“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது. பிரதமர் வந்தப் பிறகாவது தீபம் ஏற்றப்படுமா என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. அதனால் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயில் செல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் நாலுகோடி நயினார் நாகேந்திரன் கூறியதாக
ஒரு செய்தியை புதிய தலைமுறை தொலைக்காட்சி 06.02.2026 அன்று வெளியிட்டுள்ளது. “பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக
திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம்
ஏற்றி, நீதிமன்றத் தீர்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் சொன்னதாக இந்து
தமிழ்திசை நாளிதழும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த அங்கலாய்ப்பை மேலோட்டமாகப் படிக்கிற எவருக்கும் திருப்பரங்குன்றத்தில் ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத அவல நிலையில் முருகபக்தர்கள் இருப்பது போலவும், பிரதமர் வந்து தான் அதை தீர்க்கவேண்டியுள்ளது அல்லது அவர் வந்தால் தீர்ந்துவிடும் என்பது போலவும் தோன்றக்கூடும். ஆனால் நா.கோ.ந. நாகேந்திரன் அவிழ்த்துவிடுவதைப் போன்ற அநீதி எதுவும் அங்கு நிகழ்ந்துவிடவில்லை என்பதையும் அவர் தனது அரசியல் நோக்கங்களுக்காக பரப்பிவரும் அப்பட்டமான அவதூறே இதுவென்பதையும் புரிந்துகொள்ள சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ள சில எழுத்தாவணங்கள் உதவுகின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கின்ற / சங்பரிவாரத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டுள்ள ஊடகங்களால் திருப்பரங்குன்றம் பிரச்சினை தேசிய முக்கியத்துவதும் வாய்ந்தது போல சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் என்னதான் நடக்கிறது என்கிற உண்மையை தேசிய அளவில் கொண்டுசேர்ப்பது அவசியமாகிறது. கேரவன் ஆங்கில இதழில் சுஜாதா சிவஞானம் எழுதியுள்ள Starting Fires at Thirupparankundram: Judicial overreach and Sangh mobilisation bring Ayodhya to Tamil Nadu கட்டுரை இத்தேவையை பெரிதும் நிறைவுசெய்கிறது.
வரலாற்றாவணங்களுடனும் நேரடி கள ஆய்வுகளின் வழியே கண்டறிந்த உண்மைகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை முன்முடிவுகளற்றுப் படிக்கும் எவரொருவரும் மதுரைப்பகுதி -குறிப்பாக திருப்பரங்குன்றம் அந்தக் குன்றைப்போலவே மத நல்லிணக்க மாண்பிலும் சகிப்புத்தன்மையிலும் உயர்ந்து நிற்பதையும் அதை உடைத்து நொறுக்க சங்பரிவாரத்தினர் மேற்கொண்டுவரும் இழிமுயற்சிகளையும் உணரமுடியும்.
தனிப்பட்ட எந்தவொரு தெய்வத்துக்கோ மதத்தவருக்கோ என்றில்லாமல் பன்மதங்களும் பகிர்ந்துகொண்டு சேர்ந்தியங்கும் தலமாக அந்த மலை மாறிவந்த விதம், மக்களின் பண்பாட்டு வாழ்வில் பன்மதங்களுக்கும் சமமான இடம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரைக்கும் மலைக்கு உரிமை கோரும் பல்வேறு வழக்குகள் – தீர்ப்புகள், அரசுகளின் தலையீடுகள், இவற்றைப் பற்றி மக்களின் கருத்துகள் ஆகியவற்றின் வழியே முழுமையானதொரு ஆவணமாக வெளிவந்துள்ள இக்கட்டுரை இப்போது தமிழுக்கு வருவது அவசியமாகிறது.
கடவுள் நம்பிக்கையுள்ள மக்களிடம் அவர்களது வழிபாட்டுரிமைக்கு ஆபத்து என்று பீதியூட்டி வாக்குவங்கியாக மாற்றி அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது, அரசியலதிகாரத்தைக் கொண்டு தமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்துவது என்னும் சங்பரிவாரத்தின் திட்டம் அவர்களுக்கு ஓரளவுக்கு பலனளித்துள்ள நிலையில் தான் தமிழ்நாட்டை அயோத்தியாக்குவோம் என்று கொக்கரிக்கின்றனர். அயோத்தி பாப்ரி மசூதியை சர்ச்சைக்குரிய இடமென்றாக்கி, அதைத் தகர்த்து அந்த இடத்தைக் கைப்பற்றி ராமர் கோயிலைக் கட்டிமுடிக்க முடிப்பதுவரையான சங்பரிவாரத்தின் உத்திகள், அவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தில் செய்துவரும் அட்டூழியங்களுடன் வெகுவாகப் பொருந்திப்போகிறது. அயோத்தியில் நிறைவேறிய இந்தச் சதியில் கடப்பாரை ஏந்திய கரசேவகர்கள் முதல் கடவுளிடம் கேட்டு தீர்ப்பெழுதும் நீதிபதிகள் வரை ஒருபுள்ளியில் இணைந்திருந்தார்கள் என்பதை கவனப்படுத்துவதன் வழியே, திருப்பரங்குன்றத்தைக் கலவரபூமியாக்கி கைப்பற்றத் துடிக்கும் சங்பரிவாரத்தின் முயற்சிகளுடன் பாரபட்சமான அணுகுமுறைகள், பரபரப்பான விசாரணைகள், பதைபதைப்புடன் வழங்கப்படும் துரிதமான தீர்ப்புகள் வழியே அரசு நிர்வாகமும் நீதித்துறையும் கைகோத்திருப்பதை சுஜாதா அம்பலப்படுத்துகிறார். ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக, பாஜகவுக்கு இயல்பான கூட்டாளியாக இருந்துவருவதன் தொடர்ச்சியில் தான் இப்போது அக்கட்சி தேர்தலுக்கும் அப்பால் திருப்பரங்குன்றத்தில் சங்பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலில் செயல்படுவதையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.
வதந்திகளாலும்
பொய்களாலும் மக்களை மூழ்கடித்து தமிழ்நாட்டின் மத நல்லிணக்கப் பாரம்பரியம், சிறுபான்மையினரின்
நலன்களைக் காப்பதில் அக்கறை, பகுத்தறிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றை அழித்தொழிக்கப் பார்க்கிறது
என்கிற அபாயமணி திருப்பரங்குன்றத்தில் ஒலிக்கிறது. அது தமிழ்மக்களின் மனங்களில் எதிரொலித்தாக
நாம் செய்தாக வேண்டிய பணிகளுக்கு இக்குறுநூல் வலுசேர்க்கும்.
பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம்
தமிழில்: எலெக்ட்ரா
பயணி வெளியீடு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக