ஞாயிறு, பிப்ரவரி 26

அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்? - ஆதவன் தீட்சண்யா

‘ஆ... தமிழர்களுக்குள் பிரிவினையா? ஐயகோ...    என் செய்வேன்..      ஏது செய்வேன் .... ’ என்று நெஞ்சைப் பிடித்துக்  கொண்டு ரத்த வாந்தி எடுப்பதை வழக்கமாய் கொண்டுள்ள - ஒண்ணும் தெரியாத ஓவர் ஆக்டிங்காரர்கள் இதைப் படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
லேசியத் தமிழர்கள் என்ற விளிச்சொல் திரண்ட ஒரு தோற்றத்தை நமக்கு உருட்டிக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் அவ்வாறாக இல்லை. ஒருங்கிணைந்து வாழவேண்டிய புறத்தேவைகளும் நெருக்கடிகளும் அதிகரித்தே வந்தபோதிலும் அவர்கள் பிளவுபட்டே இருக்கிறார்கள். இந்தப் பிளவு அங்கு போய் உருவாக்கிக்கொண்டதல்ல, இங்கிருந்து போகும்போதே எடுத்துக்கொண்டு போய் நாட்டியது. போகும்போதே அந்த கப்பலுக்குள் தலித்துகளை தனிமைப்படுத்தி ஒரு மூலையிலே உட்கார்த்திவைத்தவர்கள் அங்கேபோய் மட்டும் அப்படியென்ன ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் வாழ்ந்திருக்கப்போகிறார்கள்?

மலேயாவின் தோட்டக்காடுகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்காகவும் பிரிட்டிஷாரால் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் (வெயிலுக்குப் பயந்து வெள்ளாவிப்பானையில் குதித்தக் கதையாக விரும்பிச் சென்றவர்களும் இதில் அடக்கம்) கடும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான போதிலும் இவர்களது வாழிடங்கள் மேல்குச்சு- கீழ்க்குச்சு என்று பிளவுபட்டே இருந்திருக்கின்றன. மேட்டிலிருந்தது மேல்குச்சு, தாழ இருந்தது கீழ்க்குச்சு என்றெல்லாம் அருஞ்சொல் பொருள்விளக்கம் பகர்கின்ற வியாக்கியான விற்பன்னர் யாரும் வாய்திறந்து விடாதீர்கள். இந்தப் பிரிவினை அப்பட்டமான சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது. இந்தியாவில் தமிழகத்தில் ஊர் சேரி என்று இரண்டிரண்டாக இருக்கிற அதே பிரிவினை அங்கும் நீட்டிக்கப்பட்டிருந்திருக்கிறது.

தோட்டக்காடுகள் அருகிப்போய் நகரங்களை நோக்கி பெரும்பாலான தமிழர்கள் பெயர்ந்து வந்துவிட்ட நிலையில், அருகருகாக வாழ நேர்ந்திருக்கிற யதார்த்தத்தில், வெவ்வேறு தொழில்களுக்குள் ஈடுபட்டு கடந்தகாலத்தின் ரேகைகளை துடைத்தழித்துக்கொண்ட இன்றைய நாளில் இங்கு சாதியின் இடம் என்னவாக இருக்கிறது என்று கேட்டால், நம்மூர் போலவே, ‘இப்பல்லாம் யார் சார் சாதிப் பாக்குறாங்க’ என்று உதட்டைப் பிதுக்குகிறார்கள். அப்படியா, அவ்வளவு நல்லவங்களா நீங்க என்று பேசத்தொடங்கினால்தான் குட்டு உடைகிறது. கல்யாணம் செய்யறப்ப மட்டும் தீவிரமா விசாரிப்பாங்க. மற்றபடி இங்கு சாதிக்கு ஒரு வேலையும் இல்லை என்கிறார்கள். இதுவொன்று போதாதா சாதியை நிலைநிறுத்த? சாதியின் உருவாக்கத்துக்கும் மறு உற்பத்திக்கும் நிலைநிறுத்தலுக்கும் மூலகாரணமாய் கல்யாணம்தானே இருக்கிறது? ஒருவர் யாரை  திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது செய்து கொள்ளக்கூடாது என்கிற எல்லைதான் சாதி என்று பேரா.முத்துமோகன் வரையறுப்பதும் இதனால்தானே?

சரி, கல்யாணத்தைத்தவிர வேறு விசயங்களில் மலேயத்தமிழர்கள் சாதி பார்ப்பதில்லையா என்று விவாதிக்கத்தொடங்கினால் அனேகமாக எல்லாவற்றிலும் சாதிவகிக்கும் பங்கை உணரமுடிகிறது. அங்கு தமிழர்களுக்கென்று பாடுபடுவதற்காகவே தொடங்கப்பட்டதாய் சொல்லிக்கொள்கிற ஒவ்வொரு கட்சியிலும் குறிப்பிட்ட ஏதாவதொரு சாதியினரே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். தமிழர் பிரதிநிதித்துவம் என்கிற பெயரில் கிடைக்கும் அதிகாரங்களையும் சலுகைகளையும் யார் அனுபவிப்பது என்கிற போட்டியில் ஆதிக்கச்சாதிகள் ஒன்றையொன்று காலை வாரிக்கொண்டாலும், அவை தலித்துகளுக்கு கிடைத்துவிடக்கூடாது என்று தடுப்பதில் ஒற்றுமை கொண்டிருக்கின்றன. இந்தவகையில் இந்திய/தமிழக கட்சிகளின் நகல்களாகவே மலேசியத் தமிழர்களின் கட்சிகள் இருக்கின்றன. மலேசிய முக்குலத்தோர் பேரவை, மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம், மலேசிய யாதவர் சங்கம் போன்ற அமைப்புகள் சர்வஜன அமைப்புகளல்ல- அவை குறிப்பிட்ட சாதியினரையே அணிதிரட்டிக்கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டைப்போலவே அங்கு போயும் நாங்கள் ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரை என்று அலட்டிக்கொள்கிற அக்கப்போர்களுக்கும் பஞ்சமில்லை. சரிடாப்பா, அப்படியே ஆண்ட பரம்பரையாக இருந்தாலும் அவ்வளவுபேருமா  கிரீடம் கட்டிக்கிட்டு நாட்டை ஆண்டீங்க? யாரோ ஒருத்தன்தான் ராஜாவா இருந்திருப்பான், மத்தவனெல்லாம் மாடுகன்னு மேய்ச்சுக்கிட்டு மண்ணை உழுதுக்கிட்டுதானே இருந்திருக்க முடியும்? என்று கேட்டால் அதுக்காக நாங்களும் மற்றமற்ற சாதிகளும் ஒண்ணாயிட முடியுமா என்று  இங்கே பேசுகிற அதே குதர்க்கம் அங்கும் இருக்கிறது.  இன்டர்லாக் நாவலுக்கு மலேசியத்தமிழர்களிடையே கிளம்பிய எதிர்ப்புக்கு இந்த உளவியலே காரணமாகிறது. அதெப்படி இந்த நாவல் எங்களையும் பறையர்னு சொல்லலாம்? நாங்களெல்லாம் வேற சாதியாக்கும் என்று நுரைதள்ள எகிறிக் குதித்த எல்லோரிடமும் வெளிப்பட்டது சாதியம்தானே? பார்ப்பனர்கள் தங்களைத்தவிர இங்கிருக்கும் எல்லோரையும் தீண்டத்தகாதவர்களாகப் பார்ப்பதைப் போலவே, நீங்கள் ஆ பரம்பரையோ பே பரம்பரையோ, மலேசியர்கள் இந்தியர்கள் எல்லோரையும் பறையர்களாகவே கருதுகிறார்கள். பறையர்கள் என்றால் தீண்டத்தகாதவர்கள்- இழிவானவர்கள் என்று இந்த இந்துத்தமிழர்கள் உருவாக்கின நச்சுக்கருத்தாக்கம் இன்று அவர்களையே தாக்கும்போது, இதுவரை பேசிவந்த தமிழர் என்ற அலங்காரங்களை களைந்துவிட்டு அப்பட்டமான சாதிக்காரர்களாக அம்மணமாக வெளிப்பட்டார்கள்.

இத்தனை நொட்டைகளைக் கொண்டிருக்கிற மலேசியாவில் பகுத்தறிவு மாநாட்டுக்கான தேவையும் நியாயமும் இருக்கின்றன. மாநாட்டு தலைமையுரையிலும், தீர்மானங்களிலும் வலியுறுத்தப்பட்டதைப் போல சாதிச்சங்கள் தடைசெய்யப்பட வேண்டும். சாதிப்பெருமிதங்களை வலிந்தூட்டும் கொண்டாட்டங்களை நிறுத்தினாலே சமூகம் ஓரளவுக்கு இயல்பாக இருக்கும். அதற்காக மாநாட்டுக்கு அப்பாலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே தேநீருக்காக மாநாட்டு அரங்கிலிருந்து வெளியே வந்தோம். தோழர் மார்க்ஸிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் மிகுந்த குமைச்சலுடன் சொன்ன விசயம்- ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச்சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’

இதைக் கேட்டதும் "இன்னும் நூறு பெரியார் வந்தால்தான் இவங்கெல்லாம் திருந்துவாங்க" என்று தானே சொல்லத் தோன்றுகிறது?’ நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பெரியார் மறுபடியும் வரமாட்டார்தானே? வந்தாலும் நூறு பெரியாரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைத்தான் அவரால் செய்ய முடியும். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், பகுத்தறிவுப் பரம்பல், சாதியொழிப்பு போன்ற வேலைகளையெல்லாம் மறுபடியும் பெரியார் தலையிலேயே கட்டிவிட்டு நீங்களும் நானும் அப்படியென்ன அதியுன்னத புல் புடுங்கப்போகிறோம்?  

(தொடரும்)

புதன், பிப்ரவரி 22

‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’ - ஆதவன் தீட்சண்யா

பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தால் கூட உடனே அதை ஒரு பயணக்கட்டுரையாக எழுதிவிடும் சிலரைக்கண்டு நான் மலைத்துப்போவதுண்டு. கை ஈரம் காய்வதற்குள் அங்கு முக்கியது முணகியது மூக்கை நோண்டியது என்று எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி பிரசுரித்துவிடுகிற அந்த சாமர்த்தியம் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராதுபோல என்று என்னை நானே நொந்து கொள்வதுண்டு.  சுட்டுப்போட்ட பிறகு வந்தால் என்ன வராதொழிந்தால் என்ன என்று சமாதானப்படுத்திக்கொண்டு எழுதாமலே விட்டுவிடுவதுண்டு. இப்படித்தான் இங்கிலாந்து, இலங்கை பயணங்கள் குறித்து எதுவுமே எழுதாமல் விட்டுத்தொலைத்தேன். என் பிரியத்திற்குரிய தோழி நந்தினி இருக்கப்போய் ஆனந்தவிகடனிலும், சூரியக்கதிரிலும் அந்தப் பயணங்களை மையப்படுத்தி இரண்டு பேட்டிகள் வந்தன. தோழர் பழனியப்பன் முயற்சியில் சண்டே இண்டியனில் ஒருபக்க பேட்டி வந்தது. மற்றபடி எழுதுவதற்கு அனேகம் இருந்தும் இன்றுவரை எழுதவேயில்லை.  இதேகதிதான் மலேசிய சிங்கப்பூர் பயணத்திற்கும் நேரப்போகிறது என்று நினைத்திருந்த வேளையில் நண்பர் பாலமுருகனும் தோழி.மாலா நாயுடுவும் புகைப்படங்களை வெளியிட்டு எழுதியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கிவிட்டனர்.

முன்பொருமுறை தனது வலைப்பதிவு ஒன்றில் எனது எழுத்துகளைப் பற்றி நண்பர் நவீன் குறிப்பிட்டிருந்தார். அதற்குப்பிறகு நீண்டநாட்கள் கழித்தே நாங்கள் தொலைவழி நண்பர்களானோம். கடந்த ஆண்டு இங்கு வந்திருந்த அவரை சந்திக்க முடியாமலே போய்விட்டது பற்றிய உளைச்சல் ஒருபக்கம் இருந்தது. அவரிடம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக நான் நடத்தியிருந்த நேர்காணல் வேறு இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தது. (இந்நேர்காணலின் முதற்பகுதி இம்மாத அம்ருதாவில் வெளியாகியுள்ளது). இதனிடையே ‘இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டு பாலமுருகன் எனக்கு நண்பரானார். பிறகு அந்தக்கதை எழுதப்பட்ட விதம் குறித்து அவர் என்னிடம் நடத்திய நேர்காணல் வல்லினம்.காம் இணைய இதழில் வெளியானது. இருவரும் மலேசியாவுக்கு ஒருமுறை வந்துபோங்களேன் என்று அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு மின்னல்வேக பயணம் வந்திருந்த பாலமுருகன் ஒசூருக்கே வந்து அழைப்பு விடுத்துப்போனார்.

