முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி ரவிக்குமார் எழுதிய பதிவுக்கு கண்டனம்


துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி எழுத்தாளர் ரவிக்குமார் முகநூலில் எழுதிய பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்திரிகைச் செய்தி

வணக்கம்.
இந்தியாவில் மிக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களை மனிதனைக் கொண்டே சுத்தம் செய்ய வைக்கும் மனிதத்தன்மையற்ற கொடுமையான வழக்கத்தை - உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு தலித் மக்கள் இயக்கங்களும் - மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. உச்ச நீதிமன்றம்கூட மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்துக் கட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு வைத்து ஆணையிட்டுள்ளது.

இச்சூழலில், எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், கழிவுநீர்க் கால்வாயிலும் மலக்குழிக்குள்ளும் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து தனது முகநூலில் தெரிவித்துள்ள கருத்துகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடமும் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரவிக்குமார் தனது முக நூலில் 19.11.2014 அன்று பின்வருமாறு எழுதியுள்ளார்: “பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி அதைச் சுத்தம் செய்வது மனித உரிமைகளுக்கு எதிரானது. சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட அந்த வழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் நகரங்கள் உருவாக்கப்படுவது தொடரும் வரை, கழிவுகளை அகற்றும் ஒரு எந்திரத்தின் விலையைவிட மனித உயிர் மலிவானதாக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.

“இந்தக் கேவலமான வேலையில் ஈடுபடக்கூடாது என ஏன் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிவதில்லை? அதில் ஈடுபடும் பெரும்பாலோர் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த இழிவான வேலையைச் செய்யவில்லை. குடிப்பதற்காகத்தான் செய்கிறார்கள். குடித்தால்தான் அந்த வேலையைச் செய்ய முடியும், அதைச் செய்தால் குடிக்க முடியும் என்ற விஷச்சுழலிலிருந்து அவர்கள் விடுபடாதவரை எந்தச் சட்டமும் அதை ஒழிக்க முடியாது.” (முகநூல் பதிவு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)

ரவிக்குமார் தனது முகநூலில் இக்கருத்துகளைத் தெரிவித்த பிறகு, இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவரே அக்கருத்தை நீக்கியுள்ளார். அந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவர் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. எதுவும் நடக்கவில்லை என்பது போல அவரது முகநூல் கள்ள மவுனம் காத்து வருகிறது.

கழிவுகளைச் சுத்தம் செய்யும் ‘தொழில்’, அவற்றைச் செய்யும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள சாதிய சமூக நடைமுறை; அரசு எந்திரத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான ஒத்துழைப்பின் மூலம் இந்த மக்கள் மீது இழைக்கப்பட்டு வரும் வன்முறை. டாக்டர் அம்பேத்கர் கூறினார்: “இந்தியாவில் ஒருவர் தோட்டியாக இருப்பதற்குக் காரணம், அவர் அந்த வேலையைச் செய்வதால் அல்ல; அவர் தோட்டி வேலையைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், பிறப்பின் காரணமாக அவர் தோட்டியாகவே இருக்கிறார்” (பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9).

உலர் கழிப்பிடங்கள், கழிவு நீர்க் கால்வாய்கள், கழிவு நீர் நிலைகள், துர்நாற்றமடிக்கும் குப்பைகள் ஆகிய அனைத்தையும் துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் குடிப்பதற்கு ஆசைப்பட்டுதான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார். இக் கொடிய கருத்து, மனிதக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றும் தொழிலாளர்கள் மீது மட்டுமல்ல; பிணங்களை அகற்றுவோர், பிணப்பரிசோதனையில் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உதவி செய்பவர்கள், பிணக் கிடங்குகளில் பிணங்களைப் பராமரிப்பவர்கள், பிணம் எரிப்பவர்கள், சாவுக்கு மேளம் அடிப்பவர்கள் ஆகியோரையும் அவதூறு செய்கிற, இழிவுபடுத்துகிற கருத்தாகும்.

அதுமட்டுமல்ல, குடிப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டவர்கள் இவர்கள் மட்டும்தானா? வேறு தொழில் செய்கிறவர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகவில்லையா? அப்படி இல்லை என்றால், ‘டாஸ்மாக்’கை வைத்தே அரசாங்க எந்திரத்தை ஓட்டிச் செல்வது தமிழகத்தில் சாத்தியம்தானா?

‘கல்வியின்மைக்கு காரணம் மக்களுக்கு கற்பதில் உள்ள ஆர்வமின்மையே‘; ‘பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் பெண்களின் உடையலங்காரமும் நடத்தையுமே‘ -என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் ஆதிக்கவாதிகளின் கருத்தியல் தொடர்ச்சியில் ரவிக்குமார் வெகுவாகப் பொருந்தி நிற்கிறார்.

ரவிக்குமாரின் தரங்கெட்ட இக்கருத்தை ‘தமிழ்நாடு மாற்றுப்பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை’Tamilnadu Alternative Journalist & Writers Forum மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி அரசாங்கத்தின் கீழ், மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையும் இந்துத்துவ பாசிச நடைமுறையும் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, சாதிய, தேசிய இன ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக, முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், தலித் மக்களிடையே உட்சாதி வேறுபாடுகளை ஆழப்படுத்தும் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு சிலர் எழுதியுள்ள எதிர்வினைகளிலும் ரவிக்குமார் தெரிவித்துள்ளவை போன்ற அருவருக்கத்தக்க, மனித மாண்பற்ற கருத்துகள் வெளிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கருத்துகள் உட்சாதிப்பூசல்களை வளர்க்கத்தான் செய்யுமே தவிர, ஒன்றுபட்ட, உறுதியான சாதி எதிர்ப்பு தலித் அடையாளத்தையோ, அரசியலையோ உருவாக்காது என்பதையும் சொல்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மனித மாண்புக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வரும் ரவிக்குமார், தமிழகத்தில் முக்கிய தலித் கட்சிகளிலொன்றாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருப்பது எத்தகைய அவப்பேறு என்பதை அந்தக் கட்சியிலுள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களும், அவர்களின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவண்,

தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவையின் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டவர்கள்:

- எஸ்.வி.ராஜதுரை, அய். இளங்கோவன், கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், கவிஞர் தமிழேந்தி, யாக்கன், எழில். இளங்கோவன், சிறீதர கணேசன், புனித பாண்டியன், அழகிய பெரியவன், தலித் சுப்பையா, ஆதவன் தீட்சண்யா, யாழன்ஆதி, ரா. கிருஷ்ணசாமி, ஜெயராணி, அ. முத்துக் கிருஷ்ணன், கம்பீரன், சு. சத்தியச்சந்திரன், செ. சரவணன், அருண்குமார், அமுதா, சுஜி, சுரேந்தர குமார், கே.எஸ்.முத்து, அய்.ஜா.ம. இன்பக்குமார், ஜெய்சாம்யாக்.

முக நூல் பதிவு இணைக்கப்பட்டுள்ளது :கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா