புதுச்சேரியில் 14.10.2023 அன்று நடைபெற்ற மொழியியல் அறிஞர்
த.பரசுராமன், தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வில் “வாச்சாத்தி வன்கொடுமையும்
தீர்ப்புகளும்” என்கிற தலைப்பில் தோழர் ஆதவன்
தீட்சண்யா ஆற்றிய உரை. உரையைக் கேட்டு தொகுத்தெழுதியவர்: புதுச்சேரி லெனின்பாரதி.
என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, சம்கிராஜ், இளங்கோவன், சுப்புராம் ஆகிய ஐந்து வழக்கறிஞர்கள் தான் வாச்சாத்தி வன்கொடுமை தொடர்பான வழக்கை திறம்பட நடத்தியவர்கள். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் என்று பல இடங்களுக்கும் எவ்வித கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் வழக்கை கொண்டுசென்று திறம்பட நடத்தி நீதியின் தராசு முள்ளை வாச்சாத்தி மக்கள் பக்கம் சாய்த்து வெற்றியை ஈட்டியதில் அவர்களின் அளப்பரிய உழைப்பு மதிக்கத்தக்கது.
நானும்
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் தோழர் சிவக்குமாரும் இன்று காலை
மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் அவர்களைச்
சென்னையில் சந்தித்தோம். 18ஆம் தேதி அரூரில் சிபிஎம், மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து
வாச்சாத்தி தீர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதையும் இன்று மாலை
புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இது தொடர்பான கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்துள்ளதையும் அவரிடம் தெரிவித்தேன்.
வாச்சாத்தி
வழக்கில் வெற்றியை ஈட்டித் தந்த வழக்கறிஞர்களுக்கு சென்னையில் வருகிற வெள்ளிக்கிழமை
பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் என்.ஜி.ஆர். பிரசாத் பேச வேண்டுமென்றும் சிவக்குமார் கேட்டுக்கொண்டார். அதற்கு வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்
“ஒருமுறை நீதிபதி இக்பால் எனக்கு சொன்ன அறிவுரையை இன்று வரை பின்பற்றுகிறேன்” என்றார்.
“தொலைக்காட்சி விவாதமொன்றில் நான் பேசிக் கொண்டிருந்ததை நீதிபதி இக்பால் பார்த்திருக்கிறார்.
அடுத்த நாள் என்னைப் பார்த்தபோது, கோர்ட்டில் பேசுவதாய் இருந்தால் கோர்ட்டில் பேசு..
ரோட்டில் பேசுவதாய் இருந்தால் ரோட்டில் பேசு.. ரெண்டையும் போட்டு உழப்பாதே என்றார்.
அதை அப்படியே இன்றுவரை பின்பற்றுகிறேன். கோர்ட்டில் நாங்கள் பேசிவிட்டோம். நீங்கள்
சென்று மக்களிடம் பேச வேண்டியதை பேசுங்கள். எங்கள் பணி இத்துடன் முடிவடைந்து விட்டது,
இனி எங்களுக்கு ஒரு வேலையும் இல்லை” என்று சொன்னார். மாபெரும் தீர்ப்பினை பெற்றுக்
கொடுத்துவிட்டு எந்த அலட்டலும் இல்லாமல் ஆசுவாசமான, உற்சாகமான மனநிலையோடு எங்களிடம்
பேசினார். ஆமாம், வழக்கறிஞர்களைப் பொறுத்தவரை நல்லதொரு தீர்ப்பினை பெற்றுக்கொடுத்துவிட்டார்கள்.
இதை நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது பொறுப்பு.
இந்தத்
தீர்ப்பு ஏன் இவ்வளவு முக்கியமானது என்பதை வாச்சாத்தி பிரச்சினையை முழுமையாகப் உள்வாங்கிக்
கொண்டால்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியும். வாச்சாத்தியில் நடைபெற்ற குற்றம் என்ன
அது எப்படி வெளியுலகுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். வாச்சாத்தி
பிரச்சினை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு 2011 செப்டம்பர் 29-ல் வெளிவந்தது.
மேல் முறையீட்டின் மீது 2023 செப்டம்பர் 29 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பினை
அப்படியே உயர்நீதிமன்றம் அங்கீகரித்ததோடு இது தொடர்பாக சில விளக்கங்களையும், புதிதாக
சில பகுதிகளையும் சேர்த்து வழங்கியிருக்கிறது.
வாச்சாத்தி
கிராமம் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் (இப்போது பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில்)
அரூர் நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வாச்சாத்தி, சித்தேரி
மலை அடிவாரத்தில் இருக்கிறது. சித்தேரி மலையின் அடிவாரத்தில் என்று தனித்துச் சொல்ல
காரணம் இருக்கிறது. வாச்சாத்தியில் மலைவாழ் மக்களுக்கு கொடுமை நடந்துள்ளது என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச்செயலாளர் தோழர்.ஏ.நல்லசிவன் சொன்னபோது அன்றைக்கு
தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் “வாச்சாத்தி சித்தேரி மலையின் மீதுள்ள
கிராமம். மிகவும் மூப்படைந்துள்ள நல்லசிவன் எப்படி அங்கே சென்று பார்த்திருக்க முடியும்?”
என்று எகத்தாளமாகக் கேட்டார். மிகவும் தர்க்கரீதியாகவும்,
அறிவுப்பூர்வமாகவும் பேசுவதாக நினைத்துக்கொண்டு
அப்படி கேட்டுவிட்டார். அதற்கு நல்லசிவன் “தமிழ்நாடு அரசின் அமைச்சராக இருக்கக்கூடிய
ஒருவருக்கு தமிழ்நாட்டின் வரைபடம் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சினை வந்த பிறகாவது
வாச்சாத்தி எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சித்திருக்க வேண்டும். வாச்சாத்தி
மலை மேல் உள்ள கிராமம் அல்ல. சித்தேரி மலையடிவாரத்தில் உள்ள கிராமம். இப்போதாவது சென்று
பார்த்துவிட்டு வாருங்கள் என்று பதிலடி கொடுத்தார்.
கிழக்குத்தொடர்ச்சி
மலையின் ஒரு பகுதியாகிய சித்தேரி மலை, ஆசியாவிலேயே உயர்தரமான சந்தன மரங்கள் விளையக்கூடிய
பகுதி. அங்கு விளைந்திருந்த சந்தன மரங்களின் மதிப்பு 600 கோடியென்று மதிப்பிடப்பட்டிருந்தது.
எனவே அது பலரது கண்ணையும் உறுத்தியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. குறிப்பாக அப்பகுதியின்
சில அரசியல் பிரமுகர்களும், அதிகார வர்க்கத்தினரும் அது நம் வீட்டு கல்லாவுக்கு வந்தால்
எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப் பார்த்தார்கள். அது கற்பனையாக இருந்திருந்தால்
பரவாயில்லை. அது செயல்படத் தொடங்குகிறது. அங்கே பணிபுரிந்த இரண்டு ரேஞ்சர்களுக்கு மாதம்
ரூ.50 ஆயிரம் கொடுத்துவிட்டால் போதும் ஒரு லோடு சந்தனக் கட்டைகளை எடுத்துக்கொண்டு போகலாம்
என்ற நிலை இருந்திருக்கிறது. வாச்சாத்தி சம்பவம் நடப்பதற்கு முன்பிருந்த நிலை இதுதான்.
அப்படி யார்யாரெல்லாம் சந்தன மரங்களை வெட்டிக்கொண்டு போனார்கள் என்பதை வாச்சாத்தி மக்கள் சொல்லியிருக்கிறார்கள். அது ஊடகங்களிலும் பதிவாகியிருக்கிறது. ஒரு நாள் லாரியொன்று போகிறது. லாரியை ஓட்டிக்கொண்டு போகிறவர் லுங்கியும் பனியனும் அணிந்திருக்கிறார். தலையில் உருமால் கட்டியிருக்கிறார். மலைக்குப் போய் திரும்புய லாரி, ஒரு லோடு சந்தனக்கட்டைகளோடு வருகிறது. ஊர் மக்கள் லாரியை மடக்கி யார் என்று விசாரிக்கிறார்கள். லாரியை ஓட்டிக்கொண்டு வந்தவர் ஒரு கட்டத்தில் தான் பாப்பிரெட்டிபட்டி ரேஞ்சர் என்று சொல்கிறார். அதிர்ச்சியடைந்த மக்கள் ஒரு அதிகாரியாக இருந்துகொண்டு ஏன் இப்படி செய்கிறாய், உன் யூனிபார்ம் என்ன ஆனது அல்லது யூனிபார்மை மாற்றிவிட்டார்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அரூரிலுள்ள வன அதிகாரிகளுக்கு தகவல் சொல்லுகிறார்கள். அங்கிருந்து வந்த சில அதிகாரிகளும் அவர் சொல்லுவது சரிதான், அந்தாள் பாப்பிரெட்டிபட்டி ரேஞ்சர் தான் என்று உறுதி செய்கிறார்கள். பாப்பிரெட்டிபட்டி ரேஞ்சர் தன் பணிக் காலத்திலேயே ஒரு லாரியை எடுத்து வந்து சந்தனக்கட்டையை கள்ளச்சந்தைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை இருந்திருக்கிறது. வனத்துறையினர் மட்டும்தான் எடுத்துக்கொண்டு போகவேண்டுமா என்று காவல்துறையினரும் லாரி எடுத்துக்கொண்டு வந்து சந்தனக்கட்டையை அள்ளிக்கொண்டு போனதாக ஒரு செய்தியுண்டு. இதுதவிர வனத்துறையினருக்கு கையூட்டு கொடுத்து விட்டு வேறு சில பிரமுகர்களும் கட்டை வெட்டுகிறார்கள்.
இது எந்தளவு
உச்சத்துக்குப் போனது என்றால், ஜெயலலிதா வெற்றி பெற்ற தனது பர்கூர் தொகுதிக்கு வருகிறார். அவரை வரவேற்க மாநிலம்
முழுவதிலும் இருந்து குறிப்பாக அருகாமையிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் அமைச்சர்கள்
பர்கூருக்கு திரண்டு வருகிறார்கள். அந்த சமயத்தில் வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு
மிகவும் நெருக்கமானவர் எனச் சொல்லப்படும் நாமக்கல் மஸ்தான் என்பவர் நாமக்கல் அதிமுக
துணைச் செயலாளர் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு 22 கார்களில் பர்கூருக்கு வருகிறார்.
பர்கூர் சென்று அம்மா காலில் விழுந்து வணங்கிவிட்டு கிளம்புகிறார். அவர் வந்த 22 கார்களில்
10 கார்களில் டிக்கி முதல் பின்பக்க சீட் வரை முழுவதுமாக சந்தனக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கர்நாடகாவிலிருந்து கட்சிக்கொடிகளுடன் விழாவுக்கு வந்து கலந்து கொண்டு திரும்பும் கார்களோடு
இந்தக் கார்களும் இணைந்து கர்நாடகாவிற்குள் நுழைந்து சந்தனக்கட்டைகளை உரியவர்களிடம்
சேர்ப்பித்துவிட்டு திரும்பிவிடுகின்றன. இந்த விஷயம் எப்போது தெரிய வருகிறதென்றால்
இதே மஸ்தான் இன்னொரு முறை சந்தனக்கடத்தலில் ஈடுபடும்போது வனத்துறையின் பறக்கும் படையால்
பிடிக்கப்பட்டு விடுகிறார். அப்போது அவர் பறக்கும் படையினரிடம் ஜெயலலிதா பர்கூருக்கு
வந்தபோதே சந்தனக் கட்டைகளை கடத்திக்கொண்டு போனவர்கள் நாங்கள், எங்களிடமே விளையாடுகிறாயா
என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார். இதுவும் பத்திரிகைகளில் பதிவாகியிருக்கிறது.
அவர் மேலும் நான் இதுவரை 60லோடு சந்தனக்கட்டைகளை கடத்தியுள்ளேன் என்றும் கூறியிருக்கிறார்.
கட்டை ஓட்டுவதில் வாச்சாத்தி மக்கள் எப்படி சம்பந்தப்பட்டார்கள்
என்பதை இப்போது பார்ப்போம். வாச்சாத்திக்கு அருகில் உள்ள கலசப்பாடி, அரசநத்தம் , சூரியக்கடை,
நொச்சிக்குட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 36வகை
பட்டியல் பழங்குடிகளில் ஒன்றான மலையாளிகள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இந்த கிராமங்களில்
இவர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். வனத்துறை அதிகாரிகள் வாச்சாத்திக்கு
வந்து வன டிப்போவுக்கு கொண்டுபோக கட்டை வெட்டும் வேலைக்கு ஆள் தேவை என்பது போல தோரணையாக
அழைப்பார்கள். அரசாங்கத்திற்காக நடக்கும் வேலை என்பதுபோல மலைக்கு அழைத்துப் போய் இந்த
மக்களை சந்தன மரங்களை வெட்ட வைத்திருக்கிறார்கள். இந்த மக்களும் அரசுக்குத் தானே செய்கிறோம்
என்று அந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். இந்த மக்கள் 10 லோடு மரம் வெட்டுகிறார்கள்
என்றால் அதில் 2 லோடு தான் டிப்போவுக்கு போகும். மீதி 8 லோடு கள்ளச் சந்தைக்குப் போகும்.
இந்த விஷயம் அந்த மக்களுக்குப் பின்னர்தான் தெரிய வருகிறது.
வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று சொல்லி
அழைத்துக் கொண்டு போய் மரக்கன்று நடுவது, மரம் வெட்டுவது, சாலை போடுவது போன்ற பணிகளுக்கு
வாச்சாத்தி மக்களை வனத்துறையினர் பயன்படுத்திக் கொண்டனர். மேலும் லாரிகள் வந்து போவதற்கு
வசதியாக சாலைகளை அமைத்துக் கொண்டார்கள். உண்மையில் சாலைகளை சீரமைப்பதற்கும், போடுவதற்கும்
ஒருவர் காண்டிராக்ட் எடுத்திருந்தார். ஆனால் இது அரசு உத்தரவு என்று சொல்லி வீட்டுக்கு
ஒருவரை அழைத்து வந்து பாதையை போட்டிருக்கிறார்கள். இது பற்றி அந்த மக்களிடம் கேட்ட
போது இதை செய்வதற்காக கூலி என்று எதுவும் கொடுக்கமாட்டார்கள். கொஞ்சம் கஞ்சி கொடுப்பார்கள்.
அதில் எத்தனை பருக்கைகள் இருக்கிறது என்று எண்ணி விளையாடுவோம் என்று சொன்னார்கள். இப்படியாகத்தான்
அந்த மக்களிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள். கட்டை வெட்டும் போது காசு கொடுப்பார்கள்.
ஏனென்றால் வனத்துறையினருக்கு காசு கிடைப்பதால் காசு கொடுத்திருக்கிறார்கள். விவசாயவேலையில் கிடைப்பதை விடவும் கூடுதலாக கூலி
கிடைக்கும் என்பதால் கட்டை வெட்ட வாச்சாத்தி மக்கள் போயிருக்கிறார்கள்.
லாரி நிறைய லோடு ஏற்றிய பிறகு எஞ்சியுள்ள சந்தன மரக்கட்டைகளை
பாதுகாக்க வேண்டும் என்று அந்த மக்களை நம்ப வைத்து வாசனை வராமல் இருக்க வேண்டுமென்பதற்காக
அதன் மேல் சாணியைப் பூசி அருகிலுள்ள ஆற்றங்ககரையோரமும், ஏரிக்கரையோரமும் குழி தோண்டி
புதைத்து விடுவார்கள். கடத்தலுக்கு உகந்த நேரம் என்று கருதும்போது, “லோடு கிளியராகிவிட்டது”
என்று பொய்சொல்லி மீண்டும் அந்த மக்களை அழைத்து புதைக்கப்பட்ட சந்தனக்கட்டைகளைத் தோண்டி
எடுத்து அனுப்புவார்கள். இதை முழுக்க முழுக்க செய்தது சில அதிகாரிகளும் ஊழியர்களும்
தான். இதை அங்குள்ள மக்கள் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார்கள். மரங்களை வெட்டும்
போது சிதறும் துகள்களை ஸ்பான்ஞ்சில் ஒற்றி எடுத்துவிடுவார்கள். அதுக்கு தனியே ஒரு மார்க்கெட்
உண்டு. வேரையும் விட்டு வைக்காமல் குழி தோண்டி அதையும் பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.
காரணம் அத்தனையும் காசு.
தீர்ப்பு வெளிவந்த பிறகு இதுபற்றி தோழர் டில்லிபாபு பேசும்போது
சொன்னார். மலைக்கிராமம் ஒன்றின் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தலைச்சுமையாக கொண்டு
சென்று வழங்கிவிட்டு இரவு அங்கேயே தங்கியிருக்கிறார்கள். கடுமையான பனி. குளிருக்கு
இதமாக இருக்கட்டும் என்பதற்காக நெருப்பு மூட்டியிருக்கிறார்கள். பார்த்தால் எங்கும்
சந்தன வாசம். என்னப்பா சந்தன மரத்தைப் போட்டு எரிக்கிறீங்களா என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர்கள் என்ன கட்டையோ போங்க, கிடைச்சதை எரிக்கிறோம் என்று சொன்னார்களாம். அதாவது
எரிக்கும் அந்தக் கட்டையின் மதிப்பு என்ன என்பதுகூட இந்த மக்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில்தான் இந்த மக்களுக்கு தாங்கள் வெட்டிக்கொடுக்கும் சந்தனக்கட்டைகளின்
மதிப்பு, அவற்றில் பெரும்பகுதி கள்ளச்சந்தைக்கு போகிறது என்று தெரிய வருகிறது. அங்குதான்
சிக்கல் ஆரம்பிக்கிறது. அந்த மக்கள் விழிப்படைகிறார்கள். ஒரு நாள் லோடு ஏற்றிக்கொண்டு
ஒரு லாரி வருகிறது. லாரியை மடக்கி எங்கே போகிறது என்று கேட்கிறார்கள். அரூர் ஆபீசுக்கு
என்று பதில் வருகிறது. மக்களுக்குச் சந்தேகம். சில இளைஞர்கள் லாரியில் ஏறிக்கொண்டு
அரூர் டிப்போவுக்கு வண்டியை விடச் சொல்லுகிறார்கள். வேறுவழியின்றி வண்டி டிப்போவுக்கு
போகிறது. கள்ளச்சந்தைக்குப் போகாததால் அதிகாரிகளுக்கு பல லட்சம் நஷ்டம். விழிப்படைந்த
மக்கள் இனி சந்தன மரம் வெட்ட வரமாட்டோம் என்று மறுத்து விடுகிறார்கள். முரண்பாடு முற்றுகிறது.
வனத்துறையினர் வேறு ஆட்களை வைத்து மரங்களை வெட்ட ஆரம்பிக்கின்றனர். உண்மையில் மரங்களை
யாருக்காக வெட்டுகிறோம். இதனால் ஆதாயமடையப் போவது யார் என்று தெரிந்த சிலரும் இருந்திருக்கிறார்கள்.
அவர்களும் இதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் வாச்சாத்தியை
சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இதனால்
பலனடைந்துள்ளனர். மரங்களை வெட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்திருக்கிறது.
அரூரில் 1992ஆம் வருடம் மே மாதம் புதிய வனக் கோட்டம் உருவாகிறது.
நாதன் என்ற புதிய அதிகாரி பொறுப்பேற்கிறார். தனது வனக்கோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்.
சித்தேரி மலையின் பல இடங்களில் மரங்கள் வேரோடு தோண்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்.
அடிக்கட்டை கூட அரசாங்கத்திற்கு போகக்கூடாது என்று சந்தன மரங்கள் வேரோடு குழியிலிருந்து
பிடுங்கி எடுக்கப் பட்டிருக்கின்றன. புதிய மண் தெரிகிறது. இதெல்லாம் என்ன என்று கேட்கும்போது
சந்தன மரங்கள் இருந்தன, வெட்டிவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் உள்லூர் அதிகாரிகள்.
யார் வெட்டியது என்று தெரியுமா என்று கேட்கும்போது இங்கே இருக்கிற “மலையாளத்தானுக தான்”
என்கிற பொய் பதிலாக வருகிறது. “குற்றவாளிகள் யார் என்றுதான் தெரிந்துவிட்டதே, பிடிக்க
வேண்டியதுதானே!” என்று கேட்கிறார். அதற்கு “நாங்கள் பிடிக்கப் போனால் ஆண்களும், பெண்களுமா
சேர்ந்துக்கிட்டு எங்களை அடிக்க வர்றாங்க” என்று சொல்கிறார்கள் 50,000 கையூட்டுப் பெற்றுக்
கொண்டு சந்தன மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதித்துவந்த இரண்டு ரேஞ்சர்களும். பெண்கள் உடைகளையெல்லம்
கழற்றிவிட்டு நிர்வாணமாக எங்கள் முன்பு நின்று மிரட்டுகிறார்கள் என்று அபாண்டமாக பொய்யைச்
சொல்லி தாங்கள் செய்த சந்தனத் திருட்டை மறைத்து அப்பாவி வாச்சாத்தி மக்கள் மீது பழி
போடுகிறார்கள். இதுகுறித்து அந்த புதிய அதிகாரி துளியும் யோசிக்கவில்லை. குறிப்பாக
அந்த கிராமத்துக்கு ஒரேயொரு பேருந்து தான் வந்து போகிறது. வேறு போக்குவரத்து வசதி எதுவும்
கிடையாது. படித்தவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அந்த ஊரில் வசிக்கும் ஒருவர் எல்.ஐ.சி.யில்
பணி புரிகிறார். ஒரு பெண் அரூரில் ஒரு அச்சகத்தில் வேலை செய்கிறார். இப்படி ஒன்றிரண்டு
பேர்தான் வெளியே வேலைக்குப் போகிறார்கள். மீதமுள்ளவர்கள் தங்களிடமுள்ள கொஞ்ச நிலத்தில்
விவசாயம் செய்துவருகிறார்கள். கொஞ்சம் பேர் விவசாயக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். சிலர்
மாங்காய் பறிப்பது, புளி நசுக்கப்போவது என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக
வந்த அதிகாரி இந்த மக்களின் வாழ்வாதாரத்தை நேரில் சென்று பார்த்திருந்தால் அவர் அப்படிப்பட்டதொரு
குற்றத்தை செய்வதற்க்கு நிச்சயம் துணிந்திருக்க மாட்டார்.
முறையான போக்குவரத்து வசதி இல்லை. இந்த மக்களால் எப்படி சந்தனக்
கட்டைகளை கொண்டு சென்று விற்க முடியும் என்று கூட அந்த அதிகாரி யோசித்துப் பார்க்கவில்லை.
வீரப்பன் சந்தனத்தைத் திருடினான், யானை தந்தத்தை திருடினான் என்று சொன்னார்கள். அவனால்
காட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. நம்மைப் போல உடை உடுத்த முடியவில்லை. நம்மைப்
போல நாலு வாய் ருசித்துச் சாப்பிட முடியவில்லை. நோய்க்கு மருந்து கிடைக்கவில்லை. இப்படித்தான்
வீரப்பன் இருந்திருக்கிறான். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள சந்தனத்தை யாருக்காக
வெட்டினான்.. யானை தந்தங்களை யாருக்காக திருடினான் என்பதெல்லாம் வெளியே தெரியக்கூடாது
என்பதற்காகத்தான் அவனை சுட்டுக்கொன்றார்கள்.
அதுபோல தான் வாச்சாத்தி சம்பவமும். 600 கோடி மதிப்புள்ள
சந்தனக்கட்டைகளை வெட்டி இந்த மக்களால் எப்படி கடத்திக்கொண்டு போய் விற்றிருக்க முடியும்
என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் அந்த அதிகாரி தனக்குக் கீழே உள்ள அதிகாரிகள்
சொன்னதை வைத்து அந்த ஊரை ரெய்டு செய்ய முடிவு செய்கிறார்.
வன அலுவலர் நாதன் மாவட்ட ஆட்சியரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும்
பலமுறை சென்று சந்தித்து சந்தன மரங்கள் வெட்டப்படுவதை அவர்களிடம் முறையிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், வேலூரில் ஜூன் 19-ஆம் தேதி சீப்
கன்சர்வேட்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாதாந்திரக் கூட்டம் நடைபெறுகிறது. நாதன், முத்தையன்
இருவரும் அவரிடம் வாச்சாத்தி மக்கள் சித்தேரி மலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்,
சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள், அங்கு ரெய்டு நடத்த உங்கள் அனுமதி தேவை
என்று கேட்கிறார்கள். முதன்மை வனக் காப்பாளரும் அனுமதி தருகிறார். அதிகாரியின் ஒப்புதல்
கிடைத்தவுடன் அசிஸ்டெண்ட் கன்சர்வேட்டர் ஆஃப் பாரஸ்ட் சிங்காரவேலுவை நாதன் தொடர்பு
கொள்கிறார். அருகாமையிலுள்ள வனத்துறை ஊழியர்களை அணிதிரட்டுகிறார். எஸ்.பி.யை தொடர்பு கொண்டு
நாங்கள் நாளை வாச்சாத்திக்கு ரெய்டு போகிறோம். நாங்கள் மட்டும் தனியே போனால் எங்களை
அச்சுறுத்துகிறார்கள். எனவே வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்புக்கு காவல்படையை அனுப்பிவைக்க
வேண்டுமென கேட்டுக்கொள்கிறார். வருவாய்த் துறையையும் இதில் இணைத்துக்கொண்டால் பலமாக
இருக்கும் நிர்வாகச்சிக்கல்கள் இருக்காது என்பதற்காக வருவாய்த் துறையினரையும் அழைக்கிறார்.
சிங்காரவேலு தலைமையில் ஒரு 19-ஆம் தேதி இரவே கிளம்பிப்போய்
சித்தேரி மலையில் முகாமிடுகிறார்கள். இதில் 40 பேர் இருந்திருக்கிறார்கள். அடுத்த நாள்
காலை மலை உச்சியிலிருந்து கீழே கலசப்பாடி அரசநத்தம் வழியாக வாச்சாத்திக்கு அவர்கள்
வரவேண்டும். அதேநேரம் நாதன், முத்தையன் தலைமையில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை
என மூன்று துறையினரும் தரை வழியே அரூரிலிருந்து கிளம்பி வாச்சாத்தி வந்து சேரவேண்டும்.
ஒரு போருக்கு திட்டமிடுவதுபோல இரு முனைகளிலிருந்து வாச்சாத்தியை முற்றுகையிடுவது என்று
திட்டம் தீட்டப்படுகிறது. 20-ஆம் தேதி காலை காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம், பாட்டாளி
மக்கள் கட்சி போராட்டம் நடைபெறுவதால் காவல் துறையை அனுப்ப இயலாது என்றும் அவர்கள் தலைமையகத்திற்கு
திரும்பி வந்த பிறகு மதியம் 3 மணிக்குத்தான் அனுப்ப இயலும் என்று கூறிவிடுகிறார். (இந்த
ராமானுஜத்தை தான் பின்னாளில் ஜெயலலிதா டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு தந்து கெளரவித்தார்).
இதனால் நாதன், முத்தையன் குழு குறிப்பிட்ட திட்டப்படி கிளம்ப முடியாமல் போகிறது.
ஆனால் இதையறியாத சிங்காரவேல் குழுவினர் காலை 5 மணிக்கு சித்தேரி
மலையிலிருந்து கீழே இறங்கி வர ஆரம்பிக்கிறார்கள். நாம் சென்று சேரும் நேரத்திற்குள்
நாதனும் மற்றவர்களும் வந்து விடுவார்கள், அப்படியே வளைத்துப் பிடித்துவிடலாம் என்ற
திட்டத்துடன் வருகிறார்கள். மலையிலிருந்து கீழே இறங்கி வரும் அவர்களிடம் மக்கள் யாரும்
சிக்கவில்லை. வரும் வழியில் கைக்கு கிடைத்ததையெல்லாம் அடித்து நொறுக்கிக்கொண்டே வருகிறார்கள்.
மலையில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு மதிய உணவுக்கான பொருட்களை கழுதைமேல் ஏற்றிவந்த
ஊழியரைப் பிடித்து என்ன சந்தனக்கட்டையை ஏற்றி வர பிராக்டிஸ் செய்கிறாயா என்று கேட்டு
கைகளை பின்பக்கம் கட்டி இழுத்து வருகிறார்கள். வழியில் கலசப்பாடிக்குள் நுழைந்து அங்கு
போஸ்ட் ஆபீஸ் முன்பு நின்றிருந்த ஈடி ஊழியர் பெரியசாமியைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்குகிறார்கள்
வாச்சாத்திக்கு அருகிலுள்ள காட்டாற்றுப் படுகைக்கு வந்து
நிற்கிறார்கள். அதற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் வாச்சாத்தி மக்கள் வேலை செய்து
கொண்டிருக்கிறார்கள். இரண்டு பேரை அனுப்பி அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் சின்ன
பெருமாள் என்பவரை அழைத்து வருகிறார்கள். அவரை அடித்து “சந்தனக் கட்டைகளை புதைச்சு வைப்பீங்களாமே,
எங்கடா புதைச்சு வச்சிருக்கீங்க?” என்று கேட்டிருக்கிறார்கள். அவர் தெரியாது என்று
சொன்னவுடன் அவரை ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். இந்தக் குழுவுக்கு தலைமையேற்ற சிங்காரவேலுவுக்கு
உண்மை என்னவென்று தெரியாது. அவர் வேறு மாவட்டத்திலிருந்து இந்த வேலைக்காக வந்தவர்.
அரூர் வழியாக காவல்துறையினரும், வனத்துறையினரும் வந்து தங்களுடன் சேர்ந்துகொள்வார்கள்
என்கிற மிதப்பில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்துகிறார்கள். இந்த சம்பவம் சுமார் பகல்
12 மணி வாக்கில் நடக்கிறது. அவர்கள் பெருமாளை
அடிப்பதை அங்கிருக்கும் மக்கள் பார்க்கிறார்கள். செய்தி பரவியவுடன் அக்கம்பக்கத்தில்
வேலை செய்து கொண்டிருந்த வாச்சாத்தி மக்கள் அங்கே வந்து வயலில் உழவு வேலை செய்து கொண்டிருந்தவரை
ஏன் அடிக்கிறீர்கள் என்று கோபமாக கேட்கிறார்கள். வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாகிறது.
இதில் செல்வராஜ் என்ற பாரஸ்டருக்கு தலையில்
அடிபட்டு விடுகிறது. உடனே சிங்காரவேலு குழுவினர் செல்வராஜை விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிவிட்டார்கள். செல்வராஜூவுக்கு அங்கே
இருந்த வாச்சாத்தி மக்கள் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்கின்றனர். பின்னர் ஜெயபால்
நாடார் என்பவருக்கு சொந்தமான மாட்டுவண்டியில் அவரை ஏற்றி அரூர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக
அழைத்துச் செல்ல தயாராகின்றனர்.
அன்று சனிக்கிழமை என்பதால் வாச்சாத்தி கிராமத்தில் வசிக்கும்
எல்.ஐ.சி.யில் வேலை பார்க்கும் குமரன் அரைநாள் வேலை முடித்து சாப்பாட்டிற்கு வீட்டிற்கு
வருகிறார். அவரைச் சந்திக்கும் உள்ளூர் வனத்துறை ஊழியர்கள் சிலரும், ஊர் பொதுமக்கள்
சிலரும் செல்வராஜூடன் அரூர் ஆஸ்பத்திரிக்கு போகுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். செல்வராஜை
மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு அரூர் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள். குமரன் பின்னாலேயே
தனது மொபெட்டில் செல்கிறார். வாச்சாத்தி கிராமத்திற்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள தாதம்பட்டி என்னும் கிராமம் அருகே சென்றபோது அவர்களுக்கு எதிரே நாதன்,
முத்தையன் இருவரும் சீருடையணிந்த ஊழியர்களோடும், ஜீப் வேன் போன்ற வாகனங்களோடும் சுமார்
250-300 பேருடன் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்
போகிறது என்று யூகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது
போல தெரிகிறது. நாதன் அங்கே இருந்தவர்களிடம் பாரஸ்டர் மீதே கை வைத்துவிட்டார்கள், இவர்களை
சும்மா விடக்கூடாது என்று உசுப்பேத்துகிறார்.
பின்னாட்களில் ஊடகங்களில் சொல்லப்பட்டது என்னவென்றால் பாரஸ்டர் மீது கை வைத்ததால்தான் வாச்சாத்தி மக்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அங்கு சென்றார்கள் என்பதே. உண்மையில் செல்வராஜ் தாக்கப்படவில்லையென்றாலும் அவர்கள் வாச்சாத்தியை அன்று சூறையாடியிருப்பார்கள். அதற்கான தயார்நிலையிலறவர்கள் இருந்தார்கள். செல்வராஜை மாட்டுவண்டியிலிருந்து ஜீப்புக்கு மாற்றுகிறார்கள். ஊருக்குப் போனால் தகவல் சொல்லிவிடுவாய் என்று சொல்லி குமரனை அரூருக்குப் போகச்சொல்லி துரத்தி விடுகிறார்கள். ஆனால் குமரன் வேறு வழியே வாச்சாத்தி கிராமத்திற்குப் போகிறார். அவர் வாச்சாத்தி கிராமத்திற்கு போகும் முன்பே 300 பேர் கொண்ட படை ஊருக்குள் நுழைந்துவிட்டது.
படையினர் ஊருக்குள் நுழைந்ததே நடைபெற்ற அடிதடியை பற்றி விசாரிக்கத்தான்
என்று எண்ணி வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆண்களில் பலரும் பக்கத்திலுள்ள காடுகளுக்குள்
ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். குழந்தைகள், பெண்கள், நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள்
மட்டும் ஊரில் இருந்திருக்கிறார்கள். மதியம் மூன்று மணி வாக்கில் அந்த ஊரில் உள்ள
300 வீடுகளுக்குள் புகுந்து உள்ளே இருந்த குழந்தைகளையும், பெண்களையும், முதியோர்களையும்
வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து ஊரின் மத்தியிலே உள்ள ஆலமரத்திற்கு அடியில் உட்கார
வைக்கிறார்கள். அப்போது செல்வராஜ் என்ற போலீஸ்காரரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக மாட்டுவண்டி
கொடுத்துதவிய ஜெயபால் நாடார் அங்கே வந்து என்ன நடக்கிறது என்று பார்க்கிறார். அவருடைய
இரண்டு மகன்களையும் பிடித்து உட்கார வைத்திருப்பதைக் கண்டு கத்தி கதறுகிறார். பாரஸ்டரை மருத்துவமனைக்கு கொண்டு போக உதவினேனே என்று
கதறுகிறார். நான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவன் இந்த மலையாளத்தார்களுக்கும் எனக்கும்
எந்த சம்பந்தமுமில்லையென கதறுகிறார். ஆனால் அவரால் கடைசி வரை அவரது இரண்டு மகன்களையும்
மீட்கவே முடியவில்லை என்பது தான் சோகம். இரண்டு பையன்களையும் கடுமையாக அடித்து உதைத்ததில்
மூன்று மாதங்களுக்கு பின் ஒரு பையன் இறந்தே போய் விடுகிறான். அந்த பையன் கொடுத்த ஸ்டேட்மெண்டைப்
படித்துப் பார்த்தால் அவன் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எவ்வளவு கொடூரமானது புரியும்.
செல்வராஜை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் போது உடன் போன எல்.ஐ.சி ஊழியர் குமரனின் அம்மாவையும்
பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். அவர் காவல்துறையினரிடம் சென்று, கெஞ்சி கூத்தாடி
தான் ஒரு அரசு ஊழியர் என்று சொல்லி தன் அம்மாவை கஷ்டப்பட்டு மீட்டு வருகிறார். அந்த
நேரத்தில் அவருக்கு தன் அம்மாவைக் காப்பாற்றுவதே பெரும்பாடாக தோன்றியிருக்கலாம். மற்றப்
பெண்களை மீட்க அவர் ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை. மீதியுள்ள குழந்தைகளும், பெண்களும்,
முதியோர்களும் அந்த மரத்திற்கு கீழேயே இருந்திருக்கிறார்கள்.
மாலை 5.30 மணிக்கு அங்கிருந்த பெண்களில் 18 வயதிற்குட்பட்ட பெண்களில் 18 பேரை தெரிவு செய்கிறார்கள். அவர்களில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வி என்ற சிறுமியும் ஒருத்தி. அவர் பின்னாளில் சொல்கிறார்: நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று ஸ்கூல் இருந்திருந்தால் நான் தப்பிச்சிருப்பேன். ஸ்கூல் இல்லாம போனதால இவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். என் வாழ்க்கையே வேறு மாதிரியாகிவிட்டது” என்று. அச்சிறுமி, கர்ப்பிணிப் பெண், பெற்றெடுத்த குழந்தை ஒரு மாதத்திற்கு முன் இறந்துபோன துக்கத்தில் இருந்த தாயொருத்தி, அம்மையால் உடல் முழுக்க கொப்பளித்துப்போன ஒரு பெண் உள்பட 18 பேரை லாரியில் ஏற்றியிருக்கிறார்கள். இவர்களில் 13 பேர் திருமணமாகாதவர்கள். அந்த நேரத்தில் அங்கு 15 பெண்போலிசார் இருந்தும் கூட அவர்களை இந்தப் பெண்களுடன் அழைத்துப்போகாமல், ஆலமரத்தடியில் உள்ள பெண்களிடம் சந்தனக்கட்டைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று விசாரியுங்கள் என்று அதிகாரிகள் அவர்களை இருக்கச் சொல்லிவிடுகிறார்கள். இதை கண்ணம்மாள் என்கிற காவலர் சாட்சியத்தில் சொல்லியிருக்கிறார். லாரி கிளம்புகிறது. லாரியை ஏரிக்கரைக்கு கொண்டு போய் நிறுத்தி பெண்களை கீழே இறக்குகிறார்கள். அந்தப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள்.
செல்வி என்ற அந்தச் சிறுமி கத்தி கூப்பாடு போட்டிருக்கிறாள்.
அம்மை கண்ட பெண் என் உடல் முழுக்க கொப்பளமாக இருக்கிறது, தொடாதீர்கள் கொப்பளம் உடைகிறது
என்று கதறியிருக்கிறாள். யாருடைய கதறலும் அவர்களுக்குள் எந்த ஈரத்தையுடம் சுரக்க வைக்கவேயில்லை.
அப்போது அந்த பக்கத்தில் தேள் ஒன்று ஓடியிருக்கிறது. அதைப் பிடித்து ஜெயா என்ற பெண்
மீது வீசியிருக்கிறார்கள். அந்த அளவு கொடூரமாக நடந்திருக்கிறார்கள். இதையெல்லாம் செய்யக்கூடிய
அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார் என்று கேட்க அங்கே யாரும் இல்லை.
பெண்களை
ஏற்றிக்கொண்டு திரும்பி வந்த அந்த லாரி நிற்காமலே அரூருக்குப் போகிறது. அந்தப் பெண்கள்
அலங்கோலமாக தலைவிரி கோலமாக ஆடைகள் எல்லாம் கிழிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு மரத்தடியில் உள்ள உறவினர்கள் கதறுகிறார்கள்.
அவர்களுக்கு என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.
அந்தப் பெண்களை அரூரிலுள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். மரத்தடியில் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் குழந்தைகள் அனைவரும் கொஞ்சநேரத்தில் அங்கு கொண்டு வரப்படுகிறார்கள். வரும் வழியில் வண்டிக்குள் பெண்கள் பலவித சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள். ஜூன் 20-ஆம் தேதி இரவு முழுவதும் இந்தப் பெண்கள் கடுமையான சித்ரவதைக்கும், வன்கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள். அந்த மக்களின் மரியாதைக்குரிய ஒரு ஆளுமை ஊர்க் கவுண்டர் பெருமாள். பெண்களுக்கு மத்தியில் நிறுத்திவைக்கப்படுகிறார். அவரிடம் “நீ ஒழுங்காக இருந்திருந்தால் ஊர் ஒழுங்காக இருந்திருக்கும். நீதான் தூண்டிவிடுகிறாயா?” என்று சொல்லி அவரிடம் அந்தப் பெண்களின் ஆடைகளை உருவுமாறு கட்டளையிடுகிறார்கள். மறுக்கும் அவருக்கு அடி விழுகிறது. அந்தப் பெண்களெல்லாம் அவரை என் சித்தப்பா, மாமா, அப்பா, தாத்தா என்று அழைக்கும் உறவுக்காரர்கள். அந்தப் பெண்களின் கையில் துடைப்பத்தை கொடுத்து அவரை அடிக்கச் சொல்லுகிறார்கள். பெண்கள் அவரை அடிக்க மறுக்கிறார்கள். வனத்துறையினர் பெண்களைத் தாக்குகிறார்கள். அடிதாளாமல், அந்தப் பெண்கள் அழுதுகொண்டே தங்களுக்கு இப்படி ஒரு அவமானமா என்று துடைப்பத்தால் அவரை அடிக்கிறார்கள். இது விடிய விடிய நடக்கிறது.