மலேசியாவின் மூத்த பத்திரிகையாளரும் பெரியாரில் தொண்டருமான முனைவர்.பெரு.தமிழ்மணி அவர்களின் முன்முயற்சியில் 2012 ஜனவரி 27-29 வரை கோலாலம்பூரில் பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு. தோழர்கள் வே.ஆனைமுத்து, சுபவீ, விடுதலை ராசேந்திரன், திருமாவளவன், ஓவியா, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் வாகை சந்திரசேகர் என்று விரியும் இம்மாநாட்டு கருத்துரையாளர்கள் பட்டியலில் என்னையும் அ.மார்க்ஸையும் இடம்பெறச் செய்து வரவழைப்பதில் நவீனும் வல்லினம் குழுவும் தீவிர முயற்சி எடுத்திருந்தனர். எங்களையெல்லாம் சந்திப்பதற்கென்று இலங்கையிலிருந்து தோழர்.தேவாவும் (குழந்தைப்போராளி மற்றும் அனொனிமா மொழிபெயர்ப்பாளர்)  மலேசியாவுக்கு வந்துவிட்டிருந்தார்.

பெரும் தொண்டர்குழு அசரவைக்கும் ஏற்பாடுகளை செய்திருந்தது. மலேசியாவில் இவ்வளவு பேர் பகுத்தறிவின் வழி நின்று வாழ்கிறார்களா என்று வியந்துபோகுமளவுக்கு அரங்கு கொள்ளாத திரள். கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டவர்களே 600 பேர். அதைவிடவும் கூடுதல் எண்ணிக்கையில் பங்கேற்பு இருந்தது. மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். குறிப்பிடத்தக்க அளவில் பெண்களின் பங்கேற்பு இருந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும்.

எல்லாம் ஒழுங்காக போய்க் கொண்டிருக்கிறதா என்பதைப்போல மேடையின் பின்னே கட்டப்பட்டிருந்த பதாகையிலிருந்து பெரியார் பார்த்துக்கொண்டிருந்தார். மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் டத்தோ பழனிவேலு இப்படி ஆரம்பித்தார்- ‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’.

இப்படி பேசியதற்காக அந்த அமைச்சரையோ  அல்லது இப்படியானவரை அழைத்தமைக்காக மாநாட்டு ஏற்றபாட்டளர்களையோ பேனரில் இருந்த பெரியார் தனது கைத்தடியால் கொட்டுவார் என்று எதிர்பார்த்தேன். தன்னை வைத்துக் கொண்டே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்களையும் மஞ்சத்துண்டு மகாத்மியம் பேசுகிறவர்களையும் கொல்லூர் மூகாம்பிகையை கும்பிட்டவர்களையும் பார்த்து பழக்கப்பட்டிருந்த அவரோ என்னமும் உளறித்தொலையுங்கள் என்பதுபோலவோ, இதுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோலவோ தெரிந்தார்.

( தொடரும்...)

செவ்வாய், பிப்ரவரி 21

களவு -ஆதவன் தீட்சண்யா

கிழங்குக்காட்டில் பிடிபட்ட அவளை கிணற்றோர கரண்ட் கம்பத்தில் கட்டிப் போட்டிருந்தான் மாரிக்கண்ணு. அவள் பிடுங்கிச் சேர்த்திருந்த கிழங்கு மூட்டை ஒன்று அவளது காலடியில் சரிந்து கிடந்தது. பகலிலே அவ்வளவு உன்னிப்பாக தோது பார்த்தும் இப்படி எகனைமொகனை இல்லாமல்  மாட்டிக்கொண்டோமே என்கிற ஆதங்கம் அவளை வாதித்தது. ஆளரவம் கேட்டு சுதாரித்து கிழங்குக் குச்சிக்கு அடியில் செத்தநேரம் இருளோடு இருளாக பம்மிக் கிடந்திருந்தால் ஒரு வில்லங்கமும் வந்திருக்காது என்று இப்போது நினைத்து என்ன ஆகப்போகிறது? தப்பி விடலாம் என்று ஓடத் தொடங்கியதுதான் பிழையாகப் போய்விட்டது. அவனும்தானென்ன இருட்டுக்குள் வருகிறவனைப் போலவா வந்தான்? முரடன், நாலே எட்டில் பாய்ந்துவந்து இடுக்கி மாதிரியல்லவா கழுத்தைப் பிடித்தான்...

விடிந்தால் யார்யார் வந்து என்னென்ன சொல்லி தன்னைத் திட்டுவார்கள் என்ற நினைப்பு அவளுக்கு மேலும் உளைச்சலைத் தருவதாயிருந் தது. மேங்காட்டிலிருந்து சொசைட்டிக்கு பாலூற்ற அந்த வழியாக வருகிறவர்களுக்கு சேதி தெரிந்துவிட்டால் பிறகு இந்தப் பக்கம் பராந்திரியில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போய்  கூலிநாழிக்கு நிற்பது? யாரையும் பார்க்க விரும்பாதவள்போல அவள் தலையைத் தொங்கப்போட்டவாறு இருந்தாள். அவிழ்ந்திருந்த தலைமுடி அவளது முகத்தை மூடியிருந்தது.

மழை இன்னும் நிற்கவில்லை. அவள் வெட்டவெளியில் மழைக்குள்தான் நின்றிருந்தாள். காலுக்குக் கீழே தரையை அரித்துக்கொண்டு குறுகுறுத்து ஓடிய மழைநீரில் அவள் பாதங்கள் ஊறிப்போய் கடுத்தன. மழையில் நனையும் கயிறு இறுகி அவளை நெரித்துக் கொண்டிருந்தது. கயிற்றின் அழுந்தலில் பெருகிய எரிச்சலும் வலியும் தாளமுடியாததாயிருந்தது. சதையை அறுத்துக்கொண்டு கயிறு உடம்புக்குள் துளையிட்டு இறங்குவதுபோல கடுத்துக் கொண்டிருந்தது அந்த வலி. நனைந்து சொதசொதத்துப்போன அவளது முரட்டு உடுப்பு இப்போது கனத்தது பெரும் பாரமாகி. 

மாரிக்கண்ணு தன்னை என்ன செய்வான் என்று அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. தன் முகத்தைப் பார்த்துவிட்டானென்றால் அதைவிட மானக்கேடு எதுவுமில்லை. பிறகு விசயம் அவனது அண்ணம்பொண்டாட்டி வேடம்மா காதுக்குப் போகும். ‘ஒத்தா உறவா உடன்பிறந்த மருவா நெனைச்சு பாசங் காட்டுகிற’ அவள் முகத்தில் எப்படி விழிப்பது? இப்படியே இந்த ஈரத்தில் விரைத்து ஜன்னி கண்டு செத்துப்போய்விட்டால்கூட நிம்மதியாயிருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். திடீரென கரண்ட் வந்து மழைநீரில் பாய்ந்து தன்னைத் தாக்கினால் உருளையனைப்போல தானும் உடல் கருகி அடையாளம் தெரியாமல் செத்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்ற நினைப்பு அவளுக்கு ஆறுதலைத் தந்தது.   

மாரிக்கண்ணு மோட்டார்ரூமின் கூரையடியில் மழைக்கு மறைவாக உட்கார்ந்து இவளை இருளில் வெறித்தபடி இருந்தான். அவள் ஆம்பிளைபோல உடுத்தியிருந்ததை வைத்து யாரோ டவுன்காரன் தான் கிழங்கு திருட வந்து மாட்டிக் கொண்டிருக்கிறான் என்று முதலில் நினைத்திருந்த அவன் ஆத்திரத்தில் முடியைப் பிடித்து ஆட்டும்போதுதான் பிடிபட்டிருப்பது பொம்பளை என்றறிந்தான். கீழே விழுந்து ராந்தல் கண்ணாடி உடையாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் முகத்தைப் பார்த்து யாரென்று கண்டுபிடித்திருக்கலாமே என்ற அங்கலாய்ப்பிருந்தது அவனுக்கு.

அவன் ஒன்றும் இவளை திட்டமிட்டோ பொறி வைத்தோ பிடித்திருக்கவில்லை.  மலையடிவாரம் என்பதால் கிழங்குச்செடிகளை உலும்ப வருகிற காட்டுப்பன்றிகளை விரட்ட வழக்கம்போல ராந்தல் கொளுத்திக் கொண்டு வந்தவனிடம்தான் இவள் பிடிபட்டுப் போனாள். பிடிபட்டவள் கொஞ்சநேரம் அப்படியிப்படி திமிறினாளே தவிர கீச்மூச்சென்று ஒரு சத்தம் போடவில்லை. நீ மட்டும்தான் வந்தியா? உன்கூட வேற யாரும் வந்தாங்களா? யார் நீ, எந்த ஊர்? எங்கெங்கே களவெடுத்திருக்கே? என்று அவன் நினைத்துநினைத்துக் கேட்ட ஒருகேள்விக்கும் பதில் சொல்லாமல் உசிரே இல்லாதவள்போலக் கிடந்ததில் அவனுக்கு வெகாளம் கிளம்பியது. “இப்பிடியே நாக்கறுந்தவளாட்டம் இருந்தேன்னு வச்சுக்க, குத்துக்கோல்ல ஒரே ஏத்தாஏத்தி கொடலு குண்டாமணி எல்லாத்தயும் வெளிய இழுத்துருவேன் பாத்துக்க” என்று மிரட்டியும் பலனொன்றுமில்லை. குரலை வைத்து அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற் காக அவள் வாய் திறவாதிருக்கிற தந்திரம் அவனுக்குப் பிடிபடவில்லை.

எங்கோ தூரத்துக்கொல்லையில் நாயொன்று குரைக்கும் சத்தம் மழையின் இரைச்சலில் நடுங்கிக் கேட்டது. அடுத்தடுத்து முழிப்பு கண்ட நாய்களின் குரைப்பொலி அடங்க வெகுநேரமாயிற்று. சனநடமாட்டம் தொடங்கிவிட்டதோ என்று இவனுக்கு கொஞ்சம் படபடப்பு கூடியது. இன்னும் கொஞ்சநேரத்தில் விடிந்துவிடும். அதற்கப்புறம் இவளை என்ன செய்வது என்று அவனுக்கு ஓடாத யோசனை இல்லை. ஒரே அருங்குழப் பமாக இருந்தது. யாரையாச்சும் சைக்கிளில் பழனங்குடிக்கு அனுப்பி போலிசை வரவழைச்சு ஒப்படைச்சிடலாமா என்ற யோசனையை உடனே கைவிட்டான். ‘அவனுங்ககிட்ட தலையக் குடுத்துட்டு யாரு அல்லாடுறது’ என்ற பயமே அவனை அப்படி வெருட்டியது. பிடித்த உடனே ஆத்திரம்தீர கண்மண் தெரியாமல் அடித்து சாத்தியும் விட்டான். இனி வலிந்து கோபத்தை வரவழைத்துக்கொண்டு அவளை இன்னொரு வாட்டி அடிக்கவும் தன்னால் முடியாதென்றே அவனுக்குத் தோன்றியது.

தனது வீட்டாள்களோ அக்கம்பக்கத்துக் கொல்லைக்காரர்களோ பார்த்தால் அவர்கள் இவளை என்ன செய்வார்கள் என்றும் அவனால் கணிக்க முடியவில்லை. சாணியைக் கரைத்து ஊற்றுவது, மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரைச் சுற்றி வர விரட்டுவது, கோயிலுக்கு அபராதம் கட்டவைப்பது என்று அந்தப் பகுதியில் நடப்பிலிருக்கும் ஏதாவதொரு தண்டனையை அவர்கள் கொடுக்கலாம். ஆனால் இதையெல்லாம் ஆண்களுக்கு விதித்து தான் அவன் பார்த்திருக்கிறானே தவிர இதுவரையிலும் ஒரு பொம்பளைக்கு விதித்திருப்பதாக கேள்விப்பட்டதுமில்லை. ராவா ராத்திரியில் தன்னந்தனியாக ஒரு பொம்பளை திருட வந்திருக்கிறாள் என்பதையே இன்னும் நம்ப முடியாமலிருந்த அவனால் அவளுக்கான தண்டனையை இறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தக் கெழங்கை எடுத்துனு போய் என்னா செய்வா இவ? மிஞ்சிப்போனா ரெண்டு நாளைக்கு வேகவச்சுத் திங்கமுடியும். இல்லாட்டி ஆட்டி புளிக்கவச்சு ரெண்டு வேளைக்கு தோசை சுடலாம். அதுக்கு மேல வச்சிருந்தா பாலேறி கசந்துடும். இதுக்கும் நாதியத்தா ஒரு பொம்பள  ராவாராத்திரியில திருட வந்திருக்கா? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். உடல் முழுக்க வயிறாகக் கொண்டு தீராத பசியில் வேகும் ஒரு ராக்காசியாகவோ காட்டேரியாகவோ இருந்தால் மட்டுமே இந்தக் கிழங்கையும்கூட திருட வந்திருப்பாள் என்று யோசித்தவனுக்கு அதன்பிறகு அவளிருந்த திசையைப் பார்க்கவே ஒருவித அச்சமாய் இருந்தது. அவள் இந்நேரத்திற்கு அவளைக் கட்டியிருந்த கயிற்றையும் கரண்ட் கம்பத்தையும்கூட தின்றுவிட்டு நின்றிருக்கக்கூடும் என்று தோன்றியது. அவ்வளவு பசி யோடு இருக்கும் அவளை விரட்டிப்பிடிக்கும்போது தனது குரல்வளையைக் கடித்து ரத்தம் உறிஞ்சிக் குடிக்காமல் விட்டதே பெரிய கருணைதான் என்று சொல்லிக்கொண்டான். அவள் முகத்தைப் பார்க் காமல் போனதும்கூட ஒருவகையில் நல்லதுதானோ என்று பட்டது. அவளிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டால் போதும் என்றானது அவனுக்கு.

