வெள்ளி, ஜனவரி 31

பொங்காரம் - ஆதவன் தீட்சண்யா


நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும்.

இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம் லச்சணமா கெடக்கு. சக்கை புடிச்சி எகனைமொகனையா கெடக்குற பெருங்கல் எப்படிப் பாத்தாலும் நூறு லோடுக்கு தாங்கும்.

இங்கிருந்து பாத்தா சாளையில எரியற ராந்தல் காத்துக்கு தூரியாடறது தெரியுது. எப்பவும் போல இப்பவும் உள்ளார ஆளுங்க இருக்காங்கன்னு நம்ப வைக்கறதுக்கு அதே போதுந்தான். ஆனா இருக்காங்களா இல்லையானு சோதிக்க இந்த பக்கம்பராந்திரியில யாருமில்ல இப்ப. ஜாமயாம கணக்கில்லாம தொலவுல சன்னமா ரயில் சத்தம் கேக்குது.

வெடிஞ்சா ஞாயித்துக்கெழம. ஞாயிறு ஒண்ணு, சோமாரம் ரண்டு, செவ்வா மூணு, செவ்வான்னைக்கு காத்தாலதான் லோடுக்கு லாரி வரும். அன்னமுட்டும் ஒரு ஈ காக்கா எட்டிப் பாக்காது இந்த திக்குதெசையில.

நாலாபக்கமும் பாரா பண்ண தோதா வேலைக்காட்டுக்கு நடுவ பரணை. கீழ்க்கால்ல கட்டியிருந்த பந்தம் எண்ணை வத்தி கருகி மங்குது. யார் வந்து வாக்கப்போறாங்க இந்த அநாதிக்காட்ல? இருந்த உடுப்புக்காரனும் கங்காணியுந்தான் நாலா ஏழா மடங்கிக் கெடக்காங்களே தோள்ல.

பொணமாட்டம் கனக்கும்கிறது பொய்யில்ல. கனமான கனம். நாலாளு தூக்கறத ஒத்தையாளா சொமக்கறது செரமந்தான். வேற வழியில்ல. இன்னங் கொஞ்சதூரம். கரடு வந்துடும். பரமன் தோள்ல உடுப்புக்காரனும், கங்காணி சுப்புரு தோள்லயும் கனக்காங்க. கங்காணியாட்டம் இன்னொரு பங்கு ஒடம்பு உடுப்புக்காரனுக்கு- பீமசேனனாட்டம் . நிக்கிற எடம் நெளிஞ்சிரும்.

லோடுக்கு வர்ற லாரிங்களுக்கு வேணும்னு குவாரியில வாங்கி வச்சிருந்த டீசல்கேனை அர்ச்சுனன் எடுத்தாறான். ரண்டுபேரை எரிக்க அதேபோதும். முழுசா எரியணும்னுயில்ல. அடையாளந்தெரியாம உருவழிஞ்சிட்டாக்கூட போதும். மிச்சத்த காக்கா கழுவு கொத்தித் திங்கட்டும். ஊரான் ஒழப்புல ஊதுன ஒடம்பு உளுத்து புழுத்து ஊத்தையா நாறட்டும்.

உடுப்புக்காரனோட துப்பாக்கியும் ஆறுசெல் பேட்ரியும் இப்ப காளியப்பன் கைல. வேட்டைக்காரனாட்டம் துப்பாக்கி தாங்கி நடக்கறது அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சனியத்த பாத்துத்தான் இத்தினிநாளா பயந்து கெடந்தது எல்லாரும். கொஞ்சத்துல குறி தப்பிருச்சு. இல்லேன்னா அன்னிக்கே அர்ச்சுனனை கொன்னிருப்பான் உடுப்புக்காரன். தோட்டா தெறிச்சக் குழி இன்னம் வடுவாட்டம் பாறையில இருக்கு. அத பாக்கறப்பவெல்லாம் நடுங்கறான். ஆனா இத்தினிக்கும் அர்ச்சுனன் மேல தப்பில்ல. பொண்டுங்க ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்குறத பரணை மேல நின்னு பாக்காதன்னு இவன் சொன்னத்துக்குத்தான் அவனுக்கு ரோசம் பொத்து குறி பிடிச்சது. இன்னொருக்கா அந்தப்பையன் சின்னசாமிய மெரட்டியிருக்கான். இத்துனூண்ட வச்சிகிட்டு அவன் பண்ணின அழும்பு ஒண்ணா ரண்டா?

துப்பாக்கி சுட இவங்க யாருக்கும் தெரியாட்டியும் அது கைல இருக்கறது ரொம்ப தெகிரியமாயிருக்கு எல்லாருக்கும். ஆனாக்கூட ரோட்டுக்கு எட்டுனதும் இத எங்காச்சும் எறிஞ்சிரணும். நாம யார அடக்கி அடவாடி பண்ணப்போறோம்... நமக்கெதுக்கு துப்பாக்கின்னு நெனச்சான். ஆனா பேட்ரி வேணும். இருட்ட கவுக்கற வெளிச்சம் இருக்கு அதுல.

ஒரே ஒருவருசம், அப்புறம் இஷ்டமில்லாட்டி சொல்லுங்க, போய் வாங்க சாமிங்களேன்னு வண்டியேத்தி ஊருக்கு அனுப்பியுடறேன்னு இந்த கங்காணிப்பய சொன்னத நம்பி இங்க வந்து மாட்டி எமுட்டு காலமாச்சு. இருட்ல உருட்ற குருட்டுப்பூனையாட்டம் ஆயிருச்சு பொழப்பு. எங்க இருக்கறம்னு கூட பிருவு தெரியாம ராத்தாராத்திரியில கொண்டாந்து பட்டியில அடைக்கறாப்ல பண்ணிட்டான் மோசக்காரன். இவனையெல்லாம் இத்தினி நாள் உசுரோடவுட்டதே பாவம்.

ஊர்ல ஓங்காளியம்மன் நோம்பி சாட்டியிருக்கு. கோயிலுக்கு தலைக்கட்டு வரிதரணும். சாமிக்கு பொலிபோட எருமைக்கெடா வாங்கணும். பூசைச்செலவு அதுஇதுன்னு மேஞ்செலவு கொழுத்து கெடக்கு. வர்ற ஒரம்பர சரம்பரைக்கு ஆக்கிப்போடணும். வருஷம் பூராவுந்தான் சந்தையில பழசுப்பட்டு ஏலம் எடுத்து கட்டிக்கிட்டாலும் நோம்பிக்கும் அப்பிடி பண்ணிற முடியுமா? நல்லநாள் பொல்லநாள்ல கூட வூட்டுசனத்துக்கு புதுத்துணி எடுக்கலன்னா ஊரு என்ன சொல்லும்? கைல காக்காசு இல்லாம காத்தா அலையறான் அர்ச்சுனன். முன்ன வாங்குன கடனுக்கே முழி பிதுங்குது. புதுக்கடனுக்கு எங்கப் போறது? இதே கதிதான் சுப்புருக்கும்.

நோம்பி கெடக்குது நோம்பி. கடன் வங்கியாச்சும் கும்பிடிக்க பண்ணலன்னு கண்ணயா நோண்டிரும் சாமி? பெரியபுள்ளைக்கு கொழந்த பொறந்து எட்டுமாசம் ஓடிருச்சு. அரஞாக்கொடியும் கொலுசும் கொழந்தைக்குப் போடணும். அவளுக்கு சீலத்துணி எடுக்கணும். கூட்டிப்போக வர்றவங்களுக்கு கூழோ கஞ்சியோ ஊத்தியனுப்ப முடியாது. மூணுபடி அரிசியாவது வாங்கணும். பத்தாததுக்கு, போறப்ப மூட்டிரலாம்னு மவ காதுல கெடந்த தோடையும் அடமானம் வச்சிருக்கு. அதலயும் போனவாட்டி மருகன் வந்தப்ப எங்க புள்ள தோடு, காதுல குச்சி மாட்டியிருக்கேன்னு கேட்டுட்டு போனான். மூட்டுக் கொடுத்தனுப்பணும் அதை. எதுக்கும் தோதுபடாம இங்கியே கெடக்கா மவ. ஏண்டா பரமா மாடுங்கன்னும் வூட்லயே கெடக்குன்னு சாடைமாடையா யாராச்சும் கேக்கறப்ப நாக்கப் புடுங்கிட்டு செத்துரலாம்னு ஆயிருது.

நடுதூலமும் வாரைங்களும் உளுத்து மாவா எறங்குது வூட்ல. காமராசரு வந்து தொறந்த காலனி வூடு இது. இன்னிக்கோ நாளைக்கோன்னு இத்துக்கெடக்கு கூரை. போன அப்புசி மோடத்துல ஏறுன ஓதமாட்டம் மறுக்கா ஏறுனா செவுரும் தாங்காது. பிரிச்சி மரமாத்து பண்ணனும்னா அய்யாயிரமாச்சும் வுங்கறான் சாரி. அய்யாயிரம்தான்னு ஆரம்பிச்சப்புறம் லொட்டுலொசுக்குன்னு செலவு சொல்லி எக்கச்சக்கமா ஏத்திருவான். பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் சாரி பொய்யில அரைவாசியாகாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க... வெசனத்துல கெடக்கான் மாரப்பன்.

புள்ள சமஞ்சி அஞ்சி வருசமாவது இந்த சித்தரையோட. அவளுக்கும் பொறனால ஆளான கூழுத்தோட்டி மவுளுக்கு கண்ணாலமாகி இப்ப கையில ஒண்ணு வயித்துல ஒண்ணு. காலாகாலத்துல அததை செய்யலன்னா அந்துசு கெட்டுரும். பாலூரான் மவன் தொப்லானுக்கு ஆசை. கட்டிக்குடுங்கன்னு ஆள்மேல ஆளா தந்து வருது. பையனும் நல்ல சமுத்தாளி. ஓம்லூர் பாய் இவன நம்பித்தான் கசாப்புக்கடைய வுட்டுருக்காரு. எத்தசோட்டு மாடா இருந்தாலும் ஒத்தையாளா கீழ தள்ளிருவான். தோல் வேவாரமும் இருக்கு. கட்டிக் குடுத்தா கமானமா பொழைக்கும் புள்ள. தோடு, மாட்லு, சிமிக்கி, பையனுக்கு காப்பவுன்ல மோதரம், சைக்கிள், துணிமணின்னு... ரொக்கமா எங்காச்சும் பொரட்டி முடிச்சிரணும்னு ஒவ்வோர் முகூர்த்த நாளுக்கு முன்னயும் நெனச்சி நெனச்சி மருகுறான் காளியப்பன்.

ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப்போட்டாப்ல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம்.

இன்னிக்கு நேத்து இப்படியாகல. காலம் முச்சூடும் இப்படியேதான் நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கு வழி தெரியல மாள்றதுக்கும் குழி தெரியல.

ஊர்ல ஒரு பயலுக்கும் நெலம்நீச்சு கெடையாது. அடுத்தவங்களை நம்பித்தான் அன்னாடப்பொழப்பு. பாட்டன் பூட்டன் காலத்துலயிருந்து பாத்த வேலைக்குப் போற ஆளுங்க ரொம்ப கம்மி. எவன் வூட்ல எழவு வுழும் ஏகாலிக்கு துணி கெடைக்கும்னு காத்திருக்க முடியுமா? அப்படியும் அஞ்சாறு வூட்டாளுக இன்னமும் கொட்டடிக்கப் போறாங்க. நடுவமங்கலம், நாலுகால்பாலம், தொளசம்பட்டி,தோக்கம்பட்டி, செம்மாண்டப்பட்டி, சின்னதிருப்பதி, காருவள்ளி, காமலாபுரம்னு சுத்துபக்க ஊர்ல எங்க சாவானாலும் இவங்கதான் வாத்தியம். நல்ல தொழில்காரனுங்க. அதும், ரண்டு கெளாஸ் ஊத்தியுட்டாச்சுன்னா வெளுத்து வாங்கிருவாங்க. பொணமே எந்திருச்சி இன்னொருக்கா அடிங்கடான்னு கேட்டாலும் கேக்கும்குற அளவுக்கு பேரிருந்துச்சு. இப்பவெல்லாம் சாவுக்கு கூட ரேடியோ செட்டு வச்சு அழுவறாங்க. பேண்டு வாத்தியம் கூட்டியறாங்க சேலத்துலயிருந்து. இவங்களுக்கு மவுசு கொறஞ்சிருச்சி இப்ப. அதுவுமில்லாம, ஊரு ஒலகம் இத்தினி டாம்பீகமா மாறிக்கிட்டிருக்குற இந்த காலத்துலயும் தோள்ல மோளத்த மாட்டிக்கிட்டு அல்லாட யாருக்குப் பிடிக்கும்?

