சனி, நவம்பர் 29

என்னத்த சொல்றது...

பெயரிலே என்ன இருக்கிறது என்பார்கள். ஆனால் அதில்தான் எல்லாம் இருக்கிறது என்று மாற்றிக்கொள்ளத் துடிப்பவர்களும் அதைத் தடுப்பவர்களும் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை அறியும்போது நகைப்பாகத்தான் இருக்கிறது. பெயரைக்கூட பகிர்ந்துகொள்ளத் தயாரில்லாத இவர்களில் சிலர்தான் கொஞ்சநாட்களுக்கு முன்பு அனைத்து சமுதாயப் பேரவை, தலித்தல்லாதார் கூட்டமைப்பு என்கிற பெயரில் உலாவந்தன்னர் என்பது அதைவிடவும் நகைப்புக்குரியது.
- ஆதவன் தீட்சண்யா

 ஏன்டா ஏதற்கெடுத்தாலும், வேளாளர்கள் கழுத்த அறுக்கிறீங்க! “சூரியகுல வேளாளர்” என புதுசா ஒருத்தன் கௌம்பீட்டான்டா...

சலவையாளர், மடிவாலா, ரஜகா, டோபி போன்ற பெயர்களில் சாதிச்சான்றிதழ்கள் சார்ந்து வந்தவர்கள் கோவை மற்றும் திருப்பூர்  மாவட்ட சூரிய வேளாளர் அறக்கட்டளை என்ற பெயரில் உள்ள அமைப்பினர் கோவை அருகில் உள்ள சோமனூரில் சில தினங்களுக்கு முன்னர் விழா ஒன்றை நடத்தினர். அவ்விழாவில் தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில், தாங்கள் சூரியனை நம்பியே தொழில் செய்வதாலும், கம்பராமாயணத்திலும், விக்கிரமாதித்தன் ஆட்சிக்காலத்திலும் இருந்ததைப் போலவே சூரியகுல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்றக்கோரி,  “சூரியகுல வேளாளர்” என்று அரசு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அக்கப்போரை முழுமையாக வாசிக்க:
http://www.velaler.com/index.php/world/articles/exclusive-articles/1328-secular-caste-112014#.VHkkA2czaqI

வியாழன், நவம்பர் 20

அப்பிடியாப்பா..... ?

கரிசக்காடு: மௌனத்தின் எதிர்ப்பதமாய் மாறிய கவிஞன்: உதயசங்கர் அறிவியலும், கலை, இலக்கியமும், தத்துவங்களும் இந்தப் பூமியில் ஏன் பிறந்தன. மனிதகுலம் நோய்நொடி, வறுமை, துயரம், ஏற்றத்தாழ்வுகள் இ...

புதன், நவம்பர் 19

KOILET: கோய்லெட் - ஆதவன் தீட்சண்யா

நவம்பர் 19:  உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு இக்கதை மீண்டும் நினைவூட்டப்படுகிறது.  
இந்தியாவின் நிதிவளத்தையெல்லாம் ஆஸ்திரேலியாவில் தொழில்தொடங்க அடானி குழுமத்துக்குத் திருப்பிவிட்டு,  இந்திய ஏழைகளுக்கு  கழிப்பறைகளை கட்டிக்கொடுக்க ஆஸ்திரேலிய இந்தியர்களுக்கு மோடி அறைகூவல் விடுத்தமைக்கும் இதற்கும் தொடர்பில்லை.


 சட்டப்பூர்வ எச்சரிக்கை
இந்தக்கதையைப் படிப்பது மனநலத்திற்கு மிகவும் தீங்கானது.
கதை கதையைக் கெடுக்கும், கதையைப் படிப்பவரோ ஊரைக் கெடுப்பார்.
ஊர் கெடுமானால் உலகம் கெடும், உலகம் கெட்டால் கதைகளும் கெடும்.
இந்தக்கதையைப் படிப்பது மனநலத்திற்கு தீங்....

கோய்லெட் என்பது கட்லெட், சாக்லெட் போன்றதொரு தின்பண்டம்/ நொறுவாய் என்று நினைத்துக்கொள்கிறவர்கள் சரியான தீனிமுழுங்கிகளாகத் தான் இருக்கமுடியும். டாய்லெட் என்பதன் முதலெழுத்துதான் மாறி இப்படி தவறுதலாக கோய்லெட்டாக அச்சாகிவிட்டதெனக் கருதிசெப்பம் செய் செம்மல்கள்பிழைத்திருத்தம் செய்ய கிளம்புவதும் அவசியமற்றது. ஆனால் கதையின் களம் கக்கா நாடாக இருப்பதால் இது டாய்லெட் பற்றியதாகத்தான் இருக்கும் என்கிற யூகம் கதைக்காரனை ஆதாரமாக கொண்டதுதானேயன்றி கதையைப் பற்றியதல்ல என்பதை மட்டும் சொல்ல வேண்டிருக்கிறது.

வீட்டோரம், தெருமுக்கு, ஆற்றங்கரை, வயல்வெளி, கோயில் வாசல், ரயில்ரோடு, பள்ளிக்கூடம் என்று கண்ட இடத்திலும் வருடத்திற்கு ஒன்பது லட்சம் டன் அளவுக்கு பேழ்கிறவர்கள் நிறைந்த நாடு என்பதால் கக்கா நாடு என்கிற காரணப்பெயர் வந்ததென ருசுப்பிக்கும் பூர்வாங்க சரித்திரக் குறிப்புகளை அண்டார்டிகா ராயல் மியூசியத்தில் இப்போதும் காணமுடியும். கக்காநாட்டின் தொல்லியல் ஆய்வுத்துறையால் பாதுக்காக்கப்பட்டு வரும் பென்னம்பெரிய அரண்மனைகளில் கூட கழிப்பறை ஏற்பாடு இல்லாததை கண்டறிந்து ஆய்வாளர் ஒருவர் எழுதியஅந்தக்காலத்தில் கக்கூஸ் இல்லைஎன்கிற கட்டுரையையும் இதற்கு ஆதாரமாக கொள்ளமுடியும். உப்பரிகை மஞ்சத்தில் உல்லாசமாய் புரளும் உலகாண்ட சக்கரவர்த்திகூட இங்கு வெட்டவெளியில் தான் கக்கா போயிருக்க முடியும் என்பதை நிறுவும் இக்கட்டுரை, அப்படி போனவர்களுக்குப் பின்னாலேயே தண்ணீரோடு அலைந்தவர்களை மனதில் வைத்தே அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களைசொம்புத்தூக்கிகள்என்றழைக்கும் வழக்கம் இன்றும் நடப்பிலிருப்பதாக கூறுகிறது.

மட்ட மத்தியானத்தில் பட்டப்பகலில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ராகுகாலம் எமகண்டம் பார்த்து நட்டநடுராத்திரியில் வாங்கிக்கொண்டுநாயும் பேயும் உறங்கும் இந்த நடுநிசிவேளையில் நாம் விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறோம்என்று வீரவுரையாற்றிய அந்த நாட்டின் முதல் பிரதமரது கொள்ளுப்பேரன் காலமிது. மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி ஏற்பட்டிருந்த போதிலும் அந்த முதல் பிரதமரது வாரீசுகள்தான் பரம்பரையாக ஆண்டுவருகிறார்கள். இடையிடையே சில அத்தக்கூலிகள் பிரதமராக இருந்திருந்தாலும் பெரும்பாலான காலம் அந்த நாற்காலியைத் தேய்க்கும் தேசியக்கடமையை அந்தக் குடும்பமே நிறைவேற்றிவருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தனது தொலைக்காட்சியான டூப்தர்ஷன் மூலமாகஎல்லோரும் இந்நாட்டு மன்னர்என்கிற முழக்கத்தை  பிரபலமாக்கியது அந்தக்குடும்பம். ஆனாலும் பேருக்குத்தான் எல்லோரும் மன்னர், ஊருக்கு அவர்களே மன்னர் என்று ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பினை அடக்கும் தந்திரமாகயார் வேண்டுமானாலும் பிரதமராகும் உரிமைச்சட்டம்என்கிற சட்டம் ஒன்றை கக்காநாட்டு அரசு நிறைவேற்றியது.

யார் வேண்டுமானாலும் பிரதமராகும் உரிமைச்சட்டத்தின்படி கக்கா நாட்டின் குடிமக்கள் எல்லோருக்குமே ஒரே பெயர்தான்- பிரதமர் வேட்பாளர். ஆண் பெண் திருநங்கை திருநம்பி என்று யாராயிருந்தாலும் கக்கா நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் என்பதுதான் அவரது பெயர். பிரதமரே ஆகிவிட்டாலும் அவரது பெயர் பிரதமர் வேட்பாளர்தான். முதலாம் ஜார்ஜ், ஏழாவது போப், பதினெட்டாம் ஆதீனம், இருபத்திநான்காம் தீர்த்தங்கரர் என்று மன்னர்களுக்கும் மதப்பெரியவர்களுக்கும் இருப்பது போன்று முதலாம் பிரதமர் வேட்பாளர், முப்பதாம் பிரதமர் வேட்பாளர் என்று எண் மட்டும்தான் மாறுமே தவிர பெயர் ஒன்றுதான். ‘ஏய்/ டேய் பிரதமர் வேட்பாளர்என்று கூப்பிட்டால் கக்கா நாட்டு குடிமக்கள் அத்தனைப்பேருமே திரும்பிப் பார்ப்பார்கள்.

சாக்ரடீஸ், இங்கர்சால், காரல் மார்க்ஸ், ஆப்ரகாம் லிங்கன், நைட்டிங்கேல் போன்ற பெயர்கள்  நாடுகளைக் கடந்து பிரபலமடைந்து உலகெங்கும் பலராலும் சூட்டிக்கொள்ளப்படுவதைப் போன்று  கக்கா நாட்டு மக்களின் பெயரை வேறுநாட்டவர் எவரும் சூட்டிக்கொள்ளாதிருந்த நிலை கி.பி.2013ல் திடுமென மாறியது. ஆசியாக்கண்டத்தின் இந்தியாவைச் சேர்ந்த நரேந்திர மோடி என்பவர் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டு உலகத்தையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். இதைக் கேள்விப்பட்ட கக்காநாட்டு மக்களோ நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்காத ஒரு நாட்டில் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக தங்களது வம்சாவளியைச் சேர்ந்தவராகத்தான் இருக்கமுடியும் என்றும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குப் போய்விட்ட பின்னும்கூட தனது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதால்தான் பிரதமர் வேட்பாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்றும் எண்ணி புளகாங்கிதமடைந்தனர். தங்களது பெயரை கடல்கடந்தும் பிரபலமாக்கியவர் என்கிற அடிப்படையில் நரேந்திர மோடி இந்தியாவைவிடவும் கக்காநாட்டில் வெகுவாக பிரபலமடைந்துகொண்டிருந்தார்.

அடக்கம் செய்யும்போது திருப்பித்தருவதாக அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பிணத்தின் நெத்திக்காசை பிடுங்கிக்கொண்டுபோய் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிற மோசடியை பொருளாதாரச் சீர்திருத்தம் என்று ஆதரிப்பவர்தான் நரேந்திரமோடியும். ஒரேவாரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான தேவையை உருவாக்கி தொழில்வளர்ச்சிக்கும்கூட அனுசரணையானவர்தான் அவர் என்பதும்கூட கி.பி.2002ஆம் ஆண்டே நிரூபிக்கப்பட்ட விசயம்தான். அவர் நீராராடியா, டாடா போன்றவர்களுக்கு நெருக்கமாயும் அம்பானிகளுக்கு அணுக்கமாயும் இருப்பவர் என்கிற விசயமெல்லாம் அனுமார் போல நெஞ்சைப் பிளந்துக் காட்டாமலே ஊரறிந்த விசயம்தான். அகமதாபாத் ஜேட் புளு டிசைனர் குர்தாவில் ஆப்பிரிக்காவின் மோன்ட் பிளாங்க் பேனாவை சொருகிக்கொண்டு அமெரிக்காவின் மோவாடோ கடியாரமும் இத்தாலியின் புல்காரி குளிர்கண்ணாடியும் அணிந்து பன்னாட்டு ப்ராண்டுகளின் நுகர்வாளராக ஆடம்பரத்தில் திளைத்துக்கொண்டே சிந்தனையிலும் செயலிலும் தன்னையொரு சுதேசிவெறியராக காட்டிக்கொள்கிற வேடதாரி என்கிற விமர்சனத்திற்கு அவர் ஆளாகியிருந்தார்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளி ராமருக்கு கோயில் கட்டுவது போன்ற விசயங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என்றும் அவர்மீது வலுவானதொரு குற்றச்சாட்டு பரவிக்கொண்டிருந்தது. நாட்டையே பின்னுக்குத்தள்ளுவதுதான் இந்தியாவில் வளர்ச்சி என சொல்லப்படுகிறது என்கிற உண்மை ஒருபுறமிருக்க, அப்பேர்ப்பட்ட வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுகிறவனாக தன்னைப்பற்றிய சித்திரம் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் மனதில் படிவதை உடனடியாக தடுக்கவேண்டும் என்கிற பதற்றத்திற்கு ஆளான மோடி அவசரமாக சில முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது. கோயிலை முன்வைத்து ஆட்சிக்கு வரமுடிந்தால் கோயிலை முன்வைப்பது, கோயிலை முன்வைத்தால் எடுபடாது என்று தெரிந்தால் கோயிலைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாக காட்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது என்கிற தந்திரத்தை அரசியலாகப் பயின்றவர் இந்த மோடி. எனவே வளர்ச்சிக்காகவே வாழ்கிறவராக தன்னைக் காட்டிக்கொள்கிற வேகத்தில் ‘‘கோயில்களைவிட கழிப்பறைகளைக் கட்டுவதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன்’’ என்று அதிரடியாக அறிவித்தார்.