ஒரு மின்னல்வெட்டுக்காக காத்திருந்தவன் அந்த வெளிச்சத்தில் அவளிடம் தட்டுத்தடுமாறி போய்ச் சேர்ந்தான். “இன்னொருவாட்டி இந்தப்பக்கம் வந்திட்டியானா நான் மனுசனா இருக்கமாட்டேன். எங்கியாச்சும் கண்காணாம ஓடிப்போ...” என்ற வீறாப்பு குறையாதவனைப் போன்ற குரலில் அதட்டிக் கொண்டே கட்டுகளை அவிழ்த்துவிட்டான். கயிற்றின் பிடி தளர்ந்த அவள் நனைந்த துணிபோல நிலைகுலைந்து விழுந்தாள். பயந்துபோன அவனோ அவளை அரட்டிப்புரட்டி உலுக்கி எழுப்பினான்.

வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்த பொன்னிக்கு படபடப்பு அடங்காமல் இருந்தது. தன்னைச் சுற்றிலும் மலங்க மலங்கப் பார்த்தாள். தான் இன்னும் சாளைக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்து கொள்ள அவளுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. ஆமாம், நான் இன்னும் சாளைக்குள்ள பத்திரமாத்தான் இருக்கேன்... என்னை யாரும் பிடிச்சி கட்டிவைக்கல” என்று தைரியம் சொல்லிக்கொண்டாள். மாரிக்கண்ணமூட்டு கிழங்குக்காட்டுக்குப் போவதற்காக ஊரடங்கட்டும் என்று நினைத்தபடி அடுப்புத்திட்டோரம் படுத்திருந்து அப்படியே கண்ணயர்ந்து போனதால் வந்த வினை இது என்பதை ஒருவாறு யூகித்துக்கொண்ட பிறகே அவளுக்கு மூச்சு சீரானது. இருந்தாலும் களவெடுக்கப் போய் பிடிபட்டுவிட்டால் என்னாவது என்கிற பயம் அவளுக்கு அப்போதி ருந்து தான் தொற்றியது. தனக்குத்தானே நூறுநூறு சமாதானம் சொல்லிக் கொண்டவள், சொப்பனத்துல வர்றதெல்லாம் நெசத்துலயும் நடக்கும்னா சாமியேது பூதமேது  என்று தேற்றிக்கொண்டாள். 
***
வெளியே மழை சீரற்று முன்னதுபின்னதாய் வீசியடித்து பெய்து கொண்டிருந்தது. மழையோடு காற்றும் இருந்ததால் பெருகி  நடுக்கியது குளிர். குபீர்குபீரென்று காற்று சீறியடிக்கும்போது சாளையின் கூரையை மல்லாத்திவிடுமோ என்ற விசனம் பீடித்தது அவளை. வெள்ளம் திரண்டு தெருவில் தபதபவென்று ஓடும் சத்தம் ஆற்றோரத்தை நினைவுபடுத்தியது. மழையின் சத்தத்தைத் தவிர வேறொன்றும் கேட்காத அமைதியை சிதறடித்தபடி சனங்கள் பள்ளிக்கூடத்துக்கு  ஓடிக் கொண்டிருந்தார்கள். செவுரு இடிஞ்சி வுழுந்திருச்சி, தண்ணி பூந்திடுச்சு என்று நேரங்காலமில்லாமல் கூப்பாடிட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர்களது கண்ணில் படாமல் வெளியேறிப் போவதற்காக அவள் ரொம்பநேரமாய் காத்திருக்கிறாள். கிளம்பும்போது போட்டுக்கொள்வதற்காக உலர்த்தியிருந்த உடுப்பு கொடியில் ஆடிக்கொண்டிருப்பதையே பார்த்தபடி படுத்திருந்தாள்.

தீத்தானின் ஞாபகமாய் அந்த உடுப்பு ஒன்றை மட்டுதான் அவள் வைத்திருக்கிறாள். மலைமேல் கூத்தாடப் போகும்போது  அங்கிருந்த எஸ்டேட் துரை ஒருத்தர் இவனுக்கு சன்மானமாய் கொடுத்த பட்டாளத்து உடுப்பு அது. குளிர்காலத்தில் அவன் அதைத்தான் போட்டுக் கொள்வான். அதன் கதகதப்பு அவ னது உடம்பைத் தாண்டி இவளுக்கும் பரவி இதமூட்டிய இரவுகளை அவள் இப்போது நினைத்துக்கொள்வதில்லை. அதை வெறுமனே ஒரு முரட்டுத்துணியாக மட்டுமே இதுமாதிரியான குளிர்மண்டிய இரவுவேளைகளில் பாவிக்கிறாள்.

அவள் இன்று பகலிலேயே ஒருசில முன்னேற்பாடுகளை செய்திருந்தாள். ஒருவார மோடத்தில் கையிருப்பிலிருந்த கம்பும் சோளமும் காலியாகி அடுத்தவேளைக்கு என்ன செய்வது என்று யோசித்து களைத்தப் பிறகுதான் இன்று மத்தியானம் மாரிக்கண்ணமூட்டு கொல்லைப்பக்கம் போய் கிழங்குக்காட்டை நோட்டம் விட்டுத் திரும்பியிருந்தாள். மலையடிவாரம் என்பதால் நல்ல செங்காட்டு மண்ணுக்கு மரம்போல திமுதிமுவென்று ஆளை மறைக்கும் உயரத்திற்கு வளர்ந்திருந்தன கிழங்குச்செடிகள். அடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையில் பதமாய் ஊறி பூரித்துக் கிடந்தது நிலம். அடிக்குச்சியில் கைவைத்து பூபோல இழுத்தால்கூட முனை முறியாமல் கிழங்கு மேலே வந்துவிடும். கரணைகரணையான கிழங்குகள் வெந்து வெடித்து கிளர்த்திவிடும் வாசனையை அவள் அப்போதே நுகரத் தொடங்கி விட்டிருந்தாள். 

அவள் முக்கியமாய் நோட்டமிட வந்தது இதையல்ல. காட்டைச் சுற்றி கரண்ட் கம்பி எதுவும் ஓடுகிறதா என்பது மட்டுமே அவளுக்கு உடனடியாய் தெரியவேண்டியிருந்தது. இரவானால் மலைக்காடுகளிலிருந்து கிளம்பி வந்து கிழங்குச்செடிகளையும் கடலைக்கொடிகளையும் உலும்பிப் போட்டுவிட்டுப் போய்விடுகிற காட்டுப்பன்றிகளைத் தடுக்க இந்த மலையடிவாரத்து பண்ணையக்காரர்கள் இப்போதெல்லாம் காட்டைச்சுற்றி கரண்ட்விடத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் கரிமருந்து நிரப்பின நாட்டுத்தோட்டாவை வெடிக்கச்செய்து பன்றிகளை வாய் கிழித்துக் கொன்றவர்கள் இப்போது கரண்ட்டாபீஸ் ஆட்களுக்கும் பாரஸ்ட்காரங்களுக்கும் கையூட்டு கொடுத்துவிட்டு திருட்டுத்தனமாக கம்பி ஓட்டுகிறார்கள்.

நரம்புமாதிரி மெல்லிசான அந்த கொடிக்கம்பியில் சிக்கினால் பன்றி மட்டும்தான் சாகும் என்றில்லை. சுளுவில் கண்ணுக்குத்தெரியாத சன்னத்தில் உயிரெடுக்கிற எமன் பொழியடியில் நீண்டு படுத்திருப்பதறியாது மாட்டிக்கொண்டு செத்தவர்களின் முகமெல்லாம் நினைவுக்கு வந்து ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று அவளிடம் குசுகுசுப்பது போலிருந்தது. பனந்திட்டு கண்ணுப்பையன், இட்டேரி ஜடையன், வளத்தி மவன் கூப்புனு, சவுளுமேடு அங்காரன் என்று அந்தப்பக்கத்தில் பேர்பெற்ற திருடர்கள் பலரும் கரண்ட்டில் சிக்கி செத்துப் போயிருக்கிறார்கள். திருடப் போனவங்களை கரண்ட் பாய்ச்சி கொன்னுட்டாங்க என்று வழக்குப் போட்டு வாய்தா கேட்டு கச்சேரிப்படியேற எந்த சனத்துக்குத்தான் துணிச்சல் வரும்?

இப்படி கரண்டில் சிக்கிச் செத்த முதல்ஆள் பாண்டுவோட அப்பன் உருளையன்தான். அஞ்சாறு வருஷத்துக்கு முந்தி பாண்டுவும் அவங்கப்பன் உருளையனும் இதேமாதிரி ஐப்பசி மோடத்தில் தீபாவளிக்கு முதல்நாள் ராத்திரி வேலிவெட்டான் தோட்டத்துக்கு களவுக்குப் போயிருக் கிறார்கள். அது நல்ல கொழுத்தப் பண்ணையம். கைக்கு சிக்கிய காய்கசுறுகளை ரெண்டுசாக்கு நிறைய லாவிக் கிட்டு கிளம்பறப்ப, இருடா நாலு தேங்கா தள்ளிக்கிட்டுப் போலாம் என்று சொல்லி மகனை தொலைவில் காவலுக்கு நிறுத்தி விட்டு அப்பன்காரன் தென்னையேறியிருக்கிறான். உருளையன் நல்ல தாட்டிகமான ஆள். ஒரு குலை தேங்காயை பல்லில் கடித்துக்கொண்டு இறங்குகிற வலுவுள்ளவன் என்பார்கள் அவனை. ஆனால் அன்றைக்கு உச்சிமரத்தில் காத்திருந்த சாவு அவனது உயிரை உறிஞ்சியெடுத்துக் கொண்டு சக்கையாக வீசியது கீழே.

இது தெரியாமல் அப்பனின் கால்பட்டு தென்னமட்டை தான் விழுந்துவிட்டதாக்கும் என்று இருளைப் பார்த்துக்கொண்டு காத்திருந்திருக்கிறான் மகன். நேரமாகமாகத்தான் அவனுக்கு சந்தேகம் வந்து அவர்களுக்குள் புழங்குகிற சங்கேத ஒலி எழுப்பி அப்பனை அழைத்திருக்கிறான். அப்பனிடமிருந்து மறுசத்தம் வராமல் போகவே கிலேசம் பிடித்து இருட்டிலேயே அங்கும் இங்கும் உழப்பித் தேடி கடைசியில் அப்பனின் பிணத்தைத்தான் அவனால் கண்டெடுக்க முடிந்திருக்கிறது.

கருகல் நாற்றமடிக்கிற அப்பனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வூட்டுக்குப் போய் அம்மாக்காரியை எழுப்பியிருக்கிறான். ஓசையின்றி கதவைத் திறந்தவளுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. அழுது புரண்டு அக்கம்பக்கத்தை எழுப்பிவிடக் கூடாது என்று முந்தியை சுருட்டி வாய்க்குள் திணித்துக் கொண்டாள். நடுவூட்டில் பிணத்தைக் கிடத்தி கதவை அடைத்துவிட்டு ராந்தல் திரியை ஏற்றிப் பார்த்தால் உடம்பு முழுக்க கருகிப் போயிருந்ததாம். மரத்துலயும் கரண்ட் விடுவாங்கன்னு தெரியாமப் போச்சே என்று அரற்றிக்கொண்டு அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து விடியறதுக்குள்ள வூட்டுக்குள்ளேயே குழியெடுத்து உருளையனை புதைத்துவிட்டு மூச்சுப்பேச்சில்லாமல் இருந்துவிட்டார்கள். ஏதோ பெரிய கேஸ்ல மாட்டி கடைசியில் ஊருபக்கமே வராம உருளையன் எங்கியோ தலைமறைவாயிட்டான் என்று ஊரார் பேசிக்கொள்வதை அவர்கள் இன்றுவரைக்கும் மறுக்கவேயில்லை. ஆனாலும் அப்படியிப்படி என்று விசயம் வெளியே கசியாமலுமில்லை.

உருளையனுக்கு ஆனதுபோல தனக்கு ஏதாச்சும் ஆகிவிட்டால் சாளைக்கு தூக்கிப்போகக்கூட ஒருத்தரும் இல்லையே என்று நினைத்துக் கொண்ட பொன்னி முன்பு போலிருந்தால் இந்நேரத்துக்கு அழுதிருப் பாள். இப்போதெல்லாம் கல்லே கரைந்தாலும் அவள் கண்மட்டும் கலங்குவதில்லை. எப்படியெல்லாம் சாகக்கூடாதுன்னு ஏற்கனவே செத்தவங்களப் பார்த்து உசாராயிருந்துக்க வேண்டியது தானே என்று தனக்குத்தானே தேற்றம் சொல்லிக் கொண்டு கரடு ஏறினாள்.

யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கரட்டில் விறகொடிக்க வந்தவளைப்போல ஏழெட்டை உடைத்து சிறுஞ்சுமையாய் கட்டிக் கொண்டு  திரும்பும்போது ‘என்னாடி பொன்னி கொட்டாப் பக்கம் வராமலேப் போற...’ என்ற குரலைக் கேட்டதும் அவளுக்கு இப்போதே  பிடிபட்டுவிட்டதைப் போல விலுக்கென்று மனசு பதைத்தது. மாரிக் கண்ணோட அண்ணம்பொண்டாட்டி வேடம்மாதான் பொழியைக் கடந்து வந்து கொண்டிருந்தாள். ‘இருந்த கொம்பு கோலு அல்லாத்தயும் எரிச்சாச்சு. அடுப்பெரிக்க ஏதாச்சம் பொறுக்கினுப் போலாமேன்னு இவுத்தாள வந்தேங்கா’ என்று சொல்வதற்குள் பொன்னிக்கு நாக்கு குழறியது. 

நஞ்சையும் புஞ்சையுமாக நாலுஇடத்தில் நிறக்கப் பண்ணையமுள்ள குடும்பத்துப் பொம்பளையானாலும் தன்னிடம் ஒருநாளும் ராங்கியா  நடந்துகொள்ளாத வேடம்மாளிடம் கதையடிப்பது பொன்னிக்கும் பிடித்தமானதுதான். ஆனால் இன்று கண்ணுக்கு கண் பார்த்து இயல்பாய் பேச முடியாமல் மல்லாடினாள். இன்னிக்கு ராத்திரி உன் கொழுந்தமூட்டுக் கெழங்கு காட்லதான் கைவைக்கப் போறேன் என்று தானே உளறிக் கொட்டிவிட நேருமோ என்று பொன்னி அஞ்சினாள். வேடம்மா தொண தொணவென்று பேசியதை காதில்லாவள்போல கேட்டுக் கொண்டிருந்தாள். பத்து சொல்லுக்கு ஒருவாட்டி தலையாட்டினாள் அல்லது சுருக்கமாய் பதில் சொல்லிவிட்டு மௌனம் காத்தாள். ‘ஈரத்த எடுத்துனு போய் எப்புடி எரியூடுவ? கொட்டாயாண்ட வா, நாலு குச்சி குடுத்துவுடறேன்’ என்று கூப்பிட்ட வேடம்மாளை தட்டமுடியாமல் அவளோடு போக வேண்டிய தாயிற்று.

கொல்லைக்கு மத்தியிலிருந்த வேடம்மாளின் கொட்டாய் கருப்பஞ் சோகையால் திண்ணென்று வேயப்பட்டதாயிருந்தது. ஊத்துமழைப் பெய்தாலும் ஆத்துவெள்ளம் வந்தாலும் தாங்கக் கூடியதாயிருந்த அது போன்ற ஒரு கொட்டாய் பற்றி பொன்னிக்குள் நெடுநாளாய் இருக்கிற ஆசை மோடகாலங்களில் கூடிவிடுகிறது. ஒழுகும் கூரையும் ஓதமேறிய தரையும் உள்ள சாளைக்குள் கிடந்து நடுங்குகிறவளுக்கு வேறென்ன நினைப்பிருக்கும்? வேடம்மாள் குடிக்க கடுங்காப்பியும் கடித்துக்கொள்ள பனவெல்லமும் கொடுத்தாள். கொறிப்பதற்கு கொடுத்திருந்த சோளப்பொறி மணத்துக் கிளப்பியது பசியை.

வேடம்மாள் எல்லாருக்கும் இப்படி கொடுப்பவளில்லை. ஊருக்குள் ளிருக்கிற வீட்டை பூட்டிவைத்து விட்டு கொல்லைக்குள் இந்த ஒண்டிக்கொட்டாயை போட்டுக்கொண்டு குடிவந்ததே சொந்த சாதிசனம் அண்டி விடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனாலும் பொன்னியைப் பார்த்து விட்டாளென்றால் மட்டும் வெறுங்கையோடு அனுப்பமாட்டாள். தன்னந் தனியா நின்னு சீவிக்கிற தெகிரியம் வாய்க்கப்போய்தான் இன்னிக்கு நீயும் ஒரு மனிசியா இருக்கிற... என்ற அங்கலாய்ப்போடு எதையாவது கொடுத்தனுப்புவாள்.

போடுவாரப்பன் மலைமீது ஏகத்துக்கும் இருட்டிக்கொண்டு மழை இறங்கியது. நான் போறேங்கா என்று எழுந்தவளை வேடம்மாள் நிறுத்தினாள். அங்கப்போயி ஒண்டியா உருக்குருக்குன்னு கிடக்கறதுக்கு இங்கத் தான் செத்தநேரம் இரேன்டி. காலைல கடைஞ்ச கீரை இருக்கு. களி கிண்டுறேன். நாலுவாய் போட்டுனு பொழுதெறங்கப் போவ... என்று அவள் தடுத்தபோது பொன்னி மறுப்பேதும் சொல்லாமல் நின்று கொண்டாள்.

வேடம்மாள் கொடுத்த களி விருந்தா யாசகமா என்று அவளை குழப்பியடித்தது. உள்ளவன் தின்னா மருந்து இல்லாதவன் தின்னா நரகலுங்கிற கதையாட்டம்தான் இதுவும் என்று தோன்றியது. ஆனாலும் சுடுகளியின் வெதுவெதுப்பு பொன்னியை புதுமனுசி போல ஆக்கிக்கொண்டிருந்தது. ஒரு உருண்டைக் களியில் அடைபட்டுப் போகிற இத்தனூண்டு வயித்துக்காகவா திருடப் பார்க்கிறேன் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.

களவெடுக்கும் யோசனையை விட்டுவிட்டு,  வேலை செய்து கழித்துவிடுகிறேன் என்று இவளிடமே இரண்டு வள்ளம் கம்போ சோளமோ கடனாகக் கேட்டு வாங்கி இந்த மோடத்தை ஓட்டிவிடலாமா என்றும் யோசனை ஓடியது. ஆனால் இப்படி சொல்லியும் சுத்துப்பக்க பண்ணையங்களில் அப்பப்ப வாங்கியிருக்கிற கடன் ஏழெட்டு வள்ளத்தை தாண்டியிருப்பதால் அந்த யோசனையையும் களியோடு சேர்த்து விழுங்கிக் கொண்டாள். 

வேடம்மாளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவள் ராத்திரியில் தான் வந்துபோக வேண்டிய பாதையை காலுக்கும் கண்ணுக்கும் பழக்கியபடியே சாளைக்குத் திரும்பினாள். அடிக்கடி புழங்கின பாதைதான் என் றாலும் ராவேளையில் தன்னந்தனியாக வந்து போகுமளவுக்கு அதை மனசுக்குள் பதியவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது அவளுக்கு.
***
மழை மோடம் பிடித்துக்கொண்டால் காடுகரைகளில் களவுகள் பெருகுவது சகஜம்தான். நிலம் நீச்சு உள்ளவர்களே தள்ளாடுகிறபோது கூலி நாழிக்காரர்கள் பசியடக்கும் தவசதானியங்களைத் தேடி ராவுபகலென்று பாராமல் காடுகாடாக கன்னம்வைத்து அலைய வேண்டியதாயிற்று.  மண்ணையள்ளிக் கொட்டி மரத்துப்போகச் செய்ய வயிறு ஒன்றும் குளமோ குட்டையோ அல்ல என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சூளையடுப்பு போல காந்தலெடுத்து எரியும் இந்த வயிற்றுக்குள் துருத்தி அடைக்க அசலூருக்குப் போயாவது கம்பங்கருது, ஆரியக்கருது, கடலைக்காய் என்று கைக்கு சிக்கியதையெல்லாம் பீராய்ந்து கொண்டு வந்து ஒருவேளைக்காவது சீவனம் கழித்தார்கள்.

உப்பிட்டு வேகவைத்த வெறும் முருங்கக்கீரையை மட்டும் தின்று பசியாற்றிக் கொள்கிற குடும்பங்களைப் பார்க்கிறபோது தன்பாடு தேவலாம் என்று பொன்னிக்கிருந்த நினைப்பு இந்த ரெண்டுநாளில் நமுத்துப் போயிருந்தது. இனிமேலும் தாக்குப்பிடிக்க எதுவுமில்லாத தானும் மற்ற வர்களைப்போலவே திருடித்தானாக வேண்டும் என்று தோன்றிய பிறகு தான் அவள் கிட்டத்தில் இருக்கிற மாரிக்கண்ணமூட்டு கிழங்குக்காட்டை குறிவைத்தாள். 

காலையிலிருந்து கங்கணம் கட்டி பல ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வைத்திருந்த பொன்னி கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டிருந்தது. கொடியில் உலரப்போட்டிருந்த பட்டாளத்தான் உடுப்பு காற்றில் படபடப்பதை பார்க்கும்போது எடுத்துப் போட்டுனு கிளம்பு என்கிற மாதிரியும் இருந்தது, வேணாம் வேணாம் என்று பதைக்கிற மாதிரியும் தெரிந்தது. 

சாயங்காலம் தின்ற களியில் வயிற்றின் காந்தல் தணிந்து விட்டதால் தான் களவெடுக்கும் எண்ணத்தில் இருந்த தீவிரம் குறைந்துவிட்டதோ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு படுத்தே கிடந்தாள். களவெடுக்கப் போகாமல் இருப்பதற்கான நியாயங்களை ஒரு வேலியைப் போல தனக்கு முன்னே எழுப்பி அதில் தன்னைத்தானே அடைத்துக் கொண்டு தப்பித்துவிட முடியுமா என்று பார்த்தாள்.

ஆனால் பாசத்திலோ பரிதாபத்திலோ வேளாவேளைக்கு யாராவதொரு வேடம்மாள் எதையாவது தந்து பசியாற்றிக் கொண்டிருக்கமாட்டாள் என்ற உண்மை அவளை நெரித்துப் பிதுக்கியது.

ஒருவேளை அவள் இன்னும் கொஞ்நேரத்தில் களவெடுக்கப் போகக்கூடும்.

திங்கள், பிப்ரவரி 20

ஆன்மீக வியாபாரத்துக்கும் வியாபார ஆன்மீகத்துக்குமிடையே..... ஆதவன் தீட்சண்யா

Kumaran doss book
ரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?
1. ராமாயணத்தில் வரும் லங்காபுரி, இன்றைய மத்தியப்பிரதேசத்தின் தண்டகாரண்யப் பகுதியில் ஏரியொன்றினால் சூழப்பட்டுள்ள குன்றின் மீதமைந்த பரப்பாகும். அயோத்தி தொடங்கி இப்பகுதிவரையாக வாழ்ந்த மக்களிடையே வாய்மொழி மரபில் புழங்கிவந்த பழங்கதையொன்றை தன் மொழியையும் கற்பனையும் கலந்துகட்டி வால்மீகி ‘ராமாயணமாக’ உருவாக்கினார். இயற்கைப் பேரழிவுகள், போர், வணிகம் போன்ற காரணங்களை முன்னிட்டு விந்திய மலைகளைத் தாண்டி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்ந்த மக்கள் கொண்டுவந்த கதைகளில் ஒன்றுதான் ராமாயணம். புலம்பெயர்ந்த மக்கள் அக்கதையை தங்களின் புதிய வாழிடம் சார்ந்ததாக மறுஉருவாக்கம் செய்துகொண்டார்கள்.

பிற்காலத்தில் அது இந்திய இதிகாசங்களில் ஒன்றாக கொண்டாடப்படுமென்றோ மதவாதத்தை விதைத்து இந்திய சமூகத்தை ரத்தத்தில் மூழ்கடிக்க விரும்புகிறவர்களின் கைப்பிள்ளையாக ராமன் மாற்றப்படுவான் என்றோ அப்போது வால்மீகி உட்பட யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது இந்தியா என்கிற கருத்தாக்கமே உருவாகியிருக்கவில்லை. பெரும் பிரளயம் உருவாகி உலகமே அழியும்போது ஒரு கப்பல் அல்லது தெப்பம் ஏறி தப்பிப்போகிற சிலரிடமிருந்து மீண்டும் உலகம் உருவானது என்பதான கதை உலகின் எல்லாக் கண்டங்களிலும்- எல்லா மொழியிலும்- எல்லா மதத்திலும் சொல்லப்படுவதைப் போல, இந்த ராமன் கதையும் வடக்கே மக்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

கங்கை கொண்டான், கடாரம் வென்றான், கம்மர்கட் தின்றான் என்று நம்மால் புளகாங்கிதத்தோடு குறிப்பிடப்படும் தமிழ்ப் பேரரசர்கள் தமிழ்நாட்டின் தென்முனையிலுள்ள இலங்கைத்தீவை அடிமைப்படுத்திய காலத்தில் அதை நியாயப்படுத்தியும், அதற்கொரு தெய்வாம்சத்தை நிறுவியும் வடக்கின் ராமாயணம் தெற்கின் கதையாக உல்டா செய்யப்பட்டது. கதைக்களம் லங்காபுரியிலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்தது இவ்வாறுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எப்படியாயிருப்பினும், கவிச்சக்கரவர்த்திகளும் போர்ச் சக்கரவர்த்திகளும் எங்கோ கிடந்த சனியனை இழுத்துவந்து இங்கே விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

10 ஆயிரம் செய்யுள்களைக் கொண்ட வால்மீகியின் மூலப்பிரதியானது பார்ப்பனீய இடைச்செருகல்களால் பிற்காலத்தில் 24 ஆயிரம் வரிகளாக வீக்கம் கொண்டது. ராமனுக்கு ஆஃப் டிரவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் கேம்ப்பில் நிறுத்துமளவுக்கு அவன்மீது இந்துத்துவ சாயம் ஏற்றப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால சில்லுண்டி வேலைகளையும் கழித்துப் பார்த்தால் கற்பனைத்திறம் வாய்ந்த ஒரு பழங்கதை நமக்கு கிடைக்கிறது. பாடல் அமைப்பு, மொழி அடிப்படையில் வால்மீகியின் மூலப்பிரதி பிரித்தெடுக்கப்பட்டு அதில் குறிப்பிடப்படும் ராமாயணக் கதைக்களத்திற்கும் இலங்கைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பது நிறுவப்பட்டுள்ளது.

2. இலங்கைக்கு மிக அருகாகவும் இலங்கையுடன் நீர்வழித் தொடர்பு கொண்டதுமான ஒரு மீன்பிடித்தீவு ‘ராமேஸ்வர’மாக மாறிய பின்புலங்களை குமரன்தாஸின் இக்கட்டுரைகள் பேசவில்லை. ஆனால் ராமன் வந்து வழிபட்ட சிவஸ்தலம் என்கிற புராண நம்பிக்கையின் மீது அஸ்திவாரம் கொண்டு தீவின் நடுவே 15 ஏக்கர் விஸ்தீரணத்தில் பரவியுள்ள இராமநாதசாமி கோவில் சார்ந்து ஒரு ஊராக மாறிவிட்ட ராமேஸ்வரத்தைப் பற்றியனவாக விரிகின்றன. (இப்போதும் இதுபோல இன்னும் சில புராண, இதிகாச நகரங்களை உருவாக்கும் திட்டம் சங்கபரிவாரிடம் உண்டு. இன்றைய பரூக்காபாத்தில்தான் முன்பு பீஷ்மர் பிறந்தார் என்றும் ஆகவே அதை பீஷ்மநகர் என்று பெயர் மாற்றுவது, சரஸ்வதி நதியை செயற்கைக்கோள் வழியே கண்டறிந்து அதை மீண்டும் உருவாக்குவது என்று அதன் பட்டியல் மிக நீளமானது. இந்தியாவின் கணக்குத் தணிக்கை அதிகாரியாயிருந்து பின் பா.ஜ.க. எம்.பியான யாரோ ஒரு திரிவேதியோ சதுர்வேதியோ, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இதுதான் திரௌபதி குளித்த குளம் என்று ஒரு மொட்டைக்குளத்தை புனருத்தாரணம் செய்த கதையை ‘ஆர்கனைசரில்’ படித்திருக்கிறேன். )

மக்களின் ஞாபகங்களிலிருந்தும் அவர்களது அன்றாட வாழ்வியல் செயற்பாடுகளுக்குள் பொதிந்திருக்கும் தரவுகளைக் கொண்டும் ஒரு ஊரின் வரலாறு எழுதப்படுமானால் அது எத்தகையதாய் இருக்கும் என்பதற்கான கைச்சான்றாக இருக்கிறது இந்நூல். தலபுராணங்கள் என்ற கட்டுக்கதைகளில் ராமேஸ்வரம் தீவின் மீது கவிந்திருக்கும் தெய்வாம்சங்களை விலக்கி அந்த மண்ணுக்கேயுரிய மீன்கவிச்சியை முதன்முதலாக நுகரவைத்திருக்கிறார் குமரன்தாஸ்.

ராமேஸ்வரம் தீவின் நிலவியல், அதன் மக்கள் யாவர், அவர்களது வாழ்முறை என்ன, பூர்வகுடிகளாகிய மீனவர்களின் இன்றைய இருப்பின் நிலை குறித்தெல்லாம் நுணுக்கமாக பேசும் கட்டுரைகள், இத்தீவு குறித்து எங்கும் விவாதிக்கப்படாத கருத்துகள் பலவற்றை முதன்முதலாக துணிந்து பேசுவதாயுமிருக்கின்றன. பூர்வகுடிகளாகிய மீனவர்கள் உழைப்பை நம்பி வாழ்கிறவர்களாகவும், அதேவேளையில் அம்மண்ணை ஆக்ரமித்த வெளியாட்கள் (சமவெளி மனிதர்கள்- கடல்புரம் சாராதவர்கள்) வெகுமக்களை ஏமாற்றுகிறவர்களாகவும், மூடநம்பிக்கைகளை தக்கவைப்பவர்களாகவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருக்கின்ற முரணை வாசிக்கும்போது ராமேஸ்வரம் தீவு ஒரு புதுவகை காலனீயத்தால் பங்கிடப்பட்டுவிட்டதைப் போலிருக்கிறது. இந்த தீவுக்கும் அது சார்ந்த மீன்பிடித் தொழிலுக்கும் யாதொரு தொடர்புமற்ற இந்த சமவெளி மனிதர்கள் தீவை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டுள்ள சூதினை விவரிக்கும்போது அதில் சாதியம் வகிக்கும் பங்கு நம்மை அச்சமடைய வைக்கிறது.

ஒரு கோவிலுக்குள் ஒரு சாதியின் இடமாக எது இருக்கிறதோ அதுவே ஊருக்குள் அச்சாதியின் இடத்தையும் அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. அவ்வடிப்படையிலேயே கோவிலைச் சுற்றிய முதல்வட்டத்தில் பார்ப்பனர் தொடங்கி அடுத்தடுத்த வட்டத்தில் பிற சாதியினர் வசிப்பது என்ற தமிழக/ இந்திய ஊர்களின் நியமத்திற்கு ராமேஸ்வரமும் விதிவிலக்கானதல்ல என்பதை நிறுவுகிறார். இங்குள்ள ராமநாதசாமி கோயிலை மையமிட்டு சமூக, பொருளாதார அதிகாரப் பகிர்வுகள் நடைபெற்றிருப்பதை வரலாற்றுப்பூர்வமாக விவரிக்கிறார் குமரன்தாஸ்.

பார்ப்பனர்களிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் கேரள நம்பூதிரிகளை இந்த ராமநாதசாமிக் கோயிலின் குருக்களாக நியமிப்பதற்காக, அதுவரை பூசாரிகளாயிருந்த பண்டார சன்னிதிகள் என்ற வீரசைவர்கள் கோவிலுக்குள்ளிருந்து பூக்கட்டும் தொழிலுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். சேதுபதி மன்னர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, மராட்டிய பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டு நம்பூதிரிகள் கைவிடப்பட்டனர். கருவறைக்குள் நுழைய அதிகாரம் பெற்ற ஒரே சாதியினர் இந்த மராட்டிய பார்ப்பனர் மட்டுமே. இக்கோயிலைப் பொறுத்தவரை தமிழ்ப்பார்ப்பனர் தீண்டத்தகாதவர். எனவே அவர்கள் மராட்டியப் பார்ப்பனர்களின் அல்லக்கைகளாக இருந்து பூசைக்கும் திவசங்களுக்குமான எடுபிடி வேலைகளை செய்து வருகின்றனர்.

சமூகத்தை மாசுபடுத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கடலையும் மாசுபடுத்தி காசுபறிக்கும் உத்திகள் பலவற்றை உலவவிட்டுள்ள பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து பலபட்டறை இடைநிலைச்சாதிகளும் செயல்படும் களமே இத்தீவு என்பதற்கான ஆதாரங்கள் வரிக்குவரி கிடைக்கின்றன. வருமானத்தையும் அதிகாரத்தையும் பகிர்ந்துகொள்வதற்காக, கோவிலுடன் தொடர்புடைய குருக்கள், பாராக்காரர் போன்ற வேலைகளைப் பெற்றிட பெருந்தொகை கையூட்டாக செலவிடப்படும் செய்தியை வாசிக்கும்போது இங்கு இறைப்பணி என்று ஒரு வெங்காயமும் இல்லை என்பது புரிகிறது. கோவில் மற்றும் சுற்றுலா சார்ந்த யாத்திரைப் பணியாளர்களாக தலித்துகள் எவரும் அனுமதிக்கப்படாத தீண்டாமைக் கொடுமையையும் நூலாசிரியர் கவனப்படுத்தியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலும் செய்து வாழலாம் என்கிற பசப்பான வார்த்தைகளின் போலித்தனம் மீண்டும் இங்கே அம்பலமாகிறது.

இத்தீவில் இருக்கும் பார்ப்பனர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் வருமானமும் வாழ்வாதாரமும் கோவில் சார்ந்ததாகவே இருக்கும் நிலையில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதையை மீட்டுவரும் ராமனின் நடவடிக்கைகளோடு தொடர்புடைய ஏராளமான கட்டுக்கதைகள் மிகுந்த நம்பகத்தன்மை உள்ளதுபோல இங்கே புழக்கத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ராமனுடன் தொடர்புபடுத்தப்படுவதால் வடநாட்டிலிருந்து புனித யாத்திரை வரும் எளிய மக்கள் அப்பொருட்களை வெறும் பொருட்களாக மட்டுமே பாவித்து வாங்கிச் செல்வதில்லை. மாறாக, ராமன் என்கிற தெய்வத்தின் அம்சங்களாகவே போற்றுகின்றனர். எனவே தன் படையணிகளோடு இலங்கையைப் பார்த்து கையுயர்த்தும் ராமனின் புகைப்படத்தை விலைகொடுத்து வாங்கிச் செல்கிற ஒருவர், போர் இன்னும் முடியவில்லை என்ற ராமனின் செய்தியையும் சுமந்து செல்கிறார் மனதில்.

அச்சு இயந்திரம் வெகுஜன புழக்கத்திற்கு வந்த இந்த 100 ஆண்டுகளில் இந்த புகைப்படத்தின் கோடிக்கணக்கான பிரதிகளை- அதன் செய்தியோடு வாங்கிச் சென்றிருக்கிற எளிய வடஇந்தியர்கள்தான், ‘ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம்’ என்று சேதுக்கால்வாயைத் தடுக்கிற இந்துத்வாவின் பின்னே பலமான சக்தியாக அணிதிரள்கின்றனர் என்கிற நுண்ணரசியலைப் பேசுகிறார் குமரன்தாஸ்.

ஒரு புகைப்படம் சமூகத்தின் ஆழ்மனதில் உருவாக்கும் இந்த அபாயகரமான விளைவை உணரும்போதுதான், இன்றைக்கு ஆளும் வர்க்கத்தின் ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி மற்றும் காட்சிரூபமான கருத்துகளின் பிடியிலிருந்த உழைப்பாளி மக்களை மீட்டெடுப்பதற்கான கருத்தியல் போராட்டம் எவ்வளவு வீச்சோடு நடத்தப்பட வேண்டும் என்பது உறைக்கும். காட்சி ஊடகம் சமூகத்தின் மீது தன் பிடியை இறுக்கிவரும் இந்நாளில், தொலைக்காட்சிகளில் வரும் புராணத்தொடர்களும், தேர்தல்கால பிரச்சாரப்படங்களும் ஆளும் வர்க்கத்தின் தற்காலிகத் தேவைகளை மட்டுமே நிறைவுசெய்யக்கூடியவை அல்ல. அவை மக்களை கருத்தியல்ரீதியாக தம்பக்கம் சாய்த்துக் கொள்வதில் தொடர் வெற்றியை ஈட்டிக்கொண்டுமிருக்கின்றன. ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை மேலெடுத்துச் செல்ல விரும்பும் எவரொருவரும், தமது மரபுவழிப்பட்ட பிரச்சாரக் கருவிகளை விடுத்து தமது தேவைகளை நிறைவேற்றும் புதிய நிலைகளை எய்த வேண்டியுள்ளது என்பதையும்கூட இந்த ‘புகைப்பட’ அரசியல் நமக்கு உணர்த்துகிறது. அல்லது ஒரு சாதாரண புகைப்படத்தையே உண்மை என்று நம்பிவிடக்கூடிய எளிய மக்களிடம் நாம் இதுவரை எதைக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியாவது எழுகிறது.

4. இன்றைய இலங்கையையே ராமாயணக் களமாகக் கொண்டாலும் ஒரு தர்க்கம் இடிக்கிறது. ராமனும் அவனது குடும்ப உறுப்பினர்களாகிய சீதையும் இட்சுமணனும் தங்கியிருக்கிற பர்ணசாலை அமைந்திருக்கும் காட்டுப்பகுதிக்குள் இலங்கையிலிருந்து எல்லைதாண்டி முதலில் நுழைந்தவள் சூர்ப்பனகை. அவள் மூக்கறுபட்டதும் ரத்தம் சொட்டச் சொட்ட தன் சகோதர்களிடம் சொல்வதற்காக மீண்டும் இலங்கை போகிறாள். ராம லட்சுமணர்களிடம் சண்டைபோட அவளது சகோதரர்கள் 14 கிங்கரர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் கொல்லப்பட்டதையறிந்து சகோதரர்களே நேரடியாய் வருகிறார்கள். அவர்களும் கொல்லப்பட்ட பின்புதான் தன் மூத்த அண்ணன் ராவணனிடம் சென்று முறையிடுகிறாள். ராவணனும் கிளம்பி வந்து சீதையை சிறையெடுத்துப் போகிறான். சீதை இலங்கையிலே இருப்பதை ராமனின் பக்தனான அனுமன் நேரில் கண்டுவருகிறான் அசோகவனத்தில்.

ஆக, பர்ணசாலை இருந்த காட்டுக்கும் இலங்கைக்கும் ‘அத்தை வீட்டுக்கும் கட்டைப் புளியமரத்துக்கும்’ போய் வருவதைப்போல அடிக்கடி போகவர இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் எப்படி நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி போய்வர முடிந்தது எனக் கேட்டால் ‘புஷ்பக விமானத்தில்’ பறந்து வந்ததாக கதைவிடுகிறார்கள். ‘ஒரு கதையில் வில்லி, அவளது அண்ணன்களான வில்லன்கள், ஏவலர்களான கிங்கரர்கள், மெயின் வில்லன் ராவணன், ராமபக்தன் அனுமன் என்ற சாதாரணர்கள் எல்லாம் ஃபிளைட்ல பறக்கறப்ப, எல்லாம் வல்ல - கதாநாயகன் ராமன் மட்டும் ஏன் பாலம் கட்டித்தான் இலங்கைக்குப் போவேன்னு அணிலைக் கூட்டிக்கொண்டு மணல் அள்ளத் திரியணும்?’ என்று புதுகை பூபாளம் கலைக்குழுவினர் கேட்கிற அர்த்தம் பொதிந்த கேள்வியை இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டும்.