ரோடு போடறது, காரைவேலை, செங்கல் அறுக்கறது, மணல்லோடு அடிக்கறது, கரூர்லயிருந்து கோரை வாங்குயாந்து பாய் நெய்யறது, புளி உலுக்கறது, ஈரோடு, பவானிக்கு நெல்லறுக்கப் போறதுன்னு பலபட்டறையா தொழில் மாறிடுச்சி. ரண்டொருத்தர் ஐவேஸ்ல கேங்கூலியா இருக்காங்க. தாலுக்காபீஸ்ல பிய்யோனா இருக்கான் அம்பேத்து. பத்தரம் எழுதறது பிட்டிசன் அனுப்பறதுல நாலோ ரண்டோ கெடைக்குதுன்னு கச்சேரிமேட்லயே கெடக்கான் நெட்டப்பெருமாள். மத்தபடி சர்க்கார் உத்யோகத்துல வேற யாருமில்ல. ஓம்லூரு பஸ் ஸ்டாண்ட்ல ஜோப்பு கத்திரிக்கிறவங்கள்ல ஊர் பசங்களும் இருக்காங்கன்னு கேள்வி. இதில்லாம பொண்டாளுகள் பயிர் நடறது, களை அலசறது, தட்டுதாம்பு அறுக்கறது, கருதடிக்கிறது, கல்லக்கா தொலிக்கறதுன்னு சிக்குற வேலைக்குப் போறாங்க. மாதம்பாடியான் பொண்டாட்டி ருக்குவையும் சித்துவேடன் தங்கச்சி பொன்னுருவியவும் ஓம்லூர் லாட்ஜ்ல போலிஸ் புடிச்சதிலேர்ந்து வயித்தக்கழுவ இப்பிடியும் ஒரு தொழில் இருக்குன்னு துணிஞ்ச பொண்டுங்க கொஞ்சம்பேர் இப்பவெல்லாம் போலிசுக்கு மாமுல் கொடுத்துக்கிட்டு ஜோரா பொழப்பப் பாக்குறாங்க. இன்னம், ஏரியில வெவசாயமுள்ளுப் பொதர்ல தண்ணி விக்கிறது, மோரி அடியில புள்ளிக்கு பத்துரூவான்னு பந்தயங்கட்டி சீட்டாடறது தாயமாடறதுன்னு ஆளாளுக்கொரு வேலையிருக்கு. அங்கயும் இங்கயும் கடன வாங்கிட்டு பிப்பு தாங்காம ராத்தா ராத்திரியில ரயிலேறி வெங்ளூருக்கு தப்பி ஓடறவங்களும் இருக்காங்க.

அர்ச்சுனன், பரமன், சுப்புரு, காளியப்பன், மாரப்பன் அஞ்சிபேரும் பங்காளி பாகாளிங்க. சித்தப்பன் மக்க பெரீப்பன் மக்க. அவங்கப்பன்மாரு காலத்லயிருந்தே ஜல்லியொடைக்கிறதுதான் வேலை. அருணாச்சல கவுண்டர், மந்திநாய்க்கர் ரெண்டுபேர்க்கிட்டயும் தான் ரெண்டு தலைமுறையா செஞ்சிட்டிருந்தாங்க. அவங்க எங்கெங்க ரோடுபோட காண்ட்ரேட் எடுத்தாலும் இவங்க கேங் அங்கப்போய் ஜல்லியொடைச்சிக் குடுக்கும். பத்துபர்லாங் இருபதுபர்லாங்கா இருந்தாலும் சோம்பிசொணங்கி நின்னுடாம ஜல்லிலோடு நேராநேரத்துக்கு போய்ச்சேந்துரும். அதனாலதான் தெக்கே ராமேஸ்வரம் வரைக்கும் இந்தாண்ட திருணாமலை வந்தவாசி வரைக்கும் இவங்க கேங்கை கூட்டிப்போனாங்க மொதலாளிங்களும். கவுண்டர் செத்ததுக்கப்பறம் நாய்க்கரும் கொஞ்சகொஞ்சமா வேலைய சுருக்கிக்கிட்டாரு. விழுப்புரத்துல செஞ்சதுதான் கடேசிவேலை.

அதுக்கப்பறம் தொலைதேசம் வேலைக்கு போறது நின்னுப்போயிருச்சி. இங்கியே அக்கம்பக்கமா மேட்டூர் தொப்பூர் அரூர் வெள்ளையப்பன்கோவில்னு போனாங்க. முன்ன நல்ல ஓட்டம். இப்பந்தான் கல்லொடைக்க மிசுனு வந்துருக்கே. செத்தநேரத்துல கரகரன்னு ஓடச்சுக் குமிச்சிடறதால ஆளுங்க அவ்வளவு அவசியமில்லேன்னு ஆயிடுச்சு. கத்த வேலைய உட்டுட்டு மத்தவேலைக்கு சட்டுனு போயிரமுடியுமா?

செஞ்ச வேலைக்கு காசு கேட்டாவே சள்ளுபுள்ளும்பான் கொத்துக்காரன். வாராவாரம் பட்டுவாடா பாத்து சந்தைக்குப்போனா சாத்துசெலவுக்கும் சோத்துசெலவுக்கும் கூட பத்தும் பத்தாம ஆயிருது. பொரிகல்ல, போண்டா, முறுக்கு, பஜ்ஜி, மொட்டசோளக்கதிரு, கொடிவள்ளிக்கெழங்கு, குச்சிக்கெழங்கு, தேங்கா ரொட்டின்னு அம்மாளும் அப்பனும் நொறுவாய் வாங்கியாருவாங்கன்னு சந்தைக்கூடைய தொழாவுற புள்ளைங்க வெக்குனு ஆயிருதுங்க. கண்ணுல தங்குற ஏக்கம் காலத்துக்கும் நின்னுருது.

வாரக்கூலிக்கு கல்லொடைக்குறதுல கஞ்சிப்பாடு தான் தீருது. அத வச்சி நல்லது கெட்டது எதுக்கும் தலை குடுக்கமுடியாது. லம்பா தொகை கெடைக்குற வேறவேலை ஏதாச்சும் தேடி எங்கியாவது போயிருவமான்னு நெனப்போடுறப்ப தான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இந்த கங்காணி வந்தான். யார்ட்டயோ வெலாவாரியா விசாரிச்சுத்தான் வந்திருக்கான்.

பரமன் வூட்டு வாதநாராயண மரத்தடியில குந்தாணி போட்டு ஒக்காந்து தொப்பி சிகரேட்ட பத்த வச்சிக்கிட்டு அவன் பேசறதப்பாத்தா அவனே மொதலாளியாட்டம் தெரியறான். ஜோப்ல கத்தையா இருந்த நூறுரூவா தாள்ல ஒண்ண உருவியெடுத்து எல்லாருக்கும் டீ வாங்கியாரச் சொன்னான். மூணுவெரல்ல மோதரம். கைல வாச்சி, பொடக்கழுத்து வேர்வைய தொடைக்கறப்பல்லாம் வடக்கயிறாட்டந் தெரியுது மைனர்சங்கிலி. கவண்டமாராட்டம் மினுமினுன்னு வார்வச்ச தோல்செருப்பு போட்டுருக்கான். வளவுல நின்ன சனமெல்லாம் வாய்ப் பொளந்து பாக்குதுங்க.

நானும் ஒங்களாட்டம் இங்கியே சிக்கி சின்னப்பட்டவன் தான். உள்ளூர்ல ஒரலு சொமந்து சம்பாதிக்கிறத பக்கத்தூர்ல பஞ்சு தூக்கி சம்பாரிச்சரலாம்னு துணிஞ்சி அங்கப் போனேன். கத்தத் தொழிலு கையுடல. இன்னிக்கு நல்லாருக்கேன். பத்து கேங் ஆளு கைலயிருக்கு. இப்பக்கூட வெங்ளூர்ட்ட கல்லொடைக்க பத்திருவது ஆள்வேணும். நீங்க வர்றதுனா வூட்டுக்கு அய்யாயிரம் அட்வான்ஸ் தர்ரேன்னு சொன்னப்ப கஷ்டத்தப் போக்கவந்த கடவுளா தெரிஞ்சான். ஓங்காளியம்மன் உண்டியில பத்துரூவா சேத்துப்போடணும் காணிக்கையான்னு நெனச்சுக்கிட்டான் பரமன்.

கங்காணி கணக்கு தப்பல. வலையில விழாம மீன் எங்கப்போகும் தலைக்கு வராம பேன் எங்கப்போகும்? பாண்டு பத்தரம்னு எதும் எழுதாம கடன் குடுத்தா கஷ்டத்துல இருக்குறவன் சும்மாயிருப்பானா? அஞ்சுக் குடும்பமும் கைநீட்டியாச்சு. குடும்பத்தோட வர்றவங்களுக்கு அய்யாயிரம். மத்தவங்களுக்கு ஆளுக்கு தக்கனாப்ல. ரோட்டு வேலைல சுடுதார் ஊத்தி கைகால் வெந்து படுக்கையா கெடக்குற வையாபுரி, ஆஸ்பத்ரி செலவுக்கு ரண்டாயிரம் வாங்கிட்டு பள்ளிக்கொடம் போய்ட்டிருந்த மவன் சின்னசாமியவும் அனுப்பியுட்டான். தாயில்லாத புள்ள இப்ப தவப்பனையும் உட்டுட்டு தொலைதேசம் வருது, நீங்கதான் பாத்துக்கணும்னான் வையாபுரி. செவுத்துல தொங்கற பொஸ்தகப்பைய பாத்து தேம்பிகிட்டே வந்தான் சின்னசாமி. இந்த முண்டச்சி இங்கயிருந்தா என்னா அங்கிருந்தா என்னா... நானும் வரேன்னு கௌம்பிட்டா ஆராயி. அவளோட சேத்து முப்பத்தாறாளு. அவ ரண்டாயிரம் வாங்கி அடமானத்துல முழுகிட்டிருந்த சில்லரைக்கொப்பை திருப்பி மூட்டி காதுல மாட்டிக்கிட்டா. அவங்கம்மா சாகறப்ப அவளுக்கு சீதனமா குடுத்ததாம் அது.

காசுக்கு காத்திருந்த காரியம் சிலதுதான் முடிஞ்சிருக்கு. அண்ணாந்துப் பாத்தா தான் காசம், கிழிச்சு எடுத்தா கீத்துதான... பிச்சி பிச்சிப் போட்டா எத்தனைக்கு ஆவும்? இன்னம் எத்தனையோ மிஞ்சி காத்திருக்கு அடுத்தக் கடனுக்காவ. ஊர்விட்டு ஊர்போறவங்க திரும்பி வருவாங்களோ மாட்டாங்களோங்குற சந்தேகத்துல கௌம்பறதுக்கு மிந்தி நம்மளதை பைசல் பண்ணிறப்பான்னு கேட்டவங்களுக்கெல்லாம் ஜவாப்பு சொல்லி மாளல. வாராவாரம் பட்டுவாடா முடிஞ்சதும் கொஞ்சங்கொஞ்சமா அனுப்பி கழிக்கிறோம்னு சொன்னதை அரைமனசா நம்பித்தான் கௌம்பவிட்டாங்க.

