தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 10

கண்டேன், களைப்படைந்த என் தோழனை... ஆதவன் தீட்சண்யா

2012 ஜனவரி 29, பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டின் நிறைவுநாள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். தொல்.திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ் மற்றும் அப்துல்லா ஆகிய நண்பர்களுடன் வந்திருந்தார். அந்த மேடையில் வைத்து தான் திருமாவளவனை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். சுவரொட்டிகளிலும் ஃபிளக்ஸ் பேனர்களிலும் பெரிய்ய்ய பெரிய்ய்ய உருவமாக பார்த்துப் பழகியிருந்த என் கண்கள் அவரது நிஜமான உருவத்தை நம்ப மறுத்தன. ஆனால், இதுதான் நிஜம், மற்றதெல்லாம் கட்சிக்காரர்களின் தேவைக்காக ஓவியர்களாலும் இயந்திரங்களாலும் இழுத்தும் நீட்டியும் பெரிதாக்கப்பட்ட பிரமைகள் என்று சொல்லி ஒருவழியாக கண்களை சமாதானப்படுத்தினேன்.

அவர்தான் மாநாட்டின் கடைசி கருத்துரையாளர். அவரது உரையை முதன்முறையாக கேட்கப்போகும் ஆர்வம் எனக்கிருந்தது. அவரது மேடைப்பேச்சுகள் பற்றி பலரும் சொல்லக்கேட்டு உருவாகியிருந்த அனுமானங்களின் பேரில் இந்த ஆர்வச்சுரப்பு கூடியிருந்தது. வேறு பலரும்கூட அந்த அவையில் என்னொத்த மனநிலையோடு இருப்பதைக் காணமுடிந்தது. அவர் மிகுந்த நிதானத்தோடு ஆரம்பித்தார். திடுமென குரலுயர்த்தி ஆவேசமாகப் பேசினார். சட்டென தழைந்த குரல் தேம்புவதைப் போலிருந்தது. பிறகு மீண்டும் ஆவேசம்... நிதானம், தழைதல்.... நான் கண்களை மூடிக்கொண்டேன். அல்லது அவரது உருவத்தைப் பார்க்காமல் குரலை மட்டும் கவனித்தேன். அது யாரையும் தன்வயங்கொள்ளும் குரல்தான். உணர்வுகளின் ஏற்றயிறக்கங்களை கேட்போர் மனதில் பாய்த்துவிடும் நுட்பமூறியிருந்தது அதனில். அப்படியொரு ஆளுமை கொண்ட அவரது குரலுக்கு அந்த அரங்கம் கட்டுப்பட்டிருந்தது. நான்தான் கடும் உளைச்சலுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகிக்கொண்டிருந்தேன். இந்த உளைச்சலும் ஏமாற்றமும் அன்றைக்கு மட்டுமல்ல, அடுத்தநாள் (30.1.12) கப்லா பதாஸ் நகரில் நடந்த பெரியார் சிலை திறப்புவிழாவில்  அவரது உரையைக் கேட்டு இன்னும் கூடுதலாகியது.

இந்திய/ தமிழ்ப்பரப்பில் பகுத்தறிவு, பகுத்தறிவுக்குப் புறம்பான கடவுள், மதம், சாதி, சடங்குகள், மனிதகுலத்தின் இயல்பான பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை மீட்டெடுக்கவும் வளர்த்தெடுக்கவும் நடந்தப் போராட்டங்கள், அத்தகையப் போராட்டங்களில்  ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னணியில் நின்றதற்கான அகவயமான தேவை, சமத்துவத்திற்கும் பகுத்தறிவிற்குமுள்ள தொடர்பு, குறித்தெல்லாம் அவர் பேசவில்லை என்பதோ, பலரையும் போலவே அவரும்கூட பகுத்தறிவு என்றால் பெரியார் மட்டும்தான் என்கிற ரீதியில் பேசியதோ எனது ஏமாற்றத்திற்கான காரணங்களல்ல. அவரது உரையில் விரவிக் கிடந்த விரக்தியும் ஏமாற்றமும் துக்கமும் வலியும்தான் என்னையும் மூழ்கடித்துவிட்டது என்பதை மெதுவே உணர்ந்தேன்.

***

ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை தலித்துகள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கிற ஒரு நாட்டில் அந்தக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு சமரசமற்ற நூறுநூறு இயக்கங்கள் தேவைப்படுகின்றன. அப்படியான இயக்கங்களில் ஒன்றாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை நானும் பார்த்த காலமொன்று இருந்தது.  தலித் ஒற்றுமை, தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக உடனடி அணிதிரட்சி, சாதியத்திற்கு  எதிரான கருத்தியல் போராட்டம் என்று  அதன் பன்முகப்பட்ட செயல்பாடுகள் தமிழக அரசியல் பண்பாட்டுக் களத்தில் அதுவரை செயல்பட்டு வந்த எல்லோருக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கின. 

உதட்டளவிலேனும் சாதியத்திற்கு எதிராகப் பேசியாக வேண்டியதொரு இக்கட்டான நிலை உருவாவதை விரும்பாத ஆதிக்கச்சாதியினரும் அவர்களது கட்சியினரும் விடுதலைச்சிறுத்தைகளையும் திருமாவளைவனையும் ‘எதிர்கொள்ள’ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் கட்சியாக மாறி தேர்தலுக்கு வந்தது. பிறகென்ன, ஆதிக்கச்சாதியினர் நிம்மதியடைந்தனர். தன்னைத்தானே முனை மழுக்கிக்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் தயாராகிவிட்டது என்பது அவர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்திற்குரியதாகியது.

