திங்கள், ஜூன் 18

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா


‘‘....ரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’
அண்ணல் அம்பேத்கரின் இவ்வரையறுப்பு இன்றளவும் உண்மையாகவே இருக்கிறது. இந்து மதத்தையும் அதன் மூலகமான சாதியத்தையும் நான் உளமாற வெறுத்தாலும் அவை உருவாக்கி விட்டுள்ள சடங்குகளிடமிருந்து தப்பிக்க முடியாமல் தோற்று வீழும் கணங்களால் சூழப்பட்டதாய் இருக்கிறது என் வாழ்க்கை.  பிறப்பு இறப்பு திருமணம் போன்ற வாழ்க்கைவட்ட நிகழ்வில் ஏதாவதொரு சடங்கைச் செய்வதன் மூலம், சாதியற்ற/ மதமற்ற/ பால்நீக்கம் செய்யப் பட்ட  வாழ்வுக்கான எனது எத்தனங்களை வெறும் வாய்ச்சவடாலாக நானே கீழ்மைப்படுத்தி விடுகிறேன். மிகுந்த அரசியல் பிரக்ஞையோடு இல்லாத தருணங்களில் ஒரு இந்துவின் மனநிலை தான் எனக்கு இயல்பாக வாய்க்கிறதோ என்கிற அச்சமும்கூட என்னை பீடித்துவிடுகிறது. நான் நம்பும் அரசியலை அசைத்துப் பார்க்கும் பலம் இந்தச் சடங்குகளுக்கு இருக்கிறதா அல்லது அவற்றை புறந்தள்ள முடியாத பலவீனத்துடன் நானிருக்கிறேனா என்கிற குழப்பமும் எனக்கு வந்து விடுகிறது.  இப்படியான அச்சமும் குழப்பமும் நெருங்கமுடியாத அளவுக்கான தத்துவபலத்துடன் என்னை எப்படி செறிவேற்றிக்கொள்வது என்கிற தேடுதலை உருவாக்கிய சில அனுபவங்களை இங்கு தொகுத்துப் பார்க்கிறேன்.

1.

என் தாத்தம்மாவாகிய சிங்காரி என்கிற மாரிமுத்தம்மாள் தனது மிக இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். பிறகு தன்னிடம் ரோட்டுவேலை பார்த்து வந்த பழனிமலை என்பவரோடு சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். எங்கள் தாத்தம்மாவிடம் ஜல்லி உடைப்பது, தார் ஊற்றுவது உள்ளிட்ட ரோடு சார்ந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த பழனிமலையின் தம்பிகள் இதை சகித்துக்கொள்ள முடியாமல் அவரை ‘சாதி கெட்டவராக’ கருதி ஒதுக்கிவைத்துவிட்டார்கள். தமிழ் நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் பல்வேறு சாலைகளை அமைப்பதற்காக  இடம் பெயர்ந்துகொண்டே இருந்த ‘மாரிமுத்தாள் கேங்’கிற்குள்ளேயே அவரது தம்பிகளும் தொடர்ந்து வேலை செய்துவந்தபோதிலும் பழனிமலைக்கும் அவர்களுக்கும் ரத்த சம்பந்தம் தவிர மத்த சம்பந்தம் எதுவுமில்லை என்றாகிப்போனது. பொழுதுக்கும் வேலைக்காடுகளில் மற்றவர்களோடு ஒன்றாக கஷ்டப்படுகிற அவர்கள் தாங்கள் வசிக்கும் சாளைகளை மற்றவர்களின் சாளைகளிலிருந்து சற்றே தள்ளி தனித்து அமைத்துக்கொண்டிருந்தார்கள். பழனிமலையின் சைக்கிள் ஒருபோதும் தமது தம்பிகளின் சாளைப்பக்கம் திரும்பியதே கிடையாது. அவர் சொந்தபந்தங்களை - அதாவது தமது சாதியை துறந்து வெளியேறிவிட்டார். ரத்த சம்பந்தமுள்ள சொந்தபந்தங்களை அறுத்துக்கொள்ளும் துணிவற்ற ‘பாசக்காரப் பிள்ளைகளால்’ சாதியின் நுனிச்சிமிறைக்கூட ஆட்ட முடியாது என்று அவர் பிரகடனம் எதையும் செய்யவில்லையே தவிர அவரது வாழ்வின் செய்தியாக அதுவே இருந்தது. 
  
‘சைக்கிளப்பன்’ என்று நாங்கள் செல்லங்கொஞ்சிய அப்பேர்ப்பட்ட எங்கள் தாத்தா பழனிமலை நான் எட்டாம் வகுப்பு படிக்கிறபோது இறந்துபோனார். சாதியைத் துறந்து வாழ்ந்த அவர் இப்போது இரு சாதிகளுக்கு சம்பந்தப்பட்ட பிணமாய் இருந்தார். சாதியடுக்கில் ‘எரிக்கும்’ அந்தஸ்து வழங்கப் படாதவையாகவே இரண்டு சாதிகளும் இருந்தபடியால் அவரை புதைப்பது என்றானது. தாங்களிருவரும் தலையெடுத்து சம்பாதித்த நிலத்திலேயே அவரை புதைக்கவேண்டும் என்பது எங்கள் தாத்தம்மாவின் விருப்பமாயிருந்தது. எனவே ‘அந்த’ சாதியில் பிறந்த அவரை ‘எங்க’ சாதி இடுகாட்டில் எப்படி புதைக்கலாம் என்கிற சர்ச்சை எழாமல் போனது. தங்களது அண்ணனின் பிணத்தை தங்களிடமே ஒப்படைக்குமாறு அவரது தம்பிகளான சின்னப்பனோ இடும்பனோ உரிமை கோராததால்  வேறுவகையான பிரச்னைகளும் எழவில்லை. ஆனால் பிணத்தை குளிப்பாட்டுவது தொடங்கி குழிக்குள் இறக்குவதுவரை ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் ‘வழக்கம்னு ஒண்ணு இருக்குதுதானே’ என்று சொல்லிக்கொண்டு ஏராளமான சடங்குகள் செய்யப்பட்டன. எல்லாச் சாவுகளிலும் தொடர்ந்து சொல்லப் படுகிற ‘வழக்கம்’ என்பது  சாதி வழக்கத்தைத் தான் குறிக்கிறது என்பதும் சடங்குகள் என்பவை சாவுவரையிலும் மட்டுமல்லாது சாவுக்குப் பிறகும் ஒருவரது சாதியை நிலைநிறுத்தும் தன்மை கொண்டவை என்பதும் அப்போது எனக்கு புரிந்திருக்கவில்லை. 

விபத்தொன்றில் சிக்கி என் தந்தை மருத்துவமனையில் நினைவற்றுக் கிடந்த நாளொன்றில் என் தாத்தம்மா இறந்து போனார். தனது ஒரே மகனுக்கு நேர்ந்துவிட்ட அந்தக் கொடுமையை அறியாமலே அவர் இறந்துபோனார். தனது தாய் இறந்துபோனது தெரியாமலே எனது தந்தை நினைவிழந்துக் கிடந்தார். தற்செயலான இந்த இரு நிகழ்வுகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பாவம் புண்ணியம் வாங்கிவந்த வரம் என்பதாக சாவு வீடு புலம்பித்தள்ளியது. ஒத்த மகனைப் பெத்தும் ஒதவாமப் போச்சே என்பதுதான் சோகத்தின் மையமாயிருந்தது. அதாவது கொள்ளிக்குடம் உடைப்பதற்கென்றே இருந்த பிள்ளை ஆஸ்பத்திரியில் கிடக்கிறதே என்பதுதான். சரி,  மகன் இல்லாவிட்டாலென்ன மகள் என்ற முறையில் என் தாய்க்கு நான் கொள்ளிக்கடம் உடைக்கிறேன் என்று என் அத்தையும் கோரவில்லை. ‘வழக்கத்தில்’ இல்லாத ஒன்றை கேட்க வேண்டுமென்று அவருக்கு தோன்றாமல் போனதில் வியப்பில்லை. ஆனால் மகள் கொள்ளிவைத்தால் பிணம் ஏற்காதா என்கிற கேள்வியை ஆவேசமாக எழுப்பிய கொள்ளிவை என்கிற நாடகத்தைப் பார்த்து கைதட்டிய நான் ஏன் அமைதியாயிருந்தேன்? அந்தக் கேள்வியை வெறுமனே நாடக வசனமாக கேட்டு கைதட்டி அங்கேயே மறந்துவிட்டிருந்தேனா? மிக முக்கியமான அந்தக் கேள்வியை வாழ்க்கைக்கானதாக நான் உள்வாங்கிக்கொள்ளவேயில்லையா? கலை இலக்கியத்தையும் வாழ்வையும் தொடர்புபடுத்திக்கொள்ள தெரியவில்லையா எனக்கு? அல்லது என் வசதியை முன்னிட்டு பயன்படுத்துவது / மறந்துவிட்டவன் போலிருப்பது என்று சந்தர்ப்பவாதியாக இருக்கிறேனா? 

