முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? - ஆதவன் தீட்சண்யா


(‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்)
சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட பலம் என்னன்னு விலாவாரியா விளங்கவைக்கிற டிவி விவாதங்களை அன்றாடம் அலசிப் பார்த்து, வாக்காளர்களை வென்றெடுக்க கையாள வேண்டிய பிரச்சார உத்திய நான் ஆதரிக்கிற கூட்டணிக்கு தெரிவித்து அதைப்பற்றி நல்லவிதமா நாலுவார்த்தையும் மற்ற கூட்டணி ஆளுங்க வைக்கிற விமர்சனம் அவதூறுகளுக்கெல்லாம் பொளேர்னு பதிலடியும் எழுதி, தளி ராமச்சந்திரன் தொடர்பான கேள்விக்கு மழுப்பலா பதில் சொல்லி, வைகோ பேசியதையும் விஜயகாந்த் பேசாததையும் கூட்டணிதர்மத்துக்காக(?) சகிச்சுக்கிட்டு, வேட்புமனுத்தாக்கல் தொடங்கி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்வரை தொகுதிவாரியா கண்காணிச்சு எங்கே யார் ஜெயிக்கப்போறாங்கன்னு ஞாபகம் வச்சிக்கிட்டு, அஞ்சுப்பைசாவுக்கு பெறுமானமில்லேன்னாலும் அலட்டலா வெளியாகும் தேர்தல் அறிக்கைகளைப் படிக்காமலே படிச்சி விளங்கிக்கிட்ட பாவனையோட ஆதரிச்சும் எதிர்த்தும் அபிப்ராயம் தெரிவிச்சு, பொதுக்கூட்டத்துக்கு வர்ற சனங்களை ஓட்டாக நம்பி ஏமாறப்போகிறவர்களின் முகத்தின் விகாரத்தை அச்சமில்லாம கற்பனை செய்து, நடுநிலையாளர்னு சொல்லுறவங்க போட்ட நாடகத்தை நக்கலடிச்சு, பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிரா கண்டனம் முழங்கி, தேர்தலுக்கு முந்தின கருத்துக் கணிப்புகளோட உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, பணப்பரிவர்த்தனையைத் தடுக்கப்போவதாக கடைசி சிலநாட்களில் பறக்கும் படை நடத்திய ஜோடனைகளை ஸாரி சோதனைகளை குற்றம்சாட்டி, பிடிபட்ட கண்டய்னர்ல 570 கோடிதான் இருக்குமா - அதுக்கு எதுக்கு மூணு கண்டெய்னர்- மூணு கண்டெய்னருக்கும் மொத்தம் எத்தனை சக்கரம்- யாருக்காக யார் கொடுத்தனுப்பினதுன்னு அடுக்கடுக்கா ச்சும்மா அஸ்திரமாட்டம் கேள்வி எழுப்பி, அரவக்குறிச்சியும் தஞ்சாவூரும் மட்டுமல்ல தமிழ்நாட்டுத்தேர்தலையே தள்ளி வைக்குமளவுக்கு நடந்திருக்கும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு, கள்ள ஓட்டு விழாமல் தடுக்க வாக்குச்சாவடிக்குள் பலப்படுத்த வேண்டிய பாதுகாப்பு - கண்காணிப்புகளோட போதாமையைச் சுட்டிக்காட்டி, வாக்குப்பதிவு முடிந்தும் முடியாமலிருக்கறப்பவே வெளியாகப்போகும் ஏழெட்டு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள்ல யார்யாருக்கு எவ்வளவு  இடங்கள் கிடைக்கும்னு கணிப்பது-ன்னு ராப்பகலா ஓய்வொழிச்சல் இல்லாமல் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து ‘ஓட்டுப்போடவாவது பூத்துக்கு வருவீங்களா இல்லே அதையும் ஃபேஸ்புக்கிலியே போட்டுருவீங்களா?’ன்னு கேட்டார். அடடா தேர்தல் வந்தே வந்திடுச்சா, பூத்தை மூடுறதுக்குள்ள ஓட்டுப் போடணுமேன்னு கம்ப்யூட்டரையும் மத்ததையும் மூடிப்புட்டு ஓடுறப்பதான், வூட்ல இருக்குற மீனாக்கிட்டயும் தீட்சண்யாக்கிட்டயும் கூட எங்கக் கூட்டணிக்கு ஓட்டுப்போடச் சொல்லி கேட்கவேயில்லைங்கிற விசயம்  ஞாபகம் வந்துச்சு. உட்கார்ந்த்தைவிட்டு டிகூராஎல்லாமே நாவிரும்றாப்ல டக்கும்னு மிதப்புல கிடந்தைப் பற்றி இனி யோசிச்சு என்ன பண்ண?

தேர்தல்ல எங்கக் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்கல. கிடைக்காதுன்னு முன்னமே சொன்னப்ப அவநம்பிக்கைவாதின்னு தோழர்கள் சிலர்ட்ட திட்டு வாங்கினேன். நான் அவநம்பிக்கையில சொல்லல, கள நிலவரத்தைத்தான் சொன்னேன். விடுங்க, தோழர்கள் திட்டுறதெல்லாம் ஒரு திட்டா?  போட்டியிட்ட எல்லாருமே யோக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களாயிருந்தாலும் 232 பேரைத்தான் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஜெயிச்சவங்களையெல்லாம் ஏதோ தியாகிகள்னோ தொண்டால் பொழுதளந்த தூயவர்கள்னோ மக்கள் தேர்ந்தெடுக்கல. தோத்துப் போனவங்களையெல்லாம் துரோகிகள், பொது வாழ்க்கைக்கே லாயக்கில்லாதவங்கன்னும் மக்கள் தீர்ப்பளிக்கல. தேர்தலுக்கு அப்பாலும் சேர்ந்து வேலை செய்ய எத்தனையோ களங்கள் இருக்கு. ஆனாலும் தேர்தலுக்காக ஒருத்தருக்கொருத்தர் எதிரிகளாட்டம் அடிச்சுப்புரண்டு அவதூறு பேசி அவமரியாதை பண்ணிக்கிட்ட நண்பர்கள் பலபேர் இன்னும் மூஞ்சத் திருப்பி முதுகுகாட்டி நின்னுக்கிட்டிருக்க, தேர்தல் முடிஞ்சக்கையோட செயலலிதாவும் சுடாலினும் அக்கா தம்பியாயிட்டாங்க. ( பாவம், ஸ்டாலினுக்கு வாய்த் கோரிளெல்லாம் சிறைசென்று மீண்செம்மல்ளாவே இருக்காங்க.) போகிறப்போக்கைப் பார்த்தா அண்ணா அறிவாலயத்துல அதிமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் போயஸ் தோட்டத்துல திமுகவுக்கு ஒரு கிளை அலுவலகமும் திறந்து ஏ டீமும் நாங்கதான், பீ ( அதாவது இங்கிலீஷ் பீ ) டீமும் நாங்கதான்னு சொல்லிருவாங்க போல.

சரி ஆனது ஆச்சு போனது போச்சுன்னு மனசைத் தேத்திக்கிட்டு உஸ்ஸோன்னு தலைசாய்ச்சு கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்னா இந்தா உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுதுன்றாங்க. அதுக்கும் இதேமாதிரி மல்லுக்கட்டி மாரடிச்சா மக்கியாநாளே கூட்டுறவு சொசைட்டிக்கு தேர்தல் அறிவிப்பாங்க. கூட்டுறவே நாட்டுயர்வுன்னு நம்மக்கிட்ட சொல்லிட்டு ஆளுங்கட்சியே அம்புட்டயும் அமுக்கியெடுத்துக்கும்னு தெரிஞ்சாலும் நாம் சும்மா இருப்பமா? மெம்பராகவே விடாத சொசைட்டித் தேர்தலுக்கும் மெனக்கெடுவோம். அப்பறமென்ன அடுத்து அஞ்சாறு மாசத்துல நாடாளுமன்றத் தேர்தல். வூட்ல தெருவுல ஊர்ல ஒழிக்கமாட்டாம திமுதிமுன்னு வளர்ந்து நிக்கிற வகுப்புவாதத்தை தேர்தல்ல முறியடிக்கிற கடமை நம்மை ஊஊன்னு ஊளையிட்டு அழைக்கும். இப்படி ஒன்னு மாத்தி இன்னொன்னுன்னு தொடர்ந்து தேர்தல் வேலை பார்ப்பதையே அரசியல் வேலையா சுருக்கிக்கிட்டுப் போனால், வர்க்க அரசியலுக்கும் சாதியொழிப்பு அரசியலுக்குமான வேலையை எப்போதான் செய்யறதுன்னு எக்கச்சக்க கவலையாயிடுது. சரி தேர்தல்ல பங்கெடுக்குற கட்சியில இருக்கிறதால தான் நமக்கிந்த உளைச்சல், தேர்தல்பாதையை நிராகரிச்சு டைரக்டா ஆயுதப் புரட்சி மூலமா அதிகாரத்தைக் கைப்பற்ற போறதா சொல்றவங்க என்ன செய்யறாங்கன்னு எட்டிப் பார்த்தா அங்கே இதுக்கு மேல ஏறுமாறு. பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது இருக்கட்டும் ஒரு பஞ்சாயத்து ஆபிஸையாவது இன்னையவரைக்கும் கைப்பத்தியிருக்காங்களான்னு பார்த்தா அதுவுமில்ல.

இனிமே கவுன்சிலர் தேர்தலுக்கே கன்டெய்னர்ல பணம் இறங்கும்கிற நிலைமையில, நம்மைத் தோற்கடிக்கிறதுக்காகவே ஆதிக்கச்சாதிக்காரர்கள் மொத்தப்பேரும் ஈயும்பீயுமா ஒண்ணு சேர்ந்திருக்கிற நிலையில இனிமேல் தேர்தல்ல நம்மால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு கம்யூனிஸ்ட் கட்சிகளோ அம்பேத்கரிய இயக்கங்களோ சோர்வடையறதுக்கு ஒண்ணுமில்லை. ‘திராவிட’ என்கிற சொல்லை பேர்ல வச்சிருக்கிற கட்சிகள்ல அந்த சொல்லோட வரலாறும் அரசியலும் தெரியாமலே இப்போது இருக்கிற பலபேருக்கும், தங்கள் சாதியோட வரலாறு தெரியாமலே ஆண்ட பரம்பரை பெருமிதம் பேசுகிற கட்சிகள்ல அங்கம் வகிக்கிறவங்களுக்கும் தேர்தல்தான் முதலும் முற்றுமான அரசியல் வேலை. ஆனா வர்க்க அரசியலையும் சாதியொழிப்பு அரசியலையும் உள்வாங்கி அதுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளிலோ அம்பேத்கரிய இயக்கங்களிலோ இருக்கிறவங்களுக்கு அன்னாடம் நடத்துற ஆயிரமாயிரம் போராட்டங்கள்ல தேர்தல் போராட்டமும் ஒண்ணுங்குற புரிதல் இருக்கும். அந்தப் புரிதல் இந்தக் கட்சிகள்ல இருக்கிற எல்லாருக்கும் இருக்கா? இல்லேன்னா அதுக்கு காரணம் என்னங்கிறதும் இதோடு சம்பந்தப்பட்ட கேள்விங்கதான்.  

நாம் தீண்டாமைச்சுவரை இடிக்க உத்தபுரத்துக்கு ஓடணும், தருமபுரிக்கு ஓடி நெருப்பை அணைக்கணும், ரயில் ரோட்டுல பொணமாக் கிடக்குற நம்ம வீட்டுப் பையன்களை ஒப்பாரியும் ஓலமுமா தூக்கிக்கிட்டுப் போய் புதைக்கணும், அவங்களை கொன்னவங்க சுமத்துற அபாண்டங்களுக்கு பதில் சொல்லணும், பெற்ற பிள்ளைகளை சாதி ஆணவத்துல கொல்லுறவங்களுக்கு எதிரா கோர்ட்டுல வழக்காடணும், புருசனைக் கொல்லக் கொடுத்துட்டு கலங்கி நிற்கிற கௌசல்யாக்களுக்கு ஆறுதல் சொல்லணும், தேர் எரியறப்ப கடவுளையும் காப்பத்தணும். அழுகை அங்கலாய்ப்போட அன்னாடம் எழவு வூட்லியே இருந்துட்டு தேர்தல் வந்ததும் கண்ணைத் தொடைச்சும் தொடைக்காமா ஓடிப்போய் போட்டியிட்டா என்ன கிடைக்குமோ அதுதான் கிடைச்சிருக்கு.

வெள்ளாமை அழிஞ்சாலும் விலைவாசி ஒசந்தாலும் நம்மை விட்டா போராட யார் இருக்காங்க. தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், பெண்கள், மதச்சிறுபான்மையினர்னு சமூகத்தோட எந்த அடுக்கு பாதிச்சாலும் அதுக்காகப் போராடி களத்திலிருந்தோ கைதாகி சிறையிலிருந்தோ வந்து தேர்தலில் போட்டியிடறோம். இப்படியெல்லாம் போராடுறதாலேயே சனங்க நமக்கு ஓட்டுப் போட்டுருவாங்கன்னு எதிர்பார்க்க முடியுமா? தங்களுக்காக போராடிக்கிட்டிருக்கிற இவங்களையும் ஜெயிக்க வச்சு சட்டமன்றத்துக்கு அனுப்பிட்டா நமக்காகப் போராட யாருமே இல்லாமப் போயிடுவாங்கன்ற தற்காப்பு உத்தியில் சனங்க நம்மைத் தோற்கடிச்சிட்டதாகவும் அப்பாவித்தனமா நினைச்சிக்க வேண்டியதில்லை. தலித், இடதுசாரி கட்சிகளோட பிரதிநிதிகள் இல்லைங்கிறதுக்காக தமிழ்நாடு சட்டமன்றம் அப்படியே இடிஞ்சு விழுந்துடும்னோ பாராளுமன்ற ஜனநாயகமே பாழாகிப்பூடும்னோ நாம கவலைப்படத் தேவையில்லை. அப்படியே விழுந்தாலும் அதனால் மக்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்துவிடும்?

இயற்கைவளத்தைக் கொள்ளையடிக்கவும் பொதுச்சொத்துகளை வளைச்சுப் போடவும் மக்கள்விரோதத் திட்டங்களை செயலாக்கவும் கூட்டாளிகளா இருக்கிற கட்சிகளை சட்டமன்றத்துக்கு உள்ளே வச்சு  முடக்கியிருக்கிற மக்கள், அந்தக் கட்சிகளை கண்காணிக்கிற பொறுப்பையும் போராட்டக்களமா மாத்தவேண்டிய பரந்த பொதுவெளியவும் நமக்குதான் கொடுத்திருக்காங்கன்னுதான் நான் புரிஞ்சிக்கிறேன்.  கம்யூனிஸ்ட்டுங்க முதல் ஆறுமாசம் திட்டம் போடுவாங்க, திட்டமிட்டபடி ஏன் எதுவும் நடக்கலேன்னு மீதி ஆறுமாசம் பரிசீலனை செய்வாங்கன்னு சொல்லப்படும் பொய்க்குற்றச்சாட்டுக்கு பொருத்தமான பதிலை நம்மோட தொடர்செயல்பாடுகளே தரமுடியும்கிறது என்னோட நம்பிக்கை.     

30.05.2016


கருத்துகள்

  1. நான் ஒருவிதமா தெம்பூட்டும் வேலைய செஞ்சா இது ஒரு விதமா இருக்கு தோழா. .நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா