முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுதந்திரம் 2013, ஒரு யானை அங்குசதாரியாகிறது - ஆதவன் தீட்சண்யாசுதந்திரம் 2013

யுத்தமோ அவசரநிலையோ அறிவிக்கப்படாத
இந்நாட்களின் ஒவ்வொரு முன்னிரவிலும்
மத்தியகாலத்து மணியோசை
கண்டங்களைத்தாண்டி எச்சரிக்கிறது
சைரன் ஒலியாக

கடைகண்ணிகளைச் சாத்தியக் கையோடு
திண்ணைகளையும் தெருக்களையும் சுருட்டிப்போய்
காவல்நிலையத்தின் மூலையில் சாய்த்த குடிமக்கள்
நிலா நட்சத்திரங்கள் மேகக்கூட்டம் இருள் ஒளியென 
தத்தமது வசமிருந்த இரவுகளையும்
உள்ளது உள்ளவாறு அப்படியப்படியே ஒப்படைத்தபோது
இரவு மணி பதினொன்று

இரவின் வாழ்வை
குடிமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட காவலர்கள்
பதிலுக்கு
ஒவ்வொருவர் தலையிலும் ஏற்றியனுப்பினர்
அமைதியை 

அமைதியை தூக்கிவந்த வழியெங்கும்
அடுப்பாங்கரையின் நெருப்பு அணைந்தது
குரைத்த நாய்களின் குரல்வளை அறுந்தது
ரெண்டாவதாட்டம் ரத்து செய்யப்பட்ட
சினிமாக்கொட்டகைகளில் பதுங்கின பேய்கள்
அகாலத்தில் அலறும் வழக்கமுடைய ஆந்தையும்
அதிகாலை 4 மணிக்காக காத்திருக்கிறது மௌனமாய்
அமைதியைக் குலைக்க விரும்பாத அன்னையொருத்தி
பாலுக்கு வீறிட்டக் குழந்தையின் கழுத்தை நெறித்தாள்

தெருவெங்கும் நிறைத்ததுபோக
எஞ்சியிருந்த அமைதியைச் சுமந்து 
வீடுகளுக்குள் ஓடிப்புகுந்த குடிமக்கள்
உள்ளிருந்து தாளிட்டுக்கொண்டதோடு
சன்னல்களையும் புகைப்போக்கிகளையும் அடைத்தார்கள்
வெளியே வர பரபரக்கும் கால்களை முறித்து
தத்தமது கண்ணுக்கே தெரியாதபடி பரணில் ஒளித்தனர்
விளக்குகளை அணைத்து படுக்கையில் விழுந்ததும்
இமைகளைத் தைத்து கண்களை மூடினர்
ஞாபகமறதியில் கதவைத் திறந்துவிடாதிருக்க
கைகளை பின்புறமாய் கட்டிக்கொள்வதற்கு முன்
பற்களால் கவ்விக்கொண்டனர்  
அடையாள அட்டையின் நகலொன்றை

ஒவ்வொரு தெருவிலும்
ரோந்து வாகனங்களிருந்து இறக்கிவிடப்பட்ட அமைதியால்
சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்ட இவ்விரவு
அடர்ந்த இருளில் வளரத்தொடங்கும் வேளையில்
ஊரடங்கு உத்தரவையறியாத கோழியொன்று
பெருங்குரலெடுத்து கூவித்தொலைக்கிறது இவ்வாறு.

ஒரு யானை அங்குசதாரியாகிறது

யானையின் நிறம்
கருப்பு, சாம்பல், கருஞ்சாம்பலெனக் குழம்பி
எலிபண்ட் ப்ளாக் எனச் சொல்லி
மாவுத்தனே நழுவும்போது
யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்
அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை

அந்தஸ்துக்காக அரசர்கள் வைத்திருக்கும் யானையை
அன்னாடங்காய்ச்சிகள்
தூர இருந்து பார்க்கலாம்
தொடை நடுங்காதிருந்தால் தொட்டும் தடவலாம்
வளர்க்க ஆசைப்பட்டு வாங்கினது கெடுவினை

கொஞ்சுவதற்கும் ஏவுவதற்கும் தோதாக
கைக்கடங்கிய வளர்ப்புமிருகங்கள் எத்தனையோ இருக்க
ஒரு யானையை இழுத்துவந்த தவறுக்கான  விலையை
நீங்கள் கொடுத்துத்தானாக வேண்டும்

காற்சங்கிலி
இரும்பிலா தங்கத்திலா
கட்டிவைப்பதெனில்
மரத்தடியிலா மாட்டுத்தொழுவிலா
கட்டாந்தரையிலேயே காற்றாட விட்டுவிடுவதா
கவரி வீசி கண்மூட வைப்பதா
ஏசியில்தான் உறங்குமென்றால்
எந்த ஓட்டலில் ரூம் போடுவதென
எதையுமே யோசியாது யானையை வாங்கிவிட்டீர்

மூங்கக்குத்துகளையும் கருப்பங்காடுகளையும்
இஷ்டம்போல் தின்று வளர்ந்த யானை
நீங்கள் தரும் கூபா புற்கட்டுக்கு பசியடங்காமல்
வேலியைப் பிய்த்தெறிந்து விளைச்சலைத் தின்னும்
விரட்டத் துணிந்தோரை மிதித்தே கொல்லும்

கழுதை குதிரை எருமை எருதென
எதன் மீதும் சவாரிப்போக முடியாதபோது
காலொடிய நடந்த கதை மறந்து
உங்களைச் சுமக்குமென ஓட்டிவந்த யானையை
நீங்கள் சுமக்கத்தொடங்கிய தலைகீழ் நொடியிலிருந்து
உங்கள் நெற்றி புடைத்து மத்தகமாகிறது
அங்குசமோ அதன் தும்பிக்கையில்.

 
நன்றி: தீராநதி, ஆகஸ்ட் 2013

கருத்துகள்

 1. “ஊரடங்கு உத்தரவையறியாத கோழியொன்று//
  பெருங்குரலெடுத்து கூவித்தொலைக்கிறது”
  -என்ற வரிகளின் எள்ளல் புல்லரிக்க வைக்கிறது. மனிதன் மட்டுமே எளிதாக அடக்கப்பட்டுவிடுகிறான், அல்லது அடங்கிப்போகச் சம்மதிக்கிறான் – என்பதை மறுப்பதற்கில்லை.
  “யானை குறித்து ஏதுமறியாத நீங்கள்//
  அதை வாங்கி வந்ததுதான் முதற்பிழை”
  -என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சுதந்திரம் என்பதை இன்னதென்று உணராமல், அதை ஏற்கும் மனப்பக்குவம் பெரும்பாலான மக்களுக்கு வந்திராத நிலையில் பாரதம் சுதந்திரம் பெற்றுவிட்டது என்று சர்ச்சில் போன்றவர்கள் சொன்னதுண்டு. அந்தக் கருத்தை நீங்கள் பிரதிபலித்திருக்கிறீர்கள். என்றாலும் ‘சுதந்திரம்’ மட்டுமல்ல, வேறு பல கொள்கைகளுக்கும் இக்கவிதையை உரிமையாக்கிக்கொள்ள முடியும். –கவிஞர் இராய. செல்லப்பா. (சென்னையிலிருந்து).

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா