புதன், மார்ச் 15

90 வாக்குகள் : இந்திய ஜனநாயகத்துக்கு ஓர் இரங்கற் பா - கிருஷ்ண காந்த்


(அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்கள் பற்றிய பல்வேறு கருத்துரைகளில் முக்கியமானதொன்று, மாபெரும் மனித உரிமைப் போராளி இரோன் ஷர்மிளாவின் தோல்வியைப் பற்றியதாகும். அந்தத் தோல்வி பற்றி  கிருஷ்ண காந்த் ஹிந்தியில் எழுதிய கட்டுரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, The Wire  இணையதள நாளிதழில்  13.03.2017 அன்று சித்தார்த் வரதராஜன் ‘Thanks for 90 Votes’: In Four Words, an Elegy for Indian Democracy  வெளியிட்டுள்ளார். அதன் (ஆங்கிலம் வழித் தமிழாக்கமும் அடிக்குறிப்புகளும் : எஸ்.வி.ராஜதுரை)

மலோம், மணிப்பூர், நாள்: நவம்பர் 2, 2000. ஓர் இளம் கவிஞர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். இராணுவப் படைப் பிரிவொன்று அங்கு வந்து கண்மூடித்தனமாகச் சுட்டு பதினைந்து இளைஞர்களைக் கொல்கின்றது. குற்றவாளிகளையும், ஏன்  பயங்கரவாதிகளயும்கூட  இவ்வாறு நடத்த அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.

எவரும் இப்படி ஏன் கொல்லப்பட வேண்டும் என்று கவிஞர் கேட்கிறார். அத்தகைய குற்றத்தை அனுமதிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட  முடிவு செய்கிறார். எது அந்தச் சட்டம்? வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றிலும் காஷ்மிரிலும் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’தான் (ஆ.ப.சி.அ.-Armed Forces Specia lPower Act) அது. எவரை வேண்டுமானாலும் தன் விருப்பப்படி சுட்டுத் தள்ளவும், சட்டரீதியான பின்விளைவுகள் எதனையும் எதிர்கொள்ளாமல் இருக்கவும் பாதுகாப்புப் படைகளுக்கு உரிமைகள் வழங்கும் சட்டம்.

அந்த இளம் கவிஞரின் பெயர் இரோம் ஷர்மிளா சானு. அடுத்த நாளிலிருந்து ஆ.ப.சி.அ. சட்டத்தை எதிர்த்து உண்ணாநோன்பு தொடங்குகிறார் ஷர்மிளா. அது அன்னா ஹஸாரெவின் உண்ணாநோன்புகளைப் போன்றது அல்ல. பதினாறு ஆண்டுகள் தமது உண்ணாநோன்பை மேற்கொண்டார். உலகெங்கிலும் நியாயத்துக்காக நடத்தப்பட்ட போராட்ட வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. தற்கொலை செய்ய  முயன்றதற்காக அவரைக் காவல் துறைக் காவலில் வைக்கும்படி நீதிமன்றங்கள் ஆணையிட்டன. அங்கு அவரது மூக்கில் குழாய்கள் செருகப்பட்டு திரவச்சத்து ஊட்டப்பட்டது. ஒருபோதும் வராத வெற்றிக்காக அவர் தொடர்ந்து உண்ணாநோன்பை மேற்கொண்டார்.

இறுதியாக,  சென்ற ஆண்டு டெல்லி நீதிமனறமொன்றில்  கண்ணீர் மலகக் கூறினார்: “ நான் உயிர் வாழ, திருமணம் செய்து கொள்ள, காதலிக்க விரும்புகிறேன். ஆனால் நான் இவற்றைச் செய்வதற்கு முன், மணிப்பூரிலிருந்து ஆ.ப.சி.அ. சட்டம் அகற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்”. பதினாறு ஆண்டுகளாக அவர் போராடி வந்த, நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்து வந்த கோரிக்கைதான் அது.