‘கொள்ளிக்குடம்’ உடைப்பதும் கொள்ளிவைப்பதும் ஆண்கள் செய்வதுதானே வழக்கம் என்று நான் உட்பட எல்லோருமே இயல்பாக நம்பியதால் நாங்கள் யாரும் என் அத்தையிடம் கோரவுமில்லை. கடைசியில் என் அத்தை உட்பட எல்லோரும் சேர்ந்து, என் தந்தையின் நிலையிலிருந்து கொள்ளிக்குடம் உடைக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து வழக்கத்தை காப்பாற்றினார்கள்.

மீசையை மழி, மொட்டையடி போன்ற வற்புறுத்தல்களிலிருந்து தப்பிக்க இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத நான் செய்து என்ன ஆகப்போகிறது என்று கூறி மறுத்துவிட முடிந்த என்னால், கொள்ளிக்குடம் உடைப்பதை மறுக்க ஒரு பொய்யைக்கூட சொல்ல முடியாமல் போனது ஏன்? எரிக்கிற சாதிகள் கொள்ளி வைப்பது, புதைக்கிற சாதிகள் கொள்ளிக்குடம் உடைப்பது என்கிற சாதிசார்ந்த சடங்கை செய்துதான் ஆகவேண்டுமா என்கிற கேள்வி எனக்கு எழாமல் போனது மட்டுமல்ல, கொள்ளிக்குடம் உடைக்கும் சடங்கை எனது அத்தையிடம் ஒப்படைக்காதன் மூலம் ஒரு ஆணாகவும் நான் செயல் பட்டிருக்கிறேன். வழக்கத்தைக் காப்பாற்றுவது என்பதன் பெயரால் ஆண் என்கிற எனது அதிகாரத்தைத்தான் இங்கு நான் காப்பாற்றியிருக்கிறேன். அனாசினைப்போலவே ஆண்குறியும் ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் செயல்படுவதற்கு வழக்கங்களும் சடங்குகளும் வழியமைத்துத் தருமென்றால் என் உடம்பில் ஒரு உறுப்பாக இருக்கவேண்டிய அதனைத்தான் என் உடம்பாகவே எப்போதும் காட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதுதானே பொருள்? துக்கம் கவிந்த ஒரு சாவு வீட்டிலும்கூட  ஆண் என்கிற பெயரில் ஆண்குறியாகவே சுற்றிக்கொண்டிருப்பதான அவமானகரமான உணர்விலிருந்து விடுபட வேண்டுமானால் அப்படியான சடங்குளையும் வழக்கங்களையும்  நான் கைவிட்டுத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

ஆனால் அடுத்துவந்த என் தந்தையின் மரணம் என்னை வேறுவகையான சங்கடங்களுக்குள் தள்ளியது. தனக்கு வந்திருந்த வாய்ப்புற்று நோயிலிருந்து திண்டுக்கல் சித்தமருத்துவர் கோபாலகிருஷ்ணனின் சிகிச்சையினால் மீண்டு பத்தாண்டுகாலம் முழுநலத்தோடு இருந்த அவர் 2007 செப்டம்பரில் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார். நானும் என் கடைசித்தங்கையும் எங்களது சக்திக்கு மீறி செலவழித்து அவரை மீட்டுக்கொண்டு வந்தோம். தான் மருத்துவமனையில் இருந்த காலத்தில் தன் தாய் இறந்துவிட்டிருந்ததை அவராகவே ஒருவாறு யூகித்துக்கொண்டு அதுபற்றி ஒருவார்த்தையும் எங்களோடு பேசுவதை தவிர்த்துவந்தார்.  உடல், மன இயலாமைகளிலிருந்து தேறி அவராகவே நடமாடத் தொடங்கியபோது எங்கள் குடும்பமும் மணியண்ணன், தங்கவேலு, அன்புமணி, சுதாகரன் போன்ற தோழர்களும் அடைந்த மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க முடியாது. அவர் மீண்டு வரமாட்டார் என்ற நினைப்பில் எங்களது நிலத்தை விலைக்கு கேட்டவர்கள்கூட வாயடைத்துப் போயிருந்தார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சியின் அதிகபட்ச ஆயுட்காலம் இரண்டே வருடங்கள்தான். விபத்தின் நோவுகளிலிருந்து மீள்வதற்காக உள்ளுக்குள் ஏற்றப்பட்ட அல்லோபதி மருந்துகள் அவருக்கு குணமாகியிருந்த அல்லது அடங்கியிருந்த வாய்ப்புற்றை மீண்டும் கிளறிவிட்டு ஆட்டம் காட்டியது. என் வாழ்நாளில் நான் கடும் உளவியல் சிக்கலுக்கு ஆட்பட்டு பலவீனமடைந்திருந்த காலம் அதுவாகத்தான் இருக்க முடியும். அவரது முடிவை ஒருவாறு யூகித்துக் கொண்ட எனது குடும்பத்தவர்கள் எல்லோரும் அவருக்கு அருகிலேயே இருந்தார்கள். நீண்ட காலமாக வீட்டை விட்டுப் பிரிந்திருந்த எனது தம்பியொருவனும்கூட தனது மனவி மக்களோடு வந்துவிட்டிருந்தான்.

மனிதவாழ்வில் மரணம் என்பதை தவிர்க்க முடியாது, அது இயற்கையான ஒரு நிகழ்வுப்போக்கு என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்ட அறிவுப்பூர்வமான விளக்கங்களை நானே தோற்கடித்துக்கொண்டிருந்தேன். இதுவெல்லாம் அறிவுப் பூர்வமான விளக்கங்கள்தானா என்றும் கூட கேட்டுகொண்டேன். மனிதவாழ்வை நிலையற்றது என்று நிறுவுவதற்காக எழுதப் பட்டதில் நான் படித்ததெல்லாம் நினைவுக்கு வந்து குழப்பியடித்தன. இறக்கப்போவது என் தந்தை என்பதால் துக்கத்தின் வலிய பிடிக்குள் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்தேன். தற்செயலான ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவ்வெறு நிகழ்வுகளையும் வலிந்து இணைத்தும் தொகுத்தும் தொடர்புபடுத்தி சஞ்சலமடைந்தேன். அவரது உயிர்பிரிவதை நான் பார்த்துவிடக் கூடாது என்று உண்மையிலேயே பயந்தேன். எங்காவது என்னை போக்கடித்துக் கொண்டு தப்பிவிட முடியாதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான்  ஷோபா சக்தி, லீனா மணிமேகலை, சந்திரா, சந்திராவின் துணைவர் சுந்தர் ஆகியோர் அங்கு வந்து சேர்ந்தார்கள். எங்களது குடும்பத்தை தேற்றும் வழியறியாது திணறிய அவர்கள் கிளம்பிய போது நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ஏர்வாடிக்குப் போய் அங்கிருந்து அன்றிரவே ஒசூருக்குப் போய்விட்டேன். அதிகாலையில் ஊரிலிருந்து அவரது மரணச்செய்தி வந்த பின்புதான் நான் இயல்புக்குத் திரும்பினேன். வாதையால் அரற்றும் என் தந்தையை இனி காண வேண்டியதில்லை என்கிற நினைப்பே ஆறுதலாயிருந்தது. பயணம் போகிற ஒருவரை வழியனுப்பி வைக்கும் லகுவான மனநிலையோடு தான் ஊருக்குப் புறப்பட்டேன். ஆனால் வீட்டுக்குள் நுழைந்த அந்தக் கணத்திலேயே எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. என் குடும்பத்துப்பெண்கள் என்னை கட்டிக்கொண்டு பெருங் குரலெடுத்து அழுகிறார்கள். திரண்டுவரும் கண்ணீரை எனக்குள் நானே சுண்டிவிட்டு திருப்பிவிடுவதைப்போல அழுகையை கட்டுப்படுத்திப் பார்த்துவிட்டு முடியாமல் உடைகிறேன். இதோ வாய்விட்டு கதறி அழப்போகிறேன் என்கிற தருணத்தில் யாரோ சொல்கிறார்கள்- நீயும் அழுதுக்கிட்டிருந்தா எப்படி....? யார் அவர்களுக்கு தைரியம் சொல்வது? பொம்பளைங்களோடு சேர்ந்து நீயும் அழுதுக்கிட்டிருந்தா ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கிறது யாரு?...’’.

இங்கு ‘நீயும்’ என்கிற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே நான் ஆண் என்கிற நிலைக்குத் திரும்பி விடுகிறேன். அதனாலேயே ‘பொம்பளை’களைப் போல அழுது புரளாமல் அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடுகிறேன். துக்கங்களை வென்றடக்கும் வல்லமை கொண்டவன் என்று நிரூபிக்கும் பிரயாசையில் என் தந்தைக்கான கண்ணீரை உகுக்காமல் சாவுவீட்டை நிர்வகிக்கிற ஒரு ஆணாக மாறிப்போகிறேன்.

சாதி மத வழக்கங்களின்றி எளிய முறையில் தன்னை அடக்கம் செய்யுமாறு என் தந்தை தனது உயிலில் குறிப்பிட்டிருந்தார். என் தாத்தம்மா சாவில் ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இந்த வாசகங்களை சேர்க்குமாறு நான் கேட்டுகொண்டதன் பேரிலேயே அவர் அப்படியான வாசகங்களை சேர்த்திருந்தார். ஆனால் அங்கிருந்த சூழல் அதை வலியுறுத்துவதற்கானதாய் இல்லை. எனவே, தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு சம்பிரதாயமென்று தாய்மாமன் வீட்டாரும் மச்சானும் கொடுத்த புதுவேட்டிகளை உடுத்திக் கொண்டது, கையில் திணிக்கப்பட்ட நெய்ப்பந்தத்தை கொஞ்சநேரம் பிடித்துக் கொண்டிருந்தது என்கிற ஒன்றிரண்டைத் தவிர  வேறு சடங்குகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொண்டேன். தாத்தம்மா சாவில் நான் முடியிறக்கிக் கொள்ளாததால்தான் இப்படி அடுத்து ஒரு சாவு உடனே வந்துவிட்டதென்று என் அக்கா கூறியதைக் கேட்டு அந்த நேரத்திலும் சிரித்தேன். ஆனால் விசயம் அத்தோடு முடியவில்லை. உனக்கு பிடிக்காதுதான், அதுக்காக சடங்கு சம்பிரதாயத்தை விட முடியுமா என்று ஆளாளுக்கு எதெதையோ செய்து கொண்டுதானிருந்தார்கள். சாவு வீட்டில் யார் எந்த பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்று சட்டென பிடிபடுவதில்லை. என் அம்மாவின் ஊரைச் சேர்ந்தவர்களும் என் அப்பாவின் ஊரைச் சேர்ந்தவர்களும் நாங்கள் பெயர்ந்து குடியேறிய சிற்றூர்க் காரர்களும் ஆளாளுக்கு தாங்கள் சொல்வதுதான் சரி என்று ஏதேதோ சடங்குகளை வலியுறுத்தி சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். நான் சொல்லி யார் கேட்கப்போகிறீர்கள் என்று  நானும் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடக்கத்திற்குப் பிறகும் சடங்குகள் தொடர்ந்தன. ஒரு அரசியல் நிலைபாட்டிற்காக நான் சடங்குகளை மறுக்கிறேன் என்று அவர்களுக்கு புரியவைப்பதற்கு பதிலாக பிணங்கிக் கொண்டிருக்கிற ஒரு பிடிவாதக்காரனைப்போல தனிமைப் பட்டிருந்தேன். நீர்த்துறை ஒன்றுக்குப் போய் தலைமுழுகி ‘தீட்டுக்கழித்துவிட்டு’ வரும்வரை நான் வீட்டுக்கு காவலிருந்தேன். காவலிருந்தது வீட்டுக்கா தீட்டுக்கா என்கிற கேள்வி எதுகை மோனை சம்பந்தப்பட்டதல்ல என்பது புரிந்தது. நிலம், பாகப்பிரிவினை விசயத்தில் என் தந்தையின் உயில் வாசகம் வரிக்குவரி அமலாக வேண்டும் என்று விரும்புகிற எங்கள் குடும்பத்தார் ‘சாதி மத வழக்கங்களின்றி எளிய முறையில் தன்னை அடக்கம் செய்யுமாறு’ அவர் குறிப்பிட்டிருந்ததை மதிக்காமல் போனதற்கு காரணம் அவரை உதாசீனம் செய்ய வேண்டுமென்பதல்ல.  அவர் ஆத்மா சாந்தியடைவதற்கு செய்ய வேண்டியவை என்கிற உள்ளார்ந்த நம்பிக்கையிலேயே அவர்கள் எல்லாச் சடங்குகளையும் செய்தார்கள். ஆனால் ஆத்மா/ சாந்தி/ இம்மை மறுமை/ தீட்டு தோஷம்/ பற்றியெல்லாம் எதிர்மறையாக பேசிக்கொண்டிருக்கும் நான் மௌனமாய் இருந்ததேன்? அவரது அடக்கம் நிகழ்த்தப்பட வேண்டிய விதம் பற்றி என் குடும்பத்தாரிடம் இதற்குமுன் எப்போதும் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்துவிட்ட நான், இழவு வீட்டில் வந்து திடுமென நாத்திகம்/ முற்போக்கு/ பகுத்தறிவு என்றெல்லாம் பேசுவது எந்தளவிற்கு சரியானது என்ற கேள்விதான் என்னை மறித்து நிறுத்திவிட்டிருந்தது. அங்கு நடந்துகொண்டிருந்த சடங்குகளை தடுப்பதற்கான தார்மீக பலத்தை நான் இழந்ததும்கூட இவ்விதமாகத்தான். நான் நம்புகிற கருத்துகளை நடைமுறைப் படுத்திப் பார்க்கும் களமாக என் வீட்டை/ குடும்பத்தை/ சுற்றத்தை  மாற்றிக்கொள்ள நான் எந்த வேலையையும் துவக்காமல் நான் மட்டுமே முற்போக்காளன் என்று ஜம்படித்துக் கொண்டிருந்ததும் புரிந்தது.

வீட்டுவாசலில் தீ மூட்டிவிடுவது, பிணைத்தின் தலைமாட்டில் தேங்காய் உடைத்துவைத்து இரண்டு வாழைப்பழங்களில் ஊதுபத்தி கொளுத்தி வைப்பது, காமாட்சி விளக்கை எரிய விடுவது என்று எந்தவொரு சடங்கும் மிச்சமின்றி அங்கிருந்தது. என்வீட்டுச் இழவிலும் “ஏகாலியைக் கூப்பிடு” என்கிற குரல் கேட்ட போது அதை இன்னொரு மனிதருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக உணர முடியாத அளவுக்கு என் தோல் தடித்திருந்தது. சாதிரீதியான வேலைப்பிரிவினையை மறுநிகழ்வுப் படுத்துகிற சங்கு ஊதுவது - சேகண்டி தட்டுவது போன்ற சடங்குகளின்றி ஒரு இழவுவீட்டுக்கான சித்திரம் நமக்கு கிடைப்பதில்லையோ? மேளம் வைப்பதை தவிர்த்து விட்டிருந்தாலும், கோடி, சீர் கொண்டுவருகிற மாமன் மச்சான் வீட்டார் அவர்களாகவே ஆளமர்த்தி தப்படித்துக்கொண்டு வந்ததை தடுக்க முடியாதவனாக இருந்தேன். உங்க வீட்டு சாவுக்கு நாங்க ஏண்டா பறையடிக்கணும்... வேணும்னா மிருதங்கம் வாசியுங்கடா... என்று மேடைதோறும் நரம்பு புடைக்க முழங்கிய என்னைக் குறித்து நானே வெட்கப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது? 
கடவுள்/ சாதி/ மதங்களை மறுத்தும் அவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடியும் மடிகிற ஆளுமைகளை சாதி/மத வழக்கப்படி அடக்கம் செய்வதைக் காணும்போது அவர்களை இதை விடவும் கடுமையாக அவமதிக்க முடியாது என்று நான் வருத்தப்படுவதுண்டு. ஒருவேளை, நான் செய்த தவறையே அவர்களும் செய்ததற்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவும்கூட இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.

