சனி, டிசம்பர் 31

கரீம் கோருவது வக்கணையான பதில்களையல்ல, மாற்றத்தை -ஆதவன் தீட்சண்யா

தோழர் அ.கரீம் அவர்களின் "தாழிடப்பட்ட கதவுகள்" சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

இந்த முன்னுரையை எழுதத் தொடங்கும் இவ்வேளையில், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இருந்து வெளியாகிவரும் செய்திகள் உலகெங்கும் மீண்டுமொரு முறை இஸ்லாமிய வெறுப்பை பரப்புவதற்குரிய கெடுவாய்ப்பை வழங்கியுள்ளன. கிருஸ்துமஸ் கால கொண்டாட்டங்களுக்காக அந்நகரில் கூடியிருந்த சந்தைக்குள் கனரக லாரி ஒன்றை தறிகெட்ட வேகத்தில் ஓட்டிய ஒருவர் 12 பேரின் உயிரைப் பறித்ததோடு பலரை படுகாயப்படுத்தியுமிருக்கிறார். இந்த பயங்கரவாதச் செயலில் சம்பந்தப்பட்டவர் என்று அகதிநிலை கோரி வந்த பாகிஸ்தானியர் ஒருவர் எடுத்தயெடுப்பில் கைதுசெய்யப்பட்டார். பிறகு அவர் தவறாக அடையாளம் காணப்பட்டவர் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய துனிஷியாவைச் சார்ந்த ஒருவர் தான் உண்மையான குற்றவாளி என்கிற செய்தி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பெயரால் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் தமக்கும் தமது மார்க்கத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை ஜெர்மானிய இஸ்லாமியர்களும் அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் நம் காலத்தின் அணுகுண்டு இஸ்லாம் என்பது போன்ற வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது. இஸ்லாமியர் மீதான ஒரு தாக்குதல் பரவலாக நடத்தப்பட வேண்டும்  என்கிற விஷமம் தூண்டப்படுகிறது. ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் நடவடிக்கைக்கு ஒரு மதத்தவர் அனைவரையும் பொறுப்பாக்குவதும் அதன் பேரில் தாக்குவதும் தண்டிப்பதும் வெறுத்தொதுக்குவதும் எவ்வகையில் நியாயம்? பெர்லினிலிருந்து எழும் இதே கேள்வியைத்தான் கோவையிலிருந்து தோழர் கரீம் தமது கதைகளின் வழியே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக திரும்பத்திரும்ப எழுப்பி வருவதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் கரீமின் கதைகள் இந்தக் கேள்விக்கும் அப்பால் ஊடுருவிப் போகின்றன.

சிக்கல் சிடுக்காகவும் கோணல்மாணலாகவும் வரிசைக்குலைந்தும் போயிருக்கின்ற அன்றாட நடப்புகளுக்குள் ஒப்புமை கொண்டிருக்கின்ற புள்ளிகளை இணைக்கும் போக்கில் அல்லது ஒன்றேபோல் தோன்றுகின்றவற்றுக்குள் இருக்கின்ற தனித்துவங்களைப் பகுக்கும் போக்கில் கரீமின் கதைகள் உருவாகுகின்றன. இஸ்லாமியருக்கு எதிராக காவி பயங்கரவாதிகளால் நாடு முழுவதும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த வெறுப்பரசியல் கோவைக்குள் எப்படி பரவியது, அதன் பின்னே இருந்த சக்திகள் எவை, அவற்றின் நோக்கம் மற்றும் விளைவுகள் என்ன என்பதையெல்லாம் பாதிக்கப்பட்டவரின் அகவோட்டத்திலிருந்து முன்வைக்க இக்கதைகள் முயற்சிக்கின்றன.

