திங்கள், ஆகஸ்ட் 31

கடவுளின் கதை - ஆதவன் தீட்சண்யாபேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து எழுதியுள்ள ‘கடவுளின் கதை’ என்கிற நூல் இன்றைய காலகட்டத்தின் தேவையை நிறைவு செய்யும் வரவு என உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். கடவுள்தான் மனிதர்களைப் படைத்தார் என்கிற நம்பிக்கைக்கு மாறாக மனிதனின் ஆகச்சிறந்த படைப்பே கடவுள் என்று நிறுவுவது நாத்திகமல்ல, அறிவியல். நாத்திகம் அறிவியலின் துணைகொண்டு கடவுளை மறுத்ததேயொழிய அதை அழிக்கவில்லை. உண்மையில் கடவுள் தன் பக்தர்களைக்கண்டுதான் நடுநடுங்க வேண்டிய அவலத்திற்கு ஆளானது என்பதை அங்கதம் பொங்கும் நடையில் சொல்லிப்போகும் இந்நூல் கடவுளின் கதை தவிர்க்க முடியாதபடி அறிவியலின் கதையாகவும் இருப்பதை மறுக்கமுடியாத ஆய்வுத்தரவுகளுடன் முன்வைக்கிறது.

இறப்பு, இறப்புக்குப் பிறகு உயிர் எங்கே என்னவாக இருக்கும், இறந்தவர்கள் உயிர்த்தெழுவார்களா, இறந்தவர்கள் தமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வார்கள் என்பதான கேள்விகளால் விளைந்த அச்சத்தில் அவர்களை சாந்தப்படுத்தும் மூத்தோர் வழிபாடும் சடங்குகளும் ஆதிமனிதர்களிடம் தொடங்கின. தங்களால் கட்டுப்படுத்த முடியாத இயற்கை ஆற்றல்களையும் விலங்குகளையும் வணங்கத் தலைப்பட்ட அவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை வளமையின் குறியீடுகளாக கருதி அவற்றையும் வழிபட்டனர். பிரபஞ்சமும் பூமியும் காற்று ஒளி வெப்பம் நீர் ஆகியவையும் கோடானுகோடி ஜீவராசிகளும் மனிதகுலமும் எவ்வாறு உருவானது, அவை எவ்வாறு ஏன் இயங்குகின்றன என்பது பற்றிய கேள்விகளுக்கு விடைதேடி கிளம்பியவர்களில் ஒரு பகுதியினர் அவற்றை இயற்கையின் இருப்பாகவும் இயக்கமாகவும் கண்டனர். இன்னொரு சாரார் இவை எல்லாவற்றையும் உருவாக்கி இயக்குபவர் கடவுள் என்கிற மாபெரும் வடிவமைப்பாளர் என்னும் முடிவுக்குச் சென்றனர். இந்த சிந்தனைப் பிளவு இன்றளவும் நீடிக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அந்த நம்பிக்கையைத் தவிர வேறு ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வது வெறும் சமாதானம் தானேயன்றி அது உண்மையல்ல என்று பக்தர்களுக்கும் தெரிந்திருந்தது. எனவே கடவுள்தான் யாவற்றையும் படைத்தார் என்றால் அவர் எங்கிருந்து கொண்டு எவற்றால் படைத்தார், அழிவுகளுக்கும் துன்பங்களுக்கும் யார் பொறுப்பு, தீமைகளுக்கு பொறுப்பு சாத்தான் என்றால் சாத்தானைப் படைத்தது யார்? சாத்தான் கடவுளைவிடவும் வல்லவரா? கடவுள் ஏன் பலவாக இருக்கிறார்? உருவ வழிபாடு சிறந்ததா அருவ வழிபாடு சிறந்ததா? கடவுளை அடையும் வழிதான் என்ன? என்பதான கேள்விகள் அறிவியலாளர்களுக்கு மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும் ஆட்டிப் படைத்தன. இது குறித்த விவாதம் ஆதிகாலம் தொடங்கி இன்றுவரையிலும் எவ்விதமாக உலகெங்கும் நடக்கிறது என்பதை இந்தநூல் தொகுத்தளிக்கிறது.

மதங்களின் உருவாக்கம், அரசுகளின் உருவாக்கம், மதங்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவும் முரணும், ஒன்றையொன்று கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்த மதமும் அரசும் மேற்கொண்ட எத்தனங்கள், ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள் மோதல், மதங்களுக்கிடையே மோதல், இந்த கலவரங்களில் கடவுள் நம்பிக்கையாளர்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்ட ஒடுக்குமுறைகள் தண்டனைகள் அழிவுகள் படுகொலைகள், கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறைகள், ஆள்தூக்கி கருப்புச்சட்டங்கள் ஆகியவற்றின் வரலாற்றை கண்டங்களின் வாரியாகவும் யுகவாரியாக காலநிரல்படுத்தியும் பேசுகிறது இந்நூல். கடவுளும் மதமும் அதிகாரத்தின் கையில் சிக்கி சாமான்ய மக்களை ஒடுக்கும் கருத்தியல்களாக உருப்பெற்றது, கண்டதையெல்லாம் கும்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏகக்கடவுள் நோக்கி நகர்வது, குலதெய்வங்களையும் வழிபாட்டு மரபுகளையும் உட்செரிப்பது, மதமாற்றம் செய்வது, மதத்திற்குள்ளேயே பிரிவுகளுக்குத் தாவுவது  என்கிற உலகளாவிய வரலாற்றுடன் இந்திய/ தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றையும் இந்நூல் இணைக்கிறது.  

மதங்களின் ஆதிக்கத்திலிருந்து திமிறிக்கொண்டு உருவான புதிய அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் அதன் தொடர்பில் விளைந்த பொருளியல் மற்றும் அரசியல் அமைப்புகள்,  கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் இருந்த முடியாட்சிகள் தூக்கியெறியப்பட்டு நாடாளுமன்றம் உள்ளிட்ட ஜனநாயக ஆட்சி முறைகள் உருவாவது, மூடத்தனங்களிலிருந்து சமூகத்தை விடுவித்து பகுத்தறிவுப்பாதையில் இட்டுசெல்வதற்கான போராட்டம் ஆகியவற்றையும் விவரிக்கிற இந்நூல் மனிதகுலம் தோன்றியதிலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரையான வரலாறாகவும் விளங்குகிறது. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, வால்டேர், கோபர்னிகஸ், கலிலியோ, டார்வின், புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், ராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என்று வெறும் பெயர்களாக நாம் கடந்துவிடக்கூடிய ஆளுமைகளின் வரலாற்றையும் உலகியல் கண்ணோட்டத்தையும் இந்த நூலின் வழி அறியமுடிகிறது. நூற்றுக்கணக்கான ஆய்வுநூல்களையும் மதநூல்களையும் தேர்ந்து கற்று அவற்றின் சாரத்தில் ஊறிய அறிவின் துணிவோடும் தனக்குரிய அரசியல் பார்வையோடும் பேராசிரியர் அருணன் எழுதியிருக்கும் இந்நூலை ஒருவேளை கடவுள் வாசிக்கும்பட்சத்தில் தன்வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது.   

நன்றி: ஹலோ விகடன்

சனி, ஆகஸ்ட் 29

எஸ்.வி.ஆர். என்கிற அன்புமயமான ஆளுமை - ஆதவன் தீட்சண்யாமிழ்ச்சமூகத்தின் அறிவியக்கத்திற்கு வளமார்ந்த கொடைகளை நல்கி வருகிறவர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள். இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய, மனிதவுரிமை இயக்கங்களிலும் அவற்றுக்கப்பாலும் எஸ்.வி.ஆர் என்று தோழமையோடு நேசிக்கப்படுபவர். 1940 ஆம் ஆண்டு தாராபுரத்துக்கு அருகேயுள்ள கிராமமொன்றில் பிறந்த அவர் இந்த முக்கால் நூற்றாண்டு காலத்தின் தமிழ்ச்சமூகம் பல்வேறு தளங்களிலும் முனைகளிலும் அடைந்துள்ள மாற்றங்களுக்கு ஓர் ஆக்கப்பூர்வமான ஊக்கியாகவும் சாட்சியமாகவும் விளங்குகிறவர். எக்ஸிஸ்டென்ஷியலிசம்- ஓர் அறிமுகம் என்கிற அவரது முதல் நூல் 1975ல் வெளியானதை கணக்கில் கொண்டால் 2015ல் அவரது எழுத்துப்பணியின் நாற்பதாம் ஆண்டு இது. ஆனால் அதற்கும் முன்பே அரசியல் தொடர்புகள், களப்பணிகள், கட்டற்ற தீவிர வாசிப்பு ஆகியவற்றினால் திராவிட கருத்தியல்களினூடே இடதுசாரியாக பரிணமித்திருந்தார்.

உலகெங்கும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் நடைபெறும் விவாதங்களையும் மாற்றங்களையும் உள்வாங்கியும் தன்வயமாக்கியும் சொந்தக் கண்ணோட்டத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவருகிறவர். தனித்தும், வ.கீதா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து எழுதியவையும் மொழிபெயர்த்தவையுமாக 67 நூல்களை நமக்கு தந்திருக்கிறார்.  அவ்வப்போது முன்னெழும் பிரச்னைகளின் மீதும், அடிப்படை விசயங்களின் மீதும், நூல்கள், திரைப்படம், ஓவியம், இசை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் விமர்சித்தும் இன்றளவும் எழுதி வருகிறவர். காத்திரமான விவாதங்களை முன்னெடுத்த அரசியல் பத்திரிகைகள் வெளியாவதில் இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

எழுதும் பொருள் குறித்த ஆழ்ந்த ஞானத்துடனும் அதுவரையான தரவுகளுடனும் எழுதுவது இவரது தனித்தன்மை. அடிக்குறிப்புகள், மேற்கோள்கள், விளக்கக்குறிப்புகள் வழியாக மொழிபெயர்ப்புகளை அதன் முழு அர்த்தத்தில் வாசகருக்கு உட்செலுத்தக்கூடியவர். இவ்வகையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்னுவமை இல்லாதபடி மொழிபெயர்த்திருக்கிறார். தன்னில் பாதிவயதைக்கூட எட்டாத மார்ஸல் முஸ்டோ என்பவரை ‘இளம் மார்க்சீய அறிஞர்’ என்று கொண்டாடி அவரது நூலை தமிழில் மொழிபெயர்க்குமளவுக்கு விசாலமனம் கொண்டவர். உலகெங்குமுள்ள சிந்தனையாளர்கள் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரோடு நேரடித் தொடர்புகளைப் பேணுகிறவர்.

சமூக நீதியை நிலைநிறுத்தும்  தீர்ப்புகளில் நீதிமன்றங்களால் மேற்கோள் காட்டப்படுமளவுக்கு இவரது எழுத்துகள்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவானவை. 1970களின் பிற்பகுதியில் என்கவுண்டர் என்ற பெயரால் நடத்தப்பட்டு வந்த நரவேட்டையை உலகறியச் செய்ததிலும் மனிதவுரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வருவதிலும் இவரது தலையீடுகள் குறிப்பிடத்தகுந்தவை. சிவில் உரிமைக்கான மக்கள் இயக்கத்தை தமிழகத்தில் தொடங்கிவைத்த அவர் பிற்பாடு பியுசிஎல் அமைப்பின் தமிழக புதுவை செயலாளராகவும் தேசிய துணைத்தலைவராகவும் இருந்து பணியாற்றியவர்.  தூக்கு போன்ற கொடுந்தண்டனையிலிருந்தும் இன்னபிற நெடுந்தண்டனைகளிலிருந்தும் பலரது உயிர்கள் இவரது தொடர் முயற்சிகளால் காப்பாற்றப்பட்டுள்ளன. சாதியம், மதம், தேசியம், பாலினம், வர்க்கம், அரசு ஆகியவற்றின் பெயரால் நடைபெறுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் வாழ்நாளெல்லாம் இணைந்து நிற்பவர். அம்பேத்கரியமும் பெரியாரியமும் மார்க்சீயமும் இணையும் புள்ளிகளை வளர்த்தெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராயுதமாக கொடுப்பதற்கு இன்றளவும் பாடுபட்டு வருகிறவர். அரசின் கண்காணிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் கருத்தியல் எதிரிகளின் அவதூறுகளுக்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கும் முதுமைக்கும் பணிந்தோ சோர்ந்தோ போய்விடாமல் இன்றும் ஆற்றல்மிக்கதொரு போராளியாக வாழ்ந்துவருகிறவர். ஆயினும் தான் செய்வதற்கு காத்திருக்கிற மலையளவு வேலைகளில் கடுகளவே செய்திருப்பதாக தன்னடக்கத்துடன் சொல்கிறவர்.

தன் இல்லத்திற்கு வருகிற நண்பர்களையும் தோழர்களையும் துணைவியார் சகுந்தலாவுடன் வரவேற்று உபசரித்து பயன்மிக்க உரையாடல்களை நிகழ்த்துகிறவர். மனதுக்குகந்தவர்களோடு சேர்ந்து ரசிப்பதற்கென நூற்றுக்கணக்கான இசைப்பேழைகளையும் திரைப்படங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு குதூகலத்துடன் காத்திருக்கும் எஸ்.வி.ஆர். என்கிற அன்புமயமான ஆளுமை என்றென்றும் தமிழ்ச்சமூகத்தால் நினைவில் நிறுத்தப்பட வேண்டியவர்.

நன்றி: ஹலோ விகடன்
புகைப்படம்: தவமுதல்வன்

புதன், ஆகஸ்ட் 26

என்னதான் செய்யப்போகிறோம் அம்பேத்கரை? - ஆதவன் தீட்சண்யாநினைவிடத்தின் உள்ளே
‘‘டந்த பதினைந்தாண்டு காலமாக எனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறீர்கள். இவற்றில் நான் ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. நான் இதை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். இப்போது எனது பொன்விழாவை நீங்கள் கொண்டாடியுள்ளீர்கள். இதுவே போதும். இனிமேல் எந்தக் கொண்டாட்டமும் வேண்டாம்...’’ என்று அண்ணல் அம்பேத்கர் வேண்டுகோள் விடுத்தமைக்கு காரணம் இருக்கிறது. ‘தலைவர்களின் மீது அளவு கடந்த மரியாதை வைப்பதால் மக்களின் தன்னம்பிக்கை குறைந்துவிடுகிறது. சோதனைக் காலத்தில் தலைவர் இல்லாத போதோ, ஒழுக்கமற்ற தலைவர்கள் வாய்க்கும் போதோ அவர்கள் நிர்க்கதியாய் இருப்பார்கள்’ என்பதாலேயே அவ்வாறு அவர் கேட்டுகொண்டார். ஆனாலும் அவர்மீதிருந்த அளவற்ற அன்பினால் தூண்டப்பெற்ற அவரது நண்பர்களும் தொண்டர்களும்  அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டேதான் இருந்தார்கள்.

இவ்வாறாகவே அவர்கள் பத்தாண்டுகள் கழித்து 1952 ஏப்ரல் 14ல் அம்பேத்கருக்கு 60 வயது நிறைவடைவதை முன்னிட்டு வைரவிழாக் கொண்டாட்டக்குழு ஒன்றை அமைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் திட்டமிட்டிருந்தபடி குறிப்பிட்ட அந்த நாளில் நடத்த முடியாமல் போன அந்த விழா பம்பாயில் 1954ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதிதான் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்ற அம்பேத்கர் ‘‘சிறுவயது முதலே நான் மிகவும் திறமையாக இருந்ததாக நினைப்பது தவறு. எனது சமூகத்திலுள்ள ஏனைய சிறுவர்களைப் போலவே நான் சாதாரணப் பையனாகத்தான் இருந்தேன். என் பிறந்த தேதியை என் தந்தை சரியாகக் கணித்து வைக்கவில்லை. இதனால் எனது சரியான பிறந்த தேதி எது என்ற தெரியவில்லை. என் வயது அறுபதுக்கு மேலோ கீழோ இருக்கக்கூடும்...’’ என்றார். தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த 25 ஆயிரம் பேருக்கு மத்தியில் எனக்கே என் பிறந்த தேதி தெரியாத போது  நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்கிற கேள்வியை எழுப்பியவர் அம்பேத்கர். மட்டுமல்ல, கருவிலே திருவுடையோர் என்கிற கற்பிதத்தையும் இந்தக் கூற்றின் வழியே தகர்த்தெறிந்தார். தான்பிறந்த போது நட்சத்திரங்கள் மிகவும் மோசமாக இருந்ததாக ஜோசியர் கூறியதை அப்போது அங்கதமாக நினைவுகூர்ந்ததன் மூலம் அறிவாலும் உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் எந்தவொரு ‘சாதாரணப்பையனும்’ தன்னைப்போன்ற மகத்தான ஆளுமையாக மாறுவதை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்கிற செய்தியையும் நமக்கு விட்டு சென்றுள்ளார். இதற்கும் முன்பே கூட தனது பிறந்தநாளன்றைக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு கொண்டாட்டங்களிலிருந்து ஒதுங்கியிருந்தவர். ஆனாலுமென்ன, ஒப்புவமையற்ற அந்த மகத்தான தலைவனுக்கு மரியாதை செய்கிற சந்தர்ப்பமாக அவரது பிறந்தநாளை இப்போது வரைக்கும் உலகம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.
90 அடி சாலையில்

2015 ஏப்ரல் 14 அவரது அம்பேத்கரது 125வது பிறந்ததினக் கொண்டாட்டங்கள் தொடங்கிய வேளையில் தோழர் மகிழ்நன் ஏற்பாட்டில் நான் மும்பை சென்றிருந்தேன். அம்பேத்கர் பிறந்த மண்ணான மராட்டியம் அவரது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைக் காணும் வாய்ப்பு இதனூடாக எனக்குக் கிடைத்தது.

மும்பை தாராவியில் தமிழர்கள் செறிந்திருந்தாலும் அவர்கள் இங்குள்ளது போலவே சாதிகளாக பிரிந்துமிருக் கிறார்கள். மகாராஷ்டிரா அம்பேத்கரின் பூமி தான், ஆனால் இந்த 90 அடி சாலை எங்களுடையது, இதில் அவரது சிலையையோ படத்தையோ வைத்து மரியாதை செய்வதை அனுமதிக்கமாட்டோம் என்று இடைநிலை தமிழ்ச்சாதிகள் அவமதித்தே வந்திருக்கின்றன. சுயமரியாதைமிக்க இளந்தலைமுறை தலித்துகள் இந்தத் தடையை மீறி கடந்த இரண்டாண்டுகளைப் போலவே இந்த ஏப்ரல் 14 அன்றும் அந்தச்சாலையின் பிரதான சதுக்கத்தில் அம்பேத்கர் சிலையையும் அவரது தொகுப்பு நூல்களையும் காட்சிப்படுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவருகிறார்கள். அந்த நிகழ்வில் பங்கெடுத்தப் பிறகு நாங்கள் கடற்கரையின் மருங்கே இருக்கும் தாதர் மயானத்திற்குள் அமைந்துள்ள அம்பேத்கரின் நினைவிடமான ‘சைத்யபூமி’க்குச் சென்றோம்.

வெகுதூரத்திற்கும் முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட, அந்த அனலடிக்கும் வெயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குழந்தைக்குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக நினைவிடம் நோக்கி  நீண்டிருந்த வரிசையில் காத்திருந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் கட்சியும் வேறுசில அமைப்புகளும் பேருந்துகளில் அழைத்து வந்திருந்த கொஞ்சம்பேரை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலான மக்கள் தாங்களாகவேதான் திரண்டு வந்திருந்தார்கள். இதுவே நினைவுநாளாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் இருபதுலட்சம் பேர் திரண்டு வருவார்களாம். 


தலித் அமைப்புகளும் ஆளுங்கட்சியான பா.ஜ.க. - சிவசேனா, ஆட்சியை இழந்திருக்கிற காங்கிரஸ் போன்ற கட்சிகளும் வைத்திருந்த பிரம்மாண்டமான விளம்பரத் தட்டிகளில் அம்பேத்கரை அவரவர்க்குரியவராக மாற்றும் எத்தனங்களைப் பார்க்க முடிந்தது. நுழை வாயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அரங்கின் மேடையில் ஆடல் பாடல் சொற்பொழிவு என்று போய்க்கொண்டிருக்க உள்ளே நீண்ட வரிசையில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் கூட்டம் அலை மோதியது. அம்பேத்கர் மற்றும் புத்தரின் விதவிதமான சிலைகள், புத்தகங்கள், அம்பேத்கரது படம் அச்சிடப்பட்ட கைக்குட்டைகள், தொப்பிகள், சாவிக் கொத்துகள், தலித் விடுதலை பற்றிய பாடல் பேழைகள், சுருவங்கள் ஆகியவற்றுடன் பூங்கொத்துகளையும் வாங்கிச்செல்லும் மக்கள் நினைவிடத்தில் அமைதியாக மரியாதை செய்து வெளியே வந்தவர்கள் அங்கிருந்து போக மனமில்லதவர்களைப்போல நிழல்பார்த்து அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவ்வளவு கூட்டத்திற்கிடையிலும் அங்கு நிலைத்திருந்த அமைதியைக் குலைப்பதுபோல் பறந்துவந்த ஹெலிகாப்டர் ஒன்று அரசின் சார்பில் நினைவிடத்தின் மீது மலர்தூவிவிட்டுப் போனது. தலித்துகளின்  காதில்  பூ சுற்றுவதற்கு சங்பரிவாரங்கள் வான்வழியாகவும் நடத்தும் முயற்சிபோல இது  எனக்கு தோன்றியது.  சிவ(சேனா) சக்தி + பீம் சக்தி = தேசபக்தி என்கிற நயவஞ்சக முழக்கத்தோடு தலித் ஓட்டுகளை கவரும் சங்பரிவாரத் திட்டத்திற்கு இரையாகிப் போய் அவற்றுடன் தேர்தல் கூட்டு வைத்துள்ள சில தலித் கட்சிகளோ தங்களது செல்வாக்கினால்தான் இப்படியான அற்புதங்கள் நிகழ்வதாக பீற்றிக்கொள்கின்றன. மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்ட போது அதை எதிர்த்து மாநிலத்தையே ரத்தக்காடாக்கிய இந்துத்வ சக்திகள் இப்போது மலர்மாரி தூவும் நிலைக்கு ஆளாகியிருப்பததையும் அம்பேத்கர் தேசிய நினைவகம் கட்ட இந்து மில்  வளாகத்திற்குள் 12 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருப்பதையும் தங்களது சாதனைகளாக கூறிக் கொள்ளவும் இந்த தலித் கட்சிகள் தயாராகிவிட்டன. ஆனால் அம்பேத்கரது கருத்தியலுக்கும் தலித்துகளின் நலனுக்கும் எதிராக செயல்படுவதையே இலக்காக கொண்ட சங்பரிவாரமோ அம்பேத்கரை முன்னிறுத்தி தலித்துகளிடையே மேலும் ஊடுருவிச் சென்று அவர்களை ஆற்றலற்றவர்களாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக மாற்றவதற்குரிய வாய்ப்பாக இதைப் பார்க்கின்றன. 

நினைவிடத்திலிருந்து வெளியே வந்த நாங்கள் அம்பேத்கர் கட்டி வாழ்ந்த இல்லமான ராஜகிருஹா சென்றபோது அங்கு காவலர்களைத் தவிர பார்வையாளர்கள் ஒருவருமில்லாதது கண்டு நான் அதிர்ந்துபோனேன். அவரது பிறந்தநாளாக இருந்தாலும் இறந்தநாளாக இருந்தாலும் மக்கள் நினைவிடத்திற்கு வந்துதான் மரியாதை செய்கின்றனர். இந்த வீட்டிற்கு அவ்வளவாக யாரும் வரமாட்டார்களாம். வீட்டின் முன்பகுதியிலுள்ள இரண்டு அறைகளை மட்டும் ஒதுக்கி அவற்றில் அவரது புகைப்படங்கள், புத்தகங்கள், புழங்கியப் பொருட்கள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். வீட்டின் மேல்தளங்களில் அவரது ரத்த உறவுகளில் சிலர் வசிப்பதாக சொன்னார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிவிட்டு திரும்பிவிட்டோம்.

ராஜகிருஹா
நம்மூரில் கோவில் திருவிழாக் காலத்தில் சாமி ஊர்வலம் நடக்குமே அப்படி அன்றிரவு ஆயிரக்கணக்கானவர்கள் அதிலும் குறிப்பாக வெள்ளுடை தரித்த பெண்களும் குழந்தைகளும் புத்தர் மற்றும் அம்பேத்கர் சிலைகளை வாகனங்களில் அலங்கரித்து ஆட்டம்பாட்டம் வாணவேடிக்கைகளுடன் நகர்வலம் வந்தார்கள். மும்பை நகரம் முழுவதும் மராட்டிய மாநிலம் முழுவதும் அன்றிரவு இப்படி நடக்கும் என்றார்கள் நண்பர்கள். அம்பேத்கர் என்கிற மாமனிதரால் மிக நேரடியாக தனித்துணரும் பயன்களையும் விடுதலையுணர்வையும் எய்தியிருக்கும் அந்த மக்கள் அவரை கடவுள் நிலைக்கு கொண்டுபோய்விட்டனர். அம்பேத்கரின் அச்சம் இந்த விசயத்தில் உண்மையாகியிருக்க வேண்டியதில்லை. மும்பை அல்லது மராட்டியத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இப்படியாகத்தான் அம்பேத்கரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவருகிறது.

சாதியவாதிகள் அம்பேத்கரை ஒரு கருத்தியலாக கருதி வெறுத்துவரும் நிலையில், தலித்துகளில் பெரும்பான்மையானவர்கள் அவரை தமக்கான கருத்தியலாக அல்லாமல் வெறும் சிலையாக படமாக உள்வாங்கியிருக்கும் நிலை ஏன் ஏற்பட்டது? பிறந்த நாள் அல்லது நினைவுநாள் தவிர்த்த பிற நாட்களில் இந்தியச்சமூகத்தின் அன்றாட வாழ்வில் அம்பேத்கருக்கு வழங்கப்பட்டுள்ள இடம் என்ன? சொந்தவாழ்வில் சாதியத்தின் எந்த அம்சங்களையும் அடையாளங்களையும் இழக்காமலே, அம்பேத்கரை ஒரு தலைவர் என்று கூறிக்கொள்வதன் மூலம் தன்னை சாதிகடந்தவராக பொதுவெளியில் காட்டிக் கொள்கிற வேடதாரிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், அம்பேத்கரை முழுப்பொருளில் ஏற்றுக்கொண்ட தலித்தல்லாதவர்கள் வெகு சொற்பமாகவே இருக்கும் நிலை ன் தொடர்கிறது?

கல்விக்காக ஒருவர் மதிக்கப்பட வேண்டுமானால் இன்றளவும் இந்தியாவில் அதிகம் படித்தவர் என்று அம்பேத்கர் மதிக்கப்பட வேண்டும்.  அறிவுக்காக ஒருவரை மதிக்கக்கூடிய நாடு இது என்றால் மேதமைமிக்க பொருளாதார ஆய்வுகளையும் வரலாற்று நூல்களையும் அரசியல் சட்டத்தையும் எழுதியமைக்காகவும், ஏழுமொழிகளில் எழுதவும் பேசவும் கூடிய ஆற்றல் படைத்தவர் தெரிந்தவர் என்றும் அவர் மதிக்கப்பட்டிருக்க வேண்டும். போர்க்குணத்தையும் தியாகத்தையும் போற்றும் நாடு இது என்றால், தனது படிப்பையும் சட்ட அறிவையும் தொடர்புகளையும் கொண்டு சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாமல் அவற்றை தன் மக்களின் விடுதலைக்காகவும் பரந்த இச்சமூகத்தின் மேம்பாட்டுக்காகவும் வாழ்நாள் முழுக்கப் போராடிய அவரை இந்த நாடு உச்சிமீது வைத்து கொண்டாடியிருக்க வேண்டும். பதவி ஆசையில் இலாகா இல்லாத மந்திரியாகக் கூட வெட்கமற்று தொற்றிக்கொண்டு அலைகிறவர்கள் மலிந்து கிடக்கும் இந்நாட்டில், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குரிய சமூக நீதியை வழங்கவேண்டும் என்றும், இந்தியப் பெண்களின் வாழ்வில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கிலான இந்து சட்டத் தொகுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரியதோடு அவற்றை சுதந்திர இந்தியாவின் முதலாவது அரசு, மறுத்தபோது அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்த அவரது சுயமரியாதையுணர்வும் அறச்சீற்றமும் இங்கு மதிக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியதோடு ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கென்று அவர் ஆய்ந்தளித்த முன்னிபந்தனைகளை இந்தியச் சமூகம் இப்போதாவது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது நலம் பயக்கும். மக்களாட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை திறம்பட செயலாற்றுகிறவர்களாக தயார்படுத்தி அனுப்புவதற்காக நாட்டிலேயே முன்னுதாரணமாக அவர் உருவாக்கியது போன்ற நிரந்தரப் பயிற்சிப்பள்ளிகள் இன்றைக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டதுதான்.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் அவர் சேர்க்க முயன்று தோற்றுப்போன ‘திரும்பப் பெறும் உரிமை’ இன்றைக்கும் நமக்கு தேவைப்படுவது தானே? 

அம்பேத்கரை அபகரிக்கத் துடிக்கும் இந்துத்துவாவினரின் மோசடிகளை அம்பலப்படுத்துவது, தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளும் வன்கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் அவற்றுக்கு கருத்தியல் நியாயத்தை வழங்கிக் கொண்டிருக்கிற இந்து மதம் குறித்து அம்பேத்கர் தெரிவித்த கருத்துகளை ஆழ உள்வாங்குவது, பார்ப்பனமயப்படுத்தப்பட்ட சடங்குகள் உள்ளிட்ட பண்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு அவர் கொடுத்துச் சென்றிருக்கும் அறிவாயுதத்தைக் கைக்கொள்வது, அவர் முன்வைத்த சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற மும்மைத்துவத்தை தனிமனித உணர்வாகவும் சமூகத்தின் அடிப்படையாகவும் மாற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்குவது,  இந்துமதத்திற்குள்ளேயே இருந்துகொண்டு சாதி அமைப்பை ஏற்றுக்கொண்டு தீண்டாமையை மட்டும் ஒழித்துவிட முடியாது என்கிற கருத்துப்பரம்பலை மேற்கொள்வது என்று நம்முன்னே பணிகள் பெருகிக்கிடக்கின்றன. 

2015ம் வருடமானது, அம்பேத்கர் 125 ஆக மட்டுமல்லாது, அவர் இந்தியாவில் சாதிகள் என்கிற தனது புகழ்பெற்ற ஆய்வுரையை உலகுக்கு வழங்கியதன் நூறாமாண்டாகவும்  பொருந்திவருகிறது. இந்த ஆய்வுரையையும் இதன் தொடர்ச்சியில் அவர் முன்வைத்த சாதி ஒழிப்பு என்கிற உரைக்குறிப்பையும் தமிழகம் முழுவதற்கும் கொண்டு செல்வதை இந்த ஆண்டுக்கான செயல் இலக்காக கொள்ளலாம். ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடிக்கலைகிற மரபான வடிவங்களை விடுத்து மாற்றுக்கருத்து கொண்டவர்கள் உள்ளிட்ட வெகுமக்களை நேருக்கு நேர் சந்திக்கத் தோதான வடிவங்களில் அம்பேத்கர் என்னும் ஆளுமையின் பன்முகப் பரிமாணத்தை கொண்டு செல்வோம். அம்பேத்கரது கருத்தியலை  பரவலாக்குவதால் அவருக்கொரு பயனுமில்லை, மாறாக இந்தச் சமூகம் சாதியம் என்கிற மனநோயிலிருந்து விடுபடும். மனநோயிலிருந்த விடுபடுகிறவர்களிடம்தான் நாம் நமது இலக்குகளையும் அதற்கான திட்டங்களையும் தெளிவுற விவாதிக்க முடியும். மலைத்துப் போவற்கு ஒன்றுமேயில்லை, எப்போதாயினும் செய்யப்போவது நாம்தான் என்றிருக்கையில் இப்போதே தொடங்குவது நல்லதுதானே? 

நன்றி: அணையா வெண்மணி

வியாழன், ஆகஸ்ட் 20

வரலாற்றின் மாற்று முகம் - ஆதவன் தீட்சண்யா'மாற்று வரலாறு சிறப்பிதழாக' மலேசியாவின் "பறை" 5வது இதழ் வெளியானது. அதன்  பொறுப்பாசிரியர்களில் ஒருவர் என்ற முறையில் எழுதப்பட்ட தலையங்கம் 

இந்தத் தலையங்கத்தை எழுதத் தொடங்கும் வேளையில் தமிழ்நாட்டில் மற்றுமொரு எழுத்தாளரான புலியூர் முருகேசன் தாக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தடைந்திருக்கிறது. அவர் எழுதிய கதையில் கவுண்டர் சமூகம் பற்றி இடம் பெற்றிருக்கும் பகுதியின் மீது ஒம்பாமை கொண்ட ஒரு கும்பல் கரூரிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து அவரைத் தூக்கி காருக்குள் போட்டுக்கொண்டு போய் எங்கோவொரு காட்டுப்பகுதிக்குள் வைத்து கடுமையாகத் தாக்கியிருக்கிறது. பிறகு அந்தக் கும்பலே அவரை அவரை கைது செய்யுமாறு காவல் நிலையத்திற்குள் வந்து அட்டகாசம் செய்திருக்கிறது. முருகேசன் இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இதற்கு முன்னும் இதேபோல துரை குணா, மா.மு.கண்ணன் போன்றவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பெருமாள் முருகனின் கையை முறுக்கி இனி எழுதமாட்டேன் என்று வாக்குமூலம் கொடுக்கவைத்த வன்முறையை உலகறியும். 

உண்மையில் இந்தத் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல் எதை உணர்த்துகிறது? ஒவ்வொரு சாதியிலும் உருவாகி வந்துள்ள மேட்டுக்குடியினரும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது சாதி இன்றுள்ள கதியிலேயே என்றென்றைக்குமாக இருந்து வந்திருக்கிறது என்று நிறுவப் பார்க்கின்றனர். ஆண்ட பரம்பரை என்று தங்கள் சாதிக்கு புனைந்தேற்றியுள்ள கற்பனையை உண்மை என்று நம்ப வைப்பதில்தான் இன்றைய சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் மேலாதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு தங்கியிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் கற்பிதமான அவர்களது  புனிதங்களை தகர்க்கும் விதமாக கலை இலக்கிய ஆக்கங்களும் வரலாற்று ஆய்வுகளும் அப்பட்டமான சில உண்மைகளைப் பேசிவிடுகின்றன. உண்மையைத் தாக்கியழிக்க முடியாத ஆத்திரத்தில் உண்மையைச் சொல்கிறவர்களைத் தாக்குவது இங்கு தொடர்கிறது. 

இவ்வகையான தாக்குதல்கள் இந்திய அளவில் ஏற்கனவே நடந்த வருபவற்றின் தொடர்ச்சிதான். தாங்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு ஊடுருவி வந்து ஆக்கிரமித்தவர்கள் என்கிற உண்மையை மறைக்க ஆரியப்பரம்பரையினர் தொடர்ந்து பலவழிகளிலும் முயற்சித்து வருகின்றனர். எனவே கடந்தகால உண்மைகளுக்கு மாறாக அவர்கள் பல்வேறு தகிடுதத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் தொல்குடிகள் ஆரியர்கள், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல, இந்துமதம் என்பது என்றென்றைக்குமாக இருந்து வருவது, அதன் மூல இலக்கியமான வேதத்தில் எல்லாம் இருக்கிறது, வேதத்தை இயற்றியவர்கள் ஆரியர்கள், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமல்ல- ஆரிய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதிக்கரை நாகரீகமே, சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி என்பதான கட்டுக்கதைகளை களமிறக்கி வருகின்றனர். ஆனால் இந்தக் கட்டுக்கதைகளுக்குப் பொருந்தாத உண்மைகளை திருத்தும் வேலையில் முனைப்புடன் இறங்கியுள்ளனர். இப்படியான அவர்களது திரிப்புகளை அம்பலப்படுத்தும் உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதால்தான் பிபின் சந்திரா, ரொமிலா தாப்பர் போன்ற மதிக்கத்தக்க வரலாற்றாளர்களின் நூல்களை தீயிட்டுப் பொசுக்கவேண்டும் என்று கொக்கரிக்கின்றனர். பந்தார்கர் நூலகம், ஹூசைனின் ஓவியக்கூடம் போன்றவை சூறையாடப்பட்டதற்கும் ஆனந்த் பட்வர்த்தன் போன்றவர்களின் ஆவணப்படங்களைத் திரையிடவிடாமல் தடுப்பதற்கும் இதுவே காரணம். 

காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியாலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் புலம் பெயர்த்தி கொண்டு போகப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். காலனிய ஆதிக்கத்திலிருந்து நாடுகள் விடுதலை பெற்றபோது அவர்கள் உள்நாட்டு தேசிய இனங்களிலிருந்து தங்களது எஜமானர்களைக் கண்டார்கள். புலம் பெயர்ந்தவர்கள் என்கிற அடையாளம் சிறுபான்மை / இந்திய வம்சாவளி  என்பதாக மாறியது. உள்நாட்டவர் மதப் பெரும்பான்மையை முன்னிறுத்திய நிலையில் இந்தியர் என்பது இந்துமதத்தவர் என்பதாக சுருங்கியது. இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்த இந்துமதத்தையே தங்களது அடையாளமாகக் கொள்ள நேர்ந்தது. ஆகவே இந்துமதத்தை இந்தியாவைவிடவும் கூடுதல் விசுவாசத்தோடு பற்றியொழுகும் அழுத்தம் கொண்டதாக புலம்பெயர் இந்திய/ தமிழ்ச் சமூகம் மாறியது. எனவே இந்து மதம், அதன் உள்ளடக்கமான சாதியம் குறித்த உண்மைகளைப் பேசும் எதுவொன்றும் கடுமையாக எதிர்கொள்ளப் படுகிறது. தாங்கள் புலம் பெயர்ந்து வந்த விதம், எதிர்கொண்ட சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை, மீள்வதற்கான போராட்டங்கள் உள்ளிட்ட கடந்தகாலம் பற்றிய உண்மைகளையும் நினைவுகளையும் அழித்து இன்றைக்குள்ள நிலையிலேயே என்றென்றும் இருந்துவருவதாக காட்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. மட்டுமல்ல, இந்த நாடுகள் மீது படையெடுத்து வந்த அல்லது ஆண்ட தமிழ் / இந்திய மன்னர்களின் வழித்தோன்றல்களாக தங்களைக்    காட்டுவதன் மூலம் இந்த நாடுகள் மீது தங்களுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே உரிமையிருப்பதாக கோரும் முயற்சியும் தொடர்கிறது. ஓம் தமிழராக மாறி காவடித் தூக்கியலைகிற நாம் தமிழர் போன்ற அமைப்புகள் ஆதாரமற்று அவிழ்த்துவிடும் பொய்கள் இதற்கு துணைசெய்கின்றன. 

இலங்கையை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக நிறுவும் இழி-முயற்சியின் தொடர்ச்சி, அந்த நாட்டின் பூர்வகுடிகள் வேடுவர்கள் என்பதையும் அங்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் மறைப்பதற்கு இட்டுச் சென்றது. தமிழர்களுக்கு இலங்கையின் மீதுள்ள பூர்வீக உரிமைகளைப் பேசியவர்களும் சிங்கள பேரினவாத ஒடுக்கமுறைகளை அம்பலப்படுத்தியவர்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். தமிழீழப் போராட்ட இயக்கங்கள் தமக்கிடையேயும் தமக்குள்ளும் வெகுசனங்கள் மீதும் கொண்டிருந்த அதிகாரம் அத்துமீறல்கள் குறித்த எந்தவொரு பதிவும் தடுக்கப்பட்டது. மீறி வெளியிடுகிறவர்கள் கடும் அவதூறுகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டனர். 

மேற்சொன்ன தாக்குதல்கள் மேலோட்டத்தில் வெறுமனே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானவை என்று அடையாளப் படுத்தப்படுகின்றன. உண்மையில் இவை வரலாற்றுணர்வு, கடந்தகாலம் குறித்த நினைவுகள் மற்றும் உண்மைகள் மீதான தாக்குதல்கள். தற்கால பிம்பத்திற்கு ஏற்றாற்போன்றதொரு கடந்தகாலத்தை திரித்தமைக்க முடியாத ஆத்திரத்தில் நிகழ்த்தப்படுபவை. கடந்தகாலத்திற்குரியதென சொல்லப்பட்டு வந்த வரலாறானது மிகுந்த உயிர்ப்போடு நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் தாங்கள் இன்றைய புனித பிம்பங்களை துறக்க நேரிடுமோ என்கிற அச்சத்திலும் அவமானத்திலும் நிகழ்த்தப்படுகிற தாக்குதல். 

கடந்தகால நிகழ்வுகளிலிருந்து தத்தமது தேவைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப பொறுக்கியெடுத்து தொகுத்து இதுதான் வரலாறு என்று ஆளும் வர்க்கம்/ இனம்/ மதத்தால் காட்டப்படுகிற போது, அதில் தங்களைப் பற்றி எதுமில்லாததை கண்டுணரும் சமூகப் பிரிவினர் தங்களைப்பற்றிய வரலாறு ஒன்றை தொகுக்கத் தொடங்குகிறார்கள்.  இதன் பொருள், எவர் வேண்டுமானாலும் எடுத்தாளத்தகுந்த வகையில் வரலாறு மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு இருக்கிறது என்பதல்ல. தற்செயலான விடுபடுதலாக அல்லாமல் திட்டவட்டமான இருட்டடிப்பாக பலரையும் புறந்தள்ளி அது பகுதியளவேயான மக்களுக்குச் சார்பானதாக இருப்பதோடல்லாமல், முழுமையானதாக காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கிறது என்பதுதான்.  எனவே ஒருபால் கோடாமையோடு நடுநிலையாக வரலாற்றைப் பேசுவதானது வரலாற்றாளர்களின் நேர்மையோடு தொடர்புடையதல்ல, அது வரலாற்றை எதிர் கொள்வதற்கு ஒரு சமூகம் எந்தளவுக்கு பண்பட்டிருக்கிறது என்பதோடு தொடர்புடையது.  கடந்து வந்துள்ள பாதையை திரும்பிப் பார்க்க அஞ்சுகிற சமூகம் மனிதகுலத்தை மீண்டும் அமீபா நிலைக்குத் தள்ளப் பார்க்கிறது. அப்படியே தள்ளினாலும் மனிதராயிருந்து அமீபா நிலைக்குத் திரும்பிய வரலாற்றை சொல்லத்தான் வேண்டியிருக்கும், சொல்வோம்.

தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா

தேசாபிமானி மலையாள வார இதழில் (2019 ஜூன் 30) வெளியான எனது கட்டுரையின் தமிழ் வடிவம். இதிலுள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனெவே வாசித்திரு...