நோம்பி கழிஞ்ச பத்தாம்நாள் ராவோடராவா லாரியில ஏத்திக்கொண்டாந்து எறக்குன எடம் வெங்ளூர்க்கிட்டன்னு சொன்னது பொய்யுங்கிறான் மாரப்பன். லோடேத்த வர்றவங்க பேசறது கன்னடமில்ல, நம்ம மந்திநாய்க்கர் மாதிரி நீலு கீலுன்னு பேசிக்கிறாங்க.... ஒருவேளை பெஜவாடா பக்கம் கொண்டாந்துட்டானோ என்னமோங்கிறான். கண்ணக் கட்டியுட்டாக்கூட இந்தான மைசூர்ரோட்லயிருந்து அந்தான டும்கூர்ரோடு வரைக்கும் தலைகிழுதா உருண்டுக்கிட்டே வந்துருவேன், எனக்குத் தெரியாதா இது வெங்ளூரா இல்லியான்னு அவன் சொன்னத நம்பாம இருக்கமுடியல. அவனுக்கு வெங்ளூர் அத்துப்படி. ஒசூர் பாடர்லயிருந்து அத்திப்பள்ளி, சந்தாபுரம், பொம்மனள்ளி, மடவாளம் செக்போஸ்ட் வரைக்கும் சாளை போட்டு தங்காத எடமேயில்ல. கல்யாணத்துக்கு மிந்தி அஞ்சாறு வருசம் அவன் அங்கதான் திருணாமலை ஆளுங்களோட டெலிபோன் லைனுக்கு குழியெடுக்குற வேல செஞ்சிருக்கான். அப்ப அங்க சேத்திக்கிட்டு வந்த புள்ளதான் அவன் பொண்டாட்டி மல்லிகா.

ஆந்தராவுக்கு போனவங்கள்ல பாதிப்பேருக்கு மேல ஏழெட்டு வருசமாகியும் இன்னம் ஊர்திரும்பினதில்ல. அவங்க ஊடெல்லாம் கூரை கரையான் அரிச்சி செவுரு இடிஞ்சி குட்டிச்செவுரா பாம்புபல்லி அண்டிக்கெடக்கு. அந்த பயத்துல ஆந்தரான்னு கூப்புட்டா வரமாட்டாங்கன்னு தெரிஞ்சி வெங்ளூர்னு பொய் சொல்லிட்டானா ?

அக்கம்பக்கம் ஊரெதுவும் இருக்கான்னுகூட தெரியல. பெரிய கரடு. கூமாச்சியா நிக்கிற பாறைமேல ஏறிப்பாத்தாக்கூட கண்ணுக்கெட்டுன வரைக்கும் ஆளம்பு ஒண்ணையும் காங்கல. அடிவானம் தொடுவானமா அசையற எல்லையில சன்னமா பொகை எழும்பறதை சுப்புரு பாத்து சொன்னப்புறந்தான் நாம ஒலகத்தவிட்டே வெளிய வந்துட்டமோங்குற வெசனமும் பயமும் போச்சு அல்லாருக்கும். மூஞ்சில அடிச்சாப்ல செக்கச்செவேல்னு செம்மண் காடுதான் பரவிக்கெடக்கு. கரட்டடிவாரத்துல இருந்து கௌம்புற வண்டித்தடம் எந்த ஊருக்குப் போய்ச்சேரும்னு தெரியல. தடம்கூட இப்பதான் ஆகியிருக்கும்போல.

சீதைய சிறையெடுத்தாப்ல நம்மளக் கொண்டாந்து எங்கியோ தள்ளிப்புட்டானே பாதகன்னு வெம்பல் பொங்குது எல்லாருக்கும். வெங்ளூராயிருந்தா என்ன வேற ஊராயிருந்தா என்ன? வாங்குன கடனை அடைச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊருக்குத் திரும்பப் பாக்கணும், அவ்ளவுதான்னு ஆளாளுக்கு தெம்பு சொல்லி தேத்தப்பாத்தாலும் யாருக்கும் இங்க பிடிமானம் சிக்கல.

வேலக்காட்டுக்கு உடுப்புக்காரன்தான் ஜவாப்தாரி. அவம்பேர் என்னான்னு தெரியல. போலிஸாட்டம் காக்கி சொக்காயும் டவுஜரும் போட்டிருக்கறதால இவங்களா வச்சப்பேர். இவங்க வராங்காட்டியும் அவன் வந்து பரணை கட்டி படுத்திருந்தான். தாட்ரிக்கமான திமிர்த்தண்டி ஓடம்பு. கண்ணு பழுத்து கங்காட்டம் இருக்கறதப் பாத்தா மொடாக்குடியனா இருப்பானாட்டங்குதுன்னான் சுப்புரு. இவனையாட்டமே ஒரு குண்டன் எம்சியார் படத்துல வருவான்னா ஆராயி.

தண்ணிக்கு அல்லாடிறக்கூடாதுன்னு கரட்டடியில இருக்கற குட்டைக்குப் பக்கத்துல சாளை போடலாம்னு பாத்தா, களி உருட்டிப்போட தோதான பாறையெதும் பக்கத்துலயில்ல. ஊரூருக்கு தட்டு தாம்பாலம் கிண்ணி கெடாரம்னு தூக்கியார முடியுமா? அத்தனையவும் கழுவத் தண்ணிவேணும், கமுத்திவைக்க எடம் வேணும். இந்த அல்லாட்டமெல்லாம் வாணாம்னுதான் பாறையில போட்டுத் திங்கறது. அதுந்தவுத்து தண்ணிகூட நாலுமொடா மொண்டு தூக்கியாந்தரலாம், ஆனா ஆக்கின பானையத் தூக்கிக்கிட்டு அங்கயிங்க அலையமுடியுமா பாறைதான் பக்கத்துல வேணும்னு இங்க சாளை போட்டது.

ஒவ்வொரு வூட்டாளுங்களுக்கும் ஒரு சாளை. கூளையா இருக்கறவனே குனிஞ்சிக்கூட உள்ளாரப் போயிரமுடியாது. பன்னிக்குடிசலோட கொஞ்சம் பெருசா, மாட்டுவண்டிக் கூண்ட கவுத்தியுட்டாப்ல தரையோடத் தரையா அமுங்கியிருக்கு. கொஞ்சம் நிமுந்தாக்கூட நெக்கிரும். தெலுக்கமா மேஞ்சிருக்குற தென்னஞ்சோவை வெயிலுக்கும் தாங்காது குளுருக்கும் ஆவாது. இன்னம் ஒரு வரி நெருக்கமா தெத்தியிருக்கணும். மண்டிபோட்டு மாடு ஆடாட்டம் உள்ளப் பூந்தா மயமயன்னு இருட்டு. வெளிச்சமேயில்ல. எப்பிடி பொழங்கறதுன்னு பொண்டுக கேக்காங்க. ராத்திரிக்கு ராந்தல் இருக்கு. பகல்லயும் கொளுத்தறதுனா சீமெண்ணைக்கு எங்கப்போறது?

சின்னசாமியும் ஆராயியும் தனித்தனி ஒண்டிக்கட்டைங்க. அதால அவங்க சாளைங்க ரண்டுலயும் சமுட்டி, கொட்லான், கிட்னக்கம்பி, சேறுவாங்கி, கெடப்பார, பிக்காசு, மமுட்டி, பாண்டல்சட்டி, புட்டுக்கூடை, மால்சட்டம் எல்லாங் கெடக்கு. வெடிமருந்தும் திரியும் மாத்தரம் சவ்வுக்காயிதத்துல சுத்தி பரணையில இருக்கு. அதாட்டம் சவ்வுக்காயிதம் ஆளுக்கொன்னு குடுத்திருக்காங்க, மழப் பேயறப்ப கொங்காடையா மாட்டிக்கிட்டு கல்லொடைக்க.

பரணையிலதான் ஆரியமாவு, நொய்யரிசி, உப்பு, புளி, மொளகா, கல்லெண்ணை டின்னு, சீமெண்ணை டின்னு, வெத்தல, பொகல, பீடி, சுருட்டு, சாராயக்கேன் எல்லா ரேசனும் இருக்கு. லோடுக்கு வர்ற லாரியில கொண்டாந்து வச்சிக்கிட்டு அளந்தளந்து குடுத்துட்டு ஒத்தைக்கு ரட்டையா கணக்கெழுதிக்கிறான் உடுப்புக்காரன். அதோட வேணும்கிறமுட்டும் குடிச்சிப்புட்டு அதுக்கு ஈடா தண்ணி கலந்து இவங்களுக்கு வித்துடறான். ஒடம்புநோவுக்கு கேக்கும்னு சாயங்காலமானா ஒரு கெளாஸோ ரண்டு கெளாஸோ ஊத்திக்கிறாங்க. தண்ணி கலந்ததக் குடிச்சி மண்டையிடிக்குதுன்னு காலைல எழறப்ப அனத்தல் ஜாஸ்தியாயிருக்கும். பொண்டுகள்ல ஆராயி குடிக்கறா. சின்னசாமி பீடி மட்டும்.

கசப்புக்கட்டி சேக்காததால வெத்தல போட்டாப்லயே இல்லேன்னு எப்பவும் சலிப்பு பெருமாயிக்கு. அவங்காயாக்கிட்ட கத்துக்கிட்ட பழக்கம். கசப்பும் தொவப்பும் கலந்த ருசிக்கு பழக்கமான நாக்கு இங்க வந்ததுலயிருந்து அது கெடைக்காம அல்லாடுது. கசப்புக்கட்டி இருக்குமானு அந்த குண்டன்கிட்ட கேட்டுப்பாரேன்னு புருசன்கிட்ட சொன்னதுக்கு மாண்டி இந்த பாறையில பச்சைப்பாக்கு வெளையுது, வெட்டி வேகவச்சு, விடியறதுக்குள்ள தண்ணியிறுத்து கட்டியாக்கித் தரச்சொல்றேன்னு அவன் எகத்தாளம் பேசினதுக்கப்பறம் நாக்கை அடக்கிக்குறா.

கரட்டடியில இருக்கற குட்டையில தண்ணி மொண்டாந்து சட்டிப்பானை கழுவிட்டு ராத்திரி மீந்த சோத்தாண்ணிய குடிச்சிட்டு பொழுதேறறதுக்குள்ள ஆணுபொண்ணு அமுட்டுப்பேரும் வேலக்காட்டுக்கு போயிறணும். மத்தியானத்துக்கு களி கிண்டுறது ஆராயி வேல. எத்தினிப் படி மாவு கிண்டினாலும் ஒரு புட்டையோ கட்டியோ இருக்காது. நயமா சந்தனமாட்டம் வழுவழுன்னு எறங்கும் தொண்டையில. கிண்டியானதும் பாறைய கழுவி ஆளாளுக்கு பெரும் உண்டையா ஒவ்வொண்ணு சிப்பியில உருட்டி வச்சிட்டு, அரச்ச புளிக்கூட்ட அததுக்கு நெரவி நிமுந்தா பொழுது உச்சிக்கு வந்துரும். ஆளுங்களும் எப்ப எப்பன்னு வருவாங்க பசியில. வெயிலுக்கு பாறை சூடு பத்தியெரியறது பசியில தெரியாது. லவுக்கு லவுக்குனு முழுங்கிட்டு இன்னம் இருக்கான்னு கேக்காம வெரல்ல ஒட்டியிருக்கறத நக்குவாங்க. எப்பிடி இல்லேங்கிறதுன்னு ஆராயி வேறபக்கம் திரும்பிக்குவா.

வேலக்காட்ல இருந்து ஆளுங்க திரும்பறதுக்குள்ள ராத்திரிக்கு ஒலை வச்சிருப்பா ஆராயி. அதுல நொய்யரிசி மொளகா உப்பு போட்டு புளியூத்தி கட்டுச்சோறு கௌறுறதுல அலமேலுக்கு கைப்பாங்கு ஜாஸ்தி.

பட்டுவாடாவுக்கு சனிக்கிழம சாயந்திரம் லொடலொடன்னு சைக்கிள்ல வருவான் கங்காணி. அவன் வந்தா சனிக்கிழம. வேறநாள்ல வந்தாக்கூட வித்யாசம் தெரியாது. வர்றன்னிக்கு ராத்தங்கல் இங்கியேதான். உடுப்புக்காரன் காடை கவுதாரி மொசல்னு எதாச்சும் அடிச்சி சுட்டு வைப்பான். ரெண்டுபேறும் குடியா குடிப்பாங்க, கூத்தாடி மெதப்பாங்க.

