முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆதிமருத்துவர்களும் மீதி மருத்துவர்களும் - ஆதவன் தீட்சண்யா


கோ.ரகுபதி எழுதிய ‘ஆதி மருத்துவர் சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ என்கிற நூல் குறித்த இக்கட்டுரை 2007ல் புத்தகம் பேசுது இதழொன்றில் வெளியானதாக நினைவு.
வரலாற்றை மீட்டெடுப்பதாய் ஆரவாரமிடும் ஆய்வுகள் ‘முன்னொரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக்கும்...’ என்று பெருமிதத்தில் முடிவது இப்போதைய மோஸ்தர். எல்லோருமே ஆண்ட சாதியினர் என்றால் யார்தான் குடிமக்களாய் இருந்தார்கள்? ஆண்ட சாதியாய் இருந்திருந்தாலும், அந்த சாதியினர் எல்லோருமே ஆண்டார்களா, ஆண்ட காலத்தில் கண்ட மேன்மை என்னென்ன, தங்கள் சாதிப் பெண்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டார்களா, பிற சாதியாரோடு இணக்கமாக வாழ்ந்தார்களா அல்லது கையிலிருந்த அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கினார்களா என்ற கேள்விகளில்லாமல் வெறுமனே ஆண்ட சாதி என்னும் பீற்றல் எதையும் மீட்டுத் தரப்போவதில்லை. ஒருவேளைக் கஞ்சிக்கும் ஒருமுழ கந்தைக்கும் நாதியற்றுக் கிடக்கிற நிகழ்கால வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறவன், எங்கள் முப்பாட்டனிடம் தான் நாட்டின் கஜானா சாவி இருந்தது என்று சொல்வதற்கு இணையானதே இந்த மீட்டெடுக்கும் ஆய்வுகளின் சாரமும்.

ஆண்ட சாதியினர் என்று இப்போது நிறுவும் முயற்சிகளின் பின்னே ‘ஆகவே எங்களுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு சேவகம் செய்யவேண்டும்’ என்கிற ஜனநாயக விரோத சிந்தனை மறைந்திருக்கிறது. குடிமக்கள் கொண்டாடி மகிழத்தக்க வகையில் ஆண்டவன் ஒருவனுமில்லை என்பதே வரலாறாய் இருக்கையில் ஆண்ட பரம்பரை ஜம்பத்தை அருவருப்போடு பார்க்கிற மனோபாவம் வளர வேண்டியுள்ளது. அலுப்பூட்டும் இந்த சுயசாதி போலிப் பெருமிதத்திலிருந்து விடுபட்டு, அந்தந்த சாதியை அதனதன் இருப்பில் வைத்து ஆய்வு செய்வதே நேர்மையான அணுகுமுறையாகும்.

ஆதிபட்டர் என்பதன் திரிபாகிய அம்பட்டர் என்னும் சமூகப்பிரிவினர் ஆதியில் சடங்கு செய்யும் பூசாரிகளாகவும் பிணி முறிக்கும் வைத்தியர்களாகவும் இருந்துள்ளனர். வெட்டுக்காயங்களுக்கு மருந்திடுவதற்காக காயத்தைச் சுற்றிலுமுள்ள ரோமத்தை சவரம் செய்யத் தொடங்கிய இவர்களிடமிருந்து பூசையுரிமையும் மருத்துவ அறிவும் பிடுங்கப்பட்டு வெறுமனே சவரத் தொழிலாளர்களாக எவ்வாறு கீழ்ப்படுத்தப்பட்டனர் என்பதை விவரிக்கும் ‘ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ என்ற தம் நூலில் கோ.ரகுபதி இப்படியான அணுகுமுறையைத் தான் கைக்கொண்டிருக்கிறார்.

உலகின் பலபாகங்களையும் போலவே இங்கும் மக்களின் உடல் மன நோய்களை குணப்படுத்துகிறவர்களாக பூசாரிகளே இருந்திருக்கின்றனர். நோய்க்கும் பார்  பேய்க்கும் பார் என்ற பழமொழியின் செய்தி இதுவே. இந்தியாவில் இந்த பூசாரி வைத்தியர்கள்/வைத்தியப் பூசாரிகளான அம்பட்டர்களே அறுவைச் சிகிச்சை முறையை கண்டறிகின்றனர். சகமனிதனைத் தொடுவதை தீட்டு பாவம் என்று பார்ப்பனர்கள் ஒதுங்கி நிற்கையில், போரில் வெட்டுண்டவர்களை தொட்டுத் தூக்கி வைத்தியம் செய்ததோடு அறுபட்ட மூக்கிற்கு மாற்று மூக்கு பொருத்தும் முறையையும் பவுத்தத்தின் துணையோடு இவர்களே கண்டறிந்தனர். பூப்புச்சடங்கும் மகப்பேறு மருத்துவமும் நாவிதர் குடும்பத்துப் பெண்களுக்கானவை. (AIIMSசில் படிப்பதற்கான அறிவும் தகுதியும்   பரம்பரை பரம்பரையாக எங்களுக்குத்தான் இருக்கிறது என்ற ஆதிகச்சாதியினரின் புளுகும் இவ்விடத்தில் அம்பலமாகிவிடுகிறது)

மனித நாகரீகத்தில் மழித்துக்கொள்ளும் பழக்கம் உருவாவதற்கு மதநம்பிக்கைகளும் போருமே அடிப்படை. எதிரிகள் இழுத்துத் தாக்குவதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே படைவீரர்களுக்கு முகச்சவரமும் தலையை மழுங்க சிரைப்பதுமாகிய வழக்கங்கள் உருவாயின. இந்தியாவில் தலைமயிரை கத்திரித்துக் கொள்வது அல்லது மழித்துக் கொள்வது துறவிகளில் ஒரு பகுதியினரின் சுயவிருப்பமாகவும் தீயொழுக்கமுள்ளவர்களுக்கு தண்டனையாகவும் இருந்துள்ளது. இறப்புச்சடங்காக, நேர்த்திக்கடனாக மொட்டையடித்துக் கொள்ளும் வழக்கமெல்லாம் பவுத்தத்தின் செல்வாக்கினால் வெகு பிற்காலத்தில் வந்ததுதான்.

ஒவ்வொன்றிலும் வேறுபடுத்தி சாதிய ஏற்றத்தாழ்வை நிலைநிறுத்துகிற பார்ப்பனர்கள் கையில் தலைமயிரும் சிக்கியது. மற்றவர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டும் செயற்கையான பண்பாட்டு அடையாளமாக தலையின் முன்பகுதி மயிரை அரைநிலா வடிவத்தில் சிரைத்து கொண்டையிட்டுக் கொள்ளும் வழக்கத்தை அவர்கள் உருவாக்கினர். பிறசாதியினர் அவ்வாறு சிரைத்துக்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தத் தடை விஜயநகர ஆட்சிக் காலத்தில்தான் நீங்கியது. (1930 வரையிலும் தலித்துகள் மீது தடை நீடித்தது) எனில் இவர்களுக்கெல்லாம் மழித்துவிட்டவர்கள் யார்?

நோயை குணப்படுத்த பகவானுக்கு பரிகாரங்கள் செய்யவேண்டும் என்று பிடுங்கியெடுத்த வசூல்ராஜாக்களிடமிருந்து (இவர்கள் யாரெனக் கேட்டு என் வாயைக் கிளறவோ வயிற்றெரிச்சலைக் கிளப்பவோ வேண்டாமென வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்) தப்பித்து, குறைந்த பொருட்செலவில் நோயை குணப்படுத்தும் பவுத்த சமண மருத்துவ மரபினரை- ஆதிபட்டர்களை அண்டத் தொடங்கியது சமுதாயம். சைவர்களும் வைணவர்களும் பவுத்த சமண சமயத்தவரை கழுவேற்றிக் கொன்ற காலத்தில், மருத்துவத்தின் ஒரு பகுதியாக மயிர் சிரைத்தலையும் கொண்டிருந்த மருத்துவர்களை, தங்களின் சவரத் தொழிலாளர்களாக கீழ்ப்படுத்தினர்.

