கருத்துரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்துரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 21

மூச்சுரிமைக்கும் இரைஞ்சுவமோ? - ஆதவன் தீட்சண்யா


கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, ஒருவர் தனது எண்ணங்களையும் எதுவொன்றின் மீதான கருத்தையும் எதன்பொருட்டும் தயக்கமும் அச்சமுமின்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ தனக்குகந்த வேறு வடிவங்களிலோ வெளிப்படுத்துவதையும் பரப்புவதையும் குறிக்கிறது. சிந்தித்தல், பேசுதல், எழுதுதல், படித்தல், விவாதித்தல், கருத்துகள் /தகவல்களைப் பெறுதல்  ஆகியவற்றுக்கான இச்சுதந்திரமானது, இவற்றையெல்லாம் செய்யாதிருக்கும் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது.

முடியாட்சிக் காலங்களிலும் காலனிய ஆட்சிக்காலத்திலும் தமக்கு மறுக்கப்பட்ட இந்த கருத்து  வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அடைவதற்கான இந்திய மக்களின் போராட்டம், நாட்டின் அரசியல் சுதந்திரத்தை அடையும் போராட்டத்திற்கு தலைப்பங்காற்றியது. இவ்வகையில் கருத்துரிமையே இதர குடிமை உரிமைகளை கோருவதற்கான உள்வலிமையையும் தெளிவையும் தனிமனிதர்களுக்கு வழங்குகிறது என்கிற பாடத்தை கடும் ஒடுக்குமுறைக்கூடாக இந்தியச் சமூகம் கற்றுத்தேர்ந்தது. அதனாலேயே விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனம் கருத்துரிமையை நம் ஒவ்வொருவருக்கும் உரித்தாக்கியது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் உரிய இந்த உரிமையே கட்டுத்தளையற்ற கற்பனை வளம் கொழிக்கும் கலை இலக்கிய ஆக்கங்கள் உருவாவதற்கும் ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாட்டிற்கும் ஆதாரம் என்றும் விரித்துரைக்கப்பட்டது.

அரசியல் சாசனத்தை வரைவமைத்த நமது முன்னோர்களுக்கு, அரசியல் சாசனம் என்பது அரசாங்கம் மக்களை கட்டுப்படுத்துவதற்கானது அல்ல, மாறாக அது அரசாங்கத்தை மக்கள் கட்டுப்படுத்துவதற்கானது என்கிற புரிதல் இருந்தது. அரசியல் சாசனத்தின் 19 1(அ) பிரிவு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்ததற்கு இந்தப் புரிதலும் மனித உரிமைகள் தொடர்பாக உலகளாவிய அளவில் நெடுங்காலமாக நடைபெற்றுவந்த விவாதங்களுக்கு செவிமடுக்கும் திறந்த மனதும் அடிப்படையாய் இருந்தன. ஆயுதங்களின்றி அமைதியாக ஒன்றுதிரளுதல், சங்கம் அமைத்து செயல்படுதல், நாடு முழுவதும் தங்குதடையின்றி நடமாடுதல், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தங்குவதும் - குடியேறுதலும், விரும்பும் எந்தவொரு தொழிலையோ வர்த்தகத்தையோ செய்தல் ஆகிய உரிமைகளை கருத்துரிமையுடன் இணைத்தே உறுதி செய்தது அரசியல் சாசனம். ஆனால் அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 17 மாதங்களுக்குள்ளாகவே கருத்துரிமையை சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தவேண்டிய நிலைமை உருவாகிவிட்டதாக கூறியது இந்திய அரசு. 

* நாட்டுப்பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஏற்பட்டிருந்த அசாதாராணமான நிலையை கையாள்வதற்காக நேரு-லியாகத் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. நேரு அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சியாமபிரசாத் முகர்ஜி நேருவை கடுமையாகச் சாடியதோடு மதக்கலவரத்தை தூண்டும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். ரிலையன்ஸ் சேவக் சங் என்று இப்போது அறியப்படுகிற ஆர்.எஸ்.எஸ். சார்பில் பிரிஜ் பூஷன் என்பவரால் அப்போது வெளியிடப்பட்டு வந்த ‘ஆர்கனைசர்’ இதழ் இந்த வெறுப்பரசியலை விசிறித் தள்ளிக்கொண்டிருந்தது. இதற்காக 1950ஆம் ஆண்டில் இவ்விதழ் முன்தணிக்கைக்கு ஆளானது. அச்சுக்கு அனுப்பும் முன்பாக இதழை அரசின் பார்வைக்கு கொண்டுவந்து ஒப்புதல் பெறவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று ரத்து செய்துவிட்டது.

* வரலாற்றாளர் ரோமிலா தாபரின் சகோதரரும், பின்னாளில் செமினார் இதழைத் தொடங்கி நடத்தி வந்தவருமான ரொமேஷ் தாபர் ஓர் இடதுசாரி. அவர் 1950களில் வெளியிட்டு வந்த ‘கிராஸ் ரோட்ஸ்’ வார இதழ், கம்யூனிஸ்ட்களின்  போராட்டங்களை நியாயப்படுத்தியும், நேரு அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தும் எழுதிவந்தது. தெலிங்கானாவிலும் கேரளத்திலும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான போராட்டங்களால் தகிப்பேறிய நிலையை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருந்த சென்னை மாகாண அரசாங்கம் இந்த இதழ் சென்னை மாகாணத்திற்குள் வருவதை தடைசெய்தது. இந்தத் தடையுத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று ரொமேஷ் தாபர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது.

* ஒடுக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் பணியாமல் நாட்டில் ரத்தப்புரட்சியை நடத்தியாக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் வங்கமொழிப் பிரசுரமான ‘சங்காரம்’, புரூலியாவைச் சேர்ந்த ஷைலாபாலா தேவி என்பவரது ‘பாரதி பிரஸ்’ஸில் அச்சடிக்கப்பட்டிருந்தது. இப்பிரசுரம் வன்முறையையும் கொலைகளையும் தூண்டுவதாகவும், அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டால் ஈடு செய்திட 2000 ரூபாய் காப்புத்தொகை கட்டவேண்டும் என்றும் பீகார் மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கெதிரான வழக்கில் அச்சகத்திற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பளித்த போதிலும், இப்படி வன்முறையையும் கொலையையும் தூண்டுகிற பிரசுரத்தைக்கூட கருத்துரிமையின் பேரால்  நாம் அனுமதிக்கவேண்டியிருக்கிறதே என்கிற கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துரிமையை உயர்த்திப் பிடிப்பதன் பெயரால் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புகள் அவற்றோடு தொடர்புடைய நிலைமைகளை கையாள்வதற்கு தடையாக இருப்பதாக நேருவும் படேலும் கருதினர். நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, அண்டை நாடுகளுடான நல்லுறவு, நீதிமன்ற மாண்பு, அறநெறிகள் ஆகியவற்றை சீர்குலைக்கக்கூடியவை என்று அரசால் கருதப்படக்கூடிய கருத்துகள் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் முதலாவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. கருத்துரிமை நிபந்தனைக்கு உட்பட்டதே என்கிற முதலாவது சட்டத்திருத்தம் இன்னபிற குடிமை உரிமைகளையும் நிபந்தனைக்கு உட்பட்டவையே என்று மாற்றுவதற்கு இட்டுச்சென்றது. (இந்தத் திருத்தத்திற்கு மிகுந்த தயக்கத்துடனேயே ஒப்புக்கொண்டு வரைவை தயாரித்தளித்த சட்ட அமைச்சர் அம்பேத்கர் அந்த நேரத்திலும் மக்கள் பக்கம் நின்று, கட்டுப்பாடு என்பதற்கு முன்னால் ‘நியாயமான’ என்கிற சொல்லை போராடிச் சேர்த்திருக்கிறார்.)

***
அரசியல் சாசனத்தின் பெயரால் இயங்கும் அரசு மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கவும், வழி தவறும்போது இடித்துரைக்கவும் விரும்புகிற எவரொருவருக்கும் கருத்துரிமை தேவைப்படுகிறது. மட்டுமல்ல, அரசியல் சாசனத்தின் நோக்கங்களை வெறும் எழுத்து என்கிற நிலையிலிருந்து நடைமுறை உண்மையாக மாற்றுவதில் ஏற்படும் வளர்/தளர் நிலைகளை மக்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி அவர்களது வழிகாட்டுதலையும் விருப்பங்களையும் ஆட்சியாளர்கள் அறிந்துகொள்வதற்கு கருத்துரிமையும் ஊடகச்சுதந்திரமுமே வழியமைக்கின்றன.

குடிமக்களை குற்றவாளிகளாகவே கருதி அவர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட காலனியச்சட்டங்களையும் மதிப்பீடுகளையும் கையாண்டு பழகிய இந்திய அரசு இயந்திரம், சுதந்திரமடைந்த ஒரு நாட்டின் விருப்பார்வங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக மாற்றியமைக்கப்படவில்லை. சொத்துடைமை வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இப்படியான ஓர் அரசு இயந்திரமே போதுமானதாகவும் தேவையானதாகவும் இருந்தது. மேலாதிக்க மனோபாவத்தைக் கொண்ட இவர்களது சேர்மானம் தன்னியல்பாகவே வெகுமக்களின் கருத்துரிமைக்கு எதிரானதாகவே ஆட்சியையும் அரசு இயந்திரத்தையும் வடிவமைத்தது. அதேவேளையில், ஆளும் வர்க்கத்தின் நலனுக்கான கருத்தியலை மட்டும் பரப்புவதற்கான ஒருவழிப்பாதையாக திட்டமிட்டு கருத்துரிமை சிதைக்கப்பட்டது.  இதற்கான அஞ்சத்தக்க உதாரணம் 1975 ஜூன் 26 அன்று அமலுக்கு வந்த நெருக்கடி நிலை. இந்தியச் சமூகம் வரலாற்றுரீதியாக ஈட்டிய ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் எதேச்சதிகாரத்தின் காலடியில் வீழ்த்தும் கெடுமுயற்சி அது. மக்களின் உயிர்வாழும் உரிமை உட்பட அனைத்தையும் பறித்துக்கொண்ட அரசு, அதற்கான வியாக்கியானங்களையும் அச்சுறுத்தல்களையும் மக்களின் நினைவில் பதியவைத்து பணிய வைப்பதற்கான கருத்துப்பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருந்தது. கருத்துரிமை எந்த வடிவில் வெளிப்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கத் துணிந்த அந்த ஆட்சியை மக்களின் ஜனநாயக வேட்கை வீழ்த்தியதை இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

