திங்கள், அக்டோபர் 22

ஒசூரெனப்படுவது யாதெனின்...5 - ஆதவன் தீட்சண்யா

'நாஸ்டா ஆச்சா?’ என்ற விசாரிப்புடன்தான் தேன்கனிக்கோட்டைப் பகுதி மக்கள் ஒருவரோடு பேச்சைத் தொடங்குவார்கள். நேரங்காலம், ஆள், அந்தஸ்து, இடம், பொருள் எதையும் கணக்கில் கொள்ளாமல் இப்படி விசாரிப்பார்கள். எப்போது பார்த்தாலும் இப்படி விசாரிக்கிறவர்களோடு இருந்த பழக்கத்தில், அங்கு இருந்த என்னைப்போன்ற வெளியூர்க்காரர்களும்கூட இப்படியாக நண்பர்களை விசாரித்து கேலிக்கு ஆளாவது உண்டு. ஆனால், யோசித்துப் பாருங்கள்... எவ்வளவு கரிசனமான வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் யாருடைய பசியையும் ஆற்றிவிடப் போவதில்லை. ஆனால், இப்படி அக்கறையாய் விசாரிக்க ஒருவரும் இல்லாது, நாதியற்றுப்போனோமே என்கிற கவலையில் எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்கிறபோது இந்த விசாரிப்பை வெறும் வார்த்தைகள் என்று தள்ளிவிட முடியுமா? சகமனிதன் மீதான கரிசனம் வார்த்தைகளில் இருந்துதான் தொடங்கும் என்றால் அப்படியாவது தொடங்கட்டுமே. இதேபோன்றதொரு பழக்கம் மலேசியத் தமிழர்களிடமும் இருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் 'பசியாறிட்டீங்களா?’, 'பசியாறியாச்சா?’ என்பதான கேள்விகளோடுதான் உரையாடலைத் தொடங்குகிறார்கள்.

அப்போது, தேன்கனிக்கோட்டைக்கும் ஒசூருக்கும் இடைப்பட்ட 25 கிலோ மீட்டரில் குறைந்தபட்சம் 25 பஸ் நிறுத்தங்கள் இருந்தன. தொழிற்சங்க வேலையாக ஒசூர் சென்று திரும்பும் நாங்கள், எத்தனை இடங்களில் பஸ் நிற்கும் என்று பந்தயம் கட்டி விளையாடுவதன் மூலம், நெடுந்தூரம் பயணம் செய்வதைப்போன்ற களைப்பில் இருந்து தப்பிக்கப் பார்ப்போம். 20 இடங்களில் மட்டும்தான் பஸ் நிற்கும் என்று அடித்துச்சொல்லித் தோற்றுப்போய் கேரளா ஓட்டலில் டீ வாங்கிக் கொடுத்தவர்கள் அனேகர். தேன்கனிக்கோட்டையின் சுற்றுவட்டாரங்களில் விளையும் காய்கறிகளை பெங்களூருக்குக் கொண்டுசேர்க்கும் சரக்கு வண்டிகளாகவும் இந்தப் பேருந்துகளே இருந்ததால் அத்தனை இடங்களிலும் நின்றுதான் போகவேண்டி இருந்தது. நெடுஞ்சாலையில் இருந்து உள்ளோடிப் போகும் சின்னச்சின்ன கிராமங்களின் விவசாயிகள், தங்களுடைய நிலங்களில் விளைவித்த காய்கறிகளின் மூட்டைகளைச் சுமந்துவந்து ரோட்டோரத்தில் இருக்கும் சுமைதாங்கிக் கற்களின்மீது அடுக்கிவைத்துக்கொண்டு காத்திருப்பார்கள். (இந்தச் சுமைதாங்கிகளில் சிலவற்றை இன்றும் விட்டு வைத்திருக்கிறார்கள்). காய்கறிப் பொதிகளை ஏற்றிப்போனால் காசு கிடைக்கும் என்பதையும் தாண்டி அவற்றை ஏற்றிப்போவதும் தங்களது பொறுப்புதான் என்பதைப்போன்ற எண்ணம் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் மட்டுமல்ல, பயணிகளுக்கும்கூட இருந்தது என்றே சொல்லவேண்டும். இந்தப் பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றி முடிப்பதற்கான நேரத்தையும் உள்ளடக்கியே எங்களுடைய பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்வோம்.

