சனி, மார்ச் 18

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...
1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?

ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெப்பமும் கடுங்குளிரும் கணிசமான மழைப்பொழிவும்  எங்கு பார்த்தாலும் ஏரிகள் நிறைந்த நீர்வளமும் கொண்ட பகுதி இது. பல்வேறு தமிழக மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்திருந்த போதிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு அல்லது கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். புதிய ஊர் என்பதை குறிக்கும் ஒச ஊரு என்கிற கன்னடச்சொற்களே ஒசூர் என மருவியது. 

திப்புவின் ஆளுகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷார், தங்கள் நாட்டின் தட்பவெப்பமே நிலவும் இப்பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து எனச் செல்லப் பெயரிட்டு கொண்டாடினர். அப்போதைய சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் மாற்றப்பட்டதற்கும் இதுவே காரணம். தங்களது உணவுத்தேவைக்கான புன்செய் தானியங்கள், மலர்வகைகள், மல்பரி ஆகியவற்றை பாரம்பரியமாக விளைவித்துவந்த இப்பகுதி மக்கள் காலப்போக்கில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் பீட்ருட் பீன்ஸ் காலிஃபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிச் சாகுபடிக்கு மாறினர். 1824 ஆம் ஆண்டு ஒசூர் மத்திகிரியில் தொடங்கப்பட்ட குதிரைப்பண்ணை பிறகு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றாக மாறி உள்ளூர் மக்களில் பலருக்கும்  வேலை வாய்ப்பளித்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தொட்டு இப்பகுதியில் பணியாற்றுவதற்கென்று  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் தங்களது பணிக்காலத்தின் முதற்கட்டத்தை இங்கேதான் தொடங்கவேண்டியிருந்தது. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து தட்பவெப்பம், மொழி, பண்பாட்டுச்சூழல், வாழ்க்கைத்தரம் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட இப்பகுதியில் பணியாற்றுவதை கடும் தண்டனையாகவே இவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இங்கிருந்து மாற்றலாகிப் போனால் போதும் என்கிற கவலையால் பீடித்திருந்த இவர்களில் பலரும் உள்ளூர் சமூகத்தோடு ஒன்றாமலே இருந்திருக்கிறார்கள்.

***

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென 1971ல் உருவாக்கப்பட்ட சிப்காட் நிறுவனம், ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது தொழிற்பேட்டையை ஒசூரில் 1974 ஆம் ஆண்டு 1236 ஏக்கரில்  தொடங்கியது. (பிறகு 1980ல் 457 ஏக்கர், 1997ல் 179 ஏக்கர், 2004ல் 239 ஏக்கர் என விரிவடைந்தது.) மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சியோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை இதுவென சொல்லிக் கொள்ளப்பட்டாலும் பெங்களூருக்கு அருகாமை என்பதே ஒசூர் தேர்வானதற்கு முக்கிய காரணம். உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவடைந்து அடுத்துவந்த சில ஆண்டுகளில் ஒசூர் நகரத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை ஆகிய ஊர்களுக்கான சாலைகளின் இருமருங்கிலும் ‘குண்டூசி முதல் குட்டி விமானம் வரை’ செய்வதற்கான நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகின. ஆயினும் இவற்றில் ஒன்றுகூட உள்ளூர் மக்களின் உழைப்பையும் ஆற்றலையும் உள்வாங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தன்மையையோ நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. மாவட்டத்தின் அப்போதைய சராசரி எழுத்தறிவே 29 சதவீதம் என்றிருந்த நிலையில் அதன் கட்டக்கடைசியான ஒசூர் பகுதியிலிருந்து இந்த நவீனத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியோடு தயார்நிலையில் யாரிருப்பார்கள்? தங்களது மண்ணை விழுங்கி உருப்பெற்றுள்ள இத்தொழிற்பேட்டை தங்களுக்கானவை அல்ல என்கிற கடும்பாடத்தை உள்ளூர் மக்கள் எடுத்தயெடுப்பிலேயே விளங்கிக்கொண்டார்கள். தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் அல்லது காவலர் போன்ற கடைநிலை ஊழியங்கள்தான் அவர்களில் சிலருக்கு கிடைத்தன.  

2.  ஓசூர் தொழில்மயமானபோது, அங்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள் நிலை எப்படி இருந்தது? பிறகு அங்கே மாறிய சமூக, சாதிய சூழ்நிலைகள் பற்றி சொல்லுங்கள்?

எவ்வளவுதான் அதிநவீன இயந்திரமாயினும் மனிதக்கரங்கள் தான் அவற்றை தொட்டு உயிர்ப்பிக்கின்றன என்கிற பார்வை இங்கு மங்கலாகக்கூட அரசாங்கத்திற்கு கிடையாது. அதனால்தான், தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலதனம், இடம், தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, வரிவிலக்கு, சட்டப்பாதுகாப்பு என அனைத்தையும் முதலாளிகளுக்கு வழங்கிவிட்டு, அவற்றில் பணியாற்ற வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது.  நாடு முழுவதுமிருந்து இங்கு வந்து குமிந்த தொழிலாளர்கள் தங்குமிடம் கழிப்பறை தண்ணீர் உணவு என்று ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியிருந்தது. முதலாவதாக, இங்கு நிலவிய தட்பவெப்பம் அவர்களில் பலருக்கும் புதிது. ஜூனில் தொடங்கி நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி கடைசிவரை பனி. அதிகாலையில் பகல் வேலைக்கு (டே ஷிஃப்ட்) கிளம்பினாலும் இரவுப்பணிக்குப் போய் திரும்புவதாயிருந்தாலும் வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குளிரால் நடுங்க வேண்டியிருந்தது. 1984ல் நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி (ஹீட்டர்) பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும் குளிர்கால ஆடைகளோடு நடமாட வேண்டியிருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் கூட மின்விசிறியின் தேவை உணரப்படாத காலமது. வெயிலடிக்கும், ஆனால் உறைக்காது, வியர்வையே வராது. எளிதில் களைப்படைய - ஆனால் ஒருவிதமான மந்தத்தன்மையை உருவாக்குவதாக இருந்தது இந்தத் தட்பவெப்பம். 

அடுத்தது, இவர்கள் அவ்வளவு பேரையும் தங்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எண்ணிக்கையில் இப்பகுதியில் வீடுகள் இல்லை. ஒசூர் பகுதி மக்கள் தமக்கென கட்டி வாழ்ந்துவந்த பூர்வீக வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள். தேவையின் தீவிரத்தை ஒருவாறு யூகித்துக்கொண்ட சிலர் வாடகைக்கு விடுவதற்கென்றே அவசரடியாக வீடு போன்றவற்றை கட்டினார்கள். தொழிலாளர்களில் பலரும் படித்து முடித்தக் கையோடு வேலைக்கு கிளம்பி வந்தவர்கள். அவர்களுக்கு தனியாக அறையோ வீடோ தேவைப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க அவ்வாறு எடுத்து தங்குமளவுக்கு அப்போது அவர்களது வருமானமில்லை. எனவே அவர்கள் சின்னஞ்சிறு அறையைக் கூட நாலைந்து பேராக பகிர்ந்துகொண்டார்கள். வீடு என்றால் பத்து பதினைந்து பேர் வரை கூட நிறைந்திருப்பார்கள்.

