இந்திய வம்சாவளித் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய வம்சாவளித் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 2

லெனின் இல்லாத இலங்கை… - ஆதவன் தீட்சண்யா


இலங்கை மலையகத்தமிழர் ஒருவரோடு எனக்கு முதல் நேரடித்தொடர்பு என்றால் தோழர் ஜோதிகுமாருடன் தான் என்பதாக நினைவு. இந்தியா வந்திருந்த அவர் எழுதிக்கொண்டிருக்கும் எங்களில் சிலரை சவுத் விஷன் பாலாஜி மூலமாக சந்தித்துப் பேச ஏற்பாடாகியிருந்தது. இலக்கியத்தின் நோக்குகள் போக்குகள் பற்றி நீண்ட அந்த உரையாடலில், “மார்க்ஸை பலரும் படித்தார்கள். ஆனால் லெனின் என்றொருவர்  படித்ததும் அவரது எழுத்துக்கள் பெரும் புரட்சிக்கானதாகி விட்டதல்லவா? பின்னாளில் வரப்போகும் லெனின் என்கிற ஒரேயொரு வாசகருக்காகத்தான் மார்க்ஸ் எழுதிவிட்டுப்போனார் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்தும் தேவைப்படும், எழுதுங்கள்..” என்று எங்களிடம் ஜோதிகுமார் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. சொன்னதுதான் நினைவிலிருக்கிறது, அவர் கேட்டுக்கொண்டவாறு அந்தச் சந்திப்பில் பங்கெடுத்த நான் எழுதவில்லை- வேறு யாரும் எழுதினார்களா என்றும் தெரியவில்லை.

இதனிடையே அறிமுகமான தோழர் ந.இரவீந்திரன் புதுவிசை இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அவர் வழியாக அறிமுகமாகிய அபூர்வமான தோழர்தான் லெனின் மதிவானம். ந.ரவீந்திரனின் இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள் என்ற நூல் மீது புதிய சிந்தனை கலை இலக்கியப் பேரவை நடத்திய கருத்தாடல் நிகழ்வுகளில் அவர் முன்வைத்த கருத்துகளை எனக்கு அனுப்பியிருந்தார். விசயங்களை மாறுபட்டு பார்க்கும் கண்ணோட்டம் அவரிடம் இருப்பதை உணர்ந்துகொள்ள அது போதுமானதாயிருந்து. அதன் தொடர்ச்சியில்தான் புதுவிசையிலும் கீற்று.காம் இணையதளத்திலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அவ்வகையில், கல்வியமைச்சகத்தின் தலைமை அலுவலர்களில் ஒருவராக தனது பணிச்சுமைக்கிடையிலும் தொடர்ந்து பல்வேறு கட்டுரைகளை எழுதிவந்தார்.

புலம்பெயர் இலக்கியம் – விவாதத்திற்கான புள்ளிகள் என்கிற எனது கட்டுரையைப் படித்ததுடன் அதை தனது கொழுந்து இதழிலும் மறுபிரசுரம் செய்திருந்த தோழர் அந்தனி ஜீவா, இந்தியா வந்திருந்தபோது என்னை தஞ்சையில் வைத்து சந்தித்து இலங்கை மலையகத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். வரவழைப்பதற்காக அவர் அனுப்பியிருந்த இலங்கை மத்திய மாகாண சாகித்ய விழா அழைப்பிதழ் ஒன்றை வைத்துக்கொண்டு கிளம்பிப்போய் ஹட்டன் நகரில் இருந்த ஜோதிகுமார் இல்லத்தில் தங்கியிருந்த எட்டுநாட்களில் (2009 அக்டோபர் 8-15) தான் தோழர் ந.இரவீந்தரனுடன் வந்து தோழர் லெனின் மதிவானம் நேரில் அறிமுகமானார். அவரது பெயரைப் போலவே தோற்றமும் கம்பீரமானது.  டிம்புல்ல வீதியில் என நினைவு- அவரது வீட்டிற்கு அழைத்துப்போனார். அம்மாவும் பிள்ளைகளும் பரஸ்பரம் தோழர் என்றே அழைத்துக்கொள்ளும் அதிசயத்தை நான் அங்குதான் பார்த்தேன். வீட்டிற்கு வரும் எல்லோரையுமே தோழர் என்றே விளிக்கும் சூழலில் வளர்ந்த- வாழ்கிற எங்களுக்கு, எங்களுக்குள் தோழர் என்பதற்குமப்பால் வேறு உறவுமுறையைச் சொல்லி விளிக்கும் அவசியமே எழவில்லை என்று அம்மாவும் மகனும் சொன்ன அந்த நொடியின் ஆச்சர்யம் எனக்கு இன்னமும் நீங்கவில்லை. தோட்டத் தொழிலாளர்களிடையே கம்யூனிஸ்ட் இயக்கம் அந்தளவுக்கு செல்வாக்கு செலுத்திய காலமொன்று இருந்திருக்கிறது.