தொடர்ந்து அவமதிப்பது, புறக்கணிப்பது, தம்மையே அண்டிப் பிழைக்குமாறு வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்குவது, உழைப்பை இலவசமாய் அனுபவிப்பது மட்டுமின்றி இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் ஒரு தத்துவ விளக்கத்தை உற்பத்தி செய்வதுமாகிய வழிமுறைகளில்தான் சாதியடுக்கின் மேல்கீழ் வரிசை அடைந்துள்ளது. பல்வேறு சுழலடுக்குகளைக் கொண்ட ஆதிக்கசாதியினரின் இவ்வன்முறைகளுக்கு நாவிதர்களும் தப்பவில்லை. பார்ப்பனர்களின் முன்நெற்றியை சிரைக்க பணிக்கப்பட்டு, பின்வந்த காலத்தில் அந்தரங்கப் பகுதிகளிலும் (இருபாலருக்கும்), பிணங்களுக்கும் சவரம் செய்யும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கால்களைக் கழுவிவிடுவது- சாவு செய்தி சொல்வது- ஈமக்காரியங்கள் செய்வது- நகம் வெட்டிவிடுவது- இம்மாதிரியான தமது வக்கிரங்களை நிறைவேற்றித் தரும் இழிநிலைக்கு நாவிதர்களை ஆட்படுத்திவிட்டு பின் அதே காரணங்களைச் சொல்லி நாவிதர்களை தீண்டத்தகாதாராக்கினர். பார்ப்பனர் உள்ளிட்ட ஆதிக்கசாதியினர் நகரங்களுக்கு பெயர்ந்து போய்விட்ட நிலையில் கிராமத்திலுள்ள இடைநிலைச் சாதிகள் அதேவகையான ஒடுக்குமுறைகளை கையாள்கின்றனர்.

உழைப்புக்கு ஊதியமாக ஊர்ச்சோறு எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை உருவாக்கியதன் மூலம் நாவிதசாதி, தன் அடுத்தவேளை கஞ்சிக்கு ஆதிக்கசாதியினரையே அண்டி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டது. தலித்களுக்கு சவரம் செய்யக்கூடாது என்று ஆதிக்கசாதி தடுத்ததென்றால், எல்லாவகையிலும் தம்மளவுக்கு தாழ்த்தப்பட்டுவிட்ட நாவிதர்களை தீண்டத்தகாதாராய் பார்க்கும் மனோபாவம் தலித்களுக்கு இருக்கும் அவலத்தை என்னவென்பது?

பரம்பரை மருத்துவ அறிவை ஒழித்துக்கட்டும் ஆதிக்கசாதி வெறிக்கு பிரிட்டிஷ் காலனியாட்சி புகுத்திய அலோபதி மருத்துவமுறை உதவியது. அலோபதியை கைக்கொண்ட ஆதிக்கசாதியினர், பாரம்பரிய மருத்துவ அறிவை இழிவானதாக சித்தரித்தனர்(சுதேசி என்று முழங்குகிறவர்களும் இவர்களே). ஆதிக்கசாதியினரின் வீடுகளுக்குப் போய் அல்லது ஆற்றங்கரைகளில் காத்துக் கிடந்து தொழில் செய்யும் நிலையிலிருந்து விடுபடும் முயற்சியாக காலனியாட்சியைப் பயன்படுத்தி நாவிதர்கள் சலூன்களை தொடங்கினர். பகுத்தறிவு, இடதுசாரி அரசியலின் விவாதக்களமாக இருந்த இச்சலூன்களில் இன்று ‘தயவு செய்து அரசியல் பேசாதீர்கள்’ என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது ஏனென்ற ஆய்வு தேவையாயுள்ளது.

ஊர்க்குடிமகன் என்று ஒடுங்கிக்கிடக்க ஒப்பாமல் இலங்கைக்கு தப்பியோடிய நாவிதர்கள் அங்கிருந்தபடியே தம் சமூகத்தை அமைப்புரீதியாய் அணிதிரட்டியதும், இங்கிருந்து போராடியவர்களுக்கு உதவி செய்ததும், பல்வேறு பத்திரிகைகளை வெளியிட்டதும் முக்கியமான கலகச் செயல்பாடுகளாகும். பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி அமைவதற்கு பெருந்தொண்டாற்றிய பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் போன்றோரின் மருத்துவ அறிவும் போர்க்குணமும் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விதவைப் பெண்ணொருவர் தன் குழந்தையோடு தங்கி மருத்துவம் பயில தன் சந்தாத்தொகையை செலவிட்ட மருத்துவர் சங்கத்தின் செயல்பாட்டிலிருந்து இக்கால மக்கள் அமைப்புகள் கற்றுக்கொள்ளும் செய்திகளுண்டு. இந்தியா முழுவதும் சவரத்தொழில் செய்யும் சாதிகளின் பட்டியல், அவை எதிர்கொண்ட ஒடுக்குமுறைகள், போராட்டங்கள் என்று விரியும் இந்நூல் சவரத்தொழிலாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையில் கரிசனம் கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள எல்லா உரிமைகளையும் பறித்தொழிக்கும் வன்மத்தில் உச்சநீதி மன்றமே களமிறங்கியுள்ள நிலையில் இக்கோரிக்கை சவரத்தொழிலாளர்களுக்கு  என்ன பயன்களை தரும் என்பது விவாதத்திற்குரியது.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா