிடுவதென்று தெரியாமல் இன்னும் இன்னுமென கிணறு வெட்டி தேடிக் கொண்டே இருந்தார்கள். நகைநட்டு ஆஸ்திபாஸ்தியையும் விழுங்கிவிட்ட கிணறுகள் வெறும் கல்லையும் மண்ணையும் மட்டுமே வெளித்தள்ளின. திரேகமெங்கும் துளையிடப் பட்டதொரு மனிதனைப் போலவே மாறிவிட்டது சொர்ணக்குப்பம். அவரவர்க்கு அவரவர் கிணறு என ஆழம் கூட்டியதில் குளமும் ஏரியும் குன்றி வறண்டு வெம்பிய பிஞ்சின் வாட்டத்தில் நீரின்றி சுருங்கிவிட்டது.

பட்டம் பருவம் கணக்கற்று மூன்றே மாதத்தில் விளையும் குட்டைரகங்கள் வந்த பின் வருடம் முழுவதும் நீரழிக்கும் வெள்ளாமையில் நாட்டம் கொண்டதற்கான தண்டனை இம்மையிலேயே கிடைத்து விட்டது அவர்களுக்கு. ஆதி இயற்கை, அதற்குள் தான் மனிதன். இயற்கையோடு அனுசரித்து வாழாது அதை தம் கட்டுக்குள் நிறுத்த சொர்ணக்குப்பத்தார் என்னவெல்லாம் அட்டூழியம் செய்தார்களோ அதே நிரலில் இயற்கை திருப்பியடிக்கத் தொடங்கியது. கடைசியில் குளக்கரையில் விடியவிடிய தண்ணீர் லாரிக்கு தவம் கிடக்க வேண்டியதாயிற்று ஒரு காலத்தில் இது எப்பேர்பட்ட குளம் தெரியுமா என்று யாரேனும் புலம்பினால் ச்சீ.. வாயை மூடு.. வச்சுப்பொழைக்க துப்பில்லாம தூர்த்துப்புட்டு இப்படி புலம்பறதுக்கு வெக்கமாயில்லே..என்று அசரீரியில் அதட்டுகிறாள் ஒன்னம்மா.

மரம் நடுவோம் மழை பெறுவோம் மழைநீர் சேகரிப்போம், தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம், ஏரி குளங்களை தூரெடுப்போம் கரைகளை உயர்த்துவோம், என்று அரசு எழுதிப் போட்ட கோஷங்களால் சுவர்கள் நாசமானதேயொழிய ஒரு சொட்டுத் தண்ணீர் யாருக்கும் கிடைக்கவில்லை. மழை பெய்தால் தானே மற்றதெல்லாம்.

மழை பெய்தது, யாரும் எதிர்பார்க்காத நாளொன்றில் ஆரம்பித்த மழை மோடமாகி பெய்துத் தீர்த்தது. ஊரெங்கும் நிரவி இறுகிக்கிடக்கும் சிமெண்டைத் துளைத்து மழைநீர் எப்படி பூமிக்குள் இறங்கும்? தூர்ந்து கிடக்கும் ஏரி குளத்தை ஏளனமாய் பார்த்துவிட்டு தெருவெங்கும் திமுத்து வெள்ளமாய் ஒடிய மழை சாக்கடையில் வடிந்து போனதில் எல்லோருக்கும் பதைப்பு கூடியது. எஞ்சிய ஈரத்தை வரப்பிலிருந்த தேக்கும் தைலமும் உறிஞ்சிக்கொள்ள, இனியொரு மழை எப்போது பெய்யுமோ என்ற கவலை மெய்யாகி ஆண்டுகள் பலவாகிவிட்ட நிலையில் பக்ரேஷ்வர் அனல் மின் திட்டத்தை நிறைவேற்ற ரத்தானம் செய்து நிதி திரட்டிய மேற்குவங்க இளைஞர்களின் செயல்திறத்தால் உத்வேகம் பெற்ற சொர்ணக்குப்பத்து இளைஞர்கள் சிலர் தமது ஊரின் கடந்தகால நீர்வளத்தையும் வரலாற்று பெருமிதத்தையும் மீட்டெடுக்க ஏரியைத் தூரெடுக்கும் முயற்சியிலிறங்கினர். உள்ளூர் அதிகாரிகள் துணையோடு ஏரிக்கு பாத்தியப்பட்ட நிலப்பரப்பை ஆக்ரமித்து தமது அனுபோகத்தில் வைத்திருக்கும் மோசடி அம்பலமாகிவிடும் என்ற பயத்தில் ஏரியோர நிலமுள்ளவர்களும், ஊரில் செல்வாக்கான பெரும்புள்ளிகளும் இளைஞர்களை பலவகையிலும் பின்னிழுத்தனர். மழைபெய்து ஒரு மாமாங்கமாகி விட்டது. தூரெடுத்து என்ன செய்ய என்று தடுக்கப்பார்த்தனர்.

தனது கொடையைக் காப்பாற்றி கொண்டாடத் தெரியாதவர்களுக்கு புத்தி புகட்டத்தான் இயற்கை மழையை நிறுத்திக்கொண்டதேயொழிய தண்டிப்பதற்காக அல்ல... இயற்கை எப்போதும் அருள் நிரம்பியது... மீண்டும் மழை வரும் நம் தாகம் தணிக்க ... என்று இளைஞர்கள் வாதாடினர். தகராறு மூண்டது. ஏரியை நிரவி புதிய பஸ்நிலையம் வரப்போவதாய் பசப்பி நில மதிப்பைக் கூட்டி விற்று கொழுத்த காசு பார்க்கும் தமது ஆசையில் மண்ணள்ளிப் போடும் இளைஞர்கள் மீது பொய் வழக்கு தொடுத்தனர் சுயநலமிகள் நமக்கெதற்கு ஊர்ப் பிரச்னை என்று ஒதுங்கிய இளைஞர்கள் தமது குற்றமற்றத் தன்மையை நிரூபிக்க இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் கோர்ட்டுக்கு. சாயக்கழிவு கலந்த ஆற்றுநீரைக் குடித்து வினோதமான நோய் பீடித்தவன் என்ற கருணையில் வழக்கிலிருந்து என்னை விடுவித்துவிட்டாலும் வறண்ட கனவுகளில் வெம்மையில் வாட்டும் ஒன்னம்மாளிடமிருந்து என்னை காத்தருள்வார் யாருமில்லை.

“உன்னையும் உனது கர்ப்பத்தையும் விழுங்கி நிறையும் குளத்தில் உனது சாதிசனமும் புழங்கலாமென்று எனக்கு செய்துகொடுத்த சத்தியத்தை தீட்டின் பேரால் நிறைவேற்ற மறுத்த உங்கள் நம்பிக்கைத் துரோகத்தை நானெப்படி ஏற்கமுடியும்? வெகுண்டு நான் விடுத்த சாபத்தால்தான் ஈரமென்று காட்ட எச்சிலும் ஊறாத பாலையாய் திரிந்துவிட்டது சொர்ணக்குப்பம்’’ என்று கனவில் பொருமும் ஒன்னம்மாளுக்கு பரிகாரம் செய்து முடிக்கும் நாளில் தான் ஊருக்கு மழையும் எனக்கு கனவின் அலைக்கழிப்பற்ற உறக்கமும் வாய்க்கும் போல விமோசனத்தின் சூட்சுமம் சாபத்திலேயே மறைந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...