புதன், ஏப்ரல் 17

சகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா

சகிப்பின்மைக்கு இந்திய வரலாற்றில் இருந்த மரபு அல்லது வேர் பற்றி?

தானல்லாத பிறரை தனக்கு சமமாகக் கருதாமல் ஏதோவொரு வகையில் ஒதுக்குவது அல்லது ஒதுங்குவது என்கிற நிலை சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இருந்ததாக ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். திராவிட நாகரீகத்தின் தொட்டில் எனக் கொண்டாடப்படும் அங்கு சமூகத்தில் பாகுபாடு நிலவியது என்றும் அந்தப்பாகுபாடு வாழ்விடத்திலும் வெளிப்படையாக இருந்தது என்பதை பின்வரும் அவரது கூற்று உணர்த்துகிறது. ‘சிந்துவெளி நகரமைப்பாளர்கள் தங்களது சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கள் வடிவமைத்த நகரங்களின் திட்டமிடலிலும் கட்டமைப்புகளிலும் வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். மொகஞ்சதாரோவில் உயர்நிலப் பகுதிகளை நகரின் மற்ற பகுதிகளிலிருந்து வேறெனப் பிரித்துக்காட்டும் வகையில் இடையில் வெற்றிடங்கள் விடப்பட்டுள்ளன... ஹரப்பாவில் வெற்றிடங்கள் மூலமும் தடுப்புச்சுவர்கள் மூலமும் இந்த வேறுபாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பொதுக் கட்டிடங்களுக்குச் செல்லும் நுழைவுரிமை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது...’. பின்னாளில் இந்தியப் பரப்புக்குள் ஆரிய வந்தேற்றம் நிகழ்ந்தபோது ஆரியர்கள் இங்கிருந்த பூர்வகுடிகளை தமக்கிணையானவர்களாக கருதாததுடன் அவர்களை நிறம், உருவ அமைப்பு, வழிபாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்து ஏளனப்படுத்தி பலவாறாக பாகுபடுத்தத் தொடங்கி வர்ணம் சாதி என்கிற வரையில் நீட்டித்து வளர்த்து நிலைநிறுத்தினார்கள். 

சகிப்பின்மையின் உச்சம் என்று எதைக் கண்டு துடித்தீர்கள்?

ஆரியர்களின் வேதவழிப்பட்ட இந்து மதத்தின் வரலாற்றை அறிய விரும்பும் எவரொவரும் அதன் ஒரு வரியைக்கூட துணுக்குறாமல் படித்துவிட முடியாது. தானல்லாத பிறரது இருப்பை வெறுக்கவும் அழிக்கவுமான கருத்தியல் நியாயத்தை இறை நம்பிக்கை, மத ஆச்சாரங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் ஆகியவற்றின் வழியே நிறுவுவதற்காக அவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், குரூரமான தண்டனைகள், ஒடுக்குமுறைகள் சொல்லித் தீராதவை. ஆரிய, வேத மேன்மையை நிலைநிறுத்தும் புரோகிதப் பிரிவினர் தமது நலன்களுக்காக நாட்டின் அறிவு ஆற்றல் அனைத்தையும் கீழ்ப்படியச் செய்து ஏற்படுத்திய அழிமானத்தால்தான் உலக அரங்கில் இந்தியா இன்றும் பல தளங்களில் பின்தங்கியிருக்கிறது. தங்குதடையற்ற அவர்களது வல்லாதிக்கத்தை தடுத்தாக வேண்டும் என்கிற வரலாற்றுப் பெருவிழைவிலிருந்து பௌத்தம் உருவானது. ஆனால் அதுவும் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது. பௌத்தத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் இடையேயான போராட்டத்தின் வரலாறே இந்தியாவின் வரலாறு என்கிற அண்ணல் அம்பேத்கரின் கூற்று இந்த நிலையை விளக்கப் போதுமானது. வரலாறு நெடுக வழிந்தோடிய இந்த ரத்தத்தின் பிசுபிசுப்பும் மரண ஓலமும் அழுகிய பிணங்களின் வாடையும் அவமானத்தின் குமுறலும்  இந்தியப் பரப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்றளவும் தொடர்கிறது. அதற்கான பொறுப்பை ராஷ்ட்ரீய சர்வநாச சங்கம் எனச் சுட்டப்படும் ஆர்.எஸ்.எஸ் தான் ஏற்றாக வேண்டும். அது எத்தகைய மனிதத்தன்மையற்ற, பிற மத விஷங்கக்கிகளை, வெறுப்பாளர்களை உருவாக்கிவிட்டுள்ளது என்பதற்கு சுவாமி அசீமானந்தா என்பவர் ஓர் உதாரணம்.

ஐந்து தாக்குதல்களில் 119 பேரைக் கொன்றது மற்றும் பல்வேறு நாசவேலைகளுக்காக கைதாகி சிறையிலிருந்த இந்த அசீமானந்தாவிடம் கேரவன் இதழுக்காக லீனா கீதா ரகுநாத் ஒரு நேர்காணலை எடுத்திருந்தார். இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் அந்தமான் பகுதியில் நிவாரண முகாம் எவ்வாறு செயல்பட்டதென பாருங்கள்.       

‘‘அந்தமானைவிட்டு வந்தபிறகும் அசீமானந்தா அடிக்கடி அங்கு வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து  உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும் வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டார்களோ அவர்களுக்குமட்டுமே தரவேண்டும்என்று மிக்ககடுமையாக வரையறுத்தார். 2004ல் சுனாமி வந்தபிறகு நிகழ்ந்த ஒருகதையை என்னிடம் சொன்னார். “ஒரு கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப்பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக்குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள். அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள்என்றனர். நான் அந்தப் பெண்ணிடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால் கிடைக்காதுஎன்று கூறினேன்.  இந்தக்கதையைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அசீமானந்தா பெரிதும் விரும்பினார்.’’

இதற்கு மேல் வாசிக்க முடியாமல் நான் விக்கித்துக் கிடந்தேன் வெகுநேரம். மூன்றுநாட்களாக உணவின்றிச் சொடுங்கும் பச்சிளம் குழந்தைக்கு ஒரு சங்கடை பால் தர மறுக்கும் அசீமானந்தா போன்றவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மதமான இந்துமதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள் என்றால் இந்தச் சமூகம் எத்தகைய பேரழிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற நடுக்கம் எனக்குள் பரவியது. இந்தளவிற்கு பிற மதவெறுப்பு தனக்குள் உருவாகவும் மூர்க்கம் பெறவும் காரணமாக அமைந்தது ‘‘இந்து மதத்தைவிட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒரு மனிதன் குறைகிறான் என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதேஎன்கிற விவேகானந்தரின் கூற்றே என்கிறார் அசீமானந்தா. அசலான இந்த விவேகானந்தரை அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக ராமகிருஷ்ணா மிஷன் மதச்சார்பற்றவராக திரித்துக் காட்டிவிட்டது என்கிறார் அசீமானந்தா. இந்த விவேகானந்தரைத்தான் துறவி, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.    

சகிப்பின்மை என்கிற அரசியல் கோட்பாடு, வெகு மக்களின் மனங்களை எவ்வாறு ஆட்கொள்கிறது?

இந்தியச் சமூகம் 47 லட்சம் பெயர்களிலான சாதி மற்றும் உட்சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. இத்தனைச் சாதிகளில் ஒன்றுகூட இன்னொன்றை சமமாகக் கருதுவதில்லை, கருதமுடியாது. இது தான் சாதியின் அடிப்படையான பண்பு. தாங்கள் ஒரு தனிக்கூறான பண்பாட்டின் வழிவந்தவர்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது. அதனாலேயே பிறரைப் பற்றிய இழிவான / உயர்வான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டு அதனூடாக பிறருடன் கலந்துண்பதை, மணம் புரிவதை, சேர்ந்திருப்பதை, சமயச்சடங்குகள் செய்வதை தீர்மானிக்கிறார்கள். வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்களை அவர்களது தனித்துவப் பண்புகளோடு எந்தளவுக்கு சகித்துக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக உலகளாவிய அளவில் நடத்தப்படும் பல சர்வேக்களில் சகிப்புத்தன்மை மிகக்குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்கிறது. வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர்கள் தமது அண்டை வீட்டாராக வசிப்பதை ஏற்க முடியாது என்று அந்த சர்வேயில் பெரும்பாலான இந்தியர்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இங்கு நீண்டகாலமாக வாழ்விடம் முதல் இடுகாடு வரை பிரிந்து கிடப்பது தான். இந்தப் பிரிவினையை இயல்பானதாக உள்வாங்கி தகவமைந்துள்ள மனோபாவம் நம் ஒவ்வொருவரது செயலிலும் பிரதிபலிக்காத ஒரு செயலும் இங்கு இல்லை. பிரக்ஞைபூர்வமாக இருக்கும் சில நேரங்களில் சாதியும் அதன் தொகுப்பான இந்துமதமும் பயிற்றுவித்தவற்றை தவிர்க்கிறாமேயன்றி தன்னுணர்வான அனிச்சைநிலையில் நம்மில் பலரும் சாதியாக/ மதமாக - பிறருடன் ஒட்டுறவில்லாதவர்களாகவே இருக்கிறோம். அதனாலேயே தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், பிற மதத்தவர், இனத்தவர் மீதான வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களாகவும், அவற்றை ஆதரிப்பவர்களாகவும் இயல்பாகவே இருக்கிறோம்.   