பின்னொரு நாள் ஹைலெண்ட் ஸ்கூலுக்கும், அவரது பெற்றோர் தோட்டத் தொழிலாளர்களாக உழைத்த- அவர் தனது பால்யத்தைக் கழித்த கேஸில்ரீ எஸ்டேட்டுக்கு அழைத்துப் போனார் லெனின். அங்கு சென்றதுமே அவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டவராய் இருந்தார். இங்கிருந்த ஒரு சாமானிய தோட்டக்காட்டானின் பிள்ளைகளாகிய நானும் தம்பியும் ( தம்பி – ட்ராட்ஸ்கி மதிவானம். அப்போது நுவரேலியாவில் நீதிபதியாக இருந்தாரென நினைவு. தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி) இன்றைக்கு நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறோம் என்றால் அது கடந்த 200 ஆண்டுகளாக மலையகத்தமிழர்கள் நடத்திய போராட்டங்களினாலும் தியாகங்களினாலும் தான் என்று சொந்த வாழ்வை வரலாற்றுக்குள் பொருத்திப் பேசும்போது அவர் குரல் கம்மியது. கூலியுயர்வுக்காக, குடியிருப்புக்காக, கண்ணியமான பணியிடச் சூழலுக்காக, குழந்தைகளின் கல்விக்காக எல்லாவற்றுக்கும் மேலாக குடியுரிமைக்காக என்று இடையறாது போராடித்தான் இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்றைக்கு மலையகத் தமிழர்கள் என்கிற ஒரு தேசியமாக உருக்கொண்டுள்ளார்கள் என்று ஜோதிகுமார், ஜேம்ஸ், மகேந்திரன், முத்துலிங்கம் போன்ற தோழர்கள் சொல்லியிருந்த வரலாற்றை மேலும் அடர்த்தியாக்குவதாய் இருந்தது அவரது பேச்சு. தோட்ட வாழ்வின் கொடூரங்களுக்கிடையிலும் தொழிலாளர்களிடமிருந்த அன்னியோன்னியம், கலையுணர்ச்சி, போர்க்குணம், தோழமை, தொழிற்சங்கங்களின் துரோகம் என்று சாப்பாட்டு மேசையிலும் பேசிக்கொண்டேயிருந்தார். போராட்ட குணம் நிறைந்த தனது பெற்றோர் குறித்து அவருக்கு அப்படியொரு பெருமிதம்.