சாதி மதம் வட்டாரம் என்பதெல்லாம் அவரவர்களுக்குள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவை அவர்கள் பிறரோடு கலந்து ஓரிடத்தில் வாழ்வதற்கு தடையாக இருக்கவில்லை. முன்பின் தெரியாத ஊரில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் அனிச்சையாக வந்த சேர்ந்தார்கள். பணி நேரத்தில் சில ஆலைகள் உணவு வழங்கினாலும் ஒருவேளையாவது வெளியில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம், ஆனால் போதுமான உணவகங்கள் கிடையாது. நிரந்தரமாக கடையில் சாப்பிடுவதற்கு அவர்களது வருமானமும் ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டாக சமைத்து உண்டார்கள். சாப்பாட்டில் அவர்கள் எதையும் விலக்கிவைத்ததில்லை. சம்பளம் வாங்கும் வாரத்தில் ஆட்டுக்கறியில் தொடங்கி கோழி மீன் பன்றி என்றாகி மாதக்கடைசியில் மாட்டிறைச்சி வாங்கி சமைத்துண்பது என்பதாக இருந்தது அவர்களது தெரிவு.

வாழிடம் பணியிடம் சார்ந்து தொழிலாளிகளிடம் முகிழ்த்துவந்த உணர்வு வர்க்க உணர்வாக மாறவேண்டிய கட்டாயத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் உருவாக்கிவந்தன. புதிதாக தொடங்கப்பட்டவை என்று முதல் பத்தாண்டுகளுக்கு வரிமான வரி கட்டுவதிலிருந்தும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதிலிருந்தும் தொழிற்சாலைகள்  விலக்கு பெற்றிருந்தன. இதனால் வேலை நேரம், ஊதிய மாற்றம், போனஸ், மருத்துவச் சிகிச்சை, விபத்துக் காப்பீடு, பணி நிரந்தரம், விடுமுறை, வாராந்திர ஓய்வு போன்றவற்றை நிர்வாகங்கள் மறுத்துவந்தன. சலுகைக்காலம் முடிந்தப்பின்னும் கூட நிர்வாகங்கள் இந்த நிலையை நீட்டித்து வந்தன. சங்கம் வைப்பதற்கும்கூட அனுமதிக்காத போக்கு. குறைந்தக்கூலியில் அதிக உழைப்பைப் பெற்றுவிட வேண்டும் என்கிற லாபவெறிக்கும், செலுத்திய உழைப்புக்கு நியாமானதொரு ஊதியத்தைப் பெற்றுவிட வேண்டும் என்கிற இயல்பெண்ணத்திற்கும் இடையேயான மோதல் பல்வேறு தொழிற்சாலைகளில் அமைதியின்மையை உருவாக்கியது. மக்கள்தொகைப் பெருக்கம், கடும் வாடகை, விலைவாசி, உழைப்புச்சுரண்டல், குறைந்தக் கூலி  என்பதான பல்முனைத் தாக்குதலை எதிர்த்துப் போராடும்படியான நெருக்கடிக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரசு ஊழியர்களைப் போல மாற்றல் வாங்கிக்கொண்டு வேறெங்கும் போய்விடுவதற்கான வாய்ப்பேதும் தொழிலாளர்களுக்கு இல்லை. இங்குதான் இனி வாழ்க்கை என்றான பிறகு இடர்ப்பாடுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தி புகாரிட்டுக்கொண்டிருப்பதை விட, இப்பகுதியை வாழத் தகுந்ததாக மாற்றிக்கொள்வது அவசியமாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டங்கள் அவர்களது சொந்தவாழ்க்கையில் மட்டுமல்லாது ஒசூர் பகுதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கின.

18-20 வயதில் வேலைக்குச் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்ட தொழிலாளர்கள் அடுத்துவந்த சில ஆண்டுகளில் திருமணத்தை நோக்கி நகர்ந்த போது தனித்தனி வீடுகள் தேவைப்பட்டன. அவர்களுக்கு வாடகைக்கு விடவும் விற்கவும் புதிதுபுதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. பூர்வீகத்திலிருந்த சொத்து எதையேனும் விற்றோ அல்லது கடன்பட்டோ இங்கு சொந்த வீடுகளைக் கட்டினார்கள். தொடக்க ஆண்டுகளில் அரிதாக ஒன்றிரண்டு நிறுவனங்களில் மட்டுமே சில பெண்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார்கள். திருமணமாகி இங்கு வந்தப் பெண்களில் ஒருபகுதியினர் குடும்பச்செலவுக்கு ஒத்தாசை என்கிற அளவில் தத்தமது கல்விக்கேற்ப சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவரை ஆண்களின் தொழிற்பேட்டை என்றிருந்த ஒசூரின் முகம் இருபாலருக்குமானதாக மாறத்தொடங்கியது. தொழிலாளர்கள் தமது வருமானத்தை சுண்டுவிசையாக வைத்து மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், திரையரங்குகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வாகன விற்பனை நிலையங்கள் போன்றவற்றை இங்கு வரவைத்தார்கள். அதுவரை இப்பகுதிக்கு பெரிதும் அறிமுகமாகியிருக்காத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொழுதுபோக்குகள், கலைவடிவங்கள், தெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், உணவுவகைகள் ஆகியவற்றை கொண்டுவந்து சேர்த்தவர்களும் தொழிலாளர்கள்தான். 


தனிப்பையன்களாக இருந்தவரையிலும் யாவரோடும் கலந்துண்டு வாழ்ந்த தொழிலாளர்களை திருமணம் மீண்டும் அவரவரது சொந்த சாதிக்குள் கொண்டு போய் திணித்தது. ஒண்ணும் மண்ணுமாய் உருண்டுபுரண்ட நட்பும் தோழமையும் முடிவுக்கு வந்தன. பொது இடங்களில் அல்லது பணித்தளத்தில் மட்டுமே  சந்தித்துக்கொள்கிறவர்களாக நண்பர்கள் மாறினர். எத்தனை பேர் வந்தாலும் ஏற்று இடமளிக்கும் விசாலத்தை சின்னஞ்சிறு அறைகள் கொண்டிருக்க, பென்னம்பெரிய தனித்த வீடுகளோ சொந்த சாதி மட்டுமே புழங்கும் இடமாக சுருங்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் தான் வெவ்வேறு தொழிற்சாலைகளில் சிதறுண்டிருக்கும் தத்தமது சாதியினரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் சாதிய அமைப்புகள் உருவாகின. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகிவந்த தொழிலாளி என்கிற நவீன அடையாளத்தை சாதியம் என்கிற நச்சுணர்வு காத்திருந்து காவு கொண்டது. இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் அஞ்சத்தக்கவிதமாக வளர்ந்தவந்த மதவாதத்தில் கரைவதற்கு அது தொழிலாளர்களை தகவமைத்தது.

