வியாழன், நவம்பர் 29

ஒசூரெனப்படுவது யாதெனின்:10 -ஆதவன் தீட்சண்யா''நான் ஒசூர்ப் பகுதிக்கு வந்து 27 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் ஒருநாள்கூட எங்கம்மா இங்கு வந்து என்னோடு தங்கியது கிடையாது. வரும்போதெல்லாம் சாயங்காலத்திற்குள் திரும்பிவிடுவார். 1964, 65-ல் இங்கிருந்த அனுபவத்தில் கடுமையான குளிர் பிரதேசம் என்று ஒசூர் பகுதிபற்றி அவர்களது மனதிற்குள் பதிந்த சித்திரம் இன்னும் அப்படியே கலையாமல் இருக்கிறதுபோலும். அந்த ஊர் குளிரில் நான் தங்க முடியாதுப்பா என்று சொல்லிவிடுவார். ஆனால், சமவெளியில் இருக்கிற எல்லா ஊர்களையும்போல இந்த ஊரும் வெகுநாட்களுக்கு முன்பே வெக்கை மிகுந்ததாக மாறிவிட்டது என்கிற உண்மை எங்கம்மாவைப் போலவே பலருக்கும் தெரியாது. அதனாலேயே ஒசூர் என்றதும் ஏதோ தூந்திரபிரதேசத்திற்குச் செல்வது போன்ற பாவனையுடன் ஸ்வெட்டர், மப்ளர், குல்லா என்று சகல முன்னேற்பாடுகளுடனும் வந்திறங்குகிறவர்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்பட்ட மாசும், நகர விரிவாக்கமும் கட்டடங்களின் பெருக்கமும் இந்தப் பகுதியைப் பாழ்படுத்திவிட்டன. மேலேயிருந்து கையாலேயே முகர்ந்து குடிக்குமளவுக்கான கிணறுகளைக் கொண்டிருந்த இப்பகுதியில் இன்று 1,000 அடிவரை ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுகின்றன. தனித்தனி வீடுகள், தனித்தனி கிணறுகள்... பெரிய பெரிய குடியிருப்பு வளாகங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், பண்ணையத்தை ஒழித்துக் கட்டிவிட்டு கட்டப்பட்டுவரும் பண்ணை வீடுகள் என்று நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ராட்சதக் குழாய்கள் பூமிக்குள் இறங்கிக் கொண்டேயிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. மேல்தளத்தில் கைகுலுக்கிக்கொள்கிற அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எஞ்சியுள்ள நீரை யார் கைப்பற்றுவதென்கிற சண்டையை பூமிக்கடியில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒசூர் பகுதியின் குளுமைக்கும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பேணுவதற்கும் காரணமாயிருந்த ஏரிகள் தூர்ந்துவருகின்றன. அவற்றுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கிற வழிகளை ஆக்கிரமித்து அடைத்தபிறகு, அவை காய்ந்தும் தூர்ந்தும் போவதைத்தவிர வேறென்ன நடக்கும்? ஏரிகளுக்குள் நடக்கும் ஆக்கிரமிப்பு ஊரையே பாதிக்கும் என்கிற கவலை யாருக்கும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ஏரிகளிலும் ஆகாயத்தாமரை படர்ந்தும் அழுகியும் நாற்றக் கிடங்குகளாக மாறியுள்ளன. தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தின் பின்புறமிருந்த ஏரியை சமீபத்தில் பார்த்தபோது பெரும் சோகம் கவ்விக் கொண்டது என்னை. கரையில் அமைந்திருக்கும் யாரப் தர்காவின் பிம்பத்தை ஒளித்தூண்களாய் தன்னுள் தவழவிட்டுத் தளும்பிக்கொண்டிருந்த அந்த ஏரி குப்பைமேடாக மாறிவருவதைப் பார்ப்பது பெருந்துயரம். ஒசூர் ராமநாய்க்கன் ஏரியும் தர்கா ஏரியும்கூட அவ்வாறே ஆகிக்கொண்டிருக்கின்றன.

ஒசூர் பகுதியில் முன்பு ஏரிகளும் இருந்தன என்று சொல்லும் நிலை உருவாகியிருப்பதைப்போலவே, இப்பகுதியில் முன்பெல்லாம் மலைகளும் இருந்தன என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இங்குள்ள மலைகள் முழுவதும் கனிம வளங்களாகவும், டாலர்களாகவும், ஈரோக்களாகவும் பார்க்கப்படுகின்றன. ஆகாயம் முட்டி அண்ணாந்து பார்க்க வைத்த மலைகள் இன்று தலைகவிழ்ந்து பார்த்தாலும் தரைக்கு கீழே பலநூறு அடிகள்வரை தோண்டப்பட்ட பள்ளங்களாகியுள்ளன. கிரானைட்டுக்காகவும் ஜல்லிக்காகவும் ஒசூர் தேன்கனிக்கோட்டை வட்டாரம் முழுவதும் இருக்கின்ற மலைகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. இயற்கையின் சமநிலையிலும் பல்லுயிர்ச் சூழலிலும் ஏற்படும் சீர்கேடுகளைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இங்குள்ள மலைகளைத் தகர்ப்பதற்காகவே நூற்றுக்கணக்கான கிரானைட் தொழிற்சாலைகள் இப்பகுதியில் வந்த வண்ணமுள்ளன. ஏற்கனவே கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியில் இருந்த மலைகளைத் தகர்த்துத் தின்றபிறகு, இப்போது ஒசூர் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன இந்த கிரானைட் கம்பனிகள். கோடிகோடி டாலர்கள் கொட்டிக்கொடுத்தாலும் இத்துனூண்டு கல்லைக்கூட உருவாக்க முடியாது என்று தெரிந்திருந்தும் கோடானகோடி வருடங்களில் உருவான மலைகள் தகர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் பற்றி வெகுவாக அலட்டிக்கொள்கிற பல அமைப்புகள் / ஆளுமைகள்கூட இந்த மலைத்தகர்ப்பு  பற்றி வாய் திறப்பதில்லை. மலைகளைத் தகர்த்தெடுத்த கற்களால் அலுவலகங்களையும் வீடுகளையும் ஆலைகளையும் மழமழப்பாகவும் குளுமையாகவும் கட்டிக்கொண்டு வேறெதையோ சுற்றுச்சுழல் ஆபத்து என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

குண்டூசி முதல் குட்டி விமானம்வரை உற்பத்தியாகும் இடம் என்கிற கீர்த்திக்கு விலையாக ஒசூர் பகுதியின் சுற்றுச்சூழல் காவு கொடுக்கப்பட்டாகிவிட்டது. கோடைக்காலத்திலும்கூட மின்விசிறியின்றி இருந்த காலம்போய் இப்போது மின்விசிறியின்றி குளிர்காலத்தையும்கூட கடக்கமுடியாது என்கிற நிலை வந்துவிட்டது. இந்த ஊரில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஆசையை எதுவெல்லாம் உருவாக்கினவோ அதுவெல்லாம் இல்லாமல் போய்விட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களால் மட்டுமே பனிஷ்மென்ட் ஏரியா என்று சொல்லப்பட்டுவந்த இப்பகுதி ஒரு சுற்றுக்குப்பிறகு, மீண்டும் பனிஷ்மென்ட் ஏரியாவாகிவிட்டது. நிகழ்ந்துவரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழாமல் இப்படி பழையதை எண்ணிப் புலம்பக்கூடாது என்று உபதேசிக்க அவசரப்படுகிறவர்களே, சற்று பொறுங்கள்... இது மாற்றமல்ல. அழிவு!

***

இன்று ஒசூர் விரிந்து பரந்த நகரமாகி பெங்களூருவின் அடுத்ததெருபோல மாறிவருகிறது. சாலைகள் மேலும் மேலும் அகலமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கத்தைக் கடக்க ஆட்டோ பிடிக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவை அகலமாக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்கிற அளவுக்கு நிலத்தின் மதிப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. உண்மையில் இப்போது இங்கே ரியல் எஸ்டேட் தொழில்தான் செழித்து வளர்ந்துள்ளது. புதிது புதிதாக ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உருவாகி தத்தமது நிழலைக்கூட விற்றுவிடுமாறு ஆசைகாட்டி வருகிறார்கள். தூண்டப்பட்ட பலரும் தமது குடும்பத்தின் பாரம்பரிய நிலங்களை விற்றுவிட்டு ஸ்கார்பியோ காரில் பவனி வருகிறார்கள்.  ஆற்றை, மலையை, வனத்தை, வளத்தை, கல்வியை விற்பதாக அரசாங்கங்கள் இருக்கும்போது அதன் குடிமகன் தனக்குள்ள நிலத்தை விற்பதைத் தவறென்று எவ்வாறு நாம் சொல்ல முடியும்? ஆனால், இந்த நில விற்பனை இங்கு பல குடும்பங்களுக்குள்ளேயே பகையையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளது. ரத்த உறவுகளைக்கூட வெட்டிச்சாய்த்துவிட்டு நடக்கும் இந்த நிலபேரங்கள்தான் இன்று ஒசூரின் பணப்புழக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது.

ஒசூரில் டிராஃபிக் சிக்னல்கள் நிர்மாணிக்கப்பட்ட நாளில்தான், இந்த நகரம் ரொம்பவும் பெருத்துவிட்டதோ என்கிற பயம் எனக்கு முதன்முதலாக ஏற்பட்டது. ஐந்து நிமிட நடைக்குள் தெரிந்தவர்கள் என்று சிலரைப் பார்க்கமுடிந்த ஊரில் இப்போது கடைவீதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் புதிய முகங்கள். வேறு யாருடைய ஊருக்கோ தவறுதலாக வந்துவிட்டதுபோன்ற உணர்வை உருவாக்கும் படியாக அவ்வளவும் புதிய முகங்கள். அவர்களோடு எந்த அறிமுகமும் உரையாடலும் ஊடாட்டமும் கொள்ளாமல் ஒதுங்கிப்போய் தனிமைப்படுத்திக் கொண்டதைப்போன்ற நினைப்பு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. ஊரில் இருக்கும்போது வெளியே வராமல் ஏதாவது வேலையைச் செய்தபடி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பதும் அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்விடுவதும்கூட இப்படியான நிலையை உருவாக்கி இருக்கும். என்னைப் போலவேதான் ஒவ்வொருவரும் நினைத்தபடி மற்றவரைக் கடந்து போகிறார்களோ என்னவோ? அதற்காக, சட்டென எதிரேபோய் ''என் பெயர் ஆதவன், நானும் ஒசூரில்தான் இருக்கிறேன். நீங்கள்...?’ என்று ஒவ்வொருவரோடும் அறிமுகமாகி நண்பர்களாகிவிட முடியாது. ஆனால் ஜார்ஜ், பழனிச்சாமி, சந்துரு, மல்லிகா, ராணி, தனபால், ராமன், ராமகிருஷ்ணப்பா, ஜி.ஹெச். ராஜசேகர், சுமதி, டாக்டர் பொன்ராஜ், 'கௌரிசங்கர்’ அருள், என்.எஸ்.மாதேஸ்வரன், வசந்த சந்திரன், பொறியாளர் வாசுதேவன் ஆகியோரைப் போலவே ஒசூரின் ஒவ்வொருவரையும் என்மீது அன்புள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவே மனம் விரும்புகிறது. அந்த மகத்தான பொறுப்பை காலத்திடம் ஒப்படைத்துக் காத்திருக்கிறேன்.''


(நிறைந்தது)


 நன்றி: என்விகடன்.காம்
 

சனி, நவம்பர் 24

ஒசூரெனப்படுவது யாதெனின் : 9 - ஆதவன் தீட்சண்யா


தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து சம்பளம் வாங்கினோமா... கிம்பளம் தேத்தினோமா  என்பதிலேயே குறியாக இருப்பதுதான் ஒரு அரசு ஊழியருக்கான இலக்கணமாகச் சொல்லப் படுகிறது. வேலையில் சேர்ந்ததற்காக அரசாங்கத்திடம் இருந்து சம்பளத்தையும் வேலை செய்வதற்காக மக்களிடம் இருந்து நேரடியாகக் கிம்பளத்தையும் பெறுகிற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்கிறவர்கள் இங்கு ஆகச்சிறந்த அரசு ஊழியராகிறார். லஞ்சம் பெறாதவர் யோக்கியர் என்று சொல்லப்பட்டு வந்ததுபோய், 'கை நீட்டிக் காசுவாங்கிட்டா கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அவர் பக்கா ஜென்டில்மேன், யோக்கியர்...’ என்று சொல்லும் அளவுக்கு மக்களின் மனநிலையை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இத்தகைய அரசு ஊழியர்களுக்குத்தான் உண்டு.

கடுகடுவென முகம்கொண்ட பத்துபேரில் எட்டுபேர் அரசு ஊழியர்களாகத்தான் இருப்பார்கள். தன்னிடம் வருகிற சனத்திடம் லேசாகச் சிரித்தால்கூட அதையே ஒரு சலுகையாகக் கருதிக்கொண்டு கொடுக்கிற லஞ்சத்தைக் குறைத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில்  கடுகடுவென முகத்தைக் காட்டத்தொடங்கிப் பின் அப்படியே இறுகி, அதையே நிரந்தர முகமாகப் பெற்றவர்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய்களில் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களோடு மிக நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள இவர்கள் கைசுத்தம் வாய்ச்சுத்தம் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். ஆனால், 'கோன் எவ்வாறோ குடிமக்கள் அவ்வாறேஎன்று ஆட்சியாளர்களைக் குற்றம் சாட்டிவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அதற்கேற்றவாறே ஆட்சியாளர்கள் அமைகிறார்கள். ஆட்சியாளர்களைப் பொறுத்தே அவர்களுக்குக் கீழே ஊழியர்கள் அமைகிறார்கள்.

லஞ்சம் வாங்காமலிருந்து பிழைக்கத்தெரியாதவர், சம்பாதிக்கத் துப்பில்லாதவர், கூறுபாடு தெரியாதவர், ஊரோடு ஒத்துப்போகாத தனிப்பிண்டம், வைக்கப்போர் நாய் என்றெல்லாம் பல பெயர்களால் அவமதிக்கப்படுவதைக்காட்டிலும் லஞ்சப்பேர்வழி என்கிற ஒரேயரு அவப்பெயர் கௌரவமானதுதான் என்கிற முடிவுக்கு ஒருவர் வந்து சேர்வதற்கு அவருடைய தனிப்பட்ட குணக்கேடு மட்டுமே காரணமல்ல, இந்தச் சமூக அமைப்பும்தான். எப்படி சம்பாதித்தார் என்பதை விடவும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார் என்பதைவைத்தே ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதாக இருக்கும் இந்தச் சமூகத்தில் மதிப்பிழந்து நிற்கிற தைரியம் யாருக்குத்தான் வரும்?  லஞ்சம் கொடுப்பவராகவோ பெறுகிறவராகவோ உளவியல்ரீதியாகவும் நடைமுறையிலும் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தனிநபரும் சீரழிந்திருக்கிற ஒரு சமூகத்துக்கு எவ்வகையான ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் தேவையோ அவ்வகையில் வாய்த்திருக்கிறார்கள். இங்குள்ள அதிகபட்ச வாய்ப்பே என்னவென்றால் லஞ்சம் வாங்காதவராக வேண்டுமானால் நீங்கள் தாக்குப்பிடிக்கலாம்... கொடுக்காமல் உங்களால் வாழமுடியாது என்பதுதான்.மக்களையும் நாட்டின் வளங்களையும் கொள்ளை யடிப்பதற்காகவும் இங்குள்ள ஏற்றத்தாழ்வுகளை பாதுகாப்பதற்காகவும் மட்டுமே காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அரசு அமைப்பை காலத்திற்கேற்ற வகையில் மாற்றியமைக்காத குற்றத்திற்காக, இந்தச் சமூகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையாக லஞ்சமும் ஊழலும் தொடரத்தான் செய்யும். அன்னா ஹசாரேயும் அர்விந்த் கெஜ்ரிவாலும் சோப்புநுரையை ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.  

ஆனால், இப்படித் தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல், இராப்பகலும் ஊர் சுற்றிக்கொண்டு, அரசியல் கலை இலக்கியம் என்று பேசிக்கொண்டு, தொழிற்ச்சங்கம், போராட்டம் என்று அலைகிற அரசு ஊழியர்கள் ஊருக்கு பத்துப் பேராவது இருந்தார்கள். ஒடுக்குமுறை இயந்திரமான அரசின் ஒரு பகுதியாக இருக்கிற அரசு ஊழியர்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதமுடியுமா, முடியாதா என்பதைத் தாண்டி, அவர்களை அணிதிரட்டி அரசியல் போதமேற்றி பெருந்திரளான சாமான்ய மக்களுக்கு அனுசரணையானவர்களாக மாற்றிவிட முடியாதா... கண்ணியமான வாழ்வை மேற்கொள்வதற்கான ஊதியத்தைப் பெற்றுத் தந்த பிறகாவது அவர்கள் மக்களைப் பிராண்டாமல் கைசுத்தத்தோடு வேலைபார்க்கமாட்டார்களா என்கிற நப்பாசையில் பொழுதுக்கும் சங்கம் போராட்டம் என்று அலைகிற பத்துப்பேரை நீங்கள் எல்லா ஊரிலும் பார்க்கமுடியும். நாளடைவில், இந்த நோக்கங்கள் பின்னுக்குப்போய் சங்கம் வைப்பதும், தலைவர்களாக இருப்பதும், சங்கமே இல்லாமல்போனாலும் தலைவர்களாக இருப்பதும்  முன்னுக்கு வந்துவிடும் ஆபத்துகளும் உண்டு. எது எப்படியோ ஊருக்கு பத்துபேர் இருந்தார்கள். அப்படி ஒசூருக்குள்ளும் பத்துபேர் இருந்தோமென்றால் எங்களுக்குத் தலைவர் .சி.மைக்கேல். அவரது டி.வி.எஸ். சாம்ப் வண்டியை ஒசூரின் பொதுஜன வாகனம் என்று சொல்லும் அளவுக்கு அதை யார் வேண்டுமானாலும் ஓட்டி பழகிக்கொண்டிருப்பார்கள்.  

ஒசூர் .டி.-ல் பணியாற்றிய மைக்கேல் தமிழ்நாட்டின் அரசு ஊழியர் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவர். இப்பகுதியில் பரந்த மக்கள் தொடர்பும் செல்வாக்கும் பெற்றவர். எளிய குடும்பங்களில் இருந்து .டி.. படிக்க வந்த அனேகரை ஒசூர் தொழிற்சாலைகளில் புகுத்திவிட்டவர். எந்தவொரு அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் தெருவிலும் அவரை அறிந்தவர்கள் இருந்தார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒசூர் வட்டாரத் தலைவராகவும் இருந்தார். எந்த ஒரு அலுவலகத்திலாவது ஏதேனும் பிரச்னை என்று வந்துவிட்டால் அவரும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் ஆஜராகிவிடுவார்கள். இவர்களைப் போலவே இந்தியன் வங்கியில் ரகுபதி, ராஜா, சிவா, இன்சூரன்சில் கே.ஆர்.சக்ரவரத்தி, சேக்கிழார், பாபு, அஞ்சல் துறையில் மோகன்ராவ், கே.வி.நாகராஜன், ராஜநளா, தந்தி அலுவலகத்தில் ஜார்ஜ், .கணேசன், சக்திவேல், தொலைபேசி நிலையத்தில் ரத்தினவேல், .சுப்பிரமணி, சங்கரன், நான் என்று ஒரு பெரிய பட்டாளம் அங்கங்கே தயாராகி இதே வேலையாக அலைந்துகொண்டிருந்தது.  இந்தச் சூழலில்தான் 'சும்மா ஆடுற சாமிக்கு சூடம் காட்டினது போல...’ 1988-ல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய போராட்டம் வெடித்தது.  முனிராஜ், மீனாட்சிசுந்தரம், கணேசன், புருசோத்தமன், சீனிவாசலு, சந்திரசேகர், சௌந்தர், சீதாராமன் என எங்களது பட்டாளம் விரிவடைந்தது. ஆனால், பெண்கள் யாரையும் இணைத்துக்கொண்டு செயல்படாத வெறும் ஆண் பட்டாளம்.  

மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரிய அந்த 1988-ம் வருடத்திய போராட்டம் ஒசூர் பகுதியில் அனைத்து மத்திய மாநில பொதுத் துறை ஊழியர்களின் கூட்டுப்போராட்டம் போல்நடந்தது. தொலைபேசி ஊழியர்களாகிய எங்களுடைய கே.ஜி.போஸ் இல்லம்தான் அந்தப் போராட்டக்குழுவின் அறிவிக்கப்படாத அலுவலகமாக இயங்கியது. எந்நேரமும் திமுதிமுவென கூட்டத்தால் பரபரத்துக்கிடந்த அந்த இல்லத்தில்தான், பொய்வழக்கின்பேரில் தேடப்பட்டுவந்த டியூக் பொன்ராஜ் போன்ற மாவட்டத் தலைவர்கள் சிலர் கைதுக்குச் சிக்காமல் நீதிமன்றத்தில் சரணடையும்வரை தலைமறைவாக இருந்தார்கள்.

'ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதுக்கு?’ என்று கேட்ட இந்த தமிழ்நாட்டில் அப்போது கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. ஆபாசத்தையும், வன்முறையையும், விலையேற்றத்தையும், வேலையின்மையையும், கள்ளச் சந்தையையும், கடத்தலையும், பதுக்கலையும் தடுப்பதற்குச் சுண்டுவிரலைக்கூட அசைக்காத கவர்னர் அலெக்சாண்டர், தொழிலாளர்களோ அரசு ஊழியர்களோ போராடினால் இரும்புக்கரம்கொண்டு அடக்குவோம் என்று கொக்கரித்தார். கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.  கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற எங்கள்மீது குதிரைப் படையை ஏவிவிட்டார்.  கவர்னரின் ஆணையை ஏற்று தாக்குதல் நடத்திய போலிஸ்காரர்களுக்கும் சேர்த்து அந்தப் போராட்டம்தான் கணிசமான ஊதிய உயர்வைப் பெற்றுத்தந்தது.

ஒசூர் சார் ஆட்சியர் அலுவலக நூலகத்தில் இருக்கின்ற சேலம் கெஜட்டியர் ( லாஃப்னு மேனுவல், கால்நடைப் பண்ணை மற்றும் வனத் துறையின் திட்ட வரைவறிக்கைகள்) சர்வே ஆஃப் இந்தியாவின் அறிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்தப் போராட்டக் குழுவின் சார்பில்  தயாரித்தளித்த கோரிக்கை மனுவின்பேரில்தான் ஒசூர் தேன்கனிக்கோட்டை வட்டங்கள் மலைப் பிரதேசமாகஅறிவிக்கப்பட்டன. இங்கு பணியாற்றும் மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்றைக்கும் மாதாமாதம் தங்களுடைய சம்பளத்தோடு மலைவாழ்படியையும் பெற்றுவருகிறார்கள். பல தனியார் நிறுவன தொழிலாளர்களும் மலைவாழ்படி பெறுவதற்கு வழிபிறந்தது.

போராட்டக்களத்தில் உருவான ஒற்றுமையை வடிவப்படுத்தும் முகமாக மத்திய மாநில பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கினோம். .சி.மைக்கேல், தலைவர். நான் பொதுச்செயலாளர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 74 சங்கங்கள் அங்கம் வகித்த பேரமைப்பாக அது உருவெடுத்திருந்தது. மாநில அரசின் ஆணையைக்காட்டி  எல்..சி., பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்களும் மலைவாழ்படியைப்பெற ஒருங்கிணைப்புக்குழு துணைநின்றது.  இந்த மலைவாழ்படி அமலுக்குவந்து பலமாதங்களானபின்பும் போலிசுக்கு வழங்கப்படாமலிருந்தது. என்னதான் ஆகாயத்தில் இருந்து குதித்த நினைப்பு போலிசுக்கு இருந்தாலும் அவர்களும் அரசு ஊழியர்கள்தானே என்று ஒரு நோட்டீசில் குறிப்பிட்டபிறகே அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒருவேளை போலிஸ்காரர்கள் ஏதாவது சங்கத்தை உருவாக்கி ஒருங்கிணைப்புக் குழுவில் புகார் செய்திருக்கிறார்களோ என்று காவல் துறை அதிகாரிகளுக்கு வந்த சந்தேகம்  கடைசிவரை தீரவேயில்லை.  

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், நான் வேலை பார்க்கிற தொலைபேசி ஊழியர்களுக்கோ அல்லது தபால், தந்தி, ரயில்வே, சுங்கம், பட்டுவாரியம் உள்ளிட்ட பிற மத்திய அரசு ஊழியர்களுக்கோ இந்த மலைவாழ்படியை இன்றுவரை பெறமுடியாமல் போனதுதான். மாநில அரசுக்கு இது மலைப் பகுதி, மத்திய அரசின் அளவீட்டில் இது தரைப் பகுதி. அதுபோலவே மாநில அரசு தனது ஊழியர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்களுக்கு குளிர்காலப் படியினை வழங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தடித்ததோல் இருப்பதாகக் கருதியோ என்னவோ அதையும் மறுத்துவிட்டது.  நான், மணிமோகன், கோவிந்தராஜ், மோகன்ராவ் ஆகியோர் செய்த முறையீட்டின் பேரில் மத்திய தீர்ப்பாயம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தபோதும் காம்போஸிட் ஹில் அவலவன்ஸ் என்கிற குழப்படியான அளவீட்டைக் காட்டி இன்றுவரை மத்திய அரசு மறுத்துவருகிறது. நானும் தொழிற்சங்கப் பணியிலிருந்து படிப்படியாக விடுவித்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பக்கம் நகர்ந்துவிட்ட பின்பு அந்தக் கோரிக்கை கேட்பாரற்றதாகிப்போனது.

***
தேன்கனிக்கோட்டையில் பணியாற்றும்போதிருந்தே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. பின்னாளில் பட்டிமன்ற பேச்சாளராகத் தொலைக்காட்சிகளின் வழியே அறியப்பட்ட கவிஞர் வெண்மணி 1980-களில் திருவண்ணாமலையில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது தலைமையில் ஓசூரின் மொட்டைமாடிகளில் அவ்வப்போது நடந்த கவியரங்கங்களில் பங்கெடுத்திருக்கிறேன். 'கனவின் விலை ஒரு ரூபாய்’, 'சின்ன விடுதலைபோன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள மேலூர் மாவேந்தன் இதேகாலத்தில் ஒசூர் மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவர் ஆங்கிலத்திலும் கவிதை எழுதக்கூடியவர். கவிதைகள்பற்றி அவருடனான உரையாடல் தொடக்கநிலையில் இருந்த எங்களுக்கெல்லாம் பேருதவியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கவியரங்கம் என்பதோடு நில்லாமல் அவ்வப்போது மேலெழுந்துவந்த விஷயங்கள் பற்றிய விவாதம், கருத்தரங்கம் அல்லது சொற்பொழிவு என்று நாங்கள் நடத்திய நிகழ்ச்சிகளின் தன்மை மாறியபோது மொட்டைமாடிகளைவிட்டு கீழே இறங்கி மக்கள் நடமாடும் தெருக்களுக்கு வந்திருந்தோம். தாலுகாபீஸ்  ரோட்டில் காமராஜ் காலனிக்கு அருகில் மேடையமைத்து நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு எங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினோம். பிரதான சாலையின் ஓரத்தில் மேடையமைத்து கலை இலக்கியம் பற்றிப் பேசுவதைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகக்கருதி புகார் சொல்லிப் புலம்பும் நகரத்து மனநிலை, ஒசூர் மக்களைப் பீடிக்காதிருந்த காலமது.  அந்த வழியாக வரும் யாராக இருந்தாலும் கொஞ்நேரம் நின்று நிகழ்ச்சியைப் பார்க்காமல் கடந்துவிடமாட்டார்கள். நிகழ்ச்சியே சரியில்லை என்றாலும், பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிற பக்குவம் எப்படியோ அந்த சனங்களிடம் அன்றைக்கு இருந்தது.

சென்னை கலைக்குழுவின் தாக்கத்தால் ஒசூர் தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட ஒசூர் கலைக் குழு, 'அஞ்சறைப்பெட்டி’, 'பெண்போன்ற நாடகங்களை இப்பகுதியில் நடத்திவந்தது. தொழிற்சங்கங்களில் பணியாற்றிவந்த தோழர்களின் குடும்பங்களில் இருந்து சித்ரா பொன்னுசாமி, ஜெயந்தி, கீதா சேகர் போன்ற தோழியர்கள் நடிக்க வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் குமணனாக வேடமிட்டு நடித்திருந்த 'மாபெரும் தகுதியைவைத்து நானும் அஞ்சறைப் பெட்டியில் நடித்துவந்தேன். கோமல் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த ஐந்துநாள் நாடக முகாமில் பங்கேற்று திரும்பியபிறகு நான் என்னை ஒரு நாடகக்காரனாகவும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் 'தலைவர் மரணம்’, 'மாப்பிள்ளைக்கடைபோன்ற நாடகங்களுக்குப் பிறகு, வேறு எதிலும் நடிக்காமல் இருந்து கலைத் துறையைக் காப்பாற்றுவது என்று அமைதியடைந்து விட்டேன். அறிவியல் இயக்க கலைப் பயணத்தில் பங்கெடுத்து பிரளயன் மேற்பார்வையில் முறையாக பயிற்சியெடுத்து நடிப்பனுபவம் பெற்றிருந்த போப்பு, லட்சுமி, அன்புமணி, தேவா போன்றவர்கள் தொடர்ந்து மேடையேறிவந்தார்கள். பெண் நாடகத்தில் விநாயகம் பேசும் 'பஜ்ஜி குடு... சொஜ்ஜி குடு...’ என்ற வசனத்தை வைத்து 'ஏம்பா, சொஜ்ஜின்னா என்னாப்பா...’ என்று ஓட்டுவோம்.

மக்களுக்காக நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கு மக்களே நிதி கொடுப்பார்கள் என்று தைரியமாக எவ்விதக் கூச்சமுமின்றி தெருவில் இறங்கி உண்டியல் குலுக்கி நிதி சேர்ப்போம். குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்கிற உமாபதி, இரவி, தாடி செல்வம், முரளி, பிரான்சிஸ், தங்கப்பாண்டி, சுபாஷ், கோபால், அஸ்கர்கான், செல்லப்பாண்டி, தமிழ்ச்செல்வம், ராஜா, பெரியசாமி, பாண்டிக்கண்ணன், பவித்ரம் குமார் (இவரை உபத்ரவம் குமார் என்றும் செல்லமாக அழைப்பதுண்டு) போன்ற தோழர்கள் ஒருவீடு பாக்கியில்லாமல் துண்டுப்பிரசுரம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்துவிட்டு நிதியும் கேட்பார்கள், மக்களும் தங்களிடமிருப்பதை இல்லையெனாது கொடுப்பவர்களாக இருந்தார்கள். இதேபோலத்தான் ஒவ்வொரு ஆலையின் வாயிலிலும் கடைவீதியிலும் வசூலிப்பார்கள். எல்.முருகன் இதில் சமர்த்தர். சரியானதென்று நம்பும் விஷயங்களுக்கு உதவுகிறவர்களாகத்தான் மக்கள் எப்போதும் இருக்கிறார்கள். 'தேவையான கருத்துகளை முன்வைக்கிற நிகழ்ச்சிகளை நடத்துறீங்க.. தொடர்ந்து செய்யுங்க...’ என்று ஆடிட்டர் முத்துக்காளை கொடுத்த நூறுரூபாய்த்தாள் இன்றைக்கும் என் கண்ணுக்குள் இருக்கிறது. அதுதான் நாங்கள் அதுவரை பெற்றதிலேயே பெரியதொகை.

மக்களின் பங்களிப்போடு நடத்தப்படுகிற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பொறுப்புகூறும் கடப்பாட்டையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் உணர்ந்திருக்காவிட்டாலும் அவ்வாறுதான் நடந்துகொண்டோம். நிகழ்ச்சிக்கு வசூலாகும் தொகை எவ்வளவு, செலவுபோக கையிருப்பு எவ்வளவு, அதை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்றெல்லாம் நாங்கள் அறிவித்ததற்குக் காரணம், நாங்கள் யோக்கியமானவர்கள் என்று பீற்றுவதற்காக அல்ல. தாங்கள் கொடுத்த நிதி முறையாக செலவாகியிருக்கிறதா என்று அறிகிற உரிமை மக்களுக்கு இருக்கிறது என்பதால்தான். இத்தனைக்கும் அவர்களில் பலரும் கொடுத்ததென்னவோ அதிகப்படியாக ஐந்து ரூபாயாக இருக்கும். ஆனாலும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியமாக இருந்தது.

திருநெல்வேலியில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டுக்குச் சென்றபோது அங்கு எளிமையாகவும்  வித்தியாசமாகவும் செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. நோட்டுப் புத்தகங்களுக்கு மேலுறையாகப் போடுகிற பழுப்புத்தாளை சுவற்றில்ஒட்டி அதன்மீது விதவிதமான போஸ்டர் கலர்களில் எழுதியிருந்தார் ஓவியர் கிருஷி. அடடா, இப்படி ஒரு பேப்பரை ஒட்டி இன்ஸ்டன்ட்டாக சுவரைத் தயார் பண்ணிக்கொள்ளத் தெரியாமல் இவ்வளவு நாளும் வெள்ளையடித்துக்கொண்டிருந்தோமே என்று என் அறியாமையின்மீது எனக்கே கோபம்வந்தது. அவரது கையெழுத்தும் சற்றே ஒயிலாக ஒரு புதுச்சாயலுடன் இருந்தது. அது தமிழை மலையாளத்தில் அல்லது மலையாளத்தை தமிழில் எழுதியதுபோன்ற மயக்கத்தை தருவதாயிருந்தது. எனக்குள் இருந்த சுவரெழுத்துக்காரன் விழித்தெழுந்து 'ஜிங்குஜிங்குஎன்று உள்ளுக்குள் ஆடினான். பிறகென்ன, ஒசூர் திரும்பியதும் ஒரு சுவரையும் மிச்சம்வைக்காமல் விளையாடிவிடவேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டேன். அப்படியே நடந்தும் தொலைத்தது. போதாக்குறைக்கு திருவண்ணாமலை கருணாவும் சேர்ந்துகொண்டபிறகு, தமிழின் பாடு தகிங்கினத்தோம் ஆனது. பெரிய சுவற்றுக்கு பேப்பர் ஒட்டி அதன் ஓரத்தில் ரெண்டேவரி எழுதி மிச்ச இடத்தைக் காலியாக விடுவது, அடர் வண்ணத் தாள்களை ஒட்டி வெளிர் வண்ணங்களில் எழுதுவது, படம்போல எதையாவது கிறுக்கிப் பக்கத்தில் எழுதுவது என்று வடிவமைப்பில் தன் கில்லாடித்தனங்களைக் காட்டுகிறவராயிருந்த கருணாவின் கையெழுத்தும் கவர்ந்திழுக்கும் தன்மைகொண்டது. கிருஷியின் எழுத்தையும் அச்செழுத்தையும் குழைத்த மாதிரியான வடிவங்களைக்கொண்டது. வண்ணங்களைத் தேர்வு செய்வதிலும் உரிய இடத்தில் அளவாகப் பயன்படுத்துவதிலும் கைக்கொள்ள வேண்டிய நுணுக்கங்களை நான் கருணாவுடன் வேலை செய்யும்போதுதான் கற்றுக்கொண்டேன். கருணாவின் எழுத்து வடிவத்தையும் மருதுவின் எழுத்து வடிவத்தையும் குழைத்த மாதிரியான ஒரு சாயல்கொண்ட எழுத்து எனக்கு அமைந்தது. தமிழ் மொழியின் வரிவடிவத்தைச் சிதைக்கின்ற அழிவு வேலையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஒசூர் தமிழாசிரியர் கழகம் கண்டனத் தீர்மானம் போட்டபிறகும் நாங்கள் ஓயவில்லை. தமிழைத் தமிழாகவே எழுதுங்களேன்என்று தேனி.ரா.பாண்டியன், கருமலைத் தமிழன் போன்ற தமிழன்பர்கள் உரிமையோடு கேட்டுக்கொண்டார்கள். ஆனாலுமென்ன, சேட்டை தொடர்ந்தது.

எமர்ஜென்சி காலத்து இருபதம்சத்திட்டத்தை விளக்கும் மிகப்பெரிய போர்டு ஒன்று காந்தி சிலை முக்கில் இருந்தது அப்போது. எமர்ஜென்சி கொண்டுவந்த இந்திராகாந்தியே அது தப்புனு மாப்பு கேட்டு மன்றாடிய பிறகு, இன்னும் இந்த போர்டுக்கு இங்கென்ன வேலை என்று அதில் கைவைக்கத் தொடங்கினோம். அது எல்லோர்கண்ணிலும்படும் வாகான இடத்தில் இருந்ததும் மற்றொரு காரணம். ஊரடங்கிய பிற்பாடு முஸ்தபா பேப்பர் மார்ட்டின் கூரைமீதுஏறி அந்த போர்டில் கலர் பேப்பர்களைத் தாறமாறாகக் கிழித்துக் கிட்டத்தட்ட 'கொலாஜ்மாதிரி ஒட்டி நிகழ்ச்சிபற்றி எழுதுவதற்குக் குறைந்தபட்சம் 20 பேராவது ஜமாகட்டி போவோம். எல்.முருகன், நாய் மணி, கென்னடி, இங்கிலிஷ் எலெக்டிரிகல்ஸ் ராமன் போன்ற தோழர்கள் இல்லாமல் அப்படியரு ஜமாவேகூடாது. நைட் ஷிஃப்ட் முடித்து வருகிற தொழிலாளர்கள்  நாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் அழகையும் எங்களுக்குள் பேசிக்கொள்கிற கேலி கிண்டல்களையும் ரசித்துக்கொண்டு கொஞ்சநேரமாவது நின்றுவிட்டுத்தான் போவார்கள்.  

ராத்திரியில் எழுதிவிட்டுப்போன நாங்களே பகலில் வந்து யாரோபோல அந்த இடத்தில் நின்றுகொண்டு போவோர் வருவோர் அந்த விளம்பரத்தைப்பற்றி என்ன கமென்ட் அடிக்கிறார்கள் என்பதைக் கேட்டுப் பரவசமடைவோம். அவர்கள் குறையாக ஏதாவது சொன்னால் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் அடுத்தமுறை எழுதும்போது அந்தக் குறைகளை தவிர்த்துவிடுவோம். அந்த போர்டே இத்துப்போய் சரிந்துவிழும் வரையில் நாங்கள் அதைப் பயன்படுத்திவந்தோம். சுவர் விளம்பரம் செய்வது, தட்டி எழுதிக் கட்டுவது, நூற்றுக்கணக்கில் விதவிதமாகச் சுவரொட்டிகளைத் தயாரித்து நகரெங்கும் ஒட்டுவது என்று நிகழ்ச்சிக்காகத் தோழர்கள் ஒன்றுகூடி மேற்கொள்ளும் தயாரிப்புவேலைகளே கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கும். ஏதாவது, உயரமான இடத்தில்ஏறி பேனர் கட்டவேண்டிய தருணங்களில் ஒருவரை தோள்மீதுஏற்றி நிறுத்திக்கட்டி முடிக்கும்வரை தாங்கிப்பிடிக்கிற திண்மைகொண்ட பல தோழர்கள் இருந்தார்கள். அவர்களது திண்மை வெறும் உடலில் இல்லை. இதுபோன்ற இயக்க வேலைகளையும்கூட உலகமயமாக்கலின் தாக்கத்தால் அவுட்சோர்சிங்குக்கும் பீஸ்ரேட்டுக்கும் தள்ளிவிடும் இன்றைய தலைமுறைக்கு இந்தக் கொண்டாட்டங்களும் சந்தோஷங்களும் கிட்டுவதற்கு வாய்ப்பில்லை.

நாடகம், கிராமியப் பாடல்கள், ஆட்டங்கள், கவிதை வாசிப்பு, ஓவியக் கண்காட்சி, நூல் வெளியீடு, விமர்சன அரங்கு, விவாதங்கள், படைப்பாக்க முகாம்கள், கலை இரவுகள், திரைப்பட விழாக்கள் என்று நிகழ்வின் பன்முகப்பட்ட தன்மைகளும் உள்ளடக்கமும் ஒசூருக்குள் இருந்த படைப்பாக்கத்திறன் கொண்ட பலரோடும் எங்களுக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்தன. புதிய நண்பர்களால் வட்டம் விரிவடைந்துகொண்டேயிருந்தது, அல்லது வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ள புதியவர்களை நண்பர்களாகக் கண்டடையும் முயற்சி தொடர்ந்தது. 'பனியெனக் கவியும்...’ என்ற தலைப்பில் ஒசூர் பகுதிக் கவிஞர்கள் 48 பேரின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும்கூட இப்படியாகத்தான். பரந்த மக்கள்திரளுக்கான கலை இலக்கிய பொது நிகழ்வுகளையும்,  படைப்பார்வம் கொண்டவர்களுக்காகக் கவிதைப் பட்டறை, சிறுகதை முகாம், ஓவியப்பயிற்சி முகாம், கிராமியப் பாடல் முகாம் ஆகியவற்றையும் நடத்திக்கொண்டிருந்தோம்.  எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடக்கும் நிகழ்வுகள் ஒசூரின் குறிப்பிடத்தக்கவையாகக் கவனம்பெற்றன.

கிங்ஸ் சாதிக், பிரின்ட்டெக் சுந்தரமூர்த்தி, மீனு பிரின்ட்ஸ் அண்ணாமலை கமலா, சத்யா ஆர்ட்ஸ் நண்பர்கள், பர்ஃபெக்ட் கிராஃபிக்ஸ் செந்தில், புரொஃபசனல் கூரியர் செந்தில்,  எஸ்.குமார்ஸ், விஜயகுமார், பி.எம்.சி. குமார், அரங்க.துரைராஜ், டாக்டர்.சுதா போன்றவர்களின் அறிமுகம் கிட்டியபோது எங்களது நிகழ்வுகளுக்கு மேலும் புதிய பரிமாணங்கள் கிடைத்தன. சிறு தொழில் நிறுவனங்களை நடத்திவந்த வோல்டா கெபாசிட்டர்ஸ் இளங்கோவன், ஆர்னிகா சிவக்கொழுந்து, சம்பத், மேகநாதன், நம்பி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், ஞானசேகரன் போன்றவர்களும் கூட எங்களுக்கு மனமுவந்து உதவிகளைச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களெல்லாம் இருக்கும் தைரியத்தில் ஓரிரு வாரத்திற்குள் ஒரு லட்சரூபாய் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தமுடியும் என்கிற நிலையை எட்டியிருந்தோம். இந்த நிலையை எழுத்தாளர் சங்கம் அடைவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆடிட்டர் பழ.பாலசுந்தரம். அவரை ஓர் ஆடிட்டர் என்பதைவிடவும் இனிமையான பாடகர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொடர்களின் நடிகர் என்று சொல்வதே பொருத்தம்.  

எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்திருந்த இத்தகைய பரவலான தொடர்புகள்தான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள மிடிகிரிப்பள்ளி போராட்டத்தின் மையமாக இருந்தது. பெங்களூரின் கழிவுநீர்குட்டைபோல மாசுபட்டிருந்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஒசூருக்குக் குடிநீர் வழங்கப்பட்டபோது அது குடிப்பதற்கு உகந்த தண்ணீர் அல்ல என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்து தடுத்தபோது இதெல்லாம் ஒரு எழுத்தாளர் சங்கத்தின் வேலையா என்கிற கேள்வி வந்தது. எழுத்தாளர்கள் அந்தரத்திலிருந்து வந்தவர்களுமில்லை, அவர்கள் குடிப்பதற்கென்று தனியாக ஆகாய கங்கையிலிருந்து தண்ணீர் வருவதுமில்லை, நாங்களும் இந்தத் தண்ணீரைத்தான் குடிக்கவேண்டியிருக்கிறது, ஆகவே தடுக்கிறோம் என்று சொன்னோம்.

சுற்றுச்சூழல் சார்ந்த கருத்தியலைப் பரப்பவும் சுற்றுச்சூழலைப் பேணவும் ஒசூரின் ஒவ்வொரு பகுதி குடியிருப்போர் சங்கத்தையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட 'ஈரம்என்ற அமைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜசேகரின் ஒத்துழைப்போடு நகரம் முழுவதும் நட்டுவைத்த 5,000-க்கும் மேற்பட்ட மரங்களில் சில 100 மரங்களாவது இன்றைக்கு வளர்ந்தோங்கி நிற்கின்றன. 'ஈரம் அமைப்பிலிருந்து வந்திருக்கிறார்கள், டி.வி-யை நிறுத்திவிட்டு உடனே தெருமுக்கிற்கு வந்து அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்குமாறும் மரக் கன்றுகளை வாங்கிப்போகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்என்று கோயில் மைக்கில் அர்ச்சகர் அறிவிப்பு செய்யுமளவுக்கு ஈரத்தின் தேவை உணரப்பட்டிருந்தது. நான் வசிக்கும் தொலைபேசி நிலைய ஊழியர் குடியிருப்பை மறைக்குமளவுக்கு  சோலைபோல வளர்ந்திருக்கின்ற அவ்வளவு மரங்களும் ஈரத்தின் சார்பில் பெரியசாமியும் பழனிச்சாமியும் நானும்வைத்தவை. ஒசூர் ஏரியைத் தூர்வாருவது, ஏரிக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் செப்பனிடுவது, எங்கும் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியத்தை அழிக்கும் மாற்றுச்செடிகளை வளர்ப்பது என்றெல்லாம் தனது செயல்திட்டங்களைக் கொண்டிருந்த 'ஈரம்காய்ந்துபோனது குறித்த வருத்தம் எனக்குள் இப்போதுமிருக்கிறது. வெவ்வேறு கருத்தோட்டம் உள்ளவர்கள் இணைந்து செயல்படுவதற்கான அப்படியான பொதுமேடைகளுக்கான தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிக்கிறதென்றால் அதைப்பற்றி ரெண்டு கதையோ கவிதையோ எழுதிவிட்டுப்போகாமல் இப்படி வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்வது தேவைதானா? இப்படியான வேலைகள் நமது படைப்புத்திறனை அரித்துவிடாதா என்றெல்லாம் நாங்கள் யாரும் குழப்பிக்கொள்ளவில்லை.  எழுதுவதும் வாசிப்பதும் தனிநபர் செயல்பாடு. 24 மணிநேரத்தில் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கிற நேரத்தில் கொஞ்சத்தைத்தான் வாழும் சமூகத்திற்காகச் செலவிடுவது அப்படியன்றும் பெரிய பொதுநலச் சேவையுமில்லை. அது முழுக்கமுழுக்க தன்னலத்தையும் உள்ளடக்கியது. ஒரு வேலைக்கு எதிராக, இன்னொரு வேலையை முன்னிறுத்தி எந்த வேலையும் செய்யாமலிருக்கிற தந்திரங்களை நாங்கள் கைக்கொள்ளாமல் இருக்கப்போய்தான் ஈரம், குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி போன்ற அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட முடிந்தது. இந்த அமைப்புகளைத் தொடங்குவதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்திருந்தாலும் பின்னாளில் அந்தந்தத் தளம் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வந்து அவற்றை நடத்தினார்கள். எழுத்தாளர் பா.வெங்கடேசன் போன்றவர்கள் எங்களது செயல்பாடுகளோடு இணைந்துநின்ற புள்ளி இதுதான் என்று நினைக்கிறேன்.

ஆனால், உலகமயமாக்கலின் வழியே புதிய பொருளாதாரக்கொள்கையும் புதிய தொழிற் கொள்கையும் ஒசூர் தொழிற்பேட்டை மீது நிகழ்த்திய தொடர்தாக்குதல்கள் இங்கு பொதுத் தளங்களில் இயங்கிவந்த எழுத்தாளர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆலைமூடல், கதவடைப்பு, வேலையிழப்பு, ஊதியவெட்டு, சலுகை பறிப்பு என்று அடுத்தடுத்து வந்த தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து ஒவ்வொரு நாளைக் கடத்துவதுமே பெரும் சவாலாகவும் உளைச்சல் மிகுந்ததாகவும் மாறிப்போனது. முன்னுதாரணம் மிக்க பல உரிமைகளை ஈட்டிய தொழிற்பேட்டையின் முதல் தலைமுறைத்  தொழிலாளர்கள் குடும்பஸ்தர்களாகி அவர்களது குழந்தைகள் உயர்கல்வி அல்லது திருமணம் போன்ற பருவத்தை எட்டும்வயதில் இப்படியரு இன்னலுக்கு ஆட்பட்டு நிலைகுலைந்துபோனார்கள். இது இல்லாவிட்டால், இன்னொரு வேலை என்று முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாய் இருந்த அவர்களிடையே தற்கொலை மனோபாவமும் மனப் பிறழ்வுகளும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழியறியாது தொழிற்சங்கங்கள் திகைத்துநின்றன. சட்டவழிப்பட்ட போராட்டங்கள்மீது நம்பிக்கை இழந்த தொழிலாளர்கள் செல்போன் டவர்களின் மீதுஏறி தீக்குளிப்புப் போராட்டதை நடத்துமளவுக்கு விரக்தியடைந்திருந்தார்கள். எதிர்காலத்தைப் பற்றியல்ல, அடுத்தவேளை சோற்றைப்பற்றி எழுந்த அன்றைய நிச்சயமற்றத்தன்மை அவர்களை விவரிக்கமுடியாத வகைகளில் சிதைத்துக்கொண்டிருந்தது. அரசாங்கத்தின் கொள்கைகள் மிக நேரடியாக ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்களது சாப்பாட்டுத்தட்டிலும் கைவைப்பதை உணரமுடிந்தது. உறக்கத்திலிருப்பவர்களின் கழுத்தை அறுப்பதுபோன்ற கொடுஞ்செய்திகள் ஒவ்வொருநாளும் அரசாங்கத்தின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டபோதெல்லாம் சாவுமட்டம் உயர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், அவையெல்லாம் அரசாங்கத்தின் கொலைக்கணக்கில் சேர்க்கப்படாமல் தனிமனிதரின் விதிமுடிவென பொய்க்கணக்குக் காட்டப்பட்டது.

எந்த வம்புதும்பிலாவது ஈடுபட்டு இருக்கும் வேலையைத் தொலைத்துவிடக்கூடாது என்கிற கவனம் அவர்களை அவர்களுக்குள்ளேயே ஒடுக்கிப் பின் அவர்களை அவர்களுக்குள்ளேயே புதைத்தும்விட்டது. நடமாடுகிறவர்களிலும் எத்தனைபேர் உயிரோடு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதுதான் நானேகூட இறந்து போயிருப்பது தெரியவரும். அந்தளவுக்கு நம்பிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் குணநலன்களிலும் கடுமையான அரிமானங்களைக்கொண்டுவந்து சேர்த்த காலத்தில் நாங்கள்சிக்கிக்கொண்டோம். வேலையைத் தக்கவைத்துக் கொள்வது, கையிலிருக்கும் காசை பத்திரப்படுத்திக்கொள்வது, இப்படியான இக்கட்டிலிருந்து தப்பிக்க  இந்த வேலையையே நம்பிக்கொண்டிராமல்  ஏதாச்சும் சைடு பிசினஸ் செய்யக் கிளம்பியது, தனக்கும் தன் குடும்பத்திற்கும் வெளியே நடக்கிற எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருப்பது, பொருளியல் ஆதாயமில்லாத பொதுவேலைகளில் பங்கெடுப்பதை வீண்வேலையாகக் கருதுவது பிறகு அப்படியான தனது நிலைபாட்டை நியாயப்படுத்திக்கொள்கிற கருத்தியல்களை பேசுகிறவர்களாக வலிந்து மாறுவது என்று ஒசூர்வாசிகளின் உளவியலைத் தனக்குகந்த வகையில் கட்டமைப்பதில் உலகமயம் மூர்க்கமாக வெற்றிகண்டபோது நாங்கள் அதை எதிர்கொண்டவிதம் அவமானகரமானது. 'இருண்டகாலத்திலும் பாடலா, ஆம் இருளைப் பற்றிய பாடல்...’ என்பதெல்லாம் பழைய வசனங்கள் போல தெரிந்தன. உலகமயமாக்கலுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்துத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய வேலைகளைச் செய்வதற்கு முன்னெப்போதையும்விட தீவிரமாகச் செயலாற்றியிருக்கவேண்டிய நாங்களும் சோர்ந்துதான் கிடந்தோம் என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால், இந்தச் சோர்வு ஒரேயடியாக அப்பட்டமாக வெளிப்படாமல் உள்ளிருந்து அரித்துத்தின்று எங்களை முடக்கியே போட்டுவிட்டது. இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இல்லாமல் போகிற பலவீனத்தை நோக்கி நாங்கள் நடத்திவந்த அமைப்புகள் தொய்ந்து கொண்டிருந்தன. (பெரியசாமியும், சிவக்குமாரும், சம்புவும்  வந்து 'புதுவிசையைத் தப்பிக்கவைத்தார்கள்).  

பல ஆலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டன. கேட்பாரற்று அநாமத்தாக திறந்து கிடந்த ஆலைகளை மூடப்பட்ட ஆலை என்று சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. தொழிற்பேட்டையின் இடையிடையே புல்லும் புதரும் மண்டிய வளாகங்கள் பெருகின. இயந்திரங்களைத் தூக்கிக்கொண்டு போகவாச்சும் யாராவது வந்தால், கொடுத்த கடனை திருப்பிக்கேட்கலாம் என்று மூடிய ஆலைகளின் வாயிலில் வங்கிக்காரர்களும், எங்களுக்குச் சேரவேண்டிய பி.எப். பணத்தையாவது கொடு என்று கேட்க தொழிலாளர்களும் மாதக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள். ப்ச்... எதுவும் நடக்கவில்லை. ஒசூர், ஒருவழிப்பாதையைக் கொண்டதாகிப்போனது. வேலையிழந்த தொழிலாளர்கள் வெளியேறிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஊர்த்திரும்ப முடியாதவர்களும் விரும்பாதவர்களும் கவிஞர்.வையம்பட்டி முத்துச்சாமிபோல தள்ளுவண்டி வியாபாரியாக, ஓட்டல் தொழிலாளியாக,  டீக்கடைக்காராக, பீஸ்ரேட் தையல்காரராக ஏதேதோ அவதாரமெடுத்து வாழ்வை நகர்த்திக்கொண்டிருப்பதை அருகிருந்து காணும் துயரம் கொடியது.

புதிதாகத் தொழிலாளர்கள் யாரும் ஒசூருக்குள் வரவில்லை. தப்பித்தவறி வந்தவர்களும் தற்காலிக, ஒப்பந்த, பயிற்சிக்கால, சுமங்கலித்திட்ட தொழிலாளர்களாக வந்தார்கள். அன்றாடமே கேள்விக்குறியாய் இருந்த அவர்கள் பணித்தலங்களுக்கு வெளியேநடக்கும் எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்க முடியாதவர்களாகச் சுருக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் சுருக்கம் ஒசூரில் இயங்கிவந்த எல்லா அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் தேக்கத்தை உண்டுபண்ணியது. தேங்கும் நீரில் துர்வாடையும் கொசுவும் தலைப்பிரட்டைகளும்தானே உற்பத்தியாகும்? ஒசூரின் நிலையும் அப்போது அதுதான்.''

( சொல்கிறேன்...)

நன்றி: என்விகடன்.காம்

தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா

தேசாபிமானி மலையாள வார இதழில் (2019 ஜூன் 30) வெளியான எனது கட்டுரையின் தமிழ் வடிவம். இதிலுள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனெவே வாசித்திரு...