வியாழன், அக்டோபர் 17

சொந்த ஊர்...? - ஆதவன் தீட்சண்யா


என்விகடன்.காம் இணைய இதழில்  வெளியான "ஒசூரெனப்படுவது யாதெனின்" தொடர் தொகுப்புநூலாக வரவிருக்கிறது. அதற்காக எழுதிச் சேர்க்கப்பட்ட முன்னுரையும் நிறைவுப்பகுதியும்....
சொந்த ஊர் பற்றிய தொடர் ஒன்றினை  என்விகடன்.காம் இணைய இதழில் எழுதுமாறு நண்பர் சஞ்சீவிகுமார் ஒருமுறை கேட்டுக்கொண்டார். எனது தந்தைவழி தாத்தாவின் ஊர் சேலம் அருகேயுள்ள பெரியூர் என்கிற உத்தமசோழபுரம். தாத்தம்மாவின் ஊர் ஓமலூர் அருகேயுள்ள ஆர்.சி.செட்டிப்பட்டி. இதுபோன்றே தாய்வழி தாத்தாவின் ஊர் கம்பைநல்லூர் ஈச்சம்பாடி, தாத்தம்மாவுக்கு பாரூர் அருகேயுள்ள பழனம்பாடி.  எங்கம்மா என்னை பெற்றெடுத்தது அவரது தந்தையின் ஊரான ஈச்சம்பாடியில். பிறகு எங்களது தாத்தம்மா தன் சம்பாத்தியத்தில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள அலமேலுபுரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கியதையடுத்து நாங்கள் அங்கு குடிபெயர்ந்துவிட்டோம்.

இத்தனை ஊர்களோடு தொடர்புடைய நான் எனது சொந்த ஊர் என்று எதைச்சொல்வது? சொந்த ஊர் என்கிற பதம் உண்மையில் எதைக் குறிக்கிறது? பெற்றெடுக்கிற தாயின் ஊரை நமது சொந்த ஊர் எனச் சொல்லாமல் தந்தையின் ஊரை சொந்த ஊர் எனச் சொல்லிக்கொள்வது எந்தளவுக்கு சரியானது? ஊர் என்றும் சேரியென்றும் பிரிந்திருக்கும் ஒரு சமூகத்தில் ஊர் என்பது எல்லோரையும் உள்ளடக்கிக்கொள்கிற சனநாயகத்தன்மையுடன் எப்போதேனும் இருந்திருக்கிறதா? என்பதான கேள்விகளால் ஏற்கனவே குழப்பமுற்றிருக்கிற என்னால் சொந்த ஊர் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வந்துசேர முடியவில்லை. தவிரவும் இந்த ஊர்களோடு எனக்கு நெருங்கியத் தொடர்புகள் இப்போதிருப்பதாக சொல்லவும் முடியாது. ஆகவே வாழ்வின் பெரும்பகுதிக்காலத்தை கழித்திருக்கக்கூடிய, எஞ்சிய நாட்களையும் கழிக்க விரும்புகிற ஒசூர் பற்றி எழுத ஒப்புக்கொண்டேன். எழுதியனுப்பியவற்றில் யாதொரு திருத்தமும் செய்யாமல் என்விகடன்.காம் முழுமையாக வெளியிட்டிருந்தது. விடுபடல்களாய் தெரிந்தவற்றை கோர்வை குலையாமல்  இப்போது எழுதிச் சேர்த்திருக்கிறேன். ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல. திட்டமிடுதலோ முன்தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருக்கிறேன், அவ்வளவே. தொடராக எழுதியவற்றை இப்போது தொகுத்துப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் - ஒசூர் பற்றி எழுதுவதாக நினைத்துக்கொண்டு நான் என்னைப் பற்றிதான் பெரிதும் எழுதியிருக்கிறேன் என்பதை.  அதனாலென்ன, என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லத்தானே வேண்டும்…? 

ஆதவன் தீட்சண்யா, 
ஒசூர்/  பக்ரீத் நாளில் – 16.10.2013


தொழிலாளி வர்க்கத்தின் போராட்டக்குணத்தாலும் அரசியலுணர்வாலும் செம்பூமியாய் மாறிக்கொண்டிருக்கிறது என மாணவப்பருவத்தில் நான் உருவகித்து வைத்திருந்த  ஒசூர் பகுதி வெளிறிப்போய் இன்று காவிநிறமாய் காட்சியளிக்கிறது. ஒசூர் என்றதும் என் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து ஆதர்சமூட்டிய சித்திரம் உருக்குலைந்துவிட்டது என்கிற உண்மை அப்பட்டமாக தெரிந்துவிட்டதால் அரற்றும் மனதை தேற்றும் வழியின்றி ஏதோ தனிப்பட்ட முறையில் நானே தோற்றுப் போய்விட்டது போன்ற உணர்வோடுதான் இன்று ஒசூருக்குள் உழன்றுகொண்டிருக்கிறேன். இந்த அழிமானம் திடுமென ஒருநாளில் நிகழவில்லை. 

