ஞாயிறு, பிப்ரவரி 26

அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்? - ஆதவன் தீட்சண்யா

‘ஆ... தமிழர்களுக்குள் பிரிவினையா? ஐயகோ...    என் செய்வேன்..      ஏது செய்வேன் .... ’ என்று நெஞ்சைப் பிடித்துக்  கொண்டு ரத்த வாந்தி எடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ள - ஒண்ணும் தெரியாத ஓவர் ஆக்டிங்காரர்கள் இதைப் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
லேசியத் தமிழர்கள் என்ற விளிச்சொல் திரண்ட ஒரு தோற்றத்தை நமக்கு உருட்டிக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் அவ்வாறாக இல்லை. ஒருங்கிணைந்து வாழவேண்டிய புறத்தேவைகளும் நெருக்கடிகளும் அதிகரித்தே வந்தபோதிலும் அவர்கள் பிளவுபட்டே இருக்கிறார்கள். இந்தப் பிளவு அங்கு போய் உருவாக்கிக்கொண்டதல்ல, இங்கிருந்து போகும்போதே எடுத்துக்கொண்டு போய் நாட்டியது. போகும்போதே அந்த கப்பலுக்குள் தலித்துகளை தனிமைப்படுத்தி ஒரு மூலையிலே உட்கார்த்திவைத்தவர்கள் அங்கேபோய் மட்டும் அப்படியென்ன ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்திருக்கப்போகிறார்கள்?

மலேயாவின் தோட்டக்காடுகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்காகவும் பிரிட்டிஷாரால் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் (வெயிலுக்குப் பயந்து வெள்ளாவிப்பானையில் குதித்தக் கதையாக விரும்பிச் சென்றவர்களும் இதில் அடக்கம்) கடும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான போதிலும் இவர்களது வாழிடங்கள் மேல்குச்சு- கீழ்க்குச்சு என்று பிளவுபட்டே இருந்திருக்கின்றன. மேட்டிலிருந்தது மேல்குச்சு, தாழ இருந்தது கீழ்க்குச்சு என்றெல்லாம் அருஞ்சொல் பொருள்விளக்கம் பகர்கின்ற வியாக்கியான விற்பன்னர் யாரும் வாய்திறந்து விடாதீர்கள். இந்தப் பிரிவினை அப்பட்டமான சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்தியாவில் தமிழகத்தில் ஊர் சேரி என்று இரண்டிரண்டாக இருக்கிற அதே பிரிவினை அங்கும் நீட்டிக்கப்பட்டிருந்திருக்கிறது.

தோட்டக்காடுகள் அருகிப்போய் நகரங்களை நோக்கி பெரும்பாலான தமிழர்கள் பெயர்ந்து வந்துவிட்ட நிலையில், அருகருகாக வாழ நேர்ந்திருக்கிற யதார்த்தத்தில், வெவ்வேறு தொழில்களுக்குள் ஈடுபட்டு கடந்தகாலத்தின் ரேகைகளை துடைத்தழித்துக்கொண்ட இன்றைய நாளில் இங்கு சாதியின் இடம் என்னவாக இருக்கிறது என்று கேட்டால், நம்மூர் போலவே, ‘இப்பல்லாம் யார் சார் சாதிப் பாக்குறாங்க’ என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். அப்படியா, அவ்வளவு நல்லவங்களா நீங்க என்று பேசத்தொடங்கினால்தான் குட்டு உடைகிறது. கல்யாணம் செய்யறப்ப மட்டும் தீவிரமா விசாரிப்பாங்க. மற்றபடி இங்கு சாதிக்கு ஒரு வேலையும் இல்லை என்கிறார்கள். இதுவொன்று போதாதா சாதியை நிலைநிறுத்த? சாதியின் உருவாக்கத்துக்கும் மறு உற்பத்திக்கும் நிலைநிறுத்தலுக்கும் மூலகாரணமாய் கல்யாணம்தானே இருக்கிறது? ஒருவர் யாரை  திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது செய்து கொள்ளக்கூடாது என்கிற எல்லைதான் சாதி என்று பேரா.முத்துமோகன் வரையறுப்பதும் இதனால்தானே?

