ஞாயிறு, டிசம்பர் 29

முக்காலம் - ஆதவன் தீட்சண்யா

உடலை தளர்வாக வைத்துக்கொண்டு
இறுக மூடிக்கொள்ளுங்கள் கண்களை
இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறீர்கள்
நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
விழித்துக்கொள்கிறது உங்களது ஆழ்மனம்
 
ஆழ்மனதில் உறைந்துள்ள நினைவுகள் கிளர்ந்து 
பால்யகாலத்திற்கு திரும்புகிறீர்கள் நீங்கள்
ஆமாம்... இப்போது உங்கள் வயது
40..25... 10, 9, 8.... 1... 0.9, 0.7...
அதாவது இன்னும் நீங்கள் பிறக்கவேயில்லை
இன்னும் பிறந்திராத நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்?
-கருப்பையில்
நல்லது, கருப்பை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
ஆழ்மனதில் தங்கியுள்ள அச்சங்களின் துரத்தலில்
நீங்கள் உங்களது முதுங்காலத்திற்குச் செல்கிறீர்கள்
முதுமைகூடிய நீங்கள் என்னவாகிறீர்கள்...?
- செத்துப்போகிறேன்
சாவுக்குப்பிறகு எங்கேயிருக்கிறீர்கள்?
-குழிக்குள்
குழிவாழ்க்கை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
அறிதுயில் நிலைக்குச் சென்ற நீங்கள்
வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராகி
என் கட்டளைப்படி
நிகழ்காலத்திற்குத் திரும்புகிறீர்கள் இப்போது
ரிலாக்ஸ்.... பி ரிலாக்ஸ்.... ரிலாக்ஸ்....
மெதுவாக கண்களைத் திறந்திடுங்கள்... மெதுவாக...
இப்போது என் கண்களைப் பாருங்கள்
குட்...
அப்படியே ஊரை பாருங்கள்
என்ன தெரிகிறது... ?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு.

சக்சஸ்… சக்சஸ்…
நீங்கள் தமிழ்நாட்டுக்கே திரும்பிவிட்டீர்கள். 
நன்றி: ஆனந்தவிகடன், 1.1.2014

வியாழன், டிசம்பர் 26

ஸ்கைலேபும் எங்கப்பாவும் - ஆதவன் தீட்சண்யா

1979. ‘உண்மைச்செய்திகளை உடனுக்குடன் தருகிற அல்லது செய்திகளை முந்தித்தருகிற’ தொலைக்காட்சிகள் அப்போதில்லை தானே... வானொலிப்பெட்டி சிலரிடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதில் செய்தி வரும் நேரத்தைவிட கொரகொரவென்ற இரைச்சல் வரும் நேரம்தான் அதிகமாயிருந்தது.  எனவே எதுவொன்றுக்கும் செய்தித்தாள்களைத்தான் பார்க்க வேண்டியிருந்தது. சாமியாபுரம் கூட்டுரோட்டிலிருந்த டீக்கடைகளிலும் சலூனிலும் செய்தித்தாள் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்.

இப்படியான சூழலில்தான் அமெரிக்கா விட்டிருந்த ஸ்கைலேப் என்கிற செயற்கைக்கோள் ஒன்று ஏதோ கோளாறினால் பூமியில் மோதி வெடிக்கப்போவதாக செய்திகள் வரத்தொடங்கின. ஒவ்வொரு நாளிதழும் இதுபற்றி விலாவாரியாக எழுதித்தள்ளின. சேலம் பதிப்பு என்றால், அந்த பதிப்பின் வினியோக எல்லை எதுவரை இருக்கிறதோ அதுவரைக்குமான வரைபடத்தை வரைந்து வெடித்துச் சிதறும் ஸ்கைலேபின் பாகங்கள் எங்கெல்லாம் விழக்கூடும், இதனால் ஏற்படப்போகும் சேதாரங்கள் எவ்வளவு இருக்கும் என்கிற ரீதியில் இருந்தது இந்தச் செய்தி. பழிகாரனிடம் பஞ்சாங்கம் பார்த்தால் மட்டமத்தியானத்தில் மரணம் என்பானாம், அதுமாதிரிதான் எங்கள் ஊருக்கு வந்த பதிப்பு எங்கள் ஊரின் மையத்தில் ஸ்கைலேப் விழப்போவதாக சொன்னது. இந்த அழிமானத்திலிருந்து தங்களது ஊர் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒவ்வொரு ஊர்க்காரர்களும் நம்புமளவுக்கு இந்தச் செய்தி எங்கும் பீதியேற்றிக் கொண்டிருந்தது. நாள் நெருங்க நெருங்க ஊர் அழியப்போகும் செய்தி உலகமே அழியப்போகும் செய்தியாக மாறிவிட்டது.  