கோயிலை விட கழிப்பறைகளே முக்கியம் என்று இதற்கு முன்பு இந்தியாவின் இலாகா உள்ள அமைச்சர்களில் ஒருவராகிய ஜெயராம் ரமேஷ் சொன்னபோது எகிறிகுதித்த மதவாதிகளெல்லாம் இப்போது மோடி சொன்னதைக் கேட்டு ஆரவாரம் செய்து ஆதரித்தார்கள். கோயில், கழிப்பறை  என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தி மோடி எப்போதோ பேசியதற்கெல்லாம் இப்போது பதவுரையும் பொழிப்புரையும் எழுதினர் அவரது சீடக்கோடிகள். கையால் மலமள்ளுவதை கடவுளுக்கு ஆற்றும் பணி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பினாத்திய மோடி இப்போது கோயிலைவிடவும் கழிப்பறையே முக்கியம் என்று சொல்லியிருப்பதை புரட்சிகர மாற்றம் என்று ஊடகங்கள் வர்ணித்தன. 13 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின்  முதல்வராக இருந்தும் அங்கு இன்னமும் முக்கால்வாசிப்பேருக்கு கழிப்பறைத்தேவையை நிறைவேற்றித் தராதவர் இந்த மோடி என்கிற உண்மையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. சராசரியாக ஒரு வினாடிக்கு ஒரு கழிப்பறை என்கிற வீதத்தில் ஓராண்டு முழுவதும் கட்டிமுடித்தால்தான் 2015க்குள் அனைவருக்கும் கழிப்பறை என்று .நா.அறிவித்துள்ள புத்தாயிரமாவது ஆண்டின் இலக்கை இந்தியாவால் எட்டமுடியும் என்ற நிலையில் ( http://www.downtoearth.org.in/content/toilet-second  / Richard Mahapatra, 15.11.2011)  அதற்காக மோடியிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று போரடிக்கிற புள்ளி விவரங்களைக் காட்டி அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களில் பத்தாயிரக்கணக்கான குஜராத்தியர்களை ஒற்றையாளாக காப்பாற்றிய மோடிக்கு இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் என்று அவரது சீடர்கள் அசால்டாக பதிலளித்தனர்.

மன்மோகனாமிக்ஸ் பயின்றவரும் சிக்கனத்தின் உதாரணமாய் விளங்குகிறவருமான திட்டக்குழுவின் உதவித்தலைவர் மான்டோக்சிங் அலுவாலியா 35 லட்சம் ரூபாயில் தனது கழிப்பறையை எளிமையாக புதுப்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் மோடியானவர் குடிமக்களுக்கு கட்டித்தரப் போவதாக சொல்லும் கழிப்பறைகளுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்கிற கேள்வியை யாரும் எழுப்பவேயில்லை. அனைவருக்கும் கழிப்பறை கட்டித்தருவதற்காக ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிர்மல் பாரத் அபிக்யான் திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சம் 50ஆயிரம் கோடி ரூபாயாவது ஒதுக்கீடு செய்தாக வேண்டும் என்பதை கணக்கிட்ட சில தொழில் நிறுவனங்கள் கோயிலைவிட கழிப்பறை கட்டுவதற்கே முன்னுரிமை என்கிற மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் ஒருலட்சம் கோடியளவுக்காவது ஊழல் செய்வதற்கு வாய்ப்பில்லாத இந்த திட்டத்தில் ஈடுபடுவது தங்களது அந்தஸ்துக்கு இழுக்கானது என்று கருதிய முன்னணி தொழிற்குழுமங்கள் ஒதுங்கி நின்றதில் வியப்பேதும் இல்லை.

இக்கட்டான ஒரு கேள்வியைத் தாண்டிச்செல்வதற்காக கோயிலைவிட கழிப்பறைக்கே முன்னுரிமை என்று தான் சொன்னதை இப்படி ஆளாளுக்கு ஊதி பெரிதுபடுத்தியதைக் கண்டு பேதலித்துப் போன நரேந்திர மோடி நேரு, படேல், இந்தியா ஹவுஸ் என்று தப்புந்தவறுமாக எதையாச்சும் சொல்லி சர்ச்சைகளை கிளப்பிவிட்டு இந்த விசயத்தை மறக்கடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். ஆனால், கோயிலை விட கழிப்பறையே முக்கியம் என்று பிரதமர் வேட்பாளர் மோடி சொன்னதைக் கேட்ட கக்காநாட்டு மக்களும் அதன் ஆட்சியாளர்களுமாகிய பிரதமர் வேட்பாளர்கள்நம்ம வம்சாவளியில வந்த புள்ளாண்டான் என்னமா யோசிக்கிறான் பாருஎன்று வியந்தனர். கண்ட இடத்தில் பேண்டுவைக்கும் கக்காநாட்டு மரபணு மோடிக்குள் செயல்படுவதால்தான் கழிப்பறையின் முக்கியத்துவத்தை அவரால் உணர முடிந்திருக்கிறது என்று கருதிய கக்கா நாட்டு குடிமக்களாகிய பிரதமர் வேட்பாளர்கள், இந்தத் திட்டம் இந்தியாவைவிடவும் தங்கள்நாட்டுக்கே அவசரமாக தேவைப்படுவதாக கருதினர். நாலு செல்போனும் ஏழு சிம்கார்டும்  வைத்திருக்கிற குடும்பம்கூட பேழ்வதற்கு ஒரு கழிப்பறை இல்லாதிருக்கும் அவலத்தை உணரச்செய்த மோடிக்கு நன்றி சொன்னார்கள். ‘கோயிலுக்கு பதிலாக கழிப்பறைஎன்கிற மோடியின் முழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய கக்காநாட்டு பிரதமர் வேட்பாளர்கள் தங்கள் நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற கோயில்கள் அனைத்தையும் கழிப்பறையாக்குவது என்கிற முடிவுக்கு வந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீட்டை உத்திரவாதப்படுத்தி அதில் கழிப்பறையை கட்டுவதைவிடவும் ஏற்கனவே இருக்கிற கோயில்களை கழிப்பறையாக மாற்றுவதுதான் எளிதானது - செலவும் குறைந்தது என்று கணக்கிட்ட ஆளுங்குடும்பம், இதைக்காட்டியே இன்னும் நாலைந்து தேர்தலை சந்தித்துவிட துணிந்தது.

கோயில்களை கழிப்பறையாக்கும் திட்டம் பற்றிய பேச்சு கிளம்பியதுமே, இது தங்களது மதத்தை இழிவுபடுத்தும் செயல், கோயிலை கழிப்பறையாக்கினால் கடவுள் எங்கே போவார்? கடவுள் நிந்தனை நாட்டையே தண்டித்துவிடும் என்பதான கூச்சல் கிளம்பியது. இந்தியாவிலிருக்கிற மோடியைவிட நீங்கள் பெரிய மதவாதியா என்று ஆளுங்கட்சி கேட்க, கோயிலுக்கு பதிலாக கழிப்பறை என்பதும் கோயிலையே கழிப்பறையாக மாற்றுவது என்பதும் ஒன்றல்ல என்று டிங்கராச்சாரியார், டிக்கி லூசுதேவ் போன்ற பன்னாட்டு மதவாதிகள் மறுக்க வாயுக் கோளாறுள்ளவனின் வயிறுபோல  கக்கா நாடு முழுவதும் கடாமுடாவென பெருஞ்சத்தம் எழும்பியது. ‘‘சாமிக்கெதுக்கு பூமி? வசிப்பிடம் இல்லாமல் உங்களது சாமி அவதிப்படுமென நீங்கள் கவலைப்படும் பட்சத்தில் மடத்துக்காக வளைத்துப்போட்டிருக்கும் பெரும்பரப்புக்கு கூட்டிப்போய் வைத்துக்கொள்ளுங்கள் என்று கடவுள் மறுப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு கக்காநாட்டுக்கு சம்பந்தமேயில்லாத  சுசாமி, சோசாமி போன்ற ஆசாமிகள் கண்டனம் தெரிவித்தனர். 

‘‘ஆதியந்தமில்லாத கடவுளை, ஒரு மனிதராக கருதிக்கொண்டு, கடவுள் பிறந்த இடம் இது, பேண்ட இடம் அது என்று காட்டுவது அறிவீனம். அற்பமனிதர்கள் கட்டிய கோயில்தான் கடவுளின் வசிப்பிடம் என்று வாதிடுவது ஏழேழு லோகத்தையும் படைத்தக் கடவுளை அவமதிப்பதுமாகும். கடவுள் நினைப்பது எதுவோ அதுவே லோகத்தில் நடக்கிறது. கக்காநாட்டு கோயில்கள் கழிப்பறைகளாக மாறவேண்டுமென்பது கடவுளின் சித்தம். கடவுளின் சித்தம் நமது பாக்கியம்.

பிற்காலத்தில் இப்படியொரு மாற்றம் நடக்கும்போது தண்ணீர் தேவைப்படும் என்பதை முன்னுணர்ந்துதான்  நமது முன்னோர்கள் கோயிலுக்கு அருகில் குளத்தை வெட்டியிருக்கிறார்கள், குளம் வெட்ட முடியாத ஊரில் கோயிலை ஆற்றங்கரையில் கட்டியிருக்கிறார்கள். கழிப்பறை இல்லாத ஊரும் கழுவிக்கொள்ளாத ஆளும் சமூகத்திற்கு பெருங்கேடு என்பதை- கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், ஆறில்லாத ஊர் அழகுக்கு பாழ் என்று சூசகமாக சொல்லிச் சென்ற அந்த தீர்க்கதரிசிகளை இவ்வேளையில் கக்கா நாடு நினைவுகூர்கிறது. ‘மோட்சவீடு பற்றி முழங்கும் மதங்கள் / மோட்சக் கழிப்பிடம் குறித்து மூச்சுவிடுவதேயில்லை / கடவுள் / சாத்தான் ஆசீர்வதிப்பில் / இப்பிறவியிலேயே எமக்கு கழிப்பிடம் கிடைக்க / தியான மண்டபங்களும் தேவாலயங்களும்/ அவ்வாறே மாறுவதாகுகஎன்று கி.பி.2003ல் ஒரு தமிழ்க்கவிஞன் கண்ட கனவை கக்கா நாட்டு மக்கள் இப்போது நிறைவேற்றுகிறார்கள்....’’ என்று பத்திரிகை விளம்பரத்தின் மூலம் தனது முடிவை நியாயப்படுத்திய கக்கா நாட்டு அரசாங்கம் இத்திட்டத்திற்கு பொருத்தமான பெயரை வைப்பதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கக்கா நாட்டின் மொழியியல் அறிஞர்கள், கலைஇலக்கியவாதிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், தூய்மைப்பணியாளர்கள், தி...மு. (திறந்தவெளி மலம் கழிப்போர் முன்னேற்றச் சங்கம்), வெ.... ( வெட்டவெளி மலஜலம் கழிப்போர் கழகம்) போன்ற சிவில் அமைப்புகள் பங்கேற்ற அக்கூட்டம் பல்வேறு பெயர்களையும் விவாதித்தது. கோயில், கழிப்பறை என்கிற இரண்டு சொற்களையும் வெட்டி ஒட்டி முன்பின்னாய் வைத்து ஏதேதோ சொல்லுருவாக்கம் செய்தும் எதுவும் திருப்தியளிக்காமல் கூட்டம் கலையும் தருவாயில் கோயில் + டாய்லெட் = கோய்லெட் என்று எழுத்தாளர் ஒருவர் சொன்ன யோசனை பெருத்த ஆரவாரத்துடன் ஏற்கப்பட்டது. Koilet என்று ஆங்கிலத்தில் எழுதுவதும்கூட எளிதாகவும் பொருள்தரக்கூடியதாகவும் இருந்தது. கோயில் போன்ற கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு பதிலாக கழிப்பறைக் கோப்பை இருப்பதுபோன்ற  வடிவில் கோய்லெட் திட்டத்திற்கான இலச்சினையும் பொருத்தமுற வடிவமைக்கப்பட்டது.

இதுவரை கோயில்களனைத்தையும் நிர்வகித்துவந்த அறநிலையத்துறைகோயிலகற்று மற்றும் கழிப்பக மாற்றுத்துறைஎன்று திருத்தியமைக்கப்பட்டது. அந்தந்த கோயிலில் உறைந்திருக்கும் கடவுள் எதுவோ அதன் பெயரிலேயே கோய்லெட்டுகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் மதவாதிகள் சமாதானமடைந்தனர். அதன்படி முதற்கட்டமாக ‘‘அருள்மிகு ஸ்ரீ----------கோய்லெட்’’ என்று எல்லாக் கோயில்களின் பெயர்ப்பலகைகளும் மாற்றப்பட்டன. கோயில் வளாகத்திற்குள் தனித்தனியாக எழுந்தருளியிருந்த துணைக்கடவுள்களின் சந்நிதிகளுக்கும் இவ்விதி பொருந்தும். பெண்தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களை மட்டும் பெண்களுக்கான கோய்லெட்டுகளாக மாற்றினால் போதும் என்கிற முடிவை பெண்ணுரிமை இயக்கங்களின் எதிர்ப்பினால் கைவிட்ட அரசு, எல்லா கோய்லெட்டுகளிலும் ஆண்களுக்கு 47%, பெண்களுக்கு 47%,  எஞ்சிய 6% இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு என ஒதுக்கி உத்தரவிட்டது. பெண்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த கோயில்களும் கோய்லெட்டாக மாறுவதால் இந்த இடஒதுக்கீட்டுள் வருவதாகவும் அந்த உத்தரவு தெளிவுபடுத்தியது.

தேசிய அளவில் பிரசித்தி பெற்றிருந்த பெருங்கோயில்களுக்கு நாடு முழுவதுமிருந்து பெருங்கூட்டம் வருமென்பதால் அவற்றை அதிகப்படியான கழிப்பறைகளைக் கொண்ட கோய்லெட்டுகளாக மாற்றியமைக்கும் பொறுப்பு அந்தந்த தேவஸ்தான கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெஷல் தரிசனம், வி..பி.தரிசனம் என்று முன்பிருந்ததைப் போன்ற சலுகைகளை கோய்லெட்டுக்கும் விரிவுபடுத்துவதால் கிடைக்கும் உபரி வருமானமும், மலத்தை திடக்கழிவு உரமாக்கி விற்பதன் மூலம் வரக்கூடிய தொகையும் இந்தக்கமிட்டிக்கே உரியது. கோயிலுக்குச் சொந்தமான குளங்களையே கோய்லெட்டுக்கான நீராதாரமாக பயன்படுத்திக் கொள்ளவும் குளமில்லாத கோய்லெட்டுகளுக்கு பெக்டெல் மாதிரியான பன்னாட்டு கம்பனிகளிடமிருந்து தண்ணீரை வாங்கிக்கொள்ளவும் வழிசெய்யும் வகையில் தேசிய தண்ணீர் கொள்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வதெனவும் அரசு தீர்மானித்திருந்தது.

அந்தந்த கோயிலின் தலைமை அர்ச்சகரே அங்கு உருவாகவிருக்கும் கோய்லெட்டின் தலைமை அதிகாரியாக - கோய்லெட்டராக நியமிக்கப்படுவார். கக்கா நாட்டின் பேருந்துநிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் ஒருமாத இலவசப் பயிற்சிக்குப் பிறகு பணியில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கும் இவரது ஊதியவிகிதம் 17407- 330- 31024 கக்காடாலர். இதரபடிகள் தனி. டோக்கன் தருவது, பக்கெட்டுக்கு தண்ணீர் ஊற்றுவது, ‘ஆச்சா... வெளியே வாஎன்று துரிதப்படுத்தி அவ்வப்போது குரல் கொடுப்பது, அடைப்புகளை நீக்கி கோய்லெட் தடையின்றி செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவது என்று கோய்லெட் வளாகத்தின் அனைத்துப்பணிகளுக்கும் இவரே பொறுப்பு. லகுவாக மலங்கழித்தல், மலச்சிக்கல் சீராதல், வயிற்றோட்ட தடுப்பு, மூத்திரக்கடுப்பு நிவர்த்தனம் போன்றவற்றுக்காக மந்திரம் ஓதுதல், மந்தரித்துக்கொடுத்தல், சிறப்பு வழிபாடுகள் செய்தல் ஆகிய உபதொழில்களின் மூலம் இந்த அர்ச்சகர் பெறும் காணிக்கை/ தட்சணை பற்றிய கணக்குவழக்குகளை இதற்கு முன்பு போலவே இனியும் அரசுக்கு காட்டவேண்டியதில்லை.

அர்ச்சகரது சாதியைச் சார்ந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் அமைக்கப்படும் கழிப்பறையிலும் அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள சாதியினர் ஏற்கனவே கோயிலில் எந்தெந்த எல்லைவரை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனரோ அந்தந்த பகுதிக்குள் அமைக்கப்படும் கழிப்பறைகளையும் பயன்படுத்திக் கொள்ள உரிமைபெற்றவராவர். ஏற்கனவே கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சாதியினர் கோய்லெட் நுழைவுப்போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காளாகி போலிஸ் கோர்ட் என்று அலைவதற்கு பதிலாக தங்களுக்கென்று தனியாக கோய்லெட்டுகளை கட்டிக்கொள்வதற்கு அரசு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கழிப்பறைக்கு முன் யாவரும் சமம் என்கிற உயரிய லட்சியத்தை உடனடியாய் நடைமுறைப்படுத்த முடியாத தனது இயலாமைக்கு வருத்தம் தெரிவித்த கக்கா அரசு, எங்கு பேண்டாலும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான் என்கிற ஆன்மிகத் தெளிவுடைய தமது குடிமக்கள் அந்தந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விடுத்து அத்துமீறி வேறொன்றுக்கு ஆசைப்படமாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது. 

கோயிலுக்கு முன்பாக பூசனைப்பொருட்களை விற்றுவந்தவர்கள் இனி ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நாற்ற அமுக்கிகளோடு பினாயில், ஆசிட், துடைப்பம், குச்சம் போன்றவற்றையும் சேர்த்து விற்று வருமானத்தை தக்கவைத்துக்கொள்ளலாம், மாற்றுத்தொழிலையும் தேர்ந்தெடுக்கலாம். கோயிலுக்கு வந்தவர் மனநிலையும் கோய்லெட்டுக்கு வருகிறவர் மனநிலையும் ஒன்றாக இருக்காது. கோய்லெட்டுக்குள் நுழையும் அவசரத்தில் வருகிற ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை கவனிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அவரது அவசரம் அவருக்கு. திரும்பும் போதாவது அவர் இயல்புக்கு திரும்பி கருணையை வெளிப்படுத்துவார் என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை. எனவே இதுவரை கோயில் வாசலில் பிச்சை எடுத்துவந்தவர்கள் வேறு பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்திய கக்கா நாட்டு அரசு, இவர்கள் தங்களது நலன் கருதி காவல் நிலையம் உள்ளிட்ட அரசாங்க அலுவலக வாயில்களை தேர்ந்தெடுக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டிருந்தது.

கோய்லெட் திட்டத்திற்கென மேற்கண்ட நடைமுறை விதிகள் வகுக்கப்பட்ட பிறகு சின்னதும் பெரியதுமாக கக்கா நாடு முழுவதும் இருந்த கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டன. அந்தந்த கோயிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் தொகைக்கேற்ப அதில் ஆண், பெண், மாறிய பாலினத்தவர், உடல் மாறுபாடு கொண்டோர் என நால்வகை கழிப்பறைகளை அரசாங்கம் அமைக்க வேண்டியிருந்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட திட்ட முன்வரைவின்படி தொடக்கநிலைச் செலவுக்குத் தேவைப்பட்ட 58 பில்லியன் கக்கா டாலரை கொடுப்பதற்கு உலக கந்துவட்டி வங்கி தானாக முன்வந்திருந்தது. சவப்பெட்டி தயாரிப்பது, வாக்கரிசி வழங்குவது, சாம்பல் ஏற்றுமதி, கிட்னி வியாபாரம் போன்றவற்றுக்காக மட்டுமே இதுவரை கடன்கொடுத்து வந்த அந்த வங்கி முதன்முறையாக கழிப்பறை கட்டுவதற்கு கடன்வழங்க முன்வந்திருப்பதை உலகம் ஆச்சரியத்தடன் பார்த்தது. இவ்வளவு பெரும்தொகை புழங்கப்போவதால் கக்காநாடு  உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக வளரப்போகிறது என்று பிசினஸ் மந்த்ரா, தி நியூ எகானாமிஸ்ட், மார்க்கெட் குரு போன்ற பத்திரிகைகள் புகழராம் சூட்டின.

நாட்டுமக்களுக்கு கழிப்பறைகளை கட்டுவதைவிடவும் உலக கந்துவட்டி வங்கியிடம் நாட்டை அடமானம் வைப்பதில்தான் அரசு அதிகமும் ஆர்வம் காட்டி வருகிறது என்று இடதுசாரிகள் கடும்/ பலத்த ஆட்சேபம் தெரிவித்தனர். வெறுமனே ஆட்சேபம் என்று சொன்னால் அது சாதாரணமாக இருக்கும் என்பதால் அவர்களாகவே இப்படிகடும்/ பலத்தபோன்ற வார்த்தைகளைச் சேர்த்து அறிக்கைவிட்டாலும் அதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதேயில்லை. ஐந்துரூபாய் கடன் கொடுப்பதற்கே ஆயிரத்தெட்டு கன்டிசன் போடும் காலத்தில் 58 பில்லியன் கக்காடாலரை எந்த கண்டிஷனும் இல்லாமல் சும்மா தூக்கி கொடுத்துவிடுவார்களா? ஏதாச்சும் நொட்டை சொல்வதே இந்த இடதுசாரிகளுக்கு வேலையாப் போச்சு என்று கக்காநாட்டு பிரதமரான முன்னூற்றி பத்தாம் பிரதம வேட்பாளர் சலித்துக்கொண்டார். “திறந்தவெளியில் கழித்தவற்றை சுத்தப்படுத்தி வருகிற துப்புரவுத்தொழிலாளிகள் அனைவரையும் கோய்லெட் தொடங்கப்படும் நாளிலிருந்து பணிஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வளவுகாலமும் இப்படியொரு வேலையில் ஈடுபடுத்தியமைக்காக கக்கா நாட்டு மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அவர்களை கேட்டுக்கொள்வதோடு, அதற்குரிய தண்டனைத்தொகையை அவர்களது வாரீசுகளின் பெயரில் வைப்புநிதியாக வழங்கவும் அரசு உறுதியளிக்க வேண்டும்” என்கிற கோரிக்கை அவரை மேலும் எரிச்சல்படுத்தியது.

உலக கந்துவட்டி வங்கியின் நிதியுதவியோடு ( கடன்தான்) கக்காநாட்டு கோயில்கள் அனைத்தும் கோய்லெட்டாக மாற்றப்பட்டுவிட்டதை முன்னிட்டு அதன் தொடக்கவிழா வெகு விமர்சையாக நடந்தேறியது. கடன் கொடுத்த வங்கியின் நிபந்தனைக்கேற்ப அரசின் திட்டம் பற்பல மாற்றங்களைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. இதன்படி கோய்லெட்டில் மட்டுமே மலஜலம் கழிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. எக்காரணத்தை முன்னிட்டும் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பது தேசிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராவுடன் டோல்கேட் போட்டு சுங்கம் வசூலித்த உலக கந்துவட்டி வங்கி இனி கோய்லெட்டின் நுழைவாயிலிலும் டோல்கேட் போட்டு சுங்கம் வசூலிக்கும் என்கிற அரசாங்க உத்தரவை எதிர்ப்பது சர்வதேச குற்றமாக அறிவிக்கப்பட்டது. கோய்லெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்குரிய வருமானத்தை திரட்டிக்கொள்ள எல்லாவித குற்றங்களும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.

சாலைகளுக்கும் கழிப்பறைகளுக்கும் எவ்வித உறுத்தலுமின்றி கட்டணம் செலுத்துவதற்கு தனது குடிமக்கள் பழகிவிட்டதையடுத்து அவர்களுக்கு மேம்பாலங்களுக்கடியில் படுக்கையறைகளை கட்டித்தருவதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளது கக்காநாட்டு அரசு. மேம்பாலம், படுக்கையறை, உலக கந்துவட்டி வங்கி, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய டோல்கேட்- ஆகியவற்றை உள்ளடக்கி கோய்லெட் என்பது மாதிரி பொருத்தமான பெயர் ஒன்றை யோசித்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மோடியிடம்கூட கேட்டுச்சொல்லுங்கள், கக்கா நாட்டு பிரதமர் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.

நன்றி: உயிர் எழுத்து, டிசம்பர் 2013

திருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்

திருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்