தேன்கனிக்கோட்டையில் மக்கள் தங்களுடைய தேவைகளுக்கான அளவில்தான் வீடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருந்தார்களே தவிர, வாடகைக்கு விடுவதற்காக அல்ல. எனவே, அங்கு வீடுகள் வாடகைக்குக் கிடைப்பது மிக அரிதாக இருந்தது. தப்பித்தவறி கிடைக்கிற ஒன்றிரண்டு வீடுகளைத்தான் அங்கு புதிதாக வருகிறவர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அப்படியாகத்தான் அங்கு சில 'பேச்சிலர் பாரடைஸ்கள்’ உருவாகி இருந்தன. அந்த பாரடைஸின் ஏதாவதொரு மூலையில் உங்களுடைய பெட்டியைவைத்து அதன் நேருக்கு ஒரு பாயை விரித்து வைத்துவிட்டால் அதுதான் உங்களுக்கு பாத்தியப்பட்ட இடம். அதற்குப்பிறகு நீங்களே நினைத்தாலும் அந்த இடத்தை மாற்றிக்கொள்ள முடியாதபடி மற்ற மற்ற இடங்களும் அடுத்தடுத்து கையகப்படுத்தப்பட்டு இருக்கும். தொடக்கத்தில் கொஞ்சநாட்கள் அலுவலகத்திலும் பிறகு ஒரு வீட்டின் ஒடுக்கத்திலிருந்த சிறு அறையிலும் தங்கி இருந்த எனக்கும் சங்கரனுக்கும் மேற்சொன்ன லட்சணங்கள் பொருந்திய பாரடைஸ் ஒன்றில் இடம் கிடைத்ததே பெரும்பேறுதான். நாங்கள் போய்ச்சேர்ந்த கொஞ்சநாட்கள் கழித்து எங்களுடைய அலுவலகத்திலேயே வேலைக்குச் சேர்ந்த சின்னராசுவும் எங்களுக்கெல்லாம் அதிகாரியான கிருஷ்ணனும் அங்குவந்து சேர்ந்தார்கள். ஆசிரியர்கள், சர்வேயர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் அந்த மாளிகையின் தரைத்தளத்தில் இருக்க, மேல்தளம் மத்திய அரசு  ஊழியர்களுக்கு உரியதாகியது. பெருமாள் என்கிற ஓவிய ஆசிரியர் ஏற்கெனவே ஒரு மூலையில் இருந்தார். மாதவாடகை என்று மொத்தத் தலைகளுக்கும் கணக்குப் பிரித்தால் அதிகபட்சம் இருபதோ முப்பதோ வரும்.