***
நாட்டின் விடுதலைக்காக நடைபெற்ற, சமூகத்தை நவீனப்படுத்த நடைபெற்று வருகின்ற எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுத்திராத சங் பரிவாரத்தினர் கைக்கு நாட்டின் ஆட்சியதிகாரம் போய்ச் சேர்ந்திருப்பது தற்செயலானதல்ல.  ஏற்றத்தாழ்வுகளும் ஒடுக்குமுறைகளும் இயல்பானது என்கிற கருத்தியலுக்கு எதிராக சமத்துவம் என்கிற கருத்தியலை முன்வைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் இதுகாறும் ஈட்டிவந்த வெற்றிகளைக் கண்டு பொருமிக்கிடந்த ஒடுக்குமுறையாளர்களின் எதிர்வினையே சங் பரிவாரத்தின் ஆட்சி எனப்படுகிறது. அதாவது சமத்துவம் என்கிற இடதுசாரி கருத்தியல் வளர்ச்சியைத் தடுக்கும் வெறிகொண்ட இந்திய ஆளும் வர்க்கம் அதே நோக்கத்தைக் கொண்டிருக்கிற வலதுசாரிகளின் பக்கம் சாய்ந்திருக்கிறது. 

தொடக்ககாலம் முதலே சங்பரிவாரத்தினர் கருத்துரிமையின் எதிராளிகளாக இருப்பதற்கான சொந்தக் காரணங்களுண்டு. ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், சிந்து சமவெளி நாகரீகம் ஆரிய நாகரீகமே, அவர்களது சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி, வேதமயப்பட்ட சடங்குகளே புனிதமானவை, பசு ஒரு விலங்கல்ல - தெய்வம், சாதி என்பது ஒரு வாழ்க்கை முறை என்றெல்லாம் முன்பு எவ்வித ஆதாரங்களுமின்றி சொல்லிவந்தவர்கள், இப்போது ஆட்சியதிகாரத்தின் துணைகொண்டு போலியாக ஆதாரங்களை உருவாக்குகிறார்கள். இதற்காக வரலாற்றை திரிக்கிறார்கள். சான்றுகளை அழிக்கிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்த நாட்டின் எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றுகிறார்கள். இந்த இழிமுயற்சியை அம்பலப்படுத்தும் கல்வியாளர்களும் வரலாற்றாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே என்கிற விஷமப்பிரச்சாரத்தை செய்கிறவர்களும் கொலையாளிகளை கொண்டாடுகிறவர்களும் சங்பரிவாரத்தின் துடுக்கான பிள்ளைகளென கொஞ்சப்படுகிறார்கள்.

இப்போது சுதந்திரமாக நீதிபரிபாலனம் செய்யமுடியவில்லை என்பதை நீதிபதி லோயாவின் மர்மமரணம் அறிவிக்கிறது. தேவைப்படும் விதமான தீர்ப்பினை பெறுவதற்காக விளையாட்டுகளில் மேட்ச் ஃபிக்சிங் போல நீதிமன்றங்களில் பெஞ்ச் ஃபிக்சிங் நடப்பதாகவும், இதற்காக தகுதிவாய்ந்த நேர்மையான நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளாலும்கூட தங்களது பிரச்னைகளை உள்ளேயிருந்து பேசிக்கொள்ள முடியாமல் ஊடகங்களைச் சந்தித்து முறையிட வேண்டியிருந்தது.

முதலாளிகள் சிலருக்கு சலுகை காட்டப்படுவதை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அவற்றின் அலுவலகங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப் படுகிறது. அரசை விமர்சிக்கும் செய்தியாளர்கள் வேலையிலிருந்து விரட்டப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள். இதழ்களை முடக்கவும், ஒளிபரப்பை நிறுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

பாடப்புத்தகங்களில் திரிபுகள், மதம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தை விதிகளாக்குதல், தேர்வுமுறைகளை மாற்றியமைத்தல், உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களாக தகுதியற்றவர்களை நியமித்தல், உயர்கல்விக்கான உதவித்தொகையை வெட்டுதல், ஆய்வூதியத்தை குறைத்தல், கல்வி வளாகங்களை காவிப்படுதாவுக்குள் அடைத்தல் என கல்வி நிலையங்களின் சுதந்திரத்தில் அரசின் குறுக்கீடு அதிகரித்து வருகிறது. இதை விமர்சிக்கத் துணிந்தால் என்னவிதமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு ரோஹித் வெமூலா முதல் அனிதா வரையான துக்கசாட்சிகள் நீள்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து நிதியுதவி பெறும் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஆசிரியர்களோ ஊழியர்களோ மாணவர்களோ அரசை விமர்சிக்கக்கூடாது என்று ஆணை பிறப்பிக்குமளவுக்கு எதேச்சதிகாரம் பரவுகிறது.  

அரசின் கொள்கைகளை விமர்சிக்கிறவர்கள், மனித உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் “அர்பன் நக்ஸல்கள்” என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பிரதமரை கொல்ல சதிசெய்ததாக அவர்கள் மீது வழக்கு புனையப்படுகிறது. அவர்களது வீடுகள் சோதனையிடப்படுவதுடன் குடும்பத்தவர்கள் சிறுமைப்படுத்தும் கேள்விகளால் துளைத்தெடுக்கப்படுகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி எங்களை மரணத்துக்குள் தள்ளுகிறது என்று சொல்வதற்கு திறந்த வாயை தோட்டா கிழிக்கிறது. அப்பாவி மக்கள் அப்படி கொல்லப்பட்டது குறித்து ஐ.நா.மன்றத்தில் புகார் செய்தவர் சிறையில் அடைபட்டு சித்ரவதைக்கு ஆளாகிறார்.

எட்டுவழிச்சாலைக்காக எங்களது வாழ்வாதரமான நிலத்தைப் பறிக்காதே என்று முழங்குவதல்ல, முனகினாலும்கூட தடியடிக்கும் சிறைத்தண்டைனைக்கும் விவசாயிகள் ஆளாகினர். நிலத்தை பறி கொடுக்கும் ஆற்றாமையில் கதறும் அவர்களை சந்திப்பதற்கு இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் அனுமதியில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது தொகுதிக்குள் நடமாடவும் தொகுதி மக்களோடு பேசவும்   உயர்நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது.

ஆட்சியின் அவலங்களை பூடகமாக உணர்த்தும் ஒரு சொல் திரைப்படத்தில் இருந்தால்கூட திரையிடல் தடுக்கப்படுகிறது. ஒக்கிப்புயல் போன்ற இயற்கைப்பேரிடர்களில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஆவணப்படுத்தி படமெடுப்பதே குற்றம் என்று கைது செய்ய துரத்தப்படும் அவலம்.

இங்கு துண்டறிக்கை விநியோகிக்க முடியாது. தொல்லிசைக்கருவிகளை முழக்கக்கூடாது.  குறிப்பிட்ட இடங்களில் கூடுவது குற்றம். பேச விரும்பியதை பேசமுடியாது. கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு அரங்கங்களை கொடுக்கக்கூடாதென கெடுபிடி. மக்களின் புழங்கிடமும் நேரமும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இரவு 11 மணிக்கு மேல் வெளியில் யாரும் நடமாட முடியாதபடி அறிவிக்கப்படாத ஊரடங்கு அமலாகிறது. தேவைப்பட்டால் செல்பேசி மற்றும் இணையதளச் சேவைகளை முடக்கி வெளியுலகத் தொடர்பே இல்லாமல் மக்களை தனிமைப்படுத்தவும் முடியும்.

***
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், போலிஸ் மற்றும் ராணுவத்தினர், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கனிமக் கொள்ளையர்கள், நிலவணிகர்கள், சட்டவிரோதச்செயல்களில் ஈடுபடுகிறவர்கள், மதவாதிகள் போன்றவர்களால் தான் உலகளவில் கருத்துச்சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கருத்துச் சுதந்திரத்தை, சுதந்திரமான ஊடகச்செயல்பாட்டை ஒடுக்குகிற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறுவது நாம் பெருமைப்படத்தக்க விசயமல்ல. 

பொதுவாக கருத்துரிமை என்பதை கலைஇலக்கியவாதிகளுக்கும் ஊடகர்களுக்கும் மட்டுமே தேவைப்படுகிற உரிமையாக குறுக்கிப் பார்க்கும் போக்கு உள்ளது. ஆனால் அரசியல் சாசனம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த உரிமையை (நிபந்தனைகளுடனாவது) வழங்கியுள்ளது. இதன்பொருள், வரலாற்றை மதிப்பீடு செய்வதற்கு, சமகால நடப்புகளை விமர்சிப்பதற்கு, எதிர்காலம் பற்றிய கனவுகளை முன்மொழிவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இந்த உரிமை தேவை என்பதுதான். இந்திய மக்கள் தத்தமது இனத்தின், மொழியின், நிலப்பரப்பின், வாழ்முறையின் தனித்துவங்களைப் பேணுவதற்கும் அவற்றின் மாண்புகளை பரஸ்பரம் பகிர்வதற்கும் தமக்கிடையே வரலாற்றுரீதியாக உருவாகி வந்துள்ள பொதுமைப்பண்புகளை கண்டுணர்வதற்கும் இந்த உரிமை அவசியமென தமுஎகச நம்புகிறது. சகல ஆயுதங்களையும் அரசிடம் ஒப்படைத்த அரசியல் சாசனம், அதற்கு சமதையாக மக்களிடம் கருத்துரிமையை ஒப்படைத்திருக்கிறது என்பதை நினைவூட்டவும் செம்மையாக்கவுமே ‘கருத்துரிமை போற்றுதும். 

நன்றி: தீக்கதிர், 16.10.2018

சனி, அக்டோபர் 6

ஆளப்படுபவரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும் - ஆதவன் தீட்சண்யா


Julio Carrión Cueva, Peru , toonmag
கால இட எல்லைகளைக் கடந்து எதுவொன்றின் மீதும் கருத்தை வெளிப்படுத்துவதும், அதை கவனித்து உள்வாங்குவதும் மனித சுபாவமாக இருந்துவருகிறது. தான் நினைத்ததை சைகை, குறி, ஓசை, ஓவியம், எழுத்து போன்ற வடிவங்களில் அச்சமின்றியும் வேறுவகையான குறுக்கீடுகள் இன்றியும் சுதந்திரமாக மனிதர்கள் வெளிப்படுத்தி வந்ததன் விளைவாகவே கலையும் மொழியும் எண்ணும் எழுத்தும் இலக்கியமும் உருவாகி வளர்ந்திருக்கின்றன. இந்த நிலை வளர்முகமேறி நீடிக்கவும் இதுவே நிபந்தனையாகிறது.  

சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் முடியரசுகள் உருவானபோது ஆட்சியாளர்கள் தம்மை வரம்பற்ற அதிகாரம் கொண்டோராகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் கருதிக்கொண்டனர். ஒட்டுமொத்த சமூகத்தினரை விடவும் உயர்ந்த நிலையில் தம்மை இருத்திக்கொள்வதற்கான சட்டங்களை இயற்றிக் கொண்டனர். அவர்களது ஊதாரித்தனங்கள், உல்லாசங்கள், குணக்கேடுகள், அத்துமீறல்கள், அகங்காரம், ஆட்சி பரிபாலனத்தில் மலிந்திருக்கும் முறைகேடுகள், போர்வெறி, பாலியல் குற்றங்கள் போன்றவற்றை ராஜகுணங்களாக விதந்துரைத்து சமூகத்தில் பரப்புகிறவர்களை உடன்வைத்துக்கொண்டார்கள். நாட்டின் நிர்வாகமும் சட்டதிட்டமும் குடிமக்களின் வாழ்வும் அரசர் என்கிற தனிநபரின் விருப்புவெறுப்புகளால் தீர்மானிக்கப்பட்டன. அரசரை கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தும் அபத்தங்களுக்கும் பஞ்சமில்லை. (கடவுளே அபத்தம்தான் என்பதையும் மறந்துவிட வேண்டியதில்லை). அரசாட்சிக்கு விசுவாசத்தைக் கோரும் கருத்துகளைப் பரப்புவதற்கு மட்டுமே அனுமதி இருந்தது.

அரசருக்கு அடங்கி நடப்பது ராஜவிசுவாசமாகவும் அரசர்களை கண்டிப்பதும் விமர்சிப்பதும் தேச/ ராஜ நிந்தனையாகவும் கருதப்பட்டு கொடிய தண்டனைகள் வழங்கப்பட்டன. எனினும் இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, தனிமனிதர் தன்னளவில் பேணவேண்டிய அறங்கள், மனிதர்களுக்கிடையே நிலவவேண்டிய உறவின் தன்மை, அரசர்களின் கடமை, சமூகம் பேண வேண்டிய பொது ஒழுங்குகள், நீதி, குடிமக்களுக்குள்ள பொறுப்புகள் மற்றும் உரிமைகள் குறித்தான கருத்துகளை துணிச்சலோடு  வெளிப்படுத்தியவர்களும் காலத்துக்குக்காலம் இருந்தே வந்திருக்கிறார்கள். நடப்பிலிருந்த சமூக அமைப்பிற்கு ஒப்புதலையும் ஏற்பையும் வழங்கும்படியாக வெகுமக்களின் உளவியலை தகவமைக்கும் பொறுப்பிலிருந்த கடவுள் மதம் கல்வி குடும்பம் கலை இலக்கியம் உள்ளிட்டவற்றை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். இவ்வாறானவர்கள் அந்தந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட கருத்துரிமையின் அதிகபட்ச சாத்தியங்களைக் கைக்கொண்டு அதனிலும் முன்னேறிய சமூக அமைப்பு பற்றிய கனவை முன்வைத்து பரப்பியிருக்கிறார்கள். முடியாட்சிக்கு மாற்றாக குடியாட்சி என்கிற புதிய அரசியலமைப்பையும், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை அதன் அடிப்படைகளாகவும் முன்வைத்து முன்னேற்றகரமான மாற்றங்களுக்கு அடிகோலியவர்களும் இவர்களே. 

***
சுதந்திரம் என்பதை  சிவில் உரிமை, அரசியல் உரிமை எனப்  பகுக்கும் அம்பேத்கர், ‘சிவில் உரிமை என்பதை 1.சுதந்திரமாக இயங்கும் உரிமை- சட்டமுறைப்படியன்றி வேறுவகையில் சிறைப்படுத்த முடியாத உரிமை. 2.பேச்சுரிமை- சிந்தித்தல், எழுதுதல், படித்தல், விவாதித்தல். 3. செயலுரிமை எனச் சொல்லி அவற்றை மேலும் விளக்குகிறார். ‘முதல்வகை சுதந்திரம் அடிப்படையானது. மட்டுமன்று, இன்றியமையாதது. அதன் மதிப்பைப் பற்றி ஐயமேதுவும் இருக்கமுடியாது. இரண்டாவது வகைச் சுதந்திரத்தை  கருத்துச்சுதந்திரம் எனலாம். பல காரணங்களுக்காக அது முக்கியமானது. சமூக, அரசியல், தார்மிக, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கும் காரணமாவது. கருத்துச்சுதந்திரம் இல்லாத இடத்தில் நிகழ்நிலை ஸ்தம்பித்துவிடுகிறது. அவசியமான சுய சிந்தனைகளும் ஊக்குவிக்கப்படுவதில்லை. செயலுரிமை என்பது, தான் நினைத்ததைச் செய்யும் உரிமை. செயலுரிமை ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது. அது உண்மையானதாக இருத்தல் வேண்டும். இப்பொருளில் செயலுரிமை என்பது குறித்தவற்றைச் செய்வதற்குரிய பயனுள்ள அதிகாரத்தைக் குறிக்கிறது. பயன்படுத்தும் நடைமுறைகள் இல்லாத சுதந்திரம் இருக்க முடியாது. சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில் தான், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான், வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில் தான், தான் விரும்பிய செயலின் விளைவால் தன் வேலை, வீடு, உணவு, ஆகியவற்றை இழந்துவிடுவோமா என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும்...’. இவ்வாறு தனிச்சொத்துடமையும் சுரண்டலும் பொருளாதாரப் பாகுபாடும் அற்ற ஒரு சமூகத்தை சுதந்திரம் உயிர்ப்புடன் இருப்பதற்கான முன்நிபந்தனையாக்குவதன் மூலம், நடப்பிலிருக்கும் சமூக அமைப்பை தலைகுப்புற மாற்றியமைக்க வேண்டும் என்கிற கிடக்கையை வெளிப்படுத்துகிறார்.

