புதன், ஆகஸ்ட் 19

விடுபட்டச் செய்திகள் - ஆதவன் தீட்சண்யா

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆப்பு?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு 50 சதத்திற்குள் மட்டுமே தமிழ்நாட்டிலும் இருந்திருக்குமானால் எங்களுக்கு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்திருக்கும். ஆனால் ஐயகோ அய்யய்யோ லபலபா இந்த பாழாப்போன தமிழ்நாட்டில்  69 சதவீத இடஒதுக்கீடு அமலிலிருப்பதால் எங்களுக்கு மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைக்காமல் போய்விட்டது... என்று லோகேஸ்வரி வகையறாவினர் உச்ச நீதிமன்றத்தில் ஓலமிட்டனர். இடஒதுக்கிட்டுக்கு எதிரான வழக்கென்றால் நமது உச்ச நீதிமன்றம் துள்ளி குதித்து எப்படியாவது "நீதியை" நிலைநாட்டிவிடும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

இதுபற்றிய இறுதி விசாரணையை செப்டம்பர் 1ம் தேதி என்று அறிவித்துள்ள அந்த மன்றம், 69 சதவீத இடஒதுக்கீட்டால் "பாதிக்கப்ப்பட்ட" அந்த 8 மாணவர்களையும் உடனடியாக மருத்துவக்கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுமாறு நேற்று (17.08.15 ) தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.  பொதுப்பட்டியலுக்குரிய இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராதவர்களுக்கு வழங்கும் இம்முடிவானது சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, நடப்பிலிருக்கிற இடஒதுக்கீட்டை செல்லாததாக்கும் கெடுமுயற்சியுமாகும். 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் ஒழித்துக்கட்டுவது என்கிற தனது நீண்டகால திட்டத்தை உச்ச நீதிமன்றம் இப்போதே செயல்படுத்த தொடங்கிவிட்டது என்றுதானே அர்த்தம்? இதுபற்றி சமூக நீதி கவிழ்த்த வீராங்கனைகளும் வீராங்கன்களும் ஏன் அமைதி காக்கிறார்கள்? ஒருவேளை "மதுரை மாநாடு" பாணியில் இட ஒதுக்கிடு  எங்களுக்கு வேண்டாம், வேறு சாதியில் சேர்த்துவிடுங்கள் என்று அமித் ஷாவிடம் மனு போடும் திட்டத்தில் இருக்கிறார்களா?


குடியிருப்பை எரித்தால் மவுனம் கொடும்பாவி எரித்தால் கண்டனம்.

மாண்புமிகு அம்மா புரட்சித்தலைவி, தமிழ்நாடே அழிந்தாலும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்று தாங்கள் நம்புகிற ஜெயலலிதாவை இழிவுபடுத்தி விட்டதாக பதறி அ.இ.அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் உருவபொம்மையை எரித்தனர். அவரைப்பற்றி வாய்க்கு வந்ததை பேசுகின்றனர். உடனே தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் நடத்திவரும் போராட்ட முறை அநாகரிகமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் இந்த வேகம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் சேஷபுரம் தலித்துகளின் குடியிருப்புகளும் தேரும் எரிக்கப்பட்டு மூன்று நாட்கள் முடிந்துவிட்டபின்னும்கூட கருணாநிதி  அதுபற்றி வாய்திறக்காமல் இருப்பது ஏன்? கள்ளக்குறிச்சிக்கு வந்து கலவரத்திற்கு திட்டமிட்டுக் கொடுத்து நடத்தியும் முடித்திருக்கிற "போஸ்டர் புகழ்" 4cm அன்புமணி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்பதற்கு இந்த முத்தமிழ் அறிஞருக்கு சொற்களே கிடைக்கவில்லையா? ஒருவேளை தான் "செலக்டிவ் அம்னீசியா"வால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிவிடும்பட்சத்தில் நாம் கேட்பதையாவது நிறுத்தித்தொலைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...