சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 6

செத்தது நீயில்லையா...!? ஆதவன் தீட்சண்யா


அன்றிரவு ஏனோ சற்று முன்கூட்டியே வீடு திரும்பியிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த தீட்சண்யாவோடு கொஞ்சநேரம் இருந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். எட்டரை மணி இருக்கும், யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், தோழர்.சுப்பிரமணியம் நின்றிருந்தார். எதிர்வீட்டில் வசித்துவரும் அவர் வீட்டிற்குள் வந்தது அதுதான் முதல் தடவை. சாப்பிட விடுத்த அழைப்பை மறுத்துவிட்ட அவர், ‘பேச்சு சத்தம் கேட்டது, இந்நேரத்துக்கே வந்துட்டீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்
’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நான் இரவில் வீடு திரும்பும் நேரம் குறித்து அக்கம்பக்கத்தில் இப்படியான நல்லபிப்ராயம். ஆனாலும் இதைச் சொல்லவா அவர் வந்தார் என்று நானும் மீனாவும் பேசியபடியே சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் மீண்டும் அவரே கதவைத் தட்டினார். என்ன விசயம் என்று நான் கேட்பதற்கு முன்பு அவராகவே சொன்னார். ‘லேலண்ட்டுக்கு எதிர்ல ஒரு ஆக்சிடென்ட்... ஸ்பாட் அவுட்டாம்... டெலிபோன் எக்சேஞ் ரவின்னு சொன்னாங்க... அதான் பதட்டத்துல வந்து பார்த்தேன். நீங்க இருக்கிறத பார்த்தப்புறம்தான் நிம்மதியாச்சு...’

எங்கள் அலுவலகத்தில் என்னோடு சேர்த்து மூன்று ரவிகள் இருந்தோம். ‘நான் இங்கிருக்கேன், மற்ற ரெண்டுபேர்ல எந்த ரவின்னு போய் பார்ப்போம் வாங்க’ என்று அவரையும் அழைத்துக்கொண்டு அலுவலக வாயிலுக்கு விரைந்தேன். அதற்குள் எந்த ரவி என்கிற உறுதிபடுத்தப்பட்ட தகவல் செக்யூரிட்டிக்கு வந்துவிட்டிருந்தது. எங்களில் மிகவும் இளையவரான ரவி. கொடூரமான விபத்து. நடுரோட்டில் அவர் கிடந்த நிலை 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் கண்ணுக்குள்ளிருக்கிறது. 

வீட்டில் அவருக்காக காத்திருந்த அவரது துணைவியாரிடம் போய் தகவல் சொல்வதற்கு எங்களில் ஒருவருக்கும் தைரியமில்லை. நீங்களே வந்து பக்குவமாக சொல்லுங்கள் என்று பெங்களூரிலிருந்த அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தோம். போலிசையும் ஆம்புலன்சையும் வரவழைத்து சடலத்தை ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் தகவல் பரவி அலுவலக ஊழியர்கள் பலரும் அங்கு குழுமிவிட்டிருந்தனர்.  பிணக்கிடங்கின் வாயிலிலேயே விடியவிடிய எல்லோரும் காத்திருந்தோம். இரவு இரண்டு மணிவாக்கில் ரோந்துவந்த போலிசாரில் ஒருவர், ‘ரவின்னதும் நீங்கதான்னு நெனைச்சேன்...’ என்றார். ‘ஆசையாக்கும்...?’ என்றேன். சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

***

விடிந்தும் நாங்கள் மருத்துவமனையிலேயே இருந்தோம். எட்டுமணி இருக்கும். ஆஸ்பத்ரி நுழைவாயிலில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றிலிருந்து பதறியடித்துக் கொண்டு இறங்கிய ஓர் ஆணும் பெண்ணும் உள்ளுக்குள் விரைந்தோடி வந்தார்கள். ரவியின் உறவினர்களாக இருக்குமென பார்த்தால் அவர்கள், ஓவியர் தேவாவும்  அவரது துணைவியார் பியூலாவும். இவர்கள் எதற்கு இப்போது இங்கே வருகிறார்கள் என்ற யோசித்தபடியே அவர்களுக்கு எதிரில் போய் நின்ற என்னைப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். இருவரது கண்களிலும் முட்டிக்கொண்டிருக்கிறது கண்ணீர். தேவா என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழத் தொடங்கிவிட்டார். எதற்கென்று எனக்கு விளங்கவில்லை. இறந்துபோனவர் ஒருவேளை இவர்களுக்கு சொந்தமாய் இருக்குமோ? அப்படி இருந்திருந்தால் சொல்லியிருப்பாரே என்று பலவாறாய் யோசித்தபடி அவரை தேற்றினேன். ‘சேது சொன்னதாகத்தான் தகவல் வந்தது...’ கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் அழுதுகொண்டே இருந்தார்கள்.

தோழர்.சேதுமாதவன் அப்போது சிபிஎம் நகரச் செயலாளர். நான் மாணவர் சங்கத்தில் வேலை செய்த காலந்தொட்டே என்மீது பிரியம் கொண்டு பழகி வருபவர். அவரது தொலைபேசி பற்றின புகாருக்காக எங்களது அலுவலக ஊழியர் ஒருவரின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார். போனை எடுத்த அந்த ஊழியரின் மனைவி ‘ரவின்னு நம்ம ஸ்டாப் ஒருத்தர் ராத்திரி ஆக்சிடென்ட்ல இறந்துட்டார். அதனால எல்லாரும் ஜி.ஹெச்.ல இருக்காங்க’ என்று  பதில் சொல்லியிருக்கிறார். எந்த ரவி என்று சேதுவும் கேட்கவில்லை, அந்தம்மாவும் தெளிவாய் சொல்லவில்லை. டெலிபோன் எக்சேஞ் ரவி என்றதும் அது நான்தான் என்று நினைத்துக்கொண்ட சேது, எங்களிருவரின் தொடர்பு வட்டத்திலுள்ள பலருக்கும் பொறுப்பாக தகவல் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அப்படி யார் மூலமோ கேள்விப்பட்டு கிளம்பி வந்தவர்கள்தான் தேவா தம்பதியர். அவர்களை ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத்துவதற்குள் பி.சி.நஞ்சப்பா, லகுமய்யா உள்ளிட்ட ஏராளமான தோழர்களோடு சேதுவே அங்கு வந்துவிட்டார். உயிரோடு நின்றிருக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக ‘இப்படி பதறியடிக்க வச்சுட்டியேப்பா’ என்றார் தோழமை கசியும் குரலில்.  ‘பதற வச்சது நானா நீங்களா?’ என்று அவரை கேலி செய்துகொண்டிருக்கும் போதே மேலும் பல தோழர்கள் வந்துவிட்டார்கள். நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தேன்கனிக்கோட்டைக்கும் தகவல் போய் அங்கிருந்தும் நண்பர்களும் தோழர்களும் வந்தவண்ணமிருந்தார்கள். செத்தது நானில்லை என்ற சொல்வதற்காகவே நான் ஆஸ்பத்திரி வாயிலில் நின்றாக வேண்டிய நிலையாகிவிட்டது.  அந்த ரவியின் சாவுக்கும் இந்த ரவியின் சாவுக்குமாக வந்த கூட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகம் நிறைந்திருந்தது.

***

காலை 11 மணியளவில் சடலக்கூராய்வு முடிந்தது. நானும் நண்பர்களும் ரவியின் உடலை அவரது மாமனார் வீட்டில் வைக்க பெங்களூருக்கு கிளம்பிவிட்டோம். நாங்கள் ஒசூர் திரும்பி வருவதற்குள் அனேக களேபரங்கள் நடந்துவிட்டிருந்தன.

* நான் செத்துவிட்டதை கேள்விப்பட்ட அரூர் தொலைபேசி நிலையத் தோழர்கள், என் சாவுக்கு ஒசூர் வர கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் கிளம்புவதற்கு முன்பு எனது வீட்டிற்கும் எனது மாமனார் வீட்டிற்கும் சென்று பக்குவமாக தகவல் தரவேண்டுமென்கிற பொறுப்புணர்ச்சி அவர்களை உந்தித் தள்ளியிருக்கிறது. தேவைப்பட்டால், இவ்விரு வீட்டாரையும் அழைத்துப்போக வாகன ஏற்பாடு செய்வது என்றும் திட்டம். இதற்கிடையில் ஒருவர், எனது நெருங்கியத் தோழர்களில் ஒருவரான சுதாகரனை போனில் அழைத்து ரவியின் அடக்கம் எங்கே என்று வினவியிருக்கிறார். சுதாகரன் பெங்களூர் என்றதும், அந்த ஊழியர், இதென்ன ஒசூரிலும் இல்லாம அரூரிலும் இல்லாம பெங்களூர்ல...? ஒருவேளை இங்க கொண்டுவர முடியாதபடி பாடி ரொம்பவும் சேதாரமா என்று கேட்டிருக்கிறார். அப்போதுதான் சுதாகரனுக்கும் உறைத்து நீங்க எந்த ரவின்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க? இறந்தவர் எஸ்.எம்.ஆர். இல்ல... ஒசூர் எஸ்.டி.ஓ.டி ஆபிஸ் ரவி என்று  தெளிவுபடுத்தியிருக்கிறார். இப்படியாக எங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் என் சாவுக்கு வருவதை அந்த ஊழியரும் சுதாகரனும் கடைசிநேரத்தில் சுதாரித்து தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

* எஸ்.குமார் எங்கள் நட்புவட்டத்தின் ஆதர்ச தையல்காரர் என்பதற்கும் அப்பால், குடும்ப நண்பர். அவரது கடையின் வாராந்திர விடுமுறை நாளான செவ்வாய்கிழமைகளில் அவர் வீட்டில்தான் எங்கள் குடும்பத்திற்கு மதியச் சாப்பாடு. சில செவ்வாய்களில் அவர் துணைவி ரமாவுடன்  எங்கள் வீட்டுகுக வருவார்கள். அவரது கடையில் மணி என்றொரு தையல்காரர் அப்போதிருந்தார். என்மீது பிரியமுள்ளவர். அன்றைக்கு மூன்று மணியளவில் டீ கடைக்குச் சென்றிருக்கிறார். அப்போது வட்டாட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர், ‘சென்ட்ரல் பே கேட்டு ஸ்ட்ரைக் நடந்தப்ப எங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தவர்... பாவம்...’ என்று  என் சாவுச்செய்தியை கடையிலிருந்தவர்களிடம் சொல்லி துக்கப்பட்டிருக்கிறார். மணி அவரிடம் ‘யார் பாய்?’ என்று கேட்டிருக்கிறார். ‘அவருதான், உங்க ஓனரோட கூட்டாளி...  டெலிபோன் ஆபிஸ் தாடிக்காரர்... உங்களுக்கெல்லாம் முன்னாடியே தகவல் வந்திருக்குமே...’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த நொடியே மணி அங்கிருந்து ஓடிப்போய் குமாரிடம் சொல்லியிருக்கிறார். தன் வீட்டுக்கு ஆளனுப்பி துணைவி ரமாவை கடைக்கு வரவழைத்த குமார் என் சாவுச்செய்தியை சொல்லியிருக்கிறார். எங்கே வரணும்னு கேட்டுக்கிட்டு போவோம் என்று என் வீட்டுக்கு போன் செய்திருக்கிறார் குமார். போனை எடுத்த மீனா எப்போதும் போல் சகஜமாக பேசியதால் குழம்பிப்போன குமார் "ரவி எங்கே?" என்று கேட்க, பெங்களூர் போயிருக்கிறார் என்று மீனா பதில் சொல்லியிருக்கிறார். ஓ, ஆக்சிடென்ட் ஆன விசயமே இன்னமும் மீனாவுக்கு தெரியாது போல... ரவி பெங்களூர் போயிருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்கு... என்று மிகுந்த துயரத்திற்காளான குமார் தம்பதியினர்  என் வீட்டுக்கு வருவதற்கு ஆட்டோ கூட்டிவர ஆளனுப்பிவிட்டு காத்திருந்தார்கள்.

* பெங்களூரிலிருந்து திரும்பிய நானும் தோழர் ஜார்ஜூம் ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்திவிட்டுப் போயிருந்த எனது பைக்கை எடுத்துக்கொண்டு, நல்ல டீ தருவிச்சு சாப்பிடுவோம் என்று குமார் கடைக்குப் போகவும், குமார் தம்பதியினர் ஆட்டோவில் ஏறவும் சரியாக இருந்தது. ஓரிரு நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் அவர்கள் எங்கள் வீட்டுக்குப் போய் இழவு கண்டிருப்பார்கள். 