அம்பேத்கரின் இக்கூற்றானது கருத்துச்சுதந்திரம் என்பது அதன் மெய்யான பொருளில் தன்னந்தனியாக இருந்துவிட முடியாது, அது ஒரு சமூகத்தில் குடிமக்களுக்குள்ள இன்னபிற சுதந்திரங்களின் ஏற்றயிறக்க நிலைகளோடு தொடர்புடையது என்பது விளங்குகிறது. மட்டுமல்ல, அது அரசியல் சுதந்திரத்தின் அங்ககக்கூறுகளில் ஒன்றாக இயங்குகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். அரசியல் சுதந்திரம் என்றால் என்ன என்று யோசித்து நாம் தடுமாறிக் கொண்டிருக்க இடமளிக்காமல் ‘அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்குகொள்வதற்கும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும்’ என்று அவர் தரும் வரையறையானது, அரசியலுரிமைகளை அடைவதற்கு கருத்துரிமை எந்தளவிற்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. மேலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது கலை இலக்கிய, ஊடகச் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமே என்கிற மேம்போக்கான புரிதலை நிராகரித்து அது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உரியது, தேவைப்படுவது என்றும் அறியச் செய்கிறார் அம்பேத்கர்.

***
இந்திய அரசியல் சாசனத்தின் 19 1(அ) பிரிவு குடிமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களுக்காக நாட்டை ஆள்பவர்களும் இந்தச் சுதந்திரத்தை குடிமக்கள் அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து தடுத்துவருவதன் மூலம் அரசியல் சாசனத்தின் வாசகங்களை வெற்றலங்காரமாக மாற்றியுள்ளனர். அவர்கள் இந்தச் சுதந்திரத்தை  எப்போதும் அச்சத்துடனும் வெறுப்புடனுமே அணுகிவருகிறார்கள்.  நிலவக்கூடிய சமூக அமைப்பையும் ஆட்சிகளையும் தலைகுப்புற கவிழ்த்துப்போடக்கூடிய அல்லது அவற்றுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் அரசியல் கருத்தாக்கங்கள் ஏதும் இங்கு முனைப்படையாத நிலையிலும்கூட இந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை கருத்துச்சுதந்திரம் என்பது அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான கருத்தியலை பரப்புவதற்கான சுதந்திரம்தானேயன்றி வேறல்ல. இந்த இடத்தில்தான் ஊடகங்கள் பற்றி குறிப்பிட வேண்டியுள்ளது.

ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றென  ஊடகங்கள் வர்ணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இங்குள்ள பெரும் தொழில்/ வணிகக் குழுமங்களால்  நடத்தப்படுகின்றன அல்லது இந்த ஊடகங்களே பெரும் தொழில்/ வணிகக் குழுமங்களாகிவிடுகின்றன. இதன் மூலம் அவை ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதியாகி ஊடகம் என்பதற்கான அடிப்படைப் பண்பையே இழந்துவருகின்றன.  சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய இதர தூண்களின் செயல்பாடுகளை காவல்நாயாக விழிப்புடனிருந்து கண்காணிப்பது, தவறுகளையும் போதாமைகளையும் சுட்டிக்காட்டுவது, பிரச்னைகளையும் தீர்வுகளையும் பாதிக்கப்பட்ட வெகுமக்களின் கண்ணோட்டத்தில் சமரசமின்றி முன்வைப்பது,  கலை இலக்கிய ஆக்கங்களையும் ஆய்வுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் நாட்டு நடப்புகளையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது என தமக்குள்ள வாய்ப்புகள் பொறுப்புகள் அனைத்தையும் இந்திய ஊடங்கள் வெட்கமற்று அப்பட்டமாக துறந்து வருகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை- அதன் நலனை பரப்பி மக்களின் ஒப்புதலைப் பெறும் ஒருவழிப் பாதையில்  வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கும் பெரும் தொழில்/ வணிகக் குழுமத்தினருக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு எழுமானால் அதை நேர்செய்து நமக்குள் சண்டையெதற்கு என்று பஞ்சாயத்து செய்யவும் அவை தயங்குவதில்லை. நாட்டைச் சுரண்டும் தனது வேகத்திற்கு இணையான வேகத்தில் வரமுடியாத ஆட்சியாளர்களை கீழிறக்கவும் உகந்தவர்களை மேலேற்றவும்  ஆளும் வர்க்கம் ஊடகங்களையே பெரிதும் நம்பியுள்ளது.  நாட்டை நீண்டகாலம் ஆண்ட காங்கிரஸோ, தற்போதைய ஆளும் கட்சியான  பா.ஜ.க.வோ இப்போதுவரை தமக்கென தேசிய அளவில் தனியாக நாளிதழ் அல்லது தொலைக்காட்சி சேனல் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இக்கட்சிகளுக்கான பிரச்சாரப் பொறுப்பை களத்தில் உள்ள ஊடக முதலாளிகள் கவனித்துக்கொள்கிறார்கள் என்பதே.

ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பேசக்கூடிய பெரும்பாலான ஊடகங்களுக்கு உண்மையில் கருத்துச்சுதந்திரமே  தேவைப்படுவதில்லை, அல்லது தேவைக்கும் அதிகமாகவே அவற்றுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்துவதில் அவர்களுக்குள் கைக்கொள்ள வேண்டிய ஒழுங்கு குலையும் போது சிற்சில உட்பூசல்கள் வெடிக்கும். தொலைக்காட்சிக் குடும்பங்கள் மீது வருமானவரி சோதனை, ஒருநாள் ஒளிபரப்பு நிறுத்தம், விற்பனைக்குப் போன பத்திரிகைகளை திரும்பப் பெற வைத்தல், வெளியிட்ட செய்தி/ காட்சிக்காக வருத்தம் தெரிவித்தல், கார்ட்டூனுக்காக கைது செய்தல் என்று இந்தப் பூசல் வெளிப்படும். இந்தப் பூசல் அனைவருக்கும் சம உரிமை கோரி நடைபெறுவதல்ல, இந்தியச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்திற்குரிய சிறப்புரிமைகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்படுகிற பிணக்கு.  நீதிமன்றத்துக்குள்ளேயோ அல்லது வெளியேயோ இந்த முறுகல்நிலை நேர்செய்யப்பட்டு இயல்பிணக்கம் உருவாக்கப்பட்டுவிடும்.

ஊடகங்களுக்குரிய இதே நிலை கலை இலக்கியவாதிகளுக்கும் கூட பொருந்தும். மானே தேனே பூவே புஷ்பமே என்று வாரத்துக்கு ஒரு வண்டி பாரமளவுக்கு எழுதிக்குவிக்க இங்கு சுதந்திரமுள்ளது. சொத்துடைமை உறவுகளைப் போற்றுகிற, மூடநம்பிக்கைகளை ஆதரிக்கிற, பாலின ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்துகிற, சாதியத்தையும் அதன் ஒடுக்குமுறைகளையும் இயல்பெனக் கருதுகிற உள்ளடக்கத்தோடு நீங்கள் ஆடலாம் பாடலாம் ஓடலாம் உட்காரலாம் நடிக்கலாம் துடிக்கலாம், ஒரு பிரச்னையுமில்லை. இன்னும் சொன்னால் இப்படியான நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் உவப்புடன் வரவேற்று கொண்டாடவே செய்யும். ஆனால் “இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழு”, “நாடு நல்லாத்தானிருக்கு, நீதான் அனுசரித்து மாறணும்” என்பதான இவ்வகை கருத்தாளர்களும் கூட தங்களது கருத்தை வெளிப்படுத்த முடியாத நெருக்கடியை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கியுள்ளது.

***
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதன் ஆதரவாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அவர்களது எஜமானர்களான ராஷ்ட்ரீய சர்வநாச சங்கம் என விளிக்கவேண்டிய அளவுக்கு கேடுகளை விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை அள்ளிக்கொட்டுகிறார்கள். இட்டுக்கட்டிய கதைகளை வரலாறெனத் திரிக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை ஆரிய நாகரீகமெனப் புளுகுவதன் மூலம் ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகள் என்று புனையும் மோசடியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள கல்விநிலையங்களில் பாடப்புத்தகங்களை பொய்களால் நிரப்புகிறார்கள். போட்டோஷாப் உள்ளிட்ட கணினி நுட்பங்களைப் பயன்படுத்தி போலிப்பெருமிதங்களை உருவாக்கி இணையவெளியில் உலவவிடுகிறார்கள். சமஸ்கிருதமே இந்தியாவின் தொன்மையான மொழி, பகவத் கீதையே புனித நூல் என்கிற பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி திணிக்கப் பார்க்கிறார்கள். பிற மத வெறுப்பை அரசதிகாரத்தைப் பயன்படுத்தியே விதைக்கிறார்கள். நாட்டை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக சர்ச்சைகளை கிளப்புவதும் சமூகத்தை பாகுபடுத்துவதும் அவர்களது அன்றாட நிகழ்ச்சிநிரலாகியுள்ளது. பசு காவலர்கள், லவ் ஜிகாத் எதிர்ப்பாளர்கள், இந்து கலாச்சார பாதுகாவலர்கள் என நானாவித போலி அடையாளங்களோடு சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல்கள் நாட்டில் நிகழ்த்திவரும் வரும் வன்முறை, கொலை போன்ற குற்றங்களையும் மனிதவுரிமை மீறல்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள். குடிமக்களுக்கு  அவர்களது உடல் மற்றும் உயிர் மீதும் கூட உரிமை இல்லை என்று நீதிமன்றங்களில் வாதாடும் அளவுக்கானது அவர்களது எதேச்சதிகாரம்.

சுதேசியம் பேசிக்கொண்டே அந்நிய கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு நாட்டை விலைபேசும் தேச துரோகத்திலும் ஈடுபடுகிறார்கள். குறிப்பிட்ட சில தொழில்/ வணிகக் குழுமங்கள் கொழுப்பதற்காக நாட்டின் வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் திருப்பிவிடுவதற்கு அரசதிகாரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள். குடிமக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக தலையிட்டு அவர்களது இயல்பான வாழ்க்கையை குலைத்துப்போடும் விதமான திட்டங்கள் பலவற்றை பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மூலம் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி வீழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆலை மூடல் வேலையின்மை விளைநிலப் பறிப்பு மூலம் சொல்லொணாத்துயரங்களை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பாஜக உள்ளிட்ட சங் பரிவாரத்தினரின் இப்படியான அட்டூழியங்கள் அவர்களின் கூட்டாளிகளாலும்கூட சகித்துக் கொள்ள முடியாதளவுக்கு எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே இன்று அவர்களும்கூட சங்பரிவாரத்தை எதிர்க்கவும் விமர்சிக்கவும் வேண்டிய நெருக்கடிக்காளாகியுள்ளனர்.

சங் பரிவாரத்தினர், தமது அமைப்புகளுக்கும் ஆட்சிக்கும் எதிரான கருத்துகள் எந்த தளத்திலும் வெளிப்பட்டுவிடக்கூடாது என கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். அதேவேளையில் எல்லா தளங்களிலும் தமது கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிடும்படியான கெடுபிடியை உருவாக்கியுள்ளனர். மாற்று/ எதிர் கருத்தாளர்களை தேசவிரோதிகள், நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நம்பிக்கையை - பண்பாட்டை இழிவுபடுத்தி மனதை புண்படுத்துகிறவர்கள், பயங்கரவாதிகள், அன்னிய உளவாளிகள் என்றெல்லாம் அபாண்ட பழி சுமத்தி சிறையிலடைத்து சித்திரவதை செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் அவதூறுகளையும் அச்சுறுத்தலையும் பரப்பி மாற்றுக் கருத்தாளர்களையும் அரசியல் செயல்பாட்டாளர்களையும் இழிவுபடுத்தி முடக்குவது ஒரு தொழிலாகவே நடக்கிறது. இப்படியான கொடுநிலைக்கு அஞ்சி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் தம்மைத்தாமே சுயதணிக்கைக்கு உட்படுத்தி ஒடுங்கிப்போகும் நிலை உருவாகியுள்ளது.

பா.ஜ.க.வின் கைப்பிள்ளையாக அடிபணிந்துள்ள மாநில ஆட்சி கருத்துரிமையை மறுக்கும் ஜனநாயக விரோதப்பாதையில் இன்னும் ஒருபடி மேலே பாய்கிறது. அது தன்னை எதிர்த்துப் பேசுகிறவர்களை   வாயிலேயே சுட்டுக் கொல்கிறது. விமர்சிப்பவர்களை கொசுக்களும் மூட்டைப்பூச்சியும் நிறைந்த தனிக்கொட்டிலில் அடைத்து சித்ரவதை செய்கிறது. தமது வாழ்வாதாரமான நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள  வாதாடுகிற விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி போலிஸ் வேனில் வீசுகிறது. கழுத்தை அறுத்துக்கொண்டும் தீக்குளித்தும் கிணற்றில் பாய்ந்தும் மக்கள் வெளிப்படுத்தும் துயரத்தை அது பரிகாசத்துடன் ரசிக்கிறது. அந்த மக்களைச் சந்தித்துப் பேசச் செல்லும் அரசியல் கட்சியினரையும் துண்டறிக்கை மூலம் விமர்சிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் சிறையிலடைக்கிறது. ஊடகவியலாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தனது சொந்தத் தொகுதி மக்களைச் சந்திக்கவும் அனுமதிக்காமல் முடக்கிப் போடுகின்றது. இன்னும் எடுத்து முடிக்கப்படாத ஒரு ஆவணப்படத்திற்காக அந்தப் படத்தின் இயக்குநர் வீட்டை பெரும் படையோடு முற்றுகையிட்டு கைது செய்ய துரத்துகிறது - பொய்வழக்கு பதிந்து அலைக்கழிக்கிறது. கண்டனம் தெரிவிக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் ஆள் நடமாட்டமில்லாத பொட்டலை கொடுப்பதோடு அரசை விமர்சிக்கக்கூடாது என எழுதிக்கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கிறது. ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நடக்கும் அரங்கைச் சுற்றி ஸ்ட்ரைக்கிங் போர்ஸ் படையினரை நிறுத்தி இயல்பைக் குலைக்கிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை துய்ப்பதற்கான வாய்ப்பை இந்த மக்கள் வழங்கப் போவதில்லை என்பதை அறிந்து கொண்டதாலோ என்னவோ முடிந்தமட்டிலும் இந்த மக்களைத் தாக்கி சூறையாடிவிட்டுப் போவதென ஆடுகிறது அதிமுக ஆட்சி.

எனில் இங்கு கருத்துச்சுதந்திரம் யாருக்குதான் தேவை என்றொரு கேள்வியை எழுப்பிக் கொண்டோமானால், அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேச விரும்புகிற ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது என்பதே அதற்குரிய பதில். அதிகாரம் இங்கு பாலினம், சாதி, மதம், இனம், மொழி, பொருளாதாரம் என பல நிலைகளில் பற்பல வடிவங்களில் இயங்குகிறது. அதை இயல்பானதென ஏற்றுக்கொள்ளும்படி நெடுங்காலமாக இங்கு பரப்பப்பட்டு வந்துள்ள கருத்தியலை எதிர்த்து மாற்றுக்கருத்தியலை முன்வைக்கத் துணிவோருக்கு இங்கு கருத்துரிமை தேவைப்படுகிறது.  “வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்றமுடியாத உரிமைகளைத் தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காகவென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே ஆளப்படுபவரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்க வேண்டும்” என்கிற அம்பேத்கரின் கூற்றை ஆட்சியாளர்களுக்கு சொல்ல விரும்பும் எவரொருவருக்கும்  உடனடித்தேவை கருத்துரிமை. ஒரு கருத்து மக்களின் மனதை கவ்விப்பிடிக்குமானால் அது ஒரு பெளதிகச்சக்தியாய் மாறிவிடு்ம் என்றார் மார்க்ஸ். அப்படி மனதை கவ்விப்பிடிக்கும்படியாக/ன கருத்தை சொல்லிவிடத் தவிப்பவர்கள் கருத்துரிமை மறுக்கப்படும் நிலையிலும்கூட சொல்லிவிடும் சூட்சுமங்களை அறிவர்.

நன்றி: மகளிர் சிந்தனை, செப் 2018

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...