அதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 4

கேவலர்கள் - ஆதவன் தீட்சண்யா

காட்டேரியும் கழுகும் நரியும் புலியும்  
அஞ்சியொடுங்கும் கொடியோரென
மிருகக்கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை
தத்தெடுத்திருக்கும் அரசாங்கம் 
அவர்களிடத்தில் கொடுத்திருக்கிறது
அதிகாரத்தையும் ஆயுதங்களையும் 

ஒழுங்கீனங்களையும் உற்பாதங்களையும்
ஊரெங்கும் பரப்பி  
குற்றங்களின் கிடங்கில் புழுத்து நெளியும் அவர்களது
ரத்தநாளத்தில் நிறைந்திருப்பதோ
சாக்கடையும் நஞ்சும் 

வலியோரிடம் இரந்தும் எளியோரிடம் பறித்தும்
வயிறுவளர்க்கும் கேவலத்திற்கு
படிப்பெதற்கு பயிற்சிதானெதற்கு

பாலுறுப்புகளாலான வசைச்சொற்களை மட்டுமே  
மொழியறிவாய் கொண்ட அவர்கள்
மனித உடலில் குறிகளையே தேடியலைகிறார்கள்

அவிழ்த்துக் காட்டத்தான் போகிறார்கள் என்றான பிறகு 
சீருடையோ வேறுடையோ வீண்
அம்மணமாகவே இருக்கட்டும்

அறுத்தெடுக்கத் தோதாயிருக்கும் எங்களுக்கு.

4.1.2017



சனி, ஜூன் 7

சாவழைப்பு - ஆதவன் தீட்சண்யா



ஒருவேளை
இக்கவிதை பாதியிலேயே நின்றுபோயிருக்குமானால்
நான் கொல்லப்பட்டுவிட்டதாக கருதிக்கொண்டு
எழுதிமுடியுங்கள் மிச்சக்கவிதையை
அவ்வாறல்லாது
என்னைத் தேடிக்கொண்டு கிளம்பிவிடுவீர்களாயின்
இழுபட்டுக்கிடக்கின்ற உயிர்போல இக்கவிதை
தாளின் ஓரோரத்தில் கிடந்து தவிதவிக்கும் கொடுமைக்கு
நீங்களும் உடந்தையாகிப்போவதோடு
என்றென்றைக்கும்
இக்கவிதை எழுதி முடிக்கப்பட்டுவிடக்கூடாதென்கிற சதிக்கும்
இரையாகிப் போவீர்கள்

படபடக்கும் இக்கவிதைத்தாள் பறந்துவிடாதிருக்க
வெட்டப்பட்ட என் தலை அதன்மீது வைக்கப்பட்டிருக்குமானால்
நான் கொல்லப்பட்டதன் காரணம்
ஓர் அரசாங்கத்தின் ரகசியம்போல
மிக வெளிப்படையானதாக இருக்கிறதெனத் தெளிந்து
முண்டத்தை தேடியலையும் நேரத்தில்
இந்தக்கவிதையை எழுதிமுடியுங்கள்
ஆமாம்,
அதிகாரத்திற்கு எதிரான இந்தக்கவிதையை
எப்படியாயினும் எழுதி முடியுங்கள்
உங்களுக்கானதொரு இடத்தை
எனக்கருகிலேயே முன்பதிவு செய்து காத்திருக்கிறேன்.

24.05.14

நன்றி: உயிர் எழுத்து, ஜூன் 2014 

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...