சனி, டிசம்பர் 27

மீசையாக அல்ல..மயிராக..! -கருப்பு கருணா

(இந்த பதிவை முழுசா படிக்கலன்னா ராத்திரி கனவுல மீசை வந்து கண்ணைக் குத்தும்..சொல்லிப்புட்டேன்..)
 போன வாரம் சேலத்துக்கு ஒரு புஸ்தகத்தப் பற்றி பேசப்போயிருந்தப்பதான் நந்தஜோதி பீம்தாஸை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு பாலம் சகஸ்ரநாமம். பீம்தாஸ், ஆதவன் தீட்சண்யாவுக்கும் நண்பருங்க…அவருகிட்ட பேட்டியெல்லாம் எடுத்திருக்காரு ஆதவன் என்று கூடுதல் தகவலை சொல்லவும், பீம்தாஸை எனக்கு இன்னமும் புடிச்சிப்போச்சி…ஆதவனை புடிச்சிருக்கிறமாதிரியே. கூட்டம் முடிஞ்சதும் கிளம்பட்டுமா.. எனக்கேட்டேன். இல்லை.. நானும்கூட வர்றேன்..எனக்கு இப்பவே உங்கக்கிட்ட பேசவேண்டியது நெறைய்ய இருக்குன்னு… என்கூடவே கிளம்பிட்டாரு பீம்தாஸ். மலைகள் சிபிச்செல்வன், ரத்னா கபேன்னு ஒரு பாடாவதியான ஓட்டலுக்கு கூட்டிட்டுபோயி சாப்பாடு வாங்கிக்குடுத்தாரு. நீங்க சாப்பிடலையான்னு பீம்தாஸை கேட்டேன். இல்லை..என்கிட்ட மார்க்வெஸ் குடுத்த சுருட்டு இருக்கு… இப்பத்திக்கி அதுவே போதும்.. நீங்க சாப்டு வாங்க..வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாரு. ஒரு வயசான பெரிய மனுசன ஒக்காரவெச்சிட்டு சாப்பிடறதுக்கு என்னமோமாதிரி இருந்ததாலயும், சாப்பாடு அவ்ளோ ருசியாக இருந்ததாலயும் அள்ளிப்போட்டுக்கிட்டு வெளியே வந்தேன்.பீம்தாஸ் சுருட்ட பொறுக்க வலிச்சிக்கிட்டு பக்கத்துல இருந்த மரத்துக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாரு.என்னைய பார்த்ததும் போலாமா..என சிரித்தார். சாப்பாடு நல்லாயில்லதானேன்னு கேட்கவும் நான் அசந்து போயிட்டேன். எப்புடி கண்டுபுடிச்சீங்கன்னு கேட்டதற்கு, மொசப்புடிக்கிற நாயி..மூஞ்சப்பார்த்தாலே தெரியாதான்னு தாடியா தடவிக்கிட்டே சொன்னாரு.

பஸ்ல ஏறி ஒக்காந்ததும்…பேச ஆரம்பிக்கலாமான்னாரு…நான் மல்லாட்ட துன்றீங்களான்னு கேட்டேன். ஓ..துன்னலாமே…எஙக ஊருல தின்னதுதான். நான் இருக்குற தீவுல இது கிடைக்காதுன்னு சொல்லி கொட்டையை ஒடச்சி தின்ன ஆரம்பிச்சுட்டாரு. மல்லாட்டையின் ருசி பேச்சில் கலக்கத்துவங்கியது. மனுசன் பேச ஆரம்பிச்சாரு பாருங்க…இன்னவரைக்கும் அந்த பேச்சே ஞாபகமாக இருக்கு. எங்கோ ஐரோப்பா கண்டத்தின் உட்விச் என்கிற கடலோர நகரத்திற்கு போயி…அங்கிருந்து கடலுக்குள்ள இருக்குற ஒரு தனியான தீவுல அவரு இருக்காராம்.கூடவே அவருடைய மகள் தங்கக்கிளியும் இருக்காளாம். அவளுக்கு மரியாதை கொடுத்து ஒரு நாளைக்கு நாலு சிகரெட்டுக்குமேல் புடிக்கமாட்டாராம். ஒஎஉ நாலைந்து குடும்பங்கள்தான் அவருடைய தீவில் இருக்காம். தேவையானதை விளைவித்து சமமாக பங்கிட்டுக்கொள்கிறார்களாம். ச்சே..கேட்கவே எவ்ளோ நல்லாயிருக்கில்ல..

ஆனால் ஒரு விஷயம். அவரு பிறந்தது நம்ம தமிழ்நாட்டுல தர்மபுரி மாவட்டத்துல தானாம்.அட..திர்ணாமலைக்கு ரொம்ப பக்கம்..தர்மபுரின்னதும் ஆதவன்,நவகவியெல்லாம் பிறந்த ஊராச்சேன்னு நமக்கு பீலிங் ஜாஸ்தியாப்போச்சி. அதுவுமில்லாமல் நமக்கு சங்கத்துல அந்த மாவட்டம்தான் செயற்குழு பொறுப்பு என்பதால் பொறுப்பும் அதிகமாகி அவரோடு பொறுப்போடு பேச்சை தொடர்ந்தேன். உங்கள் பூர்வீகம் எதுன்னு கேட்டேன். “உங்கள் கேள்விக்கான பதிலைத்தான் நானும் எனது முன்னோர்களும் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்…ஊர் என்ற ஒன்றே எங்களுக்கு இல்லை” என்றார். அப்புறம் இந்த தீவுன்னு சொன்னீங்களே..ன்னு இழுத்தேன். அந்தத்தீவு அவர் வேலை பார்த்த கப்பலின் கேப்டன் ஜே.எம்.ஆண்ட்ரூவுக்கு சொந்தமானதாம் அந்த தீவு. கேப்டன்தான் பீம்தாஸை தன்னுடனே அழைத்துவந்து வச்சிக்கிட்டு கடைசியில அந்த தீவையும் அவருக்கே கொடுத்துட்டு ஏதாவது செய் என சொல்லிட்டு செத்துட்டாராம்.

சரி…தர்மபுரிக்காரரு கப்பலுக்கு எப்படி வேலைக்கு போனாருன்னு தோணுதா… நானும் இதைத்தான் அவருகிட்ட கேட்டேன். எப்படி போனேன்னு தெரிஞ்சிக்கறதவிட ஏன் போனேன்னு தெரிஞ்சிக்க தம்பின்னு சாட்டையை எடுத்து என்னை விளாச ஆரம்பிச்சிட்டாரு. அவர் தன் கதையை சொல்லச்சொல்ல நான் குற்றஉணர்வால் கூனிக்குறுகத்துவங்கினேன். ஆமாம்…கட்டமைக்கப்பட்டுள்ள சாதியப்படிநிலைகளில் தனக்கு கீழே ஒரு சாதியை இருத்திவைத்து மீசையை முறுக்கிவிடவேண்டும் என நினைக்கும் எவனுமே குற்ற உணர்வால் கூனிக்குறுகித்தான் ஆகவேண்டும். அத்தனை வலிகளும் வேதனையும் புறக்கணிப்பும் மிகுந்தது அவரது கதை. பீம்தாசுக்கு மட்டுமல்ல.. நந்தன்.ஜோதிராம் பூலே, பீம்ராவ் அம்பேத்கர், அயோத்திதாஸ பண்டிதர் ..இன்னும் நீளும் அந்தப்பட்டியலின் கதைகள் அனைத்துமே வலி நிறைந்ததுதான்.

வழியில் அரூர் பக்கத்தில் உணவகம் ஒன்றில் நின்றது, உணவகம் நில்லா பேருந்து என எழுதப்பட்டிருந்த அந்த பஸ். நான் மட்டும் கீழே சென்று ஒரு சிகரெட் குடித்துவிட்டு வந்தேன். காற்றில் பக்கங்கள் படபடக்க சிரித்தபடியே அமர்ந்திருந்தார் பீம்தாஸ். பஸ் கிளம்பியதும் பேச்சும் கிளம்பியது. தன்னுடன் படித்த ஆண்டையின் மகனை பெயர் சொல்லி அழைத்ததால் தீட்டாகிவிட்டதெனப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆண்டை பீம்தாசை அடித்துத்துவைக்க, ஆவேசமடைந்து ஆண்டையின் குறியை இழுத்துப்பிடித்து நசுக்கி துடிக்கவைத்துவிட்டு சேரியிலிருந்து தப்பி ரெயிலேறி..அதுபோகும் இடமெல்லாம் காற்றைப்போல அலைந்து திரிந்து…கடைசியில் தனுஷ்கோடிக்கு போய் சேர்ந்து…அந்த நேரம் பார்த்து புயலடித்து தனுஷ்கோடி கடலுக்குள் ஜலசமாதியானபோது…. போதும் நிறுத்துங்கள்.. என நானே பேச்சை முறித்துக்கொண்டேன். இதையெல்லாம் கேட்கவே உன்னால் சகித்துக்கொள்ள முடியலையா… நாங்கல்லாம் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமடா.. என்பதைப் போல என்னை ஆவேசமாய் பார்த்தார் பீம்தாஸ். நான் மிகவும் உடைந்து போயிருந்தேன். இந்தக் கொடுமையெல்லாம் இன்றும் தொடர்கிறதே என்கிற இயலாமை என்னை ஆட்கொண்டுவிட்டது.

இரவு வீட்டுக்கு வந்ததும் இது யாருங்க என கேட்டாள் துணைவியார் செல்வி. ஆதவனின் நண்பர்..எனக்கும் நண்பர்தான் என அறிமுகப்படுத்திவிட்டு புத்தக அறைக்குள் அவரை தங்கச்செய்தேன்.அடுத்தநாள் மனைவி பிள்ளைகள் அவரவர் வேலைக்கு கிளம்பிப்போனதும் வெளியே வராண்டாவில் புகைத்தபடியே எஙகள் உரையாடல் தொடர்ந்தது. என்னுடைய நாவலை ஆதவன் மொழிபெயர்த்திருக்கிறார் தெரியுமா..என்றார். ஆமாம் தாஸ்…(அதற்குள் நாங்கள் பெயர் சொல்லி விளிக்குமளவுக்கு நெருக்கமாயிட்டோல…) அந்த மொழிபெயர்ப்புக்கான குறிப்பை படிச்சபோது ஒரு இடத்துல “பட்டாளத்துக்கு புட்டு அவிக்கிறமாதிரி ..” மொழிபெயர்க்குறாங்கன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு சிரிச்சிக்கிட்டெயிருந்தேன்…தெருவுல போனவங்க ஒருமாதிரியாக பார்த்துட்டுப்போனாங்க.. என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை. முகம் இறுகிப்போயிருந்தது. என்னாச்சி..என்றேன்.

தனுஷ்கோடி மூழ்கிப்போயிடிச்சி… குடும்பங்கள் தவிக்குது.. ரயில் நிலையத்துல அண்டிக்கிடக்குது..… நான் சிலோனுக்கு போறதுக்குள்ள.. எனத்துவங்கியபோது எனக்கு நடுக்கம் தொற்றிக்கொண்டது வேண்டாம் தாஸ்… இந்தத்துயரங்களை காட்சிப்படுத்தி பார்க்கும்போது என்னால் சகஜமாக இருக்கமுடியவில்லை… நீங்க நேரடியாக சிலோனில் நடந்ததை சொல்லுங்கள் என்றேன். சரியாப்போச்சி.. இந்த காட்சிகளையே தாங்கமுடியாதவன் மலையகத்தின் துயரங்களையும் வலிகளையும் எப்படி தாங்குவாய் என்றார். இல்லீங்க தாஸ்..அதைப்பற்றி கேட்டும் படித்தும்..தொலைக்காட்சிகளில் பார்த்தும் எங்களுக்கு மரத்துப்போயிடுச்சி.. நீங்க என்ன மாதிரி சொன்னாலும் எங்களுக்கு உரைக்காது என்றேன்.மலையகம் போவதற்கு முன் “ காடும் கடலும் தின்றது போக“ என்ற ஒருவரியை சொன்னார் பீம்தாஸ். அதிர்ந்துபோய் கொஞ்சநேரம் அமைதியாகிவிட்டேன்.இந்த ஒற்றை வரியை விரித்துப்போட்டால் பல நூற்றாண்டுகளின் வரலாற்றை சொல்லிவிடமுடியுமே.. அப்படித்தான் மலையகத்தின் கதையையும் அங்கும் சாதி இருந்ததையும் சாதிகளுக்கேற்ப தங்கும் லயன்வீடுகள் இருந்ததையும் விரித்துக்கொண்டே போனார் பீம்தாஸ். ஆனந்தம் பிள்ளை. பிரீமியம் பார்பர் ஷாப், கம்யூனிச பேய் பிரெஸ்கிர்டில், ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம், அதில் நடந்த துரோகங்கள், அதில் அப்போதிருந்த தமிழ்நாட்டு, இலங்கை கட்சிகளின் நிலை, நாடற்றவராக்கப்பட்டோரின் துயரம் என புனைவு கலக்காத வரலாற்றை ஒரு புனைவைப்போல சொல்லிமுடித்தார் பீம்தாஸ். ஒரு மனுஷனுக்குள் இத்தனை அனுபவங்களா..என நான் வியந்தும் உணர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தபோதே…மீசை என்பது வெறும் மயிர் என்ற எனது நாவலை படித்திருக்கிறீர்களா என்றார்.

இல்லை தாஸ்…அதையும் நீங்களே சொல்லுவிடுங்களேன் என்றேன். நாவல்ன்னா அதை சொல்ல முடியாதய்யா…படிச்சிதான் உணரணும்..எனச்சொல்லிவிட்டு புத்தகத்தை என்னிடம் வீசிவிட்டு விருட்டென்று எழுந்து போய்விட்டார் பீம்தாஸ். அவர் தெருவிலிறங்கியதும் நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டது. பீம்தாஸை பார்த்துதான் குரைக்கிறதோ பார்க்கலாம் என எழுந்தபோது, அவர் கொடுத்துவிட்டுப்போன புத்தகத்திலிருந்து நாய் தலையுடைய மனிதர்களும் மனிதத்தலையை கொண்ட நாய்களும் வெளியே குதித்து குரைக்கத் துவங்கினார்கள். அவைகளின் மொழி என்னவோ நாய்களின் மொழியாக இல்லாமல் மனிதர்களின் மொழியாக இருந்தது. என்ன இது புதுசாயிருக்கேன்னு புத்தகத்தை கையில் எடுத்த கணத்தில் மீசையே இல்லாத மனிதர்களும் விதவிதமான மீசைகளும் வரிசையாய் வெளிப்படத்துவங்கியபோது… அனிச்சையாய் நான் என்மீசையை தொட்டுப்பார்த்தேன்.அது எப்போதும்போல இருந்த இடத்திலேயே இருந்தது…மீசையாக அல்ல…மயிராக.

வியாழன், டிசம்பர் 25

மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை - ஆதவன் தீட்சண்யா



 டிசம்பர் 25: 
மநுஸ்மிருதி எரிப்பு நாள், 
வெண்மணியில் தோழர்கள் 
எரிக்கப்பட்ட  நாள்
‘‘நுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரீகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக்கிறது’’ என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலைமையில்  மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.

மஹத் நகரின் சௌதார் குளம் சாதிஇந்துக்களும் எல்லாச்சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை. இத்தடையை நீக்குவதென 1924ல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற சாதி இந்துக்கள் விடவில்லை. 1927 மார்ச் 19,20ல் மஹத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித்தல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம்பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்தி நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர். ஆத்திரமடைந்த சாதிஇந்துக்கள், தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன்முறையை ஏவினர். எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லைஎன்றார் அம்பேத்கர். சாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால் தயிர் மாட்டு மூத்திரம் சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்து தீட்டு கழித்தனர்.

இதனிடையே மஹத் நகரசபை தலித்துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4ல் ரத்து செய்தது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மஹத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக்கானது அல்ல என்பதை உணர்ந்த சாதி இந்துக்கள் நீதிமன்றத் தடையாணை பெற்றனர். இடம், தண்ணீர், மளிகைப்பொருட்களை வழங்க மறுத்தனர். ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது. இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லைஎன்கிற அம்பேத்கரின் பயிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர். சகஸ்திரபுத்தே என்கிற பார்ப்பனர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதிவரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண்டிருந்தவர்.

மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927ல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் திரு.எம்.சி.ராஜாவிடமிருந்து வெடித்தது. மஹத்துக்கும் முன்னதாகவே 4.12.1927ல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார். மஹத் மாநாட்டின் மீது இந்நிகழ்வுகள் தாக்கம் செலுத்தினவா, இந்த எதிர்வினைகள் 1927ல் முனைப்படைந்தது ஏன் என்பவை ஆய்வுக்குரியவை.

மஹத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்துப் போன மநுஸ்மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்கலாய்ப்பே அதன்  இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு அன்னியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே...என்றார். நிம்மதியிழந்த பார்ப்பன பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிருதியைக் கருதியதாலேயே எரித்தோம். அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தியெடுக்கும் கோரக்கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அதற்கு எதிராக வரிந்துகட்டினோம். உயிர்களை பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம், நினைத்ததைச் செய்துமுடித்தோம்...

விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி தட்சணையாக பொருள் ஈட்டுவதே வேதமதம். அதை எதிர்த்தெழுந்த பௌத்தம் அசோகரால் மகதத்தின் அரச  மதமாக்கப்பட்டதால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. அரசுரீதியான ஆதரவுகளை இழந்த பார்ப்பனர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர். அசோகமித்திரன், பத்ரி சேஷாத்திரி மொழியில் ஒடுக்கப்பட்டனர்’. உயிர்ப்பலியிலும் சோம யாகத்திலும்  நம்பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185ல் ஆட்சியைக் கைப்பற்றினான். ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்வதாயிருந்தது அவனது பௌத்த வெறுப்பு. பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத்கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.

பூமியின் கடவுள்களாக பார்ப்பனர்களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது. யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விஸ்தரிக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. இத்தனைக்கும் அது சத்திரியர்களை, பரசுராமனால் கொல்லப்பட்டவர்களின் விதவைகள் பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. பட்டத்து மகிஷியைக் கன்னிகழிப்பதையும் அது பார்ப்பனர்களின் உரிமையாக்கியது. பெண்கள் அனைவரையும் சூத்திரர்களையும் உயிர் வாழ்தலுக்கும் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ்விற்கும் உரிமையற்றவர்களாகமநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத்கர் அதை கொளுத்துவதற்கு தலைமையேற்றது பொருத்தமானதுதான். 

ஒரு குறீயீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ்மிருதியை எரித்தப் போராட்டத்தை குடிமக்கள் யாவரும் சமம் என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவதுவரை அம்பேத்கர் முன்னெடுத்தார். அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராக கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்த சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். அம்பேத்கர் கொளுத்திவிட்டுப் போன அந்தத் தீப்பந்தத்தை தொடர்ந்து ஏந்தாதன் கொடிய விளைவை நாம் அதே டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் கண்டோம். ஆமாம், வஞ்சம் வைத்து காத்திருந்த மநுவாதச்சிந்தனை நம்மில் 44 பேரை எரித்து பழிதீர்த்துக்கொண்டது.
***
ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளியச்  சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில்  அரவணைத்து நெறிக்கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்குவதாகவும் பசப்புகிறது. பட்டியல் சாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது, தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக்கிறது. இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி, முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் சாதியினரான இவர்கள் இஸ்லாமியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப்பட்டனர் என்று திரிக்கிறார். மட்டுமல்லாது, மநுஸ்மிருதியை உயர் சாதியினரின் புனிதநூலென அம்பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்சாதியினரான தலித்துகளும் மநுஸ்மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடுகிறார்.

இப்படி உண்மைகளைக் கொல்லும் பொய்யர்களின் காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஏற்கனவே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கு சிலைவைத்த அவர்கள், தொன்மையான சட்ட வல்லுனர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கும் சிலைவைக்கக் கோரும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தை மீண்டும் மநுஸ்மிருதிக்குள் மூழ்கடித்துக் கொல்வதற்கான யுத்தத்திற்கு உகந்தகாலம் இதுவென்ற ஆணவம் அவர்களிடம் கொப்பளிக்கிறது. தற்காத்துக்கொள்ளவும் முன்னேறித் தாக்கவும் நமக்கான நெருப்பு மஹத்திலும் வெண்மணியிலும் இன்னமும் கனன்று கொண்டேயிருக்கிறது.

ஆதாரங்கள்:
அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்: 7, 35

குடிஅரசு: 30.10.1927, 11.12.1927

Comrade R B More: A Red Star In Blue Sky- Satyendra More,Subodh More-  People's Democracy, March 16, 23, 2003

http://www.telegraphindia.com/1140907/jsp/nation/story_18808727.jsp#.VJfPmcFrhA

http://worldhindunews.com/2014111235768/%E2%80%8Bpetition-to-add-a-statue-of-manu-to-u-s-supreme-court-building/

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள பார்ப்பனர் என்ற சொல்லை பிராமணர் என்று திருத்தி (?) இன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது. அதற்கு நன்றி சொல்வதா என்று குழப்பமாக உள்ளது.



 

வியாழன், டிசம்பர் 11

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா




நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை: நந்தஜோதி பீம்தாஸ்

மீசை என்பது வெறும் மயிர்
சந்திப்பு/ நேர்காணல்/ நாவல் சுருக்கம்
  - ஆதவன் தீட்சண்யா


 பக்கம்: 176, விலை: ரூ. 130 /-
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி : 044 24896979

‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலுக்கான முதற் பதிப்புரை

உலகெங்கும் மக்கள் தமது சொந்த வாழிடங்களை விட்டு பெயர்ந்தோடிக் கொண்டிருக்கிறார்கள். ஊர், நாடு, கண்டம் என்று அவர்கள் நீங்கிவருகிற நிலப்பரப்புகளின் பரந்த கடல்களையும் நெடிய மலைகளையும் பனி, மழை, வெயிலுக்கூடாக அவர்கள் இரவும் பகலுமாய் நடந்தே கடக்கின்றனர். பாலைவனங்களில் பொசுங்கிய பாதங்களில் கசியும் ரத்தம் கொண்டு அவர்கள் புதிய பெருவழிகளை வரைந்தபடி விரைகிறார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீழும் இடங்களில் அபயம் கேட்டு இரைஞ்சும் அவலம் இன்று குடிமைச் சமூகத்தின் பெருந்துயராகியுள்ளது.

பிறந்த மண்விட்டு குடிமக்கள் அகலும் சமூகச்சூழல் நிலவுவதை ஒரு அவமானமாகக் கருதாத அரசுகள் இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. மனிதகுலம் உயர்த்திப் பிடிக்கும் மாண்புகளை வெட்டிச்சாய்க்க வந்த கோடாரிகளென இவ்வரசுகள் நீடிக்கும் ஒவ்வொரு கணமும் உலகம் கடும் அச்சுறுத்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. எந்தக் கூருணர்வும் இல்லாதவராலும்கூட வெறுக்கத்தக்கதாய் இழிவுற்றிருக்கும் இச்சமூகங்களில் சுயமரியாதையுடன் வாழவிரும்பும் ஒருவர் எதிர் கொள்ளும் இடர்ப்பாடுகள் அச்சமூட்டுகின்றன.

சகமனிதரோடு இணங்கி வாழ்வது குறித்த பன்னாட்டு பிரகடனங்களிலும் கூட்டறிக்கைகளிலும் கையொப்பமிட ஆர்வம் காட்டுகிற பலநாடுகள், அவற்றை தமது சொந்த மண்ணில் செயல் படுத்திட விருப்புறுதி கொண்டிருப்பதில்லை என்கிற கடும் குற்றச் சாட்டுகள் வெளிப்படையாகக் கிளம்பியுள்ளன. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு முடிவுகட்டும் தமது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் அரசுகள், இப்பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் மக்கள்திரளை அடக்கியொடுக்குவதன் மூலம் பிரச்னையின் ஒரு தரப்பாக மாறிவிடுகின்றன. இப்போக்கின் ஆகக்கேவலமான உதாரணம் இலங்கை என்றால் அதை விடவும்  தாழ்ந்திருக்கிறது இந்தியா.

வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். அந்தளவுக்கு மற்றமை மீதான வெறுப்பையும்   சகிப்பின்மையையும் இந்தியர் கடைபிடிப்பதற்கான காரணம் அங்குள்ள சாதியமே. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிற இந்தியாவின் சாதி முறையானது, அறியப்பட்டுள்ள பாகுபாடுகளின் வடிவங்களுக்குள் அடங்காத ஒன்றாக இருந்து அச்சுறுத்துகிறது. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு எவ்விதத்திலும் குறையாத இந்தச் சாதிப் பாகுபாடு மற்றும் அதன்பேரிலான கொடிய ஒடுக்கு முறை குறித்து சர்வதேச சமூகம் போதுமான அளவில் தலையீடு செய்யவில்லை என்பதே உண்மை.  இப்பாகுபாட்டை சர்வதேச அரங்கில் ஒரு விவாதப்பொருளாக முன்னிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் அரசும் சாதியத்தின் ஆதரவாளர்களும் இணைந்து நிற்கும் தருணங்களே அதிகம்.

இனவெறிக்கெதிரான டர்பன் மாநாட்டுத் தீர்மானத்தில் சாதியைப்பற்றி ஒருவார்த்தையும் இடம்பெறாமல் தடுப்பதில் வெற்றியடைந்துவிட்ட இறுமாப்பிலிருக்கும் இந்தியாவின் ஆட்சியாளர்களது  நிம்மதியைக் குலைப்பவராக இருக்கிறார்  நந்தஜோதி பீம்தாஸ். சாதி இழிவுக்காளாகி அதன் காரணமாக தன் பதின்ம வயதில் பிறந்தமண்ணை விட்டு வெளியேறிய அவர் நாட்டை விட்டும் பின் அகன்றார். மீன்பிடி கப்பலொன்றின் சமையற்கட்டில் சிற்றாளாகச் சேர்ந்து பல நாடுகளுக்கும் சுற்றியலைந்த அவர் தனது பின்னிளமைக் காலத்தில் புனைவிலக்கியம் எழுதத்தொடங்கியவர். இந்தியாவுக்குள்ளிருந்து பட்ட அவமானங்களும் வெளியே நின்று பார்ப்பதால் கிடைக்கிற முழுப்பரிமாணமும் அவரது எழுத்தின் தனித்துவமாக இருக்கின்றன.

வல்லரசுக் கனவில் மிதக்கும் ஒருநாடு தன் சொந்தமக்களில் ஐந்திலொரு பங்கினரை என்னவாக நடத்துகிறது என்று குற்றப் பத்திரிகை தயாரிக்க இவரது எழுத்துக்களையே முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளலாம். நாடுகளுக்கிடையிலான போர்களில் கொல்லப் படுகிற அப்பாவி மக்களைக்காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தன் சொந்த மக்களை அன்றாடம்  கொன்று குவிக்கிற இந்தியாவின் அஹிம்சாவாதம் என்கிற போலித்தனம் மீதான கண்டனமாக விரியும் இவரது எழுத்துகள் மனிதவுரிமைக்கான போராட்டத்திற்கு உந்துவிசையாக இருக்கும் என நம்புகிறோம். தலைக்கு விலைவைத்து கொல்லப்பட்ட பௌத்தர்களின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டதால் கிடைத்திருக்கும் அஹிம்சை வேடத்தைக் கலைத்து இந்தியாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் கடப்பாடு கொண்ட அவரது எழுத்துகள், இலக்கியத்தின் நோக்கம்தான் என்ன என்கிற கேள்விக்கு தகுமானமிக்க பதிலாகவும் விளங்குகின்றன.

நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்ற பொதுத் தலைப்பின் கீழ் புலம்பெயர் எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை வெளிக்கொணரும் எமது திட்டம் திரு.நந்தஜோதி பீம்தாஸ் அவர்களிடமிருந்து தொடங்குவதைப் பெருமையாகக் கருதுகிறோம். பீம்தாஸின் நூல்களை வெளியிட்டுவரும் ஈஜின் நிலவறை நூலகத்தின் வழிகாட்டுதலோடு, அவரது வேறுபல நூல்களையும் பதிப்பிக்கவிருக்கும் எமக்கு வாசகர்கள் துணைநிற்பார்கள் என நம்புகிறோம்.

- ஃப்யூமி கெஃப்ளர்
வெளியீட்டுப் பிரிவுச் செயலாளர், “Otherside”
                                                                    

வியாழன், டிசம்பர் 4

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி ரவிக்குமார் எழுதிய பதிவுக்கு கண்டனம்


துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி எழுத்தாளர் ரவிக்குமார் முகநூலில் எழுதிய பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்திரிகைச் செய்தி

வணக்கம்.
இந்தியாவில் மிக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களை மனிதனைக் கொண்டே சுத்தம் செய்ய வைக்கும் மனிதத்தன்மையற்ற கொடுமையான வழக்கத்தை - உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு தலித் மக்கள் இயக்கங்களும் - மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. உச்ச நீதிமன்றம்கூட மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்துக் கட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு வைத்து ஆணையிட்டுள்ளது.

இச்சூழலில், எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், கழிவுநீர்க் கால்வாயிலும் மலக்குழிக்குள்ளும் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து தனது முகநூலில் தெரிவித்துள்ள கருத்துகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடமும் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரவிக்குமார் தனது முக நூலில் 19.11.2014 அன்று பின்வருமாறு எழுதியுள்ளார்: “பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி அதைச் சுத்தம் செய்வது மனித உரிமைகளுக்கு எதிரானது. சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட அந்த வழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் நடைமுறையில் உள்ளது. அதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எந்த ஒரு திட்டமும் இல்லாமல் நகரங்கள் உருவாக்கப்படுவது தொடரும் வரை, கழிவுகளை அகற்றும் ஒரு எந்திரத்தின் விலையைவிட மனித உயிர் மலிவானதாக இருக்கும் வரை இது தொடரத்தான் செய்யும்.

“இந்தக் கேவலமான வேலையில் ஈடுபடக்கூடாது என ஏன் அதில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிவதில்லை? அதில் ஈடுபடும் பெரும்பாலோர் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அந்த இழிவான வேலையைச் செய்யவில்லை. குடிப்பதற்காகத்தான் செய்கிறார்கள். குடித்தால்தான் அந்த வேலையைச் செய்ய முடியும், அதைச் செய்தால் குடிக்க முடியும் என்ற விஷச்சுழலிலிருந்து அவர்கள் விடுபடாதவரை எந்தச் சட்டமும் அதை ஒழிக்க முடியாது.” (முகநூல் பதிவு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)

ரவிக்குமார் தனது முகநூலில் இக்கருத்துகளைத் தெரிவித்த பிறகு, இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவரே அக்கருத்தை நீக்கியுள்ளார். அந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவர் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை. எதுவும் நடக்கவில்லை என்பது போல அவரது முகநூல் கள்ள மவுனம் காத்து வருகிறது.

கழிவுகளைச் சுத்தம் செய்யும் ‘தொழில்’, அவற்றைச் செய்யும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள சாதிய சமூக நடைமுறை; அரசு எந்திரத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான ஒத்துழைப்பின் மூலம் இந்த மக்கள் மீது இழைக்கப்பட்டு வரும் வன்முறை. டாக்டர் அம்பேத்கர் கூறினார்: “இந்தியாவில் ஒருவர் தோட்டியாக இருப்பதற்குக் காரணம், அவர் அந்த வேலையைச் செய்வதால் அல்ல; அவர் தோட்டி வேலையைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், பிறப்பின் காரணமாக அவர் தோட்டியாகவே இருக்கிறார்” (பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 9).

உலர் கழிப்பிடங்கள், கழிவு நீர்க் கால்வாய்கள், கழிவு நீர் நிலைகள், துர்நாற்றமடிக்கும் குப்பைகள் ஆகிய அனைத்தையும் துப்புரவு செய்யும் தொழிலாளர்கள் குடிப்பதற்கு ஆசைப்பட்டுதான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்கிறார் ரவிக்குமார். இக் கொடிய கருத்து, மனிதக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றும் தொழிலாளர்கள் மீது மட்டுமல்ல; பிணங்களை அகற்றுவோர், பிணப்பரிசோதனையில் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் உதவி செய்பவர்கள், பிணக் கிடங்குகளில் பிணங்களைப் பராமரிப்பவர்கள், பிணம் எரிப்பவர்கள், சாவுக்கு மேளம் அடிப்பவர்கள் ஆகியோரையும் அவதூறு செய்கிற, இழிவுபடுத்துகிற கருத்தாகும்.

அதுமட்டுமல்ல, குடிப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டவர்கள் இவர்கள் மட்டும்தானா? வேறு தொழில் செய்கிறவர்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகவில்லையா? அப்படி இல்லை என்றால், ‘டாஸ்மாக்’கை வைத்தே அரசாங்க எந்திரத்தை ஓட்டிச் செல்வது தமிழகத்தில் சாத்தியம்தானா?

‘கல்வியின்மைக்கு காரணம் மக்களுக்கு கற்பதில் உள்ள ஆர்வமின்மையே‘; ‘பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் பெண்களின் உடையலங்காரமும் நடத்தையுமே‘ -என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் ஆதிக்கவாதிகளின் கருத்தியல் தொடர்ச்சியில் ரவிக்குமார் வெகுவாகப் பொருந்தி நிற்கிறார்.

ரவிக்குமாரின் தரங்கெட்ட இக்கருத்தை ‘தமிழ்நாடு மாற்றுப்பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை’Tamilnadu Alternative Journalist & Writers Forum மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி அரசாங்கத்தின் கீழ், மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையும் இந்துத்துவ பாசிச நடைமுறையும் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, பொருளாதார, அரசியல், பண்பாட்டு, சாதிய, தேசிய இன ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக, முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், தலித் மக்களிடையே உட்சாதி வேறுபாடுகளை ஆழப்படுத்தும் பிற்போக்குத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு சிலர் எழுதியுள்ள எதிர்வினைகளிலும் ரவிக்குமார் தெரிவித்துள்ளவை போன்ற அருவருக்கத்தக்க, மனித மாண்பற்ற கருத்துகள் வெளிப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கருத்துகள் உட்சாதிப்பூசல்களை வளர்க்கத்தான் செய்யுமே தவிர, ஒன்றுபட்ட, உறுதியான சாதி எதிர்ப்பு தலித் அடையாளத்தையோ, அரசியலையோ உருவாக்காது என்பதையும் சொல்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மனித மாண்புக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வரும் ரவிக்குமார், தமிழகத்தில் முக்கிய தலித் கட்சிகளிலொன்றாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருப்பது எத்தகைய அவப்பேறு என்பதை அந்தக் கட்சியிலுள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களும், அவர்களின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவண்,

தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவையின் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டவர்கள்:

- எஸ்.வி.ராஜதுரை, அய். இளங்கோவன், கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், கவிஞர் தமிழேந்தி, யாக்கன், எழில். இளங்கோவன், சிறீதர கணேசன், புனித பாண்டியன், அழகிய பெரியவன், தலித் சுப்பையா, ஆதவன் தீட்சண்யா, யாழன்ஆதி, ரா. கிருஷ்ணசாமி, ஜெயராணி, அ. முத்துக் கிருஷ்ணன், கம்பீரன், சு. சத்தியச்சந்திரன், செ. சரவணன், அருண்குமார், அமுதா, சுஜி, சுரேந்தர குமார், கே.எஸ்.முத்து, அய்.ஜா.ம. இன்பக்குமார், ஜெய்சாம்யாக்.

முக நூல் பதிவு இணைக்கப்பட்டுள்ளது :



இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...