வெள்ளி, நவம்பர் 27

ஜூமாயணம் - ஆதவன் தீட்சண்யா



அனைவருக்கும் வணக்கம். அஞ்சுவது அஞ்சாமை பேதமை. இந்தக் கொரானாவுக்கு நாம் அஞ்சித்தானாக வேண்டும். அதற்காக நமது கலை இலக்கியச் செயல்பாடுகளை முடக்கிப் போட்டுக்கொள்ளத் தேவையில்லை. சாத்தியமான வழிகளில் நமது செயல்பாடுகளைத் தொடர்வோம். இன்றைய இணையவழிச் சந்திப்பு அந்த நோக்கிலானதுதான். வாராவாரம் வெள்ளியிரவு ஒரு இலக்கிய ஆளுமையுடன் கதையாடல் என்கிற நம்முடைய தொடர்நிகழ்வு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பங்கேற்புடன் இப்போது தொடங்குகிறது. அவருடனான உரையாடலை நூதனன் ஒழுங்கு செய்வார். கேள்வியெழுப்ப விரும்புகிறவர்கள் சாட் பகுதியில் குறுஞ்செய்தியாக பதிவிடுங்கள். 

நூதனன்: வணக்கம் தோழர். எப்பவும் பயணத்திலேயே இருக்கும் உங்களுக்கு கொரானா ஊரடங்கால் நீண்ட ஓய்வு கிடைத்திருக்கிறது. ஏதும் புதிதாக எழுதிக்கிட்டிருக்கீங்களா?

ஆதவன்: அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். இந்தக் காலத்தில் நான் எதையும் எழுதவில்லை. ஊரடங்கானாலும் ஆன்லைன் கிளாஸ் நடத்துகிற கல்விவணிகப் பயங்கரவாதி அல்லது டாஸ்மாக்கை திறந்துவைக்கின்ற அரசாங்கம் போல ஒரு எழுத்தாளரும் இருக்கணுமா என்ன? இயல்பாக எல்லா வேலைகளையும் செய்தபடியே எழுதவும் படிக்கவுமானதுதான் எனது மனஅமைப்பு போல. அதீத குளிர்ச்சி கண்ணாடியை நெரித்துச் சிதறடிப்பது போல, இந்த ஊரடங்கின் அமைதி என் மனவொருமையைச் சிதறடிக்கிறது. வரலாற்றின் எந்தப் பேரழிவிலும் பிரளயத்திலும் மனிதகுலம் இப்படி முடங்கிக் கிடந்ததில்லை. புழுபூச்சியெல்லாம்கூட தம் சுதந்திரத்தை இம்மியளவும் இழக்காதிருக்கிற போது நான் ஏனிப்படி அடைந்து கிடக்கிறேன் என்கிற கேள்வி என்னை வாட்டுகிறது. கொரானாவிலிருந்தும் ஊரடங்கின் பாதிப்பிலிருந்தும் தப்பித்துக்கொள்ள எத்தனிக்கும் மக்களைத் தோற்கடிக்க ஆட்சியாளர்கள் கைக்கொள்ளும் மூர்க்கம் என்னை தீராப்பதற்றத்திற்குள் தள்ளுகிறது.

நூ: குறிப்பான விசயங்கள்…

ஆ: ஊரடங்கு அறிவிக்கப்பட்ட விதமே மூர்க்கமானது தானே? ஒருநாள்  ஊரடங்கிற்கு மூன்றுநாட்களுக்கு முன்பே அறிவித்த பிரதமர், 21நாள் ஊரடங்கை நாலேநாலு மணிநேரத்திற்கு முன்பாக அறிவித்தார். டீமானிடைசேஷன் அறிவிக்கப்பட்ட அதே பாணி. இவ்வளவு குறுகிய அவகாசத்தில் அன்னந்தண்ணி ஆகாரம் எதற்காவது சுதாரிக்க முடிந்ததா? வெளியூர் போனவர்கள் வீடு திரும்பவாவது அவகாசம் கொடுத்திருக்க வேணாமா? பெருநகரங்களில் நிர்க்கதியாக விடப்பட்ட  லட்சக்கணக்கானவர்களை வீடுகொண்டு சேர்த்துவிட்டுத்தானே ஊரடங்கை அறிவித்திருக்க வேண்டும்?  நாளொன்றுக்கு ரெண்டரை கோடி பயணிகளை ஏற்றியிறக்குகிற திறன்கொண்ட ரயில்களை வைத்திருக்கும் அரசு, பச்சிளம் பாலகர்களைக்கூட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை நடந்தே சாகும்படி கைவிட்டதை விடவும் கொடூரமானதாக எதைச் சொல்வது? நடக்கிற தூரம்னு இவ்வளவு நாளும் நமக்கிருந்த மனக்கணக்கையும் சித்திரத்தையும் அந்தப் பிஞ்சுப்பாதங்கள் நடந்தழித்தக் காலமிது.

ஊரையடக்கத் துணிந்தவர்கள் முதலில் மக்களோட பசியை அடக்கும் வழியைத்தானே யோசித்திருக்கணும். நாட்டின் சேமிப்புக்கிடங்குகளில் மலைமலையாய் உணவுத்தானியம் குவிந்திருக்கையில், செத்து சாலையில் சிதறிக் கிடக்கும் நாயின் சதையைத் தின்று ஒருவர் பசியாறும் அவலம். இந்த அரசின்கீழ் மனிதநிலையானது காக்கை கழுகுகளின் மட்டத்திற்கு பின்னிறக்கப் பரிணாமத்தில் வீழ்ச்சியுறுவதைக் காட்டும் கொடுஞ்சான்று இது. மனிதரல்லாத பிற கோடானுகோடி ஜீவராசிகளுக்கு அரசுகளில்லை. அதனாலேயே அவை இப்படி பசியிலும் தாகத்திலும் பரிதவிக்காமல் இருப்பதாக நினைக்கிறேன்.

ஊரடங்கின் நெரிப்பு தாளாமல் வெளியே வரும் மக்களை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கையாளும் விதம்… போலிசாரது வக்கிரங்களும் வன்மங்களும் தண்டனை முறைகளும்… முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மனிதத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் அதற்கு எதிர்மறையாகச் செயல்படுகிறார்கள்.

நூ: தோழர், போலிஸ் என்றதும்தான் ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது. திருச்சியில் தமுஎகச நடத்தின சிறுகதை நூற்றாண்டுவிழாவில் நீங்க பேசுறப்ப, உங்க நாட்டு- அதாவது லிபரல்பாளையத்தில்- காவல்துறை பற்றி ஒரு கதை எழுதியிருப்பதாக சொன்னீங்க. பிறகொரு நேர்காணலிலும் சொல்லியிருந்தீங்க. அந்தக்கதை எதிலே வெளியானது? கடைசியா வெளியான உங்க தொகுப்பில்கூட அந்தக் கதை இல்லையே?

ஆ: “பேகம்புரா” என்கிற அந்தக் கதை எதிலும் வெளியாகவேயில்லை.

நூ: அடக்கொடுமையே, இது பெருங்கதையா இருக்கே…?

ஆ: சூழல் அப்படி. ரெண்டொரு பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். ஏற்கனவே பத்திரிகைகளுக்கு கடுமையான கெடுபிடிகள். எதுக்கு வம்புன்னு வெளியிடத் தயங்கினதை உணர முடிஞ்சது. என் கதை எப்போ வரும்னு கேட்க எனக்கு மனமொப்பல. பிறகு அந்த வருசம் புக்ஃபேருக்கு வந்த தொகுப்புல சேர்க்கலாம்னு பார்த்தேன். மேல கீழ ரெண்டுபேருமே போலிசை நம்பி ஆள்கிறவங்களா இருக்கிறப்ப இந்தக்கதை வம்பை வலிய இழுத்துவிட்ரும்னு பதிப்பாளருக்கும் பயம். வேறு சிலரும் இதே பயத்தை வெவ்வேறு வார்த்தைகள்ல சொன்னார்கள். சொல்லின் பொருளறியாமலா எழுத்தில்  வேலை செய்துக்கிட்டிருக்கோம்? கடுப்பில் எங்கேயோ தூக்கிப் போட்டுட்டேன்.

நூ: சூழல் அவ்வளவு கெடுபிடியாக இருக்கிறதா தோழர்?

ஆ: நானப்படி உணர்கிறேன். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்கிறது வெறுமனே கருத்தை வெளிப்படுத்துவதற்கானது மட்டுமல்ல, கருத்தை வெளிப்படுத்தின பிறகும் சுதந்திரமாக இருப்பது தொடர்பானது என்கிறார் ஃபாலி நாரிமன். ஆனால் இங்கு அது அரசியல் சாசனத்தின் எழுத்தற்ற பக்கமாக மாறிக் கொண்டிருக்கிறது.

நூ: அஞ்சத்தக்க இந்த நிலைமையையும் கடக்கத்தானே வேண்டும் தோழர். அந்தக் கதையை மட்டும் தனி பிரசுரமா கொண்டுவந்தாலென்ன? ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்’ கதையை விஜயானந்த் தனியாக கொண்டுவந்த மாதிரி.

ஆ: தேடிப் பார்க்கிறேன், கிடைத்தால் வெளியிடுவோம்.

நூ: தோழர், அந்தக் கதைய இப்ப எங்களுக்காக சொல்ல முடியுமான்னு பங்கேற்பாளர்களில் பலரும் சாட் பகுதிக்கு செய்தி அனுப்பிவருகிறார்கள். எனக்கும்கூட அதே வேண்டுகோள் இருக்கு…   

***

நண்பர்களே, இதுவரை வெளிவராத பேகம்புரா கதையை சொல்லணும்கிற உங்களோட கோரிக்கையை எந்தளவுக்கு நிறைவேற்ற முடியும்னு தெரியல. வாய்மொழிக் கதைய எழுதுறதும், எழுதப்பட்ட கதையச் சொல்றதும் சரிதானாங்கிற கேள்வி எனக்கு இருந்துக்கிட்டேயிருக்கு. ரெண்டுமே கதைகளை பரவலாக்குகிற முயற்சிதான். ஆனால், வாய்மொழிக் கதை எழுத்தாக வர்றப்ப காலங்காலமா கதை சொல்லிக்கிட்டிருந்தவங்க மறைந்து எழுதின ஆள் முன்னிலைப்படத் தொடங்குகிறார். அதாவது சொல்வதில் கையாளப்பட்ட மொழி, விவரணை, அதுவழியாக விரியும் மனக்காட்சிகள் எல்லாத்தையுமே கட்டுப்படுத்தி விடுகிறார். இதே ஆபத்துதான் எழுதப்பட்ட கதைகளை சொல்லத் தொடங்கும்போதும் நிகழுது, எனது கதை இன்னொருவரது வாய்வழிப் பண்டமாக மாறுது. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே - இந்த இரண்டு மனநிலைகளும் அற்ற கதை ரசிகர்கள் உருவாக்கப்படுறாங்க. அவங்க உண்மையில் என் கதைக்கானவர்கள்தானா, அவர்களிடம் நான் எழுதிய கதைதான் சொல்லப்படுதா என்கிற சந்தேகம் எனக்கிருக்கு. சாரம்சத்தில் அவங்க கதை சொல்கிறவர்களின் ரசிகர்களாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர எனது கதைக்கானவர்களாக இருக்கும் வாய்ப்பு குறைவே. ஆகவே, இப்போ நான் சொல்லப்போற கதை நான் எழுதிய அதே கதையைத்தானா என்கிற குழப்பத்தோடே உங்கள் முன்னே இருக்கிறேன்.

***

லிபரல்பாளையம் ஊடகவரலாற்றில் இப்போதுதான் முதன்முறையாக ஒரே விசயம் தொடர்ந்து மூன்று நாட்களாக பரபரப்பான தலைப்புச் செய்தியாக நிலைகொண்டிருக்கிறது. அவ்வளவு தாக்கமுள்ள ஒரு செய்தி கிடைத்தால் வெறும் தலைப்புச்செய்தியாக மட்டும் விட்டுவிடுமா ஊடகங்கள்?  தலையங்கம், நடுப்பக்க கட்டுரை, விவாத அரங்கு, கருத்துக்களம், சொற்போர், வார்த்தை குஸ்தி, வெல்லும் சொல், கொல்லும் சொல், சொல்லும் லொள்ளும் என்று விதவிதமான பெயர்களில் விவாதிக்கப்பட்ட விசயம் என்னவென்றால், ஜனாதிபதி வாயால் வடை சுடும் வல்லாளன் (இனி வாவசுவ) அன்று தூங்கப்போகும் தருவாயில் படுக்கையில் இருந்தபடியே தனது ட்விட்டர் பக்கத்தில் செய்த அதிரடி அறிவிப்புதான்.

அப்போதே வாவசுவ ஆதரவாளர்கள் “தூங்கப்போகையிலும் தொண்டாற்றும் தூயவனே”, “படுக்கும் வேளையிலும் பணி மறவா வாயகனே”, “நீ படுக்கிறாய் நாடோ எழுகிறது” என்று சமூக ஊடகங்களில் துதிபாடத் தொடங்கி விடுகிறார்கள். அதைக் கண்டதுமே இதுதான் இப்போது பரபரப்பாக்கப்பட வேண்டிய செய்தி என்பதற்கான சூசுக உத்தரவு வந்துவிட்டதாக புரிந்து கொள்கிற ஊடகங்கள் அந்த நொடியிலிருந்தே தொடங்கும் அலப்பறை மூன்று நாட்களாகியும் ஓயவில்லை.

ஜனாதிபதியின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தொடர்கிறது

அடுத்த அதிரடி ஆரம்பம்!?

லிபரல்பாளையத்தில் காவல்துறை கலைப்பு

- இப்படியாக ஊடகங்கள் பேசத்தொடங்கினப்ப, இந்தாள் இப்படி ஆரவாரமா சர்ஜிகல் ஸ்ட்ரைக்னு அறிவித்த பலதும் நடைமுறைக்கு வராமல் போனதை கடந்த ஆறு வருசமா பார்த்துச் சலித்திருந்த சனங்கள் இதுவும் ஊடகங்களின் துணையோடு விடப்பட்ட ஒரு போட்டோஷாப் புஸ்வானம்தான் என்றே முதலில் நினைக்கின்றனர். போலிஸ் துணையில்லாமல் பொடக்காலிக்குப் போகவும் அஞ்சுகிற இந்தாளாவது காவல்துறையை கலைப்பதாவது என்று கேலி பேசிக்கொண்டே தூங்கிப் போகிறார்கள். விடியலில் செய்தி உறுதியானபோது அவர்களுக்கு நம்பமுடியாத திகைப்பு.

இந்தாள் உருப்படியாய் செய்த ஒரே நல்லவிசயம் இதுதான் என்று ஜனாதிபதியை பாராட்டினாலும் எதற்காக காவல்துறை கலைக்கப்பட்டது என்கிற கேள்வி நாட்டுமக்கள் அனைவரையுமே குடைகிறது.  கலைப்புக்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று தீவிரமாக விவாதிக்கத் தலைப்படுகிறார்கள்.

போனவாரம் போலிஸ் ஸ்டேசன்ல வச்சு ரெண்டுபேரை அடிச்சுக் கொன்ன விசயம் உலகம் முழுக்க பேச்சாகி அரசாங்கத்துக்கு ரொம்ப கெட்டப் பேராயிடுச்சின்ற கடுப்புல இப்படி…?

இல்லேன்னா மட்டும் ரொம்ப நல்ல பேராக்கும்? போலிஸ் ஸ்டேசன்ல வச்சு ஆட்கள அடிச்சுக் கொல்றது என்னமோ இதுதான் முதல்தடவை மாதிரி பேசுறியே? அன்னாடம் சராசரியா அஞ்சுபேரை ஸ்டேசன்ல வச்சு கொன்னுக்கிட்டேதான் இருக்காங்க.

இல்லப்பா, இது ரொம்பவும் கொடூரமா…

என்ன பெரிய கொடூரத்தைக் கண்டுட்ட? உத்திரத்துல கட்டித் தொங்கவிட்டு குதத்துல லத்திய சொருகுறதெல்லாம் போலிஸ் அகராதியில கொடூரமோ குற்றமோ கிடையாது. அவங்கள பொறுத்தவரை அது வெறுமனே விசாரிக்கிற முறையில் ஒன்னு, அவ்வளவுதான்.  

நீ சொல்றதும் சரிதான். கண்ணுல மொளகாப்பொடி போடுறது, நகத்தையும் பல்லையும் கொறடால புடுங்குறது, நாக்கை பிளேடால கிழிச்சு விடறது, ஐஸ்கட்டி மேல படுக்க வைக்கிறது, லாடம் கட்டறது, கட்டிப்போட்டு ஒடம்பு முழுக்க ஒலக்கைய உருட்டுறதுன்னு இவனுங்க பண்ற கொடுமைங்க ஒண்ணா ரெண்டா? இவங்கக்கிட்டயிருந்து மக்களை காப்பாத்துறது தான் பெரும்பாடா இருக்கும் போல.  

இப்படி சித்ரவதை பண்றதுக்குன்னே தனியா இடம் பிடிச்சி வச்சிருக்காங்களாமே, மெய்யா?

ஆமா, சாவாரம்னு ஒரு அதிகாரி இருந்தானே தொடப்பக்கட்டை சைசுக்கு மீசைய வச்சிக்கிட்டு… அவன் பீரியட்ல ஒர்க்‌ஷாப்னு  இந்த  சித்ரவதைக் கூடங்கள அங்கங்கே உருவாக்கி வச்சிருந்தான். கைக்குச் சிக்கினவங்கள பிடிச்சிக்கிட்டுப் போவான். மாசக்கணக்கா சித்திரவதை பண்ணி பொணமாவோ நடைப்பொணமாவோ வெளிய தூக்கிப் போடுவான். அங்கே நடந்த கொடுமைகளைப் பார்த்து ஊருலகமே அங்கலாய்ச்சது. ஆனா இந்த 56 இன்ச் வாயன் கண்ணுங்காதும் இல்லாதவனாட்டம் கம்முனு கிடந்தானே…

கேட்கலேன்னாலும் பரவால்ல, இந்தாளு அவனுக்கு தங்கப்பதக்கம் கொடுத்து கௌரவம் செஞ்சானே…

விசாரணைக்கு கூட்டியாந்த ஒரு பொண்ணை லாக்கப்ல வச்சு பலாத்காரம் பண்ணிட்டு அவ பிறப்புறுப்புல செருப்பாணியைக் கொட்டி சித்திரவதை செய்த விசயம் வெளிய தெரிஞ்சதால பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற கொந்தளிப்பைத் தணிக்க இப்படி போலிஸ்துறையவே கலைச்சிட்டதா இந்தாள் டிராமா போடுறாப்லியா? 

அந்தளவுக்கு பெண்களை- அவங்க உணர்வுகளை மதிக்கிற ஆளுன்னுகூட ஒரு பேச்சுக்கு வச்சுக்க, அதுக்காக சம்பந்தப்பட்ட போலிசுங்க மேல நடவடிக்கை  எடுத்தால் அதிலொரு லாஜிக் இருக்கு. ஒட்டுமொத்த துறையவும் கலைக்கிறதா அறிவிச்சதுதான் புரியமாட்டேங்குது. 

ராவாராத்திரியில் ஒரு கிராமத்துக்குள்ள புகுந்த போலிஸ், ஆணு பொண்ணு அவ்ளோ பேரையும் அடிச்சு நொறுக்கினதுமில்லாம அங்கிருந்த 19 பொண்ணுங்கள கூட்டா சூறையாடின கொடுமை நாலுநாள் கழிச்சுத்தான் வெளிய தெரிஞ்சது. நாடே பதறி தவிச்சது. அந்தச் சனங்களோட பண்டம் பாத்திரங்களை ஒடைச்சி… அவங்களோட தவசதானியத்துல டீசலை ஊத்தி… கிணத்துல மலங்கழிச்சு… ஆடுகோழிகளை அறுத்து அங்கியே அடுப்பேத்தி ஆக்கித் தின்னுப்புட்டு… ச்சீய்… கொஞ்சநஞ்ச அட்டூழியமா? ஊருலகம் காணாத வக்கிரமான சித்ரவதைகள்னு புகார் கிளம்பினது. அம்னஸ்டீ இன்டர்நேஷனல்கூட அறிக்கை கொடுத்தது. எதிர்க்கட்சிகளோட கேள்விக்கும் பதிலே சொல்லாத இந்தாளு போலிஸ் மேல ஒரு குத்தமுமில்லேன்னு பாராட்டுப்பத்திரம் வாசிச்சாப்ல.

இந்தாளுக்கு நியாயவுணர்ச்சி இருந்திருந்தா, அம்மாவையும் மகனையும் அம்மணமாக்கி அவங்க பிறப்புறுப்புல கரண்ட்டு ஷாக் வச்சு கொன்னுட்டு தப்பியோட முடியாததால தற்கொலை பண்ணிக்கிட்டதா போலிஸ்காரங்க புளுகினப்பவே டிபார்ட்மென்டை கலைச்சிருக்கணும்…

நியாயத்துக்கு ஸ்பெல்லிங் என்னன்னு கேட்கிற ஆள்கிட்ட நியாயவுணர்ச்சியா? அந்தாளே இன்னொன்னுல சிரிப்பாரு.

ஆமா, போலிஸ்காரங்க எவ்வளவு அட்டூழியம் செய்தாலும் ஈயெறும்பு அண்டாம அவங்கள பாதுகாத்த இந்தாளு இன்னிக்கு ஒட்டுமொத்த டிபார்ட்மென்டையும் கலைச்சிருக்கார்னா கஸ்டோடியல் டெத்தோ ரேப்போ காரணமா இருக்காது.

உன் சந்தேகம் சரிதான். போலிஸ்காரங்க என்ன குற்றம் செஞ்சாலும் அதிகபட்சத் தண்டனையே ஆயுதப்படைப் பிரிவுக்கு மாத்துறதுதான்னு சீன் போடுற இந்தாளோட இந்த அறிவிப்புக்கு நாம யூகிக்கிறதைவிட வலுவான வேறு காரணம் இருக்கத்தான் வேண்டும்.

ஒருவேளை  போலிஸ்காரங்க யாராச்சும் இந்தாளை செமையா மொத்தி, வெளியே சொன்னா அவமானம்னு உள்ளுக்குள்ளயே குமுறிகுமுறி அந்த பழிவாங்கும் வேகத்துல இந்த முடிவை அறிவிச்சிட்டாப்லியா?

அட நீ வேற, அவ்வளவு துணிச்சலா மிதிக்கிறளவுக்கு போலிஸ்ல யாரிருக்கா?

அப்படி நடந்திருந்தா நமக்கு ரெட்டைப்பலன். அந்தாளுக்கும் அடி, போலிசுக்கும்…

ஹ்ஹே… உருப்படியா ஏதாச்சும் பேசுங்கம்மா?

என்ன பெரிய காரணம் இருக்கப்போகுது? வயித்துப்பாட்டுக்கு ரயில்ல பிச்சையெடுக்குற பொடிப்பிள்ளைகள்லயிருந்து வாரிச்சுருட்டுற பிஸினஸ் கம்யுனிட்டி வரைக்கும் அவ்வளவு பேர்க்கிட்டயுமிருந்து அன்னாடம் கோடிகோடியா வசூலாகிற மாமூல்ல பங்கு சரியா பிரிஞ்சிருக்காதோ?

அட, அந்தாள் வாங்காத லஞ்சமா இல்லே அந்தாள்ட்ட இல்லாத பணமா?  கார்ப்பரேட்டுங்க அள்ளிக் கொட்டுறதெல்லாம் போதாதா?

நீ சொல்றதும் சரிதான், இந்தாளு கார்ப்பரேட்டுங்களுக்கு அள்ளிக் கொடுக்குறாப்ல, பதிலுக்கு அவங்க…

-இப்படி- வடக்கே பீஸ்மீர் (பீஸ்களாக துண்டாடப்பட்ட பகுதி) தொடங்கி தெற்கே ஏமாறான்பட்டணம் வரை– நாட்டின் தலைநகர் ஹிம்ஸாபுரியிலிருந்து கடைக்கோடி காவியண்டார்புரம் வரை- எங்கு பார்த்தாலும் சனங்களிடம் இதே பேச்சு. பேய்பிசாசு அல்லது பாம்புக்கதைகள் முடிவின்றி ஒன்றையடுத்து இன்னொன்று சொல்லப்படுவது போல மக்கள் 159 ஆண்டுகால போலிஸ் கொடுமைகளைச் சொல்லி ஜனாதிபதியின் முடிவு கலைப்பு சரிதான் என்கிறார்கள்.

சித்ரவதைக்கு எதிரான சர்வதேசப் பிரகடனத்தை அமல்படுத்துவதற்கு இதுகாறும் மறுத்துவந்த ஜனாதிபதி வாவசுவ, இப்போது திடீரென காவல்துறையைக் கலைத்திருப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று கோருகின்றன எதிர்க்கட்சிகள்.

காரணம் எதுவாகவும் இருக்கட்டும், காவல்துறை கலைப்பானது மனிதத்தன்மையுள்ள நாகரிகச்சமூகமாக மாறுவதற்கு லிபரல்பாளையம் எடுத்துவைத்துள்ள முதலடின்னு வரவேற்க ஏன் தயங்குறீங்க என்று கேட்டு ‘ஜனாதிபதி ரசிகப்படை’யின் செய்தித் தொடர்பாளர் எதிர்க்கட்சிகளின் வாயடைக்கப் பார்த்தார்.

காவல்துறையை கலைச்சிட்டதாலயே எல்லாமே முடிந்துவிட்டதாக கருத முடியாது. என்கவுன்டர், லாக்அப் மரணங்கள், துப்பாக்கிச்சூடுகள், காணாப்பிணமாக்கல் (ஒரு பங்காளவின் மதிற்சுவர் விழுந்து மாண்டுபோன 16பேரின் பிணத்தை உறவினர்களுக்கும் தெரிவிக்காமல் இவர்களே எரித்தது உட்பட), பெண்போலிஸ் உள்ளிட்டோருக்கு இழைத்த பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, திருட்டு, கொள்ளை, விபச்சார விடுதி நடத்தும் பாலியல் சுரண்டல், சிலைக்கடத்தல், செம்மரம் கடத்தல், மணல்கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் தொடர்பு– என்று காவல்துறையினர் இதுவரை செய்துள்ள குற்றங்களை ஃபாஸ்ட் ட்ராக் தீர்ப்புமன்றங்கள் (அண்டைநாடான லிஞ்சிஸ்தானில் தீர்ப்புமன்றங்களை நீதிமன்றங்கள் என்ற இடுகுறிப்பெயரால் பொருந்தாநிலையில் சுட்டுகின்றனர்) அமைத்து விசாரணை செய்து தண்டிக்க வேண்டுமென மனிதவுரிமை இயக்கங்கள் சொச்சத் தீர்ப்புமன்றத்தில் (கீழமை மன்றங்களில் தீர்க்கப்பட முடியாமல் சொச்சமாகக் கிடந்து இத்து இணுக்காகி நாறும் வழக்குகள்மீது  தீர்ப்பளிப்பதால் இப்பெயரென்றறிக.) முறையிடுகின்றன. இதே விசயத்தை வலியுறுத்தி ஆன்லைன் பெட்டிஷன், ஹேஸ்டேக் டிரண்டிங் என்று பரபரப்பாகிறது நாடு.

(அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று நழுவும் வழக்கத்திற்கு மாறாக) காவல்துறையை கலைத்துவிட்டதே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடும் தண்டனைதான்; எனவே கூடுதலாக விசாரணையோ தண்டனையோ அவசியமில்லை என்று 7.5 தீர்ப்பர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வாயம் தீர்ப்பளிக்கிறது. ஏழரைத்தீர்ப்பு வெளியான அதேநேரத்தில் நாடு முழுவதும் காவல்துறையினர் பெரும் ரகளையில் ஈடுபடுகிறார்கள்.

யார் என்ன நியாயத்திற்காகப் போராடினாலும் அடித்து நொறுக்கும் போலிஸை ஒடுக்க ராணுவம் வருகிறது. போலிசுக்கும் மிலிட்டரிக்கும் பொருந்தா உறவும் புகைச்சலும்தான் எப்போதுமே.  அவரவர் அதிகாரத்தை நிலைநிறுத்தும் அகந்தையில் அய்யப்பனும் கோஷியும் அடித்துக்கொள்கிற மாதிரி போலிஸாரும் ராணுவத்தாரும் வெறியேறி தாக்கிக்கொள்வதை சினிமாவின் விறுவிறுப்பான சண்டைக்காட்சி போல மக்கள் ரசிக்கிறார்கள். மக்களும் தம்பங்குக்கு கைக்குச் சிக்கிய காவலர்களை நையப் புடைக்கிறார்கள். சிலரை வீட்டுக்குத் தூக்கிப்போய் கைகால்களை முறித்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக நமட்டுச்சிரிப்போடு அறிவிக்கிறார்கள். மின்கம்பியால் அதிர்ச்சி கொடுத்தும், சிகரெட்டால் சுட்டு தீக்காயம் பண்ணி அவற்றில் மிளகாய்த்தூளை தூவியும் மகிழ்கிறார்கள். தண்ணீர் கேட்டவர்களின் வாயில் ஆத்திரம் தீர மூத்திரம் பெய்கிறார்கள். சிலரை அடித்துக் கொன்றுவிட்டு தற்காப்புக்காக திருப்பித் தாக்கியதில் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டனர் என்று என்கவுன்டருக்குப் பின் போலிஸ் சொல்லும் பொய்யை இவர்களும் சொன்னார்கள். இப்படி குடிமக்கள் ஒவ்வொருவரது ஆழ்மனசிலும் பதுங்கியிருந்த போலிஸ் புத்தியை வெளியே இழுத்துப்போட்டுவிட்ட குரூரத்திருப்தியுடன் போலிசார் வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

உள்நாட்டுப்போர் மூண்டது போன்று மோசமடைகிறது நிலைமை. சீராக்க வேண்டிய ஜனாதிபதியோ புராண இதிகாசத் தொலைக்காட்சித் தொடர்களை பார்த்து பரவசத்தில் திளைத்திருக்கிறார். விதிவிலக்காக மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த முன்னாள் காவல்துறையினர் சிலரும் பிறதுறை பிரமுகர்க­­ள் சிலரும் வன்முறையைக் கைவிடுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள். போலிசாருக்கும் குடிமக்களுக்கும் இடையே தனிப்பட்ட பகைமை இல்லை; ஆட்சியாளர்களின் உத்தரவுக்கேற்பவே போலிசார் அத்துமீறல்களில் ஈடுபட வேண்டியதாகிறது என்கிறது அந்த அறிக்கை. சினிமாக்களின் கடைசி காட்சியில் சொல்வதுபோல, சட்டத்தை யாரும் கையிலெடுத்துக் கொள்ளக்கூடாதென சென்சேஷகுமார் என்கிற மந்திரி (மந்திரித்து ஏவப்பட்டவர்- காரணப்பெயர்) சொன்னதற்கு, போலிஸார் சட்டத்தை எடுத்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினப்ப இதை சொல்லாமல் என்னத்த புடுங்கிக்கிட்டிருந்தேன்னு மக்கள் காட்டமாக கடித்துக் குதறிய பின்பு வேறெந்த மந்திரியும் யாரும் வாயையோ மற்றதையோ திறப்பதில்லை.

***

இனி நாட்டில் போலிஸே இல்லை என்பது வெறுமனே போலிஸோடு நிற்கிற விசயமில்லையே? புகார், வழக்கு, கைது, விசாரணை, குற்றம், தீர்ப்பு, தண்டனை - என்பவையெல்லாமே இல்லாமல் போகின்றன. இதனால் அடுத்த சிலநாட்களில் தீர்ப்பு மன்றங்களையும் சிறைகளையும் மூட வேண்டியதாகிறது. ஓய்வடைந்ததும் கவர்னராகவோ மேல்சபை உறுப்பினராகவோ ஆகிவிடும் ஆசையில் ஜனாதிபதியின் விருப்பங்களை சட்டமொழியில் தீர்ப்பாக வழங்கிக்கொண்டிருந்த தீர்ப்பர்களும் நீதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பவர்களைப் போல கருப்பாடை தரித்த வழக்குரைஞர்களும் கைதிகளுக்கான ரேஷன்களைத் தின்று கொழுத்த சிறைத்துறையினரும் வேலையிழக்கின்றனர்.                                                                     

போலிஸ் நிலையங்களும் சிறைகளும் தீர்ப்புமன்றங்களும் இயங்கிவந்த கட்டிடங்கள் வீடற்றோருக்கான வீடுகளாகவும் பொதுக்கழிப்பிடங்களாகவும் நூலகங்களாகவும் மாற்றப்பட்டன. வழக்குகளுக்கு தொடர்புடையதென்று பிடிக்கப்பட்டு காவல்நிலையங்களின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், போலிசார் ஏற்கனெவே கழற்றி விற்றுவிட்டது போக எஞ்சியிருந்த பாகங்கள் அங்கு புதிதாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களாகிப்போயின. நாட்டைக் காப்பாற்ற அவசரமாகப் போவதான பாவனையில் எப்போதும் ஒரு காலை வெளியே தொங்கவிட்டபடியே காவலதிகாரிகள் ரவுண்ட்ஸ் போகும் ஜீப்புகள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்றிப்போகும் வாகனங்களாகின.

 ***

சதுக்கங்களில் நின்று அப்படியும் இப்படியுமாக கைகாட்டி குழப்பும் போலிஸ் இல்லாது போனதால் சீராகிவிடுகிறது போக்குவரத்து. சாலையின் திருப்பம்தோறும் மறித்து கையேந்துகிற/ கையோங்குகிற போலிஸார் இல்லாததால் மாமூல் கொடுக்கவேண்டுமே என்கிற பதற்றமின்றி ஓட்டுனர்கள் மனங்குவித்து வாகனமோட்டுகிறார்கள். சாலை விபத்துகளும் குறைகின்றன. அற்பமான விதிமீறல்களுக்காக பங்சராக்குதல், சாவியைப் பறித்தல், முகப்பு விளக்கை உடைத்தல், அவமதிப்பு, அபராதம், இலஞ்சம்- என்பதான தொல்லைகளற்ற பயணம் மக்களுக்கு அளவற்ற சந்தோசத்தைத் தருகிறது. மாமூல் தொகையும் அதை கொடுப்பதற்காக ஆங்காங்கே நிறுத்துவதால் வீணாகிவந்த எரிபொருளும் விரயமான நேரமும் இப்போது மிச்சமாவதால் வாகன உரிமையாளர்கள் கட்டணங்களைக் குறைத்து மக்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்துகிறார்கள்.

போலிஸாருக்கு கொடுக்கவேண்டிய பங்கிற்கும் சேர்த்து திருடியாக வேண்டிய நிலை இப்போதில்லாததால் திருடர்களும் கொ­­­­ள்ளையர்களும் தமது தேவைக்கு மட்டுமே அளவாக திருடினார்கள். களவு கொடுத்தவர்கள் கூட அரசாங்கத்தைப் போலல்லாமல் யாரோ இல்லாதவங்க தானே திருடியிருக்காங்க என்று சமாதானமாகிறார்கள். கப்பம் பெறும் இலஞ்ச ஒழிப்புத்துறை போலிசாரும் இனி இல்லையென்பதால் அரசு அலுவலகங்களில் இலஞ்சத்தின் மட்டம் குறைகிறது. தமக்குள் ஏற்படும் சண்டைச்சச்சரவுகளை மக்கள் தாமாகவே சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளும் பக்குவம் கூடிவந்தது. அதாவது “இதுக்குத்தான் போலிஸ் வேணும்கிறது”, “போலிஸ் இருந்திருந்தா இப்படி நடக்குமா?”, “மறுபடியும் போலிஸ் வந்தால்தான் ஊர் சரிப்படும் நாடு உருப்படும்” என்று பேசுகிற நிலை ஒருபோதும் தன்னால் வந்துவிடக்கூடாது என்கிற கவனம் லிபரல்பாளையம் மக்கள் ஒவ்வொருவரது நடத்தையிலும் வெளிப்பட்டது. நேர்மையாக மக்களுக்கு ஊழியம் செய்து இந்த அறிவிப்பால் வேலையிழந்தவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் தத்தெடுக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். (சொற்ப எண்ணிக்கை என்பதால் இது சாத்தியமாகிறது). 

ஜனாதிபதி எதற்காக காவல்துறையைக் கலைத்திருந்தாலும், பைத்தியம் கிழித்தது கோவணத்துக்கு ஆச்சு என்பதுபோல, தாங்கள் இப்போது நிம்மதியாகவும் அச்சமின்றியும் குற்ற மனப்பான்மையின்றியும் இருக்க முடிவதற்காக அவருக்கு லிபரல்பாளையம் குடிமக்கள் நன்றி சொல்வதுடன் கதை முடிகிறது.

***

நூ: எங்களுக்காக நீங்கள் இந்தக் கதையைச் சொன்னதற்கு நன்றி. இது தொடர்பாக கேள்வியெழுப்ப பலரும் ஆர்வத்தோடு கையுயர்த்துகிறார்கள்…

ஆ: கேட்கட்டும்.

கேள்வி: ஐயா, இப்படியொரு கதையை எழுதுவதற்கான உந்துதல் எது?

ஆ: எந்தவொரு அரசுமே தனக்கு அடிபணிய மறுப்பவர்கள் மீது ஏவும் முதல் ஆயுதம் காவல்துறை தான். இந்த சமிக்ஞை கிடைத்ததுமே போலிசார் தங்களோட வக்கிரங்களையும் கயமைகளையும் சேர்த்து குடிமக்களை மனிதநிலையிலிருந்து கீழ்ப்படுத்தத் துணிகிறார்கள். அதற்காக அவர்கள் கையாளும் வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாத எவராயினும் இந்தக் கதையைத்தான் எழுதவேண்டியிருக்கும்.

கேள்வி 2: போலிஸ் இல்லாமல் ஒரு நாடு இருக்கமுடியுமா?       

ஆ: கதையிலாவது அப்படியொரு நாடு இருக்கட்டுமே. 14ஆம் நூற்றாண்டின் கலகக்காரன் ரவிதாஸ் தனது பாடல்களில் புனைந்தெழுப்பிய பேகம்புரா என்கிற துன்பமில்லாத நகரம் போல, போலிஸ் இல்லாத நாடாக லிபரல்பாளையத்தை மாற்றியமைப்பதற்கான நியாயம் நமக்கிருக்கிறது. தனிச்சொத்தும் பாகுபாடும் வரியும் கண்காணிப்பும் சித்ரவதையும் சிறையும் இல்லாததொரு சுதந்திரவெளி- பேகம்புராவுக்கான விழைவு உலகெங்கும் எல்லாக்காலத்திலும் உயிர்ப்புடன் விரிந்திருக்கிறது. ‘வேர்ல்டு வித்அவுட் போலிஸ்’, ‘மூவ்மென்ட் ஃபார் அபாலிஷன் ஆஃப் போலிஸ்’ போன்ற அமைப்புகள் இதற்கான சான்றுகள்.

நெதர்லான்டில் குற்றவாளிகள் வெகுவாக குறைந்துவிட்டதால் சிறைகளை மூடப்போவதாக அறிவிக்கும் நிலை உருவாகியிருக்கு. தங்கள் நாட்டில் சிறைக்கான தேவை முடிந்துபோனதால் வேறு நாட்டு அரசுகளுக்கு சிறைகளை வாடகைக்கு விடப்போவதாக ஒரு நாட்டினால் அறிவிக்க முடிகிறபோது மற்ற நாடுகளுக்கு மட்டும் என்ன தேவை இருக்கிறது? வாழ்வாதாரத்திற்கும் வாழ்க்கைத்தரத்திற்கும் அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது சமூகத்தின் குணவியல்பு மாறி குற்ற நடவடிக்கைகள் இல்லாமல் போகிறதேயொழிய போலிஸ் இருப்பதனால் அல்ல என்பது எனது புரிதல்.

கேள்வி 3: அப்படியானால் நம்மை யார் பாதுகாப்பார்கள்?

ஆ: இப்போது மட்டும் நம்மை யார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்?

கேள்வி 4: இப்படியொரு பதில்கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

கேள்வி 5: சரிங்க தோழர், உண்மையில் அந்த ஜனாதிபதி வாவசுவ எதற்காகத்தான் காவல்துறையைக் கலைத்தார்?

ஆ: இதே கேள்வியைத்தான் அவரது சகா ஒமிட்ஷூ அவரிடம் கேட்பார். அதற்கு ஜனாதிபதி “குறிப்பான காரணம் ஒன்றுமில்லை, காவல்துறையைக் கலைத்தாலென்ன என்று தோன்றியது, கலைத்தேன்” என்பார். அதெப்படிங்க ஜூ (இங்கே ஜி போல), தோன்றியதை எல்லாம் செய்வீங்களா?ன்னு ஷூ கேட்பார். அதற்கு ஜனாதிபதி, “தோன்றியதையெல்லாம் செய்து பார்ப்பதற்கான மட்டுமீறிய அதிகாரத்தை என்கிட்ட கொடுத்திருக்கீங்க, செய்து பார்க்கிறேன். இப்போகூட அமைச்சரவையைக் கலைக்கலாமான்னு லேசா ஒரு எண்ணம் ஓடுது…” என்று சொல்லக்கேட்டதும் எதுக்கு வம்பு என்று ஒமிட்ஷூ ஓட்டம் பிடிப்பார்.

கேள்வி: கதையை விடுங்க தோழர், அதிகாரம் இருக்கு என்பதாலேயே ஒருத்தர் எதை வேண்டுமானாலும் செய்யமுடியுமா?

ஆ: இப்போ இங்கே பிரதமர் வேறென்ன செய்துகொண்டிருக்கிறார்?

நூதனனை முந்திக்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: நண்பர்களே இனியும் தொடர்ந்தால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படலாம் என்கிற முன்னெச்சரிக்கையில் இந்த நிகழ்வு இப்போதே முடிகிறது. நன்றி, வணக்கம்.


நன்றி: நீலம், 2020 அக்டோபர் இதழ்

ஓவியங்கள்: நன்மாறன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...