மக்களின் கடவுள் நம்பிக்கை, வழிபாடு, பழக்கவழக்கங்கள், சாதியப் பிடிமானம், நில உறவு சார்ந்த மதிப்பீடுகள், ஆண் பெண் உறவு ஆகியவற்றோடு தொடர்ச்சியானதொரு உரையாடலை நிகழ்த்தி மாறுதலுக்கு உந்தித்தள்ளும் அமைப்புகள் எதுவும் இங்கு உருவாகவேவில்லை. இப்பகுதியின் நிலவுடமை சார்ந்த ஆதிக்கச் சக்திகளிலிருந்து நவீனக் கல்வியையும் பெங்களூர் போன்ற பெருநகரத் தொடர்புகளையும்  அரசியல் அதிகாரங்களையும் பெற முடிந்தவர்கள் அவற்றைக்கொண்டு தனிப்பட்ட வாழ்வை வளப்படுத்திக் கொண்டார்களேயன்றி நடப்பிலிருந்த பின்தங்கிய நிலைமையை மாற்றுவதற்கான பணிகள் எதையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. வெளியிலிருந்து வந்தவர்களும் இங்கு அதிகாரத்தின் பகுதியாகத்தான் வந்தார்களேயன்றி மக்களிடம் ஒன்றி வாழ்பவர்களாகவோ ஊடாடுகிறவர்களாகவோ வரவில்லை. என்னைப் போன்றவர்களும் கூட பொருளாதார நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தொழிற்சங்க வேலைகளோடு வரம்பு கட்டி நின்றுகொண்டோம். வெகுமக்களின் கலாச்சார வாழ்வில் குறுக்கீடு செய்யும் விதமாக எங்களிடம் வேலைத்திட்டம் என்று எதுவும் இல்லை என்பதை நேர்மையாக சொல்லி விடத்தான் வேண்டும். ( ஆலை / அலுவலக மட்டத்தில் தொழிற்சங்கத்திற்குள் அணிதிரளும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் ஒரு வர்க்கமாக அரசியல்படுத்தும் வேலையைச் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கிய இதே காலக்கட்டத்தில்தான் குடும்பவிழா/ சமுதாயப் பெருவிழா என்கிற பெயர்களில் சாதிரீதியாக தொழிலாளர்களை பாகுபடுத்தி திரட்டும் வேலை முனைப்பு பெற்றது என்பதும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது)   

இப்படியான பின்புலம் கொண்டிருந்த வெகுமக்களில் ஒருபகுதியினர் ராமஜென்ம பூமியை முன்வைத்து சங்பரிவாரத்தின் கீழ் அணிதிரண்டதன் ஆபத்தை 1990 அக்டோபர் 10 அன்று உலகம் அறிந்துகொண்டது. ராமனுக்கு கோயில் கட்ட செங்கல் சேகரிப்பதாக சொல்லிக் கொண்டு 10.10.90 அன்று தேன்கனிக்கோட்டையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றினைக் கொண்டு அவர்கள் ஏற்படுத்திய பதற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நான்கு இளைஞர்களின் உயிரை பலிகொண்டது. பலியான சங்கர் மற்றும் பாபு (தேன்கனிக்கோட்டை), நரசிம்மப்பா (காமனாபாளையம்), ராஜேந்திரன் (திம்மச்சந்திரம்) ஆகிய நால்வருமே எந்தவொரு அமைப்பையும் சாராதவர்கள் - தற்செயலாக அங்கு வந்து கலவரத்தில் சிக்கிக் கொண்டவர்கள்.   ( பிரிட்டிஷ் காலத்து ஆவணங்கள்கூட கிடைக்கும் இணையத்தில் எப்படி தேடியும் தேன்கனிக்கோட்டை கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி யாதொரு பதிவும்  கிட்டவில்லை)   

யாரப் தர்காவின் உரூஸ் விழாவையும் பேட்ராயசாமி கோவில் விழாவையும் ஊர்கூடி நடத்துவது போல ஒற்றுமை முகம் காட்டிய தேன்கனிக்கோட்டையில் மதத்தை முன்னிட்டு ஒரு துப்பாக்கிச்சூடா? ஒரு நபரோ ஒரு அமைப்போ தூண்டிவிட்டால் உதிர்ந்து விடுமளவுக்கு பலவீனமாகத்தான் அங்கு ஒற்றுமை நிலவிவந்ததா? அல்லது அங்கு நிலவிவந்த வேற்றுமைகளை பார்த்தறிவதற்கு எனக்குத்தான் தெரியாமல் போய்விட்டதா? – என்றெல்லாம் பலவாறாக என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  

கலவரத்தில் சிக்கி உயிரிழந்த அப்பாவிகள்  “ராமஜென்ம பூமி மீட்பு” போராட்டத்தின் தியாகிகள் என்றே சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த அசோக் சிங்கால் தேன்கனிக்கோட்டை வந்ததையடுத்து ஒசூரிலும் பதற்றம். கலவரக்காரர்களை தப்பவிட்ட போலிசார் ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் வளைத்துப் பிடித்து தாக்கி வண்டிக்குள் தூக்கிவீசுவதும் விரட்டியடிப்பதுமாக வெறியாட்டம் ஆடினர். இப்படி காந்தி சிலைக்கருகில் போலிசிடம் சிக்கிக்கொண்ட எனது நண்பர் ‘கோத்தாரி’ இளங்கோவின் மண்டையை உடைத்த போலிஸ் அதற்குரிய சிகிச்சையைக்கூட கொடுக்காமல் “இந்து பயங்கரவாதியாக” காட்டி ரிமாண்ட் செய்து சேலம் மத்தியச் சிறையில் அடைத்தது. 