சீதையை சிறையெடுக்க ராவணன் சகட வண்டியேறி (மட்டக்குதிரை அல்லது கழுதை பூட்டிய வண்டி) போனான் என்ற குறிப்பை வசதியாக பின்தள்ளிவிட்டு அவனை புஷ்பக விமானத்தில் ஏற்றிவிட்டார்கள் புரட்டர்கள். அணிலையும் குரங்குகளையும் சித்தாளாக வைத்துக்கொண்டு தானே கொத்தனாராக இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிய ராமன் திரும்பும்போது பாலத்தைப் பயன்படுத்தவில்லை. ராவணனின் புஷ்பக விமானத்தில் தான் திரும்புகிறான். வழியில் பரத்வாஜ முனிவரிடம் ஆசிபெறுகிறார்கள் ராமன் அண்ட் கோ. செல்லும் வழியில் நிழலும் நீரும் கனியும் கிடைப்பதாகுக என்று ஆசி கூறுகிறார் முனிவர். விமானத்தில் செல்கிறவர்களுக்கு நிழலும் கனியும் தரும் மரங்கள் ஆகாயத்தில் விளைந்திருக்குமா என்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை இவ்விடத்தில் எழுப்பினால், கதையில் அப்படியெல்லாம் வரும் என்பார்கள். சரி, கதைதானே இது, அப்புறம் ஏண்டா உண்மைபோல சித்தரித்து உயிரை வாங்குகிறீர்கள் என்றால் அது எங்கள் நம்பிக்கை என்பார்கள். இந்த நம்பிக்கைகளின் அத்தனை கெடுவிளைவுகளையும் தாங்கியழியும் இடமாக ராமேஸ்வரம் மாற்றப்பட்டுள்ளது.

போஜனாலயாக்களையும் இன்னபிற வணிகநிறுவனங்களையும் நடத்தி வருகிற மார்வாரிகளுக்கும், மடங்களின் தலைவர்களுக்கும், பூசை திவசமென்று தினமும் ஆயிரக்கணக்கில் தேற்றும் பார்ப்பனர்களுக்கும் யாத்திரைப் பணியாளர்களாகிய இடைநிலைச் சாதியினருக்கும், மக்களை ஏமாற்றிச் சுரண்ட ஆதம் பாலம் எனப்படும் அந்த மண்திட்டு ‘ராமர் பாலமாக’ நீடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. எனவே அவர்கள் சேதுகால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்துத்வாவின் இயல்பான கூட்டாளிகளாக இருக்கின்றனர்.

எங்கோ உருவான ஒரு கதையை இங்கே நடந்த உண்மையென சொல்லிக் கொண்டு நடந்துவரும் ஆன்மீக வியாபாரமும், வியாபார ஆன்மீகமும் படுத்துவிடக்கூடாது என்ற குயுக்தியை அம்பலப்படுத்தி இந்த பாலம் குறித்த அறிவியல்பூர்வமான அல்லது ஆய்வுநோக்கிலான உண்மைகளை மக்களிடையே கொண்டு சென்றால் அவர்களது மதஉணர்வு புண்படும் என்று மதச்சார்பற்றவர்களும் அறிவுத்துறையினரும் காட்டும் சுணக்கத்தின் விளைவாக ராமாயணம் என்ற ஒரு கதை, இந்த நாட்டின் வரலாறாகவும், ராமன் ஒரு தேசிய வீரனாகவும் முன்னிறுத்தப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ராமன் அவதாரப்புருஷன் என்றால் அவனது கால்பட்டதால் புனிதமடைந்தவிட்ட இத்தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடி ஏன் கடல்கோளுக்கு ஆளாகியது என்கிற கேள்வியைக்கூட நாம் எழுப்புவதில்லை.

இந்துத்துவக் கொட்டத்தை முறியடிப்பதில் ஆளுங்கட்சிகளுக்குள்ள ஊசலாட்டமான அணுகுமுறை காரணமாக இன்று ‘ராமர் பாலத்திற்கு சேதாரமில்லாத மாற்றுப்பாதை’ பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளதற்கும் இந்நூல் கண்டனத்தை பதிவு செய்கிறது. சேதுகால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னுள்ள வகுப்புவாத அரசியலை எதிர்க்கும் பொருட்டு திட்டத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு குமரன்தாஸ் சென்றாலும், திட்டத்தால் விளையும் சுற்றுச்சூழல் சார்ந்த சீர்கேடுகள் குறித்த கவலையையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துகிறார். இவ்விமர்சனம், மீனவர் நலன் சார்ந்த நிலையிலிருந்தும் எழுகிறது.

சேதுகால்வாய்க்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசிக்கொண்டிருக்கும் யாரும் அத்தீவின் பூர்வகுடிகளாகிய மீனவர்களின் கருத்துகளை பொருட்படுத்தத் தயாரில்லாதது குறித்து கவலையை வெளிப்படுத்தும் நூலாசிரியர், இப்பகுதி மீனவர்களின் மேம்பாட்டிற்கான ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை முன்வைத்திருக்கிறார். கடல்சார் தொழிலாளர்களான மீனவர்களும், படகோட்டிகளும், சங்கு எடுப்பவர்களும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதை வெளிக்கொண்டு வந்ததன் மூலம், அவர்கள் மீதான தொழிற்சங்க இயக்கங்களின் முனைப்பான தலையீட்டையும் இந்நூல் கோருவதாயிருக்கிறது. மீன்பாடு இல்லாக் காலங்களில் சீவனத்துக்கு சிரமப்படும் மீனவர்கள் கடுமையான கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதிலிருந்து அவர்களை மீட்பதற்கும் கண்ணியமானதொரு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் குமரன்தாஸ் முன்வைக்கும் திட்டங்கள் பயனளிக்கக்கூடும்.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும் அதன் பிள்ளைகளாகிய பழங்குடிகள் அன்னியப்படுத்தப்படுவதைப் போல கடலின் பிள்ளைகள் அதனிடமிருந்து விலக்கப்படும் நிலை குறித்த விசாரணைகள் இந்நூலை முன்வைத்து நடத்தப்பட வேண்டும். கடல் சார்ந்து வாழ்வதன்றி வேறொன்றை கனவிலும் நினைக்கவியலாத மீனவர்களை அவர்களது பாரம்பரிய வாழ்முறை என்ற அளவில் மீன்பிடித் தொழிலிலேயே முங்கிக் கிடக்க விடுவதா அல்லது மாற்றுத் தொழில் பயிற்சி மூலமாக அதிலிருந்து விடுவிப்பதா என்கிற கேள்வியை அவர்களுக்கு வெளியே இருந்து எடுக்க முடியாது. ஆனால் இது குறித்த தீவிரமான விவாதம் மீனவச் சமூகத்திற்குள் நிகழ்வதற்கான வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

கடல் கறுப்பா சிவப்பா என்றுகூட அறியாதவர்கள் எங்கோ இருந்துகொண்டு எல்லைகளை வகுக்குறார்கள். ஆனால் இலங்கை, இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடலெல்லைகளைத் தாண்டி மீன்பிடிப்பது இயல்பாக கொண்டிருந்திருக்கின்றனர். கடலுக்கு புறத்தே மாறிய அரசியல், கடலையும் மீனவர்களையும் சேர்த்தே பாதிப்படைய வைத்திருக்கிறது. கச்சத்தீவை மீட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கரையிலே நின்று முண்டா தட்டுகிறவர்கள் கடலைப் பகிர்ந்துகொண்ட மீனவர்களைத் துண்டாடிவிட்டார்கள் என்பதை உணர முடிகிறது.

1988ல் இந்திராகாந்தி பாலம் திறக்கப்பட்ட பிறகு கடலுக்கும் மீன்பிடி தொழிலுக்கும் எவ்விதத்திலும் தொடர்பற்ற சமவெளி மனிதர்கள் ராமேஸ்வரம் தீவுக்குள் நுழைந்து ஆக்கிரமிக்கும் போக்கு வேகமெடுத்தது என்பதை வாசிப்பினூடாக உணரமுடிகிறது. மட்டுமன்றி தென்மாவட்டங்களில் தலித்துகளான பள்ளர்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வந்த நிலையில் 1980களின் பிற்பகுதியில் ஜான்பாண்டியன், மரு.கிருஷ்ணசாமி போன்றவர்களின் தலைமையில் அவர்கள் எழுச்சி பெற்று திருப்பியடிக்கத் தொடங்கியதும், தாக்குபிடிக்க முடியாத மறவர் போன்ற இடைநிலை ஆதிக்கச்சாதியினர், பள்ளர்கள் இல்லாத பகுதியான ராமேஸ்வரம் தீவுக்கு தப்பியோடி வந்துவிட்டனர் என்ற மிக முக்கியமானதொரு மாற்றம் இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மணற்பாங்கான இந்நிலப்பகுதிக்குள் விவசாயம் நடைபெறுவதில்லையாதலால் வேளாண்குடிகளான பள்ளர்கள் அனேகமாக இத்தீவில் இல்லை என்பதும் நுணுகியப் பார்வையிலிருந்து கிடைக்கும் தகவல்தான்.

காரணம் என்னவாக இருந்தாலும், சமவெளி மனிதர்கள் இத்தீவின் கடல்சார் பூர்வகுடி மக்களை ஆதிக்கம் செய்கிறவர்களாக தங்களை வலுவடையச் செய்துகொண்டதும், மீன்பிடித்தொழிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுமாகிய கேடு நிகழ்ந்துவிட்டது. கிறிஸ்தவர்களான பரதவர்களை சுரண்டுவதும் அடக்குவதுமாகிய தங்களது இழிநோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இந்த வெளியாட்கள் இந்துத்துவ அமைப்புகளில் அணிதிரண்டிருப்பது தற்செயலானதல்ல. கோவிலை மையப்படுத்தி ராமேஸ்வரம் தீவு முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்துத்துவ வெறியர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அங்கு பிற ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதையும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பதையும் சற்றே பதற்றத்துடன் உள்வாங்க வேண்டியுள்ளது. அங்கிருக்கும் இஸ்லாமியர்கூட, தான் இஸ்லாமியர் என்று எளிதில் பிரித்தறிய முடியாதபடி அடையாளமழித்துக் கொண்டவராகவே இருப்பார் என்ற செய்தியை படிக்கும்போதுதான், அப்துல்கலாம் சங்கரமடத்துக்கு செல்வதின் சூட்சுமம் பிடிபடுகிறது.

இப்படி கடலைப்போலவே ஆழமும் விரிவும் கொண்டதாகி அலையலையான விவாதங்களைத் தூண்டும் தன்மையுடையதான இந்நூலுக்கு கடல்சார் வாழ்வின் நுட்பங்கள் அறிந்த வேறொருவர் முன்னுரை எழுதியிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் என்றே கருதுகிறேன். எனவே இதை முன்னுரையாக பொருட்படுத்தாது, ஒரு வாசகனின் பகிர்வாக கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

(நூல் வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி-74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 5. பக்கங்கள்: 96. விலை ரூ.50)

ஞாயிறு, பிப்ரவரி 19

அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும் -ஆதவன் தீட்சண்யா

ம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக்கொள்கிறோம். கருத்தியல்ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் நடைமுறையில்- சொந்த வாழ்க்கையில்- சாதியத்தைக் கடக்கத் துணிந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும் நேரம் வந்துவிட்டது. சாதிக்கெதிரான போராட்டம் என்றதும் தொழிற்சங்க நடவடிக்கையைப்போல கூட்டாக சேர்ந்து ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ நடத்தி சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது அறிவுக்கொவ்வாத அணுகுமுறை. தமக்குள் இருக்கிற சாதிய சிந்தனைகள் குறித்து குற்றவுணர்ச்சி கொள்வது, அச்சிந்தனைகளிலிருந்து விடுபடுவது, சகமனிதரிடம் தீண்டாமை பாராட்டாமல் இருப்பது, எல்லா நிலைகளிலும் சாதியை மறுப்பது, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்கிறபோது தன்னொத்தவர்களோடு இணைந்து போராடுவது- என தனிப்பட்ட வாழ்வில் சாதியத்திற்கெதிரான போராட்டம் மலைப்பூட்டும் வகையில் பெரும் சவாலாக நம்முன் நிற்கிறது. 

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒட்டடையடித்துவிடலாம் என்று நினைப்பதை போல, ஒருவார காலம் விடுப்பெடுத்துக்கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சமத்துவத்திற்காகப் போராடுவதென்பது நமது இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல் நமது வாழ்வியல் நெறியாக- நமக்குள்ளிருக்கும் இயல்பானதொரு உணர்வாக மாறவேண்டியுள்ளது. 

