கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 3

தீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா

படுத்த சற்றைக்கெல்லாம் அலண்டு தூங்கிப் போனாள் திவ்யா. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்  களிப்பு இன்னமும் அவள் முகத்தில் பூரித்திருந்தது. அவளென்றால் உயிருருகப் பழகும் அவளது 12சி வகுப்புப் பிள்ளைகளும் உறவுக்காரப் பொண்டுகளும் பையன்களும் பூசிய வண்ணப் பொடிகளும் ஜிகினாத்தாள்களும் மேலெல்லாம் சிதறி மின்னிக் கிடந்தன. யாரோ முகத்தில் தீத்திவிட்ட கேக் க்ரீமை கூட கழுவாமல் அப்படியே விட்டிருந்தாள். 

“ஊரு கண்ணு உறவுக்கண்ணு எல்லாம் எம்மகமேல தான். சுத்திப் போடலாம்னு வந்தா லைட்டைக்கூட அமர்த்தாம எப்படி தூங்குது பாரு” என்று பொய்க்கோபம் காட்டி கணவனிடம் மெப்பாக ஞாயம் மேவினாள் மங்கா. மனைவியின் புகாரில் இருக்கும் பெருமிதத்தைக் கண்டுகொண்ட சித்தண்ணன் தன் பங்கிற்கு ஏதும் சொல்லாமல் இருப்பானா? 

“ஆரம் எப்படி ஜொலிக்குது பாரு.. இதவிட சிறுசா செஞ்சிருந்தா மூக்குத்தி எடுப்பாவே இருந்திருக்காது. ஜிமிக்கிய மட்டுமாச்சும் கழட்டி வச்சிருக்கலாமில்ல… படுக்கையில அழுந்தி நசுங்கிறாதா… இன்னொரு பவுன் சேர்த்திருந்தா கொஞ்சம் கெட்டியா இருந்திருக்கும்… அந்த தங்காசாரியும் நீயும் இதே போதும்னு தடுத்துட்டீங்க” என்று மகளின் மேனியை அலங்கரிக்கும் நகையெல்லாம் தன் பங்காக்கும் என்று அவன் பெருமை காட்டிக்கொண்டான். “எல்லாத்தயும் உருக்கிச் சேர்த்ததை இன்னின்ன உருப்படிக்கு இத்தனை பவுனுன்னு அந்தாளு சொன்னப்ப நீயும்தானே  சரிசரின்னு தலையாட்டுன… இப்ப என்னமோ என்மேல பழிபோடுற…” என்று கணவனை கடிந்து கொண்டாள். “சரிவிடு, வெயிட்டா இருந்தாலும் வலிக்குதுன்னு மவ சிணுங்குவா” என்று சமாதானம் செய்தான் சித்தண்ணன்.  

இவர்களது பேச்செதற்கும் அசராமல் திவ்யா தூங்கிக்கொண்டிருந்தாள். பாவம் பிள்ளைக்கு அலுப்புபோல என்று லைட்டை அணைத்துவிட்டு வெளியே வந்தார்கள். காகிதத்தட்டுகள், தேநீர்க்கோப்பைகள், பரிசுப்பொருட்கள், பிரித்தெறியப்பட்ட உறைகள், அறுந்துத் தொங்கிய தோரணங்கள், பலூன்கள் என நடுக்கூடம் முழுக்க அலங்கோலமாகக் கிடந்தன. சிந்திக்கிடந்த கேக், இனிப்புப்பட்சணங்களது துகள்களின் மேல் ஈக்களும் எறும்புகளும் மொய்த்திருந்தன. எல்லாவற்றையும் பெருக்கி ஓரந்தள்ளிவிட்டு அவர்கள் படுக்கப் போகும்போது நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

‘திவ்யா முழிச்சுப் பாரேன்’ என்று யாரோ எழுப்பியதற்கு அரைத்தூக்கத்திலேயே என்ன என்றாள். ‘எங்களைப் போக விடேன்’ என்று கிசுகிசுப்பை அவள் முதலில் கனவில் கேட்கும் குரல் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்தக்குரல் இரைஞ்சுதலைப் போல ஆரம்பித்து எச்சரிக்கை போல இடைவிடாமல் கேட்கவுமேதான் அவள் கண்விழித்தாள். தான் மட்டுமே இருக்கும் இந்த அறைக்குள் கேட்பது யாருடைய குரல்? “உன் காதுகளையே கடிச்சுத் தின்கிற கோபமிருக்கு எங்களுக்கு” என்கிற அந்தக் குரல் அவளது ஜிமிக்கி ஒன்றிலிருந்து வந்தது. “என்னால கழுத்தை நெரிச்சு இப்பவே உன்னை கொல்ல முடியும்” என்றது கழுத்தாரம். “நான் நினைச்சா திருகாணிய கழட்டி மூக்குக்குள்ள தள்ளி மூச்சையே நிறுத்திப்புடுவேன்” என்றது மூக்குத்தி. “லேசா இறுக்கினேன்னு வையி, அவ்வளவுதான் உன் ரத்த ஓட்டமே நின்னுடும்” என்றது மோதிரம். “ஏய், போறப்போ எங்களையும் கூட்டிட்டுப் போங்க. இல்லன்னா இருக்கிற ஆத்திரத்துல இவ வயித்த  குத்திக் கிழிச்சிருவம்” என்று சாமியறை வாசற்படியில்  நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் ரெண்டும் கத்தின. “உங்கப்பன் பண்ணின தப்புக்கு உன்னை தண்டிக்கக்கூடாதுன்னு தான் விட்டிருக்கோம். யோசிச்சு நல்ல முடிவா எடு” -நகைகள் ஒருசேர விடுத்த இந்த எச்சரிக்கையில் இருந்த மூர்க்கம் திவ்யாவை  பதற்றமாக்கியது. 

தான் அணிந்திருக்கும் நகைகள் தன்னிடமே பேசுவதும் அது தனக்கே கேட்பதும் சாத்தியமா? ஒருவேளை இது அதீதமான கற்பனையா? யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? இந்த நகைகளுக்கு அப்பன் பண்ணின கெடுதல் என்ன? கெடுதல் பண்ணலேன்னா நகைகள் ஏன் இப்படி புகாரிட்டு மிரட்டணும்? என்று பலவாறாக யோசித்தாள் திவ்யா. “உங்கம்மா காலையில பீரோவுலிருந்து எடுக்குறப்பவே துள்ளி குதிச்சு ஓடியிருப்போம். சரி, பிறந்தநாளும் அதுவுமா நீ சங்கடப்படக்கூடாதுன்னு தான் இந்நேரம் வரைக்கும் பொறுத்திருந்தோம். இப்பதான் முடிஞ்சிருச்சில்ல, கழத்திவிடு” என்றன. 

“நாங்க உங்கள வாங்கிட்டு வந்தப்புறம் இதுதானே உங்க வீடு” என்று அவள் இன்னதுக்கு பதிலென்று இல்லாமல் பொதுப்படையாகச் சொன்னாள். “சரி, எங்கே வாங்குனீங்கன்னு சொல்லு?” என்று நகைகள் கேட்டதற்கு பதிலின்றி திவ்யா திணறினாள். “காலையில் எங்கப்பம்மாக்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று அப்போதைக்கு அமைதிப்படுத்தப் பார்த்தாள். “விடிஞ்சதும் உங்கம்மா எங்களையெல்லாம் கழத்தி வாங்கி பீரோ லாக்கர்ல வச்சு பூட்டிப்புடுவா. அப்புறம் மறுபடியும் அடைஞ்சிக் கிடக்க வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டன. “இப்போ கழத்தினதும் நீங்க போயிட்டா எங்கப்பம்மாவுக்கு நான் என்ன சொல்லுவேன்?” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள் திவ்யா. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தப்பிக்க முடியாதென்பதை அறிந்திருந்த நகைகளோ, “உனக்குச் சொந்தமில்லாத எங்களை அணிந்திருப்பது உனக்கு உறுத்தவில்லையா” என்று கேட்டன. அந்தக் கேள்வியால் அவள் தடுமாறுவதைக் கண்ட நகைகள் அவளது கவனத்திற்குத் தப்பிப்போன கடந்தகாலச் சம்பவங்களை நினைவூட்டத் தொடங்கின.   

***

பொதுவாக மழைமோட காலத்தில் அடைமழை பெய்யும் நாட்களில் ஐந்து பீரியடுடன் பள்ளிக்கூடம் முடிவதுண்டு. அன்றைக்கு பொட்டுத்தூறலில்லை, வெறுமனே வானம் மூட்டமாகத்தான் இருந்தது. அதற்கே ஐந்து பீரியடா என்கிற ஆச்சரியம் பிள்ளைகளுக்கு. “வழியில் விளையாடாம, பராக்கு பார்க்காம நேரம் பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணும்” என்று ஆசிரியர்கள் விடுக்கும் எச்சரிக்கையை என்றைக்கு பிள்ளைகள் கேட்டிருக்கிறார்கள்? அப்படி கேட்டால் அவர்கள் பிள்ளைகளா? திவ்யாவும் அவளது சேக்காளிகளும் வம்பாடிக்கொண்டு வரும் வழியில் ஏழெட்டு போலிஸ்காரர்கள் நிற்பதைக் கண்டார்கள். இதென்ன புதுவழக்கம் என்பதுபோல அவர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே ஒதுங்கி ஊர்ப்பாதைக்குள் திரும்பினார்கள். அம்மா மட்டும்தான் இருந்தாள் வீட்டில். வந்ததும் உங்கொப்பனைக் காணலன்னு தேடாத. ஒருவேலையா வெளியப் போயிருக்கு. உனக்கு நொறுவாய் வாங்கிட்டு இப்ப வந்துடும் என்றாள் அம்மா. 

“அப்போ உங்கப்பாவுக்காக வாசலைப் பார்த்து நீ உட்கார்ந்திருந்தாய். ஆனால் உங்கப்பா அன்னிக்கு ராத்திரிதான் வீட்டுக்கு வந்தார். இடைப்பட்ட நேரத்தில் எங்கே போயிருந்தார்?” என்றது மூக்குத்தி. “தெரியலியே” என்றாள். “சரி, கவனி”. 

சித்தண்ணன், மாதையன், இடும்பன், முனிமாதன், வளத்தி கோயிந்தன் ஐவரும்தான் முன்வரிசையில் நகர்கிறார்கள். மந்திக்குளம், பெரியமன்னவேடு, கட்டனேரி, அரியாம்பள்ளி, வேடம்பட்டி இன்னும் வடக்கே ஆராங்கோட்டை, முட்டுக்காடு, எம்.நாவலூர் என்று பக்கம்பராந்திரி ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்த இளந்தாரிகள் எழுவதெண்பது பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள். அந்த நிலப்பரப்பை அறிந்தவன்போல் சித்தண்ணன்தான் அவர்களை வழிநடத்துகிறான். உலக்கை, இரும்புக்குழாய், கடப்பாரை, சம்மட்டி, கொந்தாளம், பிக்காசு, பெட்ரோல் கேன், கேஸ் கட்டிங் மிஷின் என்று ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை ஏந்தியிருந்தார்கள். “அய்யோ அப்பா உன் முகமா இது… ஏன் இப்படி விகாரமா இருக்கு… அவங்களோட போகாதப்பா, வந்துடுப்பா” என்று திவ்யா கத்தினாள். “நீ பார்க்கிறது அவங்களோட கடந்தகாலத்தை. கடந்தகாலத்தில் இருக்கிற அவங்களுக்கு நிகழ்காலத்திலிருக்கிற உன்னோட கூப்பாடு கேட்காது, கவனி” என்றது ஜிமிக்கி. ஆங்காரமான கூச்சலையும் ஆபாசமான வசைகளையும் எழுப்பிச் செல்லும் அவர்கள் நிகழ்காலத்திற்கே வந்தாலும் என் கூப்பாடு எப்படி கேட்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் திவ்யா. 

சித்தண்ணன் கும்பல் நுழையும்போது அந்தக் காலனியில் கதவிருந்த வீடுகள் அனைத்துமே பூட்டிக் கிடந்தன. வேப்பமரமொன்றின் அடியில் கிடந்த கட்டிலில் ஒடுங்கிச் சுருண்டிருந்த  ஒரு கிழவியைத்தவிர அங்கொரு குஞ்சுகுளுவான் கூட இல்லை. ‘வூட்டுக்கு ஒருத்தனையாவது பொளந்துகட்டணும்’ என்று வந்தால் தப்பித்துவிட்டார்களே என்கிற ஆத்திரத்திலும், நல்லவேளையாக ஒருத்தரும் இல்லை என்கிற சந்தோசத்திலும் அந்த பட்டப்பகலில் அவர்கள் அடுத்தடுத்து நடத்தும் அட்டூழியங்களுக்கு போலிசும் துணை.    

பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகளை அவளது அப்பாவும் அவனது கூட்டாளிகளும் பெயர்த்தெடுக்கிறார்கள். வீட்டுக்குள் டிவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், புத்தக அலமாரி, கம்ப்யூட்டர், வெஸ்டர்ன் டாய்லெட் என்று இருப்பதைப் பார்த்ததும் அவர்களது கண்கள் சிவக்கின்றன. “இவங்களுக்கு வந்த சொகுசப் பாத்தியா? இதெல்லாம் நம்ம வூடுகள்லகூட இல்லியே” என்கிறான் குமைச்சலோடு ஒருவன். “பண்டபாத்திரம் எதுவும் இங்க மிஞ்சக்கூடாது, வேணும்கிறத எடுத்துக்கிட்டு மிச்சத்த அடிச்சு நொறுக்குங்க” என்று ஆணையிடுகிறான் இன்னொருவன். “எல்லாம் இன்னியோட முடிஞ்சது… ஒருத்தன் வாலாட்டினா ஊரையே அழிப்பாங்கன்ற பயம் வரணும். அப்பதான் இனியொருத்தனும் நம்ம பொண்ணுங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கொக்கரித்தபடியே மற்றொருவன் தவசதானியங்களின் மேல் மூத்திரம் பெய்கிறான். அவன் எதிரில் இருப்பதாக நினைத்து கூசிப்போன திவ்யா “த்தூ வெட்கங்கெட்ட மிருகமே” என்று திட்டுகிறாள். “எந்த மிருகம் இப்படியான அட்டூழியங்களைச் செய்கிறது?” என்று கழுத்தாரம் கேட்டதற்கு திவ்யாவிடம் பதிலில்லை. 

பீரோக்களை நெம்பித் திறந்து கேஸ் கட்டிங்கில் திறக்கிறார்கள் லாக்கர்களை. துணிமணிகளைத் தாறுமாறாக இழுத்தெறிந்து நடுவீட்டில் போட்டு தீவைக்கிறார்கள். தீயில் வீசப்பட்ட படிப்புச் சான்றிதழ்கள், ரேசன் அட்டை, ஆதார், கேஸ் புக் எல்லாம் தீய்ந்து கருகுகின்றன. தன்னைவிட ஐந்தாறு வயது குறைந்த மாணாக்கன் ஒருவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புத்தகப்பையையும் சீருடையையும் எடுத்து நெருப்புக்குள் வீசும்போது திவ்யா தன்னுடல் பொசுங்குவது போல் துடித்துப் போனாள். பாடப்புத்தகங்களும் சீருடைகளும் இல்லாமல் அந்த வீடுகளின் பிள்ளைகள் நாளை எப்படி பள்ளிக்கூடம் போவார்கள் என்கிற யோசனை இல்லாத இவனெல்லாம் படித்து என்னத்த கிழிக்கப்போறான் என்கிற கவலை பீடிக்கிறது திவ்யாவை. அவளது மனவோட்டம் அறிந்த குத்துவிளக்கு சொன்னது: “அவன் படித்து எதையும் கிழிச்சிடக் கூடாதுன்னுதான் உங்கப்பா மாதிரியான ஆட்கள் அவனை இப்படி கிரிமினலாக்குறாங்க” 

அவர்களுக்கு இன்னும் வெகாளம் அடங்கவில்லை.  அழைப்புக்காக நெடுஞ்சாலையில் போலிஸ் வேன் அருகில் காக்கவைத்திருந்த ஜேசிபியை வருவிக்கிறார்கள். அது வீடுகளின் கூரைகளையும் வாரைகளையும் பிய்த்தெறிகிறது. முட்டிச்சாய்க்கிறது சுவர்களை. இவனுங்களுக்கு சாமி ஒரு கேடா என்று தீப்பாஞ்சியம்மன் கோவிலையும் தகர்க்கிறது. காலனியின் 126 வீடுகளுக்குமான நீர்த்தேக்கத்தொட்டியைத் தாங்கி நிற்கும் தூணை அடித்துச் சரிக்கிறது. தலை சிதறிச் செத்தவனின் ரத்தம்போல் வீணில் பாய்கிறது நீர். மேஸ்திரி பொன்னனின் ஈரடுக்கு வீட்டுவாசலில் வாகனங்களையெல்லாம் இழுத்துப் போட்டு நெருப்பு வைக்கிறார்கள். பெட்ரோல் டேங்க் வெடித்து வீட்டுக்குள் தீப்பிழம்பு விழுந்தெரிகிறது. வீட்டுக்குள்ளிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும்போல, இடியொத்த பெருஞ்சத்தத்தால் அந்த வட்டாரமே கிடுகிடுங்குகிறது. அடர்ந்திருண்ட கரும்புகையின் உள்ளேயிருந்து அவளது அப்பனும் அவனது கூட்டாளிகளும் வெற்றிப் பெருமிதத்தோடு வெளியே வருகிறார்கள். “அவங்கள நூறு வருசத்துக்குப் பின்னாடி தூக்கி வீசியிருக்கோம். எழுந்து வர்றதுக்கு இந்த ஜென்மம் போதாது.. மறுபடி தலையெடுக்க மண்ணள்ளித் திங்கனும்…” என்று  எகத்தாளமாக பேசிக்கொண்டு வரும் அவர்களைப் பார்ப்பதற்கு அஞ்சி திவ்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறாள். 

“கண்களை அகலத் திறந்து பார்க்கவேண்டிய இந்நேரத்தில் மற்றவர்களைப்போல கண்ணை மூடிக்கொள்ளும் தவறை நீயும் செய்யாதே திவ்யா. போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாகரிகத்தின் சிதிலங்கள் போல அந்தக் காலனி இருப்பதைப் பார். கொலை வெறியேறிய உனது அப்பன்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க பாம்பும் தேளும் மேயும் முட்புதர்களிலும் கரும்புக்காடுகளிலும் பதுங்கிக் கிடந்து வெளியே வந்த அந்த மக்களுக்கு உடுத்தியிருந்த துணியத்தவிர மிஞ்சினது என்ன என்று பார்க்கமாட்டாயா? வீடுவாசல் அற்றவர்களாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள் இந்த ஐப்பசிக்குளிரில் வெட்டவெளியில் எப்படி வெடவெடத்து நடுங்குகிறார்கள் என்பதை காணமறுக்கும் அளவுக்கு உன் மனம் கல்லா  இரும்பா…?”  -நெத்திச்சுட்டியும் மோதிரமும் எழுப்பின இந்தக் கேள்விகளுக்குப் பதிலற்றுப்போன திவ்யா கண்களை இறுக மூடியிருந்தாள்.  

“திவ்யா கண்ணைத் திற” என்று அப்பா உலுக்கியதில் கண்விழித்த திவ்யா எங்கே அந்த எரியும் வீடுகளும் குளிரில் நடுங்கும் குழந்தைகளும் என்று தேடினாள். “நிகழ்காலத்துக்கு வா திவ்யா” என்று கிசுகிசுத்தது தோடு. அவள் நிதானத்துக்கு வர கொஞ்சம் நேரமெடுத்தது. எதிரே இருந்த பெற்றவர்களைப் பார்க்கப் பிடிக்காதவளாக அவள் தான் அணிந்திருந்த நகைகளை விறுவிறுவென கழற்றத் தொடங்கினாள். “ஏன் தங்கம் எழுந்தும் எழாம இவ்வளவு அவசரமா நகைகளைக் கழட்டுற?” என்ற அம்மாவிடம், “இந்த நகைகள் எனக்கு வேணாம்” என்றாள். “ஏம்மா இதுகளுக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தானேம்மா இருக்கு!” என்ற சித்தண்ணனை அவள் அற்பமாகப் பார்த்தாள். “ஊராமூட்டு நகைன்னா நல்லாத்தாம்பா இருக்கும்” என்றாள். “என்னது ஊராமூட்டு நகையா? நம்மளுதுமா” என்றான். “நம்மக்கிட்ட இருக்கிறதாலயே நம்மோடதுன்னு ஆயிடாதுப்பா.”

எதை மனதில் வைத்து மகள் இப்படி பேசுகிறாள் என்று புரியாத சித்தண்ணன், “இது உனக்கே உனக்குன்னு அளவு கொடுத்து செஞ்சதுமா. தங்காசாரிக்கிட்ட நீதானேம்மா அன்னிக்கு அளவு கொடுத்த” என்றான். “ஆமா அளவு கொடுத்தேன். காலனி வூடுகள்ள நீங்க களவாண்டு வந்த நகைகள உருக்கித்தான் எனக்கு நகை செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கே மறுத்திருபேன்…” 

“அதொன்னும் திருட்டு இல்ல. அவங்கக்கிட்ட பலவந்தமா வசூலிச்ச அபராதம்.” 

அப்பனின் பேச்சால் அருவருப்படைந்த திவ்யா “இதெல்லாம் எத்தினி வருசத்து உழைப்பு அவங்களுக்கு? ச்சே… திருப்பிக் கொடுத்துட்டு வாங்கப்பா” என்று சீறினாள். “உனக்கு பிடிக்கலன்னா விடு. திருப்பிக் கொடுக்கவெல்லாம் முடியாது” என்று சொன்ன அப்பனின் குரலில் இருந்த இளக்காரம் அவளை கொந்தளிக்கச் செய்தது. “குருவியாட்டம் அவங்க சிறுகச்சிறுகச் சேர்த்தையெல்லாம் இப்படி கொள்ளையடிச்சு கொண்டாந்து புழங்குறீங்களே இதிலெல்லாம் தீட்டு இல்லையா உங்களுக்கு?” என்று வீசியடித்தாள் நகைகளை. 

சித்தண்ணனும் மங்காவும் வாயடைத்து நின்றார்கள். நகைகளும் குத்துவிளக்குகளும் நகரத்தொடங்கின.

நன்றி: ஆனந்தவிகடன் 03.02.21

ஓவியங்கள்: அரஸ்

திங்கள், நவம்பர் 19

தருமபுரியில் தலித்துகள் மீதான வன்னியர் - பா.ம.க.வின் அழித்தொழிப்பு வன்கொடுமைகள் பற்றிய அறிக்கை

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை தொடங்கி முன்னிரவு வரையிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி வன்னிய கிராமத்தினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பாக உண்மை அறியும் களஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10-ஆம் தேதி கல்வியாளர்கள் - எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு நேரில் சென்றது. மூன்று கிராமங்களில் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கண்ணுற்றதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும், சில அரசு ஆவணங்களையும் கண்டு இக்குழு தயாரித்த அறிக்கை இது.

களஆய்வில் பங்கேற்றோர் :-
1.    முனைவர் சி. இலட்சுமணன் (Co-ordinator, Dalit Intellectual Collective)
2.    எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (Intellectual Circle for Dalit Actions )
3.    எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர், புதுவிசை)
4.    பேரா. கி. பார்த்திபராஜா
5.    கவிஞர் சுகிர்தராணி
6. எழுத்தாளர் யுவபாரதி மணிகண்டன் (தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு)
7.    பத்திரிகையாளர் ஜெய்கணேஷ்
8.    மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்
மற்றும் பெங்களுரு சுதந்திர மென்பொருள் இயக்கம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்
9.    செந்தில்
10.  ரகுராம்
11.  சரத்
12.  ரமீஷ்

காரணமும் தாக்குதலும் :

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (23) என்ற தலித் இளைஞனும் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (21) என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக உருவான பிரச்சினை, மூன்று தலித் கிராமங்களுக்கு எதிரான பெருந்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது. ‘தங்கள் சாதிப் பெண்ணைப் பறையன் காதலிக்கக் கூடாது’ என்று கடந்த ஜனவரி மாதத்திலேயே இளவரசன் வீட்டின் மீது வன்னியர்கள் தாக்குதல் தொடுத்தனர். தொடர் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறி 14-10-2012ஆம் தேதி இளவரசனும் திவ்யாவும் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி சேலம் கோட்ட டி.ஐ.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல் துறையிலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திவ்யா குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருந்தனர். ஆனால் இப்பிரச்சினையில் திவ்யாவின் உறவினர்களும் அவர்களைச் சேர்ந்த வன்னியர்களும் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்திவந்தனர். அக்டோபர் 25-ஆம் தேதி முதலே இப்பகுதியில் இது தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக 04-11-2012-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன் தலைமையில் வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற பா.ம.க. நிர்வாகிகளும், மாவட்ட வன்னியர் சங்கத்தினரும் நாயக்கன் கொட்டாயைச் சுற்றியிருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் ‘சாதி மீறித் திருமணம் செய்யும் போக்கை வளரவிடக்கூடாது, இதற்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்’ என்று உணர்ச்சிவசமான பேச்சுகள் பேசப்பட்டன. பஞ்சாயத்து முடிவின் படி, ‘7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் காலனியில் ஒரு வீடு கூட இருக்காது’ என்று நத்தம் காலனியைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம் கூறி அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 7-ஆம் தேதி திவ்யாவின் குடும்பம் சார்பாக ஐந்து பேர் சென்று திவ்யாவைத் தங்களோடு வரும்படி கேட்டபோது, அவர் “நான் என் கணவரை விட்டு வரமாட்டேன். வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள்” என்று கூறி வர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகே, முழுபோதையிலிருக்க வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் அன்று மாலை இறந்துள்ளார்.

 மாலை 4 மணியளவில் நாகராஜின் பிணத்தைச் செல்லங்கொட்டாயிலிருந்து தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குக் கொணர்ந்த வன்னியர்கள், தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, கொட்டாவூர் மாது ஆகியோர் தலைமையில், அப்பிணத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பிரதான சாலையின் வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டது. அதே போல பிரதான சாலையின் தெற்கே எஸ்.கொட்டாவூரிலும் மரம் வெட்டி சாலை மறிக்கப்பட்டது. சாலைக்கு அருகே செங்கல் சூளைக்காக வெட்டிப் போடப்பட்டிருந்த பனைமரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு சாலையை முழுமையாக மறித்தனர். போலீசார் அம்மரங்களைத் தாண்டி வராமல் அங்கேயே நின்று கொண்டனர்.

இந்நிலையில்தான், திட்டமிட்டபடி ஆங்காங்கிருந்து வரத்தொடங்கியிருந்த வன்னியர்களும், மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்களும் சேர்ந்து நத்தம் காலனியில் புகுந்து எல்லா வீடுகளையும் தாக்கத் தொடங்கினர். காலனியின் பெரும்பாலான ஆண்கள் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தனர். ஊரிலிருந்த பெண்கள் உள்ளுரில் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் பள்ளிகளை விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம். நத்தம் காலனியைத் தாக்கி முடித்த பின்பு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகர், அங்கிருந்து உள்ளடங்கியுள்ள கிராமமான கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்களுக்கும் வாகனங்களில் தேடிச் சென்று தாக்குதல் நடத்தினர். மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கிய தாக்குதல் ஒவ்வொரு ஊராக, இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லா வீடுகளும் தவறாமல் தாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டையும் மறுபடி செப்பனிட முடியாத அளவிற்குத் தீயிட்டு அழித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் மற்றும் சில உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிறகு பீரோ முழுமையாக உடைக்கப்பட்டிருக்கிறது அல்லது எரிக்கப்பட்டிருக்கிறது. கணிசமான வீடுகளிலிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர், ஆடுகள் போன்றவற்றை வன்னியர்கள் தாம் கொண்டுவந்திருந்த வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். 4 கார்கள் மற்றும் 72 பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளன. கடப்பாரை, தடி, வெயிட் லிஃப்டிங் இரும்புத் தண்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், திறந்து விடப்பட்ட சில சிலிண்டர்கள் போன்றவை மூலம் தாக்குதலும் தீவைப்பும் நடந்துள்ளன. வன்னியர்கள் இத்தகைய தாக்குதலைச் சிறு எதிர்ப்பின்றி நடத்தியள்ளனர்.


தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையும் அதன் மீதான தாக்குதலும் :

தாக்குதல் நடந்த மூன்று ஊர்களிலுமுள்ள 98 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. இரண்டொருவர் தவிர வேறு எவருக்கும் அரசு வேலையோ நிரந்தர உத்தியோகமோ கிடையாது. கூலிகளாகவும் முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆண்கள் பெரும்பான்மையும் பெங்களுரில் கட்டிட வேலையிலும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் பிறவேலைகளும் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தில்தான் வீடு, ஓரளவு வீட்டுபயோகச் சாமான்களை ஈட்டியுள்ளனர். சாதி இந்துக்களின் சார்பின்றி தன்னிறைவுடன் சுயமாகப் பொருளாதார ரீதியாகச் சிறிதளவு முன்னேறியுள்ளனர். இந்நிலையில்தான் இக்கிராமங்களில் முழுக்க முழுக்க இந்த வீடுகளும் வீட்டுச் சாமான்களும் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஊரில் வெகு சில குடிசைகளைத் தவிர மற்றவை காங்கிரீட், மாடி மற்றும் ஓட்டு வீடுகள். இவற்றில் பெரும்பாலானவை அரசு உதவியோடு தம் பணத்தையும் கொண்டு கட்டிய வீடுகள். இத்தாக்குதலில் வன்னியர் தரப்பில் 2000 பேர் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர். ஏராளமான பைக்குகளும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இத்தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட வன்னியர் கிராமங்களின் பெயர்கள் நம் குழுவினரிடம் தரப்பட்டன.

அவை:
1.செல்லங்கொட்டாய் 2.வாணியன்கொட்டாய் 3.கதிர்நாயக்கனஹள்ளி 4.புளியம்பட்டி
5.மொளகானூர் 6.நாயக்கன்கொட்டாய் 7.வெள்ளாளப்பட்டி 8.கொண்டம்பட்டி 9.சீராம்பட்டி
10.கிருஷ்ணாபுரம் 11.வன்னியக்குளம் 12.திம்பம்பட்டி 13.கம்பைநல்லூர் 14.சவுக்குத்தோப்பு
15.கொல்லம்பட்டி 16.குப்பூர் 17.செங்கல்மேடு 18.மாரவாடி பழையூர் 19.செம்மாந்தகுப்பம்
20.குறும்பட்டி 21.கொட்டாவூர்  22.செட்டியூர் 23.சோலைக்கொட்டாய்

மொத்தத்தில் 7-ஆம் தேதி இத்தாக்குதலை முதலில் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான முருகன் என்பவர் ஏற்கனவே தலித் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து கொன்ற வழக்கில் தொடர்புடையவர். மற்றொருவர் வாணியன்கொட்டாயைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சீனிவாசன் ஆவார்.

ஏற்கனவே, தலித் மக்களோடு பழகுவதோடு, அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்லும் வன்னியர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தலித் மக்கள் கூறும்போது சாதியின் ஆகிருதி எந்த பூச்சுகளாலும் மறைந்துவிடுவதில்லை என்பதையே அறியமுடிந்தது. ‘ஒண்ணா மண்ணா பழகினால் சாதி ஒன்றாகிவிடுமா?’ என்று கேட்டு தாக்கியதாக அழுதார் ஒரு பெண். ‘சேர்த்து வைச்சிருந்ததெல்லாம் வெந்துபோச்சு. இனி எங்களைத்தான் வேகவைக்கணும்’ என்று அழுதார் இன்னொரு பெண். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் திருமணம் மற்றும தீபாவளிப் பண்டிகைக்காக முன்பணமாக எடுக்கப்பட்ட 20,000 ரூபாயும், சிறு வியாபாரமாக இயங்கிவந்த கடை, மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒரு வார வசூல்நிதி போன்றவையும் கொள்ளையில் பறிபோனதை அறியமுடிந்தது. மொத்தத்தில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடு இத்தாக்குதலில் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 31-08-1995இல் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 300 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும், அம்மக்களின் பொருளாதாரத் தற்சார்பே குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலிலும் அதுவே நடந்துள்ளது. ஏறக்குறைய பத்து கொடியங்குளத்திற்கு இணையாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

கண்டறிந்தவை :

1.    இப்பகுதியில் தலித்-வன்னியர் சாதிக் கலப்பு மணங்கள் மட்டுமின்றி, பிற சாதிக் கலப்பு மணங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவற்றிற்கு ஆதிக்கச் சாதித் தரப்பின் ஏற்பின்மையோ, அவ்வப்போதான எதிர்ப்போ மட்டுமே இருந்து வந்துள்ளன. மாறாக, இதுபோன்ற பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை இத்தகைய வன்முறை நடத்தப்பட்டதற்குப் பின்னணியாய் அரசியல் காரணம் இருந்திருக்கிறது. அதாவது, 2012 சித்திரா பௌர்ணமியன்று வன்னியர்களின் சாதி உணர்ச்சியை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு “வன்னியர் பெண்களைக் காதலித்து மணக்கும் பிற சாதியினரை (தலித்துகளை) அடக்கவேண்டும். அவ்வாறு அடக்குபவர்களுக்குக் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார். இதுவரையிலும் சாதிக்கலப்பு மணத்திற்கு எதிராகப் புழுங்கிக் கொண்டிருந்த வன்னியர்களுக்கு குருவின் இப்பேச்சு, உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. தருமபுரி தாக்குதலுக்கும் இப்பேச்சே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது.