சரி, கல்யாணத்தைத்தவிர வேறு விசயங்களில் மலேயத்தமிழர்கள் சாதி பார்ப்பதில்லையா என்று விவாதிக்கத்தொடங்கினால் அனேகமாக எல்லாவற்றிலும் சாதிவகிக்கும் பங்கை உணரமுடிகிறது. அங்கு தமிழர்களுக்கென்று பாடுபடுவதற்காகவே தொடங்கப்பட்டதாய் சொல்லிக்கொள்கிற ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட ஏதாவதொரு சாதியினரே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். தமிழர் பிரதிநிதித்துவம் என்கிற பெயரில் கிடைக்கும் அதிகாரங்களையும் சலுகைகளையும் யார் அனுபவிப்பது என்கிற போட்டியில் ஆதிக்கச்சாதிகள் ஒன்றையொன்று காலை வாரிக்கொண்டாலும், அவை தலித்துகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று தடுப்பதில் ஒற்றுமை கொண்டிருக்கின்றன. இந்தவகையில் இந்திய/தமிழக கட்சிகளின் நகல்களாகவே மலேசியத் தமிழர்களின் கட்சிகள் இருக்கின்றன. மலேசிய முக்குலத்தோர் பேரவை, மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம், மலேசிய யாதவர் சங்கம் போன்ற அமைப்புகள் சர்வஜன அமைப்புகளல்ல- அவை குறிப்பிட்ட சாதியினரையே அணிதிரட்டிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டைப்போலவே அங்கு போயும் நாங்கள் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று அலட்டிக்கொள்கிற அக்கப்போர்களுக்கும் பஞ்சமில்லை. சரிடாப்பா, அப்படியே ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் அவ்வளவுபேருமா  கிரீடம் கட்டிக்கிட்டு நாட்டை ஆண்டீங்க? யாரோ ஒருத்தன்தான் ராஜாவா இருந்திருப்பான், மத்தவனெல்லாம் மாடுகன்னு மேய்ச்சுக்கிட்டு மண்ணை உழுதுக்கிட்டுதானே இருந்திருக்க முடியும்? என்று கேட்டால் அதுக்காக நாங்களும் மற்றமற்ற சாதிகளும் ஒண்ணாயிட முடியுமா என்று  இங்கே பேசுகிற அதே குதர்க்கம் அங்கும் இருக்கிறது.  இன்டர்லாக் நாவலுக்கு மலேசியத்தமிழர்களிடையே கிளம்பிய எதிர்ப்புக்கு இந்த உளவியலே காரணமாகிறது. அதெப்படி இந்த நாவல் எங்களையும் பறையர்னு சொல்லலாம்? நாங்களெல்லாம் வேற சாதியாக்கும் என்று நுரைதள்ள எகிறிக் குதித்த எல்லோரிடமும் வெளிப்பட்டது சாதியம்தானே? பார்ப்பனர்கள் தங்களைத்தவிர இங்கிருக்கும் எல்லோரையும் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பதைப் போலவே, நீங்கள் ஆ பரம்பரையோ பே பரம்பரையோ, மலேசியர்கள் இந்தியர்கள் எல்லோரையும் பறையர்களாகவே கருதுகிறார்கள். பறையர்கள் என்றால் தீண்டத்தகாதவர்கள்- இழிவானவர்கள் என்று இந்த இந்துத்தமிழர்கள் உருவாக்கின நச்சுக்கருத்தாக்கம் இன்று அவர்களையே தாக்கும்போது, இதுவரை பேசிவந்த தமிழர் என்ற அலங்காரங்களை களைந்துவிட்டு அப்பட்டமான சாதிக்காரர்களாக அம்மணமாக வெளிப்பட்டார்கள்.

இத்தனை நொட்டைகளைக் கொண்டிருக்கிற மலேசியாவில் பகுத்தறிவு மாநாட்டுக்கான தேவையும் நியாயமும் இருக்கின்றன. மாநாட்டு தலைமையுரையிலும், தீர்மானங்களிலும் வலியுறுத்தப்பட்டதைப் போல சாதிச்சங்கள் தடைசெய்யப்பட வேண்டும். சாதிப்பெருமிதங்களை வலிந்தூட்டும் கொண்டாட்டங்களை நிறுத்தினாலே சமூகம் ஓரளவுக்கு இயல்பாக இருக்கும். அதற்காக மாநாட்டுக்கு அப்பாலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே தேநீருக்காக மாநாட்டு அரங்கிலிருந்து வெளியே வந்தோம். தோழர் மார்க்ஸிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் மிகுந்த குமைச்சலுடன் சொன்ன விசயம்- ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச்சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’

இதைக் கேட்டதும் "இன்னும் நூறு பெரியார் வந்தால்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்க" என்று தானே சொல்லத் தோன்றுகிறது?’ நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பெரியார் மறுபடியும் வரமாட்டார்தானே? வந்தாலும் நூறு பெரியாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைத்தான் அவரால் செய்ய முடியும். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், பகுத்தறிவுப் பரம்பல், சாதியொழிப்பு போன்ற வேலைகளையெல்லாம் மறுபடியும் பெரியார் தலையிலேயே கட்டிவிட்டு நீங்களும் நானும் அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்?  