சப் ரிஜிஸ்டிரர் அலுவலக வீதியில் இருந்த அந்த மாளிகை மிகப் பழமையானது.  மேல்தளத்தில் சற்றே வலுவாக காலூன்றி நடந்தாலும் காரை பெயர்ந்து கீழ்த்தளத்தில் இருப்பவர்களின் தலையில் விழும் அளவுக்கு அது பழமையானது. நிலம் அதிராமல் பூனையைப்போல நடந்தால் மட்டுமே பாதுகாப்பானது என்கிற அளவுக்கு அது பழமையானது. பின்கட்டில் அதன் உரிமையாளருடைய குடும்பம் வசித்துவந்தது. சற்றே சாருஹாசனை நினைவுபடுத்தும் முகம் அவருக்கு.  அவர் இந்த வட்டாரத்தில் மிகவும் வணங்கப்படுகிற பேட்ராயசாமி கோயிலின் அர்ச்சகர். இருந்தும் அவர் தன் வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விடுமளவுக்கு தாராளகுணம் கொண்டவராக இருந்தார். பணம் வருகிறது என்பதற்காகவோ இந்தப் பழைய வீட்டுக்கு இவர்களை விட்டால் யார் வரப்போகிறார்கள் என்பதற்காகவோ அவர் தன் வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கவில்லை. அது நல்ல நிலையில் இருந்தபோதும் எங்களைப் போன்றவர்களுக்கே வாடகைக்கு விட்டிருந்தார். அவருடைய குடும்பத்தாரும் நாங்களும் ஒரு கிணற்று நீரில்தான் புழங்கினோம். தன் சாதி அல்லாத ஒருவர் தன் அண்டை வீட்டில் குடி இருப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். பெருநகரங்களில் நவீனமான வாழ்க்கையை மேற்கொண்டு இருப்பவர்கள்கூட வாடகைக்கு வீடு கொடுப்பதில் சாதி/ மதம்/ சைவம்/ அசைவம் என்பதான பாரபட்சங்களை கடைபிடிக்கும் கழிசடைகளாக மலிந்து கிடப்பதையும் காண்கிறோம். ஆனால், தேன்கனிக்கோட்டை போன்ற ஒரு சிற்றூரில் அவரைப் போன்றவர்கள் மிகுந்த தாராளகுணத்தோடு இருந்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இப்படியிருந்த நாலைந்து பாரடைஸ்களுக்கும் சென்றுவரக்கூடியவனாக நான் வெகுக் குறுகிய காலத்திலேயே மாறிவிட்டிருந்தேன். தொழிற்சங்க ரீதியான தொடர்புகள் அவ்வாறான நெருக்கத்தை உண்டாக்கி இருந்தது. எந்தவொரு அரசு ஊழியரும் தனக்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு துறையின் ஊழியரைத் தெரிந்து வைத்திருப்பதும் நட்பு பாராட்டுவதும் அந்த சின்ன ஊரில் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. பன்னீரும், நானும், சங்கரனும் அங்கு நடந்த எல்லா தொழிற்சங்கப் போராட்டங்களோடும் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டு இருந்தோம். சில இடங்களுக்கு அழையா விருந்தாளிகளாகப் போயும்கூட தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டோம். ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் மீண்டும் சென்றோம். தமது அன்றாட செயல்பாடுகள் உள்ளிட்ட யாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவது என்கிற திட்டமோ உள்நோக்கமோ எங்களிடம் இருக்கவில்லை. என்றாலும், உள்ளுறையாக அதுவே இருந்தது. அவர்களுடைய நட்பு வட்டத்தில் தவிர்க்கமுடியாத நபர்களாக நாங்கள் மாறிக்கொண்டு இருந்தோம்.

நான் வாயிற்கூட்டங்களில் பேசுவதற்கான வாய்ப்பும் தேன்கனிக்கோட்டையில்தான் கிடைத்தது. கூட்டத்தின் கவனத்தை ஈர்ப்பது, கைத்தட்டல் பெறுவது போன்ற தொடக்கநிலை ஆர்வங்களோடும் அதற்கேயுரிய அபத்தங்களோடும் நான் ஒவ்வொரு அலுவலகத்தின் வாயிலிலும் பேசிக்கொண்டு இருந்தேன். அப்படி ஒருமுறை தேன்கனிக்கோட்டை இந்தியன் வங்கி ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். சங்க நிர்வாகி ஒருவர் உக்கிரமாக ஆங்கிலத்தில் கோஷம் எழுப்பினார். மற்றவர்கள் அதே வேகத்தில் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தோம். சுற்றிலும் இருந்த வீடுகளைவிட்டு வெளியே எட்டிப்பார்த்தவர்களும் அவ்வழியே சென்றவர்களும் வங்கியின் வாடிக்கையாளர்களும் 'என்ன பிரச்னை?’ என்று வினவினார்கள். அதாவது ஊழியர்கள் எழுப்பிய முழக்கம் அவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால், அதைப்பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் ஏதோ இங்கிலாந்தில் போராடுகிறவர்களைப்போல ஆங்கிலத்தில் கோஷம் போட்டுக்கொண்டு இருந்தோம். மேலாளர், அதிகாரிகள், ஊழியர்கள், ஆதரவாக வந்திருந்த தோழமைகள், வேவு பார்க்க வந்த காவலர் என்று அங்கிருந்த அனைவருமே தமிழர்கள். சுற்றியிருந்த வெகுமக்களில் அனேகரும் தமிழ் அறிந்தவர்கள். ஆனால், கோஷமோ ஆங்கிலத்தில். உறுத்தலாகத் தெரிந்த இவ்விஷயத்தை மையப்படுத்திதான் அன்றைய என் பேச்சு அமைந்தது. we demand we demand we demand we demand என்று அரசாங்கத்தை நோக்கி நாம் எழுப்பிய கோஷம்  VD man VD man  என்று யாரோ ஒரு சீக்காளியைத் திட்டுவதுபோன்றுதான் இந்த மக்களின் காதுகளில் விழுந்திருக்கும். சுற்றியுள்ள மக்களிடம் இருந்து நம்மை இவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்வது தேவைதானா? நம்முடைய போராட்டங்கள் எவ்வளவு நியாயமானது என்பதை இந்த மக்கள் விளங்கிக்கொள்வதுதானே நமக்கு கிடைக்கும் முதல் வெற்றி,  என்றெல்லாம் பேசினேன். ஆங்கிலத்தில் கோஷமிட்டதை நக்கலடிப்பதற்காக நான் இவ்வாறு பேசவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அந்தத் தோழர்கள் அடுத்துவந்த நாட்களில் தமிழிலேயே கோஷமிட்டார்கள். நான் எழுப்பியது வெறுமனே மொழி சம்பந்தமான ஒரு பிரச்னை அல்ல என்பது மட்டும் எனக்கு அப்போதைக்குப் புரிந்திருந்தது.

எவ்வளவு நியாயமான போராட்டம் நடந்தாலும் அதில் தலையிட்டு தீர்வு காண்பதற்குப் பதிலாக 'போராடுகிறவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள்’ என்று அறிக்கைவிடுவது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வாடிக்கையாக இருந்தது. போராடுகிறவர்களை மக்களாகவே ஏற்க மறுக்கிற மனப்பான்மைகொண்ட அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் மிகத்தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். அகிலஇந்திய அளவில் ஒப்பிடும்போது மிகக்குறைந்த சம்பளக்காரர்களாக பின்னிழுக்கப்பட்டிருந்த அவர்கள் அதிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், போனஸ் கேட்டு 'ஜேக்டீ’ என்ற அமைப்பின்கீழ் திரண்டு போராடினார்கள். ஆனால் 'தாயுள்ளம்’ கொண்ட எம்.ஜி.ஆர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் சிறையில் தள்ளினார். தீபாவளிக்குக்கூட அவர்களை வெளியே விடவில்லை. நோய்வாய்ப்பட்டிருந்த ஆசிரியர்கள் சிறைக்குள்ளேயே மடிந்தார்கள். கர்ப்பிணியாய் இருந்த ஆசிரியைகள் சிறைக்குள்ளேயே மகவுகளைப் பெற்றெடுத்தார்கள். ஆசிரியர்களை மேஸ்ட்டர் (மாஸ்டர்) என்று மரியாதையாக விளிக்கும் தேன்கனிக்கோட்டைப் பகுதி மக்கள் அந்தப் போராட்டத்தை தங்களுடையதாகப் பார்த்தார்கள். கெலமங்கலம் சாலை, பாலதொட்டனப்பள்ளி சாலை, அஞ்செட்டி சாலை, தளி சாலை என்று நாலாபக்கம் இருந்தும் ஊர்வலமாக திரண்டுவந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் ஆங்காங்கே நின்று தண்ணீர் கொடுத்து தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். ஒரு நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டாலும் முக்கி முனகுகிற நகரத்து மனோநிலையால் பீடிக்கப்படாத அவர்கள் தங்கள் ஊரின் பேருந்து நிலையம் பொதுக்கூட்டத் திடலாக மாறியபோது திரண்டுவந்து எங்களுடைய உரைகளைக் கேட்டார்கள்.  தமிழிலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் எழுப்பப்பட்ட முழக்கங்களைச் சொல்லியபடி தெருவோரங்களில் குழந்தைகள் விளையாடும் அளவுக்குப் பிரபலமாகி இருந்தது அந்தப் போராட்டம். 'வாத்தியாரே, வாத்தியாரை வதைக்கலாமா’ என்பது மாதிரியான முழக்கங்களை எழுப்பிய எனக்கு 'ஜிந்தாபாத் ரவி’ என்று செல்லப்பெயர் சூட்டிருந்தார்கள் அவர்கள். இந்தப் போராட்டத்தால் எரிச்சலடைந்த உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரால் தூண்டிவிடப்பட்ட இருவர் என்னையும் டி.சண்முகத்தையும் வழிமறித்துத் தாக்கினார்கள். ஒருவர் ஓடிவிட, 'ஊர்விட்டு ஊர்வந்து எங்க ஊர் மேஸ்ட்டருங்கள கம்யூனிஸ்ட்டாக்க பாக்குறியா’ என்று என்னைச் செருப்பால் அடித்தவர் மாட்டிக்கொண்டார். அவரைக் குண்டுக்கட்டாக தூக்கிப்போய் போலிசில் ஒப்படைத்தோம். ஓர் ஆசிரியரின் மகனாக இருந்தும் அவர், பிறருடைய தூண்டுதலுக்குப் பலியாகி தன் நண்பரை துணைக்கு அழைத்துவந்து எங்களைத் தாக்கியதுதான் இதிலிருந்த சோகம். போராடுகிறவர்களை மக்களே பார்த்துக்கொள்வார்கள் என்று எம். ஜி.ஆர். சொன்னதன் பொருள் இதுதான்.

அந்த நேரத்தில் என்னுடைய மாமா கிருஷ்ணன், பதவி உயர்வுபெற்று காவல் உதவி ஆய்வாளராக தேன்கனிக்கோட்டையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மறியல் செய்கிற ஆசிரியர்களை அவர் தடுத்துக் கைது செய்வார். 'வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்... சிறைசெல்லும் தோழர்களை...’ என்று நானும் மற்றவர்களும் முழக்கமிட்டு வழியனுப்பிவைப்போம். 'உங்க மகனைக் கொஞ்சம் அடக்கி வைக்கக்கக்கூடாதா?’ என்று அவர் எங்கப்பாவிடம் ஒருமுறை வருத்தப்பட்டிருக்கிறார். 'விடு கிட்ணா... அந்தக் காலத்துல நாம யாருக்காச்சும் அடங்கிச் சும்மா இருந்திருக்கிறோமா... அன்னிக்குச் சரின்னு பட்டதை நாம செஞ்சோம். அவனுக்குச் சரின்னு படுறதை இன்னிக்கு அவன் செய்றான்...  நான் எப்படி தடுக்கிறது..?’ என்று சொல்லி எங்கப்பா அவரைச் சமாதானப்படுத்தி இருக்கிறார். (அவர்கள் இருவரும் சேர்ந்து எங்களது ஊரில் முதன்முதலாக தி.மு.க. ஆரம்பித்ததைத்தான் அவ்வாறு நினைவுபடுத்தினாராம்). அவருக்குச் சமாதானம் சொல்லிவிட்டாலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தை முன்னிட்டு எங்கப்பாவுக்கு உள்ளூர இருந்த பயத்தைத் தயக்கத்தோடு என்னிடம் பகிர்ந்துகொண்டார். 'ஊர்விட்டு ஊர் வந்து...’ என்கிற குமைச்சல் சற்றே ஆபத்தானது என்பதே அவருடைய கவலையாய் இருந்தது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தமது செயலுக்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரியதோடு எனக்கு நண்பர்களாகவும் மாறிப்போனார்கள்.

பகை என்று என்னை வெறுக்க ஒருவரும் இல்லாத அந்த தேன்கனிக்கோட்டையை விட்டு தொழிற்சங்க வேலைகளுக்காக நான் ஒசூருக்கு மாற்றல் பெற்று கிளம்பியபோது கலங்கிய கண்களோடு கமறும் குரலில்... 'போயேதான் ஆகணுமா’ என்று நண்பன் வெங்கடேஷ் கேட்டபோது அவன் உருவில் ஊரே கேட்பதுபோல் உணர்ந்தேன். 'இதோ, இங்கே இருக்கிற ஒசூருக்குத்தான் போகிறேன்... பாக்கணும்னு தோன்றினால் அடுத்த நிமிஷம் வந்துடப்போறேன்...’ என்று சொல்லிக்கொண்டு அந்த ஊரைவிட்டுக் கிளம்பிவந்து கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. காலம் ஞாபக அடுக்கிலிருந்து சிலவற்றை வரிசை குலைத்தும் இடம் மாற்றியும் வைத்துவிடுகிறதே தவிர எதையும் அழித்துவிடுவதில்லை என்பதை இதை எழுதும் இந்தக் கணத்தில் உணர்கிறேன்.

(சொல்வேன்...) 

நன்றி: http://en.vikatan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...