3. 90களில் உலகமயமாதலின் தாக்கம் ஒசூரை எப்படி பாதித்தது?

தொழில் நகரம் என்கிற அடையாளத்தை உலகமயமும் புதிய தொழிற்கொள்கையும் போக்கடித்தன.

* பெங்களூருக்கு அருகாமை, இதமான பருவநிலை, ஏறுமுகமான நிலமதிப்பு ஆகியவற்றுக்காக இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கறுப்புப்பணத்தால் வாங்கி கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சொந்தமண் மீதிருந்த பாத்யதையை முற்றுமுழுதாக இழக்கத் தொடங்கினர்.

* கட்டற்றச் சந்தை உலகளாவிய வாய்ப்புகளை நல்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனவலு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைக்கு ஒசூர் நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விற்பனைத்தேக்கம், உற்பத்திக்குறைப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலைமூடல் என நெருக்கடி மூண்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை திறந்துப் போட்டுவிட்டு தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. புதிய தொழிற்பேட்டைக்குரிய சலுகைக்காலம் முடிவடைந்தபடியால் இதேபோன்ற சலுகை கிடைக்கின்ற வேறு இடத்துக்கு சில நிறுவனங்கள் ஓடிப்போயின. கடனையும் லாபத்தையும் வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டக்கணக்கு காட்டிவந்த நிறுவனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.     

* பல உற்பத்திப்பிரிவுகளை மூடிவிட்டு ‘அவுட் சோர்சிங்’ முறைக்கு சென்றதால் அந்தந்த ஆலைமட்டத்தில் ஆட்குறைப்பு நடந்தது.

* வீட்டு உபயோகப் பொருட்களும் அதிக ஓடுதிறன் கொண்ட வாகனங்களும் இறக்குமதியாகப் போவதாய் கிளம்பிய வதந்திக்கே உள்ளூர் வியாபாரமும் தொழிலும் சுருண்டு விழுந்தன. ‘இந்தியர்களின் உடல்வாகு, மனோநிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுதேசி பைக்குகளையே வாங்குங்கள்’ என்று அநாமதேய துண்டறிக்கை மூலம் கெஞ்சும் நிலைக்கு தொழிற்சாலைகள் கீழிறங்கின. 

 4. சிறுதொழில் நிறுவனங்களின் நிலை என்னவாகியது?

* உதிரி பாகங்களை உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே அதுகாறும் கொள்முதல் செய்துவந்த பெருநிறுவனங்கள் ‘திறந்தச்சந்தையில் தரமிக்கப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதாய்’ அறிவித்தன. இதனால் உற்பத்திச்செலவை விடவும் குறைந்த விலைக்கு கொடுத்தாவது பெருநிறுவனங்களின் ஆர்டரைப் பெறவேண்டியிருந்தது. அதற்குரிய தொகை இழுத்தடித்தே கொடுக்கப்பட்டதால் கடனும் வட்டியும் சிறு-குறு தொழில் முனைவோரை நெறித்து தொழிலை நடத்தவிடாமல் விரட்டின. கடன்தொல்லையால் நடந்த தற்கொலைகளும் காணாமல் போதலும் உலகமயத்திற்கென கொடுக்கப்பட்ட பலிகள்தான்.

5. தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

* குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற பெரும் செலவினங்களை எதிர்கொள்ளும் வயதில் தொழிலாளிகள் வேலையிழந்தனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.  சிலர் இடம்பெயர்ந்து எங்கோ சென்று மறைந்தார்கள். முன்பு சீருடை அணிந்து மிடுக்காக தொழிற்சாலைக்கு சென்றுவந்த பலர் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதைக் கடை, சைக்கிளில் தேநீர் விற்பது, நிலத்தரகு என முன்பின் அறிந்திராத தொழில்களில் உதிரிகளாகி அலைந்தார்கள். ஆட்குறைப்பின் மூலம் வெளித்தள்ளப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் குறைந்தக்கூலிக்கு தற்காலிகங்களாகினர். தற்காலிகங்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டன.

* கடைவீதிகள் வெறிச்சோடிப் போயின. ‘வாடகைக்கு’ ‘விற்பனைக்கு’ என்கிற அட்டைகள் தொங்கும் வீடுகள் பெருகின. சொத்துகள் கைமாறின. வெளியேறுகிறவர்களுக்கான ஒருவழிப்பாதையானது ஒசூர். 

6. தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயல்பட்ட பொற்காலச்சூழல் ஒசூரில் இருந்துள்ளது. அதில் எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன?

உலகமயத் தாக்குதலால் தொழிற்சங்கங்கள் பேதலித்துப் போயின. ஆட்குறைப்பை தடுக்கவியலாமல் எண்ணிக்கை குறித்த பேரங்களில் அவை ஈடுபட்டன. வேலையில் நீடிப்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலையிழந்து தற்காலிகமாக வந்தவர்கள் எனத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் நிரந்தரமாக தற்காலிகமாக்கப்பட்டோரை திரட்டும் வழியறியாது அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கும் நிலைக்குச் சென்றன.

தொழிலாளர்களின் ஊதியம், வருங்கால வைப்புநிதியைக் கூட தராமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நிர்வாகங்கள் ஓடிப்போயின. இயந்திரங்களை எடுத்துப் போகவாவது நிர்வாகத்தினர் வருவார்கள், பிடித்துக்கொள்ளலாம் என்று மூடப்பட்ட ஒரு பஞ்சாலையின் வாயிலில் கொட்டைகைப் போட்டு காத்திருந்த தொழிலாளர்கள் ஒருகட்டத்தில் பொழுதைப்போக்க சீட்டாடத் தொடங்கினார்கள். மாதக்கணக்காகியும் யாருமே வராத நிலையில் அவர்கள் சீட்டாடுவதற்காகவே அங்கு  கூடுகிறவர்களாக மாறினர். மரபான போராட்டங்களில் நம்பிக்கையிழந்த சிலர் செல்போன் கோபுரங்களில் ஏறி தீக்குளிக்கவும், சாலை மறியல் செய்யவும் தலைப்பட்டனர்.
 
7. இதிலிருந்து ஒசூர் மீளவேயில்லையா?