(தொடரும்)

7 கருத்துகள்:

  1. each one has the responsibility to fight this at their own spheres as annihilation of caste requires multi pronged approach.

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே அறுவறுப்பாக இருக்கிறது. இதுதான் மலேசிய தமிழர்களின் அழகா? இது போன்ற சாதி வகுப்பு வாதங்கள் அனைத்து இந்திய தமிழனின் கலாச்சார சாரத்தில் ஒன்றுபட ஊறிவிட்டது. இது காலை சுற்றிய பாம்பின் கதைதான்.
    இதுவரை கேள்விப்பட்டிராத இச்செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஆதவன் தீட்சண்யா.

    பதிலளிநீக்கு
  3. ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச்சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’// அடப்பாவி.

    சிரிக்கவும் சிந்தைக்கவும் வைத்த ஒரு அற்புதமான பதிவு திரு ஆதவன் தீட்சண்யா.
    இதற்கு நீங்கள் கொடுத்துள்ள முன்னுரை கொடுமைதான். ரத்த வாந்தி அப்படி இப்படின்னு படு பயங்கரமா இருக்கு.
    நவீன் அவரின் ப்ளாக்கில், இண்டர்லோக் பற்றிய இதே கருத்தைத்தான் முன் வைத்துள்ளார். ஏற்றுக்கொள்ளலாம், அப்படியாகத்தான் இருக்கனும்...!!!

    பதிலளிநீக்கு
  4. அதெப்படி ..நாம எல்லாம் திருந்திட்டா உலகம் அழிஞ்சு போய்டாதா?

    பதிலளிநீக்கு
  5. //சரிடாப்பா, அப்படியே ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் அவ்வளவுபேருமா கிரீடம் கட்டிக்கிட்டு நாட்டை ஆண்டீங்க? யாரோ ஒருத்தன்தான் ராஜாவா இருந்திருப்பான், மத்தவனெல்லாம் மாடுகன்னு மேய்ச்சுக்கிட்டு மண்ணை உழுதுக்கிட்டுதானே இருந்திருக்க முடியும்?//

    அருமையாகச் சொன்னீர்கள். இதே கேள்வியை நான் பலமுறை பலபேரிடம் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஓரிரு இடங்களில் எழுதியும் விட்டேன். அப்படியே மனதில் ஓடிய ஒன்றைப் படித்தபோது வந்த மகிழ்ச்சி... சரியாகப் புரியும் என்று நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாமார்ச் 12, 2012 5:29 AM

    அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்? It is a valid question. I still wonder about India's democratic system. Theoretically, at least 50% of leaders (irrespective party) should be Dalits based on the population but in reality the Dalit leaders are in single digits. As you mentioned in your other post about Thirumavalavan, is it because when Dalit movements try to represent the whole society (under the banner Tamil/Indian etc.) lose their objective. One thing I used to wonder - now and then - is about the usage of word Pariah in English. I remember Jayalalitha's government tried to arrest Subaramaniam Swami for using that word 16 years ago. At that time, he said that he will do needful to remove the usage of that word in a derogatory way. As we all know he is not a mass leader but why other mass leaders did not do anything about it. In western countries not only in media, in daily life the words Negro, Nigar etc are not used in derogatory context. There are laws to prevent it and people also follows it. There may be exceptions but they are not considered good and legal usage. However, in the same countries the word Pariah is used in derogatory context without any problems. Do the dalits of India/Tamil Nadu really not care about it or there are not much awareness. I want to point this instance in which US State department corrected its Indian Map because of the pressure from India. It is a good example, how Inidan politicians changed the western perspective with the help of current social/economical conditions, but why not use the same power to change the perspective of word Pariah.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. silar thamilan endra peyaril porviyil olindhu kondu kasakki kondu irukkiran yaar thamilam ... nallavana / thiyavana / arasiyal vadhiya / velaikku pogamal makkalai surandi pelaikum somberiya / padiththavana / thamil nattil pirandhavana .. thamilanukku enna thagudhi irukkavendum ... summa thamilam indru vetrumai kori pelaippai nadaththugiravana ... thamilanukku nee enna seithai thamila veerapandia katta bomman vasanam gnabhagam varugiradhu ...

      நீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...