கண்டேன், களைப்படைந்த என் தோழனை... ஆதவன் தீட்சண்யா

2012 ஜனவரி 29, பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டின் நிறைவுநாள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர். தொல்.திருமாவளவன், ஆளூர் ஷாநவாஸ் மற்றும் அப்துல்லா ஆகிய நண்பர்களுடன் வந்திருந்தார். அந்த மேடையில் வைத்து தான் திருமாவளவனை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். சுவரொட்டிகளிலும் ஃபிளக்ஸ் பேனர்களிலும் பெரிய்ய்ய பெரிய்ய்ய உருவமாக பார்த்துப் பழகியிருந்த என் கண்கள் அவரது நிஜமான உருவத்தை நம்ப மறுத்தன. ஆனால், இதுதான் நிஜம், மற்றதெல்லாம் கட்சிக்காரர்களின் தேவைக்காக ஓவியர்களாலும் இயந்திரங்களாலும் இழுத்தும் நீட்டியும் பெரிதாக்கப்பட்ட பிரமைகள் என்று சொல்லி ஒருவழியாக கண்களை சமாதானப்படுத்தினேன்.

அவர்தான் மாநாட்டின் கடைசி கருத்துரையாளர். அவரது உரையை முதன்முறையாக கேட்கப்போகும் ஆர்வம் எனக்கிருந்தது. அவரது மேடைப்பேச்சுகள் பற்றி பலரும் சொல்லக்கேட்டு உருவாகியிருந்த அனுமானங்களின் பேரில் இந்த ஆர்வச்சுரப்பு கூடியிருந்தது. வேறு பலரும்கூட அந்த அவையில் என்னொத்த மனநிலையோடு இருப்பதைக் காணமுடிந்தது. அவர் மிகுந்த நிதானத்தோடு ஆரம்பித்தார். திடுமென குரலுயர்த்தி ஆவேசமாகப் பேசினார். சட்டென தழைந்த குரல் தேம்புவதைப் போலிருந்தது. பிறகு மீண்டும் ஆவேசம்... நிதானம், தழைதல்.... நான் கண்களை மூடிக்கொண்டேன். அல்லது அவரது உருவத்தைப் பார்க்காமல் குரலை மட்டும் கவனித்தேன். அது யாரையும் தன்வயங்கொள்ளும் குரல்தான். உணர்வுகளின் ஏற்றயிறக்கங்களை கேட்போர் மனதில் பாய்த்துவிடும் நுட்பமூறியிருந்தது அதனில். அப்படியொரு ஆளுமை கொண்ட அவரது குரலுக்கு அந்த அரங்கம் கட்டுப்பட்டிருந்தது. நான்தான் கடும் உளைச்சலுக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகிக்கொண்டிருந்தேன். இந்த உளைச்சலும் ஏமாற்றமும் அன்றைக்கு மட்டுமல்ல, அடுத்தநாள் (30.1.12) கப்லா பதாஸ் நகரில் நடந்த பெரியார் சிலை திறப்புவிழாவில்  அவரது உரையைக் கேட்டு இன்னும் கூடுதலாகியது.

இந்திய/ தமிழ்ப்பரப்பில் பகுத்தறிவு, பகுத்தறிவுக்குப் புறம்பான கடவுள், மதம், சாதி, சடங்குகள், மனிதகுலத்தின் இயல்பான பகுத்தறிவுக் கண்ணோட்டத்தை மீட்டெடுக்கவும் வளர்த்தெடுக்கவும் நடந்தப் போராட்டங்கள், அத்தகையப் போராட்டங்களில்  ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னணியில் நின்றதற்கான அகவயமான தேவை, சமத்துவத்திற்கும் பகுத்தறிவிற்குமுள்ள தொடர்பு, குறித்தெல்லாம் அவர் பேசவில்லை என்பதோ, பலரையும் போலவே அவரும்கூட பகுத்தறிவு என்றால் பெரியார் மட்டும்தான் என்கிற ரீதியில் பேசியதோ எனது ஏமாற்றத்திற்கான காரணங்களல்ல. அவரது உரையில் விரவிக் கிடந்த விரக்தியும் ஏமாற்றமும் துக்கமும் வலியும்தான் என்னையும் மூழ்கடித்துவிட்டது என்பதை மெதுவே உணர்ந்தேன்.

***

ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை தலித்துகள் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கிற ஒரு நாட்டில் அந்தக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு சமரசமற்ற நூறுநூறு இயக்கங்கள் தேவைப்படுகின்றன. அப்படியான இயக்கங்களில் ஒன்றாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பை நானும் பார்த்த காலமொன்று இருந்தது.  தலித் ஒற்றுமை, தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக உடனடி அணிதிரட்சி, சாதியத்திற்கு  எதிரான கருத்தியல் போராட்டம் என்று  அதன் பன்முகப்பட்ட செயல்பாடுகள் தமிழக அரசியல் பண்பாட்டுக் களத்தில் அதுவரை செயல்பட்டு வந்த எல்லோருக்கும் கடும் நெருக்கடிகளை உருவாக்கின. 

உதட்டளவிலேனும் சாதியத்திற்கு எதிராகப் பேசியாக வேண்டியதொரு இக்கட்டான நிலை உருவாவதை விரும்பாத ஆதிக்கச்சாதியினரும் அவர்களது கட்சியினரும் விடுதலைச்சிறுத்தைகளையும் திருமாவளைவனையும் ‘எதிர்கொள்ள’ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் கட்சியாக மாறி தேர்தலுக்கு வந்தது. பிறகென்ன, ஆதிக்கச்சாதியினர் நிம்மதியடைந்தனர். தன்னைத்தானே முனை மழுக்கிக்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் தயாராகிவிட்டது என்பது அவர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்திற்குரியதாகியது.

ஒட்டுமொத்த தலித்துகளையும் அணிதிரட்டிக்கொள்கிற உள்வலுவின்றி குறிப்பிட்ட ஒரு பிரிவினரை மட்டுமே மையப்படுத்தியதாக தனது அமைப்பு உள்ளுக்குள் குன்றிக் கொண்டிருந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வெறுமனே தலித்துகளுக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழர்களுக்குமானது என்று பேசத் தொடங்கினார் திருமாவளவன். சாதியொழிப்பு அரசியலை கைவிட்டுவிட்ட ஒருவரை தங்கள் மந்தையின் கடைசி ஆடாக சேர்த்துக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. சாதியொழிப்பு அரசியல் பக்கம் திரும்பவும் தலைதிருப்பிவிடாமல் அவர் தமிழராகவோ இந்தியராகவோ எம்.பி.யாகவோ வேறு எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

ஊர் ஊருக்கு தலித்துகளை வெட்டுகிறவன், கொளுத்துகிறவன், கொல்கிறவன், வல்லாங்கு செய்கிறவன், வகைதொகையின்றி வன்கொடுமை புரிகிறவன் என்று யார் யார் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவன்கூட தன் சாதியவாதத்தையோ ஒடுக்குமுறையையோ தலித்விரோதப் போக்கையோ கைவிடாதபோது அவர்களையெல்லாம் தமிழர்களாக குணம்மாற்றி உருவகித்துக் காண்கிற பெருந்தன்மை திருமாவளவன் கண்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது. எந்தெந்த ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து தலித்துகள் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் போராடிக் கொண்டிருந்தார்களோ அந்த ஆதிக்கச் சாதிக்காரர்களின் அரசியல் கட்சிகளோடு ‘தமிழர்’ என்ற அடிப்படையில் அவர் தானாக முன்வந்து கைகுலுக்கியதன் பின்னே இருந்த உளவியல் மிகவும் முக்கியமானது. சாதிய மோதல்களுக்கு முடிவுகட்டி நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான ஒரு முன்மொழிவைப் போன்றதொரு பரிமாணம் அவரது நடவடிக்கைகளுக்குள் பொதிந்திருந்தது. 

ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்திலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகான காலத்திலும் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவாக நடைபெற்ற எல்லா இயக்கங்களிலும் அவர் முன்னணியில் இருந்தார். 2009 அக்டோபரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கைக்கு வந்தபோது நானும் அங்குதான் இருந்தேன். நோர்வுட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அவர்கள் பயணம் மேற்கொண்டதற்கு அடுத்தடுத்த நாட்களில் நான் அப்பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.  மற்றெவரையும்விட திருமாவளவன் மட்டுமே தங்களது துயரங்களை சரியாக உள்வாங்க முடியும் என்கிற ஒரு கருத்து வடக்கிலும் மலையகத்திலும் இருந்த தமிழர்களிடையே வலுவாக இருந்ததை  என்னால் காணமுடிந்தது. அந்த நம்பிக்கையை அவர் சிறிதளவும் பொய்ப்பிக்கவில்லை. தமிழர் அரசியலில் திருமாவளவன் முதன்மைப் பெற்று வருவதை பொறுத்தக்கொள்ள முடியாத சாதியவாதிகளின் பொறுமலால்தான் இலங்கை சென்று வந்தவர்களில் அவர் மட்டுமே இங்கு அவதூறுகளுக்கு ஆளானார். டிராமாவளவன் என்று அவரது பெயரை இழித்து தமிழ்நாடெங்கும் ஒட்டப்பட்டன சுவரொட்டிகள். அவரது ஈழ ஆதரவும்  பிரபாகரன் மீதான விசுவாசமும் எப்போதும் கேலிக்குரியதாகவும் கேள்விக்குரியதாகவும் சித்தரிக்கப்பட்டதன் பின்னே தமிழ்த்தேசியவாதிகளின் சாதியமனம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதற்கப்புறமும் சளைக்காமல் இவர்தான் தமிழ், தமிழர் என்று சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாரேயன்றி மற்றவர்கள் இவரை தலித்தாகவேதான்  நடத்தியிருக்கிறார்கள். அந்த வலியிலும் துயரத்திலும் வெடித்தப் பேச்சைத்தான் நான் கேட்க நேர்ந்திருக்கிறது.

 ***
ஒவ்வொரு சேரியிலும் மேதகு பிரபாகரன் திருவுருவையும் தமிழீழத்தையும் அறிமுகப்படுத்திய என்னை நீங்கள் ஏன் தமிழனாகப் பார்க்கவில்லை? முள்வேலிக்குள் அடைபட்டிருந்த ஈழத்தமிழர் துயர்துடைக்க நான் சாகும்வரை உண்ணாவிரம் மேற்கொண்டிருந்தபோது அவனவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பொங்கல் கொண்டாடப் போய்விட்டது ஏன்? இப்படியாவது செத்தொழியட்டும் என்றா? எனக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய எனது கட்சிக்காரர்கள் 360க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது எதனால்? ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் எனது கட்சிக்காரர்கள் 30 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எதனால்.... ஈழப்பிரச்னையை மையப்படுத்தி நான் முன்வைத்த எந்தவொரு போராட்டத் திட்டத்தையும் தமிழ்த்தேசியவாதிகள் ஏற்காமல் பின்வாங்கிப் போனதற்கு அவர்களது சாதியமனம்தானே காரணம்...?

- இப்படியாக ஆவேசமாகவும் ஆதங்கத்துடனும் வந்து விழுந்த அவரது கேளவிகளின் உட்பொருளாய் இருந்தது இதுதான்- உங்களையெல்லாம் நம்பித்தானே நான் என் மக்களை அழைத்துக்கொண்டு இப்படியெல்லாம் அலைந்தேன், அதற்கு நீங்கள் காட்டிய கைமாறு இதுதானா? நான் இன/மொழி/  தேசிய/சர்வதேசிய அரசியல் எது பேசினாலும் என்னை ஒரு தீண்டத்தகாதவனாகவேதான் பார்ப்பீர்களா?

ஆமாம் தோழர், இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? என்று இடைமறித்து கேட்கவேண்டும் போலிருந்தது எனக்கு. தமிழர் என்கிற பொது அடையாளத்தை தன்னோடும் தனது மக்களோடும் பகிர்ந்துகொள்ள சாதியவாதிகள் மறுத்துவிட்டது குறித்த பெருந்துயரத்தை அடக்கமாட்டாமல் அவர் பேசிக் கொண்டேயிருந்தார். ‘இவனுங்கெல்லாம் தலித் பசங்க... சும்மா கருப்புச் சட்டையை மாட்டிக்கிட்டு பெரியார், பகுத்தறிவுன்னு கிளம்பிட்டானுங்க...’ என்று பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டை நடத்திய தோழர்களைப் பற்றி குமைச்சலுற்ற மலேசியத்தமிழனுக்கும் ‘தமிழர்’ அரசியலுக்குள் திருமாவளவன் வலுப்பெறுவது கண்டு எரிச்சலடைந்த நம்மூர் தமிழ்த்தேசியவாதிகளுக்கும் இருப்பது ஒரேவகையான சாதியமனம்தான். ஆனால் இதைப் புரிந்துகொள்ள திருமாவளவன் போன்ற தோழர்களுக்கு இவ்வளவு காலம் ஏன் தேவைப்பட்டது என்றுதான் யோசிக்க வேண்டியுள்ளது.

அடங்க மறு அத்துமீறு என்று தன் தம்பிகளுக்கெல்லாம் சொல்லிவிட்டு மனதை ‘சாந்தப்படுத்த’ ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்றுக்கொள்ள போனபோதும், புதுக்கூரைப்பேட்டை கண்ணகி முருகேசன் கொலையில் சமரசம் செய்ய முயற்சித்தார் என்பது குறித்தும், அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றி முரண்பட்ட வகையில் பேசியது பற்றியும் அவர்மீது எனக்கிருந்த கோபம் தணியவில்லை என்றாலும் அந்த கணத்தில் அவர்மீது எனக்கு பரிவே மிஞ்சியது.

பெரியார் சிலை திறப்பில் பேசிவிட்டு மேடையிலிருந்து வந்த திருமாவளவனிடம் என்னை நண்பர் அப்துல்லா அறிமுகப்படுத்தினார். கையை இறுகப் பற்றிக்கொண்டு பேசினார். அயோத்திதாசரைப் பற்றியெல்லாம் மாநாட்டில் பேசினீர்களாமே, மகிழ்ச்சி என்றார். நீங்கள் ஏன் அவ்வாறு பேசவில்லை என்று கேட்கத் தோன்றியதை முதல் சந்திப்பு என்பதாலோ என்னவோ தவிர்த்தேன்.  உங்கள் மீது ஆதவன் அண்ணனுக்கு, மார்க்ஸ் தோழருக்கெல்லாம் நிறைய விமர்சனம் இருக்கே... அதுபற்றி பேசலாமில்லையா என்றார் அப்துல்லா. நான் தயாராகத்தான் இருக்கிறேன், ஆனால் தமிழ்நாட்டில்தான் உரையாடலே இல்லாமல் போய்விட்டதே என்றார் திருமாவளவன். போகிற போக்கில் என்னத்தப் பேச... எப்போதேனும் சந்தித்து உரையாடுவோம் தோழர்.... என்று விடைபெற்றுக்கொண்டேன்.  அவரும் கையசைத்துக்கொண்டு கிளம்பினார்.

சாதியவாதிகளின் புறக்கணிப்புக்கு ஆளாகி ‘பொதுமேடையிலிருந்து’ இறக்கிவிடப்பட்டு மீண்டும் சேரிக்கே திரும்பிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது அவரது நடை. சாதிக்கொழுப்பால் செவியடைத்துக் கொண்டவர்களிடம் பேசிப்பேசி களைத்துப்போன ஒருவர் வேறெப்படி நடக்கமுடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

9 கருத்துகள்:

 1. தோழரே...கண்கள் கலங்கிவிட்டன.
  தமிழர்களின் இன்றைய நிலையையும் தலித்துகளின் நிலையையும் நினைத்துப்பார்த்தே அரசியல்வாதிகளின் கைகளில் அண்ணன் திருமா சிக்கிக்கொண்டதை எழுதுவதற்கு முன்பே காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன.

  நாமும் காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 2. And he spake thus to his
  heart:

  A light hath dawned upon me: I need companions--living ones; not dead
  companions and corpses, which I carry with me where I will.

  But I need living companions, who will follow me because they want to
  follow themselves--and to the place where I will.

  A light hath dawned upon me. Not to the people is Zarathustra to speak,
  but to companions! Zarathustra shall not be the herd's herdsman and
  hound!

  To allure many from the herd--for that purpose have I come. The people
  and the herd must be angry with me: a robber shall Zarathustra be called
  by the herdsmen.

  Herdsmen, I say, but they call themselves the good and just. Herdsmen, I
  say, but they call themselves the believers in the orthodox belief.

  Behold the good and just! Whom do they hate most? Him who breaketh up
  their tables of values, the breaker, the lawbreaker:--he, however, is
  the creator.

  Behold the believers of all beliefs! Whom do they hate most? Him who
  breaketh up their tables of values, the breaker, the law-breaker--he,
  however, is the creator.

  Companions, the creator seeketh, not corpses--and not herds or believers
  either. Fellow-creators the creator seeketh--those who grave new values
  on new tables.

  Companions, the creator seeketh, and fellow-reapers: for everything is
  ripe for the harvest with him. But he lacketh the hundred sickles: so he
  plucketh the ears of corn and is vexed.

  ("Thus Spake Zarathustra" - Nietzsche)

  பதிலளிநீக்கு
 3. திருமாவளவனை நேரடியா விமரிசிப்பவர்கள் மத்தியில், தோழன் என விளித்து பாசிடிவ் பக்கங்களைச் சொல்வதைப் போன்ற ஒரு தொனியில் பக்கம் பக்கமாய் அவர்மீது குறைகளைச் சுட்டியிருக்கும் உங்க திறமை இருக்கே..அடேங்கப்பா.. நீங்க பெரிய எழுத்தாளர்தான்

  பதிலளிநீக்கு
 4. மார்க்சியவாதிகளை தலித் விரோதிகளாகச் சித்தரித்து தலித் மக்களை மார்க்சியவாதிகளோடு இணையவிடாமல் தடுத்தார் திருமாவளவன்.
  மார்க்சிய இயக்கத்திலும், இவரது அந்த அணுகுமுறையினால் ஏற்பட்ட வலியின் காரணமாக, தேர்தல் கால அரசியல் உறவுகளின் அடிப்படையில் மட்டுமே இவரைப் பார்த்து, இவரோடு தோள்சேராத நிலை நேர்ந்தது.

  தமிழர் தலைவராய் இடத்தைப் பிடிப்பதில் நடக்கிற இசைநாற்காலியில் இவரும் கலந்துகொண்ட விபத்தும் நடந்தது.

  தோழன் களைப்படைந்திருப்பதில் வியப்பில்லை.

  பிழைகள் திருத்தப்படவும் சரியான அணுகுமுறைகள் உருவாகவும் உங்கள் பதிவு உதவிட வேண்டும். மார்க்சிய இயக்கமும் தலித் விடுதலை இயக்கமும் இணைத் தண்டவாளங்காளக மாறுவது இந்திய வர்க்கப்போராட்டப் பயணத்தின் வரலாற்றுத் தேவை.

  பதிலளிநீக்கு
 5. இன்னொரு பிறவியெடுத்து வந்து பேசினால் கூட இனம் கண்டு கொண்டு கள்ள மௌனம் சாதிக்கக் காத்திருக்கிறது தமிழ்ச்சாதி.
  இது நேர்வது திருமாவளவனுக்கு மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நான் ஓரளவு மரியாதை வைத்திருக்கும் - அதே நேரத்தில் பார்த்துப் பாவப் படவும் செய்யும் தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். தேர்தல் அரசியல் என்றாலே சமரசமும் அதில் ஒரு பகுதி ஆகி விட்டமையால் அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அதிகாரத்தை அடைந்து அதன் மூலம் தன் கடமையைச் செய்யலாம் என்று எண்ணி இறங்கியதன் விளைவு. அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நம்பத் தகாதோரை மீண்டும் மீண்டும் நம்பிக் கெட்டுப் போனார்.

  இப்போதும் சங்கரன்கோவிலில் வலியச் சென்று தன் ஆதரவை அள்ளி நீட்டியிருக்கிறார் திமுகவுக்கு. எங்குதான் முடியப் போகிறதோ அவருடைய பயணம் என்று கவலையாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கட்டுரை உள்ளத்தை உருக்குகிறது.

  பதிலளிநீக்கு
 8. கண்ணில் நீர் கசியவைத்த கட்டுரை!.
  ஒரு ஊருக்கு போக பல வழி. அதில் திருமா தேர்ந்தெடுத்தது 'நல்வழி'.

  பதிலளிநீக்கு