அடுத்துவந்த நாட்கள் அச்சமூட்டக்கூடியவை. விநாயகர் சதுர்த்தியை சாக்காக வைத்துக்கொண்டு இப்பகுதி முழுவதிலும் சங்பரிவாரம் ஊடுருவியது. வீட்டுக்குள் இருந்த பிள்ளையாரை வீதிக்கு கொண்டுவருவதில் அதற்கு அரசியல் ஆதாயமிருந்தது. ஒவ்வொரு வீதியையும் அடைத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய்களில் பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. இதற்காக அந்தந்த பகுதிகளில் குடியிருப்போரிடமும் வணிகர்களிடமும் கட்டாய வசூலில் இறங்குகிற – பணம் தராதவர்களை வேறுவகையாக மிரட்டிப் பறிக்கிற முரட்டுத்தனத்தோடு இளைஞர் பட்டாளமொன்றை சங் பரிவாரம் உருவாக்கியது அல்லது அப்படியானவர்களை அது இணைத்துக்கொண்டது. இதில் பக்தியுமில்லை பரவசமும் இல்லை, அராஜகம் மட்டுமே திமிறிக்கொண்டுள்ளது என்று விமர்சிக்கிறவர்களை மதவுணர்வை புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி திசைதிருப்புகிற தந்திரமும் கையாளப்பட்டது. உள்ளூர் மட்டத்தில் ஏதாவதொரு குழுவை தனக்காதரவாக நிறுத்திக்கொள்ள விரும்பும் மார்வாரிகள், தொழில்முனைவோர், வணிகர்கள் இப்படியான குழுக்களுக்கு உதவி செய்தனர். பா.ஜ.க ஆளுங்கட்சியான போது இப்பகுதியின் தொழிலதிபர்கள் பல்வேறு ஆதாயங்களை முன்னிட்டு வெளிப்படையாகவே இந்துத்வ அரசியலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். 

அதிமுகவின் முந்தைய அரசு நிறைவேற்றியிருந்த மதமாற்ற தடைச்சட்டத்தையும், ஆடு கோழி பலியிடுவதை தடுக்கும் சட்டத்தையும் எதிர்த்து தமுஎகச நடத்திய கருத்தரங்கத்திற்கு சங் பரிவாரத்தினர் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். அன்று மாலை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இதுகுறித்து ஏற்பாடு செய்திருந்த நேரலைக்காட்சியில் தோழர்.கே.கங்காதரனுடன் பங்கேற்றிருந்த என்னை தொலைபேசியில் அழைத்து ‘உன்னை கொல்லாமல் விடப் போவதில்லை’ என்று  மிரட்டல் விடுத்தனர். இந்த மிரட்டலும் நேரலையில் ஒலிபரப்பானது. இந்துத்வ கருத்தியலுக்கு எதிரான நடவடிக்கைகளை சங்பரிவாரம் எவ்வாறு அராஜகமாக எதிர்கொள்ளும் என்கிற விசயம் பரவலாக போய்ச் சேர்வதற்கு இந்த ஒலிபரப்பை அவர்கள் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

யோகா, தியானம், ஆன்மீகம், விவேகானந்தர் சிந்தனைகள், பாரம்பரியம், வாழும் கலை என்று ஏதேதோ பெயர்களில் கல்விநிலையங்களிலும் அரசாங்க அலுவலங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஊடுருவியுள்ள சங்பரிவாரத்தினர் இன்று ஒசூரையே தம் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் பிள்ளையார் சிலைகளின் உயரமும் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அவர்களது செல்வாக்கின் குறியீடாக காட்டப்படுகிறது. சிலைவைப்பு நாள் முதல் எடுப்பது வரையான காலம் முழுவதும் ஒசூரும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் சங்பரிவாரத்தினால் கட்டுப்படுத்துவதை தடுக்கவோ எதிர்க்கவோ இங்கு அரசுரீதியாகவோ அரசியல்ரீதியாகவோ யாரும் முன்வருவதில்லை.  

நியாயமான கோரிக்கைகளின் பேரில் ஏதேனும் உண்ணாவிரதமோ ஊர்வலமோ நடத்தப்போனால் பொதுமக்களுக்கு இடைஞ்சல் போக்குவரத்துக்கு தடங்கல் என்று சொத்தையான காரணங்களைச் சொல்லி சுடுகாட்டில் நடத்திக்கொள்ளுமாறு விரட்டியடிக்கிற போலிசும் அரசு நிர்வாகமும் இவ்வளவு எண்ணிக்கையிலும் பெருத்த அளவுகளிலும் ஆத்திரமூட்டும் வடிவங்களிலும் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படுவதை அனுமதித்துக் கொண்டேயிருக்கின்றன. கலைநிகழ்ச்சிகளுக்கான விளம்பரத்தட்டிகளுக்கு கூட முன் அனுமதி பெறவேண்டும் என்கிற கெடுபிடியை சங்பரிவாரத்திடம் காட்டுவதில்லை. இவர்களது தட்டிகளிலும் சுவரொட்டிகளிலும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிற படங்களும் வாசகங்களும் இடம் பெறுவதைக்கூட காவல்துறை ஆட்சேபிப்பதில்லை. ஏதேனும் வன்முறைகள் நடந்துவிடும் இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அரசியல் கட்சித்தலைவர்கள் / மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நுழைவதற்குகூட அனுமதிக்காமல் தடையுத்தரவு பிறப்பிக்கிற நிர்வாகமும் காவல்துறையும் இவ்வாண்டு ஒசூரில் இருக்கிற பிள்ளையார் சிலை எடுப்பு நிகழ்வில் அசோக் சிங்கால் பங்கேற்க அனுமதித்தது. பாபர் மசூதி இடிப்பை நினைவூட்டி இஸ்லாமியரிடையே பீதியையும் அமைதியின்மையையும் உருவாக்குவதற்காகவே  “அயோத்தியின் நாயகனே” என்கிற வரவேற்பு பேனர்கள் இப்பகுதி முழுவதும் கணக்கு வழக்கின்றி வைக்கப்பட்டதை போலிசும் நிர்வாகமும் அனுமதித்தன. 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே அசோக் சிங்கால் வந்தபோது கலவரம் நடந்ததையும், உ.பி. முசாபர் நகரில் மதக்கலவரம் நடந்துகொண்டிருந்த நிலைமையையும் கணக்கில் கொள்ளாது அனுமதித்ததன் மூலம் அரசு நிர்வாகமும் போலிசும் ஆட்சியாளர்களும் இந்துத்வ கருத்தியலுக்கு உடந்தையாக இருப்பது அம்பலமானது. 