குடிப்பரம்பல், குடும்ப அமைப்பு, உறவுமுறைகள், சமூக நிறுவனங்கள், வசிப்பிடம், வாழ்வாதாரம், வாழ்க்கைவட்டச் சடங்குகள், தொழில் மற்றும் வணிகம், உழைப்பு, இறைமார்க்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றினூடாக கோவையில் இஸ்லாமியர் குறித்த ஒரு நிறைவடைந்த சித்திரம் கதைகளின் வழியே நமக்கு கிடைக்கிறது. கோட்டைமேட்டின் மக்கள்தொகையில் 80 சதமானோர் இஸ்லாமியர் என்றபோதிலும் இறைமார்க்கம் ஒன்றைத் தவிர பிற யாவற்றிலும் யாவரும் இணங்கி வாழ்ந்த காலமொன்று அங்கு இருந்திருக்கிறது. கோட்டைமேடு, பெரிய கடைவீதி, உக்கடம் போன்ற பகுதிகளின் நடைபாதை வியாபாரிகளில் பெரும்பாலோர் பொருளாதார வலுவில்லாத மிகவும் அடிநிலை முஸ்லிம்கள். இவர்களையொத்த பிற மதத்தவரும் அதிகப்படியான முதலீடு தேவைப்படாத இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கிடையில் வியாபாரரீதியாக போட்டி பொறாமை இருந்துவந்த போதிலும் அது இணங்கிவாழ்வதற்கு ஒருபோதும் தடையாக இருந்திருக்கவில்லை. ஆனால் இந்த ஒற்றுமையில் கோடாலி பாய்ச்சும் கெடுநோக்கில் அங்கு காவி பயங்கரவாதம் ஊடுருவியதை அதற்கேயுரிய பதைப்போடு பேசுகின்றன கதைகள். 

அசீமானந்தா, நாடு முழுவதும் நடந்த பல்வேறு பயங்கரவாத அழிவுகளில் தொடர்புடைய காவி பயங்கரவாதி. அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக ராமகிருஷ்ணா மடத்துக்காரர்கள் விவேகானந்தரை சாதுபோல சித்தரித்து பரப்பிவிட்டதாக நொந்துகொள்ளும் அவர், பிறமதத்தவரை வெறுப்பதற்கான ஆதர்சத்தை தான் விவேகானந்தரிடமிருந்தே பெற்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். உலக மக்கள் அனைவரையும் சகோதர சகோதரிகளே என விளித்தவர் என்று காட்டப்பட்ட விவேகானந்தரை துருப்புச் சீட்டாக வைத்து காவிபயங்கரவாதிகள் இளைஞர்களிடையே ஊடுருவுகிறார்கள். பின் அப்பேர்ப்பட்டவரே பிறமதத்தவரை வெறுத்தவர்தான் என்பதாக கூறி அவர்கள் இந்துத்துவ வெறியை ஏற்றுகிறார்கள். கோவையிலும் அதுதான் நடந்திருக்கிறது. விவேகானந்தரும் விளையாட்டுத்திடல்களும் விநாயகர் சிலையும் யோகாவும் உடற்பயிற்சியும் ஆன்மீகமும் காவிபயங்கரவாதிகளால் வெகு லாவகமாக கையாளப்பட்டதற்கு கரீமின் கதைகள் சாட்சியங்களாகின்றன.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு ஏற்றதோர் அரசு இயந்திரம் இங்கு இன்னும் உருவாகவேவில்லை. அவ்வாறு உருவாகாமல் போவதற்கான அடிப்படைக் கோளாறு அரசியல் சாசனத்திலேயே ஒருவேளை இருக்கிறதோ என்கிற சந்தேகமும் பலரால் எழுப்பப்பட்டே வருகிறது. அரிதான சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலான நேரங்களில் அரசு இயந்திரமானது மேட்டுக்குடி நலன்களையும் பெரும்பான்மை மதவாதத்தையும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவே இயங்கிவருகிறது. நடுநிலையாக இயங்கி பிரச்னைகளை கையாள்வதற்கு பதிலாக அது ஒரு தரப்பாக மாறி நீதியின் இடத்தில் தன் சொந்த நலன்களை நிரப்பி அதிகாரத்தால் நிலைநிறுத்தி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக நாம் கோவையில் காவல்துறையின் செயற்பாடுகளை கூறமுடியும். 

* பாபர் மசூதியை தகர்ப்பதற்கு காவி பயங்கரவாதிகள் மேற்கொண்ட முன்தயாரிப்புகளினூடாக நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வெறுப்பரசியலை காவல்துறை தடுக்காமல் போனதற்கு காரணம் அதற்குள் இயல்பாகவே ஊறிப்போயிருந்த இந்துத்துவ சார்புநிலை. மசூதி தகர்ப்புக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்த பாதுகாப்பற்ற மனநிலையையும் துயரத்தின் கொந்தளிப்பையும் ஆற்றுப்படுத்துவதற்கு பதிலாக காவல்துறையானது அவர்களை தனிமைப்படுத்தவும் ஒடுக்கவுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அது காவி பயங்கரவாதிகளோடு கைகோத்தது.

