சனி, ஜனவரி 3

கௌரவக்கொலை - ஆதவன் தீட்சண்யா




ரும்பாடு பட்டு வளர்த்த தம் பிள்ளைகளை பெற்றோர்களே கொன்றொழிக்கும் கொடுஞ்செயலை கௌரவக்கொலை என்றழைக்க என்ன நியாயம் இருக்கிறது? அவர்களைக் கொன்றாவது காக்கவேண்டிய அது உண்மையில் கௌரவம்தானா? கௌரவம் என்பதன் பொருள்தான் என்ன? என்று கேட்டு வலுவாக குறுக்கீடுவதற்கு பதிலாக உலகம் முழுக்க இவ்வகையில் வருடத்திற்கு 5000 பெண்கள் கொல்லப் படுவதாக புலம்புகிறது ஐ.நா. தற்கொலை, காணாமல் போதல், விபத்து என மூடி மறைக்கப்படுபவற்றையும் கொல்லப்படும் ஆண்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 20,000 வரை எகிறும் என்கிறது ஓர் ஆய்வு.  

கௌரவம், மானம், புனிதம், தூய்மை, உயர்வு என்கிற கற்பிதங்கள் தோன்றிய போதே அவற்றுக்கான உடனிபந்தனை போல இக்கொலைகளும் தொடங்கிவிட்டன. ஆகவே கௌரவத்திற்கான கொலைகள் திடுமென நடப்பது போன்ற பாவனை அவசியமற்றது. தன் குடும்பம் அங்கம் வகிக்கும் சாதி/மதம்/இனம்/நிறம் அல்லாத வேறொருவரது ரத்தக்கலப்பின்றி பெண்கள் தூய்மை காப்பதே கௌரவம் எனப்படுகிறது. இதற்கு ஏதேனும் பங்கம் வருமானால் காரணமானவர்களை கொல்வதன் மூலம் அந்தக் களங்கம் போக்கப்படுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. பழமைவாதத்தில் ஊறி நொதிப்பவை என இகழப்படும் மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாது வளர்ந்தவை என அலட்டிக்கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 26 நாடுகளில் கௌரவத்திற்கான கொலை தொடர்கிறது. 

இக்கொலைகள் பெண்ணின் சுயேச்சைத்தன்மையை தடுக்கும் பொருட்டானவை. சுயமாக வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது, குடும்பத்தார் கட்டாயப்படுத்திச் செய்யும் திருமணத்தை மறுப்பது, விவாகரத்து கோருவது, ஒரே கோத்திரத்தானை / ஊரானை மணப்பது, வேறு மதம்/சாதி/இனத்தவரை காதலிப்பது / மணப்பது, அயலாருடன் பழகுவது, வேறு கலாச்சாரத்தின் உடைகளை அணிவது ஆகிய நடத்தைகளால் ஒரு பெண் தங்களது கௌரவத்தைத் தாழ்த்திவிட்டதாக கருதுகிறவர்களால் அவள் கொல்லப்படுகிறாள். இதில் தந்தை, சகோதரர்கள், தாய்மாமன், கணவன் உள்ளிட்ட குடும்பத்தின் ஆண்களும் (மகனும்கூட) மூத்தப் பெண்களும் நேரடியாக பங்கேற்கிறார்கள். குடும்பம் பாசத்தால் தடுமாறுமானால் உறவினர்கள் தலையிட்டும் ஒத்துழைத்தும் கொன்று முடிக்கிறார்கள். பெண்ணை கௌரவக்கேடாக நடக்கத்தூண்டியவன் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவளது காதலன்/ கணவனும் கொல்லப்படுகிறான். குறிப்பிட்ட பெண்ணை கைவிடும்படியான கட்டளையை ஏற்காத ஆண் அவனது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதுமுண்டு. 

கூட்டாக கல்லால் அடிப்பது, சாணிக்கரைசலை ஊற்றுவது, வாயில் சிறுநீர் கழிப்பது, தலைமுடியை அலங்கோலமாக்குவது, சூடு வைப்பது, சவுக்கால்  வெளுப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தைச் சிதைப்பது, ஊரின் ஆண்கள் கூட்டாக வன்புணர்வது ஆகிய சித்ரவதைகளை ஏவி பெண்ணின் ஆளுமையைச் சிதைத்து மனநோயாளியாக்குவது போன்றவை கௌரவத்திற்காக நிகழ்த்தப்படும் வன்முறைகள். ஜோடியாகச் செல்பவர்களை மறித்துத் தாக்குவது, தாலி கட்டிக்கொள்ளுமாறு வதைப்பது போன்றவை சித்ரவதைகளுக்கு கலாச்சாரக்காவலர்களின் மேக் இன் இந்தியாகொடை. 

