வியாழன், பிப்ரவரி 12

அலை என்பது சொல்லல்ல – ஆதவன் தீட்சண்யா



 விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில் மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது. பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத் தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம் நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும் குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிணங்கள் வீழும். வன்முறையையும் கலவரத்தையும் நியாயப்படுத்தி பிரதமர் வேட்பாளரின் வாரீசுகள் ‘ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது இப்படியான சேதாரம் ஏற்படத்தான் செய்யும்’ என்று அறிக்கை விடுவார்கள். தூங்கும் குழந்தையைப்போல சற்றுமுன்புவரை சாந்தமாக தோற்றமளித்துக் கொண்டிருந்த அந்த நாடு அதிகாலை வேளையில் கலவரத்தாலும் வன்முறையாலும் திணறத் தொடங்குவதை தொலைக்காட்சிகள் துல்லியமாக பரப்பி எஞ்சிய பகுதிகளையும் உசுப்பிவிடக் கூடும்’’ என்றெல்லாம்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்று பூர்வோத்திரப் பெயர் கொண்ட லிபரல் பாளையம் இன்னும் அமைதியாகவேதான் இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வென்று அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வார் என்று எதிர்பார்க்கப் பட்ட நட்சத்திர வேட்பாளர் காணாமல் போய்விட்டதை முதலில் அறிந்த அவரது வீட்டுக் காவலாளி அந்த திகிலூட்டும் விசயத்தை யாரிடமாவது சொல்லும் வரைக்குமான அமைதி அது.

நாடுமுழுவதும் அவருக்கு ஆதரவாக வீசும் அலையின் வேகத்தைக் கண்டு கடல் அலையெல்லாம் கூட கப்சிப்பென அடங்கிவிட்டதாகவும், அந்த அலை ஆளுயரத்துக்கு எம்பி அடுத்தநாட்டு எல்லையைத்தாண்டியும் ஆர்ப்பரித்து வீசுவதாகவும், அவரே அடுத்தப்பிரதமர் என்றும், போகிற போக்கைப் பார்த்தால் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக அவர் ஒருவரே பிரதமராகி விடும் வாய்ப்பிருப்பதாகவும் அன்டைம்ஸ் நவ், ஹெட்லெஸ் டுடே போன்ற தொலைக்காட்சிகள் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்புகள் இன்னும் சிலமணிநேரங்களில் உண்மையாகிவிடக்கூடிய நல்வேளையில் அவர் ஏன் காணாமல் போனார்? அவராக எங்கும் ஓடிவிட்டாரா அல்லது அவரை யாரும் ஓட்டிவிட்டார்களா? ஒருவேளை எதிர்க்கட்சிகளால் அவர் கடத்தப்பட்டிருப்பாரா? அவரது வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவரது கட்சிக்காரர்களே அவரை போட்டுத் தள்ளிவிட்டார்களா? அவர் காணாமல் போயுள்ளதற்குப் பின்னே சர்வதேச சதி ஏதும் அரங்கேறியுள்ளதா? தனது கட்டுக்காவலையும் மீறி இப்படியெல்லாம் நடப்பதற்கான சாத்தியம் தான் என்ன என்றும் இன்னும் பலவாறாகவும் யூகித்த அந்த விசுவாமிக்க காவலாளி தனது எஜமானர் காணாமல் போய்விட்ட விசயத்தை இன்னமும் நம்பமுடியாதவராக தத்தளித்தார். என்றாலும் அவர் அவ்வாறாகவே இருப்பதற்கான அவகாசம் இல்லை. பிரதமர் வேட்பாளர் காணவில்லை என்கிற விசயத்தை காவல்துறைக்கு சொல்வதா அல்லது கட்சித்தலைமைக்கு தெரிவிப்பதா என்று அப்படியும் இப்படியுமா யோசித்துக் குழம்பி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தபோது காலை 4 மணி.

லிபரல்பாளையத்தின் வரலாற்றில் இதற்குமுன் இப்படி ஒருவரும் காணாமல் போயிருக்கவில்லையாதலால், முன்னுதாரணமற்ற இந்தச் செய்தியைக் கேட்டு அரண்டுபோன காவல்துறை அதிகாரிகள் அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு செயற்படத்தொடங்கினார்கள். இத்தனைக்கும் லிபரல்பாளையத்தின் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு போலிசுக்கு இணையானது எனப் பெயர் பெற்றதாகும். லிபரல்பாளையத்தின் சூட்டிகையான குற்ற உலகத்தினர் அப்படியான அரும்பெரும் சவால்களை உருவாக்கி தங்கள் நாட்டு போலிசை ஸ்காட்லாந்து யார்டு போலிசுக்கு இணையாக திறன்பெறுமாறு பயிற்றுவித்திருந்தார்கள். ஆனானப்பட்ட கேடிகளையும் அகில உலக கில்லாடிகளையும் அரைமணி நேரத்தில் கண்டுபிடிக்கும் வல்லமை கொண்ட தங்களுக்கு இந்த பிரதமர் வேட்பாளரைக் கண்டுபிடிப்பது அப்படியொன்றும் கடினவேலையல்ல என்கிற மிதப்போடு தான் விசாரணையைத் தொடங்கினர் காவல்துறையினர். ஆனால் அவர்களுக்கு அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரமே அவகாசமிருந்தது.