அசோக் சிங்கால் வருகிறார் என்று அன்றைய தினம் முழுவதும் நகரத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியிலும் நகரத்துக்குள் நுழைவதற்குரிய பிரதானச் சாலைகளிலும் கடைவீதியிலும் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடைவிதித்தது போலிஸ். அதாவது அவர் வருவதை நகரத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக பொதுமக்களது உளவியலுக்குள் பதியவைக்கும் சங்பரிவாரத்தின் ஆசையை போலிஸ் நிறைவேற்றி வைத்தது. நடக்கக்கூடாத ஏதோவொரு விபரீதம் நடக்கப்போகிறது என்கிற பதற்றத்தை போலிசே உருவாக்கியது.  குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான போலிசைக் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை குலையாத வண்ணம் சிலைஎடுப்பை நடத்திக்கொள்ளுமாறு சங்பரிவாரத்தினரை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக,  பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து ஒட்டுமொத்த நகரத்தையும் சங்பரிவார் கையில் ஒப்படைத்தது. ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ்காரரும் அண்டையில் தளி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக  இந்திய கம்யூனிஸ்டும் இருந்தாலும்கூட ஒரேயொரு அமைப்பின் நிகழ்ச்சிக்காக ஒரு ஊரின் இயல்பான நடமாட்டத்தை ஏன் முடக்குகிறாய் என்கிற கேள்வியை எழுப்பக்கூட துப்பில்லாமல் கிடக்கிறார்கள். மற்ற கட்சிகளும் கூட இதேநிலையில்தான்- அரசியலைப்  பேசாமல் அமைப்புகளை மட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

பிள்ளையார் சிலைகளை கரைப்பதற்கு எடுத்துப்போன ஊர்வலத்தில் 15- 25 வயதிற்குட்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றிருந்ததைப் பார்க்கும்போது இனம்புரியாத அச்சமே மேலோங்கியது. குடும்பத்திற்கும் உள்ளூர் சமூகத்திற்கும் நாட்டுக்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்வதற்காக அணிதிரட்டப்பட வேண்டிய இவர்கள் அவற்றுக்கு எதிர்நோக்கம் கொண்டவர்களால் அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள். ஏழு தொழிலாளர்களைப் பிடித்து சங்கம் கட்டுவதையும் பொருளாதார நலன்களை முன்னிட்டப் போராட்டங்களை நடத்துவதையுமே புரட்சிகர நடவடிக்கை என்கிற புரிதலோடு என்னைப் போன்றவர்கள் முடங்கிக்கிடக்கும்போது வெகுமக்களை யார் வேண்டுமானாலும் எந்த அரசியலுக்காகவும் அணிதிரட்டிக்கொள்ள முடியும் என்கிற பாடத்தை ஒசூர் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. ( ஒசூர் போலவே கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் சங்பரிவாரம் பரவுவதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகள் தேவை) 

தேன்கனிக்கோட்டையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில்தான் (1984-1986) இப்பகுதி மக்களை இந்துத்துவ அமைப்புகளுக்குள் அணிதிரட்டுவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.சின் முதல் முழுநேர ஊழியர் ஒருவரும் (செந்தில்குமார்) வந்து சேர்ந்தார். மக்களின் எளிய கடவுள் நம்பிக்கையை மதவெறியாக மாற்றுவதையும், இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரோடு இந்துக்கள் பேணிவரும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதையும் தவிர வேறென்ன பணியை ஆற்றிவிடப்போகிறீர் என்று அவரை  அன்றைக்கு விமர்சித்துக்கொண்டிருந்தேன். அவரும் அவரது அமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலோடு அச்சம்தரத்தக்க வகையில் மக்களிடையே முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று இன்றைக்கு விசனத்தோடு வியாக்கியானம் செய்து கொண்டுமிருக்கிறேன். 

வெறுமனே விமர்சிப்பதையும் விசனத்தோடு வியாக்கியானம் செய்வதையும் நிறுத்திக் கொண்டு களமிறங்கிச் செயலாற்றுவதன் மூலமே விரும்பத்தக்க மாற்றம் நிகழும் என்கிற உண்மை என்னையும் ஒசூரையும் வழிநடத்தட்டும்.