2.
சாதியையும் அதுவழியான  சடங்குகளையும் அப்படியே கடைபிடிப்பது, சாதியை வைத்துக் கொண்டு சடங்குகளை மட்டும் மறுப்பது,  சாதியை மீறிவிட்டு சடங்குகளை இறுகப் பிடித்திருப்பது, எல்லா சடங்குகளையும் மறுத்துவிட்டு தாலியை மட்டும் பற்றிப்பிடித்திருப்பது என்று திருமணங்கள் பல தினுசுகளாக நடைபெறுகின்றன. சாதிப்பெரியவர்களை சமூகப் பெரியவர்கள் என்ற பொய்யான  அடைமொழியோடு அழைத்து சடங்குகளை செய்வது, மந்திரம் ஓதி அக்கினி சுற்றி அருந்ததி பார்த்திட பார்ப்பனச்சடங்குகளை நிகழ்த்துவது என்று சடங்குகள் இரண்டாகப் பிரிகின்றன. 

கல்யாணம் என்றாலே முதலில் வருவது தாலிதானே? அந்தத்தாலியை குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட அளவிலும் வடிவிலும்தான் கட்ட வேண்டும் என்பதுதான் நடப்புவிதி. நானும் மீனாவும் எங்களது திருமணத்தில் மற்றச் சடங்குகள் எல்லாவற்றையும் எளிதாக கடந்துவிட்டோம். ஆனால் தாலியைக் கடக்க முடியவில்லை. நாங்களெல்லாம் தாலி கட்டி குடும்பம் நடத்திக்கொண்டு கம்யூனிஸ்ட்டாகவும் இல்லையா என்று மூத்தத்தோழர்கள் சிலர் கேள்வியெழுப்பி என்னை மடக்கினார்கள். கம்யூனிஸ்ட்டாக இருக்கிறீர்களா கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறீர்களா என்றொரு எதிர்க்கேள்வி போட்டு அவர்களை மடக்கவேண்டுமென்று தோன்றவில்லை அப்போது. கட்சி, தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னிலையில் தாலியுடன் எங்கள் திருமணம் முடிந்தது. அடுத்துவந்த சிலமாதங்களில் தாலி பிரித்து கோர்க்கவேண்டும் என்றார்கள். ஏன் கட்டணும், எதற்கு அதை பிரிக்கணும், மறுபடி எதற்கு கோர்க்கணும் என்றெல்லாம் கேள்வி கேட்டிருப்பேன் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதானில்லை.  அவர்களிடமிருந்த மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டுவதற்கு நான் மேற்கொள்ளும் முயற்சிகள் குதர்க்கங்களாகவும் விதண்டாவாதமாகவும் தப்பர்த்தம் கொள்ளப் பட்டுவிடுமோ என்கிற தயக்கம் என்னை தடுத்தவிட்டத. அப்புறமென்ன, தலை தீபாவளி, தலைப் பொங்கல், தலைஆடி என்று மாமியார் வீட்டுக்கு போய்க்கொண்டேயிருந்தேன். இந்தப் பண்டிகைகள் பற்றி அயோத்திதாசரும் பெரியாரும் சொன்னதெல்லாம் நினைவிலிருந்தாலும்  அதை எல்லாம் படிப்பாகத்தான் கருதியிருந்தேனே தவிர வாழ்வில் கடைபிடிப்பதற்கானவை என்று கருதவுமில்லை முயற்சிக்கவுமில்லை. இந்தப்பண்டிகைகள் சார்ந்த சடங்குகளை திருப்தியற்ற முகபாவத்துடன் வேண்டாவெறுப்பாக செய்வதுபோல செய்தேன். இந்தச்சடங்குகள் ஒரு வட்டம் முடிவதற்குள் கருத்தரித்துவிட்டிருந்தால் அதையொட்டின சடங்குகளையும் செய்து தானிருப்பேன் போல என்று இப்போது நினைத்துக்கொள்கிறேன். (தங்கக்கொடி ஒன்றை எங்களால் வாங்க முடிந்தபோது தழையத்தழைய தொங்கிக்கொண்டிருந்த அந்த தாலிக்கயிறு போயே போச்சு... it’s gone...  ) 

எங்கள் மகள் தீட்சண்யா ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோது சலூன் வைத்திருந்த நண்பர் ஒருவரை வீட்டுக்கே வரவழைத்து மொட்டையடித்துவிடுமாறு வேண்டினோம். தாய்மாமன் மடியில் வைத்து முடியெடுப்பதுதானே வழக்கம் என்று அவர் தயங்கினார். பரவாயில்லை அப்பன் மடியில் கிடத்தினாலும் ரேஷர் மழிக்கும்தானே என்று அவரை ஒத்துக்கொள்ள வைப்பதற்குள் பெரும்பாடாகி விட்டது. கிளினிக் ஒன்றுக்கு தூக்கிப்போய் காதும் குத்திவிட்டோம். காதணிவிழா என்று ஒன்றை நடத்தாதது குறித்து எங்களிருவரின் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கடுக்கண், தோடு என்று தாய்மாமனை ஏமாற்றி தங்கம் பிடுங்குகிற வேலைகளை நாங்கள் ஏன் செய்ய வேண்டும் என்று  கேட்டு அவர்களை வாயடைக்க வைத்து விட்டேன். சடங்குகள் எதுவும் இல்லாமல் மொட்டையடித்து காதுகுத்திவிட்டோம் என்று இறுமாந்திருந்த ஒருநாளில் என்மகள் கேட்டாள்: எனக்கு ஏன் காது குத்தினீர்கள்  என்று. அந்த கணத்தில்தான் உறைத்தது அதுவே ஒரு சடங்குதான் என்று.

குறிப்பிட்ட வயதை அவள் கடந்ததும், பெரிய மனுசியாகிட்டாளா?  வயசுக்கு வந்துட்டாளா, ருதுவாகி விட்டாளா, மேஜராகிவிட்டாளா என்று ஒருபொருட் குறித்த பன்மொழிக்கேள்விகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவளது வயதையொத்த ஆண்குழந்தை உள்ள பெற்றோர்களிடம் இவர்கள் ஏன் இப்படியான கேள்வி எதையும் எழுப்புவதில்லை? அவனது உள்ளாடையில் கறை எதுவும் இருக்கிறதா என்று தினமும் ஆராய்ச்சி செய்வார்களா? இயல்பாக ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை எல்லோருடனும் பகிர்ந்துகொண்டுதானாக வேண்டும் என்றில்லை. திரட்டி/ மஞ்சள் நீராட்டுவிழா நடத்தினால் தான் தீட்டு கழியும் என்று எங்களிடம் பலரும் திரும்பத்திரும்பச் சொன்னார்கள். பூப்பு/ மாதவிலக்கு உதிரத்தை வளமையின் குறியீடாக கருதி தங்களது வேளாண் நிலங்களில் தெளித்த இந்த மண்ணின் பாரம்பரியத்தைப் புறந்தள்ளி அதை தீட்டாக தோஷமாக பார்த்து கழிப்புச் சடங்கு நடத்தும் போக்கு எப்போது உருவானது? தீட்டு/ தோஷம் என்கிற கருத்தாங்களை உருவாக்கி , நிவர்த்தனச் சடங்குகளை நடத்தி புண்ணியார்த்தனம் செய்துவிக்கும் எந்தப் பார்ப்பனராவது தம் வீட்டுப் பெண்களுக்கு திரட்டி நடத்தியிருக்கிறாரா என்று யோசிக்கவில்லையெனில் அப்பறமென்ன பகுத்தறிவு நாத்திகம் முற்போக்கு...?