* பெரும்பாலும் இஸ்லாமியரும் அவர்களோடு கலந்திருந்த பிறருமான நடைபாதை வியாபாரிகளுக்கும் அவர்களை மிரட்டி தினசரி மாமூல் வசூலித்து வந்த காவல் துறையினருக்கும் இடையே நீண்டநாட்களாக மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்த அபகரிப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புகளில் அவர்கள் அணிதிரண்டதை காவல்துறையினர் ‘மாமூல் வாழ்க்கைக்கு’ விடப்பட்ட சவாலாகவே எடுத்துக்கொண்டு கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாமல் பணியவைக்கும் தாக்குதல்களை நடத்திவந்திருக்கின்றனர்.

* செல்வராஜ் என்கிற காவலர் ஒரு கிறித்துவர். இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை இஸ்லாமியர்களே பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கவும் செய்தனர். ஆயினும் ‘போலிஸ் மேலயே கை வச்சிட்டு நீங்க நிம்மதியா இருந்துடுவீங்களா’ என்று முண்டா தட்டுகிற மூன்றாம்தர தமிழ்ச்சினிமா வில்லன்களைவிடவும் நயத்தக்க பண்பை காவல்துறையால் வெளிப்படுத்த முடியவில்லை. செல்வராஜ் கொல்லப்பட்டதை தனிப்பட்ட மோதலின் விளைவாக கருதாமல் இஸ்லாமியர்களின் கூட்டுக்குற்றமாக கருதி கூட்டுத்தண்டனை வழங்க வன்முறையை கையிலெடுத்தனர் காவல்துறையினர்.   ‘பாயன்கள்’ ஒரு இந்து போலிஸ்காரரைக் கொன்றுவிட்டதாக பொய் சொல்லி  அவர்களோடு காவி பயங்கரவாதிகளும் சேர்ந்தனர். காக்கிகளும் காவிகளும் சேர்ந்து கோவையில் நடத்திய வெறியாட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றார்கள். இஸ்லாமியரின் வீடுகள், கடைகள், தொழில்நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின் தீக்கிரையாக்கப்பட்டன.

* கோவை குண்டுவெடிப்புக்கும் கூட ஒட்டுமொத்த இஸ்லாமியரையும் பொறுப்பாக்கி தண்டிக்கும் போக்கினையே காவல்துறையும் அரசு நிர்வாகமும் கைக்கொண்டன. இதே நிலைப்பாடுதான் சமூகத்தின் பொதுக்கருத்தாக வளர்தெடுக்கப்பட்டது. மனித உரிமை, சிறுபான்மையினரின் நலன் என்றெல்லாம் பேசுகிறவர்கள்கூட ‘பாயன்களை’ ஒரு கட்டுக்குள் நிறுத்த என்னமும் செய்துதானாக வேண்டும் என்று காக்கி மற்றும் காவி பயங்கரவாதத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்து கருத்து சொல்லுமளவுக்கு நிலைமை இந்துத்துவமயமாகிப்போனது. 