அன்று இரவு ஆண், பெண் அனைவருக்கும் சரியான அடி. கணுக்காலில்
சரியான அடி கொடுப்பார்கள். பின்னர் ஒரு திட்டின் மீது ஏறி நின்று குதிக்கச் சொல்லி
குதிக்கச் சொல்லி அடிப்பார்கள். இதனால் என் தம்பி உடலில் என்ன கோளாறு இருந்தது என்றே
தெரியவில்லை. ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்த கொஞ்ச நாளிலேயே என் தம்பி இறந்துவிட்டான்
என்று ஜெயபால் நாடாரின் இன்னொரு மகன் சொல்லியிருக்கிறார். ஜெயிலிலிருந்து வந்த பின்
பல்வேறு சிகிச்சைகள் கொடுத்தும் அவனை காப்பாற்ற முடியவில்லை என்று ஜெயபால் நாடாரும்
சொல்லியிருக்கிறார்.
மறுநாள்
பெண் காவலர்களை மட்டும் உங்கள் ஸ்டேசனுக்குச் சென்று ரிப்போர்ட் செய்யுங்கள் என்று
அனுப்பிவிடுகிறார்கள். 21, 22 தேதிகள் வரை காவல்துறையினரும், வனத்துறைனரும் வாச்சாத்தியிலேயே
இருந்திருக்கிறார்கள். ரிசர்வ் பாரஸ்டில் ஆடு மேய்க்க ஒரு ஆட்டிற்கு ரூ.3/- வரி வசூலிக்கப்படுகிறது.
அப்படியொரு வரியே இல்லை. ஆனால் வசூல். அந்த கணக்கின்படி பார்த்தால் ஏறத்தாழ 2000 ஆடுகள்
இருந்திருக்கின்றன. கோழிகள் 700 இருந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான மாடுகள். வேண்டியமட்டிலும்
ஆடுகோழிகளை அறுத்துத் தின்றுவிட்டு அந்தக்கழிவுகளை ஊரிலுள்ள ஒரே சேந்துக் கிணற்றில்
(குடிநீர்க்கிணறு) கொட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லா வீடுகளையும்
அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். பண்ட பாத்திரங்களை நசுக்கி, தானியங்களை கீழே கொட்டி,
டியூப் லைட்டுகளை அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் உடைந்த கண்ணாடித் துண்டுகளை தானியங்களோடு
கலக்குகிறார்கள்.
பாசனக்
கிணறுகளில் உள்ள டீசல் மோட்டார் இஞ்சினை அடித்து கிணற்றுக்குள் தள்ளியிருக்கிறார்கள்.
அப்பகுதியிலுள்ள பாசனக் கிணறுகளை மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு பாழாக்கி விட்டார்கள்.
ஊரில் உள்ள சேந்துகிணற்றில் உள்ளே எட்டிப் பார்க்கவே முடியாது. குமட்டிக் கொண்டு வரும்.
இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகளானாலும் உலகம் பார்க்கவேண்டும் என்பதற்காக அப்போது
இடிக்கப்பட்ட அதே நிலையிலேயே சில வீடுகள் இன்றும் இருப்பதை பார்க்க முடியும். அந்த
மக்களின் சேமிப்பு முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. நில ஆவணங்களை, கல்விச் சான்றிதழ்களை
எடுத்துப் போட்டு எரித்திருக்கிறார்கள்.
தானியங்கள்
மீது பெட்ரோல் டீசலை ஊற்றி அதையும் எரித்திருக்கிறார்கள். அங்கே போய் விட்டு வந்து
தோழர் சண்முகம் சொன்னார். அங்கே போயிருந்தபோது ஒரு அம்மா தேங்காய் சிரட்டையில் தண்ணீர்
குடிக்கக் கொடுத்திருக்கிறார். தேங்காய் சிரட்டையில் யாருக்கு தண்ணீர் கொடுப்பார்கள்
என்று நமக்கெல்லாம் தெரியும். இவருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. அது ஒரு தீண்டாமையின்
வடிவம் தானே. அந்த மாதிரி எண்ணத்தோடு கொடுக்கிறாரோ என்று எண்ணி அந்த அம்மாவிடம் என்னம்மா
தேங்காய் சிரட்டையில் கொடுக்கிறே என்று கேட்டேன். அதற்கு அந்த அம்மா எங்களிடம் கொடுப்பதற்கு
வேறு பாத்திரம் ஒன்றும் இல்லை என்று அழுதுகிட்டே சொன்னாங்க என்றார். அதுவும் அங்க போன
எல்லாருக்கும் கொடுக்க போதுமான தேங்காய் சிரட்டை இல்லை.
ஜூன் 20, 21 இரண்டு நாட்கள் முழுவதும் இது நடக்கிறது. பின்னர் டிப்போவிலுள்ள கட்டைகளுக்கு முன்னால் இவர்களை உட்காரவைத்து புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் இது ஊடகங்களில் வந்தது. நாங்கள் 55 டன் சந்தனக் கட்டைகளை கைப்பற்றினோம் என்று சொன்னார்கள். 55 டன் சந்தனக் கட்டைகளைக் கைப்பற்றவதற்காகவா இவ்வளவு பெரிய அட்டூழியத்தைச் செய்தீர்கள் என்று நாளை கேள்வி வரக்கூடாதல்லவா. அதற்காக ஏற்கெனவே வெட்டிவைத்திருந்த கட்டைகள் முன் இவர்களை உட்காரவைத்து புகைப்படம் எடுக்கிறார்கள். எஸ்.டி.ஓ.ஆர் சட்டத்தின்படி சந்தன மரங்களை வெட்டி கடத்திய குற்றம், பாரஸ்டர் செல்வராஜை தாக்கிய குற்றம் என்று மூன்று வழக்குகளை இவர்கள் மீது பதிய வைத்து பிடித்துக்கொண்டு போன 133 பெண்கள் 28 குழந்தைகள் உட்பட அனைவரையும் சேலம் ஜெயிலில் ரிமாண்டில் வைத்துவிடுகிறார்கள். அதன் பின் என்ன நடந்தது என்று வெளியுலகுக்குத் தெரியவில்லை. சந்தன மரக் கடத்தலை தடுக்கத்தான் சோதனைகள் நடந்தன என்று ஊடகங்களில் செய்தி வருகிறது. 22-ஆம் தேதி வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரூருக்கு வந்திருக்கிறார். திட்டப்படி எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக வந்திருப்பார் போல. பின்பு சென்னைக்குச் சென்று ஊடகங்களைப் பார்க்கும் போது இதுபோல சம்பவம் நடக்கவேயில்லை என்று சொல்கிறார்.
உண்மை எப்போது தெரியவருகிறது என்றால் தொலைபேசித் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்
- அவரும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கு வாச்சாத்தியில் உறவினர்கள் இருக்கிறார்கள்.
ஊரிலே இப்படி ஒரு அட்டூழியம் நடந்திருக்கிறது என்று அவருக்கு தகவல் கிடைக்கிறது. அவர்
இந்த விஷயத்தை மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு தெரிவிக்கிறார். அந்த சமயத்தில் ஜூலை முதல்வாரம் சித்தேரியில் மலைவாழ்
மக்கள் சங்க மாநாடு நடக்கும் விசயம் தெரிந்து மார்க்சிஸ்ட் கட்சியினருடன் மலைவாழ் மக்கள்
சங்கத்தினரும் சேர்ந்து போய் தலைவர்களிடம் தெரிவிக்கிறார்கள்.
மலைவாழ்
மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர் பாஷா ஜான், மற்றொரு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி
மற்றும் அரூரில் இருந்துவந்த தோழர்கள் அனைவரும் மலைப்பாதையில் 10-12 கிலோ மீட்டர் நடந்தே
வந்திருக்கிறார்கள். வந்து வாச்சாத்தி கிராமத்திற்குள் பார்த்தால் யாருமே கிடையாது.
பின்னர்தான் இந்த விஷயம் தோழர்பி.சண்முகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அவர் வருகிறார்.
அதற்கு முன்னதாக என்ன நடக்கிறது என்றால் அண்ணா திமுக வாச்சாத்தி கிளைக்கழகச் செயலாளர்
குணசேகரன் என்பவர் அரூருக்கு வந்த அமைச்சரைப் பார்த்து எங்கள் ஊரில் இப்படியெல்லாம்
நடக்கிறது என்று முறையிடுகிறார். ஆனால் பயனில்லை. எனக்குத் தெரிந்து அண்ணா திமுக ஆட்சியில்
நடந்த இந்த அட்டூழியத்திற்கு எதிராக முதல் புகார் கொடுத்தவர் அண்ணா திமுக ஊழியர் தான்.
இன்னொருவர் போஸ்ட் ஆபீசில் பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்டான்லி முருகேசன் என்பவர். அவர்
இப்போது கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார். அவர் அந்த ஊரில் பெண்ணெடுத்தவர். இவையனைத்தும்
தனிப்பட்ட முறையில் ஆதங்கத்தில், ஆற்றாமையால் கொடுக்கப்பட்ட புகார்கள். அமைப்பு ரீதியாக
எந்த விஷயமும் நடக்கவில்லை.
மலைவாழ்
மக்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் தெரிந்தவுடன்
அவர்கள் ஊருக்கு வந்து அங்கிருந்த வயதான மூதாட்டியையும், பெரியவரையும் சந்தித்துப்
பேசியிருக்கிறார்கள். எல்லாரும் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு, மலைப் பகுதிகளிலும்
காடுகளிலும் பதுங்கியிருந்த மக்களை வரவழைப்பதற்கான அழைப்பாக அங்கிருந்த குடிநீர் தொட்டியின்
மீது ஏறி செங்கொடியை ஆட்டி -. 3 மணி நேரத்திற்குப் பிறகு மலையிலிருந்து அங்கங்கு மறைந்திருந்த
45 பேர் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார்கள்.
நாங்கள் எல்லோரும் காடுகளுக்குள் ஓடிவிட்டோம். எங்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாது. மற்றவர்களை பிடித்துக்
கொண்டு போனார்கள். எல்லோரும் சேலம் ஜெயிலில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால்
தான் நடந்தது என்னவென்று தெரியும் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அந்த அடிப்படையில்
அன்றைக்கே ஒரு காரை அமர்த்திக்கொண்டு சேலம் ஜெயிலுக்குப் போகிறார்கள்;. தோழர். சண்முகம்
“அந்த நேரத்துல என் பாக்கெட்டுல பத்து /பன்னிரண்டு ரூபாதான் இருந்தது. அதை வச்சுகிட்டு
எப்படி சேலத்துக்கு வண்டியமர்த்தினேன்னு இப்பவரைக்கும் தெரியலே”ன்னார்.
அந்த நேரத்துல நம்ம தலையில தீ பிடிச்ச மாதிரி ஒரு பதட்டம்
வேணுமில்ல. ஒரு அட்டூழியம் நடந்ததுன்னு கேள்விபட்ட அடுத்த நிமிடமே போயி நின்னாதானே
கம்யூனிஸ்டு கட்சி…? அந்த நிமிசத்துல கெளம்பியிருக்காங்க. நேரா சேலம் ஜெயிலுக்கு போயிருக்காங்க..
அங்க ஜெயிலர்.. லலிதாபாய். பார்வையாளர் நேரம்
கடந்துவிட்டது. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ தோழர் எம்.அண்ணாமலைய மதிச்சு அந்தம்மா பென்களை
சந்திக்க அனுமதி கொடுத்திருக்காங்க. அந்தப் பெண்கள் மீது இந்தம்மாவுக்கு இருந்த பரிவுணர்ச்சி
காரணமாக நேரம் கடந்து போச்சுக்கற விதிகளையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு இவர்களைச் சந்திப்பதற்கு
ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க. “ஜூன் மாதம்
21-ஆம் தேதி இங்க கொண்டுவந்து அடைச்சாங்க. அதுக்குப் பிறகு இந்த மக்களத் தேடி பார்க்க
வருகிற முதல் ஆளுங்க நீங்கதான்”னு தலைவர்கள்கிட்ட அந்த அம்மா சொல்லியிருக்காங்க. “நான்
என் பணிக்காலத்தில் எத்தனையோ பெண்களை பாத்திருக்கேன். ஆனால் இந்தப் பெண்கள் ரொம்ப மனஉளைச்சலோட
இருக்காங்க. நான் அவங்கக்கிட்ட என்ன நடந்ததுன்னு விசாரித்தேன். அந்தப் பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த பெண்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.
உங்கள் மூலமாக நடக்குமென்று நம்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அவர்களைச் சந்தித்த போதுதான் பாலியல் வன்கொடுமை நடந்த விவரங்களை
அவர்கள் சொல்லியிருக்காங்க. பிறகு நேராக தர்மபுரி கலெக்டர் பங்களாவுக்கு இரவு 11 மணிக்கு
போயிருக்காங்க. வாட்ச்மேன் ஐயா தூங்கறாரு என்று
சொல்லியிருக்காரு. ஒரு ஊரே காணாம போயிருக்கு. போயி உங்கய்யாவை வரச்சொல்லு என்று சொல்லியிருக்காங்க.
கலெக்டர் பின்னர் வருகிறார். அவரிடம் நடந்ததைச் சொல்லியிருக்காங்க. அவரு கலெக்டரு.
அவரு சொல்லறாரு.. நடந்தது என்னன்னு எனக்குத் தெரியாதுன்னு. பின்னாடி அந்த ஊரில் நடந்த
பொதுக்கூட்டத்துல திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தோழர் வி.ராமசாமி “ஏய் தசரதா,
ஒரு ஊரே அழிஞ்சிருக்குது. அது தெரியாம நீ கலெக்டருன்னு என்ன பண்ணிக்கிட்டு இருந்தே”ன்னு
ஆவேசமா கேட்டிருக்கிறாரு..
மாதர் சங்கம் சார்பில் மைதிலி சிவராமன் உள்ளிட்ட தோழர்கள்
சென்னையில் எஸ்.சி., எஸ்டி கமிஷன் தென்மண்டல இயக்குநர் பாமதி ஐ.ஏ.எஸ்.அவர்களைச் சந்தித்து
முறையிடுகிறார்கள். அந்த முறையீட்டின் பெயரில் அந்தம்மா ஆகஸ்ட் 6,7,8 தேதிகளில் வாச்சாத்திக்கு
வர்றாங்க. வந்து சந்தனக் கடத்தல் குற்றங்களை இவர்கள் செய்தார்களா இல்லையா என்றெல்லாம்
விசாரிக்கவில்லை. என்ன பாத்தாங்கன்னா ஊர் எப்படி அழிக்கப்பட்டிருக்கிறது.. ஊரே எப்படி
வெறிச்சோடி போயிருக்கிறது.. ஊருக்குள் யாருமே இல்லாத போது எப்படி ஊருக்குள் இப்படி
நாசம் செய்யப்பட்டிருக்கிறது.. விவசாய நிலங்கள் கிணறுகள் எப்படி பாழ்படுத்தப் பட்டிருக்கிறது..
அங்கிருந்த கால்நடைகளெல்லாம் எப்படி களவாடப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தையெல்லாம்
பதிவு பண்ணி எஸ்/எஸ்டி கமிஷனுக்கு அனுப்பி விட்டார்கள்.
சி.பி.எம்.கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் நல்லசிவன் சார்பில்
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில்
இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி பத்மினி ஜேசுதுரை. ஒரு பெண் முதலமைச்சராக இருக்கக்கூடிய
மாநிலத்தில் ஒரு பெண் நீதிபதியிடம் வழக்கு போகிறது. அவர் “இவர்களெல்லாம் அரசு ஊழியர்களாக
இருக்கிறார்கள். டீசண்ட் பெல்லோஸ். இவர்கள் இப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை”ன்னு
சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கு எவ்வளவு நம்பிக்கை பாருங்கள். இதே மாதிரிதான்
வெண்மணி கேசிலும் தீர்ப்பு சொன்னார்கள். அவரு காரெல்லாம் வச்சிருக்காரு. இது மாதிரி
குற்றங்களையெல்லாம் செஞ்சிருக்க மாட்டாருன்னு சொன்னாங்க. அந்த மாதிரிதான் இந்த அம்மா
சொல்றாங்க. எடுத்த எடுப்பிலேயே வழக்கை தள்ளுபடி பண்ணறாங்க. அதன் பிறகு தோழர் நல்லசிவன்
உச்ச நீதிமன்றம் போய் வழக்கு தொடுக்கிறார். உச்சநீதிமன்றம் சொல்கிறது இதில் முகாந்திரம்
இருக்கிறது. உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்கவேண்டும்
என்று.
பாராளுமன்றத்தில் தோழர்.நல்லசிவன் கேள்வி எழுப்புகிறார்.
வேறு சில கட்சியின் எம்.பி.க்களும் ஆதரித்துப் பேசுகின்றனர். உச்சநீதிமன்றம் விசாரிக்கச்
சொன்னதின் அடிப்படையிலும், பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டதின் அடிப்படையிலும்
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. என்ன நடந்தது என்பதற்கு ஒரு அறிக்கை வேண்டும் என்பதால்
சென்னை உயர்நீதிமன்றம் எஸ்/எஸ்டி கமிஷனிலிருந்து பாமதியை நேரில் சென்று விசாரித்து
அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. வாச்சாத்தி கிராமத்திற்கு பாமதி மீண்டும்
செல்கிறார். விசாரித்து அறிக்கையினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இதற்கிடையில் சிறையில் இருந்த வாச்சாத்தி மக்கள் பிணையில்
வெளியே வருகிறார்கள். கிராமத்திற்கு வந்து பார்த்தால் தண்ணீர் குடிப்பதற்கு ஒரு சொம்பு
கூட கிடையாது. பண்ட பாத்திரம் எதுவும் கிடையாது. மாத்திக்க உடுப்பு கிடையாது. போர்த்திக்க
துணி கிடையாது. எதுவுமே கிடையாது. எப்படி வாழ்க்கையை தொடங்குவது என்றே அந்த மக்களுக்குத்
தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பல்வேறு ஜனநாயக அமைப்புகளுடன்
சேர்ந்து வாச்சாத்தி மக்களுக்காக மூட்டை மூட்டையாக பொருட்களை வாங்கிக் கொண்டு போய்
நேரில் கொடுத்தார்கள். பாருங்கள் உதவி செய்யும் போது மக்களுக்கு எது தேவை என்று தெரிந்து
உதவ வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முகாமுக்கு நம் நண்பர்கள் சிலர் ஆர்வமாக எதையெதையோ
வாங்கிக்கொண்டு போனார்கள். வேறு ஏதாவது தேவையா என்று கேட்டபோது கக்கூசுக்கு போவதற்கு
ஒரு பக்கெட்டும் மக்கும் கொடுங்க என்று அந்த மக்கள் கேட்டார்களாம். ஆனால் நமது தோழர்களுக்கு
நடைமுறை அறிவு இருக்கின்ற காரணத்தாலே வாச்சாத்தி மக்களுக்கு சமைப்பதற்குத் தேவையான
பாத்திரங்கள், குழந்தைகளுக்கான உடைகள், குளிர் ஆடைகள், சாப்பாட்டுக்கான பொருட்கள்,
மளிகை சாமான்களை மூட்டை மூட்டையாக வாச்சாத்தியில் இறக்கினார்கள். தோழர்கள் அண்ணாமலை,
டில்லிபாபு, மலைவாழ்மக்கள் சங்கத் தோழர்கள், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் போக்குவரத்து
இல்லாத காரணத்தால் தலைச்சுமையாக அங்கிருக்கும் கிராமங்களுக்கு இந்தப் பொருட்களை கொண்டு
சேர்த்தார்கள். ஏனென்றால் போக்குவரத்தை நிறுத்திவிட்டார்கள். போய்க்கொண்டிருந்த ஒரு
பஸ்ஸையும் நிறுத்தி விட்டார்கள். எதுவுமே கிடையாது. தலைச்சுமையாக கொண்டு சென்று அந்த
மக்களுக்கு விநியோகித்து மக்கள் மீண்டும் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குவதற்கு தங்களால்
ஆன எல்லா உதவிகளையும் செய்கிறார்கள்.
ஆகஸ்ட் 22-ஆம் தேதி அரூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான
18 பெண்களும் புகார் கொடுக்கிறார்கள். எங்களுடைய இந்த நிலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து
தண்டனை வழங்க வேண்டுமென எழுத்துபூர்வமான புகாரை காவல் நிலையத்தில் கொடுக்கிறார்கள்.