பேரழிவின் முதல் அலை ஓய்வதற்குள் உலகப் பொருளாதார நெருக்கடியும் மின்வெட்டும் அடுத்தடுத்த அலைகளாகி வீழ்த்தின. நெருக்கடியால் பாதிக்கப்படாத நிறுவனங்கள்கூட வாரத்தில் நான்குநாள் ஓய்வு என்கிற தந்திரத்தைக் கையாண்டன. மனஉளைச்சலிலும் அச்சத்திலும் தொழிலாளர்கள் தூக்கமிழந்து அகாலங்களில் உலாத்தத் தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் முறைவைத்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு அவர்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.  

பசியாற ஏதுமற்ற நிலையில் தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலமாக ஒசூர் பகுதி மறுபடியும் தன்னிடம் மிச்சமிருந்த நிலப்பரப்பை விற்றுக்கொள்ளத் தொடங்கியது. இம்முறை பெரும் கட்டுமான நிறுவனங்கள் வந்திறங்கின. பெங்களூரின் மென்பொருள் பணியாளர்கள் ஒசூரில் பெருமளவு குடியேறி தூங்கியெழுந்துப் போகத் தொடங்கினர்.

8. இன்றைய தொழிற்பேட்டை எப்படியுள்ளது?

மூடிக்கிடப்பவற்றையும் சேர்த்து 2015 டிசம்பர் வரை 811 தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. 5000 தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்குக் காட்டும் ஒரு வாகனத் தொழிற்சாலையில் 647 பேர் மட்டுமே நிரந்தரம். பிறவற்றிலும் இதே நிலைதான். எனில் ஒசூர்பகுதி தொழிலாளர்கள் எனக் காட்டப்படும் 90195 பேரில் 85 சதமானவர்கள் தற்காலிகங்களே. பதிவுபெற்ற 900 ஒப்பந்ததாரர்களால் ‘சப்ளை’ செய்யப்படும் இவர்களில் பெரும்பாலோர் முறையான படிப்போ பயிற்சியோ அற்ற வடமாநில இளைஞர்கள். சட்டத்திற்குட்பட்ட கொத்தடிமைகளாக இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள்தான் இன்றைக்கு  ஒசூரின் இயங்குச்சக்தி. நடைபாதை வியாபாரத்தில் இந்தியும் ஒரு பரிவர்த்தனை மொழியாக மாறியிருப்பதன் மூலம் இவர்களுக்கான ஒசூர் ஒன்று இங்கு உருவாகிவிட்டதை உணர முடிகிறது.

9. ஒசூரின் வளர்ச்சி?

‘இங்கு ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனி. வருடத்தின் பெரும்பகுதி குளிர்காலம்தான். எங்கள் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். கோடை வெயில்கூட உறைக்காது வியர்க்காது’ என்பதெல்லாம் பழங்கதை. மழைமோடத்தின் குளிரில் நடுங்கவேண்டிய இந்த ஐப்பசியில் அதிகபட்ச வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழே அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போதைய ஒசூர். 

ஊரை குளுமையில் ஆழ்த்திய ஏரிகளைத் தூர்த்தது யார்? ஆயிரம் அடிக்கு கீழேயும் நிலத்தடி நீர் ஏன் கிடைப்பதில்லை? தொல்லியல் சான்றுகள் நிறைந்த மலைகள் வரலாற்றுப் பிரக்ஞையற்று யாருக்காக பாளம்பாளமாக வெட்டப்படுகின்றன? குடும்ப உறவுகளுக்கிடையே வன்முறையும்  கொலையும் அதிகரித்துவருவதில் நிலத்தின் பங்குண்டா? நிலக்கொள்ளையர்கள் ஊரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்தியவர்களாக மாறுவது எங்ஙனம்? அடுத்த பத்தாண்டுகளில் ஒசூர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கிற அமைப்புகளோ ஆளுமைகளோ இல்லாமல் போனது ஏன்? ஒசூர் பகுதியை தமது வாழிடமாக தேர்ந்துள்ள வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ள மக்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கும் சாத்தியமுண்டா? கற்பிதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத அமைப்புகளின் செல்வாக்கை தடுத்திடத்  தேவையான அணுகுமுறை என்ன?  என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும் சக்தியற்று ஒசூர் திணறிக்கொண்டிருக்கிறது. உழைப்புச்சக்தியை விற்று கண்ணியமாக வாழ்வதற்கான வழிகள் அடைபட்டுவரும் ஒரு சமூகம் சந்திக்க வேண்டிய வீழ்ச்சியைத்தான் ஒசூரும் இப்போது சந்தித்துவருகிறது என்பது சமாதானமல்ல, உண்மை.


24.10.16



புதன், மார்ச் 15

90 வாக்குகள் : இந்திய ஜனநாயகத்துக்கு ஓர் இரங்கற் பா - கிருஷ்ண காந்த்


(அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்கள் பற்றிய பல்வேறு கருத்துரைகளில் முக்கியமானதொன்று, மாபெரும் மனித உரிமைப் போராளி இரோன் ஷர்மிளாவின் தோல்வியைப் பற்றியதாகும். அந்தத் தோல்வி பற்றி  கிருஷ்ண காந்த் ஹிந்தியில் எழுதிய கட்டுரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, The Wire  இணையதள நாளிதழில்  13.03.2017 அன்று சித்தார்த் வரதராஜன் ‘Thanks for 90 Votes’: In Four Words, an Elegy for Indian Democracy  வெளியிட்டுள்ளார். அதன் (ஆங்கிலம் வழித் தமிழாக்கமும் அடிக்குறிப்புகளும் : எஸ்.வி.ராஜதுரை)

மலோம், மணிப்பூர், நாள்: நவம்பர் 2, 2000. ஓர் இளம் கவிஞர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். இராணுவப் படைப் பிரிவொன்று அங்கு வந்து கண்மூடித்தனமாகச் சுட்டு பதினைந்து இளைஞர்களைக் கொல்கின்றது. குற்றவாளிகளையும், ஏன்  பயங்கரவாதிகளயும்கூட  இவ்வாறு நடத்த அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.

எவரும் இப்படி ஏன் கொல்லப்பட வேண்டும் என்று கவிஞர் கேட்கிறார். அத்தகைய குற்றத்தை அனுமதிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட  முடிவு செய்கிறார். எது அந்தச் சட்டம்? வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றிலும் காஷ்மிரிலும் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’தான் (ஆ.ப.சி.அ.-Armed Forces Specia lPower Act) அது. எவரை வேண்டுமானாலும் தன் விருப்பப்படி சுட்டுத் தள்ளவும், சட்டரீதியான பின்விளைவுகள் எதனையும் எதிர்கொள்ளாமல் இருக்கவும் பாதுகாப்புப் படைகளுக்கு உரிமைகள் வழங்கும் சட்டம்.

