லோககுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லோககுரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 7

கடவுள் என்னும் கைதி -ஆதவன் தீட்சண்யா

பூலோக பரிபாலனத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த கடவுளை இடைமறித்து சுற்றி வளைத்தது போலிஸ் படை. ஏதோ வரம் கேட்கும் ஆசையில் பக்தர்கள்தான் இப்படி வழிமறிக்கிறார்கள் போலும் என்று முதலில் கருதிக்கொண்ட கடவுள், படியளக்கச் செல்லும் போது பாதையை மறிக்கலாமோ? அவரவர்க்குரியது அவரவர்க்கு கிட்டும், வழி விட்டகலுங்கள் என்றார். பதிலேதும் பகராத காவலர்கள், துப்பாக்கிகளை தயார்நிலைக்கு கொண்டுவந்ததைப் பார்த்ததும் ஒருவேளை தன்னுடைய பாதுகாப்புக்காக இவர்களை அரசாங்கம் அனுப்பி வைத்திருக்குமோ என்கிற எண்ணம் தோன்றியதும் கடவுளுக்கு சிரிப்பான சிரிப்பு வந்தது. உலகாளும் எனக்கு அற்ப மானிடர்களாகிய நீங்கள் பாதுகாப்பு தருவதா... அவமானம் அவமானம்... போய் உருப்படியாய் ஏதாவது செய்யுங்கள் என்றார். எல்லாம் அறியும் வல்லமை கொண்ட தங்களுக்கு நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பது தெரியாமலா இருக்கும்? இருந்தும் எங்களை சோதிக்கிறீர்களே பகவானே... என்று பதிலிறுத்த படையதிகாரியின் குரலில் பரிதாபமும் பரிகாசமும் இழைந்திருப்பதாகப்பட்டது. சுதாரித்துக்கொண்ட கடவுளுக்கு, தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது அடுத்த நொடியே விளங்கிவிட்டது. சரி, கடவுளாகிய தன்னை இவர்கள் கைதியாக நடத்தும் பாங்கையும் தான் பார்ப்போமே என்று போலிசுடன் அமைதியாகப் புறப்பட்டார். கடவுளுக்குரிய மகிமைகள், அற்புதங்கள், ஜாலங்கள், லீலைகள் எதையும் வெளிப்படுத்தாமல் வெறும் கைதியாக மட்டுமே இருந்து பார்ப்பது என்கிற முடிவையும் அப்போதே எடுத்துக்கொண்டார்.

கொல்கத்தா நகரத்தின் வடக்குப்பகுதியில் தான் கட்டிக்கொண்டிருந்த விவேகானந்தா மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு கடவுளே காரணம் என்று ஐ.வி.ஆர்.சி.எல். என்கிற கட்டுமான ஒப்பந்த நிறுவனம் சொன்னதன் பேரில் கடவுள் கைது செய்யப்பட்டிருந்தார். நாட்டின் நாலாதிசையிலும் பல்வேறு தொழில்களை நடத்தியும், தங்க நாற்கர மற்றும் ஆறுவழிச்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்தும் கறக்கிற கோடிக்கணக்கான பணத்தை தனது சொந்தக்கணக்கில் சேர்த்துக்கொள்கிற அந்த நிறுவனம், பாலம் இடிந்ததற்கு மட்டும் கடவுளைப் பொறுப்பாக்குவது எந்தவகையில் சரி என்கிற கேள்வி போலிசுக்கு எழவேயில்லை. கார்ப்ரேட் நிறுவனங்கள் சொல்வதை காற்புள்ளி அரைப்புள்ளி கூட மாற்றாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நியதி அமலில் உள்ள நாடென்பதால் கடவுளை கைது செய்து இழுத்து வந்துவிட்டது போலிஸ். குறைந்தபட்சம் 26 பேரை கொன்றதாகவும் நூற்றுக்கணக்கானவர்களை காயமடையச் செய்ததாகவும் அவர்மீது குற்றச்சாட்டு. 

லோககுரு என தன்னைத்தானே சொல்லிக்கொள்கிற மட முதலாளிக்கே (அதாவது மடாதிபதிக்கே) வெளிக்கியிருக்க வாழையிழை கொடுத்ததோடு அதை பவ்யமாய் வாரிவழித்து சுத்தமும் செய்த பாரம்பரியம் கொண்ட காவல்துறைக்கு, இந்த லோகத்தை மட்டுமல்லாது ஏழேழு லோகத்தையும் கட்டியாளும் மெய்யான கடவுளை நடத்தும் விதமா தெரியாது? அதே மட முதலாளி விசாரணைக் கூண்டில் ஏற மறுத்ததும் நீதிமன்றமே தனி இருக்கை கொடுத்து அமரவைத்து அழகு பார்க்கும் நிலையில், சர்வவல்லமை கொண்ட கடவுளை ஒரு சாமானிய கைதியைப்போல எப்படி கண்ணியக் குறைவாக நடத்தமுடியும்? எனவே விசாரணைக்கென இழுத்துவருபவர்களை முட்டிப்போட்டு மூலையில் உட்கார வைக்கும் வழக்கத்திற்கு மாறாக சொகுசு சுழல் நாற்காலி ஒன்றில் கடவுள் உட்கார வைக்கப்பட்டார். கண்ணைக் கட்டி கூட்டி வந்ததால் எந்தக் காவல் நிலையத்தில் இருக்கிறோம் என்பதே கடவுளுக்குத் தெரியாமல் போயிருந்தது. கறுப்புத்துணியை அவிழ்த்தெடுத்தப் பின்னும் மயமயவென மங்கிய இருட்டாகவே தெரிந்த பார்வை ஒரு நிலைக்குத் திரும்ப வெகுநேரமானது. தூணிலும் துரும்பிலும் இருக்கத் தெரிந்த கடவுளுக்கு கேவலம் ஒரு காவல் நிலையத்தில் இருக்க முடியாதா என்ன? அதுவும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகத்தைச் சுற்றிப் பார்க்கத் தோதாக இப்படியொரு சுழல் நாற்காலி இருக்கும் போது வேறென்ன வேண்டும் என்று தோன்றியது கடவுளுக்கு.

தமது வழக்கமான பாணியில் அவரை விசாரிப்பதா அல்லது கடவுள் என்பதால் வேறு விசேட வழிமுறைகளைக் கையாள்வதா என்கிற குழப்பம் காவல்துறையினரைப் பீடித்திருந்தது. விசாரணைக்கைதியை கையாளும் நெறிமுறைகள் பற்றி டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கும் வழிகாட்டுதல்கள் யாவும் மனிதர்கள் சம்பந்தப்பட்டதாகத்தான் இருந்தனவேயன்றி கடவுள் தொடர்பானதாக எதுவுமில்லாதது அவர்களது குழப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. கைதுசெய்யப்படுபவர் பற்றி அவரது குடும்பத்தாருக்கோ உறவினருக்கோ இவ்வளவு நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும் என்கிற சாதாரண நடைமுறைகூட கடவுள் விசயத்தில் பொருந்திவரவில்லை. ஆதியந்தமில்லாதவர் என்றும், முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வீற்றிருப்பவர் என்றும் கடவுளை நம்புகிறவர்களே காலங்காலமாக எதிரும்புதிருமாக வாதிட்டும் தீராத இப்பிரச்னையில் அவரது பெற்றோரையோ உற்றாரையோ கண்டுபிடிப்பது காவல் துறையினரால் முடியக்கூடிய காரியமா என்ன? ஒரு விசாரணைக்கைதியை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தாமல் எவ்வளவு நேரம் சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பீர்கள் என்கிற சம்பிரதாய கேள்வியை அவ்வப்போது கேட்பதற்கு ‘தேசிய கடவுள் உரிமை ஆணையம்’ என்பது மாதிரியான அமைப்புகள் இன்னமும் உருவாகாமல் இருப்பது ஒருவகையில் ஆறுதலாக இருந்தது காவல் அதிகாரிகளுக்கு. 

எல்லாம் கடவுள் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்று இந்த மனிதர்கள்தான் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, கடவுள் ஒருபோதும் தானாக முன்வந்து அவ்வாறு எவரொருவரிடமும் சொன்னதில்லை. இன்னும் சொல்லப்போனால் தான் இருப்பதாகவே கடவுள் இதுவரையிலும் சொல்லிக்கொண்டதில்லை. வெற்றிகளும் நல்லதுகளும் கிடைக்கிற போதெல்லாம் அவை தனது சொந்த அறிவாலும் உழைப்பாலும் கிடைத்ததாக ஜம்பமடித்துக் கொள்கிற இந்த அற்ப மானிடர்கள், ஏதேனும் கெடுதல் நடந்தால் மட்டும் கடவுளின் மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்ப்பது என்ன நியாயம்?  பரீதாபாத்தில் தலித் குழந்தைகள் இரண்டுபேர் கொல்லப்பட்ட போது ‘யாராவது நாய்மீது கல்லை விட்டெறிந்தால்கூட அரசாங்கம் தான் பொறுப்பு என்பீர்களா?’ என்று ஒரு அமைச்சர் கேட்டது கடவுளுக்கு ஞாபகம் வந்தது. இந்த மந்திரிக்கு அதைவிட வேறென்ன புடுங்கல்  என்று நினைத்துக் கொண்ட கடவுள், இத்தினியூண்டு நாட்டுக்குள் நடப்பதற்கே இந்த மனிதர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என்கிற போது, ஏழேழு லோகத்தையும் கட்டியாளும் கடவுள் பாலம் இடிகிறதா பர்லாங் கல் பெயர்கிறதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? கடலுக்குள் திரண்டுள்ள மணற்திட்டை, கடவுள் கட்டிய இந்தப் பாலம் கரையாமல் நிற்கிறது என்று போற்றுவதும், நேற்று ஒரு நிறுவனம் கட்டிய மேம்பாலம் இன்று விழுவதற்கு கடவுளே காரணம் என்று தூற்றுவதுமாகிய இந்த மனிதர்களின் முட்டாள்தனத்தை எண்ணி கடவுளுக்கு கவலையாகிப் போனது.

இதோ இந்த கொல்கத்தா மேம்பாலம் இடிந்து விழுந்துவிட்டது. அதற்கு சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தையும் அதன் வேலைகள் முறையாகவும் தரமாகவும் நடக்கிறதா என்று மேற்பார்வையிடாத அதிகாரிகளையும் துறை அமைச்சரையும் பொறுப்பாக்கி அவர்களையல்லவா கைதுசெய்து விசாரித்திருக்க வேண்டும்? நாலரை வருசமாய் ஆமைவேகத்தில் நடந்த வேலையை சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது என்றதும் விரட்டி முடிக்கச் சொன்னது ஆளுங்கட்சி என்றொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. எப்படியாவது தேர்தலுக்கு முன்பாக பாலத்தை திறந்து தனது சாதனையாக காட்டி ஓட்டு வாங்கும் ஆசையில், கலவை கெட்டித்து இறுகுவதற்குரிய கால அவகாசத்தை வழங்காமல் அவசரகதியில் வேலையைத் தொடர்ந்தது தான் விபத்துக்கு காரணம் என்று ஊடகங்கள் சொன்னதிலும் உண்மை இருக்கிறதுதானே? அவ்வளவு எதற்கு, பாலம் இடிந்தது மோசடியினால்தானேயன்றி கடவுளால் அல்ல என்று நாட்டின் பிரதமர் மோடியே சொல்லியிருக்கிறார். வாழ்நாளில் ஒரேயொரு முறையாவது உண்மையைப் பேசிவிட வேண்டும் என்கிற தவிப்பிலிருந்த மோடி இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட சாதுர்யத்தைக் கண்டு வியந்துபோன கடவுள், மோடி சொல்கிற பலவும் நம்பத்தகுந்தது இல்லை என்கிற உண்மை ஒருபுறம் வலுவாக இருந்தாலும் இந்த விசயத்தில் அவர் பொய் சொல்லவில்லை என்றே நினைத்துக்கொண்டார்.

இதற்கிடையில், கோட்டாவில் படித்துவிட்டு வருகிற என்ஜினியர்கள் பாலம் கட்டினால் அது இடியத்தானே செய்யும் என்று ஆன்டி - கோட்டா ஆசாமி ஒருத்தர் கருத்து சொல்லியிருந்ததையும் கடவுள் கவனிக்கத் தவறவில்லை. லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து கொல்லைப்புற வழியான மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கிற தத்திப்பிள்ளைகளைத் தான் அந்த ஆள் குற்றம் சாட்டுகிறாரோ என்று பார்த்தால் அதுதானில்லை. ஒருவேளை, வருஷத்துக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் பிடுங்கிக்கொண்டு அதிக மார்க் எடுக்கும் மோசடி நுணுக்கங்களை கற்றுத் தருகிற ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் படிக்கிறவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறாரா என்று பார்த்தால் அதுவுமில்லை. அந்தாள் இடஒதுக்கீடு என்கிற கோட்டாவில் படிக்கிறவர்களைத்தான் குற்றம் சாட்டுகிறார். நாட்டில் எது நடந்தாலும் இட ஒதுக்கீட்டை குறை சொல்லும் இவரைப் போன்ற குதர்க்கவாத கும்பல், இட ஒதுக்கீடு இல்லாமல் மெரீட்டில் படித்தவர்களால் ஏவப்படுகிற ராக்கெட்டுகள் வானில் பாயாமல் கடலுக்குள் விழுந்து முழுகுவது பற்றியோ இட ஒதுக்கீடே இல்லாத விளையாட்டுத்துறை ஈயம் பித்தளை பதக்கம் வாங்கக்கூட லாயக்கில்லாமல் கிடப்பது பற்றியோ வாய் திறப்பதில்லை என்பது கடவுளுக்கும் தெரிந்துதானிருந்தது. 

இவ்வாறாக பலதையும் யோசித்துக்கொண்டிருந்த கடவுளுக்கு, இந்த மனிதர்கள் அடுத்ததாக தன்னை என்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்கிற ஆர்வம் மூண்டது. மனிதர்கள் மனிதர்களுக்காக உருவாக்கிக் கொண்ட இந்த சட்டங்களும் காவல் நிலையங்களும் நீதிமன்றங்களும் கடவுளாகிய தன்னை என்ன செய்துவிட முடியும் என்று தோன்றியது அவருக்கு. ஆனால் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டுதான் அவர்கள் யாரையும் எதுவும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கடவுள் அறிந்தேயிருந்தார். மனிதர்களை கடவுள் சோதிப்பதாக இதுகாறும் சொல்லப்பட்டு வந்த கதைகளுக்கு மாறாக, கடவுளை மனிதர்கள் சோதிக்கிற இந்தச் சூழலை நினைத்து இகழ்ச்சியாக சிரித்துக் கொண்ட கடவுளுக்கு, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று சொல்வதிலுள்ள அபத்தம் புரிந்தது. மனிதர்களைப் பற்றி சுருள்சுருளாக எழுந்த இப்படியான யோசனைகளால் கடவுளுக்கு அலுப்பு தட்டியது. எனவே, தன்னைப் போலவே கைது செய்யப்பட்டு இழுத்து வரப்பட்டவர்களை நாடு முழுவதுமுள்ள பல்வேறு காவல் நிலையங்கள் எவ்வாறு நடத்துகின்றன என்பதை தனது ஞானதிருஷ்டியால் காணத் தொடங்கினார். 