எம்ஜியார் ஆட்சியில் இன்னும் என்னென்ன கங்காட்சியெல்லாம் நடக்கப்போவுதோ என்று திமுகவினர் சந்தடிசாக்கில் அரசியல் பேச, அமெரிக்காக்காரன் ராக்கெட் வுழுவறதுக்கு அண்ணா திமுக மேல பழிபோடுறது அபாண்டம் என்று பதிலடி கொடுப்போர் பட்டியலில் எங்கப்பாவும் இருந்தார். சாவப்போறப்பாவாவது ஒத்துமையா இருங்கப்பா என்று நல்லெண்ணத்தூதுவர்கள் சிலர் சமாதானம் செய்தனர். 
 
உலகமே அழியப்போகையில் இதெல்லாம் இனி எதுக்கு என்று எதுவொன்றைச் செய்யும்போதும் வாய்விட்டு அரற்றாதவர் யாருமில்லை. எதிலும் பிடிமானமற்று ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். இரவானால் வாசலில் படுத்துக்கொண்டு அவரவரும் வானசாஸ்திர வல்லுநர் ரேஞ்சில் விஞ்ஞான விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பிறகு ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு, ‘உலகம் அழியப்போறது உறுதியாயிடுச்சு. சாகற வரைக்கும் சந்தோசமா இருப்போம்’ என்று களமிறங்கினர். சிரிக்கவே சிரிக்காதவர்கள் கெக்கலியிட்டார்கள். கருமிகள் கைகுளிர செலவழிப்பவர்களானார்கள். பகையாளியிடம்கூட ஜாடைமாடையாக உறவாடத் துணிந்தார்கள். செத்தால் ஒரேஇடத்தில் சாகவேண்டும் என்று குடும்பத்தில் யாரும் வெளியூர் போவதை தவிர்த்தார்கள்.

ஆடுமாடுகளை வெட்டி விருந்துகள் நடப்பதாகவும் தானியக்குதிர்கள் எல்லோருக்குமாக திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் இன்னாரென்று இல்லாமல் யாருடைய தோட்டத்திலும் யார் வேண்டுமானாலும் காய்கசுறுகளை அறுத்துக்கொள்கிறார்களென்றும்  கதைகதையாய் வந்த செய்திகள் உண்மையென நம்பி எங்கள் ஊரிலும் இப்படியாக சில சம்பவங்கள் நடந்ததது மங்கலாக நினைவுக்கு வருகிறது.

ஸ்கைலேப் வெடித்துச் சிதறி நாங்களெல்லாம் சாகக்போகும் அந்த நாளும் வந்தது. பலரும் குளித்து நல்லதை உடுத்தி சாமி கும்பிட்டு சாயங்காலம் வரப்போகும் சாவுக்காக காத்திருந்தார்கள். பார்க்கப்போனால் சாவைக்கண்டு யாரும் அஞ்சியதாகவே தோன்றவில்லை. சாவு ஒரு திருவிழா நாளின்  மனநிலையோடு எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை எல்லோருமே சாகப்போகிறோம் என்பதால் ஏற்பட்ட நிறைவுணர்ச்சியாகக்கூட இருக்கலாம் என்று இப்போது படுகிறது.

டீக்கடைக்குப் போய் கடைசி செய்தியை படித்துவிட்டு எங்கப்பாவும் வீட்டுக்குத் திரும்பியிருந்தார். ஸ்கைலேப் பற்றி அறிந்திராத பருவத்துச்சேவல் ஒன்று எப்போதும்போல குப்பைமேட்டை கிளைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டவர், நாங்களே போனதுக்கப்புறம் நீ மட்டும் இருக்கப் போறியாக்கும் என்று எட்டிப் பிடித்தார் அதை. கடைசி சோறு கறி சோறாக இருக்கட்டும்  என்றார். பொதுவாக மத்தியானச் சாப்பாடு உண்ணும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை என்றாலும் பசியோடு சாகவேண்டியதில்லை என்று நினைத்து ஏதோ காய் நறுக்கிப்போட்டு எங்கம்மா ஏற்கனவே வைத்திருந்த குழம்பு எங்களுக்கு அந்த நொடியில் சட்டென பிடிக்காமல் போனது. கறியிருப்பக் காய் கவர்ந்தற்று தானே. நாங்கள் கோழிக்கறி குழம்பிற்காக காத்திருக்கத் தொடங்கினோம்.