சகோதரத்துவம்?

தோழமைத்தன்மையை விளக்கும் உணர்வே சகோதரத்துவம். இது மற்றவருக்கு நல்லவற்றைச் செய்யத் தூண்டுவதாகும் என்று கூறும் அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் சகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை என்கிறார். மகிழ்ச்சி, அவலம், பிறப்பு, இறப்பு, உணவு என வாழ்வின் உயிர்த்துடிப்பான இயக்கம் அனைத்தையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒத்துணர்வுதான் அனைவரையும் சகோதரர்களாக உணர வைக்கும். ஆனால் அப்படியான பகிர்தலை இந்துமத/ சாதிய துர்போதனைகளால் கட்டமைக்கப்பட்ட மனம் ஒப்புவதில்லை என்கிற அம்பேத்கரின் துயரம் இந்த நாட்டின் மீது இருளெனக் கவிந்திருக்கிறது. 

கௌரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த பன்சாரே இவர்களின் தியாகம் எப்போது அர்த்தப்படும்?

சங் பரிவாரத்தினர் வீழ்த்தப்படுவதற்கும் இவர்களைக் கொன்றவர்கள் சட்டத்தின்  முன்னே நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கும் இவர்களைப் போன்ற சுதந்திரச் சிந்தனையாளர்கள் இனியும் கொல்லப்படாமல் தடுப்பதற்கும் தேர்தலும் ஆட்சி மாற்றமும் மட்டுமே வழி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள உரிமை என்பதற்கும் மேலாக மனிதகுலத்தின் இயல்புரிமை என்கிற அர்த்தத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கும், மற்றமையை உற்றமையாய் கருதும், தனிமனிதர்களுக்கிடையே மத நல்லிணக்கமும் அரசின் செயல்பாடுகளில் மதச்சார்பின்மையும் பேணும் பண்பேறிய ஒரு குடிமைச்சமூகத்தை உருவாக்குவதுதான் அதனிலும் சிறந்த வழியென நம்புகிறேன். அதற்காக நடக்கும் எந்தவொரு போராட்டத்திலும் இவர்களது தியாகம் கண்ணொளியாகச் சுடர்ந்து நம்மை முன்னடத்தும்.

-அணையா வெண்மணி, ஏப் 2019

திங்கள், ஏப்ரல் 8

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள் - ஆதவன் தீட்சண்யா


ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் இவன் ஜபு. முழுப்பெயர் ஜனநாயகப்புத்திரன். ஜனநாயகமே வெகுவாக சுருங்கிப்போய்விட்ட காலத்தில் தன் பெயர் மட்டும் இத்தனை நீட்டமாய் எதற்கென சுருக்கி ஜபுவாகிவிட்டான். அவன் வீட்டு அழைப்புமணி தானே அடிக்கிறது, உங்களுக்கேன் பதட்டம்? அவன் கண்முழித்து கதவைத் திறக்கட்டும். கவனித்தீர்களா, அழைப்புமணியின் ஒலிப்பைக் கேட்டு அவன் அரக்கப்பரக்கவெல்லாம் எழுந்திருக்கவில்லை என்பதை. 

அழைப்புமணி ஒலிப்போசை நின்றபாடில்லை. பக்கத்து ஃபிளாட் ஆட்கள்கூட சத்தத்தால் எழுந்து வந்துவிட்டார்கள். அவனானால் யாராக இருக்குமென யோசித்துக் கொண்டிருக்கிறான். நியூஸ் பேப்பர்? இருக்காது, அந்தப் பொடியன் கீழிருந்தே குறிபார்த்து வீசுகிறவன். உண்மையான சர்ஜிகல் ஸ்டிரைக். துல்லியமாக எய்திடும் இவனையெல்லாம் வில்லேற்றம், ஈட்டியெறிதல், துப்பாக்கிச் சுடுதல், கிரிக்கெட்டில் சேர்க்காதிருப்பதால்தான் நம்ம நாட்டுக்கு தகரப்பதக்கம்கூட கிடைப்பதில்லை என்று கிளை பிரிந்த யோசனையை அழைப்புமணியின் தொடரொலி திருப்பியது. இது பால்கார கிருஷ்ணனாகத்தான் இருக்கும். அவன்தான் எப்பவும் காலிங்பெல் மீது ஏறி நின்றுகொண்டிருப்பது போல இடைவிடாது அடிப்பான். எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது. அவன் திருந்துகிற பாடில்லை. கேட்டால் ஆறுமணிக்கப்புறம் என்ன சார் தூக்கம், நானெல்லாம்  கிரேடு இறக்க தினத்துக்கும் விடிகாலம் மூணுமணிக்கு முழிக்கிறேன் என்பான். காந்தும் கண்களின் எரிச்சலோடு கடிகாரத்தைப் பார்த்தால் மணி நான்குதான் ஆகியிருந்தது. அவன் வரும் நேரமும் இதுவல்ல.

ஒருவேளை ஊரிலிருந்து யாராவது? அவர்களானால் போனில் தெரிவிக்காமல் வரமாட்டார்களே? அப்படியானால் திருட்...? ஹா.. இது கேட்டேட் கம்யூனிட்டி. 24X7X365 செக்யூரிட்டியின் கண்காணிப்பை மீறி தூசுதும்புகூட நுழையமுடியாது. ஃப்ளாட் ஓனரிடம் முன்னனுமதி வாங்காமல் தாய்தகப்பனைக்கூட செக்யூரிட்டிகள் உள்ளே விடமாட்டார்கள். வேறு யார்? செக்யூரிட்டியை தொலைபேசியில் அழைக்கிறான். ‘நம்ம ரெசிடென்ட்ஸ் அசோசியேஷன் செக்ரட்ரி தான் சார், கதவைத் திறங்க’. செக்யூரிட்டியின் பதில் மேலும் குழப்பிவிட்டது. இந்நேரத்துக்கு செக்ரட்ரியா? நேற்றிரவு போதை அதீதமாகி ஏதும் பிரச்னை பண்ணி புகாராகிடுச்சா? முகம் கழுவி, உடைகளைத் திருத்திக்கொண்டு கதவைத் திறந்தான்.    

வெளியே செக்ரட்ரி இவன் முன்பின் பார்த்திராத நாலுபேருடன் நின்றிருந்தார். அவர்களில் ஒரு பெண்  பெரிய கேமிராவுக்குப் பின்னிருந்து அவன் கதவைத் திறந்ததிலிருந்து படம்பிடிக்கத் தொடங்கிவிட்டாள். தன்னிடம் அனுமதி பெறாமல் தன்னை அவள் படம்பிடிப்பது கண்டு இவனுக்கு கோபம் எகிறியது. ஆனால் செக்ரட்ரியுடன் வந்திருக்கிறாளே. இயல்பாக இருக்க முயற்சித்தான். குட்மார்னிங் ஜபு, பயப்பட வேண்டாம். இந்நேரத்துக்கு தொந்தரவு பண்ணினதுக்கு மன்னிக்கணும். ஆனா தொந்தரவுக்கான காரணம் தெரிந்தால் என்னை பாராட்டுவீங்க. உள்ளே போய் பேசலாமாஎன்று செக்ரட்ரி கேட்டதும் இவன் கதவை அகலத் திறந்து அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டான். அவர் ஏதோ இதுவும் தன்னோட வீடுதான் என்பது போன்ற பாவனையில் அவர்களைத் தோதான இடம் பார்த்து அமரச் சொன்னார். பிறகு துள்ளலான குரலில், ‘‘இவங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற ‘ட்ரூத் டிவி சேனல்’ டீம். ‘தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூடன்ற தலைப்புல ஒரு புதுமையான நிகழ்ச்சியை இன்னிக்கு நடத்தப்போறாங்க. சுதாரிக்கிறதுக்கு அவகாசம் தராமல் சடார்னு ஒரு கேள்வி கேட்டால் மனசுல இருக்கிற கருத்து பதிலா வந்திடுமில்லையா? இவங்களுக்கு அதுதான் தேவை. அட புதுமைவிரும்பிகளே, உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவேயில்லையா என்கிற எரிச்சலை காட்டிக்கொள்ளாமல் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான்.

போனமாதம் ஒன்பது கட்டங்களா பொதுத்தேர்தல் நடந்து முடிஞ்சதில்லையா, அதோட வாக்கு எண்ணிக்கை இன்னிக்கு காலை 7 மணிக்கு தொடங்கப்போகுது. அதுக்கு முன்னாடி தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு மக்கள்ட்ட ரேண்டமா ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி இவங்க ஆறரை மணிக்கே வெளியிடப் போறாங்க. ப்ரீ போல், எக்ஸிட் போல் மாதிரி இது ப்ரீ கவுன்டிங். நம்ம அபார்ட்மென்ட்லயும் சாம்பிளுக்கு ஒருத்தர்ட்ட கருத்து  கேட்கணும்னாங்க.  நீங்கதான் இதுக்கு பொருத்தமான ஆள்னு நான்தான்...’ 

செக்ரட்டரி சொன்னதுபோல தான் இதற்கு பொருத்தமானவன்தானா என்கிற கேள்வி இவனுக்கு எழுந்தது. அதைவிட, போனமாதம் ஒன்பது கட்டங்களா பொதுத்தேர்தல் நடந்து முடிஞ்சதில்லையா என்று அவர் சொன்னபோதுதான் அப்படி தேர்தல் நடந்ததே தனக்கு நினைவில் இல்லை என்பது இவனுக்கு உறைத்தது. நல்லவேளை, தேர்தல் நடந்ததா சார் என்று இடைமறித்து கேட்டிருந்தால் அவர் என்ன நினைத்திருப்பார்? தேர்தல் நடந்ததையே மறந்துவிடுமளவுக்கு பொறுப்பவற்றவனான இவனுக்கு ஜனநாயகப்புத்திரன்னு பேர் வச்சவங்கள எதால அடிக்கிறது என்றோ, போயும் போயும் இப்பேர்ப்பட்டவனிடமா கருத்துக்கணிப்பு கேட்க வந்தோம் என்றோ மட்டரகமாக நினைக்கும் சூழலை தவிர்த்துவிட்ட தனது சமயோசிதத்தை பாராட்டிக் கொண்டான்.

தேர்தல்மீது அவநம்பிக்கை பெருகி வாக்குச்சாவடி பக்கம் தலைகாட்டாமல் இருப்பதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும் ஜபு வாக்களிக்கத் தவறியவனில்லை. ஆனாலும் வாக்குச்சாவடிக்குப் போனது, வரிசையில் நின்றது, அடையாள அட்டையைக் காண்பித்து வாக்குச்சீட்டைப் பெற்றது என்று வாக்குப்பதிவின் அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல் சித்திரம் மனதுக்குள் மங்கலாக புரண்டாலும் அது இந்தத் தேர்தலா இதற்கு முந்தையதா என்று அவனால் திடமாக முடிவெடுக்க முடியவில்லை. இவ்வளவு நாள் கழித்து வாக்கு எண்ணிக்கை என்றால் இதுவெல்லாம் யாருக்குதான் ஞாபகமிருக்கும்? ஓட்டு என்ன ஊறுகாயா, போட்டு குறிப்பிட்ட காலம் ஊறினால்தான் பதம் வரும் என்பதற்கு? தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களில் எண்ணி அறிவித்துவிட வேண்டியதுதானே? இதில் தூக்கத்திலிருப்பவனை உலுக்கி எழுப்பி கருத்துக்கணிப்பு வேறு!

அவர்கள் அப்படியொன்றும் சிக்கலான, யோசித்து பதில் சொல்லும்படியான கேள்வியெதையும் கேட்டுவிடவில்லை. அச்சடித்து தயார்நிலையில் கேள்வித்தாள். சரியானதை டிக் செய்தால் போதும்.
* தேர்தல் நடப்பது- நேரவிரயம்/ பொருள் விரயம்/ இரண்டும்
* ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் என்பதை மாற்றுவதெனில் உங்கள் பரிந்துரை- 10 ஆண்டுகள்/ 15 ஆண்டுகள்/ தேர்தலே அவசியமற்றது* அண்டைநாட்டுடன் போர் தொடுக்க உகந்த காலம்- அதிருப்தி அதிகரிக்கும் போது/ தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய மாதம்/ வாக்கெடுப்புக்கு முந்தைய மாதம்
* ஆயுட்கால பிரதமர் என்கிற யோசனை சரி என்பதற்கான மதிப்பெண் 100 என்றால் நீங்கள் வழங்க விரும்புவது- 100/ 110/ 200* இப்போதைய பிரதமரை ஏன் ஆதரிக்கிறீர்கள்- திறமை/ தீர்க்கம்/ வேறு மாற்று இல்லை* இப்போதைய பிரதமரை எதிர்க்காமல் இருப்பதற்கான காரணம் - இல்லை மாற்று வேறு/தீர்க்கம்/ திறமை* வரும் தேர்தலிலும் பிரதமருக்கு தொடரும் உங்கள் ஆதரவு- மனப்பூர்வமானது/ அரசியல்பூர்வமானது/ தேசபக்திமிக்கது
 -இப்படியாக பத்து கேள்விகள். ஜபு விடைத்தாளை கையொப்பமிட்டுக் கொடுத்தான். காமிரா முன் சில கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்று அந்தப்பெண் கேட்டுக்கொண்டாள். ஒளிபரப்பில் இவன் பேசியது சில விநாடிகள் இடம்பெறும் என்றாள். ஒளிப்பதிவு முடிந்து கிளம்பும்போது ஏதோவொரு நட்சத்திர உணவகத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டால் ஆயிரம் ரூபாய் தள்ளுபடியாவற்கான கூப்பனை அந்தப்பெண் கொடுத்துவிட்டு அதையும் படம் பிடித்துக்கொண்டாள். ஆயிரம் ரூபாய் டிஸ்கவுன்ட்டுக்கு நான் ஏன் ஒன்பதாயிரம் செலவழிக்கணும்  என்று யோசித்தபடியே அவர்களை வழியனுப்பி வைத்தான்.

முதன்முதலாக தொலைக்காட்சியில் முகம் காட்டப்போகும் நினைப்பு அவனுக்குள் பெரும் பரவசத்தை கிளர்த்திவிட்டிருந்தது. தேர்தல் முடிவை முன்கூட்டியே அறிந்திடும் ஆர்வத்தில் ஒளிபரப்பைக் காணும் கோடிக்கணக்கான மக்கள் முன் தோன்றி தான் பேசவிருப்பதை நினைத்து அவன் தரையில் கால்பாவாமல் நடந்தான். ‘‘ட்ரூத் டிவியில் காலை ஆறரை மணிக்கு நான்’’ என்று நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான். செய்தியைப் பார்த்து செல்போனில் அழைத்தவர்களிடம், ‘இதெல்லாம் தனக்கு பெரிய விசயமில்லை’, ‘இதிலெல்லாம் தனக்கு பெரிதாக ஆர்வமில்லை’, ‘இத்தனை கோடி மக்களிருக்க தன்னைத் தேடி வந்துவிட்டார்களே என்பதற்காக பேசித்தொலைக்க வேண்டியதாயிற்று’ என்கிற ரீதியில் பிகுவாக பேசினான். மனசுக்குள் இருந்த பரவசத்தை அப்படியே காட்டிக்கொண்டால் டிவி மோகத்தில் அலைகிறவன் என்று மலினமாக கருதிவிடுவார்களே.  

ஜபு ஆறுமணியிலிருந்தே தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்துவிட்டிருந்தான். தேர்தல் ஆணையத்தின் அறிக்கை பிரேக்கிங் நியூஸாக ஓடியது. “வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்கவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றவும் எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்ததையடுத்து அந்தக்கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் நேற்று நள்ளிரவு தேசப்பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேசதுரோக தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை இடையூறின்றி நடப்பதை உத்திரவாதப்படுத்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டது”.

இன்னும் அரைமணி நேரத்தை கடத்தியாக வேண்டிய பரிதவிப்பில் ஒவ்வொரு சேனலாக மாற்றிமாற்றி பார்க்கத் தொடங்கினான். ‘தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட’ போலவே ‘வாக்கும் நாக்கும்’, ‘மனசுக்குள் ஒரு கவுண்டிங்’, ‘முந்திரிக்கொட்டை முடிவு’, ‘நாங்கள் சொல்கிறோம் நாடு நினைக்கிறது’ போன்ற தலைப்புகளில் மற்ற சேனல்களும் கருத்துக் கணிப்பை நடத்தியிருப்பது அப்போதுதான் இவனுக்கு தெரியவந்தது. வாக்கு எண்ணிக்கை எப்படி தங்களது ‘ப்ரீ கவுன்டிங்’ கணிப்புடன் பொருந்திவரப் போகிறது என்பதை சேனலுக்கு நாலுபேர் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். கடந்தகாலத் தேர்தல்களில் யாருடைய கணிப்பு, உண்மையான முடிவுடன் ஓரளவுக்கேனும் பொருந்திப்போனது என்பதற்கான புள்ளி விவரங்கள் வரைபடங்கள் திரைமுழுக்க விரிந்து கிடந்தன. அதிகாரப்பூர்வமாக எண்ணிக்கை தொடங்கப்படுவதற்கு முன்பாகவே நாங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை நாடி பிடித்து கணித்துவிட்டோமெனக் காட்டுவதன் மூலம் பார்வையாளர்களை அதிகரிப்பது, டி.ஆர்.பி. ரேட்டிங், விளம்பரம் என்று ஜபு அறிந்திராத பற்பல கணக்குகள் இதற்குள்ளே பொதிந்திருந்தன.

36.3% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கும் இதை பொதுத்தேர்தல்னு சொல்வதே அபத்தம், ‘வாக்களிக்காமல் இருந்துவிட்டு அது மோசம் இது நாசம்னு அங்கலாய்க்கிற கும்பலுக்காக கவலைப்படுவது அனாவசியம், ‘வாக்களிக்காமல் இருப்பதற்கும் ஜனநாயகத்தில் இடமிருக்கு’, வாக்களிக்காத 63.7 சதம் பேரை ஆட்சிக்கு எதிரானவர்கள் என ஏன் கணக்கிடக்கூடாது? ‘மந்தமான வாக்குப்பதிவு பற்றி நமக்கேன் கவலை’,  என்று தாறமாறான விவாதங்கள். உண்மையான முடிவுகளை இவர்களே அறிவிக்க இருப்பதுபோல இப்படி சேனல்கள் எழுப்பிய ஆரவாரத்தாலும் அதனொரு பகுதியாக தானும் இருப்பதாலும் ஜபு மிகுந்த பரபரப்புக்குள்ளாகிவிட்டான்.

ட்ரூத் சேனலில், கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்கள் பேசும் காட்சி பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்க, காரசாரமாக நேரலை விவாதத்தில் பங்கெடுத்திருந்த மூவரில் ஒருவர் (நடுசாரி வந்தனையாளர்), ‘இந்த நேயர் சொல்வதை கவனியுங்கள்...’ என்கிறார். உடனே திரையில் ஜபு பேசுவது திரும்பவும் காட்டப்படுகிறது.  அந்த நொடியிலிருந்து விவாதத்தின் போக்கு திசைமாறுவது போல அவர் மேலும் தொடர்கிறார்: ‘இவர் சொல்வது தான் வாக்காளர்களின் எதார்த்தமான மனநிலை. அதாவது ஆளுங்கட்சி மீது அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால், அது அந்தக்கட்சியை பதவியிலிருந்து இறக்கிவிடும் அளவுக்கானதல்ல. ஒருவேளை இம்முறை முன்னிலும் கூடுதலான இடங்களைப் பெற்றாலும் ஆச்சரியமில்லை. ஆனால் அவரது கருத்தை மறுப்பது போல மற்றவர் (இடதுசாரி நிந்தனையாளர்) ‘வேண்டுமானால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியுமே தவிர 2014விட கூடுதல் இடங்களைப் பெறுவது சாத்தியமில்லை’ என்றார். மூன்றாமவர் (வலதுசாரி வந்தனையாளர்) ‘ஒருவர் சொன்னதை மட்டும் திரும்பத்திரும்ப காட்டி வலிந்து வேறு பொருள்கூற நீங்கள் இருவருமே முயற்சிப்பதாக தெரிகிறது. மற்றவர்கள் சொன்னதையும் உன்னிப்பாக பரிசீலித்தால் உண்மை நிலவரம் பிடிபடும்...’ என்றார். ஆனால் அவர் உண்மை நிலவரம் என்னவென்று சொல்லவில்லை. 

‘ஒன் ஃபைன் மார்னிங்...’ என்பார்களே அது தனக்கு இன்றுதான் போல என்று மகிழும்படியாக நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே தெரிந்தவர்களிடமிருந்தும் புதிய எண்களிலிருந்தும் ஜபுவின் அலைபேசிக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன. எப்போதும் இவனை கடுப்படிக்கும் ரிசார்ட் மேலாளர்கூட பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இவனானால் எதுவொன்றுக்கும் பதிலளிக்காமல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவோ பேரிடம் கருத்து கேட்டிருந்தாலும் தான் சொன்னதை திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டியும் மையப்படுத்தியும் விவாதம் நடந்ததை குறித்த பரவசத்தில் ஆழ்ந்திருந்த ஜபு இயல்புக்குத் திரும்பவியலாது தத்தளித்தான். ‘தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூடஎன்கிற எமது கருத்துக் கணிப்பு, உண்மை நிலவரத்திற்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதை நேரடியாக காணும் நேரம் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து எமது செய்தியாளர்கள் உடனுக்குடன் தரும் முன்னணி நிலவரங்களை இதோ இன்னும் சிலநொடிகளில் காணத் தயாராகுங்கள்...

‘ட்ரூத்’தில் ஜபு போலவே இன்னபிற சேனல்களின் கருத்துக்கணிப்புகளில் பங்கெடுத்தவர்களாலும் அவர்களுக்கு வேண்டியவர்களாலும் கருத்துக்கணிப்பு பற்றிய செய்தி பரவிக்கொண்டிருந்தது. அதுவுமன்றி வாக்கு எண்ணிக்கை நேரலையைக் காண்பதற்கென்றே இன்று தேசிய விடுமுறை என்கிற அறிவிப்பு அதிகாலையே வெளியாகிவிட்டதால் ஒருவித கொண்டாட்ட மனநிலை நாடெங்கும். நேயர்களை ஈர்ப்பதற்கு சேனல்கள் நூதன உத்திகளைக் கையாண்டன. ஒருமணி நேரம் தங்கள் சேனலை மாற்றாமல் பார்ப்பவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசல், இடையிடையே கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் பிள்ளைகளை எல்.கே.ஜி.யில் சேர்க்க முன்னுரிமை கூப்பன் என்பது போன்ற விலையுயர்ந்த அதிரடி ஆஃபர்களை அறிவித்திருந்ததால் அனேகமாக நாட்டின் மொத்த சனங்களுமே டிவி முன்பிருந்து கருத்துக்கணிப்பையும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தையும் காணும் நிலை உருவாகியிருந்தது.

ஒரு கருத்துக்கணிப்பில் பங்கெடுத்து நாலுவார்த்தை பேசியதோடு தன் வேலை முடிந்து விட்டதாக ஜபுவால் இப்போது நினைக்க முடியவில்லை. தானே தேர்தலில் போட்டியிட்டிருப்பதைப் போன்றதொரு எண்ணம் அவனுக்குள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. ஆகவே, தான் கணித்ததன் அடிப்படையில் சொற்ப பெரும்பான்மையிலாவது ஆளுங்கட்சியே வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினான். அவன் அந்தக் கட்சியின் அங்கத்தவனோ ஆதரவாளனோ இல்லை என்றாலும் அது வெற்றி பெறுவதில்தான் தனது கணிப்புத்திறனும் கௌரவமும் அடங்கியிருப்பதாக நம்பினான். ஆகவே அவன் வாக்கு எண்ணிக்கை துரிதகதியில் நடந்து முடிவுகள் விரைவாகவே வெளியாக வேண்டுமென்று எதிர்பார்த்தான். வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்களில் ஆளுங்கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது கண்டு ஜபு இப்போது ஆசுவாசமானான்.

நேரலை விவாதம் ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக முன்னிலை பெற்றுவந்த கட்சி நோக்கித் திரும்பியது. “மக்களோடு எவ்விதத் தொடர்போ அறிமுகமோ இல்லாத சிலர் திடீரென தேர்தலுக்கு முன்பாக கட்சிகளைத் தொடங்குகிறார்கள். நாட்டின் தலையாயப் பிரச்னைகளையோ தீர்வுகளையோ ஒருபோதும் பொதுவெளியில் பேசியிராத அவர்களில் ஒருவரது கட்சி களமிறங்கிய முதல் தேர்தலிலேயே இவ்வளவு இடங்களை எப்படி பெற முடிகிறது என்று விவாதகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்வி ஜபுவை ஈர்த்தது. “அப்படியொரு கட்சியிடமும்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தமது வாக்குவங்கியை பறிகொடுத்துவிடும் லட்சணத்தில்தான் பாரம்பரியமான பிற கட்சிகள் இருந்திருக்கின்றன என்பதை இந்தத் தேர்தல் அம்பலப்படுத்திவிட்டது. ஏற்கனவே உள்ள கட்சிகளால் நிரப்பப்பட முடியாத அரசியல் வெற்றிடம் புதிய கட்சிகளால் நிரம்பும். தர்க்கப்படி சரிதானே?” என்று மற்றவர் தந்த மறுப்பும் இவனுக்கு சரியென்றே பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கலாமென்றால் அவர்கள் மொத்தப்பேரும் கைதாகி இருக்கிறார்கள் என்று விவாத ஒருங்கிணைப்பாளர் அலுத்துக்கொண்டார்.

பிற்பகலில் வாக்கு எண்ணிக்கையின் இறுதி நிலவரம் வெளியானது. “தேர்தல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் குறுகிய மனப்பான்மையுடன் கீழ்த்தரமான முயற்சிகளில் இறங்கியிருப்பது கண்டு வேதனையடைகிறேன். நெருக்கடியான இக்காலக்கட்டத்தில் நாட்டின் ஜனநாயக மாண்பினைக் காப்பதற்கு துணிச்சலான முடிவினை எடுத்தமைக்காக தேர்தல் ஆணையத்தைப் போற்றுகிறேன். என் மீதும் எனது ஆட்சியின் மீதுமான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள லிபரல்பாளையம் மக்களின் பாதங்களில் எனது வெற்றியை காணிக்கையாக்குகிறேன்” என்று கண்ணீர்மல்க பிரதமர் ஆற்றிய உரையில் ஜபு நெகிழ்ந்து போனான்.  

***
ஜபு நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்தில் அமர வைக்கப்பட்டிருந்தான். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையினரும் தங்களது இந்த நிலைக்கு காரணமான அவனைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர். ஜபுவால் எடுக்கப்பட்டு நாட்டையே புரட்டிப்போட்ட ‘தாவத்தூர் வீடியோநிகழ்வின் முடிவில் திரையிடப்பட்டது. அந்த வீடியோவை தான் எடுக்க நேர்ந்த சூழலை ஜபு விவரித்தான்.

பொதுவாக எங்கள் ரிசார்ட்டுக்கு யார் எதற்காக வருகிறார்கள் என்பதில் பணியாளர்களாகிய நாங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்கள் இருவர், ஆயிரம் பேருக்கு விருந்தளிக்க எங்கள் தாவத்தூர் ரிசார்ட்டை தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது சாதாரண விசயமா? ஒருவகையில் இது எங்களுக்கு கிடைத்த கௌரவம் என்றும்கூட பெருமிதப்பட்டோம். ஆனால் அன்றிரவு நாங்கள் வரவேற்ற அந்த விருந்தினர்களின் கலவை என்னை திகைக்கவைத்தது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதுக்கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் ஆணையர், தலைமை நீதிபதி, போலிஸ் உயரதிகாரி, ராணுவத்தளபதிகள், மடாதிபதிகள், கார்ப்ரேட் முதலாளிகள், டிவிக்காரர்கள்... இவ்வளவு பேரும் எந்தப் புள்ளியில் இணைந்து இங்கு வந்திருக்கிறார்கள்? இந்தக் கலவையின் வினோதத்தன்மை எனக்குள் ஒருவகை குறுகுறுப்பை உண்டாக்கி அவர்களை கவனிக்கத் தூண்டியது.

உல்லாசமும் உபசாரமும் ஒன்றுக்கு மேற்பட்ட போதையும் கிளர்த்திவிட்ட கட்டற்ற மனநிலையில் அவர்களில் சிலர் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனேன். தனிப்பட்ட முறையில் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன், அவமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அந்தக்கணத்தில் ஏற்பட்ட உணர்வுதான் எனக்குள்ளிருந்து என்னை இயக்கியிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கப்புறம்தான் அடுத்துவந்த மூன்று நாட்களிலும் அந்த விருந்தாளிகளில் பலரையும் கண்காணித்து ரகசியமாக மொபைலில் படம் பிடிக்கத் தொடங்கினேன். சிக்கினால் ஈ எறும்பு மொய்க்கக்கூட எதுவும் மிஞ்சாமல் அழிக்கப்படுவோம் என்கிற ஆபத்தான நிலையில் நான் படம் பிடித்தது சாகசத்திற்காக அல்ல.  

அவர்கள் பெயரால் தொழிலால் வேறுபட்டிருந்தாலும் ஒரே கும்பல்தான். தேர்தல் நடத்தினால் தோற்போம் என்பதால் தேர்தலை நடத்தாமலேயே நடந்ததாக நாடகமாடி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டவர்கள்.  இந்த கபட நாடகத்தில் கும்பலின் ஒவ்வொருவரும் பங்குதாரிகள். டிவி சேனல்கள் தான் இவர்களது முகமும் பலமும். சேனல் முதலாளிகளையும் தலைமைச் செய்தியாசிரியர்களையும் விருந்துக்கழைத்து பிரதமர் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்ததால் வேலை சுளுவாகியது. இவையல்லாமல் ட்ரூத் டிவி போல 27 சேனல்களை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை நாடகத்தை சமூக ஊடகங்களில் பரப்ப அந்த ஒருநாளுக்கு மட்டும் 3.2லட்சம் பேரை கொழுத்த சம்பளத்தில் அமர்த்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆன செலவு அதிகம்தான் என்றாலும் இவ்வளவு பெரிய நாட்டை ஆள்வதால் ஏற்படும் ஆதாயங்களை ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை எனலாம்.

இந்தக் கும்பல் என்னையும்கூட நடிக்கவைத்துவிட்டதென்றால் பாருங்கள். இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு எப்படி இருக்குமென்று நீங்கள் கணிக்கிறீர்கள்?’ என்று இந்த ஊடகங்கள் கேட்டதும் நான் உட்பட பலரும் குழம்பிப் போனோம். இந்த கருத்துக்கணிப்பு, வாக்கு எண்ணிக்கை நடக்கத்தான் போகிறது என்கிற நம்பகத்தை மக்களிடத்தில் உருவாக்கிவிட்டது. அடுத்தக்காட்சி வாக்கு எண்ணிக்கை. அசலான வாக்கு எண்ணிக்கை போன்ற பரபரப்புடன் இடம்பெற்ற நேரலை விவாதங்கள் எல்லாமே இவர்களது ஜோடனைதான். வாக்குப்பதிவு 36.3%தான் என்றதும் வாக்களிக்காத 63.7சதத்தில் நாமும் ஒருத்தர்போல என்று மக்கள் ஒவ்வொருவரும் தம்மை நினைத்துக் கொண்டார்கள். ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக வந்ததும் வேறுபல புதிய கட்சிகளும் ஆளுங்கட்சியால் மந்தரித்து உருவாக்கப்பட்டவைதான். ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்டிருப்பதாக காட்டினால்தானே மக்கள் நம்புவார்கள்? முதல் நாளிரவே உங்களையெல்லாம் சிறைக்குள் அடைத்துவிட்டபடியால் எந்த இடையூறுமில்லாமல் அவர்கள் இந்த மோசடியை நிறைவேற்றி முடித்திருந்தார்கள். அந்த சாமர்த்தியத்தை கொண்டாடி களிக்க எங்கள் ரிசார்ட்டுக்கு வந்துதான் தற்செயலாக மாட்டிக்கொண்டார்கள்.

என் வீடியோ இவ்வளவு பெரிய கொந்தளிப்பை இங்கே உருவாக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை.  அன்றைக்கு விருந்திலிருந்து திரும்பிய ஒவ்வொருவரையும் மக்கள் தேடித்தேடி சிறைப்பிடித்து... சிறையிலிருந்த உங்களை விடுவித்து... மறுதேர்தல்... ஆட்சி மாற்றம்... என்று இவ்வளவு வேகமாக இதெல்லாம் நடப்பதற்கு என் வீடியோ காரணமாக இருந்திருக்கிறது என்று நினைக்கவே...

ஜபு இப்போதெல்லாம் தட்டுத்தடுமாறி ஜனநாயகப்புத்திரன் என்று தனது முழுப்பெயரையும் சொல்ல முயற்சிக்கிறான்.

#ஆனந்தவிகடன் (10.04.2019)

புதன், ஏப்ரல் 3

பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவைப் பணிய வைக்கிறது - ஆதவன் தீட்சண்யா


பரம்பரை நிறமூர்த்தங்களின் வழியே எழுத்தாளனாக பரிணாமம் அடைந்தமையை நிறுவ பூர்வீகக் காரணங்களைச் சிலர்  எடுத்தியம்புகின்றனர். இப்போக்கினைக் குறித்து...

நல்லவேளையாக இதெல்லாம் பூர்வஜென்ம புண்ணியத்தால் வந்தது என்று சொல்லாமல் போனார்கள். வால்மீகி ராமாயணத்தை எழுதினார். இவர்களது தர்க்கப்படி பார்த்தால், ஓர் இதிகாசத்தை யாத்தளிக்கும் ஆற்றலை வால்மீகி தன் முன்னோரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவர்களே சொல்கிறார்கள் அவர் ஒரு கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று. சரி, வால்மீகியின் சந்ததியினரில் யாராவது ராமாயணம் அளவுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு கீமாயணமாவது எழுதியிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. (வால்மீகிக்கு தொடர்பற்ற தமிழ்நாட்டின் திருவாரூர் தங்கராசு தான் அந்த கீமாயணத்தை எழுதவேண்டியிருந்தது.) வால்மீகியின் பரம்பரையினர் அவரளவுக்கு எழுதத்தான் வரவில்லை, கொள்ளையடிக்கிற பூர்வீகத் தொழிலையாவது செய்து நுணுக்கங்கள் தேர்ந்து எங்கள் நாட்டுக்கோ உங்கள் நாட்டுக்கோ  பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ ஆகியிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் இந்திய வடமாநிலங்களில் ஒரு தீண்டத்தகாத சாதியினராக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர்.

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்றவர்கள் கம்பனின் குழந்தைகள் கவி பாடினார்களா என்பதை தெரிவிக்கவில்லை. அம்பிகாபதிக்கோவை பாடிய அம்பிகாபதியை கம்பனின் மகன் என்று சொல்வாருண்டு. ஆனால் இருவருக்குமிடையில் சில நூற்றாண்டுகள் இருக்கின்றன.

உரைநடை வடிவம் காலத்தால் பிந்தியது. அச்சுஇயந்திரங்களின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கிய போது, வாசகர்களை ஈர்ப்பதற்காக வாய்மொழி மரபிலிருந்த தொல்கதைகளை சுருக்கியெழுதி வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் வளர்ச்சியில்தான் சிறுகதை என்கிற வடிவம் உருவானது. எனில் அந்த வடிவத்தில் எழுதுகிறவர்களுக்கான மரபணு அதுவரையிலும் உறைநிலையில் இருந்ததா? இன்றைக்கு தமிழில் நாவல் எழுதிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய வித்துவான் தூ.வி.சேஷையங்கார் அல்லது பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகிய இருவரில் ஒருவரது ரத்த வாரீசுகள் என்றால் எவ்வளவு அபத்தமோ அந்தளவு அபத்தமானதுதான் நாங்கள் மரபணு மகிமையால் கருவிலே திருவுடையோராகி எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதும். 

அசமனிலை அடையாளங்களைக் களைந்துவிட்டு பொதுமானுட தளத்தில் நின்று வாழ விரும்புகின்ற போது.. எவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?

இங்கு வாழ்விடம் தொடங்கி புதைவிடம் வரை வாழ்வின் எல்லா தருணங்களும் பாலினம், சாதி, மதம், வர்க்கம், இனம் சார்ந்த பாகுபாடு நிலவுகிறது. ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லக்கூடியவையான இந்தப் பாகுபாடுகளில் உங்களுக்குள்ள இடம் சார்ந்து தான் உங்களது சிந்தனையும் செயலும் அமைகிறது. அதாவது நீங்கள் ஒரு சாய்மானத்துடன் தான் இங்க இருக்கமுடியும். எனில் பொது மானிடத்தளம் என்று ஏதாவது இங்கிருக்கிறதா என்பதே விவாதத்திற்குரியதுதான். பொது என்கிற பெயரில் போக்கு காட்டிக்கொண்டிருக்கின்ற எதுவொன்றின் மூடாக்கையும் விலக்கிப் பார்த்தோமானால் அதனுள்ளே மேற்சொன்ன பாகுபாடுகளினால் ஆதாயம் அடைந்தவர்கள் பதுங்கியிருப்பதை அறியமுடியும். பதுங்கியிருக்கிற அவர்கள் பொது என்று இப்போதிருப்பது போலியானது, சார்புநிலை கொண்டது, மனிதாயமற்றது, என்கிற புரிதலுடன் வெளியேவந்து, அவர்களால் விலக்கி வைக்கப்பட்டிருப்பவர்களுடன் கலந்துறவாடி மனிதராக வாழ்வதற்கான முயற்சியை மேற்கொள்வதுதான் இங்கே தேவையானதாக இருக்கிறது. அப்படியான ஒரு தொடர் நெருக்கடியை உரையாடல் உள்ளிட்ட இயன்ற வழிகளிலெல்லாம் அவர்களுக்கு உருவாக்குவதுதான் விலக்கிவைக்கப்பட்ட ஒருவர் செய்யவேண்டிய தலையாயப்பணி என்பதே எனது புரிதல். அதன் பொருட்டான எனது எழுத்துகளும் செயல்பாடுகளும் எல்லோருக்கும் உவப்பானதல்ல. அவ்வாறு என்னை வெறுக்கவும் கண்டும் காணாமல் புறக்கணிக்கவும் அவர்கள் மெனக்கெடுவதில் வெளிப்படும் பதற்றத்தை ரசித்தபடி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன். அம்மட்டில் அவர்களுக்கு ஒரு தொந்தரவாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியே. எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வதற்கு நானொன்றும் பல்குத்தும் குச்சியோ ஜோக்கர் சீட்டோ அல்ல தானே?

நம்முள்ளே ஒடுக்குமுறை ஒன்றினைப் பேணிப் பாதுகாத்தவாறே பிறிதொரு விடுதலை நோக்கிப் பயணித்தல் ஏற்புடையதா? உதாரணமாக சாதிய நுண்ணடுக்குகளைத் தக்கவைத்தபடி பெண்விடுதலை இனவிடுதலை சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பது

ஒடுக்குமுறை எப்போதும் ஒற்றையாக இருப்பதில்லை. இங்கொருவர் பல்வேறு அடையாளங்களையும் அதன் பொருட்டான ஒடுக்குமுறைகளையும் சுமக்க வேண்டியராக இருக்கிறார். இந்த அடையாளங்களில் சிலவற்றை மாற்றிக்கொள்ள முடியும். அதனூடாக சில ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவும் முடியும். ஆனால் மாற்றீடு செய்யப்பட முடியாத நிரந்தர அடையாளமாக சாதி இருக்கிறது. சாதியின் ஆதாரம் அகமணமுறை. அகமணமுறை நீடிக்கும் வரையிலும்தான் சாதி தூய்மையானது. ஆகவே, மணவுறவு ஒரே சாதிக்குள் நிகழ்ந்து, அந்த சாதியின் ரத்தம் (ரத்தமென்ன ரத்தம், விந்துதான்) அதே சாதிக்குள் கலந்து குழந்தையாகி சாதியை மறுவுற்பத்தி செய்தாக வேண்டும். இதற்கு மாறாக வேறொரு சாதியின் விந்தினை ஏற்று ஒரு பெண் கருவுறுவாளானால் சாதியின் கண்ணி அறுபட்டுவிடும். சாதியின் புனிதத்திற்கு களங்கம் உண்டாக்கும் இந்த கலப்பினை தடுக்க வேண்டுமானால், வேறு சாதி ஆணால் அணுகமுடியாத நிலையில் பெண்ணை கட்டுக்குள்/ கண்ணுக்குள்/ உள்ளங்கைக்குள் வைக்க வேண்டியுள்ளது. அதற்குரிய வளர்ப்புமுறையைப் பேணும் குடும்பம்தான் இங்கு நல்லதொரு மானமுள்ள குடும்பம் என்ற மதிக்கப்படுகிறது. அதாவது பெண் மீது எவ்வளவுக்கெவ்வளவு கட்டுப்பாடுகளை இறுக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு சாதியின் தூயநிலை பாதுகாக்கப்படுகிறது. இதற்காக பெண் ஒரு தன்னுரிமை உள்ளவள் என்கிற சுதந்திர நிலை மறுக்கப்பட்டு அவளை ஆணுக்குக் கீழ்படிகிற, ஆணைச் சார்ந்து வாழ்கிற ஓர் ஒட்டுண்ணியாக திணையிறக்கம் செய்து ஒடுக்குகிறது சாதி. பல்வேறு வன்கொடுமைகளை உள்ளடக்கிய இந்த ஒடுக்குமுறை கொலைவரைக்கும் செல்கிறது. சாதி என்கிற ஓர் ஒடுக்குமுறை, தன் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பெண்மீது பாலின ஒடுக்குமுறையையும் பொருளாதார ஒடுக்குமுறையையும் ஏககாலத்தில் நடத்துகிறது. (இது மத / இன தூய்மைவாதத்திற்கும் பொருந்தும்.)