உள்ளாடைகூட களையப்பட்டிருப்பது பற்றிய நினைவே இல்லாமல் ஒரு காவல் நிலையத்தின் மூலையொன்றில் பலர் மயங்கிச் சரிந்துக் கிடந்தார்கள். ‘உரியமுறையில்’ விசாரித்ததில் கைகால் முறிக்கப்பட்ட சிலர் நகரக்கூட முடியாமலிருந்தார்கள். இன்னொரு காவல் நிலையத்தில், லாடம் கட்டப்பட்ட ஒருவரது உள்ளங்காலிலிருந்து ரத்தம் பயந்து பயந்து கசிந்துகொண்டிருந்தது. இரும்புக்குறடு கொண்டு நகம் பிடுங்கப்பட்ட ஓரிருவரது அலறல் மிச்சமிருந்தவர்களுக்கும் கிலியூட்டுவதாக இருந்தது. ரத்தம் பீறிடும் காயங்களிலும் கண்களிலும் மிளகாய்த்தூள் தூவப்பட்ட சிலர் கதறுவதை சுற்றிலுமிருந்து ரசிக்கும் வழக்கத்தை பெரும்பாலான காவலர்களிடம் காணமுடிந்தது. எந்தக் காவல் நிலையம் என்று தெரியாத ஒன்றில், இருள் கவிந்த கொட்டிலுக்குள் வைத்து நான்கைந்து காவலர்களால் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணொருத்தி ரத்தம் வழிந்தோடும் பிறப்புறுப்பை மூடுவதற்குக்கூட பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்தாள். மார்க்காம்பில் ஒயரைச் சுற்றி மின்சாரம் பாய்ச்சப்பட்டு உடல் கருகிய யாரோ ஒரு சீவன் குற்றுயிராய் அரற்றிக் கிடந்தது. ஏதோவொரு மலைப்பகுதியின் காவல் நிலையத்திற்குள் பனிப்பாளத்தின் மீது படுக்க வைக்கப்பட்ட ஓருடல் விரைத்துக்கிடந்தது. குப்புறக் கிடந்த ஒருவரின் குதத்திலிருந்து ரத்தம் வழிந்து காய்ந்திருந்தது. தன்னையும் இப்படி லத்தியைச் சொருகி சித்திரவதை செய்வார்களோ என்று நினைக்கும் போதே கடவுளுக்கு உடல் நடுக்கம் கண்டது. தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தில் முணகியவர்களின் வாயில் காவலர் ஒருவர் நிதானமாக மூத்திரம் பெய்ததைக் கண்ட கடவுளின் நாவில் உப்புக்கரித்தது. என்கவுண்டர் என்கிற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் ரத்தம் எந்தவொரு காவல் நிலையத்தின் வளாகத்திலும் அங்கிங்கெனாதபடி எங்கும் தெறித்துக் கிடந்தது. ஆமாம், ரத்தம் ரத்தம் ரத்தம்... ஈர ரத்தம், காய்ந்த ரத்தம், கசியும் ரத்தம்... காவல் நிலையத்தின் சுவரிலிருக்கும் செந்நிறம் ரத்தத்தால்தான் பூசப்பட்டிருக்கிறதோ என்கிற குழப்பம் பீடித்தது கடவுளை. பாதாளலோகம் என்று சொல்லப்படுகிற நரகத்தில் பாவிகளுக்கு வழங்கப்படும் அத்தனை தண்டனைகளும் விசாரணைக்கு முன்பாகவே வழங்கப்படும் இடமாக இருந்த இந்த பூலோக காவல் நிலையங்களைக் கண்ட கடவுளுக்கு லேசாக உதறலெடுக்க ஆரம்பித்தது. கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரை எங்காவது இருக்கிறதா என்று அவரது கண்கள் துழாவின.

பொதுச்சொத்தை சேதப்படுத்தி, தேர்தல் நேரத்தில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த சதிமுயற்சியில் யாரெல்லாம் உடந்தை? என்கிற ரீதியில்தான் கடவுளிடம் விசாரணையைத் தொடங்கினார் காவல் ஆய்வாளர் ஒருவர். தானே சம்பந்தப்படாத குற்றம் ஒன்றில் தனக்கு உடந்தையாக யாரும் இருந்தார்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்தார் கடவுள். அப்பாவி போல முழித்தால் விட்டுவிடுவோம் என்று நினைக்கவேண்டாம். ஒழுங்கு மரியாதையாக உண்மையைச் சொல்லிவிட்டாலோ அப்ரூவராக மாறிவிட்டாலோ நல்லது. இன்னும் என்னென்ன சதிவேலைகளுக்கு திட்டமிட்டிருந்தீங்க? சர்வதேச பயங்கரவாத அமைப்பு எதனுடனாவது தொடர்பு உண்டா? என்று அடுக்கடுக்காக அந்த ஆய்வாளர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்த போதே அவரைவிடவும் பெரிய அதிகாரிகள் குழாம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. ‘யோவ், யாரை எப்படி விசாரிப்பது என்று விவஸ்தை வேண்டாமா? எல்லாத்தையும் நிறுத்திட்டு இங்க வாய்யா... மேலிடத்திலிருந்து முக்கியமான தகவல் வந்திருக்கு...’ என்று பெரிய அதிகாரிகளில் ஒருவர் சத்தம் போட்டதும் ஆய்வாளர் அடக்கஒடுக்கமாகிவிட்டார். அப்பாடா, இப்போதைக்கு தப்பித்தோம் என்று ஆசுவாசமடைந்தார் கடவுள். மற்ற பல கைதிகளும் அலுப்பிலும் வலியிலும் தூக்கத்தில் மயங்கிக்கிடந்தனர். பசியும் உறக்கமும் அற்றவரான கடவுளோ  அதிகாரிகளின் முடிவுக்காக காத்திருந்தார்.

மேலிடத்தின் ஆலோசனைப்படி இந்த விசாரணையை  எந்தக் கோணத்தில் கொண்டு செல்வது என்று தனி அறை ஒன்றில் கூடி விவாதித்த அதிகாரிகள் நெடுநேரத்துக்குப் பிறகே வெளியே வந்தார்கள். அவர்கள் என்ன முடிவெடுத்திருப்பார்களோ என்கிற பதைப்பில் இருந்த கடவுள் வரம் கேட்டு காத்திருக்கும் பக்தரைப்போல அவர்களது முகத்தையே பார்த்தபடி இருந்தார். அவர்களோ இவரிடம் எதுவும் பேசாமல் பக்கத்து மாநிலங்களின் போலிசிடமும் மத்திய புலனாய்வுத்துறையான சிபிஐயிடமும் அண்டை நாடுகளின் அரசாங்கங்களுடனும் இன்டர்போல், சிஐஏ, எப்.பி.ஐ என்று  யார்யாரிடமோ குசுகுசுவென பேசிக் கொண்டேயிருந்தார்கள். 

நேரம் நள்ளிரவைக் கடக்கும் வேளையில் காவல் நிலையத்திற்கு வெளியே திடுமென கூச்சலும் ஆரவாரமும்  பிரார்த்தனைப் பாடல்களும் ஒலிக்கத் தொடங்கியது. தாங்கள் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்த கடவுள் சிக்கிக்கொண்டதாக எப்படியோ கசிந்த செய்தியால் உந்தப்பட்டு உலகெங்குமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் அந்த காவல் நிலையத்திற்கு முன்பாக திரளத் தொடங்கியிருந்தனர்.  நேரம் ஆகஆக அங்கு பக்தியும் பரவசமும் உக்கிரமாகி உச்சத்தைத் தொட்டன. கட்டுக்கடங்காத கூட்டம் காவல் நிலையத்தின் மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழையும் அபாயக் கட்டத்தை எட்டியது. நிலைமையின் தீவிரத்தை ஒருவாறு யூகிக்க முடிந்த அதிகாரிகள் குழுவின் தலைவர் கடவுளிடம் வந்து ‘இவ்வளவு பேரும் என்னென்ன வேண்டுதல்களோடு இங்கு வந்து தொலைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இவர்களிடம் சிக்கினால் உங்கள் கதி அதோகதி தான். ஆளுக்கொரு இணுக்காக உங்களை பிய்த்தெடுத்து விடுவார்கள்...’ என்கிற பீதியூட்டும் செய்தியைச் சொன்னார். ‘இங்கிருந்து நீங்கள் தப்பித்து தலைமறைவாகி விடுவதை தவிர உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லை என்று மேலிடம் கருதுகிறது’ என்றார் அந்த அதிகாரி. ‘உங்களது அரசாங்கத்தின் முடிவு எனக்கு அனுகூலமானதுதான். இருந்தாலும் 26 பேருடைய சாவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்னை தப்பிச் செல்லுமாறு உங்கள் அரசாங்கம் சொல்வது எனக்கு  வியப்பாக இருக்கிறது...’ என்றார் கடவுள். கடவுளின் பதிலால் எரிச்சலடைந்த போன அதிகாரி ‘உன்னையெல்லாம் பிடிச்சதும் என்கவுன்டர்ல போட்டுத்தள்ளியிருக்கணும். கடவுள்னு கொஞ்சம் கருணை காட்டினது தப்பா போச்சு...’ என்று மனதுக்குள் கறுவியதை அறிந்த கடவுள், வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் என்கிற சுதாரிப்பில் அமைதியானார்.

‘நீங்கள் கடவுள் என்பதால் பயத்திலோ பக்தியிலோ உங்களை நாங்கள் தப்பிக்க வைக்கவில்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் கெடுதல் செய்கிறவர்களையெல்லாம் தப்பிக்க வைக்கிற நீண்ட பாரம்பரியம் கொண்ட எங்களது அரசாங்கத்தின் கொள்கைப்படியே உங்களையும் தப்பிக்க வைக்கிறோம்.  யூனியன் கார்பைடு வாரன் ஆண்டர்சன், லலித் மோடி, விஜய மல்லையா போல நீங்களும் விரும்பும் நாட்டுக்கோ வேறு லோகத்துக்கோ தப்பிச் செல்ல உதவ வேண்டியது எங்களது பொறுப்பு’ என்று தலைமை அதிகாரி சொன்னதை மிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொண்டார் கடவுள். தான் பயந்தது போலில்லாமல் விசாரணை இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வந்து தான் விடுவிக்கப்பட்டது குறித்து நிம்மதியடைந்தார் கடவுள். காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் தயார்நிலையில் காத்திருந்த தனது புஷ்பக விமானத்தில் ஏறி தப்பிப்போகும் கடவுளைக் கண்ட பக்தர்கள் ‘இந்த மட்டிலாவது தரிசனம் கிடைத்ததே’ என்று பரவசமடைந்தார்கள்.

***

கொல்கத்தா பாலத்தை இடித்த சதிவழக்கில் சிக்கிக்கொண்ட கடவுளிடம் போலிசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தப்பிக்க விடுவதற்கு கடவுளிடம் கையூட்டாகப் பெற்ற வரங்கள் பற்றிய விவரத்தை வெளியிடக் கோரி எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பழி போடுவதற்கு ஆள் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் அடுத்த மேம்பாலத்தை இன்னமும் மோசமான தரத்தில் கட்டுவதற்கு உற்சாகமாக தயாராகிக் கொண்டிருந்தார் கட்டுமான ஒப்பந்ததாரர். துப்பு துலக்க முடியாத மர்மங்களோடு உலகெங்கும் நிலுவையில் கிடந்த விபத்துகள் சதிச்செயல்கள் மற்றும் கலவரங்களில் தன்னைத் தானே முதன்மைக் குற்றவாளியாக அறிவித்துக்கொண்டு கடவுள் கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றங்கள் அவற்றோடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்தன. தப்பிக்க விடுவதற்கு பிரதியுபகாரமாக ஆட்டோகிராப் போட்டுத்தாருங்கள் என்று நூற்றுக்கணக்கான வெற்றுத்தாள்களில் தன்னிடம் வாங்கிய கையொப்பத்தை இன்னும் என்னென்ன மோசடிகளுக்கு இந்தக் காவலதிகாரிகள்  பயன்படுத்தப் போகிறார்களோ என்கிற அச்சத்தில் கல்லாய் உறையத் தொடங்கினார் கடவுள். காற்றாகி கரைந்து காணாமல் போய்விட்டாரென்றும் தகவல்.

19.04.2016
" நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்" தொகுப்பிலிருந்து...



ஞாயிறு, பிப்ரவரி 3

கடவுளுக்குத் தெரியாதவர்கள் - ஆதவன் தீட்சண்யா



கோபாலின் கேசட்டை நேற்றிரவுதான் பார்க்க முடிந்தது. கைக்கு வந்தும் ஒருவார கால  தாமதத்திற்கான நியாயத்தை ஒப்புக்கொள்வான் என்றாலும் உடனடியாக எனது அபிப்ராயத்தை அறிவதிலான ஆர்வம் மிகக் கொண்டிருந்தான். அவனது படங்களை பார்ப்பதற்கானதொரு மனநிலை பிரத்யேகமானது. ஆனால் அவன் இதை வலுவில் மறுப்பவன். படமென்பதாலேயே அதற்கொரு விசேஷ மரியாதை கொடுக்கும் மனப்பாங்கிலிருந்து பிறக்கிறது இப்பிரமை என்பான். அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாக பல்வேறு விருதுகள்.

விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகிவிடுவதாகச் சலிப்புறுவான். முற்றாக நிராகரித்தான் நாசூக்கு கனவான்களது கிளப்புகளின் அழைப்புகளை. மினரல் வாட்டர் சகிதம் வந்து கதைக்கும் மேனாமினுக்கிகளால், 22 கிலோமீட்டர் நீளம் விற்கப்பட்ட தங்களின் சியோநாத் நதியை மீட்க ஜலசமாதி போராட்டம் நடத்தும் சட்டீஸ்கர் மக்களைப் பற்றிய தனது படத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்பதே அவனது கேள்வி.

யாதொரு கருத்தின் மீதும் சார்புநிலை எடுப்பதில்லை அவன்.  நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறக்கமுடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளரை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத் விரயும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றுக்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும், கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத்தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப்போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமைவிரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுவதிலுமே ரகசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப்பேருக்கு புரிந்ததெனத் தெரியவில்லை.

கிராமத்து முரடனொருவனின் மனச்சட்டகம் வழியேயான சித்தரிப்பே அவனது படங்களென்ற குற்றச்சாட்டிற்கும் நேரடியானதில்லை அவன் பதில். ஆனால் அந்தோனியா கிராம்சியைப் பற்றிய ஒசூர் கூட்டத்தில் அவன் பேசியது இதை மனதில் கொண்டே என்றனர் பலரும். எவரொருவரும் ஏதேனுமொரு சட்டகத்திற்குள்ளிருந்தே காண்கிறார் உலகையென்றும் அது அவரவர் சுயத்தேர்வாய் மேலுக்குத் தெரிந்தாலும் நுண்முக வழிகளில் சமூகத்தால் திணிக்கப்படதே அதுவென்றும், ஏன் எதற்காக எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தக் கலை இலக்கியவாதிகள் படைப்பு வழியே துணிய வேண்டும் என்பதுமே பேச்சின் சாரம். அப்படியானால் நீயொரு கம்யூனிஸ்டா என்றதற்கு ஏன் எப்போதும் ஏதேனுமொரு முத்திரையைக் குத்தத் துடிக்கிறீர்கள் என்றான்.

இத்தனை படங்கள் வெளியாகியும், தொடங்கி முற்றுப் பெறாதிருக்கும் ‘வாதை’ என்கிற படமே அவனுள் கொந்தளிக்கிறது இன்னமும். அதை முடித்தப் பிறகே அடுத்து செய்வதென்ற கிடக்கை நிறைவேறவேயில்லை. உண்மையில் அப்படத்தை மிகத் தீவிரமாக லயித்து முயன்றான். இன்றளவும் ஆவேசம் வைத்திருக்கிறான். தேவையான தரவுகள் முழுதாகத் திரளும் முன்பே களமிறங்கிவிட்டதாக ஒரு கட்டத்தில் கருதியதும்கூட மேற்கொண்டு நகர முடியாமல் போனதற்குக் காரணம்.

ஐசன்ஸ்டீனின் மான்டேஜ் உத்தியையும் ஆனந்த் பட்வர்த்தனின் விவரண பாணியையும் இழைவானதொரு புள்ளியில் குழைத்துக் கையாண்டிருந்தான் வாதையில். புதுதில்லி நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தின் ஆய்வாளர் உமா சக்ரவர்த்தி, சோஷியல் சயன்டிஸ்டில் எழுதியிருந்த Socical Pariahs and Domestic Drudges: Widowhood Among Ninteenth Century Poona Brahmins  என்ற கட்டுரையில் விவாதிக்கப்படும் ஒரு விதவையின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டதே வாதை. இதன்பொருட்டு ஆதாரச்சேர்க்கையாகச் சொல்லப்பட்டிருந்த புத்தகங்களை ஆழ்ந்து வாசித்தான். படப்பிடிப்பை அந்தக் கிராமத்திலேயே நடத்தும் முடிவு ஒருவகையில் சரிதான். நேர்மையானதும் கூட. ஆனால் தமது சொந்த வரலாற்றின் கோரமுகத்தை மறைத்துத் திரிய விரும்பும் சில அமைப்பினரின் மிரட்டலால் பொருத்தமான மாற்றிடத்தில் படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது.

***

செம்புழுதி படியும் கற்சாலையொன்றில் தளர்ந்து உருள்கிறது குதிரைவண்டி. யாருமற்று உளையும் அனாதையைப்போல வண்டியின் அடிப்பாகத்தில் கருமையும் எண்ணெய்ப்பிசுக்கும் படிந்த லாந்தர் விளக்கொன்று முன்னும் பின்னும் அள்ளையிலுமாய் அசைகிறது மெல்ல. இரவெல்லாம் எரிந்த களைப்பு அதில் படிந்துவிட்டதைப்போல் தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்று மெதுவாகச் சொல்லுகிறான் வண்டிக்காரன் மராட்டியில்.

அடர்ந்த மரங்களூடே தெரியும் காரை பெயர்ந்து பாசி படர்ந்த கட்டிடம் ஒன்றின் வாயிலிலேயே வண்டி நிற்கிறது. மசகிடாத அச்சாணியில் இயைபற்றுச் சுழலும் சக்கரத்தின் வினோதவொலியில் கலவரமுற்ற பறவைகள் படபடத்து இரைகின்றன. வண்டிக்குள்ளிருந்து இறங்குவது யாரென்று முகம் காட்டுவதில்லை. குழம்பலாய்த் தோள்பட்டை மீது விழப் பார்த்த எச்சத்திற்குத் தப்பி லாவகமாய் விலகும் ஒருவரைப் பின்தொடர்கின்றனர் மற்றாரும். வர்ணம் உதிர்ந்து துருவேறிய பெயர்ப்பலகையில் மிச்சமிருக்கும் எழுத்துகள் அதன் நெடிய இருப்பையும் வரலாற்றையும் உணர்த்துவதாயிருக்கின்றன. 1900களின் துவக்கத்தில் சீர்திருத்தவாதி D.K.கார்வே அவர்கள் பூனாவில் நடத்திய விதவைகள் மற்றும் அனாதைப்பெண்கள் இல்லத்தில் தங்கி கல்வி பெற்ற விதவையொருவர் அதேரீதியில் இங்கு 1924ல் துவக்கிய இல்லம் இது.

காந்திஜியும் கஸ்தூரிபாயும் ஒருமுறை விஜயம் செய்தபோது எடுத்த புகைப்படம் சம்பங்கி மலரால் சூட்டப்பட்ட மாலைக்கிடையே பழுப்பேறித் தொங்குகிறது முகப்புக்கூடத்தில். புகைப்படத்தில் காந்திஜியின் வலப்புறமுள்ள பெண்ணொருத்தி நீண்ட கூந்தலோடு இருப்பது காட்டப்படுகிறது- குளோஸ்அப் காட்சியாக. ஆத்மார்த்த உரையாடலுக்காகத் தென்புறத்தே பச்சை மூடாக்காய்ப் படர்ந்து துலங்கும் மரங்களினடியில் விரிசலோடிய சிமெண்ட் பெஞ்சுகள். அவற்றின் மையத்தில்  சிதைபாடுற்ற தலையுடன் பெண்ணொருத்தியின் சிலை. தானே தன்னைச் செதுக்கிக் கொள்கிற கவனமும் துயரமும் கலந்திருக்கிறது அதன் வடிப்பில். தலையோடு இருந்திருக்குமானால் அதன் முகத்தில் பீறிப் பிரவகித்திருக்கக்கூடிய உணர்வுகள் இப்போதுமே அவ்வெளியெங்கும் ததும்பிப் பாய்கிறது பின்னணி இசையால்.

மத ஆச்சாரங்களையும் நடைமுறைகளையும் நிர்மூலமாக்கி வீடுகளைத் துறந்து வெளியேறி வருமாறு விதவைகளைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி, சனாதனக் கும்பலொன்று இவ்வில்லத்தைத் தாக்கியபோது சிலையின் தலையை உடைத்தனராம் ஆத்திரத்தில். சிலையேயாகினும் கூந்தல் புரளும் ஒரு விதவையின் கோலத்தை மத அனுஷ்டானங்களில் நம்பிக்கையுடையோரால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரிக்கவே இத்தாக்குதலை நடத்தியதாக நாக்பூரிலிருந்து மதவெறி அமைப்பொன்றின் தலைமையகம் அப்போது பெருமிதத்தோடு வெளியிட்ட அறிக்கையின் நகல் திரைமுழுக்க காட்டப்படும்போது, அதே அமைப்பினர் இப்போது கான்பூரிலும் மீரட்டிலும் நரோடாபாட்டியாவிலும் பிற பெரு நகரங்களிலும் செய்கிற அராஜகங்கள் கச்சிதமாக இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தக்காட்சியிலேயே ஆப்கனில் பர்தா அணியாமல் பொதுஇடத்தில் நடமாடிய பெண்ணைக் கசையாலடித்துத் தண்டிக்கின்றனர் தாலிபான்கள்.

இப்போது இதுகுறித்துப் பெண்ணியவாதிகள், மனிதஉரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் பேட்டி. ‘இடுப்புக்கு மேல் எதையும் உடுத்தக்கூடாது என்றார்கள் முன்பு... இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்றார்கள் அப்புறம்... இன்னின்னது தான் உடுப்பு, இப்படியிருப்பது தான் அலங்காரமென்று கட்டுப்படுத்தும் அதிகாரத்தை எந்தக் கடவுளும் இவர்களுக்கு வழங்கவில்லை. ஏனென்றால் கடவுளுக்கு இவர்களைத் தெரியாது...’ என்றொரு ஆன்மீகவாதி சாடுவது திகைப்பான அனுபவம். பெண்களை உடல் மற்றும் மனரீதியில் சிதைத்துச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதிலேயே  தங்களது புனிதம் காப்பாற்றப்படுவதாகக் காலகாலமாய் எல்லா மதங்களும் செயல்படுகின்றன. இந்த விசயத்தில் எல்லா மதங்களுக்கிடையேயும் வெட்கங்கெட்ட ஒறுறமை நிலவுவதாக The Otherside of Silence நூலாசிரியர் ஊர்வசி புட்டாலியா காட்டமாகத் தெரிவிக்கும்போது பின்னணியில் முன்சொன்ன காட்சிகளனைத்தும் வெளிர் வண்ணமாக ஓடுகின்றன.

ஒரு மடாதிபதியிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது. எடுத்தயெடுப்பிலேயே இதை வன்முறையென்று குறிப்பிடுவதைக் கண்டித்து மறுக்கிறார். ‘தன் தூய்மையைப் பாதுகாக்க நினைக்கும் ஒரு சாதி அதற்காக சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வதை நீங்கள் எப்படி தப்பென்று குற்றம் சாட்ட முடியும்.? பொம்மனாட்டிகள் எவ்வாறிருக்க வேண்டுமென்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவோ அதை மறுதலிக்கும் கலக மனப்பாங்கைப் பரப்பிப் பெண்களைச் சீரழிக்க வேண்டுமென்று சிலர் கங்கணங்கட்டி அலைகிறார்கள். கர்ப்பப்பையைக் கத்தரித்து நீக்கிக்கொள்ள வேண்டுமென்று கருஞ்சட்டை நாய்க்கன் தூண்டுவதற்கு அர்த்தமென்ன? அவிசாரித்தனம் செய்தாலும் அதை வெளியே தெரியாமல் மறைத்துவிடலாம் என்பதுதானே...?’ என்று சீறுகிறார்.

‘நீங்கள் குற்றஞ்சாட்டும் நோக்கில் தந்தை பெரியார் அதைச் செய்யவில்லை. குழந்தை பெறுகிற இயற்கைத்தளையைத் தாய்மையுணர்ச்சியெனத் தரித்துக் கொள்வதாலேயே, கர்ப்பம் தரிப்பது, குழந்தை பெறுவது, வளர்ப்பது என்று வெளியுலகமே அறியாமல் குடும்பம் என்ற அமைப்புக்குள்  பெண் சிக்கிக் கொள்கிறாள். உடல், மனரீதியான கவனம் முழுவதையும் இதிலேயே செலுத்த வேண்டியிருப்பதால் தன் ஆளுமை எதையுமே வெளிப்படுத்தாமல் ஒடுங்கிப் போகிறாள் என்கிற ஆதங்கத்திலிருந்துதான் கர்ப்பப்பையை வெட்டியெறிந்து விட வேண்டுமென்று பெண்களுக்கு அழைப்புவிடுத்தார் பெரியார்...’ என்று பேட்டியெடுப்பவர் விவரிக்கிறார். ‘‘சரிசரி போங்கோ... மடத்தை நாஸ்திகப் பிரச்சார மேடைன்னு நினைச்சுட்டீங்களா... தந்தை...ப்.. பெரியாராம்...’’ என்று இளக்காரத்தொனியில் மடாதிபதி சொன்னதும், ‘இந்தத் தகுதியும் சிறப்பும் உறவும் மக்களின் அன்பிலிருந்து பிறந்தது... ஒரு சாதிச்சங்கத் தலைவராக இருந்துகொண்டு உங்களை நீங்களே லோககுருன்னு கூப்பிட்டுக்கொள்வதைப் போன்றதல்ல...’’ என்று கோபத்தோடு பேட்டியெடுப்பவர் வெளியேறுகிறார்.

இப்போது படம் திரும்புகிறது மீண்டும் இந்த இல்லத்திற்கே. கடந்துவந்த அவலத்திற்கும் சாத்வீகம் மொழிகிற சனாதனியரின் கொடிய சுயரூபத்திற்கும் சாட்சியாக அச்சிலை அவ்வண்ணமே தலையும் முகமுமற்று முண்டமாய் இருப்பதுதான் பொருத்தமெனக் கருதி அவ்வாறே விட்டுவிட்டதாக இன்றைய நிர்வாகி விவரிக்கிறார். ஒவ்வொருவரும் எத்தகு இழிவேறி இங்கே தப்பிப் பாய்ந்து தஞ்சம் புகுந்தனரென்று அறிமுகமளிக்கிறார். அனாதைகள் ஓரிருவர், விதவைகளும் அவர்களில் சிலரின் குழந்தைகளுமே மிகுதியாயிருந்தனர்.

இல்லத்தின் ஏற்பாட்டில் பயின்று உத்தியோகஸ்தர்களாகியோரும் இங்கிருந்து மறுமணம் பூண்டு நல்ல நிலையிலிருக்கும் சிலரும் தருகிற நன்கொடையாலும் வளாகத்தின் தொழிற்கூடத்தில் முனையும் கைவினைப்பொருட்கள் விற்பனையாலும் இல்லத்தின் தேவைகள் பூர்த்தியடைவதாய்த் தெரிவிக்கும் நிர்வாகி, இவ்வளவு தன்னம்பிக்கையோடு தாம் இயங்குவதற்கு அடிகோலிய மூத்த தலைமுறையினரில் எஞ்சியிருக்கும் ஒருவரை அறிமுகப்படுத்த அழைத்துச்செல்கிறார்.

‘ஆனந்தியம்மா... ஆனந்தியம்மா..’ விளித்தும் அசைவில்லை பிரக்ஞையற்று படுக்கையிலிருக்கும் மூதாட்டியிடம். உயிரின் இருப்பையே சந்தேகிக்குமளவு மௌனம். நாலைந்து நாட்களாய்  நீடிக்கும் இக்கதியால், இரண்டொருநாட்கள் தாங்குவதே கஷ்டமென்று மருத்துவர் கைவிரித்துவிட்டதைத் துயரம் பொங்க சொல்கிறார் நிர்வாகி. இவ்விடத்திலிருந்து படம் இல்லம் விட்டு விலகி ஆனந்தியம்மாவின் கதையாகிச் சுழிகிறது.

ஆனந்தியம்மாவுடைய டைரியின் பழுப்புத்தாள்கள் படபடக்கின்றன திரைப்பரப்பில். மராத்தியில் எழுதப்பட்டிருப்பதன் தமிழாக்கம் சப்-டைட்டிலாக வருகிறது. இதுவரையிலும் நேரடிப்பதிவாக ஆவணத்தன்மையில் விரியும் காட்சி, பின்னிறுதியில் கதைப்படத்தன்மைக்கு மாறி முடிவில் நிஜத்தின் கொடூரத்தை முன்னிறுத்தி முடிகிறது.

மழிபடும் கேசக்கற்றைகளின் கருமை சூழ்ந்து நீளும் கரைகளுக்கிடையில் தேம்பியோடிக் கொண்டிருக்கிறது ஆறு. இருமருங்கும் தென்னஞ்சோலையில் வனைந்த சாலைகள். நன்கு அடுப்பில் புழங்கிய பானைகளைக் கவிழ்த்து வைத்து மண்டியிருக்கும் கரியைச் சாணை மழுங்கிய கத்தி கொண்டு சுரண்டிப் பழகிக்கொண்டிருக்கின்றனர் நாவிதச்சிறார்கள். மழிப்பதில் சற்றே கைவாகு பெற்றவர்கள் ஆற்றுக்கு வரும் கொடித்தடங்களில் கண்வைத்துக் காத்திருக்கின்றனர். சிறுமிகள், இளம் பிராயத்தார், நடுவயதுப் பெண்கள் என விதிவிலக்கின்றி இழுத்துவரப்படுகின்றனர் அண்டை அயல் கிராமங்களிலிருந்து "வேண்டாம்... வேண்டாம்... விட்டுவிடுங்கள்... நான் யாரையும் பார்க்கமாட்டேன்... எந்த ஆளோடும் பேசமாட்டேன்... பூ வேண்டாம்... பொட்டு வேண்டாம்... அடுப்படியே போதும்... அங்கேயே முடங்கிக் கொள்கிறேன்... யார் முன்னாலும் வரமாட்டேன்... வேண்டாம்... வேண்டாம்... என்னை அலங்கோலப்படுத்த வேண்டாம். அண்ணா நீயாவது சொல்லேன்... அக்கா... அம்மா... பாட்டி.. யாராவது தடுங்களேன்..." பயனற்ற வார்த்தைகளாகிக் காற்றில் வீணே கரைகிறது ஓலம். வேறுமொழியில் அவர்கள் கதறினாலும் வேதனை வந்து கவ்வியழிக்கிறது நம்மை.

தென்மராட்டியத்தின் புனிதத்தலங்களில் ஒன்றெனும் நரசிங்கவாடி கிராமத்தின் ஆற்றங்கரையே அது. இழுத்துவரப்பட்டவர்களில் ஒருத்தியான ஆனந்திபாய்க்குப் பலவந்தமாய் மொட்டையடிக்கப்படுகிறது. சுருண்டு சுருண்டு விழும் தனது கேசத்தை அள்ளியெடுத்து முத்தமிடுகிறாள். மாரடித்து வீறிடுகிறாள். வெற்றிகொண்ட குரூரத் திருப்தியில் ஓடுஓடு என்று வீட்டுக்கு விரட்டுகிறது ஆண்கள் வட்டம். சுமங்கலிப்பெண்களும் இணைந்து கொள்கிறார்கள் அவர்களோடு. உடைக்கப்பட்ட வளையல் துண்டொன்று கிழித்து மணிக்கட்டில் ரத்தம் பெருகிய கணத்தில் அடி வயிற்றிலிருந்தும் திரண்டு பாய்கிறது. இதுவரை அவள் அறிந்திராத புதுரத்தம். உயிரே உருகி வழிகிறது உதிரமாக. மனத்தின் வலிமைமீறி உடலின் வலியும் துயரும் சுருட்டி வீழ்த்துகிறது அவளை. இனி எத்தகைய பாதையில் அவளது பயணம் என்பதை சூசகமாய்ச் சொல்வதைப் போல ஆரஞ்சுத்தோப்புக்குள் அவள் மருண்டோடிய வழிநெடுக காயாத ரத்தம் மினுங்குகிறது பீடையின் கண்ணாக.