விடிஞ்சதும் வேலக்காட்ட சுத்திவந்து அதுநொட்ட இதுநொள்ளைன்னு நோப்பாளம் படிப்பான் அவனே மொதலாயியாட்டம். பேபி ஜல்லிய எடுத்து சைசு பெருசாயிருக்கேம்பான். ஒன்ரயிஞ்சை எடுத்துப்பாத்துட்டு சிறுசா இருக்கேன்னு கொற சொல்லுவான். கருங்கல்ல ஒடச்சி குமிச்சிருந்தாலும் மாக்கல்லும் நொறம்புமா கெடக்கும்பான். கட்டியிருக்கற குட்டானுங்களுக்கு டேப் புடிச்சு மால்வச்சு அளவு கொறையுதும்பான். கொறச்சு கொறச்சு அளந்து கொசுறு புடிப்பான். கொசுறுன்னா கொசுறு இல்ல. அதுதான் பெருசு.

பட்டுவாடா பண்றேன்னு அவன் பீத்திக்கிட்டு வந்தாலும் அப்பிடியெதும் இங்க நடக்கிறதில்ல. அவன்கிட்ட பை ரொப்ப பணமிருந்தாலும் ஒத்தப்பைசா பேராது ஒரு ஆளுக்கும். குடுத்த அட்வான்சுக்கு பிடித்தம் அதுக்கு வட்டி சாப்பாட்டு சாமானுக்கும் சாராயத்துக்கும் மத்ததுக்கும் கணக்கு கழிச்சான்னா எதும் மிஞ்சாது. இன்னும் கடன் பாக்கி எவ்வளவுன்னு கேட்டா அது இருக்கு மலையாட்டம்பான். காலைக் கும்புட்டு கந்து கேட்டா மேலத் தொட்டதுக்கு வட்டி குடுடாங்கற கொடுமை. வாராவாரம் இதே லோலாயம்தான்.

வெய்யக்காலத்துல கரட்டுலயிருக்குற மூங்கப்பொதர்ல நெருப்பு புடிச்சி எரியும் அப்பப்ப. ஆனா இன்னிக்கி நெருப்பு தானா எரியல. டீசல் ஊத்தி பத்த வச்சது. நெருப்புக்குள்ள பொணங்களும் நெருப்புத்துண்டமாட்டந்தான் எரியுது. சதை கருகுற கவுச்சி கரடு முழுக்க காத்தா வீசுது. எதெதோ வெந்து வெடிக்குது. சுத்தியுமிருக்கற செடி கொடிங்க படபடன்னு பொரிஞ்சி தொவளுது. பக்கம் அண்டவுடாம பாஞ்சி பரவுது நெருப்பு. பாறைமேல நிக்கிற நாலுபேருக்கும் பதட்டத்துல பொங்குற வேர்வை அடங்காம ஊத்தாட்டம் வடியுது.

வங்குல சுருண்டிருந்த சாரையோ நாகமோ சீறி நகறுது உப்பைக்குள்ள. ராத்திரியானா குதியாளம் போடுற அதுங்க சூட்டுக்கு பயந்திருக்கணும். தெனமும் பாம்போ தேளோ அடிக்கறது சாதா விசயம். யாராச்சும் வூட்டுக்கு தூரம்போனா தீட்டுக்குத் தான் இப்பிடி பூச்சிப் பொட்டுங்க போக்கு காட்டி அலையுதும்பாள் ஆராயி. அலமேலும் மாமான்னு ஒத்தூதுவா.

அலமேலு மவன் சென்றாயன் பாம்பு தீண்டித்தான் செத்துப்போனான். சாகற வயசா அது? எனக்குத் தொணையா அவன இங்கியே வுட்டுட்டு போங்கடா. இப்ப பள்ளிக்கொடத்தலயும் மத்யான சோறு போடறாங்க. பையன் நாலு பருக்க கண்ணுல பாக்கும்னு கெஞ்சினா அவம்பாட்டி உட்டுட்டு வந்திருந்தாக் கூட உசுரோட இருந்திருப்பான். கூட்டியாந்து கொன்ன மாதிரி ஆயிருச்சு.

அங்கயும் இங்கயும் பெராக்கு பாத்துகிட்டு திரிஞ்சவன் செரிப்பொழுதுல நாதாளிப்பழம் நுனாப்பழம் காரக்காய்னு எதையாச்சும் பறிச்சுத்திம்பான். அன்னைக்கும் அப்பிடி திரியறப்பதான் குத்தடியிலயிருந்து கொத்தியிருக்கு. கடிவாய்க்கு கீழயும் மேலயும் இறுக்கி கட்டு போட்டுட்டு சீசாத்துண்டுல கீறனதும் வெஷம் எறங்குச்சு. ஆனாக்கூட பையன் நெப்புநெகாத் தெரியாமத் தான் கெடந்தான்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா பொழச்சிருப்பான். இத்தினிக்கும் அன்னிக்கு லோடுக்குவந்த லாரி கூட இருந்துச்சு. பாவி கங்காணி தான், பாடம் போட்டா சரியாயிரும் பச்சிலைத் தின்னா நல்லாயிரும்னு தடுத்துட்டான். நேரந்தாட்டினதுல வெஷம் கடுத்து பையன் கண்ணே முழிக்கல.

அனாதப் பொணமாட்டம் பொதைக்க வேண்டியதாயிருச்சு. சாங்கியப் பிரகாரம் பொதைக்கறதுக்கு செலவு வாங்கக்கூட கரட்டவுட்டு வெளிய அனுப்ப முடியாதுன்னு அடமா நின்னுட்டான் கங்காணி. ஒரு ஊதுவத்தி கப்பூரம் கூட இல்ல. சாத்து சட்டியக் கழுவி கொள்ளிப்பானையா ஒடைக்க வேண்டியதாயிருச்சு. மூணாம்நாள் பால் குத்தறத்துக்கு வதுலா தண்ணியத்தான் தெளிக்க முடிஞ்சது. இத சாக்கிட்டாச்சும் பெஜவாடாவுக்குப் போயி ஊருக்கு ஓட வழிதேடிட்டு வரலாம்னு பாக்குறீங்களா... கரட்டத்தாண்டுனீங்கன்னா காலிருக்காதுன்னு அவன் கத்துனது இன்னம் காதுகுள்ளயே இருக்கு.

மக்கியா நாள் வேலக்காட்ல மாரக்கா தான் ஆரம்பிச்சா. துள்ளத்துடிக்க ஒரு உசுரு போறப்பக் கூட மனசெரங்காத அந்தக் காதகன், அவனா மனசு வந்து ஊருக்கு அனுப்புவான்னு நாம நம்பிக்கிட்டிருக்கனுமான்னு அவ கேட்டதுக்கு யாரு வதிலு சொல்றது?

அந்த கெரகாச்சாரம் புடிச்சவனுங்க எப்ப வந்து இழுத்துட்டுப் போயிருவாங்களோ என்னென்ன சித்ரவத பண்ணுவாங்களோங்கற பயத்துல கண்ணக் குத்துனாக்கூட தூக்கம் வர்ரதில்ல எனக்கு. அவனுங்க பரணைக்கு இழுத்திட்டுப் போறத இத்தினி ஆம்பளைங்களும் பஞ்சபாண்டவங்களாட்டம் மொட்ட மரமா நின்னு வேடிக்கைப் பாக்குறீங்க. தூத்தேறி... இந்தா இந்தப்புள்ள மாதேஸ்வரி பெரியவளானதுக் கூட வெளியத் தெரியாம தலையில தண்ணி தெளிச்சி உள்ளார கூப்பிட்டுக்கிட்டம். இன்னிக்கு என்னயத் தொட்டவனுங்க இந்த கொழுந்த கிள்ளறதுக்கு எமுட்டு நேரமாவும்னு மல்லிகா பொங்கி பொங்கி அழுவுறா. யாரு தேத்தறதுன்னு தெரியாம எல்லாக் கண்ணுலயும் தண்ணி.

அவன் ஒரே ஒருவருசம்னான். இன்னிக்கு எப்பிடி கொறச்சு கொறச்சு பாத்தாலும் அஞ்சாறு வருசமாவது ஆயிருக்கும். வெங்ளூர்ட்ட வேலன்னான். அன்னிக்கு கோவத்துல பெஜவாடாங்குறான். பெஜவடாவுக்கு கல்லொடைக்க வந்து யாராச்சும் ஊர் வந்து சேர்ந்திருக்காங்களா. துணிமணி தொவைக்கவும் தண்ணி வாத்துக்கவும் வாரத்துல அரைநாள் வேலைய நிறுத்திக்கலாம்னு ஊர்ல சொல்லிட்டு இங்க வந்து இல்லைங்கறான். காய்ச்சல் தலைவலின்னு ஓய்ஞ்சு ஒக்கார வுட்டுருக்கானா? அவங்ககிட்ட அடிவாங்காம தப்பிச்சது யாரு? ஒரு நாளைக்கு ஒருபுட்டி கல்லொடச்சிருந்தாக் கூட கடன் தீந்திருக்கும். இவங்கிட்ட காலத்துக்கும் கழியாதுன்னே தோணுதுன்னு ஆளாளுக்கு பிராது இருக்கு. எல்லாத்தையும் நம்ப வச்சு கழுத்தறுத்த கங்காணி கழுத்த திருப்பி அறுத்தா என்னா குத்தம்னு ஆராயி கேட்டப்புறம் வேற யோசனையே இல்ல. எல்லோருக்கும் சூரியும் அருவாளும் வந்தது சொப்பனத்துல.

ஒருவாரமா அலமேலு கஞ்சித்தண்ணி ஒண்ணயும் சீந்தறதில்ல. அப்பப்ப ஓடியோடி குழிமேல பொரளுறா. குழிமேல கெடக்குற மண்ணை அள்ளியள்ளி தலைமேல போட்டுக்கறா. ராத்திரியெல்லாம் மாரடிச்சு அழுவுறப்ப கரடே கரையுது.

ரொம்பவும் தொவண்டு கெடக்கான்னு இன்னிக்கு அவள சாளையிலயே வுட்டுட்டு மத்தவங்க மட்டுந்தான் வேலக்காட்டுக்கு போவமுடிஞ்சது. ஆராயி அடுப்புவேலையப் பாத்துக்கிட்டு அவளயும் பாத்துக்கறா.

இன்னிக்கு நேரத்துலயே வந்துட்டான் கங்காணி. வேலக்காட்டுல ஆளுங்கள எண்ணிப் பாத்துட்டு ஒரு தலை கொறையுதேன்னான். இப்பிடியிப்பிடின்னு வெலாவாரி சொன்னான் மாரப்பன். தாட்பூட்னு எகிறிட்டு சாளைக்குப் போனவன் செத்தநேரத்துல ஓலமான ஓலம் போட்டதுல கரடே கிடுகிடுன்னு செலையோடுது. அதத அப்பிடியப்பிடியே போட்டுட்டு ஓடிப்பாத்தா பித்து பிடிச்சவளாட்டம் நின்னிருக்கா அலமேலு. கைல குட்டக் கடப்பாரை. கங்காணி கொடல் தள்ளி கெடக்கான். குதுகுதுன்னு ரத்தம் பொங்குது.

வந்தவன் மூடிட்டிருக்காம, சீமையில இல்லாத புள்ள செத்துருச்சேன்னு சிணுங்காத. உனுக்கு எத்தினி புள்ள வேணும்னு சொல்லு நாந்தர்ரேன்னு சொல்றான்னா ஆங்காரம் தான..? நான் தடுக்கறதுக்குள்ள சொருவிட்டாள்னு ஆராயி சொன்னா.

அதுக்குள்ள பரணையிலிருந்து துப்பாக்கியோட ஓடியாந்தான் உடுப்புக்காரன். யோசிக்க நேரமில்ல. இவனை வுட்டா எல்லாருக்கும் தொந்தரவுன்னு சாலைக்கு வெளிய சட்டி கழுவுற எடத்துல கெடந்த சூரிய எடுத்து ஒரே ஏத்தா ஏத்திட்டான் காளியப்பன். வலின்னா என்னான்னு தெரிஞ்சு அவன் கத்தறத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி.

லோடு லாரிங்க வந்துபோற வண்டித்தடத்துல நடக்கறப்ப யாரும் பேசல. எங்க போறதுன்னு திகிலாயிருக்கு. இந்தத் தடம் எங்கப்போயி முடியும்னு யாருக்குந் தெரியாது. எங்காச்சும் ஒரு எடத்துல நம்மூருக்குப் போற வழியா இதுவே பெரண்டு கெடக்கும்னு நம்பித்தான் பொறப்பட்டதே. ரயில் சத்தம் இப்ப பக்கத்துல கேக்குது.

ஒராளு, ரண்டாளுன்னா திருட்ரயில்ல கூட போயிறலாம். ஆனா இத்தினியாளுகளுக்கும் அப்பிடி ஒண்ணா தோதுபடாது. அப்புறம் அதுக்கு எங்காச்சும் மாட்டிக்கிட்டா அவ்ளோதான். வெயிலுக்கு பயந்து வெள்ளாவிப் பானைக்குள்ள ஒளிஞ்ச கதையாயிரும்.

பட்டுவாடாவுக்கு கங்காணி வாங்கியாந்த பணம் வண்டி செலவுக்கும் மேங்காரியத்துக்கும் போதும். அது தீந்துடறதுக்கு முன்ன எதாச்சும் வேல தேடணும்.

ரயிலேறுனாலும் நேரா ஊருக்கு போயிரப்படாது. தேடிவந்து புடிச்சிருவானுங்க குவாரிக்காரனுங்க. கழுத்துக்கு துண்டு போட்டு காசைக் கேட்டாலும் பரவால்ல. உடுப்புக்காரனையும் கங்காணியவும் என்னடா பண்ணினீங்கன்னு போலீச வச்சு பொடனி திருப்பிருவாங்க. மாட்டிறக் கூடாது. முழுசா தப்பிச்சிறணும். எங்காச்சும் ஆறுமாசமோ ஒருவருசமோ ஊருபக்கம் தலைகாட்டாம இருந்துட்டு அப்புறந்தான் போவணும். போறப்ப கைல கொஞ்சமாச்சும் காசு கொண்டு போவணும். இல்லாட்டி இத்தினி வருசமா ஏமாத்தனதுமில்லாம இப்ப வந்தும் ஏமாத்தறியான்னு ஊர்ல இருக்கற கடங்காரங்க நெரிச்சிருவாங்க.

இப்போதைக்கு சிக்கலில்ல. கையுங்காலும் தெம்பாத்தானிருக்கு. மணல் லோடுக்கோ காரைவேலைக்கோ செங்கல் அறுக்கவோ டெலிபோன் லைனுக்கு குழியெடுக்கவோ எங்காச்சும் கேங்கா சேந்துடவேண்டியதுதான். ஆனா, பாக்கறவங்களுக்கு சந்தேகம் வந்துறக்கூடாதுனு சட்டிமுட்டி சாமான் அம்புட்டயும் வேலக்காட்லயே வுட்டுட்டு வந்தாச்சு. தூங்குற கைக்கொழந்த எழுந்து கஞ்சின்னு கதறினா காய்ச்ச ஒரு சருவம் இல்ல. தொட்டது புடிச்சது எல்லாமே புதுசாத்தான் வாங்கணும். எந்த வேலைக்கு சேர்றதுக்கும் கைல சாமான் எதுவுமில்ல. புதுசாத்தான் வாங்கணும். அதுக்கு எல்லோருக்கும் கொஞ்சம் முன்பணம் தேவையாயிருக்கு.

செவ்வாய், ஜனவரி 14

படைப்பு என்றாலே அது எல்லாவகையிலும் புத்தம் புதிது -ஆதவன் தீட்சண்யா



புதுஎழுத்து வெளியீடாக வரவிருக்கும்
நண்பர் பழ.பாலசுந்தரத்தின் கவிதைத்தொகுப்பான 
"மழைக்கனி"க்காக எழுதப்பட்ட குறிப்பு
 யற்கை இப்பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறது. பிரபஞ்சத்தினுள் மனிதர் உள்ளிட்ட கோடானகோடி உயிர் ராசிகளையும் உயிரற்ற சடப்பொருட்களையும் படைத்திருக்கிறது இயற்கை. ஒவ்வொன்றையும் படைப்பதற்கான காலத்தையும் இடத்தையும் அது தன்வாக்கில் தேர்வு செய்கிறது. பிறப்பதைப்போலவே உயிர்கள் இறந்துகொண்டுமிருக்கின்றன. உயிர்தான் போய்விட்டதே என்று இறந்துபோன ஒன்றின் எலும்பையோ நரம்பையோ சதையையோ அல்லது உடலின் வேறெந்த பாகத்தையுமோ இரந்தெடுத்துப் பொருத்தி புதிய உயிரை இயற்கை படைத்தளிப்பதில்லை. ஒவ்வொன்றுக்குமான புத்தம்புதிய உறுப்புகளையும் ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து பிறப்பிக்கிறது இயற்கை. இன்றைய தேதியில் உலகத்தில் அறுநூறு கோடிப்பேர் இருக்கிறார்கள். மனிதர்கள் என்ற வகையில் ஒன்றுபோல காட்சியளித்தாலும் இவர்கள் ஒவ்வொருவரும் இன்னொருவரிலிருந்து உருவரீதியாகவும் உள்ளடக்கரீதியாகவும் வேறுபட்டவர்கள், தனித்தன்மையானவர்கள். தனிமனிதர் ஒருவரிலும்கூட ஒன்றேபோல காணப்படும் அவயவங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. அவரது முப்பத்திரண்டு பற்களும் லட்சக்கணக்கான மயிர்க்கால்களும்கூட ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. ஆகவே படைப்பு என்றாலே அது எல்லாவகையிலும் புத்தம் புதிது என்றாகிறது. ஒருவேளை தன்னையொரு படைப்பாளி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளத் தெரியாததால் இயற்கைக்கு இது சாத்தியமாகியிருக்கிறது போலும். 

இயற்கையின் படைப்பென்று எதுவுமே இல்லை, கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று இந்த மனிதர்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்களேயன்றி அந்த கடவுள் ஒருநாளும் தானொரு படைப்பாளி என்று கூறி நான் கேட்டதில்லை. நானென்ன நான், எவருமே கேட்டதுமில்லை பார்த்ததுமில்லை. ஆகவே கடவுளாக வந்து கோருகிறவரை பிரபஞ்சத்தையும் உயிர்களையும் படைப்பிப்பது இயற்கைதான் என்கிற முடிவிலிருந்து பேசுவோம்.

இயற்கைக்கும் கடவுளுக்கும் அடுத்தபடியாக படைப்பாளி என்கிற சொல் கலை இலக்கியவாதிகளை குறிக்கிறது.  அவருடைய ஆக்கங்கள் படைப்பு என விதந்தோதப்படுகின்றன. எனில், இயற்கையின் படைப்பைப்போல தன்னுடைய படைப்பும் உருவரீதியாகவும் உள்ளடக்கரீதியாகவும் புத்தம்புதிது தானா, இறந்துபோனவற்றின் மிச்சம் மீதி அழுகல் நரகல் ஏதாவது இதில் ஒட்டிக் கொண்டிருக்கிறதா, இதன் மொழி பிணத்தினுடையதா உயிர்ப்புள்ளதினுடையதா, தனித்துவமான தனது வாசமும் ரேகையும் பெயரும் இதில் வெளிப்பட்டிருக்கிறதா என்று கலைஇலக்கியவாதி ஒவ்வொருவரும் தற்சோதனைக்குள்ளாக நேர்கிறது. இப்படியாக மறிக்கும் கேள்விகளை தன்னளவில் எதிர்கொள்ளாமலே தன்னை ஒரு படைப்பாளியாக கற்பிதங்கொள்ளும் வெட்கங்கெட்டச் செயல் காலத்தையும் காகிதத்தையும் ஒருசேர வீணடிக்கிறது. மறுதலையாக, இந்தக் கேள்விகளை பொருட்படுத்துகிறவர்கள் தமது எழுத்தை புதிதாக்குகிறார்கள் அல்லது எழுதுவதை நிறுத்திக்கொள்கிறார்கள்.

நண்பர் பாலசுந்தரம் எழுதுவதை நிறுத்திக்கொண்டவராகவே எனக்குப் படுகிறார்- அவ்வப்போது அவர் எழுதிவந்தபோதும்கூட. வெகுசன இதழ்களில் வெளியாகும் கவிதைகளால் உந்தப்பட்டு அவற்றை முன்மாதிரியாக கொண்டு எழுதத்தொடங்கிய இவர், அவற்றின் செல்வாக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சியாகவே எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று புரிந்து கொள்கிறேன். அந்த காலகட்டத்தில் தான் எழுதி பிரசுரமாகிய பலகவிதைகளை இன்றைய கண்கொண்டு பார்த்து அவற்றை அவரே நிராகரித்துவிட்டதை ஆதாரமாகக்கொண்டே இவ்வாறு கூறுகிறேன். பாடுபொருள், மொழி, வடிவம் ஆகியவற்றை சுயமாக தேர்ந்து கொள்வதற்குரிய பயிற்சியாக அவர் எழுதிப் பார்த்த கவிதைகளில் கொஞ்சம் இப்படியொரு குறுந்தொகுப்பாக வருகிறது. கவிதை என்பதற்குள் காலத்துக்குகாலம் நிகழ்ந்துவரும் மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு அவர் சித்தமாய் இருந்தார் என்பதற்கு உதாரணமாய் காட்டும்படியான கவிதைகளும்  இதில் இருக்கின்றன. எனினும், தயங்கியபடியே கொடுக்கும் ஒரு புகாரைப்போலவோ குறுநகையை உதிர்த்தபடி தலைதிருப்பிக் கொள்கிற கூச்சத்தைப்போலவோ அல்லது இயலாமையின் குமைச்சலில் நகம் கடிப்பது போன்றோதான் இவரால் வெளிப்படுத்த முடிகிறது. அதிர்ந்து பேசாத மொழியில் கோபத்தை வெளிப்படுத்துவதில் உள்ள சிரமம் கவிதையை அப்படியப்படியே விட்டுவிடுமாறு நிர்ப்பந்திக்கும் போல. எனவே எழுத்தின் சாத்தியங்களைப் பின்தொடர்ந்து வளர்த்துச் சொல்லாமல், வலிந்து தடுத்து இந்த உலகத்துக்கு இப்படி / இவ்வளவு சொன்னால் போதும் என்று முன்தீர்மானித்தவரைப்போல எழுதி சடக்கென  முடித்துவிடுவார். அப்படி எழுதியவற்றிலும்கூட ஒரு பொத்தாம்பொதுவான குரலைத்தான் கேட்க முடிகிறது. இங்கே குறிப்பிட வேண்டியது என்னவென்றால் இவ்வாறாகத்தான் தனது கவிதைகள் இருக்கின்றன என்பதை அவரே உணர்ந்திருப்பதும் விவாதிப்பதும்தான்.

தனது வாழ்நிலை வடிவமைத்துக் கொடுத்திருக்கிற சட்டகத்துக்குள்ளிருந்து அவர் காணும் உலகத்தை நமக்கு காட்டுகின்ற எதையும் எழுதுவதை அவர் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார். தான் எழுதத் தொடங்கிய காலத்தின் உலகம் தனக்குள் ஆழப்பதித்துவிட்டுப் போயிருக்கிற விழுமியங்களும் மதிப்பீடுகளும் தற்காலத்துடன் முரண்படுவது குறித்து நேர்ப்பேச்சில் தான் பகிர்ந்துகொண்ட எதையும்கூட அவர் இன்னும் எழுதத் தொடங்கவில்லை என்கிற ஆதங்கத்திலிருந்து இவ்வாறு கூற நேர்கிறது. வெவ்வேறு நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் காலநிலை மாற்றங்களையும் கண்டுணர்வதற்காக நாட்டின் குறுக்கும்நெடுக்குமாக அவர் மேற்கொண்டுவரும் பயணங்கள் பற்றியும்கூட (ஹம்ப்பி பற்றிய கவிதை, ஒகேனக்கல் பற்றின கதை தவிர) அவர் ஏதும் எழுதாமல்தான் இருக்கிறார். உழுகுடி மரபின் விழுமியங்களில் ஒருகாலையும் நகர்க்குடி மரபின் நடுத்தரவர்க்க விழுமியங்களில் மறுகாலையும் வைத்துக் கொள்ளும் இரண்டாம் தலைமுறை படிப்பாளிகளுக்கு ஏற்படும் மனத்தடைதான் இவரையும் எழுதவொட்டாமல் தடுக்கிறது போலும். வேரிலிருந்தும் மண்ணிலிருந்தும் எழுதுவதா அல்லது வெளித்தெரிகிற கிளையிலிருந்தும் இலையிலிருந்தும் மண்ணை மறைத்து மெழுகப்பட்ட காரையிலிருந்தும் எழுதுவதா என்கிற குழப்பத்தோடே எழுதுவதைவிடவும் அந்தக்குழப்பத்தையே எழுதுவது சுயத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.  எனவே இது இந்தத்தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கான பரிந்துரையல்ல, தானாக இருந்து அவர் எழுதவேண்டியவை பற்றிய நினைவூட்டல் மட்டுமே.

அந்தந்த வருடத்திற்கான கணக்குவழக்கை அந்தந்த வருடமே முடித்துவிடும் தொழில்ரீதியான பணியை செவ்வனே செய்து முடித்துவிடுகிற இந்த கணக்காயர், கவிஞர் என்ற முறையில் நீண்டகாலமாக தீர்க்காமல் வைத்திருந்த ஒரு கணக்கை முடித்துவைப்பது என்கிற ரீதியில் இப்படியாகத்தான் இதுஎன்று இந்த குறுந்தொகுதியை நம்முன் வைத்துவிட்டு அடுத்த வேலைக்கு நகர்கிறார்.

அன்புடன்,
ஆதவன் தீட்சண்யா,
09.01.13

சனி, ஜனவரி 11

காக்கைக் குருவி உங்கள் ஜாதி - ஆதவன் தீட்சண்யா

வீட்டை மாற்றிக்கொண்டு வேறெங்கும் போய்விடலாமா என்று மிகுந்த தயக்கத்தோடு தான் இவன் கேட்டான். அருங்கிளியும் அதே யோசனையில்தான் புழுங்கிக் கிடந்திருப்பாள் போல. இவனது முன்மொழிவுக்காகவே காத்திருந்தவளைப்போல உடனடியாய் வழிமொழிந்து ஒப்புதல் சொன்னாள். வீடு மாறிப்போவது அவர்களுக்கொன்றும் புது அனுபவமல்ல. மாறுவதற்கான காரணம்தான் ஒவ்வொரு தடவையும் மாறும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும்வரை இதிலேயே இருந்துவிடலாம் என்னுமளவுக்கு பிடித்துப் போய்தான் ஒவ்வொரு வீட்டிலும் குடியேறுவார்கள். அப்படியே மாற்றலில் செல்லும் நிலை வந்தாலும் இந்த ஊரில்- இதேவீட்டிலேயே இருந்துகொண்டு வேலைக்குப் போய்வர வேண்டியது தான் என்கிற அளவுக்கும்கூட சில வீடுகள் பிடித்துப்போவதுண்டு. ஆனால் குடியேறி மூன்றாம் வாரத்தில் முன்பணத்தைக்கூட வாங்கிக்கொள்ளாமல் காலி பண்ணிக் கொண்டு தெறித்தோடும் அளவுக்கு ஒம்பாத ஏதோவொன்று அங்கு நடந்துவிடுகிறது. உப்புத்தண்ணி, காற்றோட்டமில்லை, போதாவெளிச்சம், கொசுக்களின் பிரியம், அண்டை அயலார் பிணக்குவீட்டு உரிமையாளர் கெடுபிடி என்று வீடு மாறுகிறவர்கள் சொல்லும் வழக்கமான காரணங்களின் பேரில் இவர்கள் ஒருபோதும் வீடுகளை மாற்றுவதில்லை. இவர்கள் சொல்லும் காரணங்களைக் கேட்கிற யாருமே, இப்படியெல்லாம் தோண்டித்துருவி கிண்டிக்கிளறி பார்த்துக்கிட்டிருந்தா உங்களால எங்கயும் ஒரு இடத்துல நிரந்தரமா வசிக்கவே முடியாது. அனுசரிச்சு இருக்கப் பழகுங்க என்று எரிச்சலோடு ஆலோசனை சொல்வார்கள். அனுசரித்துப் போ என்பதைவிடவும் அருவருப்பான ஆலோசனை உலகத்தில் எதுவுமில்லை என்பதே இவர்களது தீர்மானம்.

இதற்கு முன்பிருந்த வீட்டிலும் இப்படித்தான் நடந்தது. அகன்று நீளும் சாலையின் மடக்கு மூலையில் தளத்திற்கு மூன்று என்கிற வீதத்தில் ஒன்பது வீடுகள். தரைத்தளத்தில் ரோட்டையும் கிழக்கையும் பார்த்தவாறு ஒரு வீடும் வாகன நிறுத்துமிடமும். அவற்றுக்கு நேர் பின்னே பிணங்கிக்கொண்டு திரும்பி நிற்பதுபோல இரண்டு வீடுகள். தரைத்தளத்தில் காலியாக இருந்த கிழக்குப் பக்கத்து போர்ஷன் தரகர் ஒருவரின் தொடர்பினால் இவர்களுக்கு கிடைத்தது. வாஸ்து, ராசி, மனையடி சாஸ்திரம், திசாபலன் என்பவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் வடக்கு அல்லது கிழக்கு பார்த்த வீடுகளைத்தான் உகந்ததாக நினைப்பார்கள். அதனாலேயே இம்மாதிரியான வீடுகளுக்குரிய முன்பணத்தையும் வாடகையையும் சற்றே கூடுதலாக கேட்பதும் கொடுப்பதும் இயல்பாகிவிட்டிருந்தன. போட்டியும்கூட கடுமையாகத்தான் இருக்கும். ஆனாலும் ஏனோ இங்கு எல்லாமே வழக்கத்திற்கு மாறாக இருந்தது. கட்டி முடிக்கும் முன்பே மற்ற எட்டு வீடுகளுக்கும் பத்துமாத வாடகையை முன்பணமாக கொடுத்து காத்திருந்து குடியேறியிருக்கிறார்கள். ஆனால் இந்த வீடு மட்டும் காலியாகவே இருந்ததும் மற்ற போர்ஷன்களோடு ஒப்பிடும்போது வாடகையும் ஐநூறு ரூபாய் குறைவு என்பதும் இவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வேறேதேனும் வசதிக்குறைவு இருக்குமோ என்று பார்த்தால் அப்படியும் இல்லை. வீடு ஒரு வில்லங்கமும் இல்லாதிருந்தது. அடுக்குமாடி வீடுகளில் அடித்தளத்தில் குடியிருப்பவர்களுக்கு சௌகர்யங்களை விடவும் தொந்தரவே அதிகம் என்பதால் யாரும் குடிவர விரும்பவில்லையோ என்றும் தோன்றியது. தரகரை நெருக்கிப்பிடித்து விசாரித்தபோதுகாரணம் எதுவோ இருந்துவிட்டுப் போகட்டும், உங்களுக்கு உபகாரம்தானே... பைத்தியக்காரன் கிழிச்சது கோவணத்துக்கு ஆச்சுன்னு விட்டுட்டு குடிவர்ற வேலையப் பாருங்கஎன்றார். குடிவந்துவிட்டார்கள்.

புத்தம் புதிதான, தரைத்தளத்தில் இருக்கிற ஒரு வீடு குறைந்த வாடகையில் கிடைத்ததற்கான மகிழ்ச்சியை, ஏன் கிடைத்தது என்கிற கேள்வியினால் சிதறடித்துக்கொள்ள வேண்டியதில்லை என்று இயல்புக்கு திரும்பியிருந்தார்கள். புழங்கப்பழகி வீட்டின் பாகங்கள் அனிச்சைக்குள் பதிவதற்கு இன்னும் சிலநாட்கள் தேவையாக இருந்தது. மேல்வீடுகளின் குடித்தனத்தனக்காரர்கள் நேருக்குநேர் எதிர்ப்பட்டால் சின்னதாய் சிரித்து நகர்வார்கள். சிரித்தார்களா சிரிப்பை மறைத்தார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்குள் கடந்து போய்விடுவார்கள். மற்றபடி அவர்களில் யாரும் இன்னும் நெருக்கமாகியிருக்கவில்லை. அவர்களது வீடுகளுக்குப் போய் பழகும் அளவுக்கு இவர்களுக்கும் நேரம் போதவில்லை. அலுவலகத்துக்கும் வீட்டுக்குமான அல்லாட்டம் அக்கம்பக்கத்தாரோடு அளவளாவத் தடையாய் இருந்தது.

ஆனால் வாழ்வரசியும் நூதனாவும் சாலையின் மறுபுறம் இருந்த வீடுகளின் பிள்ளைகளை அதற்குள் சினேகம் பிடித்திருந்தார்கள். பொம்மைகளை வைத்துக்கொண்டும் போகோ சேனல் பார்த்துக் கொண்டும் பிள்ளைகளின் விளையாட்டு பெருங்களிப்பாய் வளர்ந்தது. ரோட்டின் நீளத்துக்கு இடித்து தள்ளப்பட்டிருந்த சுவரொன்றின் இடுபாடுகளைக் கடந்து இந்தப் பிள்ளைகள் இரண்டும் அந்தப்பக்கம் போனால் சாப்பாட்டுவேளையிலும் திரும்பாமல் திளைத்திருந்தார்கள். வீட்டு வேலைகளுக்கென உடனிருக்கும் பொன்னுருகி இதுபற்றிய புகார்களுடன் இருந்தாள்.

எல்லாம் மூன்றாம் வாரத்தின் இறுதியில் முடிவுக்கு வந்தது. அருங்கிளியும் இவனும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் வீட்டு உரிமையாளர் அங்கு வந்திருந்தார். அவர் தானாக வரவில்லை, குடித்தனக்காரர்கள் யாரோதான் வரவழைத்திருக்கிறார்கள் என்பதை அவரது பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது. வசதியெல்லாம் பரவாயில்லையா பிரச்னையேதும் இருக்கிறதா என்பது மாதிரியான சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்ததும் அவர் நேரடியாகவே விசயத்துக்கு வந்துவிட்டார்.

ரோட்டுக்கு அந்தாண்ட இருக்குறவங்க யார் என்னன்னு முன்னாடியே உங்களுக்கு சொல்லாமப் போனது என் தப்புதான். நான்தான் சொல்லியிருக்கணும். அந்த புரோக்கரும் உங்களுக்கு சொல்லல போல. சரி, அம்பேத்கர் நகர்னு அந்த ஏரியாவோட பேரைப் பார்த்து நீங்களாவே தெரிஞ்சிக்கிட்டு ஒதுங்கியிருப்பீங்கன்னு பார்த்தா அதுவும் நடக்கல. அந்தப்பக்கத்து ஆளுங்களோட வாடையே இந்தப்பக்கம் வரப்படாது, விடிஞ்சா முடிஞ்சா அவங்க மூஞ்சிலயா முழிக்கிறதுன்னு யாரும் சங்கடப்படக்கூடாதுன்னுதான் ரோடு நெடுக சுவர் எழுப்பியிருந்தோம். இன்னிக்கு நேத்தில்ல, அம்பதறுவது வருசமா இருந்த சுவர். அந்தச்சுவர் மட்டும் இருந்திருந்தா கிழக்குப் பார்த்த இந்த வூட்டுக்கு நான் நீன்னு போட்டிப் போட்டுக்கிட்டு ஆள் வந்திருக்கும். ஆனா, இத்தனிக்காலமும் சும்மா கிடந்தவனுங்க அங்கே உத்தபுரம்கிற ஊர்ல சுவர் இடிச்சதைக் கேள்விப்பட்டதிலிருந்து இதுவும் தீண்டாமைச்சுவர்தான்னு கூச்சல் போட்டு இடிக்க வச்சுட்டானுங்க.

