சனி, ஏப்ரல் 25

பூனைக்கு மணி கட்டும் காலம் - ஆதவன் தீட்சண்யா



மக்களாட்சித் தத்துவம் உலகின் பெரும்பாகத்தில் செல்லுபடியாகிவிட்ட நிலையில் தாம் இன்னும் மன்னனின் கீழிருப்பதா என்று நேபாள இளைஞர்களும் மாணவர்களும் ஜனநாயகத்துக்காக போராடினர். வேலைவாய்ப்பையும் பணிப்பாதுகாப்பையும் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளையும் பறிக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து பிரான்ஸ் இளைஞர்களும் மாணவர்களும் போராடினர். இதே காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக/அவர்களை விடவும் தீவிரமாக நாட்டுநலனை முன்னிறுத்தி இந்திய இளைஞர்களும் மாணவர்களும் ஒருமித்து போராடுவதை போல ஆங்கில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றின.

என்.டி.டி.வி சேனலும் அதிலிருந்து துரத்தப்பட்ட/வெளியேறிய ராஜ்தீப் சர்தேசாயால் விரிக்கப்பட்ட புதிய கடையான சிஎன்என்-ஐபிஎன் சேனலும் ஏழேழு லோகத்திலும் இதை விட்டால் வேறு பிரச்னையே இல்லை என்பது போல இந்த நாடகத்தின் காட்சிகளை திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்தன. ஆங்கிலம் தெரிந்த நடுத்தர, உயர்வகுப்புப் பார்வையாளர்களை யார் கவர்ந்திழுப்பது/தக்கவைத்துக் கொள்வது என்கிற போட்டி, பரபரப்பான செய்திகளை வெளியிட்டு பிரபலமாகி விளம்பரங்களில் அள்ளிக் குவிக்கிற வியாபார உத்தி, இவற்றோடு இந்திய செய்தி ஊடகத்தின் இயல்பாக ஊறி நொதித்து நாறும் உயர்சாதி மனோபாவமும் சேர்ந்துவிடவே, இச்சேனல்களின் ஒளிபரப்பில் ஆத்மார்த்தமானதொரு சுய ஈடுபாடு வெளிப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களும் விஷம் கக்கின. அந்த இளைஞர்களின் தரங்கெட்ட செயல்கள் யாவும் போராட்டங்களென சித்தரிக்கப்பட்டன. (இந்தக் கூத்து இன்றளவும் தொடர்கிறது.)

உண்மையில் உயரிய நோக்கங்களுக்காக - அதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக பெரும்பான்மை எளிய மக்களால் நடத்தப்படுவதே போராட்டம். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு ஆதிக்க கும்பல் தெருவிலிறங்கினால் அதை ரகளை/காலித்தனம் என்று சொல்வதே பொருத்தமாயிருக்கும். எனவே அரசியல் சட்ட அடிப்படையில் பிற்பட்டோருக்கு உயர்கல்வியில் 27 சதம் இடஒதுக்கீடு என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்த இந்த இளைஞர்களின் நடவடிக்கைகளை பன்னாட்டுக் கம்பனிகளின் ஆதரவில் நேரடி ஒளிபரப்புக்காக நடந்த ரகளை என்றே வகைப்படுத்த முடியும். ரகளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் எப்போதும் ஏந்தி வருகிற கத்தி கபடா சோடா பாட்டில் சுருள் பிச்சுவா சைக்கிள் செயினுக்குப் பதிலாக இம்முறை அவர்கள் கையில் தொலைக்காட்சிக் காமிராக்கள் இருந்தன. ஏனென்றால் இப்போதைக்கு அவர்களுக்கு எவரின் உயிரும் தேவைப்படவில்லை. மக்களின் மனங்கள்தான் அவர்களது இலக்கு. ஒரு நூற்றாண்டு காலமாக கருத்தளவிலும் நடைமுறையிலும் செயலூக்கத்துடனிருக்கும் இடஒதுக்கீடு குறித்து ஒரு சர்ச்சையை கிளப்புவதே அவர்களது உடனடி நோக்கம். இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் மீண்டும் ஒருசாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அவர்களது அகண்ட கனவிற்கான ஒத்திகையும்கூட இதற்குள் மறைந்திருக்கிறது.

பதினாறாண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியிருக்க வேண்டிய ஒரு அரசியல் சட்டக்கடமை என்ற அடிப்படையில் உயர்கல்வியில் பிற்பட்டோருக்கு 27 சதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு வெளியான கணத்திலிருந்தே அவர்கள் இந்த ரகளையைத் தொடங்கிவிட்டனர். சர்வசதா காலமும் பிறசாதிகள் மீதான துவேஷத்துடனேயே வளர்க்கப்படுவதால் யாரையும் யாரும் அணிதிரட்ட வேண்டிய அவசியமில்லாமலேயே தெருவுக்கு வந்தனர். வெளித்தோற்றம் என்னவாயிருந்தாலும் தன்னுணர்வாக மண்டிக்கிடக்கும் உயர்சாதி அகங்காரமும் இடஒதுக்கீட்டு எதிர்ப்புணர்வும் அவர்களை தெருவுக்கு கிளப்பிக் கொண்டு வந்தது.

அடுத்த வீட்டு பொம்மையை எடுத்து விளையாடும் குழந்தைகூட உரியவர்கள் கேட்டதும் திருப்பித் தந்துவிடுமளவுக்கு நியாயவுணர்ச்சி கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களோ தாம் இத்தனை நாளும் ஆக்ரமித்து வைத்திருந்ததை உரியவர்கள் எப்படி கேட்கலாம் என்று அதட்டுமளவுக்குச் சென்றனர். பாடுபட்டு ஈட்டிய தமது கைப்பொருள் பறிபோவதைப் போன்ற பதற்றத்துடனும் ஆத்திரத்துடனும் ஏசினர். இந்த ரகளையில் புதுடில்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் பிற்பாடு நாடு முழுவதுமிருக்கிற ஐஐடி, ஐஐஎம் மாணவர்களில் ஒருபகுதியினரும் இணைந்து கொண்டனர். இதன் பொருள் மாணவர்கள் மட்டுமே இந்த ரகளையை நடத்தினர் என்பதல்ல. சாதியமைப்பினூடே அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் பொருளாதார நலன்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வெறியேறிய அனைவருமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்றனர். இந்த தருணத்தைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட தம்மால் என்னென்ன செய்ய முடியுமோ அதை மிகவும் விருப்பப்பூர்வமாக அனிச்சையாக செய்வதில் ஆர்வம் காட்டினர். அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அயல்நாட்டில் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல் சாதிநலனைக் காப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களில் அவர்களுக்கிருக்கும் சாதிய செல்வாக்கு இதற்குப் பேருதவியாக அமைந்தது.

ஒரு வழக்கின் இருதரப்பையும் கண்டறிந்து நடுநிலையாக செய்தியளிக்கும் தார்மீக நெறிமுறைகள் தமக்கிருப்பதாக வெகுவாக அலட்டிக் கொள்ளும் தகவல் தொடர்புச் சாதனங்கள் இவ்விசயத்தில் எல்லாவற்றையும் உருவியெறிந்துவிட்டு ஒற்றைப் பூணூலோடு அம்மணமாக நின்றன. யூத் பார் ஈக்வாலிட்டி என்று அவர்கள் போர்த்திவந்த பதாகையால்கூட மறைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அம்மணமாய் நின்றன. கட்சித் தலைவர்களையும் சமூக செயல்பாட்டாளர்களையும் ஸ்டுடியோவுக்கு அழைத்து குறுக்கு விசாரணை போல துருவித் துருவி பேட்டியெடுக்கும் இந்த புலனாய்வுச் செய்தியாளர்கள் அந்த மாணவர்களின் உளறல்களை சிறு குறுக்கீடோ மறுப்போ இல்லாமல் போர்ப்பிரகடனங்களைப் போல ஒளிபரப்பினர். நேரடி விவாதங்களின்போது இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த போதிய கால அவகாசம் தரப்படாமல் மைக்குகள் பறிக்கப்பட்டன. எதிர்ப்பாளர்களுக்கோ விலாவாரியாக அவதூறு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற எந்த இயக்கத்தையும் ஒளிபரப்ப முடியாதளவுக்கு அல்லது ‘முன்னாபாய்கள் ஊர்வலம்’ என்று கிண்டலடித்து ஒளிபரப்புமளவுக்கு வெளிப்படையாகவே செயல்பட்டன. யூத் பார் ஈக்வாலிட்டி- சமத்துவம் என்று முழங்கும் இந்த மாணவர்கள் இதுவரை சமூகத்தில் நிலவிய எந்தெந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடி கிழித்திருக்கின்றனர், எங்கெங்கெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டியிருக்கின்றனர் என்பது போன்ற எளிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் வகையில் பேசக்கூடிய பத்துப்பேரை இழுத்துவந்து இங்கிலீசில் பொளந்து கட்டினார்கள். புலம்பியும் தீர்த்தார்கள். ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்ற நிலையிலிருந்து வெகுவாக இழிந்து பிரச்னையில் தொடர்புடைய இருசாரரில் ஒருதரப்பாக மாறி வாயில் நுரைதள்ள வாதிட்டன.

உழைக்கும் மக்கள் எவ்வளவு நியாயமான காரணங்களுக்காகப் போராடினாலும் பொதுஅமைதிக்குப் பங்கம் நேர்வதாகவும் மக்கள் அவதியுறுவதாகவும் வரிப்பணம் வீணாவதாகவும் அரற்றித் திரியும் ஊடகங்கள் இவ்விசயத்தில் எதுவும் பேசாமல் அமைதி காத்தன. அதாவது ஆதரவாக இருந்தன. பணிக்கலாச்சாரம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் பொதுநல விரும்பிகளும் உண்மை விளம்பிகளும், போண்டாவில் உப்பில்லை புண்ணாக்கில் சத்தில்லை என்று பொதுநல வழக்கு தொடுக்கிறவர்களும்கூட இம்முறை பொத்திக் கொண்டு சும்மாயிருந்தனர். ஒரு பேரணியினால் தன் பயணம் சற்றே தாமதித்து விட்டதற்காக ஊரில் ஒருவனும் பேரணி நடத்தக்கூடாது என்று (யாரும் வழக்கே போடாத நிலையில்) தீர்ப்பளிக்கின்ற நீதிபதிகள் கூட, சில மருத்துவ மாணவர்களும் மருத்துவர்களும் நடத்திய அட்டூழியங்களில் தலையிட முன்வரவில்லை. வேலைநிறுத்தம் செய்கிற நாட்களுக்கு No Work No Pay என்று கடந்த காலங்களில் நியாயம் பேசிய நீதிமன்றங்கள் ரகளை செய்த இந்த மருத்துவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ததற்கு அரசையே கடுமையாக எச்சரித்ததுகூட ஏனென்று யாருக்கும் விளங்கவில்லை.

இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதி. எனவே இடஒதுக்கீட்டை எதிர்ப்பதென்பது அரசியல் சட்டத்தையே எதிர்ப்பதுதான். நேரடியான அர்த்தத்தில் அது ஒரு தேசவிரோதச் செயல். ஆனால் இந்த தேசவிரோதிகள் நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் மிக உயரிய பொறுப்பிலிருக்கும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தற்கொலை என்கிற மனப்பிறழ்வுக்கு முறையான உளவியல் சிகிச்சைக்கும், இந்த மிரட்டல் போக்கிற்கான தண்டனைக்கும் உத்திரவிடுவதற்கு பதிலாக ‘பரிவோடு கவனிப்பதாக’ குடியரசுத்தலைவரும் ஆறுதல் கூறினாரென செய்திகள் வெளியாயின. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்புணர்வை கைவிட்டு சாதிவெறியேறி தெருவுக்குள் உலும்பித் திரிந்த அந்த மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக, இடஒதுக்கீடு அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர் பலமுனைகளிலும். குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வேண்டியதை கொள்ளையிட்டுப் போகும் கயமைக்கு குறைவற்றது இந்த கனவான்களின் செயல். தங்களது சாதிநலனை காத்துக் கொள்ள எவரது உயிரையும் பலி கொடுக்கத் தயங்காதவர்கள் என்பது மறுமுறையும் உறுதியானது.

II

நடந்த சம்பவங்களின் மீது எதிர்வினை புரிய விரும்பும் சமூகநீதி ஆர்வலர் எவரொருவரும் ‘சமத்துவத்திற்கான இளைஞர் குழு’ என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்தே தன் பணியைத் தொடங்க வேண்டியிருக்கும். ஹிட்லனும் முசோலினியும் கோர்ப்பசேவும் எல்ட்சினும் சோசலிசம் என்ற போலி முழக்கத்தோடு செயல்பட்டதற்கு இணையான மோசடிதான் இவர்கள் சமத்துவம் என்று பேசுவதும். வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதபடிக்கு சமத்துவம் என்ற சொல்லும் பொருளும் இழிவுபடுத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்குமாறு உண்மையான சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டு செயல்படும் அமைப்புகளை தூண்டிவிட்டாலும் கூட தவறில்லை. இவர்கள் சொல்லும் சமத்துவத்தின் பின்னே மறைந்திருக்கும் சூதுக்கள் குறித்து மக்களை எச்சரிக்கைப்படுத்துவதும்கூட ஒரு சமூகநீதி ஆர்வலனின் முக்கிய கடமையாகிறது.

சமத்துவத்திற்கான இளைஞர் குழு என்ற பெயரில் மறைந்திருப்பவர்கள் அனைவரும் உயர்சாதியினர் என்று தம்மைத்தாமே சொல்லிக் கொள்கிறவர்கள் தான். அவர்களிலும் பெரும்பாலானோர் பார்ப்பனர்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு எதிர்ப்புக்குத் தேவையான தத்துவார்த்தப் பின்புலத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சுயசாதி அகங்காரங்களையும் போலிப் பெருமிதங்களையும் உதறிவிட்டு சாதி மறுப்பாளர்களாக செயல்படுகின்றவர்களைத் தவிர அனேகமாக மற்ற பார்ப்பனர்கள் அனைவருமே இடஒதுக்கீடு எதிர்ப்பை தமது வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர். தொழிற்சங்கம், கலை இலக்கியம், பத்திரிகை, அரசியல் கட்சி என்று பல்வேறு சமூக இயக்கங்களில் உற்சாகமாகப் பிறசாதியாரோடு பங்கேற்கும் இவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நடைபெறும் எந்த இயக்கத்திலும் தென்படுவதில்லை. அது தனிப்பட்ட முறையில் தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும் என்கிற மனோபாவம் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க அலுவலகமும் ஒரு குட்டி அக்ரஹாரமாக திகழ்ந்த அந்தக் கடந்த காலத்தை எண்ணி அவர்கள் விடும் பெருமூச்சு கூட இடஒதுக்கீடு ஒழிக என்றுதான் அடங்குகிறது.

ஒரு பார்ப்பனர் எந்த அமைப்பில் இயங்கினாலும் இடஒதுக்கீடு பிரச்னை என்று வருகிறபோது தனக்கான தலைமையை வெளியே தேடுகிறவராகிறார். அந்த வகையில் 1902ல் பார்ப்பனரல்லாதாருக்கு முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கிய கோல்காபூர் மன்னர் சாகு மகராஜ் பார்ப்பனருக்கு எதிரியாகவும் அவ்வொதுக்கீட்டை எதிர்த்த திலகர் தலைவராகவும் ஆகிவிடுகின்றனர். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கு பங்கு வேண்டுமென்று 1890களிலேயே முழங்கிய அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் அவர்களுக்கு முன்பே கோரிய ஜோதிராவ் பூலேவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிய பெரியாரும், தலித்களுக்கும் பழங்குடியினருக்குமான பிரதிநிதித்துவத்தை அரசியல் சட்டப்பூர்வமாக்கிய அம்பேத்கரும் விரோதிகளாகி விடுகின்றனர். சங்பரிவாரத்தை பல காரணங்களுக்காக எதிர்க்கும் பார்ப்பனரும்கூட இடஒதுக்கீடு பிரச்னையில் ஹெட்கேவாரையும் கோல்வால்கரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறவராகிறார். அதாவது அவர் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அரை டவுசரோடு நிற்கவில்லையே தவிர கருத்தளவில் அவ்வமைப்பினராகி விடுகிறார். இடஒதுக்கீடு பற்றிய கருத்தளவிலான இந்த முறிவு அல்லது பிளவு குடும்பம் தொடங்கி இந்திய சமூகத்தின் எல்லா அமைப்புகளிலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று தலித் சிந்தனையாளர் வி.டி.ராஜசேகர் கூறியது முற்றிலும் உண்மை.

மனிதகுலம் எப்படி தோன்றி பரிணாமம் பெற்றது என்பது குறித்த விஞ்ஞானப்பூர்வமான பார்வை கொண்டிருந்தாலும்கூட, கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்கிற பொருள்படும் பிராமணன் என்ற வர்ணாசிரம வார்த்தையால் தான் அழைக்கப்படுவதையே ஒரு பார்ப்பனர் பெரிதும் விரும்புகிறார். கடைசியாக வந்தவன், இளையவன் என்று பொருள்படும் பார்ப்பு என்ற அழகிய தமிழ்ச்சொல்லை அடிப்படையாய்க் கொண்டு பார்ப்பனர் என்று விளிப்பதை அவமதிப்பென குமைகின்றனர். (மற்ற எந்த அன்னியர்களையும் போலவே பிராமணனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே என்று அம்பேத்கர் சொல்வதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.) எங்கிருந்தோ வந்து கடைசியாக இச்சமூகத்தில் சேர்ந்தவர்கள் என்று தமது பூர்வீகத்தை நினைவூட்டும் அவ்வார்த்தையின் உண்மைத் தன்மையை விடவும் பிராமணன் என்பதன் புராணத் தன்மையை அவர்கள் விரும்புவதற்கு காரணம், அது சமூகத்தில் தங்களுக்கு மிக உயரிய அந்தஸ்தையும் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொடுத்த வார்த்தை என்பதால்தான். அந்த வார்த்தை உருவான வரலாற்றுப் பின்னணியில்தான் இந்திய சமூக வரலாற்றின் இருளடைந்த பக்கங்கள் வெளிச்சத்திற்கு ஏங்கி மறைந்து கிடக்கின்றன.

எல்லாவற்றையும் காரண காரியத்தோடும் அவை உருவான காலத்தோடும் பொருத்திப் பார்க்கும் தர்க்கப்பூர்வமான அணுகுமுறையையே வலியுறுத்தும் சில பார்ப்பனர்கள்கூட இடஒதுக்கீட்டின் மூலத்தை அறிய வரலாற்றுக்குள் நுழைவதை விரும்புவதில்லை. ஏனென்றால் அங்கே இவர்கள் ரசிக்கத்தக்க எதுவுமேயில்லை. இருப்பதெல்லாம் அவர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கும் தகுதி திறமை பரம்பரை அறிவுத்திறன்களை எப்படி கைக்கொண்டார்கள் என்பதை அம்பலப்படுத்தும் சான்றுகள் மட்டுமே. எப்போதோ நடந்ததைப் பற்றி இப்போதென்ன பேச்சு என்று சொல்வதன் மூலம் கடந்த காலத்தை நிராகரிக்கின்றனர். அதாவது நிகழ்காலத்தில் இருப்பதைப் போலவே காலகாலமாய் எல்லாமும் இருந்ததான ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
Top of Form

Bottom of Form

III

இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களையும் முற்றுரிமைகளையும் கேள்விக்குட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை சமூகத்தில் தகவமைக்கும் நுட்பங்களோடு புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் நாடகங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகள் வெளியாகின. இதன் மூலம் இயற்கை வளங்களான நிலம் நீர் காற்று, பொதுச்சொத்துக்களான கல்விச்சாலைகள், பண்டகசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் பார்ப்பனர்களுக்கே முதலுரிமை வழங்கப்பட்டது. அரசனின் பட்டத்து மகிஷியை கன்னி கழிக்கும் உரிமைகூட பார்ப்பனர்களுக்கிருந்தது. ஒரு பார்ப்பனர் யாரைத் தொடுகிறாரோ அல்லது தொட மறுக்கிறாரோ அதைப் பொறுத்து ஒருவர் தீண்டத்தக்கவரா தீண்டத்தகாதவரா என்பது முடிவானது. எண்ணையும் தண்ணியும் யாரிடமிருந்து ஒரு பார்ப்பனர் பெற்றுக் கொள்கிறாரோ அதுவே ஒருவரின் சமூக அந்தஸ்தை தீர்மானிப்பதாயிருந்தது.

வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டு முறைகளான யாகங்கள், பரிகாரங்கள், மந்திரங்கள், சடங்குகள் நடைமுறைக்கு வந்தன. பார்ப்பனரல்லாதாரின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இழிவுக்குரியதாய் அறிவிக்கப்பட்டன. அவர்களது உணவு, உடை, இருப்பிடம், நம்பிக்கைகள், தெய்வங்கள், பண்டிகைகள் எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரம் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது. ஓட்டுவீடு கட்டிக்கொள்வது, குடை எடுத்துச் செல்வது, செருப்பணிவது, சவரம் செய்து கொள்வது, புத்தாடை அணிவது, இடுப்புக்கு மேலும் முழங்காலுக்கு கீழும் உடை அணிவது, நெய் உண்பது, தார்ப்பாய்ச்சி வேட்டி கட்டுவது, பொன்னாலான நகை அணிவது, தேர்/குதிரைசவாரி ஆகிய அனைத்தும் சூத்திரசாதியாருக்கும் பெண்களுக்கும் தடை செய்யப்பட்டது. சொத்து வைத்துக் கொள்ளும் உரிமையும் இவர்களுக்கு முற்றாக மறுக்கப்பட்டது. சூத்திரசாதியார் சமூகரீதியாகவும் பொருளாதாரரீயாகவும் பின்தங்கியதற்கான காரணம் இங்கே தொடங்குகிறது. இவர்களது மொழி இழிசனர் மொழியாக அறிவிக்கப்பட்டதால் இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளும்கூட இழிசனர் வழக்காக ஒதுக்கப்பட்டன. இந்தத் துவேஷம் இன்றுவரை நீடிப்பதன் சான்றுதான் சிதம்பரம் கோயில் விவகாரம்.

வேதங்களை படிப்பது பயிற்றுவிப்பது என்பதே அன்றைய கல்வியாக இருந்த நிலையில் இந்த வேதகல்வி என்பது எட்டாண்டு காலம் நாளொன்றுக்கு சராசரியாக பன்னிரண்டே வரிகளை படிப்பது தான். ஆனால் இதை படிக்கும் திறமை சமூகத்தின் பெரும்பகுதியினராகிய பெண்களுக்கும் உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் கிடையாதென்று மறுத்துவிட்டு பார்ப்பன ஆண்கள் மட்டுமே கற்றனர். தேவபாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதஸ்லோகங்களை பெண்களும் பார்ப்பனரல்லாத மற்றவர்களும் ஓதினாலோ ஓதுவித்தாலோ அது தீட்டுக்குரியதாகிவிடும் என்று விளக்கம் தரப்பட்டது. அதை மீறி வேதம் பயில முயன்ற சம்புகனை ராமனே தேரேறிப் போய் கொலை செய்த கதை நாடறிந்த ஒன்றுதான். (இப்பேர்ப்பட்ட ராமனின் ராஜ்ஜியத்தைத்தான் இங்கே நிறுவப்போவதாய் சங்பரிவாரம் கூறுகிறது). வேதமந்திரங்களை உச்சரித்ததற்காக நாக்கை வெட்டிவிடும் தண்டனை மராட்டியத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரை இருந்தது. புராணகாலத்தில் மட்டுமல்ல, தீட்டுக்குரியவர்களாகிய பொற்கொல்லர்கள் நமஸ்காரம் என்ற சமஸ்கிருத வார்த்தையை உச்சரித்து தீட்டுப்படுத்துவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று சித்பவன பார்ப்பனர்கள், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவருக்கு எழுதிய கடிதத்தின்பேரில் அப்படியொரு தடை உத்தரவு 09.08.1779 அன்று வெளியிடப்பட்டது. (அம்பேத்கர் தொகுப்புநூல் 25, பக்கம் 78,79). மகாத்மா ஜோதிராவ் பூலேவும் அவரது துணைவியாரும் நடத்திய பெண்களுக்கான பள்ளி எரிக்கப்பட்டது.

வேதத்தை ஏற்காதவர்களும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தவர்களும் வர்ணப்பிரிவினைக்கு வெளியே அவர்ணர்களாக பஞ்சமர்களாக ஒதுக்கப்பட்டனர். உயர்வர்ணத்து ஆணும் கீழ்வர்ணத்து பெண்ணும் கலந்து அனுலோம சாதியும் உயர்வர்ணத்து பெண்ணும் கீழ்வர்ணத்து ஆணும் கூடி பிரதிலோம சாதியும் உருவானதாகக் கூறி இதில் பிரதிலோம சாதியை தீண்டத்தகாததாக அறிவித்து ஒதுக்கினர். இவர்கள் அனைவரும் சூத்திரர்களைவிடவும் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இவர்களைக் கண்டாலும் இவர்கள் பேசுவதைக் கேட்டாலும் தீட்டு என்று அறிவிக்கப்பட்டது. சமூகத்தின் எந்த நடவடிக்கையிலும் இவர்கள் பங்கேற்பு தடை செய்யப்பட்டது. இவர்களுக்கு ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம் தொடங்குவதை 1850லும் கூட பார்ப்பனர்கள் எதிர்த்ததாக பம்பாய் மாகாண கல்விக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. சூத்திரர்களும் பெண்களும் பஞ்சமர்களும் கல்வியில் முற்றாக விலக்கி வைக்கப்பட்ட வரலாறு இதுதான்.

ஆட்சி நீடிக்கவும் ராஜ்ஜியம் விரிந்து பரவவும் ஆயுள் நீட்டிப்புக்கும் எதிரிகளை ஒழிக்கவும் இன்னின்ன யாகங்களை செய்தாக வேண்டும் என்று அரசனை நிர்ப்பந்தித்தனர் பார்ப்பனர்கள். அந்த யாகங்களுக்காக பிரம்மதேயம், ஆர்யவர்த்தம், சதுர்வேதி மங்கலம், வேள்விக்குடி, அக்ரஹாரம் போன்ற பெயர்களில் மானியமாக பெருமளவு நிலங்களையும் கால்நடைகளையும், ஹிரண்ய கர்பா, துலாபுருஷதானம் போன்றவை வழியாக பொன்னும் இதர பொருட்களையும் பெற்று சொத்துடைமையுள்ள குழுவாக பார்ப்பனர்கள் மாறினர். உடல் உழைப்பை பாவகரமானதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பார்ப்பனர்கள் இப்போது தானமாகப் பெறுகிற நிலங்களில் வேளாண்மை செய்வதை சாஸ்திரம் தடுத்தது. எனவே பார்ப்பனரின் நிலங்களில் பாடுபட்டு விளைவித்துத் தரும் பொறுப்பு சூத்திர சாதிகளுக்குரிய கடமையாக அறிவிக்கப்பட்டது. அதாவது இவர்கள் நிலத்தை விட்டு உடல் உழைப்பை விட்டு வேறுபக்கம் நகர்ந்துவிட முடியாதபடி வலுவாக பிணைக்கப்பட்டனர். பெரும்பாலான சூத்திரசாதிகளின் வாழ்வாதாரமாக விவசாயம் சார்ந்த தொழில்களே இருப்பதற்கு இதுவே காரணம்.

ஆக, சமூக மக்கள் தொகையில் சரிபாதியாய் இருக்கும் பெண்கள், உழைக்கும் மக்களாகிய சூத்திரர்கள், தீண்டத்தகாத சாதியினர், பழங்குடிகள் ஆகியோர் சொத்தில்லாதவர்களாக, கல்வியற்றவர்களாக இப்படித்தான் மாற்றப்பட்டனர். (பின்பு இதையே காரணம் காட்டி வெள்ளையராட்சியின்போது வாக்குரிமையும்கூட மறுக்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் முழங்கியது இதன் பொருட்டே) போட்டியாளர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டு தன்னந்தனியாய் களத்தில் நின்றனர் இம்மாவீரர்கள். இந்த உயர்ந்த நிலையை அடைய அவர்களுக்கு துணையாக இருந்தவர்கள் சத்திரியர்கள். அரசாள்வதும் போர்புரிவதுமாகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த இந்த சத்திரியர்களை தமக்கு அடுத்த நிலையிலுள்ள உயர்வர்ணமாக அறிவித்ததன் மூலம் அரசனும்கூட தமது சேவகன்தான் என்ற நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சத்திரியர்கள் வேதம் படிக்கலாம் ஆனால் ஓதக்கூடாது. இப்படி பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக வேதம் படித்த இந்த சத்திரிய சாதியினர்தான், இப்போது இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் பார்ப்பனர்களோடு இணைந்து நிற்கிற பிற உயர்சாதி மாணவர்கள்.

சில வேத ஸ்லோகங்கள், யாக சடங்குகள், பரிகாரப் பூஜைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மட்டும்தான் வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களிடமிருந்த அறிவு. இந்த அறிவு மனிதகுலத்திற்கு எவ்வகையிலும் பயன்படாத அறிவு. இந்த அறிவைப் பயன்படுத்தி உப்பு, புளி, மிளகாய், ஒருமுழக் கோவணத்துணி, ஒரு சட்டி, ஒரு துளி தண்ணீர், ஒரு விறகுக்குச்சி, ஒரு கவளம் சோறு, ஒரு சவரக் கத்தி, ஒரு கலப்பை என்று எதையும் பெறமுடியாது. கால்நடைகளை வெறுமனே யாகத்தில் பொசுக்கித் தின்னும் இறைச்சியாக பார்த்தது பார்ப்பனரின் அறிவென்றால், கால்நடைகளை செல்வமாகக் கருதி வளர்க்கவும் விருத்தி செய்யவும் பால் பொருட்களைப் பெறவும் பயன்பட்டது பார்ப்பனர் அல்லாத உழைப்பாளி மக்களிடமிருந்த அறிவுதான்.

நிலத்தில் இறங்கி உழுபடை வேலைகள் செய்வதை தீட்டாகக் கருதி பார்ப்பன அறிவு ஒதுங்கி நின்றபோது (ஒருவேளை ஏர் ஓட்டும் ஆசை வந்தால் கலப்பை பொம்மை செய்து விளையாடி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது சாஸ்திரம்) கால்நடைகளைப் பழக்கி விவசாயம் செய்யவும் புதிய தானியங்களையும் காய்கனி கிழங்குகளையும் உணவாகக் கண்டு கொடுத்த பெருமை எளியவர்களின் அறிவுக்குரியது. ஆடியில் நற்காரியங்கள் எதையும் செய்யக்கூடாது என்று பார்ப்பன அறிவு மிரட்டிக் கொண்டிருந்தபோது ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று பயிர்த் தொழில்களுக்கு ஏற்ற பருவங்களை கணிக்கும் அறிவு பார்ப்பனரல்லாதாருக்கு இருந்தது. விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி ஆடைகளையும் காலணிகளையும் கண்டுபிடித்ததும் இவர்களது அறிவுதான். இவர்கள்தான் இன்றைக்கு பார்ப்பனர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கும் Genetic Engineering, Tissue culture, Astronomy, Leather Technology போன்ற படிப்புகளுக்கு முன்னோடிகள்.

கடல்தாண்டுவது பாவம் சாஸ்திர விரோதம் என்று தடுத்தது பார்ப்பனர்களின் அறிவென்றால், கடலுள் மூழ்கி முத்தெடுக்கவும், மீன் பிடிக்கவும், கடல் மேல் பயணம்போய் வாணிகம் செய்யவும், கடல்நீரை உப்பாக மாற்றவும் பயன்பட்டது பார்ப்பனரல்லாத உழைப்பாளி மக்களின் அறிவு. இன்றைக்குள்ள Marine Technologyன் மூலவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள். பருத்தியை பஞ்சாக்கி பஞ்சை நூலாக்கி நூலை துணியாக்கும் தொழில்நுட்பச் சங்கிலியில் பார்ப்பனர்களின் கண்டுபிடிப்பு எது? பட்டுத்துணி உடுத்திக் கொண்டால் எந்தத் தீட்டும் அண்டாது என்று சொல்லத் தெரிந்த பார்ப்பன அறிவுக்கு ஒரு அங்குல நூல் நூற்கத் தெரியாது. சுட்டச் செங்கல்லை அறிந்ததும், சுதையை தயாரித்ததும் எவருடைய அறிவு?

ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி நிற்கும் கோட்டை கொத்தளங்களையும் கோவில்களையும் அணைகளையும் கட்டிய அறிவு எந்த பார்ப்பனரின் கொடையுமல்ல. பனையை தீட்டுக்குரிய மரமாக பார்ப்பனர்கள் ஒதுக்கிவைத்த போது (இன்றும் கூட அவர்கள் பனங்கிழங்கு சாப்பிடுவதில்லை என்கிறார் முனைவர் தொ.பரமசிவன்) பனையோலையை பதப்படுத்தி எழுத்தோலையாக மாற்றிக்கொடுத்த அறிவு ஒரு பனையேறிக்குரியது. கையெல்லாம் காப்பேற உளிபிடித்துச் செதுக்கி காலத்தின் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுக்களை தந்தவர்கள் இன்றைய ஒட்டர்களுக்கும் போயர்களுக்கும் முன்னோடிகளாக இருக்கக்கூடும். காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் கவினுறு வனப்போடு திகழும் சிலைகள், சிற்பங்கள் எதன்மீதும் ஒரு பார்ப்பனனின் ரேகையுமில்லை.

சகமனிதனைத் தொடுவதே பாவம் என்று பார்ப்பனர்கள் தீட்டு பாராட்டிக் கொண்டிருந்தபோது பிணி முறிக்கும் வைத்திய முறைகளை மூலிகைகளைக் கண்டறிந்தவர்கள் பார்ப்பனரல்லாதவர்கள் தான். பார்ப்பனர்களின் வைதீக மரபுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த சித்தர்கள் கண்டடைந்த வைத்தியமுறை இன்றைய நவீனகால நோய்களுக்கும்கூட சிகிச்சையளிக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. குடிமைத் தொழிலாளிகளான நாவிதர்கள்தான் இந்திய கிராமங்களின் மருத்துவர்கள். அவர்கள் வீட்டுப் பெண்கள்தான் மகப்பேறு வைத்தியர்கள். AIIMSல் படித்த எந்த மருத்துவரும் கிராமத்திற்குச் செல்லாத நிலையில், அனுபவ வைத்தியர்களின் அறிவுதான் காலகாலமாக இந்திய சமூகத்தின் நோய்களைப் போக்கி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கல்வியின் முன்னோடிகள் இவர்கள்தான். தம்முடைய அலோபதியே சிறந்தது என்று நிறுவிட மண்சார்ந்த மருத்துவமுறைகளை பின்தள்ளினர் வெள்ளையர். சேவை என்ற நிலையிலிருந்து ஒரு தொழிலாக மருத்துவம் மாறியபோது பார்ப்பனர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்.

காட்டுவிலங்குகளை வேட்டையாடித் தின்ன அரசர்களுக்கு நேரம் கணித்துக் கொடுப்பதற்கும், வாழ்வின் அந்திமத்தில் வானப்பிரஸ்த கட்டத்திலும், சந்நியாச கட்டத்திலும் மட்டுமே ஒருவன் காட்டுக்குப் போகவேண்டுமென்று ஆசிரம விதிகளை வலியுறுத்திக்கொண்டும் இருந்தது பார்ப்பன அறிவு. ஆனால் காட்டின் மக்களாகிய பழங்குடிகள், அங்கிருக்கும் அரிய மூலிகைகளையும் வாசனைத் திரவியங்களையும் தேனையும் உண்ணத்தக்க கனிகளையும் கிழங்குகளையும் கண்டறிந்து சமவெளியின் மக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இயற்கையை வெற்றி கொள்வது என்கிற அழிவுச் சித்தாந்தத்திற்கு எதிராக இயற்கையோடு இயைந்து வாழும் நெறியை மனிதகுலத்துக்கு கற்றுக் கொடுத்தவர்கள் பழங்குடியினர்.

கலை இலக்கியத்திற்கு வந்தாலும் இரண்டு இதிகாசங்களை படைத்தவர்களும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றியவரும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். செய்யும் தொழில் சார்ந்த கருவிகள், உற்பத்தி, வினியோகம், வாணிபம் சார்ந்த சொற்களை உருவாக்கி மொழியை வளப்படுத்தியவர்களும் இவர்கள்தான். உழைப்பின் வழி பெற்ற அனுபவங்களை, இயற்கையின் மேன்மைகளை, வாழ்தலின் பாடுகளை தலைமுறைகளுக்கு மாற்றிக் கொடுக்கும் வகையிலான பாடல்களையும் கதைகளையும் நாடகங்களையும் பல்வேறு கலை வடிவங்களையும் உருவாக்கியவர்களும் இவர்களே. வேதத்தில் இல்லாதது எதுவுமேயில்லை என்று பார்ப்பன அறிவு தேக்கமுற்றுக் கிடக்கையில் பிறப்பின் தாலாட்டு தொடங்கி இறப்பின் ஒப்பாரிவரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்குமான பாடல்களும் ஆடல்களும் வீரவிளையாட்டுகளும் பார்ப்பனரல்லாதாரின் பெருமைமிக்கக் கொடையாக இன்றும் உள்ளன. தேவபாஷை என்று விதந்தோதப்பட்ட பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் செத்த மொழியாகவும் பார்ப்பனரல்லாதோரின் மொழிகள் தழைத்து வளர்கின்றவையாகவும் உள்ளன. சமஸ்கிருதம் முதலில் மக்களை ஒதுக்கியது. பின் மக்கள் அதை ஒதுக்கிவிட்டனர். வளர்வதற்கான வீர்யமற்ற அந்த மொழியால் பார்ப்பனர்களின் உண்டியல்களுக்கு தட்சணைகளைத்தான் இன்றும்கூட பெற்றுத்தர முடிகிறதே தவிர இந்திய சமூகத்திற்கு இதுவரை ஆக்கப்பூர்வமாக எதை வழங்கியிருக்கிறது?

மண்ணில் புரண்டு வாழ்கிறவனுக்குத்தான் அந்த மண்ணில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியும். விண்ணையே வெறித்துக் கிடப்பவனுக்கு தெரிவது நட்சத்திரமாகவோ சூரியனாகவோ நிலவாகவோ இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு சகமனிதனுக்கு என்ன பெற்றுத்தர முடியும்? எனவே பகுத்துப் பகுத்துப் பார்த்தால் பார்ப்பனர்களின் அறிவு சமூகத்திற்கு துளியும் பயன்படாத- இல்லாத கடவுளுக்கு பயன்படும் அறிவாகவும், பார்ப்பனரல்லாதவர்களின் அறிவு மனிதனின் வாழ்க்கைத் தேவைகளை உற்பத்தி செய்யக்கூடிய - வாழ்நிலையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேலேற்றிக் கொண்டு செல்லக்கூடிய அறிவாகவும் இருக்கிறது. ஆகவே வெள்ளையராட்சி வரும் வரை பார்ப்பனர்களுக்கிருந்த பரம்பரை அறிவு விஞ்ஞானப்பூர்வமானதோ மருத்துவம் சார்ந்ததோ உற்பத்தி சார்ந்ததோ அல்ல. அது வெறுமனே கோவிலில் மணியாட்டவும் மந்திரம் ஓதவுமான அறிவாக மட்டுமே முடங்கியிருந்தது. பார்ப்பனர்களுக்கு அடுத்திருந்த சத்திரிய சாதியினரின் அறிவும் ராஜ்ஜியங்களை காப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான போர்த்தொழில் அறிவாக- அழிவுக்கான அறிவாக- மனிதகுலத்திற்கு எதிரான அறிவாகத்தான் இருந்தது.

IV
சாம்ராஜ்யங்கள் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசர்கள் இல்லாத பகுதிகளை விட்டு பார்ப்பனர் வெளியேறினர். நகரங்களை மையமிட்டு வளர்ந்த பிரிட்டிஷ் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதற்காக கிராமங்களை விட்டும் வெளியேறினர். கிராமங்களில் தமக்கிருந்த மானிய நிலங்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு அடுத்தடுத்த கீழ்நிலையிலிருந்த சாதியினரிடம் ஒப்படைத்தனர். தாங்கள் இதுவரை காத்துவந்த சாதி ஒழுங்குமுறை என்கிற ஒடுக்குமுறையும்கூட கைமாற்றித் தரப்பட்டது. பார்ப்பனர்களுக்குப் பதிலாக சாதியைக் காப்பாற்றும் பொறுப்புக்கு புதிய தலைமைகள் வந்தன. பார்ப்பனர்கள் இல்லாத நிலையிலும் இன்றளவும் கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளுக்கான உளவியல் பலம் பார்ப்பனர்களிடமிருந்தே பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே காலகட்டத்தில் உபரி உற்பத்தியை விற்பனை செய்வதில் ஈடுபட்ட வைசிய சாதிகள் பலம் பெறத் தொடங்கின. சத்திரியர்கள் செல்வாக்கிழந்த நிலையில் சமூகத்தின் அடுத்த சக்தியான வைசியர்களை தமக்கு அணுக்கமான சாதியாக பார்க்கத் தொடங்கினர் பார்ப்பனர். வைசிய சாதிகள் சிலவற்றுக்குப் பூணூல் அணிந்துகொள்ள அனுமதிக்குமளவுக்கு இந்த நெருக்கம் வளர்ந்தது. சமூகத்தின் மேல்நிலையிலுள்ள பார்ப்பன சாதி தம்மை அங்கீகரித்ததற்கு பிரதியுபகாரமாக அவர்களுக்கு விசுவாசம் கொண்ட புதிய தொண்டர்களாக மாறிய வைசிய சாதியினர் தமக்கு அடுத்த நிலையிலிருந்த சூத்திரர்களை ஒடுக்குவதில் விருப்பம் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களும் சத்திரிய சாதியினரும் நடத்தும் இடஒதுக்கீடு எதிர்ப்பு ரகளையில் இந்த பனியாக்கள் சிலர் சேர்ந்திருப்பதற்கான பின்னணி இதுதான்.