செவ்வாய், அக்டோபர் 15

ரன்வீர் சேனாவின் அரசியல் புரவலர்கள் -எஸ்.வி. ராஜதுரை

13.10.2013 அன்று 'தந்துகி"யில் வெளியான ‘சாதிக்கொரு நீதி' கட்டுரையின் தொடர்ச்சியாக சில   செய்திகள்:
லஷ்மன்பூர் பாத்தே படுகொலை வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  இதுவரை மூன்றே முன்று கட்சிகள்தான் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளன : சி.பி.எம். (அதன் பொலிட்பீரோவே இந்தக் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது);  சி.பி.எம்(எம்.எல்.) - (லிபரேஷன்), ஆம் ஆத்மி கட்சி.  (பிரதமராகத் தகுதியுடையவர் நான்கு மொழிகளைப் பேசத் தெரிந்தவரா, ஒன்பது மொழி பேசத் தெரிந்தவரா என்னும் கணக்குப் போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு அவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்காது). ஆனால், தமிழக ஊடகங்கள் எதிலும் இந்தக் கண்டன அறிக்கைகள் ஏதும் இதுவரை கண்ணுக்குத் தென்படவில்லை. 

சச்சின் என்னும் கடவுள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதை செரிக்கவே முடியாமல்  வயிற்று நோய்களாலும் மனநோய்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த தேசம்;  டெல்லி இளம் பெண்ணை (அவர் தலித்தோ கறுப்பு நிறம் கொண்டவரோ அல்லர்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்திக் கொலை செய்தவர்களை ‘கண்ணுக்கு கண்' , ‘பல்லுக்குப் பல்'  வஞ்சம் தீர்க்கவேண்டும் என்று கொதித்தெழுந்தது இந்த தேசத்தின் மனசாட்சி ( நல்ல வேளையாக, இந்த ‘அறவியல்' தர்க்கத்தின்படி அந்தக் குற்றவாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கை விடவில்லை). இந்த தேசமும் அதன் மனசாட்சியும்  தலித்துகளின் நாளங்களிலோடுவது சாக்கடைத் தண்ணீர்தான்  என்று மனதார நம்புகின்றன. வேறுவிதமாக நினைப்பவர்கள்   இந்த ‘மனசாட்சி' இல்லாத மிகச் சிறுபான்மையினர்தான்.

‘சாதிக்கொரு நீதி' கட்டுரையில், லஷ்மன்பூர் பாத்தே படுகொலையை அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், ‘தேசிய அவமானம்' என்று கண்டனம் செய்த பிறகே ராப்ரி தேவி தலைமையிலிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம், ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்குமுள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமீர் தாஸின் தலைமையில் ஒரு ஆணையத்தை நியமித்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தோம். அந்த அறிக்கையை ஆணையம் சமர்ப்பிப்பதற்கு முன்பே அந்த அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றும், 2006இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய ஜனதா தளம்-பாஜகக் கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக் கலைத்துவிட்டது என்றும், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஜார்ஜ பெர்னாண்டெஸின் சமதாக் கட்சி ஆகியவற்றுக்கும் ரன்வீர் சேனாவுக்கும் தொடர்பு இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

 இது பற்றிய மேலதிக செய்திகள் CNN-BNN ஊடகத்தைச் சேர்ந்த பியூஷ் புஷ்பக், பிரபாகர் குமார் ஆகியோரால் திரட்டப்பட்டு 29.6.2006 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது அவர்கள் கைக்கு ஆமீர் தாஸ் அறிக்கையின் நகலொன்று கிடைத்திருக்கிறது. இந்த செய்தி நமக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதிலுள்ள முக்கிய விஷயங்கள்:

1.    அந்த ஆணையம் நன்கு செயல்பட்டு விரைவாகத் தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்குத் தேவையான அகக்கட்டுமான வசதிகளை ராப்ரி தேவி அரசாங்கம் செய்யவில்லை.

2.    2006இல் பதவியேற்ற நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதாதளம் + பாஜக) அரசாங்கம் அந்த அறிக்கை வெளிவராமல் தடுப்பதற்காக அந்த ஆணையத்தையே கலைத்துவிட்டது.

3.    ரன்வீர் சேனாவின் குற்றச் செயல்களுக்கு அரசியல்ரீதியான உதவி செய்ததற்காகவும் அந்த சேனாவின் உதவியைப் பெற்றதற்காகவும் முக்கிய அரசியல் தலைவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய அந்த ஆணையம் முடிவு செய்திருந்தது.

4.    ரன்வீர் சேனாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பரஸ்பர உதவி பெற்றுக் கொண்டிருந்த முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்களும் அவர்கள் இழைத்த குற்றங்கள் என நீதிபதி ஆமீர் தாஸ் ஆணையம் கண்டறிந்தவையும் கீழ்வருமாறு:
முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. ( உத்தரப்பிரதேசத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருந்தவர்).  ஹைபாஸ்பூரில் தலித்துகளையும் ஏழை மக்களையும் கொலை செய்த ரன்வீர் சேனா மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று பாலிகாஞ்ச் காவல் நிலையத்தை (இதன் அதிகார எல்லைக்குள்தான் ஹைபாஸ்பூர் வருகின்றது) மிரட்டிய குற்றம்.

சுஷில் குமார் மோடி,
பா.ஜ.க., பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், 2006-2011 நிதிஷ்குமார் அரசாங்கத்தில் துணை முதலமைச்சர். ரன்வீர் சேனாவுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்து தேர்தல்களின் போது தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட அந்த அமைப்பைப் பயன்படுத்தி வந்த குற்றம் ( குஜராத் மோடிக்கு இந்த பீகார் மோடி சற்றும் இளைத்தவரல்லர்).

காந்தி சிங், பீகார் பா.ஜ.க.வின் முக்கியத்தலைவர்; முன்பு லாலு பிரசாத் யாதவின் நெருக்கமான கூட்டாளி.1996ஆம் ஆண்டு தேர்தலின் போது  ரன்வீர் சேனாவின் முக்கிய தலைவர்களிலொருவரான சுனில் பாண்டேவிடமிருந்து உதவிகள் பெற்ற குற்றம்.

சி.பி.தாக்கூர், பீகாரின் இன்னொரு பாஜக பெருந்தலை. ஹைபாஸ்பூர் படுகொலை நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன் 1997இல் ரன்வீர் சேனா நடத்திய கூட்டங்களில் பங்கேற்றதுடன் அந்த சேனாவின் தலைவர் பிரமேஷ்வர் முக்கியாவுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த குற்றம்.

அகிலேஷ் சிங், ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்தவர்; மத்திய அரசாங்கத்தில் இணை அமைச்சராக இருப்பவர். தேர்தல்களின் போது ரன்வீர் சேனாவின் உதவியைப் பெற்றதுடன் அந்த சேனாவுக்கு நிதி உதவி செய்து வந்த குற்றம்.

ரன்வீர் சேனாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக மேற்சொன்ன ஆணையத்தால் கண்டறியப்பட்ட பிறர்:

ஷிவானந்த் திவாரி, ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் முக்கியத் தலைவர்களிலொருவர்.
ஸ்ரீராம் ஜத்தன் சின்ஹா, பீகார் முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.

அருண் குமார், நிதிஷ் குமார் அரசாங்கத்தில் அமைச்சர்.

முந்த்ரிகா சிங் யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

 ரகுநாத் ஜா, முன்னாள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்.

சுனில் பாண்டே என்கிற நரேந்திர பாண்டே, சமதாக் கட்சியின் முன்னாள் பீகார் மாநிலத் தலைவர்.

கிருஷ்ண சர்தார், நிதிஷ்குமாரின் விசுவாசி; ஐக்கிய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்.

அக்லாக், அகமது ஜகதீஷ் சர்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள்

காலஞ்சென்ற ராம் லகன் சிங் யாதவ், சந்திரதேவ் பிரசாத் வர்மா,
 நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள்.
நீதிபதி ஆமீர் தாஸ் ஆணையத்தின் அறிக்கை வெளிவராமல் தடுப்பதில் ஆளும் வர்க்கக் கட்சிகள் -‘சமூக நீதிக் காவலர்கள்' உட்பட அனைத்தும்  தங்கள் கூட்டணியைத் தாண்டி ஓரணியாக இருந்தது ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினமா என்ன? 









ஞாயிறு, அக்டோபர் 13

சாதிக்கொரு நீதி - எஸ்.வி. ராஜதுரை

 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில்  ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்காக  நாடும்  அதன் ‘மனசாட்சியாக' உள்ள ஊடகங்களும்  கொதித்தெழுந்தன. தமிழ் நாட்டிலும் கூட மாணவர்களும் இளைஞர்களும் பெண்கள் அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள்  நடத்தின.  அரசியல் கட்சிகளில்,  ஒரு ரூபா நாணய அளவுக்கு நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் பெண் தலைவர்களிடையே தார்மிக ஆவேசப் போட்டிகளும் நடந்தன. அந்த குற்றத்தை இழைத்தவர்கள் மிக விரைவில் விசாரணை செய்யப் பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் அளவற்ற ஆர்வம் காட்டி, பாலியல் வன்முறைக் குற்றத்துக்கான தண்டனையை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளைக் கூற ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகள் பலவறை ஏற்றுக்கொண்ட மத்திய அரசாங்கம், பாலியல் வன்புணர்ச்சிக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வகை செய்ய இந்தியத் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. வாக்கு வங்கியில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்குமே பெண்களின் ‘மானத்தைக்' காப்பதில் மிகுந்த ஆர்வம் இருப்பதால், மரணதண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு எத்தகைய எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனபதைப் பற்றி யோசிக்க நேரமோ மனமோ இருக்கவில்லை.
 
பாலியல் வன்முறைக்கு நாள்தோறும் இலக்காகி வருகின்ற தலித் பெண்களுக்காகவோ, வன்முறைக்கு பலியாகும் தலித் ஆண்களுக்காகவோ இந்த நாடோ அதன் ‘மனசாட்சியோ' இப்படித் தார்மிக ஆவேசம் காட்டியதில்லை. 1968 டிசம்பர் 25இல் கீழ வெண்மணியில் 44 தலித் விவசாயத்தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட போதும்கூட (அப்போது மின்னணு ஊடகங்கள் இருக்கவில்லை)  முதன்மையான அச்சு ஊடகங்களுக்கு அவற்றின் ‘மனசாட்சி' உறுத்தவில்லை. எனவே கடந்த 9.10.2013 அன்று பாட்னா உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு பற்றி ‘தி ஹிந்து' ஆங்கில  நாளேட்டைத் தவிர (கோவை பதிப்பு 10,11.10.2013), தமிழகத்திலிருந்து வரும் எந்த ஏடும் எந்தச் செய்தியையும் வெளியிடாதது வியப்பளிக்கக்கூடியதல்ல.  எந்த தலித் இயக்கமோ, தலைவர்களோ இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் தெரியவில்லை.
 
 தற்போது பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்திலுள்ளதும் முன்பு ஆர்வால் துணை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான மெஹாந்தியாக் காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்குட்பட்ட லக்ஷ்மண்பூர் பாத்தே என்னும் கிராமத்தில் பூமிஹார்கள் எனப்படும் பார்ப்பன நிலவுடைமைச் சக்திகளின் ஆயுதமேந்திய படையான ரண்வீர் சேனாவால்  1997 டிசம்பர் 1ஆம் தேதி இரவு ஐம்பத்தெட்டு தலித்துகள் (இவர்களில் 27 பெண்கள், 16 குழந்தைகள்) படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் படுகொலையை அன்றைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் ‘தேசிய அவமானம்' என்று கூறினார். எனினும் அந்த வழக்கு எந்தவொரு ‘fast tract court'க்கும் செல்லவில்லை. பீகாரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் குறுக்கீடுகள், அரசாங்கத்தின் மெத்தனம் ஆகியன மும்முரமாக இருந்தன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்னா உதவி மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி விஜய் பிரகாஷ்  மிஸ்ரா, 7.10.2010 அன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் 16 பதினாறு பேருக்கு மரண தண்டனையும் பத்துபேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்படாததால் ஒன்பது பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
 
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அவர்களுக்கான பல பணம், சாதி பலம், அரசியல் பலம் அனைத்தும் இருந்தன. ஏற்கெனவே பதின்மூன்று ஆண்டுகள் அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதற்காக லக்ஷ்மன்பூர் பாத்தேவிலிருந்து பாட்னாவுக்கு எண்ணற்ற முறை வந்து போக வேண்டியிருந்த தலித்துகளுக்காக  மா-லெ லிபரேஷன் கட்சியைச் சேர்ந்தவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் உதவி செய்யவில்லை. அந்தப் படுகொலை நடந்து 16 ஆண்டுகளுக்குப் பின 9.10.2013 அன்று பாடனா உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.என்சின்ஹா, ஏ.கே.லால் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அரசாங்கத்தரப்பு சாட்சிகளில் (அதாவது கொல்லப் பட்டவர்களின் உற்றார் உறவினர்கள்) சாட்சியங்களின் நம்பகத்தனமை இல்லை என்று கூறி, அம்ர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு சந்தேகத்தின் பலனை வழங்கி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். பீகாரில் பத்தோனி தோலா, நக்ரி பஜார், மியான்பூர், நாராயண்பூர், காக்டி-பாகா ஆகிய இடங்களில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளிலும் உயர் நீதிமன்றம் அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்திருக்கின்றது.
 
 மூன்றாவது அணிக்கு ‘சமூகநீதிக் காவலர்களின்' தயவும் ஒத்துழைப்பும் வேண்டியிருப்பதாலும்,  இந்த ‘சமூக நீதி' காவலர்களும் உயர் சாதி இந்துக்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாததாலும், நாடாளுமன்ற இடதுசாரிகளும் இந்த அப்பட்டமான நீதித்துறை அநீதியை ஒரு ‘தேசிய அவமான'மாகக் கருதுவதில்லை. லக்ஷ்மன்பூர் பாத்தேவில் கொலை செய்யப்பட்ட 27 பெண்களில் எட்டுப்பேர் கர்ப்பிணிகள்.  கொலை நடக்கும் நேரத்தில் தானிய மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதன் காரணமாக உயிர் தப்பிய ராஷ்மி தேவிக்கு அந்தக் கோர சம்பவத்தால் ஏற்பட்ட பீதியால் குறைப்பிரவசம் ஏற்பட்டது.  58 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலையுண்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.   ஒவ்வொரு நாளும் கிராமத்தின் ஏதோவொரு இடத்தில் ஒருவரையிருவர் பார்க்கிறவர்கள். கொலையுண்டவர்களின் உற்றார் உறவினர்கள்தான் அரசாங்கத் தரப்புச் சாட்சிகள். ஆனால், கொலை செய்தவர்களின் பெயர்களை அவர்களால் சரியாகச் சொல்ல முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறுகிறது. கொலை செய்தவர்கள் யார் என்பது உலகிற்கே தெரியும், ஆனால் தனக்குத் தெரியவில்லை என்கிறது பாட்னா உயர் நீதிமன்றம். கொலை செய்யப்பட்ட தலித்துகள் சிலரின் உறவினரான பெளத் பாஸ்வான் அரசாங்கத் தரப்பு சாட்சிகளொருவர்.  உடலும் உள்ளமும் தளர்ந்துபோன அவர் கூறுகிறார்: “தொடர்ந்து போராட எனக்கு சக்தியில்லை. ஐம்பத்தெட்டு கொலைகளுக்குப் பிறகு யாரும் குற்றவாளிகள் இல்லையாம். நீதிமன்றங்கள் அவர்களுடையவை; அரசாங்கம் அவர்களுடையவை; லத்திகள் அவர்களுடையவை; ஏழைகளுக்கு ஏதும் இல்லை” 
 
 லக்ஷ்மன்பூர் பாத்தே பகுதியிலுள்ள பூமிஹார்களும் உயர்சாதி இந்துக்களும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கொண்டாடியிருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் தலித்துகளின் வீட்டுக்குள் புகுந்து தாக்கப்போவதாகவும் அச்சுறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள எல்லாக் கிராமங்களையும் போலவே லக்ஷண்பூர் பாத்தே கிராமத்திலும் ஊராகவும் சேரியாகவும் பிரிந்து கிடக்கின்றது. சேரியிலுள்ள தலித்துகள் நான்கு சாதிகளாப் பிரிந்துள்ளனர். அந்த சாதிகளிலொன்றை மகாதலித் என்னும் புதிய வகைக்குள் கொண்டுவந்து  பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசியல் ஆதாயம் அடைந்தவர் இன்றைய பீகார் முதல்வர் நிதீஷ் குமார். இவரும் ‘சமூக நீதிக் காவலர்தான்'.
 