நமக்குள் நிகழ்த்திக்கொள்ள வேண்டிய இந்த உள்முகப் பயணத்திற்கு உதவும் பொருட்டே இந்த கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான சொற்பொழிவின் பெயரால் எல்லாப் பேச்சுக்களையும் ‘செவியின்பமாகவோ, செவிக்குணவாகவோ’ சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கு மிகவும் அபாயகரமானது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக்கூடியது. எனவே ஒரு தீவிரமான உரையாடலுக்கும் விவாதத்திற்குமாக நமது சந்திப்புகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

2.
கலை இலக்கியம் என்பவை மனிதமனத்தின் வெளிப்பாடுகள். மனிதமனமோ சமூகத்தின் விளைபொருள். இந்த விளைபொருளுக்கான நிலமாகவும் விதையாகவும் உரமாகவும் சமூகச்சூழலே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள சிலருக்குத் தயக்கம் இருக்கிறது. எதன் சாயலும் படியாத ஒரிஜனல் சரக்கு என்று தமது சிந்தனைகளையும் அதிலிருந்து பிறக்கிற படைப்புகளையும் உருவகித்து வைத்திருக்கும் ‘சுயம்புகளான’ இவர்களுக்கு, அவை சமூகத்தின் விளைபொருள் என்று ஒப்பமுடியாமல் போவது இயல்பானதுதான். ஆனால் இப்படி ஒவ்வாமை கொள்கிறவர்கள் நடைமுறையில் தங்களது மறுப்பை நிறுவ எந்தவொரு சான்றாதாரத்தையும் முன்வைக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர். 

சமூகம் என்கிற பெரும்பரப்புக்குள் தான் யார்? அந்த பெரும்பரப்பு தனக்குள் எவ்வாறு வினையாற்றுகிறது? சகமனிதரோடு தனக்கிருக்கும் உறவு சமத்துவமானதா? மேல்கீழ் படிநிலை கொண்டதா? அசமத்துவம் நிலவுகிறதென்றால் அதற்கான அடிப்படை என்ன? அந்த அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கவும் எதிர்க்கவும் உள்ள நியாயங்கள் என்னென்ன என்று மனித மனம் ஓயாமல் தனக்குள் ஓர் உள்முகத்தேடலை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தத் தேடல் குறித்த பதிவுகளே கலை இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.

அப்படியானால் கலை இலக்கியம் குறித்த மதிப்பீடானது இந்த சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நம்மை தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்கிறது. எனவே இங்கு சமூகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்தே எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது.

இந்தியச் சமூகம் ஒன்றாக இல்லை. அது தீண்டப்படுவோர் இந்தியாவாகவும் தீண்டப்படாதோரின் இந்தியாவாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. பிரிந்திருக்கிறது என்றால் - அது வெறுமனே நிலவியல் ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இணக்கம் காணமுடியாதபடி பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை - இடைவெளியை இட்டுநிரப்ப எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் உள்வாங்கிச் செரித்துவிட்டு காலத்திற்கேற்ற ரூபங்களில் மீண்டும் மீண்டும் நீடித்து நிற்பதாயிருக்கிறது இந்தப் பிரிவினை என்று அம்பேத்கருக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

தீட்டு-புனிதம், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பதற்கான விளக்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒன்று புனிதமாக- நல்லதாக- உயர்வாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற நிலையில் மாற்றமேதுமில்லை. எனவேதான் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. நிலவும் இந்த உண்மைக்கு யார் அல்லது எது மூலகாரணமாய் அமைந்திருக்கக்கூடும் என்று தேடப் புகுந்தால் அது ஆதிக்க சாதியினரை குற்றம் சாட்டக்கூடும் என்ற பதற்றத்தில் இந்தியாவை ஒரே நாடாக - ஒன்றுபட்டு வாழும் ஒரு சமூகமாக முன்னிறுத்துகிற மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடிக்கு சற்றும் குறையாததுதான் மொழிவழி தேசியமும்.

ஆகவே இந்திய, தமிழ்ச்சமூகத்தின் மனநிலை நெடுங்காலமாகவே ஒடுக்குகிற அல்லது ஒடுங்குகிற நிலைக்குதான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. சகமனிதனை சமமாக கருதுகிற மேன்மையான குணம் அதற்குத் தெரியாத ஒன்று. சமத்துவவுணர்வை ஒருபோதும் துய்த்திராத அந்த மனம்- அதனாலேயே சுதந்திரவுணர்வையும் துய்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தத்தமது சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புகளிலும் தலையாயதாய் நிறுவப்பட்டிருப்பதால் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையிலேயே வாழ வேண்டியராயிருக்கிறார். சற்று அயர்ந்தாலும் மோசம் போய்விடுவோம் என்ற பீதியில் உறைந்துகிடக்கும் ஒருவரது மனநிலை அழுத்தம் தாளாது நிலைபிறழ்ந்து தம்மைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாற்றாரைத் தடுக்க அமைக்கப்பட்ட இந்த தடுப்பரணுக்குள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிலை.

எனவே இந்திய- தமிழ்ச் சமூகத்தின் மனம், பாரபட்சங்களையும் புறக்கணிப்பையும் அநீதியாக பார்ப்பதற்குத் துணிவதில்லை. அம்மாதிரியான அநீதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதும் அதை சகமனிதர்மீது நிகழ்த்திப் பார்க்கத் துணிவதாயுமே இருக்கிறது. அசமத்துவத்தை, ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிற இந்த மனநிலைதான் - சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற- அதன் காரணமாகவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களிலும் ஒடுக்கப்படுகிற- தலித்துகளையும்கூட, தமக்குள் உட்சாதிப் பிளவுகளை பேணுவதிலும் தம்வீட்டுப் பெண்களை ஒடுக்குவதிலும், இழிவாக- தம்மிலும் கீழானவர்களாகக் கருதுவதற்கு நெட்டித்தள்ளுகிறது.

இந்தப் பின்புலத்தோடு கலைஇலக்கியத்தை மதிப்பீடு செய்யப் புகுந்தால் அங்கும் அசமத்துவமான பிரதிநிதித்துவமும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஊடாடி வழிநடத்தும் சாதிய/ பால்நிலைச் சாய்மானமும் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைகளை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தினராய் இருக்கிற ஒருவர் தம் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து எதை- ஏன்- எப்படி- எதற்காக வெளிப்படுத்த முன்வருகிறார் என்ற தொடக்கப் புள்ளியிலேயே அவரது சாய்மானமும் உள்ளுறையாக இணைந்துவிடுகிறது. தன் படைப்புமனதை வெளிப்படுத்த அவர் வாய்மொழி மரபைத் தெரிவு செய்கிறாரா அல்லது எழுத்துவழியாக வெளிப்படுத்துகிறாரா என்பதிலும்கூட அவரது சாய்மானம் இணைந்தே இருக்கிறது. அதாவது இந்த நாட்டில் கல்வி கற்கும் உரிமை யாருக்கு எப்போது கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதோடு அது தொடர்புடையதாய் அமைகிறது.

ஆனால் இப்படி சொல்கிறபோது சிலர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் தவ்விக் குதிக்கிறார்கள். இலக்கியமும் கலைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்று கழுத்துநரம்பு புடைக்க கர்ஜிக்கிறார்கள். அப்படி இருந்தால் சரிதான் நண்பர்களே. ஆனால் இல்லை என்பதுதானே எதார்த்தம்? நிலம் நீர் காற்று ஆகாயம் பணம் காசு பண்டம் அனைத்தையும் சாதிப்பாஷாணத்தில் தோய்த்து தொங்கவிட்டிருக்கிற இந்த சமூகத்தில் இலக்கியம் மட்டும் எப்படி எல்லோருக்கும் பொதுவாய் இருக்கமுடியும் என்ற எளிய கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. இளமையில் கல் என்ற அவ்வையின் மரபும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற வள்ளுவர் மரபும் அழித்தொழிக்கப்பட்டு கற்கும் உரிமையை சில சாதிகளின் ஆண்களுக்கு மட்டுமே வார்த்துக்கொடுக்கும் நிலை உருவாகி நிலைத்து நின்றுவிட்ட இச்சமூகத்தில் கல்வியோடு மிகநேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் கலையும் இலக்கியமும் எல்லாவற்றிலிருந்தும் விலகி சுயம்புவாக எப்படி வெளிப்பட முடியும்?

மொழி எல்லோருக்கும் பொதுவென்றால் ஏன் சமஸ்கிருதம் மட்டும் தேவபாஷையாக அறிவிக்கப்பட்டது? நமஸ்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லை பொற்கொல்லர்கள் உச்சரிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசிடம் மனுபோட்டு தடையுத்தரவு பெறப்பட்டது எதனால்? இழிசனர் வழக்கென்ற பதம் எதன்பொருட்டு உருவானது? இசை புனிதமென்றால் இசைக்கருவிகளும் புனிதம்தானே? எனில் ஏன் திருவையாற்றில் ‘நன்னா வாசிக்கிறவாள்’ ஒருத்தரும் பறையைத் தொடுவதில்லை? இந்தியாவின் தமிழகத்தின் செவ்வியல் மரபின் கலை வடிவங்களாக முன்னிறுத்தப்படுபவை எந்த சாதிக்குரியவை? கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் பெயரால் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறவை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குரியவையா? பார்ப்பனர்களின் அனைத்தும் பார்ப்பனர்களின் கைச்சரக்குகள் அனைத்தும் தேசிய கலைவடிவங்களாக அந்தஸ்துப்படுத்தப்படுவதும், பார்ப்பனரல்லாதவர்களின் கலைவடிவங்களை ‘எதினிக்’ அல்லது‘ ‘ஃபோ(ல்)க்’ என்றோ வகைப்படுத்தப்படுவதும் தற்செயலான நிகழ்வுகளா?

இப்படி எல்லாமே சாதியாகத்தான் இருக்கிறது. இதற்குள் இருக்கிற படைப்பாளியும் சாதிவயப்பட்டவராகவே இருக்கிறார். அவர் அறிந்தவற்றை தன் படைப்பாக வெளிப்படுத்துகிறார் என்றால் அவர் அறிந்திருப்பதெல்லாம் அவரது சாதி கற்றுக் கொடுத்ததைத்தான். அவரவர் சாதி அவரவருக்கு விதித்த வரம்புகளை மீறி எழுதவும் பேசவும் ஒருவர் இயல்பாக முயற்சிப்பதில்லை. (மிகுந்த அரசியல் விருப்புறுதி கொண்ட விதிவிலக்கான சிலரை இங்கே பொருட்படுத்தி பேசவேண்டியிருந்தாலும் அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.)

தன் சாதி பிறரை என்னவாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறதோ அந்த பொதுப்புத்தியிலிருந்து தன்னை ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக்கொண்டு வெளியேறாமல்- அப்படி அறுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியையும் வாதையையும் வாய்விட்டுக் கதறி வெளிப்படுத்தத் துணியாமல்- நிலவும் சூழலை நியாயப்படுத்துகிற ஒருவரிடமிருந்து- அவர் கொம்பாதி கொம்பு படைப்பாளியாயிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படுகிற படைப்புகளை- அவை எத்தனை உன்னதமானதென்று உலகம் கொண்டாடினாலும் - அவை காகிதத்திற்குக் கேடானது என்பதே என் கருத்து.

எனவே இதுவரையான கலைஇலக்கியப் படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்துகிற ஒரு தலித் மனம் அவற்றை தன் அகநிலை சார்ந்தே அணுகுகிறது. அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை எவருடையது? அதில் தலித்துகள் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா? இடம் பெற்றுள்ளனர் என்றால் எவ்வாறு? என்றெல்லாம் அது படைப்புகளை பரிசீலிக்கிறது. பொத்தாம்பொதுவானதென்று நீங்கள் அறிவித்துக் கொண்ட எல்லாமே போலியானவை. அவை உங்கள் சாதிப் பெருமிதங்களை- சகமனிதரை ஒடுக்குவதற்கான நியாயங்களை- ஒடுங்கிக்கிடக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிக்கவே கைக்கூலிச் சரக்குகளாக சந்தைக்கு வந்துள்ளன என்று கடைசியில் அறிவிக்க வேண்டியதாயிற்று. இப்படி உருவானதுதான் தலித் விமர்சன மரபு.

3.
இதுவரையான கலைஇலக்கியங்கள் மீதான விமர்சனத்தோடு தலித் மனம் நிறைவடைந்துவிடவில்லை. அது தன் சொந்த வாழ்க்கையை தன் சொந்த மொழியில் படைக்கத் தொடங்கியது. எழுத்தறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்துக்கலைகளிலும் தமது வளமார்ந்த படைப்புமனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த தலித்துகளிடமிருந்து வெளிப்பட்ட படைப்புகள் இதுவரை இந்திய சமூகத்தின் வாசகப்பரப்பு அறியாதவை. வாய்மொழி மரபும் எழுத்துமரபும் இணைந்த - கூகி வாங் தியாங்கோ சொல்கிற ‘ஓரேச்சர்’ மாதிரியான ஒரு புதுவகைமையான தலித் படைப்புகளில் புதைந்திருந்த உலகமும் அதை வெளிப்படுத்திய மொழியும் திடுமென எங்கிருந்தோ உதித்த அல்லது குதித்த மாந்திரீக வஸ்துவல்ல. ரவிதாசர், சொக்கமேளா, ஜோதிராவ் பூலே, டேனியல் என்று சாதியடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட பாரம்பரியத்தில் உருவாகி அது வளர்ந்திருக்கிறது.

உண்மையில் தலித்துகள் புதிதாக எதையும் படைக்கவில்லை. தங்களது வாழ்வை பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். தீட்டு தோஷம் என்கிற கெடுங்குணங்களால் வழிநடத்தப்படும் சாதிய மனம் தலித்துகளின் வாழ்வை அருகிருந்து நேரில் பார்க்கத் தவறிவிட்டது இத்தனைக் காலமும். இப்போது இலக்கியப் படைப்புகள் வழியே தரிசிக்கிறபோது புதியனவாக அவை தெரிவதில் வியப்பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் எட்டிப் பார்க்காமல் இருந்த தன் சாதியமனம் குறித்து குற்றவுணர்வு கொள்வதற்குப் பதிலாக, இலக்கியத்திற்குள் சாதியா? இலக்கியத்தில் இடஒதுக்கீடா? என்று பொருமத் தொடங்கினார்கள். மராட்டியத்தில் தொடங்கிய இந்த பொருமல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால், மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இலக்கியம் இருக்கிறதா என்று அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகுந்த பொறுப்புணர்வோடு தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் பாகுராவ் பாகுல், அர்ஜூன் டாங்ளே போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். தலித் இலக்கியம் என்பது என்ன, தனியாக அது உருவாக வேண்டிய அவசியம் என்ன வந்தது, தலித் இலக்கியத்தின் நோக்கம் எவையெவை என்றெல்லாம் ஒருபாடு விளக்கம் கொடுக்கப்பட்டாகிவிட்டது அப்போதே. ஆனால் நாற்பது வருடத்துக்கு முந்தைய அரதப் பழசான அந்த கேள்விகளைத் தூக்கிக்கொண்டு - அவை புத்தம்புதிதாக தம் சொந்த மூளையில் (இப்பகுதி நகைச்சுவைக்கானதல்ல) உதித்தவை என்ற பாவனையோடு இன்றும் சிலர் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று முதல் மரியாதை வீராசாமிபோல அலைந்தால் நாமென்ன செய்வது? ஆனாலும் இந்தக் கேள்வியை தூக்கிக்கொண்டு திரிய இமையம், சோ.தருமன் போன்று யாராவது எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், சம்பளம் இல்லாத போர்ட்டர்கள்.

இன்னும் சா.கந்தசாமி வெளிப்படையாகவே கேட்கிறார்- தலித் இலக்கியம்னு ஒன்னு இருந்தா செட்டியார் இலக்கியம்னு, நாடார் இலக்கியம்னு, வெள்ளாளர் இலக்கியம்னு இருக்குதா? என்று. அய்யா சாதி கடந்த சமத்துவத் திலகமே, நீங்களெல்லாம் சேர்ந்து இலக்கியத்தை அந்த லட்சணத்தில்தான் சாதிவாரியாக சீரழித்து வைத்திருக்கிறீர்கள், அதை அம்பலப்படுத்தி சரிப்படுத்தத்தான் தலித் இலக்கியம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது என்று நாம் மெத்தப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.

சாதியடுக்குமுறைக்கு பணிந்துபோவது, சாதியடுக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற இருவகைப் பண்புகள் தலித்தகளிடம் காணப்படுகிறது. அதில் பணிந்துபோகும் குணத்தை வலியுறுத்தவே தலித்தல்லாதவர்களது படைப்பின் நோக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் தலித்துகளின் மீறல் குணத்தை மேலும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே அசலான தலித் படைப்புகள். உடலுழைப்பை இழிவாய் எண்ணும் ஆதிக்கசாதி மனோபாவத்தை வெளிப்படுத்துவது பிறரது படைப்புகளென்றால், உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் படைப்புகள் உழைப்பைக் கொண்டாடுவதாய் இருக்கும்.

4.
பொத்தாம் பொதுவான இலக்கியம் என்கிற மோசடியை அம்பலப்படுத்தி தனித்துவமான அழகியலையும் உட்பொருளையும் வடிவஒழுங்கையும் நிறுவிக் கொண்டுள்ள தலித் இலக்கியம் உள்வயமான சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் இருக்கிற 1088 தலித் சாதிகளின் - அல்லது தமிழ்நாட்டிலிருக்கிற 77 சாதிகளின் குரலையும் பிரதிநிதித்துவம் செய்கிறதா? ஆம் என்றால், எவ்வாறு? இல்லையென்றால், ஏன்? இப்படிக் கேட்டதுமே, தலித் என்றால் தலித்து தான், இதில் என்ன பறையன் பள்ளன் சக்கிலி என்ற பாகுபாடு? என்று சாமார்த்தியமாக எதிர்கேள்வி வைக்கப்படுகிறது. இது சமதர்மி சா.கந்தசாமியிடம் இரவல் பெற்ற குரல்தான். (ஒருவேளை, இதைத்தான் சிலர் கூடுவிட்டு கூடுபாய்தல் என்கிறார்களோ?) அல்லது, இலக்கியத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்ற இலக்கிய உபாசகர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக்கொண்டே வைத்த கோரிக்கையின் மறுபிரதிதான்.

இந்தியர் என்ற பேரடையாளத்தின் பலன்கள் பார்ப்பனர்களுக்கும், தமிழர் என்ற பேரடையாளம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கும் பயன்பட்டதைப்போல தலித் என்ற அடையாளத்தின் பலன்கள் ஒருசில தலித் சாதிகளுக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறதா? என்று சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் எழும் இந்தக் கேள்விக்கான பதில், தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். உண்மையில் தலித் இலக்கியம் என்ற பெயரால் வெளிப்படும் வாழ்வு எவருடையது என்ற கேள்வியானது, வெளியை ஜனநாயகப்படுத்துவதை உட்கிடக்கையாகக் கொண்டது. அதாவது, அசமத்துமான சமூகச்சூழலை சமத்துவமுடையதாய் மாற்றியமைப்பதை நோக்கமாய் கொண்டுள்ள தலித் இலக்கியமும் தலித் இயக்கமும், தாமேயொரு முன்னுதாரணமாய் மாறிக் காட்ட வேண்டியுள்ளது. தலித் என்ற பொது அடையாளத்தை மெய்யாகவே தமது பொது அடையாளமாக தலித்துகள் அனைவரும் உணரும்படியாக செயல்வழியே நிறுவ வேண்டியுள்ளது. அதன்பொருட்டு அது தனக்குள்ளிருக்கும் உள்முரண்களை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (தீர்த்துக்கட்டுவதல்ல)

5.
தலித்துகளில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அருந்ததியர்களது வாழ்வுரிமையானது எல்லா முனைகளிலும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல்தொழிலை இழந்து மலமள்ளுகிறவர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் சீரழிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தலித்துகளை ஈடேற்றியதாய் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், அருந்தியர்களை மலமள்ளிகளாக மாற்றியது அந்த ஆட்சிதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையிலும் கையால் மலமள்ளும் கொடுமையிலிருந்து அருந்ததியர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இங்கே வர மறுக்கின்றன. 1993ம் ஆண்டிலேயே, கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் 13 லட்சம்பேர் இத்தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அருந்ததியர்களுக்கு கல்வியளித்து ஆற்றல்படுத்தும் முயற்சி 1920களிலேயே திரு.எல்.சி.குருசாமி போன்றவர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் அந்த நோக்கு எட்டப்படாததாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வால்மீகி பஞ்சாயத் என்ற அமைப்பின் கோரிக்கையாகத் தோன்றி பின் நாடெங்கும் பரவியது இம்முழக்கம். பஞ்சாபில் 1975 ஆம் ஆண்டிலிருந்தும், தொடர்ந்து அரியானாவிலும், 01.04.2000 முதல் ஆந்திரத்திலும் இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் என்னென்ன வாதங்களை முன்வைப்பார்களோ அதே வாதங்களை இரவல் வாங்கி ஆந்திரத்து மாலாக்கள் வழக்காடினர். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆந்திரத்தில் மட்டுமல்லாது அதற்கும் முன்பாகவே அமலில் இருந்த பஞ்சாப், அரியானாவையும் பாதித்தது. இப்படியாக 5.11.2004 உடன் உள்ஒதுக்கீடு கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

ஆனால் உள்ஒதுக்கீடு என்பது அருந்ததியர்களின் மிக அடிப்படையான கோரிக்கை. அதை நீதிமன்ற அல்லது சட்டவிளக்கங்கள் வழியாக புரிந்துகொள்ள முடியாது. சமூகநீதி, பாரபட்சமான நியாயம் என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். தவிரவும் இது சாத்தியம் தான் என்பதற்கு குஜ்ஜார் மக்களின் போராட்டமும் இப்போது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதும் சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிசி என்று புதிதாக வகைப்படுத்தி 20 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது.

ஓபிசிக்குள் சாத்தியம் என்றால் தலித்துகளுக்குள்ளும் சாத்தியம்தான் என்ற புரிதலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையொன்றில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்திருந்தது. ஆனாலும் அது தன் நிலைபாட்டில் உறுதியாயில்லை. புதிய தமிழகம் போலவே விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. சமூக வளங்களை தலித்துகளுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிற ஆதிக்கசாதி மனோபாவத்தை இந்த அமைப்புகள் கைவிட வேண்டும் எனபது என் விருப்பம்.

6.
மனித மாண்புகளுடன் வாழ்வதில் பேரார்வம் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களை தமிழிலக்கியம் பெரிதாக கவனப்படுத்திவிடவில்லை. ஒருசில படைப்புகளிலும் அவர்கள் இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஒரு மனிதன் தன் வயிற்றைச் சுத்தம் செய்ய மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்பவேண்டிய கொடுமை அருந்ததியர்களுக்கு நேர்ந்திருக்கிறது’ என்ற தோழர்.ஜக்கையனின் துயரம் பொங்கும் வார்த்தைகளை உள்வாங்காத இந்த சமூகத்தின் மீது பீயைத்தான் கரைத்து ஊற்ற வேண்டியிருக்கிறது. 

(2008 ஜூலை 27 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற ‘அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கின் தலைமையுரை) 

சனி, பிப்ரவரி 18

எங்கும் பரவும் மநுவிரோதிகள் - ஆதவன் தீட்சண்யா

1927டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது  வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக்கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்து கொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரியபெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு  கற்பனை செய்துதான் பாருங்களேன்...

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும் கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட  இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே.. (சரி, வேண்டாம் விடுங்கள்... ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்? ) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.
மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது.  எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்க நிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக்கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க.வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரமஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக்கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை  உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள் . அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2
நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச் சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக் கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற  இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத்தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப்பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகள்  எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத்தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?... மனதுக்கு ஒம்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது...’ - என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அது இதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப்போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல்உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).  

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது  முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்பு சாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை? ‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன்பேரால் நியாயப் படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக்கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லா வற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல் தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்க விடப்பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டே யிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே... ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக் கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்?  ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய்,  அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும் கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்ஸாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.
    
இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப்பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்க விவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார் களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்துபோய் விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு...’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்கு மாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.

3
சாதியொழிப்புப் போராட்டத்தை வர்க்கப்போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவ தாயும், சாதியொழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப் போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறா னவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள் வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங் கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம்தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டு பிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப் போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதி யொடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானவை களாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக  தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.  

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும்,  மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவை யாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்து கொள்கிற போதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம்.  (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற...? )

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.  

4
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையொட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்கு முறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக்கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே  தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.
 
அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டு மானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று  சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.  

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியொடுக்கு முறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற   இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்து களின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற - எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிற சாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடு தானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி  தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப்பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஆப்ரகாம் லிங்கனைப் பார்... ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராக வில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறை களை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம்  போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந் தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமை யின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படு மானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னை களுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படி யிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத - அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்து களாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங் களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதி யொழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடு களை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.
  
சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.  

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். ஆனால், அவரது கட்டுரைகளை படிக்கத் தொடங்கிய போது அந்த செல்வாக்கு சரியத் தொடங்கியது. பாரதி பற்றிய மதிமாறன் போன்றவர்களின் எழுத்துக்களை ஒருசேர தொகுத்துப் படிக்கநேர்ந்தபோது பாரதி பற்றிய மறுமதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ....கற்றனைத்தூறும் அறிவு என்பதுதானே இயல்பானது. இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை. மாற்றங்களை உள்ளும் புறமும் அனுமதித்துக் கொள்கிற திறந்தமனம் தேவை. ஆனால் சிலரோ தாய்வயிற்றில் இருக்கும்போதே பாரதியார் தொடங்கி வாஞ்சிநாதன் வரை எல்லாரைப் பற்றியும் ஆழ்ந்து கற்று அபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்ட பிறகே பிறந்தது போலவும், அதிலிருந்து இம்மியளவும் பிசகாது இருப்பதுபோலவும் தம்மைத்தாமே உயர்வுநவிற்சியாய் கற்பனை செய்துகொண்டு அனானிகளாக மெயில் அனுப்பி மாய்கிறார்கள். கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழத்தைத் தூக்கி மனையில் வை என்பதுபோல வாக்குமூலம் கேட்டுத் திரிகிற இவர்களை நினைத்தால், முதல்மரியாதை வீராச்சாமிதான் எனக்கு நினைவுக்கு வருகிறார்.

5
-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்துகொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஒரு ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞைநிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்கமுடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வுநிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர் போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநு விரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன்.  எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.

( பூபாளம் புத்தகப்பண்ணை வெளியிட்டுள்ள எனது நேர்காணல்களின் தொகுப்பான "நான் ஒரு மநுவிரோதி" என்ற நூலின் இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை. நேர்காணல் நாளை...)

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...