அரூர் காவல் நிலைய ஆய்வாளர் நீங்கள் புகாரில் சொல்லியிருக்கும் அனைவரும் என் மேலதிகாரிகள்.
என்னால் ஒன்றும் செய்ய இயலாது கூறிவிடுகிறார். 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொடுக்கப்பட்ட
அந்தப் புகார் மீது 2023 ஆம் வருடம் அக்டோபர் 14-ஆம் தேதி வரை எப்.ஐ.ஆர் போடப்படவில்லை.
இப்பவரைக்கும் கிடையாது. இந்த சூழ்நிலையில்தான் பாமினி ஐ.ஏ.எஸ் கொடுத்த அறிக்கையின்
பெயரில் விசாரணையை உயர்நீதிமன்றம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கெனவே
செங்கோட்டையன், ஜெயலலிதா இவர்களெல்லாம் மறுப்பு தெரிவித்து அறிக்கை விடுகிறார்கள்.
நீதிமன்றத்திலும் எதுவும் நடகவில்லையென்று மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் நீதிபதி இவ்வளவு பெரிய அட்டூழியம் நடந்தது என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் எதுவும் நடக்கவில்லையென்று சொல்லுகிறீர்கள். உங்களை நம்பி இந்த வழக்கை எப்படி
ஒப்படைக்க முடியும் என்று சொல்லி சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடுகிறார். 1995-ஆம் ஆண்டு
பிப்ரவரி 24-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்த உத்திரவு பிறப்பிக்கப்பட்ட
உடனேயே ஜெயலலிதா கொந்தளித்துப் போய்விடுகிறார். சிபிஐ சொர்க்கத்திலிருந்து வந்ததா அவர்கள்
குற்றம் ஏதும் செய்யமாட்டார்களா என்று கேட்கிறார். இது மாநில உரிமையில் தலையிடுவதாகும்
என்று கூறுகிறார். ஏழு ஆண்டுகளுக்குள் தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளை சிபிசிஐடி-யே
விசாரிக்கும் என்று நாங்கள் இப்போது தான் சட்டத்தை திருத்தியுள்ளோம். அதன்படி பார்த்தாலும்
சிபிஐ வசம் ஒப்படைக்க முடியாது என்று நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதிடுகிறார்கள். உயர்நீதிமன்றம் அதைக் கேட்கவில்லை.
உச்சநீதிமன்றத்திற்குப் போகிறார்கள். சிபிஐ விசாரணையை தடுக்க வேண்டும் என்று. ஆனால்
அதற்கு முன்பாகவே சி.பி.ஐ டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் ஒரு குழுவை விசாரணை பொறுப்பை
எடுத்துக்கொண்டது.
ஜெகநாதன் குழு 13 மாதங்களில் நடந்த விஷயங்கள் அனைத்தையும்
விசாரணை செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. அந்தப் பெண்கள் குற்றவாளிகளை அடையாள
அணிவகுப்பு மூலமாக காண்பிக்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். அடையாள அணிவகுப்பு மூன்று முறை
செங்கோட்டையன் தலையீட்டினால் நடக்காமலேயே போய் விட்டது. அணிவகுப்புக்கு வருகிறார்கள்.
குடித்து விட்டு ரகளை செய்கிறார்கள். நடத்தவே முடியவில்லை. ஒரு முறை அடையாள அணிவகுப்பை
நடத்தவேண்டிய பொறுப்பிலுள்ள ஊத்தங்கரை நீதிபதி சொல்லுகிறார் “என்னுடைய உயிருக்கே உத்தரவாதம்
இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களை இந்தக் குற்றவாளிகளுக்கு முன்னால் நிறுத்தினால்
அவர்களுக்கு மீண்டும் ஏதேனும் ஒரு ஆபத்து அசம்பாவிதம் நடந்தால் ஏற்கெனவே வாழ்க்கையில்
பல துன்பங்களை கடந்து வந்திருக்கிற அவர்களை மீண்டும் அத்தகைய நிலைக்கு ஆளாக்க நான்
துணியவில்லை. எனவே அதை நான் நடத்த முடியாது” என்று மூன்றாவது முறையும் ரத்துசெய்துவிட்டு
உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதுகிறார்.
உயர்நீதிமன்றத்திற்கு போய்ச் சேர்ந்த அந்தக் கடிதத்தைப் பார்த்தப் பிறகு உயர்நீதிமன்றம் தலைமைச் செயலருக்கும், டி.ஜி.பி.க்கும் வனத்துறை உயரதிகாரிக்கும் உத்தரவிடுகிறது. சாட்சிகளுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், நீதிபதிக்கும் இந்த அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று சொல்லியது. சேலம் மத்திய சிறையிலே நான்காவது முறையாக அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த அணிவகுப்பு நடந்த விதத்தையெல்லாம் நீங்கள் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இப்போ வரும்போது நீங்க எங்க டீ குடிச்சீங்கன்னு கேட்டா கூட நமக்கு மறந்து போயிருக்கும். ஆனா இந்த அணிவகுப்பை பாருங்கள். எப்படி நடந்தென்றால் மொத்தம் 269 பேர் குற்றவாளிகள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் இருப்பது 269 பேர். அவர்கள் தான் அங்கே அடையாள அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். கோர்ட்டு நடைமுறை என்னவென்றால் 5:1 என்கிற படி இவர்கள் நிற்க வேண்டும். 250 பேருக்கு இடையிலே குற்றம்சாட்டப்பட்ட 50 பேர் நிற்பார்கள். அப்படின்னா 269 பெருக்கல் 5 அப்படிங்கற கணக்குபடி நிற்பார்கள். வன்கொடுமைக்கு ஆளான பெண் இறங்கி வந்து அந்த 250 பேரையும் வரிசையில் பார்த்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவன் யாரென்று அடையாளம் காட்ட வேண்டும். ஒரு முறை அடையாளம் காட்டினால் போதாது. அடையாளம் காட்டிவிட்டு அவர் போய் விடுவார். அந்த அடையாளம் காட்டப்பட்ட நபர் இந்த முறை 110 இடத்தில் நிற்கிறார் என்றால் அடுத்த முறை 242-ஆவது இடத்தில் நிற்பார். இந்தம்மா சுற்றி வந்து 242-ஆவது இடத்தில் நிற்பவரை சரியாக கண்டுபிடித்து சொல்லணும். மூன்றாவது சுற்றில் அவர் வேறு இடத்தில் நிற்க வைப்பார்கள். மூன்று முறையும் அடையாளம் கண்டுபிடித்து சொன்னால்தான் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு சில பேர் அடையாளம் காட்டப்படுகிறார்கள். இப்படியாக 269 பேரும் கலந்து நிறுத்தப்பட்டு அவர்களில் பாலியல் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள்.
17 பேர் கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்திற்கு சென்று முன் ஜாமீன்
கேட்கிறார்கள். சி.பி.ஐ நீதிமன்றம் 17 பேரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்கிறது. அடையாள
அணிவகுப்புக்கு வரக்கூடிய பெண்களை வரவிடாமல் தடுப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம்
பேசப்படுகிறது. எல்லோருக்கும் அரசு வேலைக்கு உத்திரவாதம் கூறப்படுகிறது. ஊருக்கு என்னென்னவோ
செய்து தருவோம் என்று ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. அந்த மக்கள் மீது போடப்பட்ட மூன்று
வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் துச்சமாக மதித்து
இந்தப் பெண்கள் சாட்சி சொல்ல வருகிறார்கள். அப்படி வருபவர்களை அச்சுறுத்தி நிறுத்துவதற்கு
பல முயற்சிகள் செய்யப்படுகிறது. இந்த ஒவ்வொரு அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்ட போதும்
வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன் அந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள டிராவலர்ஸ் பங்களாவில்
தங்கிக்கொண்டு தனது திருப்பணியை சிறப்புற செய்தார் என்பது கூடுதல் தகவல்.
அடையாள அணிவகுப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சியும், சி.ஐ.டி.யூ சங்கமும் எப்படியெல்லாம் இந்தப் பெண்களைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றால், அந்தப் பெண்களுக்கு வேட்டி சட்டை அணிவித்து உருமாலை கட்ட வைத்து டெப்போவில் ஏற்றி ஆட்டோவில் ஏற்றி பல இடங்களில் தங்க வைத்து யூகிக்க முடியாத இடங்களிலும் தோழர்களின் வீடுகளிலும் தங்க வைத்து ஒளித்து ஒளித்து மறைத்து மறைத்து மாறு வேடங்களில் கூட்டி வந்து இந்தப் பெண்களை அணிவகுப்பில் கலந்துகொள்ளச் செய்திருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அவ்வளவு பேர் மத்தியிலும், தெளிவாக யாரால் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அடையாளம் காட்டுகிறார்கள். அடையாளம் காட்டப்பட்ட பின்பும் தீர்ப்பு சொல்லப்படவில்லை.
இதற்கிடையில் இன்னொரு விஷயம் நடந்தது. எஸ் / எஸ்டி வன்கொடுமை
தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென்ற
கோரிக்கையை மலைவாழ் மக்கள் சங்கம் எடுத்தது. அதனடிப்படையிலே கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தையே
சிறப்பு நீதிமன்றமாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. பின்னர் விசாரணை தர்மபுரியில் நடைபெற்று
2011 செப்டம்பர் 29 அன்றுதான் தீர்ப்பு வருகிறது.
தீர்ப்பு சொல்லப்பட்ட
நாளில் நீதிமன்ற வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள்
என்று தெரியவில்லை. தீர்ப்பு சொல்லப்பட்ட அந்தக் கணத்தில் அந்த ஊர் மக்கள் நீதிமன்ற
வளாகம் முழுவதும் அழுது புரண்டார்கள். நீங்கள் நினைத்துப் பாருங்கள். நம்ம ஆளுங்க மேல
எத்தனையோ வழக்குகளைப் போடுவார்கள். சொந்த ஆதாயத்துக்காக கூட கேஸ் போடுவோம். சொத்துக்காகவோ,
காசுக்காகவோ கேஸ் போடுவோம். ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்படைந்து இது என்னடா பெரிய டார்ச்சரா
போச்சுன்னு நினைத்து அந்த வழக்கை திரும்பப் பெற நினைப்போம். ஆனால் இந்த மக்கள் எந்த
ஆதாயத்தையும் கேட்கவில்லை. கொடுக்கப் போகின்ற நஷ்டஈடு பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
தங்கள் மீது சுமத்தப்பட்ட பழியை துடைத்தெறிய வேண்டும் என்பதே அவர்களது மனதில் ஆழமாக
படிந்திருந்தது. முதலாவதாக சந்தனக் கட்டைகளை திருடினார்கள் என்ற பழி சுமத்தப்பட்டது.
இரண்டாவதாக செல்வராஜ் என்கிற பாரஸ்டரை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று ஒரு பழி,
மூன்றாவதாக இந்த மக்கள் நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டு தங்கள் சொத்துக்களை தாங்களே சேதப்படுத்திக்
கொண்டார்கள் என்ற பழி. பாலியல் வன்கொடுமையே நடக்கவில்லை என்றும் இந்த மக்கள் பொய்யர்கள்
என்றும் மோசடிக்காரர்கள் என்றும் பழி சுமத்தப்படுகிறது. சுமத்தப்பட்ட பழிகளிலிருந்து
தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும், தங்கள் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு
காரணமானவர்கள் தண்டிக்கப்ப்ட வேண்டும். சட்டத்தின் முன்னாலும், சமூகத்தின் முன்னாலும்
அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த ஊர்
மக்கள் 19 ஆண்டுகள் விடாப்பிடியாக உறுதியாக நின்று மார்க்சிஸ்ட் கட்சியும், மலைவாழ்
மக்கள் சங்கமும் நடத்திய அத்துணை போராட்டங்களிலும் வண்டி வண்டியாக வந்து கலந்து கொண்டார்கள்.
சற்றும் மனச்சோர்வு அடையாமல் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள்.
ஒரு விடாப்பிடியான போராடும் தன்மை என்பது இயக்கத்திற்கும்
வேண்டும் மக்களுக்கும் வேண்டும். அது இரண்டும் இங்கே இணைந்திருந்ததை நம்மால் பார்க்கமுடிந்தது. அப்படிப்பட்ட கட்டத்தில்தான் அந்தத் தீர்ப்பு வந்தது. வழக்கை போட்டுவிட்டு
உட்கார்ந்திருந்தால் அந்தத் தீர்ப்பு வந்திருக்காது. இந்த வழக்குக்கு தொடந்து ஒரு புற
அழுத்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் கொடுத்ததின்
விளைவாக சிறப்பான தீர்ப்பை பெற முடிந்தது. கூடுதலாக சட்ட நிபுணத்துவம் வாய்ந்த தோழர்கள்
என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை போன்றவர்கள் எல்லாம் ஆற்றிய அளப்பரிய பணி எல்லாம் சேர்த்துதான்
இந்த தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. அந்த தீர்ப்பில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய
விஷயம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அரசு ஊழியர்கள். ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்ளனர்.
பாலாஜி, நாதன், முத்தையன், அரிகிருஷ்ணன், சிங்காகாரவேலன் ஆகிய 5 ஐ.எப்.எஸ் அதிகாரிகள்.
அரூர் டி.எஸ்.பி. நல்லமுத்து இருக்கிறார், தாசில்தார் இருக்கிறார். கடைநிலை வன ஊழியர்கள்
இருக்கிறார்கள். காவல்துறையினர் இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரியும் ஐபிஎஸ் அதிகாரியும்
இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் என்று சி.பி.ஐ.ஆல் அடையாளம் காணப்பட்டவர்கள்
269 பேர். தர்மபுரி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று
தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தான் அனைவருமே
அரசு ஊழியர்கள். தீர்ப்பு வரும் போது 54 பேர் செத்துப் போய்விட்டார்கள். ஆனால் அவர்களும்
குற்றவாளிகள்தான். செத்துப் போய்விட்டதால் தண்டனை மட்டும்தான் இல்லை. மீதியுள்ள
215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் பட்டது. தீர்ப்பளிக்கப்பட்ட சூழலில் அவர்கள்
அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்ட போது குற்றவாளிகளின் குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்துவதற்கு அவர்களுக்கும் உரிமையிருக்கிறதல்லவா.
அதைப் போய் நாம் எப்படி தடுத்து நிறுத்த முடியும். அவர்கள் எல்லோரும் அரசு வேலை பார்க்கப்போய்
தேவையில்லாமல் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று அவர்களது குடும்பத்தினர்
நினைத்தார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் பிணையில் வெளியில்
வருகிறார்கள். மேல்முறையீட்டுக்குப் போகிறார்கள்.
அதிமுகவை வீழ்த்தி அமைந்த திமுக அரசு வாச்சாத்தி பிரச்னையில்
போதிய கவனம் செலுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவினால்
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை 48 மணி நேரம் கூட உள்ளே வைக்காமல் திமுக அரசு விடுவித்தது.
சிறப்பு நீதிமன்றம் சொன்ன தீருதவியை திமுக அரசு நினைத்திருந்தால் கொடுத்திருக்க முடியும்.
தீர்ப்பு சொன்ன பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைக்கு ரூ.25,000/- கொடுப்பதாக
சொன்னபோது அதை வாச்சாத்தி மக்கள் ஏற்க மறுத்து விட்டார்கள்.
குற்றவாளிகள் மேல் முறையீட்டுக்குப் போனார்கள். அது பதினொரு
ஆண்டு காலத்தை எடுத்துக்கொண்டது. 2023 அதே செப்டம்பர் 29 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி
வேல்முருகன் மேல்முறையீடு மீது தீர்ப்பு சொல்லுகிறார். அதற்கு முன்பாக இந்த ஆண்டு மார்ச்
மாதத்தில் நீதிபதி வேல்முருகன் வாச்சாத்திக்கு நேரில் சென்று பார்வையிட்டு உறுதிபடுத்திக்கொள்ள
வேண்டியவற்றை உறுதிப்படுத்திக்கொண்டு திரும்பிய பிறகே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். சிறப்பு நீதிமன்றத்தால்
269 பேரும் குற்றவாளிகள் தான் என்று வழங்கப்பட்ட
தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததோடு கூடுதலாக சில விசயங்களை கவனப்படுத்தியுள்ளது.
அப்போது ஆட்சித் தலைவராக இருந்த தசரதன் ஐ.ஏ.எஸ், அப்போதைய காவல் கண்காணிப்பாளராக இருந்த
ராமானுஜம் இருவரும் தங்கள் கடமையை சரிவர செய்ய தவறியிருக்கிறார்கள் என்றும், வழக்கின்
சாட்சியங்களை மறைப்பதற்கு துணை போயிருக்கிறார்கள் என்றும் சொல்லி அவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூடுதலாக சொல்லப்பட்டிருக்கிறது. தவிர பாலியல் வன்கொடுமைக்கு
ஆளான பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க கூடுதலாக உத்திரவு
பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையில் பாதியை குற்றவாளிகளிடம் வசூலிக்க வேன்டும்
என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 18 பெண்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு
அரசு வேலை தரப்பட வேண்டும் என்ரும் தீர்ப்பு சொல்கிறது. அது தவிர ஒட்டுமொத்த ஊர் மக்களுமே
வன்கொடுமைக்கு ஆளானவர்கள் என்பதால் அவர்களுக்கோ அவர்களின் குடும்ப உறுப்பினருக்கோ அரசு
வேலை அல்லது சுயதொழில் நடத்திட உதவி வழங்கவேண்டும் என்பதுடன் அந்த ஊருக்கு இது வரை
என்ன உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் என்னென்ன உதவிகள் மேற்கொண்டு செய்ய முடியும்
என்பதையும் ஒரு திட்ட அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
நான் சொன்ன எதுவுமே புதிதல்ல, நினைவூட்டல் மட்டுமே. ஆனால்
நான் வலியுறுத்தி சொல்ல வேண்டியது என்னவென்றால் நீங்கள் அந்த ஊருக்கு தயவுசெய்து ஒரு
முறை சென்று பாருங்கள். இந்த ஊர் மக்கள்தான் இவ்வளவு வீரியத்துடன் போராடினார்களா என்று
மலைத்துப் போவீர்கள். ஆனால் 30 வருசத்துக்கு முன்னால் இந்த ஊர் எப்படி இருந்திருக்கும்
என்று நினைத்துப்பாருங்கள். போய்க் கொண்டிருந்த ஒரு பேருந்தும் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில்
இந்த மக்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
தீர்ப்பு வந்த மறுநாள் தோழர் சண்முகம் அந்த ஊருக்கு வந்து
அவர்கள் முன் பேச ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து மாலைமாலையாக கண்ணீர் விட்டபடி
அங்கங்கே நின்ற அனைவரும் மரத்திற்கு அருகில் வந்தமர்ந்து அவரது உணர்ச்சிகரமான உரையைக்
கேட்டர்கள். 92-இல் பார்த்த பழைய வாச்சாத்தி மக்களை நினைவுகூரக்கூடிய வகையிலே அந்த
மக்கள் அனைவரும் களத்திலே ஒன்றிணைவதற்கான வாய்ப்பை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு பல வகையிலும் தனித்துவமானது என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் எளிய மக்கள் விடாப்பிடியாகப் போராடினார்கள். தனித்துப் போராடவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடும் மலைவாழ் மக்கள் சங்கத்தோடும் உறுதியாக நின்று இந்தப் போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்தார்கள் என்பதும் பல்வேறு விதமான ஆசை காட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் உறுதியாக நீதிக்காக நின்றார்கள். அவர்களுக்கு இதனால் கிடைத்திருக்கக் கூடிய பணப்பலன் என்பது அல்லது அரசு வேலைவாய்ப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியமானது. இந்தத் தீர்ப்பு மிக மிக பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டியது. பட்டியல் சமூக மக்கள், பட்டியல் பழங்குடினர் அல்லது வேறு வகையில் ஒடுக்கப்பட்டவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் என்று பாதிக்கப்படக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கான தீர்வை நோக்கி நீதியை நோக்கி அவர்களை அணிதிரட்ட வேண்டியது மிகமிக அவசியம். அதற்காகதான் நம்முடைய கையில் செங்கொடியை ஏந்திப் பிடித்திருக்கிறோம்.
நன்றி: செம்மலர், 2023 நவம்பர் இதழ்
அருமை மிக நல்ல கட்டுரை சரித்திரம் பேசும் தீர்ப்பு
பதிலளிநீக்கு