சனி, அக்டோபர் 11

காஸாவிற்கான மௌனம் - மஹ்மூத் தார்விஷ்

காலஞ்சென்ற பாலஸ்தீனக் கவிஞர்  மஹ்மூத் தார்விஷ்  அரபு மொழியில் எழுதிய ‘திரும்பி வந்தவனின் திகைப்பு' (The Returnee’s Perplexity) என்னும் ஆக்கத்திலுள்ள  வசன கவிதை போன்ற  இந்தப் பகுதி, ஸினான் அண்டூனால் (Sinan Antoon) ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆங்கில மொழியாக்கத்தின் வழி தமிழாக்கம்:  வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை


காஸா தனது பகைவர்களுக்கு அருகாமையிலும் உறவினர்களிடமிருந்து வெகுதொலைவிலும் உள்ளது. அதற்குக் காரணம், காஸா வெடிக்கும்போதெல்லாம் அது தீவாவதும் அது வெடிப்பது ஒருபோதும் நின்றுவிடாததும்தான். பகைவனின் முகத்தைப் பிறாண்டி, அவனது கனவுகளை கலைத்து, காலத்துடன் அவன் செய்துகொண்ட சமரசத்தைக் காலத்தால் நிறுத்தியது.

ஏனெனில் காஸா வேறானது.
ஏனெனில் காஸாவில் காலம் நடுநிலையான ஒன்று அல்ல.

மக்களை அமைதியாக சிந்திக்கக் கட்டாயப்படுத்துவதல்ல, மாறாக கொந்தளிப்பை, நிஜத்துடன் அவர்கள் முட்டி மோதுவதைக் கட்டாயப்படுத்துவதாகும்.

காஸாவின் காலம் குழந்தைகளைக் கைப்பிடித்து அழைத்து குழந்தைப்பருவத்திலிருந்து வயோதிகத்துக்குக் கூட்டிச்செல்லும் காலம் அல்ல. மாறாக, அவர்கள் பகைவனை முதன்முதலில் எதிர்கொள்ளும் போது அவர்களை வயது வந்தவர்களாக்கிவிடும் காலமாகும்.

காஸாவின் காலம் பொழுதுபோக்குவதற்கானதல்ல- எரியும் நடுப்பகல் மீது சீறியெழுவதற்கானதாகும். ஏனெனில் காஸாவின் மதிப்பீடுகள் வேறானவை, வேறானவை, வேறானவையே.

ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் எந்தளவுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றனர் என்பதில்தான் அவர்களுக்கான ஒரே மதிப்பீடு அடங்கியுள்ளது. அங்குள்ள ஒரே போட்டி இதுதான். இந்தக் குரூரமான, ஆனால் மாண்பான மதிப்பீடு காஸாவுக்கு நன்கு தெரிந்த, அதற்குப் பழக்கமான ஒன்று. இதை அது புத்தககங்களிலிருந்தோ, அவசரம் அவசரமாகக் கூட்டப்பட்ட பள்ளிக்கூடக் கருத்தரங்குகளிலிருந்தோ, உரத்த பிரச்சாரத்துக்கான மைக்குகளிலிருந்தோ, பாடல்களிலிருந்தோ கற்றுக் கொள்ளவில்லை. இதை அது அனுபவத்திலிருந்து மட்டுமே, விளம்பரத்துக்கோ காட்சிப் பெருமைக்காகவோ செய்யப்படாத உழைப்பின் மூலமே கற்றுக்கொண்டது.

காஸாவுக்குத் தொண்டை இல்லை. அதன் சருமத்தின் துளைகள்தான் பேசுகின்றன- வியர்வை, இரத்தம் ஆகியவற்றின் மொழியில். இதனால்தான் பகைவன் அதை வெறுக்கிறான், சாகடிக்க வேண்டும் என்றிருக்கிறான், அதற்கெதிராக குற்றம் புரியும் அளவுக்கு அதைக் கண்டு அச்சப்படுகிறான், அதை கடலில், பாலைவனத்தில், இரத்தத்தில் மூழ்கடித்துவிட முயற்சி செய்கிறான். இதனால்தான் அதன் உறவினர்களும் நண்பர்களும் காஸாவைக் காதலிக்கின்றனர், செல்லமாக, அசூயையுடன், ஏன் சில நேரங்களில் பயத்துடனும் கூட. ஏனெனில் காஸாதான்  எல்லோருக்குமான பாடம், மூர்க்கத்தனமாகக் கற்பிக்கப்படும் பாடம், நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் ஒருங்கே ஒளிரும் ஆதர்சம்.
 
காஸா, நகரங்களில் மிக அழகான நகரமல்ல.
அதன் கடற்கரை, அராபிய நகரங்களின் கடற்கரைகளைக் காட்டிலும் கூடுதலான நீல நிறமுடையதல்ல.
மத்தியத்தரைக் கடற்கரைகளில் விளையும் ஆரஞ்சுப்பழங்களின் வரிசையில் இதன் பழங்கள் ஒன்றும் அத்தனை வடிவானவை அல்ல. 
காஸா, நகரங்களில் மிக வளமான நகரமல்ல.

அது, நகரங்களில் மிக நேர்த்தியானதோ, மிகப்பெரியதோ அல்ல; ஆனால் ஒரு தாய்நாடு முழுவதற்குமேயான வரலாறுக்குச் சமமானது. ஏனெனில் பகைவனின் கண்ணுக்கு அது மற்ற நகரங்களைக் காட்டிலும் விகாரமானது, ஏழ்மையானது, துயரமிக்கது, தீயது. ஏனெனில் நம் அனைவரைக் காட்டிலும் பகைவனின் மனநிலையை, அவனது கொகுசை பாதிக்கவல்லது அது மட்டுமே. ஏனெனில் அவனைப் பொறுத்தவரை அது அவனை துரத்தும் ஒரு கெட்டக் கனவு. ஏனெனில் அது... கண்ணிவெடி ஆரஞ்சுகள், குழந்தைப்பருவமற்ற குழந்தைகள், வயோதிகமற்ற வயதானவர்கள், வேட்கையற்ற பெண்கள். இதனால்தான் எல்லா நகரங்களைக் காட்டிலும் அது மிக அழகானது, தூய்மையானது, வளமானது, எல்லா நகரங்களைக் காட்டிலும் காதலிக்கத்தக்கது.


நாம் காஸாவின் கவிதைகளை தேடிச் செல்வோமேயானால் அதற்கு அநீதி செய்தவராகிறோம், எனவே நாம் காஸாவின் அழகைச் சிதைக்காமல் இருப்போம். கவிதைகளைக் கொண்டு நாம் பகைவனை வெற்றிகொள்ள முயற்சி செய்து, நம்மை நாமே நம்பி, பாடுவதற்கு நம்மைப் பகைவன் அனுமதித்தைக் கண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரத்தில் அது கவிதைகளற்றதாய் இருப்பதுதான் அதற்கு அழதைத் தருகிறது. பிறகு நமது உதடுகளிலிருந்து கவிதைகள் வடிந்து வறண்டபோது, நகரங்களை, கோட்டைகளை, தெருக்களைப் பகைவன் கட்டி முடித்திருந்ததைக் கண்டோம். காஸாவை ஒரு தொன்மமாக மாற்றினால், நாம் அதற்கு அநீதி செய்பவராவோம். ஏனெனில், அது பகைவனை எதிர்த்து நிற்கின்ற ஒரு சிறிய ஏழ்மையான நகரமே தவிர வேறல்ல என்பதைக் கண்டறியும்போது நாம் அதை வெறுப்போம்.

இதை ஒரு தொன்மமாக்கியது எது என்று நாம் வியந்து நிற்கையில் அதற்கு அநீதி செய்பவராகிறோம். நமக்கு மானம், மரியாதை இருக்குமேயானால், நமது நிலைக்கண்ணாடிகள் அனைத்தையும் உடைத்துப் போட்டு நமக்கு எதிராக நாமே கிளர்ந்தெழ மறுப்போமேயானால். நாம் அழவோ, அதை சபிக்கவோ செய்வோம். காஸாவை நாம் போற்றிப்புகழ்ந்தாலும் அது அநீதிதான். ஏனெனில் அதை மோகித்து அதில் மயங்கினால் நாம் காத்திருப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவோம். காஸாவோ நம்மை தேடி வராது. காஸா நம்மை விடுவிக்காது. காஸாவிடம் குதிரைகளோ, ஆகாய விமானங்களோ, மந்திரக் கோல்களோ, தலைநகர அலுவலகங்களோ இல்லை. காஸா, நாம் அதற்கு ஏற்றிச்சொல்லும் பண்புகளிலிருந்து தன்னைத்தானே விடுதலை செய்துகொள்ளும்; அதேவேளை நமது மொழியை அதனுடைய காஸாக்களிடமிருந்து விடுதலை செய்யும். நாம் அதை - ஒரு கனவில் - சந்திக்கும்போது, அது நம்மை அடையாளம் கண்டுகொள்ளாது. ஏனெனில் காஸா நெருப்பிலிருந்து பிறந்தது; நாமோ காத்திருப்பிலிருந்தும், இழந்த வீடுகளுக்கான புலம்பல்களிலிருந்தும் பிறந்தவர்கள்.

காஸாவுக்குரிய தனிச்சிறப்பான சூழ்நிலைமைகளும், அதற்கேவுரிய புரட்சிகர மரபுகளும் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதன் இரகசியம் ஒரு புதிரல்ல. அதன் எதிர்ப்பு வலுவான இணைப்புகளால் ஆனது, மக்களாதரவு பெற்றது, தனக்கு என்ன வேண்டும் என்று அதற்குத் தெரியும் (தனது ஆடைகளிலிருந்து பகைவனை தூக்கி எறியவே அது விரும்புகிறது). எதிர்ப்புக்கும் மக்களுக்கும் உள்ள உறவு எலும்புகளுக்கும் சதைக்குமான உறவு, ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவல்ல. காஸாவில் வெளிப்படும் எதிர்ப்பு தொழிலாகவோ, ஒரு நிறுவனமாகவோ மாறவில்லை. 


காஸா யாருடைய வழிகாட்டுதலையும் ஏற்கவில்லை, யாருடைய கையெழுத்தையும் அதிகார முத்திரையையும் நம்பி தனது விதியை ஒப்படைக்கவில்லை.

அதன் பெயர், படம், பேச்சுத்திறன் ஆகியன பிறருக்குத் தெரியுமா தெரியாதா என்பதைப் பற்றி அது அவ்வளவாக கவலைப்படுவதில்லை. ஊடகங்களுக்கான உள்ளுரையாக தான் இருக்கக்கூடும் என்பதை நம்பவுமில்லை. காமிராக்களுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளவுமில்லை, தனக்கு  நிரந்தரமாக சிரித்த முகத்தை அளிக்கவல்ல அரிதாரத்தையும் அணியவில்லை.

அவற்றை அது விரும்பவில்லை, நாமும்தான்.

இதனால்தான் காஸா வியாபாரிகளுக்கு உகந்ததல்ல. வியாபாரத்துக்கானதுமல்ல. அதனாலேயே அராபியர்களுக்கு அது ஈடுஇணையற்ற அறப்பொக்கிஷம்.

காஸாவின் அழகே இதுதான் - நமது குரல்கள் அதனை எட்டுவதில்லை. அதை எதுவும் திசை திருப்புவதில்லை. பகைவனின் முகத்திலிருந்து அதனுடைய முஷ்டியை எதுவும் அகற்றி விடுவதில்லை. அது முடியாத காரியம் - நாம் நிலவின் கிழக்கிலோ அல்லது புதன் கிரகத்தின் மேற்கிலோ (அப்பகுதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு) இனி நிறுவக்கூடிய பாலஸ்தீன அரசின் அனைத்து வடிவங்களால்கூட அது முடியாத காரியம். வேண்டாம் என்று விலக்கி வைக்கப்படுதலின் பெயரில் காஸாவுக்கு அபார விசுவாசம் - பசியும் விலக்கி வைக்கப்படுதலும், தாகமும் விலக்கி வைக்கப்படுதலும், இடப்பெயர்வும் விலக்கி வைக்கப்படுதலும், சித்திரவதையும் விலக்கிவைக்கப்படுதலும், முற்றுகையும் விலக்கி வைக்கப்படுதலும், மரணமும் விலக்கிவைக்கப்படுதலும்.
 

பகைவர்கள் காஸாவை வெற்றிகொள்ளலாம் (பொங்கு கடல் ஒரு தீவை வெல்லக்கூடும்... அதன் மரங்களை அவர்கள் வெட்டி வீழ்த்தக்கூடும்).

அவர்கள் அதன் எலும்புகளை நொறுக்கக்கூடும்.

அதன் குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்களுக்குள் அவர்கள் டாங்கிகளை பொருத்தக்கூடும். அதைக் கடலில், மண்ணில், இரத்தத்தில் தூக்கி எறியக்கூடும். 

ஆனால் அது பொய்களைச் திரும்பத்திரும்பச் சொல்லி படையெடுத்து வருவோருக்கு இசைவு தராது.

அது தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்.

அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு. அது தொடர்ந்து வெடித்துக்கொண்டேயிருக்கும்.

அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு.

                                                                                                                 - புதுவிசை - 42வது இதழ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...