புனைவிலக்கியத்தில் ஈடுபடுமளவுக்கு வாழ்வனுபவமும் கண்ணோட்டமும் மொழிவளமும் சொல்திறமும் கொண்டவரான லெனின் ஏனோ அதில் நாட்டம் காட்டாமல் ஆய்வுப்புலத்தில் தன்னை பொருத்திக்கொண்டார். மதிக்கத்தக்க ஆய்வாளரான தோழர் ரவீந்திரனுடனான அணுக்கம் அப்படியொரு ஈடுபாட்டை அவருக்குள் உருவாக்கியிருக்கக்கூடும். பாரதி, கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முருகையன், டானியல், டொமினிக் ஜீவா போன்றோரது எழுத்துகளில் நுணுகிய வாசிப்பும் வாசிப்பது பற்றி உடனே எழுதிவிடும் பழக்கமும் அவருக்கிருந்தது.  எனது சிறுகதைகள் குறித்தும்கூட பொருட்படுத்தும்படியான மதிப்புரை ஒன்றை எழுதியிருந்தார். அவ்வாறாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பினைக் கொண்டுவரவிருந்த நிலையில் அந்தக்கட்டுரைகளின் தேர்வு குறித்து என்னுடைய கருத்தினை கேட்டனுப்பியிருந்தார். படித்துவிட்டு நான் சொன்ன விமர்சனங்களையும் திருத்தங்களையும் மிகுந்த பொறுமையுடன் உள்வாங்கி அவற்றை உரியமுறையில் திருத்தியமைத்தார். அந்தளவுக்கு அவர் வெளிப்படைத்தன்மையும் விமர்சனங்களுக்கு செவிசாய்க்கும் பண்பும் கொண்டவராயிருந்தார்.

புதிய அமைப்பு முயற்சிகள், இணைய இதழ்கள், இலக்கிய நிகழ்வுகள் என்று இடையறாது இயங்கும் லெனினுக்கு நட்புவட்டம் பெரியது. மலையகம் தொடங்கி கொழும்புவரையுமாக – தெற்கே பதுளையிலும்கூட- அவர் பலருக்கும் நெருக்கமானவராய் இருந்தியங்கினார். திலகர் போன்ற தோழர்களின் அறிமுகம் அவரால்தான் எனக்கு கிடைத்தது.

லெனினுக்கிருந்த பரந்த இலக்கியத் தொடர்பின் தாக்கம் இலங்கையின் தமிழ்ப்பாடநூல் உருவாக்கத்தில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள் பலரது ஆக்கங்களை பாடநூல்களில் அறிமுகம் செய்வித்தார்.

நான் இரண்டாம் முறை இலங்கை சென்றபோது லெனின் வீட்டில் தான் நானும் ரவீந்திரனும் தங்கினோம். காலனியாட்சியாளர்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்த்திக் கொண்டுபோகப்பட்ட தமிழர்களிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க ஏதாவது செய்தாக வேண்டும் தோழர் என்றார்.  ஆனால் அதுசார்ந்து ஏதும் செய்தாரா என்று தெரியவில்லை.

மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியேயான உரையாடல்களை,   இந்தியாவுக்கு வரப்போவதாக  சொல்லித்தான் முடிப்பார். இடையில் உடல்நலம் குன்றி வெளியுலகத் தொடர்புகளற்றவராக அவர் முடங்கியிருக்கும் விசயமறியாமல் - இரண்டொருதடவை பேச முயற்சித்தபோது பதிலற்ற நிலையில்- வேலைப்பளுவினால் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார் போல என்று நானாக நினைத்துக்கொண்டேன்.  ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருப்பதாக தோழர் பபி தெரிவித்தபோது மீண்டுவந்துவிடுவார் என்று நம்பினேன். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு சற்றே தேறி நடமாடத் தொடங்கியுள்ளதாக செய்தி கிட்டியபோது வலுப்பட்ட அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு லெனின் மரணத்தைத் தழுவிவிட்டார்.

சகோதரனை – தோழனை இழந்திருக்கும் துயரத்தைப் பகிர ட்ராட்ஸ்கி அழைத்திருந்தார். தனது மகளுக்கு மார்க்ஸ் தீட்சண்யா என்று பெயரிடுமளவுக்கு என்மீது அன்புகாட்டும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்ல இலங்கைக்கு வருவதற்கு மனம் பறக்கிறது, வருவேன்.

நன்றி: லெனின் மதிவானம் : இளமை புதுமை இனிமை 


வியாழன், அக்டோபர் 30

நரியூரிலிருந்து புலியூருக்கு... ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் 50வது ஆண்டு - ஆதவன் தீட்சண்யா




‘எவரொருவரது குடியுரிமையினையும் தன்னிச்சையாக மாற்றிவிடவோ மறுத்துவிடவோ கூடாது’ என்கிறது உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம். ஆனால், இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை அவர்களது கருத்தறியாமலே தீர்மானிக்கப் பட்டது. 1964ஆம் ஆண்டு இதே அக்டோபர் 30ஆம் நாளில்தான் அந்த அநீதி ‘ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்’ என்னும் பெயரால் இழைக்கப்பட்டது.

பிரிட்டனும் பிரான்சும் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமது காலனி நாடுகளுக்கு இந்தியர்களை ஒப்பந்தக்கூலிகளாக வாரிச்சென்றன. சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட அடிமை வணிகத்திற்கு மாற்றாக ஐரோப்பிய முதலாளிகள் உருவாக்கிய இந்த ஒப்பந்தக்கூலிமுறைக்கு பெரிதும் பலியானவர்கள் தமிழர்கள். 1796- 1815க்குள்ளாக முழு இலங்கையையும் பிரிட்டன் கைப்பற்றியது. அதன் முதல் கவர்னரான பிரடெரிக் நார்த் (1798), ஓர் அரசாங்கத்தை நிறுவிடும் தொடக்கநிலைப் பணிகளுக்காக தமிழர்களை அங்கு அழைத்துப்போனார். 1821ல் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போன பயோனியர் ஃபோர்ஸ் படையின் அநேகரும் தமிழர்கள். அங்கு மலைகளைச் சரித்தும் காடுகளை அழித்தும் தார்ச்சாலைகள் மற்றும் ரயில்பாதைகளை அமைத்ததும் பாலங்கள், பாசனத்திட்டங்களை உருவாக்கியதும் இவர்கள்தான்.

1824ல் அங்கு பிரிட்டிஷார் காபித்தோட்டங்களை அமைத்தனர். அது தொடர்பான வேலைகளுக்காக அந்தந்த பருவத்தில் தமிழகத் தொழிலாளர்களை அழைத்துப்போய் திருப்பியனுப்பினர். ஒருவகையான பெருங்கொள்ளை நோயினால் அங்கு காபி அழிந்ததும் பிரிட்டிஷார் தேயிலை, சின்கோனா, ரப்பர், தென்னை விளைவிப்புக்கு மாறினர். இவை தொடர் பராமரிப்பை கோருவதால் அங்கு நிரந்தரமாக தங்கியிருந்து உழைக்கும் விதமாக தொழிலாளர்கள் குடும்பங்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள்தான் இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்களில் சிறுபகுதியினர் ஊரில் வாழும் சாதியரில் அடிநிலையினர், பெருவீதமானோர் ஊரிலிருந்து ஒதுங்கி வாழும் சேரியர். தமிழ்ச்சமூகம் இவர்களுக்கு வழங்கியிருந்த இந்த இடம்தான் இவர்களை புலம்பெயர்த்திக் கொண்டு போவதற்கு ஏதுவாய் அமைந்தது.

துண்டுச்சீட்டு மற்றும் கங்காணி முறையில் திரட்டப்பட்ட தொழிலாளர்கள் தனுஷ்கோடியிலிருந்து மன்னாருக்கும், தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கும் கடல் மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அதுகாறும் மனிதக்காலடியே பட்டிராத மலைக்காடுகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தனர். புறப்பட்டவர்களில் பாதிப்பேராவது கடலிலும் காட்டிலும் நோயிலும் செத்தழிந்தார்கள். லயன்வீடு எனப்படும் சிறு கொட்டிலே வசிப்பிடம். சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை வேலைநேரம். அவர்களது உற்பத்தியின் அளவைக் குறைத்தும் வாங்கும் தொகையைக் கூட்டியும் கள்ளக்கணக்கு எழுதப்பட்டதால் தீராது வளர்ந்தன கடனும் வட்டியும். முதலாளிகளுக்கும் கங்காணிகளுக்கும் சற்றும் குறையாமல் அட்டைகள் அவர்களது ரத்தம் குடித்தன. தப்பிப்போக முடியாதபடி முள்வேலி. தப்பியோடி சிக்கிக்கொண்டாலோ கொடிய தண்டனைகள். மனிதவுரிமை காக்கவே பிறப்பெடுத்தாற்போன்று பீற்றிக்கொள்கிற பிரிட்டிஷார் தொழிலாளர்களது மனவுறுதியைக் குலைப்பதற்காக நடத்திய சித்ரவதைகள் மனித மாண்புகளுக்குப் புறம்பானவை.