முழங்கைமீது கோழிக்கழுத்தை வேகமாக அடித்து அதன் உயிரை நிப்பாட்டிய அப்பா, றெக்கையை இணுக்கியெறிந்துவிட்டு நெருப்பில் வாட்டி மஞ்சள்  தடவி பிறகு வாகாக அறுத்து எப்போதுமில்லாத பக்குவத்தில் கறியை அம்மாவிடம் கொடுத்தார்.  குழம்பு தயாரானதும் வாசலில் இருந்த வாதநாராயணன் மரத்தடியில் நான், எனது தங்கைகள், தம்பி, அம்மா, அப்பா  எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் போது சாயங்காலம் மூணுமணி பஸ் போனது. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் போன அப்பா, சலவைத்துணியை உடுத்திக்கொண்டு வெளியே வந்தார். அம்மாவிடம், ‘ரத்தினம்மா ஒரு தூக்குப்போணியில அஞ்சாறுத்துண்டு கறி போட்டு கொஞ்சம் கொழம்பும் ஊத்து’ என்றார். அக்கம்பக்கத்து காட்டுக்காரர்கள் யாருக்கோ கொடுப்பதற்கு கேட்கிறார் போல என்று நினைத்துக்கொண்டு அம்மாவும் பாத்திரத்தில் ஊற்றி மூடிபோட்டு அப்பாவிடம் கொடுத்தது. யாருக்குப்பா இது என்று நாந்தான் கேட்டேன். ‘ரவி, நீங்கள்லாம் உங்கம்மாவோட சாவுங்க, நான் போயி எங்கம்மாவோட சாகறேன்.. ஒருவேளை சாகலேன்னா நாளைக்கு தாத்தம்மாவை இங்கு கூட்டியாறேன்...தைரியமா இருங்க...’ என்று  சிரித்தபடி சொல்லிக்கொண்டே 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற ஆர்.சி.செட்டிப்பட்டிக்கு கிளம்பிப் போய்விட்டார்.

கடைசியில் ஸ்கைலேப் ஆஸ்திரேலிய கடலுக்குள்ளேயோ வேறெங்குமோ விழுந்தது என்கிற செய்தியுடன் கூடிய நாளிதழை வாங்கி எடுத்துக்கொண்டு ‘நாமெல்லாம் அவ்வளவு சீக்கிரமா செத்துருவமாடா... ’ என்று சிரித்தபடியே அடுத்தநாள் காலையில் திரும்பிவந்தார் அப்பா. அப்படி இப்போதும் திரும்பிவந்துவிடுவார் என்றுதான் எனது எழுதுமேஜைக்கு எதிரில் தொங்கும் அவரது புகைப்படத்தை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.

இன்று எங்கப்பா எஸ்.கே.மாரியப்பனின் மூன்றாவது நினைவுநாள்.

26.12.2013


வியாழன், டிசம்பர் 5

அம்பேத்கர் சிந்தனையே தொடக்கப்புள்ளி - எஸ்.வி.ராஜதுரை


‘தமிழில் அம்பேத்கர்' என்பது குறித்துப் பேசுகையில், அண்ணல் அம்பேத்கரையும் அவரது
அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன்முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்கவேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான  ‘ரிவோல்ட்', ‘குடி அரசு' ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள், எனக்குத் தெரிந்தவரை,1929இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியக் குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக 1919இல் அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த   நிகழ்வுதான் அவரது தீவிரமான பொதுவாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால்,அந்த பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.

29.5.1929இல் ஜல்கவோன் என்னும் இடத்தில் மத்திய மாகாணங்கள்-பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை ‘பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் ‘குடிஅரசு' (குஅ) வெளியிட்டது (குஅ,16.6.1929).அம்பேத்கர் நிறுவிய சமாஜ் சமதா  சங் (சமுதாய சமத்துவ சங்கம்)  மராத்தியத்திலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமையுரையின் மிகச் செறிவான சுருக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், ‘முதல் மகாராஷ்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது.அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்ணை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு  “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வே.ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும்  கடிதமும்  அங்கு படிக்கப்பட்டன” என்னும் செய்திக்குறிப்பிலிருந்து பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்ததோ என்றோ ஊகிக்கலாம் (Revolt,29.9.1929). பின்னர், புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் (இதில்தான் எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில்  மகாத்மா ஃபுலே பற்றிய முதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது) வெளிவந்தது (Revolt,10.11.1929). அம்பேத்கரின் அரசியல், சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடந்த சொற்போர்கள், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணாநோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள், அம்பேத்கர்-ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி.ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும்  எழுதப்பட்ட கட்டுரைகள், காந்தியின் ‘ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.

பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்து கொண்டிருந்த 1936-1937ஆம் ஆண்டுகளில்தான், லாகூரிலிருந்த ஜாத் பட் தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர்  எழுதியிருந்ததும்  ‘தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' எனச் சொல்லப்படுவதுமான ‘The Annihilation    of Caste' என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு ‘குடி அரசு' இதழில் ‘ஜாதியை ஒழிக்க வழி' என்னும் தலைப்பில்  ஓராண்டுக்காலம் தொடர்கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல்வடிவிலும்  கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர், அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இந்திய மொழிகளில், அந்த உரை மொழியாக்கம் செய்யப்பட்டது தமிழ் மொழியில்தான் என்று கூறலாம்.  இதுகுறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் ‘பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்' கலந்துகொண்ட போது ‘குடி அரசு' எழுதிய தலையங்கம், சில சுவையான தகவல்களைக் கூறுகிறது: 
1920களின் இறுதியில் மேற்சொன்ன ஜாத் பட் தோடக் மண்டலின்' துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்; பெரியார் இந்துமத விரோதி, நாத்திகர், முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில், பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்; பின்னர் 1936இல் அந்த அமைப்பின்  மாநாட்டில் தலைமையுரை  நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால், அந்த  மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை; “டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில் அதைத் தமிழில் மொழிபெயர்த்து ‘ஜாதியை ஒழிக்கும் வழி' என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0-4-0வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது, சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்” (குடி அரசு, தலையங்கம், 13.1.1945)
மேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துகளை காந்தி விமர்சித்ததையும் காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம்.ஆயினும், அந்த பதில்களிலும் ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது என்ன?' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வருணதர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தபோதிலும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே  பரிந்துரைக்கப்பட்ட மகத்தான  படைப்பு  ‘சாதி ஒழிப்பு' நூல்தான்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மற்றிக்கொள்ள காங்கிரஸார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது,1940இல் பம்பாயில் அம்பேத்கர்,ஜின்னா, பெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர்.பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரஸாரின் சூழ்ச்சியையும் விமர்சித்து அவ்ர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் ‘குடி அரசு' இதழில் காணப்படுகிறது (குடி அரசு,28.1.1`1940).ஆனால், அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும்,  அந்த சந்திப்பு குறித்து ‘தி பாம்பே குரோனிக்கிள்' என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்தி  மகாராஷ்டிர அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட “Source Material on Dr.Babasaheb Ambedkar and the Movement of Untouchables ‘ என்னும் நூலில் காணப்படுகிறது (பக்கம் 210).1940 ஜனவரி 8ஆம் தேதி மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்த செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின் 208-210ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.

வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர், அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, ‘திராவிட நாட்டில்', மகாராஷ்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் ‘குடி அரசு' தலையங்கம்  ஒன்று குறிப்பிடுகிறது(குடி அரசு, 30.4.1944.) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோ, மராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை. மேலும்,வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பாத்திரத்தை அம்பேத்கர் மிக உயர்வாக மதிப்பிட்டு எழுதியிருப்பதை தனஞ்சய் கீரின் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோமேயன்றி, அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து நேரடியாக அல்ல. ஒருவேளை, ‘மூக்நாயக்', பகிஷ்கிருத் பாரத்', ‘ஜனதா' ஆகிய மராத்திய ஏடுகளில் அம்பேத்கர் எழுதியவை அனைத்தும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும்போது, மேற்சொன்ன விசயங்கள் குறித்த கூடுதலான தகவல்களும் அம்பேத்கரின் ஆளுமையிலிருந்த வேறு பரிமாணங்களும் நமக்குத் தெரியக்கூடும்.

