வியாழன், ஜூன் 21

ஜெயமோகனின் இன்னொரு அவதூறு - எஸ்.வி.ராஜதுரை


ஜெயமோகனது jeyamohan.writer@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 20.6.12 பிற்பகலில் அனுப்பப்பட்டு இதுவரையிலும் அவரது இணையத்தில் வெளியிடப்படாத மறுப்பறிக்கை:
காந்தியவாதி என்னும் வேடத்தை அவ்வப்போது அணிந்துகொள்கிற, ஆனால் கோயபல்ஸியப் புளுகுகளை அவிழ்த்துவிடுவதில் சிறிதும் வெட்க உணர்வோ, தயக்கமோ கொள்ளாத ஜெயமோகனின் அவதூறு எழுத்துகளுக்கு  ஒரே ஒரு முறை மட்டும் (அதுவும் காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் மீது அவர் தொடுத்திருந்த அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்காக மட்டுமே)  பல ஆண்டுகளுக்கு முன் ‘தினமணி'யில் எதிர்வினை  யாற்றியுள்ளேன். அவர் எனது எழுத்துகள் மீதும் என் மீதும் அவ்வப்போது தனது வலைத் தளத்திலும் அச்சு ஊடகங்களிலும் முன்வைத்து வரும் கடுமையான விமர்சனங்களை நான் பொருட்படுத்தியதில்லை. அதற்குக் காரணம், எனக்கு நானே பெரும் முக்கியத்துவம் கொடுத்துக்கொள்வதையோ, நேர்மையீனமான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதில் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பதிலோ ஒருபோதும் விரும்பியதில்லை. எனினும் ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து' என்பதுபோல, டாட்டா ஃபவுண்டேஷன் நிதியைப் பெற்று லீனா மணிமேகலை தயாரித்துள்ளதாகச் சொல்லப்படும் ஓர் விவரணப்படம் குறித்து காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள கட்டுரைக்குப் பதில் சொல்லும் போக்கில் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் கீழ்க்காணும் வரிகளை எழுதியுள்ளார்:

 ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.

கஞ்சித்தொட்டி வைத்து அமைதிவழிப் போராட்டம் நடத்தும் கூடங்குளம் போராளிகளையே கொச்சைப்படுத்திய ஜெயமோகன், என்னைப் போன்ற சாமானியர்களை அவதூறு செய்யத் துணிந்தததில் வியப்பில்லை.

இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்திய அக்கிரமங்கள் எனச் சொல்லப்படுபவை, ‘தமிழ் தேசிய பாசிஸ்டு'களின் பொய்ப்பிரச்சாரம் என்று கூசாது பொய் சொல்லி, தக்க பதிலடி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள ஜெயமோகன், அந்தப் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் கவனத்தைத் திருப்புவதற்காகவும் ‘பரபரப்பாக' பேசப்படக்கூடிய இன்னொரு புளுகை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

வலைத்தளங்கள் வைத்திருப்பவர்கள், தாங்கள் சொல்லும் கருத்துகளுக்கான எதிர் வினைகளுக்கு அஞ்சாதவர்களாக இருந்தால், தனிநபர் தாக்குதல்களற்ற பதில்களை வெளியிடத் தயங்கக்கூடாது. ஆனால், ஜெயமோகனின் வலைத்தளம் ஒருவழிப் பாதை. அவரது ‘உபாசகர்க'ளுக்கு மட்டும்  அந்தப்பாதையின் ‘செக் போஸ்ட்' அவ்வப்போது திறக்கப்படும். அதனால்தான் 20.6.2012 அன்று  அவர் எழுதியுள்ள மேற்சொன்ன வரிகள் அடங்கிய ‘மனசாட்சிச்சந்தை'( மனசாட்சி என்பது ஒரு சந்தைப் பொருள்தான் என்பது அவரது கருத்துப் போலும்!) என்னும் பகுதிக்குக் கீழே “தொடர்புடைய பதிவுகள் இல்லை. Sorry, the comment form is closed at this time”  என்று அறிவித்துவிட்டு, என்மீது அவர் வைத்த அவதூறுகளுக்கான எதிர்வினை ஏதும் வராதபடி ‘ காபந்து' செய்து கொண்டுள்ளார்.

அவருக்கு நேர்மை இருக்குமானால்,

நான் எழுதுபவற்றுக்கு ஃபோர்ட் ஃபவுண்டேஷனிலிருந்தோ, வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒருவார கால அவகாசம் தர விரும்புகிறேன். அவ்வாறு மெய்ப்பிப்பாரேயானால், மருத்துவமனைக்குச் சென்றாலும், இழவு வீட்டுக்குச் சென்றாலும் ‘மாவோயிஸ்ட்' ஆதரவாளன் என்று என்னைக் கருதி என்னை நிழல்போலத் தொடர்ந்து வரும் ‘கியூ' பிரிவு போலீசாரின் கண்காணிப்பிலிருந்தும் விசாரணைகளிலிருந்தும் விடுபட எனக்கு உதவுபவராவார். எனினும், ‘மாவோயிஸ்டுகளும்' ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து நிதி உதவி பெறுபவர்கள்தான்' என்னும் இன்னொரு புளுகையும் அவிழ்த்துவிட்டு ஜெயமோகன்  நழுவிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எனினும் நான் அவருக்குத் தரும் ஒருவார கால அவகாசத்திற்குப் பிறகு- என்னைப் பற்றி தான் கூறியுள்ளவை அவதூறுகள் அல்ல, உண்மையான குற்றச்சாட்டுகள்தான் என்று தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்கத் தவறுவாரேயானால், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவேன்.

- எஸ்.வி.ராஜதுரை

8 கருத்துகள்:

  1. ஜெயமொகனுக்கு பதில் சொல்லுவது அவசியமே இல்லை.விட்டு விடுங்கள் ஐயா!காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  2. ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்றார் என்று எழுதவில்லை.எஸ்.வி.ராஜதுரையின் ஆய்வுகளுக்கு/அவர் நூற்கள் எழுத,மற்றும் அவரும் கீதாவும் கூட்டாக ஆய்வு செய்ய, நூற்கள் எழுத ஒரு பொழுதும் யாருமே நிதி உதவி செய்யவில்லை,அவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே அவற்றை செய்தார்கள் என்று எஸ்.வி.ராஜதுரையால் வாதிட முடியுமா.அது கடினம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜெயமோகன் ராஜதுரை போர்ட் பவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்றார் என்று எழுதவில்லை.''// என்றால் " ... ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்” என்கிற வரிகளுக்கு என்னதான் அர்த்தம்?

      நீக்கு
    2. //அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.

      உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.//

      இங்கே பதில் சொல்லியிருக்கிறாரே!

      http://www.jeyamohan.in/?p=28166

      நீக்கு
    3. இங்கே பதில் சொல்லியிருக்கிறாரே!

      http://www.jeyamohan.in/?p=28166


      ..அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.

      உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.//

      நீக்கு
  3. ஜெயமோகனின் பதில் கடிதம்......

    http://www.jeyamohan.in/?p=28166

    பதிலளிநீக்கு
  4. அவதூறு செய்கிறேனா?
    -ஜெயமோகன்
    http://www.jeyamohan.in/?p=28174

    பதிலளிநீக்கு
  5. SVR kaalam kadanthum nirpavar...vimarsippavaro kaalathai kaasaakkugiravar....

    Verupaadu theriyathavanaa thamizhan

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...