பா.ரஞ்சித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ரஞ்சித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 31

ரைட்டர்: வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா பங்குதாரியா? -ஆதவன் தீட்சண்யா



சைரனை அலறவிட்டபடி தலைதெறித்தோடும் காவல்துறை/ ராணுவ வாகனங்கள் யாரையோ காப்பாற்றவோ ஏதோவொரு குற்றத்தை தடுத்திடவோ தான் ஓடுகின்றன என்று நம்பிவிடாதீர்கள். ஒருவேளை அவை உங்களது அப்பாவி பிள்ளைகளை கண்காணா இடங்களுக்குக் கடத்திப்போய் குற்றவாளிகள் என்று பொய்முத்திரை குத்தி என்கவுண்டரில் சுட்டுத்தள்ளவும் ஓடக்கூடும்.

என்கவுண்டரில் போலி அசல் என்கிற பகுப்புகள் அர்த்தமற்றவை. அனேகமான  என்கவுண்டர்கள் இட்டுக்கட்டப்பட்டகுற்றச்சாட்டுகளின்பேரிலான படுகொலைகளே. 20 இலட்சம் ரூபாய் விருதுத்தொகையைப் பெற்றுவிடும் பேராசையில் காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் அப்பாவி இளைஞர்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு ‘தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை’ என்று ராணுவத்தார் நாடகமாடினர். நாகாலாந்தில் பணிமுடித்துவந்த சுரங்கத்தொழிலாளர்கள் தீவிரவாதிகள் என ராணுவத்தாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பனிமூட்டத்தில் மங்கலாக கண்ணுக்குத் தென்பட்ட மாத்திரத்திலேயே தேசவிரோதி என்று துப்பறிந்து உயிரெடுத்துவிடுகிறார்கள்.

குடிமக்களுக்கு எதிராக எந்த பழிபாவத்தையும் செய்துவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டால் நியாயமாகிவிடும் என்கிற தைரியம் போலிசாருக்கும் ராணுவத்தாருக்கும் எங்கிருந்து வருகிறது? ‘உரிமைகளுக்காகப் போராடும் குடிமைச்சமூகம் நாம் முறியடித்தாக வேண்டிய புதிய போர்முனையாக உருவெடுத்துள்ளது’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் வெறியேற்றி அனுப்பப்படும் போலிஸ் அதிகாரிகள் மக்களை தேசவிரோதிகளாகவும் குற்றவாளிகளாவும்தானே அணுகுவார்கள்? குடிமக்கள் தமது உடல்மீது முழுவுரிமை கோரமுடியாது என்று கொக்கரிக்கும்  ஓர் அரசின் ஏவல்படையினர் இவ்வாறு துள்ளுவதில் வியப்பேது! 

இங்கு தேசப்பாதுகாப்பின் பெயரால் நிறைவேற்றிடும் சட்டங்கள் யாவும் தேசத்தைப்  பாதுகாப்பதற்கானவையல்ல. அச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தினரின் குறுகிய நலன்களை பாதுகாப்பதற்காகவோ அவர்களது தனிப்பட்ட பகைமைகளை தீர்த்துக் கொள்ளவோ கருத்தியல் எதிராளிகளை "அப்புறப்படுத்தவோ" நிறைவேற்றப்பட்டதாகவும் இருக்கலாம்.

ஆள்தூக்கிச் சட்டமான ஊபாவின் கீழ் சிறையில் வாடும் ‘பிகே16’ குற்றவாளிகள் இந்நாட்டின் மதிக்கத்தக்க மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களுமாவர். முன்னதாக, அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும்படியான கோப்புகள் அவர்களது கணிணிகளிலும் செல்பேசிகளிலும் ஊடுருவிய மர்மநபர்களால் ஊன்றப்பட்டன. பின் அக்கோப்புகளை அவர்களுக்கெதிரான சான்றுகளாக்கி தேசியப்புலனாய்வு நிறுவனம் கைது செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கல்விவளாக உரிமைகளுக்காக, ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடிய பலரையும் இந்த ஊபாவின் கீழ் கைதுசெய்து சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்படுத்துவதெல்லாம், "கருத்தியல் எதிராளிகளை அப்புறப்படுத்துவது" தானே!. அன்றாட பரபரப்புகளாக நம்மைக் கடக்கும் இத்தகைய நடப்புண்மைகளை நினைவூட்டும் விதமான கதையமைத்து, சகமனிதர்களின் வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா அல்லது பங்குதாரியா என்கிற கேள்வியை  எழுப்பி் நம் காலத்தின் அரசியல் படமாக உருவெடுத்துள்ளது ரைட்டர்.

ரைட்டர், தனிமனிதரிடமும் சமூக நிறுவனங்களிலும் அரசியந்திரத்திலும் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் நிலைகொண்டுள்ள அதிகாரமானது, தம்மிலும் எளியோர்க்கு எதிராக இயங்கும் நுண்தளங்களின் நேர்சித்திரமாகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும், பதவியாதிக்கமும் காவல்துறைக்குள் இயங்கும் விதமானது, அத்துறைக்குள்ளேயே அடுத்தடுத்த படிநிலைகளில் கீழேயுள்ளவர்களுக்கும் குடிமக்களுக்கும் எதிராக எத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் என்பதை துணிவுறப் பேசி் தனது கலையாற்றல் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கானதே என உணர்த்தியுள்ளார் ப்ராங்க்ளின். தமிழ்த் திரையுலகிற்கு புத்தூட்டம் ஏற்றிட தோழர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுகமான இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை வரிசையில் இப்போது ப்ராங்க்ளின்.

குற்றங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கிவிட்டு இந்தச் சமூக அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் அவலத்திற்குள் சிக்காதிருக்கும் அரசியல் தெளிவு கொண்ட இக்கதையை திரையில் உயிர்ப்பித்திட கலைஞர்களும் தொழில்நுட்பர்களும் பேருழைப்பை நல்கியுள்ளனர்.   

ரைட்டரின் கதைமாந்தர்கள், சுதந்திரமடைந்த ஒரு நாடு ஏற்றுக்கொண்டுள்ள மக்களாட்சியின் மாண்புகளை உள்வாங்கிச் செயல்படுத்தும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியிலிருந்து உருவானவர்கள். ஒப்புரவோடும் மனிதத்தன்மையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தச் சமூகம் பாழ்பட்டிருப்பதை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். நிலவரத்தை அம்பலப்படுத்துவதானது, அச்சமூட்டி அடிபணியச் செய்வதற்காக அல்லாமல் இந்த இழிநிலைக்கு எதிராக இயன்றளவில் போராடுங்களென பார்வையாளர்களின் பொதுமனசாட்சியை அவர்கள் தூண்டுகிறார்கள்.



கல்விக்கூடங்களில்நிலவும் சாதியத்தடைகள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா என பலரை காவுகொள்வதைப் போலவே அத்தடைகளையும் தாண்டி கல்வி பயின்று வேலைக்கு வருவோரில் பலரை பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் காவுகொள்கின்றன.  அப்படி காவல்துறையின் ‘நிறுவனப்படுகொலை’க்கு ஆளான விஷ்ணுப்ரியா உள்ளிட்டோரின் கூட்டுமுகமே ரைட்டரில் வரும் பெண்போலிஸ் சரண்யா.

குதிரையேற்றத்தில் வல்லவரான சரண்யாவின் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற பணியை- அவரது சாதியின் மீதான வெறுப்பினால் மறுத்து குதிரையின் லத்தியை அள்ளவைக்கும் உயரதிகாரி சர்மாவின் குரூரம், பட்டியல் சமூக மாணவர்களை கல்விக்கூடத்தின் துப்புரவுப்பணிகளில் ஈடுபடுத்தும் வன்கொடுமையை நினைவூட்டுகிறது. சர்மாவின் சாதிவெறியையும் ஆணாதிக்கத்தையும் நிலைகுலையச் செய்யும் பதிலடியைக் கொடுத்துவிட்டு சரண்யா செத்துப்போகிறாள்.  

தேவகுமார் என்கிற ஆய்வுமாணவர், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்கள் என்பது போன்ற நுண்மான் நுழைபுலமிக்கத் தலைப்பிலோ, ஆய்வுப்புலத்தை மடக்கி அக்குளில் செருகிக்கொள்ள விரும்பும் சங்கிகளுக்கு உவப்பானதொரு தலைப்பிலோ ஆய்வை மேற்கொண்டிருந்தால் எளிதாக முனைவராகியிருப்பார். தொந்தரவில்லாத இந்தச் செக்குமாட்டுத்தனத்திற்குள் முடங்காத தேவகுமாரோ, ‘போலிஸ்துறையில் தொடரும் தற்கொலைகள்’ பற்றி ஆய்ந்திட முனைகிறார். சரண்யாவை தற்கொலைக்குத் தூண்டிய தனது அட்டூழியங்கள், தேவகுமாரின் ஆய்வினால் வெளிப்பட்டுவிடக்கூடாது என்றஞ்சும் சர்மா, அதற்காகவே தேவகுமாரை தேசவிரோதியாக சித்தரித்து வேட்டையாடுகிறான். நடுக்குறும் நம் மனம், இக்கொலையில் தானுமொரு கூட்டாளியாக சிக்கிக்கொண்டது குறித்த குற்றவுணர்வில்  வாதையுறும் ரைட்டர் தங்கராஜ், அதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் எத்தனங்களால் ஆசுவாசமடைகிறது.    

