வியாழன், ஜூலை 11

ரயிலை விட்டிறங்காத போலிஸ் - ஆதவன் தீட்சண்யா

குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டிருப்பது இளவரசனின் உடல்தான் என்றாலும் விரைத்துக்கிடப்பதென்னவோ போலிஸ் உள்ளிட்ட தருமபுரி மாவட்ட அரசு நிர்வாகம்தான். இளவரசனின் மரணத்தைச் சுற்றி படர்ந்திருக்கும் மர்மங்களை விலக்குவதில் சிறு முன்னேற்றத்தையும் எட்டாமல் நாலாம் தேதி எந்த இடத்தில் நின்றதோ அங்கேயே அது நின்று கொண்டிருக்கிறது. சடலம் கிடந்த நிலையை வைத்து இப்படி ஒரு தற்கொலை சாத்தியமா என்கிற குறைந்தபட்ச சந்தேகத்தைக்கூட எழுப்பிக் கொள்ளாமல்  இன்றுவரை திரும்பத்திரும்ப அது ‘தற்கொலை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது.

விசாரணை விசயத்தில் விரைத்துக்கிடக்கிற இந்த நிர்வாகம், பிரச்னையையும் வழக்கையும் திசைதிருப்புவதில் அளவுக்கதிமான வேகத்தில் செயல்படுகிறது.  இளவரசன் எழுதிய கடிதம் என்கிற ஒன்று கைக்கு கிடைத்திருக்கிறதென்றால் தடயவியல் சோதனையின் மூலம் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு முடிவுகளை அறிவிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கமுடியும். அவ்வாறின்றி எடுத்தயெடுப்பில் ‘இந்தக் கடிதத்தின் மூலம் தற்கொலை தான் என்பது உறுதியாகிவிட்டது’ என அவசரஅவசரமாக அறிவித்தது. இப்போது அந்தக்கடிதம் உண்மையானது போன்ற தோற்றத்தோடு ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. அக்கடிதத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளிக்கும் பல்வேறு பதவுரைகளையும் பொழிப்புரைகளையும் எழுதி பரப்பும் வேலையை ஊடகங்களின் பொறுப்பில் விட்டுள்ளது நிர்வாகம். இளவரசனின் மரணத்தின் பேரில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை நீர்த்துப்போகச் செய்யவும், மனைவியைப் பிரிந்த சோகத்தில் நடந்த வழக்கமானதொரு தற்கொலைதான்’ என்று நிறுவுவதற்கும் அது இப்படியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

அன்றைய தேதியில் யாரும் ரயிலில் மோதி இறக்கவில்லை என்பதை ரயில்வேதுறை பலமுறை சொல்லிவிட்ட பின்னும்கூட இளவரசனின் மரணத்தை ரயிலோடு தொடர்புபடுத்துவதிலேயே நிர்வாகத்தின் எத்தனம் இருக்கிறது. ஒருவேளை ரயிலின் முன்பகுதியிலிருந்த ஓட்டுநர், கடைசியிலிருந்த கார்டு உட்பட எல்லோருடைய கண்ணையும் கட்டிவிட்டு ரயிலின் பக்கவாட்டில் மோதியிருந்தால், அடிபட்டுச் செத்தது இளவரசன்தான் என்று சொல்வதற்கும்கூட வழியற்ற வகையில் உடல் சிதறிப்போயிருக்கும் என்பதையும்கூட ரயில்வே அதிகாரிகள் தெளிவுபட கூறிவிட்டனர். ஆனாலுமென்ன, ரயிலை விட்டு கீழிறங்க மறுக்கிறது போலிஸ். ரயிலும் இல்லை தற்கொலையும் இல்லை என்கிற கருத்து பரலாக உள்ள நிலையில் போலிஸ் மட்டும் அதை ஏற்காமல் இருக்கிறது. தற்கொலை என்று நிறுவுவதில் போலிஸ் கொண்டிருக்கிற இந்த வறட்டுப் பிடிவாதத்தினால் மோப்பநாயை பயன்படுத்துவதுகூட தவிர்க்கப்பட்டுள்ளது.

இளவரசனின் மரணம் ரயிலைத் தவிர்த்த வேறுவகையிலான தற்கொலையாகவே இருந்துவிடும் பட்சத்திலும்கூட அதற்கான உளவியல் முற்றுகையை உருவாக்கிய பாட்டாளி மர்டரர் கட்சியினர் ஒருவர்கூட இதுவிசயமாக இன்னும் விசாரிக்கப்படாதது ஏன்? இளவரசனிடமிருந்து திவ்யாவை பிரித்தெடுப்பதில் மூர்க்கத்தனமான ஈடுபாடு கொண்டிருந்த பாட்டாளி மர்டரர் கட்சியினரை அவரது சாவுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு ஏன் உதாசீனம் செய்யப்படுகிறது? வன்னியர்கள் மட்டுமே குடியிருக்கும் ஒரு பகுதிக்கு - திவ்யாவின் பெரியம்மா வீட்டுக்கு வெகு அருகாமையில் உள்ள அந்தப்பகுதிக்கு- இளவரசன் ஏன் வந்தார் அல்லது வரவழைக்கப்பட்டார் என்கிற கேள்விகளும் பரவலாக எழுப்பப்படுகின்றன. இவற்றோடு கவனங்கொண்டு விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம்- இளவரசனின் கடைசிநாட்களில் அவரோடு செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் யார் யார் என்பதுதான்.

செல்போன் சேவை நிறுவனங்கள் சிம்கார்டு வழங்குவதில் கையாள வேண்டிய நெறிமுறைகள் இறுக்கப்பட்டுள்ள நிலையில் சிம்கார்டுக்குரியவர் யார் என்று கண்டுபிடிப்பது எளிதானதே. ஒருவேளை அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்திருந்தால்கூட அப்போதும் அதிலிருந்து வெளியாகும் சமிக்ஞைகள் மூலமாக அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிக்குமளவுக்கு தொழில்நுட்ப சாத்தியங்கள் உள்ளன. எனவேதான் பொதுவாக இப்போதெல்லாம் செல்போன் தொடர்புகள் பற்றிய விவரங்களை முதலில் திரட்டிக்கொண்டு தான் எந்தவொரு குற்றத்தைப் பற்றிய புலன் விசாரணையையும் போலிஸ் தொடங்குகிறது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் தொடர்புகளைத் திரட்டுவதும், தொடர்ந்து கண்காணிப்பதும் குற்றவாளியை அல்லது குற்றம் நிகழ்ந்த பின்னணியை துரிதமாக நெருங்குவதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளன.

தருமபுரி பாரதிபுரத்தில் தனது அத்தை வீட்டிலிருந்த போது வந்த செல்போன் அழைப்பினைத் தொடர்ந்தே இளவரசன் வெளியே சென்றதாகவும், அதற்குப்பிறகே அவர்  பிணமாகியிருக்கிறார் என்றும் அவரது பெற்றோர்களும் உறவினர்களும் கூறிவருகின்றனர். இளவரசனின் தொடர்பெல்லைக்குள் இருந்தவர்களே அவரை பிணமாக்கியுள்ளனர் என்று அவர்கள் எழுப்பும் சந்தேகத்தை காவல்துறை பின்தொடர மறுக்கிறது. ஒருவேளை இளவரசன் பிணமாவதற்கு காரணமாணவர்களின் தொடர்பெல்லைக்குள் இப்போது காவல்துறை சிக்கியிருக்கிறதா..?

ஞாயிறு, ஜூலை 7

பாட்டாளி மர்டரர் கட்சி

ளவரசனின் மரணத்தைப்போலவே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட விதமும் பல சந்தேகங்களை உள்ளடக்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட விண்ணாதிவிண்ணன் எத்தனைத் தடவை மறுக்கூராய்வு செய்து பார்த்தாலும் எப்படி சாவு நேர்ந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர யாரால் சாவு நேர்ந்தது என்று சொல்ல முடியாது. யாரால் எதற்காக எப்போது சாகடிக்கப்பட்டார் என்கிற உண்மைகளை அரசியல் விருப்புவெறுப்புக்கோ வேறுவகைச் சாய்மானங்களுக்கோ அழுத்தங்களுக்கோ பணிந்துபோகாத ஒரு புலனாய்வுக்குழுவினால் தான் வெளிக்கொண்டுவர முடியும். அப்படியொரு புலனாய்வுக்குழுவை தமிழ்ச்சினிமாவில் மட்டுமே காணமுடியும் என்பதால் நடப்புலகில் தேடி நியமிக்க முடியாது. ஆகவே சுமாராக தீய்க்கும் கொள்ளியால் சொறிந்து கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ரயிலில் சுண்டல் விற்கிறவர்களிடம் தண்டல் வசூலிப்பதில் மட்டுமே தன் சாமர்த்தியத்தை காட்டிவருகிற ரயில்வே போலிசிடமிருந்த இளவரசன் மரண வழக்கை உள்ளூர் போலிசுக்கு மாற்றியுள்ள அரசு, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக இருந்து புலனாய்வு செய்வார் என நேற்று அறிவித்துள்ளது. ஒருவேளை மத்திய புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கு மாற்றப்படுமானால், Congress Bearue of Investigation என்கிற இகழ்மொழியிலிருந்துதப்பிக்க அதற்கொரு வாய்ப்புள்ளது.
***
வன்னியப்பெண்ணை காதலிக்கிறவர்களுக்கும்  கல்யாணம் முடிக்கிறவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று காடுவெட்டி குருவும் மரம் வெட்டி மருத்துவரும் அறிவித்ததன் செயலாக்கமாகவே இளவரசனின் மரணத்தை கருதவேண்டியுள்ளது. இளவரசனின் மரணம் (இன்ப?) அதிர்ச்சியளிப்பதாக கூறிக்கொண்ட குட்டி ராமதாஸ் கூடவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கணக்காக இந்த மரணத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அறிவித்துக்கொண்டார். அவர் எத்தனை பாசாங்கான மொழியில் பசப்பினாலும் திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் அவர்களின் மரணம் தொடங்கி இளவரசனின் மரணம் வரையான  அவ்வளவு அழிமானங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்களின் காலடித்தடங்கள் தைலாபுரம் தோட்டத்திலேயே முடிவடைகின்றன என்கிற உண்மையை மறைத்துவிடமுடியாது.

இளவரசனுடனான திவ்யாவின் காதலை தனிநபர் முடிவாக விட்டுவிடாமல் தங்களது சாதியின் மானத்தோடும் மண்ணாங்கட்டி வீரத்தோடும் தொடர்புபடுத்தி பா.ம.க ஏற்றிய வெறிக்கு முதல் பலி திவ்யாவின் தந்தை நாகராஜன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புகளை கொள்ளையழிக்க பா.ம.க.வுக்கு தேவைப்பட்ட பிணமாக அவர் மாற்றப்பட்டார். இந்த வன்கொடுமை மற்றும் கொள்ளையழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனத்தனத்தில் பா.ம.க. மட்டுமே ஈடுபட்டது. தலித்துகளுக்கு எதிராக அனைத்து பிற்போக்கு பழமைவாத வெறியர்களையும் அணிதிரட்டுவதில் ராமதாசும் அவரது கட்சியினரும் காட்டிய ஈடுபாடு வன்மம் மிக்கது. திவ்யா - இளவரசன் தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட போது, இவர்களுக்கு ஆபத்து யாரால் நேரக்கூடும் என்பதை ஊருலகம் அறிந்தே இருந்தது. 

திவ்யா - இளவரசன் தம்பதியரை பிரித்தே தீர்வது என்று 2012 நவம்பரிலிருந்து பா.ம.க. செயல்படுத்தி வந்த  ஓரம்சத்திட்டம் இளவரசனின் மரணத்தோடு முற்றுப்பெற்றுள்ளது. இளவரசன் பிணமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி திவ்யாவே துணிந்தாலும் திவ்யாவின் தாயாரே சேர்த்துவைக்க ஆசைப்பட்டாலும் அதனால் பயனொன்றும் இல்லை. அதாவது பா.ம.க. மற்றும் வன்னிய மானத்திற்கு இனி எந்த பங்கமும் வரப்போவதில்லை. எனவே இவ்வளவு காலமும் திவ்யாவையும் அவரது தாயாரையும் நிழல்போல பின்தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த பா.ம.க.வினரும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களை விட்டு ஒதுங்குவதுபோல காட்டத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் இப்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