- கரீமின் கதைகள் வழியே நாம் அறிய நேரும் கோவையின் 1990களின் நிலைமை 2016 ஆம் ஆண்டிற்கும் பொருந்துவதாக உள்ளது அவமானம்தான். அதிகாரப் போட்டி, நிதிவசூல், பாகம் பிரிப்பதில் தகராறு, பரபரப்பை உருவாக்கி கவனம் பெறுவது போன்ற தனிப்பட்ட பிரச்னைகளுக்காக காவி பயங்கரவாதிகள் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்வதும் ஆளையே தீர்த்துக்கட்டுவதும் பிறகு அந்தப் பழியை இஸ்லாமியர் மீது சுமத்தி கலவரம் செய்வதும் அதிகரித்து வருகிறது. 2016 செப்டம்பரில் கோவையில் சசிகுமார் என்கிற காவியிஸ்ட் கொல்லப்பட்டதற்கும்கூட இதைவிட பெரிய காரணங்கள் இருந்துவிடப் போவதில்லை. ஆயினும் இந்த சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டு காவி பயங்கரவாதிகள் இஸ்லாமியருக்கு எதிராக கோவையில் மீண்டும் ஒரு கலவரத்தை நடத்திமுடித்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் சொத்துகளை சூறையாடி அழித்ததோடு அவர்களது தொழில் மற்றும் வணிக நிறுவனங்களையும்  கொள்ளையடித்திருக்கிறார்கள். பிரியாணி அண்டாவைக்கூட விட்டுவைக்காமல் தூக்கிப் போயிருக்கிறார்கள். இந்த அட்டூழியங்கள் யாவும் காவல்துறையினரின் முன்னிலையில் தான் நடந்தன என்பதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. பத்திருபது பேர் கூடுகிற ஒரு சம்பிரதாயப் போராட்டத்தைக்கூட தடியடி நடத்தி கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைப்பதில் முனைப்பாய் இருக்கிற காவல்துறை சகல அதிகாரங்களும் ஆயுதங்களும் கைவசமிருந்தும்கூட ஏன் அமைதிகாத்தது? இந்தக் கேள்விக்கான பதிலை கரீமின் கதைகளுக்குள் அங்குமிங்குமாக கண்டடைய முடிகிறது.

இப்போது நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்விகள் சிலவுண்டு.
* ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் ஒட்டுமொத்த சமூக வாழ்வையும் சில தினங்களுக்கு முடக்கிப்போடுமளவுக்கு காவி பயங்கரவாதிகள் பலமடைந்திருப்பது எவ்வாறு?
* உண்மையில் கோவைப்பகுதி எந்த கருத்தியல் செல்வாக்கின் கீழ் இருக்கிறது?
* உயர்சாதியினரின் ஆதிக்கத்தை மீட்டெடுப்பதற்காக இயங்கும் காவியமைப்புகளின் அடியாள்படையாக இடைநிலை மற்றும் அடிநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்கள் ஏன் அணிதிரள்கிறார்கள்? 
* ஒரு தொழில் நகரம் என்றறியப்பட்ட அங்கு தொழிலாளி வர்க்க அமைப்புகள் தான் இருக்கின்றனவேயன்றி தொழிலாளி வர்க்க அரசியல் நடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு உண்மைதானா?
*  காவிகள் நடத்தும் ஒரு கலவரத்திற்கும் மறு கலவரத்திற்கும் இடைப்பட்ட காலத்தை தான் ‘அமைதிக்காலம்’ என்று நாம் தப்பர்த்தம் கொண்டிருக்கிறோமா?
* கோவைப்பகுதியில் காவி பயங்கரவாதம் நடத்திவரும் கலவரங்களை உள்ளடக்கமாகக் கொண்ட கதைகளை ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், சம்சுதீன் ஹீரா, கரீம் போன்ற இஸ்லாமியத் தோழர்களே ஏன் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்? இஸ்லாமியரல்லாத இலக்கியவாதிகளை இக்கலவரங்கள் பாதிக்கவில்லையா?  அல்லது இதிலொரு தரப்பாக இயங்குமளவுக்கு அவர்களின் மனம் இந்துமயமாகிக் கிடக்கிறதா?
* காவி பயங்கரவாதம் முழுவீச்சில் அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இயங்கிவரும் இக்காலத்தில் அதை  எதிர்கொள்ளவும் தடுக்கவும் உருப்படியாய் ஏதேனும் வேலைகள் நடக்கிறதா?   

இக்கேள்விகளுக்கான பதிலை நான் வாயடைத்துப்போகுமாறு விளக்கங்கள் வியாக்கியானங்களுடன் சொல்லக்கூடிய பலரை நானறிவேன். ஆனால் கலவரக்காலங்களில் உயிருக்கு அஞ்சி, பூட்டப்பட்ட வீட்டின் இருளுக்குள் வெறும் முருங்கைக்கீரையை அவித்துண்டு நாட்கணக்கில் மறைந்திருக்க நேரும் ஒரு சமூகத்தவராய் இருந்து கரீம் கோருவது வக்கணையான பதில்களையல்ல, மாற்றத்தை. 

இயலாமையுணர்வின் உளைச்சலோடு
ஆதவன் தீட்சண்யா
27.12.2016,  ஒசூர்.






இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...