பிரதமர் வேட்பாளராகிய அவர் அருகாமையிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிடக் கிளம்பும் கம்பீரத்தையும் அழகையும் படம் பிடிக்கவும் பரபரப்பான செய்தியாக்கவும் கட்சிக்காரர்களும் ஊடகத்தினரும் அவரது வீட்டின் முன்பாக காலை ஆறுமணியளவிலிருந்தே குவியத் தொடங்கிவிடுவார்கள் என்று உளவுத்துறை ஏற்கனவே அறிக்கை அளித்திருந்தது. எனவே அவர்கள் வருவதற்கும் முன்பாக அவரை தேடிக் கண்டுபிடித்து எதுவுமே நடவாததுபோல வீட்டுக்குள் சேர்த்துவிட வேண்டும் என்று காவல்துறை களமிறங்கியது.

பொதுவாக வார்டு கவுன்சிலர் தொடங்கி பிரதமர் வரை மக்கள் பிரதிநிதி என்று தேர்ந்தெடுக்கப் படுபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு காணாமல் போய்விடுவது லிபரல்பாளையத்தில் வழக்கம்தான். காசு பணம் துட்டு மணி மணி என்று மும்முரமாகி தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியும் அவையும் எங்கிருக்கிறது என்பதையே மறந்துபோனவர்கள் அங்கு அநேகருண்டு. எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு வெளிநாட்டுக்குப் பயணம் போவதிலேயே காலத்தைக் கழித்துவந்த ஒரு பிரதமர் எந்த நாட்டுக்கு தான் பிரதமர் என்பதையே மறந்துபோனதும், கடைசியில் விட்டது சனியன் என்று லிபரல்பாளையத்துச் சனங்கள் அவரை தொலைத்து தலைமுழுகியதும் உலகறிந்த விசயம்தான். அப்படி இவரும்கூட பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகு காணாமல் போயிருந்தால், அதை இந்தளவுக்கு யாரும் பொருட்படுத்தியிருக்கமாட்டார்கள், சகஜம்தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே இவர் காணாமல் போய் தங்களுக்கு இப்படியொரு இக்கட்டான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக காவல்துறை கருதியது.

நாடுமுழுவதும் அவருக்கு ஆதரவாக அலை வீசிக்கொண்டிருப்பதாக வரும் செய்திகளால் பொறி கலங்கிப் போயிருந்த ஆளுங்கட்சி தலைமை அவர் காணாமல் போய்விட்டதாக காவல் துறையிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டு சற்றே நிம்மதியடைந்தது. வாக்கு எண்ணிக்கை தினமான இன்றைக்கு காணாமல் போயிருப்பதற்கு பதிலாக ஒருவேளை அவர் வாக்குப்பதிவு தினத்தில் காணாமல் போயிருப்பாரேயானால் அவருக்கான ஆதரவு அலை அப்படியே அனுதாப அலையாக மாறி வரலாறு காணாத தோல்வியை தாங்கள் தழுவ நேரிட்டிருக்கும் அபாயக் கட்டத்தை தற்போது கடந்துவிட்டதாக உணர்ந்ததால் ஏற்பட்ட நிம்மதி அது. இருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி, அவர் காணாமல் போயிருப்பது குறித்து தாங்களும் பதற்றப்படுவதாக காட்டிக்கொள்ளும் பொருட்டு ஆளுங்கட்சித் தலைவரும் அவரது கைக்கடங்கிய பொம்மையான தற்போதைய பிரதமரும் அவசரமாக சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எப்பாடு பட்டாவது ஆறுமணிக்கு முன்பாக அவரை கண்டுபிடித்து கூட்டிவந்துவிட வேண்டும் அல்லது, அவர் காணாமல் போயிருக்கிற விசயத்தை வாக்கு எண்ணிக்கை முடியும்வரை மறைத்து வைப்பதற்கான சாக்குப்போக்குகளை தயாரிக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் வழியாக உத்தரவு பிறப்பித்தனர்.

முந்தின நாளிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வழக்கம்போல புதிய சர்ச்சையொன்றை கிளப்பிவிட்டு பத்துமணியளவில் பிரதமர் வேட்பாளர் தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார் ( வெற்றி பெற்றவன் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க ஒருவனும் துணிவதேயில்லை என்கிற ஹிட்லரின் வாசகம் தருகிற உற்சாகத்தில் அவர் தினமும் எதையாவது உண்மைபோல சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்). தான் பல் துலக்குவதிலிருந்து பாத்ரூம் போவது வரை எல்லாவற்றையும் அதிசயம் போல வியந்தெழுதி ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் நொடிக்கு நொடி அப்டேட் செய்வதற்காக தன்னுடனேயே வைத்திருக்கும் ஊடகப்படையினரும் அப்போது அவரோடு வந்திருக்கிறார்கள். மறுநாள் கிளப்ப வேண்டிய புதிய பரபரப்புகள் எழுப்பவேண்டிய சர்ச்சைகள் பற்றி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிறகு அவரது காலடியிலேயே படுத்துறங்க அந்த ஊடகப்படையினர் தெரிவித்த விருப்பத்தை அன்புடன் நிராகரித்து அவரவர் வீட்டுக்குப்போய் தூங்கிவிட்டு காலை ஆறு மணிவாக்கில் வந்துவிடுமாறு அவர் வழியனுப்பிவைத்தாரென காவலாளியின் வாக்குமூலம் தெரிவிக்கிறது. எப்போதும் தன்னுடனிருக்கும் அவர்களை, தான் காணாமல் போவதற்கு வசதியாகத்தான் பலவந்தமாக பிரித்து வெளியே அனுப்பி வைத்திருப்பாரோ என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. ஆனால், காணாமல் போவதாயிருந்தால்கூட ஊடகப்படையை உடனழைத்துக் கொண்டுதான் காணாமல் போகக்கூடியவர் என்பதால் அந்தக்கோணம் அவசரமாக கைவிடப்பட்டது.

‘ஆடு அறுக்கிறதுக்கு முன்னயே அப்பா எனக்கு புடுக்குக்கறி’ என்பானாம் அவசரக்காரன். அது போல தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே பிரதமராகிவிட்ட செருக்கில் திளைத்துக்கிடந்த இவர், ஒருவேளை அந்த நினைப்பிலேயே உடன்படிக்கையிலோ ஒப்பந்தப்பத்திரத்திலோ கையெழுத்துப் போட ஏதாவது அண்டை அயல் நாடுகளுக்கு பயணம் போயிருக்கக்கூடும் என்கிற கோணத்தில் பல்வேறு நாடுகளிலுமுள்ள தூதரங்களையும் தொடர்புகொண்டு நடத்திய விசாரணையிலும் காவல்துறைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த புகைப்படத்திலிருப்பவரை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று காணாமல் போய்விட்ட – விவரம் போதாத ஒரு குழந்தையையோ வீட்டில் சண்டை போட்டு பிணங்கிக்கொண்டு வந்தவரையோ அல்லது மனநலம் குன்றிய நபரையோ தேடுவதுபோல ஒரு பிரதமர் வேட்பாளரைத் தேடிவிட முடியாதுதானே? எனவே ஒரு கண் பார்ப்பதை மறுகண் அறியாதபடி கமுக்கமாக தேடவேண்டியிருந்தது. ஆட்டோ ஸ்டேண்ட், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமானநிலையம், துறைமுகம், டோல்கேட் என்று எல்லாவிடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததிலும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. நாடு முழுவதிலுமிருந்த சந்துபொந்து சாராயக்கடை இண்டுஇடுக்கு இடியாப்பக்கடை என்று எல்லா இடங்களையும் சல்லடைப் போட்டு சலித்துப் பார்த்தும் அவர் கிடைக்காமல் போனதால் சோர்ந்துவிட்ட காவல்துறை கடைசியில் செயற்கைக் கோள் புகைப்படங்களையும் பார்த்து உதட்டைப் பிதுக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. எந்த தடயத்தையும் விட்டுவைக்காமல் இப்படி காணாமல் போய் உயிரை வாங்குகிறாரே என்று கடுப்பாகிப்போன காவல்துறை வட்டாரம், அரசாங்கம் கொடுத்த காலக்கெடுவுக்குள் தங்களால் கண்டுபிடிக்க முடியாத அந்த ஆளை சனங்களாவது கண்டுபிடித்து இழுத்துவரட்டும் என்று செய்தியை மெதுவே ஊடகங்களுக்கு கசியவிடத் தீர்மானித்தது. பிறகென்ன, ஊடகங்களுக்குத் தெரிந்தால் உலகத்துக்கே தெரிந்த மாதிரிதானே?

இன்று புதன்கிழமை, ஆகவே நாளை வியாழக்கிழமை என்பதைக்கூட ஏதோ தாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்த புத்தம்புது செய்திபோல பரபரப்பாக அறிவிக்கும் தொலைக்காட்சிகளுக்கு இப்படியொரு விசயம் கிடைத்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்? கேமராவும் மைக்குமாக வந்து குவிந்துவிட்டார்கள் அவரது வீட்டு முன்பும் காவல்துறை தலைமையகம் முன்பும். திருவிழாக்கூட்டம் போல திரளத் தொடங்கிய சனங்களிடம் கருத்து கேட்கப்பட்டு நேரலையாக ஒளிபரப்பானது. வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் ஒருமணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் ஒருவரே காணாமல் போய்விட்டிருக்கிறார் என்றால் சாமானிய குடிமக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று அவரது கட்சியின் தொண்டர்கள் ஆவேசமாக கேட்கும் காட்சி எல்லாச்சேனல்களின் வழியேயும் இடியெனக் கேட்டது. தோல்வி பயத்தால் ஏற்பட்ட அவமானத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவர் எங்கோ கண்காணா தேசத்திற்கு ஓடிப்போய்விட்டதற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று ஆளுங்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பொறுப்பின்றி துடுக்குத்தனமாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த செய்தி தொடர்பாளரின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து கொடும்பாவி கொளுத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்திய பிரதமர் வேட்பாளரின் தொண்டர்கள் இத்தகைய அசாதாரணமான சூழல் நிலவுவதால் இன்று நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை எச்சரித்தனர்.

குறிப்பிட்ட கட்சிக்குத்தான் அவர் பிரதமர் வேட்பாளரேயன்றி எங்களுக்கல்ல என்று தெரிவித்த தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் காணாமல் போய்விட்டார் என்னும் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலுக்காக வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்டபடி இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் அறிவித்தது. அரசனுக்கு பதிலாக சிம்மாசனத்தில் இருத்தப்பட்ட அவனது செருப்புக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த மக்களையும், தங்களோடு வராத தலைவருக்கென மேடையில் காலியாக ஒரு நாற்காலியைப் போட்டு வைத்துவிட்டு நடத்தப்பட்ட கட்சிகளையும் பற்றி கேள்விப்பட்டிருந்த இந்த பிரதமர் வேட்பாளரின் ஆதரவாளர்கள், அவர் காணாமல் போய்விட்டிருந்தாலும் ஒருவேளை இனியொரு போதும் அவர் திரும்பி வரவே போவதில்லை என்றாலும் இந்தத் தேர்தலில் தாங்கள் அவருக்கு வாக்களித்திருப்பதால் அவரே தங்களுக்கு பிரதமர் என்கிற முடிவில் மாற்றமில்லை என்பதை தீர்மானமாக அறிவித்தனர்.

ஒன்றுமில்லாத விசயங்களைப் பற்றியெல்லாம் ஒன்பது மணிநேரத்துக்கு நேரலை விவாதங்கள் நடத்தி பாண்டித்தியம் பெற்றிருந்த லிபரல்பாளையத்து தொலைக்காட்சி சேனல்கள் பரபரப்பும் திருப்பங்களும் பல்வேறு குழப்பங்களும் நிலவும் இன்றையச்சூழலில் 24 மணி நேரமும் விவாதங்களை நடத்தத் தயாராகின. இதற்காக பல்வேறு கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்கும் அரசியல் நோக்கர்கள் எனச் சொல்லப்படுகிறவர்களுக்கும் அழைப்பு பறந்தது. இவர்களையெல்லாம் விட எந்த தலைப்பானாலும் சடாரென்று உடனுக்குடன் கருத்து சொல்வதற்கென்றே பிரத்யேகப் பயிற்சி பெற்றிருக்கும் கருத்து கந்தசாமி, பொன்மொழி புகழேந்தி, நறுக்குமொழி நாராயணன், துடுக்குப்பேச்சு துரையரசு உள்ளிட்ட திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் பங்கெடுத்தால்தான் விவாதம் சூடுபிடிக்கும் என்பதால் அவர்களும் போர்க்கால வேகத்தில் அழைக்கப்பட்டனர்.

தேர்தல் நேரமாதலால் எப்படியும் எது குறித்தேனும் குறைந்தபட்சம் ஐந்தாறு சேனல்களிலாவது பேசவேண்டிவரும் என்கிற முன்னனுமானத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தலைநகருக்கு வந்து ஸ்டுடியோ வாசலில் துண்டுவிரித்துப் படுத்திருந்த இந்த திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் பெரும் வேட்டை கிட்டிய கிளர்ச்சியோடு தயாரானார்கள். ‘எங்க டிவியில் வந்து பேசுங்க’ என்று ஒரு அழைப்பு விடுத்தால் போதும், நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தி லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து திரட்ட வேண்டிய தகவல்களை தாங்களாகவே மெனக்கெட்டு திரட்டிக்கொண்டு வந்து பேசிவிட்டுப் போகிறவர்களாக இந்த திடீர் மற்றும் துரிதச் சிந்தனையாளர்கள் விளங்கினர். இதற்குமுன் இப்படி யாராவதொரு பிரதமர் வேட்பாளர் எந்த நாட்டிலாவது காணாமல் போயிருப்பதாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறதா? அதற்கான ஓலைச்சுவடி அல்லது கல்வெட்டு ஆதாரங்களோ செப்புப் பட்டயங்களோ இருக்கின்றனவா? நாட்டுப்புறக்கதைகள், வாய்மொழித்தரவுகள், செவிவழிச் செய்திகள், இலக்கியச்சான்றுகள் ஏதும் கிட்டியுள்ளனவா என்றெல்லாம் ஏராளமாக ‘வீட்டுப்பாடம்’ படித்து தீவிர தயாரிப்புகளுடன் இவர்கள் வந்திருந்தார்கள். இப்படியான தருணங்களில் வெளிப்படுத்தும் சாதுர்யமான வாதங்களும் முகபாவங்களும் உடல்மொழியும் தொனியும் தான் அடுத்தடுத்து அழைக்கப்படுவதற்கான தூண்டில் என்பதால் அவர்கள் ஒவ்வொருவருமே கிட்டத்தட்ட நாட்டாமை வேடத்தில் நடிக்கிற ஒரு குணச்சித்திர நடிகரைப் போன்றோ அல்லது எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்கிற துடுக்கானதொரு கதாநாயகனைப் போன்றோ தம்மைத்தாமே உருவகித்து வைத்திருந்தார்கள். ஒரு சேனலில் முடித்துக்கொண்டு அடுத்தச் சேனலுக்கு போகும் வழியில் மாற்றிக்கொள்வதற்கான மாற்று உடுப்புகள் ( ஜிப்பா, காலர் இல்லாத அரைக்கைச்சட்டை, பூப்போட்ட லினன்/ பருத்தி ரகங்கள்) கொண்ட பையை அவர்கள் எப்போதும் கக்கத்தில் இடுக்கியிருந்தார்கள்.

எந்தச் சேனலைத் திறந்தாலும் யாராவது நாலுபேர் லபலபவென இரைந்து கத்திக் கொண்டிருந்தார்கள். இன்னதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்கத்தான் முடிந்ததேயன்றி இன்னின்னதைத்தான் பேசுகிறார்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட ஒருவராலும் யூகிக்கக்கூட முடியவில்லை, அவ்வளவு இரைச்சல். இருந்தாலும், ஒரு நாட்டின் பிரதமர் வேட்பாளர் வாக்கு எண்ணும் நாளில் காணாமல் போய்விட்டது தொடர்பிலானதொரு விவாதத்தில் ஆற அமர பொறுமையாக பேச முடியாதுதானே என்று சமாதானமடைந்த பார்வையாளர்கள் பேசுகிறவர்களின் வாயசைப்புக்கு ஏற்ப தாங்களாகவே வசனங்களை வருவித்துக் கொண்டார்கள். பார்வையாளன் தனக்கான பிரதியை தானே உருவாக்கிக்கொள்ளும் வகையில் அமைந்துவிட்டிருக்கிற இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியின் மீதுமான பின்நவீனத்துவத்தின் வெற்றியைக் குறிக்கிறது என்றும் இது பியர் பூர்தியே அறியாத பரிமாணம் என்றும் விமர்சகர் ஒருவர் சொல்லுமளவுக்கு விவாதங்களின் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.

இந்த பரபரப்பு சலசலப்பு மற்றும் முணுமுணுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் திருவாளர். வாக்குடையானும் திருமதி.மைவிரலாளும் கூறிய கருத்துகள்தான் பொருட்படுத்தக்கூடியவையாய் இருந்தன. தங்களது அபிமான வேட்பாளர் காணாமல் போயிருப்பது பற்றிய விசயத்தின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வலுவைக் கொண்டிருந்தன அவ்விருவரது வாதங்கள். அவர்களைப் பொறுத்தவரை காணாமல் போனவர் யாரோ ஒருவரல்ல, இந்த முறை அவர்கள் யாருக்கு வாக்களித்திருந்தார்களோ அந்த வேட்பாளர் காணாமல் போயிருக்கிறார். எனவே பிரதமர் வேட்பாளர் காணாமல் போய்விட்டதை அவர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பாக பாவித்தனர். இத்தனைக்கும் வாக்குடையானும் மைவிரலாளும் காணாமல் போன பிரதம வேட்பாளரின் கட்சிக்காரர்களோ அல்லது அனுதாபிகளோ அல்ல. சொல்லப்போனால் கடந்த தேர்தல்வரைக்கும் இப்படியொருவர் அரசியலில் இருக்கிறார் என்பதையேகூட அறிந்திராதவர்கள். இந்தத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அவர் திடுமென இவர்களுக்குத் தெரியவந்தார். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளங்கள், ஃபேஸ்புக் என்று எங்கு பார்த்தாலும் தெரிகிற இந்த மூஞ்சி யாருடையதாக இருக்கும் என்று தெரிந்துகொள்கிற தொடக்கநிலை ஆர்வத்தோடுதான் அவரை இவர்கள் கவனிக்கத் தொடங்கினார்கள். அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் இந்த நாடே அழிந்து அதலபாதாளத்தில் முழுகிவிடும் என்பது போன்ற பிரச்சாரம் எங்கு பார்த்தாலும் கொள்ளைநோய் போல பரவிக் கொண்டிருந்தது. திரும்புகிற பக்கமெல்லாம் அவரது முகமே தெரிந்தது. அவரிடம் ஏதோ ஒன்று இருக்கப்போய்தான் இவ்வளவு பெரிசாக அவரை காட்ட முடிகிறது என்கிற பேச்சு பரவலாகிக்கொண்டிருந்தது. ஒன்றுமில்லாததைத்தான் ஊதிப் பெரிதாக்க முடியும் என்று யாரேனும் சொன்னால் அது அவரது வளர்ச்சியைக் கண்டு எரிச்சலடைந்தவர்களின் அங்கலாய்ப்பு என ஊடகங்கள் எழுதின. தேர்தல் நெருங்க நெருங்க நாடு முழுவதும் அவரது அலை பலமாக வீசுவதாகவும் தேர்தலை நடத்துவதும் வாக்களிப்பதும் எண்ணுவதும் ஒரு சம்பிரதாயத்துக்காகத் தானேயன்றி அவரது வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் சொல்லத் தொடங்கின. கருத்துக்கணிப்புகளும் அரசியல் நோக்கர்களின் அவதானிப்புகளும் அடுத்தப் பிரதமர் அவர்தான் என்று திரும்பத்திரும்ப சொல்லியதைக் கேட்டுக் கொண்டேயிருந்ததில் அவரது அலை தங்களையும் சுருட்டியிழுத்துக் கொண்டிருப்பதாக வாக்குடையானும் மைவிரலாளும் நம்பத்தொடங்கினார்கள். அந்த அலை வெறுமனே ஒரு சொல்லாக இல்லாமல் தங்கள்மீது பாய்ந்து ஈரப்படுத்தி உள்ளிழுத்துக்கொண்டது போன்ற உணர்வாக மாறிவிட்டதாக நம்பினார்கள். தேர்தல் என்று நடந்தால் தங்களது வாக்கு அவருக்குத் தான் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்த விதம் இதுதான். வெறும் வாக்காளர் என்ற நிலையிலிருந்து பிரதமர் வேட்பாளர் ஆதரவுப் பேரவையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் என்கிற நிலையை எட்டிவிட்ட இவ்விருவரும் வரலாற்றையும் இலக்கியத்தையும் சமகால நிகழ்வுகளையும் உதாரணமாக காட்டி இன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் எழுப்பிய ஆணித்தரமான வாதங்கள் சில இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளன.

1. மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, அதை நினைவுபடுத்திக்கொண்டேயிருப்பது நமது கடமை என்கிறார் வரலாற்றாளர் எரிக் ஹோப்ஸ்பாம். ஆமாம், காணாமல் போய்விட்டார் என்பதற்காக அப்படியே மறந்து விட்டுவிட அவரொன்றும் மலேசிய நாட்டு விமானமல்ல, இந்த நாட்டின் பிரதமராக வரவிருந்தவர். நாளைக்கே திரும்பிவந்தாலும் பிரதமராகக்கூடியவர். எனவே அவரை எப்பாடு பட்டாவது கண்டுபிடித்தாக வேண்டும்.

2. கொட்டாரத்தில் அடைத்துவைத்திருந்த ஒரு யானையும் அதன் பாகனும் திடுமென காணாமல் போய்விடுவதாகவும் அப்போதைக்கு பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த மக்களும் ஊடகங்களும் பிறகு அதை மறந்துவிட்டு அடுத்த பரபரப்புக்குத் தாவிவிடுவதாகவும் ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி ஒரு கதை எழுதியிருப்பார். பிரதமர் வேட்பாளர் காணாமல் போயிருப்பது பலவிதங்களிலும் அந்தக்கதையோடு ஒத்துப்போகிறது என்றாலும் நிஜத்தில் நடந்ததையும் ஒரு கதையில் நடப்பதையும் ஒன்றாகப்போட்டு குழப்புவதை ஆளுங்கட்சி பேச்சாளர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

3. பட்டாபிஷேகம் நடக்கவிருந்த நிலையில் வனவாசம் போக நேர்ந்த காவிய நாயகனை தனது லட்சியப்புருஷனாக ஏற்றுக்கொண்டவர் என்பதை வைத்து எங்களது பிரதமர் வேட்பாளரும் ஏதாவதொரு காட்டுக்குப் போயிருப்பார் என்று கூறுவது முட்டாள்தனம். பிரதமர் நாற்காலியின் மீது கண்வைத்து பல்லாண்டுகாலமாக சுற்றிச்சுற்றி வந்து ஜல்லியடித்துக் கொண்டிருந்த கட்சியின் மூத்தத்தலைவர்கள் பலரை ஓரங்கட்டி வனவாசம் அனுப்பியிருக்கும் ஆற்றல் படைத்த அவர் வனவாசம் போயிருப்பார் என்று கூறுவது வக்கிரமானது மட்டுமல்ல, காவியநாயகனையும் அவரையும் ஒருசேர அவமதிப்பதாகும். இதன்றி, பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம் என்கிற இரண்டு ஆஸ்ரம நிலைகளைத் தாண்டியவர்கள்தான் வானப்ரஸ்தம் – வனவாசம் போவார்கள். எங்களவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பிரம்மச்சர்யத்தையே கைவிடாதவர். எனவே குடும்பஸ்தராகி கிருஹஸ்த நிலையை இன்னமும் தொட்டிராத அவர் வானப்ரஸ்தம் ஏகியிருப்பார் என்றோ ஆஸ்ரமத்தின் கடைசிநிலையான சந்நியாசம் வாங்கியிருப்பார் என்றோ சொல்வது சாஸ்திர விரோதம். படிப்படியான இந்த நிலைகளை கிரமவரிசையில் கடக்காமல் எடுத்தயெடுப்பில் பிரம்மச்சர்யத்திலிருந்து நேரடியாக சந்நியாசம் வாங்குகிறவர்கள் இடையிடையே திருட்டுத்தனமாக குடும்பஸ்தராகி அவ்வப்போது பிடிபடுகிறச் செய்தியை நன்கறிந்திருக்கிற எங்களது பிரதமர் வேட்பாளர் ஒருபோதும் சாஸ்திரவிரேதமாக நடப்பவரல்ல.

4. அரசப்பதவி வேண்டாமென்று புத்தர் துறவறம் பூண்டதை இவரோடு ஒப்பிடுவது இரண்டு வகைகளில் பொருத்தமற்றது. முதலாவது, புத்தரையும் அவரது கருத்துகளையும் அடியோடு வெறுத்து எதிரியாக பாவிக்கிறவர் எங்களது பிரதமர் வேட்பாளர். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொன்றின் மீதும் எங்களவர் ஆசைப்பட்டு பின்தொடர்வதும்கூட ஆசையை விட்டொழிக்க வேண்டும் என்கிற புத்தரின் போதனை மீதான வெறுப்பில்தான். மற்றது, புத்தர் அரசப்பதவியை மறுத்து துறவியானவர். இவரோ துறவை மறுத்து அரசப்பதவியை நாடுகிறவர். துறவிக்கு எதற்கு அரசப்பதவி என்று குதர்க்கமாக கேட்டு மக்களைக் குழப்பப் பார்க்கும் மாற்றுக்கட்சி நண்பர்களுக்கு எங்களது பதில், மனைவியை மறந்து அல்லது மறைத்துவிட்டு வாழ்வது மட்டுமே துறவு என்றாகிவிடாது என்பதுதான்.

இப்படியாக வாதங்களை எழுப்பி வாக்குடையானும் மைவிரலாளும் எதிராளிகளை வாயடைக்க வைத்துக்கொண்டிருந்த வேளையில் நாடு அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாகியது. எண்ணுவதற்கான தயார்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த லிபரல்பாளையத்தின் அத்தனை வாக்கு எண்ணிக்கை மையங்களும் தண்ணீரில் முழுகிக் கிடப்பதாக வந்த செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி அது. ஒரு சொட்டு மழைகூட பெய்யாத ஒரு நாட்டில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டும் தண்ணீரில் முழுகியிருக்கிறதென்றால் அது தங்களது அபிமான பிரதமர் வேட்பாளர் பிரதமராவதை தடுக்கும் கெடுநோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிவேலையாகத்தான் இருக்கமுடியும். ஏழடுக்கு பாதுகாப்பையும் மீறி இந்தச் சதிவேலை நடந்திருக்கிறதென்றால் அது ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்ததாகத்தான் இருக்கமுடியும் என்று வாக்குடையானும் மைவிரலாளும் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறதேயன்றி அது ஒருபோதும் யாருக்கெதிராகவும் போட்டியிடுவதில்லை என்று லிபரல்பாளையம் தலைமை தேர்தல் ஆணையர் கூறியசமாதானத்தை வாக்குடையானும் மைவிரலாளும் ஏற்கவில்லை.

யார் என்ன குற்றம் சாட்டினாலும் அதற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் ஆகப்போவது எதுவுமில்லை என்றாகிவிட்டது. உண்மையில் என்னதான் ஆனார் இந்த பிரதமர் வேட்பாளர்?

***

கனவில் கண்டெடுத்த புதையலுக்கு காலணா மதிப்பில்லை என்பார்கள். ஆனால் பிரதமர் வேட்பாளர் கண்ட கனவு ஒவ்வொன்றும் பலித்தே வந்தது. லிபரல்பாளையத்தின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவும்கூட பலித்துவிடும் நிலையிலேயே இருந்தது. நாடெங்கும் அவருக்கு ஆதரவாக வீசும் அலையில் மிதந்து அவர் பிரதமர் நாற்காலியில் அமரப் போவதை விடிந்தால் நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை உறுதி செய்யக்கூடியதாயிருந்தது. ஆமாம், அப்படியொரு அலையை அவரும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கி வளர்த்து வைத்திருந்தார்கள். அந்த அலையின் ஒவ்வொரு திவலையும் பல்கிப் பெருகி மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குள் வாக்காக புகுந்து திமிறிக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். ஆனால் குறிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே தவறுதலாக வெடித்து தயாரித்தவர்களையே காவுகொண்டுவிடுகிற ஒரு குண்டைப் போல உக்கிரம் மிகுந்த இந்த ஆதரவு அலை தங்களுக்கு பெருத்த சேதாரத்தை விளைவிக்கப் போகிறது என்பதை மட்டும் அறியாதவர்களாய் இருந்தார்கள்.

வாக்குப்பதிவு முடிந்து கடந்த ஒருமாதமாக பூட்டப்பட்ட அறைக்குள் திமிறிக்கொண்டிருந்த ஆதரவு அலை இனியும் பொறுக்கமுடியாதென்கிற ஆவேசத்துடன் மூர்க்கமாகவும் கட்டுக்கடங்காத வேகத்தோடும் பொங்கி அதிகாலை மூன்று மணியளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களை மூழ்கடித்துவிட்டு பிரதம வேட்பாளராகிய அவரது வீட்டுக்குள் நுழைந்து அவரையும் வாரியிழுத்துக் கொண்டு பாய்ந்தது. ஆயிரம் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி நாடாளுமன்றத்தின் பட்டாபிஷேக மண்டபத்திற்கு விரைவது போன்ற பேரனுபவமாக அதை அவர் உணர்ந்தார். ஆனால், எதிர்பார்த்த நேரத்திற்கும் முன்பாகவே கிளம்பி வேகமாக வீசும் இந்த அலை தன்னை சடுதியாக பிரதமர் நாற்காலிக்கு இழுத்துக்கொண்டு போய் அமர்த்தப்போகிறது என்கிற பரவசத்தோடு அலையின் நுரையில் மிதந்துகொண்டிருந்த அவரது கண் முன்னாலேயே நாடாளுமன்றம் அவருக்குப் பின்னால் நழுவிப் போய்க்கொண்டிருந்தது. அவர் உருவாக்கிய அலை அவராலேயே கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வீசி அவரை நாட்டுக்கு வெளியே எங்கோ தொலைதூரத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு தானும் வடிந்தடங்கியது.

ஜீவராசிகள் என்று ஏதுமற்ற ஒரு பாழ்வெளியில் தன்னந்தனி உயிரியாய் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்னும் லிபரல்பாளையத்தின் பிரதமர் வேட்பாளர் மயங்கிக் கிடந்தார். கரையொதுங்கிய சிப்பிகளைப்போலவும் நண்டுகளைப் போலவும் அவரைச் சுற்றி சிதறிக்கிடந்தன மின்னணு வாக்கு இயந்திரங்கள்.

 நன்றி: http://malaigal.com/?p=4943

1 கருத்து:

  1. உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது...பகிர்வுக்கு மிக்க நன்றி...

    மலர்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...