நண்பன் என்று சொல்லிக்கொண்டு இளவரசனின் இறுதிநாட்களில் பாரதிபிரபு என்பவன் உடனிருந்ததும், அவனது அலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்ற இளவரசன் பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இளவரசனை வரவழைத்த அந்த திடீர் நண்பன் அதற்குப்பிறகு ஏன் காணாமல் போனான் என்பதும், இளவரசனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகாமையில் திவ்யாவின் பெரியம்மாவுடைய வீடு இருப்பதும் தற்செயலானவையல்ல. இளவரசனின் பிணம் இருந்த நிலையை வைத்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியங்கள் மிகமிக நுண்ணிய அளவில்கூட இல்லை என்றான நிலையிலேயே அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. எனில் அவரை ஒரு தொல்லையாகவும் எதிரியாகவும் கருதிய பா.ம.க. தலைவர்கள்தான் அவரது உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஆனால் நஷ்டஈட்டுக்கு ஆசைப்பட்டு தருமபுரியிலும் பாச்சாரப்பாளையத்திலும் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக்கொண்டார்கள்  என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்ட அதே உத்தியில் இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

பா.மா.க தலைவர்கள் என்ன பசப்பினாலும் இளவரசனின் குடும்பத்தார் அவர்களையே குற்றம்சாட்டியுள்ளனர். ஊரார் கண்களும் அவர்களையே உற்றுநோக்குகின்றன. கடலில் மிதக்கிற பிணங்கள் எல்லாம் கப்பல் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வது எந்தளவிற்கு பொய்யோ அதேயளவு பொய்தான் ரயில்ரோட்டில் கிடக்கிற பிணங்கள் எல்லாம் ரயில் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வதும் என்பதை வெகுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவேதான் இளவரசன் பிணமாகக்கிடப்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சடாரெனச் சொன்னார்கள்- இளவரசனை அடித்துக்கொன்று ரயில்ரோட்டில் கிடத்திவிட்டார்கள் என்று. இயல்பான தமது உள்ளுணர்விலிருந்தும் நடப்புலகத்தை அவதானிப்பதிலிருந்தும் எடுத்தயெடுப்பில் உண்மையைப் பேசிவிடுகிற வெகுமக்களுக்கு இது கொலையா தற்கொலையா என்கிற சந்தேகமோ குழப்பமோ எழவேயில்லை.


தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?
 கொலைப்பழியிலிருந்து தப்பிக்கும் விசயத்தில் பா.ம.க.வினரின் எண்ணம் பொய்த்துப் போனாலும்  வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும் இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்கிற அச்சத்தை பொதுஉளவியலுக்குள் பதியவைப்பதில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தவகையில் இளவரசனின் மரணத்தோடு தாங்கள் தொடர்புபடுத்தி பார்க்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே அவர்கள் விரும்புகின்றனர். ( முகப்புத்தகம் போன்றவற்றை கருகடித்து தீய்க்கும் இந்த ‘அக்னிப்புத்திரர்கள்’ இளவரசனின் மரணத்தை கொண்டாடித் தீர்ப்பதும்கூட இந்த விருப்பத்தின் ஒருபகுதிதான்).

இளவரசனை ‘காணாப்பிணமாக’ போக்கடிப்பதற்கான சாத்தியங்களை வேண்டுமென்றே நழுவவிட்டு முழுப்பிணமாக ரயில்ரோட்டில் கிடத்தியதற்கு காரணம், ரயில்ரோட்டில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் பிரதியை ஒவ்வொருவரது மனதிலும் கிடத்துவதுதான். உள்ளிருந்து வாழும் அந்தப்பிணத்தின் பிரதி சாதியை மறுத்து காதலிக்கத் துணிகிற எவரொருவரையும் எச்சரித்து தடுத்துவிடும் என்று பா.ம.க. தலைவர்களும் வன்னிய  வெறியர்களும் நம்புகின்றனர். ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

வெள்ளி, ஜூலை 5

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை - ஆதவன் தீட்சண்யா

நத்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக  பரப்பப்படுகிறது.  அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.  இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.