வேத மந்திரங்களை மனனம் செய்வதில் நூற்றாண்டு கால பயிற்சி பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையராட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மனப்பாட கல்விக்குள் தங்களை எளிதாக பொருத்திக் கொண்டனர். (மனப்பாடம் செய்து மார்க் பெறுவதையே தகுதியாகவும் திறமையாகவும் இவர்கள் போற்றுவதற்கான வரலாற்றுக் காரணம் இதுதான்.) மாட்டிறைச்சி உண்பதால் இங்கே சிலசாதியினரை தீண்டத்தகாதவர்களென ஒதுக்கிவைத்த பார்ப்பனர்கள் அதே மாட்டிறைச்சியை மூவேளையும் தின்கிற வெள்ளையர்களுக்கு விசுவாசமான ஊழியர்களாகத் துடித்தனர். மன்னர்களுக்கு ராஜகுருக்களாயிருந்து மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான வழிமுறைகளை சொல்வதில் நீண்ட அனுபவம் பெற்றிருந்த பார்ப்பனர்கள் வெள்ளையருக்கும் கூட தேவைப்பட்டனர். இரண்டு ஒடுக்குமுறையாளர்கள் இணைவது ஒரு இயல்பான கூட்டணிதானே?

தவிர்க்கவியலாமல் கல்வி ஜனநாயகப்படுத்தப்பட்டது. கல்விக்கூடங்கள் பொதுவாக்கப்பட்டன. அவற்றில் யாரும் சேர்ந்து படிக்கலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட, சூத்திர சாதியார் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்ட கோவிலிலோ ஆதிக்கசாதியினரின் தெருக்களிலோ கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. எனவே கல்விக்கூடத்திற்குள் நுழையும் உரிமை, ஆதிக்கசாதி தெருவில் நுழையக்கூடாதென்கிற சாதித்தடையின் மூலமாக மறுக்கப்பட்டது. இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஆதிக்கசாதியினர் தெருக்களில் அமைந்துள்ள கல்விக்கூடங்களுக்கு வந்துபோவது ஒரு தலித் மாணவனுக்கு அச்சுறுத்தலான காரியம்தான். மீறி வருகிறவர்கள் சைக்கிளில் வரக்கூடாது, செருப்பணியக் கூடாது என்பது போன்ற தடைகள் இதன் நீட்சியாகவே நீடிக்கின்றன. இப்போதும் பெண்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்ததால் வீட்டைவிட்டு வெளியேறி கல்விக்கூடங்களுக்கு செல்லும் வாய்ப்பு தடைபட்டது. ஆகவே பிரிட்டிஷ் ஆட்சியிலும் சாதிய பாலின ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டப்படவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த நிலை நீடிப்பதற்கும் வலுவடைவதற்கும் இந்திய உயர்சாதியினருக்கு பிரிட்டிஷ் ஆட்சி உதவிகரமாய் இருந்தது.

பிரிட்டிஷாரின் மருத்துவக் கல்வியை படிப்பதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற முன்னிபந்தனை வைக்கப்பட்டிருந்ததை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். உண்மையில் சமஸ்கிருதம் பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த மொழி. அதை ஒரு முன்னிபந்தனையாக பிரிட்டிஷார் மாற்றியதன் மூலம் பிறசாதியாரும் பார்ப்பன பெண்களும்கூட மருத்துவப் படிப்புக்கு செல்லமுடியாத ஒரு தடையை நுட்பமாக ஏற்படுத்தினர். இப்படி போட்டியாளர்களை வெளியே நிறுத்திவிட்டு பாதுகாப்பாய் பதுங்கிப் பெற்ற அறிவைத்தான் இன்று தங்களது பரம்பரை அறிவாக பார்ப்பனர்கள் பீற்றுகின்றனர்.

இந்திய மக்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை பிரிட்டிஷார் உருவாக்கியபோது அதில் முதலில் இணைந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். பிறகு மற்ற சாதியினரும் வந்து சேர்ந்த நிலையில் அவர்கள், தாழ்த்தப்பட்டவர்களோடு ஒரே முகாமுக்குள் தங்கமுடியாது என்று மறுப்பு தெரிவித்தனர். ஊருக்குள் நிலவும் ஒதுக்குதலை ராணுவத்திற்குள்ளும் கொண்டுவரத் துடித்த ஆதிக்கசாதியினரின் விருப்பத்திற்குப் பணிந்து தாழ்த்தப்பட்டோரை ராணுவத்தில் சேர்க்க தடை விதித்தது அரசு. இதையெல்லாம் கண்டு வெகுண்ட அம்பேத்கர், ‘புதுத்துணியைக் கொடுத்து இதேமாதிரி ஒரு சட்டை தைத்துத் தா என்றவனுக்கு, புதுச்சட்டை தைத்து அதையும் பழைய சட்டை மாதிரியே கிழித்துக் கொடுத்த சீனா டைலர் கதையைப் போல’ ஏற்கனவே இருக்கும் கிழிசலை பிரிட்டிஷ் அரசும் அப்படியே பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். அதாவது சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளில் கடந்த காலத்தைப் போலவே இப்போதும் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் நீடிப்பதாக குற்றம் சாட்டினார். அம்பேத்கரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மேலும் சில விவரங்களை வரலாறு நமக்குத் தருகிறது.

1770ல் நியமிக்கப்பட்ட பதினைந்து இந்திய ஐசிஎஸ் அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். 1840ல் இந்திய நிர்வாகத்துறையை ஆய்வு செய்த பிரிட்டீஷ் அதிகாரி ஒருவர், ஒரு நாட்டின் நிர்வாகத்துறை முழுவதும் ஒரு சாதியின் கட்டுப்பாட்டில் இருப்பது ஆபத்தானது என்று அரசாங்கத்தை எச்சரித்தார். ஆனாலும் நிலைமையில் மாற்றமேதுமில்லை. 1885ல் காங்கிரஸ் உருவானபோது இந்தியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கையும்கூட பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. படித்த இந்தியர்கள் அனைவருமே பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில் இது இயல்பானதுதான். இந்தியர் என்ற போர்வைக்குள் பதுங்கி பார்ப்பனர்கள் ஆதாயமடைவதைத் தடுக்கும் வழியேதும் இல்லை.
தடைகளை மீறி படித்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை 1870 தொடங்கி பூலேவும் அயோத்திதாசரும் ரெட்டைமலை சீனிவாசனும் எழுப்பி பார்ப்பன ஏகபோகத்திற்கு முடிவுகட்டும் முதல் மணியை ஒலிக்கச் செய்தனர். பார்ப்பனரல்லாதவர்களுக்கு பங்கு வேண்டுமென்ற கோரிக்கை நாடெங்கும் கிளம்பியது. 1902ல் கோல்காபூர் சமஸ்தானத்தில் நிர்வாகப் பதவிகள் அனைத்திலும் ஐம்பது சதவிகிதத்தை பார்ப்பனரல்லாதவர்களுக்கு ஒதுக்கி மன்னர் சாகுமகராஜ் உத்தரவிட்டார். இதுதான் பார்ப்பனர்களிடமிருந்த 100 சதவீத இடத்தை மறுபங்கீடு செய்து மற்றவர்களுக்கு வழங்கிய முதல் உத்தரவு. அன்று தொடங்கி படிப்படியாக நாட்டின் பல பாகங்களிலும் சாதி பலத்திற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கும் ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது. இதற்கு 1927ல் சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்த கம்யூனல் G.O. ஒரு முன்னோடியாக அமைந்தது. 1932ல் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்த அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகாரப் பகிர்வுகள் கிடைத்தன. 1950ல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் கம்யூனல் G.O. அரசியல் சட்டத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி ஒரு பார்ப்பனர் தொடுத்த வழக்கினடிப்படையில் அவ்வுத்தரவை செல்லாததென்று அறிவித்தன சென்னை உயர்நீதி மன்றமும் பின் உச்சநீதி மன்றமும். பெரியாரின் போராட்டத்திற்குப் பிறகு அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு தமிழகத்தின் வகுப்புவாரி உத்தரவு காப்பாற்றப்பட்டது. 1953ல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்பட்டோர் கமிஷனின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்படவில்லை. 1979ல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்பட்டோர் கமிஷன் ஓராண்டுகாலம் ஆய்வுசெய்து 11 காரணிகளின் அடிப்படையில் சமூகப் பொருளாதார, கல்வி அடிப்படையில் பிற்பட்டவர்களாக 3743 சாதிகளை அடையாளம் கண்டது. மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள இவர்களுக்கு கல்வி, வேலை ஆகியவற்றில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக 1963 ல் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மக்கள் தொகையில் 52 சதவீதம் பேராக உள்ள பிற்பட்டோருக்கு 27 சதம் என்று பரிந்துரைக்க வேண்டியதாயிற்று.

பத்தாண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி, வலதுசாரிகளின் ஆதரவில் அமைந்த தேசிய முன்னணி அரசு 1990ல் மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக வேலை வாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்பட்டோருக்கானதென்று அறிவித்தது. உயர்சாதியினர் ரகளை செய்தனர். ரதயாத்திரை நடத்தினர். ராஜீவ் கோஸ்வாமியை எரித்தனர். அரசையே கவிழ்த்தனர். அத்வானியும் ராஜீவ்காந்தியும் ஒருகுரலில் எதிர்த்தார்கள். அப்போது ‘கல்வியில் வேண்டுமானால் இடஒதுக்கீடு கொடுத்து தகுதியூட்டம் செய்யுங்கள், வேலைவாய்ப்பில் ஏற்கமாட்டோம்’ என்று எதிர்த்தனர். ஆகவே இப்போது உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை நியாயவுணர்ச்சியோடு அவர்கள் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு பண்பு அவர்களிடம் வெளிப்பட்டதாக வரலாற்றில் எந்தப் பதிவுமில்லை. இப்போது உயர்கல்வியில் ஒதுக்கீடு கூடாது, ஆரம்பக்கல்வியில் வேண்டுமானால் சிறப்பு கவனம் செலுத்துங்கள் என்று எதிர்க்கின்றனர். நாளை ஆரம்பக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினருக்கும் பிற்பட்டோருக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் திட்டம் ஏதேனும் அறிவிக்கப்படுமானால் அதை எதிர்க்க, பிறப்பதற்கு முன்பே வயிற்றிலிருக்கும்போதே ஏதாவது செய்யுங்கள் என்பது மாதிரியான வாதங்களைக்கூட அவர்கள் இப்போதே யோசித்திருக்கக்கூடும்.