***

தற்செயலான இந்நிகழ்வுகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டதொரு நாடகத்தின் அடுத்தடுத்த காட்சி போலாகி என் சாவை எனக்கு காட்டிவிட்டன. என் சாவுச்செய்தியை கேள்விப்பட்டிருந்த பலரும் என்னை நேருக்கு நேர் பார்க்கையில் ஒரு கணம் தடுமாறி பிறகு சகஜமாகிப் போகும் அபத்தம் பல நாட்களுக்கு நீடித்தது. செத்தது நீயில்லையா, ஏன் சாகல, எப்ப சாவாய், நீயெல்லாம் அதுக்குள்ள செத்துடுவியா என்பது போன்ற அங்கலாய்ப்பு அவர்களில் சிலருக்கு இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களும்கூட வாய்விட்டு கேட்கவில்லை. என் சாவுக்கு வந்த-  என்னிடமே இழவு கேட்ட ஏராளமான அன்பர்களை நானே இருந்து ஆற்றுப்படுத்திய நெகிழ்வான செய்தியை பின்பொரு நாள் அம்மா அப்பாவிடம் சொன்னேன். புதுப்பொறப்பு எடுத்ததா நினைச்சுக்கோ என்று அம்மாவும், சாவுக்கு பத்துப்பேர் வரலன்னா வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தமிருக்கு என்று அப்பாவும் சொன்னார்கள். ஏழு பிள்ளைகளில் தலைப்பிள்ளையாய் என்னை இதே நாளில் பெற்றெடுத்த அவர்களது இந்த வார்த்தைகள் போதும் என் ஆயுளுக்கு.

இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் என்பார்கள். 2001 செப்டம்பர் 7ல் செத்த எனக்கு ஊற்றியிருக்க வேண்டிய பாலினை டீயாய் காபியாய் இன்றளவும் ஊற்றிக்கொண்டிருக்கிற, ஊற்றவிருக்கிற அனைவருக்கும் எனது அன்பு.  

06.03.2017


வெள்ளி, பிப்ரவரி 21

சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும் - ஆதவன் தீட்சண்யா

தனக்குத்தானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும் தப்பி கள்ளத்தோணி ஏறிவந்த அகதியின் இதயத்துடிப்பென படபட ஓசை. தட்டுமோசையின் அதிர்வலைகள் ஊடாகவே மனவோட்டத்தை இலக்கிற்கு கடத்தும் பதற்றம். வான்தாவ றெக்கைகளை விசிறியாட்டும் பெயரறியா பறவையொலி மசங்கல் நினைவில் பொடக்கென விழுகிறது விதியைப் போல. திருட்டுப் பருக்கை பொறுக்க விரையும் காகத்தின் கரைவு போலுமுள்ளது. கீல்களும் நாதாங்கியும் பெரிதாய் அதிர, முனகவும் தெம்பற்ற கிழக்கதவு, வலிதாளாது துருக்களை உதிர்த்தவாறே மௌனமாய் திறந்து கொண்டது.
வெளிர்சாம்பல் வண்ணம்பூசி குழப்ப பிம்பம் காட்டுகிறது வாசல்வழி உலகம். ஆவியை படமெடுத்தாற் போன்று அரூபத்துக்கும் சொரூபத்துக்கும் இடையேயான நீரிய படிமத்தில் தெரிகிறது எல்லாமே. கவிந்திறங்கும் பனிவலையில் உயிரிணை அஃறிணை தாழ்வேற்றம் குழைந்து யாவும் ஓருருவாகி பால்வண்ண நிலையில்.
வந்திருந்தவன் உலகத்தினதும் ஏழேழு லோகத்தினதும் அண்ட சராசரத்தினதுமான பனியும் வாடையும் தன்மீது மட்டுமே மையமிட்டு இறங்குவதான அதீத உணர்வின் வயப்பட்டு மீளத் துடிப்பவனே போன்றிருந்தவன். பின்னோ, இதுவரையும் அழுந்தியிருந்த பனிப்பூதத்தை உதறியெறிந்து விடும் பாவனையில் பலமாக சிலிர்த்து சுவாசம் கொண்டான். வெடவெடப்பில் கிட்டித்த பற்களினிடையில் நாச்சுழல்வு குழன்று பேசப்பழகுபவனே போல் பேசினான். குளிரில் விறைத்த வார்த்தைகள் மொன்னையாக வந்து விழுந்து அதேகதியில் அறையெங்கும் நிறைந்தன. நொறுங்கிய மௌனம் வீட்டுத்துவாரங்கள் வழியே வெளிக்காற்றில் இளகி மொழியற்ற பிரதேசங்களில் படியத் துவங்கியது.
இறுகச் சாத்தியிருந்த ஜன்னலும் கனத்த திரைச்சீலைகளும் ஓயாதெரியும் கணப்படுப்பும் கூடிய இவ்வறை அவனுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். அதன் வெதுவெதுப்பில் துளிர்த்த சுகத்தில் லயித்தவனாக மேன்மையான ரசனையோடு வெம்பானத்தை உறிஞ்சிக்கொண்டும் ஆறாம் விரல்போலிருந்த சிகரெட்டை புகைத்தவாறும் பேசினான். 
சங்கீத நாட்டிய பரிச்சயம் உண்டென நிறுவும் கட்டாயத்தில் இருப்பவன் தொனியில் வெகு லாபனையாகவும் அபிநயித்தும் பலவும் கதைத்துவிட்டு புறப்படும் எத்தனிப்பில் சன்னமாய் செருமிக்கொண்டான். துன்பியல் நாடகமொன்றின் சூத்ரதாரியைப் போன்று உடைந்த கரகரத்த குரல்பாவத்தில் சொல்லவேண்டிய அந்த சாவுச்சேதியை, வெறுமனே ஒன்றிரண்டு கூடுதல் வார்த்தைகளைப் போன்று சொன்னான். கதவைத் தட்டியதிலிருந்த பதற்றம் கூட இப்போது அவனிடமில்லை.
‘‘பால் தீந்துப் போச்சு…’’ என்று அசட்டையாய் உதடுபிதுக்கும் டீக்கடைக்காரனின் சாயலிருந்தது அவன் சொன்னவிதத்தில். எதனுடனுமான நேரடி பிணைப்பின் நீள அகலங்களைப் பொறுத்தே வினையூக்கம் கொள்கிற தெளிவின் உச்சமா அல்லது மலரை நேசிக்கவும் முள்ளை தூஷிக்கவும் முயலாத ஞானநிலையா என்று அவனை எடைபோட முடியவில்லை. செத்தவர்களுக்கும் சாகப்போகிறவர்களுக்கும் இடையே பின்னியாடுகிற இழை பந்தம் அன்யோன்யம் கள்ளம் சூது கபடம் ஏதுமறிய நேராதவனைப் போன்று சாவுச்சேதியை காற்றில் விளாவி அடுத்த காதுதேடி விரைகிறது அவன்வாய்.
அவனை நொந்தென்ன. வருகையின் சாரம்காட்டாத முகம் அவனுக்கு. இந்த கணத்தில் தனக்கிட்ட வேலையை செய்து முடித்துவிட்ட மதர்ப்பில் மீசை முறுக்கும் எந்திரம் அவன். பத்துபேருக்கோ பக்கம் பராந்திரி ஊருக்கோ சேதி சொல்லிவிட்டு கூடு திரும்ப மந்தரித்து விடப்பட்ட ஏவல்பிண்டம்.
கண்டெடுக்கப்பட்ட பன்னூறாண்டு தொல்லிய சொர்ணவிக்ரங்களைப் பற்றியும், காணாமல் போனோர் பற்றிய குறிப்பையும் முறுவல் மாறாது ஒரே ஸ்தாயியில் வாசிக்கும் ஊடக செய்தியாளர்களைப் போலவே இவனும். இவனுக்கு எல்லாமே தகவல். வெறும் தகவல். ஏறிப் பொதிந்திருக்கும் எந்த உணர்வுக்கும் இளகாத / இறுகாத தட்டையான தகவல்கள். காதுகுத்தல் கல்யாணம் கிடாவெட்டு… மிருதுவானப் பெண்ணை வீட்டுக்கழைப்பதும் நல்லத்தங்காள் சாவும் அவனுக்கு ஒரே நிறை. 
சாவதற்காகவே உயிர்வாழ்வதைப் போன்று கணமும் தினமும் வருகின்ற மரணத்தின் ரேகையோடும் சேதிகள். பழுப்பேறி உயிர்ப்பற்ற தந்திக் காகிதங்கள், முணுமுணுத்தலறும் தொலைபேசி, முற்றத்தில் நின்று வான்நோக்கி ஊளையிடும் ஒற்றைநாய், கதைவைத் தட்டும் ஆட்கள், 64 சேனல்களின் அடிபாகத்திலும் பதட்டமாய் ஓடுகிற ப்ளாஷ் நியூஸ்கள் – வழியாக ஓயாது வருகின்றன. இரவெல்லாம் முயங்கிப்பூத்த மலரின் வெடிசலை ரசிக்கையிலும், விளங்கிக்கொள்ள முடியாத புதிராகவும் எதிர்கொள்ள முடியாத சவாலாகவும் சிரிக்கிற குழந்தையை கொஞ்சுகிற போதும், அலைந்து களைத்து கோரைப்பாயின் மூலையில் முடங்கிக் கிடக்கிற போதும் காலநேரம் பாராது காரண காரியம் கூறாது சாவுச்சேதிகள் வந்தவண்ணமிருக்கின்றன.
உண்மையில், காரணங்களை வெளிக்காட்டாமல் பூடகமாகவேதான் நிகழ்கின்றன மரணங்கள். காரணம் அறியப்பட்டிருப்பின் வாழ்வதற்கான தாரதண்டங்கள் எப்போதோ, நொறுங்கிப் போயிருக்குமோ… நேரம் காலம் இடம் எரிக்கவோ புதைக்கவோ நாலுபேர், ‘சொர்க்கரதம்’ வெட்டியானின் முனை மழுங்கிய தளவாடங்கள் இன்னபிற ஏற்பாடுகள் எதற்கும் கவலையற்று தனது மர்மம் அவிழாது காத்து சாவு இன்னமும் ஜீவிக்கிறது.
வாழ்வும் சாவும் பிணையுண்டிருக்கும் சூட்சும முடிச்சின் முனை எதுவென அறியும் பிராசையிலேயே வாழ்வு முற்றி துவங்கிவிடுகிறது புறங்காட்டுப் பயணம். இப்படி செத்திருக்கலாம் அப்படி செத்திருக்கலாம் என்றெல்லாம் அறிக்கையிடும் பிரேதப் பரிசோதனைகளின் போதும், தன்பங்குக்கு விளக்கம் சொல்லவரும் தத்துவங்கள், சடங்குகள் நிவர்த்தனங்களின் போதும் சவங்களின் முகத்தில் குருத்துவிடுகிற குசும்புச் சிரிப்பில் வாழ்வின் அஸ்திவாரங்கள் விரிசல் கண்டு பொலபொலவென்று சரிகிறது. அந்த ஏளனச் சிரிப்பில் நெளிந்தெழும் விசாரம்மிக்க கேள்விகளுக்கு பதில் தெரியாத அவமானம் பொங்க, விட்டுவைத்தால் விவகாரமென பயந்துதான் எரிக்கவோ புதைக்கவோ துணிகிறார்கள்.
இழவூழின் நெடுமூர்க்கம் தாளாது சிதிலப்பட்ட வீடு அண்மித்ததும் முகத்தில் வலிய படியவிடும் சோகத்தில் தேர்ந்த நடிகராகின்றனர் மனிதர். குணுக்கம் மீதுற வாயைப்பொத்திக் கொண்டு அழுகையை அடக்குவதாய் சாலக்கம் பண்ணுகிறார்கள். செய்முறை குறிப்பு போன்றும் நிகழ்ச்சி நிரல் போன்றும் பின்வரும் காரியங்களை பிசகின்றி செய்கின்றனர்: விக்கித்து பேசமாட்டாதிருக்கும் வீட்டுப்பெரியாட்களிடம் நாலுவார்த்தை பேசுவது, சூழலுக்கிசையாத காற்றாய் புரளும் குழந்தைகளை கத்தகத்த தூக்கி கொஞ்சநேரம் வைத்திருந்துவிட்டு மூச்சா போய்விடுமென்ற தீடீர் ஞானத்தில் யாரும் காணா தருணத்தில் அனாதையாய் இறக்கிவிடுவது/அடுத்து தோளுக்கு மாற்றி நகர்வது, செத்தவருடனான உறவு நிலையை உயர்வு நவிற்சியாய் கதைப்பது. பின்பு மயானத்திற்கு நீளும் பாதையடி நிழல்களில் பதுங்கி பாதிவழியிலோ பாடைமாத்திக்கருகிலோ ஒதுங்கிக் கழண்டு, பிணம் தன்னைத்தானே சுமந்துகொண்டு இடுகாடு செல்லும் அவலம் நினையாது வீடுதிரும்பி சாங்கியம் கழித்து கல்யாணத்திற்கு போவதுபோல் அடுத்தச் சாவுக்கு வழிபார்த்து காத்திருக்கிறார்கள்.
செத்தவர் தன்பாட்டுக்கு செத்துவைக்க, இன்னின்னார் வந்த இழவாக்கும் இதுவென மற்றார் மகிழவோ, நானும் போனேனென ஜம்பமடிக்கவோ துக்கம் விசாரிக்க போகும் இந்த நடைமுறை சரியாய் தெரியவில்லை.
தெருக்கோடி பெட்டிக்கடையில் தம்பலம் கொள்ளவும் தினசரி வழமைக்காரியங்களில் ஒன்றை செய்து முடிக்கவும் போவதைப்போல உடுப்பை மாட்டிக்கொண்டு கிளம்பி விட முடியாது. சாவுக்கு போய்வர அதற்கென்றொரு பக்குவத்தில் மனம் தயாராக வேண்டியுள்ளது. துக்கத்தில் தகித்து தகித்து சாம்பல் பூக்க கனலும் ரூபம் கொள்ள வேண்டியிருக்கிறது. அருவருப்பு அசூயைகளின் மாய்வில் நடுக்குறும் விரல்களால் சவத்தை விசேரத் தழுவி இறுதி ஸ்பரிசத்தை நேர்கொள்ள மனசுள் கனிய வேண்டும் விருப்பம். தலைகொழுத்த மேதகையாயினும் தத்துவப்புடுங்கியென்றாலும் எல்லாம் கரைந்து உருகி மறைந்த உயிரொளியில் நெய்யாகப் பிரவகிக்கும் நிலைக்கு மாறணும். பெருகிவழியும் வேதை பொருந்திய கண்ணீரால் பிரேதத்தைக் கழுவி உப்பு கரிக்க கரிக்க… கிளம்பிப் போய் பார்க்கும் தைர்யம் தேடி மனசு எங்கெங்கோ முட்டியாடி தாரக்கொடி தேடி அலைந்து கண்டெடுக்க வேண்டும். அப்படி நேராதச் சாவுகளுக்கு செல்லவேண்டியதேயில்லை. இறந்தவருக்காக வீட்டின் தனித்த மூலையில் இருளென அடங்கி முடிந்தால் கெக்கக்கே என்று சிரிப்பது போதுமானது.
முறையான தகனமற்று நாயோ நரியோ இழுத்துப்போக லபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்தவர்களே இந்நேரம் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்கள். அடையாளம் பிடிப்பது சிரமமே. அறியும் உபாயமும் உண்டு. கட்டை விரல்களற்ற கரங்களுடன் கூடிய கூடு, குருபீடமே பலிபீடமான வஞ்சகம் மெழுகிய இதிகாச பைண்டிங்களுக்குள் யுகங்களைக் கடந்தும் துடித்துக்கொண்டிருந்தால் ஏகலைவனுடையதென்றும், மண்ணடியிலும் பட்டாம்பூச்சி இறகொத்த பின்னலுக்கு தறியோட்டி எஞ்சிய விரலெல்லாம் நூல்பாவி நைந்து கிடக்குமானால் டாக்கா நகரத்து மஸ்லின் நெசவாளியுடையதென்றும் அறிக. அவ்வாறே, சூரிய சந்திரக் கதிர்களின் தபனமும் தட்பமும் தழுவாத அடர்மரக்காடுகள் மண்டிய புதையாழத்தில்-துண்டிக்கப்பட்ட மணிக்கட்டின் மொக்கைக்கைகளால் சுருட்டும் துப்பாக்கியும் பிடித்தவாறு கூரிய ஒளிவிழியால் இருளுக்கு குறிவைத்த படியான கூடு கண்டெடுக்கப்பட்ட இடம் பொலிவியா என்றும், கட்டையாய் கரிந்து காலம் பாய்ந்த பின்னும் கனன்றே இருப்பவர் வெண்மணியரென்றும் வரலாற்றுக் குறிப்புகளுண்டு. எல்லாம் சிதைந்து, ஒரு சின்ன மயிர்க்கால் மிச்சமிருந்தாலும் அதை ஊர்க்கூடி தூக்கிப்போய் நல்லடங்கல் செய்து அந்த சாவுக்குரிய மரியாதை தந்தாக வேண்டும். நாகரீகம், நாகரீகமடைய வேறென்ன மார்க்கம்..? வாழும்போது உதாசீனப்பட்டவர்களின் சாவிலும் அதுநேராது பார்த்துக் கொள்வது தானே.
கிளம்பியாகிவிட்டது. 
வெளுப்பில் மின்னும் வெயிலலையில் மிதந்து மிதந்து கையாட்டி அழைக்கிறது சவத்தின் முகம். கட்டுண்டு பின்னிய கால்கள் திருகிக்கொண்டு விரைகின்றன இப்போது. தவறவிட்டால் இனி எப்போதும் கண்ணுறவியலாது என்ற நினைவே சவுக்காகி விளாற ஓடிப்போய் தலைமாட்டில் நின்றழத் திமுறுகிறது மனக்குதிரை.
வாழ்வின் அர்த்த வரையறைகள் ஒன்றோடொன்று மோதி ஜெயித்தும் தோற்றும் சிதறி விழுகின்றன வழியெங்கும். பொறுக்கிச்சேர்க்க பொறுமையற்று பொத்தல்பானையில் நீர்பிடிக்கப் போகும் முட்டாளாக ஓட்டமும் நடையுமாய் விரைந்தும் வழி நீள்கிறது மாளாமல்.
உயிர்கள் வந்துவிழுகிற ஒருவழிப்பாதையை திறந்துவைத்துக் கொண்டு காலம் குரூரமாக காத்திருப்பதை அறிந்தோ அறியாதோ உயிர் போயிருக்கிறது. இறுதி நொடித்துகளில் என்னவெல்லாம் நினைப்போடியிருக்கும்…ஞாபக விழுதுகளில் யார்யார் ஊசலாடியிருப்பார்கள்… மிச்சமிருந்த கனவுகளை எங்கே பத்திரப்படுத்திவிட்டு உயிர் பிரிந்திருக்கும்…எப்போது மீண்டு வந்து செலவழிக்கும்…
உயிர்ப்பை விடவும் சாவே வாழ்வின் இண்டு இடுக்குகளில் வெளிச்சமேற்றுகிறது. ஜொலிப்புகளுக்குள் பதுங்கியிருக்கும் இருளின் வியாபகத்தை கூச்ச நாச்சமின்றி காட்டிவிடுகிறது. அடுத்தவர் மரணம் மேல் மரணம் குறித்து தனக்குள்ள பயம் ஏறி அசைத்தசைத்து புறங்காட்டுக்கே அழைத்துப்போய் தனக்கே வெட்டிய குழியென நடுங்கி, புதைகிற பிணத்தை பார்க்கும் திராணியற்று அவசரமாக மண்தள்ள வைக்கிறது ஒவ்வொருவரையும். தகனத்திற்கு பிறகு பலரும் சடலமாகத்தான் வீடு திரும்புகிறார்கள்-தம்முயிரையும் தைர்யத்தையும் சேர்த்து புதைத்துவிட்டு.
எங்கோ திவனத்தில் ஒலிப்பதைப் போன்றிருந்த பறையோசை இப்போது மூர்க்கமாகி காதடைக்கிறது. ஒலிக்குள் லயம் பற்றிச் சுழலும் கால்களில் கள்ளும் சாராயமும் பாய வெறிகொண்டு ஓடும் ஒரு கூட்டம். ஒப்பாரி சீழ்க்கை ஒற்றையாய் தனித்தூதும் சங்கொலி பொரி வெற்றிலை சில்லரைக்காசு காதோலை கருகமணி வழியெங்கும் இரைந்து கிடக்கும் அடையாளத்தை பிடித்துக்கொண்டு விரைகிறது கால்கள். குடைசாய்ந்த பாடைகள், புதுமண்பூசிய குழிகள், நெஞ்சுக்கூடு வேகாமல் நிமிர்ந்து விறைத்து வேக மறுக்கும் அடங்காப்பிடாரிகள்… யார் சாவுக்கு வந்தோமென்ற பெருங்குழப்பம் சூழ மண்டைவெடித்து மாண்டோர் போக, மீண்டோர் திரும்பினர் ஊருக்கு. எல்லார் வீட்டு முன்னும் கொள்ளிகள் மூண்டெரிந்து அடங்கிய சாம்பல்களில் கழுதைகள் புரள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன குழந்தைகள்.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...