ஆரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆரியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 31

ஆளுநரே, நீங்கள் எந்தளவுக்கு சனாதனவாதி? -ஆதவன் தீட்சண்யா

தானொரு சனாதனவாதி என்று கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்தளவுக்கு சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவராக இருக்கிறார்?

பனாரஸ் மத்திய இந்துக் கல்லூரி 1916ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘சனாதன தர்மம்’ என்கிற நூலின்படி, சனாதனம் என்றால் நித்திய மதம். ஆரியர்களின் வேதங்களை அடிப்படையாகக் கொண்டதால் இம்மதம் ஆரிய மதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆரியர்களின் முதல் குடும்பங்கள் இப்போது இந்தியா என்றழைக்கப்படும் நிலத்தின் வடக்குப்பகுதியில் குடியேறின. ஆரியர்கள் குடியேறியதால் ஆரிய வர்தம் என்றான இந்நிலப்பரப்பு, கிழக்குப் பெருங்கடலில் இருந்து மேற்குப் பெருங்கடல் வரை, இரண்டு மலைகளுக்கு இடையே (ஹிமவான் மற்றும் விந்திய) பரவியுள்ளது. 

-இதன்படி, சனாதனம் ஆரியவர்தத்தில், ஆரியர்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகக்கூடியது. விந்திய மலைத்தொடருக்கு அப்பாலுள்ள கேரளத்திற்கும் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்திருப்பதன் மூலம் ஆளுநர் ரவி, சனாதனத்தின் எல்லையை மீறிய குற்றத்தைச் செய்திருப்பதுடன், சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழ்நாடுதான் என்று பொய்யுமுரைக்கிறார்.  

சனாதனத்தை நித்திய மதம் என்கின்றனர். அந்தப் பெயர்கூட அநித்தியமாகி பின்னாளில் இந்துமதம் என மாறிப்போனது. சனாதனம் என்பதை ஒரு கோட்டையாகவோ குட்டிச்சுவராகவோ உருவகப்படுத்திக்கொண்டோமானல் அதன் அடித்தளம் ஸ்ருதி. அதன் நான்குச்சுவர்கள் ஸ்மிருதிகள். நான்கு வேதங்களிலிருந்து தேவர்களால் சொல்லப்பட்டு ஞானிகளாலும் ரிஷிகளாலும் கேட்டறியப்பட்டது ஸ்ருதி,. இவ்வாறு கேட்டறிந்து நினைவில் வைத்து சொல்லப்பட்டவை ஸ்மிருதிகள். தேவர்கள் எங்கிருந்து என்ன மொழியில் எதைச் சொன்னார்கள், ரிஷிகளும் ஞானிகளும் அதை எங்கிருந்து கேட்டு என்னவாக விளங்கிக்கொண்டு மற்றவர்களுக்கு என்ன மொழியில் போதித்தார்கள், போதனையின் மொழியும் பொருளும் கேட்டுக்கொண்டவர்களுக்கு புரிந்தனவா என்கிற கேள்விகள் ரவிகளுக்கு தேவைப்படுவதில்லை. ஏனெனில் கேள்விகள் பகுத்தறிவுடன் தொடர்புடையவை. சரி அந்தத் தேவர்கள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று கேட்டால் அதற்கு பதிலில்லை. ‘அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லீறாதிய’ என்கிற கதைதான். 

ரிக், யஜூர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்கள், நான்கு ரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு ஸ்மிருதிகள் (மநு ஸ்மிருதி, யாக்ஞவல்லிய ஸ்மிருதி, ஷங்க லிகிதா ஸ்மிருதி, பராஸர ஸ்மிருதி), இரண்டு இதிகாசங்கள், வேதங்களைப் படிக்க முடியாதவர்களுக்காக/ கூடாதவர்களுக்காக(?) புனைந்துரைக்கப்பட்ட 18 புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்படும் சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள் ஆகியவற்றை பின்பற்றி வாழ்வதுதான் சனாதன தர்மத்தின்படியான வாழ்க்கையாகும். இந்தச் சனாதன தர்மத்திற்கு எதிராக வாழ்வதற்கு வரலாறு நெடுகிலும் நடந்த போராட்டங்களின் ஊடாகத்தான் சமூகத்தின் இன்றைய எல்லா முன்னேற்றங்களும் சாதனைகளும் எய்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில்தான் ஆர்.என்.ரவியால் ஆட்சிப்பணி அதிகாரியாகவும் ஆளுநராகவும் ஆக முடிந்திருக்கிறது. ஆனால் இந்த நாடு சனாதனத்தாலும் ரிஷிகளாலும்தான் கட்டியெழுப்பப்பட்டது என்று உண்மைக்கு மாறாக கதையளக்கிறார். 

சனாதன தர்மம் ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாக பிரித்தது. இந்த வர்ணங்கள் ஆரியப்பெண்களுக்குக் கிடையாது. அவர்கள் திருமணத்திற்கு முன் தகப்பனின் வர்ணத்தையும் திருமணத்திற்குப் பிறகு கணவனின் வர்ணத்தையும், கணவனுக்குப் பிறகு மகனின் வர்ணத்தையும் சேர்ந்தவர்கள். படிநிலையான இந்த வர்ணப்பிரிவினை அந்தந்த வர்ணத்திற்கென வகுத்துள்ள வேலைகளைத்தான் செய்யவேண்டும் என்கிற நிலை இப்போதும் நீடித்திருந்திருந்தால் ஆர்.என்.ரவி என்ன படித்திருப்பார், என்ன வேலை செய்து கொண்டிருந்திருப்பார்? 

ஆரியச்சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்த சனாதனம், தனிமனித வாழ்க்கையை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு ஆஸ்ரமங்களாகப் பிரித்தது. ஆஸ்ரமத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வேலைப்பரிவினை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரொருவரும் எந்தக் கட்டத்தையும் இன்பத்தையும் விலக்கிச்செல்லக்கூடாது என்கிறது. 

ஆஸ்ரமத்தின் முதலாவது கட்டமான பிரம்மச்சரிய காலத்தில் உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து இருபிறப்பாளராவது அவசியம். இந்த உபநயனச் சடங்கினை பார்ப்பன ஆண்களுக்கு மட்டுமேயானதாக ஆக்கியதன் மூலம் பெண்களும் இதர வர்ணத்தவரும் கல்வி பெறுவதை சனாதனம் தடுத்துள்ளதை ரவியால் மறுக்கமுடியுமா? "வேதங்களையோ, இரண்டு வேதங்களையோ, ஒரு வேதத்தையோ முறைப்படி, மீறாமல் படித்தல் பிரம்மச்சரியம்” என்கிறது சனாதனம். இதன்படி, வேதங்களைத் தவிர மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், என்டயர் பொலிடிகல் சயின்ஸ் போன்ற வேறெதையும் படிக்கக்கூடாது; ஐஐடி, ஐஐஎம், மருத்துவக்கல்லூரி போன்றவற்றிலிருந்து வெளியேறுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன் ரவி!. 

“மாணவர் மது, இறைச்சி, வாசனை திரவியங்கள், மாலைகள், சுவையான - காரமான உணவுகள், பெண்கள், அமிலங்கள் ஆகிய உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் விசயங்களைத் தவிர்க்கட்டும்” என்கிற உபதேசத்தில் பெண்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை ரவி ஏற்கிறாரா? மாணவர்கள் தவிர்க்கவேண்டிய பட்டியலில் காமம், கோபம்,  பேராசை ஆகியவற்றுடன் நடனம், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல் போன்றவற்றையும் சேர்க்கிறது சனாதனம். எனில், இசை/ நடன/ நாடக/ திரை/ ஓவிய/ நுண்கலைப்பள்ளிகளை மூடிவிடலாமா ரவி? “வதந்திகள், அவதூறு, பொய்யிலிருந்து விலகியிருத்தல்” என்னும் சனாதனத்திற்கு விசுவாசமாக இருப்பதாக இருந்தால் முதலில் மாணவர் அமைப்பான ஏபிவிபியை மட்டுமல்ல ஒட்டுமொத்த சங்பரிவார அமைப்புகளையும் கலைக்க வேண்டியிருக்கும். ரவியேகூட பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். 

***

நான்கு ஆஸ்ரமங்களில் மற்ற மூன்றுக்கும் ஆதாரம் இரண்டாவதான இல்லற வாழ்வுதான் (கிருகஸ்தம்). எல்லா உயிரினங்களும் காற்றின் ஆதரவில் வாழ்வதுபோல, மற்ற ஆஸ்ரமத்தார் அனைவரும் குடும்பஸ்தர்களின் ஆதரவில்தான் வாழ்கின்றனர். அவர் மற்ற மூன்றையும் உண்மையாக ஆதரிக்கிறார். அனைத்து நீரோடைகளும் ஆறுகளும் ஓய்வெடுக்க கடல் நோக்கிப் பாய்வதுபோல், அனைத்து ஆஸிரமத்தாரும் ஓய்வெடுக்க இவர்களை நோக்கியே ஓடுகின்றனர்… தேவர்களை வழிபடுதல், கல்வி, தாங்கள் இருந்ததைப் போல ஒரு குடும்பத்தை வளர்ப்பதன் மூலமும் புதிய வாழ்க்கைக்கு உதவுவதன் மூலமும் பித்ருகளுக்குரிய கடனை திருப்பிச் செலுத்தும் கடமைகளிலிருந்து விலகக்கூடாது. இந்தக் கடமைகளின் கடுமையான சுமையைத் தாங்குங்கள் என்கிறது சனாதனம்.  வீட்டை விட்டு ஓடுபவர்களின் வேலை பாவத்தில் விழுகிறது. துறவு வாழ்க்கை நடத்துவதற்காக, உரிய காலத்திற்கு முன்பே இல்லற வாழ்விலிருந்து வெளியேறி காடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மீது பரிதாபப்பட்ட இந்திரன் ஒரு தங்கப்பறவையாக வடிவெடுத்து வந்து "இல்வாழ்வைப் பின்தொடருங்கள்” என்று வழிகாட்டியுள்ளார். ஆஸ்ரமங்கள்  அனைத்திலும் இல்லறத்தாரே உயர்ந்தவர் என்கிறது வேதம். 

ஏழைகளுக்கு உதவிய பிறகு எஞ்சிய உணவை உண்பதே உண்மையாக உண்பதாகும். தான் மட்டும் காளான் இறக்குமதி செய்து உண்பதெல்லாம் சனாதனத்தில் வராது. இல்லற வாழ்வைத் துறந்தவர்கள், பாதியில் கைவிட்டு ஓடியவர்கள் குறித்து சனாதனியான ரவியின் நிலைப்பாடு என்ன? இல்லற வாழ்வை மேற்கொள்ளாத மடாதிபதிகள், பீடாதிபதிகள், லோககுருக்கள், லோக்கல் குருக்களை சனாதன விரோதிகள் என்று எப்போது அறிவிக்கப்போகிறீர் ரவி? துறவொழுக்கத்தை கேலிக்குள்ளாக்கும்விதமாக ஆடம்பரத்திலும் சட்டவிரோதச் செயல்களிலும் திளைக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் தலைவர்களை ரவி கண்டிப்பாரா? வாழ்வின் ஒரு கட்டத்தைக் கடந்தவர்கள் முந்தையக் கட்டத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது என்கிறது சனாதனம். ஆனால் வரிசைக்கிரமமாக அல்லாமல் எடுத்தயெடுப்பில் நேரடியாக தட்கல் முறையில் சந்நியாசம் போய்விட்டு பின்னர் கிருகஸ்த நிலையை ஏக்கத்துடன் திரும்பிப்பார்த்து ரகசிய கேமராவில் சிக்கிக்கொண்டவர்கள், மடத்தை விட்டு வெளியேறி மீண்டும் இழுத்துவரப்பட்டவர்கள் சனாதனத்துக்கு ஏற்படுத்திய இழுக்கு பற்றி ரவி வாய்திறப்பாரா? 

*** 

இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் தனது கடமைகளின் முழுச்சுமையையும் தன் மகன்களால் சுமக்க முடிவதைக் காணும்போது, மூப்பின் அறிகுறிகள் தோன்றும் போது, தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் தன்னைச் சுற்றி வருவதைக் காணும்போது, அவரும் அவரது மனைவியும் வீட்டின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து, சுறுசுறுப்பான  உலகியல் வாழ்க்கையிலிருந்து விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணரவேண்டும். தத்துவார்த்த நூல்களைப் படிப்பதற்காகவும், பிறருக்காக தியாகம் செய்யவும், நல்வழிப்படுத்தவும் கொடுக்கப்பட்ட அமைதியான, சற்றே ஒதுங்கிய வாழ்க்கையே மூன்றாவது ஆஸிரமமான வானப்ரஸ்தம்.  இந்த ஒரு விசயத்திலாவது சனாதன தர்மத்தை ஏற்று ரவி, மோடி, அமித்ஷா, மோகன் பகவத் போன்றவர்கள் அரசியலிலிருந்தும் பதவிகளிலிருந்தும் ஒதுங்கி காடுகளுக்குச் சென்று தவவாழ்வு மேற்கொண்டு சனாதனத்தில் தமக்குள்ள பற்றினை நிரூபிப்பார்களா? ஒருவேளை காடுகளுக்குப் போய் பழங்குடிகளுக்கு தொல்லை தரவேண்டாம் என்கிற நல்லெண்ணம் உதிக்குமாயின் காசி, ராமேஸ்வரம், கைலாயம் என்று எங்காவது ஆன்மிகப்பயணம் மேற்கொள்வது அவர்களது வீட்டுக்கு எப்படியாயினும், நாட்டுக்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் செயலாக அமையும். (அதற்குள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு விலகல் கடிதம் எழுதுகிறீர்கள் ரவி? கொஞ்சம் பொறுங்கள், நான் சனாதனத்தின் அத்தனை விசயங்களையும் பேசப்போவதில்லை, கட்டுரை முடியப்போகிறது). 

இறுதியாக, தனது தோலில் சுருக்கத்தையும், தலையில் நரையின் வெண்மையையும், குடும்பம் அடுத்தடுத்த சந்ததியினரால் நிறைந்திருப்பதையும் காணும் ஒருவர் அனைத்து பந்தங்களையும் துறந்து செல்போன், கேமரா எதுவுமின்றி காட்டிற்குச் சென்று தியானத்திலும் வழிபாட்டிலும் தனது கடைசி நாட்களைக் கழிக்கவேண்டும் என்கிறது சனாதனம். எப்போது கிளம்பப் போகிறீர்கள் ரவி?

நன்றி: 

தீக்கதிர் 2023 மே 7

விடுதலை 2023 மே 9


 


புதன், ஏப்ரல் 17

சகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை - ஆதவன் தீட்சண்யா

சகிப்பின்மைக்கு இந்திய வரலாற்றில் இருந்த மரபு அல்லது வேர் பற்றி?

தானல்லாத பிறரை தனக்கு சமமாகக் கருதாமல் ஏதோவொரு வகையில் ஒதுக்குவது அல்லது ஒதுங்குவது என்கிற நிலை சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இருந்ததாக ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். திராவிட நாகரீகத்தின் தொட்டில் எனக் கொண்டாடப்படும் அங்கு சமூகத்தில் பாகுபாடு நிலவியது என்றும் அந்தப்பாகுபாடு வாழ்விடத்திலும் வெளிப்படையாக இருந்தது என்பதை பின்வரும் அவரது கூற்று உணர்த்துகிறது. ‘சிந்துவெளி நகரமைப்பாளர்கள் தங்களது சமூக அமைப்பில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைத் தாங்கள் வடிவமைத்த நகரங்களின் திட்டமிடலிலும் கட்டமைப்புகளிலும் வெளிப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளனர். மொகஞ்சதாரோவில் உயர்நிலப் பகுதிகளை நகரின் மற்ற பகுதிகளிலிருந்து வேறெனப் பிரித்துக்காட்டும் வகையில் இடையில் வெற்றிடங்கள் விடப்பட்டுள்ளன... ஹரப்பாவில் வெற்றிடங்கள் மூலமும் தடுப்புச்சுவர்கள் மூலமும் இந்த வேறுபாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பொதுக் கட்டிடங்களுக்குச் செல்லும் நுழைவுரிமை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது...’. பின்னாளில் இந்தியப் பரப்புக்குள் ஆரிய வந்தேற்றம் நிகழ்ந்தபோது ஆரியர்கள் இங்கிருந்த பூர்வகுடிகளை தமக்கிணையானவர்களாக கருதாததுடன் அவர்களை நிறம், உருவ அமைப்பு, வழிபாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்து ஏளனப்படுத்தி பலவாறாக பாகுபடுத்தத் தொடங்கி வர்ணம் சாதி என்கிற வரையில் நீட்டித்து வளர்த்து நிலைநிறுத்தினார்கள். 

சகிப்பின்மையின் உச்சம் என்று எதைக் கண்டு துடித்தீர்கள்?

ஆரியர்களின் வேதவழிப்பட்ட இந்து மதத்தின் வரலாற்றை அறிய விரும்பும் எவரொவரும் அதன் ஒரு வரியைக்கூட துணுக்குறாமல் படித்துவிட முடியாது. தானல்லாத பிறரது இருப்பை வெறுக்கவும் அழிக்கவுமான கருத்தியல் நியாயத்தை இறை நம்பிக்கை, மத ஆச்சாரங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள் ஆகியவற்றின் வழியே நிறுவுவதற்காக அவர்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், குரூரமான தண்டனைகள், ஒடுக்குமுறைகள் சொல்லித் தீராதவை. ஆரிய, வேத மேன்மையை நிலைநிறுத்தும் புரோகிதப் பிரிவினர் தமது நலன்களுக்காக நாட்டின் அறிவு ஆற்றல் அனைத்தையும் கீழ்ப்படியச் செய்து ஏற்படுத்திய அழிமானத்தால்தான் உலக அரங்கில் இந்தியா இன்றும் பல தளங்களில் பின்தங்கியிருக்கிறது. தங்குதடையற்ற அவர்களது வல்லாதிக்கத்தை தடுத்தாக வேண்டும் என்கிற வரலாற்றுப் பெருவிழைவிலிருந்து பௌத்தம் உருவானது. ஆனால் அதுவும் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது. பௌத்தத்திற்கும் பார்ப்பனீயத்திற்கும் இடையேயான போராட்டத்தின் வரலாறே இந்தியாவின் வரலாறு என்கிற அண்ணல் அம்பேத்கரின் கூற்று இந்த நிலையை விளக்கப் போதுமானது. வரலாறு நெடுக வழிந்தோடிய இந்த ரத்தத்தின் பிசுபிசுப்பும் மரண ஓலமும் அழுகிய பிணங்களின் வாடையும் அவமானத்தின் குமுறலும்  இந்தியப் பரப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்றளவும் தொடர்கிறது. அதற்கான பொறுப்பை ராஷ்ட்ரீய சர்வநாச சங்கம் எனச் சுட்டப்படும் ஆர்.எஸ்.எஸ் தான் ஏற்றாக வேண்டும். அது எத்தகைய மனிதத்தன்மையற்ற, பிற மத விஷங்கக்கிகளை, வெறுப்பாளர்களை உருவாக்கிவிட்டுள்ளது என்பதற்கு சுவாமி அசீமானந்தா என்பவர் ஓர் உதாரணம்.

ஐந்து தாக்குதல்களில் 119 பேரைக் கொன்றது மற்றும் பல்வேறு நாசவேலைகளுக்காக கைதாகி சிறையிலிருந்த இந்த அசீமானந்தாவிடம் கேரவன் இதழுக்காக லீனா கீதா ரகுநாத் ஒரு நேர்காணலை எடுத்திருந்தார். இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் அந்தமான் பகுதியில் நிவாரண முகாம் எவ்வாறு செயல்பட்டதென பாருங்கள்.       

‘‘அந்தமானைவிட்டு வந்தபிறகும் அசீமானந்தா அடிக்கடி அங்கு வந்தார். இயற்கைச் சீற்றங்களைத் தொடர்ந்து  உணவு மற்றும் மருந்துப்பொருட்களை ஒப்படைக்கவும் வந்தார். ஆனால் அவரது நிவாரண உதவிகளை ‘யார் யாரெல்லாம் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொண்டார்களோ அவர்களுக்குமட்டுமே தரவேண்டும்’ என்று மிக்ககடுமையாக வரையறுத்தார். 2004ல் சுனாமி வந்தபிறகு நிகழ்ந்த ஒருகதையை என்னிடம் சொன்னார். “ஒரு கிறிஸ்தவப் பெண் தனது குழந்தைக்குப்பால் வேண்டும் என்று வந்தாள். எனது ஆட்கள் இல்லை என்று கூறிவிட்டார்கள். அந்தக் குழந்தைக்கு மூன்று நாட்களாக எந்த உணவும் கிடைக்கவில்லை கொஞ்சம் பாலாவது தராவிட்டால் அந்தக்குழந்தை இறந்துவிடும் என்று அந்தப்பெண் கெஞ்சினாள். அதன்பின் எங்கள் ஆட்கள் ‘சுவாமிஜியிடம் சென்று கேள்’ என்றனர். நான் அந்தப் பெண்ணிடம் ‘அவர்கள் என்ன செய்கிறார்களோ அதுதான் சரி. உனக்கு இங்கே பால் கிடைக்காது’ என்று கூறினேன்”.  இந்தக்கதையைத் திரும்பத் திரும்பக் கூறுவதை அசீமானந்தா பெரிதும் விரும்பினார்.’’

இதற்கு மேல் வாசிக்க முடியாமல் நான் விக்கித்துக் கிடந்தேன் வெகுநேரம். மூன்றுநாட்களாக உணவின்றிச் சொடுங்கும் பச்சிளம் குழந்தைக்கு ஒரு சங்கடை பால் தர மறுக்கும் அசீமானந்தா போன்றவர்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மதமான இந்துமதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள் என்றால் இந்தச் சமூகம் எத்தகைய பேரழிவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற நடுக்கம் எனக்குள் பரவியது. இந்தளவிற்கு பிற மதவெறுப்பு தனக்குள் உருவாகவும் மூர்க்கம் பெறவும் காரணமாக அமைந்தது ‘‘இந்து மதத்தைவிட்டு ஒவ்வொரு மனிதனும் விலகிச் செல்லும்போது, ஒரு மனிதன் குறைகிறான் என்பதல்ல பொருள். ஒரு எதிரி அதிகமாகிறான் என்பதே” என்கிற விவேகானந்தரின் கூற்றே என்கிறார் அசீமானந்தா. அசலான இந்த விவேகானந்தரை அரசிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக ராமகிருஷ்ணா மிஷன் மதச்சார்பற்றவராக திரித்துக் காட்டிவிட்டது என்கிறார் அசீமானந்தா. இந்த விவேகானந்தரைத்தான் துறவி, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக பாவித்தவர் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.    

சகிப்பின்மை என்கிற அரசியல் கோட்பாடு, வெகு மக்களின் மனங்களை எவ்வாறு ஆட்கொள்கிறது?

இந்தியச் சமூகம் 47 லட்சம் பெயர்களிலான சாதி மற்றும் உட்சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. இத்தனைச் சாதிகளில் ஒன்றுகூட இன்னொன்றை சமமாகக் கருதுவதில்லை, கருதமுடியாது. இது தான் சாதியின் அடிப்படையான பண்பு. தாங்கள் ஒரு தனிக்கூறான பண்பாட்டின் வழிவந்தவர்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு சாதியினருக்கும் இருக்கிறது. அதனாலேயே பிறரைப் பற்றிய இழிவான / உயர்வான மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டு அதனூடாக பிறருடன் கலந்துண்பதை, மணம் புரிவதை, சேர்ந்திருப்பதை, சமயச்சடங்குகள் செய்வதை தீர்மானிக்கிறார்கள். வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்களை அவர்களது தனித்துவப் பண்புகளோடு எந்தளவுக்கு சகித்துக்கொள்ள மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக உலகளாவிய அளவில் நடத்தப்படும் பல சர்வேக்களில் சகிப்புத்தன்மை மிகக்குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்கிறது. வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ளவர்கள் தமது அண்டை வீட்டாராக வசிப்பதை ஏற்க முடியாது என்று அந்த சர்வேயில் பெரும்பாலான இந்தியர்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இங்கு நீண்டகாலமாக வாழ்விடம் முதல் இடுகாடு வரை பிரிந்து கிடப்பது தான். இந்தப் பிரிவினையை இயல்பானதாக உள்வாங்கி தகவமைந்துள்ள மனோபாவம் நம் ஒவ்வொருவரது செயலிலும் பிரதிபலிக்காத ஒரு செயலும் இங்கு இல்லை. பிரக்ஞைபூர்வமாக இருக்கும் சில நேரங்களில் சாதியும் அதன் தொகுப்பான இந்துமதமும் பயிற்றுவித்தவற்றை தவிர்க்கிறாமேயன்றி தன்னுணர்வான அனிச்சைநிலையில் நம்மில் பலரும் சாதியாக/ மதமாக - பிறருடன் ஒட்டுறவில்லாதவர்களாகவே இருக்கிறோம். அதனாலேயே தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், பிற மதத்தவர், இனத்தவர் மீதான வன்முறைகளில் ஈடுபடுகிறவர்களாகவும், அவற்றை ஆதரிப்பவர்களாகவும் இயல்பாகவே இருக்கிறோம்.   

சகோதரத்துவம்?

தோழமைத்தன்மையை விளக்கும் உணர்வே சகோதரத்துவம். இது மற்றவருக்கு நல்லவற்றைச் செய்யத் தூண்டுவதாகும் என்று கூறும் அம்பேத்கர் பிறிதொரு இடத்தில் சகோதரத்துவம் வளர நலம் வாய்ந்த சமூக மண்ணும் சிந்தனை நீரூற்றும் தேவை என்கிறார். மகிழ்ச்சி, அவலம், பிறப்பு, இறப்பு, உணவு என வாழ்வின் உயிர்த்துடிப்பான இயக்கம் அனைத்தையும் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் ஒத்துணர்வுதான் அனைவரையும் சகோதரர்களாக உணர வைக்கும். ஆனால் அப்படியான பகிர்தலை இந்துமத/ சாதிய துர்போதனைகளால் கட்டமைக்கப்பட்ட மனம் ஒப்புவதில்லை என்கிற அம்பேத்கரின் துயரம் இந்த நாட்டின் மீது இருளெனக் கவிந்திருக்கிறது. 

கௌரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த பன்சாரே இவர்களின் தியாகம் எப்போது அர்த்தப்படும்?

சங் பரிவாரத்தினர் வீழ்த்தப்படுவதற்கும் இவர்களைக் கொன்றவர்கள் சட்டத்தின்  முன்னே நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதற்கும் இவர்களைப் போன்ற சுதந்திரச் சிந்தனையாளர்கள் இனியும் கொல்லப்படாமல் தடுப்பதற்கும் தேர்தலும் ஆட்சி மாற்றமும் மட்டுமே வழி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள உரிமை என்பதற்கும் மேலாக மனிதகுலத்தின் இயல்புரிமை என்கிற அர்த்தத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மதிக்கும், மற்றமையை உற்றமையாய் கருதும், தனிமனிதர்களுக்கிடையே மத நல்லிணக்கமும் அரசின் செயல்பாடுகளில் மதச்சார்பின்மையும் பேணும் பண்பேறிய ஒரு குடிமைச்சமூகத்தை உருவாக்குவதுதான் அதனிலும் சிறந்த வழியென நம்புகிறேன். அதற்காக நடக்கும் எந்தவொரு போராட்டத்திலும் இவர்களது தியாகம் கண்ணொளியாகச் சுடர்ந்து நம்மை முன்னடத்தும்.

-அணையா வெண்மணி, ஏப் 2019

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...