 இந்த வழக்கின் தீர்ப்பின் விவரம் நமக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. பீகார் அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற்ம் பத்தோனி தோலா வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கமும் தலித்துகளும் மேல்முறையீடு செய்துள்ளனர். நோம் சோம்ஸி உள்ளிட்ட அறிஞர்கள் பலர் இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து நீதி வழங்கும்படி உச்ச நீதிமன்றத்துக்கு பகிரங்க வேண்டுகோளும் விடுத்தனர். அந்தப் பின்னணியில் எழுதப்பட்டு 2012இல் ‘உயிர் எழுத்தில்' வெளியிடப்பட்ட கட்டுரை லக்ஷ்மண்பூர் பாத்தே தீர்ப்புக்கும் பொருத்தமானது என்பதால் அது இங்கு மறு வெளியீடு செய்யப்படுகிறது -எஸ்.வி.ஆர்.)

செவ்வாய், அக்டோபர் 8

காமன்வெல்த் மாநாடு: பொருத்தமான இடத்தில், மிகப்பொருத்தமான நபரால்.... -ஆதவன் தீட்சண்யா

இலங்கையில் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள காமன்வெல்த் மாநாடு பற்றி கருத்துரைக்குமாறு ஊடக நண்பர் ஒருவர் கேட்டதன் பேரில் என்னால் சொல்லப்பட்டவை:

1. அடிமைப்படுத்திய நாடுகளின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் சுரண்டி கோடிக்கணக்கான மக்களை கொன்றொழித்த பிரிட்டனால் உருவாக்கப்பட்ட காமன்வெல்த் அமைப்புக்கென்று ஏதோ மதிக்கத்தக்க மாண்புகள் இருப்பதாகவும் இலங்கையில் அதன் மாநாடு நடப்பதால் அந்த மாண்புகள் கெட்டழுகிப்போகுமென்றும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால், ராஜபக்சே போன்ற கொடுங்கோலர்களால் நடத்தப்படக்கூடிய அளவுக்கானதுதான் அதன் மாண்புகள். ஆகவே இப்போதாவது பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான நபரால் அந்த மாநாடு நடத்தப்படவிருக்கிறது என்பதறிக.

ஒருவேளை இலங்கையில் ரத்தாகி வேறொரு நாட்டில் அந்த மாநாடு நடத்தப்பட்டால் அங்கு ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங்கோ மற்றவர்களோ கைகுலுக்குவது பற்றிய கவலைகளும் கண்டனங்களும் வெளிப்படாதிருப்பதையும் சேர்த்தேயறிக.

2. இலங்கை ஆட்சியாளர்களின் பேரினவாதத்தையும் அதன் பேரால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களையும் அறியாத வேற்றுலகவாசிகளல்ல காமன்வெல்த் அமைப்பின் பொறுப்பாளர்கள். இலங்கை அரசு எப்படிப்பட்டது என்பதை நன்கறிந்தே காமன்வெல்த் மாநாட்டை அங்கு நடத்துவது என்கிற முடிவினை எடுத்துள்ளனர். ஆகவே அவர்களை அப்பாவிகளாக கருதிக்கொண்டு இப்போதாவது சுதாரித்து இலங்கையில் நடத்துவதை ரத்து செய்யுங்கள் என்று கோருவது அர்த்தமற்றது. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்கிற முடிவினை எடுத்த காலத்தில் அது என்னவோ அகிம்சையின் தாயகமாக அமைதி தவழ இருந்தது போலவும் திடுமென அது பேரினவாத பித்தேறி தமிழர்களை கொன்றொழித்துவிட்டது போலவுமான ஒரு தோற்றத்தை காட்டவே இப்படியான கோரிக்கை உதவும்.

3. காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இந்தியா வெளியேற வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக போர்க்குற்றவாளியான ராஜபக்சே இலங்கையில் நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் மட்டும் இந்தியா பங்கேற்கக்கூடாது என்கிற கோரிக்கை வேறு பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இந்தியாவின் துணையோடு தான் ஈழத்தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட அழித்தொழிப்பை நடத்தினோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்களே பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கை தன்னையறியாமலே இந்தியாவை நிரபாரதியாக்கும் வேலையைச் செய்கிறது. அதாவது, போர்க்குற்றத்தில் இந்தியாவுக்கும் பங்கிருக்கிறது என்று இதுவரை பலராலும் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளிலிருந்து இந்தியாவை விடுவிக்கிறது.

4. காமன்வெல்த் அமைப்பு அப்படியொன்றும் பெருமைக்குரிய அமைப்பல்ல. மக்களாட்சி கோட்பாடுகளை ஏற்காமல் இன்னமும் ராஜா ராணி இளவரசர் கிழவரசர் என்று மன்னர் கால மான்மியத்தில் உழன்று கிடக்கிற பிரிட்டன், தனது முன்னாள் அடிமை நாடுகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்திக்கொண்டிருக்கும் அந்த அமைப்பு உடனடியாக கலைக்கப்பட்டாக வேண்டும்.







இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...