வியாழன், டிசம்பர் 26

ஸ்கைலேபும் எங்கப்பாவும் - ஆதவன் தீட்சண்யா

1979. ‘உண்மைச்செய்திகளை உடனுக்குடன் தருகிற அல்லது செய்திகளை முந்தித்தருகிற’ தொலைக்காட்சிகள் அப்போதில்லை தானே... வானொலிப்பெட்டி சிலரிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதில் செய்தி வரும் நேரத்தைவிட கொரகொரவென்ற இரைச்சல் வரும் நேரம்தான் அதிகமாயிருந்தது.  எனவே எதுவொன்றுக்கும் செய்தித்தாள்களைத்தான் பார்க்க வேண்டியிருந்தது. சாமியாபுரம் கூட்டுரோட்டிலிருந்த டீக்கடைகளிலும் சலூனிலும் செய்தித்தாள் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

இப்படியான சூழலில்தான் அமெரிக்கா விட்டிருந்த ஸ்கைலேப் என்கிற செயற்கைக்கோள் ஒன்று ஏதோ கோளாறினால் பூமியில் மோதி வெடிக்கப்போவதாக செய்திகள் வரத்தொடங்கின. ஒவ்வொரு நாளிதழும் இதுபற்றி விலாவாரியாக எழுதித்தள்ளின. சேலம் பதிப்பு என்றால், அந்த பதிப்பின் வினியோக எல்லை எதுவரை இருக்கிறதோ அதுவரைக்குமான வரைபடத்தை வரைந்து வெடித்துச் சிதறும் ஸ்கைலேபின் பாகங்கள் எங்கெல்லாம் விழக்கூடும், இதனால் ஏற்படப்போகும் சேதாரங்கள் எவ்வளவு இருக்கும் என்கிற ரீதியில் இருந்தது இந்தச் செய்தி. பழிகாரனிடம் பஞ்சாங்கம் பார்த்தால் மட்டமத்தியானத்தில் மரணம் என்பானாம், அதுமாதிரிதான் எங்கள் ஊருக்கு வந்த பதிப்பு எங்கள் ஊரின் மையத்தில் ஸ்கைலேப் விழப்போவதாக சொன்னது. இந்த அழிமானத்திலிருந்து தங்களது ஊர் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒவ்வொரு ஊர்க்காரர்களும் நம்புமளவுக்கு இந்தச் செய்தி எங்கும் பீதியேற்றிக் கொண்டிருந்தது. நாள் நெருங்க நெருங்க ஊர் அழியப்போகும் செய்தி உலகமே அழியப்போகும் செய்தியாக மாறிவிட்டது.  

எம்ஜியார் ஆட்சியில் இன்னும் என்னென்ன கங்காட்சியெல்லாம் நடக்கப்போவுதோ என்று திமுகவினர் சந்தடிசாக்கில் அரசியல் பேச, அமெரிக்காக்காரன் ராக்கெட் வுழுவறதுக்கு அண்ணா திமுக மேல பழிபோடுறது அபாண்டம் என்று பதிலடி கொடுப்போர் பட்டியலில் எங்கப்பாவும் இருந்தார். சாவப்போறப்பாவாவது ஒத்துமையா இருங்கப்பா என்று நல்லெண்ணத்தூதுவர்கள் சிலர் சமாதானம் செய்தனர். 
 
உலகமே அழியப்போகையில் இதெல்லாம் இனி எதுக்கு என்று எதுவொன்றைச் செய்யும்போதும் வாய்விட்டு அரற்றாதவர் யாருமில்லை. எதிலும் பிடிமானமற்று ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். இரவானால் வாசலில் படுத்துக்கொண்டு அவரவரும் வானசாஸ்திர வல்லுநர் ரேஞ்சில் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு, ‘உலகம் அழியப்போறது உறுதியாயிடுச்சு. சாகற வரைக்கும் சந்தோசமா இருப்போம்’ என்று களமிறங்கினர். சிரிக்கவே சிரிக்காதவர்கள் கெக்கலியிட்டார்கள். கருமிகள் கைகுளிர செலவழிப்பவர்களானார்கள். பகையாளியிடம்கூட ஜாடைமாடையாக உறவாடத் துணிந்தார்கள். செத்தால் ஒரேஇடத்தில் சாகவேண்டும் என்று குடும்பத்தில் யாரும் வெளியூர் போவதை தவிர்த்தார்கள்.

ஆடுமாடுகளை வெட்டி விருந்துகள் நடப்பதாகவும் தானியக்குதிர்கள் எல்லோருக்குமாக திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் இன்னாரென்று இல்லாமல் யாருடைய தோட்டத்திலும் யார் வேண்டுமானாலும் காய்கசுறுகளை அறுத்துக்கொள்கிறார்களென்றும்  கதைகதையாய் வந்த செய்திகள் உண்மையென நம்பி எங்கள் ஊரிலும் இப்படியாக சில சம்பவங்கள் நடந்ததது மங்கலாக நினைவுக்கு வருகிறது.

ஸ்கைலேப் வெடித்துச் சிதறி நாங்களெல்லாம் சாகக்போகும் அந்த நாளும் வந்தது. பலரும் குளித்து நல்லதை உடுத்தி சாமி கும்பிட்டு சாயங்காலம் வரப்போகும் சாவுக்காக காத்திருந்தார்கள். பார்க்கப்போனால் சாவைக்கண்டு யாரும் அஞ்சியதாகவே தோன்றவில்லை. சாவு ஒரு திருவிழா நாளின்  மனநிலையோடு எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை எல்லோருமே சாகப்போகிறோம் என்பதால் ஏற்பட்ட நிறைவுணர்ச்சியாகக்கூட இருக்கலாம் என்று இப்போது படுகிறது.

டீக்கடைக்குப் போய் கடைசி செய்தியை படித்துவிட்டு எங்கப்பாவும் வீட்டுக்குத் திரும்பியிருந்தார். ஸ்கைலேப் பற்றி அறிந்திராத பருவத்துச்சேவல் ஒன்று எப்போதும்போல குப்பைமேட்டை கிளைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டவர், நாங்களே போனதுக்கப்புறம் நீ மட்டும் இருக்கப் போறியாக்கும் என்று எட்டிப் பிடித்தார் அதை. கடைசி சோறு கறி சோறாக இருக்கட்டும்  என்றார். பொதுவாக மத்தியானச் சாப்பாடு உண்ணும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை என்றாலும் பசியோடு சாகவேண்டியதில்லை என்று நினைத்து ஏதோ காய் நறுக்கிப்போட்டு எங்கம்மா ஏற்கனவே வைத்திருந்த குழம்பு எங்களுக்கு அந்த நொடியில் சட்டென பிடிக்காமல் போனது. கறியிருப்பக் காய் கவர்ந்தற்று தானே. நாங்கள் கோழிக்கறி குழம்பிற்காக காத்திருக்கத் தொடங்கினோம்.

முழங்கைமீது கோழிக்கழுத்தை வேகமாக அடித்து அதன் உயிரை நிப்பாட்டிய அப்பா, றெக்கையை இணுக்கியெறிந்துவிட்டு நெருப்பில் வாட்டி மஞ்சள்  தடவி பிறகு வாகாக அறுத்து எப்போதுமில்லாத பக்குவத்தில் கறியை அம்மாவிடம் கொடுத்தார்.  குழம்பு தயாரானதும் வாசலில் இருந்த வாதநாராயணன் மரத்தடியில் நான், எனது தங்கைகள், தம்பி, அம்மா, அப்பா  எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் போது சாயங்காலம் மூணுமணி பஸ் போனது. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் போன அப்பா, சலவைத்துணியை உடுத்திக்கொண்டு வெளியே வந்தார். அம்மாவிடம், ‘ரத்தினம்மா ஒரு தூக்குப்போணியில அஞ்சாறுத்துண்டு கறி போட்டு கொஞ்சம் கொழம்பும் ஊத்து’ என்றார். அக்கம்பக்கத்து காட்டுக்காரர்கள் யாருக்கோ கொடுப்பதற்கு கேட்கிறார் போல என்று நினைத்துக்கொண்டு அம்மாவும் பாத்திரத்தில் ஊற்றி மூடிபோட்டு அப்பாவிடம் கொடுத்தது. யாருக்குப்பா இது என்று நாந்தான் கேட்டேன். ‘ரவி, நீங்கள்லாம் உங்கம்மாவோட சாவுங்க, நான் போயி எங்கம்மாவோட சாகறேன்.. ஒருவேளை சாகலேன்னா நாளைக்கு தாத்தம்மாவை இங்கு கூட்டியாறேன்...தைரியமா இருங்க...’ என்று  சிரித்தபடி சொல்லிக்கொண்டே 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற ஆர்.சி.செட்டிப்பட்டிக்கு கிளம்பிப் போய்விட்டார்.

கடைசியில் ஸ்கைலேப் ஆஸ்திரேலிய கடலுக்குள்ளேயோ வேறெங்குமோ விழுந்தது என்கிற செய்தியுடன் கூடிய நாளிதழை வாங்கி எடுத்துக்கொண்டு ‘நாமெல்லாம் அவ்வளவு சீக்கிரமா செத்துருவமாடா... ’ என்று சிரித்தபடியே அடுத்தநாள் காலையில் திரும்பிவந்தார் அப்பா. அப்படி இப்போதும் திரும்பிவந்துவிடுவார் என்றுதான் எனது எழுதுமேஜைக்கு எதிரில் தொங்கும் அவரது புகைப்படத்தை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

இன்று எங்கப்பா எஸ்.கே.மாரியப்பனின் மூன்றாவது நினைவுநாள்.

26.12.2013


3 கருத்துகள்:

  1. உங்கள் ஊரில் இப்படியேல்லாம் நடந்ததா? எங்கள் இலங்கையில் இவ்வளவு ஆரவாரம் இருக்கவில்லை. ஆனால் நான் வேலை செய்த சிங்களப் பகுதியில் ஒருவர் நல்ல குடி வெறியில் , விழுகிரதுதான் விழுகிது, அமிர்தலிங்கத்தின் தலையில் விளக்கூடாதா? என கூறிப் பிதற்றியது ஞாபகம் உள்ளது.
    அப்போ அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தமிழீழப்பிரிவினை பற்றி பாராளுமன்றத்தில் காரசாரமாக வாதங்கள் நடந்து கொண்டிருந்த காலம்.
    உங்கள் எழுத்து மிகச் சுவையாக இருந்தது.
    தங்கள் தந்தை தன் தாயாருடன் , சாகச் சென்றது, உச்சம்-கண நேரம் நெகிழ வைத்தது- தாயின் அன்பின் மாட்சி.

    பதிலளிநீக்கு
  2. அப்பா அப்பாதான். இங்கு உங்க அப்பாதான் தெரிகிறார். கடவுளடைய கையில் நலமாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. சார் படு நகைச்சுவையாகச் சொல்லி, இறுதியில் என்னையும் கலங்க வைத்துவிட்டீர்களே. பரவாயில்லை. சிரித்தேன் நன்றாக.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...