தேர்தல் அரசியலில் பங்கேற்பதன் வழியாக இந்தக் கறுப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடலாம் என்று ஷர்மிளா முடிவு செய்தார். இப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் மணிப்பூர் முதலமைச்சரை எதிர்த்துப் போட்டியிட்டு 90 வாக்குகள் மட்டுமே பெற்றார். எந்த மக்களின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர் பதினாறு ஆண்டுகள் போராடினாரோ அதே மக்கள், அவரது அரசியல் கனவை மூர்க்கதனமாகக் கொன்றனர். கண்களில் கனவோடு தேர்தல் களத்தில் நுழைந்தார்; கண்களில் நீர் வழிய, அந்தக் களத்திலிருந்து வெளியேறுவதாக சனிக்கிழமையன்று[1] அறிவித்தார்: “ இங்கு இனி ஒருபோதும் நான் காலடி எடுத்து வைக்கமாட்டேன்”. பதினாறு ஆண்டுகள் தமக்கு உணவை, காதலை, தோழமையை மறுத்து வந்தார். அரசியலில் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அனுபவிப்பதற்கான வாய்ப்பு எதனையும் ஒருபோதும் பெறாமல் தேர்தல் அரசியலைத் துறக்குமாறு இந்த அமைப்பால் நிர்பந்திக்கப்பட்டார்.

 ஆ.ப.சி.அ. சட்டத்துக்கு எதிராக காவியத்தன்மை வாய்ந்த உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்ட ஷர்மிளா, அஸ்ஸாம் துப்பாக்கிப்படையின் காவலில் 2005இல் கொல்லப்பட்ட மனோரமாவைப் போல, மனோரமாவின் இறப்பையொட்டி நீதி கேட்டு நிர்வாணமாக நின்று போராடிய பெண்களைப்  போல, பஸ்தாரில் கொல்லப்பட்ட மட்காம் ஹிட்னெவையும் ஸுக்மதியையும்[2] போலத் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்விக்கு எதிர்வினையாக அவரது ஆதரவாளர்கள் விருப்பு வெறுப்பின்றிக் கூறினர்: “தொன்னூறு வாக்குகளுக்கு நன்றி”.

ஷர்மிளா பதினாறு ஆண்டுகளாகப் போராடியும் தோல்வியடைந்தும் வந்திருக்கிறார். தவறு செய்கிறவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தான் விரும்பும் எவரையும் சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்திற்கு உரிமை வழங்கப்படக்கூடாது என்பதுதான் அவர் கூறிவந்து கொண்டிருப்பவை.

ஒரு மனோரமாவைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திக் கொல்லவோ, பாதைகள் சந்திக்குமிடத்தில் நின்றுகொண்டிருக்கும் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவோ, பன்னிரண்டு வயதுக் குழந்தையை ‘பயங்கரவாதி’ என்று அறிவித்து அதனுடைய தாய்க்கு எதிரேயே  அதற்கு ‘மோதல்’ மரணத்தை சம்பவிக்கவோ இராணுவத்தினரை அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அவர் கூறிவந்து கொண்டிருப்பவை.

பணமதிப்புக் குறைப்பின் காரணமாக 150 பேர் இறந்து போனதோ, உத்தரப் பிரதேசத்திலுள்ள பெண்களில் பாதிப்பேர் சத்தூட்டக் குறைவால் அவதிப்படுவதோ, ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் வயிற்றுப்போக்காலும் மூளைக்காய்ச்சலாலும் மடிந்துகொண்டு இருப்பதோ எவ்வாறு பிரச்சினையாக இருக்கவில்லையோ,  அதேபோல சாமனிய மணிப்பூரிகளின்  உயிர்வாழ்வுக்காக ஷர்மிளா தமது வாழ்க்கையில் பதினாறு ஆண்டுகள் போராட்டம் நடத்தியதும் தேர்தலில் ஒரு பிரச்சினையாகக் கருதப்படவில்லை.

சிறையிலிருந்து கொண்டே அமர்மானி திருப்பதியின் மகன் அமன்மானியும்[3] (மனைவியைக் கொன்றதற்காக சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்) மாஃபியாக் கும்பல் தலைவன் முக்தர் அன்ஸாரியும்[4], சுனில் குமார்[5], ரகுராஜ் பிரதாப் சிங்[6], விஜய் மிஷ்ரா[7] போன்ற குண்டர்களும் இலகுவாக தேர்தல்களில் வெற்றியடைகின்ற ஜனநாயகத்தில், வன்முறைக்கும் கொலைக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தமது வாழ்க்கைச் சுடரை அணைய வைத்த இரோன் ஷர்மிளாவின் தோல்வி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தேர்தலில் போட்டியிட்ட குற்றவாளிகளுக்கும் காடையர்களுக்கும் மிகப்பெரும் பெரும்பான்மை வழங்குவதில்  மகிழ்ச்சி கொண்ட வாக்காளர்களின் நெஞ்சை,  ஈரம் படிந்த கண்களையும் குழாய்கள் செருகப்பட்ட மூக்கையும் கொண்ட கவிஞரின் முகத்தால் தொடமுடியவில்லை.