அந்த இளம் கவிஞரின் பெயர் இரோம் ஷர்மிளா சானு. அடுத்த நாளிலிருந்து ஆ.ப.சி.அ. சட்டத்தை எதிர்த்து உண்ணாநோன்பு தொடங்குகிறார் ஷர்மிளா. அது அன்னா ஹஸாரெவின் உண்ணாநோன்புகளைப் போன்றது அல்ல. பதினாறு ஆண்டுகள் தமது உண்ணாநோன்பை மேற்கொண்டார். உலகெங்கிலும் நியாயத்துக்காக நடத்தப்பட்ட போராட்ட வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. தற்கொலை செய்ய  முயன்றதற்காக அவரைக் காவல் துறைக் காவலில் வைக்கும்படி நீதிமன்றங்கள் ஆணையிட்டன. அங்கு அவரது மூக்கில் குழாய்கள் செருகப்பட்டு திரவச்சத்து ஊட்டப்பட்டது. ஒருபோதும் வராத வெற்றிக்காக அவர் தொடர்ந்து உண்ணாநோன்பை மேற்கொண்டார்.

இறுதியாக,  சென்ற ஆண்டு டெல்லி நீதிமனறமொன்றில்  கண்ணீர் மலகக் கூறினார்: “ நான் உயிர் வாழ, திருமணம் செய்து கொள்ள, காதலிக்க விரும்புகிறேன். ஆனால் நான் இவற்றைச் செய்வதற்கு முன், மணிப்பூரிலிருந்து ஆ.ப.சி.அ. சட்டம் அகற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்”. பதினாறு ஆண்டுகளாக அவர் போராடி வந்த, நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்து வந்த கோரிக்கைதான் அது.

தேர்தல் அரசியலில் பங்கேற்பதன் வழியாக இந்தக் கறுப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடலாம் என்று ஷர்மிளா முடிவு செய்தார். இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மணிப்பூர் முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட்டு 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். எந்த மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர் பதினாறு ஆண்டுகள் போராடினாரோ அதே மக்கள், அவரது அரசியல் கனவை மூர்க்கதனமாகக் கொன்றனர். கண்களில் கனவோடு தேர்தல் களத்தில் நுழைந்தார்; கண்களில் நீர் வழிய, அந்தக் களத்திலிருந்து வெளியேறுவதாக சனிக்கிழமையன்று[1] அறிவித்தார்: “ இங்கு இனி ஒருபோதும் நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன்”. பதினாறு ஆண்டுகள் தமக்கு உணவை, காதலை, தோழமையை மறுத்து வந்தார். அரசியலில் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அனுபவிப்பதற்கான வாய்ப்பு எதனையும் ஒருபோதும் பெறாமல் தேர்தல் அரசியலைத் துறக்குமாறு இந்த அமைப்பால் நிர்பந்திக்கப்பட்டார்.

 ஆ.ப.சி.அ. சட்டத்துக்கு எதிராக காவியத்தன்மை வாய்ந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட ஷர்மிளா, அஸ்ஸாம் துப்பாக்கிப்படையின் காவலில் 2005இல் கொல்லப்பட்ட மனோரமாவைப் போல, மனோரமாவின் இறப்பையொட்டி நீதி கேட்டு நிர்வாணமாக நின்று போராடிய பெண்களைப்  போல, பஸ்தாரில் கொல்லப்பட்ட மட்காம் ஹிட்னெவையும் ஸுக்மதியையும்[2] போலத் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்விக்கு எதிர்வினையாக அவரது ஆதரவாளர்கள் விருப்பு வெறுப்பின்றிக் கூறினர்: “தொன்னூறு வாக்குகளுக்கு நன்றி”.

ஷர்மிளா பதினாறு ஆண்டுகளாகப் போராடியும் தோல்வியடைந்தும் வந்திருக்கிறார். தவறு செய்கிறவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் விரும்பும் எவரையும் சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்திற்கு உரிமை வழங்கப்படக்கூடாது என்பதுதான் அவர் கூறிவந்து கொண்டிருப்பவை.

ஒரு மனோரமாவைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திக் கொல்லவோ, பாதைகள் சந்திக்குமிடத்தில் நின்றுகொண்டிருக்கும் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவோ, பன்னிரண்டு வயதுக் குழந்தையை ‘பயங்கரவாதி’ என்று அறிவித்து அதனுடைய தாய்க்கு எதிரேயே  அதற்கு ‘மோதல்’ மரணத்தை சம்பவிக்கவோ இராணுவத்தினரை அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அவர் கூறிவந்து கொண்டிருப்பவை.

பணமதிப்புக் குறைப்பின் காரணமாக 150 பேர் இறந்து போனதோ, உத்தரப் பிரதேசத்திலுள்ள பெண்களில் பாதிப்பேர் சத்தூட்டக் குறைவால் அவதிப்படுவதோ, ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப்போக்காலும் மூளைக்காய்ச்சலாலும் மடிந்துகொண்டு இருப்பதோ எவ்வாறு பிரச்சினையாக இருக்கவில்லையோ,  அதேபோல சாமனிய மணிப்பூரிகளின்  உயிர்வாழ்வுக்காக ஷர்மிளா தமது வாழ்க்கையில் பதினாறு ஆண்டுகள் போராட்டம் நடத்தியதும் தேர்தலில் ஒரு பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

சிறையிலிருந்து கொண்டே அமர்மானி திருப்பதியின் மகன் அமன்மானியும்[3] (மனைவியைக் கொன்றதற்காக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்) மாஃபியாக் கும்பல் தலைவன் முக்தர் அன்ஸாரியும்[4], சுனில் குமார்[5], ரகுராஜ் பிரதாப் சிங்[6], விஜய் மிஷ்ரா[7] போன்ற குண்டர்களும் இலகுவாக தேர்தல்களில் வெற்றியடைகின்ற ஜனநாயகத்தில், வன்முறைக்கும் கொலைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தமது வாழ்க்கைச் சுடரை அணைய வைத்த இரோன் ஷர்மிளாவின் தோல்வி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தேர்தலில் போட்டியிட்ட குற்றவாளிகளுக்கும் காடையர்களுக்கும் மிகப்பெரும் பெரும்பான்மை வழங்குவதில்  மகிழ்ச்சி கொண்ட வாக்காளர்களின் நெஞ்சை,  ஈரம் படிந்த கண்களையும் குழாய்கள் செருகப்பட்ட மூக்கையும் கொண்ட கவிஞரின் முகத்தால் தொடமுடியவில்லை.

தேர்தல் நாளன்று, அவரது தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள், தற்போதைய முதலமைச்சரின் வெற்றியையும் ஷர்மிளாவின் தோல்வியையும் மட்டும் உறுதி செய்யவில்லை; இந்திய ஜனநாயகம் இறந்து போனதற்கு ஓர் இரங்கற் பாவையும் இயற்றியுள்ளனர்.





[1] 11.03.2017.

[2] 2016 ஜூன் 16, 2017 ஜனவரி 17 ஆகிய நாள்களில் சட்டிஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் ‘மாவோயிஸ்டுகள்’ என முத்திரை குத்தப்பட்டும், பாலியல் வன்முறை செய்யப்பட்டும் ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட இளம் பெண்கள்.

[3] சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்தவர் அமர்மானி திருப்பதி.  அவரும் அவரது மனைவி மதுமானியும் உத்தரப் பிரதேசப் பெண் கவிஞர் மதுமித ஷுக்லாவைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மகன் அமன்மானி, தமது மனைவி ஸாராவைக் கொலை செய்துவிட்டு, அந்தப் பெண்மணி சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று காட்ட முயன்ற குற்றத்துக்காக 2016 நவம்பரில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  சமாஜ்வாதி கட்சி வேட்பாள்ராக அவர் போட்டியிடுவதை அகிலேஷ் சிங் யாதவ் அனுமதிக்காததால், அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நெளட்வானா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப்  போட்டியிட்டு, அவருக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 32,256 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு  பிணையில் வெளிவந்துள்ளார்.

[4]  உத்தரப் பிரதேசத்தின் மாவ்  ஸடார்(Mau Sadar)  தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்தர் அன்ஸாரி, முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். பின்னர் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், இந்த ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன் மீண்டும் அந்தக் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள அவர் லக்னோ மாவட்ட சிறையிலிருந்து, .மாவ் ஸடார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, அவருக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளரை 8698 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.


[5] சுனில் குமார்: 2005, 2015 ஆம் ஆண்டுகளிlல் நடந்த பிஹார் சட்டமன்றத் தேர்தல்களில் நளந்தா தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் [JD(u)] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்ற இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

[6] ராஜு பய்யா (ராஜு அண்ணன்) என்று பரவலாக அழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர், அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். இவர் மீது கொலை முதலிய பல்வேறு குற்றங்களுக்காக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக இவர் தற்போது டெல்லியிலுள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்டா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரை 1,03,647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அவர் தொடர்ந்து ஆறு முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதிலிருந்தே ’வேட்பாளர் பெருமக்கள்’ அவர் மீது வைத்துள்ள அபிமானத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

[7]  விஜய் மிஷ்ர: அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குச் சமாஜ்வாதி கட்சி சார்பாகப் போட்டியிடுவதற்கு அகிலேஷ் சிங் யாதவ் அனுமதி மறுத்ததால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ‘நிஷால்’ கட்சியின் வேட்பாளராக கியான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விஜய் மிஷ்ர மீது ஏராளமான குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத, குற்றப் பின்னணிகள் கொண்ட வேறு சிலரும் அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக, சாண்டெளலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸய்யாடார்ஸா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஷ்யாம் நாராயண் சிஙகை 14,494 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த சுஸில் சிங் குண்டர் தலைவராவார். அவரிடம் தோல்வி கண்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் குற்றப் பின்னணிக் கொண்டவர்தான். அவர் இப்போது ராஞ்சி சிறையில் உள்ளார்..

 இலஹாபாத் மாவட்டம் மெஜா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற  நீலம் கார்வாரியாவின் கணவரும் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான உதய் பான் கார்வாரியா தற்போது மிர்ஜாபூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


திங்கள், மார்ச் 6

செத்தது நீயில்லையா... ஆதவன் தீட்சண்யா

ன்றிரவு ஏனோ சற்று முன்கூட்டியே வீடு திரும்பியிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த தீட்சண்யாவோடு கொஞ்சநேரம் இருந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். எட்டரை மணி இருக்கும், யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், தோழர்.சுப்பிரமணியம் நின்றிருந்தார். எதிர்வீட்டில் வசித்துவரும் அவர் வீட்டிற்குள் வந்தது அதுதான் முதல் தடவை. சாப்பிட விடுத்த அழைப்பை மறுத்துவிட்ட அவர், ‘பேச்சு சத்தம் கேட்டது, இந்நேரத்துக்கே வந்துட்டீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நான் இரவில் வீடு திரும்பும் நேரம் குறித்து அக்கம்பக்கத்தில் இப்படியான நல்லபிப்ராயம். ஆனாலும் இதைச் சொல்லவா அவர் வந்தார் என்று நானும் மீனாவும் பேசியபடியே சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் மீண்டும் அவரே கதவைத் தட்டினார். என்ன விசயம் என்று நான் கேட்பதற்கு முன்பு அவராகவே சொன்னார். ‘லேலண்ட்டுக்கு எதிர்ல ஒரு ஆக்சிடென்ட்... ஸ்பாட் அவுட்டாம்... டெலிபோன் எக்சேஞ் ரவின்னு சொன்னாங்க... அதான் பதட்டத்துல வந்து பார்த்தேன். நீங்க இருக்கிறத பார்த்தப்புறம்தான் நிம்மதியாச்சு...’

எங்கள் அலுவலகத்தில் என்னோடு சேர்த்து மூன்று ரவிகள் இருந்தோம். ‘நான் இங்கிருக்கேன், மற்ற ரெண்டுபேர்ல எந்த ரவின்னு போய் பார்ப்போம் வாங்கஎன்று அவரையும் அழைத்துக்கொண்டு அலுவலக வாயிலுக்கு விரைந்தேன். அதற்குள் எந்த ரவி என்கிற உறுதிபடுத்தப்பட்ட தகவல் செக்யூரிட்டிக்கு வந்துவிட்டிருந்தது. எங்களில் மிகவும் இளையவரான ரவி. கொடூரமான விபத்து. நடுரோட்டில் அவர் கிடந்த நிலை 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் கண்ணுக்குள்ளிருக்கிறது. 

வீட்டில் அவருக்காக காத்திருந்த அவரது துணைவியாரிடம் போய் தகவல் சொல்வதற்கு எங்களில் ஒருவருக்கும் தைரியமில்லை. நீங்களே வந்து பக்குவமாக சொல்லுங்கள் என்று பெங்களூரிலிருந்த அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். போலிசையும் ஆம்புலன்சையும் வரவழைத்து சடலத்தை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் தகவல் பரவி அலுவலக ஊழியர்கள் பலரும் அங்கு குழுமிவிட்டிருந்தனர்.  பிணக்கிடங்கின் வாயிலிலேயே விடியவிடிய எல்லோரும் காத்திருந்தோம். இரவு இரண்டு மணிவாக்கில் ரோந்துவந்த போலிசாரில் ஒருவர், ‘ரவின்னதும் நீங்கதான்னு நெனைச்சேன்...’ என்றார். ‘ஆசையாக்கும்...?’ என்றேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

***
விடிந்தும் நாங்கள் மருத்துவமனையிலேயே இருந்தோம். எட்டுமணி இருக்கும். ஆஸ்பத்ரி நுழைவாயிலில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றிலிருந்து பதறியடித்துக் கொண்டு இறங்கிய ஓர் ஆணும் பெண்ணும் உள்ளுக்குள் விரைந்தோடி வந்தார்கள். ரவியின் உறவினர்களாக இருக்குமென பார்த்தால் அவர்கள், ஓவியர் தேவாவும்  அவரது துணைவியார் பியூலாவும். இவர்கள் எதற்கு இப்போது இங்கே வருகிறார்கள் என்ற யோசித்தபடியே அவர்களுக்கு எதிரில் போய் நின்ற என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். இருவரது கண்களிலும் முட்டிக் கொண்டிருக்கிறது கண்ணீர். தேவா என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழத் தொடங்கிவிட்டார். எதற்கென்று எனக்கு விளங்கவில்லை. இறந்துபோனவர் ஒருவேளை இவர்களுக்கு சொந்தமாய் இருக்குமோ? அப்படி இருந்திருந்தால் சொல்லியிருப்பாரே என்று பலவாறாய் யோசித்தபடி அவரை தேற்றினேன். ‘சேது சொன்னதாகத்தான் தகவல் வந்தது...’ கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

தோழர்.சேதுமாதவன் அப்போது சிபிஎம் நகரச் செயலாளர். நான் மாணவர் சங்கத்தில் வேலை செய்த காலந்தொட்டே என்மீது பிரியம் கொண்டு பழகி வருபவர். அவரது தொலைபேசி பற்றின புகாருக்காக எங்களது அலுவலக ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார். போனை எடுத்த அந்த ஊழியரின் மனைவி ‘ரவின்னு நம்ம ஸ்டாப் ஒருத்தர் ராத்திரி ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதனால எல்லாரும் ஜி.ஹெச்.ல இருக்காங்கஎன்று  பதில் சொல்லியிருக்கிறார். எந்த ரவி என்று சேதுவும் கேட்கவில்லை, அந்தம்மாவும் தெளிவாய் சொல்லவில்லை. டெலிபோன் எக்சேஞ் ரவி என்றதும் அது நான்தான் என்று நினைத்துக்கொண்ட சேது, எங்களிருவரின் தொடர்பு வட்டத்திலுள்ள பலருக்கும் பொறுப்பாக தகவல் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அப்படி யார் மூலமோ கேள்விப்பட்டு கிளம்பி வந்தவர்கள்தான் தேவா தம்பதியர். அவர்களை ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத்துவதற்குள் பி.சி.நஞ்சப்பா, லகுமய்யா உள்ளிட்ட ஏராளமான தோழர்களோடு சேதுவே அங்கு வந்துவிட்டார். உயிரோடு நின்றிருக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக ‘இப்படி பதறியடிக்க வச்சுட்டியேப்பாஎன்றார் தோழமை கசியும் குரலில்.  ‘பதற வச்சது நானா நீங்களா?’ என்று அவரை கேலி செய்துகொண்டிருக்கும் போதே மேலும் பல தோழர்கள் வந்துவிட்டார்கள். நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தேன்கனிக்கோட்டைக்கும் தகவல் போய் அங்கிருந்தும் நண்பர்களும் தோழர்களும் வந்தவண்ணமிருந்தார்கள். செத்தது நானில்லை என்ற சொல்வதற்காகவே நான் ஆஸ்பத்திரி வாயிலில் நின்றாக வேண்டிய நிலையாகிவிட்டது.  அந்த ரவியின் சாவுக்கும் இந்த ரவியின் சாவுக்குமாக வந்த கூட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகம் நிறைந்திருந்தது.

***
காலை 11 மணியளவில் சடலக்கூராய்வு முடிந்தது. நானும் நண்பர்களும் ரவியின் உடலை அவரது மாமனார் வீட்டில் வைக்க பெங்களூருக்கு கிளம்பிவிட்டோம். நாங்கள் ஒசூர் திரும்பி வருவதற்குள் அனேக களேபரங்கள் நடந்துவிட்டிருந்தன.

* நான் செத்துவிட்டதை கேள்விப்பட்ட அரூர் தொலைபேசி நிலையத் தோழர்கள், என் சாவுக்கு ஒசூர் வர கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் கிளம்புவதற்கு முன்பு எனது வீட்டிற்கும் எனது மாமனார் வீட்டிற்கும் சென்று பக்குவமாக தகவல் தரவேண்டுமென்கிற பொறுப்புணர்ச்சி அவர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. தேவைப்பட்டால், இவ்விரு வீட்டாரையும் அழைத்துப்போக வாகன ஏற்பாடு செய்வது என்றும் திட்டம். இதற்கிடையில் ஒருவர், எனது நெருங்கியத் தோழர்களில் ஒருவரான சுதாகரனை போனில் அழைத்து ரவியின் அடக்கம் எங்கே என்று வினவியிருக்கிறார். சுதாகரன் பெங்களூர் என்றதும், அந்த ஊழியர், இதென்ன ஒசூரிலும் இல்லாம அரூரிலும் இல்லாம பெங்களூர்ல...? ஒருவேளை இங்க கொண்டுவர முடியாதபடி பாடி ரொம்பவும் சேதாரமா என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் சுதாகரனுக்கும் உறைத்து நீங்க எந்த ரவின்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க? இறந்தவர் எஸ்.எம்.ஆர். இல்ல... ஒசூர் எஸ்.டி.ஓ.டி ஆபிஸ் ரவி என்று  தெளிவுபடுத்தியிருக்கிறார். இப்படியாக எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் என் சாவுக்கு வருவதை அந்த ஊழியரும் சுதாகரனும் கடைசிநேரத்தில் சுதாரித்து தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

* எஸ்.குமார் எங்கள் நட்புவட்டத்தின் ஆதர்ச தையல்காரர் என்பதற்கும் அப்பால், குடும்ப நண்பர். அவரது கடையின் வாராந்திர விடுமுறை நாளான செவ்வாய்கிழமைகளில் அவர் வீட்டில்தான் எங்கள் குடும்பத்திற்கு மதியச் சாப்பாடு. சில செவ்வாய்களில் அவர் துணைவி ரமாவுடன்  எங்கள் வீட்டுகுக வருவார்கள். அவரது கடையில் மணி என்றொரு தையல்காரர் அப்போதிருந்தார். என்மீது பிரியமுள்ளவர். அன்றைக்கு மூன்று மணியளவில் டீ கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர், ‘சென்ட்ரல் பே கேட்டு ஸ்ட்ரைக் நடந்தப்ப எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தவர்... பாவம்...’ என்று  என் சாவுச்செய்தியை கடையிலிருந்தவர்களிடம் சொல்லி துக்கப்பட்டிருக்கிறார். மணி அவரிடம் ‘யார் பாய்?’ என்று கேட்டிருக்கிறார். ‘அவருதான், உங்க ஓனரோட கூட்டாளி...  டெலிபோன் ஆபிஸ் தாடிக்காரர்... உங்களுக்கெல்லாம் முன்னாடியே தகவல் வந்திருக்குமே...’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த நொடியே மணி அங்கிருந்து ஓடிப்போய் குமாரிடம் சொல்லியிருக்கிறார். தன் வீட்டுக்கு ஆளனுப்பி துணைவி ரமாவை கடைக்கு வரவழைத்த குமார் என் சாவுச்செய்தியை சொல்லியிருக்கிறார். எங்கே வரணும்னு கேட்டுக்கிட்டு போவோம் என்று என் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார் குமார். போனை எடுத்த மீனா எப்போதும் போல் சகஜமாக பேசியதால் குழம்பிப்போன குமார் ரவி எங்கே என்று கேட்க, பெங்களூர் போயிருக்கிறார் என்று மீனா பதில் சொல்லியிருக்கிறார். ஓ, ஆக்சிடென்ட் ஆன விசயமே இன்னமும் மீனாவுக்கு தெரியாது போல... ரவி பெங்களூர் போயிருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்கு... என்று மிகுந்த துயரத்திற்காளான குமார் தம்பதியினர்  என் வீட்டுக்கு வருவதற்கு ஆட்டோ கூட்டிவர ஆளனுப்பிவிட்டு காத்திருந்தார்கள்.

* பெங்களூரிலிருந்து திரும்பிய நானும் தோழர் ஜார்ஜூம் ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்திவிட்டுப் போயிருந்த எனது பைக்கை எடுத்துக்கொண்டு, நல்ல டீ தருவிச்சு சாப்பிடுவோம் என்று குமார் கடைக்குப் போகவும், குமார் தம்பதியினர் ஆட்டோவில் ஏறவும் சரியாக இருந்தது. ஓரிரு நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டுக்குப் போய் இழவு கண்டிருப்பார்கள். 


***
தற்செயலான இந்நிகழ்வுகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டதொரு நாடகத்தின் அடுத்தடுத்த காட்சி போலாகி என் சாவை எனக்கு காட்டிவிட்டன. என் சாவுச்செய்தியை கேள்விப்பட்டிருந்த பலரும் என்னை நேருக்கு நேர் பார்க்கையில் ஒரு கணம் தடுமாறி பிறகு சகஜமாகிப் போகும் அபத்தம் பலநாட்களுக்கு நீடித்தது. செத்தது நீயில்லையா, ஏன் சாகல, எப்ப சாவாய், நீயெல்லாம் அதுக்குள்ள செத்துடுவியா  என்பது போன்ற அங்கலாய்ப்பு அவர்களில் சிலருக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களும்கூட வாய்விட்டு கேட்கவில்லை. என் சாவுக்கு வந்த-  என்னிடமே இழவு கேட்ட ஏராளமான அன்பர்களை நானே இருந்து ஆற்றுப்படுத்திய நெகிழ்வான செய்தியை பின்பொரு நாள் அம்மா அப்பாவிடம் சொன்னேன். புதுப்பொறப்பு எடுத்ததா நினைச்சுக்கோ என்று அம்மாவும், சாவுக்கு பத்துப்பேர் வரலன்னா வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தமிருக்கு என்று அப்பாவும் சொன்னார்கள். ஏழு பிள்ளைகளில் தலைப்பிள்ளையாய் என்னை இதே நாளில் பெற்றெடுத்த அவர்களது இந்த வார்த்தைகள் போதும் என் ஆயுளுக்கு.

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். 2001 செப்டம்பர் 7ல் செத்த எனக்கு ஊற்றியிருக்க வேண்டிய பாலினை டீயாய் காபியாய் இன்றளவும் ஊற்றிக்கொண்டிருக்கிற, ஊற்றவிருக்கிற அனைவருக்கும் எனது அன்பு.  

06.03.2017


வெள்ளி, மார்ச் 3

நீதிக்குற்றம் - ஆதவன் தீட்சண்யா

ம்மில் யாரேனும் கொல்லப்பட்டதாக வரும் செய்தி
குன்றச் செய்கிறது எனது ஆன்மாவை
வெடிகுண்டில் பொருத்திய கடியாரமென
அவமானத்தால் துடிதுடிக்கும் என்னிதயம்
நடுங்கிச் சீறுகிறது:
நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள்.

கற்றாழை போல நம் திரேகத்தை
கண்டந்துண்டமாய் அரிந்தெடுப்பவர்களின்
நினைவுத்தைலத்தில் பதனமாகிவிடும் நமதுயிரை
கொல்லும் வழியறியாது குமைகிறார்கள்
-ஆம், கொல்லப்பட முடியாதது நமதுயிர்

நெற்றிப்பொட்டைத் துளைத்தேகும் தோட்டா
கிட்டித்த பற்களுக்கிடையே பாயும் மின்கம்பி
ஏன், விர்ரென மோதும் ரயிலினாலும்கூட 
எதுவும் செய்துவிட முடியாது நம் உயிரை.

வாழும் நம் உடல்மீது
ஐம்பூதங்களையும் அரசப்படைகளையும் ஏவி
முடிவற்றதாய் தொடுக்கும் தாக்குதல்கள் 
அற்பமான கொலைமுயற்சிகளே
உயிரை விடும் கணத்தை நாமே தீர்மானிப்பதால்
நம் மரணம் இயல்பானது
நம்மைக் கொல்லும் வழியை எமனுமறியான்.

நமக்கஞ்சி தப்பியோடும் மரணத்தை
இவ்வுலகின் விளிம்புவரை துரத்திப்போய்
நாமாகவே விரும்பிச் சாகும் மாயத்தை 
மை தடவி கண்டறியும் நீதிமன்றங்கள்
சந்தேகத்தின் பலனை
எப்போதும் குற்றவாளிகளுக்கே தந்து
தம்மையும் விடுவித்துக்கொள்வதோடு
நம்மை
பிணக்கிடங்கில் பதப்படுத்தி கண்காணிக்கின்றன

இனி உயிர்த்தெழமாட்டோமென
உறுதிப்படும் நாளொன்றில்
ஆசுவாசமாகி வழங்கப்படும் தீர்ப்பில்
நாம் தற்கொலையாகியிருப்போம்
ஆம், நாம் கொல்லப்பட முடியாதவர்கள்.


(23.02.2017)

நன்றி : விகடன் தடம் , மார்ச் 2017



இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...