புதன், பிப்ரவரி 25

நீசக் காரியமும் நீசக் காரியனும்... ஆதவன் தீட்சண்யா...


சாகித்ய அகாடமி 2015 பிப்ரவர் 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கில் சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் - என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து...
சாதியானது, அதன் உச்சத்தில் இருக்கும் பார்ப்பன ஆண்களைத் தவிர பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானதுதான். பார்ப்பனர்கள் மற்ற சாதியினருக்கு நிகழ்த்தியக் கொடுமைகளுக்கு சற்றும் குறையாதவகையில் தம் சொந்தப்பெண்களையும் கொடுமைப்படுத்தும் அளவுக்கு சமத்துவத்துவவாதிகள். பார்ப்பனப் பெண்கள் அறியாப் பருவத்திலேயே கிழட்டுப் பார்ப்பனர்களுக்கு மணமுடிக்கப்பட்டனர். பருவமெய்துவதற்கும் முன்பாகவே அப்பெண்கள் விதவைகளாயினர். விதவைகளால் தமது “சாஸ்திரங்களுக்கும் சாதித்தூய்மைக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை கணவனின் பிணத்துடன் சேர்த்தே எரித்துக் கொல்லும் சதியைக் கடைபிடித்தனர். சதியில் எரிந்தொழியாமல் தப்பிக்கிற விதவைகள் தீயினும் கொடிய வாதைகளுடன் காலந்தள்ள நேர்ந்ததை பலரும் எழுதியுள்ளனர். வாழ்நாள் நெடுக கைம்மையில் உழலும் அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து ஏதேனுமொரு வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். ஓய்வாக இருப்பதைப் பார்த்தால் அரிசியையும் பருப்பையும் கலந்து தனித்தனியாக பிரிக்குமாறு பணிக்கப்பட்டனர். ஓய்வாக இருந்தால் தங்களது அவலநிலையை எண்ணிப்பார்க்கவோ,  வேறு ஆண் துணையைத் தேடி சாஸ்திரத்திற்கு குந்தகம் விளைவிக்கவோ அவர்கள் முயற்சித்து விடுவார்கள் என்றஞ்சியே இப்படி ஏதாவதொரு வேலையில் அமுக்கப்பட்டனர். படுத்தப் படுக்கையாக கிடக்கும் பார்ப்பன ஆண்கள் கூட இளம்பெண்களை மறுமணம் செய்து கொண்டனர். ஆனால் பார்ப்பனப் பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.

திருமணம் ஆகாமல் முதிர்கன்னியாக இறந்துவிடும் பெண்களின் சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்களது பிணத்தை கன்னிகழித்து அடக்கம் செய்யும் வழக்கம் நம்பூதிரி பார்ப்பனர்களிடம் இருந்ததை யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள “தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்” என்கிற நூல் தெரிவிக்கிறது. பார்ப்பனப் பெண்ணின் பிணத்தை கன்னி கழிக்கும் செயல் நீசக் காரியம் எனவும் கன்னி கழிப்பவர் நீசக் காரியன் எனவும் அழைக்கப்பட்டனர். நீசக் காரியத்தை நிறைவேற்றும் பொறுப்பு தலித்துகளுடையதாக இருந்தது. வாழும்போது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட பார்ப்பனப் பெண்கள் செத்தப்பின்போ பிணாபிமானமற்று நடத்தப்பட்டனர்.

தேசப்பிரிவினையின் போது மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒருவன் வேற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருத்தியை தூக்கிப்போய் வன்புணர்வான். அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதது கண்டு துணுக்குற்றுப்போகும் அவன் அவள் வெகுநேரத்துக்கு முன்பே செத்துப் போயிருப்பதைக் கண்டு பேதலித்துப்போவான். ஒரு பிணத்தைப் புணர நேர்ந்த தன்னை நினைத்து குன்றிப்போகும் அவன் தன் மனைவியோடும்கூட தாம்பத்தியம் கொள்ளமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆளாகிவிடுவான். நெக்ரோபிலியா என்கிற மனநோய்க்கு ஆட்பட்டவர்கள் பிணத்தைப் புணர்வதில் நாட்டம் கொண்டவர்கள்  என்கிறது உளவியல்.  இப்படி கலவரக்காரர்களும் மனநோய்க்காரர்களும் நெக்ரோபிலியா என்கிற மனநோய்க்கு ஆட்பட்டவர்களும் செய்யக்கூடிய காரியத்தை, தலித்துகளை செய்யப் பணித்த பார்ப்பனர்கள் எவ்வளவு கொடியவர்கள்? பிணத்தைப் புணரும் அவலத்துக்கு ஆளாக்கி தலித்துகளின் உளவியலையும் ஆளுமையையும் சிதைத்த குற்றத்திற்காக எந்தப் பார்ப்பனராவது பொறுப்பேற்க முன்வருவார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...