இப்படி தங்களிடமிருக்கும் மொத்த இடங்களில் ஒரு பகுதியை பறித்தெடுத்து மற்றவர்களுக்குப் பங்கீட்டுக் கொடுக்கும் ஏற்பாடுகள் வரும்போதெல்லாம் எதிர்ப்பதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் எவையும் புதியவை அல்ல. கோயிலுக்குள் நுழையவும் குளத்தில் மூழ்கவும் கல்வி கற்கவும் சொத்து வைத்துக் கொள்ளவும் என்னென்ன காரணங்களை காட்டி மறுத்தார்களோ அதையேதான் இப்போதும் சொல்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் காரணமாக இந்திய சமூகம் சாதி ரீதியாக பிளவுண்டு போகுமென்று சமத்துவத்திற்கான இளைஞர் குழு தேசபக்த முழக்கமிடுகின்றது. ஆதிதிராவிடரும் அருந்ததியரும் அக்ரஹாரத்துக்குள் குடியேறி அர்ச்சகராகி விட்டதைப் போலவும், பார்ப்பனர்கள் அனைவரும் பறைச்சேரியில் மேளமடித்துக் கொண்டும் பொதுக் கழிப்பறையில் மலமள்ளிக் கொண்டும் இருக்குமளவுக்குச் சாதிப்பிரிவினைகள் மறைந்துவிட்டதைப் போலவும் கதையளக்கின்றனர். ஏற்கனவே சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு சமத்துவமின்மையின் மீது சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால்தான் இப்போது இடஒதுக்கீடு தேவைப்படுகிறது என்கிற அடிப்படையான உண்மையை ஒத்துக்கொள்ள மனமின்றி நிலையை தலைகீழாக விவரிக்கின்றனர்.

இப்போது இந்திய சமூகத்தில் சாதி ஒரு பிரச்சினையே இல்லை என்பதைப்போல பாவனை காட்டுகின்றனர். ஆனால் ஒரு செத்த மாட்டிற்காக ஐந்து தலித்துகளை கொல்வதும், கோயில் கருவறைக்குள் பிறசாதியாரை நுழையவிடாமல் தடுப்பதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பதும், சமஸ்கிருதம் தவிர வேறொரு மொழியில் அர்ச்சனைகள் ஓதப்படாமல் இருப்பதற்கும் சாதிதானே காரணம்? ஆசி வாங்க வந்த தலித்கள் தொட்டுவிட்டால் தீட்டாகிவிடும் என்று தன் கால்களை பட்டுத்துணியால் காஞ்சி சங்கரன் மறைத்துக் கொண்டதற்கும், சங்கரமடத்தின் கல்லூரி விடுதிகளில் சாதியடிப்படையில் உணவுக்கூடம் பிரிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியல்லாமல் வேறென்ன காரணத்தை சொல்ல முடியும்? ஒரு வேலையைச் செய்வதற்கு தெரிந்திருப்பது ஒன்றே அதற்கு தேவையான தகுதியும் திறமையும். அப்படியானால் மணி ஆட்டத் தெரிந்த அனைவரையும் கோவிலில் அர்ச்சகராக்க வேண்டியதுதானே? ஆகவே தகுதி திறமை என்பதல்ல இவர்களது பிரச்சினை. மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிற சாதிவெறியே தடுக்கிறது.

தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தேவையான உடல் மன ஆரோக்யம்தானே ஒரு திருமணத்திற்கு தேவையான தகுதியும் திறமையும்... பிறகெதற்கு இன்ன சாதியில் இன்ன கோத்திரத்தில் மணமகன்/ள் வேண்டும் என்று இங்கிலிஷ் பேப்பரிலும் இன்டர்நெட்டிலும் விளம்பரம் வருகிறது? ரத்தக்கலப்பு நடக்காமல் சாதியம் ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்திய பார்ப்பனர்கள் எத்தனை பேர்? சொந்த வாழ்க்கையில் எந்தக் கட்டத்திலும் சாதியைக் கைவிடாமலே சாதி ஒழிந்து விட்டதைப் போன்று பிதற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? அம்பேத்கர் சொன்னதைப்போல ஒவ்வொரு தனிமனிதனையும் பிறப்பிலிருந்து இறப்புவரை சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்துமத கோட்பாடுகள்தானே வழிநடத்தும் நெறியாக இருக்கிறது? ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஊர் என்றும் சேரி என்றும் கிழிந்து கிடக்கிற யதார்த்தத்தை மறைத்து சாதியே இல்லை என்று ஓலமிடுவது மிகப்பெரும் மோசடி. இன்றுவரையிலும் சுடுகாட்டில்கூட சமத்துவத்தை கொண்டுவர முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே, இடஒதுக்கீட்டால் சமூகம் பிளவுறவில்லை, சமூகம் பிளவுண்டிருப்பதால்தான் இடஒதுக்கீடு என்பதே சரியானது.

உயர் கல்வியில் இடஒதுக்கீடு அமலானால் தகுதியும் திறமையும் வேலைத்திறமும் குறைந்துவிடும் என்பதும் இவர்களது முக்கியமான குற்றச்சாட்டு. இதன் பொருள் பரம்பரை பரம்பரையாக உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பிற்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மூளையுழைப்பு சார்ந்த ஒரு மருத்துவராகவோ, பொறிஞராகவோ, மேலாண்மை வல்லுனராகவோ இருக்கும் தகுதி கிடையாது என்பதே. உடலுழைப்பு என்பதே மிகுந்த அறிவுப்பூர்வமான செயல்பாடுதான். குறிப்பிட்ட கருவியைப் பயன்படுத்தி குறைந்த சக்தியை செலவிட்டு கூடுதல் பலனை பெறுவதற்குத் தேவையான முழு அறிவோடும்தான் ஒரு உழைப்புச் செயல்பாடு நிகழ்கிறது. உடலுழைப்பை அறிவிலிருந்து துண்டித்துப் பார்ப்பது அறிவீனம். அல்லது உழைப்பில் ஈடுபடாததால் உணர்ந்து கொள்ள முடியாத அனுபவக் குறைவாகவும் இருக்கக்கூடும். எனவே உழைக்கும் சாதியினர் வீட்டுப் பிள்ளைகளை அறிவற்றவர்களாக சித்தரிப்பதில் உண்மையேதுமில்லை.

பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பெறுகிற மதிப்பெண்ணைத்தான் இவர்கள் தகுதி திறமை என்கின்றனர். இன்றைக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, +1 பாடங்கள் நடத்தப்படுவதேயில்லை. ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடமும் +1 வகுப்பிலேயே +2 பாடமும் நடத்தப்படுகிறது. ஓராண்டில் படித்து முடித்து பரிட்சையைச் சந்திக்க திராணியற்ற இம்மாணவர்கள் ஒரே பாடத்தை இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்கின்றனர். இவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று தகுதியும் திறமையும் மிக்கவர்களாக கொண்டாடப்படுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் இருக்கும் அரைகுறை வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த வகுப்புக்கான பாடத்தை அந்த ஒரு வருடத்தில் மட்டுமே படித்து பரிட்சை எழுதுகிற மாணவன் அறுபதோ எழுபதோ மதிப்பெண்கள் பெற்று தகுதி குறைந்தவனாக புறந்தள்ளப்படுகிறான்.

இப்போது நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, ஒரேபாடத்தை இரண்டு வருடம் படித்தவன் திறமைசாலியா அல்லது ஒரே வருடத்தில் படித்தவனா? இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பார்வையில் என்ன தகிடுதத்தம் செய்தேனும் அதிக மதிப்பெண் எடுத்தவன்தான் திறமைசாலி, அவன்தான் மருத்துவராகவோ பொறியாளராகவோ விஞ்ஞானியாகவோ வருவதற்கு தகுதியானவன். இப்படி இட்டுக்கட்டிய தகுதியும் திறமையும் நமக்குத் தேவையில்லை. அந்த அரசாங்கப் பள்ளி மாணவனின் திறமைதான் இந்த நாட்டின் உண்மையான சராசரித் திறமை. இந்த நாட்டு மக்களின் சராசரி அறிவுக்கும் திறமைக்கும் மீறிய தகுதியோ திறமையோ ஒருவனுக்கு இருக்குமானால் அது இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கமுடியாது என்பதற்கு இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடியவர்களே உதாரணம். அவர்கள் இந்த நாட்டுக்கு பெரும்பாலும் பயன்படுவதில்லை. டாலர் பிச்சைகளாக ஓடிவிடுகின்றனர். (இந்த உயர் கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கிறவர்கள் பத்தாண்டு காலம் வெளிநாடு செல்லக்கூடாது, உள்நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என்று சட்டம் வருமானால் தேசம் பற்றி பேசும் இவர்களின் வாய் எந்தத் திசையில் கோணிக்கொள்ளும் என்பது அப்போது தெரியும்)

நகர்ப்புற/ வசதியான மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் கிராமப்புறத்திலிருந்து வருகிற பிற்பட்ட/தாழ்த்தப்பட்ட/பழங்குடி மாணவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. இந்த இடைவெளி ஒருவரது சாதி, சாதிக்கேற்ற பொருளாதார மற்றும் கல்வி பின்புலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இடஒதுக்கீட்டை வெறும் பொருளாதாரப் பிரச்னையாகவோ அல்லது வெறும் சாதிப் பிரச்னையாகவோ மட்டும் குறுக்கிப் பார்க்கக்கூடாது. சாதி அடிப்படைக்குப் பதிலாக பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வந்தால் ஏற்றுக் கொள்வதாக குறுக்குசால் ஓட்டுகிறவர்களும் உண்டு. ஓரிரு மதிப்பெண் குறைவாகப் பெற்றவர் சாதி அடிப்படையில் உள்ளே வந்தால் தகுதி குறைந்துவிடும் என்றும் அவரே பொருளாதார அடிப்படையில் வந்தால் தகுதி குறையாது என்றும் விந்தையான வாதத்தை முன்வைக்கின்றனர். சாதி அடிப்படை ஒதுக்கீட்டை எதிர்க்கும் இவர்கள், என்.ஆர்.ஐ கோட்டாவையோ தனியார் கல்லூரிகளில் நடக்கும் ஏலத்தில் படித்து வந்தவர்களையோ பற்றி வாய் திறப்பதில்லை. கோட்டா முறையே கூடாது என்று கொக்கரிக்கும் ஏஐஐஎம்எஸ்-சில் இளநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை படிப்பில் 25 சதமாக இருக்கும் கோட்டா குறித்தும் மௌனம் காக்கின்றனர்.

இடஒதுக்கீட்டின் மூலம் வருகிறவர்களால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று தம் பங்குக்கு இந்திய முதலாளிகளும் குதிக்கின்றனர். தாராளமயத்தின் விளைவால் இந்திய சந்தைக்குள் நுழையும் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களுக்கு அனுசரனையான ஆடுகளம் (Level playing field) வேண்டும் என்று கோரினர் இந்திய பெருமுதலாளிகள். அதாவது உலகம் முழுவதும் சுரண்டி கொழுத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றிபெற (கொள்ளையடிக்க) முடியாத நிலையில் இருக்கும் இந்திய தொழில்துறையைக் காப்பாற்ற ஒரு இடஒதுக்கீடு தேவை என்பதே இதன் உட்பொருள். முன்னூறாண்டு காலம் காலனிய ஆட்சியின்கீழ் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் ஆளுமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்ளும் முன்பே தன்னை ஒடுக்கியவர்களோடு போட்டியிட வேண்டும் என்பது நெறியற்ற போட்டியாகும். எனவே இவர்களைப் பாதுகாக்க சில சிறப்பு ஏற்பாடுகளும் வலுத்தவர்கள் மீது சில கட்டுப்பாடுகளும் தேவைப்பட்டன. உள்நாட்டுத் தொழில்பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்தில் இந்திய முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை, கடனுதவிகள், மானியங்கள் அனைத்தும் ஒருவகையான இடஒதுக்கீடுதான்.

‘எங்களுக்குத் தகுதியும் திறமையும் இருக்கிறது. போட்டியில் வென்றால் களத்தில் இருப்போம், தோற்றால் வெளியேறி விடுகிறோம்’ என்று வெத்துச்சவடால் விடவில்லை இந்திய முதலாளிகள். சமமான வாய்ப்புள்ளவர்களுக்கிடையே தான் போட்டி நடைபெறவேண்டும், வலுத்தவனுக்கும் இளைத்தவனுக்கும் இடையே நடந்தால் தாம் அழிக்கப்பட்டுவிடுவோம் என்ற நியாயமான அச்சத்தில் கோட்டா கேட்டனர். பெற்றனர். முதலாளிகளை தமது ஓட்டு வங்கியாக ஆக்கிக்கொள்வதற்காக இப்படியான ஒதுக்கீடுகள் செய்யப்படுவதாக ஒருவரும் பேசுவதில்லை. சலுகை கொடுத்தால் உற்பத்தியின் தரம் குறைந்துவிடும் என்று யாரும் ஓலமிடவில்லை. ஆனால் உயர்கல்வியில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டால், எல்லோரும் சமம், திறமையிருக்கிறவன் ஜெயிக்கட்டும் என்று இந்திய முதலாளிகள் புதுநீதி பேசுகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் போட்டியிட வேண்டிய நெருக்கடியை உலகமயமாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்போட்டியை எதிர்கொள்ளத் தேவையான தகுதியும் திறமையும் ஆற்றலும் இடஒதுக்கீட்டினால் பாதிக்கும் என்பதாலேயே எதிர்ப்பதாக முதலாளிகள் விளக்கமளிக்கின்றனர். அப்படியானால் இடஒதுக்கீடு என்பதே அமலாகாத இந்த தனியார் தொழில்துறையில் ஏன் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன? இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் தகுதியும் திறமையும் என்ன? முறையான கல்வியும் பயிற்சியும் பெற்ற நிரந்தர ஊழியர்களை சொற்பமாகவும், போதிய கல்வித் தகுதி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பெரும்பான்மையாகவும் வைத்துக்கொண்டுதானே உற்பத்தி செய்கின்றனர்? சர்வதேச தரச்சான்றிதழுடன் சந்தைக்குள் புழங்கும் பல நூற்பாலைகளில் எத்தனை பேர் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்கள்?

வறுமைக்காளான பகுதிகளிலிருந்து கொத்தடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களை ‘சுமங்கலித் திட்டம்’ என்ற பெயரால் ஆலை வளாகத்திற்குள்ளேயே அடைத்துவைத்து வேலைவாங்குகிற அயோக்கியத்தனத்தில் என்ன தகுதியும் திறமையும் வழிகிறது? உதிரி பாகங்கள் முழுவதையும் அவுட்சோர்சிங் வழியாக பெறுகின்ற முதலாளிகள் அங்கே தகுதிக்கும் திறமைக்கும் என்ன அளவுகோல் வைத்திருக்கின்றனர்? சந்தையில் விற்கிற சர்வதேச தரச்சான்றிதழ்களை வாங்கி மாட்டி வைத்துக்கொண்டு அதில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நியதிகளுக்கும் எதிராக இயங்கும் இந்திய முதலாளிகள் தகுதி திறமை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்.

இடஒதுக்கீடு அமலாகும் அரசுத்துறைகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே காலியிடத்தின் எண்ணிக்கை பூஜ்ஜியமே. அந்த பூஜ்ஜியத்தில் எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினாலும் என்ன பலன்? எனவேதான் சமூகத்தின் பொதுவளங்களை உறிஞ்சி வளரும் தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஒருவேளை இடஒதுக்கீடு இங்கு வருமானால், வேலைக்கு அமர்த்துவதும் துரத்துவதும் தனது முற்றுரிமையாக இருந்துவரும் நிலை நீடிக்காது என்று அஞ்சுகின்றனர் முதலாளிகள். முதலாளியின் தயவினால் அல்லாமல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையின் அடிப்படையில் வேலையில் சேர்வதாய் நினைக்கின்ற ஒரு தொழிலாளி, தங்களது சட்டமீறல்களை சகித்துக்கொள்வானா... தமக்கு அடங்கி நடப்பானா என்பதே இந்த அச்சத்தின் உட்பொருள். தமது சுரண்டலுக்குத் தடையாய் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தையும் அனேகமாக ஒழித்துக் கட்டிவிட்ட நிலையில் புதிதாக வரும் எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதும்கூட அவர்களது எதிர்ப்பிற்கு காரணமாய் உள்ளது. எனவே தான் உயர்கல்வியில் இடஒதுக்கீடு எதிர்ப்பு/ரகளைக்கு இந்திய முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

Top of Form
V

முதலில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்றவர்கள் நடப்பிலிருக்கும் அனைத்து இடஒதுக்கீடு ஏற்பாடுகளையும் மறுபரிசீலனை செய்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 60 ஆண்டுகாலமாக நடப்பில் இருக்கும் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது, இனியும் தாமதிக்கக்கூடாது என்று அத்வானி சொன்னதை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும். மூவாயிரம் ஆண்டுகளாக நாட்டின் வளங்களையும் அதிகாரத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்தவர்கள் அதில் ஒரு சிறு பங்கை இழந்ததற்கே இத்தனை கூப்பாடு. பௌத்த மன்னர்களின் கீழ் இழந்த தனித்துவத்தை மீட்பதற்கு கொலைவாளேந்திய புஷ்யமித்ர சுங்கன் என்னும் பார்ப்பனன் கண்ணில் தெறித்த வெறி இன்னும் அடங்கவில்லை.

இவ்வளவு முட்டியும் இடஒதுக்கீட்டைத் தடுக்க முடியாத நிலையில் இப்போது கிரீமி லேயர் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இடஒதுக்கீட்டின் பலன்களை வசதியானவர்களே வளைத்துக் கொள்வார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். இடஒதுக்கீட்டில் யாருக்கு முன்னுரிமை என்று முடிவெடுப்பது இடஒதுக்கீட்டின் பயனாளிகள் உரிமை. அதிலும் தலையிடுவதும், தாங்கள் சொல்கிறவர்களுக்கே தரவேண்டும் என்பதும் அப்பட்டமான ஆதிக்கசாதி கொழுப்பு.

உண்மையில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதே பெரும்பாலான பார்ப்பனரல்லாத சாதியினருக்குத் தெரியாது. (அதை Iyer iyenkar technology என்று புரிந்துகொண்டு ஒதுங்கியவர்களும் உண்டு.) எனவே அவர்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை. இந்த சாதியினரிலேயே ஓரளவேனும் படித்து வேலையிலிருக்கிற ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்குத்தான் இந்த விவரத்தையெல்லாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தவிரவும் இப்படியான உயர்படிப்புகளுக்கு தன் பிள்ளையை தயார்படுத்தத் தேவையான தொகையை (குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம்) செலவழிக்கவும்கூட அவர்களால்தான் முடியும். ஆனால் அவர் கிரீமி லேயராகி வெளியே நிறுத்தப்பட்டுவிடுவார். சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் சவரத்தொழிலாளர் அல்லது சலவைத்தொழிலாளர் குடும்பத்திலிருந்து தக்கிமுக்கி ஒருவர் படித்து ஒரு இடைநிலை ஆசிரியராகி, அதே வேலையிலிருப்பவரை திருமணம் செய்து கொள்வாரெனில் அவர்களிவரும் அன்றிலிருந்தே கிரீமிலேயராகிவிடுவார்கள். எனில் ஒதுக்கீடு வந்தாலும் தகுதியான மாணவர் இல்லை என்று அவர்களுக்கான இடங்கள் நிரப்பப்படாத நிலை ஏற்படும். இந்த தந்திரத்தின் தொடர்ச்சியாகத்தான், பூர்த்தியாகாத கோட்டா இடங்களை பொதுஇடமாக அறிவித்து நிரப்பவேண்டும் என்று அசமத்துவத்திற்கான இளைஞர் குழு கோரியது. உச்ச நீதிமன்றமும் இதையே தீர்ப்பாக கூறியுள்ளது.

நடப்பிலுள்ள அனைத்து கோட்டா முறைகளையும் மறுபரிசீலனை செய்து ஆண்டுக்கு 2 சதவீதம் குறைத்துக் கொள்ளவேண்டுமென்றும், தகுதியானவர்கள் இல்லாமல் ஏற்படும் காலி இடங்களை பொதுஇடமாக அறிவிக்க வேண்டுமென்பதும் யூத் பார் (இன்)ஈக்வாலிட்டியின் அடுத்த கோரிக்கை. உச்சநீதி மன்றம் மிகுந்த பெருந்தன்மையோடு ஐந்தாண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்குமாறு பணித்துள்ளது.

இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு சமூகநீதிக் கோட்பாட்டையும் அதன் சாதனைகளையும் ஒரு நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான கடைசி அஸ்திரத்தை நீதிமன்றங்களுக்குள் ஒளிந்துகொண்டும் எய்கிறார்கள். வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்பரெட்டி என்று விதிவிலக்காய் ஓரிருவர் இருந்த காலங்கள் தவிர்த்து அனேகமாக மற்றெல்லா நேரங்களிலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனோபாவத்தை வெளிப்படுத்துவதை வழக்கமாய் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். யூத் பார் (இன்)ஈக்வாலிட்டி உறுப்பினர்கள் கோருவதெல்லாம் தீர்ப்பாக வருமெனில், பூணூலால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக நாட்டின் எல்லா அமைப்புகளும் தன்னுணர்விலேயே மாறிக் கிடக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பெரியார் மொழியில் கேட்பதெனில் அது உச்ச நீதிமன்றமா உச்சிக்குடுமி மன்றமா? யூத் பார் (இன்) ஈக்வாலிட்டியின் வழக்கறிஞர் பிரிவைப்போல நீதிமன்றங்கள் கீழிறங்கி வரக்கூடாது என்ற நமது பேராசையில் வண்டிவண்டியாய் மண்விழுகிறது.