சுவத்தை இடிச்சப்புறமும் இந்த பாரத் நகர் ஆளுங்க யாரும் அந்தண்டை ஆட்களோட ஒட்டுறவு இல்லாம தண்ணிவண்ணி புழங்காம கட்டுத்திட்டமாகத்தான் இருக்கோம். கேபிள் டிவிக்காரன்கூட இந்தப்பக்கம் காசு வசூல் பண்ணிட்டுத்தான் அந்தண்டை போகணுமேயொழிய அங்க போயிட்டு இந்தண்ட வரக்கூடாதுன்னு கன்டிசனா சொல்லியிருக்கோம். போஸ்ட்மேன், சிலிண்டர் போடுறவன், லாண்ட்ரி, தள்ளுவண்டி கடைக்காரங்கன்னு எல்லாருக்கும் இந்த வழமை தெரியும். அப்படியெல்லாம் கட்டுத்திட்டமா இருந்தும் இப்ப என்னாச்சு பாத்தீங்களா... உங்க பிள்ளைங்க அந்த பிள்ளைங்கள வூட்டுக்குள்ளயே கூட்டியாந்துருச்சுங்க. யார் வூட்டுக்குப் போகணும், யாரை வூட்டுக்குள்ள கூட்டியாரணும்கிற வழமையெல்லாம் கொழந்தைங்களுக்கு தெரியாது, பெரியவங்க தான் சொல்லித் தந்து வளர்க்கணும். இன்னிக்கு ஒங்க வீட்டுக்குள்ள பூந்த அந்தச் சனியனுங்க நாளைக்கு மத்த வூடுகளுக்கும் போச்சிங்கன்னா அப்புறம் யாரு சார் குடிவருவாங்க...? பழக்கவழக்கத்துக்கு பங்கம் வந்துடுமோங்கிற பயத்தோட ஒரு எடத்துல குடியிருக்க முடியுமா சார்? இனிமேலயாச்சும் இந்தப் போக்குவரத்த நிறுத்தி சுத்தப்பத்தமா இருக்கப் பாருங்க... நீங்க நாலெழுத்து படிச்சவங்க, அக்கம்பக்கத்து குடித்தனக்காரங்க அசூயைப்படற மாதிரி நடந்துக்க கூடாதுங்கிறது உங்களுக்கு தெரியாத விசயமில்லை. பார்த்து அவங்களோட அனுசரிச்சுப் போங்க...’

அனுசரித்துப் போ என்கிற உபதேசத்தையோ உத்தரவையோ கேள்விப்படாமல் ஒரு நாளையாவது கழிக்கமுடிகிறதா என்கிற கேள்விதான் இவர்களுக்கு எழுந்தது. ஏன் எதற்காக யாரோடு எப்படி என்றில்லாமல் அனுசரித்துப்போ என்று சொல்கிறவர்களின் சகவாசத்தை துறப்பதில் இருவருக்குமே ஒற்றுமை இருந்தது. பிறகென்ன, வேறு வீடு பார்க்குமாறு அதே தரகரிடம் சொன்னார்கள். வீடு  எப்படி இருக்கவேண்டும் என்று கேட்ட தரகரிடம் இவன் சொன்ன ஒரே நிபந்தனை, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தீட்டு தோஷம் என்று முகம் சுளிப்பவர்களாக இல்லாமலிருந்தால் நல்லது என்பது மட்டும்தான். புலியும் பசுவும் ஓர்துறையில் இறங்கி நீரருந்திய தன்மதேசம் மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துவதற்கு இடமில்லா அதன்ம தேசமாகிவிட்டது என்று அயோத்திதாசரால் குற்றச்சாட்டப்பட்ட இந்தநாட்டில் தீட்டு தோஷம் பார்க்காதவர்களை அக்கம்பக்கத்தவராக கொண்ட வீட்டை எப்படித்தான் தேடுவது?

சொல்லிவைத்த ஒரேவாரத்தில் ஏழெட்டு வீடுகளைக் காட்டினார் தரகர். முன்பக்கத்தில் வேம்பும் வெட்டவெளியுமாக காட்சியளித்த ஹெவன்லி ஹோம் லேஅவுட்டில் அடுக்குமாடியோ கூட்டுக் குடித்தனங்களோ இன்றி தனிவீடாக இருந்த இந்த வீடு அருங்கிளிக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. காம்பவுண்டு சுவற்றோடும் கனத்துயர்ந்த கதவோடும் அந்த வரிசையின் அடுத்தடுத்த வீடுகள்  இருந்ததால் குழந்தைகள்தான் வேண்டாவெறுப்பாக இருந்தார்கள்.

புதுவீட்டில் பண்டபாத்திரங்களை அடுக்கி ஒழுங்கு செய்யவே நாலைந்து நாட்களாகிவிட்டிருந்தன. அட்டைப்பெட்டிகளுக்குள் கட்டிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும் அடுக்கி முடித்தபோது எல்லாமே ஒரு ஒழுங்குக்குள் வந்தது போலிருந்தது. குடிவந்த மறுவாரத்தில் பெரியவளின் பிறந்த நாள் வருகிறது என்பதால் அதற்குள்ளாக மிச்ச வேலைகளையும் முடித்து வீட்டை சீர்படுத்திக் கொடுத்துவிடுமாறு அருங்கிளி கேட்டுக் கொண்டதனால் பொன்னுருகி எல்லாவற்றையும் திருத்தமாக ஒழுங்கு செய்திருந்தாள். அவமானப்பட்ட உணர்வோடு அவதியவதியாக வெளியேறி இங்கு குடியேறியிருக்கிறோம் என்பதை மறக்கவும் அக்கம்பக்கத்தாரை அழைத்து உபசரித்து அவர்களோடு கலக்கவும் வாழ்வரசியின் பிறந்தநாளை நல்லதொரு வாய்ப்பென கருதியிருந்தாள் அருங்கிளி.

காலையிலேயே குளித்து புதுத்துணி உடுத்திக்கொண்ட வாழ்வரசியோடு அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சாக்லெட் கொடுக்கப்போனார்கள் பொன்னுருகியும் நூதனாவும். மாலையில் கேக் வெட்ட குழந்தைகளோடு வருமாறு இவர்கள் விடுத்திருந்த அழைப்பினை ஏற்று அநேகமாக எல்லா வீடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்

மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து இவன் வெளியே வரும்போது, இவனுக்காகவே மதிலோரத்து டீக்கடையில் காத்திருந்தார் தரகர். இவரையும் நேற்று வீட்டுக்கு அழைத்திருக்க வேண்டும், தவறிப்போச்சே என்கிற வருத்தத்துடன் வந்த இவனிடம்  “நேத்து வூட்டுல ரொம்ப தடபுடல் போலஎன்றார் அவர். “அப்படியொண்ணும் ஆடம்பரமில்ல. பொதுவா எங்க குடும்பத்துல மதரீதியான பண்டிகை எதையும் கொண்டாடுறதில்ல. ஆனா பிறந்தநாளை கொஞ்சம் சிறப்பா கொண்டாடுவோம். புதுசா குடிவந்திருக்கிற நாங்க அக்கம்பக்கத்து ஆட்களை அழைச்சி உபசரிக்கிறதுக்கு இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்டோம், அவ்வளவுதான்என்றான். “அவ்வளவுதான்னு நீங்க சொல்லிட்டா அவ்வளவுதானா? அதுக்கப்புறம் என்ன நடந்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? நேத்து பங்க்ஷனுக்கு வந்த யார் உங்களைப்பத்தி என்னத்த சொன்னாங்களோ தெரியல, உடனே அந்தாளை வூட்டை காலிபண்ணிக் கொடுக்கச் சொல்லுன்னு வூட்டு ஓனர் ஒத்தக்கால்ல நிக்கிறான்...’’  

வீட்டை காலிபண்ணி வெளியேறும் முடிவை எப்பவும் இவர்கள் எடுப்பதுதான் வழக்கம். இந்த வீட்டைப் பொறுத்தவரை ஓனர் முந்திக்கொண்டார். இவ்வளவு பிடிவாதமாக விரட்டுகிற அளவுக்கு தாங்கள் செய்த குற்றம்தான் என்ன என்கிற இவனது யோசனையை இடைமறித்த தரகர்சார், நேத்து ராத்திரி எட்டு எட்டரை மணி இருக்கும், அந்தாள் என்னை போன்ல கூப்பிட்டு நீ கூட்டியாந்து என்வூட்ல குடி வச்சியே அவங்க என்ன ஆளுங்கன்னு கேட்டான். அதைப்பத்தி நானொன்னும் அவங்கக்கிட்ட கேட்கலியேன்னு சொன்னேன். கமிஷன் கிடைக்குதுன்னா யார் என்னன்னுகூட  கேக்காம கண்டவனுங்கள கூட்டியாந்து என்வூட்ல குடிவைப்பியான்னு ரொம்ப ஆவேசமா சத்தம் போட்டான். புழங்கற சாதியா இல்லாதவங்கள கூட்டியாந்து குடிவச்சு இப்படி அசிங்கம் பண்ணிட்டீங்களேன்னு அக்கம்பக்கத்து வீட்டாளுங்க போன்போட்டு எத்துறாங்கஇந்த மாசத்து வாடகைகூட வேணாம் அவங்கள காலிபண்ணச் சொல்லுன்னு கெஞ்சுறான். எனக்கும் ஒண்ணும் தோணல, அதான் உங்களையே பாத்துறலாம்னு வந்துட்டேன்என்று மூச்சுவிடாமல் பேசி நிறுத்தினார்.

 “இன்ன சாதின்னு சூசகமா சொல்லுகிற மாதிரிகூட வீட்டுக்குள்ள நாங்க எந்த அடையாளத்தையும் வச்சிக்கிறதில்ல. இருந்தும் நாங்க புழங்குற சாதியில்லேன்னு எதைவச்சு சொல்றாங்களாம்?” என்று கேட்கும்போது இவன் குரல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. “என்ன சார் நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க... அலமாரியில அடுக்கி வச்சிருக்கிறீங்களாமே அம்பேத்கார் புஸ்தகங்கள், அது போதாதா உங்களைக் காட்டிக்கொடுக்க?” என்று சொல்லும்போது புரோக்கரும்கூட அவர்களோடு சேர்ந்துகொண்டதைப்போல தோன்றியது இவனுக்கு.

தானொரு புழங்கத்தக்க சாதிக்காரன்தான், வாங்கி அடுக்கியுள்ள புத்தகங்களைப் பார்த்து அக்கம்பக்கத்தார் கொண்டுள்ள அசூயை அவசியமற்றது என்று சொல்லி இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக்கொண்டாலென்ன  என்று யோசித்த கணத்தில் தன்னையே அருவருப்பாக உணர்ந்தான். பிரச்னையில்லாதவரைக்கும் சாதிமறுப்பாளராக காட்டிக்கொண்டு, ஏதாவதொரு நெருக்கடி வந்தால் எதிர்கொள்ள பயந்து சாதியாளராக மாறிவிடுகிறவர்களை வேஷதாரிகள் என்று முன்பொருமுறை தான் எழுதியது தனக்கே இப்படி பொருந்திப்போகுமளவுக்கு யோசிப்பதை கேவலமாக உணர்ந்தான். தனக்குள்ளான இந்த தடுமாற்றத்தை தரகர் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று பதறினான்.