சுயமரியாதை ஏடுகள், எப்போதுமே காங்கிரஸ் இந்து-தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும் அம்பேத்கரை உயர்த்தியும் எழுதிவந்தன. எடுத்துகாட்டாக,
தாழ்த்தப்பட்டோர் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளலாகதென்றும், இவ்வளவு வேற்றுமைகளை இன் நாட்டிலேயுண்டு பண்ணி, இந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கார் சொல்லிவருகிறார். ஆனால், தென்னாட்டில், நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சில தோழர்கள், முனிசாமி பிள்ளை, சிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கார் ஹிந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரசங்கங்களை ‘ஹரிஜனங்கள்' (தாழ்த்தப்பட்டோர்) கவனிக்கக்கூடாது. ஹிந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்கவேண்டும்” என்றும் “அம்பேத்கார் ஹிந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை” என்றும் கூறிவருகிறார்கள். இவர்கள், நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து  சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும்...என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால், இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோ, எதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா (குடி அரசு 6.1.1`945)
1946ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும் விசயங்கள் தொடர்பானவை:1.அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது; 2.1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது; 3.காஷ்மீர் விவகாரம்; 4.சோசலிச சீனாவை ஐ.நா.அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது; 5.இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து ‘விடுதலை'யில் சா.குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மட்டும் கொண்டு சா.குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பைத் தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின், ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் ‘அம்பேத்கர் யார்' என்னும் தலைப்பில் வெளியிடப் பட்டுள்ள சா.குருசாமியின் கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும்கூட அவர் மீது பெரியார் மிகப்பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக 1947 ஜூலையில் மாயவரத்தில் நடந்த தாழ்த்தப் பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம்:
தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக்கொண்டேன். ஏன்? என்னைப்போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால்,”பஞ்சமர்கள் என்பவர்கள் இந்துமதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்ம) மதத்தை சாரவேண்டும்” என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930-இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம்  பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் இராமாயணத்தைக் கொளுத்தியவர். "கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்" என்றுகூட, அதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர்.  “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை, இனியும் இருக்காது; இந்து மதத்தை விட்டொழித்தலொழிய இழிவு நீங்காது” என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம்  செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால், அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்  மாற்றிக்கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது (விடுதலை,10.7.1947) 
அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்று அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீதுகூட அவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன், இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்து வந்தன. எடுத்துக்காட்டாக, பிற்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை ‘இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்து பெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து, அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, ‘பிற்படுத்தப்பட்டோர்' என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர்.1955இல் பர்மாவில் நடந்த உலக பெளத்த  மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்துகொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடந்த உரையாடல்களை ‘விடுதலை' ஏடு பதிவு செய்துள்ளது.

அம்பேத்கரின் ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன?', ‘இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்' போன்ற நூல்களிலுள்ள கருத்துகள் பெரியார் இயக்க ஏடுகளில் பலமுறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமான போது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்துப் பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது:
இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கார் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால், டாக்டர் அம்பேத்காருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும் படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு அவருடைய பல கருத்துகளைச் சின்னபின்னமாகும் படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை ‘முட்டாள்களின் உளறல்கள்' என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்துமதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப்பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துகள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கார் முடிவு எய்தியதானது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும் (விடுதலை, 8.12.1956: வே.ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்,1934)
அம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், ஒத்த கருத்துகள், அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம் தந்து வந்த மதிப்பு, கருத்து வேறுபாடுகள்,  இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய  விஷயங்களாகும் இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் இலண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோது, ஃபேபியன் சோசலிசக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான  பொருளாதார அறிஞர் சிட்னி வெப், அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் ஃபேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த ஃபேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம், பெண்ணியம், சோவியத் ரஷியா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள் பெரியாரின் ‘குடி அரசு' இதழில் வெளியாகியுள்ளன. அரசு யந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது ஃபேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து.

மேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன், எல்.டி.ஹாப்ஹவுஸ் ஆகியோரிடமிருந்துதான் (‘பிரிட்டிஷ் கருத்துமுதல்வாதச் சிந்தனைப் பள்ளி' எனச் சொல்லப்பட்ட சிந்தனைப்போக்கின் முக்கிய பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார். ஹாப்ஹவுஸின் கருத்துகள், சுயமரியாதை இயக்கத்தில் முக்கியப் பாத்திரம் வகித்தவர்களிலொருவரான ஆர்.கே.சண்முகத்தின் மீதும் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. பார்ப்பனரல்லாதோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்கப்பட்டு வந்த சமயத்தில், ‘திறமை'என்பதன் பெயரால் அதை எதிர்த்துவந்த பார்ப்பனர்களுக்கு பதில் சொல்லும் வகையில் ‘ரிவோல்ட்' ஏட்டில் ஆர்.கே.சண்முகம் எழுதிய கட்டுரையொன்று ஹாப்ஹவுஸின் கருத்தொன்றை  எடுத்துரைக்கிறது: "திறமை என்பதை மட்டுமே வலியுறுத்தி வந்தால், சோசலிசத் தலைவர்கள் அனுபவித்த வறுமை, சிறைத் தண்டனை ஆகிய அனைத்தும் வீணாகி, சமுதாயத்தின் கொடியில் மனிதநேயம், தன்னுரிமை, நீதி ஆகியன அழிக்கப்பட்டு அந்த இடத்தில் ‘திறமை' என்னும் ஒரு சொல் மட்டுமே பொறிக்கப்பட்டுவிடும்”. (R.K.Shanmugam, Some Implications of Democracy, Revolt,12 December 1928). 'சாதி ஒழிப்பு' (Annihilation of Caste)  நூலில், சாதிய சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை ‘படிநிலை ஏற்றத்தாழ்வு' (graded inequality) என்று அம்பேத்கர் கூறுகிறாரே, அதே கருத்து 1928இல் வெளியான ஆர்.கே.சண்முகத்தின் கட்டுரையில் இருப்பதைக் காணலாம். அம்பேத்கரைப் போலவே, பெரியாரும்  சோசலிச இலட்சியத்திற்கு வந்து சேர்ந்தது கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலமாக அல்ல- இருவரும் மார்க்ஸியத்தின் மீது தொடர்ந்து அக்கறை காட்டி வந்த போதிலும்.

II

‘தமிழில் அம்பேத்கர்' என்று, அம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த தலித் இயக்க செயல்வீரர்கள், அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமிப் பறையர், அன்பு.பொன்னோவியம் என்பதை இங்கு நினைவுகூர்ந்தாக வேண்டும். அதேபோல எரிமலை ரத்தினம், எக்ஸ்ரே மாணிக்கம், பெளத்த பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘புத்தமும் அவர் தம்மமும்' நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும்தொகையை ஏற்றுக்கொண்ட ஒய்.எம்.முத்து, திருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்துக்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது என்ன?' நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். அப்போது அவர் பாஜக தலைமையிலான கூட்டணி அமைச்சராக இருந்தார். கடந்த பன்னிரண்டாண்டுகளாக ‘தலித் முரசு' தொடர்ந்து அம்பேத்கரின் படைப்புகளிலுள்ள முக்கியப் பகுதிகளின் தமிழாக்கத்தை வழங்கிவருவதுடன், அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே, பெரியாரையும் அவரது இயக்கத்தையும் ‘தலித்திய' கண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில  நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்று பெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசாரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் பிறப்பால் தலித்துகளோ, தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர், அவர்கள் அயோத்திதாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவ, பின்நவீனத்துவ தலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன்முதலில் அறிமுகம் செய்துவைத்தவர் பெரியார் என்பதும், ‘சாதி ஒழிப்பு' நூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும்கூட தமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோ, தலித் அரசியல் கட்சியையோ சாராத ‘தலித் முரசு' ஏட்டால்தான் கொண்டுவரப்பட்டுள்ளது.

 மேலும், 'புனே ஒப்பந்தம்' தொடர்பாகவும் அம்பேத்கரின் பெளத்த மத மாற்றம் தொடர்பாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்ட,நடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம்கூட ‘சாதி ஒழிப்பு' குறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத ‘தலித் எழுச்சி' தமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கர் படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன? அவர்களால் செய்யத் தவறியவை ஒருபுறமிருக்கட்டும்.என்சிபிஎச் நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை இந்த ‘எழுச்சி மிக்க தலித் இயக்கங்கள்' நடத்தியிருக்கின்றன? இவை போகட்டும். கேரள நடிகர் மம்மூட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பான நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் ‘டப்பிங்' செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதா? இந்திய மொழிகள் அனைத்திலும் அதனை ‘டப்பிங்' செய்து வெளியிட மத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என ‘அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள், பங்கு பெற்றுள்ளவர்கள்- ராம் விலாஸ் பஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா? ஆகவே  அம்பேத்கரை ‘இருட்டடிப்பு' செய்ததாக, செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த ‘தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை.

III
எப்படியிருப்பினும், தற்சமயம் என்சிபிஎச் நிறுவனத்தார் 39 தொகுதிகளில் அம்பேத்கரின் படைப்புகளைத் தமிழில் கொண்டுவந்த பிறகும் ‘அம்பேத்கர் இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்' என்னும் குற்றச்சாட்டை இனி யாராலும் முன்வைக்க முடியாது. ஆயினும், அம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோ, மேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக்கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான்.அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத்  தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் அம்பேத்கர் இயக்கத்தோடு,அவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள்.இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவது ஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை. அம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது; அம்பேத்கரின் படைப்புகள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவே இந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத்தீரத்தான், அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது.எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது, அந்த மாபெரும் அறிஞரின், போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் அந்தத் தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும், அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் (dissertations) தவிர, மற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான இலட்சியத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை; ஒவ்வொரு எழுத்தும் பேச்சும், குறிப்பிட்ட அரசியல், சமூகச் சூழலில், குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே, எந்த சூழலில், எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார், பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். ஆனால், ஆங்கிலத்தொகுப்புகள் அம்பேத்கரின் படைப்புகளை சம்பந்தப்பட்ட வரலாற்று, அரசியல், சமூகச்சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை.இந்தக் குறைபாடுகள் தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புக்குரியதல்ல.