எந்தவொரு ரைட்டரை விடவும் ஸ்டேசன் ரைட்டர்கள் நம்பத்தகுந்த புனைவுகளை எழுதக்கூடியவர்கள் என்பதை தங்கராஜியும் பலவாறாக உறுதிப்படுத்துகிறார். ஆனால் அந்தப் புனைவுத்திறனை அப்பாவி தேவகுமாரின் உயிரைப் பறித்திட தனது மேலதிகாரியான சர்மா பயன்படுத்திக்கொண்டதை உணரும் ஆவேசத் தருணத்தில்தான், தங்கராஜ் சர்மாவை சுட்டுக்கொன்றுவிட்டு சிறையேகுகிறார். அதிகாரக்கொடுக்கினால் சூழலையே விஷமயமாக்கி வந்த  சர்மாவின் சாவு பொருத்தமானதொரு குறியீடுதான்.

இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்திட கிறிஸ்தவம் தழுவி பிற்படுத்தப்பட்டோராகிவிட்ட தலித்துகளின் வாழ்நிலை, காவல்நிலையத்திற்கு வெளியேயுள்ள ரகசிய கொட்டடிகள், போலிஸ் அத்துமீறல்களுக்கு உடந்தையாகும் நீதித்துறை என படம் தொட்டுச்செல்லும் பிரச்னைகள் கவனம்கொள்ளத்தக்கவை.

நாகரீகச் சமூகத்தின் இருப்புக்கு போலிஸ் கடும் அச்சுறுத்தலாகிவிட்ட நிலையில், “போலிஸ் இல்லாத உலகம்” என்கிற முழக்கம் பரவலாகி வருகிறது. இதனிடையே போலிஸ்காரர்களுக்கு சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கை, அவர்களும் இயல்பான மனிதவாழ்க்கைக்கு உரிமையுடையவர்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டது. அதற்கான போராட்டத்தை, தேவகுமாரை ஒருமுறை கைநீட்டி அடித்துவிட்டதற்காக அரற்றியழும் அந்தந்த காலத்து தங்கராஜ்கள் நடத்துவார்கள் என்கிற ப்ராங்க்ளினின் நம்பிக்கையை உடனடியாய் புரிந்துகொள்ள முடியாதபடி போலிசார் பலரும் அதிகாரபோதையில் திளைத்திருக்கக்கூடும். போதை என்பது தெளியக்கூடியதுதானே? 

நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.12.2021

திங்கள், ஜனவரி 13

சாதி பார்த்தே நீதி - ஆதவன் தீட்சண்யா


அண்ணல் அம்பேத்கர் பிறந்த 1891ஆம் ஆண்டில் அயோத்திதாசர் நீலகிரியில் கூட்டிய திராவிட சபையின் மாநாடு ‘...விவசாய ஏழைகளுக்கு பூமி...’ கோரியது. செங்கல்பட்டு ஆட்சியர் திரமென்ஹீர் பரிந்துரையால் 1892ல் சென்னை மாகாணத்தில்  தலித்துகளுக்கு 12லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலம் என ஒதுக்கப்பட்டது. அசுரன் திரைப்படத்தை முன்னிட்டு இவ்விசயத்தின்மீது கிளம்பிய விவாதம், ஒரு கட்சியின் தலைவரிடம் இன்னொரு தலைவர் மூலப்பத்திரம் கேட்பதாகவும், ‘ஆண்ட சாதி’யை நீக்கும்படி வெற்றிமாறனை மிரட்டுவதாகவும் திரிந்துபோனது. இதேபோல பா.ரஞ்சித் தலித்துகளின் நிலவுரிமை பற்றி எழுப்பிய கேள்வியை ராஜராஜசோழன் மீதான அவதூறாக திரித்தார்கள்.

இவ்விரண்டு விசயங்களிலும் பின்தள்ளப்பட்ட கேள்விகள்: மானியங்களுக்காக நிலம் பறிக்கப்பட்டு குடிநீக்கிகளாக ஆக்கப்பட்டவர்கள் யார்? சாதியமின்றி நிலக்குவிப்பு நடந்ததா?  பஞ்சமிநிலம் ஏன் இப்போது தலித்துகளிடம் இல்லை? தீண்டினால் தீட்டு பார்த்தாலே பாவம் என்பவர்கள் தலித்துகளின்  பஞ்சமிநிலம் முழுவதையுமே அபகரித்திருப்பது தீட்டுக்குரியதாகாதா? அபகரிக்கப்பட்டுள்ள பஞ்சமிநிலத்தை மீட்டெடுப்பது எங்ஙனம்?

***
மேலவளவு முருகேசனும் அவரது தோழர்கள் ஐவரும் கொடூரமாக துள்ளத்துடிக்க கொல்லப்பட்டதை உலகறியும். சாதிய வன்மத்தால் முருகேசனின் தலையை வெட்டியெடுத்து வெகுதூரத்திலிருந்த கிணற்றில் வீசிப்போயினர் கொலையாளிகள். ஆயுள்தண்டனைக் கைதிகளான இக்கொலையாளிகள் 17பேரும் ஒருசேர நன்னடத்தையோடு இருப்பதாக எப்படியோ கண்டுபிடித்து விடுதலை செய்திருக்கிற தமிழக அரசு, மறுதலையாக அப்பாவி தலித்துகளை எப்படி கையாள்கிறது?
 
மேட்டுப்பாளையம் தீண்டாமைச்சுவரால் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு போராடியவர்கள் மீது காவலர்களை ஏவியது. பாதிக்கப்பட்டவர்களை சாதிப்பெயரிட்டு திட்டி அவமதித்து தாக்கியதுடன் பொய்வழக்கில் சிறைப்படுத்தியுள்ள காவல்துறையினர்மீது ஒரு நடவடிக்கையுமில்லை. பாராட்டி பதக்கம் கொடுப்பார்களாக்கும். இடுகாடின்றியும், இடுகாட்டுக்குப் பாதை மறுக்கப்பட்டதால் பாலத்தின் மீதிருந்து பிணத்தை கயிறுகட்டி இறக்கியெடுத்தும் தலித்துகள் அல்லாடுகையில் ஏறெடுத்தும் பாராத அரசு மேட்டுப்பாளையத்தில் மாண்ட 17பேரையும் அவசரமாக எரித்தழித்துள்ளது. தலித்துகள் ஒருவழக்கில் விடுதலையானால் மறுவழக்கைப் போட்டு வெளியே வரமுடியாதபடிச் செய்கிறது. கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு போராடியவர்களில் ஒருவரை குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்தியுள்ளது. நாட்டின் சிறைச்சாலைகளில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் பெரும்பான்மையாக அடைபட்டிருப்பது இவ்விதமாகத்தான்.

***
தேர்தலின்போதான பொன்பரப்பி வன்முறையாளர்கள் மனக்கண்ணிலேயே இருக்கிறார்கள். அந்த கும்பலில் பலருக்கும் திடகாத்திரமான உடல்வாகு இல்லை. நேர்த்தியான உடையில்லை, செருப்பில்லை. எண்ணெய்யற்ற பரட்டைத்தலை. ஆனால் மனம் முழுக்க சாதிவெறியும் அதன் மறுவடிவமாய் உருட்டுக்கட்டையும் ஏந்தி அவர்களையொத்த தலித்துகளின் வீடுகளையும் பண்டபாத்திரங்களையும் அடித்து நொறுக்கியும் தீராத ஆத்திரம் வசவானது. எது எதிர்ப்படினும் அழித்தொழிக்கும் வன்மத்தை உடல்மொழியால் காட்டியபடி விரைந்த அவர்கள் ஒருநாளில் சாதிவெறியர்களாகிவிடவில்லை. குடும்பம், சுற்றம், கோவில், திருவிழா, கல்விக்கூடம், ஊடகம் என ஒவ்வொன்றும் தன்பங்கிற்கு ஊட்டிய விஷத்தினால் அவ்விதமாகியிருக்கும் அவர்களை இக்கட்டுரை என்ன செய்யும்?




வெள்ளி, ஏப்ரல் 7

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... ஆதவன் தீட்சண்யா


தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது,  கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் (1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, ஒவ்வொரு அங்குலத்திலும் நொடிக்குநொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி என்று ஹரியானா  முழுவதையுமே அறிவிக்குமளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்கு சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.

*
ஹரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்திலுள்ள மிர்ச்பூர் ஏற்கனவே சாதிய வன்கொடுமைக்காக அறிப்பட்டதுதான். 1700 ஜாட் குடும்பங்களும் 525 தலித் குடும்பங்களும் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பார்ப்பனர்களும் மிர்ச்பூரில் வசிக்கிறார்கள். சாதியத்தை ஏற்கிற யாவருமே பார்ப்பனர்களின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறபடியால் அவர்களது எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல.  மிர்ச்பூரின் ஜாட் ஜமீன்தார்களில் ஒருவன் ஹோசியார் சிங். தன் மகனுக்கு ஓரினப்புணர்ச்சியில் நாட்டமிருப்பதையறிந்து அவனது உறவாளிகளைக் காட்டுமாறு அவனை வெளுத்தெடுக்கிறான். உறவாளிகளை காட்டிக்கொடுக்க விரும்பாத மகனோ மூன்று தலித்துகளின் பெயர்களை கூறிவிடுகிறான். ஹோசியார் சிங்கும் அவனது மனைவி நங்கி சிங்கும் தலித் குடியிருப்புக்குள் புகுந்து இரண்டு தலித் இளைஞர்களையும் அவர்களது தாய்மார்கள் மூவரையும் பிடித்து அடித்திருக்கிறார்கள். அவர்களை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்றிருக்கிறார்கள். 2.5.2007 அன்று நடந்த இவ்வன்கொடுமை நாடு தழுவிய கண்டனத்தைப் பெற்றாலும் அதற்காக சாதியவாதிகள் அகங்காரத்தை விட்டுவிடுவார்களா என்ன?


19.4.2010. குடிவெறியில் நிதானமிழந்த ஜாட் இளைஞர்களின் கும்பலொன்று இருசக்கர வாகனத்தில் தலித் குடியிருப்புக்குள் நுழைந்திருக்கிறது. கரன்சிங் என்கிற தலித் வளர்க்கும் நாய் (ரூபி) அந்த கும்பலின் கொட்டத்தைப் பார்க்கச் சகியாமல் குரைத்திருக்கிறது. உடனே ராஜீந்தர் பாலி-  ஜமீன்தார் ஒருவரின் மகன், செங்கல்லால் நாயைத் தாக்கியிருக்கிறான். இதை ஆட்சேபித்த கரன்சிங்கின் உறவினரான யோகேஸ் அந்தக் கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். அங்கு வந்த கரன்சிங், பிரச்னை பெரிதாகிவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் கும்பலிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார். இயல்புக்குத் திரும்பமுடியாத கரன்சிங் தங்களது சமுதாயத்தலைவர் வீர் பானுடன் போய் ஜாட்டுகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் வீர் பான் ஜாட்டுகளால் தாக்கப்பட்டிருக்கிறார். ஜாட்டுகளின் விபரீதத்திட்டத்தை யூகித்த தலித்துகள் நர்னான்ட் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 2007ல் வன்கொடுமைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்தவரும், மிர்ச்பூர் ஜாட் தலைவன் ஒருவனுடைய மருமகனின் நண்பனுமான வினோத் குமார் காஜல் என்பவன்தான் இப்போதும் காவலதிகாரி. தன் நண்பனோடு தலித் குடியிருப்புக்குப் போன அந்த அதிகாரி புகாரை திரும்பப் பெறுமாறு தலித்துகளை மிரட்டியுள்ளான். 21.4.2010 காலையில் அந்தக் காவலதிகாரியும் வட்டாட்சியரும் அழைத்ததன் பேரில் தலித்துகள் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த நேரத்தில் ஜாட்டுகள் தலித்துகளின் 18 வீடுகளை கொள்ளையடித்துவிட்டு தீயிட்டு பொசுக்கினர். போலியோவினால் நடக்கவியலாத சுமன்(17) என்கிற பெண்ணை வீட்டுக்குள் வைத்து கொளுத்தியிருக்கிறார்கள். மகளைக் காப்பாற்ற தாராசந்த் வீட்டுக்குள் ஓடியபோது ஜாட்டுகள் கதவைப் பூட்டி இருவரையும் எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.

தலித்துகளின் போராட்டத்தால் காவலதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டான். குற்றம்சாட்டப்பட்ட 43 பேரில் 29 பேர் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே கால்நடைப் பராமரிப்புத்துறை வளாகத்தில் ஜாட்டுகள் மகாபஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்கள். அங்குள்ள அரசாங்க அலுவலகம்கூட சாதிச்சங்க கட்டிடம்போல் இயங்குகிறது. 43 காப் பஞ்சாயத்துகளின் 2000 பேர் அங்கு கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும், காவலதிகாரியை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ரயில் மறியல் செய்வோம் என்றும் அரசையே மிரட்டினார்கள். அதன்படியே பிற்பாடு ரகளையும் செய்தார்கள்.

இனி மிர்ச்பூரில் குடியிருக்கமுடியாது என்பதால் தலித்துகளில் சிலர் அக்கம்பக்கமுள்ள ஊர்களுக்குச் சென்றுவிட, 70 குடும்பங்கள் வேத்பால் தன்வர் என்பவரது இடத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து ஆறுவருடங்களாக வசித்து வருகிறார்கள். தலித்தல்லாத அந்த மனிதாபிமானிக்கும் மிரட்டல்தான்.

இந்த வன்கொடுமை வழக்கு உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சுற்றியலைந்துகொண்டிருக்கிறது. நீதிமன்ற ஆணைப்படி மத்திய பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி ஏந்தி ஊரில் காவல் இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கிறோம், மீண்டும் உங்கள் இடத்துக்கு வந்து குடியேறுங்கள் என்று தலித்துகளுக்கு தைரியமூட்டவோ, வன்முறையில் ஈடுபடக்கூடாது என்று ஜாட்டுகளை எச்சரிக்கவோ திராணியில்லாமல் மத்திய பாதுகாப்புப்படையினர் அங்கு தண்டத்துக்கு நின்றிருக்கிறார்கள். யாரிடமிருந்தும் அவர்கள்  யாரையும் காப்பாற்றவில்லை. ஒருவேளை ஜாட்டுகள் தங்களையும் கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சத்தில் அவர்கள் தினமும் துப்பாக்கியைத் துடைத்து ரவையை நிரப்பிக்கொள்கிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மிர்ச்பூரின் இந்த வரலாற்றைத்தான் ஜெயக்குமார் ‘சாதிகளிடம் ஜாக்கிரதை’ என்கிற ஆவணப்படமாக எடுத்துள்ளார். பார்ப்பனீயவாதிகள் மனிதத்தன்மையற்றவர்கள், வன்முறையாளர்கள் என்பதற்கான மற்றுமொரு கொடிய சாட்சியம் இப்படம்.  

***

சாதியாணவப் படுகொலைகள் குறித்து தான் எடுத்துவரும் ஆவணப்படத்திற்காக ஜெயக்குமார் அலைந்த காலத்தில்தான் மிர்ச்பூர் வன்கொடுமையை கேள்விப்பட்டிருக்கிறார். படத்தை அப்படியே நிறுத்திவிட்டு தன் குழுவினரோடு மிர்ச்பூருக்கு விரைந்த அவருக்கு ஊருக்குள் நுழைவதே உயிரச்சம் மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது. ஜாட்டுகள் வாய் திறக்க மறுத்ததோடு அவர்களது நடமாட்டத்தையும் கண்காணித்திருக்கிறார்கள். எனவே ஊருக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தில் அதிகமில்லை. ஆயினும் ஊர் எரிக்கப்பட்டது, மகள் -தந்தை படுகொலை, இடப்பெயர்ச்சி போன்றவற்றுக்கான காணொளித்துண்டுகள் கிடைக்காத நிலையில் அவற்றை அனிமேஷன் செய்து பொருத்தமாக இணைத்திருக்கிறார்.

தலித்துகளுக்கு நிலபுலமென்று பெரிதாக ஏதுமில்லாவிட்டாலும் அருகாமை நகரங்களுக்குப் போய் உழைத்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருந்திருக்கிறார்கள். உள்ளூர் நீர்நிலைகளில் மீன்பிடி உரிமையை ஜாட்டுகளை பின்னுக்குத் தள்ளி ஏலமெடுத்தவர் கரன்சிங். ஐம்பதாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டி உள்ளூர் பூலான் தேவி கோயில் திருவிழாவை நடத்துவதற்கான ஏலத்தை தரம்வீர் என்கிற தலித்தே எடுத்திருக்கிறார். ஜாட்டுகளின் பார்வையில் இதெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள். ஆகவே நாய் குரைத்ததால் வந்த வினை இது என்று அப்பாவித்தனமாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாய் குரைத்திருக்காவிட்டாலும் ‘அதற்குகூட லாயக்கில்லாதவர்களா நாங்கள்?’ என்று வம்பிழுத்து தாக்கியிருப்பார்கள். தாக்குவது என்கிற தீர்மானத்தை செயல்படுத்திட நாய் குரைத்தது ஒரு சாக்கு, அவ்வளவுதான்.  

பார்ப்பனீயத்தை ஏற்றவர்களின் வசிப்பிடம் ஊர். அதிலிருந்து மாறுபட்ட வாழ்முறை கொண்ட தலித்துகளின் குடியிருப்புகளோ ஊராரின் ஆளுகைக்கு கீழ்ப்பட்ட சேரி/காலனி /அம்பேத்கர் நகர்/ கீழ்த்தெரு என்பதாக பலவந்தமாக பிணைக்கப்பட்டுள்ளது. தனிப்பெயருமின்றி சேரிகள் அந்தந்த ஊரின் பெயரை முன்னொட்டாக கொண்டுள்ளன. வாழ்வாதாரத்திற்கு ஊராரைச் சார்ந்திருக்கும் நிலையும் இதனோடு சேர்ந்திருக்கிறது. ஊர்களிலிருந்து விடுவிக்கப்பட்ட, சுயாதீனமான வாழ்வாதாரங்களையும் அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்ட சுதந்திரமான தனிக் குடியேற்றப்பகுதிகளை - அதாவது தனி ஊர்களை-  தலித்துகளுக்கென அரசாங்கம் உருவாக்கித் தரவேண்டும் என்றார் அம்பேத்கர். அதற்கான தேவையை சாதியவாதிகளே தீவிரப்படுத்துகிறார்கள் என்பதை மிர்ச்பூரும் உணர்த்துகிறது. 

தாக்குதல் பற்றிய விவரணைகள் மூலம் வெளிப்படும் மூர்க்கத்தையும் ஆணவத்தையும் தந்திரத்தையும் ஏற்கனவே எங்கோ பார்த்திருப்பதுபோல நமக்குத் தோன்றும். ரொம்பவும் மூளையைக் கசக்கவேண்டாம், மிர்ச்பூரில் நடந்ததென்னவோ அதுதான் தருமபுரியிலும் நடந்தது. மிர்ச்பூருக்குச் சென்ற உண்மையறியும் குழுவிடம் ‘அவர்கள் நஷ்ட ஈட்டுக்கு ஆசைப்பட்டு தங்களது வீடுகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள், அந்தப் பெண்ணையும்  அவளது தகப்பனையும் கொன்றுவிட்டார்கள்’ என ஜாட் வழக்கறிஞர்  அசோக் சிங் தெரிவித்தாராம். பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம்சாட்டும் இந்த உத்தியே தருமபுரியிலும் கையாளப்பட்டது.

பாதிக்கப்பட்ட தலித்துகள் ஊரைவிட்டு வெளியேறி ஆறுவருடங்களாக தங்கியுள்ள இடத்தை மையத்தில் வைத்து முழுவிசயத்தையும் பேசுகிறது படம். நீதிக்கான தலித்துகளின்  போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியவர்களின் நேர்காணல்கள் பிரச்னையின் பரிமாணங்களை உணர்த்துகின்றன. அரசின் அலட்சியம், கட்சிகளின் சவடால், ஒவ்வொரு நாளையும் கழிப்பதிலுள்ள இடர்ப்பாடுகள், கடந்தகாலத்தை திரும்பிப்பார்க்க விரும்பாமை, ஏனிங்கு கிடக்கிறோம் என்பதறியாமல் தமதியல்பில் விளையாடிக் களிக்கும் குழந்தைகள், எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும் வாழ்வின் மீதான பற்று- என விரியும் காட்சிகள், தங்களுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு இயல்பான வாழ்க்கைக்குள் சென்றுவிட முடியாதா என்கிற அவர்களின் ஏக்கத்தையும் எத்தனத்தையும் குறிக்கின்றன. 

ஊரின் பெயரை மாற்றிக்கொண்டால் இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் பொருந்தும் தன்மையை படம் கொண்டிருக்கிறது. சடசடத்தெரியும் தீக்குள்ளிருந்து எழும் ஒரு பெண்ணின் தீனமான கதறல் வளர்ச்சி, வல்லரசு என்கிற ஆரவார முழக்கங்களுக்கிடையில் அமுங்கிப்போகலாம். ஆனால் அந்தக் குரலை தனக்குள் பொதித்து வைத்திருந்து வரலாறு மீண்டும் எழுப்புவதற்கு இந்தப் படம் துணை செய்யும்.

டாக்டர் ஷூமேக்கர்

தமிழ்நாட்டில் சில டாக்டர்கள் ஒன்றாக இருக்கும் சமூகத்தை வெட்டிப் பிளக்கிறார்கள். மனங்களில் விஷ ஊசியேற்றுகிறார்கள். சமூகத்தின் நோய்களுக்கு தவறான மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு நேரெதிரானவர் டாக்டர் ஷூமேக்கர் எனப்படும் திரு.இம்மானுவல். அவர் பிரிந்தவற்றை ஒட்டுகிறார், கிழிந்தவற்றை தைக்கிறார், முரண்டினால் லேசாக தட்டவும் செய்கிறார். வில்லிவாக்கம் மண்ணாடி ஒத்தவாடைத்தெருவின் பிரதானச்சாலையோரத்தில் இருக்கிறது அவரது கிளினிக்.

இம்மானுவேல், ஒரு கால்பந்தாட்ட வீரர். கால்பந்தாட்டத்திற்கு காலளவுக்கு முக்கியமானது ஷூ. அவ்வப்போது பழுதாகிப்போகும் ஷூவை செப்பம் செய்ய அலைய நேர்ந்திருக்கிறது. எனவே தானே தனது ஷூவை செப்பம் செய்துகொள்ளத் துணிந்து, அத்தொழிலில் பிரசித்தமான ஒருவரைத் தேடிப்போய் தொழில் கற்றுக்கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் தன்னுடைய ஷூவை மட்டுமே செப்பம் செய்துவந்த அவர் பிறகு நண்பர்களுக்கும் செய்து கொடுத்திருக்கிறார். அவரது பெயர் பரவுகிறது. புதிய ஷூ வாங்க முடியாத ஏழைப்பையன்கள் தங்களது கிழிந்த ஷூவை சரிசெய்து கொடுக்கும்படி அவரைத் தேடி வருகிறார்கள். கால்பந்தாட்டத்தின் மீதான அவர்களது ஆர்வத்தைப் போற்றும் விதமாக ஷூவை சரிசெய்து கொடுக்கத் தொடங்குகிறார். அவர்கள் மீண்டும் விளையாடுவதற்கு தன்னாலானதைச் செய்துகொடுத்த மனநிறைவு அவரை நிரந்தரமாக ஒரு கடைபோட வைக்கிறது. அவர் வேலை பார்த்துவந்த பின்னிமில் மூடப்பட்டதால் கடந்த 15 ஆண்டுகளாக முழுநேரமாக அந்தக்கடைதான் அவரது வாழ்க்கை.

தைப்பதற்கான ஷூக்களும் பந்துகளும் சூழ்ந்திருக்க அயராது ஒவ்வொன்றாக தைத்தபடி இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த ஷூவைக்கூட பத்திரமாக வைத்திருக்கிறார். ‘எல்லாரும் ஏழைப்பசங்கதானே, வந்து வாங்கிப்போக காசு இருந்திருக்காது’ என்கிறபோது அவரது குரலில் வெளிப்படும் கவலை கூலி பற்றியதல்ல.  புதிய ‘பூட் கட்டுவதிலும்’ தேர்ந்தவரான அவர் தனது வாடிக்கையாளர்களாகிய ஏழைச்சிறார்களிடமிருந்து அன்னியப்படாதிருப்பதற்காக அந்தக் கடையை பிடிவாதமாக நடத்திவருகிறார். ‘எப்பேர்ப்பட்ட கந்தலானாலும் சரிசெய்து கொடுத்துவிடுவார், அவர் ஒரு டாக்டர்’ என்று தயா சொன்னது அப்படியே பரவிவிட்டது. சென்னை மட்டுமல்லாது அண்டை நகரங்களிலிருந்தும் அவரைத் தேடி வந்தவண்ணமிருக்கும் கால்பந்தாட்ட வீரர்கள், கோச்சுகள் அனைவருக்குமே அவர் இப்போது டாக்டர்.

***

இன்னின்ன தொழிலை இன்னின்ன சாதிகள்தான் செய்யவேண்டும் என்பார்கள். ராக்கெட் விடுறதுக்கும் ரயில் ஓட்டுறதுக்கும் எந்த சாதியை நேர்ந்துவிட்டிருக்கிறது? கட்டணக் கழிப்பிடத்தை பல சாதியினரும் ஏலமெடுத்து காசு பார்ப்பார்கள். பிந்தேஸ்வர் பதக் என்கிற பார்ப்பனரால் தொடங்கப்பட்ட சுலாப் இன்டர்நேஷனல் 600 நகரங்களில் குளிப்பறை கழிப்பறைகளை நடத்திவருகிறது. தோல் தொழிற்சாலை நடத்துவார்கள், தோல் பொருட்களை விற்பனை செய்வார்கள். இதற்காக இவர்களது சாதி அந்தஸ்து குறைந்துவிடுவிடுவதில்லை. ஆனால் இதே வேலையை தலித் பார்த்தால் கேவலம் என்று ஒதுக்கிவைப்பார்கள். இம்மானுவல் தனது சாதிக்குரியதாக அல்லாத  ஷூ தைக்கும் தொழிலை உவப்போடு செய்துவருகிறார். தனது தொழில் தெரிவு குறித்து அவருக்கு தாழ்வுணர்ச்சியில்லை. ஏன் அந்த சாதிக்காரன் தொழிலை செய்கிறாய் என்று தொடக்கத்தில் அவரது அக்கா கண்டித்திருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினரிடம் இப்போது எந்தப் புகாரும் இல்லை. ‘அவர் தனக்கு விருப்பமான இந்த வேலையை செய்யட்டும், முடியாத காலத்தில் பேரப்பிள்ளைகளோடு வீட்டில் சந்தோஷமாக இருக்கட்டும்’ என்கிற அவரது மகனின் கூற்று இப்படத்தின் முக்கியமான செய்தி. 56 வயதிலும் இம்மானுவல் கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் சற்றும் குன்றாமல் திடலில் இறங்கி ஆடுகிறார். விருப்பங்களைக் கொண்டாடி வாழத் துணிந்த அவருக்கு நூல், தோல். ஊசி, பந்து என எல்லாவற்றையும்  ஒன்றுபோல் தெரிவது இயல்புதானே?

***

வெளியுலகத்தின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களின்மீது அன்போடு இயங்கும் இமானுவல் போன்ற ஒருவரது வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் என்று பாண்டியராஜ், வினோத் குழுவினர் அக்கறை காட்டியுள்ளனர். தனிப்பட்ட ஓர் ஆளுமையைப் பற்றிய ஆவணப்படத்திற்கான உதாரணமாக காட்டுமளவுக்கு டாக்டர். ஷூ மேக்கர் முழுமைப்பட்டிருக்கிறார்.

***
திரையுலகில் தனிக்கவனம் பெற்றுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்முயற்சியில் உருவான நீலம் அமைப்பு இவ்விரண்டு படங்களையும் தயாரித்துள்ளது. இதேபோல உதவ வாய்ப்புள்ளவர்கள்  முன்வருவார்களேயானால்  இளைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்கி பல மிர்ச்பூர்களை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரக்கூடும். 


நன்றி : தடம் இதழ், நவம்பர் 2016

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...