விலக்குற்ற பெண்களுக்கான ஒதுக்கத்தில் முடங்கத் தொடங்குகிறது வாழ்க்கை. இதேபோன்று பலவந்தமாய் மொட்டையடித்துத் தான் உருக்குலைக்கப்பட்டதை எண்ணித் துயருற்ற சிறுமியொருத்தி உணவெதையும் ஏற்க மறுத்துக் கடைசியில் செத்தே போய்விட்டாள் கடந்த வாரம் என்பதால் கண்காணிப்பு கூடுதலாயிருந்தது. ருதுவாகும் கணத்தில் பலி கேட்குமளவு தோஷம் மிக்கவளாய் இருந்ததாலேயே கணவன் இறக்க நேரிட்டது என்ற ஜோதிடப் பழியால் கூடுதலாயிருந்தன பரிகாரச் சடங்குகள். ஒன்பதாம் நாள்  தீட்டு கழித்தப் பிறகு கொட்டில் போன்று இருள் கவிந்த அறையொன்றில் நிரந்தர வாசகத்திற்காக விரட்டப்படுகிறாள். இருளைத் தவிரத் துணையாய் இங்கு எதுவுமேயில்லை.

இந்த அறையில்தானே அத்தை செத்தும் அடைந்துகிடந்தாள் என்று முணுமுணுக்கத் தொடங்கும்போது அத்தை பற்றிய காட்சிகள் ஃப்ளாஷ் பேக்காக அல்லாமல் துண்டு துண்டான கனவைப் போல் வந்துபோகின்றன... வாளிப்பின் ஒளியில் அவள் ஜொலிக்கும் காலத்தில் கணவன் இறந்து போனான். இரவு முழுவதும் தொல்லையூட்டும் அந்தக் கிழட்டுச் சனியன் ஒழிந்ததென்று அரும்பிய நிம்மதி வெகுகாலம் நீடிக்கவில்லை. ஒருநாள் தலையை மழித்துக்கொள்ளாவிட்டாலும் உலகமே அழிந்துவிடும் என்பதுபோல் கொதிக்கும் கணவனின் சகோதரர்கள் மூவருமே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவளை வேட்டையாடவே துடித்தனர். வீட்டுப்பெண்கள் அவளது முறையீட்டைப் பொருட்படுத்தவேயில்லை. ஒரு முண்டச்சி இது குறித்தெல்லாம் புகார் சொல்லக்கூடாது என்றனர். அவர்களைப் பொறுத்தவரை வெளியிலே போய் தாசிகளுக்குச் செலவழிப்பது இனி மிச்சமாகும் என்பது கூடுதல் சந்தோஷமாயிருந்தது. அத்தை விரும்பியிருக்கும் பட்சத்தில் இப்படியான தொடர்புகளைப் பேணிக்கொள்வது சாத்தியம்தான்.

இப்படியான கள்ளத்தொடர்புகள் வழியாக உருவாகிவிடக்கூடிய கர்ப்பத்தைத் தடுப்பதற்கும் கலைப்பதற்கும் வாழைப்பழத்தில் கற்பூரம் வைத்து விழுங்குவது உள்ளிட்ட பல்வேறு உபாயங்களை அறிந்துவைத்திருந்தனர் பெண்கள். கலைக்க முடியாத நிலையில் இதே அக்ரஹாரத்து விதவைகள் இருவரை சாதிப்பிரதிஷ்டம் செய்து அனாதையாக விரட்டியடித்தனர். இப்படிப்பட்ட பிராமண விதவைகளுக்காகவும் அவர்களது குழந்தைகளுக்காகவும் மகாத்மா ஜோதிராவ் பூலே நடத்திவந்த பாதுகாப்பு இல்லத்தில்தான் அவர்கள் அடைக்கலம் புக வேண்டியிருந்தது. செத்துப்போன சகோதரனின் வாரிசாக மிஞ்சியதால் குடும்பச்சொத்தில் பங்கு தருவதைத் தவிர்ப்பதற்காகவே அவிசாரிப் பட்டம் கட்டித் துரத்தியடிக்கப்பட்டவர்களும் கூட அதிலிருந்தனர்.

கர்ப்பம் தரிக்கும் முன்பே அத்தை விதவையாகி வந்தது குறித்து குடும்பத்தாருக்கு அளவற்ற மகிழ்ச்சி. இல்லையானால் அவனை மட்டுமல்லாது குழந்தையையும் பராமரிக்க ஆகும் செலவை யார் ஈடு கட்டுவது? என்னதான் அவள் இந்த வீட்டின் செல்லப்பெண்ணாய் இருந்திருந்தாலும் அதற்காக ஒரு அமங்கலியைக் கொஞ்ச முடியுமா...? கொழுந்தன்களிடமிருந்து தப்பிப் பிறந்தகத்திற்கு வந்து சேர்ந்தபோது ஆண்களின் தொல்லையைத் தவிர மற்றெல்லா நியமங்களையும் ஒழுக வேண்டியவர்களாகவே இருந்தாள் அத்தை.

ருசியான சாப்பாடு உடம்பிலும் மனசிலும் ஒரு விதவைக்கு எவ்வகையிலும் தேவையற்ற மதர்ப்பை உருவாக்கிவிடுமானால் அதன் விளைவு தமது தர்ம சாஸ்திரங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்துவிடும் என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அஞ்சியதால் வகைவகையான பட்சண, பதார்த்தங்களை மூவேளையும் மற்றவர்களுக்கு ஆக்கி வைத்துவிட்டு ஒரு நோயாளிக்கான பத்திய உணவைப்போல் உறைப்பும் புளிப்புமற்று சக்கை போன்றதொன்றையே அத்தை தனக்காகச் சமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதுவும் ஒருவேளை சாப்பாடுதான். பலநாட்களில் எல்லோரும் சாப்பிட்டது போக மீந்ததையோ பழையதையோ சாப்பிட்டுக் கொள்ளவும் பழகியிருந்தாள். ஆகாரக்கேடுகளால் குன்றி உலர்ந்த பழம்போல் வெறுந்தரையில் தலை சாய்க்கும்போது ஊரடங்கியிருக்கும் நெடுந்துயிலில்.

எல்லோருக்கும் முன்பாக எழுந்துவிடும் அத்தை பின்னிரவில்தான் தூங்கப் போவாள். அதுவரையிலும் வேலை.... வேலை.... பெற்றோர், சகோதரர்கள் - அவர்களது மனைவி குழந்தைகளின் துணிகளைத் துவைப்பது, கொல்லைக் கிணற்றில் நீரிறைத்து நிறைப்பது, பண்டபாத்திரங்களைக் கழுவுவது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, சமைப்பது, வீட்டுக் குழந்தைகளைப் பராமரிப்பது என்று ஓயாத வேலை. வேலையொழிந்து ஓய்ந்திருப்பதை யாரேனும் கண்டுவிடும்பட்சம், வேண்டுமென்றே அரிசியில் பருப்பைக் கலந்துகொடுத்து இரண்டையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப் பணிக்கப்படுவாள். வேலையற்று சும்மாயிருப்பாளேயானால் அவள் மனம் அலைபாய்ந்து விடுமென்ற சந்தேகத்தின்பேரில் எப்போதுமே எதையாவது செய்துகொண்டே இருக்குமாறு மொத்த வீடுமே கண்காணித்து வேலைவாங்கியது. வருடத்தில் இரண்டு நார்மடிப்புடவைக்கும் கொஞ்சம் அவலுக்கும் இத்தனை பொறுப்பான வேலைக்காரியாகத் தங்கள் வீட்டுப் பெண்ணொருத்தியே கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியை அவர்கள் ஒருபோதும் வெளிப்படுத்தியதேயில்லை. ஏனென்றால் ஒரு முண்டச்சியைப் பொறுத்தவரை அவை யாவும் அவள் அனுசரித்தேயாக வேண்டிய கர்மங்கள்.

அத்தையின் சாவுக்குப் பிறகு பூட்டிக்கிடந்த அந்த அறையில் அத்தையே வியாபித்திருக்கிறாள். நமக்கு பிறந்த வீடு புகுந்தவீடு எல்லாமே ஒன்றுதான். என்னைப்போல் அங்குமிங்கும் சீரழியாதே... நீயாவது தப்பிப்போய் விடு ஆனந்தி என்று அத்தை கேவியழுவதைப் போன்ற கனவினால் திடுக்கிட்டு முழிப்பவள் தப்பித்தாக வேண்டும் தப்பித்தாக வேண்டும் என்று தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்பவளைப் போல் ஜெபிக்கிறாள்.

எந்த அயல் ஆடவனோடும் பேசுவதிலிருந்து முற்றாகத் தடுக்கப்பட்ட ஆனந்தி, தனித்தப் பின்னறையில் தலையை மழித்துக்கொள்ளும் பொருட்டு அவ்வப்போது சந்தித்தேயாக வேண்டிய நாவிதனோடு தன்னைப் பகிர்ந்து கொண்டு தலையை மழித்துக்கொள்ளாமலேயே வெளியே வருகிறாள் ஒருநாள். "நடந்தது என்னவென்று தெரியாதபடிக்கு மறைத்துவிட வேண்டுமென்றோ கள்ளத்தனமாய் இத்தொடர்பு நீடிக்க வேண்டுமென்றோ நான் விரும்பவில்லை. மாறாக ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ - எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராயவில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்." என்று ஆனந்தியம்மாவுடைய நாட்குறிப்பின் வாசகங்கள் திரையில் காட்டப்படுகின்றன.

தன் மகள் விதவையாகி வீட்டிலிருக்கும்போது அவளைவிடவும் சிறுவயதுப் பெண்ணை மனைவி செத்த மூன்றாம் மாதமே இரண்டாம் தாரமாய்க் கட்டி வந்தது குறித்துச் சிறிதும் வெட்கமற்றிருந்த அவளது தந்தை இப்படியொரு அனுலோமக்கேடு தன் வீட்டில் நடந்துவிட்டதே என்று அரற்றுகிறார். தீராத களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக நாவிதனையும் ஆனந்தியையும் குடும்பமும் ஊரும் தூற்றுகின்றன, தாக்குகின்றன. அக்கணம் வரையிலும் அவனை ஆணென்றே அவர்கள் யாரும் கருதியதேயில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவனைப் போன்ற தொழிலில் உள்ளவர்கள் மனிதர்களே கிடையாது. பிறகெங்கே அவனை ஆணாகப் பார்ப்பது? அவனும்கூட தன்னைப் பற்றி அவ்வாறே கருதியிருந்தான் அதுகாறும். தாக்குதல் மூர்க்கமானபோது கீழே கிடந்த சவரக்கத்தியை ஒருகையிலும் மறுகையில் நாவிதனையும் பிடித்தபடி எதிர்த் தாக்குதலுக்குத் தயாரானவளைப் போல ஆனந்தி முன்னேறும்போது அனைவரும் பயத்திலும் அதிர்ச்சியிலும் விலகிப் பின்வாங்குகின்றனர். கத்தியோடும் அவனோடும் மனம் நிறைந்த தைரியத்தோடும் ஓடிவந்து ரயிலேறுகிறாள்.

பிராமணப் பெண்ணொருத்தியோடு உடலுறவு கொண்டதன் மூலம் என்னென்ன தெய்வக்குற்றமும் பழிபாவமும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் நேருமோ என்ற அச்சத்திலும் குற்றவுணர்ச்சியிலும் உளைச்சல் கொண்ட நாவிதன், ரயில் ஒரு ஆற்றைக் கடக்கும்போது குதித்து தற்கொலை செய்து கொண்டான். கோழைகள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று பொருமியபடி அவள் வந்திறங்கிய இடம் பூனா என்று தெரிந்துகொள்வதற்குள் சில நாட்களாகிவிட்டன. ராணுவக் கேந்திராலயத்தின் மதிலோரம் சுருண்டு கிடந்தவளை டெண்ட்டுக்குள் தூக்கிப்போகப் பார்த்த சிப்பாய்களிடமிருந்து தப்பியோடி வந்து இந்த இல்லத்தில் தஞ்சம் புகுந்து கிட்டத்தட்ட 72 வருடங்களாகிவிட்டன.

ஆற்றங்கரையில் மழித்து சுருண்டு கிடக்கும் முடிக்கற்றைகள் அப்படியே இழைந்து குழைந்து படுக்கையிலிருக்கும் மூதாட்டியின் நீண்டு நரைத்த கேசமாகத் திரை முழுக்க விரிகிறது. நல்லத்தங்காளின் முடி கிணறு முழுக்கப் பரவிக்கிடந்ததாமே அப்படி. "அந்த ஆற்றுநீரின் சலசலப்பை உற்றுக் கேளுங்கள். எனது கேவலும் விம்மலும் அவலம் பொருந்திய ஓலமும் இப்போது அதில் இருக்காது. ஆம் ஜெயித்தவர்கள் அழுவதில்லை" என்ற டைரியின் வாசகத்தோடு படம் முடியும்போது ஆனந்தியம்மா பூரணத்தில் மூழ்கிய அமைதியோடு படுக்கையிலிருக்கிறார். இப்போதும் அவர் தலைமாட்டில் கைக்கெட்டும் தூரத்தில் அதே கத்தியிருக்கிறது துருவண்டாமல்.

***

காட்சிரூபமான ஒரு படத்தின் முழு ஆகிருதியைத் தேர்ந்த மொழியாளுமை கொண்டவனாலும் கூட நுட்பமாக விவரிக்க சாத்தியமில்லையென்ற புரிதலுடனேயே என்னால் விவரிக்கப்பட்டிருக்கும் கதை அதனளவில் ஒரு படமாக முழுமையுற்றிருப்பதாகவே கருதினோம் நானும் பார்த்த மற்றவர்களும். இளம்வயது ஆனந்தியாக நடித்திருந்த வங்காள வீதிநாடக நடிகை சாரு அப்படியொரு நேர்த்தியாக உணர்வுகளை வழியவிட்டிருந்தாள். நூறுநூறாண்டுகளின் கொடுமையும் துயரமும் எனக்குள் படிந்துவிட்டதாக உணர்கிறேன் என்று அவள் சொன்ன வார்த்தைகளே எங்களின் மனநிலையைச் சொல்லவும் பொருத்தமானது என்று நம்புகிறேன்.

படம் வெளியாகியிருக்கும்பட்சம் தீபா மேத்தாவும் மீராநாயரும் ஷபனா ஆஸ்மியும் தற்போது எதிர்கொள்ள நேரிட்டவைகளைவிடவும் மேலதிகமான விமர்சனங்களை இவன்தான் முதன்முதலில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். அல்லது ஆனந்த் பட்வர்த்தனின் war and peace போல தடை செய்யப்பட்டிருக்கவும் கூடும். படைப்புச்சுதந்திரம்  குறித்து ஜம்பமடிப்பவர்கள் ஒரு படைப்பு தாக்குறும்போது எப்படிப் பம்மிப் பதுங்குகிறார்கள் என்பதைக் கூட நாம் முன்கூட்டியே அறியும் வாய்ப்பும் லபித்திருக்கும். ஆனால் தனது ஆவேசத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு அப்பாவி நாவிதனைப் பலி கொடுக்க நேர்ந்தது குறித்த ஆனந்தியம்மாவின்  தீராத உளைச்சலைப் படம் நழுவவிட்டுவிட்டதாக அவன் கொண்டிருக்கும் அதிருப்தியே படத்தை முடக்கி வைத்துள்ளது. ஆனந்தியம்மா அவன்மீது அருள் பொழியும் கணத்தில் நாட்டின் திரையரங்குகள் நொறுக்கப்படுமென உள்மனம் என்னை எச்சரிக்கிறது.

(2003)




துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...