அம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனை அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித்தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர், வரலாறு, பொருளாதாரம், மானுடவியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்வி, அவரது சிந்தனையின் பன்முகத்தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது: ஆராய்ச்சி அறிஞராக, கல்லூரிப் பேராசிரியராக, கல்வியியலாளராக, வழக்குரைஞராக, பரோடா சமஸ்தான இராணுவத்தின் லெஃப்டினண்டாக, வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக,சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக,பிரசுரங்களை வெளியிடுபவராக, பத்திரிகையாளராக, கிளர்ச்சியாளராக, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராக, அரசியல் சட்டத்தை வரைபவராக, புத்தரின் சீடராக, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர்  தன்- வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப்  போலவே, அந்த தன்-வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய படைப்புகள் பலவற்றில் அவரது தன் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

அவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய-சாதிய ஆதிக்கத்தின், அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில், அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து, அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும், இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில் இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும்  அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே ‘தீண்டாமை' என்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான், அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, ‘தீண்டத்தகாத' மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றி, பிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார்.

மகாராஷ்டிர அரசாங்கம் அம்பேத்கரின் எழுத்துகளையும் பேச்சுகளையும்  முழுமையாகத் தொகுத்து வெளியிடுவதற்கு முன்பும் பின்பும் அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு பதிப்பகத்தாரால், நிறுவனங்களால், தனிமனிதர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அம்பேத்கரின் படைப்புகள் என நமக்கு வழங்கப்படும் அந்தத் தொகுப்புகள் பெரும்பாலும் அவர் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு குறிக்கோள்களுக்காக, வெவ்வேறு வாசகர்களை அல்லது சமூகப்பிரிவினரைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டவையும் பேசியவையுமாகும். எனவே அத்தகைய தொகுப்புகளைப் படிக்கும்போது அம்பேத்கர் பற்றி நாம் உருவாக்கிக்கொள்ளும் அபிப்பிராயமும், அவரது தனிப் படைப்பொன்றைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும் அபிப்பிராயமும் ஒன்றுக்கொன்று மாறுபடலாம். சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைபாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோ அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. ‘வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை' என்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே 'தாழ்த்தப்பட்டோருக்குத்  தனி வாக்காளர் தொகுதி' என்னும் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார்.

தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தித் தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, 'இந்தியாவில் சாதிகள், அவை செயல்படும் விதமும், தோற்றமும் வளர்ச்சியும்' (Castes in India: Their Mecahnism,Genesis and Development) என்னும் ஆய்வுக்கட்டுரையை ‘சாதி ஒழிப்பு' நூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரை அவரது விருப்பம் நிறைவேறியது.  ஆனால், தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோ  திருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை.அவர் எழுதி முடிக்காத வரைவுகள் (drafts) ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் மிகத் திட்டமிட்ட முறையில் எழுதப்பட்டிருப்பதாகவும் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும் அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.

அம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள், அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட  இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்  ‘வேலை செய்யும் உரிமை' சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு அவையில் போராடினார். ஆனால், அவரது  கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேபோல பொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது “அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல; மாறாக, நேரு, பட்டேல், பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பட்டின் விளைவு ” என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார்.

வரலாற்று, பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் ‘சூத்திரர்கள் யார்'? போன்ற நூல்களும்கூட  மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்ட, ‘தீண்டத்தகாத' சூத்திரர்கள், தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்து அவர்களுக்கிடையே பரந்த நேச அணியை உருவாக்குவதுதான் அந்த  அரசியல் குறிக்கோள்.  இந்தியாவில் நிலவும் சுரண்டல், வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும், சுரண்டலும் வறுமையும் ஏற்றத்தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்ஸிய விளக்கமான ‘பொருளாதாரம் என்பது அடித்தளம், அரசியல்,பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்கு' என்பதைத் தலைகீழாகப் புரட்டினார்:

ஆனால், அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மத, சமூக, அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோ, கட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால், அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோல, சமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால், இருக்கும் சமூக, அரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும் (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை: Gail Omvedt, Undoing the Bondage:Dr.Ambedkar's Theory of Dalit Liberation in K.C.Yadav (Ed), From Periphery to Centre Stage: Ambedkar, Ambedkarism & Dalit Future,Manohar, Delhi,2000,p 117)                                                         

அவர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவே, கம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கிய பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியா, சீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுடனேயே பாராட்டினார்: “ரஷியப் புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்” எனக் கூறிய அவர், சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்துவிடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும் இவை மூன்றையும் வழங்கக்கூடியது பெளத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol 3(1987),p 462). இந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும், அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோ அந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.' புத்தரா, காரல் மார்க்ஸா' என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, அவர் தனது இறுதி நாள்களில் எழுதி முடித்த ‘புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூலிலும்கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பெளத்தம், அறவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலிசத்தை பரிந்துரைக்கிறது. அது, பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பெளத்தத்தைப் புதுப்பிக்க இந்தியா, இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. ”தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல”, ‘தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல” என ‘புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அம்பேத்கர் கூறுகிறார்.