பெண்களை தெய்வமெனப் பசப்பும் இந்தியாவில் இந்த பாழாய்ப்போன கௌரவத்தின் பெயரால் பெண்கள் நீண்டகாலமாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதில் சாதி, மதம், ஊர்க்கூட்டம், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் அழுத்தம் பெரும்பங்கு வகிக்கிறது. பெண்மீதான இழிவானப் பார்வை அவளை கருவிலேயே கொல்கிறது. அதற்கும் தப்பினால் பால்யத்திலேயே ஏதேனுமொரு கிழத்துக்கு இரண்டாந்தாரமாகவோ ஏழாந்தாரமாகவோ  மணம் முடிக்கப்பட்டு நல்ல பிராயத்தில் விதவையாக்கப்பட்டாள். விதவை வேறுதுணை தேடினால் கௌரவக்கேடாகிப் போகுமே என்றஞ்சி அவள் உடன்கட்டை ஏற்றி உயிரோடு எரிக்கப்பட்டாள். அறுத்துக்கட்டும் சாதி என்கிற அவமதிப்புக்கு அஞ்சி மறுமணம் மறுக்கப்பட்டது பெண்களுக்கு. அரசர் தொடங்கி பாளையக்காரர்கள் வரையான ஆண்டப் பரம்பரை பலரும் அடிக்கோவணம் இல்லாமல் அலைந்தவர்கள்தானே? அவர்களது சிறையெடுப்புக்கு அஞ்சி தம் குடும்பத்துப் பெண்களைக் கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்தவர்களுண்டு. மதக்கலவரம் மூளும் காலங்களில் பிறமதத்தாரிடம் சிக்கிச் சீரழிவதற்குப் பதிலாக சாவதே மேல் என்று தம் பெண்களை கொன்றவர்களிருக்கிறார்கள். இந்தக் கொலைகள் பெண்களின் நலன் சார்ந்ததே போல் கூறப்படுகிறது. செத்தப் பிறகு அவர்களுக்கு என்ன நலன்? களங்கப்படாதவளாக, ரத்தக்கலப்புக்கு ஆளாகாதவளாக சாதித்தூய்மை/ மதத்தூய்மையோடு செத்துப்போனாள் என்கிற கௌரவத்தக்காகத்தான் அவள் கொல்லப்பட்டாள். இங்குள்ள சிறுதெய்வங்களில் பலவும் இவ்வாறு கொல்லப்பட்ட பெண்கள்தான். மதுரை வீரன், முத்துப்பட்டன் போன்ற ஆண்தெய்வங்களுக்கும் இது பொருந்தும். 

சாதி ஆதிக்கத்தை மையமிட்டு இயங்கும் அமைப்புகள் இந்தக் கொலைகளுக்கு உடந்தையாகவும் தலைமையேற்கவும் செய்கின்றன. சோறில்லாமல்கூட இருந்துவிடலாம் மானமில்லாமல் இருக்க முடியுமா? என்று கொம்புசீவும் இத்தகைய அமைப்புகளால் கண்ணகி-முருகேசன், இளவரசன், மாரிமுத்து, விமலாதேவி என்று தமிழகத்திலும் இந்தப் படுகொலைகளின் பட்டியல் நீள்கிறது. தமது சாதிப் பெண்களின் உடை முதல் திருமணம் வரை எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரத்தை தாமாகவே எடுத்துக்கொள்கிற இவ்வமைப்புகளுக்கு ஆதரவாகவே வெகுஜன உளவியல் இயங்குகிறது. ரத்தக்கலப்பைத் தடுத்து சாதித்தூய்மையை காப்பதற்கும் பெண்களை ஒரு கட்டுக்குள் நிறுத்தவும் இப்படி நாலுபேர் தேவைதான் என்கிற கருத்து பலரிடமும் இருக்கிறது. பெண்கள் மெதுவே பொதுவெளிக்கு வருவது பற்றி இதை  எழுதிக்கொண்டிருக்கிற என்னையும் சேர்த்து ஆண்களுக்குள் ஏற்படுகிற பதற்றத்தையும் திரும்பவும் வீட்டுக்குள் அடைத்துவிட வேண்டும் என்கிற வன்மத்தையும் இந்த அமைப்புகள் மிகச்சரியாக வெளிப்படுத்துகின்றன. 

சராசரியாக ஒவ்வொரு ஆறுமணி நேரத்திற்கும் ஒரு இளம்பெண் உயிருடன் எரிக்கப்பட்டோ கடுமையாக தாக்கப்பட்டோ இறக்கிறாள், அல்லது தற்கொலைக்கு தூண்டப்படுகிறாள் என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. 2014 அக்டோபர் வரை 14 பெண்கள் கௌரவத்திற்காக கொல்லப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிப்பதுடன் கடமை முடிந்ததாக நினைக்கிறது அரசு. இதைவிடவும் பெருந்தொகையான மனிதர்கள் நாள்தோறும் கொல்லப்படுவதைப் பார்த்தே அதிராத நம் மனங்களில் இந்த எண்ணிக்கை யாதொரு சலனத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை. ஒருவேளை நமக்குள்ளும் ஒரு கௌரவக் கொலைகாரன் பதுங்கியிருப்பது இதற்கொரு காரணமாயிருக்கலாம்.

7.1.15 ஆனந்த விகடன் இதழுக்காக எழுதியதன் முழுவடிவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...