பார்ப்பனிய ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபங்கீடு செய்வதற்கான தொடக்க முயற்சியே இடஒதுக்கீடு. இது விரிவடைந்து செல்லவேண்டிய தளங்கள் அனேகம் உண்டு. இடம் என்பதை வெறுமனே கல்வி வேலைவாய்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாட்டின் இயற்கைவளங்களான நிலம்- நீர் நிலைகள், பொது சொத்துக்களான கல்வி நிலையங்கள்- சாலைகள்- போக்குவரத்து வாகனங்கள்- மின்சாரம்- தகவல் தொடர்பு சாதனங்கள்- மருத்துவமனைகள், நிதிநிறுவனங்களான வங்கிகள்- காப்பீடுகள், ஒப்பந்தங்கள், பண்பாட்டுக் கூறுகளான கலை இலக்கியம், பண்டிகைகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் இடமாக வரையறுக்கப்பட்டு அவை ஒரு நீதியானமுறையில் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய நிலையில் ஒரு உடைப்பை ஏற்படுத்த நிலச்சீர்திருத்தம் தேவை என்னும் இடதுசாரிகள் கருத்தையே மண்டல் குழுவும் பரிந்துரைத்திருப்பது குறித்து சமூகநீதி ஆர்வலர்கள் கவனங்கொள்ள வேண்டும்.

இடஒதுக்கீடு என்றாலே அது தலித்களுக்கானது என்றெண்ணி அவர்களை கோட்டா பிள்ளைகள், கவர்மெண்ட் மாப்பிள்ளைகள் என்று ஏளனம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் இப்போதாவது தெளிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிற தாங்களும் கோட்டா பிள்ளைகளே என்பதையும் அது இழிவானதல்ல என்பதையும் உணரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை சமமாக கருதுவதற்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்கள் என்னென்ன காரணங்களை முன்வைத்தார்களோ அதே காரணங்களைச் சொல்லித்தான் பார்ப்பனர்கள் இன்று பிற்பட்டோரை இழிவுபடுத்துகின்றனர். பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர், குற்றப்பரம்பரையினர் என்ற வகைப்பாட்டிற்குள் நின்று இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்துக் கொண்டே தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். இந்த ரட்டைக்குதிரைச் சவாரி ஆசை நிச்சயமாக இலக்கையடைய உதவாது.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.

சாதி என்கிற வெற்றுக் கற்பிதத்தை முன்வைத்து ஒவ்வொரு சாதியும் மற்றவர்களை ஒடுக்கும் மனநிலைக்கு இந்திய சமூகத்தை ஆட்படுத்தியது மனுநீதி என்றால், அதன் கேடுகள் யாவற்றிலிருந்தும் விடுபடுவதற்கான முன்னிபந்தனையாக இடஒதுக்கீட்டை வலியுறுத்துவது சமூகநீதியாகும். மனுநீதிக்கும் சமூகநீதிக்கும் இடையேயான போராட்டத்தில் நீ எந்தப்பக்கம் என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் யாரும் தப்பித்துவிட முடியாது. இருதரப்பிலும் சில நியாயங்கள் இருப்பதாகப் பேசுகிறவர்கள், இருதரப்புக்கும் பாதகமில்லாமல் தீர்வு சொல்வதாய் பல்லிளிப்பவர்கள், ‘ஆனால்...’ என்று இழுக்கிறவர்கள் எல்லோரும் முன்வைக்கும் வாதங்கள் தவிர்க்க முடியாமல் இடஒதுக்கீட்டை மறுப்பதாகவே இருக்கின்றன. இருக்கும் இடங்களில் ஒதுக்கீடு என்பதை ஒப்புக்கொள்ளத் தயாரில்லாத சாதிவெறியர்களை சமாதானப்படுத்தும் கேடுகெட்ட முயற்சியாக உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனைகளும் வெளிவருகின்றன.

இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.

இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் வைக்கும் வாதங்களுக்குள் மறைந்திருக்கும் ஆதிக்க சாதி வெறியை அம்பலப்படுத்தவும், சமூகநீதிக் கோட்பாட்டை சமரசமின்றி செயல்படுத்துமாறு அரசை நிர்ப்பந்திக்கவும் தேவையான கருத்தியல் போராட்டம் எல்லா முனைகளிலும் வீறுடன் நடத்தப்பட வேண்டும். ஒத்தக் கருத்துள்ளவர்களை திரட்டவும் உடன்படாதவர்களோடு விவாதிக்கவும் இணக்கம் கொள்ளவைக்கவும் நடத்தவேண்டிய இப்போராட்டத்திற்கான தத்துவ பலம் மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளில் பொதிந்திருக்கிறது.

சனி, ஏப்ரல் 18

சூரியனின் கடைசி கிரணம் முதல் சூரியனின் முதல் கிரணம் வரை




நான் சமீபத்தில் வாசித்தவற்றில் மிகவும் பிடித்த புத்தகம் சூரியனின் கடைசி கிரணம் முதல் சூரியனின் முதல் கிரணம் வரை என்கிற நாடகப் பனுவல். சுரேந்திர வர்மா என்பவரால் 1978 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாடகத்தை சரோஜாவும் வெ.சாமிநாதனும் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இரண்டு பதிப்புகளை கண்டுள்ளது. ( நான் இப்போதுதான் படித்திருக்கிறேன்)

மல்ல நாட்டின் அரசன் ஒக்காக். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட அவன் குருகுலத்தில் தங்கி பயின்றவன். கூச்ச சுபாவமும் உள்ளொடுங்கும் தன்மையும் ஒதுங்கும் மனநிலையும் கொண்டவன். அரசனாக முடிசூட்டப்பட்டதற்குப் பிறகு அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. பெண்ணைப் பற்றிய நினைப்பு தனக்கு உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ எத்தகைய கிளர்ச்சியையும் உருவாக்கவில்லை என்று அரண்மனை வைத்தியரிடம் தெரிவிக்கும் ஒக்காக் தனக்கு திருமணத்தில் நாட்டமில்லை என்கிறான். ஆனாலும் சீலவதி என்கிற ஏழைப்பெண் அவனுக்கு மணமுடிக்கப்படுகிறாள். முதலிரவில் தன் பிரச்னையை அவளிடம் முறையிடுகிறான். அவனை அவனது குறைபாட்டுடன் ஏற்றுக்கொள்கிறாள் சீலவதி. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு புதிய பிரச்னை உருவாகிறது. ராஜகுரு, முதன்மந்திரி, படைத்தளபதி ஆகியோர் மன்னனையும் அரசியையும் சந்தித்து அரண்மணையின் அடுத்த வாரீசை அறிவித்தாக வேண்டிய கட்டம் இது. அரசமரபை காப்பாற்ற வேண்டியது உங்களது கடமை என்கின்றனர். தனது இயலாமையை பரிகாசம் பண்ணுவதற்காகவே அவர்கள் இவ்வாறு வற்புறுத்துவதாக எண்ணி அரசன் குமைகிறான். ஒரு வாரீசை உருவாக்குவதற்கு அரசனுக்கு முடியாத பட்சத்தில் அரசியானவள் மாற்றுக்கணவன் ஒருவனை தேர்ந்தெடுத்து வாரீசை பெற்றுத்தருவதுதானே வழக்கம் என்கிறார்கள். ஏற்க மறுக்கும் தம்பதிகளிடம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் அண்டை நாடுகள் பலவற்றிலும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட ஓர் ஏற்பாடுதான் இது  என்று கூறி இணங்கவைக்கிறார்கள். முரண்டு பிடிக்கும் அரசியிடம், இப்போது நீ அரசி அல்ல, கடமைப்பாவை. அர்ச்சுனனின் கண்ணுக்கு மீனின் கண் என்ற இலக்கு மட்டுமே தெரிந்தது போல, அரண்மனைக்கு ஒரு வாரீசைப் பெற்றுத்தர வேண்டும் என்கிற இலக்கை மட்டுமே மனதில் இருத்திய கடமைப்பாவை என்கின்றனர்.  

நாடு முழுவதற்கும் அறிவிப்பு செய்து மல்ல நாட்டு ஆண்கள் அனைவரும் அரண்மனைக்கு வெளியே இருக்கும் திடலில் குவிக்கப்படுகிறார்கள். அந்த நாளில் சூரியனின் கடைசிக்கிரணம் மறையும்போது அரண்மனையை விட்டு அரசி வெளியேறுவதிலிருந்து நாடகம் தொடங்குகிறது. அவர்களில் ஒருவரையும் அரசிக்குப் பிடிக்கவில்லை. இறுதியில் தாமதமாக வந்துச் சேர்கிற பிரசாதன் என்பவனுக்கு வெற்றிமாலை சூட்டி அவள்  மாற்றுக்கணவனாக தெரிவு செய்கிறாள். அரசனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்ததால் அவளால் துறக்கப்பட்ட காதலன்தான் அவன். அரண்மனைக்கு எதிரில் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட மாளிகையில் அவனுடன் தங்கி  மறுநாளின் அதிகாலையில் சூரியனின் முதல்கிரணம் உதிக்கும்போது அரண்மனைக்குத் திரும்புகிறாள். சென்ற காரியம் ஜெயம் தானே என்று கேட்கிறார்கள் அரண்மனைவாசிகள். எனக்கு நீங்கள் தருவதாகச் சொன்ன மூன்று வாய்ப்புகளையும் நான் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன் என்கிறாள். அரண்மனை அலறுகிறது. அவள் சற்றும் பதற்றமின்றி தன்னை, தன் உடலை, இதுகாறும் அடக்கிவைத்திருந்த இயல்பான உணர்ச்சிகளை இந்த இரவில் தான் மீட்டுக் கொண்டதாக கூறுகிறாள். பாலினச் சமத்துவம், உடலரசியல் என்றெல்லாம் இன்று பேசப்படும் அரசியலின் உச்சநிலையை அவள் பேசுகிறாள். அரசனும் அவனது அணியினரும் அவளது கேள்விகளுக்கு பதிலற்று   நிற்பதோடு நாடகம் முடிகிறது. 

எழுத்தாளர்களும் கலைஞர்களும் யாரையும் இழிவுபடுத்துவதற்காக தங்களது ஆக்கங்களை உருவாக்குவதில்லை. ஏற்கனவே இருந்த நிலைமைகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சமூகம் கடந்துவந்த மாற்றங்களை கவனப்படுத்துகிறார்கள். வரலாற்றை அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே ஏற்றுக்கொண்டு கடக்கத் துணிகிறவர்கள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் கடந்தகாலத்தையும் கண்டு அஞ்சமாட்டார்கள்.  அவ்வாறான உயர்ந்த ஜனநாயகப்பண்பை நாம் வெளிப்படுத்த வேண்டிய காலமிது. 

- ஆதவன் தீட்சண்யா 
நன்றி: விகடன், இன்று ஒன்று நன்று


இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...