வெள்ளி, பிப்ரவரி 26

கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்கவே முடியாது - ஆதவன் தீட்சண்யா



ர்க்கொளுத்தியான் தன் பெயரை சமீபத்தில் தான் மூவேந்தப் பெருங்குடிக்கோ என்று மாற்றியிருந்தான். இனிமேல் இதுதான் அவனது பெயர் என்றாலும் அதை நினைவில் வைத்துக்கொள்வது பெரும்பாடாயிருந்தது. ஏம்பா ஏதோ புதுப்பேரு வச்சிக்கிட்டியாமே, அது என்ன என்று யாராவது கேட்டால் திக்கித் திணறித்தான் அவனால் சொல்லமுடிந்தது. சொல்ல சொல்லத்தான் பழகும் என்பதால் அதை எப்போதும் மந்திரம்போல் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தான். அப்படியிருந்தும் யாராவது போனில் அழைத்தால் ஊர்கொளுத்தியான் பேசுறேன்... என்றுதான் அவனுக்கு சரளமாக சொல்லவந்ததேயொழிய புதுப்பெயர் தவறியும் வாயில் வர மறுத்தது. எப்பாடுபட்டேனும் பழைய பெயரை மறந்துவிட வேண்டும் என்று அவன் பூண்டிருந்த வைராக்கியம் யாரேனும் ஊர்க்கொளுத்தியான் என்று கூப்பிட்ட மாத்திரத்தில் பொலபொலவென உதிர்ந்துபோனது. தனக்கே இன்னமும் மனசில் பதியாத தன் புதுப்பெயரை இந்த நாட்டு மக்களது மனங்களிலும் அரசாங்க கோப்புகளிலும் ஐ.நா. மன்றத்திலும் பதிய வைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியவில்லையே என்கிற கவலை பீடித்தவனாய் இருந்த போதுதான், அந்தப் புதுப் பெயருக்கு கடிதம் ஒன்று வந்து அவனை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

புதிய பெயருக்கு ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார், அது இன்னாருக்கு உரியதுதான் என்று கண்டறிந்து தபால்காரரும் வந்து கொடுத்துவிட்டுப் போகிறார். அப்படியானால் மூவேந்தப் பெருங்குடிக்கோ என்கிற அந்தப் பெயர் பிரபலமடையத் தொடங்கி விட்டது என்று தானே பொருள்? எதற்காக இந்தப் பெயரை மாற்றினோமோ அது நடக்கத்தொடங்கிவிட்டது என்பதற்கான முன்னறிவிப்பா இந்தக் கடிதம்... என்று பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தான். அந்த சந்தோசத்திலேயே திக்குமுக்காடிப்போய் வெகுநேரம் அந்தக் கடித உறையைப் பிரிக்காமலே பலவிதங்களில் பார்த்து ரசித்தபடி இருந்தான். தனது புதிய பெயரை இந்த உலகம் உச்சரிக்கத் தொடங்கிவிட்டதற்கு அடையாளமாக வந்திருக்கிற இந்தக் கடிதம் எப்படி பார்த்தாலும் அதி விசேடமானது என்று கருதினான். எனவே அதை குலதெய்வத்தின் படத்திற்கு முன்னால் வைத்து வணங்கினான். அவன் தனக்குச் சூடியிருந்த புதிய பெயர் உண்மையில் அந்த குலதெய்வத்திற்கு உரியதுதான்.

ஊர்ஊராக கொளுத்திக்கொண்டு திரிகிறவர்களுக்கெல்லாம் கௌரவமாய் பெயரிருக்கிறது. ஆனால் இதுவரையிலும் ஒரு ஊதுபத்திக் குச்சியைக்கூட கொளுத்தியிராத தனக்கு ஊர்க் கொளுத்தியான் என்று பெயரா? பிள்ளை பெற்றுக்கொள்ளத் தெரிந்தவர்களுக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் என ஏன் தோன்றவில்லை என்று அவனை அரித்துக்கொண்டிருந்த ஆற்ற மாட்டாத குமைச்சலில்தான் பெயரை மாற்றிக்கொள்ளும் முடிவை எடுத்திருந்தான். மாற்றுவதென்று முடிவான பிறகு, அது தன் மூதாதையரின் பெயராக இருக்கட்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. இதற்காக தனது முப்பாட்டன் நாப்பட்டன் கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா மூதாதைகளைப் பற்றிய வரலாற்றை ஆதியோடந்தமாகத் தேடிக் கொண்டிருந்த ஊர்க்கொளுத்தியான், பத்திருபது தலைமுறைகளுக்கு முன்பு மூவேந்தப் பெருங்குடிக்கோ என்கிற பெயரில் ஒருவர் இருந்தார் என்கிற தகவலைக் கேட்டு அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அரியதொரு புதையலை அகழ்ந்தெடுத்தவன் போல ஆடிக் களித்தான். வகுத்தான், வாய்ப்பெருத்தான், கொண்டிக்காலன், கோணமூக்கன் என்று சொல்வதற்கே சங்கடப் படுத்தும் பெயர்களைக் கொண்ட வம்சத் தலைக்கட்டில் மூவேந்தப் பெருங்குடிக்கோ என்கிற பெயரில் ஒருவர் இருந்திருந்திருக்கிறார் என்பதையே முதலில் நம்ப முடியாமல் அவன் தத்தளித்தான். “மூவேந்தப் பெருங் குடிக்கோ”- என்ன ஒரு கம்பீரமான பெயர்.. சொல்லும் போதே மிடுக்காகவும் பெருமிதமாகவும் உணர்ந்தான். அவர் எந்தத் தலைமுறையில் பிறந்திருந்தாலும் சரி, தங்களது குலக்கொடி அவரிலிருந்தே தழைத்ததாக இனி மேல் சொல்லிக் கொள்வதென்கிற முடிவுக்கு அப்போதே வந்துவிட்டான். இவ்வாறு தனது குலதெய்வத்தை நிறுவியதோடு நில்லாத ஊர்க்கொளுத்தியான் அவரது பரம்பரை அழிந்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக தனது பெயரையும் அதுவாகவே மாற்றிக்கொண்டான்.

ஊருலகத்தில் சாமியென்று சொல்லப்படுவதற்கெல்லாம் ஓர் உருவம் இருக்கிறபோது தங்களது குல சாமி மட்டும் வெறும் நினைவாகவோ புனைவாகவோ அரூபமாக இருப்பதில் ஊர்க்கொளுத்தியானுக்கு உடன்பாடில்லை. எனவே அதற்கென ஓர் உருவத்தை உருவாக்குவது தான் அவனது அடுத்த வேலையாக இருந்தது. எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்பிருந்தவர் எப்படியான உருவத்தில் இருந்திருப்பாரென யூகிப்பதே கூட அவனுக்கு கடினமாக இருந்தது. எனவே தனது சொந்தபந்தங்களில் யாரெல்லாம் நினைவுக்கு வந்தார்களோ அவர்களது நானாவித லட்சணப்பொருத்தங்களைக் கொண்டு கலவையான சாயலில் ஓர் உருவத்தை உருவாக்கிவிட்டால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. அவனுக்குத் தெரிந்த ஓவியர் ஒருவரும்  அவனது இந்த யோசனையை ஆமோதித்ததோடு வரைந்து கொடுக்கவும் ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் இவனைவிடவும் பெரிய ஆய்வாளராக இருப்பார்போல, மூவேந்தப் பெருங்குடிக்கோ என்று ஒருவர் சும்மா இஷ்டம்போல பெயர் வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்க முடியுமா என் கிற புறக்கணிக்க முடியாத கேள்வியை திடுமென எழுப்பினார். இப்படியொரு அடிப்படையான கேள்வி தனக்கு ஏன் தன் குலதெய்வத்தைப் பற்றி இதுவரையிலும் எழாமல் போனது என்று தன்னைத்தானே கடிந்துகொண்டான் ஊர்க்கொளுத்தியான். மூவேந்தப் பெருங்குடிக்கோவின் வரலாற்றுப் பின்புலம் தெரிந்தால்தான் அதற்கேற்றாற் போன்ற உருவத்தை வரையமுடியும் என்று ஓவியர் திட்டவட்டமாக கூறிவிட்டதால் அவர்கள் முதலில் வரலாற்றுப் பின்புலத்தை உருவாக்கத் தொடங்கினார்கள்.

கங்கை கொண்ட சோழன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்பது போல மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியரை அடக்கியாண்ட பெருங்குடியினன் என்கிற வெற்றியைப் புகழும் விதமாகவே அவர் மூவேந்தப் பெருங்குடிக்கோ என்றழைக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், உண்மையில் இது பட்டப்பெயராக இருப்பதற்கே சாத்தியம் உண்டென்றும் அவரது இயற்பெயரை இனிதான் அறிய வேண்டுமென்றும் வரலாற்றுப் பின்புலம் ஒருவாறாக தயாரானது. ஆனால் இப்போது எழுந்த சந்தேகம் என்னவென்றால், இவரைப்போலவே மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டவர்கள் என வரலாற்றில் களப்பிரர்கள் குறிப்பிடப்படுவதால் ஒரு வேளை இவரும் களப்பிரர் வழிவந்தவரா என்பதுதான். அப்படியேதும் இருக்குமானால் சேர சோழ பாண்டிய மன்னர்களின் இன்றைய வாரீசுகள் என்று ஊரூருக்கு பீற்றித் திரிகிற தெள்ளவாரிகள் வம்பிழுத்து பகைதீர்க்கத் துணிந்தால் தன் கதி என்னாகும் என்று நினைக்கும்போதே பயத்தில் வெடவெடத்து நடுங்கிப் போனான்.

பர்ட்டன் ஸ்டெய்ன் ஒருவரைத் தவிர மற்ற ஆய்வாளர்கள் அவ்வளவுபேரும் களப்பிரர்களை கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள், வேங்கடமலைக்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிவரும் நிலையில் களப்பிரர்களோடு தமது பரம்பரையை தொடர்பு படுத்துவது, நாமாகப் போய் வந்தேறிப்பட்டத்தை ஏற்பதற்கே வழி வகுக்கும் என்பதால் அந்த யோசனையை ஊர்க்கொளுத்தியான் சட்டென நிராகரித்தான். பச்சைத் தமிழ்ச்சாதி என்று இப்போதிருக்கும் இனத்தூய்மை கௌரவத்தை தக்கவைத்துக் கொள்வதுதான் பல வகைகளிலும் பயன்தரத்தக்கது. அதுவுமின்றி புரோகிதத் தொழிலை ஒழித்துக் கட்டியவர்கள், யாகங்களையும் வேள்விகளையும் தடுத்து உயிர்ப்பலிகளை அடியோடு நிறுத்தியவர்கள், மானிய நிலங்களை ரத்து செய்தவர்கள், பௌத்த/ சமண பின்புலம் கொண்டவர்கள், அவர்களது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்றெல்லாம் இன்றைய வரலாற்றாளர் பலரின் காழ்ப்புக்கு ஆளாகியிருக்கிற களப்பிரர்களோடு தங்களது மூதாதையான மூவேந்தப் பெருங்குடிக்கோவை தொடர்பு படுத்துவதால் ஏற்படவிருக்கும் எதிர்மறை விவாதங்களை தவிர்ப்பதும் அவனது நோக்கமாயிருந்தது. அதுவுமில்லாமல், காலப்பறையர் என்பதுதான் கலப்பரையர் களப்பறையர் களப்பிரர் என மருவியது என்று தலித்துகள் சிலர் சொல்ஜாலம் காட்டி விளையாடிக் கொண்டிருக்கையில், ஆண்டப்பரம்பரையாக உருவாகும் தங்களது சாதியை அவர்களோடு தொடர்புபடுத்தி தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என்பதும் அவனது முனைப்பாக இருந்தது. ‘இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்’ என்கிற சிலப்பதிகார வரி, பெருங்குடி என்பதை உயர்குடியெனக் குறிப்பதை நாமாக கெடுத்துக்கொள்ளகூடாது என்று உஷாரானான்.

வரலாற்றில் எந்த மன்னரோடும் தொடர்புபடுத்த முடியாத நிலையில் மூவேந்தப் பெருங்குடிக்கோ என்கிற பெயர் ஒன்றை மட்டுமே வைத்து ஆண்ட பரம்பரை என்றால் யார் ஒத்துக்கொள்வார்கள் என்கிற பெருங்கவலை அவனைப் பீடித்தது. தம்பி, இங்கி ருக்கிற அனேக சாதிகளும் தங்களை ஆண்ட பரம்பரைன்னுதான் சொல்லிக்கிட்டிருக்கு. அவங்ககிட்டயெல்லாம் யார் ஆதாரம் கேட்டாங்க...? அப்படியே யாராச்சும் ஆதாரம் கேட்டா, மொதல்ல அவங்கள காட்டச் சொல்லு பிற்பாடு நான் காட்டுறேன்னு அடிச்சு விடு. ஒரு பயலும் வாய் தொறக்கமாட்டான்... என்று ஓவியர்தான் அவனை தைரியப்படுத்தினார். ஓவியரும் தன் சாதிக்காரராக இருக்கப்போய் தான் இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்ட ஊர்க்கொளுத்தியான், அண்ணே 2021ல் நம்ம ஆட்சி ஏற்படும்போது நீங்கதான் கலைத்துறை மந்திரி என்றான்.  இதிலொன்றும் ஆர்வம் காட்டாதவர் போன்ற முக பாவத்துடன் அவர், தம்பி அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம், முதலில் வரலாற்றை முழுமைப்படுத்தி முடிப்போம் என்றார்.

மூவேந்தப் பெருங்குடிக்கோ ஒரு மன்னர்தான் என்று இருவரும் தீர்மானித்துவிட்டபடியால் அவரை கம்பீரமாக காட்டுவதற்கு தோதாக குதிரை மீது அமர்ந்திருக்குமாறு வரையச் சொன்னான். தம்பி, கண்டநிண்ட கழுதைங்களோட படம் சிலையெல்லாம் குதிரைமேல உட்கார்ந்திருக்கிறாப்ல தான் இருக்கு. நாமும் ஏன் நம்மாளை அப்படியே வரையணும்? வித்தியாசமா எதையாவது யோசிப்போம் என்றார் ஓவியர். படம் வரைவதில் இத்தனை சிக்கல் இருக்கிறதா என்று நினைக்க நினைக்க அவனுக்கு கிறுகிறுத்தது. பார்த்து நல்லவிதமா செய்யுங்கண்ணே என்பதோடு அவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

மூவேந்தப் பெருங்குடிக்கோ ஒட்டகத்தின் மீது கனகம்பீரமாக அமர்ந்திருந்தார். தமிழ்ச் சினிமாக்களிலும் இந்தி சீரியல்களிலும் பார்த்த மன்னர் கதாபாத்திரங்கள் பலதின் கலவையில் இன்னாரெனச் சுட்டிவிட முடியாதபடி மூவேந்தப் பெருங்குடிக் கோவின் முகம் மிளிர்ந்தது. ஆவேசம் பீறிடும் கண்களும் துடிக்கும் மீசையும், திரண்ட புஜங்களும் பரந்த மார்பும் வேறெந்த சாதிக்கார மன்ன னுக்கும் இல்லாதபடியான வீரத்தை அவருக்கு வழங்கின. பின்பகுதியில் கத்தியும் முன்பகுதியில் துப்பாக்கியும்  கலந்த ‘குண்டுவாள்/ வாள் குண்டு’ என்கிற புதுவகை ஆயுதத்தை அவரது வலக்கை ஏந்தியிருந்து. பீரங்கிப் பிள்ளையார், ராக்கெட் பிள்ளையார் என்று சாமிகளே நவீனமாகியிருக்கிற காலத்தில் மன்னனும் நவீன ஆயுதத்தோடு இருப்பதே சரியெனப்பட்டது ஓவியருக்கு. காய் கூட நறுக்கத்தெரியாதவர்கள் ஏந்தியிருந்த அதே கத்தி கபடாவைத்தான் மூவேந்தர்களையும் அடக்கியாண்ட தங்கள் மன்னனும் ஏந்தியிருக்க வேண்டுமா என்று ஓவியருக்கு எழுந்த அறச்சீற்றத்திலிருந்தே இப்படியானதொரு புதுவகை ஆயுதம் உருப்பெற்றது என்பது இந்த வரலாற்றின் பிரிக்கமுடியாத ஓர் அத்தியாயம். துப்பாக்கியின் முனையில் பேனட் என்கிற கத்தி இருப்பதைத்தான் உல்டா செய்து அவர் இந்த குண்டுவாளை உருவாக்கியிருக்கிறார் என்பது  ஊர்க்கொளுத்தியானுக்கு தெரியவா போகிறது?

ஓவியத்தைக் கண்டு பிரமித்துப்போன ஊர்க்கொளுத்தியான் ஓவியரை ஆரத்தழுவிக் கொண்டான். பின் நிதானப்பட்டவனாய் அண்ணே நம்மூர்ல ஒட்டகமா? மக்கள் ஏற்பார்களா? என்றான். தம்பி, வரலாற்றின்படி நம்மாள் யார்? மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டவர். அப்பேர்ப்பட்ட கீர்த்தியும் பராக்கிரமும் வாய்த்தவரிடம் மூவேந்தர்களிடமும் இல்லாத ஒட்டகப்படை இருந்தது என்று பெருமையாகச் சொல். அல்லது, அவரைக் கண்டு அஞ்சி நல்லுறவைப் பேண ஆசைப்பட்ட பாலைநாட்டு மன்னன் ஒருவன் பரிசாகவோ கப்பமாகவோ கொடுத்த ஒட்டகத்தின் மீது அமர்ந்துதான் அவர் போருக்குச் செல்வது வழக்கம் என்று சொல். நாம் உரக்கப் பேசும்போது மக்களுக்கு காது மட்டும்தான் வேலை செய்யும் என்பதை கவனத்தில் வை. 

உருவம் தயாராகிவிட்டது, இனி அவர் ஆண்ட நாடு அல்லது நிலப்பரப்பு எது என்பதை மட்டும்தான் இறுதிப்படுத்த வேண்டியிருந்தது. மந்திரியாவதற்குண்டான மதியூகத்தைக் கொண்டிருந்த ஓவியர் அதற்கும் வழிகாட்டினார். பெருங்குடி என்று உள்ளீடு செய்த மாத்திரத்தில் சிறியதும் பெரியதுமாக பலவிடங்களி லும் பெருங்குடி என்கிற பெயரில் ஊர்கள் இருப்பதை கூகுள் தேடுதளம் காட்டித்தந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்டிருந்தாலும், இன்றைய தமிழகத் தலைநகராம் சென்னையின் ஒரு பகுதிபோல இருக்கின்ற பெருங்குடியை இவர்கள் தேர்வு செய்தார்கள். பெருங்குடி என்கிற இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் என்பதாலேயே பெருங்குடிக்கோ எனப் பெயர் பெற்றார் என்கிற விளக்கம் ஊர்க்கொளுத்தியானுக்கு சாலவும் ஏற்புடையதாயிருந்தது. ஆற்காட்டார், வீரபாண்டியார், வாழப்பாடியார் என்று  இன்றைய தலைவர்கள் சிலர் விளிக்கப் பட்டாலும் அது ஊர்க்காரர் என்பதாக சுருங்கி விடும் நிலையில் பெருங்குடிக்கோ என்றதுமே ஒரு மன்னனின் ஆகிருதிமிக்க சித்திரம் இயல்பாக மனக் கண்ணில் எழுவதைக் கண்டு இறும்பூதெய்தினான் ஊர்க்கொளுத்தியான்.