ஒட்டுமொத்த தலித்துகளையும் அணிதிரட்டிக்கொள்கிற உள்வலுவின்றி குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டுமே மையப்படுத்தியதாக தனது அமைப்பு உள்ளுக்குள் குன்றிக் கொண்டிருந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வெறுமனே தலித்துகளுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது என்று பேசத் தொடங்கினார் திருமாவளவன். சாதியொழிப்பு அரசியலை கைவிட்டுவிட்ட ஒருவரை தங்கள் மந்தையின் கடைசி ஆடாக சேர்த்துக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. சாதியொழிப்பு அரசியல் பக்கம் திரும்பவும் தலைதிருப்பிவிடாமல் அவர் தமிழராகவோ இந்தியராகவோ எம்.பி.யாகவோ வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

ஊர் ஊருக்கு தலித்துகளை வெட்டுகிறவன், கொளுத்துகிறவன், கொல்கிறவன், வல்லாங்கு செய்கிறவன், வகைதொகையின்றி வன்கொடுமை புரிகிறவன் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவன்கூட தன் சாதியவாதத்தையோ ஒடுக்குமுறையையோ தலித்விரோதப் போக்கையோ கைவிடாதபோது அவர்களையெல்லாம் தமிழர்களாக குணம்மாற்றி உருவகித்துக் காண்கிற பெருந்தன்மை திருமாவளவன் கண்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது. எந்தெந்த ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து தலித்துகள் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் போராடிக் கொண்டிருந்தார்களோ அந்த ஆதிக்கச் சாதிக்காரர்களின் அரசியல் கட்சிகளோடு ‘தமிழர்’ என்ற அடிப்படையில் அவர் தானாக முன்வந்து கைகுலுக்கியதன் பின்னே இருந்த உளவியல் மிகவும் முக்கியமானது. சாதிய மோதல்களுக்கு முடிவுகட்டி நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான ஒரு முன்மொழிவைப் போன்றதொரு பரிமாணம் அவரது நடவடிக்கைகளுக்குள் பொதிந்திருந்தது. 

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்திலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகான காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவாக நடைபெற்ற எல்லா இயக்கங்களிலும் அவர் முன்னணியில் இருந்தார். 2009 அக்டோபரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கைக்கு வந்தபோது நானும் அங்குதான் இருந்தேன். நோர்வுட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அவர்கள் பயணம் மேற்கொண்டதற்கு அடுத்தடுத்த நாட்களில் நான் அப்பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.  மற்றெவரையும்விட திருமாவளவன் மட்டுமே தங்களது துயரங்களை சரியாக உள்வாங்க முடியும் என்கிற ஒரு கருத்து வடக்கிலும் மலையகத்திலும் இருந்த தமிழர்களிடையே வலுவாக இருந்ததை  என்னால் காணமுடிந்தது. அந்த நம்பிக்கையை அவர் சிறிதளவும் பொய்ப்பிக்கவில்லை. தமிழர் அரசியலில் திருமாவளவன் முதன்மைப் பெற்று வருவதை பொறுத்தக்கொள்ள முடியாத சாதியவாதிகளின் பொறுமலால்தான் இலங்கை சென்று வந்தவர்களில் அவர் மட்டுமே இங்கு அவதூறுகளுக்கு ஆளானார். டிராமாவளவன் என்று அவரது பெயரை இழித்து தமிழ்நாடெங்கும் ஒட்டப்பட்டன சுவரொட்டிகள். அவரது ஈழ ஆதரவும்  பிரபாகரன் மீதான விசுவாசமும் எப்போதும் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் சித்தரிக்கப்பட்டதன் பின்னே தமிழ்த்தேசியவாதிகளின் சாதியமனம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதற்கப்புறமும் சளைக்காமல் இவர்தான் தமிழ், தமிழர் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாரேயன்றி மற்றவர்கள் இவரை தலித்தாகவேதான்  நடத்தியிருக்கிறார்கள். அந்த வலியிலும் துயரத்திலும் வெடித்தப் பேச்சைத்தான் நான் கேட்க நேர்ந்திருக்கிறது.

 ***
ஒவ்வொரு சேரியிலும் மேதகு பிரபாகரன் திருவுருவையும் தமிழீழத்தையும் அறிமுகப்படுத்திய என்னை நீங்கள் ஏன் தமிழனாகப் பார்க்கவில்லை? முள்வேலிக்குள் அடைபட்டிருந்த ஈழத்தமிழர் துயர்துடைக்க நான் சாகும்வரை உண்ணாவிரம் மேற்கொண்டிருந்தபோது அவனவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பொங்கல் கொண்டாடப் போய்விட்டது ஏன்? இப்படியாவது செத்தொழியட்டும் என்றா? எனக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய எனது கட்சிக்காரர்கள் 360க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது எதனால்? ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் எனது கட்சிக்காரர்கள் 30 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எதனால்.... ஈழப்பிரச்னையை மையப்படுத்தி நான் முன்வைத்த எந்தவொரு போராட்டத் திட்டத்தையும் தமிழ்த்தேசியவாதிகள் ஏற்காமல் பின்வாங்கிப் போனதற்கு அவர்களது சாதியமனம்தானே காரணம்...?

- இப்படியாக ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் வந்து விழுந்த அவரது கேளவிகளின் உட்பொருளாய் இருந்தது இதுதான்- உங்களையெல்லாம் நம்பித்தானே நான் என் மக்களை அழைத்துக்கொண்டு இப்படியெல்லாம் அலைந்தேன், அதற்கு நீங்கள் காட்டிய கைமாறு இதுதானா? நான் இன/மொழி/  தேசிய/சர்வதேசிய அரசியல் எது பேசினாலும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாகவேதான் பார்ப்பீர்களா?

ஆமாம் தோழர், இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? என்று இடைமறித்து கேட்கவேண்டும் போலிருந்தது எனக்கு. தமிழர் என்கிற பொது அடையாளத்தை தன்னோடும் தனது மக்களோடும் பகிர்ந்துகொள்ள சாதியவாதிகள் மறுத்துவிட்டது குறித்த பெருந்துயரத்தை அடக்கமாட்டாமல் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச் சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’ என்று பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டை நடத்திய தோழர்களைப் பற்றி குமைச்சலுற்ற மலேசியத்தமிழனுக்கும் ‘தமிழர்’ அரசியலுக்குள் திருமாவளவன் வலுப்பெறுவது கண்டு எரிச்சலடைந்த நம்மூர் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இருப்பது ஒரேவகையான சாதியமனம்தான். ஆனால் இதைப் புரிந்துகொள்ள திருமாவளவன் போன்ற தோழர்களுக்கு இவ்வளவு காலம் ஏன் தேவைப்பட்டது என்றுதான் யோசிக்க வேண்டியுள்ளது.

அடங்க மறு அத்துமீறு என்று தன் தம்பிகளுக்கெல்லாம் சொல்லிவிட்டு மனதை ‘சாந்தப்படுத்த’ ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்றுக்கொள்ள போனபோதும், புதுக்கூரைப்பேட்டை கண்ணகி முருகேசன் கொலையில் சமரசம் செய்ய முயற்சித்தார் என்பது குறித்தும், அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றி முரண்பட்ட வகையில் பேசியது பற்றியும் அவர்மீது எனக்கிருந்த கோபம் தணியவில்லை என்றாலும் அந்த கணத்தில் அவர்மீது எனக்கு பரிவே மிஞ்சியது.

பெரியார் சிலை திறப்பில் பேசிவிட்டு மேடையிலிருந்து வந்த திருமாவளவனிடம் என்னை நண்பர் அப்துல்லா அறிமுகப்படுத்தினார். கையை இறுகப் பற்றிக்கொண்டு பேசினார். அயோத்திதாசரைப் பற்றியெல்லாம் மாநாட்டில் பேசினீர்களாமே, மகிழ்ச்சி என்றார். நீங்கள் ஏன் அவ்வாறு பேசவில்லை என்று கேட்கத் தோன்றியதை முதல் சந்திப்பு என்பதாலோ என்னவோ தவிர்த்தேன்.  உங்கள் மீது ஆதவன் அண்ணனுக்கு, மார்க்ஸ் தோழருக்கெல்லாம் நிறைய விமர்சனம் இருக்கே... அதுபற்றி பேசலாமில்லையா என்றார் அப்துல்லா. நான் தயாராகத்தான் இருக்கிறேன், ஆனால் தமிழ்நாட்டில்தான் உரையாடலே இல்லாமல் போய்விட்டதே என்றார் திருமாவளவன். போகிற போக்கில் என்னத்தப் பேச... எப்போதேனும் சந்தித்து உரையாடுவோம் தோழர்.... என்று விடைபெற்றுக்கொண்டேன்.  அவரும் கையசைத்துக்கொண்டு கிளம்பினார்.

சாதியவாதிகளின் புறக்கணிப்புக்கு ஆளாகி ‘பொதுமேடையிலிருந்து’ இறக்கிவிடப்பட்டு மீண்டும் சேரிக்கே திரும்பிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது அவரது நடை. சாதிக்கொழுப்பால் செவியடைத்துக் கொண்டவர்களிடம் பேசிப்பேசி களைத்துப்போன ஒருவர் வேறெப்படி நடக்கமுடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

செவ்வாய், பிப்ரவரி 14

உள்நோக்கிப் பேசுவது - ஆதவன் தீட்சண்யா

1.
அரசியல் என்றதும் கட்சிகளை உருவகப்படுத்திக் கொள்ளும் சீக்குப் பிடித்த மனநிலையை நாம் விட்டொழிப்பது நல்லது. அரசியல் என்பது கட்சியோடு தொடர்புடையதல்ல. சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியலோடு கட்சிகள்தான் தம்மை தொடர்புபடுத்திக் கொள்கின்றன. பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தேவைகளை எவ்வாறு உற்பத்தி செய்து கொள்வது, அவற்றை எவ்வாறு தமக்குள் பகிர்ந்து கொள்வது, இந்த பகிர்வு சமத்துவமானதா ஏற்றத்தாழ்வானதா, சக மனிதர்களுக்கிடையேயான உறவுநிலை எத்தகையது, ஆண் பெண் உறவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதையெல்லாம் எந்தவொரு கட்சியின் தலையீடும் இல்லாமல் ஒவ்வொரு சமூகமும் தனது வளர்ச்சிப் போக்கில் சுயேச்சையாக தேர்ந்துகொள்கிறது. நிலவும் ஒரு சமூக அமைப்பின் இத்தகைய அடிப்படைகளையும் அதன் இயங்குவிதிகளையும் இயக்கு சக்திகளையும் குறித்த அறிவு அல்லது புரிதலே அரசியல் எனப்படுகிறது.

நிலவும் அமைப்பை அப்படியே மாற்றமின்றி ஏற்றுக்கொள்வது, அடிப்படைகளை தக்கவைத்துக் கொண்டு சிற்சில மாற்றங்களோடு தொடர்வது, முற்றாக மாற்றியமைப்பது என்கிற கருத்தோட்டங்களே - அரசியல் கண்ணோட்டம் எனப்படுகிறது. (இதில் ஏதாவதொரு வகை கண்ணோட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறவையாகவே கட்சிகள் தோன்றுகின்றன.)

இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அது சாதிகளாகப் பிளவுண்டு, அந்தந்த சாதியின் படிநிலைக்குத் தகுந்த அதிகாரத்தையும் பொருளியல் வளங்களையும் பண்பாட்டு மேன்மைகளையும் கொண்டதாக இருக்கிறது. திருப்பிச் சொல்வதெனில் படிநிலை இறங்குமுகத்தில் வரும்போது எல்லாவகையிலும் புறக்கணிக்கப்படுகிறவர்களாகவும், அந்த புறக்கணிப்பை எதிர்க்காமல் இருக்கும் பொருட்டு ஒடுக்கப்படுகிறவர்களாகவும் தலித்துகளே எஞ்சுகின்றனர். எனில் இங்கு தலித் அரசியல் என்று முன்மொழியப்படுவது எது? பெரும்பாலும் இந்த கேள்விக்கான பதில், உள்ளாட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையான அதிகாரமையங்களில் சிறுவீதத்தை தலித்துகளுக்கு ஒதுக்கிக் கொடுப்பதுதான் என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அல்லது முழுக்க முழுக்க தலித்துகள் மட்டுமே அங்கம் வகிக்கிற-  தலித்துகளால் மட்டுமே தலைமையேற்று நடத்தப்படுகிற அமைப்புகளை உருவாக்கி தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வது என்கிற புரிதலும் இருக்கிறது. நிலவக்கூடிய சாதிய சமூக அமைப்பைச் சிதைக்காமல் அல்லது சின்னச்சின்ன சேதாரங்களை மட்டும் நிகழ்த்தி இங்குள்ள அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு இந்த அமைப்பிற்குள்ளேயே தலித்துகளால் வாழ்ந்துவிட முடியும் என்பதிலிருந்து இந்தப் புரிதல்கள் உருவாகின்றன.

ஆனால், உலகின் வேறெந்த சமுதாயத்திலும் இல்லாத தனித்துவமாக இருக்கும்  சாதியமைப்புக்குள் சிற்றளவிலான மாற்றங்களை நிகழ்த்தி சில்லரைச் சலுகைகளையும் உரிமைபோல் தெரிகிற ஏமாற்றுகளையும் வைத்துக்கொண்டு தலித்துகளால் இங்கு பிற குடிமக்களைப் போல வாழ்ந்துவிட முடியுமா?  இந்த கேள்விகளுக்கான எளிய பதில், இல்லை என்பதுதான்.

2.

ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்ற விரிந்த மக்கள் திரளை குறிப்பதாக முன்மொழியப்பட்ட தலித் என்கிற பொது அடையாளம் தீண்டத்தகாத சாதியினரை மட்டுமே குறிப்பதாய் மாறியுள்ள நிலையில் அவர்களது உடனடித் தேவை தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுபடுவதுதான் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிதலின் அவக்கேடான விளைவு என்னவென்றால் தீண்டாமையை ஒழிப்பதன் மூலம் சாதிப் பிரிவினையின் கடுமையைக் குறைத்து நாளடைவில் சாதி என்பதை தேவையற்ற ஒன்றாக மாற்றி, தானாகவே உதிர்ந்துவிடும் ஒன்றாக கற்பனை செய்து கொள்கிற செயலற்றத் தன்மைக்கு தலித்துகளை இட்டுச் செல்வதுதான். அடிப்படையில் இதுவும் முன்பே சொல்லப்பட்ட சீர்திருத்தவாதத்திற்குள் போய் முடங்கிப் போவதற்குத்தான் வழிவகுக்கும். அப்படியானால் அதிதீவிரம் பேசி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான உடனடிப் போராட்டங்களை தலித் அரசியல் நிராகரிக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தீண்டாமை சாதிக்கு வெளியே இருப்பதல்ல. சாதிக்குள்ளிருந்துதான் தீண்டாமை உருவெடுக்கிறது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் இவரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யாரும் தீர்மானம் கொள்வதில்லை. அவரது சாதியை அறிந்து கொண்ட பின்தான் அவரோடு தான் எவ்வாறு பழகுவது என்பது குறித்த முடிவை எடுக்கிறார். வெளிப்படையாக அவரை ஒதுக்கிவைக்க சூழல் அனுமதிக்காத போது எதற்கு வம்பென்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம் தீண்டாமை புதிய வடிவமெடுத்து நிலைநிற்கிறது. ஆகவே சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். தீண்டாமை இல்லாதபோதும் சாதி இருக்கும். ஆனால் அது நீண்டநாட்களுக்கு சைவப்புலியாக இருந்துகொண்டிருக்காது. தன் இருப்புக்கும் தூய்மைக்கும் பங்கம் ஏற்படுவதாக அஞ்சும் நிலை வந்தால் அப்போது அதன் கடைவாயில் கோரைப்பல் முளைத்து குரல்வளையைக் கவ்வும். அல்லது அப்போதைக்கு எது சாத்தியமோ அந்த வடிவிலான தீண்டாமையை அது வெளிப்படுத்தும்.

தீண்டாமையை கடைபிடிக்கிறவர்களுக்கு தங்களது வெறுப்பை ஒரு தலித்துக்கு எப்படி உணர்த்த முடியும் என்ற நுட்பம் கைவரப் பெற்றிருக்கிறது. இந்த அவமானத்தையும் புறக்கணிப்பையும் தலித்துகளும் மிகச்சரியாகவே உணர்ந்து கொள்கின்றனர். இது இருதரப்பாருக்குமிடையேயான ஒரு சங்கேத மொழிபோல நிகழ்ந்து விடுகிறது. பல தருணங்களில் தாங்கள் அவமதிக்கப்பட்டு விட்டதாக தலித்துகள் கூறும்போது அதை மற்றவர்களால் உணரமுடியாமல் போவதற்கும் இந்த சங்கேதத்தன்மைதான் காரணமாகிறது.  சிலவகையான அவமதிப்புகளை, அவமதிப்பென்று ஒத்துக்கொள்ள முடியாத மொன்னைத்தனம் வாய்ப்பதற்கும் இந்த தலித்தல்லாத உள்ளுணர்வுதான் தவறாக வழிநடத்துகிறது. எனவே, சாதியை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமைக்கு எதிராக மட்டுமே குரலெழுப்புவதோ போராடுவதோ தலித்துகளுக்கு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே பெற்றுத்தரக் கூடியது என்பதே உண்மை.

தவிரவும் தீண்டாமை ஒரு வடிவத்தில் இருக்குமானால், அதை எதிர்த்துப் போராடி ஒழித்துவிட இலக்கு நிர்ணயிக்கலாம். ஆனால் அது காலத்திற்கேற்றவாறு தகவமைக்கப்பட்டு ஒரு வடிவத்தில் தோற்கடிக்கப்பட்டால் வேறுவடிவத்தில் வெளிப்படுவதாயிருக்கிறது. எனவே தீண்டாமைக்கு எதிரானப் போராட்டங்கள் தலித் அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியுமேயன்றி அது முழுமையானதல்ல. காரணங்களை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது விளைவுகளை எதிர்த்தும் போராட வேண்டியிருக்கும் என்ற தத்துவார்த்தப் புரிதலோடு, சாதியமைப்புக்கெதிரான சமரசமற்றப் போராட்டத்துடன் தீண்டாமையொழிப்புச் செயல்பாடுகள் இணைக்கப்பட வேண்டும். அதன்றி முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்வும் வெறும் சீர்திருத்தவாதமாக சுருங்கிப்போகும் பலவீனத்தையேக் கொண்டிருக்கும்.  எனவே இங்கே தலித் அரசியல் என்பது சீர்திருத்தவாதங்களுக்குள் முடங்கிக் கொள்ளாமல், சாதியொழிப்புக்கும், எல்லோரும் இணங்கி சமத்துவமாய் வாழும் ஒரு புத்துலகத்திற்குமான அறைகூவலை ஒருங்கே முன்வைக்கிறது. அதாவது நிலவும் சமூக அமைப்பை புரட்சிகரமானதாய் மாற்றியமைப்பதே தலித் அரசியல் என்றாகிறது.

3.

சாதியொழிப்புக்கு குறைவான எந்தவொரு மாற்றமும் தமது விடுதலையைத் தரமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட தலித்துகளின் அரசியல் பிரதிநிதியாக யார் அல்லது எந்த அமைப்பு இருக்க முடியும் என்ற விவாதத்துக்கு வருவோம்.

தலித்துகளின் அரசியல் பிரதிநிதி யார் என்ற விவாதம் அம்பேத்கர் காலத்திலேயே தீவிரமடைந்தது எனலாம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தலித்துகள், முஸ்லிம்கள் உள்ளிட்ட யாவருக்கும் தாமே ஏக பிரதிநிதி என்று காங்கிரசும் காந்தியும் அறிவித்துக் கொண்ட நிலையை மறுக்க அம்பேத்கர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து இந்த விவாதம் உச்சநிலைக்குச் சென்றது. காங்கிரஸ்காரன் என்றால் கதராடை உடுத்த வேண்டும் என்று தன் கட்சிக்காரன் உடையணிவதையும்கூட கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்த காங்கிரசும் காந்தியும் சாதிமறுப்பு- தீண்டாமை ஒழிப்பு விசயத்தில் அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதையும் முன்வைக்காதது ஏன் என்று கேள்வியெழுப்பினார். அம்பேத்கரின் இந்த நுட்பமான வாதத்தை எதிர்கொள்ளக் கிளம்பிய காந்தி, கடைசியில் வர்ணாசிரமத்திற்கு கட்டுப்பட்ட பொறுப்பான இந்துவாக  தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

வர்ணாசிரமத்தையும் சாதியமைப்பையும் ஒத்துக் கொள்கிற காந்தியும் காங்கிரஸ் தலைமையும் தலித்துகளின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று அறிவித்தார் அம்பேத்கர். தலித்துகளை தனி அரசியல் சக்தியாக அணிதிரட்டினார். அதில் ஓரளவே அவரால் வெற்றிபெற முடிந்தது. பொருளாதாரரீதியாகவும் சாதிரீதியாகவும் கிராமப்புறங்களில் ஆதிக்கம் பெற்றிருந்த பகுதியினரிலிருந்து உருவான காங்கிரசின் தலைவர்கள், பல்வேறு காரணங்களை முன்னிட்டும் தம்மைச் சார்ந்திருக்கும் தலித்துகளை காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்திக் கொண்டனர்.  கிராமப்புற சமூகங்களில் தலித்துகள் தன்விருப்பத்தோடு ஒரு அரசியல் முடிவை எடுக்கமுடியாமல் இருப்பதற்கு இந்த அம்சமே இன்றளவும் காரணமாயிருக்கிறது. படிப்பும் சொத்தும் வாக்குரிமைக்கு முன்நிபந்தனையாக வைக்கப்பட்டதை எதிர்த்து வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று அம்பேத்கர் எழுப்பிய கோரிக்கை வெற்றியடைந்த பிறகு தலித்துகளின் முக்கியத்துவம் கூடத் தொடங்கியது. எண்ணிக்கை பலமாகவும், கட்டுப்பட்ட மக்கள் திரளாகவும் இருக்கிற தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பொருட்டு காங்கிரஸ் தலைமை தீண்டாமை ஒழிப்பை பெயரளவுக்கேனும் பேச வேண்டி வந்தது. அந்தக் கட்சி நாடு முழுவதும் அமைப்புரீதியாக பரவியிருந்ததால் தலித்துகளை திரட்டுவது அதற்கு எளிதான ஒன்றாகவே இருந்தது. கிராமப்புறங்களை ஊடுருவித் தாக்கி காங்கிரசிலிருந்து தலித்துகளை மீட்டெடுக்கும் அமைப்புரீதியான ஏற்பாடுகளற்று இருந்தது அன்றைய தலித் இயக்கம்.

தலித்துகள் மத்தியிலிருந்து கல்வியறிவு பெற்ற புதிய பகுதியினர் உருவாகி, பொதுவெளியில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து குரலெழுப்பியதோடு அதிகாரப் பகிர்வையும் கோரினர். ஆதிக்கசாதியினருக்கு எல்லாமுனைகளிலும் ஒரு போட்டியையும், சாதி, தீண்டாமை குறித்த அறிவார்ந்த விவாதத்தையும்  இவர்களால் உருவாக்க முடிந்தாலும் இவர்களது செயல்மையங்களாக பெரும்பாலும் நகர்ப்புறங்களே இருந்தன. கிராமப்புற ஆதிக்கசாதிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குறுக்கீடுகளை நிகழ்த்துவதில் நீடித்த பலவீனம் திட்டமிட்டு நடந்ததல்ல. தவிரவும், சாதியமைப்புக்கும் இங்குள்ள உற்பத்தி மற்றும் உடைமைச் சக்திகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பை மதிப்பீடு செய்வதிலும்கூட சீர்திருத்தவாத அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அரசியல் போதாமையை உணர்ந்தவராக அம்பேத்கர் இருந்தாலும், நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழியாக அவர் பௌத்தத்தை கண்டு, மதரீதியாக தலித்துகளை ஒருங்கிணைத்துவிட முடியும் என நம்பினார்.

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் தத்துவார்த்த, செயல் எல்லைகள் வெகுவாக சுருங்கிவிட்டன. தலித்தல்லாதவர்களின் மனங்களில் எந்த குறுக்கீடும் நிகழ்த்தாத அளவுக்கு அவை அரசியல் பண்பாட்டுத்தளங்களில் பலவீன நிலைக்கு எட்டிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து தலித் அமைப்புகள் நிறையத் தோன்றி தலித்துகளை அணிதிரட்டிய போதிலும், தலித் அரசியல் என்பது சமூகத்தின் விவாதப்பொருளாக மாற்றப்படவில்லை. தலித்துகளின் அமைப்புரீதியான திரட்சி, தீண்டாமைகளின் கடுமையைக் குறைக்க உதவியிருக்கிற அதேவேளையில் சாதிமுறைமைக்கு எதிரான தத்துவார்த்தப் போராட்டம் மங்கிக் கொண்டே வருவது கவலையளிக்கும் போக்குதான்.

எல்லோருக்கும் பொதுவானவை என்று சொல்லிக்கொண்டு இங்க எண்ணற்ற கட்சிகள் இயங்குகின்றன. சாதி மத பேதமற்ற சமத்துவ சமூகமே எங்கள் லட்சியம் என்று சொல்லிக் கொள்ளாத கட்சிகள் அநேகமாக தமிழகத்திலோ இந்தியாவிலோ ஒன்றுமில்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.  சாதிச்சங்கத்தை கட்சியாக மாற்றிக்கொண்டவர்களும்கூட இந்த முழக்கத்தை எழுப்பத் தவறுவதேயில்லை. அந்த கட்சிகளில் தலித்துகளுக்கென்று தனிப்பிரிவுகளும்கூட உண்டு. இந்த தனிப்பிரிவுகள் தலித்துகளின் கோரிக்கைகளை கட்சித்தலைமைக்குத் தெரிவித்து அவற்றுக்குத் தீர்வு காணவோ, தீர்வு கிட்டாத பட்சத்தில் ஒட்டுமொத்த கட்சியமைப்பையும் தலித்துகளுக்காக போராட வைக்கவோ உருவாக்கப்பட்டவையல்ல. மாறாக, கட்சியின் நோக்கங்களை தலித்துகளிடம் கொண்டு செல்கிற ஒருவழிப்பாதை கொண்டதாகவே உள்ளன. இக்கட்சிகளின் தலித் பிரிவுகளைத் தவிர மற்றெல்லாப் பிரிவுகளின் தலைமைப் பொறுப்புகளையும் சாதிப் பெருமிதமும் சாதி ஒடுக்குமுறையில் நாட்டமும் கொண்ட தலித்தல்லாதவர்களே  ஆக்கிரமித்துள்ள நிலையில், அக்கட்சி தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தோ சாதியொழிப்புக்கு ஆதரவாகவோ துரும்பளவும் இயங்காது.

தலித்தல்லாதவர்களின் நலன்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய கட்சிகளுக்குள் தலித்துகள் விரும்பி இணைவதில்லை. எற்கனவே காங்கிரஸ் என்ன செய்ததோ அதேபாணியில்  தலித்துகளை எண்ணிக்கை பலமாகவும் வாக்குகளாகவும் கருதி கட்சிகள்தான் அணிதிரட்டுகின்றன. சாதிமத பேதமற்ற சமத்துவ சமுதாயம் என்ற முழக்கத்தை மெய்யாக்க கட்சி ஏன் போராடவில்லை என்று கேள்வியெழுப்பவோ அதன் பொருட்டான நெருக்கடியைத் தரவோ வலுவில்லாத மக்கள் திரளாக இருக்கும் தலித்துகளை சமாளித்து தம் பிடிக்குள் வைத்திருப்பது கட்சித் தலைமைகளுக்கும் எளிதானதாகவே இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும், சாதிரீதியாகவும் செல்வாக்கும் அதிகாரமும் மிக்க சமூக அடுக்குகளிலிருந்து வரும் கட்சித் தலைமைகளுக்கு தங்களின் கீழுள்ள தலித்துகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது சாத்தியமான விசயம்தான். பொருளியல் காரணங்களுக்காகவும் வன்கொடுமைகளை எதிர்கொள்ள வலுவற்றிருப்பதாலும் தலித்துகளும் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. எனவே சாதியொழிப்புக்காக போராடாத எந்தவொரு கட்சியையும்- அது அம்பேத்கர், பெரியார்  படங்களை எவ்வளவு பெரிதாக வைத்துக்கொண்டிருந்த போதும்- ஒருவேளை தலித்துகள் கணிசமாக அக்கட்சிக்குள் அணிதிரண்டிருந்தாலும்கூட- அதை தலித்துகளின் பிரதிநிதியாக ஒத்துக்கொள்ள முடியாது.

4.எல்லோருக்கும் பொதுவானதென்ற பம்மாத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக- ஒரு பாரபட்சமான நியாயத்தை முன்வைத்து புரட்சிகரமாக சமுதாயத்தை மாற்றியமைப்பது என்ற தலித் அரசியலை உள்வாங்கிய இயக்கங்களாக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சீய இயக்கங்களையே வகைப்படுத்த முடியும்.

சாதியொழிப்பையும் தனியுடமை ஒழிப்பையும் இணைக்கும் புள்ளியாக உருவான பெரியாரியம், இன்று  தலித் மற்றும் பொதுவுடமை இயக்கங்களால் உள்வாங்கப்பட்டுள்ளது. எனவே இங்கு சமூகமாற்றம் குறித்த உரையாடல் பெரியாரியத்தை உள்ளடக்கியே நடைபெறுகிறது. எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் தாயாக சாதியமைப்பே இருக்கிறது என்ற அவரது புரிதலோடு இயங்குகிற பெரியாரிய இயக்கங்களும் சாதியொழிப்புக்கு பங்காற்றும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

நிலம் முழுவதையும் அரசுடமையாக்கி, மக்களை குத்தகைதாரர்களாகக் கொண்டு கூட்டுப்பண்ணைகளை நிறுவுவதன் மூலம்  சமூகத்தின் இயற்கை வளங்கள் மீது எல்லோருக்கும் பங்கிருப்பதை உத்தரவாதப்படுத்த முடியும் என்றார் அம்பேத்கர்.  தலித்துகளை ஆதிக்கசாதியினரின் பிடியிலிருந்து விடுவித்து அதிகாரப்படுத்த நிலத்தின் தேவையை அவர் வெகுவாக வலியுறுத்தினார். பொதுவுடமை இயக்கங்கள் முன்வைக்கும் நிலப்பகிர்வு என்பதற்கு இணையாக வைத்துப் பார்க்கப்பட வேண்டிய அளவுக்கு அம்பேத்கரின் கூட்டுப்பண்ணைத் திட்டமும் முக்கியத்துவம் கொண்டது. ஆனால், ஒரு சமாதானப்பூர்வமான மாற்றத்தினூடே இந்த நிலப்பகிர்வு நடக்கும் என்ற அவரது கணிப்பு நடைமுறைச் சாத்தியமற்றது. அம்பேத்கர் சமூகப்புரட்சியை முன்மொழிந்த போதும், அந்த புரட்சி பௌத்தம் வழிப்பட்ட அஹிம்சை வழியில் நிகழும் என்று நம்பினார். சாதியின் ஒடுக்குமுறையை சட்டத்தின் கடுமை கொண்டு தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே, ஆதிக்கசாதியினரின் மனசாட்சியோடு ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் அவர் முயற்சித்துக் கொண்டேயிருந்தார். அவர் சுதந்திரத் தொழிலாளர் கட்சி போன்ற அமைப்புகளை நிறுவியதும்கூட  இந்த முயற்சியின் பகுதியாகத்தான். ஆனால் அது வெற்றிபெறவில்லை. இந்தியப் பரப்புக்குள் பௌத்தத்தின் செல்வாக்கும் மனித மனங்களை குறுக்கீடு செய்து மாற்றியமைக்கும் வலுவோடு இப்போது இல்லை.

இதே காலகட்டத்தில் உருவான பொதுவுடைமை இயக்கம், ஆலைத்தொழிலாளர் பகுதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கத்திலிருந்தும் உருவான தனது ஊழியர்களை கிராமப்புற உழைப்பாளி மக்களை ஒரு வர்க்கமாகத் திரட்டும் அரசியல் பணிக்காக அனுப்புகிறது. அடிப்படையில் கிராமப்புற உழைப்பாளி மக்களாக பெரும்பாலும் தலித்துகளே இருப்பதையும், அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலையும் உணர்கின்றனர். தலித்துகளை சாதிரீதியாக புறக்கணிக்கிற பிற்பட்ட சாதியினரில் பெரும்பாலானவர்களையும் இந்த உழைப்புச் சுரண்டல் விட்டுவைக்கவில்லை. ஆகவே தலித்துகளையும் பிற்பட்ட சாதியினரையும் இணைக்கிற பொதுப்புள்ளியாக இருக்கும்  உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டங்களை முன்னெடுத்தனர். உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் நேசசக்தியாக இணைந்து நிற்கிற பிற்பட்ட சாதியினர், சாதியொடுக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்தில் தலித்துகளின் எதிர்முகாமாக மாறிவிடுகிற முரண்பாட்டை கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்தே இருந்தனர். ஒரு வர்க்கமாக தொடர்ந்து போராடுவதன் மூலம் சாதியுணர்வு மங்கி மறைந்துவிடும் என்பது அவர்களது புரிதலாகவும் கனவாகவும் இருந்தது. ‘பாடுபாடும் பாட்டாளிக்கு சாதி இல்லை மதம் இல்லை/ இனம் இல்லை மொழி இல்லை/ கொள்கையுண்டு கோஷம் உண்டு/ கோரிக்கைகள் பலவுண்டு’ என்ற முழக்கம் உருவான பின்னணிகூட இதுதான். சாதி மதமெல்லாம் மங்கி மறைந்துவிட்டது என்ற அர்த்தத்தில் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. அவற்றையெல்லாம் உதறித் தள்ளி ஒரு வர்க்கமாக ஒன்றுபடு என்பதற்கான முழக்கம்தான் அது. ஆனால், வர்க்கம் என்பதை உருப்பெற்றுவிட்ட ஒன்றாகக் கருதி, சாதி போன்ற விசயங்களைப் பேசுவது வர்க்க ஒற்றுமையை குலைக்கும் என்ற புரிதல்   மேலோங்கிய போது ‘வர்க்கம் என்பது அடைய வேண்டிய லட்சியமேயொழிய, அதுவே நிலவும் எதார்த்தம் அல்ல’ என்று கம்யூனிஸ்டுகளை எச்சரித்தார் அம்பேத்கர்.

சாதியானது இந்த நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்போடும் பண்பாட்டு நடவடிக்கைகளோடும் இணைந்த ஒன்றுதான். இவற்றை ஒன்றிலிருந்து இன்னொன்றென தனித்தனியே பிரித்தெடுப்பது சாத்தியமில்லை. உண்மையில் இவை ஒன்றுக்கொன்று உள்சொருகி பிரிதொன்றைப் பாதுகாத்து இது அடிக்கட்டுமானம், இது மேல்கட்டுமானம் என்ற மரபார்ந்த வகைப்பிரிப்பை திணறடிக்கும் மயக்கப்புள்ளிகளைக் கொண்டுள்ளன. இன்னின்ன சாதிகளுக்கு  சொத்து வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்கிற மநுவின் கட்டுப்பாடுகளை  மேற்கோளிட்டு, ‘சாதியே அடிப்படை. அதை முன்வைத்துதான் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டிருக்கிறது’ என்றும், ‘சொத்துக்களை சுருட்டிக் கொள்வதற்காகத் தான் சாதி முன்னிறுத்தப்பட்டது’ என்றும் வெறுமனே வாதித்துக் கிடப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. (இப்படிப்பட்ட வெற்று வாதங்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதிலிருந்து தடுத்து வெறும் வாய்ச்சொல் வீரர்களையே உருவாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.) ஆனால், அம்பேத்கரிய வரலாற்று வாசிப்பு ஒரு விசயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, இந்திய சமூகத்தில் சாதி என்பதுதான் மற்றெல்லா வளங்களையும் அடைவதற்கான திறவுகோலாய் இருக்கிறது என்பதே அது. 

எது அடிக்கட்டுமானம் எது மேற்கட்டுமானம் என்ற தத்துவார்த்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக நடைபெற்ற மயிர்பிளக்கும் விவாதங்கள் பலநேரங்களில் சாதியின் இருப்பை குறைத்து மதிப்பிடவே உதவி செய்தன. இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்டுவிட்டால் போதும், மறுநாள் காலை எட்டரை மணி பஸ்சில் புரட்சியைக் கொண்டுவந்துவிடலாம் என்பதுபோன்ற பாவனைகளுடன் இந்த விவாதங்களை நீட்டித்துக் கொண்டிருப்பது தேவையற்றது. மேலைச்சமூகங்களுக்கு பொருந்திய அளவுகோல்களைக் கொண்டு இந்திய சமூகத்தின் தனித்துவமான சாதியை மதிப்பீடு செய்வதில் உள்ள அபத்தங்களை உணர்ந்த இடதுசாரி இயக்கங்கள்,   சாதி என்கிற எல்லையைத் தாண்டுவதும் ஒரு வர்க்கமாக இணைவதும் தனித்தனியே சாதிக்கக்கூடியவையல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டன. இந்தப் புரிதலோடு கருத்தியல்தளத்திலும் களத்திலும் நிகழும் போராட்டங்கள் மூலம் சாதி, பொருளாதாரம், பண்பாடு, பால்நிலை ஆகிய ஒடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதே அவர்களது அரசியலாக இருக்கிறது. அதாவது தலித் அரசியலின் அடிப்படைத் தேவைகளோடு பொருந்துவதாக இடதுசாரி அரசியல்  தகவமைந்துள்ளது.

மற்றெல்லா ஒடுக்குமுறைகளையும் சாதியொடுக்குமுறையோடு இணைப்பதன் மூலம் சாதியத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் அதற்கெதிரானப் போராட்டங்களை நீர்த்துப்போக வைப்பதாகவும் இடதுசாரிகள் மீது தலித் அமைப்புகள் வைக்கும் குற்றஞ்சாட்டுகளை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டும். அதேநேரத்தில் சாதியொழிப்பையும் மையப்படுத்திய சமூக மாற்றம் என்ற பொதுஇலக்கை எட்டுவதற்கான இடதுசாரிகளின் போராட்டத்தில் தலித் அமைப்புகளும் பங்கெடுக்க வேண்டும். இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஏற்படும் கருத்தொற்றுமையே இங்கு நிகழவேண்டிய எல்லா மாற்றங்களுக்கும் முன்னிபந்தனையாக இருக்கிறது.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...