புதன், நவம்பர் 14

தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல் - ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில்: எஸ்.வி.ராஜதுரை




எனது நண்பர் பேராசிரியர் சி.லட்சுமணன் இன்று (10.11.2012) தர்மபுரியிலிருந்து தொலைபேசியில் என்னை அழைத்து, தொண்டை அடைக்க, நா தழுதழுக்க நத்தம், அண்ணா நகர், கொண்டயம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பயங்கரமான நிலைமையைக் கூறினார். அங்கு 2012 நவம்பர் 7 அன்று வன்னிய சாதிக்கும்பலால் ஏறத்தாழ 300 தலித்துகளின் வீடுகளில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  அந்வீடுகள்  தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த வன்செயல் நடந்த இடத்திற்கு அப்போதுதான் சென்றடைந்த உண்மை அறியும் குழுவின் உறுப்பினராக இருந்தார் லட்சுமணன். இந்த வன்முறை நவம்பர் 8ஆம் தேதியன்று களப்பணியாளர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமும் அதன் பிறகு செய்தித்தாள்களில் வெளிவந்த அரைகுறைச் செய்திகள் மூலமும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போதும் எனக்குக் குலை நடுக்கம் ஏற்படுகிறது.

பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம். பெண்ணின் பெற்றோர்கள் இது தொடர்பாகக் காவல்துறையினரை அணுகியிருந்தனர். காவல் துறையினர் மேற்சொன்ன இருவரது தரப்பினரையும் அழைத்து, அந்தத் திருமணம் சட்டப்படி சரியானது என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதற்கிடையே மூன்று கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்கள் ஒரு வாரத்திற்கு முன் ஒரு கூட்டம் கூட்டி கட்டைப் பஞ்சாயத்து' நடத்தி, சம்பந்தப்பட்ட தலித் குடும்பம் அந்தப் பெண்ணை (திவ்யாவை) தங்களிடம் புதன்கிழமை அன்று (7-11.2012) திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று உத்திரவு போட்டனர். ஆனால் திவ்யா அந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து, வாழ்ந்தால் இளவரசனுடன்தான் வாழ்வேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார். இந்த விஷயங்கள அனைத்தையும் தெரிந்திருந்த தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிபாளர் அஸ்ரா கார்க், கட்டைப் பஞ்சாயத்தில் கலந்து கொண்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறினார். நவம்பர் 7ஆம் தேதியன்று திவ்யாவின் தந்தை ஜி.நாகராஜன் (வயது 48), நத்தம் தலித் காலனியிலிருந்து சிறிது தொலைவிலேயே உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்திலுள்ள தனது வீட்டில் திடீரென்று இறந்துவிட்டார். பறையர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனைத் தனது மகள் திருமணம் செய்து கொண்டதை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வன்னியர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு போலி முகாந்திரத்தை உருவாக்குவதற்காக வன்னியர்களே அவரைக் கொலை செய்திருக்கின்றனர் என்று தலித்துகள் கருதுகின்றனர்.  

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் அவதாரமான வன்னியர் சங்கத்தின் தலைவராக உள்ள காடுவெட்டி குரு, கலப்புத் திருமணம் தடுக்கப்பட வேண்டும் என்று வன்னிய சாதிப் பொதுக்கூட்டமொன்றில் அண்மையில் விடுத்திருந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. இந்தப் பொதுக்கூட்டம், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சரி தங்கள் வீட்டுப் பெண்கள் தலித் பையன்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தே தீருவோம் என்று தமிழ்நாடு நெடுகிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் முடிவு எடுப்பதற்கான உள்உந்துதலாக அமைந்தது. கொங்கு வேளாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கலப்புத் திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதற்காகத் தங்கள் சாதியினரைச் சேர்ந்தவர்களின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் பத்திரிகை விளம்பரங்களின் மூலம் அறிவித்து, கலப்புத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியது. இவை அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரியும். எனவே, மேற்சொன்ன மூன்று கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியை மிக அண்மைக்காலத்தில் நடந்த சாதியப் பலத்திரட்சி என்னும் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ அதே நேரத்தில் 1500க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலொன்று நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகியவற்றிலிருந்த தலித் குடியிருப்புகளைத் தாக்கியது. அசம்பாவிதம் நேரலாம் என்று எதிர்பார்த்த அரசு நிர்வாகம், காவல் துறையிரை அந்த கிராமங்களில் நிறுத்தியிருந்தது என்றாலும், தாக்குதலை நடத்தியவர்கள் அவர்களைவிடப் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்று மிக எளிதாக நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த ஏதேனும் முயற்சி செய்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், தங்களது செயலின்மைக்கு அவர்கள் கூறும் இந்த வினோதமான தர்க்கம் கேள்விக்குட்படுத்தப்டவில்லை. இந்தத் தாக்குதலின் போது அவர்கள் காயமடைந்திருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் செயல்படாமலிருந்ததற்கான சாத்தியப்பாடு இருந்திருக்கும். ஆனால் அவர்கள் மீது எந்தக் காயமும் படவில்லை. இப்படிப்பட்ட விளக்கத்தை முன்வைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற இந்த நாட்டில் எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையில் காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் போலும்.

தலித்துகள் கூறுவதுபோல, உண்மை என்னவென்றால், வன்முறைக் கும்பல் அவர்களது விலை உயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கவும் அவர்களது வீடுகளைக் கொளுத்தவும் செய்யும்போது வழக்கம் போலவே காவல்துறையினர் வாய் திறக்காமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான். அங்கு வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இளம் வயதினர் பெங்களூருவுக்கும் திருப்பூருக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். தாக்குதல் நடக்கத் தொடங்கியதும் அந்த வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வயல்களுக்கும், காட்டுப்பகுதிகளுக்கும் அண்டைக் கிராமங்களுக்கும் தப்பி ஓடி விட்டனர்இந்தத் தாக்குதல் நடக்கும் என்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தும்கூட, அது சரியாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. வன்முறையாளர்கள் பெரிய பெரிய மரங்களை வெட்டி நடுச்சாலைகளில் போட்டு, தீயணைப்புப்படையினர் அந்தக் கிராமங்களை உடனடியாகச் சென்றடையாதபடி தடுத்துவிட்டனர். ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த அழிவுவேலை இரவு 9.30 மணிக்கு மேல்தான் முடிவடைந்தது. அப்போது வீடுகள், உடைமைகள் எல்லாமே எரிந்து சாம்பலாகியிருந்தன. கூடுதலாக ஆயிரம் காவல்துறையினரை அந்தக் கிராமங்களுக்கு அனுப்பியும் தொன்னூறு பேருக்கு மேற்பட்டவர்களைக் கைது செய்தும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல் துறை கூறுகின்றது. மேலும் 210 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 300 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்படுமேயானால், தாக்குதல் நடந்த அன்று அங்கு இருந்த காவல்துறையினரின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் தாக்குதலை நடத்தியவர்கள் இருந்தார்கள் என்னும் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இழக்கப்பட்டுவிட்ட வீடுகள், உடைமைகள் ஆகியவற்றுக்கு இழப்பீடாக குடும்பமொன்றுக்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த வன்முறைக்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கவைக்குதவாத அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கம் மிக வலுவாக இருந்த குக்கிராமங்களில்தான் இந்த வன்முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் நக்சலைட் இயக்கத்துக்கான தலைமையகமாக இருந்தது. நக்சலைட் இயக்கம் சரிவில் உள்ளதால், சாதியம் தனது விகாரமான தலையை இந்த மாவட்டத்தில் உயர்த்தியுள்ளது. வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருளாதாரரீதியாக பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால், வன்னியர்களின் தலைவர் எஸ்.ராமதாஸின் அறிவார்ந்த அறிக்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை ஒருபுறமிருந்தாலும், நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய ஆணவத்தின் துணிவு காரணமாக பலமுறை மோதல்கள் நடந்துள்ளன. அவரும், வட தமிழகத்தைச் சேர்ந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனும் விடுத்த அறிக்கைகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக, தென் தமிழகத்தை ஒப்பிடுகையில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமிடையே சிறிது நல்லிணக்கம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வன்னியர்களிடையே இருந்து பழைமைவாத, அப்பட்டமான சாதியச் சக்திகள் எழுச்சி பெற்றுள்ளது, சாதிகளிடையே ஏற்படுத்தப்படும் இத்தகைய ஒட்டுவேலைகள் சாதிய உணர்வின் மறைவைக் குறிப்பதாகாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இது சாதிய உணர்வை தற்காலிகமாக அடக்கி வைத்திருப்பதே தவிர வேறல்ல. இந்த நஞ்சுக்கான சரியான மருந்து வர்க்கம்' என்னும் மாற்றுச் சொல்லாடலைக் கொண்டு சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான். நல்லெண்ணம் படைத்த பலருக்கும்கூட இது கடினமான காரியமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு வேறு எந்தத் தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிபிஎம் கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' நல்ல பணிகளைச் செய்து கொண்டு வருகிறது. வலுவான தலித் கட்சி கூட செய்யாத வகையில் , அந்த முன்னணி தர்மபுரிக்குச் சென்று மிக நியாயமான கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு மறுவாழ்வு வங்குவதுதான் முதன்மையான பிரச்சனை. தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வெட்கக்கேடான முறையில் வழங்கும் முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ள ஆளும் கட்சிகள், ‘பட்டியலின சாதிகள், பட்டியலினப் பழங்குடிகள் மீதான வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டத்தை' முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு, குடும்பத்துக்கு ரூ 50000 என்னும் அற்பத்தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளன. உண்மையில் இந்தச் சட்டத்தைக் காட்டிலும் அதன் மீறல்களே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இழப்பீடும்கூட வன்கொடுமையை அனுபவித்தற்கான இழப்பீடேயன்றி, இழந்துபோன உடைமைகளுக்கான இழப்பீடு அல்ல. தலித்துகளைப் பாதுகாக்கத் தவறிய அரசு செய்ய வேண்டிய கடமை, அவர்கள் அனுபவித்த வேதனைக்கான இழப்பீட்டுடன் அவர்கள் இழந்துள்ள உடைமைகளுக்கான இழப்பீட்டை வழங்குவதாகும். எனவே, பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நல்ல வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும், தலித்துகள் ஒவ்வொரும் இழந்துள்ள உடைமைகள் முழுவதற்குமான இழப்பீடுகள் தரப்பட வேண்டும், அவர்களுக்குப் போதுமான போலிஸ் பாதுகாப்புத் தரப்பட வேண்டும், தீயில் எரிந்துபோன அவர்களது ( நிலப்பட்டா, கல்விச் சான்றிதழ் போன்ற) ஆவணங்கள் புதிதாக தயாரித்து வழங்கப்பட வேண்டும், தலித்துகளில் குழந்தைகளுக்கான கல்வி வசதி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' முன்வைத்துள்ள கோரிக்கைகள் எல்லோராலும் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டியவையாகும். அந்த முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைப்பு என்பதால், அதனைச் சேர்ந்தவர்கள், தங்களது செயல்பாடுகளை மேலும் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, ஆக்கபூர்வமான சாதி-எதிர்ப்பு போராட்டங்களுடன் சேர்த்து, வர்க்க அடிப்படையில் மக்களை ஒன்றிணைப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தும் ஆர்வம் தோன்றாமல் இருக்க முடியவில்லை.


தர்மபுரி நிகழ்ச்சியில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், நாற்பதாண்டுகளுக்கு முன் கீழ்வெண்மனியின் நடந்த நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. அங்கு இதேபோன்ற தலித் கிராமத்தை நிலப்பிரபுக்களின் குண்டர்கள் தீவைத்து எரித்து 44 தலித்துகளைக் கொன்றனர். அந்த 44 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளின் புதிய வகை என்று நான் கூறிவருவது இங்குதான் தொடங்கியது. அரைகுறையான நிலச்சீர்திருத்தம், பசுமைப்புரட்சி ஆகியவற்றுடன் நேருவிய சோசலிசம் எனக் கூறப்படும் ஆட்சி முறை பின்பற்றிவந்த முதலாளிய வளர்ச்சி உத்தியின் காரணமாக கிராமப்புறங்களின் மீது கவிழ்ந்த பொருளுற்பத்தி -வினியோக முறையைக் கொண்டுதான் இந்தப் புதிய வகை வன்கொடுமையைப் பகுத்தாய்வு செய்யவும், இதற்கான காரணியாக அந்தப் பொருளுற்பத்தி-வினியோக முறையைக் கொள்ளவும் முடியும். முந்தைய சூத்திர சாதிகளைச் (இன்றைய பிற்படுத்தப்பட்ட/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சேர்ந்த குடியானவர்களிடையே இருந்து பணக்கார விவசாயிகள் வர்க்கமொன்றை மேற்சொன்ன முதலாளிய வளர்ச்சி உத்தி உருவாக்கியது. இந்தப் பணக்கார விவசாயி வர்க்கம், மத்திய அரசாங்கத்திலுள்ள ஆளும் வர்க்கங்களின் முக்கியக் கூட்டாளியாகவும் அரசியல் அதிர்ச்சிகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் சக்தியாகவும் அமைந்து, தலித்துகளை முற்றிலும் கூலி உழைப்பையே சார்ந்திருக்கின்ற, அதே வேளை முன்பிருந்த ஜஜ்மானி முறையால் உத்திரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகள் ஏதுமில்லாத பாட்டாளிவர்க்கமாக மாற்றியது. மேல்சாதி நிலப்பிரபுக்கள் மேலதிக பெரிய வாய்ப்பு வசதிகளைத் தேடி அண்டை நகர்ப்புறங்களுக்குக் குடியேறிச் சென்ற பிறகு, மேற்சொன்ன பணக்கார விவசாயி வர்க்கம் பார்ப்பனியத் தடியைக் கையில் எடுத்துக் கொண்டது. மிகத் துரிதமாகச் செல்வத்தையும் அதிகாரத்தையும் ஈட்டிய இந்த வர்க்கத்திடம் மரபான மேல்சாதிகளுக்கு இருந்த பண்பாட்டு நாசூக்குகள் இல்லை. ஆனால் அதனுடைய சாதிப் பிணைப்புகளின் காரணமாக எண்ணிக்கை பலம் இருந்தது. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களான தலித்துகளுக்குமிடையே புதிய விவசாயப் பொருளாதாரம் ஏற்படுத்திய முரண்பாடுகள் பல சமயங்களில் சாதி அடையாளங்கள் மூலமாக வெளிப்பட்டு, விழாக்கோலம் பூணும் சாதி வன்கொடுமைகளாக விளைந்தன. கீழவெண்மணி இதன் தொடக்கம்; பின்னர் அதனைத் தொடர்ந்து அதே போன்ற வன்கொடுமைகள் நடக்கின்றன.

கீழவெண்மணி 44 ஏழை தலித்துகளைப் பலி கொண்டது. அப்போது, தலித்துகளுக்குத் தங்கள் உயிர்களைத் தவிர இழப்பதறகு ஏதும் இருக்கவில்லை. 2012இல், இரு தலைமுறைகளுக்குப் பிறகு, சமுதாயத்தின் நிலை அப்போது இருந்தது போன்றதாக இல்லை.1960களில் கிராமங்களில் ஒரு நிலப்பிரபுக்கோ, அவரது உற்றார் உறவினருக்கோ சொந்தமான, நன்கு கட்டப்பட்ட வீடுகள் ஒன்றிரண்டு இருந்திருக்கும். ஆனால் இன்றோ, அத்தகைய வீடுகள் கிராமங்களில் ஏராளமாக உள்ளன; அவற்றில் தலித்துகளுக்குச் சொந்தமான வீடுகளும்கூட இருக்கின்றன. ஆனால், இது அதிகரித்துவரும் சமத்துவத்தைக் குறிப்பன அல்ல; மாறாக, கல்வி பரவுதலின் காரணமாகவும், இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளதன் காரணமாகவும் தலித்துகளின் பண்பாட்டு வளர்ச்சி மட்டம் உயர்ந்துள்ளதையே குறிக்கிறது. தலித்துகளுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கக்கூடும். ஆனால் இன்றைய தலித்துகள் தங்களது பெற்றோர்களைப் போலத் தங்களது அவலநிலையைப் பார்த்துக் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்களது வாழ்வையும் தங்களது குழந்தைகளின் வாழ்வையும் மேம்படுத்தக் கடுமையான முயற்சிகள் செய்துள்ளனர். தர்மபுரியைச் சேர்ந்த பெரும்பாலான தலித்துகள் பெங்களூரில் கட்டட வேலைகளிலும் திருப்பூரில் வியர்வைக் கூடங்களிலும் கடுமையாக உழைத்துத் தங்கள் சேமிப்புகளை, தங்கள் கிராமங்களில் விட்டு வந்துள்ள குடும்பங்களுக்கு நல்ல வீடுகள் கட்டித் தருவதில் முதலீடு செய்துள்ளனர். அவர்களது வீடுகளும் அதிலுள்ள உடைமைகளும் அவர்களது வாழ்வின் புற வெளிப்பாடுகளாக உள்ளன; அவை அவர்களுடைய வாழ்க்கையினது மட்டுமின்றி அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையினதும் புற வெளிப்பாடுகளாகவும் உள்ளன. எனவே அவர்களது வீடுகளை அழிப்பது, எரிந்துபோன அவர்களது வீடுகளுக்குள்ளேயே தலித்துகள் அனைவரையும் அழித்தொழிப்பதற்கு நிகரானது. எனவேதான் அடங்க மறுக்கும் தலித்துகளுக்குப் பாடம் புகட்ட' அவர்களது உயிர்களை விட அவர்களது உடைமைகள்தான் எளிதில் கைகொடுக்கின்றன. சாதி வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான குறிக்கோள் இத்தகைய பாடம் புகட்டல்'தான்.


இந்த அர்தத்தில் பார்த்தால், தர்மபுரி நிகழ்ச்சி கீழவெண்மனி நிகழ்ச்சியைவிட மோசமானதாகும். 1960களில் தலித் இயக்கம் என்பது உருவாகிக் கொண்டிருந்த இயக்கம் என்று கூறலாம். இன்றோ அது தன்னை அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்னும் தர்க்கம், அதன் தொடக்கப் புள்ளிக்கே மீண்டும் வந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் கணிசமான தலித் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்; அரசாங்கக் கட்டமைப்பில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ள கணிசமான தலித் மத்தியதர வர்க்கதினர் இருக்கின்றனர். ஆனால், தலித் வெகுமக்களை விட்டுச் சென்றுள்ள இவர்களால் அந்த வெகுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்பதற்கு நவ தாராளவாதம் ஏற்கனவே இரங்கற்பா பாடிவிட்டது. மக்களின் முன் உண்மையை அச்சமின்றி எடுத்து வைக்க வேண்டிய அறிவாளிகள் யதார்த்த நிலையை மக்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அவர்களைக் குழப்புவதற்காக கார்ட்டூன் சர்ச்சைகளி'ல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கும் இதுபோன்ற பிற கேள்விகளுக்கும் விடைகள் கேட்டு தர்மபுரி உரக்கக் கூவுகிறது.

3 கருத்துகள்:

  1. வெட்கப்பட வேண்டிய நிகழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

    http://arulgreen.blogspot.com/2012/11/Vanniyar-Dharmapuri-Child-Marriage.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.அருள் அவர்களுக்கு, தாக்கியது தப்பு என்று ஆரம்பித்து, தாக்கியதில் என்ன தப்பு என்று கேட்கத் துடிக்கிறீர்கள். மணமக்கள் இருவருமே திருமண வயதை எட்டாதவர்கள் என்கிற அறிவியல்பூர்வமான காரணத்தை முன்னிட்டுதான் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை வன்னியர்கள் மேற்கொண்டார்கள் என்று சொல்ல வருகிறிர்களா? நெருங்கிய சொந்தம்/ குறிப்பிட்ட குறுகிய வட்டாரத்திற்குள் இருக்கும் குழுவுக்குள்ளேயே மணவுறவு கொள்வது போன்ற காரணங்களால் மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் பிறக்கின்ற குழந்தைகளை உடல் மற்றும் உளவியல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற அறிவியல் உண்மை வன்னியர்களுக்கு பொருந்தாதா? சட்டவிரோதம் என்றால் தீர்ப்பை வன்னியர்களே எழுதி செயல்படுத்தியும் விடுவார்களா? எந்தவொரு சட்டவிரோதத்திற்கும் மொத்த ஊரையே கொள்ளையடிக்கவும், அவர்களது ஆடு கோழிகளை திருடவும் எஞ்சிய எல்லாவற்றையும் தீயிட்டுப் பொசுக்கவும் "வன்னிய ராஜ்ஜிய சட்டம்" எதுவும் இங்கு அமலில் உள்ளதா? தவிரவும், எண்ணிரண்டு பதினாறு வயது, பதினாறு வயதினிலே மயிலே என்று பாடிக்கொண்டிருந்த இந்தச் சமூகத்தில் திருமண வயது உயர்த்தப்பட்டதற்கான அறிவியல்பூர்வமான கருத்தியல் வெற்றியை, வன்னியர்களின் சாதிவெறிக்கு காவுகொடுக்க முயலாதீர்கள்.

      நீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...