இனியும் தாமதிக்கக்கூடாதென ஊர்க்கொளுத்தி யானும் ஓவியரும் சென்னைக்கு வந்து ஓர் அறையை வாடகைக்கு எடுத்த மாத்திரத்தில் அது ‘மூவேந்தப் பெருங்குடிக்கோ முன்னேற்ற முண்னணிக் கழக இயக்கத்தின்’ தேசிய அலுவலகமாக செயல்படத் தொடங்கிவிட்டது. அறையின் சுவற்றில் நடுநாயகமாக மூவேந்தப் பெருங்குடிக்கோவின் படம் மாட்டப்பட்டதுமே அந்த இடத்திற்கு ஓர் அரசியல் பொலிவு கிடைத்தது போலிருந்தது. உலகெங்கும் ஆதரவாளர்களைத் திரட்டிட ஏதுவாக  இயக்கத்தின் பெயரில் தொடங்கப்பட்ட முகநூல் பக்கத்திற்கும்  www.perungudiko4king.com என்கிற இணைய தளத்திற்கும் கிடைத்த வரவேற்பு அவர்களை திக்குமுக்காடச் செய்தது. தேசிய அலுவலகம் இயங்கிய தெரு முனையிலேயே இருந்த ஒரு நவீன அச்சகத்தில் மூவேந்தப் பெருங்குடிக்கோவின் படம் பொறித்த லெட்டர்பேட், முகவரி அட்டை, உறுப்பினர் படிவம், வண்ணச் சுவரொட்டிகள், கொள்கை மற்றும் கோரிக்கைகளடங்கிய பிரகடனம் ஆகியவற்றை அச்சடித்து வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்பியிருந்தார்கள். அடுத்து வரும் நாட்களில் நாட்டையே அதிரச்செய்யும் ஆயுதமென தங்களது பிரகடனம் அச்சாகி வந்துவிட்டது குறித்த பரவசம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

‘பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி / மருங்கு உறை பெருமாளே...’ என்று பதினைந்தாம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெறுமளவுக்கு தொன்மைச் சிறப்புடன் விளங்கும் பெருங்குடியை ஆட்சி செய்தவரும் மூவேந்தர்களையும் அடக்கியாண்டவருமாகிய மூவேந்தப் பெருங்குடிக்கோ அவர்களின் நேரடி ரத்த வாரீசுகள் இந்த பூமியில் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி இன்னமும் எங்கும் நிறைந்திருக்கி றோம் என்பதை எடுத்தியம்பவே இப்பிரகடனம் : 

1.கீர்த்திமிக்க பெருவாழ்வு வாழ்ந்த அன்னாரது மகிமையைப் போற்றும் வகையில் பெருங்குடியைத் தலைநகராகக் கொண்டு அவரது ராச்சியத்தை மீட்ட மைக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

2. மத்திய மாநில அரசுகள் தாமாக முன்வந்து அப்படியொரு தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு இப்பிரகடனம் வெளி யானதிலிருந்து ஓராண்டுகாலம் அவகாசம் தருகிறோம். ஏதேனும் சட்டச் சிக்கல்களால் தனிநாடாக உருவாக்கித்தர முடியாத பட்சத்தில் பின்வரும் கோரிக்கைகள் மீது உரிய  அறிவிக்கையை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அ. மூவேந்தப் பெருங்குடிக்கோ அவர்களுக்கு பெருங்குடியில் மணிமண்டபம் எழுப்பப்பட வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும். சட்டமன்ற வளாகத்தில் அவரது திருவுருவச்சிலையும், பாராளுமன்ற மைய மண்டபத்தில் அவரது திருவுருவப் படமும் வைக்கப்பட வேண்டும். அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கவேண்டும். அன்னார் பயன்படுத்திய குண்டுவாள் என்கிற அரியவகை ஆயுதத்தை ராணுவம் மற்றும் காவல்துறை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

ஆ. எமது ராச்சியத்திற்குட்பட்ட பகுதியின்  வர்த்தக நிறுவனங்கள், பேரங்காடிகள், சுங்கச்சாவடிகள், கட்டணக் கழிப்பிடம், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், இதர வருமானம் தரத்தக்க தொழில்கள், நிலம், முக்கியமாக டாஸ்மாக் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வரி உள்ளிட்ட வருமானங்களில் ஒரு பகுதியை எமக்கு கப்பமாக செலுத்தவேண்டும்.

இ. எமது ராச்சியத்திற்குட்பட்ட பகுதியில் கிரானைட், மணல் உள்ளிட்ட கனிம மற்றும் தாதுப்பொருள் குவாரிகளுக்கான ஏலம்,  நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மூலமாக நடத்தப்படும் வேலைகளுக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்தல், அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமித்தல் ஆகிய உரிமைகள் எமக்கு வழங்கப்பட வேண்டும்.

ஈ. எமது ராச்சியத்திற்குட்பட்ட பகுதியில் பணி யாற்றும் அரசு அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தமது மேல் வருமானத்திலிருந்து இதுவரை மேல் மட்டங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் மாமூல் தொகையில் சரிபாதியை இனி எம்மிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

உ. எமது ராச்சியத்தின் எல்லைக்குட்பட்ட நகர மன்ற, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை எங்கள் பரம்பரைக்கே நிரந்தரமாக ஒதுக்கித் தர வேண்டும். வேறு யாரேனும் நிறுத்தப் பட்டால் ‘எங்க ஓட்டு உங்களுக்கில்லை’ என்கிற முழக்கத்தின் மூலம் முறியடிக்கவும் தயங்கமாட்டோம். 

இப்படிக்கு
இனமான எழுச்சிப்புரட்சி இளவல் மூவேந்தப் பெருங்குடிக்கோ மற்றும்
இனமான எழுச்சிப்புரட்சி இளவலின்   மூத்த ஆலோசகர் தூரிகைவண்ணன்

***
அச்சாகி வந்திருந்த பிரகடனம் இன்னமும் வெளியில் யாருக்கும் விநியோகிக்கப்படாத நிலையில் அதற்குள்ளாகவே தனது புதிய பெயருக்கு தேசிய அலுவலகத்தின் முகவரியில் வந்திருந்த முதற்கடிதத்தை குலதெய்வத்துக்குப் படைத்த ஊர்க்கொளுத்தியான் மிகுந்த பரவசத்தோடு உறையைக் கிழித்தான்.

 ஐயா, வணக்கம். அச்சுக்கூடத்தின் பணியாளன் என்ற முறையில் வழக்கமானதொரு வேலை என்கிற எண்ணத்தோடுதான் தங்களது பிரகடனத்தை தட்டச்சு செய்யத் தொடங்கினேன். பொதுவாக தட்டச்சு செய்யும் எந்தவொரு விசயத்தையும் வெறும் எழுத்துருக்களாகவே பார்க்கும் மனப்பழக்கம் உள்ள நான் ஏதோவொரு உந்துதலால் உங்களது பிரகடனத்தை வாசிக்கத் தொடங்கியதும்தான் அது தனிப்பட்ட முறையில் எனக்கே எனக்கென்று நீங்கள் எழுதியனுப்பிய கடிதம் என்பது போல உணர்ந்தேன். படித்ததால் ஏற்பட்ட படபடப்பு தணிந்து நிதானத் திற்கு வந்தடைய எனக்கு நெடுநேரம் தேவைப்பட்டது. என்ன விந்தை, வரலாறு நம்மை ஒரே புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

அடர்ந்தக் காடுகளில் வேட்டையும் ஆற்றோரச் சமவெளியில் பண்ணையமும் செய்து  கண்ணியமாய் வாழ்ந்தவர்கள் எமது முன்னோர். வரகும் சாமையும் தினையும் விளையும் புன்செய் நிலமும் நெல்லும் கரும்பும் தென்னையும் கமுகும் விளையும் நன்செய் நிலமும் அவர்களது உழைப்பால் ஒருசேரத் திரண்டு ஊராக உருக்கொண்டது அப்பகுதி. ஒருநாள் அவ்வழியே தன் படைப் பரிவாரங்களோடு நாடுவலம் வந்திருக்கிறார் அரசர். ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றையும் அதன் மருங்கே கொழித்திருந்த வளத்தையும் கண்டு அகமகிழ்ந்து போனார் அரசர். அவ்வமயம் உடனிருந்த அரசவைப் புரோகிதர், இந்த ஆற்றங்கரையில் கோயிலொன்றை கட்டுவித்தால் அரசனின் கீர்த்தியும் ஆயுளும் பெருகும் என்று யோசனை கூறியிருக்கிறார். பிறகென்ன, அங்கு கோயில் வந்தது. அதில் பூசகம் செய்ய புரோகிதப் பட்டாளம் ஒன்றும் வந்திறங்கியது. அவர்கள் வசிப்பதற்கென்று உருவான அக்ரஹாரம் எங்களது வயலை விழுங்கியது. எங்களது ஊரும் ஊருக்கு பாத்தியப்பட்ட நிலம் அனைத்தும் கோயிலுக்கும் அக்ரஹாரத்துக்கும் மானியம் என்று முறி எழுதிப்போட்டார் அரசர். எங்களது நிலம் அங்கேயே இருந்தது. அதில் எப்போதும் போல் எங்களது முன்னோர்கள் உழைத்து மாய்ந்தார்கள். ஆனால் வெள்ளாமையோ அக்ரஹாரம் சென்றது.  

கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்க முடியாது என்பதை உணர்ந்த எம்மக்கள் மூப்பன் தலைமையில் கூடி ஆலோசித்து ஒருநாள் இரவோடிரவாக  சுமக்க முடிந்தவற்றை எடுத்துக் கொண்டு கன்றுகாலிகளோடு ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்ததைப்போல நிலைகுடியாய் இருந்தவர்கள் மீண்டும் அலைகுடிகளாகி அதுவரை மனிதக்காலடியே பட்டிராத புதிய கானகம் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். அங்கு மேட்டாங்காட்டு வெள்ளாமையாய் வரகும் சாமையும் தினையும் விளைவித்து வாழ்ந்திருக்கிறார்கள். சில தலைமுறைகளுக்குப் பிறகு அவ்வழியாய் வேட்டைக்கு வந்த அரசன் ஒருவன் இது ஏதடா புதிய ஊராக இருக்கிறது என்று வியந்து அங்கு ராத்தங்கல் போடுவதாக அறிவித்திருக்கிறான். ராத்தங்கல் போடும் ஊரின் பெண்களை நரவேட்டையாடுவது தான் அன்றைய இரவின் அரச பரிபாலனம். உழைப்பால் திமிர்த்த உடம்பும் நறுநெய் பூசிய கூந்தலில் கானகப்பூக்களைச் சூடி நடக்கும் ஒய்யாரமும் கொண்ட எம் பெண்களைக் கண்டு பித்தேறிப் போய்தான் அரசன் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறான் என்பதை எம் மக்கள் யூகித்து விட்டார்கள். முன்பொருமுறை புரோகிதனின் சூழ்ச்சியால் அரசனின் முன்னோர் ஒருவனிடம் மண்ணை இழந்து வந்த அவமானம் போதாதென இந்தமுறை இந்த அரசனிடம் எமது பெண்களையும் இழக்கப்போகிறோமா என்கிற கேள்வி அவர்களை ஆட்டிப்படைத்தது.

யோசிப்பதற்கு அவகாசமில்லை. அரசனின் முகாமிலிருந்து ஆரவாரம் கேட்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அவர்கள்  எமது வீடுகளுக்குள் புகக்கூடும். குடிகளுக்குள் படை புகுந்தால் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பது தெரிந்ததுதானே? நாகரீகமும் மனிதவுரிமைச் செயல்பாடுகளும் வளர்ச்சியடைந்து விட்ட இந்தக்காலத்திலேயே வாச்சாத்தியிலும் காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் வடகிழக்கிலங்கையிலும் படைகள் குடிகளுக்கு உண்டாக்கியுள்ள பாதகங்களை கண்டிருக்கிற நமக்கு, அன்றைய காலத்தின் படைகள் எவ்வளவு கொடுமைகளை இழைக்கக்கூடிய மூர்க்கம் கொண்டவை என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. எனவே அரசன் அல்லது அவனது பரிவாரத்தினரின் கைகளில் சிக்கி சின்னாப்பின்னமாவதிலிருந்து தங்களது பெண்களை எப்படியும் காப்பாற்றுவது என்கிற  பதற்றத்திலிருந்த எமது முன்னோர்கள், தத்தமது வீட்டுப் பெண் களை தாமே கொன்று வீட்டுக்குள் குழியெடுத்துப் புதைத்தார்கள். கொல்வதற்கு மனம் வராத சிலர் தம் பெண்களை வீட்டிற்குள் நிலவறைகளையும் பதுங்குக்குழிகளையும் தோண்டி மறைத்துவைத்தார்கள். அதற்கும் அவகாசமற்றவர்கள் வீட்டின் வெளிமுற்றங்களில் நிறுத்தி வைத்திருந்த தானியக்குதிர்களில் தம் பெண்களை இறக்கி ஒளித்துவைத்தார்கள்.  

உடற்கூறு சாஸ்திரப்படி அரசனுக்கு உகந்த பெண் களை அடையாளம் கண்டு இழுத்துவர புரோகிதனோடு ஊருக்குள் புகுந்த படையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீடுகளுக்குள்ளிருந்த பண்டபாத்திரங்களையும் உறிச்சட்டிகளையும் வேல்கம்புகளால் அடித்து நொறுக்கினர். கள்ளின் கிறக்கத்திலும் காமத்தின் மூர்க்கத்திலுமிருந்த அரசன் அவமானத்திலும் ஆத்திரத்திலும் நிதானமிழந்துப் போனான். எமது ஆண்கள் அனைவரும் சிறைபிடிக்கப் பட்டனர். படையினரின் சித்திரவதைகளால் அவர்கள் எழுப்பிய ஓலம் கேட்டு கானகத்து விலங்குகளும் பறவைகளும் அரண்டு ஓடின. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. நெருப்புக்குள் விரட்டிவிடப்பட்டு வெந்துப்பிளந்த எமது கன்று காலிகளின் ஊண்களை அவர்கள் வெறியோடு தின்று தீர்த்தார்கள். முன்னிரவில் தொடங்கிய அவர்களது அட்டூழியம் பொழுது விடிந்தும் ஓயவில்லை. தவசதானியங்களை நெருப்புக்குள் சரித்துவிடுவதற்காக முற்றத்திலிருந்த குதிர்களை உடைத்த படையாட்கள், சுற்றியெரிந்த நெருப்பின் அனல் தாங்காமலும் மூச்சுத்திணறியும் உள்ளுக்குள்ளேயே செத்துப்போயிருந்த பெண்களின் பிணங்களை காலால் எத்தி கெக்கலியிட்டார்கள். குடிப்பதற்கும் பாசனத்திற்குமான எமது நீர்நிலைகளில் மலங்கழித்தும் பந்தம் கொளுத்தும் எண்ணெய் வைத்திருந்த கலயங்களைப் போட்டுடைத்தும் பாழ்படுத்தினார்கள். எங்களை முழுதாய் அழித்து விட்டதன் அடையாளமாய் எமது நிலங்களை கழுதை பூட்டிய ஏரினால் உழுது எள் விதைத்தார்கள். மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி போர்க்கைதி களைப் போல இழுத்துச் செல்லப்பட்ட எங்களது ஆண்கள் அதற்கப்புறம் என்னவானார்கள் என்று இன்று வரைக்கும் தெரியவில்லை.

பதுங்குக்குழிக்குள் குற்றுயிராய் கிடந்து பல நாட்களுக்குப் பிறகு மீண்டெழுந்த பெண்களில் கர்ப்பிணியாயிருந்த ஒருத்தி கடும் வாதைகளுக்கும் மனப்பிறழ்வுக்குமிடையிலும் அந்த சாம்பல் மேட்டில் ஒரு மகவை ஈன்று தொடங்கிவைத்த கால்வழி மரபில் வந்தவன் நான். எங்களது மூதாதைகள் அழிக்கப்பட்டது குறித்த தொல்கதைகளையும் பாடல்களையும் கேட்டு வளர்ந்த நான் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அந்த அரசனின் வாரீசுகளைத் தேடிவருகிறேன். ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்கிற பலரையும் அதற்காகவே பின்தொடர்ந்து பார்த்ததில் அவர்கள் போலியாகவும் புனைவாகவும் உரிமை கோருகிறார்கள் என்பதறிந்து நான் சோர்ந்துபோயிருந்த இவ்வேளையில்தான் உங்களது பிரகடனத்தை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். உண்மையில் நான் இவ்வளவுகாலமும் உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது அந்தக் கணத்திலேயே விளங்கி விட்டது. மூதாதைகளை தேடிக்கண்டைவதில் தங்களைப் போலவே ஆர்வம் கொண்டுள்ள நான் தேடிக் கண்டடைந்துள்ள தரவுகள், எங்களது பரம்பரையின் அழிவுக்கு காரணமான அரசன், உங்களது மூதாதை என்று நீங்கள் உரிமை கொண்டாடக்கூடிய அரசனையே பெரிதும் சுட்டி நிற்கின்றன. கோரிக்கைப் பட்டியலுக்கும் முந்தைய பக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்களது பூர்வீக வரலாறு நான் தேடிக்கொண்டிருந்த அரசனோடு வெகுவாகப் பொருந்துகிறது. நான் முன்பே குறிப்பிட் டது போல வரலாறு நம்மிருவரையும் இப்போது ஒரே புள்ளியில் நிறுத்தியிருக்கிறது - ஆனால் எதிரெதிராக. ஆமாம், நீங்கள் ஆண்ட பரம்பரை, நான் உங்களால் அழிக்கப்பட்ட பரம்பரை.

எனக்கு உங்களை பழிவாங்கும் எண்ணம் இல்லை. ஆனால் உங்களது மூதாதையர் எங்களது மூதாதையருக்கு இழைத்திருக்கும் அநீதிகளுக்கும் இழப்புகளுக்கும் உரிய நியாயத்தையும் இழப்பீட்டையும் பெற்றேயாக வேண்டும் என்கிற வைராக்கியத்தில் உறுதி யாயிருக்கிறேன். ஆண்ட பரம்பரையின் வாரீசு என்கிற பெருமைக்கு உரிமை கோருகிற நீங்கள் உங்களது ஆண்ட பரம்பரையின் அட்டூழியங்களுக்கும் பொறுப்பேற்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கடிதம் கிடைத்த ஏழு நாட்களுக்குள் உங்களிடமிருந்து சாதகமான பதில் வராத பட்சத்தில் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஆயத்தமாயி ருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

            இப்படிக்கு,
அமையப்போகும் உங்களது ராச்சியத்தின் முதல் எதிரி

***
கடிதத்தை படித்துமுடித்த ஊர்க்கொளுத்தியானுக்கு குடல் குண்டாமணியெல்லாம் ஆட்டம் கண்டு போனது. தலைக்கு ஏறிய கிரீடத்தை யாரோ தட்டிப் பறிப்பது போன்று பதற்றமடைந்தவன், ஓவியரிடம் கடிதத்தை நீட்டினான். மதியூகியான ஓவியர் கடிதத்தைப் படித்துவிட்டு நானிருக்க பயமேன் என்று அவனை ஆற்றுப்படுத்தி அபயம் சொன்னார்.

***

இரவோடிரவாக சென்னையிலிருந்து சொந்த  ஊருக்கு ஓடிவந்துவிட்ட ஊர்க்கொளுத்தியானும் ஓவியரும் ஆண்ட பரம்பரை கனவை அடியோடு மறந்துவிட்டு அன்றாடப் பிழைப்பை பார்த்துக்கொண்டிருந்த வேளையில்தான் செய்தித்தாள்களில் அந்த விளம்பரத்தைக் கண்டார்கள். இவர்கள் தேசிய அலுவலகத்திற்குள் அநாதையாய் விட்டுவிட்டு வந்திருந்த மூவேந்தப் பெருங்குடிக்கோவின் படம் விளம்பரத்தின் நடுவே இருந்தது. இவர்கள் அச்சடித்து வைத்துவிட்டு வந்திருந்த பிரகடனத்தின் இறுதிவரிகள்  ஒட்டகத்தின் காலுக்கு கீழே இடம் பெற்றிருந்தது:  ‘நாடுமுழுதும் பெருங்குடி என்கிற ஊர்களிலும் பேர்களிலும் இருக்கிற மூவேந்தப் பெருங்குடிக்கோவின் வாரீசுகளே, நமது நாட்டை மீட்டெடுக்க சர்வ பரித்தியாகத்திற்கும் தயாராகுங்கள். குண்டுவாள் ஏந்திய பரம்பரையே கொதித்தெழு. ஒட்டகப்படைக்காரனின் வாரீசுகளே உணர்வு பெறுங்கள்... ஆடி அமாவாசை தினத்தில் நடைபெறும் நமது அமைப்பின் முதல் மாநாட்டிற்கு அலைகடலெனத் திரண்டு வாரீர். தன்மானத்தின் மீட்சி. 2021ல் ஆட்சி. தரணிக்கோ புதியதொரு காட்சி.’

விளம்பரத்தைப் பார்த்துப்பார்த்து ஊர்க்கொளுத்தி யானும் ஓவியரும் ஊரே அதிரும்படியாய் சிரிக்கத் தொடங்கினார்கள். பாவம் பைத்தியம் பிடிச்சிருச்சு போல என்ற கூறிய அக்கம் பக்கத்தவரிடம் ‘இல்லயில்ல இப்பத்தான் தெளிஞ்சிருக்கு...’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்த அவர்களது சிரிப்பு எப்போது அடங்குமெனத் தெரியவில்லை. 

***
 புதுவிசை, பிப்ரவரி 2016

சனி, பிப்ரவரி 20

மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் - ஆதவன் தீட்சண்யா



அமைதியின்மையின் கொடுவெள்ளம்
அடித்துச் செல்கிறது என்னை
ஊனுறக்கமழித்து உளைச்சலாகி வாட்டும்
பதற்றத்தின் பேரலையோ
அலைக்கழிக்கிறது ஆணிவேரையும்

தீராப்பழி சுமத்தி திணறடிக்கும் சர்ச்சைகளால்
சிதறடிக்கப்படுகிற எனது ஆளுமை
வதந்திகளின் நஞ்சேறி சிறுமையுறுகிறது
அவமதிப்புகளும் அவதூறுகளும்
இற்றுவிழச் செய்கின்றன
எனது பற்றுக்கோல்களை

முகாந்திரமின்றி
ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும்
முற்றுகையிடப்படும் என் வீட்டை
எந்த நேரத்திலும் தகர்த்துவிட
குறிவைத்து காத்திருக்கின்றன படையணிகள்

வெடித்துச் சிதற
என்னையன்றி என்னிடம்
எதுவுமேயில்லையெனத் தெரிந்திருந்தும்
சுற்றி வளைத்து இழுத்துவரப்பட்ட நான்
கைகளை விரித்து கால்களை அகட்டி
நிர்வாணமாகவே நிறுத்தப்பட்டிருக்கிறேன்
சோதனைச்சாவடியில்
ஓரடியும் அசையவொட்டாது
என் பாதங்களைப் பொசுக்குகிறது
நடமாட்டத்தைக் கண்காணிக்கும் தீக்கண்

என் எழுதுமேசையில் கிடக்கும் வெற்றுத்தாள்களில்
என்னதான் எழுதவிருக்கிறேன் என
விளக்கும் கேட்டு வதைக்கும் தணிக்கைச் சட்டம்
துரோணருக்கு வெட்டிக்கொடுத்தது போக
மிச்சமிருக்கும் ஒன்பதுவிரல்களையும்
காவு கேட்கிறது

எப்போதும் ஏதாவதொன்றுக்கான விசுவாசத்தை
நிரூபித்துக்கொண்டேயிருக்கும்படியான அவலத்தை
கனவில் துடித்தரற்றிய குற்றத்திற்காக
அறுத்து வீசப்படவிருக்கும் என் நாக்கை
கவ்விப்போக தவித்திருக்கிறது நாய்க்கூட்டம்

ஆதிப்பெருவெடிப்பின் கங்குகளை
எரிமலையாய் பதுக்கியதோடு
சூரிய சந்திர ஒளியைத் திருடுவதாயும்
காற்றைக் கடத்துவதாயும்
தேமலைப்போல் பரவும் என் நிழலால்
பூமியின் வனப்பைக் கெடுப்பதாயும்
வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ்
அடுத்தடுத்து புனையப்படுகின்றன பொய்வழக்குகள்

புராதன கற்கோடாரி அல்லது நீதிபதியின் சுத்தியலால்
சட்டரீதியாய் நான் கொல்லப்பட்ட பிறகு
ஊடகங்களில் விவாதிப்பதற்கென
மிச்சமிருக்கிறது ஒரு கேள்வி:
இன்னமும் என் ரத்தம்
எப்படி சிவப்பாகவே இருக்கிறது
அல்லது
ஏன் காவியாய் மாறவில்லை?

19.02.2016

நன்றி: தீக்கதிர் நாளிதழ் : 20.02.2016


வெள்ளி, பிப்ரவரி 19

நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், இந்திய மண்ணை நேசிப்பவர்கள் - ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னைய குமாரின் முழு உரை



 (டெல்லியின் புகழ் பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர்  கன்னைய குமார்  2016 பிப்ரவர் 12இல் இந்த உரையை நிகழ்த்தியதற்காக தேசதுரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்)
Countercurrents.org, 18 February, 2016 இதழில் வெளியாகியுள்ள இவ்வுரையை தோழர். எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்துள்ளார்.
  மூவண்ணக் கொடிய எரிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் கைக்கூலிகள். அவர்கள்தாம் இப்போது ஹரியானாவில் ஒரு விமான நிலையத்திற்குச் சூட்டப்பட்டிருந்த தியாகி பகத்சிங்கின் பெயரை அகற்றிவிட்டு  சங் பரிவாரத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரைச் சூட்டியுள்ள கட்டார் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். இதில் நாம் முடிவுக்கு வரவேண்டியது என்னவென்றால், நாம் தேசிய வாதிகள் என்னும் சான்றிதழை வழங்க நமக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்பதுதான்.

நாம்தாம் இந்த நாடு. இந்த மண்ணை நாம் நேசிக்கிறோம். இந்த நாட்டில் ஏழைகளாக உள்ள 80 விழுக்காடு மக்களுக்காக நாம் போராடுகிறோம். நம்மைப் பொறுத்தவரை இதுதான் தேசபக்தி. பாபாசாகெப் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. சங் பரிவாரத்தினரோ,வேறு யாரொ இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மீது கை வைப்பார்களேயானால் நாம் அதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக அறுதியிடுகிறோம். ஆனால் ஜண்டேன்வாலாவிலும் நாக்பூரிலும் கற்பிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கமாட்டோம். மனுஸ்மிரிதி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாட்டில் ஆழமாக வேறூன்றியுள்ள சாதி அமைப்பின் மீது எங்களுக்குப் பற்றுறுதியோ, நம்பிக்கையோ இல்லை. அதே இந்திய அரசமைப்புச் சட்டமும், அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கரும் அரசமைப்புச்சட்டரீதியான நிவாரணிகளைப் பற்றிப் பேசுகின்றனர். அதே பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவது பற்றிப் பேசினார். அதே பாபாசாகெப் டாக்டர் அம்பேத்கர், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசினார். நாங்கள் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க விரும்புகிறோம்; நாங்கள் எங்களது அடிப்படை உரிமையை, அரசமைப்புச்சட்டரீதியான  எங்களது உரிமையை உயர்த்துப் பிடிக்கிறோம்.

ஆனால், இன்று ஏ.பி.வி.பியும் அதன் ஊடகக் கூட்டாளிகளும் சேர்ந்து பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான இயக்கத்தைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்துவருவது மிகவும் வெட்கக்கேடானதும் துயரமிக்கதும் ஆகும்.  ஆராய்ச்சி மாணவர்களின் உதவித் தொகைகளுக்காகத் (fellowships) தாங்கள் போராடுவதாக ஏ.பி.வி.பி.யின் இணைச் செயலாளர் நேற்று கூறினார். இதைக் கேட்பது கேலிக்குரியது. ஏனெனில் அவர்களது அரசாங்கம், திருமதி மனு-ஸ்ம்ரிதி இரானி, உதவித் தொகைகளை வெட்டிக்கொண்டு வருகிறார். ஏ.பி.வி.பி.யோ “நாங்கள் உதவித்தொகைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறது. அவர்களது அரசாங்கம் உயர் கல்விக்கான வரவு-செலவு நிதியில் (budget) 17 விழுக்காடை குறைத்துள்ளது. நான்கு ஆண்டுகளாக எங்கள் உண்டி உறையுள் விடுதி கட்டப்படவில்லை. எங்களுக்கு ‘வை ஃபி’ வசதி இன்று வரை கிடைக்கவில்லை. ‘பெல்’ நிறுவனம் எங்களுக்கு ஒரு பேருந்தைக் கொடுத்தது. ஆனால், அதை ஓட்டுவதற்கு வேண்டிய எரிபொருளை வழங்குவதற்குப் பல்கலைக்கழக   நிர்வாகத்திடம் பணம் இல்லை.  ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர்கள் (திரைப்பட நடிகர்) தேவ் ஆனந்தைப் போல, சாலை அமைக்கும் யந்திர வண்டிகளுக்கு (Rollers) முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு , “நாங்கள் உண்டி உறையுள் விடுதிகள் கிடைக்கச் செய்து கொண்டிருக்கிறோம்”, “‘வை ஃபி’ யைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்”, “உதவித் தொகைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். நண்பர்களே, இந்த நாட்டில் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விவாதம் நடக்குமேயானால், அவர்களது பொய்கள் அம்பலப்படுத்தபடும். ஜே.என்.யு.வைச் சேர்ந்தவர்கள் விவாதம் செய்து அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்புவதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

ஜே,என்.யு.வில் ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்று (சுப்பிரமணியன்) சுவாமி கூறுகிறார். ஜே.என்யு.வில் இருப்பவர்கள் வன்முறையைப் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார். இங்கு வந்து எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஜே.என்.யு. சார்பில் நான் ஆர்.எஸ்.எஸ்.பிரசாரகர்களுக்குச் சவாலிடுகிறேன். வன்முறை என்ற கருத்தாக்கத்தின் மீது நாங்கள் விவாதம் புரிய விரும்புகிறோம். நாங்கள் கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். “கூன் ஸெ திலக் கரேங்கெ, கோல்யோ ஸெ ஆர்த்தி” (இரத்தத்தால் திலகமிடுவோம், தோட்டாக்களால் ஆரத்தி எடுப்போம் –எஸ்.வி.ஆர்.) என்னும் ஆர்.எஸ்.எஸ். முழக்கத்தின் மீது கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.   யாருடைய இரத்தத்தை இந்த நாட்டில்  ஓடச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்கள் மீது பயன்படுத்தப்படுவதற்காக பிரிட்டிஷாருடன் சேர்ந்து நீங்களும் தோட்டாக்களை வழங்கினீர்கள். இந்த  நாட்டின் ஏழைகள் உணவு வேண்டும் என்று கேட்கும்போது, பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது, நீங்கள் அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்துகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். பெண்கள், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியபோது, அவர்களுக்கு எதிராகத் தோட்டாக்களைப் பயன்படுத்தியுள்ளீர்கள். கையிலுள்ள ஐந்து விரல்களும் சரிசமமானவையாக இருக்க முடியாது என்றும், பெண்கள் சீதையைப் போல வாழ்ந்து அக்னிப் பரிட்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டில் ஜனநாயகம் உள்ளது, ஜனநாயகம் ஒவ்வொருவருக்கும் சமத்துவம் என்னும் உரிமையை வழங்குகிறது. ஒரு மாணவரோ, ஒரு துப்புரவுத் தொழிலாளரோ,  ஒரு ஏழையோ, ஒரு தொழிலாளியோ, ஒரு விவசாயியோ அல்லது ஒரு அம்பானியோ, ஒரு அதானியோ அவர்கள் யாராக இருந்தாலும், எல்லோருக்கும் சம உரிமை உள்ளது. ஆகவே, நாங்கள் பெண்களின் உரிமையைப் பற்றிப் பேசினால், அவர்கள் (சங் பரிவாரத்தினர்) நாங்கள் இந்தியக் கலாசாரத்தை நாசப்படுத்துவதாகக் கூறுகிறார்கள். சுரண்டல்வாத, சாதிய, மனுவாத, பார்ப்பனிய மரபுகள் என்பனவற்றைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிவதை நாங்கள் விரும்புகிறோம்.

ஆகவே, அவர்கள் ஏன் இவ்வளவு சங்கடப்படுகிறார்கள்?  இந்த நாட்டின் மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப்  பேசும் போது, அவர்கள் செவ்வணக்கத்தோடு நீல வணக்கம் சொல்லும்போது, மார்க்ஸோடு சேர்த்து பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரைப் பற்றியும் மக்கள் பேசும் போது,   அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாகிறது. அஷ்ஃபகுல்லா கானைப்· பற்றிப் பேசும் போது அவர்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

அவர்கள் சதி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிட்டிஷாரின் கைக்கூலிகள். வாருங்கள், என் மீது அவதூறு வழக்குத் தொடருங்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு, பிரிட்டிஷாருடன் வலுவாக சேர்ந்து நின்று கொண்டிருந்த வரலாறுதான். இந்த தேசதுரோகிகள்தாம் இன்று தேசபக்தி சான்றிதழ்களை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். எனது செல்பேசியை சோதித்துப் பாருங்கள், நண்பர்களே. எனது தாயாரையும் சகோதரியையும் அவர்கள் எவ்வளவு கொடூரமாக அவதூறு செய்து செய்திகளை அனுப்புகிறார்கள் என்று.  எனது தாய் இந்த பாரத மாதாவின் பகுதி இல்லை என்றால், எந்த பாரத மாதாவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? அந்த பாரதா மாதா என்ற கருத்தாக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது தாயார் ஒரு அங்கன்வாடித் தொழிலாளி. எனது குடும்பம்  ரூ.3000 மாத வருவாயை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் எனது தாயாரை அவதூறு செய்கிறார்கள்.  இந்த நாட்டின் ஏழைகள், தொழிலாளர்கள், தலித்துகள், விவசாயிகள் ஆகியோரின் தாய்மார்கள் பாரதாமாதாவின் பகுதியாக இல்லாமல் இருப்பதற்காக நான் வெட்கப்படுகிறேன். உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடுங்கள். ‘பகத் சிங் நீடூழி வாழ்க’ என்று கூறுங்கள். ‘சுக்தேவ் நீடூழி வாழ்க’என்று கூறுங்கள்.  ‘அஷ்ஃபக்குல்லா கான்’ நீடூழி வாழ்க’ என்று சொல்லுங்கள். பிறகுதான் நாங்கள் நம்புவோம், உங்களுக்கு இந்த நாட்டின் மீது பற்றுறுதி இருக்கிறது என்று. 

பாபாசாகெப்பின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் கனவு காண்கின்றீர்கள். உங்களுக்குத் தைரியம் இருக்குமானால், பாபாசாகெப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை எழுப்புங்கள். இந்த நாட்டிலுள்ள மிகப் பெரும் பிரச்சினை சாதியம்தான். சாதியத்திற்கு எதிராகப் பேசுங்கள். இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள். தனியார் துறையிலும்கூட இட ஒதுக்கீட்டைக் கொண்டு வாருங்கள். 

இந்த தேசம், ஒருபோதும் உங்களுடைய தேசமாக இருந்ததில்லை  - ஒருபோதும் இருக்கப் போவதுமில்லை. ஒரு தேசம் என்பது மக்களால் உருவாக்கப்படுவது. பசியால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு தேசத்தில் இடம் இல்லை என்றால், அது ஒரு தேசமே அல்ல. நேற்று ஒரு தொலைக்காட்சி சேனல் விவாதத்தின் போது தீபக் செளரியாஸிஜியிடம் கூறினேன்: “செளரியாஸிஜி, இது ஓர் இருண்ட தருணம், நினைவிருக்கிறதா?” என்று. பாசிசம் இந்த நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், இனி ஊடகங்களும்கூட பாதுகாப்பாக இரா.  சங் பரிவார அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்படுவதைத்தான் அவை பயன்படுத்த வேண்டியிருக்கும் - இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் அலுவலகங்களிலிருந்து எழுதி அனுப்பப்பட்டவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்ததைப் போல. இதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தேசபக்தியை நீங்கள் உண்மையிலேயே காட்ட விரும்புகிறீர்களா? ஜே.என்.யு., வரி செலுத்துவோரின் பணத்தைக் கொண்டு, மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது என்று சில ஊடகத்தினர் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆம், அது உண்மைதான். ஜே.என்.யு., வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. மானியத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு கேள்வி எழுகின்றது: ஒரு பல்கலைக் கழகம் எதற்காக இருக்கிறது? சமுதாயத்தின் “பொது மனசாட்சியை” விமர்சனப்பூர்வமாகப் பகுத்தாய்வு செய்வதற்குத்தான் ஒரு பல்கலைக்கழகம் இருக்கின்றது. விமர்சனரீதியான சிந்தனைய ஊக்குவிக்கத்தான் அது இருக்கின்றது. இந்தப் பணியைச் செய்யப் பல்கலைக் கழகங்கள் தவறுமேயானால், பின்னர் ஒரு தேசம் என்பதே இருக்காது, மக்களின் பங்கேற்பு ஏதும் இருக்காது. நாடு முதலாளிகளுக்கான தீவனமாகவே இருக்கும். கொள்ளைக்கும் சுரண்டலுக்குமான தீவனமாக மட்டுமே இருக்கும். மக்களின் கலாசாரம், விழுமியங்கள், உரிமைகள் முதலியன உள்ளடக்கப்படாவிட்டால், தேசம் என்பதே ஏதும் இராது. நாங்கள் இந்த நாட்டோடு நிற்கிறோம். பகத் சிங்கும் பாபாசாகெப் பீம்ராவ் அம்பேத்கரும் கண்ட கனவைப் பார்க்கிறோம். அனைவருக்கும் சமத்துவம், வாழ்வதற்கான உரிமை, உணவு,  தண்ணீர், உறைவிடம் ஆகியன பெறுவதற்கான உரிமை என்கின்ற கனவுக்காக நிற்கிறோம். நாங்கள் இந்தக் கனவுக்காக நிற்கிறோம். இந்த கனவுகளோடு நிற்பதற்காக ரோஹித் தமது உயிரைத் தத்தம் செய்தார். ஆனால், இந்த சங் பரிவாரத்தினருக்குச் சொல்கிறேன்:  “உங்கள் அரசாங்கத்திற்கு வெட்கக் கேடு”. மத்திய அரசாங்கத்திடம் சவாலிட்டுச் சொல்கிறேன்: ரோஹித்துக்கு நடந்ததை ஜே.என்.யுவில் நடக்க விட மாட்டோம். ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் நினைவில் கொள்வோம். கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் நாங்கள் நிற்போம்.

 பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் விடுங்கள், உலகிலுள்ள ஏழைகள், தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். உலகிலுள்ள மனிதகுலத்துக்கு, இந்தியாவிலுள்ள மனிதகுலத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம்.  இந்த மனிதகுலத்துக்கு எதிராக நிற்கும் குழுவை இன்று நாம் அடையாளம் கண்டுள்ளோம். இன்று நமக்கு எதிரே உள்ள மிகக் காத்திரமான பிரச்சினை இதுதான். இந்த அடையாளப்படுத்துதலை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சாதியத்தின் அந்த முகத்தை, மனுவாதத்தின் அந்த முகத்தை, பார்ப்பனியத்துக்கும் முதலாளியத்துக்குமுள்ள கூட்டணி என்னும் முகத்தை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த முகங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நாம் இந்த நாட்டில் நிறுவ விரும்புவது  உண்மையான ஜனநாயகத்தை, உண்மையான சுதந்திரத்தை, ஒவ்வொருவரின் சுதந்திரத்தை.

அந்த சுதந்திரம் வரும், அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றம், ஜனநாயகம் ஆகியவற்றோடு அந்த சுதந்திரம் வரும். அதனால்தான் நான் எனது நண்பர்கள் அனைவரிடமும் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வையுங்கள் என்று. நமது கருத்து சுதந்திரத்தை, நமது அரசமைப்புச் சட்டத்தை, நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பிளவுச் சக்திகளை - பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பிடம் தரும் சக்திகளை - எதிர்த்து நிற்கும் பொருட்டு  நமது நாட்டை ஒற்றுமைக்காக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியுள்ளது.
கஸாப் யார்? அஃப்ஸல் குரு யார்? தங்களைத் தாங்களே வெடித்துச் சிதறச் செய்து கொள்ள விரும்பும் கட்டத்திற்குச் சென்ற அந்த மனிதர்கள் யார்? இந்தக் கேள்வி ஒரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்படாவிட்டால், அத்தகைய பல்கலைக் கழகம் இருப்பதற்குப் பொருளே இல்லை.

வன்முறை என்பதை வரையறுக்காவிட்டால், வன்முறையை உங்களால் எவ்வாறு காண முடியும்? வன்முறை என்பது ஏதோ துப்பாக்கிகளால் மக்களைக் கொல்வது மட்டுமே அல்ல. அரசமைப்புச் சட்டத்தால் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ஜே.என்.யு. நிர்வாகம் மதிக்க மறுப்பதும்கூட வன்முறைதான். இதுதான் நிறுவனம்சார்ந்த வன்முறை எனக் கூறப்படுகிறது. இந்த மனிதர்கள் (சங் பரிவாரத்தினர்)  நீதி பற்றிப் பேசுகிறார்கள்.  எது நீதி என்று தீர்மானிப்பது யார்? பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியபோது, தலித்துகள் கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் நாய்களும் இந்தியர்களும் உணவு விடுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்தக் காலத்தில் அதுதான் நீதியாக இருந்தது. இந்த நீதிக்கு நாங்கள் சவாலிட்டோம். இன்றும்கூடத்தான், நீதி பற்றி ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் ஏ.பி.வி.பி.யும் கொண்டுள்ள கருத்தை எதிர்த்துப் போராடுகிறோம்.

நீதி பற்றிய உங்களது கருத்தில் நீதி பற்றிய எனது கருத்து உள்ளடக்கப்படாவிட்டால், நீதி பற்றிய உங்கள் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒவ்வொருவரும் அரசியலமைப்புச் சட்டரீதியாகத் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறும் போதுதான் இந்த நாட்டை சுதந்திர நாடு  எனக் கருதுவோம். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலைப்புச் சட்டத்தின் கீழ் சரிசமமானவர்களாக இருக்கும்போது, நீதி இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்முறை எதனையும், பயங்கரவாதி எவரையும், பயங்கரவாதத் தாக்குதல் எதனையும், தேச-விரோத நடவடிக்கை எதனையும் ஆதரிக்காது. சந்தேகத்துக்கு இடமற்ற உறுதியான வார்த்தைகளில் இதை நான் மீண்டும் அறுதியிடுகிறேன். அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை எழுப்பினர். அவர்களை ஜே.என்.யு.மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

ஜே.என்.யு. நிர்வாகம், ஏ.பி.வி.பி.ஆகிய இரண்டுக்கும் பொதுவான கேள்வியொன்றை எழுப்ப விரும்புகிறேன். இந்த வளாகத்தில் ஆயிரம் விஷயங்கள் நடக்கின்றன. தயவு செய்து எ.பி.வி.பி.யின் முழக்கங்களைக் கவனமாகக் கேளுங்கள். அவர்கள், “கம்யூனிஸ்ட் நாய்கள்” என்று கூறுகிறார்கள். “அப்ஃஸல் குரு என்னும் நாயின் குட்டிகள்” , “ஜிஹாதியின் பிள்ளைகள்” என்று கூறுகிறார்கள். இந்த அரசமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமையை நமக்கு வழங்கியிருக்குமானால், எனது தந்தையை நாய் என்று சொல்வது நமக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காலில் போட்டு மிதிப்பது ஆகாதா என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? இதை நான் ஏ.பி.வி.பி.யிடம் கேட்கிறேன். இந்தக் கேள்வியை ஜே.என்.யு. நிர்வாகத்திடம் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? யாருடன் வேலை செய்கிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் வேலை செய்கிறீர்கள்?

இன்று ஒரு விஷயம் முழுமையாகத் தெளிவாகிவிட்டது: ஜே.என்.யு. நிர்வாகம் முதலில் அனுமதி வழங்குகிறது. பிறகு நாக்பூரிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அனுமதியை அது திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அனுமதி கொடுப்பதும், பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கு, மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதும் பிறகு அதைத் திரும்பப் பெறுவதுமான நிகழ்வுப்போக்கைப் போலவே அடிக்கடி நிகழ்கிறது. உதவித் தொகை அதிகரிக்கப்படுவதாக முதலில் அவர்கள் அறிவிப்பதும், பிறகு அதற்கு நேர்மாறாக, உதவித் தொகை நிறுத்தப்படுவதாகச் சொல்வதும் போன்றதுதான் இது. சங் பரிவாரம் செயல்படும் பாணி இதுதான். ஆர்.எஸ்.எஸ். - ஏ.பி.வி.பி.பாணி. இந்த பாணியில்தான் அவர்கள் நாட்டை நடத்த விரும்புகிறார்கள். இதே பாணியில்தான் அவர்கள் ஜே.என்.யு.வை நடத்துகிறார்கள்.

ஜே.என்.யுவின் துணை வேந்தரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஜே.என்.யு.வளாகத்தில் சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. உணவு விடுதிகளில் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. உங்களுக்குப் பிரச்சினை இருந்திருந்தால், நீங்கள் அனுமதி கொடுத்திருக்கக்கூடாது. ஆனால், நீங்கள் அனுமதி கொடுத்திருந்ததால், அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்கான காரணம் என்ன  என்பதைப் பல்கலைக் கழக நிர்வாகம் தெளிவுபடுத்தியாக  வேண்டும்.

இந்த மனிதர்களைப் பற்றிய உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் யாரையும் வெறுப்பதில்லை. எனவே  தயவு செய்து அவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள். உண்மையில் அவர்களுக்கு நான் இரக்கப்படுகிறேன். அவர்கள்  சும்மா பீற்றித் திரிபவர்கள். ஏன்? கஜேந்திர செளஹான் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக உட்காரச் செய்யப்பட்டது போல, தங்களுக்கும் ஒரு செளஹான், திவான், ஃபர்மான் (அரசனின் முத்திரை தாங்கிய ஆணை - எஸ்.வி.ஆர்.) கிடைக்கும் என்று நம்புகிறார்கள். தாங்களும் ஃபர்மான்களை அனுப்புவோம், இந்த ஃபர்மான்களைக் கொண்டு தங்களுக்கும் தொடர்ந்து வேலைகள் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறார்கள். அதனால்தான், அவர்கள் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கத்தும்போது,  அது அவர்கள் பதவிகளுக்கான நேர்காணலுக்குத் தயாராகும் தருணம் வந்துவிட்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், பதவி கிடைத்தவுடன் தேசபக்தியையையும் பாரத மாதாவையும்  மறந்துவிடுவார்கள். மூவண்ணக் கொடி ஒருபுறமிருக்கட்டும்  - அதை அவர்கள் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை, காவிக் கொடியையும் மறந்துவிடுவார்கள்.

இது எந்த வகையான தேசபக்தி என்று அவர்களைக் கேட்க விரும்புகிறேன். வேலைக்கு அமர்த்துபவர், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியரை  நன்றாக நடத்தாவிட்டால், விவசாயி தொழிலாளியை நன்றாக நடத்தாவிட்டால், முதலாளி தனது தொழிலாளர்களை முறையாக நடத்தாவிட்டால், ரூ15000த்திற்கு வேலை செய்யும் தொலைக்காட்சி நிருபரை அவரது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சரியாக நடத்தாவிட்டால், இது எந்த வகையான தேசபக்தி என்று கேட்க விரும்புகிறேன்.

ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி என்பது இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுப் போட்டிகளோடு மட்டும் நின்றுவிடுவதுதான். அதனால்தான், அவர்கள் தெருக்களில் வரும் போது, பழம் விற்பவரை மோசமாக நடத்துகிறார்கள். “ஐயா, ஒரு டஜன் வாழைப் பழத்தின் விலை ரூ 50” என்று அவர் சொல்லும்போது, அவர்கள் வசவுகளை அவிழ்த்துவிட்டு , “நீங்களெல்லாம் எங்களைக் கொள்ளயடிக்கிறீர்கள். நாங்கள் ரூ 30தான் தருவோம்” என்று கூறுகிறார்கள். ஆனால், பழம் விற்பவர் ஒரு நாள் அவர்களை எதிர்த்து நின்று, “ நீங்கள்தான் ஆகப்பெரும் கொள்ளைக்காரர். கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளீர்கள்” என்று கூறினால் என்ன நடக்கும்? அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.) பழம் விற்பபவரை தேச-விரோதி என்று முத்திரை குத்துவார்கள்.

ஏ.பி.வி.பி.யில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். “ தேசபக்தி உடையவர்களாக உண்மையிலேயே  நீங்கள் உங்களைக் கருதுகிறீர்களா? என்று நான் அவர்களிடம் அடிக்கடி கேட்பதுண்டு. அவர்கள் சொல்வார்கள்: “ என்ன செய்வது? அரசாங்கத்துக்கு ஐந்தாண்டுக் காலம் இருக்கிறது. இரண்டாண்டுகள் கழித்துவிட்டன. மூன்றாண்டுப் பேச்சுக் காலம் எஞ்சியுள்ளது. எதையெல்லாம் நாங்கள் செய்ய வேண்டுமோ, அதை எஞ்சியுள்ள இந்த ஆண்டுகளில் செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறுவார்கள். ஆகவே, அவர்களிடம் நான் சொல்வேன், “ஜே.என்.யுவைப் பற்றி நீங்கள் பொய் சொன்னால், நாளை யாரேனும் ஒருவர் உங்கள் சட்டைக் காலரையும்கூட பிடித்துவிடக் கூடும்; அப்படிச் சட்டைக் காலரைப் பிடிப்பவர், உங்கள் நண்பர்களிலொருவராக, ரயில் வண்டிகளில் மாட்டுக் கறி இருக்கிறதா என்று சோதனை செய்யக்கூடியவர் போன்ற உங்கள் நண்பரொருவராக  இருக்கலாம். அவர் உங்களைப் பிடித்து, வதைத்து, நீங்கள் ஜே.என்.யு.மாணவர் என்பதால் நீங்களும் தேச விரோதிதான் என்று சொல்லலாம். நீங்கள் இப்போது செய்வதிலுள்ள ஆபத்தை உணர்ந்திருக்கிறீர்களா?”

“நாங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம், அதனால்தான் ஜே.என்.யுவை மூடுவதை எதிர்க்கிறோம்” என்று அவர்கள் சொல்கிறார்கள். “பிரமாதம்,  முதலில் ஜே.என்யு.வை மூடுவதற்கான சூழலை உருவாக்குவது, பிறகு, நீங்கள் ஜே.என்.யுவில் தங்க வேண்டியிருப்பதால், அதை மூடுவதை எதிர்ப்பது”  என்று அவர்களிடம் கூறினேன். அதனால்தான் ஜே.என்.யு. மாணவர்களாகிய உங்களிடம் சொல்கிறேன், மார்ச் மாதம் (மாணவர் சங்கத்துக்கான) தேர்தல் நடக்கப் போகிறது. ‘ஓம்’ சின்னத்துடன் ஏ.பி.வி.பி.யினர் உங்களிடம் வருவர். தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்: “நாங்கள் தேச விரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள். எங்கள் வாக்குகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்களும் தேச விரோதியாகிவிடுவீர்கள்”. 

இப்படிச் சொல்வதை உறுதி செய்யுங்கள். பிறகு அவர்கள் சொல்வார்கள் : “இல்லை, இல்லை. அப்படிப்பட்டவர்கள் நீங்களல்லர். வேறு யாரோ சிலர்தான் அப்படிப்பட்டவர்கள்”. பிறகு நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் : “தேசவிரோதிகள், ஜிஹாதி பயங்கரவாதிகள் என்பவர்கள் வேறு யாரோ சிலர்தான்  (ஜே.என்.யு.வைச் சேர்ந்த அனைவரும் அல்லர்) என்று ஏன் ஊடகங்களின் முன் நீங்கள் கூறவில்லை? உங்கள் துணை வேந்தர் ஏன் இதைச் சொல்லவில்லை?  உங்களது பதிவாளர் இப்படிச் சொல்லவில்லையா?”

யார் அந்த ஒரு சிலர்? “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்பவில்லை என்று அவர்கள் சொல்கிறார்களா? அந்த ஒரு சிலர் நாங்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர் என்று கூறவில்லையா? அந்த ஒரு சிலர், முறைப்படி பெறப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெறுவது தங்களது ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் என்று கூறுவதில்லையா?  நாட்டின்  ஏதோவொரு பகுதியில் சண்டை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் நாங்களும் அதில் சேர்ந்து நிற்போம் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் (ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ்.- எஸ்.வி.ஆர்.) இந்த சின்ன விஷயத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்*. ஆனால், குறுகிய கால அவகாசத்தில் இங்கு கூடியுள்ளவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இந்த வளாகத்திலுள்ள ஒவ்வொரு மாணவரிடமும் செல்ல வேண்டும். ஏ.பி.வி.பி., இந்த நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது. ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றது.  நாம் ஜே.என்.யுவைப் பிளவுபடுத்த விட மாட்டோம். ஜே.என்.யு. நீடூழி வாழ்க! இப்போது நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் அனைத்திலும், ஜே.என்.யு.முழுமையாகப் பங்கேற்கும். ஜனநாயகத்தின் குரலை, சுதந்திரத்தின் குரலை, கருத்து சுதந்திரத்தை  வலுப்படுத்தும்.

நாம் முன்னேறிச் செல்வோம். நாம் போராடுவோம். நாம் வெற்றி பெறுவோம். இந்த நகரத்தின் துரோகிகளைத் தோற்கடிப்போம். இந்தச் சொற்களுடன், ஒற்றுமைக்கான வேண்டுகோளை விடுக்கிறேன்.
ஜெய் பீம், லால் சலாம்!
  நன்றி: Countercurrents.org, 18 February, 2016

 


· அஷ்ஃபகுல்லா கான்: உத்தரப்பிரதேசத்திலுள்ள ஷாஜஹான்பூரில் பிறந்த இவர், ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன்’ என்னும் அமைப்பில் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால், சதி, தேச துரோகக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு, அவருடைய நண்பரும் போராட்டத் தோழரும் அவரைப் போன்ற உருதுக் கவிஞருமான பிஸ்மில்லுடன் சேர்த்துத் தூக்கிலிடப்பட்டார். பிஸ்மில் பிறப்பால் ஓர் இந்து.

* கன்னைய குமாரின் உரை எழுதி வாசிக்கப்பட்டது அன்று. எனவே, வாக்கிய அமைதியை உரையின் எல்ல இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது. எனினும் இந்தக் குறிப்பிட்ட வாக்கியம் சற்றுக் குழப்பத்தைத் தருகிறது. அதன் ஆங்கில மூலம் பின்வருமாறு: “They will never understand this small thing”. அவருடைய உரையில் இந்த வாக்கியம் இடம் பெறும் பத்தியைக் கருத்தில் கொளகையில் ‘They’  என்று அவர் இங்கு குறிப்பிடுவது ஏ.பி.வி.பி.-ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றைத்தான் என்று கொண்டு, அவ்வாறே மொழியாக்கம் செய்துள்ளேன் -எஸ்.வி.ஆர்.

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...