2.    மேலும் நவம்பர் 4-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் திவ்யா-இளவரசன் திருமணத்திற்கு எதிராகக் கூடிய வன்னியர்களின் கூட்டத்திலும், 7-ஆம் தேதி 3 தலித் கிராமங்கள் மீதான தாக்குதலிலும் தாக்குதலுக்குப் பிறகு வன்னியர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், பா.ம.க. முன்னாள் எம்.பி., கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதிலிருந்து இந்தப் பின்னணியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வன்னியர்களின் இந்த வெறிச் செயல்களுக்கு குருவின் இப்பேச்சு நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவியல் பலத்தைத் தந்திருக்கிறது. இளவரசன்-திவ்யா திருமணத்திற்கு மட்டுமல்ல, நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சாதிக் கலப்பு மணங்கள் மீதான கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் தருணத்தையே வன்னியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

 3.    நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு வெகு தொலைவிலிருந்த கொண்டம்பட்டியைத் தேடிச் சென்று தாக்கிய காரணம் எதுவென்றும் அறியமுடிந்தது. அதாவது, கடந்த ஆண்டு கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்ற தலித் இளைஞர், வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடியமர்ந்துவிட்டார். அப்போது நேதாஜி வீட்டை மட்டும் தாக்கிவிட்டுச் சென்ற வன்னியர் கூட்டம், இப்பொழுது இதுபோன்று திருமணம் நடந்த ஊர்களையெல்லாம் நினைவுபடுத்திச் சென்று தாக்கியிருக்கிறது. அந்த வகையில்தான் கொண்டம்பட்டி முழுஊரையும் துவம்சம் செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் மீதான கோபத்திற்காக கூட்டு வன்முறையைத் தலித் சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. வயல்களில் தானியக் கதிர்களை எந்தப் பறவைகளும்; நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக, ஒரு காகத்தைக் கொன்று வயலின் நடுவே கட்டித் தொங்கவிடுவார்கள் விவசாயிகள். அதுபோன்று தனித்தனியே அச்சுறுத்தி இதுபோன்ற காதல் மணங்களைத் தடுப்பதைவிட, ஒரு ஊரையே அழிப்பதன் மூலம், அதுபோன்ற எண்ணமே இனி தலித்துகளுக்கு எழக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

4.    இத்தாக்குதல் திவ்யாவின் தந்தை நாகராஜ் இறந்ததை ஒட்டி நடந்த உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு போன்று காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, நாகராஜின் சாவை ஒரு சாக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நாகராஜ் மரணத்திற்குத் தூண்டப்பட்டிருக்கலாம் என்று எங்கள் குழு கருதுகிறது. நாகராஜின் பிணத்தோடு மறியல் செய்யப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, அவரது மரணம் தற்கொலைதானா என்று ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாகராஜின் பிரேதப் பரிசோதனை, அவர் இறப்பதற்கு முன்பு அவருக்குச் சொந்த சாதியினரால் தரப்பட்ட நெருக்கடிகள், அவமானங்கள் பற்றியெல்லாம் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டுமென்று, தலித்துகளை நோக்கிக் கெடு விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி திவ்யா வரமறுத்த நிலையிலும், நாகராஜின் மரணத்தினாலும் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. முதலில் நாகராஜின் மரணமே தற்கொலைதானா? என்று ஆராயவேண்டியிருக்கிறது. நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் நடந்ததிலிருந்தே அவருக்கு மனரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அந்த நிலையில்தான் 7-ஆம் தேதி தன் மகள் திரும்பி வரமறுத்த நிலையில் அவர் இறந்திருக்கிறார். இந்த மரணம் ஊர்க்காரர்களின் நெருக்கடிகளுக்குப் பயந்து கூட நடந்திருக்கலாம். மேலும் அவர் கடைசி 4 நாட்களாகத் தொடர்ந்து குடிபோதையில் வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் இறந்திருக்காவிட்டாலும் கூட அன்று மாலை தாக்குதலுக்கு வாய்ப்பிருந்தது என்றே அந்த ஊர்க்காரர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால், நாகராஜின் சாவு அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போனது. அதனால்தான் கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்கள், மூன்று கிராமங்களை எரிக்கக் கூடிய அளவிற்குப் பல லிட்டர் பெட்ரோல், தின்னர் முதலியவை சேகரிக்கப்பட்டு, அதற்கான ஜனத்திரட்சியும் அங்கே மையம் கொண்டது. நத்தம் காலனியில் மட்டும் 150 பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல், பாட்டில்கள், திரிகள், ஆயுதங்கள் கொண்டு இத்தகைய பெருந்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. இரண்டொருவர் தாக்கப்பட்டதைத் தவிர்த்து, யாதொரு உயிர்ச்சேதமும் ஏற்படாவண்ணம் தலித்துகளின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

 5.    இத்தாக்குதலைத் தடுப்பதில் காவல்துறையும் அதன் உளவுப்பிரிவும் மாவட்ட நிர்வாகமும் பெரிய அளவில் தோல்வி அடைந்திருக்கின்றன. நாகராஜின் பிணத்தை வைத்துக்கொண்டு வன்னியர்கள் மறியல் செய்யும் போது, சாலையில் வெட்டிப்போட்ட மரத்தைத் தாண்டி போலீஸ் வராமல் நின்றுகொண்டது. சாலையில் மரங்களைப் போட்டிருந்தபோதே அங்கே 300 போலீஸ் வந்துவிட்ட போதிலும், அவற்றைத் தாண்டிவந்து, சில மணிநேரங்கள் நீடித்த தாக்குதலைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

6.    தருமபுரி மாவட்டத்தில் 1987-இல் பிசிஆர் சட்டத்தின் கீழ் ஒரு புகார் மற்றும் 1989 முதல் 2012 வரையில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 291 புகார்கள்; என பதிவானவை மொத்தம் 292 புகார்கள்.  இவற்றில் காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டவை 166 மற்றும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவை 81 என்ற நிலையில் வெறும் 10 புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பதிவான புகார்களில் 3.3 சதவீதப் புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான காவல்துறையின் அக்கறையின்மைக்குச் சான்றாக அமைகிறது.

7.    இப்பகுதி முன்பு நக்சல்பாரிகள் இயக்கம் செயற்பட்ட பகுதி என்ற முறையில், கியூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்ற முறையில் கடந்த ஒரு மாதமாகப் புகைந்து வந்துள்ள இப்பிரச்சியை அது அறியத் தவறியிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து 7 பேர் கொண்ட போலீஸ் காவல் இருந்துவந்தும் முன்கூட்டியே அறிந்து அத்தாக்குதலைத் தடுக்கத்தவறியிருக்கிறது காவல்துறை. ஏறக்குறைய 3 டிஎஸ்பி-க்களுடைய கவனத்தின்கீழ் இப்பகுதி இருந்தபோதிலும் இத்தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8.    இரவு 9.30 மணிவரையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இரவு 11 மணியளவில் லாரி ஒன்றை எடுத்துவந்து அண்ணா நகர் தலித் குடியிருப்புகளிலிருந்த ஆடுகளை வன்னியர்கள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, தாக்குதல் நடந்துமுடிந்த நெடுநேரம் வரையிலும் கூட காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையே அறியமுடிகிறது. மறுநாள் கைது செய்யப்பட்ட 92 பேரையும் கூட, வெளியூர் பணியிலிருந்து திரும்பிய மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க் வந்துதான் கைது செய்திருக்கிறார். அஸ்ரா கர்க்கின் பணியைப் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூர்ந்ததைப் பார்க்கமுடிந்தது.

பரிந்துரைகள் :

1.    கற்பனைக்கெட்டாத தாக்குதல் என்ற வகையில் இக்கிராமங்களின் சேதங்களைப் பார்வையிடத் தமிழக முதலமைச்சர் அங்கு நேரடியாகச் செல்லவேண்டும். அவரது வருகையினால் அரசு எந்திரம் துரிதமாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும்.

 2.    தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவதோடு, தாக்குதல் நடத்தியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3.    அரசு உடனடியாக அதிவிரைவு தனிநீதிமன்றத்தை இம்மூன்று கிராமங்களில் ஏதேனுமொன்றில் அமைத்து, நீதிவிசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். (உ-ம்) ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றம்.

4.    2012 சித்திரா பௌர்ணமியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கலப்புமணத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேச்சே, இத்தகைய தாக்குதலுக்கு ஊக்கமளிக்கிறது. எனவே, காடுவெட்டி குரு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5.    கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும் அண்மைக் காலமாக இதே போன்று கலப்புமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சடடத்திற்குப் புறம்பான இது போன்ற பேச்சுகளையும், அமைப்புகளையும் தடை செய்யவேண்டுமென்று கோருகிறோம்.

6.    கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இம்மூன்று கிராமங்களையும் பேரிடர் அழிவாக அறிவித்து, புதிய வீடுகளை முழுமையான அளவில் கட்டித்தரவேண்டும். மறுகுடியமர்வு நடத்தப்படும்வரை அம்மக்களுக்கான மாற்று வாழிடத்தை அரசே உறுதி செய்து தரவேண்டும். சேதங்களை உரிய முறையில் மதிப்பிடும் வகையில், தகுதிவாய்ந்த இழப்பு மதிப்பீட்டுக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7.    தாக்குதலாலும் தீயினாலும் மாணவர்களின் சான்றிதழ்களும் மக்களின் குடும்ப அட்டை, சொத்துப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தரும் வகையில் தனி அதிகாரிகளை அந்தந்த ஊர்களிலேயே அமர்த்தி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8.    பொருளாதார ரீதியான தாக்குதல் என்ற முறையில் சேத மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்குமென்று இக்குழு கருதுகிறது. அதனால் அரசு வழங்கியுள்ள ரூ.50,000/- போதுமானதல்ல. எனவே, வீட்டிற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், நிலமும் வழங்கவேண்டும்.

 9.    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

10.   இத்தாக்குதலைத் தடுக்க மாவட்ட காவல்துறையும் நிர்வாகமும் தவறின என்ற முறையில் அவர்கள் மீது தனிவிசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அடிப்படையில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்பாதிப்புகளிலிருந்து உளவியல் ரீதியாக அவர்களை மீட்டெடுக்கும் வகையில், உரிய ஆற்றுப்படுத்தலுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கத் (Guidance and Counselling) தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

******
தொடர்புக்கு : 

1.   Dr.C.Lakshmanan, Co-ordinator, Dalit Intellectual Collective, Chennai /      lchinnaiyan@gmail.com / 9884527359

2.   Stalin Rajangam, Writer, Intellectual Circle for Dalit Actions, Madurai / stalinrajangam@gmail.com / 9994335339                                                                                               (புகைப்படங்கள்: சரத்)

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...