இந்தக் கொடுமைகளுக்கு தாக்குப்பிடிக்கும் போராட்டத்திலேயே நூறாண்டுகளாக மூழ்கடிக்கப்பட்டிருந்த இந்தியத் தமிழர்களில் இந்தியாவின் திசையைக்கூட அறிந்திராத புதிய தலைமுறையினர் உருவாகிவிட்டிருந்தனர். ஆனாலும் அவர்களை இலங்கைச்சமூகம் வெளியேதான் நிறுத்திவைத்திருந்தது. இலங்கையின் அரசுப் பணிகளில் ஓரளவு இந்தியர் வசமிருந்தது. இலங்கைச்சந்தையும் இந்திய வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பிலிருந்தது. தமிழகத்தின் வட்டிக்கடைக்காரர்களோ அதீதமான வட்டிக்கு கடன் கொடுத்து அதற்கீடாக சிங்களவர்களின் வருமானத்தையும் சொத்துக்களையும் அபகரித்துவந்தனர். சிங்களவர்களிடையே இந்திய எதிர்ப்பு மனோபாவம் உருத்திரள்வதற்கான காரணங்கள் இவையென்றாலும் அதற்கு வடிகாலாகச் சிக்கியவர்கள் அதிகாரமற்ற தோட்டத் தொழிலாளர்கள்.  முதலாம் உலகப்போருக்குப் பிந்தைய பொருளாதாரப் பெருமந்தத்தால் அங்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களின் பெருக்கமே காரணம் என்கிற திசைதிருப்பலும் இதற்கு உதவியது.

கல்வி, சொத்து அடிப்படையிலிருந்த வாக்குரிமையை, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அங்கு வசிக்கும் வயதுவந்தோர் அனைவருக்குமானதாக டொனமூர் கமிஷன் பரிந்துரைத்தது. தோட்டத்தொழிலாளர்கள் வாக்குரிமை பெறுவதற்கு வழிவகுத்தது என்கிற வகையில் இப்பரிந்துரை முன்பிருந்ததைவிட ஜனநாயகத்தன்மை கொண்டது. ஆனால் ‘தோட்டக்காட்டான்களிடம் இலங்கையை சிக்கவைக்கும் இந்தப் பரிந்துரையை’ இலங்கை மேட்டுக்குடியினர் ஏற்காததால் தகுதிபெற்ற மூன்றுலட்சம் இந்தியத் தொழிலாளர்களில் 1,00,574 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றனர். 1931 பொதுத்தேர்தலிலிருந்து பங்கெடுத்த இவர்களிடையே இடதுசாரி கட்சிகளின் செல்வாக்கை மட்டுப்படுத்தவும், பிரதிநிதிகளைக் குறைக்கவும்  இவர்களது வாக்குரிமையை பறிக்கும் முயற்சி முனைப்படைந்தது. 

4.2.1948 அன்று சுதந்திரமடைந்த இலங்கையில் எதிரும்புதிருமாக எண்ணற்ற கட்சிகள் இருந்தாலும் தோட்டத்தொழிலாளர்களை வெளியேற்றும் விசயத்தில் அவை ஒரே கட்சிதான். அங்கு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், இந்திய பாகிஸ்தானிய வசிப்போர் (குடியுரிமை) சட்டம், பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் வாக்குரிமையற்றோராகவும்  சட்டவிரோதக் குடியேறிகளாகவும் மாற்றிவிட்டன. இதன் தொடர்ச்சியில் உருவான நேரு - கொத்லாவல ஒப்பந்தப்படி (1954) குடியுரிமை கோரிய  விண்ணப்பங்களோ சாரமற்றக் காரணங்களின் பேரில் இலங்கையால் நிராகரிக்கப்பட்டன. இவர்களனைவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பிவிடும் கெடுநோக்கத்தை சட்டப்பூர்வமாக நிறைவேற்றிக்கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து செய்துவந்த நச்சரிப்பில் ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம் உருவானது.

யாரையும் கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு திருப்பியனுப்பக்கூடாது என்கிற நிலைப்பாடு கொண்டிருந்த நேரு 1964ல் காலமானதையடுத்து இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி  பொறுப்பேற்றார். சீனாவுடனான எல்லைப்போருக்குப் பிறகு, அண்டை நாடுகளை தனக்குச் சாதகமாக திரட்டிக் கொள்ளும் தேவையும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த காலமது. எனவே வம்சாவளித்தமிழர்களின் குடியுரிமை மீது ஓர் இறுதி முடிவுக்கு இந்தியாவை நெட்டித்தள்ள உகந்த தருணம் எனக் கணித்து அக்டோபர் 22 அன்று டெல்லி வந்திறங்கினார் இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ. இலங்கைத்தரப்பு உண்மையில் சிங்களத்தரப்பே. ஆனால் சாஸ்திரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங்கும் சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளர்களையோ தமிழ்நாட்டின் தலைவர்களையோ கூட்டிப்போகவில்லை, கலந்தாலோசிக்கவுமில்லை. இந்தியக் குழுவில் சென்னையிலிருந்து முதல்வரது பிரதிநிதியாக பங்கெடுத்த ஒரே தமிழரான வி.ராமையா வாய் திறக்கவேயில்லை.

இலங்கையில் நாடற்றவர்களான 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், மூன்று லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது. உயிரும் உணர்வும்மிக்க மனிதர்கள் வெறும் எண்களாக பங்கிடப்பட்டனர். (இந்த 1.5 லட்சம் பேரை இருநாடுகளும் சமமாக பங்கிட்டுக் கொள்ளும் ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தாகியது). 

1967 முதல் அமலாகத் தொடங்கிய இந்த ஒப்பந்தம் அவர்களை இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என மூக்கூறாக பிரித்து வீசியது.  அவர்கள் இலங்கையில் உழைத்து ஈட்டியவற்றை இழந்துவரச் செய்தது. 150 ஆண்டுகளாக தொடர்பற்றுப் போன தாயகத்திற்குத் திரும்பி அநாதைகளாக தவிக்கச் செய்தது. புதிய சூழலுக்குள் பொருந்தவியலாத உளவியல் சிக்கலுக்கும் ஆட்படுத்தியது.  மறுவாழ்வுக்கான உதவித்தொகையையும் சுயதொழிலுக்கான கடனையும் பெறுவதற்கு மல்லுக்கட்டி மனவுறுதி குலைந்த அவர்களை மீண்டும் தோட்டத்தொழில் தேடி நீலகிரி கொடைக்கானல் வால்பாறை கர்நாடகா கேரளா என்று அலைய வைத்தது. இலங்கையில் தமிழர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளானவர்களை இங்கு சிலோன்காரர்கள் என்கிற பாகுபாட்டுக்கு ஆளாக்கியது.

ஒப்பந்தப்படியும், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டும் தாயகம் திரும்பிய அந்த தமிழர்களின் வாழ்க்கை அப்படியொன்றும் மெச்சத்தக்கதாக இல்லை. நரியூரிலிருந்து புலியூருக்கு வந்து சிக்கிக்கொண்டதாக அவர்கள் மருகிக்கிடக்கிறார்கள். நாடற்றோர் என்னும் அவலம் தீர்க்கப்பட்டிருந்தாலும் இருநாடுகளிலும் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவது தொடர்கிறது. டாலரோ பவுண்ட்ஸோ இல்லாத- லேபர் டஸ்ட் என்கிற மட்டரகமான தூளில் தயாரித்த தேநீரை தருவதற்கு மட்டுமே சாத்தியப்பட்ட - பெரும்பாலும் தலித்துகளாகிய அந்தத் தமிழர்களுக்காக இங்கு குரலெழும்பாமல் இருப்பதில் அதிசயமென்ன?
நன்றி: தீக்கதிர் நாளிதழ், 30.10.2014


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...