பாலினச்சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் ஆழப்புதைத்து அவற்றின்மீது அஸ்திவாரம் அமைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ள குடும்பமும், குடும்பங்களின் தொகுப்பாக சாதியும், சாதிகளின் தொகுப்பாக சமூகமும் இருக்கும் போது ஏதாவது ஒரு ஒடுக்குமுறையை மட்டும் தனித்து ஒழித்துவிடமுடியுமா? ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்பது எல்லா நிலைகளிலுமான சமத்துவத்தைக் குறிக்கிறது. ‘‘துரதிஷ்டவசமாகச் சமத்துவம் என்னும் சொல்லுக்குப் பதில் வேறோரு சொல் இல்லை. சமத்துவம் என்றால் அளவு, தொகை, எண், தரம், மதிப்பு, தன்மையில் ஒன்றுபோல இருத்தல்’’  என்று  அண்ணல் அம்பேத்கர் காட்டும் மேற்கோள் சமத்துவம் என்பதற்குரிய பொருத்தமான விளக்கமாகப்படுகிறது. 

கலை இலக்கியம் அரசியல் முதலான துறைகளில் ஒருவர் பிரபலமடைந்து விட்டால் அவரைப் புனிதராக நிறுவுகின்ற போக்கினைக் காண முடிகிறது. இச்சமூகச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சிலர் தமது சொந்த உழைப்பால் பிரபலமடைகிறார்கள். (இங்கு உழைப்பு என்பதை அதன் நேர் அர்த்தத்திலும் பரிமாணங்களிலும் நான் சொல்கிறேன்.) இவர்கள் ஆரவாரமின்றி தமது பணிகளைத் தொடர்கிறார்கள். இவர்களல்லாமல், நானாவித தகிடுதத்தங்கள் வழியாக பிரபலமானவர்களும் பிரபலமாகிறவர்களும் தான் அநேகம். இவர்கள்தான் தங்கள் பிரபல்யத்தை ஒரு சரக்கு போல பாவித்து மார்க்கெட் செய்ய அலைகிறார்கள். அதற்காக தம்மை அதிமானுடர்களாக சித்தரித்துக் கொள்கிற அற்பத்தனங்களில் ஈடுபடுகிறார்கள். நாகரீகச்சமூகத்தின் உளவியலில் மங்கி மறைய வேண்டிய நாயக வழிபாட்டுணர்வையும் அடிமை மனோபாவத்தையும் கிளறி மேலுக்கு கொண்டு வந்து அதனூடாக சிக்குபவர்களை தமது மார்க்கெட்டிங் ஏஜென்ட்டுகளாக்குகிறார்கள்.  சொந்த ஒளியில்லாத இந்த ஏஜென்ட்டுகள், தங்களது நாயகரின் இரவல் ஒளியிலாவது பிரகாசிக்க முயற்சிக்கிறார்கள். நாயகர் மீதிருப்பது ஒளியல்ல, ஜிகினாப்பொடி என்பதை உணர்ந்திராத அவர்கள்  தொடர்ந்தும் அவரை திருநிலைப்படுத்துகிறார்கள். இது சீரழிவுதான்.

"சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக  அருவருப்பூட்டும். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட கூகி அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறார்" என சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். கூகி வா தியாங்கோவின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு நாட்டின் நிலப்பரப்பை கைப்பற்றிக்கொள்வதோடு ஏகாதிபத்தியம் நின்றுவிடுவதில்லை. என்றென்றைக்குமாக தனது ஆதிக்கத்தை ஏற்று கீழ்ப்படியும் விதமாக அது அங்குள்ள மக்களின் மனங்களை தகவமைக்கிறது. ஒருவேளை அந்நாட்டை விட்டு வெளியேறிப் போய்விட நேர்ந்தாலும்கூட அம்மக்கள் ஏகாதிபத்திற்கு தமது விசுவாசத்தை தொடர்ந்து தெரிவிக்கும் நிலையை அது உருவாக்குகிறது. பாரம்பரியம் மிக்க தமது பண்பாட்டு வளமைகளுக்கும் ஏகாதிபத்தியம் திணிக்கும் அடிமைப்பண்பாட்டிற்கும் இடையே ஊசலாடிக் களைக்கும் இரட்டை மனநிலை கொண்டவர்களாக அம்மக்களின் ஆளுமையை காலானியாட்சி சிதைக்கிறது. இதற்காக அது கல்வியையும் ஆங்கிலத்தையும் ஆயுதங்களாக பயன்படுத்துவதை ‘ஏகாதிபத்தியத்தின் காலனீய கட்டத்தில் கொல்வதற்கும் சுகப்படுத்துவதற்கும் ஒரே கலையைப் பயன்படுத்தும் வழிமுறைகள்   என்கிறார் கூகி. இதை மேலும் விளக்குவதற்காக ‘‘கருப்புக்கண்டத்தில் நாம் அவர்களது உண்மையான சக்தி பீரங்கிகளில் இல்லை. அதைத் தொடர்ந்த வழிமுறைகளில் இருந்தன என்பதைப் புரிந்துகொண்டோம். பீரங்கிகளுக்குப் பின்னால், புதிய பள்ளிகள் இருந்தன. அப்பள்ளி பீரங்கியிலிருந்து போரிடும் ஆயுதத்தின் வலுவைப் பெற்றது. ஆனால் பீரங்கியைவிட நிரந்தரமான வெற்றியை ஈட்டித்தந்தது. பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவைப் பணிய வைக்கிறது’’- எனும் செயிக் ஹமிதௌ கானேயின் வரிகளை மேற்காள் காட்டுகிறார் கூகி. யுனெஸ்கோவில் வாசித்த ‘தேசிய பண்பாட்டை நோக்கிஎன்ற கட்டுரையில் ‘காலப்போக்கில் மக்கள் உருவாக்கிய மதிப்பீடுகளைச் சுமப்பது மொழிதான்என்றும் வேறொரு சந்தர்ப்பத்தில் தமது மொழியை  பண்பாட்டுக்களம் என்றும் கொண்டாடும் கூகி, ஏகாதிபத்தியத்தின் மொழியை ஆன்மாவை ஈர்த்துக் கைது செய்யும் மிக முக்கிய ஊடகம் என்று விமர்சிக்கிறார்.

வலிமையும் கொடூர மனமும் கொண்ட ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் வெற்றிபெற முடியும் என்கிற நம்பிக்கையையும் தங்களது தாய்மொழியான ‘கிகூயூவின் வாய்மொழிக்கதைகளில் இருந்து பெற்றதாக அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. ‘கிகூயூவில் சொல்லப்பட்ட பெரும்பாலான கதைளில் மையப்பாத்திரங்களாக மிருகங்களே இருந்தன. அவற்றில் முயல்தான் எங்கள் கதாநாயகன். உருவத்தில் சிறிய, பலவீனமான முயலுக்கு இருந்த புத்தி கூர்மையும் குயுக்திகளும் எங்களுக்குப் பிடித்திருந்தன. சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி போன்ற கொடூரமான மிருகங்களை எதிர்த்துப் போராடிய முயலோடு நாங்கள் எங்களை அடையாளப்படுத்திக் கொண்டோம். முயலின் வெற்றிகள் எமது வெற்றிகளாயின. வலுவானவர்களை வெல்லமுடியும் எனக் கற்றுக்கொண்டோம்...’’

ஏகாதிபத்தியம் திணித்த பண்பாட்டினாலும் மொழியாலும் இடையீடு செய்யப்பட்ட கென்ய மனதை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இலக்கியத்தை ஒரு வழியாக காணும் அவர் சிறுகதை, நாடகம், கட்டுரை, நாவல் ஆகிய வடிவங்களில் இயங்குகிறார். கலை இலக்கியத்தின் அன்னிய வடிவங்களை ஆப்பிரிக்க மயமாக்குவதற்கான தொடர் ஆய்வின் ஒரு கட்டத்தில்தான் அவர் தன் தாய்மொழியான கிகூயூவில் சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலை எழுதுகிறார். சிறையின் அறை எண் 16இல் இருந்து  அந்த நாவல் எழுதிய அனுபவத்தை அவர் இப்படி சொல்கிறார். ‘முதல் சிக்கல் காகிதமும் பேனாவும். அதிகாரிகளுக்கு ஒப்புதல் வாக்கமூலமோ, வேண்டுகோள் மனுவோ எழுதுவதாகக் கூறிப் பேனாவைப் பெற முடியும். இரண்டு அல்லது மூன்று காகிதங்களும் பெறவலாம். ஆனால் நாவல் எழுதுவதற்கான காகிதக்கட்டு எப்படி கிடைக்கும்? எனவே நான் கழிவறையில் உள்ள துடைப்புத்தாளைப் பயன்படுத்தினேன். இதை நான் சொன்ன போது பலர் சிரித்தார்கள். பலர் வினாக்குறிகளோடு நோக்கினர். ஆனால் அந்தத் தாளில் எழுதுவதில் எந்த மூடுமந்திரமும் இல்லை. கமீதி சிறையில் அவை கைதிகளுக்கு தண்டனை அளிப்பதற்கானவை. எனவே கரடுமுரடான இருந்தன. உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய துடைப்புத்தாள்கள், பேனாவுக்கு வசதியாக இருந்தன.’ உனக்கெல்லாம் கட்டுக்கட்டாக காகிதமும் விதவிதமான பேனாக்களும் கிடைத்தும் நீ என்ன எழுதியிருக்கிறாய், எழுதியிருக்க வேண்டிய அளவுக்கு எழுதியிருக்கிறாயா என்று  கூகி என்னை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டே இருப்பதாக இந்த வரிகள் நினைவுக்கு வரும்போதெல்லாம் துணுக்குறுவேன்.

காலனியாதிக்கத்தின் கீழ் கென்யா என்னவானது, அதிலிருந்து மீள்வதற்கு தாங்கள் செய்த செய்து கொண்டிக்கிற பணிகள் எத்தகையவை,  என்பதை விவரிக்கும் கூகியின் ஒவ்வொரு சொல்லும் காலனியாதிக்கத்தின் கீழிருந்த இந்தியா இலங்கை உள்ளிட்ட எந்தவொரு  நாட்டிற்கும் அப்படியே பொருந்தும். அந்தளவிற்கு மனவொருமை கொள்ள வைக்கும் எழுத்து அவருடையது. அவருடனான உரையாடலும் அத்தகையதே என்பதை கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரில் சந்தித்தபோது உணர்ந்தேன்.  “நாம் கனவு காண உறங்குபவரல்ல; உலகை மாற்றக் கனவு காண்பவர்கள்” என்கிற அவரது கூற்றில் உள்ள “நாம்” என்பதற்குள் பொருத்திக் கொள்வதெப்படி  என்கிற கேள்வி இடையறாது என்னை குடைந்துகொண்டே இருக்கிறது.

"கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்" என்ற சிறுகதை மீ டிகிரி கொதிநிலை ஒன்றை  அங்கதத்தோடு சுவறச் செய்கிறது. அக்கதையை வாசித்த பின்பு பலநாட்கள்  அதன் அதிர்விலிருந்து விடுபட முடியவில்லை. எழுதிய தருணத்தில் உங்கள் மனநிலையை அறியலாமா?

இந்த நாடே ஒரு திறந்தவெளி கழிப்பறையாக நாறிக்கொண்டிருக்கிறது. இங்கு சுத்தம், சுகாதாரம் என்பவை தனிநபர், குடும்பம், அரசு ஆகியவற்றின் கூட்டுப்பொறுப்பாக அல்லாமல் துப்புரவுப் பணியாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் போர் தொடர்பான தோல்கருவிகளை உற்பத்தி செய்யவல்லவர்களான அருந்ததியர் உள்ளிட்ட பட்டியல் சாதியினர் இந்தப் பணிகளுக்குள் பலவந்தமாக தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.  இவர்கள் பணி சார்ந்த நோவுகளாலும் விஷவாயு போன்றவற்றின் தாக்குதலாலும் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் ஒரு ராணுவச்சிப்பாய் சாவது நாட்டைக் காப்பாற்றவதற்காக என்றால் இவர்கள் சாவது யாருக்காக? இவர்களது வாழ்வைப்போலவே சாவும் சீந்துவாரற்றுப் போவதை எப்படி தாங்கிக்கொள்வது? நாட்டின் ஆரோக்கியத்திற்கான முதன்மைப்பணிகளை ஆற்றி மக்களைக் காப்பாற்றும் இவர்கள் எவ்வித சமூக மதிப்பும் இன்றி வறுமையில் உழன்று எவருக்காகவோ செத்தொழிவதா? இப்படியாக என்னை எப்போதும் அலைக்கழித்தக் கேள்விகளின் அழுத்தத்தில்தான் அந்தக்கதை உருவாகியிருக்கக்கூடும். நடப்புலகின் விரும்பத்தகாத எதார்த்தத்தை புனைவுலகத்தில் மாற்றிப் பார்க்கலாம்தானே? அப்படி எழுதிப் பார்த்ததுதான் அந்தக் கதை. 

"மீசை வணிகம்" போன்ற கவிதைகளில் கட்டிறுக்கமான மொழியாட்சியினையும்.. "பாரத் மாதா கீ ஜே " போன்ற கவிதைகளில் எளிமையான வெளிப்பட்டினையும் காண முடிகிறதே....

எழுதத் தேர்ந்துகொள்ளும் பொருள் அதற்கிசைவான மொழியையும் இழுத்துவருகிறது. இதில் கருத்து சொல்ல நான் யார்?

பா.ரஞ்சித். மகிழ்நன் என்போருடன் இணைந்து "காலா" திரைப்படத்திற்கு வசனம்  எழுதியிருந்தீர்கள். சமூகக் கோபத்தினைப் பதிவு செய்யும் வகையான வெளியையும்  சுதந்திரத்தையும் "காலா" வழங்கியதா?

சமூகத்தின் உயிராதாரமான நிலவுரிமையைப் பேசுவதற்காகத்தான் ரஞ்சித்  காலா கதையை எழுதியிருந்தார். அந்தக் கதையை அதற்கான தீவிரத்தோடு திரைமொழியில் சொல்வதற்கு தேவையான ஒவ்வொரு வசனத்தையும் விவாதித்து இறுதிப்படுத்தும் ஜனநாயகத்தன்மையை அவர் கைக்கொண்டிருந்தார். எங்கள் மூவருக்கிடையிலும் ஏற்கனவே இருந்துவருகிற தோழமையும் பரஸ்பர மரியாதையும் இந்த விவாதங்களை சமரசமின்றி நடத்துவதற்கான சுதந்திரத்தை இயல்பானதாக மாற்றியிருந்தது. அந்தவகையில் அதுவொரு கூட்டுழைப்பு.

" பூகோள நியமத்தில்
ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும்
நமக்கு இலங்கை போல " என்று எழுதியுள்ளீர்கள். எல்லா வகையான அதிகாரங்களையும் வெறுப்பவர் நீங்கள்... எனவே  ஆயுததாரிகளின் செயற்பாடுகள் குறித்த உங்கள் எண்ணங்களை நன்கறிவோம். இங்குள்ள மக்களின் வாழ்க்கை பற்றிய உங்கள்  எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளலாமா?

புறப்பாடு என்கிற எனது முதல் தொகுதியிலுள்ள இந்தக் கவிதையில் வெளிப்படும் அதே துக்கமும் இயலாமையும் தான் இன்றளவும் என் மனதில் நீங்காதுள்ளது. அது எந்தளவுக்கு ஆத்மார்த்தமானது? தெரியவில்லை, ஆனால் பாவனையோ பாசாங்கோ அல்ல என்று நம்புகிறேன். உயிரிழப்பு, சிறைவாசம், சித்ரவதைகள், நோய், அங்கவீனம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு, வறுமை, அலைக்கழிப்பு என யுத்தத்தின் வாதைகளைத் தாங்கிக்கொண்டு எஞ்சியுள்ள தமிழர்கள், போரின் பேரழிவுகளிலிருந்து தம்மை மீளக் கட்டமைத்துக்கொண்டு கண்ணியமான வாழ்வுக்குத் திரும்பவேண்டும் என்று வெறுமனே ஆசையை வெளிப்படுத்துவதால் என்ன பயன்? தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசையும் இனவாதிகளையும் தண்டனைக்குள்ளாக்கும் அரசியல் விருப்புறுதியும் அதன் பொருட்டான தொடர்செயல்பாடும் கொண்ட அமைப்புகள் இல்லாத நிலையில் இப்படியான ஆசைகளுக்கு ஒரு பொருளுமில்லை. வடகிழக்குத் தமிழர்கள், தமிழ்பேசும் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், இனவாதத்தின் பிடியில் இன்னமும் சிக்காத சிங்களவர்கள் ஆகியோரைக் கொண்ட ஜனநாயக இயக்கங்களை உருவாக்குவதற்கான களப்பணி ஆற்றுகிறவர்கள் யாரேனுமிருந்தால் அவர்களுக்கு எனது ஒருமைப்பாட்டை தெரிவியுங்கள். மதவெறியையும், சாதிவெறியையும், பெண்ணடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் போலிப் பெருமிதங்களையும் பரப்பி இந்திய மக்களை வன்முறையால் பிளவுபடுத்திவரும் இந்துத்துவவாதிகள் ஈழத்தமிழர்களையும் குறிவைத்து இறங்கியிருக்கிறார்கள். இந்த அபாயத்தை எடுத்துரைத்து, மற்றுமோர் அழிவு நமக்கெதற்கு என்று தமிழ்ச்சமூகத்தை உஷார்ப்படுத்துகிற எவரொருவரது கரங்களையும் தோழமையுடன் பற்றிக்கொள்கிறேன். 

-       ஆதவன் தீட்சண்யா
ஒசூர்
25.03.2019

தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா

தேசாபிமானி மலையாள வார இதழில் (2019 ஜூன் 30) வெளியான எனது கட்டுரையின் தமிழ் வடிவம். இதிலுள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனெவே வாசித்திரு...