தேர்தல் நாளன்று, அவரது தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள், தற்போதைய முதலமைச்சரின் வெற்றியையும் ஷர்மிளாவின் தோல்வியையும் மட்டும் உறுதி செய்யவில்லை; இந்திய ஜனநாயகம் இறந்து போனதற்கு ஓர் இரங்கற் பாவையும் இயற்றியுள்ளனர்.





[1] 11.03.2017.

[2] 2016 ஜூன் 16, 2017 ஜனவரி 17 ஆகிய நாள்களில் சட்டிஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் ‘மாவோயிஸ்டுகள்’ என முத்திரை குத்தப்பட்டும், பாலியல் வன்முறை செய்யப்பட்டும் ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்ட இளம் பெண்கள்.

[3] சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்தவர் அமர்மானி திருப்பதி.  அவரும் அவரது மனைவி மதுமானியும் உத்தரப் பிரதேசப் பெண் கவிஞர் மதுமித ஷுக்லாவைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மகன் அமன்மானி, தமது மனைவி ஸாராவைக் கொலை செய்துவிட்டு, அந்தப் பெண்மணி சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று காட்ட முயன்ற குற்றத்துக்காக 2016 நவம்பரில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  சமாஜ்வாதி கட்சி வேட்பாள்ராக அவர் போட்டியிடுவதை அகிலேஷ் சிங் யாதவ் அனுமதிக்காததால், அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நெளட்வானா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப்  போட்டியிட்டு, அவருக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற சமாஜ்வாதி கட்சி வேட்பாளரை 32,256 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த அவர், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு  பிணையில் வெளிவந்துள்ளார்.

[4]  உத்தரப் பிரதேசத்தின் மாவ்  ஸடார்(Mau Sadar)  தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்தர் அன்ஸாரி, முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். பின்னர் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் காரணமாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், இந்த ஆண்டில்  சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன் மீண்டும் அந்தக் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் உள்ள அவர் லக்னோ மாவட்ட சிறையிலிருந்து, .மாவ் ஸடார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, அவருக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளரை 8698 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.


[5] சுனில் குமார்: 2005, 2015 ஆம் ஆண்டுகளிlல் நடந்த பிஹார் சட்டமன்றத் தேர்தல்களில் நளந்தா தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் [JD(u)] வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்ற இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

[6] ராஜு பய்யா (ராஜு அண்ணன்) என்று பரவலாக அழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர், அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். இவர் மீது கொலை முதலிய பல்வேறு குற்றங்களுக்காக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக இவர் தற்போது டெல்லியிலுள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்டா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பாஜக வேட்பாளரை 1,03,647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அவர் தொடர்ந்து ஆறு முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதிலிருந்தே ’வேட்பாளர் பெருமக்கள்’ அவர் மீது வைத்துள்ள அபிமானத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

[7]  விஜய் மிஷ்ர: அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்குச் சமாஜ்வாதி கட்சி சார்பாகப் போட்டியிடுவதற்கு அகிலேஷ் சிங் யாதவ் அனுமதி மறுத்ததால், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ‘நிஷால்’ கட்சியின் வேட்பாளராக கியான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விஜய் மிஷ்ர மீது ஏராளமான குற்ற வழக்குகள்  நிலுவையில் உள்ளன.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத, குற்றப் பின்னணிகள் கொண்ட வேறு சிலரும் அண்மையில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக, சாண்டெளலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸய்யாடார்ஸா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஷ்யாம் நாராயண் சிஙகை 14,494 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த சுஸில் சிங் குண்டர் தலைவராவார். அவரிடம் தோல்வி கண்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் குற்றப் பின்னணிக் கொண்டவர்தான். அவர் இப்போது ராஞ்சி சிறையில் உள்ளார்..

 இலஹாபாத் மாவட்டம் மெஜா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற  நீலம் கார்வாரியாவின் கணவரும் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான உதய் பான் கார்வாரியா தற்போது மிர்ஜாபூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...