சனி, ஜூன் 7

சாவழைப்பு - ஆதவன் தீட்சண்யா



ருவேளை
இக்கவிதை பாதியிலேயே நின்றுபோயிருக்குமானால்
நான் கொல்லப்பட்டுவிட்டதாக கருதிக்கொண்டு
எழுதிமுடியுங்கள் மிச்சக்கவிதையை
அவ்வாறல்லாது
என்னைத் தேடிக்கொண்டு கிளம்பிவிடுவீர்களாயின்
இழுபட்டுக்கிடக்கின்ற உயிர்போல இக்கவிதை
தாளின் ஓரோரத்தில் கிடந்து தவிதவிக்கும் கொடுமைக்கு
நீங்களும் உடந்தையாகிப்போவதோடு
என்றென்றைக்கும்
இக்கவிதை எழுதி முடிக்கப்பட்டுவிடக்கூடாதென்கிற சதிக்கும்
இரையாகிப் போவீர்கள்

படபடக்கும் இக்கவிதைத்தாள் பறந்துவிடாதிருக்க
வெட்டப்பட்ட என் தலை அதன்மீது வைக்கப்பட்டிருக்குமானால்
நான் கொல்லப்பட்டதன் காரணம்
ஓர் அரசாங்கத்தின் ரகசியம்போல
மிக வெளிப்படையானதாக இருக்கிறதெனத் தெளிந்து
முண்டத்தை தேடியலையும் நேரத்தில்
இந்தக்கவிதையை எழுதிமுடியுங்கள்
ஆமாம்,
அதிகாரத்திற்கு எதிரான இந்தக்கவிதையை
எப்படியாயினும் எழுதி முடியுங்கள்
உங்களுக்கானதொரு இடத்தை
எனக்கருகிலேயே முன்பதிவு செய்து காத்திருக்கிறேன்.

24.05.14

நன்றி: உயிர் எழுத்து, ஜூன் 2014 

1 கருத்து:

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...