ஞாயிறு, செப்டம்பர் 6

சமூக (?) ஊடகங்கள் - ஆதவன் தீட்சண்யா



புதிதாக வாங்கிய செல்போனை நண்பர் ஒருவரிடம் காட்டி இதில் எல்லா வசதியும் இருக்கிறது என்றேன். அவர் சும்மா இருக்காமல் டாய்லெட் பாத்ரூமெல்லாம் கூட இருக்கிறதா என்றார். கடுப்பாகிப்போன நான் டாய்லெட் பாத்ரூம் என்பதெல்லாம் வசதி லிஸ்டில் சேர்ந்துடுச்சா என்றேன். பேசுவதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் மட்டுமே சாத்தியப்பட்ட பழைய செல்போனை வைத்திருந்த வரையிலும் கற்காலத்தில் வாழ்வதாக எண்ணி தாழ்வுணர்ச்சி கொண்டிருந்த நான் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் வசதிகள் இருக்கிற இந்த புதிய செல்போன் மூலம் தற்காலத்துக்குள் நுழைந்து நவநாகரீக மனிதனாகிவிட்டது அவருக்கு பிடிக்கவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதற்குப்பிறகு நாலைந்து சமூக ஊடகங்களில் இணைந்து எந்நேரமும் அதில் நோண்டிக் கொண்டேயிருந்தேன். அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று கேட்ட நண்பரிடம் உலகம் முழுவதும் நடப்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது என்றேன். தெரிந்துவைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். அப்டேட் ஆகிக்கொள்கிறேன் என்றேன். சரி அப்டேட் ஆகி என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். எனக்கு பதில் தெரியவில்லை. உங்கள் கதையில் வருகிற நியூஸ் தாத்தா மாதிரி ஆகிவிடாதீர்கள் ஆதவன் என்று எச்சரித்துவிட்டுப் போனார். காலை மாலை செய்தித்தாள்கள், வானொலி, பிறகு தொலைக்காட்சியில் 24 மணி நேர செய்திச் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் ஓயாமல் செய்திகளை சேகரித்து அப்டேட் ஆவதையே வாழ்நாள் தொழிலாகக் கொண்ட அந்த நியூஸ் தாத்தா உண்மையில் நான்தானோ என்று திடுக்கிட்டுப் போனேன். 

அந்த நேரத்தில் தான் முகநூலில் எனது நண்பரொருவர், தனது உறவினரது மரணச்செய்தியை சம்பந்தப்பட்ட பிணத்தின் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்ததைப் பார்த்து நான் துணுக்குற்றுப் போனேன். நான் துணுக்குற்றது  பிணத்தைப் பார்த்தல்ல. வாய்க்கட்டு தலைக்கட்டு நெற்றிக்காசுடன் தூண் ஒன்றில் சார்த்தி வைத்து மாலைகளால் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பிணத்தை விடவும் விகாரமாகத் தெரிந்த எனது நண்பரின் மனிநிலைதான் என்னை துணுக்குற வைத்தது. ஆனால் சற்றே யோசித்தால் அவர் பிணத்தின் படத்தை பகிர்ந்ததற்கு சற்றும் குறையாத அபத்தங்களைத்தான் நான் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறோம் என்பது உறைத்தது. 

தான் அங்கம் வகிக்கும் ஒரு நட்பு வட்டம் அல்லது சமூகக்குழுவிடம் தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறோமா? அந்தளவுக்கு வெளிப்படை என்றால் தனது சொத்துப்பத்திரங்கள், வங்கிக்கணக்கு, ஏடிஎம் பாஸ்வேர்ட் போன்றவற்றை ஏன் இன்னமும் ஒருவர்கூட பகிரவில்லை என்கிற கேள்வி எழுகிறது. சரி, அப்படித்தான் நம்மைப் பற்றி ஓயாமல் அளந்துவிடுவதை மதிப்பிட்டால் அவற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? நம்மை அப்பட்டமாக ஒளிவுமறைவின்றி எப்போதாவது யாரிடமாவது வெளிப்படுத்தியிருக்கிறோமா? முகப்புத்தகத்தில் காட்டப்படுவது உண்மையில் நமது சுயரூபம்தானா? நண்பர்கள் வட்டத்தில் நமக்கு நாமே கட்டியெழுப்புகிற மாயபிம்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக நாமே அதை உண்மையென நம்பத் தொடங்குகிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் நம்மைப் பற்றி உருவாகியுள்ள சித்திரத்தை விடவும் இணையவெளியில் நாம் உலவவிடுகிற மாயபிம்பம் மாசுமருவற்றது, தொந்தரவில்லாதது, பிறரால் ரசிக்கப்பட்டு லைக்கும் கமெண்ட்டும் வாங்கும் சாதுர்யம் கொண்டது.  இந்த மனநிலை கொண்டவர்கள்தான் சமூக ஊடகங்களில் அதிகநேரம் செலவிடுகிறவர்கள். இவர்களது நேரத்தை சமூக ஊடகங்கள் வீணடிக்கின்றன என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்குமுன் வெளியே நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தவர்கள்தான் இப்போது சமூக ஊடகங்களிலும் வீணடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். 

இவர்களைப்போலவும் என்னைப் போலவும் இருப்பவர்கள், எல்லாவற்றையுப் பற்றியும் விட்டேத்தியாக கமெண்ட் போடுகிற கருத்து கந்தசாமிகள், அகில உலகத்தையும் சண்டைக்கிழுக்கிற அட்டைக்கத்தி போராளிகள், சாதியக் குழுக்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசியல் குழுக்கள், கலை இலக்கிய அமைப்புகள், பொது நோக்கங்களுக்கான அணிதிரட்சிக்கும் கருத்துருவாக்கத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டவர்கள் என்று அனைவரையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அதாவது 106 மில்லியன் பேர்தான் சமூக ஊடகங்களில் புழங்குகிறார்கள். மீதமுள்ள 90 சதம் இந்தியர்கள் சமூக ஊடகங்களுக்கு வெளியேதான் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்கிற ஜனநாயக அம்சத்தைத் தவிர்த்துவிட்டால், 90 சதவீதம் பேர் பங்கேற்காத ஒன்றை சமூக ஊடகம் என்று விளிப்பதேகூட இப்போது அபத்தமாக தோன்றுகிறது. எனவே  10 சதவீதம் பேரிடம் மல்லுக்கட்டுவதே போதுமானது என்று சமூக வலைத்தளங்களில் முடங்கிக் கிடப்பதும், 90 சதமானவர்களிடம் செல்வதற்காக நேரத்தை மிச்சம் பிடிப்பதும் அவரவர் நோக்கம் சார்ந்ததாகிறது.

- ஹலோ விகடன்
 

2 கருத்துகள்:

  1. இணையதள உலகம் குறித்து அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. இணையதள உலகம் குறித்து அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...