இதேபோன்ற அபத்தங்களோடுதான் புதுவீடு புகுவதும் நடக்கிறது. நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் புழங்குவதற்கான விஸ்தாரமும் கொண்டதாக வீட்டைக் கட்டுவதற்கு பதிலாக கடைக்கால் எடுப்பதிலிருந்தே சடங்குகள் தொடங்கிவிடுவதைப் பார்க்கிறோம். வடக்கு/ கிழக்கு பார்த்த வாசல் என்பதில் தொடங்கி கழிப்பறை வரை எல்லாவற்றிலும் வாஸ்து பார்ப்பதும் வாஸ்து குறைபாடிருப்பதாக சொல்லப்படும்போது பரிகாரங்கள் செய்வதுமான முறைகேடுகள் இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கின்றன. மனிதர்களுக்குள் ஏற்படுத்திய உயர்வு தாழ்வு பேதத்தை அவர்கள் வசிக்கும் இடத்திற்கும் விரித்தவர்கள் இப்போது ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இந்த பேதத்தை நிறுவுகிறார்கள். இப்படி கட்டப்படுகிற வீட்டை சும்மா திறந்துகொண்டு போய் குடியேறிவிட முடியுமா?  அதற்கென்று தனித்த சாஸ்திர சம்பிரதாயங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.   

வீட்டுக்கடன்களை வழங்கும் முறைகள் சற்றே எளிமையாக்கப்பட்டுள்ள இந்தநாட்களில் குடி புகுவதற்கான சடங்குகள் கடுமையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது கட்டுமானச்செலவின் ஒரு பகுதியாகவே இந்தக் குடியேறும் செலவும் மாற்றப்பட்டுள்ளது. குடியேறுவதில் என்ன செலவு? அவ்வளவும் சடங்குகளுக்கானவை. சடங்குகள் அவ்வளவும் பார்ப்பனர்களுக்கானவை. கிரஹப்பிரவேஷம் என்று அவர்கள் சொல்வது உண்மைதான். கிரகம் விட்டு கிரகம் போவதற்காகும் செலவளவுக்கு தட்சணை கோருகிறார்கள். பார்ப்பனர் வந்து நடுவீட்டில் ஹோமம் வளர்த்து மாட்டு மூத்திரத்தை தெளித்தால்தான் புதுவீடு விளங்கும் என்கிற நம்பிக்கை நீக்கமற பெருகி வருகிறது. பார்த்தால் தீட்டு தொட்டால் தோஷம் என்று இவர்களையெல்லாம் பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்திருந்தக் காலத்தில்  இவர்கள் எந்த மூத்திரத்தைப் பிடித்து யார்மீது தெளித்தார்கள் அல்லது குடித்தார்கள்? ஊர்க்கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அதிகாலை மூன்றிலிருந்து ஐந்து மணிக்குள்ளாக புகைமூட்டம் போட்டு புளுகுகளை ஓதி புண்ணியார்த்தனத்தை முடித்துக் கொண்டு பிறகு ஏழெட்டு மணிக்கு நம்மைக் கூப்பிட்டு வீட்டை சுற்றிக்காட்டுகிறார்கள். இந்த மோசடிக்கும் முறைகேட்டுக்கும் பிறகு அந்த வீட்டில் மார்க்ஸோட மூலதனம் இருந்தால் என்ன மனுஸ்மிருதி இருந்தால் என்ன? 

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, பொருள்முதல்வாதம், இயக்கவியல், மார்க்சீய மெய்ஞானம், சமூக மாற்றம், புதுமை போற்றுதல் என்றெல்லாம் தீவிர அரசியல் பேசிக்கொண்டு செயல்படுகிறவர்கள் கூட தங்கள் குடும்ப நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை ஏதாவதொரு கடவுள் உருவத்துடன் அச்சடிப்பதைக் காண முடிகிறது. வீட்டிற்குள் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிற கடவுள்தான் அவர்களது பத்திரிகையிலும் இடம்பெற முடியும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. இம்மாதிரியான அழைப்பிதழ்களைப் புரட்டினால் அவர்கள் எந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான குறிப்புகளை தந்திரமாக இடம்பெறச் செய்திருப்பதை காண முடியும். இதையும் தாண்டி சுயசாதிப் பெருமிதத்தைக்கூட சூசகமாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் பல தினுசுகளில் அழைப்பிதழ்களை தயாரித்துக் கொண்டு ஆளுக்கேற்றாற்போல கொடுப்பதும் நடக்கிறது. பலபட்டறைச் சாதியினரும் கூடும் பொதுநிகழ்வுகளில் பட்டு உடுத்திக் கொண்டால் தீட்டு ஏற்படாது என்கிற பார்ப்பன நம்பிக்கை இன்று பலரையும் பிடித்தாட்டுகிறது. தீட்டுக்குரியவர்கள் என்று பார்ப்பனர்களால் பழித்தொதுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள் யார் தொட்டு தீட்டாகிவிடுவோம் என்று அஞ்சி பட்டு உடுத்துகிறார்கள்?

மார்க்சீயம்/ அம்பேத்கரியம்/ பெரியாரியத்தில் நம்பிக்கையுள்ளதாய் கூறிக்கொள்கிறவர்களில் பலரும்கூட கொள்கைவழி உறுதிபட நிற்காமல் ஊசலாட்டம் கொண்டிருப்பதால்தான் பிறவழி பண்பாட்டுக்கும் அதன் சடங்குகளுக்கும் எளிதில் இரையாகிப்போகிறோம். அதே வேளையில் நமது முற்போக்கு முகத்தை இழக்காமல் இருப்பதற்காக நடிக்கவும் செய்கிறோம். உங்களது வீட்டிலும் கூட தீட்டு/ தோஷம் பார்க்கிற போக்கும் பார்ப்பன பரிகாரச்சடங்குகளும் நடப்பது ஏனென்று யாரேனும் கேட்டால் குடும்பத்திலிருக்கிற பெண்களை கைகாட்டி தப்பிக்கப் பார்க்கிறோம். அதாவது நாம் முற்போக்கு நம் வீட்டிலிருக்கிற பெண்கள் எல்லோரும் பிற்போக்கு என்று நிறுவப்பார்க்கிறோம். நமது இந்த இரட்டைத்தன்மையை அம்பலப்படுத்துமளவுக்கு பொதுவெளியில் பெண்களின் பலம் குறைந்திருப்பதை சாதகமாக்கிக் கொள்கிறோம். அல்லது ஆண்களாகவே மலிந்திருப்பதால் ஒருவரையொருவர் காட்டிக்கொள்ளாமல் பம்மிக் கொள்கிறோம்.

உண்மையில் அப்படியொன்றும் பெண்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்குமளவுக்கு நாம் சமத்துவ விரும்பிகளுமல்ல என்பதை இவ்விடத்தில் சொல்லித்தானாக வேண்டும். புகை/ மது/ சூதாட்டம் போன்ற பழக்கங்களை நமது பெண்களின் விருப்பத்திற்காகவா நாம் கைக்கொண்டிருக்கிறோம்? அவர்களது விருப்பங்களுக்கு மாறாக இருப்பதில்தான் நாம் ஆண் என்கிற பிம்பத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதையும்கூட மறைக்க வேண்டியதில்லை. உங்களைப் போலவே பொதுவெளியில் இயங்க வேண்டும், போராட்ட இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டும், அதற்காக நண்பர்களோடும் தோழர்களோடும் இரவுபகல் பாராமல் அலையவேண்டும், விரும்பியதை வாங்கவேண்டும், விரும்பியதை துய்க்கவேண்டும் என்றெல்லாம் நம்வீட்டுப் பெண்கள் நாளைக்கே கேட்டுவிடுவார்களானால் அதையெல்லாம் எந்த விகல்பமுமில்லாமல் நிறைவேற்றித் தருவதற்கான மனநிலையோடுதான் நாம் இருக்கிறோமா?

வெளியே வேலை பார்த்து கிழித்தது போதும், முதலில் வீட்டைப் பாருங்கள் என்பதல்ல என்வாதம். ஏற்பில்லாவிட்டாலும் நமது கருத்தியல்களை நமது குடும்பத்தினர்மீது திணித்துவிடவேண்டும் என்பதும் என் பரிந்துரையல்ல. நமது பண்பாட்டின் படியாகத்தான் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை உலகம் அறிகிறது. அல்லது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைக் கொண்டு நாம் முன்வைக்கும் பண்பாட்டை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது உலகம். கலகத்தன்மையுடைய, புரட்சிகரமான, ஒடுக்குதலற்ற, விடுதலைக்கூறுகளைக் கொண்ட ஒரு பண்பாட்டை ஒழுகி நாம் வாழும்போதுதான் நாம் முன்வைக்கும் அரசியலுக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைக்கிறது. வாழ்வென்பது ஊர்வலத்தில் தொடங்கி மேடையில் முடிவதல்ல. நமது வாழ்வின் பெரும்பகுதி குடும்பத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே, நம் கருத்தியல் பற்றிய உரையாடல் நடக்குமிடமாக, புரிந்துணர்வுக்காக இடையறாது போராடுமிடமாக, சாத்தியமுள்ள மாற்று முயற்சிகளை சோதித்துப்பார்க்கும் களங்களில் ஒன்றாக நமது குடும்பங்களையும்  நாம் நடத்துவது தான் குறைந்தபட்ச நேர்மையாக இருக்கும். இந்த நேர்மை என்கிற ஒன்றை முன்மாதிரியாக கொண்டுதான் நம்மையும் நம் அமைப்புகளையும் உலகம் மதிப்பீடு செய்யப் போகிறது.

நவீன அறிவியல் தொழில்நுட்பம் எதையெல்லாம் உற்பத்தி செய்து சந்தையில் இறக்குகிறதோ அதையெல்லாம் உடனுக்குடனே வாங்கித் துய்ப்பதில் பொதுவாக நாம் எப்போதுமே ஆர்வம் காட்டிவருகிறோம். ஏனென்றால் அவ்வாறான நடவடிக்கைகளின் வழியாகத்தான் நாம் நம்மை ஒரு சமகாலத்தன்மைக்குரியவராக மேம்படுத்திக் கொள்வதாய் நம்புகிறோம். அதாவது மாறிவரும் காலத்திற்குள் நம்மை பொருத்திக்கொள்ள வேண்டும் அல்லது  காலத்தால் பின்தங்கிப்போய் விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம். ஆனால் சிந்தனைரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கிறோம். இந்த பின்தங்கிய மனநிலைகளை உருவாக்குவதில் சடங்குகள் வகிக்கும் பங்கை சரியாக மதிப்பிட்டு அதற்கெதிரான போராட்டத்தை தொடங்குவதற்கு தயங்குகிறோம்.

இயற்கையை வசியப்படுத்தவும் சாந்தப்படுத்தவும் “போலச் செய்வது” என்கிற முறையில் உருவான இயற்கையை நோக்கிய சடங்குகளை இன்று நாம் செய்துகொண்டிருக்கவில்லை. உயிர்கள், மனித குலம், பூமி, பிரபஞ்சம் ஆகியவற்றின் தோற்றத்தையும் மாற்றத்தையும் விளங்கிக்கொள்ள வாய்ப்பற்ற காலத்தில் நமது மூதாதைகள் இறப்பவர்களின் நினைவார்த்தமாக கடைபிடித்தச் சடங்குகளையும் இன்று நாம் செய்து கொண்டிருக்கவில்லை. நாம் இன்று செய்து கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவை அவரவர் சாதிக்குரியவை. சாதிக்குரிய இந்தச் சடங்குகளை மீறாமலே சாதியத்திற்கு எதிரானவர்களாக பீற்றிக்கொள்வது குறித்து நாம் வெட்கமற்று இருக்கிறோம். அதனால்தான் அம்பேத்கரிய / பெரியாரிய / மார்க்சீய அமைப்புகளின் தலைவர்களது பிணைத்தின் மீதும் கூட கட்சிக்கொடியும் சாதி / மதச் சின்னங்களும்  ஒருசேர இருப்பது நமக்கு உறுத்தலாகவே தெரிய மறுக்கிறது. அல்லது இதையெல்லாம் சகிப்புத்தன்மை என்று மகிமைப்படுத்த துணிகிறோம். அவர்களது மொத்த வாழ்க்கையையும் ஒரு சடங்கின் வழியாக சிறுமைப்படுத்துவதற்கு துணைபோகிற நமது மொன்னைத்தனத்திற்கு மறுபெயர் சகிப்புத்தன்மையா? தத்தமது சாதிக்குரிய சடங்குகளை செய்வதென்றான பிறகு, அதில் மதிப்புமிக்கதாய் கற்பிதம் செய்யப்பட்டுள்ள பார்ப்பனச் சடங்குகளுக்கு தாவிச்செல்வதை ஒரு வளர்ச்சிநிலையாக பார்க்குமளவுக்கு  கூருணர்ச்சி மங்கிவருகிறது.

சூழ்ந்து நெறிக்கும் பார்ப்பன கருத்தியலோடும் சடங்குகளோடும் செய்துகொள்கிற சமரசங்கள் கடைசியில் பார்ப்பனர்கள் மட்டுமே உயர்வானவர்கள் என்கிற கற்பிதத்தை வலுப்படுத்துகிறது. இந்தக் கற்பிதம்தான், செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற பலபட்டறைச்சாதியினரை பார்ப்பன இளைஞர்களின் விந்துக்காக வேட்டைநாய்களைப்போல அலைகிற கேவலத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.   

நாம் பேசும்/ இயங்கும் அரசியலும் நமது சொந்த வாழ்க்கையும் இடைவெளியின்றி அதுவே இதுவாக இதுவே அதுவாக ஊடும்பாவுமாய் ஒருமை கொண்டிருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை ஒரு சுயஒழுங்காக வளர்த்தெடுக்க நாம் சார்ந்துள்ள அரசியல் இயக்கங்கள் முன்வராத வரை இப்படியான அபத்தங்களை நாம் தொடரவே செய்வோம். எந்த அனாச்சாரங்களையும் செய்துவிட்டு நமது கலாச்சாரம் என்று சொல்லி தப்பிக்க பார்ப்போம், அல்லது விஞ்ஞானப்பூர்வமான வியாக்கியானங்களைச் சொல்லி சடங்குகளுக்குள் உழன்று கிடப்போம். பர்சனலையும் பாலிடிக்சையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று புதிய பொழிப்புரைகள் வழங்கவும்கூட தயாராகி விடுவோம். பர்சனல் என்பதே மிகப்பெரிய பாலிடிக்ஸ் தான் என்கிற உண்மையை ஏற்க மறுப்போம். ஆனால் காலம் நம்மிடம் இந்த சால்ஜாப்புகளை எதிர்பார்க்கவில்லை. பேதம் வளர்க்கிற, மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிற, ஒடுக்கும் தன்மைகொண்ட சடங்குகளை நிராகரிக்கிற உழைக்கும் வர்க்கப் பண்பாடு ஒன்றை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றித்தருமாறுதான் காலம் நம்மிடம் கோருகிறது. நாமொன்றும் உறைந்தச் செவியினரல்லவே?11 கருத்துகள்:

 1. அருமையான கட்டுரை.ஆனாலும் பல எதிர்க்கருத்துகள் எனக்கு உண்டு.சொன்னால் அதுவே ஒரு பதிவாகிவிடும்.

  சுருக்கமாக, பெரியாரும்,அம்பேத்காரும்,மார்க்சியரும் 'சடங்கு-மதம்-சம்பிரதாயம்' இந்த மூன்றையும் அகற்று என்று பேசினார்கள்.அவர்கள் வழிவந்தவர்களும் அதையே வழிமொழிந்தார்கள்.இந்த மூன்றையும் அகற்றினால் தனிமனிதவாழ்வில் (ஆணோ பெண்ணோ) ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படுகிறது. அதற்கு பதிலாக ஏதாவது ஒன்றை சிபாரிசு செய்தார்களா? நீங்கள் செய்கிறீர்களா?

  மதம்-சடங்கு-சம்பிரதாயம் இதோடு இணைந்த கலைகள்-இலக்கியம் எல்லா மனிதர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கிறது.பிள்ளைப்பருவம் இதன்மூலமே அடையாளம் காணப்படுகிறது.அடையாளமே இதன்மூலம் உருவாகிறது. இந்த மூன்றை ஒழித்தால் அதோடு இணைந்த கலை-இலக்கியம் என்னவாகும். அதற்கு பதில் ஏதாவது உண்டா?நான் ஏன் ஒழிக்கிறீர்கள் என்று கேட்கவில்லை. மாற்று எங்கே என்று கேட்கிறேன்

  ஊரோடு சேர்ந்து செய்த விழாக்கள் -அவைகளும் சம்பிரதாயங்களே...சடங்குகளே-காணாமல் போயின.அதனால் கலைகளும் மறைகின்றன.

  அதனால் தனிமனிதன் தன்னால் செய்யக்கூடிய சடங்குகளை விடவேமாட்டான். அது அடையாளம் அவனுக்கு-அவளுக்கு.

  சடங்குகளை ஒழித்தால் உருவாகிற வெற்றிடத்தை எதனால் நிரப்புவீர்கள் என்ற 'குறிப்பான' பேச்சு சடங்குகளை ஒழிக்க நினைப்பவர்களிடம் இல்லை.

  பொத்தாம் பொதுவான சமத்துவம்-சமநீதி-உண்மை என்ற பிரச்சாரம் மட்டுமே சொல்ல முடிகிறது. அந்த வெற்றிடம் இன்னொரு சடங்கு மூலமாகவே நிரப்பப்பட முடியும்.(சடங்கு என்றால் செயல்பாடு என்ற பொருளிலேயே கொள்கிறேன்.அதையே வழிவழியாகச் செய்தால் சம்பிரதாயம்) ஒன்றை ஒழித்தாகவேண்டும் எனில் அது உருவாக்குகிற வெற்றிடம் பற்றி முதலில் சிந்தனை செய்யவேண்டியதாகிறது.

  அப்படியானால் ஒரு செயல்பாட்டை ஒழிக்க இன்னொரு செயல்பாடா? இன்னொரு சடங்கா என்றால் வேறு வழியில்லை.கருத்தை கருத்தால் வெல்லலாம். செயல்பாட்டை கருத்தால் ஒழித்துவிடவே முடியாது.என்ன செய்தாலும் சரி!அது இன்னொரு செயல்பாட்டை கொண்டுவரும். அது இது போலவே இருக்கும்.மறுபடி ஒழிப்பு பிரச்சாரத்தை ஆரம்பிக்கவேண்டியதுதான்.

  உங்கள் பெண் என்றாவது ஒருநாள் சட்டென்று வாழ்வின் அழுத்தம் தாங்காமல் சடங்குகளை நாடிப் போகமாட்டாள் என்ற உத்தரவாதம் தரவே முடியாது. ஆக,வெற்றிடம் நிரப்ப என்ன செய்தீர்கள் என்றே நான் திராவிட இயக்கத்தினரையும் மார்க்சியரையும் கேட்கிறேன். மனவெற்றிடம் நிரப்பப்பட்டே ஆக வேண்டும்.

  இனி வரும்காலத்தில் விவசாயம் இயந்திரமயமாக்கப்படும்.பத்துபேர் போதும் இயந்திரங்களோடு சேர்ந்து பத்து லட்சம் பேருக்கு உணவு உற்பத்தி செய்ய.மற்ற தொழில் துறையிலும் அப்படித்தான். (இந்த சூழ்நிலையில் வேலை வாய்ப்பு,வருவாய் பகிர்ந்தளிப்பு என்ற பிரச்னைகள் எல்லாம் உண்டு) நான் சொல்வது தனிமனிதனுக்கு அதிக நேரம் கிடைக்கும்.மிக அதிக நேரம் கிடைக்கும். இதை ஒன்று 'கேளிக்கை'யில் செலவிடுவான். இல்லை 'சடங்கு சம்பிரதாயத்தில்' செலவிடுவான். ஆக இது அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. படிப்பு ஜாதியை ஒழிக்க உதவவில்லை. இன்றைய தலைமுறை எது பயன் அளிக்குமோ அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற கற்றுக் கொடுக்கிறது கல்வி. அந்த கல்வியைத்தான் நாம் அளித்துக் கொண்டு வருகிறோம்.

  ஜாதி நமக்கு பயன்படும் எனில் அதையும் பயன்படுத்திக் கொள்வோம் என்ற மனநிலை உள்ளது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது.

  ஜாதி சங்கங்களின் கூட்டங்களைப் பாருங்கள். அது அரசியலுக்குப் பயன்படும் என்பதால் இளைஞர்களும் அதிகம் அதிகமாக சேரவே செய்கிறார்கள். அந்த அடையாளம் சடங்குகளில் இருக்கிறது என்பதை கண்டு கொண்டதும் அதையும் பயன்படுத்து என்றே அதைத் தொடர்கிறார்கள்.

  கடந்த பத்தாண்டுகளில் ஜாதி சங்கத்தில் சேர்ந்தேன் என்று சொல்வதற்கு வெட்கப்படாத ஆட்களை நிறையவே பார்க்கிறேன். அதற்கு முன்பு ஒரு கூச்சம் அல்லது நிராகரிக்கிற மனம் நிறைய பேரிடம் இருந்தது.

  பதிலளிநீக்கு
 3. எதில் உடன்பாடு இல்லையெனில் மார்க்சியரும் திராவிட இயக்கத்தினரும் அறிவியல் பார்வை என்ற பேரில் உளவியலை மறுப்பதையே நான் உடன்படவில்லை என்று சொல்லவருகிறேன்.

  எல்லா சடங்குகளும் வெத்துவேட்டாக,பொழுதுபோகாமல் செய்யப்படுகிற ஒன்றாக நான் நினைக்கவில்லை. இது கண்ணால் காண்கிற ஒன்றை மட்டும் நம்புகிற மனப்பான்மையில் இருந்து வருகிற கருத்து. உளவியலில் ஆழ்மனம் என்று ஒன்று உண்டு.நம் வாழ்வில் நாம் நகர்கிற திசையை,எடுக்கிற முடிவை தீர்மானிக்கிறது. அந்த ஆழ்மனதை இந்த சடங்குகள் தொடவல்லது. இதை ஆணைவிட பெண் அதிகம் உணர்வாள்.(அறியாமலேயே...)சிக்மண்ட் பிராய்டு சொல்வதை மட்டுமே நீங்கள் நம்புவீர்கள்.அவர் செயல்பாட்டை மறுக்கவேயில்லை. சடங்கு என்பது செயல்பாடுதானே! அவைகள் ஆழ்மனதை தொடவல்லது.

  பார்ப்பனர் சடங்கு பிடிக்காது எனில் பார்ப்பனர் அல்லாதவர் செய்த சடங்கும் உண்டே.பார்ப்பனரே இல்லாத காலகட்டத்திலும் சடங்குகள் இருந்தனவே. அறிவியல் வளர்ந்த காலகட்டத்திலும் ஆழ்மனம் விவகாரங்களுக்கு இந்த சடங்குகள் கண்டிப்பாக துணைபோகிறது.

  பதிலளிநீக்கு
 4. இது போன்ற சடங்குகள் பிற மதத்தினருக்கும் உள்ளனவே.அதை எப்படி விளக்குவது.சாதி அமைப்புதான் சடங்குகளுக்கு காரணம் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.
  ‘எந்தப் பார்ப்பனராவது தம் வீட்டுப் பெண்களுக்கு திரட்டி நடத்தியிருக்கிறாரா ’
  அதைப் பற்றி பார்பனர்களிடம் கேளுங்கள்.சடங்கு உண்டு, ஊரைக் கூட்டி இப்போது செய்வதில்லை,சொந்தக்காரர்களை அழைத்து செய்வார்கள்.அதிலும் மாமா என்ன வாங்க வேண்டும் என சம்பிரதாயங்கள் உண்டு.வீரமணி தலைமையில் நடக்கும் திருமணங்களிலும் பட்டுப்புடவை,நகை,அலங்காரங்களுடன்
  பெண்கள்,மணமகள் இருப்பதை பார்க்க முடியும்.புரோகிதர் தலைமையில் திருமணம் இல்லாத பகுத்தறிவு இயக்க திருமணங்களிலும் சடங்குகள் என்று சில உண்டாக்கப்பட்டுவிட்டன.
  திமுகவினர் திருமணங்களில் மங்கல நாணை எடுத்து தந்து திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது, உரையாற்றுவது,வாழ்த்துவது இருக்கிறது.
  வரவேற்று தட்டி வைப்பது,சுவரொட்டி அடித்து ஒட்டுவது இருக்கிறது, கல்யாண அழைப்பிதழ் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. ஒரு முழுமையான பகிர்வு, மிக்க நன்றி. எனது கருத்துகள் கீழே:

  சாதியம் என்ன அடுத்த சாதிக்காரர்களை மதிக்காமல் இருக்க சொல்லுகிறதா? அல்லது சாதியம் இப்படி செய்ய சொல்லுகிறது என்று பிரச்சாரப்படுத்த பட்டுள்ளதா என்பது ஒரு கேள்வி? அல்லது இந்தியாவில் நடைமுறையில் இருந்த கலாச்சாரத்தின் வேர் சாதியம் அதனால் தான் உயர்வு தாழ்வு இருந்தது என்கிற பார்வையா? இந்த பார்வை தான் முழுமையானதா? 'சாதியம்' நடைமுறையை விளக்க மொழி கண்ட வார்த்தை தானே; நடைமுறை நம் வாழ்கை முறையில் தானே, உயர்வு- தாழ்வு என்னும் சமூக நடைமுறைக்கு மத , சாதி சாயம் ஏன் பூச வேண்டும்?

  இந்து என்பது அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் வாழ்கை முறை என்று முன்பே நண்பர்கள் விளக்க முயன்றதாய் நம்புகிறேன். இந்து என்பதை பாரத தேசியமாய் காண்பதில் தானே மதசார்பின்மையின் (மத சார்பின்மையே இன்னொரு மதமாய் உருவாகி விடக்கூடாது) சாரம் இருக்கின்றது.

  அதனை பார்ப்பதை தவிர்த்து இந்தியாவில், ஏன் உலக அளவில் காணப்படும் உயர்வு தாழ்வுக்கு மதங்களை, சாதிகளை முன்னிறுத்தி அரசியல் நிகழ்வதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கறேன்.

  சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்வின் நடைமுறை அனுபவங்களின் தொகுப்பு, (சித்த மருத்துவம் மக்களின் வாழ்வு முறைகளினால் அறியப்பட்டது தானே இதனை வாழ்வியல் மாற்றாகத்தானே [மேலை] உலகம் பார்க்கிறது.) அவற்றை மனிதன் தனது தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்வதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுபவர்களும் நடைமுறை வாழ்க்கைக்கேற்ப தங்கள் வாழ்க்கைமுறைகளை மற்றிகொள்வதை நாம் பார்க்கவில்லையா என்ன? வாழ்க்கை நடைமுறை என்பது வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும், தனி மனிதன் தன்னை சார்ந்த சமூகத்துடன் இயைந்து வாழவே முயல்கிறான், ஆனால் அரசியல் அப்படி அவனை செயல்பட அனுமதிக்க விரும்பவில்லை, முதலில் அரசியல் தனி மனிதனை மதிக்க பழகிகொண்டால் அரசு என்னும் அமைப்பும் மனிதனை மதிக்கும்.

  முழுமையாய் அறியாமல், அறிய முயற்சிக்காமல் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கை என்று எதிர்க்கும் பிரச்சாரத்திற்கு மாற்று பிரச்சாரம் சடங்குகள் சம்பிரதாயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க செய்கிறது, மனிதர்களை பாடாய் படுத்துகிறது.

  சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டும் என விரும்புபவர்கள்..வாழ்வியலில் உயர்வு தாழ்வுக்கு உண்மையான/முழுமையான காரணங்களை கண்டடைய முயலவாவது வேண்டும் ..தனி மனித சுதந்திரத்தை நிலை நிறுத்த உதவ வேண்டும். முதலில் தனிமனிதனையும் பிறகு சமூகமாகிய அரசியல், சாதி,மதம், மொழி, மாநிலம், நாடு ,உலகம் என்ற வரிசையை கடைபிடித்தால் இது சாத்தியமே..ஏன் இந்த வரிசையில் இரண்டாவது நிலைக்கு முக்கியத்துவம் முதல் நிலையை விட்டு விட்டு?

  சாதியை விட்டு தள்ளிவைப்பதை சாதியத்தின் மாறும் இயல்பாக பார்க்க முடியும், இதில் மானுட உறவுகள் கண்டிப்பாய் பாதிக்க படுகின்றது இதனை எப்படி தவிர்ப்பது என்ற சிந்தனையே சமத்துவத்துக்கு வழி வகுக்கும், இதற்கு மிக சுலபமான வழி பொருளாதார சுதந்திரம்..அரசுகள் தங்கள் மக்களையே அடிமைபடுத்தி பொருள் சம்பாதிக்க முயலும் போது எவ்வழியில் பொருளாதார சுதந்திரம் சாத்தியமாகும்?

  பொம்பளைங்களோடு சேர்ந்து நீயும் அழுதுக்கிட்டிருந்தா ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்பது யாரு?..இதையும் சடங்கும் சம்பிரதாயத்தையும் முன்வைக்கும் சமுதாயம் தானே சொன்னது!!

  //பர்சனல் என்பதே மிகப்பெரிய பாலிடிக்ஸ் தான் என்கிற உண்மையை ஏற்க மறுப்போம். ஆனால் காலம் நம்மிடம் இந்த சால்ஜாப்புகளை எதிர்பார்க்கவில்லை. பேதம் வளர்க்கிற, மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிற, ஒடுக்கும் தன்மைகொண்ட சடங்குகளை நிராகரிக்கிற உழைக்கும் வர்க்கப் பண்பாடு ஒன்றை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றித்தருமாறுதான் காலம் நம்மிடம் கோருகிறது. நாமொன்றும் உறைந்தச் செவியினரல்லவே?//

  இன்றைய உயர்வு தாழ்வினை அறிவியலின் பேட்டன்ட் உரிமையை வைத்திருப்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்..இது தான் இன்றைய நிலை என கருதுகிறேன்.

  காலம் என்று ஆசிரியர் எதை கூறுகிறார்..அதனை கட்டமைக்கும் பணியை அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன..உழைப்பு என்ற பேரால் மனிதர்களை அவர்கள் சுயவிருப்பங்களை தியாகம் செய்து விட்டு... ஆளும் வர்க்கத்தினரின் விருப்பங்களுக்காக, தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே..தனி மனிதனைப்போல்.

  பதிலளிநீக்கு
 6. இதே ரேஞ்சில் போனால் மார்க்சியர்கள் கோர்பசேவ்,விளாடிமீர் பூடின் என்றெல்லாம் பெயர் மாற்றவேண்டியிருக்கும். ஆதவன் தீட்சண்யா என்பதே சம்ஸ்கிருதமாச்சே.கொஞ்சம் ரஷ்ய வாசனையோடு பேர் வைத்தால் நல்லாயிருக்கும்.என்னால் மாற்ற முடியவில்லையே என்ற இயலாமையை விட என்னால் மாறமுடியவில்லையே என்ற இயலாமைக்கு சம்பந்தப்பட்ட நபரே பொறுப்பேற்கவேண்டும் இல்லையா? எப்படி அந்தரத்தில் விண்வெளியில் கோட்டை கட்டுவார்களோ மார்க்சியர்கள்...

  பதிலளிநீக்கு
 7. கொடுமை. மார்க்சியமும் ஈவேராவியமும் சரி அதனுடன் பாபா சாகேபை ஏன் சேர்க்கிறீர்கள் என்பது தெரியவில்லை. பாபா சாகேப் சடங்குகளை மறுக்கவில்லை. அதனை ஜனநாயகப்படுத்த சுமிருதி சார்ந்த ஹிந்து மதத்தின் விலங்குகளை உடைத்தெறிந்து மற்றொரு ஆன்மிக அடிப்படை அளிக்க சொன்னார். நவ்யான பௌத்த அடிப்படை. அதை அளித்தால் சடங்குகளின் அழகியலை ஆழத்தை வாழ்க்கைசுழலுடன் அவை அளிக்கும் பூரணத்தை சாதியத்தின் கொடுமையை புறந்தள்ளி ரசிக்க இயலும்.

  பதிலளிநீக்கு
 8. அருமை. அனைத்துக்கும் அனுபவமே ஆசானாக இருப்பதால், தனக்கான அனுபவத்திலிருந்தே உலகையும், வாழ்வையும் நோக்க இயலும். அதிலும் எழுத்தாளருக்கு அது கூடுதலாக வந்திருக்கின்றது. உண்மை. உங்களின் கூற்று. பாராட்டுகள். மற்றும் வாழத்துதுதுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் இத்தகைய நிகழ்வு நடந்திருப்பதால், உண்மையும், யதார்த்தையும், கையறு நிலையையும் புரிந்து கொள்ள இயலுகின்றது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

  பதிலளிநீக்கு

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா

  2021 ஏப் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில...