புதன், பிப்ரவரி 3

தீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா

படுத்த சற்றைக்கெல்லாம் அலண்டு தூங்கிப் போனாள் திவ்யா. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்  களிப்பு இன்னமும் அவள் முகத்தில் பூரித்திருந்தது. அவளென்றால் உயிருருகப் பழகும் அவளது 12சி வகுப்புப் பிள்ளைகளும் உறவுக்காரப் பொண்டுகளும் பையன்களும் பூசிய வண்ணப் பொடிகளும் ஜிகினாத்தாள்களும் மேலெல்லாம் சிதறி மின்னிக் கிடந்தன. யாரோ முகத்தில் தீத்திவிட்ட கேக் க்ரீமை கூட கழுவாமல் அப்படியே விட்டிருந்தாள். 

“ஊரு கண்ணு உறவுக்கண்ணு எல்லாம் எம்மகமேல தான். சுத்திப் போடலாம்னு வந்தா லைட்டைக்கூட அமர்த்தாம எப்படி தூங்குது பாரு” என்று பொய்க்கோபம் காட்டி கணவனிடம் மெப்பாக ஞாயம் மேவினாள் மங்கா. மனைவியின் புகாரில் இருக்கும் பெருமிதத்தைக் கண்டுகொண்ட சித்தண்ணன் தன் பங்கிற்கு ஏதும் சொல்லாமல் இருப்பானா? 

“ஆரம் எப்படி ஜொலிக்குது பாரு.. இதவிட சிறுசா செஞ்சிருந்தா மூக்குத்தி எடுப்பாவே இருந்திருக்காது. ஜிமிக்கிய மட்டுமாச்சும் கழட்டி வச்சிருக்கலாமில்ல… படுக்கையில அழுந்தி நசுங்கிறாதா… இன்னொரு பவுன் சேர்த்திருந்தா கொஞ்சம் கெட்டியா இருந்திருக்கும்… அந்த தங்காசாரியும் நீயும் இதே போதும்னு தடுத்துட்டீங்க” என்று மகளின் மேனியை அலங்கரிக்கும் நகையெல்லாம் தன் பங்காக்கும் என்று அவன் பெருமை காட்டிக்கொண்டான். “எல்லாத்தயும் உருக்கிச் சேர்த்ததை இன்னின்ன உருப்படிக்கு இத்தனை பவுனுன்னு அந்தாளு சொன்னப்ப நீயும்தானே  சரிசரின்னு தலையாட்டுன… இப்ப என்னமோ என்மேல பழிபோடுற…” என்று கணவனை கடிந்து கொண்டாள். “சரிவிடு, வெயிட்டா இருந்தாலும் வலிக்குதுன்னு மவ சிணுங்குவா” என்று சமாதானம் செய்தான் சித்தண்ணன்.  

இவர்களது பேச்செதற்கும் அசராமல் திவ்யா தூங்கிக்கொண்டிருந்தாள். பாவம் பிள்ளைக்கு அலுப்புபோல என்று லைட்டை அணைத்துவிட்டு வெளியே வந்தார்கள். காகிதத்தட்டுகள், தேநீர்க்கோப்பைகள், பரிசுப்பொருட்கள், பிரித்தெறியப்பட்ட உறைகள், அறுந்துத் தொங்கிய தோரணங்கள், பலூன்கள் என நடுக்கூடம் முழுக்க அலங்கோலமாகக் கிடந்தன. சிந்திக்கிடந்த கேக், இனிப்புப்பட்சணங்களது துகள்களின் மேல் ஈக்களும் எறும்புகளும் மொய்த்திருந்தன. எல்லாவற்றையும் பெருக்கி ஓரந்தள்ளிவிட்டு அவர்கள் படுக்கப் போகும்போது நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

‘திவ்யா முழிச்சுப் பாரேன்’ என்று யாரோ எழுப்பியதற்கு அரைத்தூக்கத்திலேயே என்ன என்றாள். ‘எங்களைப் போக விடேன்’ என்று கிசுகிசுப்பை அவள் முதலில் கனவில் கேட்கும் குரல் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்தக்குரல் இரைஞ்சுதலைப் போல ஆரம்பித்து எச்சரிக்கை போல இடைவிடாமல் கேட்கவுமேதான் அவள் கண்விழித்தாள். தான் மட்டுமே இருக்கும் இந்த அறைக்குள் கேட்பது யாருடைய குரல்? “உன் காதுகளையே கடிச்சுத் தின்கிற கோபமிருக்கு எங்களுக்கு” என்கிற அந்தக் குரல் அவளது ஜிமிக்கி ஒன்றிலிருந்து வந்தது. “என்னால கழுத்தை நெரிச்சு இப்பவே உன்னை கொல்ல முடியும்” என்றது கழுத்தாரம். “நான் நினைச்சா திருகாணிய கழட்டி மூக்குக்குள்ள தள்ளி மூச்சையே நிறுத்திப்புடுவேன்” என்றது மூக்குத்தி. “லேசா இறுக்கினேன்னு வையி, அவ்வளவுதான் உன் ரத்த ஓட்டமே நின்னுடும்” என்றது மோதிரம். “ஏய், போறப்போ எங்களையும் கூட்டிட்டுப் போங்க. இல்லன்னா இருக்கிற ஆத்திரத்துல இவ வயித்த  குத்திக் கிழிச்சிருவம்” என்று சாமியறை வாசற்படியில்  நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் ரெண்டும் கத்தின. “உங்கப்பன் பண்ணின தப்புக்கு உன்னை தண்டிக்கக்கூடாதுன்னு தான் விட்டிருக்கோம். யோசிச்சு நல்ல முடிவா எடு” -நகைகள் ஒருசேர விடுத்த இந்த எச்சரிக்கையில் இருந்த மூர்க்கம் திவ்யாவை  பதற்றமாக்கியது. 

தான் அணிந்திருக்கும் நகைகள் தன்னிடமே பேசுவதும் அது தனக்கே கேட்பதும் சாத்தியமா? ஒருவேளை இது அதீதமான கற்பனையா? யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? இந்த நகைகளுக்கு அப்பன் பண்ணின கெடுதல் என்ன? கெடுதல் பண்ணலேன்னா நகைகள் ஏன் இப்படி புகாரிட்டு மிரட்டணும்? என்று பலவாறாக யோசித்தாள் திவ்யா. “உங்கம்மா காலையில பீரோவுலிருந்து எடுக்குறப்பவே துள்ளி குதிச்சு ஓடியிருப்போம். சரி, பிறந்தநாளும் அதுவுமா நீ சங்கடப்படக்கூடாதுன்னு தான் இந்நேரம் வரைக்கும் பொறுத்திருந்தோம். இப்பதான் முடிஞ்சிருச்சில்ல, கழத்திவிடு” என்றன. 

“நாங்க உங்கள வாங்கிட்டு வந்தப்புறம் இதுதானே உங்க வீடு” என்று அவள் இன்னதுக்கு பதிலென்று இல்லாமல் பொதுப்படையாகச் சொன்னாள். “சரி, எங்கே வாங்குனீங்கன்னு சொல்லு?” என்று நகைகள் கேட்டதற்கு பதிலின்றி திவ்யா திணறினாள். “காலையில் எங்கப்பம்மாக்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று அப்போதைக்கு அமைதிப்படுத்தப் பார்த்தாள். “விடிஞ்சதும் உங்கம்மா எங்களையெல்லாம் கழத்தி வாங்கி பீரோ லாக்கர்ல வச்சு பூட்டிப்புடுவா. அப்புறம் மறுபடியும் அடைஞ்சிக் கிடக்க வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டன. “இப்போ கழத்தினதும் நீங்க போயிட்டா எங்கப்பம்மாவுக்கு நான் என்ன சொல்லுவேன்?” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள் திவ்யா. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தப்பிக்க முடியாதென்பதை அறிந்திருந்த நகைகளோ, “உனக்குச் சொந்தமில்லாத எங்களை அணிந்திருப்பது உனக்கு உறுத்தவில்லையா” என்று கேட்டன. அந்தக் கேள்வியால் அவள் தடுமாறுவதைக் கண்ட நகைகள் அவளது கவனத்திற்குத் தப்பிப்போன கடந்தகாலச் சம்பவங்களை நினைவூட்டத் தொடங்கின.   

***

பொதுவாக மழைமோட காலத்தில் அடைமழை பெய்யும் நாட்களில் ஐந்து பீரியடுடன் பள்ளிக்கூடம் முடிவதுண்டு. அன்றைக்கு பொட்டுத்தூறலில்லை, வெறுமனே வானம் மூட்டமாகத்தான் இருந்தது. அதற்கே ஐந்து பீரியடா என்கிற ஆச்சரியம் பிள்ளைகளுக்கு. “வழியில் விளையாடாம, பராக்கு பார்க்காம நேரம் பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணும்” என்று ஆசிரியர்கள் விடுக்கும் எச்சரிக்கையை என்றைக்கு பிள்ளைகள் கேட்டிருக்கிறார்கள்? அப்படி கேட்டால் அவர்கள் பிள்ளைகளா? திவ்யாவும் அவளது சேக்காளிகளும் வம்பாடிக்கொண்டு வரும் வழியில் ஏழெட்டு போலிஸ்காரர்கள் நிற்பதைக் கண்டார்கள். இதென்ன புதுவழக்கம் என்பதுபோல அவர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே ஒதுங்கி ஊர்ப்பாதைக்குள் திரும்பினார்கள். அம்மா மட்டும்தான் இருந்தாள் வீட்டில். வந்ததும் உங்கொப்பனைக் காணலன்னு தேடாத. ஒருவேலையா வெளியப் போயிருக்கு. உனக்கு நொறுவாய் வாங்கிட்டு இப்ப வந்துடும் என்றாள் அம்மா. 

“அப்போ உங்கப்பாவுக்காக வாசலைப் பார்த்து நீ உட்கார்ந்திருந்தாய். ஆனால் உங்கப்பா அன்னிக்கு ராத்திரிதான் வீட்டுக்கு வந்தார். இடைப்பட்ட நேரத்தில் எங்கே போயிருந்தார்?” என்றது மூக்குத்தி. “தெரியலியே” என்றாள். “சரி, கவனி”. 

சித்தண்ணன், மாதையன், இடும்பன், முனிமாதன், வளத்தி கோயிந்தன் ஐவரும்தான் முன்வரிசையில் நகர்கிறார்கள். மந்திக்குளம், பெரியமன்னவேடு, கட்டனேரி, அரியாம்பள்ளி, வேடம்பட்டி இன்னும் வடக்கே ஆராங்கோட்டை, முட்டுக்காடு, எம்.நாவலூர் என்று பக்கம்பராந்திரி ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்த இளந்தாரிகள் எழுவதெண்பது பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள். அந்த நிலப்பரப்பை அறிந்தவன்போல் சித்தண்ணன்தான் அவர்களை வழிநடத்துகிறான். உலக்கை, இரும்புக்குழாய், கடப்பாரை, சம்மட்டி, கொந்தாளம், பிக்காசு, பெட்ரோல் கேன், கேஸ் கட்டிங் மிஷின் என்று ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை ஏந்தியிருந்தார்கள். “அய்யோ அப்பா உன் முகமா இது… ஏன் இப்படி விகாரமா இருக்கு… அவங்களோட போகாதப்பா, வந்துடுப்பா” என்று திவ்யா கத்தினாள். “நீ பார்க்கிறது அவங்களோட கடந்தகாலத்தை. கடந்தகாலத்தில் இருக்கிற அவங்களுக்கு நிகழ்காலத்திலிருக்கிற உன்னோட கூப்பாடு கேட்காது, கவனி” என்றது ஜிமிக்கி. ஆங்காரமான கூச்சலையும் ஆபாசமான வசைகளையும் எழுப்பிச் செல்லும் அவர்கள் நிகழ்காலத்திற்கே வந்தாலும் என் கூப்பாடு எப்படி கேட்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் திவ்யா. 

சித்தண்ணன் கும்பல் நுழையும்போது அந்தக் காலனியில் கதவிருந்த வீடுகள் அனைத்துமே பூட்டிக் கிடந்தன. வேப்பமரமொன்றின் அடியில் கிடந்த கட்டிலில் ஒடுங்கிச் சுருண்டிருந்த  ஒரு கிழவியைத்தவிர அங்கொரு குஞ்சுகுளுவான் கூட இல்லை. ‘வூட்டுக்கு ஒருத்தனையாவது பொளந்துகட்டணும்’ என்று வந்தால் தப்பித்துவிட்டார்களே என்கிற ஆத்திரத்திலும், நல்லவேளையாக ஒருத்தரும் இல்லை என்கிற சந்தோசத்திலும் அந்த பட்டப்பகலில் அவர்கள் அடுத்தடுத்து நடத்தும் அட்டூழியங்களுக்கு போலிசும் துணை.    

பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகளை அவளது அப்பாவும் அவனது கூட்டாளிகளும் பெயர்த்தெடுக்கிறார்கள். வீட்டுக்குள் டிவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், புத்தக அலமாரி, கம்ப்யூட்டர், வெஸ்டர்ன் டாய்லெட் என்று இருப்பதைப் பார்த்ததும் அவர்களது கண்கள் சிவக்கின்றன. “இவங்களுக்கு வந்த சொகுசப் பாத்தியா? இதெல்லாம் நம்ம வூடுகள்லகூட இல்லியே” என்கிறான் குமைச்சலோடு ஒருவன். “பண்டபாத்திரம் எதுவும் இங்க மிஞ்சக்கூடாது, வேணும்கிறத எடுத்துக்கிட்டு மிச்சத்த அடிச்சு நொறுக்குங்க” என்று ஆணையிடுகிறான் இன்னொருவன். “எல்லாம் இன்னியோட முடிஞ்சது… ஒருத்தன் வாலாட்டினா ஊரையே அழிப்பாங்கன்ற பயம் வரணும். அப்பதான் இனியொருத்தனும் நம்ம பொண்ணுங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கொக்கரித்தபடியே மற்றொருவன் தவசதானியங்களின் மேல் மூத்திரம் பெய்கிறான். அவன் எதிரில் இருப்பதாக நினைத்து கூசிப்போன திவ்யா “த்தூ வெட்கங்கெட்ட மிருகமே” என்று திட்டுகிறாள். “எந்த மிருகம் இப்படியான அட்டூழியங்களைச் செய்கிறது?” என்று கழுத்தாரம் கேட்டதற்கு திவ்யாவிடம் பதிலில்லை. 

பீரோக்களை நெம்பித் திறந்து கேஸ் கட்டிங்கில் திறக்கிறார்கள் லாக்கர்களை. துணிமணிகளைத் தாறுமாறாக இழுத்தெறிந்து நடுவீட்டில் போட்டு தீவைக்கிறார்கள். தீயில் வீசப்பட்ட படிப்புச் சான்றிதழ்கள், ரேசன் அட்டை, ஆதார், கேஸ் புக் எல்லாம் தீய்ந்து கருகுகின்றன. தன்னைவிட ஐந்தாறு வயது குறைந்த மாணாக்கன் ஒருவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புத்தகப்பையையும் சீருடையையும் எடுத்து நெருப்புக்குள் வீசும்போது திவ்யா தன்னுடல் பொசுங்குவது போல் துடித்துப் போனாள். பாடப்புத்தகங்களும் சீருடைகளும் இல்லாமல் அந்த வீடுகளின் பிள்ளைகள் நாளை எப்படி பள்ளிக்கூடம் போவார்கள் என்கிற யோசனை இல்லாத இவனெல்லாம் படித்து என்னத்த கிழிக்கப்போறான் என்கிற கவலை பீடிக்கிறது திவ்யாவை. அவளது மனவோட்டம் அறிந்த குத்துவிளக்கு சொன்னது: “அவன் படித்து எதையும் கிழிச்சிடக் கூடாதுன்னுதான் உங்கப்பா மாதிரியான ஆட்கள் அவனை இப்படி கிரிமினலாக்குறாங்க” 

அவர்களுக்கு இன்னும் வெகாளம் அடங்கவில்லை.  அழைப்புக்காக நெடுஞ்சாலையில் போலிஸ் வேன் அருகில் காக்கவைத்திருந்த ஜேசிபியை வருவிக்கிறார்கள். அது வீடுகளின் கூரைகளையும் வாரைகளையும் பிய்த்தெறிகிறது. முட்டிச்சாய்க்கிறது சுவர்களை. இவனுங்களுக்கு சாமி ஒரு கேடா என்று தீப்பாஞ்சியம்மன் கோவிலையும் தகர்க்கிறது. காலனியின் 126 வீடுகளுக்குமான நீர்த்தேக்கத்தொட்டியைத் தாங்கி நிற்கும் தூணை அடித்துச் சரிக்கிறது. தலை சிதறிச் செத்தவனின் ரத்தம்போல் வீணில் பாய்கிறது நீர். மேஸ்திரி பொன்னனின் ஈரடுக்கு வீட்டுவாசலில் வாகனங்களையெல்லாம் இழுத்துப் போட்டு நெருப்பு வைக்கிறார்கள். பெட்ரோல் டேங்க் வெடித்து வீட்டுக்குள் தீப்பிழம்பு விழுந்தெரிகிறது. வீட்டுக்குள்ளிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும்போல, இடியொத்த பெருஞ்சத்தத்தால் அந்த வட்டாரமே கிடுகிடுங்குகிறது. அடர்ந்திருண்ட கரும்புகையின் உள்ளேயிருந்து அவளது அப்பனும் அவனது கூட்டாளிகளும் வெற்றிப் பெருமிதத்தோடு வெளியே வருகிறார்கள். “அவங்கள நூறு வருசத்துக்குப் பின்னாடி தூக்கி வீசியிருக்கோம். எழுந்து வர்றதுக்கு இந்த ஜென்மம் போதாது.. மறுபடி தலையெடுக்க மண்ணள்ளித் திங்கனும்…” என்று  எகத்தாளமாக பேசிக்கொண்டு வரும் அவர்களைப் பார்ப்பதற்கு அஞ்சி திவ்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறாள். 

“கண்களை அகலத் திறந்து பார்க்கவேண்டிய இந்நேரத்தில் மற்றவர்களைப்போல கண்ணை மூடிக்கொள்ளும் தவறை நீயும் செய்யாதே திவ்யா. போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாகரிகத்தின் சிதிலங்கள் போல அந்தக் காலனி இருப்பதைப் பார். கொலை வெறியேறிய உனது அப்பன்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க பாம்பும் தேளும் மேயும் முட்புதர்களிலும் கரும்புக்காடுகளிலும் பதுங்கிக் கிடந்து வெளியே வந்த அந்த மக்களுக்கு உடுத்தியிருந்த துணியத்தவிர மிஞ்சினது என்ன என்று பார்க்கமாட்டாயா? வீடுவாசல் அற்றவர்களாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள் இந்த ஐப்பசிக்குளிரில் வெட்டவெளியில் எப்படி வெடவெடத்து நடுங்குகிறார்கள் என்பதை காணமறுக்கும் அளவுக்கு உன் மனம் கல்லா  இரும்பா…?”  -நெத்திச்சுட்டியும் மோதிரமும் எழுப்பின இந்தக் கேள்விகளுக்குப் பதிலற்றுப்போன திவ்யா கண்களை இறுக மூடியிருந்தாள்.  

“திவ்யா கண்ணைத் திற” என்று அப்பா உலுக்கியதில் கண்விழித்த திவ்யா எங்கே அந்த எரியும் வீடுகளும் குளிரில் நடுங்கும் குழந்தைகளும் என்று தேடினாள். “நிகழ்காலத்துக்கு வா திவ்யா” என்று கிசுகிசுத்தது தோடு. அவள் நிதானத்துக்கு வர கொஞ்சம் நேரமெடுத்தது. எதிரே இருந்த பெற்றவர்களைப் பார்க்கப் பிடிக்காதவளாக அவள் தான் அணிந்திருந்த நகைகளை விறுவிறுவென கழற்றத் தொடங்கினாள். “ஏன் தங்கம் எழுந்தும் எழாம இவ்வளவு அவசரமா நகைகளைக் கழட்டுற?” என்ற அம்மாவிடம், “இந்த நகைகள் எனக்கு வேணாம்” என்றாள். “ஏம்மா இதுகளுக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தானேம்மா இருக்கு!” என்ற சித்தண்ணனை அவள் அற்பமாகப் பார்த்தாள். “ஊராமூட்டு நகைன்னா நல்லாத்தாம்பா இருக்கும்” என்றாள். “என்னது ஊராமூட்டு நகையா? நம்மளுதுமா” என்றான். “நம்மக்கிட்ட இருக்கிறதாலயே நம்மோடதுன்னு ஆயிடாதுப்பா.”

எதை மனதில் வைத்து மகள் இப்படி பேசுகிறாள் என்று புரியாத சித்தண்ணன், “இது உனக்கே உனக்குன்னு அளவு கொடுத்து செஞ்சதுமா. தங்காசாரிக்கிட்ட நீதானேம்மா அன்னிக்கு அளவு கொடுத்த” என்றான். “ஆமா அளவு கொடுத்தேன். காலனி வூடுகள்ள நீங்க களவாண்டு வந்த நகைகள உருக்கித்தான் எனக்கு நகை செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கே மறுத்திருபேன்…” 

“அதொன்னும் திருட்டு இல்ல. அவங்கக்கிட்ட பலவந்தமா வசூலிச்ச அபராதம்.” 

அப்பனின் பேச்சால் அருவருப்படைந்த திவ்யா “இதெல்லாம் எத்தினி வருசத்து உழைப்பு அவங்களுக்கு? ச்சே… திருப்பிக் கொடுத்துட்டு வாங்கப்பா” என்று சீறினாள். “உனக்கு பிடிக்கலன்னா விடு. திருப்பிக் கொடுக்கவெல்லாம் முடியாது” என்று சொன்ன அப்பனின் குரலில் இருந்த இளக்காரம் அவளை கொந்தளிக்கச் செய்தது. “குருவியாட்டம் அவங்க சிறுகச்சிறுகச் சேர்த்தையெல்லாம் இப்படி கொள்ளையடிச்சு கொண்டாந்து புழங்குறீங்களே இதிலெல்லாம் தீட்டு இல்லையா உங்களுக்கு?” என்று வீசியடித்தாள் நகைகளை. 

சித்தண்ணனும் மங்காவும் வாயடைத்து நின்றார்கள். நகைகளும் குத்துவிளக்குகளும் நகரத்தொடங்கின.

நன்றி: ஆனந்தவிகடன் 03.02.21

ஓவியங்கள்: அரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...