1. ஆட்டோ மோதினால்கூட ஐந்தாறு அடி தூரம் தள்ளிப்போய் விழுவோம். ஆனால் ரயிலின் முன் பாய்ந்ததாக சொல்லப்படும் இளவரசனின் சடலம் தண்டவாளத்திற்கு அருகாமையில் நாலடிக்கும் குறைவான தூரத்திலேயே விழுந்து கிடக்கிறது.

2. சடலம் கிடந்த இடம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டருக்கும் கூடுதலான தூரத்தில் ரயில்நிலையம் இருப்பதால், குறிப்பிட்ட அப்பகுதியில் ரயிலின் வேகம் குறைக்கப்படுவதில்லை. எனில் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன்புதான் இளவரசன் பாய முடியும். அவ்வாறானால் இளவரசனின் உடல் வெகுதூரத்திற்கு வீசி எறியப்பட்டிருக்கும். தவிரவும், மோதிய வேகத்தில் உருவமே உருக்குலைந்து சதைத்துண்டங்களாகி தெறித்துச் சிதறியிருக்கும். 

ஒருவேளை குறைவான வேகத்தில் வந்த ரயிலின் முன் பாய்ந்திருந்தால், தூக்கி வீசுவதற்கு பதில் மோதிய வேகத்தில் ஆளை விழுத்தாட்டி தனது அடிபாகங்களால் அரைத்து கூழாக்கிவிட்டுத்தான் போயிருக்கும். ரயிலின் எந்த பாகத்தில் ஓரமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த முகமுமே சிதைந்திருக்கும். ஆனால் இளவரசனின் ஒருபகுதி முகத்தில் மட்டுமே காயங்கள். மண்டையின் பின்புறமாக மோதியிருந்தாலும் ஒட்டுமொத்த தலையும் சிதைந்து சேதமடைந்திருக்கும்.

3. ரயிலின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்திருந்தாலும்கூட மல்லாந்த நிலையில் குறுக்குவாட்டாகத்தான் விழுந்திருக்க முடியும். இப்படி தண்டவாளத்துக்கு இணையாக அந்த மோரிக்கல்லின் (சிறுபாலத்தில்) ஓரத்தை அணைத்தபடி விழுவது சாத்தியமில்லை. 

இளவரசனின் உடையில்கூட சிறு கசங்கலை ஏற்படுத்தாமல், உடலின் எந்த பாகத்திலும் சேதாரம் விளைவிக்காமல் முகத்தின் ஒரு பகுதியை மட்டுமே சிதைத்து மூளையை வெளியே இழுத்துச் சிதறவிட்டிருக்கிற வினோதமானதொரு ‘ரயிலில் விழுந்த தற்கொலை’யை உலகம் இதுவரை கண்டதில்லை.

4. இளவரசன் - திவ்யா விசயத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்த விசயங்களை தொகுத்துப் பார்த்தால் இது தற்கொலையாக இருக்க முடியாது என்கிற முடிவுக்கு எளிதில் வந்து சேரமுடியும். ‘எனது தாய் சம்மதித்தால் எனது கணவருடன் இணைந்து வாழவே விரும்புகிறேன்’ - என்று திவ்யா தெரிவித்த கருத்தை யாராலோ ஏற்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையிலேயே முதல்நாள் தெரிவித்த கருத்துக்கு மாறான நிலைப்பாட்டை மறுநாள் தெரிவிக்கிறார் திவ்யா. அழுத்தங்கள் இல்லாத இயல்பான நிலையில் இளவரசனோடு சேர்ந்து வாழ்வதையே திவ்யா விரும்புகிறார் என்பதை இந்த இருவேறு நிலைப்பாடுகளிலிருந்து   உணரமுடிகிறது. இளவரசன் உயிரோடு இருக்கும்வரை திவ்யாவிடம் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதால்தான் இளவரசன் பிணமாக்கப்பட்டிருக்கிறார். எப்படி யாரால் பிணமாக்கப்பட்டார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறதே தவிர தற்கொலையா கொலையா என்பதல்ல.  

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...