அம்பேத்கருடைய புத்தகங்களைப் படிக்கிறவர்களெல்லாம் அவருடைய சாதிக்காரர்களாகத்தான் இருக்கணுமா? அவரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டியங்கும் இந்த நாட்டில் அவருடைய சாதியல்லாத ஒருவரது வீட்டில் அவர் புத்தக உருவில்கூட நுழைய முடியாதா? ஆழ்ந்தகன்ற மேதமையோடு விரியும் அம்பேத்கரின் நூல்களைப் பார்த்த மாத்திரத்திலியே அருவறுப்பும் அசூயையும் அடைகிற இவர்கள் புத்தகங்கள் புனிதமானவை என்று பூஜை போடுவதும் கால்பட்டுவிட்டால் கண்ணில் ஒற்றிக்கொள்வதும் போலித்தனமில்லையா? இப்படி அடுக்கடுக்காக எழுந்த கேள்விகள் எதையும் கேட்காமலே தரகரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் இவன். ஒட்டுமொத்த சமூகத்திடமும் கேட்கவேண்டிய கேள்வியை ஒரு தனியாளிடம் கேட்டு என்ன ஆகப்போகிறது என்கிற விரக்தியினால் இவன் வாயடைத்துப் போய் நின்றான் என்பதே உண்மை

கொஞ்சநேரம் இருவருமே பேசாமலிருந்தார்கள். அந்த அமைதி இருவருக்குமே தேவையாக இருந்தது அப்போது. திடுமென அந்த அமைதி பேச்சைவிடவும் பேரோசை எழுப்பி சலசலப்பதைப்போல உணர்ந்து பதறிய தரகர்சார், அவங்கெல்லாம் அப்படித்தான் சார். சம்பாத்தியத்துக்காக புள்ளைங்கள அமெரிக்காவுக்கும் அண்டார்ட்டிக்காவுக்கும் அனுப்புவானுங்க. ஆனா அக்கம் பக்கத்துல வேற்றாட்கள அண்டவிடமாட்டானுங்க. பல்லு வௌக்குற பிரஷ்சிலிருந்து படுக்குற பாய் வரைக்கும் - போட்டுக்குற துணிமணியிலிருந்து பொங்கித்திங்கிற சட்டிப்பானை வரைக்கும் அடுத்த சாதி ரத்தமும் வேர்வையும் கலந்த அத்தனையவும் அனுபவிச்சுக்கிட்டே நின்னது நிமிந்ததுக்கெல்லாம் தீட்டு தோஷம்னு பேசுவாங்க. அப்படி பேசலேன்னாலும்தான் இவங்கள பெரியசாதின்னு யார் சொல்லப்போறாங்க.... த்தூத்தேறி...’’. எதிரில் இருக்கிறவர்கள் மீது உமிழ்வதைப்போல காறித்துப்பிய அவர் சட்டென இவனது கைகளைப் பற்றிக்கொண்டபோது ஆறுதலாக உணர்ந்தான்.

சார், பொதுவா வூடு கேட்டு வர்றவங்க என்ன சாதின்னு சாடைமாடையா கண்டறிஞ்சு ஓனர்கிட்ட சொல்லிருவம். முடியாட்டி நேரடியாவேகூட கேட்டிருவம். நீங்க ஆளும் கொஞ்சம் வெளுப்பா பேரும் ஒரு தினுசா இருக்குறதால கேட்கவேணாம்னு எனக்கே தோணிருச்சு போல.  இந்தமாதிரி பிரச்னைகள் வராத மாதிரியான ஒரு வூட்டை ரெண்டொரு நாள்ல பாத்துக்கொடுக்குறது என் பொறுப்பு. என்னை தப்பா நினைச்சுக்காம நீங்க இந்த வூட்டை காலி பண்ணிக் குடுத்திருங்க

 “சட்டுனு என்னால உங்களுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியல. எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்க

 “நான் ரொம்ப வேண்டி கேட்டுக்கிட்டதா மேடத்துக்கிட்டயும் சொல்லுங்க. தேவைன்னா நான் நேர்ல வந்துகூட அவங்கக்கிட்ட பேசறேன்

 “அவசியமிருக்காது, நானே பேசிக்கிறேன்

தரகரைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பியவன் புத்தக அலமாரியையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அட்டைப்பெட்டிகளிலிருந்து பிரித்தடுக்கிய சீர்குலையாமல் புத்தகங்கள் வைத்தது வைத்தபடி அப்படியப்படியே இருந்தன. நடுத்தட்டில் அருங்கிளியின் புத்தகங்கள். அவள் ரொம்பவும் செலக்டிவாகத்தான் புத்தகங்களை வாங்குவாள். இவனென்றால் கண்டதையும் வாங்குகிறவன். காலையில் வெளியாகிற ஒரு புத்தகத்தை மாலைக்குள் படித்துவிடுமளவுக்கு தீவிர வாசிப்புள்ளவன், இவனால் படிக்கப்படாத புத்தகம் என ஏதாவதொன்று இருக்குமானால் அது இன்னும் அச்சடிக்கப்படாததாகத்தான் இருக்கும், சித்திரகுப்தனின் பேரேட்டைத்தவிர மற்றதையெல்லாம் படித்துமுடித்தவன் என்று தன்னைப் பற்றி நட்பு வட்டத்தில் உலவும் கருத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவே இவன் எப்போதும் புத்தகங்களை வாங்கிக்கொண்டிருக்கிறானோ என்று அருங்கிளிக்கு அந்தரங்கமாக ஒரு சந்தேகம் உண்டு. ஆனால் அம்பேத்கர் தொகுப்புநூல்களை இவன் வாங்கியது இவ்விதங்களில் சேர்த்தியில்லை. சொல்லப்போனால் அருங்கிளிதான் இவனை வாங்கவைத்தாள்.

இலக்கியம், அரசியல், பொருளாதாரம், மானுடவியல், வரலாறுன்னு இத்தனைப் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிற நமக்கு அம்பேத்கருடைய புத்தகங்களில் ஒன்றைக்கூட வாங்கணும்னு இப்ப வரைக்கும் ஏன் தோணல? தீண்டத்தக்க இந்தியா தீண்டப்படாத இந்தியான்னு இந்த நாடு ரெண்டா பிரிஞ்சிருக்குன்னு அம்பேத்கர் சொன்ன பிரிவினையை நாம புத்தகங்கள் வரைக்கும் நீட்டிச்சிட்டதா தெரியுது. தீண்டப்படாதவர்கள் எவ்வளவு தகுதி பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் தீண்டப்படாதவர்களிடையே தான் பெரியவர்கள் என்று கருதுகிற ஒரு சாதியவாதி நமக்குள்ளும் இருப்பதால்தான் அம்பேத்கர் மாதிரியான ஒரு சிந்தனையாளரை இவ்வளவு காலமும் படிக்காமல் ஒதுக்கிவிட்டோமா...? எனக்கென்னவோ இதுவும் ஒருவகையான தீண்டாமைன்னு தோணுது...’ என்று புத்தகக் கண்காட்சி ஒன்றில் வைத்து அவள் சொல்லப்போய்தான் இவன் அவற்றை வாங்கினான் முப்பத்தேழு தொகுதிகளையும் வரிசைக்கிரமம் வெளித்தெரியுமாறு அடுக்கி முடித்தபோது அந்த புத்தகங்களின் மேலட்டையிலிருந்த நீலவண்ணம் அலமாரி முழுவதிலும் பாய்ந்து புது அழகைச் சேர்த்தது. சொந்தசாதியைத் துறந்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தமது செயலுக்கான நியாயத்தை பின்னாட்களில் அம்பேத்கரது நூல்களில்தான் கண்டடைந்தார்கள். ஆனால் அம்பேத்கருடைய நூல்களால் இப்படியொரு இக்கட்டு ஏற்படும் என்று அப்போது இவன் நினைத்திருக்கவில்லை.

தரகர் சொன்ன விசயத்தை அருங்கிளியிடம் சொல்லலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இறுக்கமாக்கியிருந்தது இவனை. அருங்கிளியும்கூட தன்னைப்போலவேதான் இருக்கிறாள் என்பதை தாமதமாகத்தான் இவன் கண்டுகொண்டான். அவளிடம் சொல்லாமல் இதற்கொரு தீர்வு கிட்டாது என்பதால் தயங்கித்தயங்கி சொல்லிமுடித்தான். வாழ்வரசியின் பிறந்தநாள் விழாவுக்கு இயல்பாக கிளம்பி வந்த அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களில் பலரும் வந்த பிறகு ஏன் இயல்புகுலைந்து சங்கடத்தோடு அமர்ந்திருந்தார்கள்? வீட்டுக்குள் இருந்த எது அவர்களை மாற்றியது? பலகாரம், காபி, தண்ணி என்று எதுவொன்றையும் சாப்பிடாமல் அவர்கள் தவிர்த்ததற்கான காரணம்தான் என்ன? வற்புறுத்தலுக்காக கேக்கை மட்டுமே எடுத்துக்கொண்ட ஒருசிலரும் கூட வேண்டா வெறுப்பாகவே தின்றது ஏன்? அலமாரியில் இருந்த பொம்மைகளை எடுத்து விளையாட துறுதுறுத்த குழந்தைகளை அவர்கள் இழுத்துப்பிடித்து நிறுத்திக்கொண்டது எதனால்? என்று அவளை குடைந்துகொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டது. இனி தாமதிக்க வேண்டியதில்லை, வீட்டை மாற்றலாம் என்றாள்.

வீட்டை மாற்றும் ஒவ்வொரு முறையும்இப்படி மூட்டை முடிச்சுகளோடு பிள்ளைகளை இழுத்துக் கொண்டு திரிவதா என்கிற கேள்வி கடும் மனஉளைச்சலைத் தந்தது. வெளிப்படையாய் பிரித்து நிற்கிற சுவர்களைக் காட்டிலும் மனசுக்குள் ஒவ்வொருவரும் கட்டி வைத்திருக்கிற மாயச்சுவர்களின் திண்மையில் முட்டி மோதி தோற்று விழுவது இவர்களுக்கு பெருத்த அவமானமாகவும் இருந்தது. எந்த வீட்டுக்குப் போனாலும் இதேமாதிரியான பாகுபாடுகளையும் புறக்கணிப்புகளையும் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தது. ஆனால் அதற்காக அருங்கிளி சொல்லும் தீர்வையும் இவனால் உடனடியாக ஏற்கமுடியாமல் திணறினான். இப்போதென்றில்லை, திருமணத்திற்கு முன்பிருந்தேகூட அவள் இப்படியொரு யோசனையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருமுறை வீடு மாற்றும்போதும் அவள் இந்த யோசனையை வலியுறுத்தியும் வந்தாள். இவன்தான் யோசிக்க இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடு என்று கேட்டு தள்ளிப்போட்டு அருங்கிளியிடம் தன்னை தாழ்த்திக்கொண்டிருந்தான். இன்னமும் உனக்குள் இருக்கும் ஆணோ அல்லது சாதியவாதியோ தான் எனது யோசனையை ஏற்கவிடாமல் உன்னைத் தடுக்கிறான் என்பதைப்போல அருங்கிளி பார்க்கும்போது இவன் தனது தடுமாற்றத்தையும் தத்தளிப்பையும் மறைத்துக்கொள்ள முடியாமல் கூனிக்குறுகுவான். இந்தமுறை அவகாசம் கேட்பதற்கு பதிலாக தனக்கெதிராகவே சில முடிவுகளை எடுத்தாக வேண்டிய நெருக்கடிக்கு இவன் ஆளானது இப்படித்தான்

***
நம்மாளுங்களா இல்லாட்டி இங்கே குடிவந்திருப்பாங்களா என்று இவர்களும், அவங்காளுங்களா இல்லாட்டி அங்கே குடிபோயிருப்பாங்களா என்று அவர்களும் வாதிட்டுக்கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் அருங்கிளியும் இவனும் அம்பேத்கர் நகரிலிருந்து இப்போது அலுவலகத்திற்குப் போய்வருகிறார்கள். வாழ்வரசியும் நூதனாவும் அம்பேத்கர் நகர் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் அல்லாத மற்றவர்களின் நூல்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி இங்கு யாரொருவருக்கும் யாதொரு புகாருமில்லை.

***

நன்றி: தலித் முரசு


இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...