இந்தக் கூற்றுகளின் அடிப்படையில், அம்பேத்கர், பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவும் தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும், பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாக, மத மாற்றம் என்னும் விஷயம். 1935-36ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தாகதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கிய காரணங்களிலொன்று, கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும். தலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கெனவே இருக்கின்ற, இந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால் அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறிய போது, அவர்கள் ஏற்றுக்கொண்ட மதம், அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பெளத்தமேயன்றி ஏற்கெனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை. அம்பேத்கருடன் பெளத்தம் தழுவியவர்களிடையே, இந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பெளத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், ‘புத்தரும் அவர் தம்மமும்' நூலில் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடு, இந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக்கொணரவோ, கிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.

தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூலகாரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும் பார்ப்பனியக் கருத்துநிலையை ஏற்றுக்கொண்ட சூத்திரகள் துணைக்காரணமே என்றும், பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதார, அரசியல், பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால், பணக்கார விவசாயிகளால், வர்த்தகர்களால், பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஐயர், ஐயங்கார், கவுண்டர், நாடார், நாயுடு, வன்னியர், தேவர், நாடார், முதலியார், பார்ஸி, பனியா, சிந்தி, போரா முதலாளிகளிடையே தற்போது சாதி- வருண அடிப்படையிலான சம்பிரதாய, சடங்கு வேறுபாடுகள் மறைந்துவிட்டன; அல்லது அவை பொருட்படுத்தக்கூடியனவாக இல்லை. சூத்திர சாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தியப் பணக்காரர் பட்டியலில் முதல்வரிசையைப் பிடித்துக்கொண்டால் ‘மவுண்ட் ரோடு மகா விஷ்ணு' குடும்பத்திலிருந்துகூடப் பெண் எடுக்கலாம். ஆனால், அவர்கள் தத்தம் சாதிகளைச் சேர்ந்தவர்களின் சாதி உணர்வை வளர்க்கவும் உழைக்கும் மக்களைச் சாதி அடிப்படையில் பிரிவுபடுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். வன்னியர் சங்கம், தேவர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம், நாடார் சங்கம் முதலியவை அனைத்தும், அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டுரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால், அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலித்துகள் மீது மட்டுமின்றி ஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றது (கொடியங்குளம்).

ஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின்  நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும்,கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணிதிரள்வதன் மூலமும்,  நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகள் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமே, அதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் ‘பிறத்தியாராக', ‘அந்நியராக', ‘மற்றவராக' பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் ‘வன்முறை', வன்முறை நாடாமை' என்னும் அறவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூட அம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப்புள்ளியாகக் கொள்ளவேண்டும்.

அம்பேத்கர் என்னும் மாபெரும் மனிதரின் சிந்தனையையும் பணியையும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள என்சிபிஎச் நிறுவனம் கொண்டு வந்துள்ள தமிழாக்கத் தொகுப்புகள் முதல்படியாக இருக்கும். ஏற்கனவே வெளிவந்த தொகுப்புகள் பற்றிய மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் கற்றறிந்தோரிடமிருந்தும் அம்பேத்கர் சிந்தனைகளில் இன்னும் நல்ல பரிச்சயம் உள்ளவர்களிடமிருந்தும் கேட்டுப்பெற்று அடுத்த பதிப்புகள் செழுமைப்படுத்தப்படும்ப்படும் என்னும் நம்பிக்கையோடு என்சிபிஎச் நிறுவனத்தாரையும் இந்தத் தொகுப்புகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் வெளியிடும் நிகழ்ச்சியையும், அதனையொட்டிய  இருநாள் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்துள்ள சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, அம்பேத்கர் பொருளாதார ஆய்வு மையத் தலைவர் முனைவர் எஸ்.சின்னம்மை ஆகியோரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பு:
அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு வெளியிடப்படும் இக்கட்டுரை ‘தமிழில் அம்பேத்கர்' என்னும் தலைப்பில் ‘ தலித் முரசு' டிசம்பர் 2009இல் வெளியானது. பின்னர் ‘அம்பேத்கரின் சிந்தனையே தொடக்கப்புள்ளி' என்னும் தலைப்பு மாற்றத்துடன் ‘விடியல் பதிப்பகம்' கோவை 2012இல் வெளியிட்ட ‘சாட்சி சொல்ல ஒரு மரம்' என்னும் எஸ்.வி.ராஜதுரையின் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.



இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...